மடவார்ப் பொறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2024
பார்வையிட்டோர்: 1,151 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்கும் இந்த உலகத்துக்கும் ஐம்பத்துமூன்று வருஷத் தொடர்பு உண்டு. இரண்டு உலக மகாயுத்தங்களும் எனக்குப் பின் தோன்றிப் பிரபலமடைந்தவை. 

“வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம்-முடிதாழ்த்துவோம் 
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ?-அவ மானமோ?” 

என்று சுதந்திர முழக்கமிட்ட உண்மைக் காங்கிரசையும், உண்மைத் தலைவர்களையும், சென்னையில் காந்திஜி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கப் பிரசாரத்தையும், ஒத்துழையா மையை விடுதலைக்குரிய பெரும் போராக நடத்திய ராஜாஜி யின் சூறாவளி இயக்கத்தையும் நான் நேரடியாகக் கண்டவன். 

காங்கிரஸின் உயிர் மூச்சான விடுதலை கிடைத்துவிட்ட பிறகு அதற்குப் புத்துயிர் ஊட்டத் தலைவர்கள் நிலவரம்பு, சோஷலிஸம்’ என்றெல்லாம் தடுமாறிக் கொண்டிருப்பதையும் கண்டு இன்னும் குருடாகாமல் இருப்பவன். ஒரு கட்சியை எப் பொழுதும் சக்தி வாய்ந்ததாக வைத்துக்கொண்டிருக்கப் பெரும் பாலானவர்களின் ஆசைகளை, கனவுகளை அதற்கு ஆதாரமாகக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். பெரும் தலைவர்கள்கூட இந்த உணவுக்கொள்முதலில் மட்டரக வியாபாரிகளாக நடந்து கொண்டு வருவதையும் பார்த்தபடிதான் இருக்கிறேன். 

‘எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா!” 

உணர்ச்சிக் கவிஞன் கண்ட உலகையும், அதிலே நிறைந்த கோடானு கோடி இன்பங்களையும் எனக்குக் காட்டாமல் விட்டது 

இந்தக் காங்கிரஸ்தான். இதை எதிர்க்கட்சிக்காரன் குறைகூறும் விதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரே குடும்பத்தில் புதுத் தலைமுறை ஒன்று கிளைத்துப் படர்ந்துவிட்ட பிறகு, இதன் நல்வாழ்வுக்காகத் தியாகம் செய்த முன் தலைமுறையின் முணு முணுப்பு என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். 

நான் ஐந்தாவது பாரம் படித்துக் கொண்டிருக்கும்பொழுதே காங்கிரஸ் என்னை வலைப்போட்டுப் பிடித்துவிட்டது. சத்திய மூர்த்தியின் கனல் உரையும் ராஜாஜியின் தீர்க்க தரிசன வாசக மும், சீனிவாச சாஸ்திரியாரின் ‘மாணவர்கள் கல்விக்கூடங் களைத் துறப்பார்களா?’ என்ற கேள்வியும், சர்தார் படேல், ஜம்னாலால் பஜாஜ், மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் ஆகி யோரின் சுதந்திர முழக்கமும் என்னை ஒரு விடுதலை வீரனாக்கி விட்டன. உங்களுக்குச் சந்தேகம் எதற்கு சாஸ்திரியாரே? இதோ கல்விக் கூடத்தைத் துறந்து விட்டேன்!’ என்று நான் கூறியபோது, தலைவர்களே அயர்ந்து விட்டார்கள். அதற்குக் காரணம் உண்டு. அரசியல் சூழ்நிலை உருவாகிய ஆரம்பக் காலம் அது. சுதந்திரக் கனல் உள்ளத்தில் எழுந்தாலும் அதை வெளி யிட்டு வெள்ளைக்காரனை எதிர்க்கப் பெரும்பாலான மக்கள் தயங் கினர். பதினைந்து வயதுப் பையன் அந்த நிலையில் நாட்டு விடுதலைப் போரில் குதிப்பதென்பது சாமான்யமா? 


ஒத்துழையாமை இயக்கத்துக்குத் தமிழ் நாட்டில் தொண்டர் களைச் சேர்ப்பதற்கு நான் ஒரு விளம்பரப் பலகையாக இருந் தேன். பால் வடியும் என் முகத்தைக் காட்டி, ‘பாலகன் குதித்து விட்டான் பாரத விடுதலைப்போரில், பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா இன்னும்?’ என்று தலைவர்கள் விடுத்த வேண்டு கோளுக்குப் பலன் இருந்தது. சுதந்திர வேள்வியில் வீறுகொண்டு குதித்தவர் ஆயிரமாயிரவர். 

இத்தனை சின்ன வயதில் பூமாலையும் புகழுரையும் கிடைப் பது என்றால் எத்தனை பெரிய விஷயம்? என் உள்ளமெல்லாம் ஒரே மகிழ்ச்சி. 

என் அப்பா ஒரு தாசில்தார். வெள்ளை அரசாங்கத்தின் பரம பக்தர். அவர்தான் தலையில் அடித்துக்கொண்டு என்னையும் தடிகொண்டு தாக்கினார். மகனுடைய தேச பக்தியால் தந்தை யின் ராஜ விசுவாசம் சந்தேகிக்கப்படுமோ என்ற பயம். அதனால் என்னை அறைக்குள் அடைத்து வைத்தார். சிறு கதவுதானா கொழுந்துவிட்டு எரிந்த என் சுதந்திரக் கனலை அணைத்து மறைத்து விட முடியும்? குடும்பத்தை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து, எங் கள் இயக்க வானத்திற்குப் பறந்து போய்விட்டேன். 

அப்பொழுதெல்லாம் காங்கிரஸை யாரும் பொழுதுபோக்கு மண்டபமாக நினைத்தது கிடையாது. ‘பெர்மிட்’ லாபங்களுக் காகக் கதர்க்குல்லாயை மாட்டிக்கொண்ட கள்ளச் சந்தைக்காரர் கள் இல்லை. சர்வபரித் தியாகம் செய்யத் துணிந்த சத்திய சீலர்களே அங்கு இருந்தனர். அவர்கள் சிந்தை நாட்டு விடுதலை’ என்ற ஒன்றைத் தவிர வேறேதும் கொள்ளவில்லை. லௌகீக வாழ்க்கையின் சபலம் சுதந்திரக் கனலில் எரிந்து ஸ்புடமாகிய மனிதர்கள்தான் காங்கிரஸ் தொண்டர்கள். நானும் அவர்களிலே ஒருவன். 

கொடி பிடித்தோம். கோஷம் எழுப்பினோம். 

‘தொண்டு செய்யும் அடிமை-உனக்குச் சுதந்திர நினைவோடா? பண்டு கண்டதுண்டோ? அதற்குப் பாத்திரமாவாயோ?’ 

என்று வெள்ளைக்காரன் கேட்டான். கேட்ட தோடா நின்றான்? தடியால் அடித்தான்; தாங்கிக்கொண்டோம். ஆனால் பின் வாங்கினோமில்லை.உப்பு எடுத்தோம்! சிறைபட்டோம். வெள்ளைச் சிங்கத்ததைத் துரத்த அடிமை நாய்களை வில்லும் வேலும் வாளுமாகத் தயாரித்தோம். அத்தனையும் அஹிம்சை உலையில் வார்க்கப்பட்டவை. 

இதைத் தவிர மனித வாழ்க்கையின் அனுபவ ஏடுகள் எதை யும் நாங்கள் புரட்டிப் பார்த்ததில்லை. ஆனால் வாலிபம் என்னிடம் ஏடு புரட்டிப் பார்த்தது. பருவ உணர்ச்சிகளுக்குத் தீனி போடாத கல் நெஞ்சனாக நான் இருந்தாலும் எங்கள் தலைவர் சத்தியமூர்த்திக்கு என்னைப் பற்றிய பயம் வந்து விட்டது: இந்தப் பயலை ஒரு குட்டி மயக்கிக் கூட்டிப் போய்விட்டால் நாம் நல்லதொரு தொண்டனை இழந்து விடுவோமே!” என்றார். 

“என் பாரதத் தாயைச் சிறை வைத்துவிட்டு, நான் குஷா லாகக் குடும்பம் அமைத்துக்கொள்வதா? அவள் விடுதலை அடை யும் வரை நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன்!” என்று வீராவேசத்தோடு கூறினேன். 

“உன் ஆயுளில் விடுதலை சாத்தியமில்லாவிட்டால்?” 

“எனக்குத் திருமணமும் சாத்தியமில்லை.” 

“சத்திய மூர்த்தியடா நான்! பொய்யாக்கினாயோ பழி வாங்கிவிடுவேன்!” என்று சிரித்துக்கொண்டே, என் முதுகில் தட்டிக்கொடுத்தார். 


1947 – இந்தியத் தாய் அடிமை விலங்கு அறுபட்டு, சர்வாலங்கார பூஷணியாய்த் தன் நாற்பது கோடி மக்களுக்குக் காட்சி அளித்தாள். இந்தப் புனிதக் கோலத்தைக் காண்பதற் காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த எங்கள் மோதிலால் இல்லை; சித்தரஞ்சன தாஸ் இல்லை; ஜம்னாலால் பஜாஜ் இல்லை; சத்தியமூர்த்தியும், சாஸ்திரியாரும் இல்லை. அடிநாளில் உழைத்த பல்லாயிரக் கணக்கானவர்களில் சில ஆயிரமவரே இருந்தோம். காந்தி அடிகளார், சுதந்திரம் வாங்குவதற்காக உதயமான காங்கிரஸின் லட்சியம் பூர்த்தி அடைந்து விட்டது. இனிக் கட்சியைக் கலைத்து விடலாம்’ என்று கூறிய பிறகும் கட்சியை யாரும் கலைக்கவில்லை. ஆனால் என்னைப்போன்ற உண்மைக் காங்கிரஸ்காரர்களில் பலர் கட்சியை விட்டு விலகினர். நான் எனக்கு முற்றிலும் புதியதான மனித வாழ்க்கைக்குத் திரும்பி னேன். 

வயதோ நாற்பத்து இரண்டு: வாழ்க்கையில் செங்கனிப் பக்குவம் ஏறவேண்டிய வயதில், வாழ்க்கையின் அரிச்சுவடியைக் கற்கும் பிள்ளைப் பிராயத்தவனாய் மாற முடியுமா? காரியத்திற் காகச் சிரிப்பதும், போலித்தனமாகப் பழகுவதும், உணர்ச்சி மயமான வாழ்க்கையில் துறவியைப்போலப் போடும் வேஷமும் எனக்கு வெறுப்பை அளித்தன. 

ஒரு சோற்றுக் குழியை மூட மனிதன் செய்த முயற்சிகளில் எத்தனை பெரிய தோல்விகள்! இவன் கண்டுபிடித்த இயந்திரம் இவனைவிடச் சக்தி வாய்ந்தது. இவன் தரையில் நின்றால் இவன் கண்டுபிடித்த விமானம் உயரே பறக்கிறது! இவன் ஒரு சாதா ரண மனிதனாக இருந்துகொண்டு, தன் முயற்சிகளுக்கு ராட்சச பலத்தைக் கொடுக்கலாமா? காரியங்கள் விஸ்வரூபம் பெற்று விட்டால் காரணங்கள் கடுகாகத் தேய்ந்து அழிந்து போகின் றன; காரணமான மனிதனும் காரியமான அவன் முயற்சியும் அம்மாதிரியானவைதாம். மனிதன் சிறுத்துக்கொண்டு வருவதன் அறிகுறிகள் இவை: சாதனைக்குச் சக்தியைக் கொடுத்துவிட்டு, மனித தத்துவம் மரணமாகிற அலங்கோலம் இது. தன் சாதனை யின் உயரத்துக்குக் கீழே தனித்து நிற்பவன்’, ‘வெற்றி, வெற்றி’ என்று வீற்றுவது பைத்தியக்காரத்தனம்: 

நாம் மனித உலகிலே வெறுப்புக்கொண்டாலும், அதன் அளவுக்கு இறங்கி வந்திருப்பவன் தானே? மண் மூடிக்கிடந்த மனத்திலே சபலம், பாசம் என்றெல்லாம் முளைகள் விட்டன. எந்தையும் தாயும் நினைவுக்கிளை வழியே உள்ளத்தில் இறங்கினர். ஊருக்குப்போனேன். அம்மா எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால் என் பிரிவாலே வாடி இறந்துவிட்டாளாம். இதை யும் மனிதத்தன்மையின் தோல்வி என்றுதான் சொல்ல வேண் டும். தன் ஆணிவேரைப் பறித்து என்னிடத்தில் ஊன்றி வைத் தாள்: ஆணி வேர் பிடுங்கிக்கொண்டு போனதும் மரம் சாய்ந்து விட்டது. இது இயற்கைக்கு விரோதம் இல்லைதான். ஆனால் வழுக்குகிற பாசத்திற்கு நியாயம் தேவை இல்லை. இல்லாமல் போன என் தாய் நீராக என் கண்ணில் நிறைந்தாள். நெஞ் சோடு கிளர்ந்து, நெடு மூச்சாக விரிந்தாள். 

அப்பாவின் மூச்சும் ஒரு சுழிப்பில்தான் நின்று கொண்டி ருந்தது. என்னைப் பார்த்ததும் ஒரே திருப்தி. அவரிடமிருந்து பறந்த உயிர்ப்பறவைக்கு என் வருகையே இறக்கைகளாகி விட்டன. சர்க்காருக்குப் ‘பென்ஷன்’ லாபத்தோடு எனக்கும் ஒரு லாபம். அவர் சம்பாதித்து வைத்திருந்த லக்ஷ ரூபாய் ஆஸ்தி எனக்குக் கிடைத்தது. 

பணம் பத்தும் செய்யும் என்பார்களே! வாழ்க்கையின் அரிச்சுவடி முதல் ஆனர்ஸ் வரையிலுள்ள எல்லா வழித்துறை களும் சாமர்த்தியங்களும் எனக்கு வந்து விட்டன. வாழ்க்கையைப் பழித்ததற்கு நான் சுமக்கிற பொதியாகவும் இருக்கலாம் இது! 

சௌகரிய வாழ்க்கையில் ஒரு தினவு ஏற்பட்டிருப்பதை நாளாவட்டத்தில் கண்டேன். வாலிபத்தில் விடுதலை வேட்கை யின் இறக்கைக்குக் கீழே மறைந்து கிடந்த தாம்பத்ய வேட்கை இந்த வயதில் வெளிப்பட்டுச் சீறுவானேன்? வாலிபத்தில் இறங்கிய விதை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மட்கிப் போகாமல் எப்படி முளை நீட்டிக் கிளைவிடுகிறது? 

முதலில் ஆச்சர்ய ரஸிகனானேன். பின்னர் காலம் கடந்த வேட்கையை விரட்டத் தாயுமானவரைத் துணைக்கு அழைத்தேன். கருணைக்குரல் எடுத்துப் பாடினார்: 

“மதியுங் கங்கையுங் கொன்றையு(ம்) மத்தமும் 
பொதியுஞ் சென்னிப் புனித ! நின் பொன்னடிக்
கதியை விட்டிந்தக் காமத்தி லாழ்ந்தவென்
விதியை எண்ணி விழிதுயி லாதன்றே,” 

தாயுமானவர் விண்டதைக் கண்டவர். காமத்தில் ஆழ்ந்த விதியைக் கிழித்துக் கர்மேச்வரனைக் கண்டவர். விதியின் கை விளையாட்டுப் பண்டமான நான் இறைவனை அழைத்த போதெல்லாம் காம ஸ்வரூபிணியே காட்சி தந்தாள். தாயு மானவர் குரல் ஒடுங்கினார். என் கிழட்டு உடலிலிருந்து இளமைக் குரல் வீங்கி எழுந்தது. 

‘ஒரு பெண் வேண்டும்.’


நான் பணக்காரன். எனக்கு நூறு வயதானாலும் பதினாலு வயது அழகுப் பெண் கிடைப்பாள். ஆனால் இந்த இடத்தில் தான் கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் சிந்தித்தேன். ஏதோ நெருக்கடியால் எனக்குக் கழுத்தைக் கொடுத்துவிட்டுப் பிறகு வாழ்நாளெல்லாம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணால் எனக்கு இன்பம் கிடைக்காது. அவள் என்னை மனப்பூர்வமாக விரும்புபவளாக இருக்க வேண்டும். எவளாவது கண்ணுள்ளவள் அப்படி விரும்புவாளா? எழுபது வயதுத் தலைவர் ஒருவரை விரும்பிய பெண்ணும் இந்தத் தமிழ் நாட்டில் தானே இருந்தாள்? அந்த வகையில் இன்னொரு பெண்ணும் இந்தத் தமிழகத்தில் இருக்க மாட்டாளா, என்ன? 

ஒரு பள்ளி ஆசிரியர் அழகே உருவான தன் பெண்ணை எனக்குக் கொடுக்க முன் வந்தார். அவள் நன்றாக வாசித்த வளாம். ஏழு பெண்களுக்கு முன் பிறந்த சீதேவியாம். பணம் இல்லாத காரணத்தால் இருபத்தைந்து வயதுவரை கன்னியாக இருக்கிறாளாம். வயதானவர்களுக்கு இப்படி இடங்களில்தான் பெண் கிடைக்கும். பணக்காரக் கிழவர்களின் ஆசைத் தாமரை மலர்வதற்கு, அடிமட்டத்தில் வறுமைச் சேறு இருப்பது அவசியம்தானே? ஆனால் ஒரு நிபந்தனை போட்டிருந்தேன். அந்தப் பெண்ணோடு நான் தனிமையில் பேசிய பின்னர்தான் என் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க இயலும் என்று. அதுவும் நான் இருக்கும் இடத்திற்கு அவள் வரவேண்டும் என்பது நிபந்தனையின் முதல் ஷரா. 

வாத்தியார் எல்லாவற்றிற்கும் ஒப்புக் கொண்டார். எனக்கு ஓர் உறுத்தல். நான் அவர்கள் ஏழ்மையை, நெறிகளைக் கடக்கும் தோணியாக உபயோகப்படுத்திக் கொள்கிறேனோ? எனக்கே சிரிப்பு வந்தது. நெறியைத் தின்று உணர்வைக் கொழுக்க வைத்திருக்கிற எனக்கு இந்த ஞானோதயம் வருவானேன்? 

“ஸார்!..” வாசலில் அலைந்த மென்குரல் என் சிந்தையைத் தேய்த்தது. எழுந்து வாசலுக்குப் போனேன். 

அழகு அள்ளிய இளமையில் புன்னகையை மலர விட்டபடி நின்று கொண்டிருந்தாள் ஒரு பெண். இருக்கும் இடம் தேடி வந்த தீனியைக் கொழுத்த கிடா தின்னவேண்டியது தானே? மாறாக என் வயதுக்கேற்ற தன்மைதான் மேலோங்கி நின்றது. 

“நான் வாத்தியார் பெண். நாம் உள்ளே போகலாமா?”

நான் உள்ளே நடந்தேன். அவள் என்னைத்தொடர்ந்தாள். மல்லிகை மணத்தை நிறைத்துக் கொண்டிருந்த அந்த அறையில் ஒரு பெண்ணில் பெண்ணைப் பார்க்க விரும்பினேன். சில சமயங் களில் பெண் தெரிந்தாள்; பல சமயங்களில் பாரத அன்னை தெரிந்தாள். இரண்டில் ஒன்றைக் காண விரும்பினேன். ஒன்றில்லை இரண்டு; இரண்டில்லை, ஒன்று. ஒன்றும் மற்றொன்றும் அலை யாய், புயலாய், ஆழிசூழ் உலகின் இரு கரைகளாய்த் தோன்றித் தோன்றி என்னை வதைத்துக்கொண்டிருந்தன. 

“என்னை நீங்கள் வரச் சொன்னீர்களாம். உங்களை மணந்து கொள்ள எனக்குப் பூரண சம்மதம். எதாலும் நிர்ப்பந்திக்கப் படாத என் சர்வ சுதந்திரமான விருப்பம் இது. நீங்கள் உடனே முகூர்த்தத்திற்கு நாள் பார்த்துவிடலாம்!” என்று என் மௌனத்தைக் கலைத்தாள். 

என் மனத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த கேள்விக்களுக்கெல்லாம் மொத்தமாகப் பதில் அளித்துவிட்டாள். ஆனாலும் என்னைத் தேக்கிக் கொண்டிருந்த சந்தேகம் சொல்லால் விரிந்தது. “நான் வயதானவன். ” 

“நானும் பதினாறு வயதுக் குமரி இல்லையே!” 

இப்பொழுது அவள் எனக்கு முழுதும் ஒரு பெண்ணாகவே தெரிந்தாள். எனக்கு மகிழ்ச்சி விருந்தாகியது. உலகமே தெரியாத பதினாறு வயதுப் பெண்ணின் பேதமையைவிட, சற்று வயதானவளின் அநுபவக் கூர்மை என் தயக்கத்தையும், சிரமத்தையும் குறைக்கும் அல்லவா? “அடுத்த வாரமே முகூர்த்தம்” என்றேன். 

“நீங்கள் வித்தியாசமாக நினைக்காவிட்டால் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.” 

“தாராளமாகச் சொல்லலாம்.” 

“என்னைப் போலவே என் தங்கை கல்யாணத்திற்கு நிற்கிறாள். அவளுக்கும் ஒரு வகை உங்களால் பிறந்தால் அவள் மனத்தில் வரித்தவனைத் தடையின்றி அடைவாள். இந்தக் காரியத்தை என் னுடைய விலையாக நினைப்பதென்றால் வேண்டாம்” 

“அதை ஒரு மனிதனின் உயர்ந்த சேவை என்றே நினைக்கின்றேன். நாளைக்கே உன் அப்பாவிடம் ரூபாய் ஐயாயிரம் தந்துவிடுகிறேன்.” 

“நீங்கள் உயர்ந்தவர்.” 

“உன்னை விடவா?” 

அவள் தடுமாறினாள். நான் அடுத்த வாரத்தைப் பற்றிச் சிந்தித்தேன். 


வாரம் வந்தது. ஆடம்பரம் இல்லாத எங்கள் கல்யாணம் அமைதியாக நடந்து முடிந்தது. 

அன்றிரவு ஐம்பத்து மூன்று வருஷங்களாக உறைந்து கட்டப் பட்டுப் போயிருந்த சுகத்தைத் தேடப் பள்ளி அறைக்குப் போனேன். சிறிது நேரத்தில் நிலவு பூக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். கதவு திறந்திருந்தது.நிலவு நுழைந்தது. அழகுப் பெட்டகமாய் வந்த சிவகாமி மஞ்சத்தைப் பிடித்துக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். பதறினேன், பற்றினேன் அவள் தோளை. “என்ன சிவகாமி!” என்றேன் கலவரத்துடன், 

“நான் உங்களை ஏமாற்றிவிட்டேன்!” புரண்ட வெள்ளம் இரு கண்களில் பாய்ந்தது. 

அவளுடைய நடுங்கிய உடல் என் கைகளில் தேங்கியது. பதைத்த என் உள்ளம் பாய்ந்தது. “என்ன சொல்கிறாய் சிவகாமி? என்னை ஏமாற்றினாயா?” 

“ஆமாம்; நான் உங்களுக்கு ஒரு மனைவியாக நடந்து கொள்ள முடியாது. நீங்கள் கொள்ளை ஆசையுடன் புதுப்பித்துக் கொண்டிருக்கும் வாலிப வேட்கைக்கு ஆறுதல் கிடைக்காது…” 

ஆசை வலை அறுத்த வேகத்தில் படுபாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் நான், “ஏன்?”  என்று கீச்சிட்டேன். 

“நான் தாம்பத்ய சுகத்திற்கு லாயக்கற்றவள். விவரமாகச் சொல்லப் போனால் பூப்படையாத பெண் நான். இயற்கையின் மலட்டுத்தனத்திற்குப் பெண் உருவம் தாங்கிய வெற்றுப் பிண்டம்…” சொல்லிவிட்டு என்னைப் பீதியுடன் பார்த்தாள். நடக்கக்கூடாத ஒன்று நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்க்கும் நடுக்கம் அவள் உடலில் இருந்தது. 

நான் அவள் எதிர்பார்ப்பதைப் போல அவளுடைய கழுத்தை அழுத்த வேண்டியவன்தான். ஆனால் எதிர்பாராத ஒன்று என்னை அடைத்துக்கொண்டு நின்றது. எல்லாம் இழந்த நிலையில் தளர்ந்து தள்ளாடும் குரல்தான் நீந்தியது: 

“எதற்காக சிவகாமி, என்னை வஞ்சித்தாய்?” 

“இதைப் போலத்தான் என்னை ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டேன்: ‘இவர் ஏன் வயதான காலத்தில் பெண் உலகத்தை வஞ்சிக்கக் கிளம்பி யிருக்கிறார்?’ என்று. பூப்படையாத நான் உங்களை வஞ்சித்துத் திருமணம் செய்து கொண்டு, வாழத் தகுதியுள்ள மற்ற ஒரு வாலிபப் பெண்ணைக் காப்பாற்ற எண்ணினேன். பெண் உலகத்துக்கு நான் செய்யும் பெரும் சேவை என்றும் இதை எண்ணினேன். நான் அருகிருந்து ‘தகுதி இல்லாத ஆசைக்குத் தகுந்த தண்டனை’யாக உங்களை வாட்டிக் கொண்டிருக்க ஆசைப்பட்டேன். இதற்கு எங்கள் குடும்ப நிலையும் ஒரு காரணம். எனக்குக் கூறிக்கொள்ள இயற்கைக் காரணம் ஒன்று இருந்தாலும், நான் திருமணம் ஆகாமல் இருப்பதைப் பலர் பழித்தனர்; சந்தேகித்தனர். இதனால் என் தங்கையும் கல்யாணமாகாமல், பிறருடைய ஏசலுக்கு ஆளானாள். பணம் இருந்தால் அவளை எப்படியாவது தள்ளிவிடலாம். அது தான் எங்களை வஞ்சித்ததே ! என் கல்யாணத்தின் மூலம் என் பழிப்புக்கு விடுதலை தரவும், என் தங்கையின் கல்யாணத்திற்குப் பணம் கிடைக்கவும், வாழத் தகுதியுள்ள ஒரு பெண்ணை உங்கள் வலையில் விழாதிருக்கவும் வகை செய்ய எண்ணினேன். எல்லாம் நடந்தன. வெற்றி கிடைத்தது! ஆனால் பூரிக்க வேண்டிய என் மனம் பொங்கிக் குமைகிறது; உங்கள் பெருந்தன்மை வதைத்து உருக்குகிறது. அன்று நீங்கள் என்னைத் தனிமையில் சந்தித்த போது எத்தனை கௌரவமாக நடந்துகொண்டீர்கள்? தன் தந்தை இடத்தில் ஒரு மகளுக்குப் பெருகும் பாசம் அன்று எனக்கு உதயமாகியது. ஆனால் புத்தியில்லாத பெண்ணாக நடந்துகொண்டுவிட்டேன். மனித இயற்கையின் ஓர் ஆசை ஐம்பத்து மூன்று வருஷங்களுக்குப் பிறகு உங்களிடம் தலை தூக்கி யது. அந்த நியாயமான ஆசைக்கு நான் எவ்வளவு பெரிய தடுப்புச் சுவர் எழுப்பி விட்டேன்? ஐயோ, இந்தக் கொடு மைக்கு அணைபோட என் கண்ணீரால் முடியாதே? இத்தனை ஆசையுடன் காத்துக்கொண்டிருக்கும் உங்களைத் திருப்திப்படுத்த முடியாத பாவியாகிவிட்டேன்!” என்று கதறினாள். 

“நீ பாவி அல்ல, சிவகாமி! என்னைக் காப்பாற்றியிருக்கிறாய்!” என்ற என் கலங்காத குரலைக் கேட்டுக் கலங்கித் துடித்தாள் அவள். 

குலையாமல் இருந்த பழங்களையும், குடிக்காமல் இருந்த பாலை யும், வாடாமல் இருந்த மலரையும், கலையாமல் இருந்த படுக்கை யையும் பார்த்துச் சுளித்த விழிகளை, நீர்க்கோலமாய் நெளிந்து கொண்டிருந்த சிவகாமியிடம் திருப்பினேன். “நான் மனிதனாய்த் தான் பிறந்தேன். ஆனால் பின்னர் நாட்டு விடுதலை இயக்கத் தில் என் மனிதத்தனம் முழுதுமாகக் கரைந்துவிட்டது. இயக்கம் வெற்றி கண்டதும் நான் மனிதனாக்கப்பட்டு உணர்ச்சி நிறைந்த இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டேன். விடுதலைப் பசியில் அலைந்த என் உள்ளம் வேட்கைப் பசியில் நாட்டம் கொண்டு விட்டது. நான் நாயாக மாறினேன். நீ கல்லாக எறிந்தாய். கல்லெறி பட்டதும் என் தவறு புரிகிறது. காங்கிரஸ்காரன் அயோக்கியத்தனம் செய்கிறான் என்று பேசப்படும் இந்த நாளில் நான் ஓர் உதாரணமாக இருந்தேன். என்னை மீட்டு விட்டாய். என் பேதைமையால் நான் ஏற்றுக்கொண்ட சுமை யைக் கீழே தள்ளிவிட்டாய். எங்கள் தலைவர் சத்தியமூர்த்தி கனலாக எழுப்பிய ஒன்றைக் கனியாக மாற்றிவிட்டாய். நீ என் மாங்கல்யத்தால் மனைவியாக இருந்தாலும் மகள்தான். என் அருமை மகளே!” என்று கமறிய குரலில் கூறிய நான், அவளை நெஞ்சத்தோடு சேர்த்து அணைத்தேன். குழந்தைபோல என் அணைப்பில் தேம்பினாள் சிவகாமி. 

‘இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும் நெய்யுடை அகுசில் செய்பட விதிர்த்த’ செல்வத்தின் ஸ்பரிச சுகத்தைக் கூறுகிறார் வள்ளுவர் : 

மக்கள்மெய் தீண்டல் உடற்கு இன்பம்-மற்று அவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு. 

தீண்டினேன். இன்பம் பெற்றேன். சொல் கேட்டேன்; துன்பம் கெடுத்து இன்பம் எய்தினேன். பகலில் மனைவியைக் கண்டவன் இரவிலே மகளைக் கண்டேன். தீண்டலும், கேட்ட லும், பார்த்தலுமான முப்பெரு நிதிகளை ஒரே நாளில் அடைந்த நான் எத்தனை பெரிய அதிர்ஷ்டக்காரன்!

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *