மதில் மேல் பூனை





(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடல் மணிக்கு, அந்த நீதிமன்றத்தின் அனைத்துப் படிக்கட்டுகளுமாய், தானே ஆகிப்போனது மாதிரியான வேதனை. ஒவ்வொரு படிக்கட்டாய் ஏற ஏற, தன்னைத் தானே மிதித்துக் கொள்வதுபோன்ற துயரம்.. படிக்கட்டு களாகிப்போன தன்னை, ஆரம்பத்தில் சித்தி மிதித்தாள்..அப்புறம் பங்காளித் தம்பிகள்.. இலைமறைவு காய் மறைவாய் மனைவிமக்கள்.. இப்போது எல்லோருக்குமாய் சேர்த்து அரசாங்கம்.. எஞ்சி இருப்பது இந்த நடுவர் மன்றந்தான்.. மிதிக்கப் படுவோமோ.. மதிக்கப்படு வோமோ…
என்றாலும், அந்த நடுவர் மன்ற வளாகத்தைப் பார்த்தவுடனேயே, கடல் மணிக்கு ஒரு ரசனை ஏற்பட்டது. அந்த ரசனை வெள்ளத்தில் வேதனை கரைந்து போகவில்லை யானாலும், கல்லாய் மூழ்கியது.. இது வழக்கமான மாஜிஸ்டிரேட் கோர்ட் மாதிரி இல்லை. ‘ஒங்க வக்கீல் வர்லியா ஸார்.. இன்றைக்கு நான் வேணுமுன்னா.. ஆஜராகுறேன் ஸார்’ என்று கெஞ்சும் கறுப்புக் கோட்டு குடுகுடுப்பைக்காரர்களை காண முடியவில்லை.. காவல் துறையிடம் மாமா-மச்சான் உறவாடும் ரௌடிகளையோ, கைவிலங்கிடப்பட்ட அப்பாவிகளையோ காணமுடிய வில்லை… கோர்ட்டே சிறை வைக்கப்பட்டிருப்பது போல் தோன்றும் பாடாதி தரையையோ.. பத்தாம் பசலி மேஜையையோ பார்க்க முடியவில்லை.. மாறாக கடப்பாக்கல் தளம்.. ஓடுகிற சுவர்க் கடிக்காரம்.. சுற்றுகிற மின்விசிறி..
அந்த வளாகத்திலும், அந்த மன்றத்திலும் இருப்பவை கண்ணில்பட, இல்லாதவை கருத்தில்பட, பராக்குப் பார்த்தப்படியே நடந்த கடல்மணி ‘பார்த்து அண்ணார்ச்சி’ என்ற குரல் கேட்டு, நிமிர்ந்தார்.. நிமிர்ந்த வரை, ஏற இறங்கப் பார்த்தபடியே, சீனிவாசன் சிரித்தபடியே சீண்டினார்..
‘என்றைக்கும்..பார்த்து நடக்கணும் அண்ணாச்சி.. இல்லாட்டால்.. இப்படித்தான் முட்டிக்கணும்…’
கடல்மணி, அந்த சீனிவாசனை, பாதாதிகேசமாய் பார்த்தார். ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்பது போல் ‘உருவு கண்டு நம்பாமை வேண்டும்’ என்ற புதிய பழமொழிக்கு, அவர் வார்த்தைகளாகத் தோன்றினார்.. கடந்த நான்கு நாட்களில் கன்னச் சதையிழந்து, கண்ணில் ஒளி இழந்து, கால்கள் வில்லாய் வளைய நின்ற இந்த கடல்மணியைப் பார்த்து, சீனிவாசன் உப்பிப்போன கன்னங்களை, மேலும் உப்ப வைத்தார். தலை நரையை மறைக்கும் கறுப்புச் சாய முடியை தடவி விட்டபடியே கேட்டார்.
‘என்னை எதுக்காக அண்ணாச்சி முட்டுறீங்க..’
‘முட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டால்.. முட்டத் தானே செய்யணும்.. ‘அதோட கழுதையாகமலே.. குட்டிச் சுவரை முட்ட வேண்டியதாயிற்று பிரதர்..’
‘நீங்க..முட்டிக்கிறது குட்டிச் சுவர் இல்ல.. காங்கீரிட் கட்டிடம்..’
‘நான் கட்டிடத்துல மோதல.. அதுல தேங்கிப்போன சாக்கடைக் குழாயைத்தான் திறக்கேன்..’
‘இதனால.. நீங்கதான் அசுத்தமாவிங்க அண்ணாச்சி..’
‘நான்.. அசுத்தப் பட்டாவது.. கட்டிடம் சுத்தப் படட்டும்..’
‘கட்டிடமே.. ஒங்களுக்கு இல்லன்னு ஆகும்போது..’
‘அப்படிச் சொல்றவன்.. என்னை மாதிரி இன்னொரு வேலைக்காரன்.. வீட்டுக்காரன் இல்ல..’
எரிந்த கட்சியாகக் கடல்மணியும், எரியாத கட்சியாக சீனிவாசனும்,லாவணி போட்டுக் கொண்டிருந்தபோது, உயரத்தில் வித்தியாசப் படாமல், அகலத்திலும், வயதிலும் வித்தியாசப்பட்ட இரண்டுபேர், சீனிவாசனின் இருபக்கமும் நின்று கொண்டார்கள். இவர்களில் வயிறு துருத்தியவர் நிர்வாக அதிகாரி.. கண்கள் துருத்தியவர் அலுவலக ஜூனியர் அஸீஸ்டெண்ட்.. இந்த இருவருமுேந்தாநாள்வரை இந்தக் கடல்மணிக்கு சலூட் அடித்தவர் லுவலகத் தலைவரான சீனிவாசனுக்குக் கூட போடாத மபரிய கும்பிடு போட்ட வர்கள். ஆனால் இப்போதோ, நிர்வாக அதிகாரி..அவரை பாராததுபோல் அலட்சியமாக நிற்கிறார்.. அஸிஸ்டெண்ட் இளைஞன் அவரை பார்ப்பதுபோல்.. பகையாளியைப் பார்க்கிறான்..
கடல்மணி, சீனிவாசனை விட்டுவிட்டு, அவர்களைப் பார்த்தார். மனம்குமுறி, கண் திமிறிப் பார்த்தார்.. இதே இந்த இரண்டு பேர்வழிகளும், கடல்மணியின் அறைக்குள் அடிக்கடி வருவார்கள்.. ஒங்க பையனுக்கு வேலை கிடைத்ததா ஸார்.. பிழைக்கத் தெரியாதவர் ஸார் நீங்க’ என்பார்கள். உடனே பிழைக்கத் தெரிந்த அவர்களிடம், கடல்மணி, எஸ்.டி.டி. வசதி, கொண்ட டெலிபோனை நீட்டுவார்..நிர்வாக அதிகாரி, பம்பாய் மைத்துனிக்கும், அஸிஸ்டெண்ட் மைனர், பெங்களுர் மாமா பெண்ணுக்கும் குடும்ப விஷயங்களை சொல்லும்போது சும்மா இருக்கும் கடல்மணி, அவர்கள் ‘இன்றைக்கு என்ன குழம்பு.. என்ன பொறியல்’ என்று கேட்கும்போது ‘பேச வேண்டியதை மட்டும் பேசுங்க.. கத்தரிக்காய்.. கருவாட்டு விவகாரத்தை பேசப்படாது. டெலிபோன்ல ஒவ்வொரு விநாடிக்கும் பணம் பாருங்க’ என்பார். இப்போது அவர்களுக்கு, அவர், பேசவிட்டதை விட, பேச விடாததுதான் நினைவுக்கு வருகிறதோ என்னவோ.. அல்லது ஒருவேளை, இப்போது, இவரது அறை காலியாக இருப்பதால், நேர்முக உதவியாளப் பெண்ணை, உருட்டி, மிரட்டி, பம்பாய் மைத்துனியுடனும், பெங்களுர் மாமா பொண்ணுடனும் எஸ்.டி.டி.உறவுகளை அதிகமாய் வைத்துக் கொள்ள முடிகிறதோ.. என்னவோ.
கடல்மணியின் கரங்கள், அவரை அறியாமலே ஆயுதங்களாக ஆகிக் கொண்டிருந்தபோது, சீனிவாசன் கேட்டார்.
‘என்ன அண்ணாச்சி இந்தப் பக்கம்..’
‘தெரியாதது மாதிரி கேட்கிறீங்களே.. நீங்க எதுக்காக வந்திங்க..’
‘நாங்களா..நாங்க..வந்து..’
ஏதோ சொல்லப் போன சீனிவாசனை, நிர்வாக அதிகாரியும், அஸிஸ்டெண்ட் ஆசாமியும் ஆளுக்கொரு பக்கமாய் இடுப்பில் தட்டி, உஷாராக்கிவிட்டு, மிகப்பெரிய ரகசியத்தைக் காப்பதுபோல், வீறாப்பாய் நின்றார்கள்.. அரசாங்கத்தைதாங்கும் தூண்களாம்.. அரசுப் பல்லாக்கு, அவர்கள் இல்லையானால் விழுந்துவிடுமாம்..
கடல்மணி, வாய் வரைக்கும் வந்த உமிழ்நீர்,எச்சிலாகும் முன்பே, அதை பின்னோக்கித் தள்ளிவிட்டு, முன்னோக்கி நடந்தார். காற்றில் தென்னை ஆடும்போது, அதில் இருக்கும் ஓணான், அந்த தென்னையை ஆட்டுவதாக நினைத்து, தனது தலையை ஆட்டுமாமே.. அப்படிப் பட்ட அலுவலக ஓணான் பயல்கள்.. இவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றால், இ.பி.கோ. செக்ஷனில் ‘புக்காகி’ கைவிலங்கோடு செஷன்ஸ் கோர்ட்டுக்குப் போக வேண்டியது வரும்..
கடல்மணி, நடுவர் மன்ற அரங்கிற்குள் வந்தார். நீதிமேடையையும், அதில் போடப்பட்டிருக்கும் மெத்தை யிட்ட நாற்காலிகளையும் பார்த்தார். முதுகை வளைத் ததுபோல் அரை வட்டமான நீளவாகு மேஜையையும், அதில் கையூன்றி, கட்டூன்றி, நாற்காலிகளின் அடிவாரம் வரை உடம்பை சாய்த்துப் போட்ட வழக்கறிஞர்களைப் பார்த்தார்.. அவர்களின் இந்த இருக்கைப் பகுதிக்கு இடைவெளி கொடுத்து, வகுப்பறைபோல் போடப்பட்ட நாற்காலிகள் ஒன்றில் உட்கார்ந்தார்.. சுற்றுமுற்றும் பார்த்தார்.. கட்சிக் காரர்கள்..வாதிகளோ.. பிரதிவாதிகளோ.. வேட்டிகளைக் காண முடியவில்லை.. ஒட்டுப்போட்ட சேலைக்காரிகள் கிடைக்கவில்லை. அத்தனைபேரும் சபாரி பேண்ட் சிலாக்கிலோ அல்லது பைஜாமா.. பட்டுப் புடவைக்குள்ளோ இருந்தார்கள்.. ஆனாலும் பெரும்பாலோர் முகங்களில் கண்கள் தேங்கிக் கிடந்தன.. ஏங்கிக் கிடந்தன.. கைக் கடிகாரங்களையே, கைவிலங்காய் பார்த்துக் கொண்டன..
கடல்மணி, வக்கீல்கள் இருக்கைகளை நோட்டமிட்டார். ‘மாப்பிள்ளையை’ காணவில்லை.. ‘மாப்பிள்ளை எங்கே’ என்று, மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டார். ஒரு வாதிக்கோ அல்லது பிரதிவாதிக்கோ, வழக்கறிஞர்தான் ‘மாப்பிள்ளை’..அதே முறுக்கு.. அதே வரதட்சணை.. அதே ‘மற்றும் பல’. இயல்பிலேயே ஆரோக்கியமான ரசனைக்காரரான கடல்மணி, தனது உவமையை எண்ணி தானே சிரித்துக் கொண்டார். பிறகு ‘நாம் கெட்ட கேட்டுக்கு, சிரிப்பு ஒரு கேடா’ என்று வாயை மூடாமலே, மனதை மூடிக்கொண்டார். ஆனாலும், அவர் பட்ட அவமானமும், நடத்தப்பட்ட விதமும், வாதைகளாக மனதில் முட்டி மோதின. அதே சமயம் தனது ‘மாப்பிள்ளை’ நல்லவர் என்பதாலும், காசுவாங்கக்கூட மறுத்துவிட்டார் என்ப தாலும், மனிதாபிமானம் இன்னமும் இருக்கிறது என்பதில் ஒரு ஆறுதல்.
கடல்மணி, தன்னை தோளில் தட்டுவதைப் பார்த்து நிமிர்ந்தார்.. அலறியடித்து எழுந்தார். எல்லோரும் எழுந்த நிற்கிறார்கள். வடநாட்டுக்காரி என்பதாலோ என்னமோ, அவர் தோளைத் தட்டிய பைஜாமாக்காரி, அவர் தோளில் இருந்து கையை எடுத்துவிட்டு, மோவாயை முன்னோக்கி விட்டு, கண்களை எம்ப வைத்து பரிமொழியாய் பேசுகிறாள். அவள் காட்டிய நீதி மேடையில், இரண்டு நீதிபதிகள் உட்காருகிறார்கள். சிவப்புப் பார்டர் போட்ட கறுப்புச் சிலுக்கு கவுன்மாதிரியான கோட்டுப் போட்டவர்கள்.. உள்முகமாய் பார்ப்பது போன்ற பார்வை.. நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டதுபோல், எவரையும் குறிப்பிட்டுப் பார்க்காமல், எல்லோரையும் பார்க்கும். ‘ஏதிலாப்’பார்வை..
கடல்மணி, தன் பக்கத்தில் நிற்கும் சீனிவாசனையும், அவரது அலுவலக சகலைகளையும், ஆச்சரியமாய் பார்த்தார். எப்போது வந்தார்கள்.. நீதிபதிகள் வந்தவுடனே எழுப்பி இருக்கலாமே.. இவர்களா.. எழுப்புவார்கள்.. அது யார். அடடே..மாப்பிள்ளையா..
வாசலுக்குள் நுழைந்த தனது வக்கீலிடம், கடல்மணி, துள்ளிக் குதித்துப் போனார். சீனிவாசனை முகத்தால் சுட்டிக் காட்டிப் பேசினார். வக்கீல், அவரை முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு, முருகன் போல், கையால் அபயம் கொடுத்தார்.
நீதி பரிபாலனம் துவங்கிற்று..
நீதிமேடைக்குக் கீழே, பக்க வாட்டில் போடப்பட்ட நாற்காலியில் உட்காராமலே, உதவியாளர் பெண், ஒவ்வொரு கட்டாக, மாண்புமிகு நீதிபதிகளின் முன்னால் வைத்து விட்டு, சம்பந்தப்பட்ட வக்கீல்களைப் பார்க்கிறார். அவர்கள் எழுந்து நிமிடக் கணக்கில் வாதாடுகிறார்கள். நீதிபதிகளில் ஒருவர் வினாடிக் கணக்கில் பேசி, முடிவைத் தெரிவிக்கிறார்.
கடல்மணி, ஒவ்வொரு கட்டையும், மூச்சைப் பிடித்துப் பார்க்கிறார். அது, தன் ‘கட்டு’ அல்ல என்றதும் ஒரு ஏமாற்றம்..கூடவே ஒரு சந்தோஷம். எதிர்பார்ப்பே ஒரு இனிய சுகம் கொடுக்கும் போது, அந்த தீர்ப்பு தீர்த்து கட்டிவிடக்கூடாது என்ற அடிமன பயமே, வெளிமன சந்தோஷ வெளிப்பாடானது.
ஒரு மணி நேரம் கழித்து, உதவிப் பெண், வழக்கம்போல் ஒரு கட்டை எடுத்து, நீதிமேடையில் பயபக்தியோடு வைத்துவிட்டு, கடல்மணியின் வக்கீலை முரட்டுத்தனமாய் பார்க்கிறாள். அவர் எழுகிறார். கடல்மணி மூச்சைப் பிடிக்கிறார். மூர்ச்சையாகப் போகிறார். பிறகு தட்டுத் தடுமாறி எழுந்து, தனது வக்கீலின் முதுகுப் பக்கம் போய் நிற்கிறார். அவர் வாதாடுவதற்கு வாயைத் திறக்கும் முன்பே வலது இருக்கை நீதிபதி தலையிடுகிறார்.
‘ஓட் இஸ் திஸ்? டிரான்ஸ்பர் கேஸா.. அரசாங்க மாற்றல் உத்திரவுகளில்.. நடுவர் மன்றம் பொதுவாக தலையிடக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் சொல்லி இருப்பது தெரியாதா?”
‘தெரியும் மை லார்ட்.. ஆனாலும் உச்ச நீதிமன்றம் ‘பொதுவாக’, என்ற சொல்லைத்தானே பயன்படுத்தி உள்ளது? மை லார்ட்.. என் கட்சிக்காரர் அவரது நேர்மைக்காக தண்டிக்கப் பட்டிருக்கிறார்..’
‘டிரான்ஸ்பர் தண்டனையாகாதே.. நல்ல எக்போஷர் தானே.. அரசு ஒரு தாய் மாதிரி.. வளர்ந்து விட்ட பிள்ளைகளை, மாடு முட்டித் துரத்தும்.. கோழி கொத்தித் துரத்தும்.. அரசு டிரான்ஸ்பர் ஆர்டர் போடும்..’
‘நிசந்தான் மை லார்ட்.. இந்த ‘ஒரு தாய் பிள்ளைகளில்’ பலர் இருபதாண்டு கால வளர்ச்சிக்குப்பிறகும், இங்கேயே இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களைச் சொல்லட்டுமா..
‘இது எங்களுக்கு சம்பந்தப் படாத விவகாரம்.. ஒங்கள்.. கட்சிக்காரரை பற்றி மட்டுமே பேசுங்கள்..”
‘எஸ் மை லார்ட்.. நீங்கள் குறிப்பிடும் ‘அன்னை அரசு’..இவருக்கு போலித்தாயாகவே நடந்து கொண்டது.. ஆயர் பாடி கண்ணனுக்கு பாலுட்டினாளாமே பூதகி.. அவள் போல’
‘நோ.. நோ.. டிரான்ஸ்பர் கேஸில் தலையிடுவதாய் இல்லை.. இது அரசின் வழக்கமான செயல்பாடு..’
‘ஒரு ஐந்து நிமிடம் அவகாசம் கொடுங்கள் மை லார்ட். ஐந்தே ஐந்து நிமிடம்.. இந்த மாற்றல் உத்திரவு..ஒரு பழி வாங்கும் நடவடிக்கை என்பதை நிரூபித்துக்காட்டுகிறேன்.. ‘
‘நத்திங்க டூயிங்.. நெக்ஸ்ட்..’
‘மன்னிக்கணும் மை லார்ட்… ஒரு அரசு ஊழியர்.. தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கேட்டு நீதி மன்றத்திற்கு வருகிறார்.. அவர், வேவு பார்க்கப் படுகிறார்.. அவர் என்ன பரிகாரம் கேட்டாலும், அதை ஆட்சேபிப்பதற்கு என்றே.. அலுவலகத் தலைவரும், இரண்டாவது பிரதிவாதியுமான மிஸ்டர். சீனிவாசன், பரிவாரங்களோடு வந்திருக்கிறார்… இது, எந்த இலாகாவும் மேற்கொள்ளாத முயற்சி. நான்வேவு பார்க்கப் படுகிறேன் மை லார்ட். சிறுமைப் படுத்தப்படு கிறேன் மை லார்ட்..
நீதிபதிகள், புருவங்களை சுழித்தபோது, ஒரு இளம் வக்கீல் எழுந்தார். லேசாய் தலையைக் குனிந்துவிட்டு, பேசினார்.
‘வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில் ஆட்சேபம் இல்லை. ஆனால் இடைக்காலத் தடை மட்டும் கொடுக்கலாகாது..’
‘நான் சமர்ப்பித்ததை .. இந்த வக்கீல் நிரூபிக்கிறார் மை லார்ட். அரசு தரப்பு வழக்கறிஞரின் மகனான இந்த இளம் வக்கீல், தனக்கு சம்பந்தப்படாத விவகாரத்தில் தலையிடு வதைக் கூட..நான் ஆட்சேபிக்கவில்லை மைலார்ட் காரணம் சினிமாவிலும், அரசியலிலும் ஊடுருவிய வாரிசு முறை நீதித்துறையிலும் நுழைவது தவிர்க்க முடியாதுதான். ஆனால், இந்த குறுக்கீடு அரசாங்கத்தின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் மை லார்ட்..’
‘மீண்டும் சொல்கிறேன்.. நான், வழக்கை விசாரிப்பதை ஆட்சேபிக்கவில்லை மை லார்ட்.. மாற்றல் உத்திரவிற்கு… இடைக்காலத் தடை கொடுக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறேன்..’
கடல்மணியின் வக்கீல், வாரிசு பற்றி வாழைப் பழத்தில் ஊசி ஏற்றிப் பேசியதால், இடது இருக்கை நீதிபதி இப்போது பலாப்பழமானார்.. அந்த இளம் வக்கீலை நோக்கி, சூடாகவே கேட்டார்.
‘இது கொடுக்கக்கூடாது, அது கொடுக்கலாம் என்று சொல்ல நீங்கள் யார்..? எச்சரிக்கிறேன்.. வாதியின் வக்கீல் தன் தரப்பை.. ஐந்து நிமிடத்திற்குள் எடுத்துரைக்கலாம்..’
‘நன்றி மை லார்ட்.. என் கட்சிக்காரரான கடல்மணி, முப்பதாண்டுகாலமாய் அரசுப் பணி புரிகிறவர்.. டில்லியில் இருந்து ஆறு மாதத்திற்கு முன்புதான்.. சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நிர்வாக உதவி இயக்குநராக வந்தார்.. அவருக்கு முன்பு இருந்தவர், வேலை வாய்ப்பு நிறுவனத்தை அணுகாமலே, ஒரு ஜாயிண்ட் செக்கரட்டரியின் வேலைக் காரியை, அலுவலகத்தை இரவில் காக்கும் சௌக்கிதாராய் நியமித்திருப்பதைக் கண்டுபிடித்தார். இவ்வளவுக்கும் அந்தப் பெண்ணுக்கு கையெழுத்து போடக்கூடத் தெரியாது.. இதே போல், ஒரு லட்சம் ரூபாய் செலவுக்குக் கூட பெறாத ஒரு கட்டிடம் கட்ட, ஐந்து லட்சம் ரூபாய் கணக்கு காட்டப் பட்டது. பழைய நாற்காலி மேஜைகள் புதுப்பிக்கப் பட்டு, அவை புதிதாய் வாங்கப்பட்டதாய் சித்தரிக்கப்பட்டது. ஒரு பழைய ‘பஞ்சிங் மெஷின் ‘காயலான்’ விலையில் வாங்கப்பட்டு, அதுவே புது யந்திரமாக காட்டப்பட்டது. இப்படிப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் ஊழல்கள் பற்றி என் கட்சிக்காரர், இந்த அலுவலகத் தலைவரான சீனிவாசனுக்கு ‘நோட்’ போட்டார்.. அவர் கண்டுக்காததால், டில்லி மேலிடத்திற்கு எழுதிப் போட்டார்.. விளைவு மை காயும் முன்பே, ஆறு மாதத்திற்கு முன்புதான் பதவிக்கு வந்த என் கட்சிக்காரருக்கு, அந்தமானுக்கு மாற்றல் ஆணை வந்தது. அந்த ஆணை, கடல்மணிக்கு கிடைக்கும் முன்பே, அலுவலகத் தலைவருக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டது. அவரும் ஐந்து நிமிடத்திற்குள் ரிலீவிங் ஆர்டரை அடித்து, கடல்மணியை, தன் அறைக்கு அழைத்து அந்த ஆர்டரை கொடுக்கப்போனார். உதவி இயக்குநர் பொறுப்புக்களின் கணக்குளை ஒப்படைக்க இரண்டு நாள் அவகாசம் கொடுக்கும்படி என் கட்சிக்காரர் வேண்டிக்கொண்டது நிராகரிக்கப்பட்டது. நாளைக்கோ, மறு மாதமோ.. நிர்வாகக் கணக்கில் தப்பிருந்தால் தானும் பொறுப்பு என்பதால், கேஷ் புக்கை முறையாக ஒப்படைக்க ஒரு நாளாவது கொடுக் கும்படி என் கட்சிக்காரர் அழுதது எந்தக் காதிலும் ஏற வில்லை. ஆகையால் இந்த விடுவிப்பு ஆணையை என் கட்சிக்காரர் வாங்க மறுத்து அலுவலகம் போனால், அவரது அறை சீல் வைக்கப்பட்டிருந்தது.’
வழக்கறிஞர், சிறிது இடைவெளி கொடுத்து தொடர்ந்தார். ‘தனது வீட்டுக்க போனாலோ.. சீனிவாசன் கையெழுத் திட்ட ரிலிவிங் ஆர்டர், அவரது வீட்டுக் கதவில் ஒட்டப் பட்டி ருக்கிறது.. எனது கட்சிக்காரரின் முப்பதாண்டு கால தூய்மை யான பணி, அரை மணி நேரத்தில் அசுத்தப்படுத்தப் பட்டது.. ஊழலை சுட்டிக் காட்டியவரை அதற்கு உரியவர் தண்டிக் கிறார். ஆகையால், இந்த ஆர்டரை நிறுத்தி வைக்க வேண்டும். மை லார்ட், தண்டிக்கப்படும் தர்மங்களுக்கு உங்களை விட்டால், வேறு கதி யார்.. மை லார்ட்..’
வழக்கறிஞரின் முதுகுக்குப் பின்னால், கண்ணீரும் கம்பலையுமாய் நின்ற கடல் மணியையே, எல்லோரும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தார்கள். நீதிபதிகள் கூட அவரை, லேசாய் ஏறிட்டுப் பார்த்துவிட்டு, அப்படிப் பார்ப்பது தவறு என்பதுபோல் அவசர அவசரமாய் முகங்களைத் திருப்பிக் கொண்டு, தங்களுக்குள் ஆலோசித்தார்கள். பிறகு வலது பக்கத்து நீதிபதி இப்படி ஆணையிட்டார்.
‘வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு.. அடுத்த மாதம் பத்தாம்தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.. அதுவரைக்கும் ஸ்டேட்டஸ் கோ.. பராமரிக்கப்படவேண்டும்.”
வழக்கறிஞர், கடல்மணியின் கரங்களை, நீதிபதிகளுக்குத் தெரியாமலே, பட்டும் படாமலும் குலுக்குகிறார்.. கடல்மணிக்கு, இத்தனை நாளும் பட்ட கஷ்டங்களும், நஷ்டங்களும், மகிழ்ச்சியின் விதைகளாகி, வேராகி, இப்போது சந்தோஷக் கனிகளானதுபோல் தோன்றுகிறது.. நேராக, சீனிவாசனிடம் போகிறார். வெற்றிப் பெருமிதத்தை வெளிக்காட்டாமலே நெருங்குகிறார்.
“பார்த்திங்களா.. பிரதர்! கடைசியில் தர்மம் ஜெயிசுட்டது. நான் பட்ட பாடெல்லாம் தீர்ந்திட்டது. உங்கமேல எனக்கு கோபம் இல்லை. ஆனாலும் நீங்க என்னை அப்படி அவசர அவசரமா ரீலீவ் செய்திருக்கக்கூடாது. சரி போகட்டும். இன்னைக்கே டூட்டிலே சேரப்போறேன். சீல் வைச்ச என் ரூமை இன்னிக்கே திறந்து விட்டுடுங்க.. ஏகப்பட்ட வேலை இருக்கு..!”
சீனிவாசனின் முகம் இருளானது, சிறிது நேரம் அப்படியே இருந்தவர் காதில், நிர்வாக அதிகாரி ஏதோ சொல்ல, அவர் மேகத்தில் ஏற்பட்ட மின்வெட்டுப் போல ஒரு கண்வெட்டுக் காட்டி, அவசர அவசரமாய் அரசு தரப்பின் ‘வாரிசு’ வக்கீலின் பின்னால் போய், அவரது கழுத்துப் பக்கமாய் முன்னால் குனிகிறார். அவர்காதுகளில் கிசுகிசுக்கிறார். அந்த ‘வாலிபம்’ வாயெல்லாம் பல்லாக, சீனிவாசனின் கையை ஓசைப் படாமல் குலுக்குகிறது. பிறகு கிசு கிசுக்கிறது.
சீனிவாசன் கடல் மணியை கம்பீரமாகப் பார்க்கிறார். மதயானையைப் போல நடந்து, கடல்மணியை நெருங்கி, நரிபோல் ஊளையிட்டுப் பேசுகிறார்.
“நீங்க தான் தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க அண்ணாச்சி.. ‘ஸ்டேடஸ்கோ’ என்றால் நிலைமை இப்ப எப்படி இருக் கிறதோ. அப்படியே இருக்கணும் என்று அர்த்தம். இப் போதைய நிலைமை என்றால்.. இன்றைய நிலைமை.. முந்தா நாள் நிலைமை இல்லை. அதாவது நீங்க அலுவலகத் தின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட அதிகாரி.. உங்களுக்கும் எங்கள் அலுவலகத்திற்கும் சம்பந்தமில்லை.. இதற்குப் பேர்தான் ஸ்டேடஸ்கோ..”
கடல் மணி ஆடிப் போனார்… கண்ணிழந்தவன் அதைப் பெற்று மீண்டும் இழந்ததுபோன்ற தசரத நிலை.. இன்ப மயமாய் துள்ளிய நாடி நரம்புகள் திடீரென்று துக்கித்தன. தலை லேசாய் கனத்தது. வக்கீலைப் பார்த்தால், அவரோ, வேறோரு வழக்கை விவரித்துக் கொண்டிருக்கிறார். கடல் மணி வேறு வழி இல்லாமல் சீனிவாசனிடமே பேசினார்.
“நீங்க சரியா புரிஞ்சிக்கல.. பிரதர்.. என்னோட வழக்கே மாற்றல் உத்தரவு செல்லாது என்கிறது தானே.. எனது முறையீடே ஆர்டரை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது தானே.. அதனாலே மாற்றல் உத்தரவு வருவதற்கு முன்பு நான் எந்தப் பதவியில் இருந்தேனோ, அந்தப் பதவியில் இருப்பதாய் அர்த்தம்.. நீங்க என்னை இருக்க விட்டே ஆகணும்.. இதுக்குப் பேர்தான் “ஸ்டேடஸ்கோ”
“நீங்க ஆயிரம் அர்த்தம் சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. என் வக்கீலும் சொல்லிட்டார்.. ஸ்டே டஸ்கோ என்றால் இப்போது இருக்கிற நிலைமை.. அதாவது நீங்க பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலைமை”.
”சரி.. பிரதர்.. எதுக்கும் நம்ம வக்கீல்கள் மூலம் இந்த மன்றத்திலேயே விளக்கம் கேட்கலாமா”
“எனக்கு தெளிவாவே தெரியும். ” தேவைப்பட்டால் நீங்க போய் விளக்கம் கேளுங்க”.
கடல்மணி, நொண்டி அடித்தப்படி, தன் வக்கீல் பக்கம் வந்தார்..அவர் காதுகளில் கண்ணீர்த் துளிகள் பட, முணு முணுத்தார்.. வக்கீலும், சீனிவாசனைக் கோபமாக பார்த்து விட்டு எழுந்திருக்கப்போன நீதிபதிகளைப் பார்த்தார்.. அவர்களுக்க எதிரில் நடுப்பக்கமாய் நின்றுகொண்டு, அவர்கள் கவனத்தைக் கவருவதற்காக உரத்த குரலிட்டு முறையிட்டார்.”
”மன்னிக்கனும் மை லார்ட்… இந்த மாமன்றம் எனது கட்சிக்காரரின் வேண்டுகோளை அனுதாபமாய் அணுகி, அவரது மாற்றல் உத்தரவை நிறுத்தி வைப்பதற்கு ஸ்டேடஸ்கோ கொடுத்திருக்கிறது. ஆனால் சாமி வரம் கொடுத்தாலும் அதை பூசாரி தடுப்பதுப்போல்.. அலுவலகத் தலைவர், என் கட்சிக்காரரை பணியில் சேர அனுமதிக்க மாட்டாராம்.. இதை மை.. லார்ட்..நீங்களே, இப்போதே கண்டித்து அருளவேண்டும்.. என் கட்சிக்காரர் பணியில் சேருவதைத் தடுக்கக் கூடாது என்று வாய் மொழி மூலமாவது ஆணையிடவேண்டும்.”
மாண்புமிகு நீதிபதிகள் அரசுத் தரப்பு வாரிசு வக்கீலைப் பார்த்தப்போது.. அவர் சர்வ சாதாரணமாய் பதில் அளித்தார்.
“மிஸ்டர் கடல்மணியைப் பணியில் சேர்த்தால், நீதிமன்ற அவமதிப்பாய் ஆகிவிடுமே மை.. லார்ட்.. இவரது கட்சிக் காரர் முந்தா நாளே சென்னை அலுவலகத்திலிருந்து விடுவிக் கப்பட்டார்.. இதுதானே ஸ்டேடஸ்கோ.. இந்த நிலைமை தானே நீடிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் ஆணை யிட்டது. இதற்குப் பேர்தானே ஸ்டேட்டஸ் கோ என்கிறது” கடல் மணியின் வக்கீல் ஆவேசியானார்.. நீதிமன்றமே அவமதிப்பாய் கருதும் வகையில் வாதிட்டார்…
“இல்லவே இல்லை… மாண்புமிகு நீதிமன்றத்தின் ஆணையின் வார்த்தைகளைப் பார்க்காமல்..அதன் ஆதார சுருதியைப் பார்த்தால், ஸ்டேடஸ்கோ என்பது, என் கட்சிக் காரர் மாற்றல் உத்தரவிற்கு முன்பு எந்த நிலையில் இருந் தாரோ..அந்த நிலை நீடிக்கவேண்டும் என்றே அர்த்தம்….”
மாண்புமிகு நீதிபதிகள், வழக்கறிஞர்களை கையமர்த்தி விட்டு, தங்களுக்குள்ளேயே, நின்ற கோலத்தில் ஆலோசித் தார்கள். பிறகு இடதுபக்க நீதிபதி, பாரா முகமாய் கருத்துரைத்தார்.
“ஸ்டேடஸ் கோ..நீடிக்க வேண்டும் என்று தெளிவாகவே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது… எது ஸ்டேடஸ்கோ என்பதை இருதரப்பும் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும்”.
வணக்கத்திற்குரிய நடுவர் மன்றத்தின் அன்றைய நீதி பரிபாலனம் முடிந்துவிட்டது. மாண்புமிகு நீதிபதிகளும் போய் விட்டார்கள். அரசு வக்கீல்.. கடல் மணியின் வக்கீல் உள்ளிட்ட அனைத்து வக்கீல்களும் இன்னொரு கோர்ட்டுக்கு போய் விட்டார்கள்… கட்சிக் காரர்களும் காணாமல் போனார்கள்.. ஆனாலும்..?
சீனிவாசனும், கடல் மணியும் அங்கேயே நின்று கோழியா முட்டையா என்பது மாதிரி இன்னமும் விவாதிக்கிறார்கள்..
அது சரி.. எதுங்க ஸ்டேடஸ்கோ?
– இதயம் பேசுகிறது, பொங்கல் மலர் 1996.
– ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும், முதற் பதிப்பு: மே 1996, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.
![]() |
சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க... |