மகிழ்ச்சியின் ரகசியம்
மகிழ்ச்சியின் ரகசியத்தைக் கற்றுத் தரும் ஒரு சிறந்த அறிஞரைத் தேடி, அந்த இளைஞன் நாடு முழுதும் பயணம் மேற்கொண்டான். சமவெளிகள், மலைப் பிரதேசங்கள், கானகங்கள், பாலைவனங்கள் உள்ளிட்ட பலவிதமான பகுதிகளுக்கும் சென்றான். பல்வேறு மொழி பேசும் மாநிலங்களிலும், தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகள், மத அறிஞர்கள், துறவிகள் போன்ற பலரையும் சந்தித்து, அவர்களுடன் உரையாடினான். யார் சொன்ன பதிலும் அவனுக்குத் திருப்தியாக இல்லை.

இறுதியாக, மிகவும் மகிழ்ச்சியான அறிஞர், மலைப் பிரதேசத்தில் வசிப்பதாகக் கேள்விப்பட்டு, அவரை சந்திக்கச் சென்றான். அவரது வசிப்பிடம் மலைப் பிரதேசத்தின் உச்சியில் இருந்தது.
அவர் ஒரு துறவியைப் போல எளிமையானதும் அமைதியானதுமான வாழ்க்கையை மேற்கொண்டிருப்பார் என அவன் எண்ணியிருந்தான். ஆனால், அங்கே சென்று பார்த்தபோது அவன் கண்ட காட்சி அவனைத் திகைக்கச் செய்தது.
அவர் பெரும் செல்வந்தராக இருந்ததோடு, தனது கோட்டையில், ஆடம்பரமும் பரபரப்பும் மிகுந்த சுக போக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார். அங்கே ஏராளமான வேலைக்காரர்களும், விருந்தினர்களும், பல விதமான கலைஞர்களும் இருந்தனர். வியாபாரிகள் ஓயாமல் வந்து சென்றுகொண்டிருக்க, ஆங்காங்கே வியாபாரப் பேச்சு மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. மூலையில் ஒரு புறம் இசைக் கலைஞர்கள் இனிமையான மெல்லிசையை இசைத்துக்கொண்டிருந்தனர். விருந்துக் கூடத்தில் வித விதமான உயர் ரக உணவுகள் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தன.
செல்வச் செழிப்பு மிக்க அந்த இடத்தில், மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கி வழியும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவன் தேடி வந்தது அது போன்ற உலகாயதமான மகிழ்ச்சியை அல்ல. உண்மையான, ஆன்மிக மகிழ்ச்சியை. அது இங்கே இருக்குமா என்கிற கேள்வி ஒரு புறம் இருக்க, அந்த செல்வந்தர், மக்கள் சொன்னது போல உண்மையிலேயே ஒரு அறிஞராக இருப்பாரா என்கிற கேள்வியும் அவனுள் எழுந்தது.
அவனால் அவரை உடனடியாக சந்திக்க இயலவில்லை. பல மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகே அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மகிழ்ச்சியின் ரகசியத்தைத் தேடி அந்த இளைஞன் நாடு முழுதும், நீண்ட மற்றும் ஆழ்ந்த தேடல் செய்தது பற்றி அவர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
“ஆனால், உனக்கு மகிழ்ச்சிக்கான ரகசியத்தைப் பற்றி சொல்வதற்கு எனக்கு இப்போது அவகாசம் இல்லை. நீ ஒரு காரியம் செய். இங்கே இந்தக் கோட்டையையும், வெளியே உள்ள தோட்டம், நூலகம் ஆகியவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, இரண்டு மணி நேரம் கழித்து வா. ஆனால் ஒரு நிபந்தனை” என்று சொல்லிவிட்டு, ஒரு தேக்கரண்டியில் சில துளி எண்ணெய் விட்டு, அவனிடம் கொடுத்தார்.
“நீ இந்தத் தேக்கரண்டியைப் பிடித்துக்கொண்டே செல்ல வேண்டும். இந்த எண்ணெய் சிந்தாமல் திருப்பிக் கொண்டுவர வேண்டும்.”
அவனும் சரியென்று அந்தத் தேக்கரண்டியை வாங்கிக்கொண்டு சென்றான். கோட்டை, தோட்டம், நூலகம் ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்ப வந்தான்.
“நீங்கள் சொன்னது போலவே எண்ணெயை சிந்தாமல் கொண்டு வந்துவிட்டேன்” என்று தேக்கரண்டியைக் காட்டினான்.
“அதிருக்கட்டும். சுற்றிப் பார்க்கச் சொன்னேனே! வரவேற்பறையில் உள்ள அந்த பெர்ஷியன் பூத்தையல் செய்யப்பட்ட திரைச் சீலையைப் பார்த்தாயா? அவை எப்படி இருக்கின்றன? பத்து வருடங்களாக நிர்மாணிக்கப்பட்ட தோட்டத்தில் எந்தெந்த மலர் மற்றும் அலங்காரச் செடி வகைகளைப் பார்த்தாய்? அவற்றில் உனக்குப் பிடித்தமானது எது? நூலகத்தில் என்னென்ன வகையான புத்தகங்களைப் பார்வையிட்டாய்?” என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அந்த இளைஞனால் அவற்றுக்கு பதில் சொல்ல இயலவில்லை. “மன்னிக்கவும். நான் இந்தத் தேக்கரண்டியில் உள்ள எண்ணெய் வழிந்துவிடக் கூடாது என்பதிலேயே கவனமாக இருந்ததால், வேறு எதையும் பார்க்கவில்லை” என்றான், வருத்தத்தோடு.
“பரவாயில்லை! இதே கரண்டியோடு இன்னொரு முறை சென்று, அதை எல்லாம் நன்கு பார்த்து, எண்ணெய் சிந்தாமல் கொண்டு வா!” என்று மீண்டும் அனுப்பி வைத்தார்.
இப்போது அவன் அந்த மாளிகையின் ஒவ்வொரு அறைகளிலும் உள்ள பொருட்கள், அலங்காரங்கள், சௌகரியங்கள் ஆகியவற்றையும்;
தோட்டத்தில் உள்ள செடிகள், மலர்கள், மரங்கள், பறவைகள் மற்றும் பல வித உருவங்களில் வெட்டி அழகுபடுத்தப்பட்ட செடி அலங்காரங்கள், புல்வெளி, செயற்கை ஊற்று ஆகியவற்றையும், நூலகத்தின் தனித் தனிப் பிரிவுகளில் அடுக்கப்பட்ட நூற்றுக் கணக்கான நூல் வகைகளையும் நன்கு கவனித்து ரசித்துவிட்டுத் திரும்பினான்.
அப்போது அந்த அறிஞர் கேட்கும் முன்னதாகவே, தான் பார்த்து ரசித்த விஷயங்கள் அனைத்தையும் பற்றி மகிழ்ச்சியாக விவரித்துக் கூறினான்.
“அதிருக்கட்டும். தேக்கரண்டியில் இருந்த எண்ணெய் எங்கே?”.
அப்போதுதான் இளைஞன் கவனித்தான். தேக்கரண்டியில் இருந்த எண்ணெய் முழுதும் எங்கோ சிந்திவிட்டிருந்தது. அதற்காக அவன் மிகவும் வருத்தப்பட்டான்.
அறிஞர் சொன்னார்: “மகிழ்ச்சியின் ரகசியம் இதுதான். உனது கடமையைச் செய்தபடியே வாழ்க்கையையும் உலகத்தையும் ரசிப்பது. கடமையை மறந்து சுக போகங்களில் திளைப்பதும் தவறு; அதே போல, கடமையில் மூழ்கி, வாழ்வின் அழகையும், இன்பத்தையும், சிறு சிறு மகிழ்ச்சிகளையும் தவற விடுவதும் முட்டாள்தனம்.
“மகிழ்ச்சி என்பது எங்கோ, எதிலோ அடங்கியிருக்கிற விஷயம் அல்ல. அது ரகசியமாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கவும் இல்லை. அது உலகெங்கும், வாழ்க்கை முழுதும், ஒவ்வொரு துளித் துளி அம்சங்களிலும் அடங்கியிருக்கிறது. புல்லின் நுனியில் இருக்கும் பனித் துளியில் கூட எவ்வளவு அழகு! ஒரு சிறு திராட்சைப் பழத்தில் எவ்வளவு சுவை! இளம் காற்றில் எவ்வளவு சுகம்! இதையெல்லாம் அனுபவித்து ரசிக்கவும், இன்புற்று மகிழவும் தொடங்கினால், இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் மகிழ்ச்சியின், பேரானந்தத்தின் உறைவிடம் என்பது புரியும். நமது வாழ்க்கை அதற்காக வழங்கப்பட்ட அரும் கொடை என்பதையும் உணர இயலும்.
“செல்வந்தர்களோ, ஏழைகளோ – அழகு, மகிழ்ச்சி, இன்பம், ஆன்மிகம் போன்றவை எல்லோருக்கும் பொது. மகிழ்ச்சியும் திருப்தியும் மனதைப் பொறுத்ததுதானே தவிர, பொருள்களைப் பொறுத்ததல்ல!”
தான் நாடு முழுதும் தேடி அலைந்தது, தனக்குள்ளேதான் இருக்கிறது என்பதை இளைஞன் உணர்ந்துகொண்டான்.