ப்ரயாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2024
பார்வையிட்டோர்: 315 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவருக்கு ஒரு பழக்கம்; நல்லதோ, கெட்டதோ – தெரியாது.காலையில் விழிப்பு வந்ததும், பிறகும், நினைப்பு வந்தபோதெல்லாம் இடதுகையால் வலதுகை நாடியைப் பிடித்து இடது செவியோரம் கொண்டுபோய் ஒட்டுக் கேட்பார். 

அவருடைய அத்தை, நாடியில் நிபுணியாம், இந்தக் கேஸ். இன்றிலிருந்து ஒரு வருடம், ஒரு மாதம் ஒரு நாளில் காலாவதி என் று சொல்லுமளவுக்கு சொன்னபடியும் நடக்குமாம். ஆபத்தான மனுஷி. ஆனால் நாடி பார்ப்ப துடன் சரி. அதில் கண்ட கோளாறுக்கு வைத்யம் பண்ணவோ, பரிகாரம் சொல்லவோ தெரியாது. அதெல் லாம் செல்லக்கண்ணு பாடு. நாடி பார்க்கச் சொல்லிக் கொடுத்ததே செல்லக்கண்ணு பண்டி தன்தான். அத்தை. குருவுக்கு மிஞ்சின சிஷ்யை ஆகிவிட்டாள். அவனுக்குப் பிடிபடாத இடங்களுக்கு லக்ஷிமி அம்மாளை அழைத்துச் செல்வான். அதெல்லாம் அம்சம், சொல்லிக்கொடுத்தோ படிச்சோ வரதில்லை. பாருங்க என் பாட்டனார் காலத்தி லிருந்து ஓலைச்சுவடி, நாடி சாஸ்திரப் புத்தகங்கள் பரண்லே அடுக்கி வெச்சிருக்கேன்; ப்ரயோசனம்? 

அத்தை மாதிரி தானும் நாடி பிடிக்கணும் என்று ஆசை. அத்தையிடம் கற்றுக்கொள்ளவும் முயன்றார். அவளும் ஏதேதோ சொல்வாள்: யானை நடை, கோழி நடை, குதிரை நடை யென்று. போகப் போக அவளும் கேட்ஸா’ அடிக்கிறாள் என்று தனக்கே தெரிந்தது. எல்லாம் தெரிந்து, கரை கண்டுவிட்டாலே அப்படித்தான். யானையாம், குதிரை யாம், கோழியாம்! அவருக்கு எல்லாம் ஒரே டக் டக் டக் காய்த்தான் பட்டது. இருந்தாலும் தன் கையைத் தானே பிடித்துப் பார்த்துக்கொள்ளும் பழக்கம் மட்டும் நிலைத்து விட்டது. 

“டக் டக் டக்” 

NO – இன்று டக் டக் டக் இல்லை. ஒன்று “கிர்ர்ர்-டக் எஃகுச்சுருள் கழல முயல்வதுபோல. நடு நரம்பு பேசவே யில்லை. அடுத்ததில் வேகம் மின்னல் பறந்தது. தூக்கிவாரிப் போட்டது. வித்தை கடைசியாக கைக்கடங்கி வந்து விட்டதா? காத்திருந்த தவம் பலித்ததம்மா…ஆனால் தனித் தனியாக அவை என்ன பாஷை பேசுகின்றன? ஒன்று நிச்சயம். நல்லது பேசவில்லை. 

பயத்தில் திடீரெனக் காலில் வந்தடைந்த பலவீனத்தில் டாக்டர் வீட்டுக்குப் போகும் தைரியம் விட்டது. அவர் க்ளினிக்கும் 9 மணிக்கு முன் திறக்காது. டாக்டர் 9 மணிக்கு. வரமாட்டார் என்பது அனுபவ உண்மை. அவர் வரும் வரை காலை எதிர் வெய்யிலுக்குத் தடுப்புக்கூட இல்லாமல் காத்திருக்க வேண்டும். டோக்கனில் தன் முறை வந்து உள்ளே போய் மீள்வதற்குள் 12-30. வேறு வழியில்லை. இன்று விஸிட்டுக்கு அவிழ்த்து வைக்க வேண்டியதுதான். நல்லவேளை எதிரே ரொட்டிக் கடையில் டெலிபோன் இருக்கிறது கடையும் திறந்தாச்சு. 

வேலைக்காரக் குட்டியை இன்னும் காணோம். இன் றைக்கும் மட்டமா? தன்னை விட்டால் கதியில்லை என்று அவள் தெரிந்துகொண்டிருக்கிறாள். சமயம் பார்த்துக் காலை வாரிவிடுவதில் அவள் தனி ஸ்பெஷல். அவள் வந்து தயவு பண்ணினால்தான் இன்றையச் சமையலுக்குப் பாத்திரங்கள் விடுபெறும். தொட்டி முற்றத்தில் ரஸவண்டல், கொட்டிய காப்பிப்பொடி, சாம்பார் எல்லாம் கலந்து ஊசல் நெடியடித்துக் கொண்டிருக்கிறது. 

மெதுவாய் எழுந்து உட்கார்ந்து, தரையில் காலை ஊன்றி – தனியாகத் தென்புக்குறைவு ஒன்றும் தெரிய வில்லையே! மறுபடியும் நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டார். முதல் நாடி திடுக்குத் திடுக்கென gear மாற்றிக் கொண்டிருந்தது. நடு, மெளனம். மூன்றாவது சோழவரம் ஜயித்துக் கொண்டிருந்தது is n’t that funny? 

ஒருவாறு பல் விளக்கிவிட்டு எதிர்க்கடைக்குப் போய் டாக்டருக்கு போன் செய்துவிட்டு மறுபடியும் வந்து கட்டிலில் படுத்துக்கொண்டார். இன்று பட்டினி போட வேண்டியது தான். அப்படிப் பசி தாங்காவிட்டால் இருக்கவே இருக்கிறது ரொட்டிக் கடை. 

திடீரென்று ஏதோ வளையில் அடைபட்டு, விடுபட்டாற் போல் ஒரு காற்று கிளம்பி, சுவரில் ஷீட் காலண்டர் படபடவென்று பாவாடையடித்துக் கொண்டது. ஆகஸ்ட், அக்டோபர். செப்டம்பர் என்று மாதங்கள் தேதிகள் அலங் கோலமாயின. தேதியைப் பார்க்க முடியாமல் தங்களுக்கு வெட்கம் வந்து சுருண்டுகொண்டன இன்று என்ன தேதி? அக்டோபர் 30 – என் பிறந்த நாளல்லவா? and so, சக்கரம் ஒரு சுற்று வந்தாச்சு. 

நேரம் நேர்த்தியாகத்தானிருக்கிறது என் பிறந்த நாளல்லவா? ஈரமுமில்லை, வெம்மையுமில்லை. சூரியன் ஒளிந்து விளையாடுகிறான். சுவர் மேல் பசும் வெய்யில் இளநீர் போல் துளும்பலாடுகிறது. இளநீரின் ருசி மறந்தே போச்சு. தண்ணீர் ஒழுங்காய்க் கலங்கலில்லாமல் கிடைத் தால் போதாதா? திரும்பிய இடம் எல்லாம் குழாய்தான். சௌகரியம்தான். சமையல் மேடையில், பாத், lav, wash qasin. ஆனால் வருவதென்னவோ Overhead tankஇலிருந்து என்று சுத்தம் பண்ணியதோ? ஓரொரு சமயம் பச்சை மீன் நாற்றமும் பாசி நாற்றமும்… 

ரிஷி மூலம் – அத்துடன் குழாய் மூலம் என்று ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். வாழ்க்கையில் இத்தனை வயது காத்திருந்து காணும் மிச்சம் இதுதான். Overhead Tank – இலிருந்து குழாய் மூலம் குடிதண்ணீர் இதற்குமேல் இதன் விவரத்துள் புகுவது எனக்கே சரியில்லை. 

முயற்சி உன்னுடையது. பலன் என்னைச் சாரும்.

உழை. ஆனால் ஆசைப்படாதே. கூலியை எடுத்துக் கொள்பவன் நான். 

நீ அவல் கொண்டுவா. நான் உமி கொடுக்கிறேன்.

நினைவிருக்கட்டும். உனக்கு இங்கு சொந்தமில்லை. The Gods Want you. 

உன்முறை வரும்வரை உன்னை நான் உண்ண மாட்டேன். 

ஆகையால் எனக்கு உகந்த கவளமாய் நீ உன்னைம் பக்குவமாக்கிக்கொள்ள- 

உனக்கு வேண்டிய அவகாசம் தந்திருக்கிறது. 

வாசற்படியில் நிழல் தட்டுகிறது. 

“என்ன உடம்பு?” என்று கேட்டுக்கொண்டே மணிக் கட்டைப் பிடித்தவுடனேயே டாக்டருக்கு முகம் சட்டென மாறிற்று. என்ன ஸார், What have you done with ourself?” 

“நீங்கள்தான் சொல்லணும்.” 

“உங்களிடம் என்னத்தைச் சொல்றது? வீட்டில் வேறே யாருமில்லையா? சந்தடியே காணோமே!’ 

“………”

“உங்கள் Mrs?” 

“…” இவரிடம் என் பழைய அத்யாயங்களில் எதைப் படிப்பது? இப்போ என்ன ப்ரயோசனம்? 

யாருக்கு நேரம் இருக்கிறது? அலுப்பு, 

“Grown ups? Son?” 

“சேகர் ட்யூட்டியிலிருந்து இன்னும் வரல்லே.” 

”எந்த ஆபீஸ்? Telepone?” 

“அவனே வரநேரமாச்சு. ஆனால் இன்னிக்கு என்னவோ தெரியல்லே. இன்னும் வரல்லே.” 

“பின்னே யார்கிட்டே நான் பேசறது? என்ன ஸார் சிரிக்கிறீங்க?” கையை மறுபடியும் அவசரமாய்ப் பிடித்தார். 

“எதிர் வீட்டில் ரொட்டிக் கடைக்காரன்தான் பாக்கி Doctor, dont you see the numour of the situation?” 

“No I don’t. Man, do you know what you are heading for?”

“நீங்கள் சொல்லாமல் எனக்கெப்படித் தெரியும் என்னிடம் நீங்கள் தாராளமா சொல்லலாம்!” 

 “வியாதிக்காரனிடமே அவன் உண்மை உடல்நிலையைப் பேச முடியுமா? That is no Medical ethics” 

“அப்போ என்னோடு மெடிகலாயிருக்காதீங்க. Let us be man to man. Come on I can take it.” 

“உங்களை உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்தாகணும்.” 

காகங்களின் கரையல் காதைப் பொளித்தது. ரொட்டிக் கடைக்காரன் ரொட்டியைத் துண்டு துண்டாய்ப் பிய்த்து வீசி எறிவான். தினமும் அதுக்கு இது ஒரு காலைச்சடங்கு. அரை ரொட்டி ஆண்டவன் அதுக்குப் படியளந்தால் போதுங்க. அதுக்குமேல் நமக்குக் கட்டுபடியாகாதுங்க. 

இதைத்தவிர ஆள் ஏமாந்தா, பையன் அசப்பாயிருந்தால் எத்தனை பிஸ்கட் திருடுதுங்க தெரியுமா? பன்னை எடுத்துக் கேஸ் கண்ணாடி மேலே வெச்சுப் பொட்டலங் கட்ட பேப்ப ருக்குக் குனியறதுக்குள் முழுசா அப்படியே தூக்கிடுதுங்க. உலகத்தில் துரோகம் என்னென்ன விதத்தில் நடக்குது தெரியுங்களா?’ -டாக்டர் எனக்கென்ன உடம்பு? 

“உங்களுக்கு ஜன்னி கண்டிருக்கிறது.” 

“ஜன்னி?” 

பெரிய நீண்ட சிறகின் நிழல், சுவரில் இளவெயிலின் விதிர் விதிர்ப்பைக் கலைத்தது. 

இது காகமல்ல. 

“ஜன்னியில் எத்தனையோ விதம். நினைவு தப்பணும்னு அவசியமில்லை. வண்டி Top gear-இல் சரிவில் ஓடிண்டிருக்கு. Sir, நீங்கள் என்னோடு வாங்க கார்லே -” 

“பையன் இன்னும் வரல்லியே!” 

“Don’t be siliy man! You are in a fine mess இதெப்படி நேர்ந்தது? இவ்வளவு மோசமா – நானும் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். எப்படியிருக்கலாம்? முந்தா நேற்று உடம்பு சுட்ட மாதிரி இருந்தது. பொருட்படுத் தாமல் பச்சைத் தண்ணீரில் வழக்கம்போல ஸ்நானம். அன்னி ராத்திரிகூட சுட்டதோ? உடம்பு வலி. அதைப் பார்த்தால் முடியுமா? விடியாத காலை எழுந்து வழக்கம் போல அலுவல்கள் — ஸ்நானம். சேகர், 7-55க்கு உட் கார்ந்துவிடுகிறான். கையில் வேறு கட்டிக் கொடுக்கணும். “ஆனது போதுமப்பா” என்று அவன் சொன்னாலும் மனசு கேட்கிறதா? இரவு எட்டு மணிக்குத்தான் அவனை மறுபடி பார்க்கலாம்? ஒவ்வொரு நாள் Night duty என்று அப்படியே தங்கிவிடுவான். புடலங்காய் பொரித்த குழம்பு அவனுக்கு ரொம்ப இஷ்டமாச்சே என்று எடுத்து வைத்ததை நானே சாப்பிட நேர்கையில், தொண்டையில் வில்லுண்டையாய் – 

தலையை வலிக்கிறதோ? மண்டையைத் தாங்கிக்கொள் கிறேன். எல்லாம் எண்ணங்களின் குழப்பம்தான். 

டாக்டர் கைக்கடியாரத்தைப் பார்த்துக்கொள்கிறார். 

“l am well Doctor. பையன் வரட்டும்.” 

“நீங்கள் இங்கிருந்துகொண்டே நான் உங்களுக்கு எதுவும் செய்வதற்கில்லை.’ 

“I understood. Thank you!” 

அவர் போயாச்சு. 

தலையணையில் சாய்கிறேன். What next? சேகர் இன்னிக்கு ஏன் இவ்வளவு நாழியாக்குகிறான்? சின்ன முதலாளியிடம் வேலை பார்த்தாலே இந்த கதிதான், அவனுக்கு அவன் நியாயம்தான் உண்டு.T,ஈட்டி ஈதெல் லாம் எங்களுக்குப் புரியாத பாஷைங்க. சொன்னதை ஓழுங்காச் செய்துட்டுப் போறவனைக் கலைக்கத்தான் இந்தப் பேச்செல்லாம் இப்போ நடமாடுதே! வேலையைச் செய்யணும் – வேலையைக் கத்துக்கணும்னு யாருக்கு எண்ணம் இருக்குது? எல்லாரும் பல்லாக்கு சவாரி யண்ணனும். அப்போ தூக்கறவன் யாரு? என் பையனையும் சேர்த்துத்தான் சொல்றேன். இப்போ பாருங்க அவன் காலேஜிலே.” 

”உனக்கென்னப்பா சேகர்.நீ திருவோண நட்சத்திரத் துக்கு வேலையே தேட வேண்டாம். புறா மாதிரி தானே வந்து மடியில் விழும்” என்று கல்லூரி வாத்தியாரே அவனுக்குக் கை பார்த்துச் சொன்னதைப் பேச்சுவாக்கில் சேகர் என்னிடம் சொல்லி, சொன்னதை நானும் நம்பி னேன். ஏன் நம்பக்கூடாது? 79.5% குடும்பத்துக்கே எனக்கு நினைவு தெரிந்து சேகர்தான் முதல் degree. 

ஆனால் காத்திருந்து காத்திருந்து மடியில் புறாவும் விழ வில்லை. தேடித் தேடியும் புளியம்பழம்கூட உதிரவில்லை. 

இப்போது சேகர் போய் வரும் இடத்தில் அவன் சம்பளத் தைப் பற்றிப் பேசுவதற்குமில்லை… புழுங்குவதற்குமில்லை. போக வர, கைசெலவு போக அவன் துணிமணிக்காவது ஆனால் சரி. அதற்குக்கூட இப்போ என்னிடம் வழியில்லை. இரண்டு வருடங்களாக wireless-க்குப் படித்து, போன வருடம் பூனாவுக்குப் போய் இரண்டு மாதங்கள் தங்கி பரீட்சை எழுதி பாஸும் பண்ணியாச்சு. Good boy செலவுதான். சரியான செலவுதான். ஓரொரு புத்தகமும் நூறு ரூபாய். நோட்புக்குகள் செலவாணி புத்தகங்களின் விலையைத் தூக்கியெறிந்தது. பூனாவுக்குப் போய்த் தங்கி அங்கு ஏதோ ஸ்பெஷல் ட்ரெய்னிங், அதற்கு மட்டும் ஒரு பெரிய நோட் எகிறிற்று. தவிர வெளியூர் போனால் ட்ரஸ் வேண்டாமா? அவன் சொல்லணுமா? எனக்கே தெரி யல்லையா? தெரிந்து என்ன செய்வது? காசுக்கு எந்த வழி போவேன்? 

எனக்கும் நல்ல நட்சத்திரம்தான். வேளை நன்றாயிருந் தால் வேரிலும் காய்க்கும், நட்சத்திரமும் அப்போ நல்லா யிருக்கும். வேளை பொல்லாதானால் நாக்கே பாம்பாகி விடும். வேளையால் நட்சத்திரமா? நட்சத்திரத்தால் வேளையா? பூனாவிலிருந்து பையன் வந்த கையுடன் செல் வோடு செலவாய்த் திருப்பதிக்கு அனுப்பி வைத்தேன். பாலாஜி குலதெய்வமல்ல. ஆனால் கொடுக்கும் தெய்வ மாச்சே! கடைசியில் பார்க்கப் போனால் சுயநலம்தான் தெய்வம். திருவோண நட்சத்திரம் வாய் திறந்து பேசா விட்டால் போகிறது. உதட்டையாவது அசைத்தால் சரி. 

விதை நெல்லை வீசி இறை. விளைச்சலை அள்ளி அறுப்பாய். 

வெறுங்கையை வீசி வயல் பரப்பைக் காட்டினால் வயிறு நிரம்பிவிடுமா? என்றைக்கு இந்தப் பொய் எங்கள் முகத்தில் வெடிக்கப் போகிறதோ? அஸ்தியில் இதேதான் ஜூரம். 

இப்படியே இன்று போல் நாளை, நாளை போல் மறு நாள் என்று ஒரு நாளைப் போல் மறுநாள் மண்டையுள்ள வரை ஜலதோஷம்தான் வாழ்க்கை, கஸ்தூரிக்கு அலுத்துப் போனதில் ஆச்சரியமில்லை. அவன் என்னத்தை நினைத்துக் கொண்டு வந்தாளோ? நிச்சயமாய் அது அவளுக்கு என் னிடம் கிட்டவில்லை. அடிக்கடி சொல்வாள்: ”you are no adventure”-(இலக்கணத்தைத் தூக்கி உடைப்பில் போடு) நான் என்ன உங்கள் மாதிரி வாத்தியார் மகளா? நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்துகொண்டால் சரி. ஆனால் புரியவெச்சு என்ன பிரயோசனம்? நீங்கள் என்ன மாறப் போறேளா? எதைக் கேட்டாலும், இன்னிக்கு கரைச்சுட்டு நாளைக்கு என்ன செய்யறதுன்னு உங்கள் பல்லவியாப் போச்சு! வாழ்க்கையைப் பின் எப்பத்தான் அனுபவிக்கிறது! 

“வயிற்றில் இப்படி வாரை இழுத்துக் கட்டறபோதே இவ்வளவு இழுப்பாயிருக்கு. நீ என்னடான்னா சமுத்தி ரத்தைத் தாண்டனும் என்கிறாய்! உனக்கு என்ன வேண்டும்? 

“உங்களுக்கு என்றைக்குமே புரியாது. பாவம் கடைசி வரை அவள் குழந்தைதான். கன்னங்களில் பாலசடு மாற வில்லை. அவள் வந்த இடம், வளர்ந்த இடம் அப்படி. கையை நீட்டவேண்டும் உடனே மாங்காய் விழவேண்டும் மனப்பான்மை. அண்டாவைத் தூக்கிச் செம்பில் போட்டு மாட்டைத் தூக்கி ஆட்டில் போட்டு இன்னிக்கு இந்த நகை மேல் ஆசைப்பட்டேனா” வாங்கு- 

“முழுப்பணம் யாரு கேட்டுது? பங்காரு தல்லி ஒக்கப்பாதி லெக்காலு பெட்டினானு – ஸந்தோஷங்கா தீஸ் கோனி வெள்ளண்டி மறுமாதம் பாக்கி கட்ட முடியாவிட் டால் வாங்கினவனிடமே வை. அவனே அடகும் பிடிக் கிறான். மீட்க முடியாமல் மூழ்கிப்போனால் -ஏதோ ஒரு மாதம் தானானாலும் பூட்டிண்டவரை சந்தோஷம்தானே! மாதம் அத்தனை State லாட்டரிக்கும் ஒதுக்கிவிடுவோம். போனால் நஷ்டம் ஒரு ரூபாய்தானே! விழுந்தால் விட்டுடு வேளா? காயிலுக்கு எழுதி வெச்சுடுவேளா?!” 

ஆசைகள் நிராசையில் முடிவது வியப்பல்ல. ஆனால் இதுவே வாழும் தத்துவமாக… அவளுக்கு மட்டுமென்ன? வாழ்க்கை முறையில் அவளே வேறு தலைமுறையாகிவிட் டாள்… இதுவே வாழும் தத்துவமாக அமைந்துவிடுவது ஆச்சரியமா இருந்தது. 

“ஒன்று கேட்கிறேன். உங்களுக்கு உண்மையா என் மேல் ஆசையிருந்தால், கணக்கில் நல்லதா எனக்கு ஒரு பட்டுப்புடவெ வாங்கித்தர முடியாதா? நீங்கள் தலையை மட்டும் அசையுங்கள். உங்களால் முடியாட்டா நான் ஏற்பாடு பண்றேன். நீங்கள் வேணும்னு வேஷம் போடறேள்.” 

பிச்சைக்காரனுக்கு அதிர்ஷ்டம் அடித்தால் அன்று அவனுக்கு இரண்டு ரூபாய்க்குப் பதிலாக அஞ்சு கிடைக்க லாம். ஐம்பதாயிரம் கிடைச்சுடுமா? சுக்ர திசையும் அவனவன் ஸ்திதிக்கு ஏற்றபடித்தான். ஆண்டவன் மனது வைத்தால் அவனால் ஆகாததல்ல என்பது வேறு விஷயம். அவன் மனது வைத்துத்தான் சந்திரமதியும் துடைப்ப மெடுத்துப் பெருக்கினாள் கஸ்தூரியிடம் என்ன சொல்ல முடியும்? சினிமா, சினிமா போன்ற கதைகள் அவாளைப் பாருங்கள், இவாளைப் பாருங்கள், அங்கே fridge, இங்கே டைனிங்டேபிள் என்ற எரிச்சல்கள் அடைத்துக் கொண் டிருக்கும். மண்டையுள் என் வார்த்தை, என் நிலைமை என்ன ஏறும்? 

“You are no advanture man!” 

சேகரை கருத்தரித்தது நிச்சயமானதும் அடேயப்பா! அவள் பண்ணின ரகளை இன்னும் மறக்கவில்லை. காளியாக மாறிவிட்டாள். என் மார்பில் படபடவென்று மாறிமாறி இருகைகளாலும் குத்துகிறாள். என்ன பலம்: நினைத்தால் இப்போக்கூட வலிக்கிறது (அதுவும் ஏதோ சினிமாக் காக்ஷிதான்.) தலைமயிரைப் பிய்த்துக்கொள்கிறாள். நெற்றிப் பொட்டில் அறைந்துகொள்கிறாள். 

நான் அலண்டுதான் போனேன். இதென்ன ஆஸ்பத்திரி கேஸா? ஏதாவது மறைச்சுவெச்சு என் தலையில் கட்டி விட்டார்களா? 

“என்ன கஸ்தூரி இதென்ன கோலம்?” 

“இருக்கிற கஷ்டம் போதாதுன்னு நீங்களே என்னை வாழவெக்க மாட்டேன்கறேளே?'” 

“என்ன உளர்றே? உன்னை யார் வாழ வைக்கவில்லை? எந்த மாமியாருக்குத் தவறாமல் பலகாரத்துக்கு தினம் தோசைக்கு அரைத்துப் போடுகிறாய்?” எந்த குண்டுனி நாத்தனாருக்கு தலை பின்னி உனக்குக் கை ஒஞ்சு போறது? எந்த மச்சினனுக்கு பள்ளிக்கூடத்துக்கு நேரம் தப்பாமல் சமைத்துப் போடுகிறாய்” 

“அதெல்லாம் கூட வேணுமா? இன்னும் பத்து மாதத் தில் நான் உருக்குலைஞ்சு, கையில் ஒண்ணை ஏந்திண்டு அது உதிரத்தை உறிஞ்சற வேகத்தில், கன்னம் ஒட்டி, அழகும் பொலிவும் இழந்து. பல்லும் பவிஷுமாய் கிழவியா என்னைப் பாத்துடுவேள் உங்களுக்குத் திருப்திதானே! அதுக்குள் என்ன அவசரம் உங்களுக்கு?’ 

நான் ஒன்றும் பேசவில்லை. 

அப்போதே எங்கள் பேச்சு அனேகமாக அறுந்து போயிற்று. 

பிள்ளைப்பேறுக்குப் பிறந்தகம் போனவள் ஆறு மாதம் எட்டு மாதம், பத்து மாதம் …… வருடமாகப் போகிறது, திரும்பவேயில்லை. கடிதாசுகளில் ஏதேதோ சாக்குப் போக்கு. 

கடிதங்களும் நின்றுவிட்டன. 

டால்ஸ்டாயின் Anna Karenina; நாவல் நான் படித்த தில்லை. தலையணையாக வைத்துக்கொள்ளலாம். எழுதின வனுக்கு இருந்த தென்பு படிப்பவனுக்கு எங்கேயிருக்கிறது? தலைமுறை தலைமுறையாக தென்பு தேய்ந்துகொண்டே வருவதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? 

ஆனால் Anna Karenina படம் பார்த்தேன்: Greta Carbo, Basie Rathbone. 

அதற்குப் பல வருடங்களுக்குப்பின் இன்னொரு Anna karennina-Vivien Leigh Ralph Richardson. 

பிறகு ஒரு Russ: an version. 

ஆனால் முதல் படத்துக்கு மிஞ்சித்தான். 

தன் மனைவியெனும் முறையில், ஒரு குழந்தைக்குத் தாயாகவும் இருப்பதில் சமுதாயத்தில் அவளுக்குள்ள பொறுப்பைப்பற்றி Annaவிடம் karenin சங்கோசத்துடன் சொல்லிக் கொள்கையில், அவளுடைய மோக வெறி பற்றி எச்சரிக்கையில், Basil Rathbone அறையைச் சுற்றி நடந்து கொண்டே ஓடிக்கும் விரல் சொடுக்குகள் இப்பவும் காதில் உதிர்கின்றன. 

நான் ஊருக்குப் போய்க் குழந்தையைக் கொண்டுவந்து விட்டேன் அப்பவும் அவள் சிணுங்கவில்லை. இது மாதிரியும் உண்டோ? உண்டு போலும். 

அன்று நான் அவளைப் பார்த்ததோடு சரி. 

Karenina தன் பிள்ளையிடம் சொல்கிறான்: “Sergei your mother is dead.” 

பாவம் சேகர் இன்னமும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். வேறு வழி? எனக்குத் தலை சுற்று கிறது. இந்தப் பச்சை மண்ணை எப்படிக் காப்பாற்றினேன்? எப்படிக் கெட்டிப்பட்டது? நானா காப்பாற்றினேன்? அந்தத் தாயுமான சுவாமிக்குத்தான் வெளிச்சம். திரும்பிப் பார்க் கையில்தான் இந்த அந்தகாரத்திலிருந்து எப்படி வெளி வந்தோம்? பயம் தோன்றுகிறது… (Telescopeஐத் திருப்பி வைத்துக்கொண்டு பார்த்தாற்போல்) செருப்பைக் காலி லிருந்து உதறும் சப்தம் எங்கிருந்தோ கேட்கிறது. 

நாடியைப் பார்த்துக் கொள்கிறேன். இரண்டு stumps down. ஒன்று மட்டும் “கிர்ரர்.. டக்.. கிரர் . டக் அதுவும் மெதுவாகிக் கொண்டிருக்கிறது. 

சேகர் வந்தாச்சு. இனிமேல் என்ன? Poor Sekar! ஒரு முறை கண்ணால் பார்த்தாச்சு.ஒருமுறை எதுசாக்கிலேனும் அவனைத் தொடணும். இனிமேல் என்ன? 

சேகர் என்னிடம் தந்தியை நீட்டுகிறான். சேகர் brooding type. அதிகமாகப் பேசமாட்டான். நாங்கள் இருவரும் தனியாக இருப்பதற்கு இன்னும் சகஜமாயிருக்க லாம். “என்னப்பா இன்னும் படுத்திண்டிருக்கேள்’ என்று கூடக் கேட்கமாட்டான். எனக்குத் தெரியும் உண்மையில் அவனுக்குக் கேட்கத் தோன்றாது. அவரவர் வந்தவழி, 

“Report for Interview tomerrow 100′ clock Bring all certts Ogls Scindia.” 

“கப்பல் கம்பெனியிலிருந்து வந்திருக்கப்பா! நம் கஷ்டம் விடிஞ்சது.” 

என் உட்சுவரில் நான்கு கற்கள் இடிந்து விழுகின்றன. 

“ஏனப்பா இவ்வளவு லேட்?” 

“கடன்காரன் நிறுத்தி வெச்சிண்டுட்டாம்பா. இரண்டு நாள் லீவு கேட்டு வாங்குவதற்குள் உன்பாடு என்பாடு ஆயிடுத்து. உண்மைக் காரணத்தையும் அவனிடம் சொல்ல முடிகிறதா? இருக்கிறவரை, செய்யறவரை செஞ்சிட்டுப் போன்னு கழுத்தையறுத்துட்டான். அப்பா நல்லவேளை இருக்கிற ஒரு சூட்டை நேற்றுத்தான் சவுக்காரம் போட்டு இஸ்திரி போட்டேன். அப்பா, வண்டி மூணு மணிக்கு. இப்பவே ஒண்ணாயிடுத்து நீங்கள் செக் வெட்டினால் இருக்கிற ஒண்ணுரெண்டை pack பண்ணிண்டு பாங்குக்கு போய் மாத்திண்டு அப்படியே ரயிலைப் பிடிக்கத்தான் சரியாயிருக்கும். இன்னும் சாப்பிடவில்லை. ரயில்வே Canteeuஇல் எதையானும் வாங்கிப் பிட்டுப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்… அப்பா, are you alright?” 

“Quite. ஏன்?” 

“இல்லை என்னவோ மாதிரி… “

“என்ன மாதிரி.” 

“எனக்குச் சொல்லத் தெரியல்லே.” 

லஜ்ஜையுடன் புன்னகை புரிகிறான். கனிவாய் ஒரு வார்த்தை பரிமாறிக் கொள்ளக்கூட ஏன் இப்படி பயப்படு கிறோம்? செக்கில் கையெழுத்து திடமாய்த்தான் இருக் கிறது. கண்தான் மங்கிக்கொண்டு வருகிறது. ரொம்பச் சுருக்கில் நினைவுகொள், இதுதான் உன் கடைசி சோதனை. But what do matter now? என் பச்சை மூங்கில் மேல்தான் என் மகனுக்கு விடிவே என்றால் யார் என்ன செய்யமுடியும்? ரொட்டிக் கடைக்காரரே என்னை மன்னிச்சுடுங்க. மிச்சப் பொறுப்பு உங்கள் தலையில்தான் விடியுமோ என்னவோ? 

இந்தச் செக்தான் அடிச்சுரண்டல். பிறகு நஹீ. அந்த நாளில் பாட்டி கற்சட்டியில் பழையதும் மோரும் பிசைந்து கையில் போடப்போட, நாங்கள் குழந்தைகள் வாரிக் கப்பக் கப்ப, அப்பா என்ன ருசி! கடைசிப்பிடி அதிர்ஷ்டம் யாருக்கோ? பாட்டி சொல்லிக்கொண்டே போட்டு ஏனத்தை தலைமேல் சுற்றுவாள்: ‘அடிக்குழம்பு ஆனைபோல! 

வாசற்படியில் frame போட்டாற்போல் நின்றவண்ணம் சேகர் என்னை ஒருமுறை திரும்பிப் பார்க்கிறான். எங்கள் கண்கள் சந்திக்கின்றன. ஆணுக்கு ஆண்கூட தொப்புள் கொடி உறவு உண்டோ? 

சேகர் ஆஜானுபாகு (எனக்குத் தெரியாமல், அல்லது தெரியாது என்று நினைத்துக்கொண்டு எங்கோ குத்துச் சண்டை கத்துக்கொள்கிறான். ஓரம்படுத்த அந்த மீசை அவனுக்கு நன்கு அமைந்திருக்கிறது- 

சேகர் பேரழகு, சிந்தனை மண்டலம் புகைசூழ்ந்த பெரு விழிகள்; லேசாய்ச் சோகம் பிடித்த கண்கள். என்ன இருந் தாலும் ஆண் வளர்த்த குழந்தைதானே! 

சேகர், நீ என் விசுவரூபம்.தாழி உடைந்தால் என்ன? வெண்ணெய் எடுத்தாச்சு. 

என் வாழ்க்கையில் சாதிக்க முடியாதனவின் நிறைவை உன்னில் கண்டு உன் மூலம் என் நிறைவைப் பெறுகிறேன். ஜன்ம சாபல்யமே அதுதானே! விட்ட இடத்திலிருந்து தொட்டு தீவட்டியை வாங்கிக்கொண்டு ஓடணும். 

சேகர், நீ என் சட்டையுரிப்பு. 

சேகர், நான் பச்சைப்புழு, நீ என் முதுகிலிருந்து வெடித்துப் புறப்பட்டுக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி. 

சேகர், நான் தோல்வியானாலும் நீ என் வெற்றி. 

சேகர், நீ எங்கிருந்தாலும் சௌக்யமாயிருக்கணும். நீ உன் பிரயாணத்தில் கிளம்பிவிட்டால் இதோ நானும் ஓடம் ஏறப்போகிறேன். 

சேகர் – அங்கு இல்லை. frame வெறிச்சிட்டுவிட்டது 

அறையில் புதிதாக ஒரு இருள் திரண்டுகொண்டிருக் எனக்கே தெரிகிறது. கிறது. இது இரவின் இருள் அல்ல. நாடியைப் பார்த்துக்கொள்கிறேன். அங்கு ஒன்றுமில்லை. 

காத்திருக்கிறேன். 

– உத்தராயணம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 1992, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *