மணக்காத மனப்பூக்கள்!




பல வருடங்களுக்குப்பின் சுதனுடன் அலைபேசியில் பேசியதும் தனது ஆழ்மனம் விழித்துக்கொண்டதில், அதிலிருந்து வெளிப்பட்ட பழைய நினைவுகளின் பதிவுகள் இனம் புரியாத உற்சாகத்தை தனக்குள் ஏற்படுத்தியதை உணர்ந்த அருவி, பரவசத்துடன் பயமும் கொண்டாள்.
சகோதரியின் திருமணத்துக்கு பத்திரிக்கை கொடுக்க வருவதாக கூறியிருந்தான் சுதன். ‘வருவது மதிய நேரம் என்பதால் மதிய உணவை சிறப்பாகத்தயார் செய்து பரிமாறி அவன் மனதை மகிழ்வித்து விட வேண்டும். அதனால் நம் மனதும் சற்று நிம்மதியடையும்’ எனும் யோசனை தோன்ற, பரபரப்பாக சமையல் வேலைகளைச்செய்யத்தொடங்கினாள்.
கணவன் ரகு அலுவலகத்திலிருந்து அலைபேசியில் தொடர்ந்து அழைத்தும், அவனுடன் பேசினால் சமையல் வேலை தடைபடுமென கருதி போனை எடுக்கவில்லை. தனது மனதுக்கு மிகவும் நெருக்கமானவனை மகிழ்விக்கும் முயற்சிக்கு வேறு வழிகளில் தடை வந்து விடக்கூடாது என்பதால் சுதன் வீட்டிற்கு வந்து போகும் வரை யாருடைய அழைப்பையும் எடுக்காமலிருக்க மனதில் உறுதியான முடிவை எடுத்திருந்தாள்.
நெருங்கிய உறவாக இருந்தும் தன் திருமணத்துக்கு பின் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்து சென்றவன் பத்து வருடங்களுக்கு பின் தற்போது தான் வரவிருக்கிறான். முகநூலில் இருக்கும் புகைப்படத்தில் அவனது தற்போதைய முக மாற்றத்தைப்பார்த்திருந்தாலும் நேரில் பார்க்கும் போது தான் சரியான உருவமைப்பு மனதில் பதியும். போனிலாவது பேச வேண்டுமென்கிற எண்ணம் கூட இதுவரை வராதது ஆச்சர்யமே. தற்போது அப்போது மாதிரியே ஒல்லிக்குச்சி போல் இருப்பானா? அல்லது வயது மூப்பினால் உடல் பெருத்திருக்குமா? முடி நரைத்திருக்குமா?’என தனக்குள் கேள்வி பதில் நிழ்ச்சியையே நடத்தி முடித்திருந்தாள். உறவுகளின் விசேச நிகழ்வுகளில் கூட பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிட்டவில்லை.

‘பேருந்தில் வந்திருந்தால் தனது ஸ்கூட்டியை எடுத்துச்சென்று பேருந்து நிலையத்திலிருந்து அழைத்து வந்து, மீண்டும் கொண்டு போய் விட்டு விடலாம். அவனே பைக்கில் வந்து விட்டால் பிரச்சினையே இருக்காது. எதில் வந்துள்ளீர்கள் என கேட்கவா முடியும்? ‘ சமைத்துக்கொண்டே சமையலறை ஜன்னல் மூலமாக வாசலையே கவனிப்பதும், அவனது எண்ணிலிருந்து அழைப்பு ஏதும் வருகிறதா? என செல்போனை அடுப்புக்கு பக்கத்திலேயே வைத்துப்பார்ப்பதும் என சுதனைப்பற்றிய சிந்தனையைத்தவிர வேறு சிந்தனைகளையே அனுமதிக்க மறுத்திருந்தது அவளது மனம்.
சமையலை முடித்ததும் உடலில் வடிந்த வேர்வையை போக்க குளியறைக்குள் சென்று குளித்திருந்தாள். பீரோவைத்திறந்து இருக்கும் சேலைகளைக்களைத்தவள் மஞ்சள் நிறத்தில் ரோஜா பூக்களின் ஓவியங்களால் சிறந்த வேலைப்பாடு கொண்ட கைத்தறி சேலையை கட்டிக்கொண்டு, காலையில் கூட்டி சுத்தப்படுத்தியிருந்தாலும் தற்போது மீண்டும் ஒரு முறை வீட்டைச்சுத்தப்படுத்தியதோடு வாசனைத்திரவியங்களை வீடு முழுவதும் மணக்கும் படி பார்த்துக்கொண்டாள்.
‘திருமணத்துக்கு பத்திரிக்கை வைக்க மற்ற உறவுகளைப்போல வரப்போகிறவன் தானே? அப்படிப்பார்த்தால் வீட்டிற்கு வரும் ஒவ்வொரு உறவினரையையும் இது போல் சிறப்பாக சமையல் செய்து, வரவேற்று உபசரித்துள்ளோமா?’ என தன்னைத்தானே கேட்ட போது இல்லையெனும் பதிலே வந்தது. அது மட்டுமில்லை திருமணமாகி பத்து வருடங்களில் ஒரு நாள் கூட இது போன்ற அசத்தலான விருந்தை தாலி கட்டி, தன்னுடன் குடும்பம் நடத்தி, இரண்டு குழந்தைகளைக்கொடுத்த ஆசைக்கணவனுக்காகக்கூட சமைக்கவில்லை . அப்படியிருக்கும் நிலையில் ‘சுதனுக்கு மட்டும் இப்படிப்பட்ட மேம்பட்ட உபசரிப்பு ஏன்?’ என தன்னைத்தானே கேட்டுக்கொண்ட போது அதற்கான காரணங்கள் ஆழ்மனப்பதிவிலிருந்து வெளிப்பட்டது.
மன வாழ்வு, மண வாழ்வு என இரண்டு வாழ்வுகளை வாழும் நிலையில் மனிதர்கள் இருக்கின்றனர். மன வாழ்வில் தோன்றும் எண்ணங்களை எண்ணிய படியே வெளிப்படுத்த சமுதாயக்கட்டுப்பாடுகள் தடுப்பதால், அணை போட்டு ஆசை நீரைத்தேக்கி வைப்பதால், அதன் கொள்ளளவைத்தாண்டும் போது அணை உடைந்து மண வாழ்வில் வளர்க்கப்பட்ட வாழ்க்கைத்தோட்டத்தையே அழித்து விடக்கூடும் எனும் பயமும் அவளுக்குள் தோன்றிய அறிவின் வெளிப்பாடு எச்சரித்தது.
சுதன் ஒன்று விட்ட மாமன் மகன், தன்னை மணந்து கொள்ளும் முறை உள்ளவன், உடன் படித்தவன், தன் மனம் கவர்ந்தவன் என பல தகுதிகள் இருந்தும், தந்தை காலமாகி விட தனக்குப்பின் பிறந்த இரண்டு பெண்களை படிக்க வைத்து, திருமணம் செய்து, சீர் சிறப்புகள் செய்ய வேண்டிய பொறுப்பு ஏற்பட விளையாட்டு, காதல் என்பதெல்லாம் அவனுக்கு எட்டாக்கனியாகிவிட்டது. வயதால் வெளிப்படும் உணர்வுகளைக்கூட கடமைக்காக கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டான்.
காதலித்தால் அப்பெண்ணின் விருப்பத்துக்கு கட்டுப்படும் போது கடமைகள் நிறைவேறாது என்பதை உணர்ந்தவன், சம வயதுள்ள பெண்களுடன் நேசமாகப்பழகுவதைத்தவித்தே வந்த போதும் தன்னுடன் படிக்கும் அருவியுடன் மட்டும் வெளிப்படையாக, யதார்த்தமாக, நட்பாக ஓர் ஆண் நண்பனிடம் கூறுவது போல எதையும் கூறி தன் மன பாரத்தை இறக்கி வைத்து விடுவான். கெமிஸ்ட்ரி இரண்டு பேருக்கும் நன்றாக ஒத்துப்போயிருந்தது.
அருவிக்கும் சுதனின் ஒழுக்கமும், நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் மிகவும் கவர்ந்திருந்ததால் வகுப்பறையில் தினமும் அவனுடன் பேசும் நிலையை செயற்கையாகவே உருவாக்கிக்கொள்வாள். திடீரென கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு தந்தையின் தொழிலைப்பார்க்கும் முடிவை அவன் சொன்னபோது கண் கலங்கினாள். வேறு வழியேதுமில்லையென உண்மை நிலையை உரைத்த போது சாந்தமானாள்.
தற்போது அடிக்கடி சந்திக்க முடியாத நிலையில், நாளடைவில் அவனுடனான நட்பு காதலாக தன் மனதில் உருவாகிய சமயம் வீட்டில் நல்ல வரன் வந்திருப்பதாக அம்மா சொன்னபோது சுதன் மீது தனக்குள் ஏற்பட்டிருக்கும் காதலைச்சொன்னாள்.
“அவனுக்கு பத்து வருசத்துக்கு அப்புறந்தான் கல்யாணம் பண்ணோனும்னு அவனோட அம்மா நேத்தைக்குத்தான் ஒரு காது குத்து சீர்ல பார்த்தப்ப சொன்னாள். பொண்ணுக ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி, சீர் செறப்பு பண்ணாம பையனுக்கு முடிச்சா அவன் பொண்டாட்டி பேச்சக்கேட்டுட்டு போயிட்டா நாங்க அனாதையா போகோணும்னு சொன்னாள்” என தாய் சிவகாமி சொல்லக்கேட்டு அதிர்ச்சியடைந்தாள்.
சுதனைச்சந்தித்த போது வரன் பற்றிய விபரம் சொன்னவள், அவனது மனம் தான் சொன்னதைக்கேட்டு வருந்துவது முகத்தில் தெரிந்தாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ” நல்ல வரன் அமைஞ்சா கல்யாணம் பண்ணிக்கோ. மனம் சொல்ற விசயங்கள் நூறு சதவீதம் நடைமுறைப்படுத்த முடியாதவையாத்தான் இருக்கும். சிலருக்கு மனசுக்கு புடிச்சது நடக்கும். பலருக்கு நடக்காது. நடக்கலேன்னா நடக்கிறத ஏத்துக்கனம்” எனக்கூறி மௌனமானான்.
இப்படியொரு மன நிலையில் உள்ளவனிடம் நாம் அவன் மீது வைத்திருக்கும் காதலைச்சொன்னாலும் இதே முடிவைத்தான் சொல்லப்போகிறான் என்றாலும் வருத்தத்தின் சதவீதம் கூடிவிடும் என்பதால் காதலைச்சொல்லாமல் இருந்து விட்டாள். அவனுக்கும் தன் மீது காதல் இருக்கும். விளைவுகளைச்சிந்தித்து சொல்லாமல் இருக்கிறான். காதல், திருமணத்தில் தான் முடிய வேண்டும் எனும் எழுதப்படாத சட்டம் இருப்பதால் பலரும் காதலை வெளிப்படுத்தாமலேயே தங்களுக்குள் புதைத்து விடுகின்றனர். இதற்கு தானும் விதிவிலக்கல்ல’ என புரிந்தவள் எப்போதும் போல நட்பாக இயல்பாக பேசி விட்டு விடை பெற்றுச்சென்றாள்.
பல வகையில் ஆராய்ந்ததில் வந்த வரன் பிடித்துப்போக திருமணம் முடிவானது. தனது திருமணத்துக்கு வந்த போது சுதன் சாதாரணமாகவே எவ்வித சலனமுமின்றி நடந்து கொண்டதை வைத்து அவன் சாணக்யன் என்பதை புரிந்து கொண்டாள். திருமணமாகி பத்து வருட தாம்பத்ய வாழ்வில் சிறு சங்கடமும் ஏற்படவில்லை. சுதனது நினைவும் இடையூறு செய்யவில்லை. கணவன் என்றால் ரகுவைப்போல இருக்க வேண்டுமென பலரும் சொல்லும் நிலையில் சிறந்த மனிதராக, நல்ல கணவராக, குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக தனது கடமைகளை சிறப்பாக செய்து மாறாத அன்புடன் இருந்ததால் வாழ்வின் காலம் வசந்தமாகவே கழிந்தது.
காலிங் பெல் அடிக்க ஆவலாக, ஆசையாக, அதீத எதிர்பார்ப்புடன், ஒரு வித படபடப்புடன் கதவைத்திறந்த போது கணவன் ரகு நின்றிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தவளாய், ” வா…வாங்க… இன்னைக்கு ஆபீஸ் விசயமா வெளியூர் போகனம்னு சொல்லீட்டு போனீங்களே போகலியா? ” என கேட்டவாறு நெற்றியில் வடிந்த முத்து, முத்தான வியர்வையை சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டு படபடப்பை மறைக்க தனது அறைக்குள் சென்றவளை பின் தொடர்ந்து சென்று கட்டியணைத்தவன், “என்ன இது? புதுப்பொண்ணு மாதிரி அலங்காரம்? ஊடே மணக்கிற மாதிரி சமையல் வாசனை? செண்ட் வாசனை? ஒரே பரபரப்பு? படபடப்பு? நான் இந்த உலகத்துல தான் இருக்கிறேனா? இல்லை சொர்க்கலோகத்துல ரம்பையோட இருக்கிறேனான்னு எனக்கே இது உன் தேகமான்னு சந்தேகமா இருக்கு? அதே சமயம் சந்தோசமாவும் இருக்கு….” என அறைக்கதவைத்தாழிட்டு மனைவியை அணைத்துக்கொண்டான்.
அருவியால் தற்போதைய சூழ்நிலையில் கணவனுடன் முழு மனதுடன் மகிழ்ச்சியைப்பகிர்ந்து கொள்ளும் நிலை இல்லாததால் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடித்துக்கொண்டிருந்தாள். அவளது சிரிப்பில் எப்போதும் போல் உதடுகளில் நீர்த்துளி வெளிப்படாமல் வறட்சி ஏற்பட்டதை அறிந்ததும் புரிந்து கொண்டு அவளுக்கு தன் செயலில் விருப்பமில்லையென அறிந்து சற்று விலகிச்சென்றான்.
மோகத்தின் நிலையில் இதழ்களின் வெளிப்படும் பனித்துளி போன்ற ஈரப்பதம் தாகத்தின் நிலையில் வெளிப்படுவதில்லை. எதிர்பார்ப்புக்கு மாறான சம்பவங்கள் நிகழும் போது ஏற்படும் நீர் வற்றிய வறட்சியின் வெளிப்பாட்டை முதலாக அவளது இதழ்களில் கண்டான்.
” எப்பவும் ஒரே ரிங்குல போன எடுக்கிறவ இன்னைக்கு பத்துத்தடவ கூப்பிட்டும் போன எடுக்காததால வெளியூர் போறத விட்டிட்டு என்னாச்சோ, ஏதாச்சோன்னு பயந்துட்டு ஓடி வந்துட்டேன். இவ்வளவு நேரம் யோசிச்சும் உன்னோட இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்னு இப்பத்தான் புரிஞ்சிட்டேன்” என கணவன் பேசியதும் அதிர்ந்தவள், ‘தான் சுதனின் மனதை மகிழ்விக்கத்தான் இயல்புக்கு மாறாக இப்படியொரு நிலையில் இருப்பதை தெரிந்து கொண்டாரோ…?’ விளைவுகளை நினைத்து அச்சப்பட்டாள்.
விலகிச்சென்றவன் திரும்பவும் தன்னருகில் நெருங்கி வந்து கட்டியணைத்து முத்தமிட்டவாறு “இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்” எனக்கூறிய போது தான் அவளுக்கும் தங்களது திருமண நாள் இன்று என்று ஞாபகத்துக்கே வந்தது.
“நீ போனை எடுக்காதது இந்த கோபத்தால தான்னு என்னோட மர மண்டைக்கு இப்பத்தான் புரிஞ்சது. ஆபீஸ், வேலை, பதவி, பணம்னு ஓடி, ஓடி கல்யாண நாளையே மறந்திருக்கிறேன் பாரு. இந்த நாளுக்காக புது சேலை எடுக்காட்டியும் நான் உன்னை பொண்ணு பார்க்க வந்த போது கட்டியிருந்த சேலையை செண்டிமெண்ட்டா கட்டி, என்ற மேல உனக்கிருக்கிற அளவு கடந்த அன்பை வெளிப்படுத்த முயற்சி பண்ணியிருக்கிறே. சூப்பரா சமைச்சும் வெச்சிருக்கிறே. இத்தனை விதமான ஸ்வீட்ஸ் இது வரைக்கும் நீ பண்ணினதேயில்லை. உன்னை என் மனைவியா அடைஞ்சதுக்கு பல ஜென்மம் நான் புண்ணியம் பண்ணியிருக்கனம்” என பேசிய கணவனின் காலில் ‘ என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் பேசுவது எனக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக குற்ற உணர்வை அதிகரித்து, உங்களுடைய ஒவ்வொரு பாராட்டும் என்னைத் தண்டிக்கிறது’ என மனதில் நினைத்தபடி கண்ணீர் சிந்தி காலில் விழுந்தவளை ஆசீர்வதித்து ஆதரவாக கணவன் அணைத்த தருணம் காலிங் பெல் அடித்த போது கதவைத்திறக்க அவள் மனம் மறுத்தது.
“வேற யார் வரப்போறாங்க? யாராவது பத்திரிக்கை வைக்க வந்திருப்பாங்க. நாம இன்னைக்கு சந்தோசமா இருக்கிறது யாராலையும் கெட்டிடக்கூடாது. நாம வெளியூர் போயிட்டதா நெனைச்சிட்டு வெளில வெச்சிட்டு போகட்டும் விடுங்க” என கூறிய மனைவியின் விருப்பத்தை ஆமோதித்தான் ரகு.
தனது இந்த செயல் தனது மனதின் தவறுக்கு தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட தண்டனை என கருதினாள் அருவி. மனதில் அடித்த பெரும் புயல் தற்போது ஓய்ந்திருந்தது.
“உன்னோட சொந்தக்காரர் சுதன் என்னோட ஆபீசுக்கு வந்திருந்தார்” என சாப்பிடும் போது கணவன் பேச்சை ஆரம்பித்ததும் தூக்கி வாரிப்போட்டது.
“சுதன்…..” தெரியாதது போல இழுத்தாள். அவன் தனக்கு போன் பண்ணியதை பயத்தாள் மறைத்தாள்.
“பத்து வருசத்துல அத்தை பையனையே மறந்திட்டியா? வீட்டுக்கு வந்து அவனோட தங்கச்சி கல்யாண பத்திரிக்கை வைக்கனம்னு வந்திருக்கான். வந்த கார் பழுதாயிடுச்சுன்னு வொர்க்சாப்ல விட்டிட்டு, ஆபீசுக்கு வந்து என்னோட காரை எடுத்திட்டு இன்னும் ரெண்டு எடத்துக்கு பத்திரிக்கை கொடுக்கனம்னு போயிருக்கான். அவனோட காரை சரி பண்ணி நான் எடுத்திட்டு வீட்டுக்கு வந்திட்டேன். ஒரு வேளை காலிங் பெல் அடிச்சது அவனாத்தான் இருக்கும். பத்திரிக்கைன்னு நீ சொன்னதும் தான் ஞாபகம் வந்தது. உன்னோட சொக்க வைக்கிற அலங்காரத்துல மொத்தமா அவனையே மறந்துட்டேன்” என கூறியதால் அருவி கதவைத்திறந்த போது போர்டிகோவில் போட்டிருந்த சேரில் அமர்ந்து காத்திருந்த சுதன் எழுந்து வீட்டினுள் வந்தான்.
அருவியிடம் காலையிலிருந்த பதட்டமோ,பரபரப்போ தற்போது இல்லை. “வா…” என கூறியவள் இருக்கையில் அமரச்சொல்லி விட்டு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். புன்னகைத்து வாங்கிக்குடித்தவன் பத்திரிக்கையை நீட்டிய போது பெற்றுக்கொண்டாள். அவனது முகத்தை ஓரப்பார்வையால் உற்று நோக்கினாள். நேரெடுத்து தானே எப்போதும் தலை சீவுவான். இப்ப வயசானவன் மாதிரி சம்மர் கட்டிங் வெட்டியிருக்கான். இவன் முகத்துக்கு இந்த கட்டிங் பொருத்தமா இல்லை. முடியெல்லாம் பாதி நரைச்சிருக்கு. டை போடலாம் தானே. சட்டையைக்கூட லூசாத்தான் போட்டிருக்கான் லூசுப்பையன். தாடியக்கூட சேவ் பண்ண நேரமா இல்லை? இப்படியிருந்தான்னா எந்தப்பொண்ணும் இவனைக்கட்டிக்க மாட்டாளே? போன பின்னாடி போன் பண்ணியாவது சொல்லனம். வேண்டாம். நமக்கெதுக்கு வீண் வம்பு. இல்லாத வாழ்க்கையை நெனைச்சே இந்த பொல்லாத மனசு இருக்கிற வாழ்க்கையைக்கெடுத்திடும்” என சிந்தனைக்கு தடை போட்டவள், கணவன் ரகுவுடன் சுதன் பேச்சுக்கொடுத்ததும் தனது அறைக்குச்சென்று உட்பக்கம் கதவருகில் நின்றவாறு அவனது பேச்சை பல வருடங்களுக்குப்பின் கேட்டுக்கொண்டிருந்தாள்.
சுதன் செல்வதாகச்சொல்லி எழுந்த போது வெளியே வந்து ” சாப்பிட்டிட்டு போகலாமே” என்றவளை ஏறிட்டு பார்த்தவன், இல்லைங்க. வரும்போது தான் சாப்பிட்டேன். பசியில்லை” என முதன் முதலாக ‘ங்கோ’ போட்டு பேசியது அந்நியமாக, அதேசமயம் பாதுகாப்பாகப்பட்டதும் “சரிங்க” என முதல் முறையாக இவளும் ‘ங்கோ’ போட்டுக்கூறி மேலும் அவனுடனான மன நெருக்கத்தை விலக்கி அனுப்பி வைத்து விட்டு தனது அறைக்குள் சென்றவள் தன்னையும் மீறி வெளிப்பட்ட , கட்டுப்படுத்த முடியாத, புரிய முடியாத கவலையால் கதறி அழுதாள்.
‘மண வாழ்வில் பிறரது விருப்பங்களுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். மன வாழ்வில் நம் விருப்பங்களுக்கு பிறர் கட்டுப்படுவர். முன்னதில் சிறு வெளிச்சமும் சுட்டெரிக்கும். பின்னதில் சூரியனுக்குள்ளே சென்றாலும் குளிரும். மன வாழ்வின் ஆசைகளை நிஜத்தில் செயல் படுத்த இயலாமல் போவதாலேயே மனத்தோட்டத்தில் பூக்கும் பூக்கள் மணக்காமல் காய்ந்து வீணே உதிர்ந்து போய் விடுகின்றன’ என நினைத்து தன் மனதை சாந்தப்படுத்தினாள்.
வாசல் வரை சென்று சுதனை அனுப்பி வைத்த ரகு, அவசர அழைப்பு அலுவலகத்திலிருந்து வர மனைவி அருவியிடம் சொல்லாமலேயே புறப்பட்டு சென்றவன், அலை பேசி மூலமாக தான் அலுவலகத்திலிருப்பதை சொன்ன பின்பே வீட்டின் கதவைத்தாழிட்டதோடு தனது மனக்கதவையும் தாழிட்டாள்.