மனதிற்குள் ஒரு மௌன வலி





(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்கு சத்தியம் பண்ணி சொல்ல முடியும். இனி எப்போதுமே ஒரு முழுமையான சந்தோஷத்தை என்னால் உணர முடியாது போய்விடுமென்று… தனிமையில் நான் விடப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் என் மனது விழித்துக் கொள்கிறது. என் ஆத்மாவுடன் பேசத் தொடங்குகிறது. நான் நல்லவளா… கெட்டவளா…? எடைபோட்டு தீர்மானித்து ஆத்மா திகைக்கிறது. எனக்குத் தெரியும் ஏதோ ஒரு விதத்தில் நான் கெட்டவள் தான். நான் மட்டுமென்ன…! ஒவ்வொரு மனிதனது அந்தரங்கத்திலும் எங்கோ ஒரு அசிங்கம் இருக்கத்தான் செய்யும். இல்லையேல் அவன் மனிதனில் உயர்ந்து மகானாகி விடக்கூடும்.
என் சின்னத்தனங்களையும் பலவீனங்களையும் மறைத்துவிட எத்தனிக்கும் ஒரு சாதாரண பெண்ணாய்த்தான் நானும் நடமாடிக் கொண்டிருந்தேன். எப்படியோ, இறந்தகாலத்தை அவ்வப்போது தோண்டிப்பார்த்து ரணப்படுவேனே தவிர நிகழ்காலத்தை இனிமையாய் நகர்த்தும் வரத்தை ஆண்டவன் எனக்குத் தந்திருந்தான். ஏனோ தெரியவில்லை. என் ஆழ்மனத்தின் ஓரத்தில் அடிக்கடி தோன்றுவதுண்டு… ஏதோ ஒரு சக்தி உந்திக்கொண்டேயிருப்பதுண்டு. அது எத்தனை சதவீதம் நிஜமென்று தெரியவில்லை. ஆனால் நான் சராசரிப் பெண்ணல்ல என்று மட்டும் என்னால் அடித்துச் சொல்ல முடியும்.
என்னால் நிறைவேற்றப்பட ஏதோ ஒன்று காத்திருக்கிறது. அந்த ஒன்று… அந்த ஏதோ ஒன்றைத்தேடி பயணிக்க எப்போதுமே நான் சிந்தித்ததில்லை. ஆனாலும் விதி என்பது உண்மைதானோ! என்னை ஆன்மீகத்திற்குள் எப்படியெல்லாமோ இழுத்துக் கொள்ளப்பார்க்கின்றது.
இல்லறத்தை துறப்பதில் எனக்கு நாட்டமில்லை. நான் வாழ்க்கையை ரசிப்பவள். ஒவ்வொரு நொடியையும்… ஏன்! மாத்திரை பொழுதுகளையும் விரயமாக்காது வாழத்துடிப்பவள். சுகம் மட்டும்தானா வாழ்க்கை..! அவஸ்தைகளும் அடிபடல்களும் கூட எனக்கு இன்பமாய்த்தான் படுகிறது. எத்தனை விதக் கவலைகள்… கணக்கிட்டு கூற முடியவில்லை. சந்தர்ப்பங்கள் ரணங்களைத் துளைத்தெடுத்து சாகடிக்கும் என்பது மட்டும் உண்மை. ஆனாலும் காலதேவனின் விந்தைதான் என்ன…? எப்படியோ சுழன்று பழையதை ஆற்றும் சக்தியை கைக்குள் கொண்டிருக்கிறானே. இன்றுவரை அது சரிதான். இனியென்றால் காலத்தையே என்மனது வென்றுவிடும் என்றுதான் தோன்றுகிறது. எல்லாமே இந்த எல்லாமே ஒரே ஒரு காரணத்தினால்தான்.
உலகின் ஆதார சக்தி எதுவென்று யாரேனும் கேட்டால், நிச்சயமாய் சொல்வேன் காதல் தானென்று… காதலேதான்..! நானும் அதற்குள் அடிபட்டு சிக்குண்டு சிதறிப்போனேனே! இதோ உச்சந்தலையின் நுனிப்பொட்டில் இருந்து உள்ளங்காலின் கடைசி சொட்டுவரை எங்கெல்லாமோ வலித்து உடல் சிலிர்க்கிறதே… கண்ணீர் தடையின்றி வழிகிறதே… காதல் எனும் ஒற்றை வார்த்தைக்கு இத்தனை சக்தியா…? இருபத்தியொரு வருடமாக என் கட்டுப்பாட்டுக்குள் வட்டமிட்ட எனதே எனதான மனது ஏன் இப்படி பலவீனப்பட்டுப்போனது.
அவனை நினைக்கும் மறுநொடியே என்னவெல்லாமோ நடக்கிறது. அது வலியா… அவஸ்தையா .. அன்பா… அத்துமீறலா… இல்லை இந்த எதுவுமே இல்லை. அந்த அது எதுவென்று எழுதி விடவோ வார்த்தைகளால் சொல்லி உணர்த்தி விடவோ இதுவரை யாராலும் முடிந்ததில்லை. எனக்கும்தான் ஆனாலும் நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொள்கிறேன். இதயம் வேகமாய் துடிப்பதால் நெஞ்சுதான் வலிக்கிறதென்று நினைக்கிறேனாயிருக்கும்.
அவன் சொன்னான் நான் வேஷக்காரியாம்… பொய்க்காரியாம்… சூழலை காரணம் காட்டி நாடகமாடுகிறேனாம்.
இல்லை… இல்லை… இல்லை…
‘எல்லோருக்கும் கேட்டும்படி சொல்லி கத்தியழ தோன்றியது. இருந்தாலும் நான் மௌனமாகவே…’ இல்லையென்று என்னை நிரூபித்துவிட்டால் மட்டும் என்ன நடந்துவிடப்போகிறது. உரலுக்கு ஒரு பக்கம் இடியென்றால் மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடியாம். போகட்டும் அவன் என்னை புரிந்தது அவ்வளவுதான். எல்லாப்பக்கமும் மோதல்களுடன் முதுகு திருப்பி முறைத்துக் கொள்ளும் விருப்பம் துளிதானும் எனக்கில்லை. ஆதலால் ஏதோ ஒரு பக்கம் சார்ந்து சமரசமாவதே நலமென்று என் அறிவிற்குப்படுகிறது. இதில்தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. எது சரி எது பிழை…? வயதின் ஆர்ப்பாட்டமும் உணர்வின் உந்துதலும் மனதை பாடாய்ப்படுத்தி காதலுக்காய்ப் போராடும் வீரா வேடத்தை எங்கிருந்தோ வரவழைக்கிறது. மாறாக அறிவின் முதிர்ச்சியும் அனுபவப் பாடங்களும் இளமையை உணர்வுகளை… ஏன்! காதலைக்கூட புறந்தள்ளத் தயாராகிவிட்டது.
எப்பக்கம் சார்ந்து முடிவெடுப்பது காதலர்களையும் காதலையும் பிரிப்பதுதான் பெற்றோரின் நோக்கமா என்ன? ஏதோ ஒரு காரணம் ஏதோ ஒரு அதிருப்தி அவர்களை உந்தியிருக்க வேண்டும். அதனாலன்றோ இத்தனை தடையும். இத்தனை உத்தரவும்.
போனால் போகட்டும் காதல்தானே என்று தூரப்போட்டு தொலைவாகும் திடம் என்னிடம் இல்லாமல் போனதற்கு அவன் மட்டும் தான் காரணம். இல்லையென்றால் அத்தனை தடைகளையும் வார்த்தைகளையும் தாண்டி அவனுடன் உரையாட எத்தனித்திருப்பேனா…?
மடையன் என் மௌனம் அவனுக்குப் புரியவில்லைப்போல… ஒரு தடவை உரையாடுகையில் கேட்டேன்.
“என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்…?”
“கடவுளுக்கு ஒரு படி அதியமாய் அம்மாவிற்கு ஒரு படி குறைவாய்… பிடிக்கும்” என்றான். அத்தகைய நேசிப்பின் ஆழத்திலா இன்று என்னைக் காட்டிக் கொடுத்தாய்? தெரியாமல் உரையாடிய அத்தனை வார்த்தைகளையும் தெரியவைக்க முயற்சித்தாய்…?
நேருக்கு நேர் அவன் விழி பார்த்து இப்படியெல்லாம் கேட்க என் நா துடிக்கிறது… எப்படியோ முயற்சித்து என்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.
‘துரோகி’ என்று ஒரே வார்த்தையில் அவனை புறந்தள்ளத்தான் நினைக்கிறேன். ஏனோ முடியவில்லை. அவனது ஏக்கம் கலந்த அந்தக் குரல்.., என் பெயரைக் கொஞ்சியழைக்கும் அந்தத் தொனி… இவையெல்லாம் எப்படியோ என் உயிருக்குள் கலந்து உறைந்து போயினவே!
தூர நின்று பார்க்கும்போது எல்லாமே விளையாட்டாய்த் தெரிந்தது. அந்தப் புள்ளிக்குள் சிக்கி தடுமாறுகையில் தான் அத்தனை சஞ்சலமும் போட்டி போட்டு சாகடிக்கிறது.
பேசித் தீர்க்கும் ஒரு சாதாரண பிரச்சினையை அவனது அவசரமும் அவநம்பிக்கையும் பாழ்படுத்தி விட்டது. பாவி இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்கலாமே…! உன் அவசரத்தின் பின்விளைவாய் உன் உறவுகளைத் தள்ளிவைக்கும் அபாக்கியசாலியாய் என்னை ஆக்கிவிட்டாயே…! இருபக்கம் கால்வைப்பதில் அர்த்தமேயில்லை. நல்லதோ கெட்டதோ ஒரே ஒரு முடிவு. பின் அம்முடிவின் தொடர்ச்சிக்கு என் உண்மையான ஒத்துழைப்பு. இது இரண்டும்தான் இப்போதைய தலையாய தேவை.
மனதும் அறிவும் போட்டி போட்டுக்கொண்டு தீர்வுகளை முன்வைக்கின்றன.
மனது சொல்கிறது வாழ்க்கை ஒரு தடவைதானாம். யாருக்காகவும் என் சுயத்தை இழக்க வேண்டாமாம். எனக்கு சந்தோஷம் எதுவென்று படுகிதோ அதையே தொடர்வதில் திண்ணமாய் இருக்கட்டாம். கூடவே காதலின் நினைவுகளையும் அதன் புனிதத்தையும் மகிழ்வுடன் மீட்டுகிறது. அறிவின் முடிவென்றால் முற்றிலும் வித்தியாசம் யாரையும் நம்புதல் தவறாம்… பெற்றோரின் மனம்நொந்த வாழ்வென்ன வாழ்வென்று கேட்கிறது. எல்லாம் நல்லதற்கென்று அமைதியாய் இரு… இடையில் வந்த சிறு சலனம் உன் வாழ்வைத் தின்னுகிறது. கண்ணைத் திறந்து பார்… என சத்தமாய் முழங்குகிறது.
எனக்குத் தெரியும் எப்போதுமே மனதின் முடிவு ஜெயிப்பதில்லை யென்று. அவசரத்தின் அத்திவாரத் தீர்வுதான் மனத்தின் ஆர்ப்பாட்டமென்று அறிவின் உறுதியில் உண்மையிருக்குமென்று. ஆக என் முடிவு அறிவின் பக்கம்தானா..! ஆமாம் என்று ஒத்துழைத்து மனதை கட்டிப்போட முயற்சிக்கையில்தான் திணறிப்போய்விட்டேன்.
எந்த ஒன்று எம்மிடம் இருந்து தூரப் போகப் போகிறதோ அதன் போதுதான் அவ்விடத்திற்காய் மனது ஏங்கத் தொடங்குகிறது. அதிகமாய் நாடத் தொடங்குகிறது.
நினைத்தவுடனேயே விட்டு விலகி சந்தோஷித்தில் ஒரு சராசரி மனிதனுக்குச் சாத்தியமில்லை. இதோ! இங்கேதான் இந்த இடத்தில் தான் ஒன்றுமே வேண்டாம் என்று உதறித்தள்ளிவிட்டு தனியாக ஓட முடிவெடுக்கிறேன்.
ஒரு பக்கம் சார முடியாத நிலையில் அத்தனை வித அவஸ்தைகளையும் அனுபவிக்கிறேன். அப்படிப் பார்க்கப் போனால் யோகிகளும் ஆன்மீகவாதிகளும் வாழ்க்கையை வெறுத்தவர்களா என்ன? இங்குமே என் சின்னப்புத்திதான் செயற்படுகிறதோ…! என் அறிவிற்கு முதிர்ச்சி போதவில்லை. இனியும் யோசிக்க திராணியில்லை. போகட்டும்… ஏதோ ஒன்று நடக்கட்டும்.
அவன்… என் காதலன்… நான் கிடைக்கவேண்டும் என்பதற்காய் என்னை எல்லோரிடமும் பகிரங்கமாய் விமர்சித்தவன்… என்றோ ஒரு நாள் என்னைப் புரிந்துகொள்ளக்கூடும். தற்போதைய சூழ்நிலையில் யாரிடம் எது கதைத்தாலும் பிழையாகிவிடக் கூடும். தளம்பலான என்முடிவில் நிச்சயமாய் ஒரு விபரீதம்தான் ஏற்பட்டுப் போகும். இப்போதைக்கு எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த முடிவு, மெளனம்தான்… மௌனம் மட்டுமே தான்.
ஓ! மனமே நீமட்டும் ஏன் மௌனிக்காமல் சதா ஆர்ப்பரிக்கிறாய்…? சற்றே பேசாமல் இருக்க மாட்டாயா…?
– வீரகேசரி, 15.07.2007.
– பீலிக்கரை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2007, ஞானம் பதிப்பகம்,கொழும்பு.
![]() |
பிரமிளா பிரதீபன் (எ) பிரமிளா செல்வராஜா (26 மார்ச் 1984) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தென்னிலங்கையில் ஆங்கில ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி (பட்டயம்) கற்கைநெறியின் நிலைய இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். பிரமிளா பிரதீபன் (எ) பிரேமிளா செல்வராஜா (1984.03.26) பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராஜா; தாய் சிவகாமி. ஆரம்ப கல்வியை ஊவாகட்டவளைத் தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை…மேலும் படிக்க... |