பொய் – ஒரு பக்க கதை





அழுக்கு நாலு முழ வேட்டியோடு வந்து கொண்டிருந்த பழனியை வழியிலேயே மடக்கினான் முருகன்.
அவருக்கு செலவுக்கான பணத்தைக் கொடுத்து வழியனுப்ப முயன்றான். வீட்டைப் பார்த்தே ஆக வேண்டுமென்று விடாப்பிடியாக இருந்தார் பழனி.
‘’டேய் முருகா, என் பேரனைப் பார்த்து ஒரு வருசமாகுது’ மன வருத்தத்தோடு கேட்டார் பழனி.
‘எல்லாம் நல்லதுக்குதாம்பா. இப்பதான் அவன் கிளாசுலே ஃபர்ஸ்ட் மார்க் வாங்குறான். அதையும் கெடுத்துடாதே’
‘டேய், அவன் முதல் மார்க் வாங்குறதுக்கும் நான் வந்து பார்க்குறதுக்கும் என்னடா சம்பந்தம்?’’ ஆதங்கத்தோடு கேட்டார் பழனி
‘சம்பந்தம் இருக்குப்பா. அவன் மொதெல்ல எல்லாம் மார்க் கம்மியா வாங்கிட்டு இருந்தான். அப்பதான் சொன்னேன். ‘டேய் உங்க தாத்தா பெரிய ஆபிஸரா இருந்தவரு. அவரு பேச்சைக் கேட்காம நான் படிக்காம இருந்ததால இப்போ காட்டுல வேலை செய்யுறேன். நீயாவது நல்லாப் படிச்சு உன் தாத்தா மாதிரி பெரிய ஆபிஸரா வரணும்’னு தினமும் சொல்லிக்கிட்டு இருந்தேன். அவனும் உங்கள மாதிரி பெரிய ஆளா வருவேன்னு படிச்சிக்கிட்டு இருக்குறான். உங்களை முன்மாதியா நினைச்சுகிகிட்டு இருக்கிற பிம்பத்தை நீங்களே உடைச்சிடாதீங்க அப்பா!’
முருகனின் வாரத்தையைக் கேட்டு வந்தே வழியே திரும்பினார் பழனி.
– செல்வராசு (26-11-08)