மண்ணுக்குள் வைரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2024
பார்வையிட்டோர்: 1,561 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கனகசாபாபதிக்கு அந்த பிரச்னை இமயமலை போல் பேரூரூவாகத் தோன்றியது.

அந்தச் சேதியைத் தன் மனைவி சிவகாமியிடம் சொல்வதா, சொல்லாமல் விட்டுவிடுவதா என்று இன்னும் அவருக்குக் குழப்பமாகவே இருந்தது.

அதைச் சொல்லாமல் விட்டுவிட முடியாது. எப்படியும் சொல்லித் தீரவேண்டும். ஆனால், சொன்ன பிறகே அங்கே என்ன நிகழும் என்பதைக் கற்பனை செய்தால் அவர் நெஞ்சம் நடுங்கியது.

சிவகாமியின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகும். அவள் முகத்தைக் கவலை என்னும் இருள் சூழ்ந்துகொள்ளும். ஆசைகள், கனவுகள், அவள் கொண்டிருக்கும் எண்ணங்கள், நம்பிக்கைகள் எல்லாம் கல்பட்ட கண்ணாடி போல் நொறுங்கிப் போய்விடும். மனம் உடைந்து நிலை குலைந்து படுத்தபடுக்கையில் விழுந்தாலும் விழுந்துவிடுவாள். அதிர்ச்சியைத் தாங்கும் மன வலிமையிழந்து ஒருவேளை…….

அதற்குமேல் நினைத்த போது, அவரே அதர்ச்சிக்குள்ளாவதை உணர்ந்தார். சிவகாமியின் உயிர் வேறு, தன்னுடைய உயிர் வேறு என்று அவர் எண்ணியதேயில்லை.

உயிர்கள் ஒன்றானது போல் மனங்களும் அவர்களுக்கு ஒன்றுதான். ஆனால், இன்று அவர் முன் நிற்கும் அந்த ஒரு பிரச்சினையில் மட்டுமே மாறுபாடு.

அது எவ்வளவு பெரிய மாறுபாடு!

இமயமலையின் அகலத்துக் எல்லையிருக்கிறது. அதன் உயரத்துக்கும் அளவு உண்டு ஆனால், அந்தப் பிரச்சனைக்கு ?

அம்மாகிட்டே அதை இண்ணிக்காவது சொல்லுங்கப்பா என்று காலையில் அவர் மகள் தேவி கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டது திரும்பவும் நினைவுக்கு வந்தது.

அதை எப்படிச் சொல்வது?

நெடிய பெருமூச்சை வெளியேற்றிவிட்டு நீண்ட சிந்தனையில் ஆழ்ந்தார்.

ஜப்பானியர் ஆட்சிக் காலம் முடிந்து, கப்பல் போக்கு வரத்து தொடங்கிய காலத்தில் சிங்கப்பூருக்கு வந்தவர் கனக சபாபதி.

வரும்போதே அவர் பெயரோடு இரண்டெழுத்துக் கல்லூரி பட்டம் ஒன்றும் இருந்தது. அது, அவரை அப்போதே இங்கு அரசு வாரியம் ஒன்றில் அதிகாரியாகச் சேர்த்தது உயர்ந்த அலுவல் பெரிய வருவாய்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு, பிறந்து வளர்ந்த நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்று உறவுமுறைப் பெண்ணான சிவகாமியை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டு திரும்பினார்.

அன்று முதல் அவர்கள் குடும்பம் சிங்கப்பூரிலே நிலைத்தது

நூறாயிரம் வெள்ளி மதிப்புள்ள பெரிய வீடு இருபத்தையா யிரம் வெள்ளிக்கார் என்று உச்ச நிலை வசதிகளோடு அவர்கள் வாழ்க்கை அமைந்திருந்தது.

உச்சநிலையைச் சிலர் பணத்தால் மட்டுமே பெறுவர் ஆனால், கனகசபாபதி பணத்தோடு நல்ல பண்புகளாலும் அந்நிலையில் சிறந்து விளங்கினார்.

இப்போது அவருக்கு வயது ஐம்பத்து இரண்டு. இன்னும் மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெற வேண்டும். அதற்குள் தன் மகள் தேவியைத் திருமணக் கோலத்தில் பார்க்க வேண்டு மென்பது அவர் உள்ளக்கிடக்கை.

அவர் மனைவி சிவகாமியும் அந்த நல்ல அந்த நல்ல காரியத்தை விரைவில் நடத்த வேண்டுமென்று அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருந்தாள் பிள்ளைகள் பெரியவர்களானதும் பெற்றோரின் மனத்தில் இந்த ஆவல் இயல்பாகவே எழுந்து விடுகிறது:

தேவியைத் தவிர அவர்களுக்கு வேறு குழந்தைகள் இல்லை. அவர்களுடைய சொத்துக்கும் அன்புக்கும் முழுமையான சொந்தம் தேவிக்கு மட்டுமே.

ஒரு குறையில்லாத அவர்கள் திட்டமிட்டால் நாளைக்கே தங்கள் நினைப்பை நிறை வேற்றிக்கொள்ள முடியும் ஆனால்…

தேவிக்குப் பொருத்தமான மணமகன் எங்கேயிருப்பான், எங்கே கிடைப்பான் என்பதுதான் கேள்விக்குறியாக நின்றது.

பொருத்தம் என்பது இறைவன் போட்டு வைக்கும் முடிச்சு என்றால், இது குறித்து அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அது எப்போதோ சொர்க்கத்தில் நிச்சயமாகியிருக்கும்

பொருத்தம் என்பதற்க்கு கனகசபாபதி போடும் கணக்கு ஒன்றாகவும், அவர் மனைவி சிவகாமி வகுக்கும் கணக்கு மற் றொன்றாகவும் இருப்பதுதான் இந்தக்காரியத்தில் பின்னிகிடக்கும் சிக்கல்.

தேவி அழகும் அறிவும் அடக்கமும் ஒருங்கே அமையப் பெற்ற குலவிளக்கு. மாநிறமும் மான் விழிகளும் பூமுகமும் கொடி போன்ற மேனிபும் கொண்ட அருங்குணவதி. மலர் சூடி கூந்தல் முதுகில் தவழ, நெற்றியில் சாத்துப் பொட்டு ஒளி சிந்த அவள் பல்கலை கழகத்துக்குச் செல்லும்போது தேவதை போல் காட்சி தருவாள். ஆமாம், பல்கலைக்கழகத்துப் பட்டப் படிப்பில் அவளுக்கு இது இறுதி ஆண்டு.

படிப்பு முடிந்ததும் தேவியை அழைத்துக் கொண்டு நீயும் உன் கணவரும் இங்கு புறப்பட்டு வாருங்கள். இங்கு நம் வகுப்பைச் சேர்ந்த பணக்காரக்குடும்பங்களிலிருந்து படித்த மாப் பிள்ளைகளுக்குத் தேவியைப் பெண்கேட்டு வந்து கொண்டிருக் கிறார்கள். அவர்களில் நமக்கும் தேவிக்கும் பிடித்தமான ஒரு பையனைத் தேர்ந்தெடுத்து இங்கேயே ‘திருமணத்தை நடத்திக் கொள்ளலாம்” என்று சிவகாமியின் தாய் தந்தையர் எழுதும் கடிதங்கள் சிவகாமிக்கு ஓர் உறுதியை மனத்தில் வளர்த்திருந்தன.

தங்களுடைய பூர்வீக நாட்டில் தங்கள் சாதியை சேர்ந்த ஒரு மாப்பிள்ளைக்குத்தான் தேவியை மணம் செய்து வைக்க வேண்டும் என்பது அவ்வுறுதி. ஏனென்றால் இங்கு அவர்கள் சாதிக்காரர்களின குடும்பங்கள் மிகவும் குறைவாகவே இருக் கின்றனவாம் அந்தக் அந்தக் குடும்பங்கள் எதிலும் தேவிக்குப் பொருத்தமான மாப்பிள்ளை கிடையாதாம்!

சாதி சமய ஆசாரங்களில் வலுவான பிடிப்பும் வைத் திருந்தாள் சிவகாமி ஆனால் அவற்றில் ஒரளவே பிடிப்புள்ளவர் கனகசபாபதி. காலஓட்டம், உலகமாற்றம், சமூகபின்னனி, வாழ்க்கை சூழ்நிலைகள் ஆகியவற்றை முன் நிறுத்த சிந்திக்கும் தன்மை உள்ளவர் அவர் எனவே மெதுவாக மனைவியின் மன போக்கை திசை திருப்பும் முயற்சியில் இறங்கினார்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று திருமூலர் பாடியுள்ளதை அவளிடம் அடிக்கடி எடுத்துக் காட்டினார். ”சாதி இரண்டொழிய வேறில்லை என்று தமிழ் மூதாட்டி ஔவையார் சாற்றியிருப்பதையும் நினைவு படுத்தினார்.

காந்தியடிகளின் வாழ்க்கையை அவ்வபோது ”சத்திய சோதனை” நூலிருந்து படித்துச் சொல்வார்.

தீர்க்கதரிசி ராஜாஜியும் கலைஞர் கருணாநிதியும், இன்னும் பலரும் தங்கள் குடும்பங்களில் அங்கே கலப்பு மணம் நிகழ்ந் திருப்பதை உதாரணம் கூறினார்.

இங்கே நம் அமைச்சர் திரு.ராஜரெத்தினத்துக்கும் தமிழவேள் திரு. கோ. சாரங்கபாணிக்கும் அமைந்த வேறு இனத்துக் குடும்ப விளக்குகளைப் பற்றியும் குறிப்பிட்டார்.

சாதிகள் என்பவை கடவுளால் உண்டாக்கபட்டவை அல்ல என்பதையும் அவைவே தங்களில் குறிப்பிடபடவில்லை என்பதையும் அவை அவரவர் செய்யும் தொழில்களின் அடிப்படையில் ஏற்பட்ட பெயர்களே என்பதையும் அப்படிப்பட்ட பெயர்கள் எல்லா மக்களிடத்தும் உள்ளன என்பதையும் “பார்பர்” “வாஷர்மேன்” “கோப்லர்” போன்ற ஆங்கில சொற்களின் ஆதாரங்களோடு உணர்த்தினார்.

வேல்முருகனையும் வேடுவர் குலத்து வள்ளியம்மையையும் கூடச் சமயங்களில் சாட்சியாக நிறுத்தினார்.

சிவகாமிக்கு இந்த விவரங்கள் எல்லாம் நன்றாக தெரியும் அவளும் படித்தவள்தான் இருந்தாலும் இவற்றை அடிக்கடி எடுத்துச் சொல்வதன் வழி அவள் மனம் இளகலாம் என்பது அவர் எண்ணம்

அவர் சொல்வதையெல்லாம் அவளும் பொறுமையாக செவி மடுத்துச் சிரித்துக் கொள்வாள்

“இந்தாப்பாருங்க நீங்க சொல்லுறதெல்லாம்சரிதான். எந்தச் சாதியை சேர்ந்த பையனுக்கு வேணுமானாலும் நம்ம தேவியை கொடுப்போம். ஆனா, அந்தப் பையன் நம்ம பொண்ணு மாதிரி நல்ல பண்பு, நல்லகுணம், நல்ல படிப்பு, நல்ல பழக்கவழக் கங்கள் எல்லாம் உள்ளவனாயிருக்கனுமே?” என்று-கொஞ்சம் இறங்கியும் வருவாள்.

“அந்த மாதிரி பையனை இங்கேயே தேடிப் பார்த்துத் தேர்ந்தெடுப்போம் சிவகாமி…” என்பார் கனகசபாபதி.

”தேடி பார்க்கிற நிலைமைதானே இங்கேயிருக்கு? படிச்ச பையன்கள் எல்லாம் தங்களை வெள்ளைகாரங்கன்னு நினைச் சுக்கிறாங்களே! அவங்களைப் பார்த்து படிக்காத பையன்களும் கெட்டுப் போறாங்க எல்லாருமே தாய்மொழியிலே பேசறதுக்கு வெட்கபடுறாங்க. இந்த காரணத்தினாலே அவங்க கிட்டே நம்மோட பண்பாடு துளிகூட கிடையாது நல்லபழக்கவழக்கங்கள் தெரியலே. குடிக்கிறதும். புகைக்கிறதும், ஆடம்பரமாத்திரியறதும் நாகரிகம்னு கெட்டலையுறாங்க. சுருக்கமாச் சொன்னா…. பெரியவங்க கிட்டே சின்னவுங்க காட்ட வேண்டிய மரியாதை கூடத் தெரியாத பிராணிகள் நிலைமையிலேதான் இருக்கிறாங்க இவர்களிலே இருந்துதான் ஒருத்தனை நாம் மருமகனாத் தேர்தெடுக்கனுமா? என்று ஆணித்தரமாகக் கேட்கும் போது அவள்பேச்சிலும் உண்மை இருப்பது போலவே கனகசபாபதிகுக் தோன்றும்.

பெரியவர்கள் முன்னிலையில் சிறியவர்கள் மரியாதையோடு நடந்துக்கொள்ள தெரியாமல் இருப்பதை அவர் எப்போதும் அழுத்தமாக கூறுவதுண்டு. அவளுக்கு கிட்டிய நேரடியான சில அனுபவங்களே இதற்குக் காரணம்.

“அதுக்காகத்தானுங்க நம்ம தேவிக்கு இங்கே மாப்பிள்ளை தேட வேணாம்னு சொல்றேன்”.

அவள் தீர்மானத்தின் முன் அவர் மௌனியாகிவிடுவார்.

அவர்களுக்கிடையில் தரைமட்டத்தில் முளைவிட்டுக் கொண்டிருந்த இந்தப் பிரச்னையைப் பெரிதாக்கியது. தேவி அண்மையில் திடுமென்று கனகசபாபதியிடம் தெரிவித்த ஒரு செய்தி.

வர்த்தக நிறுவனமொன்றில் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றும் சுப்பிரமணியம் என்னும் இளைஞன் தேவியைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறானாம்! தேவியின் இதயத்திலும் அவனுக்கு இடம் உண்டாம்!

அவன் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது தேவி யோடு உண்டான நட்பு, உண்மையான அன்பாக விளைந்து, பிரிக்க முடியாத காதலாக மலர்ந்திருக்கிறது

கனகசபாபதியிடம் இந்தச் சேதியைப் பயந்து பயந்து எப்படியோ தெரியப்படுத்திவிட்டாள் தேவி. அதைக் கேட்டு மகிழவும் தெரியாமல் வருந்தவும் முடியாமல் தடுமாறினார் அவர்.

பல்கலைக்கழகத்தில், படித்துப் பட்டம் பெற்றவன்! தலைமை நிர்வாகி ! இவை மகிழ்ச்சிக்குரிய விவரங்கள் ! ஆனால் சிவகாமிக்கு இவைமட்டும் போதாதே?

சிவகாமி என்னென்ன விவரங்களை விசாரிப்பாளோ, அவை அனைத்தும் இங்கே நேர்மாறாக இருந்தன. அத்தனையும் அவளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விவரங்கள்.

சுப்பிரமணியத்தின் அம்மாவும் அப்பாவும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் ஐ. என். ஏ. படையில் இருந்து கலப்புத் திருமணம் மூலம் கணவன் மனைவியானவர்களாம்!

பையனுக்குத் தாய்மொழியே பேச வராதாம். தாய்வழிப் பண்பாடுகளும் தெரியாதாம் உடுப்புகள், நடப்புகள் எல்லாம் மேனாட்டுக்காரன் மாதிரியாம்!

சிவகாமியின் மொழியில் சொல்வதென்றால் பெரியவங்க கிட்டே சின்னவங்க காட்ட வேண்டிய மரியாதை கூடத் தெரியாத பிராணிகள் நிலைமையிலே உள்ளவன்!

இவளை ஒருக்காலும் மருமகனாக ஏற்கமாட்டாள் சிவகாமி ஆனால், தேவியே “அம்மாகிட்டே சொல்லுங்கப்பா, சொல்லுங்கப்பா…” என்று அப்பாவை வற்புறுத்துகிறாள், அன்றாடம் கெஞ்சுகிறாள்,

அவருக்குச் சொல்லவும் தைரியம் வரவில்லை. சொல்லாமல் விடவும் மனமில்லை. அதனால்தான் அந்தப்பிரச்னை அவருக்கு இமயமலை மாதிரி பெரிதாகத் தோன்றியது.

கனகசபாபதியின் நீண்டசிந்தனை கலைந்ததற்கு அடையாள மாக மற்றெரு பெருமூச்சு வெளியேறியது. அப்போது தான் அவருக்கு அலுவலக வேலை சம்பந்தமாக மறுநாள் மலேசியா போகவேண்டும் என்பது நினைவுக்கு வந்தது.

போய்வர ஒரு வாரம் ஆகலாம், போய் வந்த பிறகு இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணலாம் என்று தீர்மானித்துக் கொண்டு மலேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்:

கனகசபாபதி மலேசியா விலிருந்து திரும்பியபோது, அவரைப் பேராச்சரியத்தில் மூழ்கடிக்கும் சேதி இங்கு காத்திருந்தது!

வர்த்தக நிறுவனத் தலைமை நிர்வாகி சுப்பிரமணித்துக்கே தேவியைத் திருமணம் செய்து வைக்கச் சிவகாமி மனதாரச் சம்மதம் தந்துவிட்டாளாம்!

அவரால் நம்பவே முடியவில்லை!

‘பொருத்தமானமாப்பிள்ளை எப்படி இருக்கணும்னு உங்கம்மா எத்தனையோ இலக்கணங்கள் வகுத்து வைச்சிருக்கிறாள் அந்த இலக்கணங்களிலே பாதிகூட இந்த சுப்பிர மணியத்துக்கிட்டே இல்லையே? எப்படி உங்க அம்மா சம்மதிச்சாள்? என்ன மாயம் இது’ என்று வியந்தார் அவர்.

அவருக்குச் சிவகாமியே விளக்கம் தந்தாள்.

மூணு நாளுக்கு முன்னே அந்தப் பிள்ளையே நம்ம வீட்டுக்கு வந்துச்சுங்க! வந்த பிள்ளை, வாசற்படியிலேயே நின்னு காலணிகளைக் கழட்டுச்சு. கழட்டி அங்கேயே போட் டுட்டு உள்ளே வந்துச்சு. அதைக் கவனிச்ச என்னோட மனசிலே அப்பவே மின்னல் கீற்று மாதிரி ஒரு நல்லெண்ணம் உண்டாகுச்சு! பிறகு, கூடத்திலே உட்கார்ந்திருந்த பிள்ளை என்னைக் கண்டதும் எழுந்து நின்னுச்சு! எழுந்து நின்னது மட்டுமில்லே, என்கிட்டே நிமிர்ந்து நின்னு பேசுறத்துக்கே வெட்கப்பட்டுச்சு. அப்புறம் அதோட பேச்சும் நடந்துகிட்ட முறைகளும் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. மேனாட்டுப் மொழி களை எவ்வளவு படிச்சாலும் மேனாட்டுப் பழக்க வழக்கங்களை எவ்வளவு கடைப்பிடிச்சாலும் நம்ம பிள்ளைகள் எப்பவும் நம்ம பிள்ளைகள் தான்……

இடையில் சற்று நிறுத்திவிட்டு மறுபடியும் பேச்சைத் தொடர்ந்தாள்.

நம்ம சாதி பிள்ளைகளாயிருந்தாலும் வேறே சாதிப்பிள்ளை களாயிருந்தாலும் சாதி எதுன்னு தெரியாத பிள்ளைகளாயிருந் தாலும், நல்ல பண்புகளும் நல்ல பழக்க வழக்கங்களும் உள்ள பிள்ளைகள் நல்ல சாதிப் பிள்ளைகள்தான்! இந்தப் பிள்ளை யைப் பார்த்த பிறகு தானுங்க எனக்கு இப்படி ஓர் அர்த்தம் தெரிஞ்சுது? உடனே ஒரு முடிவுக்கு வந்தேன்…

கனகசபாபதி திகைப்பினால் வாயடைத்துப்போய் நின்றார்.

தந்தை வழி தாய்வழிப் பண்புக்கூறுகள் எந்த எந்த ஒரு மனிதனின் மனத்தினின்றும் மனத்தினின்றும் முற்றாக நீங்கிவிடுவதில்லை. மனத்தின் அடித்தளத்தில் படிந்து கிடக்கும் அவை என்றாவது ஒருநாள் அவனையும் அறியாமல் தலை தூக்குகின்றன!

மாறக்கூடிய தன்மையில் உள்ள த்தை அமைக்கும் இறைவன் மாற்றவே முடியாத வகையில் உருவத்தையும் உருவத்தையும் நிறத்தையும் கொடுக்கிறான்.

அந்த உருவத்திலும் நிறத்திலும் அவரவர் பண்புகளை மண்ணுக்குள் தங்கம் போல மறைத்தும் வைத்திருக்கிறான்!

கனகசபாபதியின் முன் நின்ற இமயமலைப் பிரச்னை கதிரவனைக் கண்ட பனியாகியது.

– சிங்கப்பூர்க் குழந்தைகள் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு:1989, சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம், சிங்கப்பூர்.

சிங்கை பெர்னாட்ஷா சே.வெ.சண்முகம் சே.வெ.சண்முகம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெய்வாசலில் 1933ல் பிறந்தார். 1951ல் சிங்கப்பூருக்கு வந்த இவர், துறைமுகத்தில் பணியாற்றினார். 1961ல் கிடங்குப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்று 1991ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1949ல் எழுதத் தொடங்கிய இவரது முதல் சிறுகதை “வேறு வழியில்லையா?” மதுரையிலிருந்து வெளியாகும் “நேதாஜி” இதழில் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து இவர், சிறுகதைகள், தொடர்கதைகள், குட்டிக்கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், மேடை நாடகங்கள், வானொலி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *