மண்ணுலகத்து நட்பு

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2025
பார்வையிட்டோர்: 816 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘இரண்டு உடல், ஆனால் ஓர் உயிர்’ என்று சொல்லும்படியாகத்தான் அவர்கள்  விண்ணுலகத்தில் பழகினார்கள். அமுதம் பருகுவதாயினும் சரி, கற்பக மரத்தின் நிழலில் சாப்பாட்டுக்குப் போவதாயி னும் சரி, பாரிஜாத மலர்களைப் பறித்து அவற்றை அப்ஸரப் பெண்களுக்கு அர்ப்பணம் செய்வதாயினும் சரி – எந்த விஷயத்திலும் அவ்விருவருக்குள்ளும் வேற்றுமை ஏற்பட்டதில்லை ; பொறாமை என்றுமே அவர்களைத் தீண்டியதில்லை. 

அவர்கள் புண்ணிய மூட்டை ஒரே சமயத்தில் காலியாயிற்று. இருவரையும் ஒருங்கே மண்ணுல கத்துக்கு அனுப்புவதென்று தீர்மானம் ஆயிற்று. இரண்டு பேருக்கும் அதனால் ஆனந்தம். அவர்கள் தேவாதிதேவனை நோக்கி, “இறைவ, எங்களுக்கு எந்தப் பிறப்பை வேண்டுமாயினும் கொடு. ஆனால் எங்கள் இருவரையும் ஒரே இடத்தில், அக்கம்பக்கத் தில் வாழுமாறு மட்டும் பிறப்பிக்க வேண்டும். நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தால், மண்ணுலகத்தில் கூடத் தெய்விக இன்பத்தைப் பெறுவோம்” என்று வேண்டிக்கொண்டார்கள். 

தேவாதிதேவன் புன்முறுவல் பூத்து, அவர்கள் வேண்டுகோளுக்கு இசைந்தான். 

அவர்கள் இருவரும் காட்டில் மரங்களாகப் பிறந்தனர். இரண்டு மரங்கள் ஒன்றோடொன்று பிணைந்து வளர்ந்தன. ஆனால் அவற்றில் ஒன்று நீள மாக வளர்ந்தது. அதன் கிளைகள் நாலுபுறமும் பரவின. மற்றொன்று குட்டையாகவே இருந்தது. குட்டை யான மரத்துக்கு எப்போதும் வெயில் தேவையாக இருக்கும். அது நெட்டையான மரத்தைப் பார்த்து, அண்ணா, உன் கிளைகளைச் சற்று அந்தப் புறம் ஒதுக் கிக்கொள்ளேன் ! எனக்குக் கொஞ்சமாவது வெயில் கிடைக்கும்” என்று கெஞ்சி வேண்டிக்கொள்ளும். 

நெடிய மரத்தின் கிளைகள் அதைப் பரிகாசம் செய்துகொண்டே கைகளை இங்குமங்கும் ஆட்டுவ தோடு சரி / குட்டை மரத்துக்கு வெயில் கிடைக்கும் படி அது விடவே இல்லை. 

நிழலில் முளைத்த அந்தக் குட்டை மரம், சீக்கி ரமே வாடிக் கருகி மாய்ந்தது. 

அடுத்த பிறப்பு உனக்கு எவ்விடத்தில் வேண் டும்?” என்று தேவாதிதேவன் அதைக் கேட்டான். 

அப்போது அதன் மனத்தில் கலவரம் உண்டா யிற்று. அது வெகுநேரம் யோசனை செய்தது. கடைசி யில் தன் ஸ்வர்க்கத்து நட்பை ஞாபகப்படுத்திக் கொண்டு, தன் நண்பன் மறுபடி எங்கே பிறப்பானோ அவ்விடத்திலேயே பிறப்பது என்று தீர்மானித்தது. 

அவ்விரு நண்பர்களும் மான்களாகப் பிறந்தனர். காட்டில் புல்லும் நீரும் ஏராளமாக இருந்தன. இரண்டு மான்களும் வயிறு நிரம்பப் புல்லைத் தின்று நீர் அருந்தும்; இங்குமங்கும் நாட்டியமாடித் திரியும்; எழும்பி எழும்பிக் குதிக்கும். ஸ்வர்க்க சுகத்தில் மட் டும் இதைவிட அதிகமாக என்ன இருக்கிறது?ஆனால், ஸ்வர்க்கத்தில் இல்லாத ஒரு விஷயம் இங்கே இருந் தது: அடிக்கடி அவை இரண்டுக்கும் ஏதாவது ஒரு சச்சரவு வந்துவிடும். ‘நம் இருவரில் யாருடைய கொம்புகள் அழகாயிருக்கின்றன?’ என்பதைப்பற்றி அவை இரண்டுக்கும் ஒரு நாள பலத்த விவாதம் உண் டாகி, கடைசியில் அது அடிதடிச் சண்டைவரையில் போய்விட்டது. 

இரண்டு மான்களும் வளர்ந்து பெரியவை ஆயின. ஒரு நாள் ஒரு பெண்மானைப்பற்றி இரண்டுக்கும் சச் சரவு வந்துவிட்டது. இரண்டுக்குமே அது திலோத்த மையைப் போன்ற அழகியாகத் தோற்றியது. ஸுந் தன், உபஸுந்தன் ஆகியவர்களின் கதை மீண்டும் அந்தக் காட்டில் நடக்குமோ என்று அன்றைத்தினம் எல்லாப் பிராணிகளும் பயந்தன. 

ஆனால் மொத்தத்தில் இப்படி மனஸ்தாபம் உண் டாகும் சம்பவங்கள் குறைவாகவே இருந்தன. 

ஒரு நாள் அந்தக் காட்டில் வேடர்கள் புகுந்தனர். உயிருக்கு அஞ்சி, மிருகங்கள் யாவும் கும்பல் கும்பலாக ஓடின. நட்பினால் தளைபட்ட அவ்விரு மான்களு தங் கூட ஒன்றாக ஓடின. பிராண சங்கடத்தில்கூட ஒன் றையொன்று விடக்கூடாது என்று அவை தீர்மானித் திருந்தன. 

எங்கிருந்தோ ஒரு வேடன் அவை இரண்டையும் நோக்கி வந்தான். ஒரு மான் அவனைப் பார்த்தது. ஓடிக்கொண்டே இருக்கையில் அது பட்டென்று தரையில் சாய்ந்தது. ‘நம் நண்பன் செத்துப்போனான்; இனி அவனைப் பார்த்துக்கொண்டிருப்பதில் பயன் இல்லை’ என்று நினைத்து, மற்றொரு மான் ஓடிக் கொண்டே இருந்தது. அடுத்த கணத்தில் அந்தமானின் உடலிலும் அம்பு பாய்ந்தது. அப்போது தரையில் விழுந்து கிடந்த மான் உடனே துள்ளிக் குதித்து வேறு திசையை நோக்கி ஓட்டம் பிடித்தது. 

செத்துப்போன மானின் ஆத்மாவை நோக்கி, “உனக்கு அடுத்த பிறப்பு எங்கே வேண்டும்?” என்று தேவாதிதேவன் கேட்டான். ஸ்வர்க்கத்து நட் பின் ஞாபகம் லேசாக அதன் மனத்தை மலர்வித்தது. தன்னைப் பின்னுக்கு இழுத்த வேறோர் எண்ணத்தை அடக்கிவிட்டு, “அந்த என் மற்றொரு நண்பனும் வரட்டும். பிறகு எங்களிருவரையும் ஒரே இடத்தில் அக்கம் பக்கத்தில் – வாழும்படி பிறப்பியுங்கள்” என்று பதில் சொல்லியது. 

அவை இரண்டும் ஒரு ராணியின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தன. சிறுவயசில், அந்த ராஜகுமாரர்கள் இருவருடைய பெருமையிலும் சிறிதும் வித்தியாசம் தோன்றவில்லை. தேவலோகத் தைப் போலவே, இங்கும் தமது அன்பு குன்றாமலிருக் கும் என்று அவர்கள் நினைத்தனர். 

குமாரர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆயினர். இருவரில் எவனை இளவரசனாக்குவது என்ற பிரச்னை எழுந்தது. தர்ம சாஸ்திரங்களின் தீர்ப்பு ஒரு புறம், அரசனுடைய தீர்ப்பு வேறு புறம், ஜனங்களுடைய தீர்ப்போ – ஆனால், ஜனங்களின் தீர்ப்பைக் கேட்பவர் யார்? 

சேனாதிபதியின் பெண், பேரழகு வாய்ந்தவள், அடிக்கடி அரண்மனைக்கு வந்துபோவாள். ராஜகுமாரர்கள் இருவரும் தம் மனத்தை அவளுக்குப் பறி கொடுத்தனர். எவன் இளவரசனாகிறானோ, அவன் தான் அவளை மணந்துகொள்ள முடியும் என்று சில நாளைக்கெல்லாம் இருவருக்கும் தெரிந்தது. 

ஒரு நாள் காலையில் அரசகுமாரர்கள் இருவரும் வேட்டையாடக் காட்டுக்குப் போயினர். அரண் மனையிலிருந்து புறப்படும்பொழுதே, அவர்கள் ஒரு வரை ஒருவர் குரூரமாகப் பார்த்துக்கொண்டார் இருவரும் ஒருவர்கள். மற்றவரைப் பார்த்துக் கம்மிய குரலில், இன்று நமக்குப் பெரிய வேட்டை கிடைக்கும்” என்று சொல்லிக்கொண்டார்கள். 

மாலையில் இரண்டு ராஜகுமாரர்களின் பிணங்கள் அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டன. இருண்ட அடர்ந்த புதருக்குள் பதுங்கியிருந்தமையால் அருகில் ஏதோ காட்டு மிருகம் இருக்கிறது என்று எண்ணி, இருவரும் ஒரே சமயத்தில் அம்பு எய்தன ராம்! இரண்டு அம்புகளும் குறி தவறாமல் பாய்ந்தன ? 

தேவாதிதேவன் அவ்விரண்டு ஆத்மாக்களையும் நோக்கி,  “உங்களுக்கு அடுத்த பிறப்பு எங்கே வேண்டும் ?” என்று கேட்டான். 

இருவரும் ஒரே சமயத்தில், “எங்கே இருந்தா லும் சரி; ஆனால் ஒருவரை விட்டு மற்றவர் தொலை வில் – வெகு தொலைவில் – இருக்க வேண்டும்!” என்று கூவினார்கள். 

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *