மனசுக்குள் மாலதி…





அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம்-7
திங்கள் – ‘ தீ ‘ நாள்.!
செவ்வாய் – வெறுவாய் !
வெள்ளி – கொள்ளி !
சனி – பிணி ! என்றெல்லாம்…. நாள், நட்சத்திரம் பார்த்து செயல்களைத் தள்ளிப் போடும் பழக்கமெல்லாம் மாலதிக்கு கிடையாது. இதிலெல்லாம் இவளுக்கு நம்பிக்கை இல்லை.
இவைகள் சந்தத்திற்காக பிணைக்கப்பட்ட வார்த்தைகள் . காக்கை உட்கார பணம் பழம் விழுந்த கதையாய் இவைகளில் ஒன்றிரண்டு பலித்துப்போக,

அதை சடங்காக மக்கள் தவறாக எடுத்துக்கொண்டு விட்டார்களென்பது இவள் நினைப்பு. மனிதனை மிதிக்கும் எந்த சடங்கு சம்பிரதாயங்களையும் மிதிக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்பதில் இவளுக்கு உடன்பாடு. எத்தனையோ மீறி இருக்கிறாள். அதனால் இவளுக்கு எந்த பலாபலன், நட்டமும் ஏற்பட்டதில்லை.
மனிதனே கோடு போட்டு, அதை கோட்டையாய் மாற்றியது குற்றம்.! தாண்ட மறுப்பது பேதைமை. நாட்டில் எதற்கெடுத்தாலும் சடங்கு, சம்பிரதாயம், சாஸ்திரம் பார்க்கும் கூட்டமிருக்கிறது. அவர்கள் கோழைகள் !!
வீட்டை விட்டு வெளிக்கிளம்பினான்.
பூனை குறுக்கே வந்தது
கெட்ட காலம்.
செத்தது பூனை !
– என்று புதுக்கவிதைகள் சாடியும் இன்னும் இதுபோல முட்டாள் பழக்க வழக்கங்கள் முடிவிற்கு வரவில்லை என்பதில் இவளுக்கு ஏகப்பட்ட வருத்தங்கள்.
ஜோசியங்கள் கதையும் இதேதான் !
இது மனித முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை.! என்பது புரிய. .. அதனால் அது மலேசியாவில் தடை செய்யப்பட்டிருக்கின்றது.
‘ நீ நட . நடப்பது நடக்கும் ! ‘ என்பதுதான் சரியான சித்தாந்தம்.
எந்தவித பயமுமில்லாமல் துணிச்சலாய் நட. வெற்றியும் தோல்வியும் அடுத்தடுத்தப் படிகள். என்பது சரி.
ஒதுங்காமல் நட. நீ ஒதுக்குப்பட மாட்டாய் ! – என்பது உண்மை.
மாலதி அலுவலகம் விட்டு வீட்டிற்குச் சென்றதுமே மகனை அழைத்துக் கொண்டு கடைத்தெருவிற்குப் புறப்பட்டு விட்டாள்.
ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினார்கள். துணிமணிகள் முடித்து கடைசியாக கதர் குல்லாய் எடுக்கும்போதுதான். …
” மாலு. .! ” யாரோ. .அழைத்து இவளைத் தொட்டார்கள்.
துணுக்குற்றுத் திரும்பினாள்.
ஆண்டாள் காயத்ரி ! – அடையாளமே தெரியவில்லை.
அதிர்ச்சியில் உறைந்தாள்.
‘ ஏன். .? ஏன். .? ‘ மனசுக்குள் சட்டென்று சில தடுமாற்றங்கள்.
” காயத்ரி. . நீ. ..” கேட்டு கலங்கினாள், கமறினாள்.
தோழியின் மனதை உணர்ந்த அவள்…
” வெளியில வா பேசிக்கலாய்ம் ! ” வெளி வந்தாள்.
மதம் மாறிய பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதில்லை. ஒருவேளை காயத்ரி அப்படி மாறி விட்டாளா. நாம் தவறாக நினைத்து அவசரப்பட்டு விட்டோமா. கலப்புத் திருமணம் முடித்தவர்களா. நாம் தவறாக நினைத்ததை உணர்ந்து உண்மை சொல்ல வெளியில் வருகிறாளா. ..??
வெளியில் வந்த மாலதி அவளைப் பரிதாபமாகப் பார்த்தால்.
ஒரு வினாடிக்கு மேல் தாங்கமுடியாமல். .. ” நீ. ..” கமறினாள்.
” விதவை !! ” அவள் சிரித்துக்கொண்டே மெல்ல சொன்னாள் .
மாலதிக்குள் இடி.
எப்படி இவளால் சிரிக்க முடிகிறது. வாழ்வின் அடியை, சோகத்தை விளையாட்டாய் எடுத்துக் கொள்ள முடிகிறது. .?
” எ. .. எப்போ. . எப்படி. .? ” வலியை த் தாங்கிக்கொண்டு கேட்டாள் .
” வீட்டுக்கு வா விபரம் சொல்றேன் ! ” என்று சாதாரணமாகசொன்ன அவள். அருகில் நிற்பவனைப் பார்த்து. …
”இவன் உன் பையனா. ..? ” கேட்டு சிறுவன் முகத்தை ஆசையாய்த் தொட்டு அவன் தாடையைப் பிடித்தாள்.
அறிமுகமில்லாதவள் கைப்பட. ..ராகுல் கொஞ்சம் பயந்து ஒதுங்கி தாயின் புடவையைப் பற்றினான்.
” டேய். .! அத்தைடா. .! ” மாலதி சத்தமாக சொல்லி அவனுக்கு அவளை அறிமுகப்படுத்தினாள்.
” அத்தையாதான் இருக்கனுமா. ஏன் சித்தின்னு அறிமுகப்படுத்தக் கூடாதா. .? ” கேட்டு காயத்ரி சிரித்தாள்.
சட்டென்று பெண்கள் தன் தோழி, பிள்ளை முகமறியா பெண்களை இப்படித்தான் அறிமுகப்படுத்துகிறார். !! ஏன். .?
மாலதிக்கும் திகைப்பு வந்தது.
” அது உன் குத்தமில்லே சமூக குத்தம் ! ” காயத்ரி சொன்னாள்.
மாலதிக்குப் புரியவில்லை.
” கணவன் மனைவி… தங்கள் குழந்தைகளுக்குத் தங்களுக்குப் பழக்கப்பட்ட ஆணையோ, பெண்ணையோ மாமா, அத்தான்னு ஏன் அறிமுகப்படுத்துறாங்க சொல்லு. .? ”
மாலதி விழித்தாள்.
” தங்கள் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு தேடிக்கிறாங்க. சகோதர சகோதரி உறவை ஏற்படுத்தி பிரச்சனை வராம பாதுகாத்துக்கிறாங்க. தங்களுக்குள் தப்பு நடக்காது, நடக்கக்கூடாதுன்னு எச்சரிக்கை செய்துகிறாங்க. ”
மாலதிக்குப் புரிய புன்னகைத்தாள்.
” ஒரே குழந்தைதானா. .?” காயத்ரி மறுபடியும் ராகுல் பக்கம் திரும்பினாள்.
” ஆமாம் ! ”
” வேற. .”
” இல்லே. உனக்கு உண்டா காயத்ரி..? ”
” இல்லே ”
” ஏன். ..? ”
” திருமணம் முடிந்த ஆறாவது மாசமே அவர் ஒரு விபத்தில் பலி. ” அவள் குரல் கலையாமல் சொன்னது இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
” உனக்கு வருத்தம் இல்லையா காயத்ரி. .? ”
” அழுது முடிஞ்சி காயம் ஆறிப்போச்சு ! ”
” உனக்கு எப்போ கலியாணம் முடிஞ்சுது. .? ”
” கல்லூரி படிப்பு முடிந்து வீட்டுக்குப் போனதும். ”
” காதலா. .? ”
” இல்லே ! தாய் மாமன் உறவு. விவசாயம் ! ”
மாலதி துணுக்குற்று அவளைப் பார்த்தாள்.
” என்ன அப்படி பார்க்கிறே. படிச்சவள் விவசாயம் பண்ற ஆளைக் கலியாணம் முடிக்கக் கூடாதா. .? விவசாயம் கெட்ட தொழிலா. .? ”
” அதுக்கில்லே. …” மாலதி இழுத்தாள்.
” எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறாங்க. விவசாயம் என்னவோ பாவப்பட்ட தொழில் மாதிரி முகத்தைச் சுளிக்கிறாங்க. ஒரு காலத்துல விவசாயம்தான் பிரதான தொழில் . எல்லோரும் அதுலதான் முன்னேறினாங்க. இன்னைக்குப் பல தொழில்கள் கிளைத்து முளைத்துப் போனதால விவசாயம் படுத்துப் போச்சு. எல்லோரும் பேண்ட், சட்டை போட்டுக்கிட்டு வேற தொழிலுக்குப் போறாங்க. ”
” விவசாயத்தைப் பத்தி ஆராச்சியே பண்ணி முடிச்சிட்டே போலிருக்கு. .? மாலதி ஆச்சரியப்பட்டாள்.
” அம்மா ” ராகுல் எவ்வளவு நேரம்தான் இவர்கள் பேச்சை சகித்துக் கொண்டிருப்பான் ?! – அழைத்து தாயின் புடவையைப் பிடித்து இழுத்தான்.
மகனின் சங்கடத்தை உணர்ந்த மாலதி. .
” சரி காயத்ரி ! நாளைக்கு வீட்டுக்கு வர்றேன். பேசிக்கலாம். ! ” நடந்தாள்.
” எத்தனை மணிக்கு. .? ”
” மாலை மூணு மணி ! ” சொல்லி ஆட்டோவில் மகனுடன் ஏறினாள்.
‘ எந்த கவலையுமின்றி கலகலவென்று துள்ளித் திரிந்த காயத்ரி எப்படி மாறி விட்டாள் …? ? ‘ மாலதிக்கு மனசு சரி இல்லை.
நாம் ஒரு வகையில் பாதிக்கப் பட்டிருக்கிறோமென்றால்…. இவள் இன்னொரு வகையில் பாதிக்கப் பட்டிருக்கிறாள்.! – நினைக்க இதயம் கனத்தது.
காயத்திரிக்கு இந்த வருத்தமெல்லாம் இல்லை.
மாலதியின் கணவன் வந்தானா, வரவில்லையா என்று தெரியவில்லையே.!
அவன் யார், என்ன, எப்படி…. என்பதை விசாரிக்காமல் விட்டுவிட்டு தன் சுயபுராணத்தை மட்டும் பாடிவிட்டு வந்து விட்டோமே. .! நினைத்து பேருந்து ஏறினாள்.
‘ ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. நாளைக்கு விசாரித்து கொள்ளலாம்.! ‘ முடிவிற்கு வந்தாள்.
அத்தியாயம்-8
‘ஆண் என்கிற வாடையே பிடிக்காமல், அவனை அண்டவிடாமல், நட்பையும் வெறுக்கும் அளவிற்கு மாலதி வாழ்க்கையில் என்ன நடந்தது. ..? ‘ – எவ்வளவு யோசித்தும் சுதாகரால் விடை கண்டு பிடிக்க முடியவில்லை.
‘ விவாகரத்துப் பெற்று, வாழ்க்கை முறியும் அளவிருக்கு ஒரு ஜோடி பிரிந்து நிற்கிறதென்றால் அவர்களுக்குள் ஏதோ பெரிய மனக்கசப்பு ! ‘ என்று புரிந்ததே தவிர, அந்த கசப்பு, வெறுப்பு ஆணாலா, பெண்ணாலா என்பது அவனுக்குத் தெரியவில்லை.
மது, மாது, சூதுகளால் குடும்பங்கள் சீரழிவது அதிகமென்றாலும், பெண்ணாலும் அப்படி குடும்பங்கள் பாழ் பாட்டிருப்பதைக் கண்ணால் கண்டிருக்கிறான்.
இவனுக்குப் பக்கத்தில்தான் சுரேஷ் வீடு. மனைவி அன்பரசி அழகானவள், அடக்கமானவள்.
கணேஷ், தினேஷ் என்ற இரு மகன்களுக்கு இவர்கள் பெற்றோர்கள்.
மகிழ்ச்சியாக வாழ்ந்த குடும்பத்தில் திடீரென்று சந்தேக பூதம். அது மனைவிக்கு ஏற்பட்டால் எந்த அளவிற்கு அவளால் கணவனைக் கொடுமைப்படுத்த முடியுமென்பதை சுரேஷ் சொல்லித்தான் இவன் அறிந்தான்.
சந்தேகம் பெரிய கொடுமையான நோய்தான். அதில் சந்தேகம் இல்லை. உண்மை. ஆனால், அது அழிக்க முடியாததோ ஒழிக்க முடியாதது அல்ல. ஒருத்தொருக்கொருதர் வீட்டுக் கொடுத்து, பரஸ்பர அன்பு பரிமாற்றமிருந்து, புரிந்து ஒழிக்கப்படவேண்டும். மேலும் சரியோ தவறோ எது ஒன்றையும் பெரிதாக எடுத்துக் கொண்டு தலையில் தூக்கி ஆடினால் அது சுமையாய் அழுத்தி ஆளைக் கவிழ்த்து விடும்.
அப்படித்தான் அது அந்த தம்பதிகள் வாழ்வை அழித்தது.
” உங்களோடு இனி சரி வராது ! ” என்று அன்பரசியே கணவனை உதறி தள்ளி விலகிவிட்டாள். சுரேசுக்கு விவாகரத்து கொடுத்துவிட்டாள்.
” உங்களோட புள்ளைங்களை விட்டா வீணாகிப் போவாங்க. சித்தி வந்து குத்தி வைப்பாள் ! ” என்று அவர்களையும் விலக்கி தன் தலைமேல் போட்டுக்கொண்டு சுமையைப் பெரிதாக்கிக்கொண்டு விட்டாள்.
ஒருவேளை….. தன் துணைக்காக அப்படி இழுத்துக்கொண்டாளோ என்னவோ. .?!
சுரேஷ் மனைவி மக்களை பிரிந்து, தன்னந்தனியாய் அலைந்து, பைத்தியம் பிடித்து திரிந்து…. ஒருநாள் காணாமலே போனான்.
‘ அந்த அன்பரசியை ஒத்தவளா மாலதி. ?! ‘ சுதாகருக்குள் குபுக்கென்று ஒரு கேள்வி.
‘ அவள் ,குணமா இவளுக்கு.??! மணவிலக்குப் பெற்று பிள்ளையுடன் வந்துவிட்டாள்!!. கணவன் எங்கோ சென்று விட்டானா. .?
ஆணென்றால் சபலம், துரோகி, கெட்டவன் என்கிற எண்ணம் அவர்களை வெறுக்கின்றாளா. நட்பு போர்வையில் நெருங்கி, தன் மனதை மாற்றி, ஆண் மறுபடியும் தன்னை வாழ்க்கையில் வேரறுத்து விடுவான் என்று நம்பி அதனால்தான் அதற்குக்கூட ஒப்புதலில்லாமல் ஒதுங்குகிறாளா. .?
ஒருவேளை புருஷன் குடிகாரன், கொடுமைக்காரன், சூதாடி, கொள்ளைக்காரன், திருடன், கொலையாளியா. .? ! அப்படி இருந்தாலும் இவள் பாதிக்க வழி உண்டு. எது சரி ?
யார் மீது தவறு. .?
ஆணையே வெறுத்து ஒதுங்கும் மாலதி மீது பரவு, பச்சாதாபம் காட்டுவது எப்படி சரி. .?
மனம் மாற்றி திருமணம் முடித்தாலும் சரியாக வாழ்வாள் என்று என்ன நிச்சயம்…?
ஏன் காதல் கொண்டோம். எதற்காக அல்லாடுகிறோம். பெண்ணே கிடைக்கவில்லையா. !!
கிடைக்கிறார்கள் ! கிடைப்பார்கள் !!
ஒரு சாதாரண மனிதனாய் ஒதுங்கி, சராசரிய் வாழ்ந்து விட்டுப் போவதில் அர்த்தமில்லை. இது எல்லோரும் வாழ்கிறார்கள். பெரும்பாலானவர்கள் வாழ்க்கை.
கஷ்டப்படுகிறவர்களுக்குக் கை கொடுப்பதுதான் மனிதம்.
‘ மாலதி ஏதோ வெறுப்பிலிருக்கிறாள். மனசு மாற்றத்தில் கஷ்டப்படுகிறாள். மனசு மாற்ற முடியாததல்ல. மாற்ற வேண்டும். அவள் கஷ்டம் களைய வேண்டும் ! ‘ – என்று முடிவுக்கு வந்த சுதாகருக்குப் பெங்களூரு தட்ப வெட்பம் ஒத்துக்கொள்ளவில்லை. ! !
அத்தியாயம்-9
சனிக்கிழமை. மாலை சரியாய் மூன்று மணிக்கெல்லாம் மாலதி ராகுலுடன் காயத்ரி வீட்டில் இறங்கி விட்டாள்.
” வா. . வா…” இவளை எதிர்பார்த்து காத்திருந்த அவள் மகிழ்ச்சியாக வரவேற்றாள்.
காயத்ரி வீடு வாடகை. ஒரு அறை, ஒரு கூடம், சமையலறை என்று சின்னதாக கச்சிதமாக இருந்தது. அவள் கணவனின் புகைப்படம் சுவரில் பெரிதாக மாட்டி மாலை போட்டிருந்தது. மற்றப்படி அனாவசியமான அலங்காரங்களில்லை.
தொலைக்காட்சி பெட்டி, மாவாட்டும் இயந்திரம், ஒரு குடும்பத்திற்குத் தேவையான அதி நவீனமான அத்தனைப் பொருள்களும் இருந்தன.
ராகுலுக்குக் பிஸ்கட் வாங்கி வைத்திருந்தாள். முதல் நாளே அவனைக் கடைத்தெருவில் கண்டு விட்டதால்….” இது என் அன்பளிப்பு! ” என்று அவன் அளவிற்கு பேண்ட் , சட்டி கொடுத்தாள். வெளிர் கரும்பச்சை. ஆடைகள் அழகாக இருந்தது.
” என்னடி இதெல்லாம். . ” மாலதி மறுக்கவே செய்தாள்.
” சின்ன அன்பளிப்பு ! அது மட்டுமில்லே. நான் யாருக்காகச் சேர்த்து வைக்கணும். .? எனக்கு இங்கு இருக்கிறதே அதிகம். சும்மா இல்லாம சம்பாத்தியம் வேற. உனக்கு, உன் மகனுக்கு கொடுக்கிறதால குறைஞ்சுட மாட்டேன். ” சொன்னாள்.
”………………….”
” ராகுலுக்கு இன்னொரு பரிசும் வச்சிருக்கிறேன். ” சொல்லி படுக்கையறைக்குள் சென்று அட்டைப்பெட்டியுடன் திரும்பி வந்தாள்.
” என்ன அது ? ” மாலதி தோழியின் அன்பில் திக்குமுக்காடினாள்.
” கார் பொம்மை ! ” என்று சொல்லி பையனிடம் கொடுத்த காயத்ரி…
” அவன் விளையாடட்டும். நாம் கொஞ்சம் பேசலாம் ! ” சொல்லி தோழியைப் பார்த்தாள்.
” பேசலாம். என்னமோ கஷ்டம்ன்னு சொன்னியே. .?? ” கேட்டாள்.
” ஆமாம் ! ”
” என்ன கஷ்டம் காயத்ரி ! ”
” ஒரு விதவைக்குறிய எல்லா கஷ்டங்களும். ..”
மாலதி கொஞ்சம் அதிர்ச்சியாய் அவளை பார்த்தாள்.
” உடல் உபாதையை மட்டும் சொல்லலை மாலதி. வேலி இல்லாத பயிர்ன்னு தொல்லை கொடுக்கிறாங்க. ”
இவளுக்குப் புரிந்தது.
” உன்னால கூடவா எதிர்த்து போராட முடியல, துரத்த முடியல. .? ” வியப்பாய்க் கேட்டாள்.
” துரத்தி துரத்தி மனம் துவண்டு போச்சு ! ” காயத்ரிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
” இன்னைக்கு வீட்டு வேலை செய்யும் பெண்களுக்குக்கூட பாதுகாப்பு என்கிற நிலை வந்து போச்சு. இப்படிப்பட்ட நிலையில் நீ துவண்டு போறேன்னு சொல்றதுதான் எனக்கு வருத்தமாய் இருக்கு. ” சொல்லி மாலதி வருத்தப்பட்டாள்.
” அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் ”
” சொல்லு..? ”
” மறுமணம் செய்துக்கலாம்ன்னு யோசனை ! ”
”………………”
” என்னை ஒருத்தர் காதலிக்கிறார் மாலதி. எங்க காதல் சீக்கிரம் திருமணத்தில் முடியும்ன்னு நினைக்கிறேன். !”
” சந்தோசமா இருக்கு காயத்ரி. !”
” சரி. உன்னைப்பத்தி சொல்லு. .? ”
இதுதான் இவளுக்கு உதைத்தது.
” அப்புறம் சொல்றேன். இப்போ நானும் ராகுலும் புறப்படுறோம் நேரமாச்சு ! ” மாலதி எழுந்தாள்.
உண்மையிலேயே இவளுக்குச் சொல்ல விருப்பமில்லை. பழசை நினைத்துப்பார்க்கவே அவளுக்கு நெஞ்சு நடுங்கியது.
அதனாலேயே பேச்சைத் துண்டித்துக்கொண்டு கிளம்பினாள்.
மகனை அழைத்துக்கொண்டு வேகமாக வெளியேறினாள்.
‘ இவள் படபடப்பிற்கும் அவசரத்திற்கு காரணம் வாழ்க்கையில் ஏதோ மர்மமிருக்கிறது என்ன அது. .? ‘ காயத்ரி அவள் முதுகைப் பார்த்து வெறித்தாள்.
வீட்டிற்கு வந்த பிறகுதான் மாலதிக்கு நிம்மதி மூச்சு வந்தது.
வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு படுத்தாள்.
காயத்ரி நினைவு !
எப்பேர்ப்பட்ட பெண் ! கல்லூரியில் எல்லோரையும் ஆட்டி வைத்தவளுக்கு இப்படியொரு வேதனையான வாழ்வு ! வருத்தம் வந்தது.
காயத்ரியைக் காதலிப்பவர் யார். .? விதவையை மணக்க மனது வைத்திருக்கும் அவன் கருணை உள்ளம் எவ்வளவு அருமை !
சுதாகர் வந்து தனக்குத் தொல்லை கொடுக்கின்றானே. . ஆண்டவன் இவனை ஏவி விட்டானா. .? !
மாலதி மனம் இப்படி நினைக்க.. கொஞ்சமாய் இறுக்கம் வந்தது.
‘ போதும். ! ஆண்டவனே வந்து சொன்னாலும் மனசு மாறமாட்டேன் !’ இளகி வந்த மனதை விடாமல் இன்னும் இறுக்கினாள்.
மாலதி எப்போது தூங்கினாளென்று தெரியாது. மணி பன்னிரண்டு முடிக்கும்வரை விழித்திருந்தது உண்மை. அதன் பிறகே அவள் தூங்கி இருக்க வேண்டும்.
காலை 5. 50 க்கெல்லாம் அவளுக்கு வழக்கம் போல் விழிப்பு வந்துவிட்டது. கண்கள் எரிந்தது. அப்போதுதான் இரவு வெகுநேரம் விழித்திருத்தது தெரிந்தது.
ஞாயிறு விடுப்பு. அலுவலகத்திற்குப் போகும் அவசரம், வேலை இல்லை. இன்னொரு தூக்கம் போடலாம். நினைத்தாள்.
மனம் வரவில்லை.
ராகுல் தூங்கிக்கொண்டிருந்தான்.
நிம்மதியாகத் தூங்கட்டும் ! எழுந்து வீட்டு வேலைக்கு ஆயத்தமானாள்.
ஞாயிறு விடுப்பு என்றுதான் பேர். ஆனால் அன்றைக்குத்தான் துணி துவைப்பது, வீட்டு வேலைகள், சமையல் என்று வேலை மூச்சு முட்டும்.!
மனம் ஆயாசப்பட்டது.
ஏன் ஓய்வென்ற பெயரில் ஒரு நாள் விடுப்பு விட்டார்கள். ஓய்வென்பதென்ன. ? யோசிக்க. .. அலுவலக வேலை என்பதை மறந்து ஒரு நாள். அது உடலுக்கல்ல மூளைக்கு! – தெளிந்தாள்.
சட்டென்று அவளுக்கு பள்ளி ஆண்டு விழா ஞாபகம் வந்தது. ராகுல் மேடையில் நேருவாக தோன்றும் காட்சி மனதில் வந்தது.
சென்றாக வேண்டும். நாளைக்கு காலையில் தொலைபேசியில் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லி விட்டால்…. மறுநாள் தலைமை குமாஸ்தாவிடம் கைகட்டி பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நினைக்க அவளுக்குள் தன் முடிவில் சந்தோசம் வந்தது.
சுதாகர் என்ன ஆனான். . ? நாளைக்கு அலுவலகம் வருவானா. .. ?!
அவன் ஏன் நம் பக்கம் திரும்பினான். .?
ஆண்டு அனுபவித்தவள், ருசி கண்ட பூனை, காதல் போர்வையில் சுலபமாக மடக்கி அனுபவித்துப் போகும் எண்ணமா. .?
அவன் அப்படிப்பட்டவனா. .?
இல்லை ! மணம் முடிக்கிறேன் ! என்று சொன்னான். கெட்ட எண்ணம் உள்ளவன் எவனுக்கும் திருமணமென்ற சிக்கலில் மாட்ட மனசு வராது. அந்த வார்த்தையும் வெளி வராது.
விதவையை மணம் செய்து கொள்ளுமளவுக்கு காயத்ரிக்கு ஒரு காதலன் போல் இவனுக்கு நல்ல மனசு.
பெண் விவாகரத்தாகி கஷ்டப்படுகிறாள் என்கிற கழிவிரக்கம்.
அதனால்தான் திருமணத்திற்கு மறுப்பு சொல்லியும் கூட நட்பாய் இருக்கலாமென்று சொன்னான்.
வாழ்க்கையில் நொந்து இருப்பவளுக்குத் தோழமை அன்பைத் தரும். ஆறுதலைத் தருமென்கிற நினைப்பு. நாம் தான் வீழ்ந்து விடுவோமென்று பயந்து விட்டோம் ! – நினைத்தாள்.
– தொடரும்…
– ஆகஸ்ட் 1, 2001ல் குங்குமச் சிமிழ் இதழில் பிரசுரமான குறுநாவல்.