மணமானவருக்கு மட்டும்




(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஜனவரி ஒன்றாம் தேதி அந்த விளம்பரம் வந்தது. அனைத்து ஆங்கில, தமிழ், தேசிய, பிராந்திய நாளிதழ்களின் இறுதிப்பக்கத்தில், முழுப்பக்க, வண்ண விளம்பரமாக. ஒரே விளம்பர நிறுவனம் கொடுத் திருந்த காரணத்தால், விளம்பர வாசகங்களில் அச்சுப் பிசகவில்லை. அச்சுப்பிழைகளும் இல்லை.
SUPER DUPER GRAND MEGA EXCHANGE OFFER
FIRST TIME IN INDIAN HISTORY
முந்துங்கள்! துன்பம் சிந்துங்கள்!! இன்பம் அருந்துங்கள்!!! வாழ்க் கையின் நேரான துணையைத் தேர்வு செய்ய மீண்டுமோர் நல்வாய்ப்பு! ஒருவேளை கடைசி வாய்ப்பாகக் கூட இருக்கலாம்! உள்ளுக்குள் வைத்துப் புழுங்குவதை வேருடனும் வேரடி மண்ணுடனும் பிடுங்கி வீசுங்கள் வெளியே!

எதற்கு அச்சம்?
எதற்கு நாணம்?
மடம் என்றால் என்ன?
தழைத்து வளரும் புதிய பசிய அன்புச் செடியொன்றை
ஊன்றுங்கள் நெஞ்சங்களின் நடுவே!
திருமணமான ஆடவரே! பெண்டிரே!!
வாழ்க்கையைத் திருத்தியமைத்துக்கொள்ள, தமிழர் திருநாளின் மூன்று விடுமுறை நாட்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வடவர் அதைக் கரிநாள் என்பார்கள்.
தமிழருக்கு அது சிரிநாள்…
வாழ்ந்ததும் அலுத்ததும் அழுததும் போதும்… வெறுத்தது போதும், வெந்து வேக்காடு ஆனதும் போதும்!!!
இருக்கும் நாட்கள் இன்னும் கொஞ்சம்.
தரிசுகளைக் கைவிட்டு அன்பு பயிராகும் விளை நிலம் கொள்வீர்! ஆணென்ன, பெண்ணென்ன? அன்பு தழைக்க, இன்பம் கொழிக்க,
இந்த அரிய இனிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வீர்!!! இந்தியாவிலேயே முதன்முறையாக, அமெரிக்க, ஐரோப்பிய நாடு களை வெற்றி கொண்ட, ஆகப் புதிய தத்துவமான -மகா மெகா எக்சேஞ் ஆஃபர்.
இடம்: பெரியார் திடல் – அண்ணா திடல் – கலைஞர் திடல்
நாள்: 13, 14, 15 ஜனவரி 2006
நேரம்: காலை 8-00 முதல் இரவு 8-00 வரை
உணவு இடைவேளை கிடையாது.
சர்க்கரையுடனோ, சர்க்கரை இல்லாமலோ காப்பி, தேநீர் இல வசம். சிற்றுண்டி, மதிய உணவு இலவசம். மேற்கொண்டு தகவல் களுக்கு அணுகவும்:
அலைபேசி: 111 000 999 888, 222 000 888 777, 333 000 777 666, 444 000 666 555, 555 000 555 444.
குறிப்பு:
1.நிபந்தனைகள் உண்டு.
- மகா மெகா கிராண்ட் எக்சேஞ்ச் ஆஃபரைப் பயன் படுத்திக் கொள்ள விழைவோர், திருமணம் ஆனவர் என்பதற்குச் சான்றாக அ)குடும்ப அட்டை (ஆ) கடவுச்சீட்டு (இ) திருமணச் சான்றிதழ் (ஈ)மாவட்ட நீதிபதியின் சான்றிதழ் ஏதேனும் ஒன்று அசல் வைத் திருக்க வேண்டும்.
- தத்தம் துணைவர் துணைவியரை நேரில் அழைத்து வர வேண்டும்.
- சட்டபூர்வமான பிரிவுக்கான சம்மதச் சான்றிதழ், அசல், (படிவம் 13-இ) முதல் நிலை அரசு அலுவலர் அத்தாட்சி பெற்றது கொண்டுவர வேண்டும்.
- கணவன்- மனைவி சேர்ந்திருக்கும், மூன்று மாதத்திற்குள் எடுக்கப்பட்ட புகைப்பட நகல், கருப்பு-வெள்ளை, 6.5 செ.மீ x 4.5 செ.மீ அளவில் 1426 படிகள் கையில் வைத்திருக்க வேண்டும்.
- எக்சேஞ்சுக்கு பதிவு செய்ய ஆண், பெண் தனித்தனியாக ரூ. 5000-00 காசாகச் செலுத்த வேண்டும்.
நேரில் வருகை தருக!
திருமண உறவின் தேவாமிர்தம், மீத நாள் முழுக்க பருக!!
கும்ப முனி கடந்த 47 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் The Hinduவும் தமிழில் தொடங்கிய நாள் முதல் தினமணியும் வாசிப்பவர். வாசிப்பு என்றால் அப்படி இப்படியல்ல – செய்திகள், விளம்பரங்கள், அறிவிப்புகள், காலமானோர், நகரில் நடப்பவை, நடக்க இருப்பவை. நுழைவுத் தேர்வுக்குப் படிப்பதைப் போல. அவர் எதைப் படித்தாலும் அப்படித்தான். மஸ்தான் சாகிபு பாடலானாலும் சரி இரயில்வே கால அட்டவணையானாலும் சரி.
கும்பமுனிக்கு மடம் என்றால் என்ன எனும் கேள்வி மிகவும் பிடித் திருந்தது. சங்கர மடம், சாமியார் மடம், கள்ளர் மடம், மோர் மடம், சந்தைமடம், நாற்கால்மடம், கஞ்சிமடம்… ஏதோ ஒரு மடம். இந்த மடம் இல்லாவிட்டால் சந்திமடம் என்று ஆகிவிட்டது போலும் மாப் பிள்ளை – பெண்டாட்டி காரியங்கள். தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை அடுக்களையில் கடமுடா என்று அம்மியில் துண்டுத் தேங்காயை வைத்து நசுக்கிக் கொண்டிருந்தார். காலையில் காணத்துவையலும் கஞ்சியுமாக இருக்கும்.
”ஓய், கண்ணுவிள்ளை, கொஞ்சம் இஞ்ச வாரும்…”
“என்ன பாட்டா? பாம்பு கடிச்ச மாரி அவயம் போடுகேரு…”
“இன்னா பேப்பர்லே என்ன போட்டிருக்கான், பாத்தேரா? நீரு என்ன பாப்பேரு… அதுக்கு எழுதப் படிக்கத் தெரியணும்லா!”
“என்ன போட்டிருக்கான்? கெழவி சமைஞ்சாண்ணா? நீரே படிச்சுச் சொல்லும்…”
“மாப்பிளையும் பொண்டாட்டியும் பழசைக் குடுத்துக்கிட்டு புதுசு வாங்கிக்கிடலாமாம்”
“அது எப்படிப் பாட்டா… காலம்பற என்னாமாந் தோணும் ஓமக்கு… வெயிலு ஏற ஆரம்பிச்சாச்சுல்லா?”
“உள்ளது தாம்டே! பழைய டி.வி. குடுத்துக்கிட்டு கூடக் கொஞ்சம் பணம் குடுத்து புதுசு வேண்டுகாள்ளா அத மாரி!”
“டி.வி, பிரிச்சுண்ணா அது சாமானம்லா பாட்டா! மாப்பிள்ளை யும் பொண்டாட்டியும் அப்பிடியா?”
“எலே, அசை துப்பப்பட்ட கெழட்டுக் காளையைக் குடுத்துக் கிட்டு கூடக்கொஞ்சம் பணமும் குடுத்து ரெண்டு பல்லு காளையங் கண்ணு சீவலப்பேரி சந்தையில் வேண்டிக்கிட்டு வாறாம்லாடே அத மாரி.”
“அப்பம் கெழவி, கெழவனை மாத்திக்கிட்டு கொமரனைக் கூட்டிக்கிட்டு வரலாம்ணா சொல்லுகேரு?”
“ஆமா! ஆமா! அதே மாரி கெழவனும் கெழவியை மாத்தீட்டு கொமரியைக் கூட்டியாரலாம் பாத்துக்கோ…”
“நல்ல கோளுல்லா… அப்பம் மேக்கொண்டு துட்டு குடுத்தா என்ன வேணும்ணாலும் ஆகலாம்ங்கேரு! ஆனா மாட்டுக்கு வெலை மதிக்கது மாரி, மாத்தப்போற மாப்பிளைக்கும் பொஞ்சாதிக்கும் எப்பிடி பாட்டா வெலை வைப்பா?”
“அதுக்குத் தானடா கம்ப்யூட்டர் இருக்கு!”
“அது எப்படி பாட்டா? ஆளைக் கொண்டு அதுக்கு முன்னே நெறுத்துனா அது வெல வச்சுச் சொல்லீருமாக்கும்?”
“அதுக்கெல்லாம் வழி வச்சிருப்பாம்டா… என்னா ஏதுண்ணு போயிப் பாத்தால்லா தெரியும்! வாய்ப்பா வந்துண்ணு வச்சுக்கோ, நமக்கும் ஒண்ணு புடிச்சுக்கிட்டு வரலாம்லா?”
“அதுக்கு உம்ம கிட்ட மாத்ததுக்கு பழசு இருக்கா?”
“எல்லாம் வழிவச்சிருப்பாம்டா! தோதுப்போல ஒனக்கும் ஒண்ணு பாத்துக்கிடுவோம்”
“பணத்துக்கு எங்க போக?”
“அப்பம் ஆசை இருக்கு தாயோளிக்கு…பணம் என்னடா பணம்? பாத்துக்கிடலாம்…”
திடல் நிரம்பி வழிந்தது. கும்பமுனிக்கு ஆச்சரியமாக இருந்தது. தோளில் தொங்கிய பைகளிலிருந்து தலை நீட்டும் தண்ணீர் போத்தல் களுடன், வெள்ளெழுத்துக் கண்ணாடிகளுடன், புதிதாய் பொருத்திய பல் செட்டுகளின் அசைவுகளுடன், வாதக்கால்களுடன், பித்த வெடிப்புக்களுடன் நிக்கோடின் கறைகளுடன், வெற்றிலை பாக்குக் காவியுடன், பழஞ்செருப்புக்களுடன், காம்புக் குடைகளுடன் தனக்கு முன் நகரும் தொப்பைகளுடன், தன்னைப் பின்தொடரும் புட்டங் களுடன், குனிய நிமிர முடியா இடுப்புக்களுடன், நரைத்த தலை மயிருடன், கருஞ்சாயம் பூசிய கேசங்களுடன், சின்னக் கொண்டை களுடன், வழுக்கையுடன், வெளி விழுந்த பற்களுடன், பொடிக்கறை கொண்ட துண்டுடன், காதில் அணிந்த செவிட்டு மெஷின்களுடன், ஆசன வாயை அடைத்துத் தைத்து பக்கவாட்டில் பொருத்திய மலஜல பைகளுடன், நீரிழிவுடன், இரத்த அழுத்தத்துடன், பைபாஸ் செய்யப் பட்ட, வால்வ் புதிதாய்ப் பொருத்தப்பட்ட, ஸ்டென்ட் நுழைக்கப் பட்ட, பேஸ் மேக்கர் வைக்கப்பட்ட இரத்த நாளங்களுடன், வயிற்றுப் பொருமலுடன், வாயுத் தொந்தரவுடன், பல்வலியுடன், தோல் வியாதி களுடன், புரோ ஸ்டேட் கிளான்ட் உடன் இரத்தம் போக்கும் கருப் பையுடன், கருப்பை நீக்கப்பட்ட வயிற்றுடன் ஆடவரும் பெண்டிரும் தம்பதிகளாய் குறுக்கும் நெறுக்கும் கவுன்டருக்குக் கவுன்டர் திரிந்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த மியாமி கடற்கரை நிழற் குடையின் கீழ் மேசை நாற்காலிகள் போட்டு, டை கட்டிய அலுவலர்கள் அமர்ந்திருந்தனர். கழுத்தில் மாட்டிய செல் ஃபோன்களும் வாயருகில் ஊசலாடிய மைக்ரோஃபோனுடனும் மீசை மழித்த சிவந்த நவயுவர்கள்.
பெண்ணின் ஆணின் வயது பிரித்து கவுன்டர்கள் அமைக்கப் பட்டிருந்தன. வயது 20-35, 35-40, 45-50, 50-60, 60-80 என. இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என மதரீதியாகவோ, குடி ரீதியா கவோ பிரிவினைகள் இல்லை. எம்மதமும் சம்மதம் என்பதோ, தன் மதமே சம்மதம் என்பதோ அவரவர் விருப்பம் சார்ந்தது. அசல் சான்றிதழ்கள் சமர்ப்பித்து, ஆராயப்பட்டு, பணம் கட்டிய பின் டோக்கன் பெற்றவர்கள், வரிசைப்படி தங்கள் அழைப்பு வரும்வரை நிழலுக்காகப் போடப்பட்டிருந்த சாமியானாவில் அமர்ந்திருந்தனர். டோக்கன் எண்ணுடையவர்களை விளிக்கவும் பொது அறிவிப்புக் களுக்காகவும் ஒலிபெருக்கி வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
டோக்கன்கள் தனித்தனியாக வாங்கியிருப்பதாலும் தனித்தனியா கவே அழைப்பு வரும் என்பதாலும், தனித்தனியாக அமர்ந்து அவரவர் மனதுக்குள் கதைத்துக் கொண்டிருந்தனர். ஒரு வேளை, சேர்ந்து அமர இனியொரு வாய்ப்பு வராமற் கூடப் போகலாம் அல்லவா? அதை நினைத்து பெரும்பாலான தம்பதியினர் இறுதி நினைவுகூரலாக, உறுப்புவழி, கைவழி, வாய்வழி (வாய் எனில் அதில் ஆசனமும் அடங்கும்) புணர்ச்சியில் ஈடுபட்ட களைப்பிலும் இருந்தனர்.
முதல் கட்டமாக, டோக்கன் பெற்றவருக்கான வாசிப்புக்கு என சுற்றறிக்கையில் கீழ்க்காணும் விவரங்கள் தரப்பட்டிருந்தன.
- எங்கள் அமர்வுகளின் மூலம், கணவன்-மனைவி இரு பாலருடைய மண முறிவு ஒப்பந்தம், அரசாணை எண். த .நா . ம .ஒ.ச / முத. அமை. 2006 / அ.இ.அ.தி.மு.க./ தி.மு.க / ம.தி.மு.க / தே.தி.மு.க./ தி.க/ 2948317674825925340/ அ.ஆ.இ.ஈ. உ.ஊ.எ.ஏ. ஐ.ஒ.ஓ.ஔ.ஃ/ 246 நாள் 01-01-2006-ன் படி எல்லா சர்வ தேசிய நீதி மன்றத்திலும் செல்லத்தக்கதாகும்.
- பெற்றுக்கொண்ட மண முறிவு ஒப்பந்தம் உடனுக்குடன் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ், இரு படிகள் மட்டும் வழங்கப்படும்.
- பெற்றுக்கொள்ளப் போகும் புது வாழ்வு ஒப்பந்தம் உடனுக் குடன் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ், ஒரு படி மட்டும் வழங்கப் படும்.
- தாலியணிதல், சிலுவையணிதல், கருமணிமாலை அணிதல், மாலை மாற்றல் சடங்குகள் திடலில் கண்டிப்பாய் செய்யப்பட மாட்டாது.
- அவரவர் வசதிபோல் பின்னால் மண்டபங்களிலோ, கோயில் தேவாலயம் பள்ளிவாசல்களிலோ மேற்கண்டவற்றைச் செய்து கொள்ளலாம். தங்கள் சொந்தச் செலவில் விருந்து கொடுப்பது பற்றி யும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
- புது வாழ்வு ஒப்பந்தம் ஆனவர் தங்கள் விருப்பம் போல் மத மாற்றம் செய்து கொள்ளலாம். புதிதாய் சுன்னத் செய்துகொள்ளும் புது மண ஆடவர், செய்து கொள்ளுமுன் தங்கள் இரத்தத்தின் சர்க்கரை அள வினைப் பரிசோதித்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அறி வுறுத்தப் படுகிறார்கள். கல்யாணப் பண்டத்தின் பாதுகாப்புக்கு அது உகந்தது.
- மண முறிவு ஒப்பந்தம் ஆன பிறகு, அன்பளிப்பாக, 20லிட்டர் பிடிக்கக் கூடிய பிளாஸ்டிக் வாளி தலைக்கு ஒன்று தரப்படும்.
- புதுமண ஒப்பந்தம் ஆன பிறகு, கோவை, மதுரை, திருநெல் வேலி, சேலம், திருச்சி, விழுப்புரம், சென்னை ஆகிய நகரங்களில் அமைந்துள்ள குதூகலம், கொண்டாட்டம், அற்புதம், ஆனந்தம், காரிடி, பேரிடி, வண்ண மின்னல் ஆகிய தலங்களுக்கான நுழைவுச் சீட்டு இரண்டு அன்பளிப்பாக வழங்கப் பெறும். அன்பளிப்பு நுழை வுச் சீட்டு மட்டும்தானே தவிர, உணவு, பானங்கள், தங்கும் அறை, கழிப்பிடங்கள், மதுச்சாலை, ஆணுறை ஆகியவற்றுக்கு கட்டணங்கள் உண்டு.
- பிரிந்து போகிற தம்பதியினருக்கு வயதுக்கு வந்த பிள்ளைகள் இருந்தால், அவர்கள் எந்தப் பெற்றோருடன் அல்லது தனியாக இருப் பார்கள் என்பதற்கான ஒப்புதல் கடிதங்கள், அத்தாட்சி செய்யப் பட்டது, கைவசம் வைத்திருக்க வேண்டும்.
- வயதுக்கு வராத குழந்தைகள் எனில், அரசாணை எண்: த.நா.ம.ஓ.ச./ முத. அமை. 2006/ பா.ஜ.க / அ.இ. மு.லீ/ கு.க/ பி. சோ. க/ பு. சோ.க/ அ.இ.பா.பி/ த.தே. க/ வி.சி/ பா.ம.க./ வி.மு/ த.பா / இ.தே.கா.1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13/ 2948317674825925340/- க.ச.ட.த.ப.ற.ய.ர.ல.வ.ழ.ள.ங.ஞ.ண.ந.ம.ன./247 நாள் 01-01-06-ன் படி அரசு குழந்தைகள் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டு, 18-வயது பருவம் எய்துவது வரையிலான காலம் கணக்கிடப்பட்டு அதற்கான தொகை முழுவதும் மொத்தமாக வசூலிக்கப்படும். வசூலிக்கப்படும் தொகைக்கு வட்டி கிடையாது. M.B.C, D.N.C, S.C மற்றும் S.T. வகுப்பினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
11.குழந்தைகளின் கல்விச் செலவுகள் வசூலிக்கப்பட்ட தொகை யில் அடங்கும். 18-வயதுக்குப்பிறகு குடியரசு தினத்தன்று திறந்து விடப்படுவார்கள். பின்பு அவரவர் பாட்டை அவரவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.
12.குழந்தைகளை அரசுக் காப்பகத்தில் ஒப்படைக்கும் போது, அவர்களின் மதம், சாதி, உட்பிரிவுகளின் சான்றிதழ்கள், ஆண்/பெண் சான்றிதழ்கள் (அலிகளுக்கு அனுமதி இல்லை – பிற அரசு சட்ட திட்டங்களுக்கு இணங்க) அவர்கள் பெயரில் இருக்கும் சொத்துக்கள் பற்றிய ஆவணங்கள், காப்பீட்டுப் பத்திரங்கள், வைப்புநிதிப் பத்திரங் கள் ஆகியவற்றின் அசல்கள் ஒப்படைக்கப்படவேண்டும். நகல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
13.ஆண் குழந்தைகள் எனில் முப்புரிநூல் அணிபவர்கள், சுன்னத் செய்தவர்கள் என்பதற்கும் கிறித்துவ சமயத்து ஆண் பெண்கள் ஞானஸ்நானம் பெற்றவர்கள் என்பதற்கும் அத்தாட்சி வைத்திருக்க வேண்டும்.
- பெண் குழந்தைகள் எனில், அவர்கள் பருவம் எய்திய பின் எவ்வகை சாமத்தியச் சடங்குகள் நடத்தப்பட வேண்டும் என்பதற்கும் ஆண் குழந்தைகள் எனில் திருமணம் ஆகும்போது அணியும் தாலி வகை பற்றியும் விருப்பக் கடிதங்கள் தரப்படல் வேண்டும்.
15.குழந்தைகளின் ஆரோக்கியம்,உணவு (சைவம் அல்லது அசைவம்), சீருடை, சோப்பு, சீப்பு, எண்ணைய், பற்பசை தேவை களைக் காப்பகங்கள் கவனித்துக் கொள்ளும். கல்விக்கு தகுதி சார்ந்தும் ஒதுக்கீடு சார்ந்தும் விருப்பம் சார்ந்தும் முன்னுரிமை தரப்படும். எந்த முன்னுறுதியும் இந்த வகையில் காப்பகங்கள் தர இயலாது.
- அவரவர் விருப்பம் சார்ந்து, விபூதி /குங்குமம்/ சாந்து/ சந்தனம் /மந்திரித்த எண்ணெய்/ பிற மதச் சின்னங்கள் தரித்தல் அனுமதிக்கப்படும். கட்டாய மதமாற்றம், இனமாற்றம், குழுமாற்றம் ஆகியன அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.
- குழந்தைகளுக்கு அடித்தல், கிள்ளுதல், பிராண்டுதல், தள் ளுதல், கடித்தல், முட்டுதல், மோதுதல், மிதித்தல், மயிரைப் பிடித்தல் ஆகிய போர்ப் பயிற்சிகள் கண்டிப்பாக விலக்கப் பட்டுள்ளன.
- பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மதப் பெருநாட்கள் அனுமதிக்கப்படும். சாதி சார்ந்த, உட்பிரிவுகள் சார்ந்த சிறு நாட்கள் கொண்டாட அனுமதி இல்லை.
- காப்பகங்கள் சார்ந்து அவ்வப்போது அரசு விடுக்கும் தற்காலிக/நிரந்தர ஆணைகள் முழுதாகவும் கண்டிப்பாகவும் விதிவிலக்குகள் இன்றியும் நடைமுறைப் படுத்தப்படும்.
- காப்பகக் குழந்தைகள் பற்றிய எந்த வழக்கையும் ஏற்று விசாரித்துத் தீர்ப்பு வழங்க அரசு ஏற்படுத்தும் முறையீட்டகம் முழு அதிகாரம் கொண்டது. பிற நீதி மன்றங்களுக்கு காப்பகங்களின் மீது எந்த அதிகாரமும் இல்லை.
21.காப்பகக் குழந்தைகளுக்கு தற்செயலாக ஏற்படும் விபத்துகள், அதனால் ஏற்படும் அங்கக் குறைவுகள், மரணங்கள், நோய்கள், நோய் மரணங்கள், பாம்புக்கடி, தேள்கடி, விஷ உணவு, விஷச் சாராயம், காப்பகம் – பள்ளிக்கூடம் தீப்பிடித்தல், பேருந்து பள்ளத்தில் பாய்தல், கூரை இடிந்து விழுதல், உணவுப் பங்கீட்டின் போது நிகழும் நெரிசல், வெள்ளப்பெருக்கு, பூகம்பம், கொள்ளை நோய், ஆழிப் பேரலை, எரிமலை, பட்டாசு வெடித்தல், வெயில் தாக்குதல் ஆகியவற்றால் ஏற்படும் மரணங்களுக்கும் காப்பகங்கள் பொறுப்பாக மாட்டா.
- மேற்கண்ட ஷரத்துக்களை ஒப்புக்கொண்டு, நடைமுறைப் பெற்றோர் இருவரும் சம்மதித்து அதற்கான படிவம் எண்.39 ஆ.பகுதி. போ.வில் ஒப்புதல் கையைழுத்து இட வேண்டும்.
- மேற்படி ஷரத்துக்களில் குறிக்கப் பெறாத நிபந்தனைகளுக்கு கும் நடைமுறைப் பெற்றோர் கட்டுப்பட்டவர் ஆவார்கள்.
- பதினெட்டு வயது திகைந்தபின் குழந்தைகள் காப்பகங் களிலிருந்து விடுவிக்கப்பட்டபின் அவர்கள் தத்தம் புத்திபோல் பிழைத்துக்கொள்ள வேண்டும்.
காப்பகக் குழந்தைகள் என்பதால், அவர்கள் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அரசுப் பணிகள், நகராட்சி/ மாநகராட்சி உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், வாரியத் தலைமை ஆகியவற்றுக்கு முன்னுரிமை கோர இயலாது.
- காப்பகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனிப்பிரிவுகள் உண்டு. எனினும் பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் இரு பாலருக்கும் பொதுவானவை. எனவே நடப்பில் உள்ள தமிழ்ப் பண்பாட்டின் படி, பத்து வயது முதலே மாணவர் மத்தியில் தோன்றும் காதல்களைக் காப்பகம் ஊக்குவிக்கவோ, பேணவோ செய்யாது. எனினும் பதினெட்டு வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ள குறுக்கே நிற்காது. களவொழக்கத்தின் பாற்பட்ட கூட்டிக்கொண்டு ஓடிப்போதல், கரந்து உறைதல், குஷ்பு இஸம் போன்ற நிகழ்வுகளுக்கு காப்பகம் பொறுப்பு ஏற்காது.
படித்த முடித்த தம்பதியினரிடம் சுற்றறிக்கைப் படியொன்று வாங்கி, கும்பமுனி கூர்ந்து படித்தார்.
தினமும் இட்லி அல்லது தோசை அல்லது சப்பாத்தி எத்தனை தருவார்கள், எத்தனை முறை நாளில் ஒன்றுக்கும் ரெண்டுக்கும் போகலாம் என்பன தவிர்த்து தவல்கள் பூரணமாக இருந்ததாக அவருக்குத் தோன்றியது.
வயது, பால் பிரிவுகளுக்கு ஆட்பட்டு எண்பது கவுன்டர்கள் இருந்தன. பதிவு அதிகமாக இருந்த பிரிவுகளுக்கு நெரிசலைச்சமாளிக்க கூடுதல் கவுன்டர்கள் இருந்தன. கவுன்டர்களின் பொறுப்பான ஆலோசனை அதிகாரிகளை பானங்களுக்கோ, உணவுக்கோ, இயற்கை உபாதைகளுக்கோ விடுவிக்க மாற்று அதிகாரிகள் இருந்தனர். எல்லா கவுன்டர்களின் கணினிகள் நெட்வொர்க் மையம் ஒன்றில் இணைக்கப் பட்டு, அந்த மையங்கள் நாடு முழுதும் நடக்கும் பிற மையங்களோடு இணைக்கப்பட்டு, தலைநகரில் இருக்கும் மாமையத்தின் கட்டுப் பாட்டில் இருந்தன. கிட்டத்தட்ட பொறியியற் கல்லூரி கவுன்சிலிங் போல என வைத்துக் கொள்ளுங்கள்.
மைதானத்துக்கு வெளியே ஏழெட்டுக் குழுக்கள் ஏற்படுத்திய சிறு சலசலப்பை காவலர்கள் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். கவுன்டர் களுக்கு கவுண்டர் என்று ஒரு சாதிப் பெயரை மட்டும் வைக்கக்கூடாது என்றும் நாயக்கர், செட்டியார், பிள்ளைமார், மறவர், வன்னியர், பார்ப்பனர், நாடார், கோனார், சாம்பவர், பள்ளர், வண்ணார், குயவர், நாவிதர், சக்கிலியர், முதலியார், முக்குவர், பரவர் போன்ற சாதிப் பெயர்களையும் வைக்கவேண்டும் என்பதுவே கோரிக்கை.
கோஷ அட்டைகளைத் தாங்கி அந்தந்த சாதியினர் தனித் தனியா கவும் கூட்டாகவும் இடைவெளிவிட்டும் விடாமலும் கூச்சல் போட்டு அறப்போர் நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் வந்து அனைத்துச் சாதிக்குழுக்களிட மும் தனித்தனியாகப் பேச்சு வார்த்தை நடத்தி, ‘கவுன்டர்’ எனும் தமிழ்ப் பெயர்ப்பலகைகளை எடுத்துவிட்டு COUNTER என்று ஆங்கிலப் பெயர்ப்பலகைகளை வைப்பதாக வாக்குறுதி கொடுத்ததன் பேரில், அறப் போர் கைவிடப்பட்டது.
எங்கும் பலத்த காவல் துறையினர் கண்காணிப்பு.
தீயணைப்பு வண்டிகள்.
குடிநீர் விநியோகம்.
வாசலில் நின்றபடி வீட்டு உபயோகப் பொருட்களின் அங்காடி கள் துண்டுப் பிரசுரங்களாக விநியோகித்த காகிதங்கள் மைதானம் முழுக்கப் பறந்துகொண்டிருந்தன.
திருமண மண்டபங்கள், ஆடையகங்கள், நகைக் கடைகள், கேட் டரிங் சர்வீசுகள், பயண ஏஜென்சிகள் தத்தம் விசிட்டிங் கார்டுகளை நீட்டிக்கொண்டு நின்றனர். ஓரிரவு தங்கினால் மற்றோர் இரவு இலவசம் என்றன தங்கும் விடுதிகள்.
அவசர அவசரமாக, பதிவான அன்றே மாலை மாற்றிக் கொள்வோர் வசதிக்கென மைதான முகப்பில் இருந்த மாரியாயி கோயிலில் 24 மணி நேர சேவை இருந்தது. ஆயத்த தாலிக் கடைகள்,
மாலைக்கடைகள், ஆடையகங்கள் தோன்றின. சிற்றுண்டி, பேருண்டிக் கடைகள் வந்தன. நடமாடும் புரோகிதர் நாவிதர் வண்ணார் தத்தம் உபகரணங்களுடன் ஆள் பிடிக்க அலைந்தனர்.
வெயில் கடுமையாகக் கொளுத்த ஆரம்பித்தது.
டோக்கன் எண். 248 A, 248 B என அறிவிப்பு வந்ததும் கும்ப முனியிடம் இருந்த சுற்றறிக்கை நகலைப் பிடுங்கிக்கொண்டு ஒருவர் எழுந்தார். நடக்க ஆரம்பிக்குமுன் தீர்க்கமாக முகத்தை வைத்துக் கொண்டனர்.
‘இருக்காதா பின்னே! பத்து முப்பது வருசம் சேந்து வாழ்ந்தது சும்மாவா? பிரிவென்பது பெருங்காடல்லவா?’ என்றோடியது கும்ப முனியின் சிந்தனை. மனைவியரில் ஒருத்தி தற்செயலாய், இன்னும் சில மணித் துளிகளில் கழற்றப் போகும் தாலியைத் தொட்டுப்பார்த்துக் கொண்டாள். சுண்டைக் கடித்து அழுகையை அடக்கப் பார்த்தாள். பிரித்தலின் கொடுங்கரம் பிடரியில் கை கொடுத்துத் தள்ளியது. இனி, தாலியறுத்தவள், மறுதாலி கட்டியவள் போல தாலி கழற்றியவள் என்றொரு சொற்றொடர் தமிழில் உருவாகும்.
கும்பமுனியின் கதையெழுதும் புத்தி நீள யோசித்துக்கொண்டு போயிற்று, மேல் வலிக்காமல்-
“இரண்டே பிள்ளைகள்தான். மகன் ஃபிலடெல்ஃபியாவில் கணினிப் பொறியாளராக இருக்கிறான். மகள் சிட்னியில் வானவியல் ஆராய்ச்சியில் இருக்கிறாள். அவரவர் குடும்பத்துடன், தலைக்கு ஒரு காருடன், தனித்தனிப் படுக்கை அறையுடன், தனித்தனி வங்கிக் கணக்குகளுடன், சூடாக்கிச் சூடாக்கிச் சாப்பிட்டுக் கொண்டு.
பேரன் பேத்திகள் சொந்த மண்ணைப் பார்த்ததே இல்லை. நாட்டுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எல்லாம் சுகம். சௌக்கியம். நல்லாருக்கீங்களா?
யாரையும் யாரும் கட்டுப்படுத்த இயலாது. ஓய்வு பெற்ற தம்பதிகள் இருவரும் வங்கிப்பணியில் இருந்தனர் முன்பு. போதுமான ஓய்வூதியம், காப்புத் தொகைகள், சொந்த வீடு. சேர்ந்து வாழ்ந்து அலுத்துப் போய்விட்டது.
சாப்பிடுகிறீர்களா?
ஃபோன் பில் கட்ட வேண்டாமா?
விளக்கை அணைக்கவா?
எண்ணி மூன்று சொற்றொடர்கள் தினத்துக்கு. எழுவது, நடப்பது, உண்பது, உறங்குவது, டி.வி. பார்ப்பது என்பதைத் தாண்டிய அட்ட வணைகளும் இல்லை.
தனித் தனியாக முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது வாராது வந்த மாமணிபோல், காட்சிப்பட்ட விளம்பரம்.
மௌனமாக ஒருநாள். மறுநாள் கூட்டாக. மூன்றாம் நாள் மறுபடியும் தனித்தனியாக யோசித்தபின் பத்துக்கு ஒன்பது பொருத்தம் இருந்தது மகா எக்சேஞ் ஆஃபரைப் பயன்படுத்திக்கொள்ள. வைப்பு நிதிகளை, ஆபரணங்களை, வீட்டை, உபயோகப் பொருட்களை, யாத்திர பண்டங்களை எப்படிப் பிரித்துக்கொள்வது என்பதிலும் ஒரு ஒத்த தீர்ப்புக்கு வந்திருந்தனர். இருவருக்குமே எந்த வழக்கும் இல்லை. உனக்கு எது வேண்டுமோ எடுத்துக்கொள் என்பதே இருவரின் முழக்கமாக இருந்தது.
எல்லாம் அலுத்துப் போயிற்று. சாக ஆசையும் இல்லை. சாவென்பது என்ன?
தொடர்ச்சி அறுதல்.
எதன் தொடர்ச்சி? சம்பவங்களின், உரையாடல்களின், பகிர் தலின், கொடுத்தலின், பெற்றுக்கொள்ளலின், மறுத்தலின் தொடர்ச் சியா? யார் எதைத் தொடர்கிறார்கள்? எல்லாம் தொடர்பு அறுந்து போன வாழ்க்கை. வாலறுந்த நரி. தும்பறுந்த பட்டம். வேரற்ற மின்சார விளக்குக் கம்பம்…’ கும்பமுனி சடாரென தலையை உதறிக்கொண்டார். போகிற போக்கு சரியில்லை. மறுபடியுமொரு கதை எழுதும் உத்தேசமில்லை.
கும்பமுனி நடந்து திரிந்த பாதையில், கருப்புக்கண்ணாடி அணிந்த ஒருவர் குறுக்கிட்டார். சம வயதுதான். தலையில் கொஞ்சம் அதிகம் முடி இருந்தது.
“சார் மன்னிக்கணும்… என் டோக்கன் நம்பர் 250 A. எம் பொஞ்சாதி டோக்கன் நம்பர் 250 B. அவ, அதோ, தெரிஞ்சவளோட பேசீட்டிருக்கா… இப்ப கூப்பிட்டிருவான்… எனக்கு கொஞ்சம் அவசரமா டாய்லட் போணும்… நேத்து லாஸ்ட் சப்பர்… வயத்துக்கு ஒத்துக்கல்லே போல்ருக்கு … டோக்கன் நம்பர் கூப்பிட்டா போயி என்னாண்ணு கேளுங்கோ… பாரம் நிறைக்கச் சொல்லுவான். வேறென்ன? கொஞ்சம் பாத்து பண்ணுங்கோ… முடிஞ்சதுக்கப்புறம் இதே இடத்திலே நில்லுங்கோ… டோக்கனைப் பிடிங்கோ… கொஞ்சம் அவசரம்… இப்ப வந்திருவேன்…”
கும்பமுனியைப் பேசவே விடவில்லை. அவர் தெளிந்து நிமிர்ந்த போது, அறிவிப்புக் கேட்டது. “டோக்கன் நம்பர் 250 A, கவுன்டர் நம்பர்13. டோக்கன் நம்பர் 250 B கவுன்டர் நம்பர் 67.”
தனது கவுன்டரை நோக்கி நடந்தார் கும்பமுனி.
“வாருங்கள் மிஸ்டர் திருமலைசாமி. உட்காருங்கள்.
இந்தப் படிவத்தை ஐந்தே நிமிடங்களில் பூர்த்தி செய்து விடலாம். பெண்களுக்கான பகுதியை நீங்கள் தொடவேண்டியதில்லை. உங்கள் மனைவியிடம் நீங்கள் காணும் போதாமைகளை வெளிப்படையாகக் குறிப்பிடுங்கள். அவர்களது மதிப்புப் புள்ளிகளைக் கணக்கிட உங்கள் விடைகளும் உங்கள் மதிப்புப் புள்ளிகளை கணக்கிட அவர்களது விடைகளும் பயன் படுத்திக்கொள்ளப்படும். நீங்கள் எதற்கும் கூச்சப் படக் கூடாது. After all, whose life is it anyway ?”
”சரிங்க ஐயா.”
”வயது, செல்வநிலை, ஆரோக்கியம், நிறம், உயரம், எடை, தொந்தி, தோற்றம், நரை, விழுந்த அல்லது விழப்போகும் அல்லது பிடுங்கப்பட்ட பற்கள், மருத்துவ வரலாறு, உணவுப் பழக்கம், உடை விருப்பம்,மது, புகை, பொடி, வெற்றிலைப் பழக்கங்கள் என அனைத் துக்கும் கூட்டல் புள்ளிகள், கழித்தல் புள்ளிகள் உண்டு. மொத்த மாக, உங்கள் மனைவியின் விடைகளும் மதிப்பிடப்பட்டு உங்களுக்கு தகுதிப் புள்ளிகள் வழங்கப்படும். உங்கள் எதிர்பார்ப்புகள், புதிய இணை சேர்பவரிடம் நீங்கள் விரும்புபவை அனைத்துக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டு கணினி உங்களுக்குத் தகுதியான பத்துப் பெண்களை சிபாரிசு செய்யும். அதில் நீங்கள் நேர்முகம் கண்டு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
சரியா? இனி படிவத்தை நிரப்புங்கள்!
கும்பமுனி படிவத்தை நிரப்பத் துவங்கினார். ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த தன் – குறிப்பின் அடிப்படையில் தரப்பட்ட விவரங்கள் படிவத்தில் அச்சாகி இருந்தன.
பெயர் : க.திருமலைசாமி
வயது :63
கல்வித் தகுதி : எம்.ஏ (ஆங்கிலம்)
பணி :பேராசிரியர் (ஓய்வு)
செல்வங்கள்: வீடு, 15 இலட்சம் ரொக்கம்
உயரம்/எடை/ மார்பளவு/இடுப்பளவு/ இருக்கை அளவு: 168 cm 73kg.95cm.99cm. 97cm
நோய்கள் (டிக் செய்க) : இரத்த அழுத்தம்/ நீரிழிவு/இதய நோய்/ டி.பி/பால்நோய்/ எய்ட்ஸ்/ஆஸ்த்துமா/ மூலம்
பற்கள் – மேல்வரிசை கீழ் வரிசை : பிடுங்கப்பட்டது/ஆடுவது
பார்வை : இடது கண்/ வலது கண்
கேள் திறன் : டது காது/ வலது காது
அங்கவீனங்கள் : பிறப்பில்…….., இடையில்………..
உணவு : சைவம்/ அசைவம்
அசைவம் எனில் : ஆடு/ மாடு/ பன்றி/கோழி/ மீன்/முட்டை/பிற
உணவு வேளைகள் : மூன்று/ நான்கு/ ஐந்து/ விழித்திருக்கும்போது/ இரண்டு மணிக்கொரு முறை
மது : விஸ்கி/ பிராந்தி / ரம் / ஜின்/ வோட்கா / ஒயின்/ சரராயம்/ பீர் / கள்/ அரிஷ்டம்/ சல்பேட்டா
புகை : சிகரெட்/பீடி/சுருட்டு/ பைப் / ஹுக்கா
தாம்பூலம் : வெற்றிலை பாக்கு/புகையிலை/ பான்/பான்பராக்
பொடி : (இட்லிப் பொடி அல்ல மூக்குப்பொடி)
பாலுறவு-உறுப்பு : யோனி / குதம் / வாய்/ கை
பாலுறவுத் தேவை : எப்போதும் வேண்டாம்/ ஆறுமாதம்/ மூன்றுமாதம்/ இரண்டுமாதம்/மாதந்தோறும்/மாதமிருமுறை/வாரந்தோறும்/தினமும்/ தினம் இரண்டுக்குக் குறையாமல்
செய்முறை : (Please Specify)
குளியல் : தினம் இருமுறை / தினமும்/வாரந்தோறும்/ மாதந்தோறு /எப்போதாவது/ குளிப்பதே இல்லை
பல்தேய்த்தல் : தினமும் / தோன்றும் போது
சிறுநீர் கழித்தல் : நான்கு மணிக்கூர்/ இரண்டு மணிக்கூர்/ தோன்றும் போதெல்லாம்
மலம் கழித்தல் : காலையும் மாலையும் / காலையில் மட்டும்/ மாலையில் மட்டும் / ஒவ்வொரு உணவுக்குப் பின்னும் / எப்போதாவது / எனிமா மூலம்
உறங்கும் நேரம் :
விழிக்கும் நேரம் :
பருகும் பானம் : காப்பி/தேநீர்/இரண்டும்/ மோர்/ பழரசம் / தண்ணீர்
விருப்பமான மெகா சீரியல் : சித்தி / அன்னை / மாமியார் / சின்னவீடு / சுமங்கலி / தாலி/ வளைகாப்பு / மஞ்சள் குங்குமம் / பாசம் / பல்லுக்குட் பல்/ கண்ணுக்குக் கண்/ களவே இன்பம்/ மூன்று காதலர்கள்/
பிடித்தமான நடிகை (ஆண்களுக்கு மட்டும்) : 1….., 2….
பிடித்தமான நடிகர் (பெண்களுக்கு மட்டும்) : 1….., 2….
மனைவியிடம் காணும் குறைகள்(ஆண்களுக்கு மட்டும்):
- எப்போதும் மெகா சீரியல்
- பாலுறவில் நாட்டமின்மை
3.பேருடல் (மார்பு, இடுப்பு, இருக்கை) - குறட்டை
5.ஏப்பம் - குசு விடுதல்
- வாய் நாற்றம்
- சளசளப்பு
9.சமையல் கட்டே சதம் - புடவை, நகை, பாத்திரப் பைத்தியம்
11.பிற (Specify)
கணவரிடம் காணும் குறைகள் (பெண்களுக்கு மட்டும்):
- எப்போதும் பாலுறவு நாட்டம்
2.பெருந்தீனி - சாம்பார் குடித்தல்
- குறட்டை
5.ஏப்பம் - குசு விடுதல்
- பல் குத்துதல்
- மூக்கு நோண்டுதல்
- காது குடைதல்
10.தொந்தி
11.வாய் நாற்றம்
12.புறுபுறுப்பு / சளசளப்பு - சீரியல் காண மறுத்தல்
14.ஊர் சுற்றுதல்
15.குடி/புகை/பொடி/ தாம்பூலம் - நொறுக்குத் தீனி
- பிற பெண்களின் வாய் பார்த்தல் / சில்மிஷம்/பரத்தை நாட்டம் / சின்ன வீடு
- சில்லறைத் திருட்டு
- மேதாவி மனப்பான்மை
- செய்தித் தாளை மூன்று முறை வாசித்தல்
- இன்ன பிற (Specify)
எதிர்பார்ப்பு புதிய துணைவி (ஆண்களுக்கு) : 1….., 2….
எதிர்பார்ப்பு – புதிய துணைவர் (பெண்களுக்கு) : 1….., 2….
சுதந்திரம் வழங்கப்பட்டால்/தண்டனை இல்லை என்றால்/ரகசியம் பேணப்பட்டால்/கொல்வீர்களா? : மனைவியை / கணவரை
ஐந்து பேரைக் கொல்ல அரசு அனுமதித்தால் யாரைக் கொல்வீர்கள் :
- பெயர் – குற்றம்
2.
3.
4.
5.
நீங்கள் விரும்பும் அடுத்த முதலமைச்சர் : ஜெயலலிதா/ கருணாநிதி/ ராமதாசு/ விஜயகாந்த்/விவேக்/ வடிவேலு/ குஷ்பு/ ஸ்டாலின்/சசிகலா/ப. சிதம்பரம் / ஜி.கே.வாசன் / பழ.நெடுமாறன்/ஆர்.நல்லகண்ணு / எம்.ஜி.ஆர்
நீங்கள் விரும்பும் அடுத்த தலைமை அமைச்சர்: அத்வானி / சோனியா / பிரியங்கா / ராகுல் / சுஷ்மா ஸ்வராஜ் / முரளி மனோகர் ஜோஷி / சரத் பவார் / லல்லு பிரசாத் யாதவ் / முலயம் சிங் யாதவ் / மம்தா பானர்ஜி / உமா பாரதி / கருணாகரன் / மாயாவதி / சுர்ஜித் சிங் பர்னாலா / மகாத்மா காந்தி
நீங்கள் விரும்பும் அடுத்த குடியரசுத் தலைவர் : அமிதாப் பச்சன் / தங்கர் பச்சான் / வாலி / வைரமுத்து /சாலமன் பாப்பையா / வீரப்பன் எனும் பெயருடைய எவரும் /திருக்கணங்குடி செல்லாயி
சில கேள்விகளுக்கு நொடிப் பொழுதும் சில கேள்விகளுக்கு நெடு நேரமும் ஆயிற்று கும்பமுனிக்கு. பெயரை மறுபடி திருப்பிப் பார்த்து தோராயமாக ஒரு கையெழுத்தும் போட்டார்.
கும்பமுனியின் மனதில் கிரிமினல் எண்ணம் ஒன்று மின்னலடித் தது. மேலும் அவர் இலக்கியவாதி அல்லவா! வயது, தோற்றம், முக அமைப்பு எல்லாம் பொருந்திவரும் என்றும் தோன்றியது. புகைப் படத்தை இனிமேல் யார் ஆய்வு செய்து கொண்டிருக்கப் போகிறார் கள்? கும்பமுனிக்கு கருப்புக் கண்ணாடிக்காரரின் மனைவியைச் சந்திக்கும் வாய்ப்பு எங்கே அமையப் போகிறது இனி?
சில கேள்விகளுக்கு நொடிப் பொழுதும் சில கேள்விகளுக்கு நெடு நேரமும் ஆயிற்று கும்பமுனிக்கு. பெயரை மறுபடி திருப்பிப் பார்த்து தோராயமாக ஒரு கையெழுத்தும் போட்டார்.
கும்பமுனியின் மனதில் கிரிமினல் எண்ணம் ஒன்று மின்னலடித் தது. மேலும் அவர் இலக்கியவாதி அல்லவா! வயது, தோற்றம், முக அமைப்பு எல்லாம் பொருந்திவரும் என்றும் தோன்றியது. புகைப் படத்தை இனிமேல் யார் ஆய்வு செய்து கொண்டிருக்கப் போகிறார் கள்? கும்பமுனிக்கு கருப்புக் கண்ணாடிக்காரரின் மனைவியைச் சந்திக்கும் வாய்ப்பு எங்கே அமையப் போகிறது இனி?
ஆலோசனை அலுவலர், படிவங்களை வாங்கிப் பார்த்துவிட்டு, தன் முன்னால் இருந்த கணினியின் பொத்தான்களைத் தட்டினார். கோன் பனேங்கா குரோர்பதி அமிதாப் பச்சன் பாணியில் சற்று நேரம் கூர்ந்து பார்த்தார். கும்ப முனியின் முகத்தை ஆராய்ச்சி செய்தார். காத்திருந்தார். கும்பமுனியின் கைகளைப் பற்றிக் குலுக்கினார்.
“வாழ்த்துக்கள் மிஸ்டர். திருமலைசாமி. முதல் கட்டமாக உங்கள் மணமுறிவு பதிவு செய்யப்பட்டுவிடடது. இனிமேல் நீங்கள்an young, eligible, rich, bachelor, உங்களுக்கு 748.79 புள்ளிகள் வழங்கப்பட்டுள் ளன. 740க்கு ம் 750க்கும் இடையிலான புள்ளித் தகுதிப் பிரிவில் வருகிறீர்கள்.இனி இந்த டோக்கனை மறந்து விடுங்கள். உங்கள் புதிய பதிவு எண் K.4013 இதோ வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணைச் சொல்லி 94-வது கவுன்டரில் மண முறிவுச் சான்றிதழும், 106-வது கவுன்டரில் நாளை நேர்முகத்துக்கான புதிய டோக்கனையும் பெற்றுக் கொள்ளுங்கள். புதிய இணையாகச் சேர வருபவரின் தோற்றம், வயது, செல்வநிலை, ஆரோக்கியம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். எல்லாம் ஒத்துப் போனால் நாளை முற்பகலில் நீங்கள் புது மணமகன். Wish you a very happy newly married life. உங்கள் புதிய பதிவு எண்ணைச் சொல்லி 139-வது கவுன்டரில் மணமுறிவுக்கான எங்கள் அன்பளிப் பான பிளாஸ்டிக் பக்கட் பெற்றுக் கொள்ளுங்கள்”
பிளாஸ்டிக் பக்கெட்டும் கையுமாகச் சற்று நேரம் கும்பமுனி அலை பாய்ந்தார். மனது படை குதிரையாகப் பாய்ந்தது. துரோகம் என்றால் என்ன, பச்சைத் துரோகம் என்றால் என்ன, நம்பிக்கைத்
துரோகம் என்றால் என்ன? எல்லாம் சொற்கள், மறுபடியும் சொற்கள்… கோபுரம் உயரமா, கோபுரத்தின் பக்கம் நிற்கும் மரம் உயரமா? நின்று பார்க்கும் இடத்தின் வாக்கு… வாக்கு என்பது உண்மையா மெய்ம்மையா? கும்பமுனிக்கு வீட்டுக்குப் போகலாம் என்று தோன்றியது.
– உயிர்மை – மார்ச் 2006
நன்றி: https://nanjilnadan.com
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |