மனமாற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2025
பார்வையிட்டோர்: 1,465 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அடக்கத்தில் அழகு மலர முகம் றோசாப் பூவாகி விரிய அவன் வரவில்… ஆதரவில் மிதந்து அன்பு மழை பொழியும் அவள் இன்று அவன் வரவை அலட்சிய பாவனை யில் விட்டுவிட்டு மனதை வெறுமையெனும் இருளில் மூழ்கவிட்டிருந்தாள் வசந்தி… 

குறுநகை குலைந்துவிழ குதிக்கும் அவள் முகம் ஒளி யிழந்து வாடுகிறது. மனதில் ஆத்திரம் தளைவிடுகிறது. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் உ.தடுகளில் பற்கள் பதி வதும் விலகுவதுமாகி… குழம்பிய மன ஊஞ்சலின் ஆட்டம் தொங்குகிறது. 

மனம் வேதனையில் உழல்கிறது. வசந்தியின் கழுத் தில் மாங்கல்யம் ஏறும்போது அவள் பட்ட இன்பக்கிழற்சி அவர் தனது சொந்தம்… இதயம் முழுவதும் தனக்கே உரிமை என இறுமாந்திருந்தாள். இன்று இன்னொருத்தி கோயிலில் இடம் பிடித்தால்.. அவளால் பொறுக்க முடியுமா…? 

பேதை மனம் தன்னுள்ளே ஏங்குகிறது. 

“சை… இதுவென்ன உலகம்… பெண்மையை மதிப்பிடுவதற்கு யார் இருக்கிறார்கள். வெறும் உணர்வுக்கு அடிமையாய் இந்த நளினி இப்படிப் பல்லைக் காட்டுவதா? அவர் என் கணவன் இன்னொருத்தியின் கணவனை கன்னிப் பெண் வளைய வருவதில் என்ன லாபம்… இரவு பகல் என்றும் பாராமல் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதும் பெண்மைக்கு அழகா…? நான் பார்த்துக்கொண்டிருப்பதையும் மறந்து அப்படி என்ன கூத்தும் கும்மாளமும்… ரோசங் கெட்டு மானங்கெட்டு இப்படியா நடக்கிறது. அவ அவரை ராஜன் என்று குழைவதும் அதன் இதத்தில் பின் னாடியே அவர் சுத்தித் திரியிறதும் என்னால் எப்படிப் பொறுக்க முடியும்… அன்பு இருக்கலாம் அதற்காக முன் பின் உறவு முறையில்லாத அவளுடன் அப்படியென்ன பிடிப்பு… என் அம்மாவே என்னைக் குத்திக்காட்டும் விதத் தில்… நடப்பதை நினைக்கையில்… என் உள்ளம் கொதிக் கிறதே. இப்படி நடவாதீர்கள் என்று நான் எப்படிச் சொல்வது. என் எண்ணத்தை எப்போது அவர்முன் கொட்டிக் குவிப்பது.” மனம் ஏன் பெலயீனப்பட்டுவிட் டது. அன்பு அத்தனையும் அவர் மறந்து அலாய் அந்தப் பெண்ணுடன் ஒட்டியதை நினைக்கையில் துக்கம் நெஞ்சுள்ளே முட்டி வளிகிறது வசந்திக்கு…. 

“இப்பொழுதெல்லாம் என்னைப்பற்றி கவலையே இல்லா மல்… இந்த ஆண்களே இப்படித்தான் … மனதை அலை மோதவிட்டு… மலருக்கு மலர்தாவும் வண்டுகள் போல தறிகெட்டு தன்னேட்டையாகி இதயத்தில் வெறுமை விதையைத் தூவி அதில் திருப்தி பட்டுக்கொள் என வைத்துவிட்டு… இவருக்கு மட்டும் அப்படியென்ன கதை.. என் சுகம் பறிபோவதானால் என்னால் பொறுக்க முடிய வில்லை. எல்லாம் அவர் புதிதில் என்னை தன்வசமாக்கி புகழும்போது இதயம் முழுவதும் நிறைந்துவிரிய மலர்த்தி நிறைவு பெறுவதை இப்ப நினைக்கையில் மனதில் ஒரு சிலிர்ப்பு… மலர்முகையில் பனித்துளி படுகையில் அதன் மலர்ச்சிபோன்ற பூரிப்பு… மென்மையான என் உடலில் அவர்கரம் பற்றுகையில் நான் பெண்மையின் உண்மை நிலையை உணர்வது போன்ற பிடிப்பு… முகம் மலர…புது மலராகி ஒளியும் மணமும் ஒருங்கே அமைந்த மலர் விரிப்பில் மயங்கி பிரள்வது போன்ற நினைப்பு… இனம் புரி யாத இன்ப மயக்கம். இதயத்தில் இதமாகி இருக்கிறது.” 

வெறும் நினைவு… முன்னைய நாள் இன்பத்துள் மூழ்கி தன்னை மறந்து இன்றைய துக்கத்தை ஒதுக்கித் தள்ளும் பிரயத்தனம் … 

மனம் குறு குறுத்து மலர; முகம் உணர்ச்சியின் சிலிர்ப்பில் அனிச்சம்பூவாகிவிருந்து; சிவந்த றோசாவாகி நிறங்காட்ட; சிந்தும் ஒளியில் மனம் மயங்கி லயிக்க அந்தப் பூரிப்பில் இதயம் மலர… நாணி நிற்கும் அவளை அவர் கண்கள் மொய்க்க… வியப்பில் குவளை விழிகள் … குதி குதித்து துடிக்க… 

“வசந்தீ… இப்பொழுது நீ எவ்வளவு அழகாய் இருக் கிறாய்… அது உனக்குத் தெரியுமா…” 

“ம் அப்படியா…” தன்னை மறந்த நிலையில் அவள் உள்ளத்தின் நிறைவும் தெரியும் பதில்… அவள் அவனைப் பார்க்கிறாள்… அவனது பார்வை அவளது உடலின் ஒவ் வொரு அங்க அமைப்பையும் துருவி… துருவி ஆராய்ந்து எடை போடுகிறது. 

“என்ன அத்தான் அப்படிப் பார்க்கிறீர்கள்” 

தங்க விக்கிரகம் போன்ற அவள் உடல் ஜொலிப்பில் இந்தனை கவர்ச்சியை வைத்திருப்பதை இப்பொழுதுதான் உணருகிறான்… அவள்… வெறும் பெண் அல்ல… கலைக் கோயிலின் தெய்வம் … கலைஞனின் கை உளிபட்டு பொலிந்துநிற்கும் உருவச்சிலையாகி கருமணிகளுள் களிநடனம் பயிலுகிறாள். வெள்ளிச் செம்புகள் இரண்டு கவிழ்த்து விட்டாற் போன்ற உருவில் மிதந்து நிற்கும்நெஞ்சு மலர் கள்… இடையின் பொலிவில்… மிதக்கும் அலைபோன்ற வடிவம்.. நெற்றியில் மினுங்கும் குங்குமப் பொட்டு இருந் தும் வேறுபாடு அற்று அவள் முகம் தனிக்களையில் தோய்ந்து இதழ்கள் மலர்ந்து காணப்படுகிறாள். 

அழகு… மலர்… ஆதவனைக் கண்டு அலர்வது போல் ராஜனைக் கண்டு பெண்மை மலர்… விரிகிறதா… அவ ளுக்கு ஒளியாய் நிற்கும் அவன். முகமலர்ச்சிதான் அவள் மலர்ச்சியா… 

அந்தப் பார்வையில்… நாணி நிலத்தை நோக்கு கிறாள்… முகத்தில் இரத்தம் சுண்டிவிட்டாற் போல் ஜொலிக்கிறது… 

வசந்தீ… உன் உடலின் அழகை ரசிப்பதற்கு எனக் குத்தானே உரிமை.. என்பது போன்ற பார்வையா அது..?

“நின் அழகையே பார்த்துக் கொண்டிருந்தால் பசியே தோன்றாது போல் இருக்கிறது வசந்தி…” 

“போங்கள் எப்பவும் உங்களுக்குக்கேலிதான்..” 

“ன்ன வசந்தி உள்ளதையும் சொல்லவிடமாட்டேன் என்கிறாய்.. உண்மையில் நீ வெறும் அழகுமட்டும்தானா…?” 

அவர் தன் தோள்களில் பற்றி உலுப்பி உடம்பைக் குலுக்க.. அப்படியே அந்தக் கணமே தன் சுமையை… உள்ளத்தை… அவர் தாங்கும் பொறுப்பில் விட்டு… இதயத்தில் ஒரே இன்பச் சுமையைச் சுமந்து அதன் மயக்கில் ஆழ்ந்து அதன் வசமாகி தன்வயமிழந்து எல்லாம் உணர்ச் சியுள் ஒடுங்க லாகிரியில் மிதந்து திரிந்த அது போன்ற நாட்கள் திரும்ப மலரக் கூடியதா.. என்ற எண்ணம் பஞ்சுபோல் மெதுமையில் லேசாகி பச்சைப்புல் நிரையாகி விரிகிறது.” 

தென்றல் உடலில் படும் சிலிர்ப்பு; மனம் முழுவதும் நிறைந்த பூரிப்பு… 

“அந்த எண்ணம் வெறும் உணர்வுதானா ..? அந்த உரிமையை நான் இழந்துவிட்டேனா? என்னை மதிப்பதாக முடியவில்லை. நான் ஏன் திருப்திப்பட்டுக்கொள்ள “மனம் விகாரமாகி அலைகையில்…… வெறும் கணவன் மனைவி என்ற உறவு முறை வெளிப்பகட்டு ; மற்றவர் களின் கண்களுக்கு மட்டும் காண்பிப்பதற்காகவா… ? அப்படியென்றால் உள்ளக்கோயிலில் உரிமை அற்று விட்டதா… நெஞ்சம் நிறைவைத் தேடுகிறது. 

அதன் அலைதலில் உடல் வேகிறது. அன்புக்கு ஏங்கித் தவமிருக்கிறது. தான் பெறாத ஒன்றை அவர் பெற்று விட்டது போல் அலைகையில்….. வெறும் அசட்டுச். சிரிப்பில் எல்லாவற்றையும்போர்த்துமூடி நடப்பதைப்போல் கண்மூடித்தனமாக தட்டிக்களிக்கையில்… அவள் நெஞ் சில் தாங்கமுடியாத வலி… இதயம் துரிதமாகி இயங்கு கிறது. உடல் பெலனற்று நடுங்குகிறது. உள்ளத்தில்.. சந்தேகத்தின் சுவடுகள் தோன்றுதலின் அறிகுறி; உட லில் தளர்வு. சிலிர்த்து நிற்கும் வேர்வையில் அவள் முற் றாக நனைந்துவிட்ட புழுக்கம்.. நளினியுடன் அவர் இப்படி நடந்துகொள்வதை வெளியில் சொல்லமுடியாமல், மெல்ல முடியாமல் மனதில் தொங்கும் எண்ணத்தின் பிரதிபலிப்பு.. 

அந்தப் பெண்… அப்படியென்ன புதுமுறையில் அவரை நிறைவுபடுத்துகிறாள். அவர் அவளைக் கண்ட தும் முழுமையாக மலரவிட்டு மனதைப் பறி கொடுக் கிறார். அழகின் மலர்ச்சி… அந்தகாந்த கண்களின் பார்வையில், ஸ்பரிச உணர்வில் அவர் நினைவை இழந்து தவிப்பதா.. ? 

மனத்தின் ஓட்டத்தை நிறுத்துவது போல் சிரிப்பொலி அவளை நிமிரச் செய்தது. வேறு யாருமல்ல… ராஜனும் நளினியும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டே கேற் றின் உள் நுழைவது அவள் கண்களில் பட்டது. முகத் தில் சிந்தனை அலைகள் சிதறி ஓடின; உள்ளே எழுந்த சந்தேகத்துக்கு உருக்கொடுக்கும் இந்த செயல்… அவள் ஆத்திரத்தை கிழறிவிட்டது. முகம் சுருங்கி இருள் போர் வையுள் மறைகிறது. ராஜனின் வரவை நோக்கித் தவங்கிக் கிடக்கும் அவள் இன்று அவனைப் பார்க்க விரும்பா தவள் போல முகத்தைத் திருப்பிக் கொண்டாள். 

ராஜன் துள்ளிக் குதித்துக்கொண்டு வாயால் சீட்டி அடித்துக்கொண்டு உள்ளே வந்தவன் வசந்தியைக் கண்டதும் ஓசைப்படாமல் அடியெடுத்து வைத்து நடந்து பின் புறத்தால் வந்து அவள் கண்களைப் பொத்தினான். அவ கைகளை னது சீண்டுதல் இப்பொழுது பிடிக்கவில்லை. விலக்கி விட்டு விலகி நின்றாள்… 

உண்மை தெரியாது ராஜன் ஒருகணம் திகைத்தான்.. “என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் போய் நளினி யைக் கட்டிப்பிடித்துச் சரசமாடுவது தானே… ஆத்திரமாகவே சொன்னாள் 

“என்ன வசந்தி… உன் போக்கு சில நாட்களாக சிடு சிடுக்கிறாய்…” 

“ஓம் என் பேச்சு இப்பொழுது பிடிக்காதுதான்…”

“உன்னைப் பிடிக்கவில்லை என்று நான் சொன்னேனா” 

நீங்கள் சொல்லியா அதை அறியவேண்டும் எப்பொழு தும் சீக்கிரமாக வந்துவிடும் நீங்கள்சில நாட்களாக இவ்வளவு நேரமும் சுணங்கி வருவதற்கு என்ன கார ணம். அதுவும் நளினியுடன் இப்படி நடந்துகொள்வது எனக்கு கொஞ்சமும் சகிக்கவில்லை; என்பதை எப்படிச் சொல்வது… மனம் அழுதது… 

மன அழுகையின் அதிர்ச்சி கண் இ தமிழ் பாளைகளில் சிலிர்த்தன. கையால் கண்களை கசக்கிக்கொண்டு அவள் போய் படுக்கையில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்… தலையணை கண்ணீரால் நனைந்தது. 

இருந்தாற்போல் துள்ளி எழுந்த வசந்தி… கோலுக் குள் விரைந்து சென்று அங்கு மாட்டப்பட்டிருந்த படத்தை கழற்றி வீசியெறிந்தாள். சீமென்ற்தரையில் விழுந்ததும் கண்ணாடி நொருங்கியது. கலீர்… கலீர்… கண்ணாடித்தூள்கள் எங்கும் சிதறி ஓடின. அவளது செய்கை அவனது உள்ளத்தையே புண்படுத்தியது. பார்வையின் ஒளியில் கண்ணாடித் துணிக்கைகள் மினுங்கின… படங்களுக்கு வர்ணம் தீட்டும் ஓவியன் இடை இடையே ஒளி விசுறுவதற்கு மினுக்குப் பொடி தூவியது போன்ற தோற்றத்தை நினைவு கூரும் பாங்கு… 

“வசந்தி உனக்கேன் இந்தக் குணம்… அது கிடந்தால் என்ன…” 

“அந்தப்படம் என் வீட்டில் வேண்டாம் வேறு எங்காவது தொங்க விடுங்கள்” 

நிலத்தில் கண்ணடி ஒடிந்து சிதறி பிறேம் மட்டைக் குள் கிடக்கும் அந்தப் படம் சூரியனின் இருந்து பிளக் கும் கதிர் கற்றைகளாகி பெயர்ந்துவிட்ட நீள் கண்ணா டிக் கீற்றுக்களின் நடுவில் சிரிப்பை மலர் கொத்தாக்கி மலர்த்தி அவனைப் பார்ப்பதுபோன்ற நினைப்பு ராஐனுக்கு… 

மனதில் எழுந்ததை அப்படியே முழுதாக அவர் முன் போட்டு உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளே குமுறி கட்டு மீறி வெடித்துச் சிதறுகிறது. அப்படிச் செய்ததில் வசந்திக்குத் திருப்தி…? நெற்றிப் பட்டையை அழுத்தி அழுத்தித் தேய்த்தாள். இருள் மூடி விட்ட முகம் மலரவும் இல்லை. ஒரே கலவரம்… அவள் நிமிர்ந்து ராஜனைப் பார்த்தாள் ராஜன் உடைந்த பட த்தை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே அவள் மனம் குமுறினாலும், வேறொரு மூலையில் களிவிரக் கம். அவர் என் கணவர்தான்; எனக்கு அவர் வேண்டும். ஆனால் அவருக்கு என்னைத் தேவையில்லை… 

அவனுக்கு… அவள் உயிர் ஆல் சந்தேகம் எனும் மனப்பேய் அவளை ஆட்டிவைக்கும் போது அவன் சுடரில் பட்ட மெழுகு பொங்குவது போல அவஸ்தைப்படுகிறான். அப்பொழுது தான் அங்கு நளினி குறுக்கிட்டு தனது படத்தை ராஜனிடம் இருந்து பிடுங்கிக் கொண்டாள், 

“எனது படம் என்னிடமே இருக்கட்டும் என்னால் இன் னொருவருக்கு துன்பம் வேண்டாம். அன்று நான் சொல் லச் சொல்ல நீங்கள் அதை கழற்றி வந்து இப்படிச் செய் தது எவ்வளவு தப்பிதம் என்பதை இப்பொ ழுதாவது தெரிகிறதா…ஏதோ அனாதை என்று அன்பு காட்டினீர் கள். ஆனால் நான் உங்கள் இன்பமயமான வாழ்வை இரு ளாக்கி விட்டேன். இனிமேலும் அந்த நிழலில் நீங்கள் வாழவேண்டாம்… ஒளியுள்ளதாகி மலரட்டும்… 

ராஜனின் மனைவியை நிமிர்ந்து பார்த்தாள்… “அக்கா என்னை மன்னித்துவிடுங்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்து விட்டேன்..’ 

அதன் பின் அங்கே நின்றுகொண்டிருக்கச் சக்தி யில்லை… அவள் தடதடவென இறங்கி தனது அறையை அடைந்தாள்… 

“ராஜன்..!” 

அவர் உண்மையில் எனக்கு பரிந்து அன்பு காட் டினார் என்பதற்கும்… அவர் என்மீது காதல் என்பதற்கும் ஒரே பொருள்தானா… ஆணும் பெண்ணும் அன்பாக பண் பாக அன்னியோன்னியமாக பழகினால் அதற்குக் காதல் என்ற முத்தாய்ப்புத்தானா… இனக்கவர்ச்சி ஒன்றுதான் உறவா ? அப்படி யென்றால்… ஆண் மகனுடன் சகோ தரன்என்ற உருவில் அன்புகாட்ட உரிமையில்லையா ? ஏன்… அன்னை தந்தை இல்லாத எனக்கு அன்பு என்ற மழையை பாசம் என்ற நிலையில் செலுத்த முடியா தா நல்ல மனம் உள்ள பிறர் உதவினால் அதற்கு உறவுமுறை பால் உணர்வு என்ற உறவில் மட்டும்தானா… இரக்கமாக கணித்தால்… 

தூய்மையானதாய் இருக்கமுடியாதா…? தவறியும் என்மனம் அப்படித் நினைத்ததில்லை – ஆனால் இன்று இப் படி விபரீதமாய் முடியும் நிலை.. பெண்மனம் பேதைமனம் முன்பே கிடைத்து வந்த அன்பை திடீர் என்று இழப்பதா னால்… என்னால் பொறுக்க முடியவில்லை. 

அவளும் பெண் அவளுக்கும் அவர் உரிமையைப் பெற முடியாதுவிட்டால் அவள் மனம் ஏங்கத்தானே செய்யும்… 

நளினி அதன்பின் அவர்களின் வீட்டுப்பக்கம் போவ தில்லை. பாடசாலையில் படிப்பிக்கும் அவள் பாடசாலை முடிந்தால் தன் அறைக்குள் அடைந்து கிடந்தாள். அவளுக்கு அதில் ஒருவிதமான சங்கடமும் தெரியவில்லை. அவள் உண்டு அறை உண்டு படிப்பதற்கு ஏதாவது வாங்கி வருவாள். அதில் மூழ்கி எழுவது தான்.. 

கால ஓட்டத்தில்… வாரங்கள் சில கடந்தன… வசந் திக்கு இரவு பகல் தூங்காமல் விழித்திருந்ததால் உடல் களைத்து மயங்கி விழுந்தாள். ராஜன் ஓடிப்போய் டாக் டரைக் கூட்டிவந்து காட்டினான்… 

டாக்டர் வந்ததும் ஊசி ஒன்று போட்டார். சற்றைக்கெல் லாம் தெளிவு பெற்று ராஜனைப் பார்த்தாள் வசந்தி; தன் னைச் சுற்றி ஒரு கூட்டமே இருப்பதைக் கண்டு எனக்கு என்ன நேர்ந்தது என்பதுபோல் விழிகளில் குறிகளை நிறுத்தினாள். அவள் முகமலரில் புதுவித தெம்பு பிறந்தது கண்டு ராஜன் சற்று நின்மதியடைந்தான். நளினி விசிறி யால் காற்றுப்படும் படி விசிறிக் கொண்டிருந்தாள் அவள் கண்களில் கண்ணீர் கரை புரண்டது.. 

“அக்கா… அக்கா… என்ன வந்துவிட்டது… நாமள் இருக்கிறோம்” 

வசந்தியின் கண்கள் கவலை மிகுதியில் சிவந்துகாணப் பட்டது. இமைகள் வெட்டி வெட்டி விளிக்கிறாள் அதன் சேர்க்கையில் கண்ணீர் கோடு கிழித்து வழிகிறது… 

ராஜன் குனிந்து அவள் கட்டிலில் அருகில் அமர்ந்து தலையைத் தூக்கி மடிமீது வைத்து கண்ணீரை விரலால் சுண்டி எறிகிறான்… 

“வசந்தி ஏன் அழுகிறாய். நான் உன்பக்கத்தில் தானே இருக்கிறேன்.” 

பதினைந்து நிமிடத்துள் எழுந்து முன்போல் உலாவ முடியாவிட்டாலும் நிமிர்ந்து கட்டிலில் இருந்தாள் வசந்தி. 

டாக்டர் ராஜனைக் கூப்பிட்டுச் சொன்னார் “மிஸ்டர் ராஜன் வசந்தியின் உடல் சற்றுக் களைப்படைந்திருக் கிறது. அவளுக்கு இப்பொழுது கொஞ்சம் ஓய்வு வேண் டும். நல்ல மன ஆறுதல் வேண்டும். அத்துடன் அவள் மனம் நோகும்படி எதையும் சொல்லாதீர்கள்… இன்சொல் லாலும் அன்பினாலும் தான் நோய் படிப்படியாக குண மாக வேண்டியிருக்கிறது. நரம்புத் தளர்ச்சியில் உடல் தன்வயமிழந்து, நடுக்கம் கண் தூக்கக் குணம் இருந்து வருகிறது. யன்னல்களைத் திறத்து வையுங்கள். நல்ல காற்று உள்ளே புக வசதியாயிருக்கும். காச்சல் இருக் கிறது. இந்த மாத்திரையை முறையாக இதில் எழுதி யிருக்கும் பிரகாரம் கொடுத்து வாருங்கள் குணமாகி விடும்…” 

“ஆகட்டும் டாக்டர்…” டாக்டர் போய்விட்டார்… கண்ணும் கருத்துமாக தனது மனைவி வசந்தியைப் பார்த்து வந்ததால் சிறிது சிறிதாக தேறிவந்து கொண்டிருந்தாள் அவள்… 

இதுவரை காலமும் எந்த ஒன்றைச் சொல்லாமல் இருந்ததினால் மனம் துடித்ததோ.. அந்த உண்மையை இனிமேலும் மறைக்க விரும்பாமல் தன் இதயப் பெட்டிக் குள் பூட்டிவைத்ததைச் சொல்லாமல் இருந்தால் வசந்திக்கு என்ன ஆகிவிடுமோ என்று பயந்து யார் இந்தப் பெண்…. இவளுக்காக ஏன் அவன் பரிவு காட்டினான் அந் தப் பரிவில் தனது இதயவினையின் ஒலியின் நாதம் இழந்துகொண்டே போவதை உணர்ந்தும் வாழாவிருக்க முடியவில்லை… 

தனது மேசை லாச்சியில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து வந்து வசந்தியிடம் நீட்டினான்.. 

வசந்திக்கு அதைப் பார்த்ததும் ஆறுதல் இதுவரை யும் தெரியாத உண்மையொன்றை இப்பொழுது தெரிந்து கொண்ட நின் மதி… சந்தேகத்தைத் தெளிவுபடுத்துவ தற்கு உதவியது. மனதில் புதுத் திருப்தி… சந்தோசம் மிகுதி தனது அறியாமை நினைந்து வெட்கப்பட்டுக் கொண்டாள். அப்பா ஏன் இந்த ஒன்றைமட்டும் என்னி டம் மறைத்தார். நான் அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்ற எண்ணத்திலா…? இருக்கலாம்… 

கடிதம் இதுதான்:-

மருமகன் ராஜனுக்கு, 

எனக்கு உதவி செய்யவேண்டும். இந்த உண்மை உனக்கு மட்டும் தெரியட்டும். நளினி எனது மகள் அவ ளுக்குத் தாயில்லை. நான் இறந்துவிட்டால் அவளை நீ தான் கவனிக்கவேண்டும். உன்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் முதலில் உன்னை நளினிக்குத்தான் திருமணம் செய்து வைக்க ஆ சைப்பட்டேன் ஆனால் வசந்தி உன்னை விரும்புகிறாள் என்பதைத் தெரிந்து, உங் களை ஒன்றுசேர்த்து வைத்தேன். நான் இல்லாதபோது அவள் மனம் கோணாமல் பார்க்க வேண்டியது உன் பொறுப்பு. மனிதன் வாழ்க்கையில் பிழைவிடுவது இயற் கைதானே… நானும் அப்படி தவறாக நடந்துவிட்டேன். அதனால் ஒரு பெண்ணின் வயிற்றில் கருவாகிய இவளை என்மகளாக ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். என் னைப்போல் நீயும் வசந்திக்கு வஞ்சகம் செய்துவிடாதே.. ! நளினியை உன்னிடம் ஒப்படைக்கிறேன். அவளுக்கு நல்லவன் ஒருவனைத் தேடி மணமுடித்து வைக்கும் வரை உன்னுடன் இருக்கட்டும். அவள்மீது உன் அன்பைக் காட்டு; அவளுக்கு ஆறுதல் சொல்ல உன் ஒருவனைத் தான் தேர்ந்து எடுத்திருக்கிறேன். என் ஆசையைப் பூர்த்தி செய்வாயல்லவா…? 

இப்படிக்கு 
மாமா … சங்கரலிங்கம். 

உண்மையை உணர்ந்ததும் நடக்க அவளுக்கு எப் படி இத்தனை தென்பு வந்தது. ஓடிச்சென்று நளினியைக் கட்டித் தழுவிக் கொண்டு, “நளினா.. நீ. என் தங்கை. உன்னை வளமாக்கி வைக்க வேண்டியவள் நான்; அந்தக் கடமையை என் கணவன் செய்ய முனைந்ததை இதுவரை தவறாக எண்ணிவிட்டேன் … என்னை மன்னித்துவிடு நளினா…” 

“அக்கா உன் மீது எனக்குக் கோபமில்லை, அவர் மனப்புண்ணை ஆற்றுங்கள். ராஜனிடம் மன்னிப்புக் கேளுங்கள். அவர் எவ்வளவு பண்புள்ளவர் என்பதை இப்பொழுதாவது உணர்ந்தீர்களே.. அதுபோதும்…” 

உடனே வந்து ராஜனின் கால்களில் விழுந்து மண்டி யிட்டு, “அத்தான் என்னை மன்னிப்பீர்களா…?” என்று மனம் இழகி உருகி நின்றாள். 

அவன் காலடியில் விழுந்த வசந்தியைத் தூக்கி நிமிர்த்தினான். அவள் கண்களிலிருந்து இரண்டு மூன்று கண்ணீர்த் துளிகள் விழுந்து ராஜனது பாதமலரை நனைத்தன. 

மனவிளிம்பில் தழும்பும் உணர்ச்சி … மது கிண்ணம் நிறைய தழும்பும் நுரைபோல எழும்ப; இதயமலரில் தேன் துளிகளாகி இன்பக் குமிழிகள் அரும்ப; மனமாற்றத்தில் அந்த நிறைவில் இருவரும் ஒருவராய்க் கலந்து மலர்ந்து சிலிர்த்து நின்றனர்.. 

“என்ன வசந்தி குழந்தை போல்…” 

அவள் விழிகளில் உடைத்தோடும் கண்ணீரை வழித் துத் துடைத்துவிட்டு அவளைப் பார்த்தான். அவளது மலர்க் குவளை விழியின் ஓரத்தில் இன்பச் சிலிர்ப்பில் மகிழ்ச்சி முத்திரையைப் பதித்துப் பதித்து … இதழை மலர்த்தினான். அவள் நாணி முகம் சிவக்க மெதுவாக இமையை மூடினாள். இதழ்கள் துடித்தது. இதயம் விரிந்தது. உடல் ஆதாரம் தேடித் துடிக்கும் கொடியாகி அவன்மேல் சாய்ந்தது. அவன் அவளை… அன்புப் பிடிக் குள் அடக்கிக்கொண்டு விட்டான். 

இருவரும் ஒன்றாயதை அறிந்து நளினியின் மனம் குளிர்ந்தது. 

– 1965

– தாலி சிரித்தது (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 1965, தேனருவி பிரசுராலயா, வெள்ளவத்தை, இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *