மது அனைவருக்கும் பொது





‘இந்த ஷட்டௌன் வடிகட்டின முட்டாள் தனம்!’: சங்கர் எரிச்சலுடன் மனைவி லதாவிடம் அலுத்துக்கொண்டார்.
லதா, தன்னுடைய ஐ பேட் என்ற மகாநதியில் முழுமையாக மூழ்கியிருந்தாள்.
முழு அடைப்பின்போது, நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ள, சில இன்றியமையாத அழகுக் குறிப்புகளை ஒரு இளம் நடிகை விளக்கிக் கொண்டிருக்க, லதா ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள்.
‘இந்த ஷட்டௌனினால், எத்தனை பேருக்கு நஷ்டம்! கடையில் விற்பனை இல்லாட்டி, அரசாங்கத்துக்கு, ஏது வருமானம்? வருமானம் இல்லாம, இந்த சவாலை எப்படி சமாளிக்க முடியும்?’ மீண்டும் சங்கர் லதாவின் ஆமோதிப்பை எதிர்பார்த்துச் சொன்னார்.
லதா கணவரைப் பார்த்து, மெலிதாகச் சிரித்தாள்.
‘புரியுது! சாயங்காலம் ஆறுமணி ஆச்சில்லே? ஆசாமிக்குத் தாகம் எடுத்திடுச்சு! பாதுகாப்பா எடுத்து வச்சிருந்த கடைசி ப்ளாக் லேபல் விஸ்கி பாட்டிலும் நேத்தோட தீர்ந்திடிச்சு! இனிமே ஒயின் ஷாப் எப்போ தொறப்பாங்களோ, அப்பத்தான் விடிவு காலம்! சாதகப் பறவை போல.காத்திருக்க வேண்டியதுதான்!’ என்றாள்.
‘எப்பத் தொறப்பாங்களாம்?’
தொலைக்காட்சி செய்திகளை நிமிடம் தவறாமல் விழுங்கி ஜீரணித்துக் கொண்டிருந்த போதிலும், நப்பாசையில் எழுந்த கேள்வி.
‘இன்னும் ஒரு வாரமாவது ஆகும்னுதான் தோணுது’ என்று சொல்லிக்கொண்டே, லதா எழுந்து சாப்பாட்டு அறையை நோக்கிச் சென்றாள்.
‘இடியட்ஸ்! நியாயமா வர வரிப்பணத்தை விட்டுட்டு, அடுத்தது இன்கம் டாக்ஸை அதிகமாக்கறேன்னு கிளம்புவானுக! அமெரிக்காவில, இந்தியாவை விட இருபத்து அஞ்சு மடங்கு அதிகமா பாதிப்பு இருக்கு, அதுக்காக, முழு அடைப்பா செஞ்சிருக்கான்?’ சங்கரின் ஆத்திரம், தாகத்தின் தீவிரத்திற்கு ஏற்ப, அதிகரித்துக் கொண்டிருந்தது.
லதா, ட்ரேயில், ஒரு பாட்டில், இரண்டு கோப்பைகளுடன் திரும்பினாள்.
‘ஒரு ஷார்டனே ஒயின் பாட்டில் தனியா எடுத்து வச்சிருந்தேன். போன வருஷம் பாரிஸில் வாங்கினது. பொன் வக்கிற எடத்துல, பூ! இப்போதைக்கு இத வச்சுக்க வேண்டியதுதான்’ என்று சொல்லி, லதா பாட்டிலை சாய்த்துப் பிடித்து, லாகவமாய் ஒயினைக் கோப்பைகளில் ஊற்றினாள். வருமுன் காப்பானாக, பதுக்கி வைத்திருந்த தன் திறமையைப் பற்றி அவளுக்கே பெருமிதம்.
‘லேடீஸ் ட்ரிங்க்! இதையெல்லாம் குடித்துத் தொலைய வேண்டியிருக்கு’ என்று மேலுக்கு அலுத்துக் கொண்டு, சங்கர் ஆவலாய் கோப்பையை உறிஞ்சினார்.
சங்கர் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியிலிருந்து, ஓய்வு பெற்று, சில ஆண்டுகளே ஆகியிருந்தன. குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் மகனுடன், வார இறுதியில், பதினைந்து நிமிட வாட்ஸ் ஆப் உறவு, தினம் காலையில் நண்பர்களுடன் ஒரு மணி நேரம் அரசியல் அரட்டைக்கு அத்தியாவசியமான வாக்கிங், மாலையில் க்ளப்பில் வேறு சில நண்பர்களுடன் சீட்டாட்டத்துடன், இரண்டு பெக் ஸ்காட்ச், (‘எப்போதும் இரண்டைத் தாண்ட மாட்டேன், நான் ரொம்ப டிஸிப்லிண்ட்’) மற்ற நேரங்களில், பழைய நாட்களைப் பற்றிய அசை போடுதல், தொலைக்காட்சி வன்முறை வாதம் என்று, சங்கரின் வாழ்க்கை மிகப் பயனுள்ளதாக, ஒரே சீராகப் போய் கொண்டிருந்தது. கரோனாவினால் முழு அடைப்பு நேர்ந்ததுவரை.
க்ளப் மூடியதும், உலகமே இருண்டு விட்டது. வேலைக்காரர்கள் வேறு நிறுத்தம். ‘வேலைக்காரங்கள வரக் கூடாதுன்னு சொல்ல, கவர்மெண்ட்டுக்கென்ன அதிகாரம்? இதெல்லாம் தனிப்பட்டவங்க முடிவு!’ என்று சங்கர் கோபப்பட்டார்.
‘எல்லார் வீட்டிலும் ஆம்பிளைங்க கறி நறுக்கித்தராங்க, பாத்திரம் துலக்கறாங்க, உங்களுக்கு வேற வேலை கூட இல்ல ‘ என்று ஆண்வர்க்கத்தின் கொரானா கால தர்மத்தை லதா ஆணித்தரமாக போதித்த பிறகு, வீட்டு வேலையும் சேர்ந்துகொண்டதில், மாலை நேர மதுப் பழக்கம் (‘இந்த ஷட் டௌனில், இதுதானே நமக்கு ஒரே ரிலாக்ஸேஷன்?’) கூடுதல் நியாயமாகவே தோன்றியது.
‘க்ளப் செக்ரட்டரி சுத்த யூஸ்லஸ்! க்ளப்பை வேணா திறக்கத் தேவையில்லை, வீட்டில, ட்ரிங்க்ஸ் டெலிவர் பண்ண பர்மிஷன் வாங்கிக்கலாமில்லே ?’ – திரவம் சூடாக நெஞ்சில் இறங்க, பேச்சிலும் வெப்பம் அதிகரித்தது.
செல்வி அரிசி டப்பாவைத் திறந்து பார்த்தாள். பாதிக்கும் மேல் நிறைந்திருந்தது.
‘கவமெண்ட் நல்லாதான் கவனிச்சுக்கறாங்க’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு அரிசியைக் கையால் துழாவினாள். முறுமுறுவென்று கையைத் தழுவிய தானிய அலைகளின் உணர்வும், புழுங்கல் அரிசியின் மணமும், மனதுக்கு இதமாயிருந்தது.
உடனே, எதிர் வீட்டில் இருந்த மல்லிகாவின் நினைவு வந்தது. ஒரு பழைய பேப்பர் பையில், நான்கு க்ளாஸ் அரிசியைப் போட்டுக்கொண்டு, வெளியே வந்து பார்த்தாள். மல்லிகா தண்ணீர் குடத்துடன் தெருக்கோடியிலிருந்த குழாயடிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
‘என்ன இம்மாம் லேட்டா கெளம்பற? இன்னும் பதினஞ்சு நிமிசத்தில், தண்ணி நின்னுடுமில்ல?’ செல்வி அக்கறையுடன் கேட்டாள்.
‘ராவு பூராத்தான் ரகள் பண்ணிட்டிருந்தாரே என் புருசன்! உனக்குக் கூட கேட்டிருக்குமே? காலேல, மூணு மணியிருக்கும் தூங்கறப்போ.. அதான் லேட்டாயிடிச்சு!’ – சுவர்களில்லா ஏழ்மையில், அந்தரங்கங்கள் அம்பலமாய்விட்ட சகஜத்தோடு, மல்லிகா சாதாரணமாய் சொன்னாள்,
‘ம்.. கேட்டுது.. நம்ம ஊட்ல மட்டும் என்ன வாழுது? ஒரு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு சாராயக் கடைய மூடி.. வேலக்கும் போவலியா, நம்பளப் போட்டு வாட்றானுவ..’
‘குடிக்காம, அவங்களும் கஸ்டப்பட்டுகிட்டு, நம்மளையும் புடுங்கிறத பாத்தா, குடிச்சிட்டுக் கெடக்கிறதே மேலுன்னு தோணுது சமயத்தில.. ‘மல்லிகாவின் வார்த்தைகளில் கரளை தட்டிய புண்ணின் உணர்வு.
‘அப்டி சொல்லாத மல்லிகா! கவமெண்ட் இப்ப அடப்பு செஞ்சு, ஒயின் ஷாப்பெல்லாம் மூடி வச்சிருக்கறது எவ்ளோ பெரிய ஒதவி! ரெண்டு மாசம் குடிக்காம இருந்துட்டாங்கன்னா, குடிப் பழக்கமே போயிடும்னு அந்த அமுதா டீச்சர் பொண்ணுதான் சொல்லிச்சு.. இன்னும் மூணு வாரம்தான் பாக்கி.. கடைய தொறக்காம இருக்கணும்…’
‘ஒயின் ஷாப்பு மாத்திரமா மூடியிருக்கு? பொழப்புமில்ல போயிடுச்சு? ஏப்ரல் மாச சம்பளம் கொடுத்ததோட சரி! மே மாசம் வேலயே போயிடிச்சி!’
மல்லிகா ஒரு சிறிய டிபன்கடையில் பாத்திரம் கழுவும் வேலையில் இருந்தாள். முழு அடைப்பில், கடை மூடப்பட்டு விட்டது. ‘திரும்பி எப்ப தெறப்போன்னு தெரியாது. தெறந்தா சொல்லி அனுப்பறேன்’ என்று முதலாளி மரியாதையாய் சொல்லி அனுப்பிவிட்டார்.
‘எங்க வீட்டுக்கார அம்மா எவ்ளவோ பரவாயில்ல.. முழுச் சம்பளமும் கொடுத்து, வேலைக்கும் வரவேணான்னுட்டாங்கோ!’ செல்வி திருப்தியாய் சொல்லிக் கொண்டாள்.
‘எனக்கும் எதாவது நல்ல ஊடா இருந்தா சொல்லு அக்கா!’
‘ஆத்தாகிட்ட நேர்ந்துக்கோ.. நல்ல வேலயா கெடச்சுடும்’ என்று ஆறுதல் சொன்ன செல்வி, ‘இந்தா, நேத்து ரேஷன் கடைல, பத்து கிலோ அரிசி வாங்கினேன், அஞ்சு கிலோ ப்ரீ! இத நீ வச்சுக்கோ, ஒரு வாரத்துக்கு வரும்’ என்று, பேப்பர் பையை மல்லிகாவிடம் கொடுத்தாள்.
“இன்னாத்துக்கு அக்கா என்னால உனக்கு இவ்ளோ தொந்தரவு’ என்று பணிவாய் சொல்லிக்கொண்டு, மல்லிகா பையை வாங்கிக் கொண்டாள்,
வீட்டை நோக்கித் திரும்பிய போது, செல்வியின் ஒரே மகன்- பத்து வயது சிறுவன் – எழுந்து சொம்புத் தண்ணீரில் பல் துலக்கிக் கொண்டிருந்தான்.
‘இஸ்கோல் இல்லேன்னு, ஊர் மேயாத, பொஸ்தவத்த எடுத்து, பாடம் படி’ என்று சொல்லி, செல்வி செல்லமாய் பிள்ளையின் தலையைத் தட்டினாள்.
உள்ளே செல்வியின் கணவன் முருகன் கூரையை வெறித்துப் பார்த்தவாறு படுத்திருந்தான்.
இதுபோல அமைதியாய் முருகனைப் பார்த்து, பல வாரங்களாகிவிட்டன.
முழு அடைப்பு அறிவித்த முதல் சில நாட்கள், வீடு நரகமாய் இருந்தது. முருகனின் வெறிக்கு, செல்வி ஈடு கொடுக்க வேண்டியிருந்தாலும், மயக்கமும் வாந்தியுமாய் முருகன் தவிக்கும்போது, செல்விக்குப் பச்சாதாபமாகவே இருந்தது.
‘குடிக்கிறவங்க, திடீர்னு குடிய நிறுத்தினா, பல விதமா, உடம்பு பாதிச்சுடும். ரொம்ப உடம்பு மோசமாயிடுச்சுன்னா, உயிருக்குக்கூட டேஞ்சர்’ என்று, அந்த குடியிருப்பில் இருந்த அமுதா டீச்சர் எச்சரித்திருந்தாள்.
அக்கம்பக்கத்தில், பல வீடுகளில், இதே பிரச்சினைதான். குடித்துவிட்டு கொடுக்கும் உதை அதிக வலிமையா, குடிக்க கிடைக்காமல் வாங்கும் அடி அதிகமா என்று யதார்த்தமாக, பெண்கள் பேசிக் கொண்டார்கள்.
‘அந்த கடேசி வீட்டு பூக்காரம்மா புருசன் சாராயம் நிறுத்தினதில, நெஞ்சு நோவு வந்து, நேத்து ராவிக்கி ஆஸ்பத்திரிக்கு, இட்டுணு பூட்டாங்கோ’ என்று மல்லிகா ஒருநாள் தகவல் கொண்டுவந்தாள்.. நல்ல வேளையாக, முருகன் உடல்நலன் அவ்வளவு மோசமாக ஆகிவிடவில்ல.
‘எழுந்து பல் தொலக்கிட்டு வா, டீ வச்சிருக்கேன்’ செல்வி முருகனைத் தட்டிச் சொன்னாள்,
முருகன் எழுந்திருக்கவில்லை . * கடையெல்லாம் என்னிக்குத் தொறக்கறாங்களாம்?’ என்றான். செல்வி முருகன் அருகில் வந்து உட்கார்ந்து அவனை உற்றுப் பார்த்தாள்.
‘இத பாரு, நல்லா கேட்டுக்க! கடைய எப்ப தொறந்தாலும் சரி, நீ சாராயத்த இத்தோட தல முழுவினாத்தான் நாம சேந்து வாயலாம்! இல்லாட்டி, நானும், எம் புள்ளயும் ஊர் பக்கம் போயிருவோம். இது ஆத்தா மேல சத்தியம்!’
‘உட்டுடத்தான் பாக்கிறேன், முடியலியே!’ என்று மெதுவாய் முனகினான் முருகன்.
‘முடியும்! மனசு வச்சா முடியும். இப்ப சாராயக் கட இல்லேன்றப்ப, எப்டி சமாளிக்கிறே?’
முருகன் மௌனமாயிருந்தான். ‘நாலு நாளா கொஞ்சம் சமாளிக்க முடியுது! அப்டி தாங்க முடியாம, வெறி வரல இல்லே ?’ செல்வி கேட்டாள்,
முருகன் தலை அசைத்தான். ‘குடிப்பயக்கத்திலேர்ந்து வெளிய வரதுக்குக்கூட, ஆஸ்பத்திரியெல்லாம் இருக்காம், அமுதா டீச்சர் சொல்லிச்சு, இந்த அடப்பெல்லாம் போன கையோட, உன்ன அங்க இட்டுக்கினு போவ, ஏற்பாடு பண்ணிருக்கேன்’ என்று செல்வி அமைதியாய் சொன்னாள். ‘ சாராயக் கட பக்கம் போமாட்டேன்னு சத்தியம் பண்ணிக் குடு’
முருகன் எழுந்து, செல்வியை அணைத்து, நெற்றியில் மிருதுவாய் முத்தமிட்டான். ‘இனிமே சாராயக் கட பக்கம் போவ மாட்டேன், இது ஆத்தா மேல சத்தியம் ‘ என்றான்.
‘சரி, சரி, காலைல, என்ன இது?’ செல்வி வெட்கத்துடன் எழுந்தாள்.
‘நாளையிலேர்ந்து லிக்கர் ஷாப்பெல்லாம் ஓபன் பண்ணறாங்களாம்!’ தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கர், உற்சாகத்துடன் துள்ளி எழுந்து, அடுக்களையிலிருந்த லதாவிற்கு, குரல் கொடுத்தார். ‘ கரெக்ட் டிஸிஷன் !’
‘உங்களைப் பொறுத்தவர, ஷட்டௌன் ஓவர்!’ என்றாள் லதா.
‘நாளைக்கு ரொம்ப கூட்டம் இருக்கும், ஸோஷியல் டிஸ்டன்ஸிங்கெல்லாம் எப்படி முடியும் ? அதான் வொரி!’
‘மணிக்கணக்கா க்யூவில நிக்கணும், நீங்க போறது கொஞ்சம்கூட ஸேஃப் இல்ல ‘ என்றாள் லதா,
‘திரும்பி மூடினாலும் மூடிடுவான், நாளைக்கு எப்படியும் முடிந்த அளவு ஸ்டாக் பண்ணிக்கணும். யார் வாங்கிக் கொடுப்பாங்க? ‘ சங்கருக்கு இது பெரிய பிரச்சினையாக, உருவாகிவிட்டது.
‘யோசிச்சு சொல்றேன் ‘ என்றாள் லதா.
சங்கர் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தார்.
‘நம்ம வேலக்காரிகிட்ட சொல்லலாமா? முழுச் சம்பளம் கொடுக்கறோம், வேலை எதுவும் வாங்காம…’ சங்கர் கொஞ்சம் தயக்கத்துடன்தான் சொன்னார்.
லதாவிற்கு, எங்கேயோ சற்று நெருடியது.
‘அதெல்லாம் தப்பு. பெண்களை எப்படி இந்த மாதிரி வேலைக்கெல்லாம் அனுப்பறது?’
‘அதுவும் சரிதான்…. அப்ப, அவள் புருஷன் இருக்கானில்ல? வேலயில்லாம, சும்மாதானே இருப்பான்? அவன ஒரு உதவியா கேட்டா தப்பில்ல.. அதோட, நம்ப முழுச்சம்பளம் கொடுக்கறோம் வேல வாங்காம.. ஒண்ணும் ஓவரா கேட்கலியே?’
‘ஹலோ ! செல்வியா ?’
‘ஆமாம்மா, நாளலேர்ந்து வேலைக்கு வரட்டாம்மா ?’
‘அதில்லாம் இப்ப வேணாம். அக்கம் பக்கம் ஒண்ணும் கொரோனா கேஸ் இல்லயே ?’
‘ஒண்ணியும் இல்லம்மா! தினம் கார்ப்பரேசன்லேர்ந்து, விசாரிச்சுட்டுப் போறாங்க’
‘சரி, செல்வி எனக்காக, தட்டாம, ஒரு உதவி செய்யணும்… நாளையிலேர்ந்து ஒயின் ஷாப் திறக்கறாங்களாம்.. உன் புருஷன் போய் ஐயாவுக்காக, கொஞ்சம் சரக்கு வாங்கிட்டு வரணும்…வீட்டுக்கு வந்து லிஸ்ட்டும் பணமும் வாங்கிட்டுப் போக சொல்றியா?… ஹலோ…ஹலோ….ஹலோ…’
‘கட் ஆயிடுத்து போலயிருக்கு’ என்றாள் லதா..
– ஜூன் 2020