பொம்மை யானை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 24, 2025
பார்வையிட்டோர்: 6,012 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இதோ என் கண் முன்னே ஒரு தலையாட்டிப் பொம்மை படாத பாடு படுகிறது. என் தம்பி குழந்தையின் உதை தாங்காமல் இந்தப் பொம்மைச் சோழியர், தத்தளிக்கிறார்; ஆடுகிறார். இதே மாதிரி தான். அந்த மர யானையும் என் கையில் அந்த நாளில் அவதிப்பட்டது. அது ஒரு மரப்பாச்சி யானை. 

சின்ன வயதிலே, எனக்கு விளையாட்டு முழு வதும் அந்த மர யானையோடுதான். ஊர்க் குழந்தை களெல்லாம் ‘சகடை’கள் போட்ட மர யானைகளைத் தெருவிலே இழுத்துக்கொண்டு செல்லும். என் மர யானைக்கு அப்படிச் சகடை ஒன்றும் கிடையாது. ஆகையால், தெருவிலே இழுபடும் தொந்தரவு அதற்கில்லை.

பாட்டி வீட்டிலே நான் இருந்தேன், சிற்றன்னைகள் பல பேர்: ஒவ்வொரு வயசு; ஒவ்வொரு விதம். கடைசியாக என் வயசுக்கு இரண்டு மூன்று வருஷங்கள் மூத்த ஒருத்தி உண்டு. அவளுடன் தான் நான் ஓயாமல் விளையாடுவேன்; சண்டையிடுவேன். அன்பும் அவளிடந்தான் எனக்கு அதிகம். சின்னப் பிராயத்திலே என்னோடு விளையாடிய மர யானையைப் பற்றி நினைக்கும் இந்த நேரத்திலே, அவளைப்பற்றியும் நான் எப்படி நினையாதிருக்க முடியும்? 

மர யானையை நான் சிங்காரிக்க ஆரம்பித்து விட்டால், அவள் சிரித்துக்கொண்டு என் அருகே வந்து உட்கார்ந்துவிடுவாள். “சுவாமிக்கு உற்சவமா, தம்பி” என்று கேட்பாள். ஆமாம்; அந்த மரயானை, எப்போதுமே உற்சவ யானைதான். அதன் முதுகிலே ஓர் ஆணி அடித்து வைத்திருந்தேன். திருப்பதி வேங்கடாசலப் பெருமாள் மரப்பாச்சி ஒன்று என்னிடம் இருந்தது. யானைக் குட்டியின் முதுகில் அடித்த ஆணியோடு அந்த மரப்பாச்சியைச் சேர்த்துக் கட்டுவேன். என் சிற்றன்னைகளின் ரவிக்கைச் சீட்டி களில் மிஞ்சி மிகுந்த பச்சை, நீலம், சிவப்பு முதலிய பல வர்ணத் துண்டுத் துணிகளைச் சுவாமிக்கு உடுத்து வேன். ஒரு சிறிய ஸ்படிக மணிமாலையைக் கழுத் திலே போடுவேன். அலங்காரம் பூர்த்தியாகும். யானை வாகன மகோற்சவமும் நடக்கத் தொடங்கிவிடும். இல்லை, அதை மறந்து விட்டேனே; யானை வாகன மகோற்சவம் மட்டுமல்ல; சேஷவாகன மகோற்சவ மும் ஏக காலத்தில் என் பெருமாளுக்கு நடக்கும். தெப்படி என்று கேளுங்கள். எங்கள் பாட்டி வீட்டுக் கொல்லையில் ஓர் இலவ மரம் உண்டு. இலவங்காயை இரண்டாகப் பிளந்த பாதி ஓடுகள், சில சமயம், சர்ப்பத்தின் தலை படம் விரித்த மாதிரி இருக்கும். அந்த மாதிரி ஓடுகளில் ஒன்றைப் பொறுக்கி வந்து, என் சுவாமியின் தலை மீது கவிந்திருக்கும்படி கட்டி விடுவேன். என் சுவாமியின் உற்சவாலங்கார ஸம்பூர்ணம் இதுதான். 

“ஏண்டா, தம்பி! சுவாமிக்கு இன்னிக்கு, என்ன நைவேத்தியம்?” என்பாள் கமலம் – அவள்தான், என் சிற்றன்னை. 

“ஏ பாட்டி!….” என்று  கூவிக்கொண்டே, உள்ளே ஓடுவேன். 

பாட்டிக்கு விஷயம் தெரியும். அதுவும் நான் சல்லப் பேரன். அவள் முதல் முதலாக வாரி யெடுத்து, மார்பில் அணைத்துக் கொஞ்சிய பேரன் நான்தான்: மூத்த பெண்ணின் மகன். பேரன் படுத்துவது அவளுக்குப் பேரின்பம். பேரனுக்கு ரஸஞ்சாதந்தான் பிடிக்கும்; உருக்காத விழுது நெய்தான் வேண்டும்; கையிலே தங்கக்காப்பு அணிய வேண்டும் – இதெல்லாம் பாட்டியின் பாசமும் ஆசையும். 

“பாட்டீ!” என்று நான் அழைக்கும் குரலைக் கேட்டு அவளுடைய உள்ளம் பூரிக்கும். என் குரலுக் காகவே அது வரையில் காத்திருந்தவளைப் போல, ‘என்னடா ராஜா! என்ன வேணும்?” என்று முகம் நிறைந்த புன்சிரிப்புடன், வாய் நிறையக் கேட்பாள்.. ஐயோ! அவள் போய்விட்டாள். என்றும் மலர்ந்த அவள் முகம் -அந்த அன்பினால் கரைந்த மேனி என் கண்ணை விட்டு அகலவில்லை. 

எனக்கு என்ன வேணும் என்று அவள் என்னைக் கேட்கவா வேண்டும்? அவளுக்கு அது நன்றாய்த் தெரியும். இருந்தாலும் என் வாயால் அதைக் கேட்பதிலே, பாட்டிக்கு ஒரு சந்தோஷம். 

“குடு, பாட்டீ! தின்ன, ஏதாவது குடு!” என்று கத்துவேன். அவள் ஏதாவது கொடுக்கத்தான் வேண்டும்; கொடுக்க எப்போதும் என்னவாவது வைத்துக்கொண்டும் இருப்பாள். என்றாலும், 
பேரனோடு கொஞ்சம் ‘பேரம்’ நடத்தியாக வேண்டும்! 

“தின்னத்தானே? வா, சாதம் போடறேன்.’

”சாதமா? சாதந்தான் தின்னறதோ? அது சாப்பிட றது: பசிக்குச் சாப்பிடறது. வேறே ஏதாவது குடு’ என்று சொல்லி, அவளது சேலைத் தலைப்பைப் பிடித்து இழுப்பேன். 

பாட்டிக்கு வாய் எல்லாம் பல்லாய்ப் போய் விடும்; அவ்வளவு சிரிப்பு: “அடேடே! புடவையை விடுடா! கிழிச்சுப்பிடாதே. தறேன்; தறேன். விட்டுடு.” 

“மாட்டேன். குடுகுடுத்தாத்தான் விடுவேன்.’ 

அப்படியே என்னை இழுத்துக்கொண்டு உள்ளே போவாள். அங்கே போன பிறகாவது உடனே கொடுப்பாளா? அங்கேயும் கொஞ்சம் பேரம், தர்க்கம் எல்லாம் நடந்த பிறகுதான், ஏதாவது கொடுப்பாள். ஒரு நாள் கொஞ்சம் சீடையும் முறுக்கும், பாட்டி தந்தாள். 

என் சுவாமிக்கு அவைகளை நைவேத்தியம் செய் கேள். பிறகு அவைகளை, நான் தின்ன ஆரம் பித்தேன். 

“எனக்குடா!” என்று தலையைச் சாய்த்து, கொஞ்சும் குரலில் கேட்டாள் கமலம். 

ஒரே ஒரு சீடையையும், மிகச் சின்ன முறுக்கு விள்ளல் ஒன்றையும் அவளிடம் நீட்டினேன். 

“இத்துனூண்டுதானா? எனக்கொண்ணும் வாண் டாம்” என்று சொல்லி, அதை அவள் கீழே போட்டாள். 

“வாண்டாத போனா, போ” என்று, என் கையிலே அதையும் எடுத்துக்கொண்டேன். 

கமலம் இரண்டொரு நிமிஷம் முகத்தைச் சுளித்த படி உட்கார்ந்திருந்தாள். பின்பு, “அடே தம்பீ! எனக்கு வேண்டாம்டா! சுவாமியை யானை தூக்கறதே; அதுக்குப் பசிக்காதா? சீடையும் முறுக்கும் அதுக்குக் குடுடா!” என்றாள். 

“அது தின்னாது.” 

”ஏன் தின்னாது? நன்னாத் தின்னும்.” 

“சுவாமியே தின்னலியே. யானை எப்படித் தின்னும்?” என்று நான் கேட்டேன். 

“சுவாமி எல்லாருக்கும் பெரியவர்; எல்லாரையும் காப்பாத்தறவர். அவர் தின்னமாட்டார். பாட்டி நமக்கெல்லாம் பெரியவள். எதையும் நமக்குக் குடுத்து மிஞ்சித்தானே, அவள் சாப்பிடறா: அந்த மாதிரிதான் சுவாமியும். யானை அப்படி இல்லே; அது சாப்பிடும்” என்றாள் சிற்றன்னை. 

“அப்படியானா, சரி’ என்று சொல்லி, ஒரு முறுக்கு விள்ளலை யானையின் தும்பிக்கையில் வைத் துத் திணித்தேன். 

யானை என்ன செய்யும்? 

என்ன செய்தது? 

என் முறுக்கு விள்ளலைத் தின்றுவிட்டது; விட்டது! முறுக்கு விள்ளல் மாயமாய் விழுங்கி விட்டது! முறுக்கு மறைந்தது! 

நான் குதூகலம் அடைந்தேன். அடுத்த விள்ளல், அதற்கப்புறம் ஒரு சீடை, மீண்டும் ஒரு சீடை; இப் படியே கையிலிருந்த தின்பண்டத்தை எல்லாம் யானை யிடம் நீட்டினேன். ஒன்றுக்குப் பின் ஒன்றாய் எல்லாம் மறைந்தது. நான் தின்னும் ஆசையையே மறந்து விட்டேன்; கமலமும் தனக்குத் தரும்படி கேட்கவில்லை. எல்லாச் சீடையும் முறுக்கும் யானைக்கே நிவேதனம் ஆகிவிட்டது. 

அன்று இப்படிச் சீடையும் முறுக்கும் தின்ன ஆரம்பித்த யானை, மறு நாள் தோசை, இட்டிலி எல்லாம் தின்றது. பிறகு, ஒவ்வொரு நாளும் என் பட்சணங்களில் முக்கால்வாசியை அது தின்று வந்தது. ஆனால் அந்த ஒவ்வொரு நாளும் கமலமும் கூடவே இருப்பாள். கமலம் இல்லாமல் எனக்கு விளையாட்டே கிடையாது. 

கமலம் மகா புத்திசாலி. அவளுடைய சூட்சும அறிவை ஊரெல்லாம் வியந்து கொண்டாடுவார்கள். அவளுடைய நிழல் நான். அவளுக்கு நான் மகன் முறையே என்றாலும், “தம்பீ, தம்பீ” என்றே என்னை அவள் அழைப்பாள். அவள் மாத்திரமா, ஊர் முழுதுமே என்னைத் “தம்பீ” என்று தான் அழைப் பார்கள். பின்னால் சில வருஷங்களுக்குப் பிறகு, என் பெயருக்கு ஒரு ப்ரொமோஷன் கிடைத்தது “பெரிய தம்பீ!” என்று. ஏனென்றால் ஊரிலே இன்னொரு தம்பி தோன்றிவிட்டான். அவன் ‘சின்னத் தம்பி. அவன் வேறு யாரும் அல்ல; கமலம் பெரிய வளாய், மணமாகிப் பெற்றெடுத்த குழந்தைதான்.. அவன் பிறப்பதற்கு முன்னே எத்தனையோ நடந்து விட்டது. உலகத்திலே எத்தனையோ மாறுதல்; ஊரிலே எத்தனையோ மாறுதல்; என்னிடமும் கமலத் திடமுமே எத்தனையோ மாறுதல்! மாறுதலா? அவளை நான் எங்கே, எப்போது, எப்படிப் பார்த்தேன்!… 

கமலம் பூச் சவுக்கங்கள் போடுவாள். அவள் போட்ட ஒரு சவுக்கத்திலே, நான் விளையாடுவேனே, அந்த மர யானை மாதிரி ஓர் உருவம் போட்டாள். அதைப் போட்டுப் பூர்த்தி செய்தவுடனே என்னிடம் காட்டி, “தம்பீ, இதோ பார். இது என்னடா?” என்று கேட்டாள். 

“யானை – என் யானை!” என்று கத்திக்கொண்டே அதைப் பிடித்து இழுத்தேன். 

“இந்தாடா! அதைப் பிச்சுப்பிடாதே” என்று. வெடுக்கென்று, அதை அவள் என் கையிலிருந்து பிடுங்கினாள். அட பகவானே! அது என்ன விபரீதத் தில் கொண்டுபோய் விட்டது! இன்று நினைத்தால், அதெல்லாம் பெரிய மாயையாகத் தோன்றுகிறது. மனித உள்ளம். ஒரு காட்டாறு; அதன் உணர்ச்சி வெள்ளம் அறிவுக் கரைகளை உடைத்துக் கொண்டு பொங்கி எழும்போது, ஆண்டவனேகூட அதற்கு அணை போட முடியாது என்று தான் தோன்றுகிறது. 

பூச் சவுக்கத்தை, கமலம் என் கையிலிருந்து பிடுங்கியபோது, என் தாய் அங்கே வந்தாள். 

“ஏண்டி, மூதேவி! உன் சவுக்கத்தைக் குழந்தை கடிச்சா முழுங்கிப்பிடுவன்! நாய் கவ்வறமாதிரி விழுந்து பிடுங்கறையே!” என்று சீறிக் கமலத்தை என் தாய் ஓர் அறை அறைந்தாள். 

உடனே கமலம் அழுதுகொண்டே சவுக்கத்தை என் மூஞ்சியில் எறிந்துவிட்டு, “இனிமே இந்தச் சனியன் பிடிச்ச வீட்டிலேயே நான் இருக்கப் போற தில்லே” என்று சொல்லி வாசலிலே ஓடினாள். 

அன்று பகல் சாப்பிடவே அவள் வரவில்லை. எங்கே தேடியும் அவளைக் காணவுமில்லை. தெரு முழுதும் எல்லா வீட்டிலும் தேடியாயிற்று. எல்லாக் கிணறுகளையும் குட்டைகளையும் கலக்கியாயிற்று. அவள் அகப்படவில்லை. அந்தக் கோபத்திலே,என் தாயைப் பாட்டி ஏதோ திட்டினாள். 

“என்னவோ, என் வாய் அடைத்துக் கிடக் காதோ? கூடப் பிறந்ததுதானேன்னு நினைச்சு ஒரு வார்த்தெ சொல்லிப்புட்டேன்; ஒரு தட்டுத் தட்டிப் பிட்டேன். அது இத்தனை அனர்த்தமாப் போச்சே!” என்று கண்ணீர் விட்ட என் தாய் சாப்பிடவில்லை. 

பாட்டி பெருமூச்செறிந்தாள். அவளும் சாப்பிட வில்லை. ஆளுக்கு ஆள் எல்லாரும் என்னவோ முணு முணுத்துக்கொண்டே யிருந்தார்கள். 

“நீ வாடா ராஜா! நீ ஏன் சாப்பிடாதிருக்கே?” என்று இரங்கிய குரலில் என்னை அழைத்தாள் பாட்டி. 

“இதனாலேதான் இத்தனையும் வந்துது! இதுக்கு என்ன சோறு இந்த வீட்டிலே? கிடக்கட்டும் பட்டினி” என்று என்னை ஓர் அறை அறைந்தாள் தாய். நான் சுருண்டு விழுந்து அப்படியே தூங்கி விட்டேன். 

மாலையில்தான் விழித்தேன்.

மாக்கல் தீபம், சுவாமி படத்துக்கு அருகே சுவரில் மாட்டியிருந்த ஒரு மரத்தட்டில் மினுக்கு மினுக்கென்று எரிந்துகொண் டிருந்தது. அந்தத் தீப நிழலிலே, முனகலும் பெருமூச்சுமாய், என் தாய் உட்கார்ந்திருக்கிறாள். அவளருகே நின்றபடி, “ஏண்டி கோமு, இப்ப என்னடி வந்துடுத்து? எழுந்திருடி. நீயும் பட்டினி; குழந்தையும் பட்டினி. யாரு என்ன அப்படிப் பெரிய குத்தம் பண்ணிப்பிட்டா? ரெண்டும் சிறிசுகள். என்னமோ அப்படித்தான் இருக்கும். சாப்பிடடியம்மா” என்று பாட்டி கெஞ்சிக்கொண்டிருந்தாள். 

மற்றொரு பக்கத்தில், கூடத்திலிருந்து முற்றத்து நிலவிலே, தன்னந்தனியாய் அணில் குஞ்சுபோல், குதித்துக் குதித்து விளையாடிக்கொண் டிருந்தாள் கமலம். அவளை எங்கேயோ ஊருக்கு வெளியே தோப்பில் கண்டுபிடித்து, வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். 

நான் கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்து உட்கார்ந்ததைக் கண்ட கமலம், “தம்பீ, ஓடி வா. நிலாப் பூச்சி, நிழல் பூச்சி ஆடுவோம்” என்று அழைத்தாள். 

நானும் சிரித்துக்கொண்டே எழுந்து, அவளிடம் ஓட முயன்றேன். 

முடங்கிக் கிடந்த சர்ப்பத்தைக் குத்திவிட்டது போல், சீறி எழுந்தாள் என் தாய். “ஏ புத்தியில்லாப் பிணமே! வா இங்கே. அந்தப் பெரிய மனுஷியோடே உனக்கென்னடா விளையாட்டு?” என்று சொல்லி, ஓடிவந்து என் கையைப் பிடித்து இழுத்து, ஒரு மூலையில் சுவரருகே என்னை உட்கார்த்திவிட்டாள் 

“அடி கோமு, இவ்வளவுதான் தெரியுமா உனக்கு? இன்னும் உண்டோ?” என்று வருத்தத் தோடு கேட்டாள் பாட்டி. 

நயந்தும் கோபித்தும் பரிந்தும் பலவிதமாய் என் தாயைச் சமாதானம் செய்து பார்த்தாள் பாட்டி. தாய் ஒன்றுக்கும் மசியவில்லை. 

அன்றிரவு என் தாய் பட்டினி; பாட்டியும் பட்டினிதான். வீடே அழுது வழிந்தது. 

மறுநாள் என் தாய் என்னை அழைத்துக்கொண்டு புக்ககத்துக்குப் புறப்பட்டுவிட்டாள். 

இந்த வருத்தம் பல வருஷங்கள் வரை நீடித்தது; தீராத மனஸ்தாபமாக வளர்ந்தது. பாட்டி வீட்டிலே எத்தனையோ வாழ்வு தாழ்வுகள் ஏற்பட்டன. ஒன்றுக்கும் நாங்கள் போகவில்லை. 

கமலத்துக்கு எங்கேயோ கல்யாணம் நடந்தது. அதற்கு நானோ, தாயோ, வேறு யாருமோ போக வில்லை. கமலம், கணவனின் வீடு சென்றாள்; குழந்தை பிறந்தது. எல்லாம் கேள்விப்பட்டோம். ஒரு வைபவத்தையும். எங்கள் கண்ணாரக் காண, நாங்கள் கொடுத்து வைக்கவில்லை. 

ஆனால், நான் மாத்திரம் அடிக்கடி, கமலத்தைப் பற்றி நினைப்பேன்; அப்போதெல்லாம் அந்தப் பின்னல் சவுக்கமும் மர யானையும் ஞாபகத்துக்கு வரும். என்ன ஆச்சரியமான யானை! எத்தனை பட்சணங்களைத்தின்ற யானை! உண்மையிலே யானையா தின்றது? என்னால் அதை நம்ப முடியவில்லை. வயசாகிவிட்டது; அநுபவமும் கல்வியும் பெற்றிருக்கிறேன். ஓ! ஒரு பொம்மை யானை தின்பண்டங்களை யெல்லாம் எங்கேயாவது தின்றிருக்க முடியுமா? இனியும் அதை நான் நம்ப முடியுமா? இல்லவே இல்லை; யானை தின்னவே இல்லை. அது நிச்சயம், பின்னே? 

அந்த யானையோடு நானும் கமலமும் விளையாடிய காட்சியைத் தினம் தினம் ஞாபகத்துக்குக் கொண்டு வருவேன். யானை எப்படி நிற்கும்? நான் எப்படி உட்கார்ந்திருப்பேன்? கமலம் எப்படி உட்கார்ந் திருப்பாள்? இதையெல்லாம் யோசித்து யோசித்துப் பார்ப்பேன். என் பட்சணங்களை யானை தின்றிருக்க முடியாது; ஆனாலும், அவை மாயமாய் மறைந்து போயின; கமலந் தான் எப்படியோ கைச்சாதுரிய மாய்ப் பட்சணங்களைக் கவர்ந்திருக்கிறாள்; வேறு வழியே இல்லை. ஆனால், அது எப்படி? என்னால் அதைக் கற்பனை செய்யவே முடியவில்லை. வெறும் ஊகந்தான். 

இத்தனை வருஷம் கழித்து அந்தக் காட்சியை நான் நினைக்கும்பொதெல்லாம், எனக்குத் துளியும் கோபம் வருவதில்லை; நகைப்புத்தான் வரும். மனத்திலே என்னை அறியாத ஒரு களிப்பும் உண்டாகும். குறும்புக்காரக் கமலத்தின் சிரித்த முகமும் என் கண் முன்னே வந்து நிற்கும். பட்சணங் களை என்னிடமிருந்து பறிப்பதிலே அவளுக்கு ஆனந்தமில்லை. எத்தனையோ தடவை, தன் பங்கு பட்சணங்களையும் வேறு பண்டங்களையும் அவள் எனக்கு அன்போடு கொடுத்திருக்கிறாள். என்னை ஏமாற்றுவதிலேதான் அவளுக்கு ஆனந்தம். ஏமாந்து போவதிலே நானுந்தான் அன்று ஆனந்தம் அடைந்தேன். இப்பேர்ப்பட்ட கமலத்தைப் பார்த்து, எத்தனை வருஷம் ஆயிற்று! அவள்தான் பாவம் பண்ணினாள்; அன்புக் களஞ்சியமான பாட்டியைக் கூடப் பார்க்க முடியவில்லையே! எத்தனையோ நாள் ஏங்கினேன்; பெருமூச்செறிந்தேன். பல நாள் கனவிலே, நான் மீண்டும் பாலகனாகிப் பாட்டியுடன் கொஞ்சி, கமலத்தோடு விளையாடி, யானைக்குத் தின்பண்டம் அளித்ததுதான் எனக்குக் கிடைத்த ஆறுசல். சில சமயம் கமலத்தின் குழந்தையைக் கூடக் கனவிலே கண்டிருக்கிறேன்; அப்போதும், நான் சிறுவனாய்த்தான் இருப்பேன். 

“அம்மா! பாட்டியைப் பார்க்க எனக்கு ஆசையா யிருக்கே; உனக்கு ஆசையாய் இல்லையா?” என்று ஒன்று இரண்டு முறை தாயைக் கேட்டேன். 

“எனக்கு அம்மாவும் கிடையாது; தங்கையும் கிடையாது. நீ வேணுமானா, போய் உறவு கொண்டாடிட்டு வா” என்று சலித்துக்கொள்வாள் தாய். அவள் மகா திடசித்தம் உள்ளவள்; வீம்பு மிகுந்தவள்; நெஞ்சழுத்தம் நிறைந்தவள். அவளுக்கு இல்லாத உறவு எனக்கேது? 

ஒரு சமயம் என் தாய்க்கு உடர்பு அசௌக்கியம் ஏற்பட்டது. 

“சகாயத்துக்கு, உன் அம்மாவை வரவழைக் கட்டுமா?” என்று அவளைக் கேட்டார் என் தகப்பனார். 

அவருக்கும் அதே பதில்தான்: ‘எனக்கு அம்மாவும் கிடையாது: தங்கையும் கிடையாது. உங்கள் அம்மாதான் என் அம்மா. உங்கள் தங்கை தமக்கைகள் தான் எனக்கும் தங்கை தமக்கைகள். அவர்கள் செய்யும் ஒத்தாசை எனக்குப் போதும்.” 

அத்தைமாரும் தகப்பனாரைப் பெற்ற பாட்டி யுமே பக்கத் துணை. ஆனாலும், தாயின் நோய் சற்றுக் கடுமைப்பட்டது. எல்லாரும் பயந்துவிட்டார்கள். என் தாயைப் பெற்ற பாட்டிக்கு, யாரும் அறியாமல். என் தகப்பனார் ஒரு கடிதம் எழுதிப்போட்டார். 

சில தினங்களில் பாட்டியும், சிற்றன்னைகள் மூவரும் ஓடி வந்தார்கள். கமலம் தன் குழந்தை யோடு வந்தாள். என் மனம் துள்ளிக் குதித்தது. மட்டற்ற மகிழ்ச்சியால், என் உள்ளம் குதூகலித்தது. அதிலேதான் என்ன வேதனை! 

படுக்கையில் இருந்த தாயிடம் ஓடோடிச் சென்றேன். “அம்மா! அம்மா! கமலம் வந்திருக்கா. அவ குழந்தை வந்திருக்கு. பாட்டி வந்திருக்கா. எல்லாரும் வந்திருக்கா” என்று கண்ணீரோடு கூச்ச விட்டுக்கொண்டு சொன்னேன். 

தாய் தலை நிமிர்ந்தாள். அந்தத் தள்ளாத நிலையிலும், அவள் கண்களில் ஆத்திரம் ஜொலித்தது. கம்பீரமான குரலில், “அவாளெல்லாம் யாரு? யாரையுமே எனக்குத் தெரியாது. யாரும் இங்கே வரவேண்டாம், என்னைக் காப்பாத்த வேண்டாம்னு சொல்லு” என்று துடுக்கோடு சொன்னாள். 

பெண்ணைத் தேடிவந்த பாட்டியின் காதிலே அது விழுந்தது. அவள் அதைச் சட்டை செய்யாமல் உள்ளே வந்தாள். கமலம் மட்டில் இந்தக் கர்ண கடோரமான சொல்லைக் கேட்டு, உள்ளே வரப் பிடிக்காமல் கூடத்திலேயே நின்றுவிட்டாள். நான் அவளிடம் திரும்பி ஓடினேன். அவளுடைய குழந்தையோடு கொஞ்சினேன். 

‘சின்னம்மா! இதும் பேர் என்ன?”

“வேங்கடேசன்.” 

“ஒ! திருப்பதிப் பெருமாள் பேரா?’ 

ஆமாம். உன் மரப்பாச்சிப் பெருமாள் இல்லே; அதும் பேரு. ஆனா, கண்ணான்னுதான் கூப்பிடறோம். 

சின்னம்மா, உனக்கு அது ஞாபகமிருக்கோ- நம்ப விளையாட்டு யானை ஞாபசமிருக்கோ? அது சீடை, முறுக்கு, பட்சணமெல்லாம் தின்னுமே; அது ஞாபகமிருக்கோ?” என்று பரபரப்புடன் கேட்டேன். 

மேகம் சூழ்ந்த வானத்திலே சிறிது இடைவெளி தோன்றி ஜொலித்த சூரியனைப்போல், வாடிய அவள் முகத்திலே ஒரு பிரகாசம் தோன்றியது. அவள் களுக் கென்று சிரித்தாள். ஆனால் ஒன்றும் பேசவில்லை. 

“சின்னம்மா, நிஜமாய்ச் சொல்லு: நீதானே என்னை ஏமாத்தினே? யானை சாப்பிடவே இல்லையே?” என்றேன். 

அவள் மீண்டும் சிரித்தாள். பதில் கிடையாது.

இதற்குள் பாட்டி உள்ளே யிருந்து கண்ணீரும் கம்பலையுமாய், ”எனக்குக் குடுத்து வெச்சது அவ்வளவு தான். என்னைக் கண்டா அவளுக்கு வேப்பங் காயாக கசந்து போச்சு. பெத்த மனம் கேக்கறதோ! எப்படியாவது அவ மகராஜியா இருந்தாப் போரும். நாம்ப போவோம்; வாம்மா கமலம். அவ முகம் குடுத்துப் பேசாத போனா.அப்புறம் இங்கே நமக்கு என்ன இருக்கு?” என்று வருந்திக்கொண்டே வெளியே வந்தாள். என்னைப் பார்த்ததும். அவ ளுடைய அழுகை அதிகமாயிற்று. என் கண்ணும் கலங்கிவிட்டது. ”உன்னைக் கொண்டாடக்கூட எனக்குப் பாத்தியமில்லாமல் போயிடுத்துடா. ராஜா’ என்று சொல்லி, அவள் என் முகத்தைத் தடவி முத்த மிட்டுக்கொண்டாள். 

அப்புறம், பாட்டியும் சிற்றன்னைகளும் அதிக நேரம் தாமதிக்கவில்லை. அவரவர் ஊருக்குப் போய் விட்டார்கள். 

தெய்வ கிருபையால் ஒன்றும் அசம்பாவிதம் நேர வில்லை. இந்தக் கண்டத்துக்கு என் தாய் பிழைத்து விட்டாள். ஆனால், அவள் உடம்பு மிகவும் தளர்ந் திருந்தது. மனத்திலும் நிம்மதியில்லை. மனம் சலித்துக்கொண்டே, பல வேளை முனகுவாள். “அம்மா!…… தங்கை!…… தமக்கை ! உறவு!……. என்று முணுமுணுப்பாள். 

பாட்டியும் மற்றவர்களும் வந்துபோன விஷயத்தைப் பற்றி எப்போதாவது அவளிடம் பேச் செடுத்தால், அவளுக்கு ஏதோ மனவேதனை உண் டாகும். “ஐயோ! ஏன் ரகு என்னைத் தொல்லைப் படுத்தறே?…அவ மகா உத்தமி கமலம்அவா எல்லாருமே நல்லவா….என் தலையெழுத்து… எனக்குப் பாக்கியமில்லே” என்று பாதி வார்த்தை களை விழுங்கிக்கொண்டே ஏதோ சொல்லி நகர்ந்து விடுவாள். ஆனால் அவளுடைய வீம்பு மட்டும் குறைய வில்லை; உறவு கொண்டாடவும் அவள் இஷ்டப்பட வில்லை. 

திடீரென்று ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது. பாட்டி வீட்டிலே, கமலம் வந்திருக்கிறாள்; சாகக் கிடக்கிறாள்-இதுதான் விஷயம். 

அம்மா மனசு மாறிவிட்டது. உடனே போக வேண்டுமென்று அவள் ஆத்திரப்பட்டாள். இறக்கை இருந்தால், அவள் நிச்சயமாய்ப் பறந்தோடி யிருப்பாள்; அவ்வளவு பரபரப்பு அவளிடம் தென் பட்டது. 

அப்பா,அம்மா, நான் மூவரும் பிரயாணம் ஆ3னாம். வழியிலெல்லாம், என் தாய், “ஐயோ! வீட்டுக்கு வந்தவளை வான்னு அழைக்கலையே. முகத்தைக்கூடப் பார்க்காமே விரட்டினேனே. முக முழியாவது கிடைக்கிறதோ இல்லியோ!” என்றெல் லாம் கதறிக்கொண்டே வந்தாள். 

பாட்டி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். கமலத்தின் நிலைமை மோசமாய்த்தான் இருந்தது. என் தாயும் பாட்டியும் ஒருவரை யொருவர் கண்டதும், வாய் பேசாமல்’ கண்ணீர் விட்டார்கள். இன்னும் என்னைச் சிறு குழந்தை போலவே பாவித்த பாட்டி, வாரி யெடுத்துத் தன் மடிமீது உட்கார்த்திக் கொண்டாள். 

கமலத்தின் படுக்கையருகே நாங்கள் சென்ற போது, “கமலம், கமலம்! கண்ணை முழி. யார் வந்திருக்கா, பாரு. ரகுடீ, ரகு!” என்றாள் பாட்டி. 

கமலம் உடம்பை வளைத்துக்கொண்டு, சிரமப் பட்டுத் திரும்பி, கண்ணை விழித்துப் புன்சிரிப்புச் சிரித்தாள். வாயைக்குவித்து ஏதோ பேச முயன்றவள், முடியாமல் மீண்டும் மூடிக்கொண்டாள். என் தாய். தன் முகத்தை மூடிக்கொண்டு, சோக உருவாய் நின்றாள். 

அப்போது, எனக்குப் பழைய காட்சி நினைவுக்கு வந்தது. கமலம் விழித்திருந்தால், அன்று தாய் சொன்னது போல்தான் இன்று கமலமும் சொல்லி யிருப்பாளோ? இல்லை. மாலையில் கமலம் விழிக்கத் தான் விழித்தாள். என் தாயைக் கண்டதும்.’வா, அக்கா! எங்கே கையை நீட்டு” என்று அன்போடு அழைத்தாள். கண்ணீரோடு நீட்டிய என் தாயின் கையிலே,கமலம் தன் கையை வைத்து, அழுத்தினாள். 

“கமலம்! கமலம்!” என்று தீனக்குரலில் உச்சரித்துப் பெரிமூச்சு விட்டாள் தாய். 

கமலத்தின் உடம்பு தேறவில்லை. இரண்டொரு நாள் இப்படியே கழிந்தது. கூடத்திலே நான் உட்கார்ந்திருந்தேன். பாட்டி எனக்கு ஏதோ பலகாரம் கொண்டுவந்து வைத்தாள். யார் எப்படிச் சாகக் கிடந்தால் என்ன? எந்த விபரீதம் நடந்தால் என்ன? நம் பாழும் வயிறு கேட்கிறதா? தின்று தானே தொலைக்கவேண்டி யிருக்கிறது? நாள் பலகாரத்தை விண்டு துளிதுளியாய்த் தின்ன ஆரம் பித்தேன். வேண்டா வெறுப்போடும் வேதனை யாடுந் தான் தின்றேன். கமலம் பிழைக்க மாட்டாளா? அந்தப் பழைய கால விளையாட்டு மீண்டும் என்றாவது திரும்புமா? இப்படி என்ன என்னவோ அர்த்த மில்லாத எண்ணங்கள். 

இப்போது என் பக்கத்தில் சுவருக்குச் சமீபத்தில் கமலத்தின் குழந்தை, அந்த மர யானையை வைத்து விளையாடிக்கொண் டிருப்பதை க் கண்டேன்; பக்கத்திலே யாருமில்லை. பாட்டியும் உள்ளே போய் விட்டாள். 

“கண்ணா,இங்கே கொண்டா அதை” என்றேன்.

குழந்தை அந்த யானையை என்னிடம் கொண்டு வந்தான். யானையைத் தடவிக் கொடுத்தேன். முதுகிலே நான் அறைந்திருந்த ஆணியை யாரோ பிடுங்கி விட்டார்கள். ஆனால், அந்த வடு மாத்திரம் அப்படியே இருந்தது. யானை ஏதோ வேதனை தாங்காமல் அழுவதுபோல் தோன்றியது. 

திடீரென்று என்னை அறியாமலே, என் கை ஒரு தோசை விள்ளலை, அந்த யானையின் வாயருகே கொண்டுபோய் நீட்டியது. என் அறிவை மீறிய பழக்கத்தின் காரியம். மறுவிநாடி, யாராவது கவனிக்கிறார்களோ என்ற வெட்கத்தால் நாற்புறமும் பார்த்துக்கொண்டு, கையைப் பின்னால் இழுத்தேன். 

என்ன அதியசம்! கையிலே தோசை விள்ளலைக் காணாம். என்னைத் தூக்கிவாரிப் போட்டது. ஏதோ ஒரு பயங்கர சம்பவம் நிகழ்ந்ததுபோல் நடுங்கியபடி யானையை வெறித்துப் பார்த்தேன். 

பக்கத்திலே சிறுவன் சிரித்துக்கொண்டு, ”எனக்குத்தானே. அண்ணா,தந்தே இது?” என்று செரில்லி அந்தத் தோசை விள்ளலைத் தின்றுகொண் டிருந்தான். 

எனக்குச் சிரிப்பு வந்தது. என்ன மூடத்தனம்!

“ஆமாம்; உனக்குத்தான், கண்ணா! சாப்பிடு.”

இப்படி நான் சொல்லிக்கொண்டே யிருக்கும் போது, “அடே ரகு! ஓடியாடா. குழந்தையைக் கொண்டா, அவள் கூப்பிடறாடா” என்று உள்ளே யிருந்து, அம்மா அழைத்தாள். 

குழந்தையைத் தூக்கிக்கொண்டு உள்ளே போனேன். கமலம் படுத்த படுக்கையாய், நினைவு பிசகாமல் ஈனக்குரலில், “கண்ணா! ரகு! எங்கே? அவர்கள் வரல்லையா இன்னும்?” என்று முனகிக் கொண்டிருந்தாள். 

“இதோ கண்ணன்…. இதோ ரகு இருக்கான், கமலம்.” 

இருவரும் கமலத்தின் பக்கத்தில் போய் நின்றோம். 
 
குழந்தையைக் கமலம் உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஒரு முறை தடவிக் கொடுத்தாள். தலை நிமிர்ந்து முத்தமிட முடியாததால், வாயை மட்டும் குவித்து, முத்தமிடும் பாவனை செய்தாள். 

பிறகு, “கிட்ட வா, தர்பீ” என்று என்னை அழைத்தாள். அவள் கண்கள் பளபளத்தன. முகத்திலே புன்சிரிப்பு மாறவில்லை. 

மூச்சுத் திணறிக்கொண்டே, மங்கிய குரலில் “தம்பீ! சமத்தா யிரு. நீ அப்ப கேட்டயே யானை பட்சணம் சாப்பிட்டதான்னு – ஏண்டா அசடே, அது எங்கேயாவது சாப்பிடுமா?- நான்தான்டா உன்னை ஏமாத்தினேன் – அதை மறந்துடு; மனசிலே வெச்சுக் காதே- வெச்சுக்கலேன்னு சொல்லு -அந்தச் சவுக்கம் இருக்குப் பாரு; அதை ….” என்றாள். அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை. பிறகு, அவள் பேசவே இல்லை. வீடு கண்ணீர் வெள்ளத்தில் அமிழ்ந்தது.

– நொண்டிக் கிளி, முதற் பதிப்பு: ஸெப்டம்பர் 1949, கலைமகள் காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *