மண் எண்ணெய்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2025
பார்வையிட்டோர்: 343 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடைசிச் சுருட்டையும் இராசாண்ணை சுருட்டி பாயிலிருந்த கும்பலில் போட்டுவிட்டு, நாரியை நிமிர்த்திக் கொண்டு குலைந்திருந்த தனது குடுமியை மீண்டும் தனது கையால் உருவி முடிந்து கொண்டார். அதுவரை அவருக்கு அந்தச் செய்தியே தெரியாது. 

“இராசாண்ணை, உங்களின்ரை மகன் ரை கடையிலை மண் எண்ணெய் இருக்குதோ அண்ணை?” பக்கத்திலிருந்து சுருட்டும் கணேசன் கேட்டான். 

“மண்எண்ணையோ.. நிறையக் கிடக்கு தடா தம்பி… நேற்றும் ஒரு பரல் வாங்கினது… ஏன் கேட்டனி…?” 

“சும்மா கேட்டனான் அண்ணை… அப்ப எவ்வளவும் எடுக்கலாம் தானே…” 

“ஓ… தாராளமாக…” 

“விலை என்ன மாதிரி அண்ணை?”

“லீற்றர் பதினைஞ்சு ரூபாவடா தம்பி…” 

“இராசாண்ணை…”

“இம்…” 

“உங்களின்ரை கடையிலை விலைப்பட்டியலுக்கான பலகையில மண்ணெய் எண்டு எழுதிக் கிடக்கு… அது ஏனண்ணை…?” 

“ஆகா… கா…” இராசாண்ணை அட்டகாசமாகச் சிரித்தார். 

“ஏனண்ணை சிரிக்கிறீங்கள்?” 

”சிரிக்கிறதோ… எடதம்பி… என்ரை மோன் ஒரு தமிழ்ச் சட்டம்பியடா…அவன் சரியான தமிழ்தானடா எழுதுவான். சரியான தமிழ் ‘மண்ணெய்’ தானடா. தெரியாட்டி தெரிந்து கொள்…” 

“உங்களுக்கு இந்தச் செய்தி தெரியுமோ அண்ணை…?” 

இராசாண்ணை நிமிர்ந்து கொண்டார். “அது என்ன எனக்குத் தெரியாமல்…” அவரது நெற்றிச் சுருக்குகள் மேலேறி ஒன்றோடொன்று நெரிந்தன. 

கணேசன் அவரின் காதுக்குள் அந்தச் செய்தியைச் சொன்னான்.

இராசாண்ணைக்கு ஏதோ ‘சுவீப்’ரிக்கற் விழுந்தது போல இருந்தது. வேலையை முடித்து, தன் அன்றைய சம்பளத்தை வாங்கி மடிக்குள் சொருகிக் கொண்டு, கோப்பறேசன் போய் ஒரு போத்தல் தென்னங்கள்ளைக் குடித்துவிட்டு நேராக வீட்டை நோக்கி நடந்தார். அவருக்குக் காற்றில் நடப்பதுபோல இருந்தது. கணேசன் சொன்ன செய்தி அவருக்குள் பாகாய் இனித்தது. 

நேராகக் கடைக்குள் சென்று மகனின் முதுகில் தட்டி, ‘ஒரு கதை’ என்றது போல் சைகை காட்டிவிட்டு, கடைக்கு வெளியே வந்து தனியே ஒரு தென்னை மரத்திற்குக் கீழ் நின்றார். மகன் வந்ததும் காதுக்குள் ஏதோ மிக இரகசியமாகச் சொன்னார். சொல்லிவிட்டு, யன்னல் இருட்டுக்குள் யாருமில்லாத நேரமாகப் பார்த்து மண் எண்ணெயின் விலைக்குப் பக்கத்தில் போட்டிருந்த பதினைந்து ரூபாவை அழித்து விட்டார். 

பெரியதொரு இருதயமாற்றுச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த சத்திரசிகிச்சை நிபுணரின் சந்தோசம் இராசாண்ணைக்கு. 

இராசாண்ணைக்குச் சைக்கிள் ஓடத் தெரியாது. சைக்கிள் ஓடத் தெரிந்தால் ஒருக் கால் வெளிக்கிட்டு மண் எண்ணெயின் நிலவரத்தை அறிந்து வரலாமென மனதிற்குள் பெரியதோர் ஆதங்கம். மண் எண்ணெய் பற்றிய இரகசியத்தை மனைவி பூரணத்திற்கும் காதோடு காதாய் சொல்லி வைத்தார். 


“மோகன் எழும்பு” மோகன் எழுந்து நின்றான். 

“அறம் செய விரும்பு என்றால் என்ன?”

“தர்மம், நன்மைகளைச் செய்ய விரும்பு.” 

“கெட்டிக்காரன் இரு…” 

“சோமு எழும்பு…” சோமு எழுந்தான். 

“ஏவா மக்கள்… மிகுதியைச் சொல்லு…?”

“மூவா மருந்து….” 

“கெட்டிக்காரன், இரு…” 

“ஆலயம் தொழுவது… ஷர்மிலா முடி பாப்பம்…” 

“சாலவும் நன்று…” 

“கெட்டிக்காரி… சரி… கேசவன் நீ…”

“என்ன சேர்…?” 

“பாலும் தெளிதேனும்… சொல்லு?”

“சேர் எனக்குப் பாடமில்லை…”

“சரி, நாளைக்கு வரேக்கை பாடமாக்கிக் கொண்டு வரவேணும்… என்ன…” 

“ஓம் சேர்…’ 

“உனக்குப் பொருள் தெரியுமோ…?” 

“ஓம் சேர் பொருள் தெரியும் பாட்டுத் தான் பாடமில்லை…” 

“பாட்டைப் பாடமாக்கி நாளைக்கு எனக்குச் சொல்லவேணும்… என்ன…?” 

“ஓம் சேர்…” 


“சீனி கால்கிலோ தாருங்கோ…” 

“வேறை என்ன மோனை…?” 

“தேயிலை ஐம்பது கிறாம்…?”

“வேறை…?” 

“மண்எண்ணெய் காப் போத்தல்…” 

“மண்எண்ணையோ… உதார் கேசவனே… மண் எண்ணெய்தானடி அப்பு ஒரு சொட்டு மில்லை… நான் என்ன செய்ய…?” இராசாண்ணையின் மனைவி பூரணம் சொன்னாள். 

“வேறை என்னப்பு வேணும்…?” 

“வேற ஒண்டும் வேணாம்…” 


“தாரணி எழும்பு…” தாரணி எழுந்து நின்றாள். 

“உனக்கு வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் பாடமோ…?” 

“ஓம் சேர் பாடம்…” 

“சரி இரு….” 

“கேசவன் எழும்பு” கேசவன் எழுந்து நின்றான். 

“பாலும் தெளிதேனும் சொல்லு பாப்பம்?” 

“எனக்கு பாடமில்லை சேர்…” 

“ஏன் பாடமாக்கேல்லை…?” 

“இராத்திரி படிக்கேல்லை சேர்…” 

“ஏன் படிக்கேல்லை…?” 

“விளக்குக்கு மண் எண்ணெய் இல்லை சேர்…!” 

‘மண் எண்ணெய் இல்லையோ…?”

கேசவன் பேசாமல் நின்றான் சிறிது நேரத்தின் பின்பு, 

“சேர்…” கேசவன் பேசினான். 

“என்ன சொல்லு…?” 

“பாலும் தேனும் பாகும் பருப்பும் கொடுத்தால் பிள்ளையார் சங்கத்தமிழ் மூன்றையும் தருவாரெல்லவோ…?” 

“ஓ அதுக்கென்ன…!” 

“உங்களுடைய கடையிலை…” கேசவன் தயங்கினான். 

“எங்களுடைய கடையிலை… சொல்லு.” 

“மண் எண்ணெய் வாங்க என்ன சேர் தரவேணும்?”

இராசாண்ணையின் மகன் பரமேஸ்வரன் வாத்தியார் நிலைகுலைந்து போனார். கேசவனின் கேள்வி, பரமேஸ்வரன் வாத்தியாரின் மனமெங்கும் ஆக்கிரமித்து, திமிறிக் கொண்டு நின்றது. அன்று முழுவதும் அவரால் படிப்பிக்கவே முடியவில்லை.

குறிப்பு:

திரு. துரை-சுப்பிரமணியன் கடந்த மாதம் 14ம் திகதி கொழும்பில் காலமானார். ஒய்வு பெற்ற பொலீஸ் சேவை எழுதுவினைஞரான இவர் கதைகள் எப்பொழுதும் கீழ்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வைச் சித்தரித்தன. 

‘அமுது’ ஆரம்பித்த நாளிலிருந்து அதற்கு எழுதிவந்த துரை- சுப்பிரமணியன் தனது மறைவுக்கு சில தினங்கள் முன்னதாக அனுப்பிவைத்த சிறுகதையை அவருக்கு அஞ்சலியாக இங்கு பிரசுரிக்கின்றோம்.

– அமுது, ஆகஸ்ட் 2001.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *