பொய்க்கால் குதிரை
(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மச்சான்! இன்னிக்குக் களத்தூர் வள்ளியம்மன் கோயில் திருவிளாவாச்சே! நாம ரெண்டு பேரும் போயிட்டு வரலாமா?…இந்த வருசம், தெற்கேயிருந்து ஒரு ‘பொய்க்காக்குருதை’ ஜோடியை அழைச்சுக் கிட்டு வந்திருக்காங்களாம்! அவுங்க நாட்டியத்தைப் பாக்க எனக்கு ரொம்பவும் ஆசையாயிருக்கு!” என்று அன்புடன் கேட்டுக் கொண்டே, மிக்கச் சிரமத்துடன் நொண்டி நொண்டி, வேலன் அருகில் வந்து நின்றாள் தேவானை.
திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டிருந்த வேலன் மெதுவாகத் திரும்பி தேவானையை நோக்கினான். அவளைப் பார்த்த மாத்திரத்தில் அவனுடைய கண்கள் கலங்கிவிட்டன!
தேவானை ஊன்றிக்கொண்டு நின்றிருந்த தடியை வாங்கிக் கீழே வைத்துவிட்டு, அவளைத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான்.
“தேவானே! திருவினாவுக்குப் போகணும்னு ஆசைப்படறே? உன்னைத்தான் நொண்டிக் கிளியாக்கிப் போட்டு வைச்சிருக்கே அந்த வள்ளியம்மன்!..” என்றான் கரகரத்த குரலில்.
“அப்படி யெல்லாம் அம்மனை நிந்திக்கப்படாது மச்சான்! என் தலையிலே, நான் நொண்டியாப் போவணும்னு எழுதி வைச்சிருந்தா அதுக்கு யார்தான் என்ன செய்யறது?…நீ துணையா யிருக்கிற வரைக்கும், எனக்கு ஆயிரம் கால் இருக்காப் போலே! தெரியுமா?” என்று குழந்தை போலச் சிரித்துக் கொண்டே கூறினாள் தேவானை.
தேவானையின் வலது முழங்கால் வரைக்கும் அற்றுப்போய், முடமாயிருப்பதைப் பார்க்கப் பார்க்க வேலனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. அவன் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சிந்தனை ஒராண்டுக்கு முன்னால், களத்தூர் வள்ளியம்மன் கோயில் திருவிளாவுக்குச் சென்றிருந்த போது நிகழ்ந்த ஒரு அவலமான சம்பவத்தை நினைத்துப் பார்ப்பதில் ஆழ்ந்துவிட்டது.
தேவானை, வேலனின் மடியிலிருந்த ஓலைப் பெட்டியை எடுத்து, அதிலிருந்த வெற்றிலையைப் போட்டுக் கொள்வதில் முனைந்தாள்.
2
செங்கல்பட்டிலிருந்து சுமார் ஐந்து மைல்களுக்கப்பால், மலையடிவாரத்தில், அமைந்திருந்தது. திருமணி என்ற கிராமம். மேற்கேயும் கிழக்கேயும் சிறு சிறு குன்றுத் தொடர் தொடர்ந்து செல்வ தன் இடையேயுள்ள கணவாய்ப் பிரதேசத்தில் அக்கிராமம் இருந்ததால், இயற்கை வளமும், வனப்பும் கொண்டதாய் விளங்கியது.
கிராமத்திற்கு வடகிழக்கே இருப்புத் தொடருக்கு அடுத்து, மலைப் பிரதேசச் சூழலில் ‘லேடி வெலிக்டன்’ என்ற ஆங்கில மாதொருத்தியின் ஞாபகார்த்தமாகக் குஷ்ட ரோக ஆஸ்பத்திரியொன்று நடந்து வருவது மேலும் அக்கிராமத்திற்குச் சிறப்பை யளித்தது. இவை யெல்லாவற்றையும்விட மற்றொரு காரணத்தாலும் அந்தக் கிராமத் தின் பெயர் பிரபலமடைந்திருந்தது.
‘திருமணி வேலுத்தேவன்’ என்றால், செங்கல்பட்டிலிருந்து மதுராந்தகம், திண்டிவனம் வரையிலுள்ள ஜனங்கள் எல்லோருக்கும் தெரியும்! அப்படி அவன் பிரபலமடைந்ததற்குக்காரணம், பழங்கால தமிழ்க்கலையின் ஒரு பிரிவான பொய்க்கால் குதிரை நாட்டியத்தைத் திறமையுடன் அவன் ஆடிக்கொண்டு வந்தது தான் என்றால் அது முழுக்கமுழுக்க உண்மையாகும்!
வேலுத்தேவன் என்ற வேலனின் குடும்பத்தார், பரம்பரையாகவே அந்தக் கலையை விடாது வளர்த்துக் கொண்டு வந்தனர். அதுவே அவர்களது குலத்தொழிலாகவும் இருந்து வந்தது.
வேலனின் தந்தையான மாரப்ப தேவனும், அவன் மனைவி முத்தம்மாளும் ஒருமுறை, தெரியாத்தனமாக, வெள்ளைக்காரக் கலெக்டர் ஒருவனின் முன்னிலையில், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியக் கட்ட பொம்மனின் சரிதத்தை நாடக ரூபமாக்கி, பொய்க்கால் குதிரை நாட்டியத்தில் வைத்து நடித்துக்காட்டியதற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை அடைய வேண்டியவர்களானார்களாம்! அந்த நிகழ்ச்சியை இன்னும் அக்கிராமவாசிகள் சொல்லிச் சொல்லிப் பெருமை பட்டுக் கொள்வார்கள்!
3
மாரப்ப தேவனுக்கு வயதானதும், தன் மகனான வேலனுக்கும், தங்கை மகள் தேவானைக்கும் தனது பரம்பரைத் தொழிலான பொய்க்கால் குதிரை ஆட்டத்தைப் பிழையறப் பயிற்றுவித்து விட்டுக் கண்ணை மூடிவிட்டான்! அப்படி அவன் தன் மகனுக்கு ஜோடியாகத் தங்கை மகள் தேவானையைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு, அவன் தங்கையான அஞ்சலை என்பவள் வாழ்க்கைப்பட்டிருந்த இடம், சற்றுப் பசையுள்ளதாய் இருந்தது. வேலன் அவளுடைய மகனான தேவானையை மணந்து கொண்டால் அந்தப் ‘பசை’ அவனுக்கு வந்து சேருமல்லவா?. அதற்காகத்தான்! மற்றும், மணமாகு முன் அதில் ஈடுபடுகிறவர்களின் மனம் ஒன்றுபட வேண்டுமென்ற வாழ்க்கைத் தத்துவத்தையும் அறிந்துதான் மேற் சொன்ன ஏற்பாட்டைச் செய்து வைத்தானோ என்னவோ!
பரம்பரை வாசனையாலும், தங்களது அபாரத் திறமையாலும் வேலனும் தேவானையும், பொய்க்கால் குதிரை நாட்டியத்திற்கே. ரொம்பவும் மவுசு ஏற்படுத்திக் கொண்டு வந்தனர்.
வேலனும் தேவானையும், மூன்று அடிநீளமுள்ள கட்டையைக் காலில் கட்டி, மூங்கிலால் செய்யப்பட்ட குதிரை உருவை இடுப்பில் அணைத்து, ராஜா ராணி வேஷம் போட்டுக்கொண்டு,
‘வானுகை வீதியெல்லாம்
தூள் பறக்கவே-
வருகுதுபார் பொய்க் குதிரை
ஜெகம் புரளவே!
தன்னானா ! தன்னானா..!’
என்று பாடிக்கொண்டே, ‘வெள்ளை பாதர்’ நாடகத்தை ஆடத்தொடங்கினால், காணக் கண்கோடிதான் வேண்டும் என்பார்கள்!
கிராம ஜனங்களல்லாது, ‘பரத நாட்டியம்’ என்று சொல்லிக் கொண்டு ‘பேபி’களும் குமாரி’களும் கையையும் காலையும் ஆட்டுவதைப் பார்த்துப் பார்த்து சலித்து விட்டிருந்த நகர மக்களுக்கும் இவர்களது பொய்க்கால் குதிரை நாட்டியம் ஒரு புதுமையாயிருந்தது!
கோயில் திருவிழாக்கள் முதற் கொண்டு பிரபலஸ்தர்களின் கல்யாண வைபவங்கள் வரை வேலன் – தேவானை இவர்களுடைய பொய்க்கால் குதிரை நாட்டியமும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாய் இடம் பெற்றுவிடும்! அத்தனை பேரும் புகழும் பெற்றுவிட்டிருந்தார்கள் அவர்கள்.
மாரப்பதேவன் கண்ட கனவு பொய்த்துப் போகா வண்ணம், வேலனும் தேவானையும் நாளுக்கு நாள் அன்புப் பிணைப்பில் இறுகிக் கொண்டே வந்தனர். தேவானைக்குத்தான் மாலையிடவேண்டுமென்ற எண்ணம் வேலனின் உள்ளத்தில் ஒவ்வொரு நாளும் உறுதிபட்டுக் கொண்டே வந்தது. அவ்விதமே தேவானையும் தன் உயிரை வேலன் மீதுதான் வைத்திருந்தாள்!
4
அன்றெரு நாள். பெரியபுராணம் என்னும் சைவ சமய இலக்கியப் பொக்கிஷத்தை அளித்த சேக்கிழார் பெருமான் பிறந்த திருத்தலமான பொன்விளைந்தகனத்தூர் என்னும் கிராமத்தில் வள்ளியம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. இரவு தேர் ஊர்வலத்திற்கு முன்னால், வேலன்-தேவானை பொய்க்கால் குதிரை நாட்டியத்தை நடத்த அக்கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
திருமணியிலிருந்து பொன் விளைந்தகளத்தூர் சுமார் மூன்று மைல் தூரமிருக்கும். மாலை ஆறு மணிக்கே வேலனும், தேவானையும் களத்தூருக்குக் கிளம்பிவிட்டனர். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தங்கள் கல்யாணத்தைக் குறித்துக் பேசிக்கொண்டே குதூகலமாகப் கோயிலை அடைந்தனர் அந்த இளங் காதலர்கள்.
ஆயிற்று; வாண வேடிக்கைகள் முடிந்ததும், வள்ளியும் முருகனும் மயில்வாகனத் தேர் மீதேறி ஊர்வலம் வரக் கிளம்பினர்! எள் போட்டால் எள்விழாதவாறு ஜனக் கடல் புரண்டு கொண்டிருந்தது அங்கே! அவ்வளவு பெரிய ஜனக் கூட்டம் திரண்டு வந்திருந்ததற்குக் காரணம், வேலன்-தேவானை பொய்க்கால் குதிரை நாட்டியத்தைக் காணத்தான் என்றால் அது மிகையாகாது.
தேர் வருவதற்கு ஐம்பது கெஜ தூரத்தில் வேலனும் தேவானையும், ஊமைத்துரை, சண்டைக்குச்சென்ற வரலாற்றை நாட்டியமாக ஆட ஆரம்பித்தனர். எந்த நாளையும் விட அன்று அவர்களுக்கு உற்சாகம் அளவு மீறிவிட்டிருந்தது. ஆதலால் வெள்ளைக்காரனுடன் சண்டை செய்யப் ‘போகும்’ ஊமைத் துரை (வேலன்), ரொம்பவும் வீராவேசத்தோடு தன் மனைவியுடன் தர்க்கம் செய்துகொண்டிருந்தான்! ஊமைத் துரையின் மனைவியாக நடித்த தேவானை தானும் அவனுடன் வந்து வெள்ளைக்காரர்களை வதஞ் செய்வதாக, தன் ‘குதிரை’ மீது இருந்தே குதித்துக் கொண்டிருந்தாள்.
கதையின் ஓட்டத்தில் வேலனுக்கும் தேவானைக்கும் உணர்ச்சியின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் பிறிட்டேறிக் கொண்டே போயிற்று. அதனால் அவ்விருவருமே தங்கள் காலில் மூன்று அடி நீளமுள்ள கட்டை இருக்கிறதென்பதை அறவே மறந்து, ஆடவேண்டிய லாகவத்தையும் மீறி, ஆடிக்கொண்டிருந்தனர்.
ஊமைத்துரை மனைவி, வாளை யேந்தி நிற்கும் தன் கணவனுக்கு வீரத் திலகமிட்டு வழியனுப்பும் கட்டம்!
தேவானை வேலனுக்குத் திலகமிட்டு விட்டு வெறி பிடித்தவள் போல ஆடிக்கொண்டிருந்தாள்! அடுத்த வினாடி “ஐயோ!…மச்சான் ” என்ற ஒரு பயங்கர அலறல் ஒலி எழுந்து அந்தப் பிரதேசம் முழுவதையும் நடுநடுங்க வைத்தது.
அவ்வளவுதான்! தேவானை புழுதித் தரையில் விழுந்து புழுப்போலத் துடித்துக் கொண்டிருந்தாள்! அவளது லாகவம் தப்பிய நாட்டியத்தால் பொய்க்கால்கள் இடறி எக்கச் சக்கமாக வீழ்ந்துது விட்டாள் தேவானை!அவளுடைய வலது கால் முன்புறமாக வளைந்து, முட்டி எலும்பு நொறுங்கி, தோலைக் கிழித்துக்கொண்டு வெளி வந்து விட்டிருந்தது. அதிலிருந்து இரத்தம் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது.
உணர்ச்சி வயப்பட்டுத் தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்த வேலன் தேவானையுடைய இந்த அலறலைக் கேட்டு, காலிலிருந்த கட்டைகளை அவிழ்த்தெறிந்துவிட்டு ஓடிவருவதற்குள், தேவானை மூர்ச்சித்துப் பிணம் போலாகி விட்டாள்.
பொய்க்கால் குதிரை நாட்டியத்தில் மெய்ம்மறந்து விட்டிருந்த ஜனங்கள், இந்த எதிர்பாராத சம்பவத்தைக் காணச் சகிக்காமல் குய்யோ முறையோவெனக் கூச்சலிட ஆரம்பித்தனர்.
என்ன செய்வதெனப் புரியாமல் உடல் வெடவெடக்க நின்றுகொண்டிருந்த வேலன், தேவானையின் முழங்காலிலிருந்து பாய்ந்தோடி வரும் இரத்தத்தைப் பார்க்கச் சகிக்காதவனாய் அவனும் மயக்கமாகி தரை மீது சாய்ந்து விட்டான். கோயில் தர்மகர்த்தா ஓடி வந்து இதற்குள் அவ்விருவரையும் ஒரு வண்டியில் போட்டுக்கொண்டு ஒத்திவாக்கம் ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தார்.
5
தேவானையின் உடைந்துபோன முழங்கால் சொஸ்தமாவதற்கு ஏறக்குறைய மூன்று மாதங்களாயின. ஆயினும் அந்தக் கால் ஊனமுன்னதாகவே ஆய்விட்டது. கையில் தடி இல்லாமல் ஒரு அடிகூட எடுத்து வைக்கச் சக்தியிழந்துவிட்டாள் தேவானை! பொய்க்கால் குதிரை நாட்டியமாடியதால் அவளது ஒரு காலும் நிரந்தரமாக பொய்க் காலாகி விட்டது.
கடைசியாக அந்த ஊமைத்துரை நாடகத்தை நாட்டியம் ஆடியதோடு, அந்தக் குடும்பத்தின் பரம்பரைத் தொழிற் கலையான பொய்க்கால் குதிரை ஆட்டமும் பூண்டற்றுப் போயிற்று.
வேலன் இப்போது காலிழந்த தேவானையைக் கல்யாணம் செய்து கொண்டு, தன் காணி நிலத்தில் பயிரிட்டு ஜீவனம் நடத்தி வருகிறான். ஆயினும் அவன் தனக்குப் பிறக்கப் போகும் பிள்ளைகளுக்காவது அந்தக் கலையைப் பயிற்றுவிக்க வேண்டுமென்று கனவு கண்டு கொண்டு தான் இருக்கிறான்.
“என்ன மச்சான்! கல்லுப் போல குந்திக்கிட்டு இருக்கறே? திருவிளாவுக்குப் போக வண்டி கட்டல்லே?” என்று கேட்டு வேலனின் நீண்ட நேரச் சிந்தனையைக் கலைத்தாள் தேவானை.
“இதோ, ஒரு நிமிசத்திலே வண்டி கட்டிப் பிடறேன். அதுக்குள்ளே நீ போய் வேறே சேலை கட்டிக்கிட்டு வந்துடு” என்று கூறிக்கொண்டே எழுந்து மாட்டுத் தொழுவத்தை நோக்கி நடந்தான் வேலன்.
– 1950, பாரிஜாதம் இதழில் வெளிவந்தது.