பொன்னர்-சங்கர்






(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30
21. வீரமலையைப் பற்றி வீரமலை
சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு, மாளிகையின் அந் தக் கூடத்தில் ஒரு குரல் எழுந்தது.

“எங்கள் ஆசான் ராக்கியண்ணன், தங்களிடம் நடந்தவை யனைத்தையும் முழுமையாகக் கூறி முடித்துவிட்டார் என்று நினைக்கிறேன். அதனால் தலையூரில் இருந்து ஆழ்ந்த சிந்தனையுடன் மாரிக்கவுண்டன் பாளையத்துக்குத் திரும்பி வந்த ராக்கியண்ணன் என்ன செய்தார் தலையூர்க் காளி மன்ன னுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற எவ்வாறு செயல் பட்டார் என்பதை நான் சொல்வதற்கு அனுமதிப்பீர்களா?”
இப்படிக் கேட்டது வீரமலை! எல்லோருடைய கவனமும் அவன் பக்கம் திரும்பியது. மாயவர் கண்களில் கலக்கமிருந் தாலும் கருணை பொழியும் தன்மையுடன் வீரமலையை நோக்கின.
“ஆமாம்! ராக்கியண்ணன் வாயிலாக அறிந்துள்ள அனைத் தையும் எடுத்துக் கூறுவதே என் வருகையின் குறிக்கோள். நடைபெற்ற சம்பவங்களில் உனக்கு நேரடித் தொடர்பு இருக்குமே யானால் உன் வாயாலேயே அதைச் சொல்லலாம். எனக்கும் கூட அது விருப்பம்தான்!”
என்றார் மாயவர்! பொன்னர் சங்கர் இருவருக்கும் சற்றுப் பின்னால் இருந்த வீரமலை, அவர்களைச் சிறிது நகர்த்திக் கொண்டு முன்னோக்கி வந்து; உள்ளங்கையால் நெற்றியைத் தேய்த்துத் தடவி விட்டுப் பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
“தலையூரிலிருந்து மாரிக்கவுண்டன்பாளையம் வரையில் ராக்கியண்ணன் ஏறியிருந்த குதிரை ஓடி வந்ததாகவே தெரியவில்லை. அடி மேல் அடி வைத்து நடந்து வந்தது போலவே பாசறை வாசலில் வந்து நின்றது. மிகவும் களைப்புற்றவராக வும் சோகமுகத்தினராகவும் ராக்கியண்ணன் காணப்பட்டதை சிறுவன் வீரமலை பார்த்து வியப்படைந்தான். தனது ஆசானை இவ்வளவு சோர்வாக அவன் கண்டதேயில்லை. நெடிதுயர்ந்து நெஞ்சை நிமிர்த்தியவாறு மதயானை போல நடந்து வரக்கூடிய அந்த வீர உருவம் சூறாவளிக் காற்றில் ஆடி ஓய்ந்து நிற்கும் மரம் போலக் காட்சி தந்தது. வீரமலை, குதிரையைப் பிடித்து லாயத்தில் கட்டி விட்டு, தனது ஆசானின் முக மாற்றத்துக்குக் காரணம் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். பாசறைக் குள் நுழைந்த ராக்கியண்ணன். அங்கே கிடந்த சாய்வான பிரம்பு நாற்காலியில் தனது உடலைப் போட்டார் என்றுதான் சொல்ல முடியும் – அமைதியாக சாய்ந்து கொண்டார் என்று கூற முடியாது. அடிக்கடி அவர்விட்ட பெருமுச்சின் ஒலி, பாசறையில் பரவியது. வீரமலை மெதுவாக நடந்து அவர் அருகே சென்று, அய்யா,குடிப்பதற்குத் தேன் கலந்த பால் சூடாக இருக்கிறது. தரட்டுமா?” என்று கேட்டான். வேண் டாம் என்று அவர் தலையசைத்து விட்டு சாய்வு நாற்காலியை விட்டு எழுந்தார். பாசறையைக் காலடிகளால் அளப்பது போல அங்குமிங்கும் நடந்து கொண்டேயிருந்தார். “வீரமலை!” என்று அழுத்தம் திருத்தமாக அவர் குரல் ஒலித்ததும், அவன் அவர் அருகே ஓடி நின்றான்.
ராக்கியண்ணனின், கை, வீரமலையின் தோளைத் தடவியது. மீண்டும் “வீரமலை” என்ற ஒரு சோகமான அழைப்பு; ஆனால் எப்போதும் போன்று அழுத்தத்துடன்!
“அழகுநாச்சி வரவில்லையா?” என்று ராக்கியண்ணன் வீரமலையிடம் கேட்டுக் கொண்டே பாசறைக்கு வெளியே வந்து அங்கிருந்த கொய்யா மரத்தின் பெரிய கிளையில் கையை அழுத்திக் கொண்டு நின்றார்.
அழகுநாச்சி, ஆசான் ராக்கியண்ணனின் மனைவியார்! வீரத்தைக் காதலிப்பது போலவே ராக்கியண்ணன் அழகு நாச்சியாரையும் காதலித்தார்! பாசறையிலிருந்து அவரது இல் லம் கூப்பிடு தூரத்தில் தான்! ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் அழகுநாச்சியார் இல்லத்தை விட்டுப் புறப்பட்டு நடந்தே பாசறைக்கு வந்து விடுவார். ராக்கியண்ணனும் நாச்சி யாரும் பாசறைக்குள்ளிருக்கும் சோலையில் உலவியபடியே பேசி, சிரித்து உற்சாகமாகப் பொழுதைக் கழிப்பார்கள். மாலை வந்து, பின்னர் இருளின் கை ஓங்குவதற்குள்ளாக அழகுநாச்சியார் வீட்டுக்குத் திரும்பி விடுவார். இரவு உண வருந்தும் நேரம் வரையில் ராக்கியண்ணன் பாசறையில் இருந்து விட்டுப் பிறகுதான் வீட்டுக்குச் செல்வார்.
“அம்மா வந்தார்கள். நீங்கள் வருவீர்கள் என்று காத்திருந் தார்கள். நேரமாகவே சற்று முன்புதான்! வீட்டுக்குச் சென் றார்கள். நீங்கள் வந்ததும் ஓடி வந்து தெரிவிக்கச் சொன்னார் கள். போய் சொல்லி விட்டு வரட்டுமா?”
என்று வீரமலை பணிவுடன் பதில் அளித்து விட்டு, ஆசான், என்ன உத்தரவிடுகிறார் என எதிர்பார்த்தான்.
“நீ போக வேண்டாம். நானே வீட்டுக்குப் போகிறேன்” என்ற ராக்கியண்ணன், பெரிய கிணற்றின் சகடைக் கயிறை இழுத்து விட்டு கனமான வாளியில், தானே தண்ணீர் மொண்டு முகம், கால், கைகளைக் கழுவிக் கொண்டார். வீரமலை, ராக்கியண்ணனின் ஒவ்வொரு அசைவையும் கவனமாகப் பார்த்துக் கொண்டே அங்கு நின்றான்.
“வீரமலை! நீ ஒரு காரியம் செய்ய வேண்டும்” என்றார் ஆசான்!
“என்ன காரியம் அய்யா?”
வீரமலை, வழக்கமான பணிவுடன் கேட்டான். ராக்கியண் ணனின் முகத்தில் வெண்மேகத்திரளாக எழுந்த சோகம், கரு மேகக் கூட்டமாக மாறியதை வீரமலையால் உணர முடிந்தது. தொண்டையைக் கனைத்துக் கொண்டு ராக்கியண்ணன், கிணற் றின் அருகேயிருந்த கருங்கல்லில் அமர்ந்தார். வீரமலையை இழுத்து அவன் தலையை மெல்லக் கோதியவாறு பேசினார்.
“புதிய காரியம் ஒன்றுமில்லை. சங்கரன்மலைக்குப் போக வேண்டிய காரியம்தான். அங்கே போய் குன்றுடையான் எப் படியிருக்கிறார் தாமரைநாச்சியார் எப்படியிருக்கிறார் அவர்களுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் எப்படியிருக் கின்றன என்ற விபரமெல்லாம் தெரிந்து கொண்டு நாளை இரவுக்குள் நீ வந்து சேர வேண்டும்! அங்கே யார் கேட்டா லும் நான் அனுப்பி நீ வந்திருப்பதாகச் சொல்லக்கூடாது. அவர்கள் உன்மீது சந்தேகப்படாதது மாதிரி நடந்து கொண்டு விபரங்களைத் தெரிந்து கொண்டு திரும்ப வேண்டும்.”
”சரி!” என்று வீரமலை உறுதியுடன் சொல்லவே, ”களைப் பாயிருக்கிறது பயணக் களைப்பு! வீட்டுக்குப் போய் ஓய் வெடுக்கிறேன் நான் சொன்னபடி நீ உடனே புறப்படு!’ என்று அவனிடம் கூறிவிட்டு ராக்கியண்ணன் பாசறையிலிருந்து புறப்பட்டார்.
ஆசானின் ஆணைப்படி வீரமலை, சங்கரன்மலைக்கோட் டைக்குப் புறப்பட்டான். அவனுக்கு ஒரே குழப்பம்! சங்கரன் மலைக்கோட்டைக்கு ராக்கியண்ணனே அவனை ஓரிரு தடவை அழைத்துச் சென்றிருக்கிறார். அவனது தந்தை சோழன்தோட்டி மணியங்குரிச்சியெனும் ஆரிச்சம்பட்டியில் பணியாற்றிய கார ணத்தால் தாமரை நாச்சியின் அன்பைப் பெற்றிருந்ததால் அந்த சோழன்தோட்டியின் மகன் வீரமலையிடம் தாமரைக்கு ஒரு பரிவு இருக்கவே செய்தது. எனவே வீரமலை சங்கரன் மலை மாளிகைக்கு சென்று அங்கு நடப்பவைகளைத் தெரிந்து கொண்டு ராக்கியண்ணனிடம் வந்து சொல்வது அவனுக்கு எளிதான செயலேயாகும்.
இருந்த போதிலும் இப்போது அவனை அங்கு அனுப்பு வதில் ராக்கியண்ணனுக்கு இவ்வளவு சங்கடம் ஏற்படுவா னேன்? எதற்கும் கலங்காத அவரது முகம் கவலையால் வாடி யிருப்பானேன்? இந்த வினாக்கள் குடைந்தெடுக்க; அவற்றுக்கு விடைகாண முடியாமலே அவன் சங்கரன்மலையை நோக்கி நடந்தான்.
சூரிய உதயத்துக்கு முன்பே சங்கரமலையைச் சென்றடைந்த வனுக்கு வியப்பு காத்திருந்தது. கோட்டை முகப்பில் வண்ணத் தோரணங்களை அழகுறக் கட்டிக் கொண்டு நூற்றுக்கணக்கா னோர் சுறுசுறுப்பாக இருந்தனர். வீரமலை ஒரு வீரனைப் பார்த்து என்ன விசேஷம் என்று கேட்டான். குன்றுடையாரின் குழந்தைகளுக்கு மறுநாள் இரவு பெயர் சூட்டு விழா என்று அந்த வீரன் தெரிவித்தான். அதற்கு மேல் வீரமலை அங்கு நிற்க விரும்பவில்லை. கோட்டைக்குள் போவது போலப் போக்குக் காட்டி விட்டு வேகவேகமாக மாரிக்கவுண்டன் பாளையத்துக்கு திரும்பினான். அந்தி சாய்ந்து இரண்டு நாளி கைக்கெல்லாம் பாசறைக்கு வந்தடைந்த வீரமலை, ராக்கி யண்ணனிடம்; குன்றுடையான் குழந்தைகளுக்குப் பெயர்சூட்டு விழா நடைபெறப் போவதை அறிவித்தான்.
பெயர் சூட்டு விழாவுக்குத் தனக்கும் அழைப்பு வந்திருக்கிற தென்று ராக்கியண்ணன் வீரமலையிடம் கூறிவிட்டு, சங்கரன் மலைக்குச் செல்வதற்கான பயண ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணித்தார்.
அப்போது குதிரையொன்று பாசறை நோக்கி விரைந்து வரும் குளம்படிச் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து பாசறை முகப்பில் குதிரையிலிருந்து தலையூர் வீரன் ஒருவன் இறங்கி வந்தான். அவன் ராக்கியண்ணனைப் பணிந்து வணங்கி “தலையூர் மன்னர் அனுப்பிய மடல்” என்று கூறிக் கொண்டே அரக்கு முத்திரையிட்ட குழல் ஒன்றைத் தந்தான். அதைப் பிரித்து ராக்கியண்ணன் படித்தார். ஏதோ சிந்தித்தார். பிறகு தலையூர் வீரனைப் பார்த்துச் சொன்னார்.
“நீ போகலாம். என்னிடம் ஒப்படைத்த வேலையை நானே செய்து முடிப்பதாக மன்னரிடம் நான் சொன்னதாகச் சொல்லி விடு! விரைவில் நேரில் வருகிறேன் என்றும் கூறிடுக!”
வாய்மொழியாகவே ராக்கியண்ணன் சொன்ன பதிலுடன் தலையூர் வீரன் குதிரையிலேறித் தட்டி விட்டான். குதிரை பறந்து போய்விட்டது. ஆசான் வீரமலையைப் பார்த்தார்.
“வீரமலை! நீ இளைஞனாக இருந்தாலும் நான் உன்னை நம்புகிறேன் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். நடைபெற இருக்கிற ஒரு காரியத்துக்கு நீதான் சாட்சியாக இருக்க வேண் டும்! நம்பிக்கையான சாட்சி!” என்று சொல்லிக் கொண்டே தலையூரிலிருந்து வந்த மடலை வீரமலையிடம் கொடுத்து, ‘இதைப் படித்துப் பார்த்து விட்டுப் பத்திரமாக வைத்துக் கொள்! அழகுநாச்சியார் என்னை அவசரமாக வரச்சொல்லி யிருப்பதால் வீட்டுக்குப் போகிறேன். காலையில் சங்கரன் மலைக்கோட்டைக்குப் புறப்பட எல்லாம் தயாராகட்டும்” என்றுரைத்துவிட்டு ராக்கியண்ணன் பாசறையை விட்டகன்றார்.
அவர் போனதும் வீரமலை அங்கிருந்த அகல்விளக்கின் ஒளியில் அந்த மடலைப் படித்துப் பார்த்தான்.
‘ஆசான் ராக்கியண்ணன் அவர்கள் அறிவது யாதெனில்? குன்றுடையான் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டு விழாவாம். அந்தக் கோலாகல நிகழ்ச்சியைத்தான் நமது வேலைக்குப் பயன் படுத்திக் கொண்டு குழந்தைகளைக் கடத்திவிடவேண்டும். தங்களால் இயலாதாயின் தலையூர் வீரர்களையே அனுப்பத் திட்டமிட்டிருக்கிறேன் – தலையூர் மன்னன் காளி’.
அந்த எழுத்துக்கள் வீரமலையின் விழிகளில் மின்னல்கோடு களாகப் பாய்ந்து வெட்டின! அதைத் தொடர்ந்து அவன் இதயத்தில் சமாளிக்க முடியாத மற்றொரு கொந்தளிப்பு!
அதுதான் தலையூர் வீரனிடம் ராக்கியண்ணன் சொன்ன பதில்! ‘என்னிடம் ஒப்படைத்த வேலையை நானே செய்து முடிப்பதாக மன்னரிடம் நான் சொன்னதாகச் சொல்லிவிடு!’ என்று ஆசான் சொன்னதிலேயிருந்து, குன்றுடையாரின் குழந் தைகளை ஆசானே கடத்திக் கொண்டு போய்த் தலையூர்க் காளியிடம் ஒப்படைக்கப் போகிறார் என்றல்லவா ஆகிறது! வீரமலைக்கு ஒன்றுமே புரியவில்லை! தலையூர் மன்னரின் ஓலையை ஆசான் தன்னிடம் ஒப்படைத்து இந்தப் பயங்கர மான சதித்திட்டத்தைப் பற்றிய ரகசியத்தை எதற்காகத் தனக் குத் தெரிவிக்க வேண்டும்? ஒருவேளை, தனது உதவியோடு அந்தக் குழந்தைகளைக் கடத்த ஆசான் திட்டமிட்டுள்ளாரா?
எந்தக் குழந்தைகளை மருத்துவச்சிகள் மூலம் நடைபெற்ற சதியிலிருந்து காப்பாற்றிக் கொடுத்தாரோ அதே குழந்தை களை அவரே கடத்தப் போகிறாரா? எந்த முடிவுக்கும் திட மாக வர முடியாமல் அந்த இளைஞன் பாசறையில் படுத்துப் புரண்டு கொண்டிருந்தான். பொங்கல் திருநாளையொட்டி பாசறை மாணவர்கள், அவர்களது ஊர்களுக்குச் சென்றிருந்த காரணத்தால் தனிமையில் இருந்த அவனுக்குத் தூக்கமே பிடிக்க வில்லை. பயிற்சி மாணவர்கள் யாரும் இருந்தால்தான் என்ன; அவர்களிடம் கலந்துரையாடி பகிர்ந்து கொள்ளக் கூடிய விஷ யமா இது?
‘ஆசான் மனம் நல்ல மனம். அதனால் எது நடந்தாலும் நல்லதாகத் தான் நடக்கும்.’ என்று திடப்படுத்திக் கொண்டு, அதிகாலையில் எழுந்து ராக்கியண்ணன் ஏறிச் செல்வதற்கான குதிரையைத் தயார்படுத்தி நிறுத்தினான். பயணத்துக்குத் தேவையான பொருள்கள் அடங்கிய பை ஒன்றும் குதிரைக் கருகிலேயே வைக்கப்பட்டது.
புறப்படுவதற்குத் தயாராக வந்த ராக்கியண்ணன், வீரமலை யைப் பார்த்து, “நீயும் ஒரு குதிரையில் என்னுடன் வருகிறாய்!” என்றார். சிறிது தயங்கிய வீரமலை தனக்கும் ஒரு குதிரையைத் தயார் செய்து கொண்டு ஏறி உட்கார்ந்தான். இருவரும் புறப் பட்டனர். போகும் வழியிலேயே ராக்கியண்ணன், சங்கரன் மலைக்கோட்டையில் வீரமலை செய்து முடிக்கவேண்டிய சாக சம் என்ன என்பதை அறிவித்து விட்டார்! தான் மேற்கொண்டுள்ள செயலுக்கு என்ன காரணம் என்பதையும் வீரமலைக்கு விளக்கி விட்டதால் அவனுக்கும் குழப்பம் தீர்ந்தது.
அன்றிரவு சங்கரன்மலைக்கோட்டை அகல்விளக்கு அலங் காரத்தால் கார்த்திகைத் திருவிழா போல் காட்சியளித்தது. குன்றுடையாரின் ஆதிக்கத்திற்குட்பட்ட சிறிய காணியாளர் கள் பலரும் குழந்தைகளின் பெயர் சூட்டு விழாவுக்கு வந்திருந் தனர். ராக்கியண்ணன் குழந்தைகளை வாழ்த்தி விட்டுப் புறப் பட்டவர். வீரமலையின் காதில் ரகசியமாக செய்தி சொல்லி விட்டுக் கோட்டையிலிருந்து வெளியேறினார்.
விழா ஆர்ப்பாட்டம் முடிந்து உணவருந்திய களைப்பில் அவரவரும் படுக்கைக்குச் சென்று விட்டனர். வீரமலை, குழந் தைகளின் தொட்டில்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து அவை களையே பரிவுடனும் பாசமுடனும் பார்த்துக் கொண்டிருந் தான். தாமரைநாச்சியார் இனிப்புப் பண்டங்களை எடுத்து வந்து வீரமலையைச் சாப்பிடச் சொன்னார். அப்போது குன் றுடையார் அங்கு வந்து குழந்தைகள் தொட்டிலில் தூங்குகிற அழகை ரசித்தார். பிறகு தாமரைநாச்சியார், குன்றுடையாரை உணவருந்த அழைத்தார். “குழந்தைகளை பத்திரமாகப் பார்த் துக் கொள்” என்று வீரமலையிடம் சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து உணவருந்தச் சென்றனர்.
சமயத்தை எதிர்பார்த்திருந்த வீரமலை மெல்ல எழுந்து, தொட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந் தைகளையும் துணியொன்றினால் மூடி எடுத்துக் கொண்டு, கோட்டைச் சுவர் பக்கம் ஓடினான். சுவரின் அடுத்த பக்கம் திட்டமிட்டபடி நின்று கொண்டிருந்த ராக்கியண்ணன் கையில் மிகவும் பத்திரமாக இரண்டு குழந்தைகளும் ஒப்படைக்கப்பட் டன. அவைகளை ஒப்படைத்து விட்ட வீரமலை ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மீண்டும் குழந்தைகளின் தொட்டில்கள் அருகே வந்து நன்றாகத் தூங்கு வது போல நடிக்கத் தொடங்கினான்.
குழந்தைகளை கவனிக்க வந்த அரண்மனைப் பணிப்பெண்கள் ‘அய்யோ! குழந்தைகளைக் காணவில்லை!’ என்று கூச் சல் போட்டுக் கத்தினர். அந்தப் பேரொலியில் அதிர்ச்சி யடைந்து தாமரை நாச்சியாரும் குன்றுடையாரும் அங்கே ஓடி வந்தனர். தூங்கிக் கொண்டிருந்த வீரமலையைத் தட்டி எழுப்ப, அவன் கண்களைக் கசக்கிக் கொண்டு ஏதுமறியாதவன் போல் திகைத்தான். “அடப்பாவி!” என்று அலறிய தாமரைநாச்சியார் மயக்கமுற்றார். குன்றுடையார் செல்லாண்டியம்மா! எங்களை ஏன் இப்படி சோதிக்கிறாய்?” என்று அலறினார். வீரமலையை அந்த அரண்மனை வீரர்கள் பிடித்து, இழுத்து. அடித்து, உதைத்து, உண்மையைச் சொல்லடா; குழந்தைகள் எங்கே? என்று மிரட்டினர். அவன் தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறவே அவனைச் சிறையில் தள்ளக் கொண்டு போயினர். மயக்கம் தெளிந்து கண்விழித்த தாமரை நாச்சியார் “அவனை ஒன்றும் செய்யாதீர்கள்! அவன் நல்ல பிள்ளை பாவம்; தூங்கிவிட்டான் யாரோ பாவிகள் செய்த பாதகத்துக்கு அவன் என்ன செய்வான்? அவனை விட்டு விடுங்கள்!” என்று சொல்லவே வீரமலை விடுவிக்கப் பட்டான்.
வீரமலையே; வீரமலைக்குத் தொடர்புடைய நிகழ்ச்சிகளை விவரித்துக் கொண்டிருக்கிறான் என்பது குன்றுடையான் தாமரைநாச்சிக்கு நன்றாகவே புரிந்திருந்தது என்றாலும், அவனே தான் தங்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு போய் ராக்கியண்ணனிடம் கொடுத்தான் என்று தெரிந்ததும் அவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ராக்கியண்ணன் எதற் காகத் தானே முன்னின்று குழந்தைகளைக் கடத்திச் சென்றார் என்பது அவர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.
குழந்தைகள் கடத்தப்பட்டன – கடத்தியவர் ராக்கியண்ணன் அந்தக் குழந்தைகள் வளர்ந்து இதோ பொன்னர் சங்கராக நின்று கொண்டிருக்கிறோம் அதுவும் ஆசான் ராக்கியண்ண னின் மாணவர்களாக நின்று கொண்டிருக்கிறோம் பெற் றெடுத்த தாய் தந்தையர் முன்னிலையிலேயே நின்று கொண்டி ருக்கிறோம் – அப்படியானால் நாம் குழந்தைகளாக இருக்கும் போது தலையூர்க்காளி மன்னரிடம் கொண்டு போய் நம்மை ராக்கியண்ணன் ஒப்படைக்கவில்லையா?
இப்படியொரு அவிழ்க்க முடியாத சந்தேகத்துடன் அந்த மாளிகை மண்டபத்தில் பொன்னர் சங்கர் ஒருவரையொருவர் உற்று நோக்கியவாறு வீற்றிருந்தனர். அவர்கள் விழிகள் கேள் விக் குறிகளாக மாறியிருந்தன! குன்றுடையான் தாமரை இரு வரின் இதயங்களோ, ஆச்சரியக் குறிகளாக மாறியிருந்தன!
“இனிமேல்தான் ஒரு தியாக வரலாறே ஆரம்பமாகிறது!” என்று வீரமலை தனது பேச்சைத் தொடர்ந்தான்.
22. தியாகத்தின் எல்லை
“தாமரைநாச்சியாரின் தயவினால் விடுவிக்கப்பட்ட வீர மலை, தனது குதிரையின் மீது தாவி ஏறியவன் சங்கர மலையை விட்டு, இவ்வளவு வேகமாக எப்படி வந்தோம் என அவனே ஆச்சரியப்படும் அளவுக்கு மாரிக்கவுண்டன்பாளையம் வந்து சேர்ந்தான். குழந்தைகளுடன் ராக்கியண்ணன் பாசறையில் தான் இருப்பார் என்ற திடமான எண்ணத்துடன் பாசறையை நோக்கிக் குதிரையை நடக்க விட்டான். பாசறை முகப்பிலோ உட்பகுதியிலோ தலையூர் வீரர்கள் யாரும் தென்படுகிறார் களா என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டு உள்ளே நுழைந் தான். அவர்கள் யாரும் காணப்படாததால்; ஒருவேளை தலை யூர்க்காளியின் வீரர்கள் காத்திருந்து ராக்கியண்ணனிடமிருந்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு போயிருப்பார்களோ என்ற சந்தேகமும் வீரமலைக்கு ஏற்பட்டது. சே! ஆசான் அப் படியொன்றும் செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையொளி யும் உடனே தோன்றி அந்தச் சந்தேக இருட்டை விலக்கியது.
குதிரையிலிருந்து இறங்கி, குதிரையை அப்படியே நிறுத்தி விட்டு பாசறையின் உட்பகுதிக்குள் சென்று பார்த்தபோது ஆசான் அங்கில்லை. வீரமலைக்கு வியர்த்துக் கொட்டியது. சங்கரன்மலைக்கோட்டையிலிருந்து அவர் நேராகத் தலையூருக்கே போயிருக்கக் கூடுமோ? என்று நினைத்து வீரமலை நடுங்கி னான். அவன் நடையில் அவனது இளமைக்கு முற்றிலும் மாறான ஒரு தளர்ச்சி! இருப்பினும் சமாளித்துக் கொண்டு, தான் வந்த குதிரையைப் பிடித்துக் கொண்டு போய் பாசறை லாயத்தில் கட்டுவதற்காகப் போனான். அங்கு கண்ட காட்சி, அவனுக்கோர் ஆறுதல் பெருமூச்சை வரவழைத்தது.
சங்கரன்மலைக்கோட்டைக்கு ராக்கியண்ணன் ஏறிச் சென்ற குதிரை, லாயத்தில் கட்டப்பட்டிருந்தது. அப்படியானால் ஆசான், வீட்டுக்குத்தான் சென்றிருப்பார் என்று தீர்மானித்துக் கொண்ட வீரமலை ஓட்டமும் நடையுமாக அங்கே சென்றான்.
ஆசான் வீட்டுக் கதவு உட்பக்கமாகத் தாள் போடப்பட்டிருந் தது. வாயிற்புறத்து நிலைப்படியின் இருபுறமும் உள்ள உயர்ந்த திண்ணைகளையொட்டி அமைந்திருந்த பலகணிகளில் ஒன் றின் கதவு மட்டும்; சில பேர் தூங்கும்போது திறந்திருக்கும் இமையைப் போல் சிறிதளவு திறந்திருந்தது. பரபரப்பான அந் தச் சூழ்நிலையில் மறைந்திருந்து கவனிப்பது தவறில்லை யென்றே வீரமலையின் மனதிற்பட்டது. மெதுவாகத் திண்ணை யிலேறி, பலகணி இடுக்கின் வழியாக உட்புறம் பார்த்தான்.
அழகுநாச்சியாரும் ராக்கியண்ணனும் கட்டிலில் அமர்ந்திருந் தனர். அழகுநாச்சியாரின் மடியில் இரண்டு குழந்தைகள்! ராக்கியண்ணன் மடியில் இரண்டு குழந்தைகள்! அழகுநாச்சி யாரும் ராக்கியண்ணனும் பேசியது வீரமலையின் காதில் விழுந்தது.
“அழகுநாச்சி! நமக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தபோது. அந்தச் செய்தி எனக்கே ஒரு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு தான் மெல்ல மெல்ல அது மகிழ்ச்சியாக மலர்ந்தது. இப் போது அந்த மகிழ்ச்சி என்னைப் பொறுத்தவரையில் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. ஆனால் நீ எப்படி உணரு கிறாய் என்பதுதான் எனக்குப் புரியவில்லை!”
“உங்கள் மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சியும்! இருந்தாலும் உங்கள் செய்கை என் மனத்தில் ஏதோ ஒரு குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த இரண்டு குழந்தைகளும் யார்? எங்கிருந்து கொண்டு வருகிறீர்கள்? எதற்காக?”
“உன்னிடம் சொல்லாமலா இருக்கப் போகிறேன். சொல்லத்தான் போகிறேன். சொல்லித்தான் ஆக வேண்டும்.”
“வந்தது முதல் வளைத்து வளைத்துப் பேசுகிறீர்களே தவிர, இன்னும் எந்த விபரமும் சொல்லவில்லை. இதைப் பார்க்கும் போதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது!”
“சொல்லிவிடுகிறேன் அழகு! எந்தக் குன்றுடையான் குழந் தைகளின் பெயர் சூட்டு விழாவுக்குச் சென்றிருந்தேனோ; அந் தக் குன்றுடையானின் குழந்தைகள்தான் இவைகள்!”
“என்ன சொல்கிறீர்கள்? அரண்மனையிலிருந்து அவர்கள் விருப்பம் கேட்டுத் தூக்கி வந்தீர்களா? அல்லது… அல்லது…?”
“குழந்தைகளைத் திருடிக் கொண்டு வந்தீர்களா? என்று கேட்க நினைக்கிறாய்! எப்படிக் கேட்பதென்று நீ திண்டாடத் தேவையில்லை. நானே கூறுகிறேன்; திருடிக் கொண்டுதான் வந்தேன்!”
“திருடிக் கொண்டா? ஏன்? இனியும் என்னை வாட்டி வதைக்காமல் விரைவில் சொல்லுங்கள்!”
”நான் இந்தக் குழந்தைகளைக் களவாடிக் கொண்டு வரா விட்டால், எப்படியும் செல்லாத்தாக் கவுண்டரின் சதிச் செய லால் இந்தக் குழந்தைகள் தலையூர்க்காளி மன்னனின் கை களில் ஒப்படைக்கப்பட்டுவிடும். இந்த அரும்புகளின் வாழ்வை இப்போதே முடித்துவிட வேண்டுமென்று செல்லாத்தாக் கவுண்டர் துடியாய்த் துடிக்கிறார்.”
”ஏன்? அவருக்கு ஏன் இந்த வஞ்சக எண்ணம்? குன்றுடை யாரின் வளநாட்டையே அபகரித்துக் கொண்டு ஆட்சி நடத்து கிறாரே! அது போதாதா? அவரது குழந்தைகளை எதற்காகக் கொல்ல வேண்டும்?”
“வஞ்சகத்தால் பெற்ற வளநாட்டு ஆட்சியைத் தானும், தனக்குப் பிறகு தனது வழித் தோன்றல்களுமே பரிபாலிக்க வேண்டும்.குன்றுடையான் குடும்பத்தில் யாரும் தலையெடுத்து வளநாட்டை மீட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இப் படிப்பட்ட ஒரு நல்ல எண்ணம் அவருக்கு உதயமாகியிருக் கிறது. அந்தக் காரியத்தைத் தன்னால் செய்ய முடியுமா என்ற ஐயப்பாட்டினால்தான், தலையூர்க்காளியை ஏமாற்றி மிரட்டி-அவனைக் கொண்டே இந்தக் குழந்தைகளைத் தீர்த்துக் கட்டி விடத் திட்டம் தீட்டிவிட்டார். நல்லவேளை அந்தச் சமயம் தலையூரில் இருந்த நான் குழந்தைகளைக் கொண்டு வரும் பொறுப்பை என்னிடமே விடுமாறு தலையூர் மன்னனைக் கேட்டுக் கொண்டேன். இப்போது என் கையில் இந்தக் குழந் தைகள் பத்திரமாக இருக்கின்றன.
“தலையூர் மன்னர் தங்களிடமிருந்து குழந்தைகளைக் கேட்க மாட்டானா?”
“கட்டாயம் கேட்பான்! அவன் கேட்பதற்கு முன்பு, நானே கொண்டு போய்க் குழந்தைகளை அவனிடம் கொடுத்து விட வேண்டும்.”
“கொடுத்து விட்டால் இந்தக் குழந்தைகளின் கதி?”
“செல்லாத்தாக் கவுண்டரின் யோசனைப்படி கொல்லப்பட்டு விடலாம்!”
“என்ன சொல்கிறீர்கள்? தங்க விக்ரகங்கள் மாதிரி இருக்கிற இந்தக் குழந்தைகளைக் கொல்வதற்கு நீங்களும் உடந்தையா?”
“நான் உடந்தையாக இருக்க விரும்பவில்லை! அழகுநாச்சி! குன்றுடையான் குழந்தைகள் என்பது மட்டுமல்ல; கோளாத் தாக் கவுண்டரின் பேரப் பிள்ளைகள் என்பதை நினைக்கும் போது, என் இதயமே பிளந்து விடும் போலிருக்கிறது! கோளாத் தாக் கவுண்டர் குணநலன்களின் குன்றமாகவே உயர்ந்து நின்று ஆட்சி புரிந்தவர். அவருக்கு வாய்த்த குல விளக்கு பவளாத் தாள்; மக்கள் அனைவராலும் தாய் என்றே போற்றப்பட்டவர். கோயில்கள் பல கட்டிக் குடமுழுக்கு செய்து புகழ்பெற்றவர் மட்டுமல்ல; பெருங்குடிக்குலத்தார்களுக்கெல்லாம் காணி உரிமை ஏற்படுத்திக் கொடுத்த பெருமையும் கோளாத்தாக் கவுண்ட ருக்கு உண்டு. வாங்கலான் என்றும் பாட்டப்பன் என்றும் வாயார மனமார நல்லோர் பலர் வாழ்த்திப் பாராட்டினர் அவரை! பெருமையுடன் பல திக்கிலும் ஆட்சி செலுத்திப் பின்னர் நிலப்பரப்பில் குறுகி விட்ட சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கிடையே எல்லைத் தகராறு ஒன்று பெரும் தொல் லையாக முளைத்த போது அவர்களுக்குள் போர் மூண்டது. அந்தப் போரை நீடிக்கவிடாமல் நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்து, மூன்று மன்னர்களையும் மதுக்கரை செல்லாண்டியம் மன் கோயிலுக்கு வரவழைத்துச் சமாதானம் பேசி, அவர்களுக் குள் ஏற்பட்ட எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தவரும் கோளாத்தாக் கவுண்டரேதான்! அந்தத் தீர்வில் மகிழ்ச்சி யடைந்த சோழ வேந்தர் கோளாத்தாக் கவுண்டருக்குத் திருக் காம்புலியூர் அருகில் பெரும்பகுதி நிலப்பரப்பைப் பரிசாக வழங்கினார். சோழ மன்னரின் நட்புடனும் சேரர் பாண்டியர் ஆகிய இரு மன்னர்களின் மதிப்புக்குரிய நிலையிலும் மிகப் பெரும் நிலப்பரப்பில் காவல் ஆட்சி உரிமைபெற்று மக்க ளோடு மக்களாக இருந்து உழைத்த உத்தமர்தான் கோளாத் தாக் கவுண்டர். அவ்வளவு ஏன்; இதோ நாம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிற இந்தப் பெரிய வீடும், இதைச் சுற்றியுள்ள தோட்டம் துரவு நில புலங்களும் நமது பாசறையும் அதைச் சார்ந்த சோலைகளும் கோளாத்தாக் கவுண்டரால் நமது குடும்பத்துக்கு அந்தக் காலத்திலேயே பரிசாக வழங்கப் பட்டவை! அப்படிப்பட்ட பரந்த மனமும் இனிய சிந்தையுங் கொண்ட ஒரு குடும்பத்தில் வெள்ளையுள்ளம் படைத்த குன் றுடையானின் குழந்தைகளைக் கொண்டு போய்க் கொலைக் கூடமொன்றில் ஒப்படைக்க எனக்கு எப்படி இதயம் இடங் கொடுக்கும்? முடியாது; நிச்சயமாக என்னால் முடியாது!”
“அப்படியென்றால் இந்தக் குழந்தைகளை தலையூர் மன்னனிடம் ஒப்படைக்காமல் இருந்து விடப் போகிறீர்களா?”
“ஒப்படைக்காவிட்டால் அவனுக்கு நான் என்ன பதில் சொல்வது? இந்தக் குழந்தைகளைக் கொண்டு வந்து தரும் பொறுப்பை நானேயல்லவா ஏற்றுக் கொண்டிருக்கிறேன்!”
“கடத்திக் கொண்டு வந்து கொன்று விட்டதாகச் சொல்லி விடுங்களேன்.”
“அதை நம்ப முடியாது என்பதால் தானே, குழந்தைகளைத் தலையூரில் கொண்டு வந்து கொடுக்க வேண்டுமென்று அப்போதே திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.”
“இப்படியொரு அநியாயப் பழியைத் தாங்கள் வலுவில் தூக்கி உங்கள் தலையில் போட்டுக் கொண்டிருக்கவே தேவை யில்லை!”
“நான் இந்தக் காரியத்தைச் செய்வதாக ஒத்துக் கொள்ளா விட்டால் – தலையூர் மன்னனின் ஆட்கள் எப்படியும் இந்தக் குழந்தைகளைக் கொன்று விடுவார்கள்.”
“அவர்கள் கொல்லக் கூடாது; நாமே கொல்வோம் என்று முடிவு எடுத்து விட்டீர்களா?”
“அப்படி முடிவெடுத்திருந்தால் உன்னோடு இவ்வளவு நேரம் எதற்காகப் பேசிக் கொண்டிருக்கப் போகிறேன்?”
“என்ன சொல்கிறீர்கள்? குழந்தைகளைத் தலையூர் மன்னனிடம் கொடுக்கவும் வேண்டும் ஆனால் குழந்தைகள் சாகவும் கூடாது என்றால் அது எப்படி முடியும்? தாங்கள் குழந்தைகளைக் கொடுப்பது தலையூரானின் கைகளில் அல்ல; கொடுவாளின் முனையில் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறீர்களா?”
“குழந்தைகளைத் தலையூர் மன்னனிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் குன்றுடையான் பெற்றெடுத்த பொன்னர் சங்கர் எனும் இந்தச் செல்வங்களையல்ல!”
இதைச் சொன்ன போது ஆசானின் குரலில் ஒரு நடுக்கம் தோன்றியதை, பலகணி வழியே பார்த்துக் கொண்டிருந்த வீர மலை கவனித்தான். வீரமலையின் ஆவல் எல்லை கடந்து போயிற்று. ஆசானின் தோளில் தனது கரத்தைப் பதித்துக் கொண்டே அழகுநாச்சியார் கேட்டார்;
“பிறகு எந்தச் செல்வங்களை ஒப்படைக்கப் போகிறீர்கள்?” என்று!
“அழகுநாச்சி! நான் சொல்வதைத் தாங்கிக் கொள்ள உன் நெஞ்சத்தைப் பக்குவப்படுத்திக்கொள்! ஏனென்றால் எந்தத் தாயினாலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றை நான் இப்போது சொல்லப் போகிறேன்.”
இப்படிக் கூறிக் கொண்டிருந்த ஆசானின் கண்களிலே யிருந்து பொல பொலவென நீர்த்துளிகள் சிந்தின. அழகுநாச்சியார் திடுக்கிட்டெழுந்து குழந்தைகளை மார்புறத் தழுவிக் கொண்டே,”அப்படியென்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று கேட்டவுடன், ஆசான் ராக்கியண்ணன் ஒரு கணம் வாயடைத் துப் போய் நின்றார். பிறகு, கட்டிலின் ஓரமாகக் கையில் குழந்தைகளுடன் தலைகுனிந்தவாறு உலவினார். அதன் பிறகு, தன் கையிலிருந்த குழந்தைகளைக் கட்டிலில் படுக்க வைத் தார். அதைத் தொடர்ந்து அழகு நாச்சியார் அருகே சென்று இரு கைகளையும் நீட்டிக் குழந்தைகளைக் கேட்டார்.
கருவாக்கி வளர்த்த வயிறோடும் – பால் தந்த மார்பகத் தோடும் அழகுநாச்சியார் அந்தக் குழந்தைகளை அழுத்திய வாறு கண்ணீர் பொழிந்த காட்சி கண்டு வீரமலையின் ரத்த ஓட்டமே நின்று விடும் போலிருந்தது.
”உம்! கொடு!” என்று கணவன் இருகைகளையும் நீட்ட, மனைவியார் அழகுநாச்சியாரோ; “வேண்டாம்! வேண்டாம்!” என்பது போலத் தலையை அசைத்துக் கொண்டு தயங்கி நின்றார்.
“அழகுநாச்சி! எனக்காக அல்ல; நமது பெருங்குடி மக்களின் எதிர் காலத்துக்காக நீயும் நானும் இந்த தியாகத்தை செய்தே ஆக வேண்டும். கோளாத்தாக் கவுண்டரால் நமது மக் களும் நாடும் எவ்வளவோ நன்மைகளைப் பெற்றதற்கு நன்றிக் கடனாக அவரது பேரக் குழந்தைகளை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும். நமக்கு ஏன் இரட்டைக் குழந்தை பிறந்தது என்று அன்றைக்கு நாமே கூட அதிசயத்தில் ஆழ்ந்தோம்! ஆனால், இன்றைக்கு? அது எவ்வளவு நல்லதாகப் போயிற்று பார்த்தாயா? இதோ குன்றுடையானின் இரட்டைக் குழந்தை கள் என்று நமது குழந்தைகள் இரண்டையும் தலையூரானிடம் ஒப்படைத்து விடலாம் அல்லவா? கோளாத்தாக் கவுண்டரின் கொடி மலர்கள் இரண்டையும் கசங்கி விடாமல் காப்பாற்ற முடியும் அல்லவா?’
“அய்யோ ரட்டைக் குழந்தை நமக்குப் பிறந்ததின் வேதனை இப்போதல்லவா தெரிகிறது! ஒரே குழந்தையாகப் பிறந்திருந்தால், இப்படியொரு யோசனை உங்கள் மூளையில் துளிர் விட்டிருக்காதே!”
அழகுநாச்சியார் விம்மியழத் தொடங்கினார். அவரைச் சமாதானப்படுத்திக் கொண்டே, அவரது கையில் இருந்த குழந்தைகளை ஆசான், தனது கையில் வாங்கிக் கொண்டார்.
“அழகுநாச்சி! அழக்கூடாது! தாயின் வேதனையை விட இந்தத் தந்தையின் வேதனை குறைந்ததல்ல! ஆனால் நமது பெருங்குடிக் கூட்டத்து வருங்கால நல்வாழ்வுக்காக நமது குலத்தின் வீரமும் மாண்பும், விண்முட்டக் கொடி கட்டிப் பறக்கும் சிறப்பினைப் பெறுவதற்காக நாமிருவரும் இந்தத் தியாகத்தை செய்தே தீர வேண்டும்.
“அய்யோ! ஒரு தாய் தன் குழந்தைகளை எப்படி மனம் வந்து இழப்பதற்குத் துணிய முடியும்? நீங்களே சொல்லுங்கள்!”
“முடியாதுதான்! ஆனால் வேறு வழியே இல்லையே! அழகு நாச்சி! இழக்கக் கூடியதை இழப்பது தியாகமில்லை – சில பேர் சுயநலத்துக்காக இழக்கக் கூடியதைக் கூட இழக்கத் துணிய மாட்டார்கள்! இழக்கக் கூடாத பெரும் செல்வமாம் மக்கட் செல்வத்தை இந்த மண்ணின் எதிர்காலத்துக்காக இழக் கும் தியாகத்தைச் செய்ய இப்படி எப்போதாவதுதான் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பைத் தவற விட்டு, நாம் தன்னலவாதிகளாகி விடக் கூடாது! தயவுசெய்து நான் சொல் வதைக் கேள்! இதோ கட்டிலில் கிடக்கும் கண்மணிகள் பொன்னர்-சங்கர்தான் இனி நமது செல்வங்கள்! இவர்களை வளர்த்து ஆளாக்கித் தக்க சமயத்தில் குன்றுடையானிடமும் தாமரைநாச்சியிடமும் ஒப்படைப்பது நமது கடமை! அதுவரை யில் இந்தக் குழந்தைகள்தான் பொன்னர் சங்கர் என்று யாருக்குமே தெரியக் கூடாது! இந்தா; இந்தக் குழந்தைகளுக் குக் கடைசியாக முத்தம் கொடுத்து வழியனுப்பி வை! இப்படி இரண்டு குழந்தைகள் நமக்குப் பிறந்ததையே மறந்து விடுவோம் கலங்காதே! அழாதே! நீ ஒரு வீரனின் மனைவி என்பது உண்மையானால்; தாயே ஆனாலும் தன்னலமற்றவள் என்பது உண்மையானால்; நமது பெருங்குடிக் கூட்டத்தினர் நல்வாழ்வும் எதிர்கால ஒளியும்தான் நமது குறிக்கோள் என்பது உண்மையானால்; எனக்கு விடை கொடு!’
மலைத்துப் போய் நின்ற அழகுநாச்சியார் கணவனின் கைகளிலிருந்த தனது குழந்தைகளை வாங்கி, ஆசை தீர ஒன்றிரண்டு நூறு இருநூறு ஆயிரம் லட்சமென முத்தமாரி பொழிந்தார். பின்னர் மயக்கமுற்ற நிலையில் கட்டிலின் மீது வீழ்ந்து குன்றுடையாரின் குழந்தைகளிரண்டின் பாதங்களில் தனது கண்களைப் புதைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார்.
தனது இரு குழந்தைகளையும் கையில் தாங்கியவாறு ஆசான்; வாசற் பக்கம் திரும்பி.
“வீரமலை! நீ எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும். நீ கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தான் பலகணியைச் சிறிது திறந்தே வைத்திருந்தேன். நடந்தது அனைத்துக்கும் நீயே சாட்சி! அழகுநாச்சிக்கு சொன்னது முழு வதும் உனக்கும் பொருந்தும். என்னைப் போலவே குன்றுடை யான் குடும்பத்தின் மீது உனக்கும் விசுவாசம் உண்டு. நான் இந்தக் குழந்தைகளுடன் தலையூர் போகிறேன். நீ அழகுநாச்சி யாரை கவனித்துக் கொள்!”
என்று கூறிவிட்டு வெளியே சென்றார்.
இந்த விபரங்களை உணர்ச்சியோடு சொல்லி முடித்த வீரமலையின் கண்கள் இப்போது அருவிகளாக இருந்தன.
23. ஆசானின் ஆணைகேட்டே நடப்போம்
அடுத்து வீரமலையின் வாயிலிருந்து என்ன வார்த்தைகள் வரப்போகின்றன எனத் தாமரையின் காதுகள், தம்மைக் கூர் மையாக்கிக் கொண்டன என்றாலும் அவற்றுக்கு முன்பே அவ ளது இதயம் படபடவெனத் துடிக்கத் தொடங்கியது. தான் பெற்ற பிள்ளைகள் உயிரோடிருக்கிறார்கள் என்பது வீரமலை சொன்ன விபரங்களில் இருந்து தெரிந்து விட்டாலும் கூட அவர்கள் எங்கேயிருக்கிறார்கள், எப்படியிருக்கிறார்கள் என் பதை உடனடியாக அறிந்து கொள்ள ஒரு தாயின் உள்ளம் அலை மோதுவது இயல்பேயல்லவா? சில நொடிகள் பொறு மையாக இருந்து முழுமையும் கேட்கலாமென்று நெஞ்சத்தை உறுதிப்படுத்திக் கொள்ள தாமரைநாச்சியார் முயன்றாள் என் றாலும், அந்த உறுதியையும் மீறிக்கொண்டு, ‘நான் பெற்ற கண்மணிகள் உயிரோடு இருக்கிறார்களா?”என்று அவள் வீர மலையைப் பார்த்து அலறிவிட்டாள். குன்றுடையான் அவ ளைத் தட்டிக் கொடுத்து, “பதற்றமடையக் கூடாது தாமரை. நல்ல செய்திகளைத்தான் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்; கேட்கவும் போகிறோம்! அதற்குள் பதற்றமடைந்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே! தாமரை! இந்த நல்ல செய்திக்கி டையே ஒரு துன்பச் செய்தி கேட்டாயே? அது என்ன சாதா ரணமானதா? நம்முடைய குழந்தைகள் பொன்னர் – சங்கரைக் காப்பாற்ற அவைகளுக்குப் பதிலாகத் தனது குழந்தைகளைத் தலையூருக்கு எடுத்துக் கொண்டு போன ராக்கியண்ணனுக்கு நாம் எப்படி நன்றி சொல்லப் போகிறோம்! அவரும் அவர் மனைவியும் செய்த தியாகத்திற்கு ஈடு இணை இருக்க முடி யுமா?” எனத் தழுதழுத்த குரலில் கூறினார்.
பெற்றோர்கள் குன்றுடையான் தாமரைநாச்சியாருக்கு முன்னால் மாமன் சின்னமலைக்கொழுந்து அத்தை சிலம்பாயி இருவருக்கும் எதிரில் மைத்துனன் வையம்பெருமானுக்கு அருசில் தாங்கள் இருந்தும் கூடத் தங்களை யார் என்று சொல்லிக் கொள்ளாமல் இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை எண் ணிப் பொன்னரும் சங்கரும் பெருமூச்சு விட்டனர். தனது அண்ணன்மார் இருவரும் உயிருடன் இருப்பது கேட்டு அருக் காணித்தங்கமும் இன்பப் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
அப்போது முத்தாயி -பவளாயி இருவரும் விட்ட பெருமூச்சு, வேதனை மூச்சாக இருந்தது. அவர்களிருவரும் தங்கள் இதயக் கோயிலின் மூல விக்கிரகங்களாக அமைத்து அன்பு மலர்களால் அர்ச்சித்துக் கொண்டிருக்கும் அந்த வீர இளஞ் சிங்கங்கள் தங்களை மணந்து மகிழ்விப்பார்கள் என எண்ணிக் களித்திருந்த வேளையில் பொன்னர் சங்கர் உயிரோடிருக் கிறார்கள் என்ற செய்தி தீயாகச் சுட்டது. தாமரைநாச்சியார் தனது சபதத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் ஆரிச்சம்பட்டி யில் தனது தாய் வீட்டு உறவு மீண்டும் செழித்துப் பூக்கவும் தனது பிள்ளைகள் பொன்னர்-சங்கருக்கே தங்களை மணமுடிக்கு மாறு ஒற்றைக் காலில் நிற்கத்தான் போகிறாள் என்பதைப் புரிந்துகொண்டு அந்தக் கோகிலங்கள் குறுகிப் போய் நின்றன. தங்களின் கண்ணெதிரே நிற்கும் அந்தக் கட்டழகுக் காளைகள் தான் பொன்னர்-சங்கர் என அவர்கள் அறிந்திருப்பார்களா னால் அச்சம் நாணம் மறந்து கூட ஓடிச் சென்று அவர்களின் கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் பொழிந்திருப்பார்கள்.
ஒருவேளை ராக்கியண்ணனின் மனைவி அழகுநாச்சியார் தனக்கேற்பட்ட விரக்தியிலும் வெறுப்பிலும் அந்தக் குழந்தை களை என்ன செய்தாளோ? அவளே வளர்த்தாளா? அல்லது யாரிடமாவது தூக்கிக் கொடுத்து விட்டாளா? ராக்கியண்ணன் தன்னை ஏமாற்ற முயற்சித்ததை உணர்ந்து கொண்டு தலை யூர்க் காளி மன்னனே உண்மையான பொன்னர்-சங்கரைக் கண்டுபிடித்துக் கொன்றிருந்தால்?
மலரின் இதழினும் மென்மையான பெண்மையின் இதயங் களில் இப்படியும் சில விரும்பத்தகாத கேள்விகள்! பிறகு அந்த இதயங்களே தங்களை சபித்துக் கொண்டன. ”சே! நாம் காதலித்தவர்களை மணந்து வாழ்வதற்காகக் குன்றுடையாரும் தாமரைநாச்சியாரும் தங்கள் அன்பு மகன்களை இழந்துவிட வேண்டுமா? எவ்வளவு சுயநலமான நினைவு இது!” என்று வசைபாடிக் கொண்டன.
வீரமலை, அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்பது மாயவருக்குத் தெரியும் பொன்னர் சங்கருக்குக் கொஞ்சம் தெரியும் – மற்றவர்களுக்குத் தெரியாதே! அதனால் அவர்கள் வீரமலையின் உதடுகள் அசைவதையே இமை கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தபடி வீரமலை கதையைத் தொடர்ந்தான்.
“ராக்கியண்ணன், தனது குழந்தைகளுடன் வெளியேறிவிட் டார். அவர் வெளியேறும்போது வீரமலையிடம், “நீதான் எல் லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கிறாய்!” என்று சொன்னதை வீரமலை சிந்தித்துப் பார்த்தான். அழகுநாச்சியாரிடம் விட் டுச் சென்றிருப்பது பொன்னர் – சங்கர் என்ற குழந்தைகளை ராக்கியண்ணன் தூக்கிப் போயிருப்பது அவரது இரட்டைக் குழந்தைகளை இந்த உண்மையை ஒரு நாள் வெளிப்படுத் தும்போது அதற்கு அவருக்கு சாட்சி வேண்டுமல்லவா; அந்த சாட்சியாகத்தான் தன்னை நியமித்துக் கொண்டிருக்கிறார் என் பது வீரமலைக்குத் தெளிவாயிற்று.
பலகணியை விட்டு நகர்ந்து திண்ணையிலிருந்து இறங்கி திறந்திருக்கும் நிலைவாசல் கதவின் வழியாக உட்புறம் அடி யெடுத்து வைத்தான் வீரமலை! கட்டிலில் கிடந்த குழந்தை களின் கால்களில் வைத்த தலையை எடுக்காமல் அழகுநாச்சி யார் படுத்திருந்தார். குழந்தைகளிரண்டும் வீறிட்டு அழுது கொண்டிருந்தன. தன் வயிற்றில் பிறந்த மாணிக்கங்கள் இரண் டையும் பிரிந்த துயரத்தில் மயங்கிக் கிடக்கும் மாதாவின் செவியில் அந்தக் குழந்தைகளின் அழுகைச் சப்தம் எங்கே விழப் போகிறது என்று வீரமலையின் உள்ளத்தில் கேள்வியும் பதிலும் எதிரொலித்தன. கட்டிலின் அருகே சென்றான். அழகு நாச்சியார் முகம் அந்தக் குழந்தைகளின் பாதங்களை அழுத் திக் கொண்டிருந்தது. அவரது கண்களில் இருந்து வழிந்த நீர் அந்தப் பிஞ்சுப் பாதங்களை நனைத்திருந்தன.
“அம்மா!” என்று மெல்லிய குரலில் வீரமலை கூப்பிட்டுப் பார்த்தான். பதில் இல்லை. மீண்டும் சற்று உரத்த குரலில், “அம்மா!” என்று அழைத்தான். அப்போதும் பதில் இல்லை. அம்மா! அம்மா!!” என்று பதற்றத்துடன் கூவினான். பதிலே இல்லை. வீரமலை பயந்து விட்டான். என்ன செய்வதென்று புரியவில்லை. அழகுநாச்சியாரின் இரு பாதங்களையும் தனது கைகளால் பற்றிக் கொண்டு, அம்மா! என்னம்மா செய் கிறது?” என்று நடுங்கும் குரலில் கேட்டான். கால்களைப் பற் றிய அவன் கரங்களே அவனுக்குப் பதில் அளித்து விட்டன. அழகு நாச்சியார் உடல் ஜில்லிட்டுப் போயிருந்தது. “அய்யோ அம்மா” என்று அலறிக் கொண்டு மூக்கில் சுவாசம் வருகிறதா என்று பார்த்தான். அது எப்போதோ நின்று போயிருந் தது. நாடி பிடித்துப் பார்த்தான். அவை அடங்கிப் போய் விட்டன. அழகுநாச்சியாருக்காக அழுவது போல அந்தக் குழந்தைகள் கதறிக் கொண்டிருந்தன. வீரமலை வெளியே ஓடி வந்தான். பக்கத்து தெருக்கள் அங்குள்ள வீடுகளில் செய்தி யைச் சொன்னான். எல்லோரும் கேட்டனர், “எப்படி திடீ ரென்று இறந்தார்’ என்று! அந்தக் கேள்விக்கு மட்டும் அவன் பதில் சொல்லவே இல்லை. ஊமையாகவே இருந்தான். ஆசான் வீட்டு வாசலில் ஊரே கூடிவிட்டது. ‘அடடா! தங்கச் சிலைகள் மாதிரி இரண்டு குழந்தைகளை விட்டு விட்டுப் போய் விட்டாளே!” என்று மூதாட்டிகள் அழுது புலம்பினர்.
மறுநாள் காலையில் தலையூரிலிருந்து திரும்பிய ஆசான் ராக்கியண்ணன். அழகுநாச்சியாரைப் பிணக்கோலத்தில் கண்டு அவர் அருகிலேயே நெடுநேரம் அமர்ந்திருந்தார். புயல் கடலில் உருவாகும்போது வானத்தில் மப்பும் மந்தாரமுமாகக் காணப்படும் பயங்கர மௌனத்தைப் போல அவர் உள்ளத் தில் உருவாகும் புயலுக்கு அறிகுறியாக அவரது முகம் விளங் கிற்று. வீரமலையைக் கூப்பிட்டார். என் குழந்தைகள் எங்கே என்றார். பத்திரமாக இருக்கின்றன எனச் சொல்லிப் பக்கத் தில் உள்ள அறையில் ஆடிய தொட்டில்களை வீரமலை காட் டினான். ராக்கியண்ணன் மெதுவாக எழுந்து சென்று அந்தக் குழந்தைகளைப் பார்த்தார். பெருமூச்சோடு வெளியே வந் தார். அழகுநாச்சியாரை அடக்கம் செய்வற்கான ஏற்பாடு களைக் கவனித்தார். பக்கத்தில் உள்ள காணியாளர்கள். காவல் ஆட்சியாளர்கள் எல்லோருக்கும் சொல்ல வேண்டு மென்று ஊர்ப் பெரியவர்கள் ராக்கியண்ணனிடம் கூறினார் கள். யாரும் தேவையில்லை. அழகுநாச்சியாரின் அடக்கம் எளிமையாகவே நடக்கட்டும்” என்று ஆசான் பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். எல்லாம் முடிந்து விட்டது. குத்து விளக் காக ஆசான் வீட்டில் சுடர் விட்டுக் கொண்டிருந்த அழகுநாச் சியார் அணைந்து போய் ஐந்தாறு நாட்களாகி விட்டன.
அதன்பிறகு ஒருநாள் வீரமலை, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆசானிடம் சென்றான். ஆசான், பொன்னர் சங்கர் இருவரையும் மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தார். வீரமலையைப் பார்த்ததும், கலங்கியிருந்த தனது கண்களைத் துடைத்துக் கொண்டு, என்னப்பா? என்று அன்பொழுகக் கேட்டார். வீரமலை தடுமாறினான். இருந்தாலும் கேட்டு விடுவது என்ற முடிவோடு வந்திருந்தான்.
“உங்கள் குழந்தைகளை என்ன செய்தீர்கள்?”
ஆசான், வீரமலையை ஏற இறங்கப் பார்த்தார். மென்மையாகச் சிரித்தார்.
“இதோ இதுதான் என் குழந்தைகள்” என்றார்.
“என்னைச் சாட்சியென்று சொல்லியிருக்கிறீர்கள்; அதை மறந்து விடாதீர்கள் இவை குன்றுடையாரின் குழந்தைகள்! நீங்கள் பெற்ற குழந்தைகளை எடுத்துப் போனீர்களே; என்ன செய்தீர்கள் என்று தான் கேட்கிறேன்” அசட்டுத் துணிச்சலு டன் வீரமலை பேசினான்.
“அந்தக் குழந்தைகளைத் தலையூர்க்காளியிடம் கொடுத்து விட் டேன். அவனும் அந்தக் குழந்தைகள்தான் பொன்னர்-சங்கர் என நம்பி வாங்கிக் கொண்டான். “
ஆசானின் தொனியில் இப்பொழுது அழுத்தம் இருந்தது. தியாகத்தின் பெருமிதம் இருந்தது.
“தலையூர் மன்னன் குழந்தைகளை என்ன செய்திருப்பான்?”
“செல்லாத்தாக் கவுண்டர் மாந்தியப்பன் எல்லோரும் அவனருகில்தானே இருந்தார்கள்! அவர்களின் ஆலோசனைப்படி அவைகளைக் கொன்றிருப்பான்!”
இதைச் சொல்லும்போது ஆசானின் தலை நிமிர்ந்தது. நெஞ்சு புடைத்தது. தன் மடியிலிருந்த குழந்தைகள் பொன்னர்- சங்கரைத் தூக்கிக் கொண்டு எழுந்தார். வீரமலை என்று திடமான குரலில் கூப்பிட்டார். அவன் அவரிடம் ஓடினான். ஆசான் வீரமலையைத் தனது பக்கத்தில் வரச்சொன்னார். அவன் பயபக்தியுடனும் துயரம் நிறைந்த மனத்துடனும் அவர் சொல்வதைக் கவனித்தான்.
“வீரமலை! உனக்கும் எனக்குமட்டுமே தெரிந்த இந்த உண்மை யாருக்குமே தெரியக் கூடாது. ஒரு காலம் வரும். அப்போது இந்த உண்மையை வெளியிட வேண்டிய அவசியம் வரும். அதுவரை இந்தக் குழந்தைகளுக்கு நீயும் நானும்தான் பாதுகாவலர்கள். அழகுநாச்சியாரிடம் நான் சொன்ன விளக் கங்களையெல்லாம் கேட்டிருக்கிறாய் ஏன்; இந்தக் குழந்தை களை நான் பாதுகாக்கிறேன் எப்படி கடமைப்பட்டிருக்கிறேன் என்பதையெல்லாம் நீயும் அறிவாய்! என்னுடைய அழகுநாச்சி ஒரு தியாகவல்லியாக இருந்து தான் பெற்ற செல்வங்களை என் கையில் ஒப்படைத்தாள். ஆனால் ஒரு தாய் நிலையில் இருந்து அவளால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. குழி விழுந்து போன கண்களோடும் -ஒட்டிய வயிறோடும் விலா எலும்பு தெரிய எறும்பும் ஈயும் மொய்த்திட நிறைந்த புண்களோடும் கையில் தொடவே அசிங்கமாக இருக்கிற ஒரு குழந்தையைக் கூட அதனைப் பெற்ற தாய் பறி கொடுக்க சம்மதிக்கமாட்டாள். அந்தத் தாய்மை உணர்வுதான் என் அழகு நாச்சியை என்னிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்துவிட்டது. நீங்காத சோகமாக என் மன தில் நிலைத்து விட்ட நிகழ்ச்சிக்குப் பரிகாரமாக நான் இந்தக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். அதற்கு நீதான் துணையிருக்க வேண்டும்”
ஆசானின் வேண்டுகோளை வீரமலை கட்டளையாக ஏற்றுக் கொண்டான். ஆசான் வீட்டிலும் பாசறையிலுமாகப் பொன்னர்-சங்கர் வளர்ந்து இன்றைக்குப் புலிக்குட்டிகளாக விளங்குகிறார்கள்”
என்று வீரமலை சொல்லி முடித்ததுதான் தாமதம்; தாமரைநாச்சியார், “இப்போது என் பிள்ளைகள் எங்கேயிருக்கிறார்கள்?” என்று; அங்கிருப்போர் யாரைப் பற்றியும் கவ லைப்படாமல் கூச்சல் போட்டு விட்டாள்.
“அதைச் சொல்லத்தான் உங்களைத் தேடிக்கொண்டு நான் வந்தேன்” என்று புன்னகையுடன் கூறியவாறு மாயவர் அவ ரது இருக்கையிலிருந்து எழுந்தார்.
“இவ்வளவு நேரம் என்னை சோதிப்பீர்கள்? நான்பெற்ற தங்கங்கள் எங்கேயென்று இப்போதே சொல்லுங்கள்!”
தாமரை கதறினாள்!
“இப்போதே சொல்லுகிறேன்! இதோ இருக்கிறார்கள்; எழு ஞாயிறுகளாய்! இணையற்ற வீரர்களாய்! இவர்கள்தான் பொன்னர் – சங்கர்!”
என்றுரைத்தபடியே மாயவர், பொன்னரை ஒரு கரத்திலும் சங்கரை ஒரு கரத்திலும் அணைத்துக் கொண்டு நின்றார். தாமரை நாச்சியாரும் குன்றுடையானும் போட்டி போட்டுக் கொண்டு ஓடிச் சென்று பொன்னர் சங்கரைக் கட்டித் தழுவிக் கொண் டனர். பெற்ற மனங்களின் ஊற்றுக் கண்ணிலேயிருந்து தடைபடா மல் பெருக்கெடுத்த பாச உணர்வின் இன்பக் குளிர்ச்சியில் மெய் மறந்த பொன்னரும்-சங்கரும் தாய் தந்தையர் கால்களில் விழுந்து வணங்கினர். தங்கள் தண்மலர்களால் பாத பூஜை செய்தனர். “பெற்றவுடன் பிரிந்துவிட்ட குழந்தைகளைப் பல ஆண்டுகள் கழித்துப் பார்த்த தாயின் உள்ளத்தைப் போல” என்று, வேறு ஒரு நிகழ்ச்சிக்கு உவமை கூறலாம்! ஆனால் இப்போது அந்த உவமையே நிகழ்ச்சியாயிருக்கும்போது எந்த உவமையால் வர்ணிக்க முடியும்? தாய் தந்தையரின் அன்பு வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த பொன்னர் சங்கரைச் சிரமப்பட்டு மீட்டு சின்னமலைக் கொழுந்தும் சிலம்பாயியும் உச்சிமோந்து வாழ்த்தினார்கள்.
“அண்ணா! இப்போது என்ன சொல்லுகிறாய்? உன் வாக் குறுதியை நீ நிறைவேற்ற வேண்டுமானால் என் தயவுதான் வேண்டும். உன் பெண்களை மீட்டுக் கொடுத்தால் இவர் களுக்கே மணமுடிப்பதாகச் சொன்னாயே; நான் சம்மதிக் காமல் எப்படி முடியுமண்ணா?”
என்று புளகாங்கிதத்தோடும் பெருமிதத்தோடும் தாமரைநாச் சியார், சின்னமலைக்கொழுந்தைப் பார்த்துக் கேட்டாள்.
சின்னமலைக்கொழுந்து, தனது சகோதரியின் எல்லையற்ற மகிழ்ச்சியைக் கண்டு குறுக்கே எதுவும் பேசாமல் நின்றபோது முத்தாயி பவளாயி இருவரும் ஏற்கனவே சிவந்திருந்த கன்னங் கள் மேலும் சிவக்க அங்கிருந்து நகர்ந்து திரைமறைவுக்குள் போய் நின்று கொண்டார்கள். அவர்கள் ஆணையிட்டும் கேட் காமல் விழிகள்மட்டும் வண்டுகளாய் கிளம்பி பொன்னர் சங்கரை மொய்த்துக் கொண்டிருந்தன.
“என் தங்கை தாமரையின் சபதமே நிறைவேறட்டும்.என் தங்கையிடம் நானே கேட்கிறேன். என் மகள்கள் முத்தாயியை பொன்னருக்கும், பவளாயியை சங்கருக்கும் கட்டிக் கொள்ளு மாறு கேட்டுக் கொள்கிறேன். போதுமா? இன்னும் கெஞ்ச வேண்டுமா?”
என்றார் சின்னமலைக்கொழுந்து.
“நீங்கள் கேட்காவிட்டாலும் சரி; அவர்கள் சம்மதிக்காவிட் டாலும் சரி; நம் எல்லோரையும் மீறி இந்தத் திருமணம் நடந்தே தீரும். அதை யாரும் தடுக்க முடியாது!”
என்று சிரித்துக் கொண்டே சிலம்பாயி சொன்னாள்.
“என் இரண்டு பெண்களை உன் மகன்களுக்குக் கொடுக் கிறேன். நீ என் மகன் வையம்பெருமானுக்கு அருக்காணித் தங்கத்தைக் கொடுக்க வேண்டும்” என்று குழைந்தார் சின்ன மலைக் கொழுந்து.
என்ன இது; நான் ஒருவன் இருப்பதையே மறந்து விட்டு அண்ணனும் தங்கையும் சம்பந்தம் பேசி முடிக்கிறீர்கள்? என்று வெள்ளை உள்ளம் படைத்த குன்றுடையான் கேலி யாகக் கேட்டான். தனது திருமணப் பேச்சை எடுத்ததும் அருக் காணித் தங்கம் முகத்தை ஒரு மாதிரி திருப்பிக் கொண்டு நாணத்துடன் முத்தாயி பவளாயி மறைந்திருக்கும் திரையைக் கடந்து உள்ளே ஓடிவிட்டாள்.
“இந்த விஷயங்கள் நாம் யாரும் பேசி முடிவு செய்வதல்ல! இதற்கெல்லாம் முடிவு சொல்ல வேண்டிய ஒரே ஒரு ஜீவன் எங்கள் ஆசான் ராக்கியண்ணன்தான்!”
இப்படிப் பொன்னர் சொன்னதும் அந்த இடமே மௌனத் தால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. மெளனத்தைக் கலைத்துக் கொண்டு மாயவரின் சொற்கள் கிளம்பின.
பல ஆண்டுகள் நாடுகள் பல சுற்றிவிட்டு மீண்டும் தலை யூர் வந்த நான், குன்றுடையான் குடும்பத்தைப் பற்றி விசாரிக் கவே ராக்கியண்ணனைச் சந்தித்தேன். போகும் வழியிலேயே பொன்னர் சங்கரைப் பார்த்தேன். அப்போது இவர்கள்தான் பொன்னர் சங்கர் எனத் தெரியாது. ராக்கியண்ணன் எல்லா விபரங்களும் என்னிடம் சொன்னார். பொன்னர் சங்கரைப் பற்றிய உண்மையையும் குன்றுடையானிடம் தெரிவிக்க வேண் டினார். அவரும் இதோ இந்த வீரமலையும் கட்டிக்காத்த உண் மைகள் நெடுநாட்களுக்குப் பிறகு என் வாயிலாகவும், வீர மலையின் உதவியோடும் வெளிப்பட அனுமதி கொடுத்தவரே ராக்கியண்ணன்தான்! குன்றுடையானைப் பார்த்து பொன்னர் சங்கர் பற்றிய உண்மையைக் கூறுவது மட்டுமல்ல; அவர்கள் இருவரையும் சோழ மன்னரிடமும் அழைத்துப் போக வேண்டு மென்பதே எனது நோக்கம். என் நோக்கம் நிறைவேற குன் றுடையான் ஒப்புதல் அளித்தால் -பொன்னர் சங்கர் விரும்பினால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்!”
மாயவரின் வார்த்தைகள் அங்குள்ள அனைவருக்கும் தேன் துளிகளாக இனித்த போதிலும்; பொன்னர் – சங்கர் இருவர் மட்டும் குறுக்கிட்டு -“எல்லாம் எங்கள் ஆசானின் விருப்பப் படியே நடக்க வேண்டும்” என்று உறுதியாக மொழிந்தனர்.
24. ஆசானின் சபதம்
“ஆசானின் விருப்பத்தையும் அறிந்து அவர் ஒப்புதலையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் எனக்கு கருத்து வேறு பாடே இல்லை. ஆசானிடம் இவ்வளவு மரியாதையும் நன்றி உணர்வும் கொண்டிருக்கிற பொன்னர் சங்கர் இருவரின் நல்ல பண்பை நான் பாராட்டுகிறேன். உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் கொடுப்பது துணை நின்றவர்களுக்குத் துரோ கம் விளைவிப்பது வளர்த்து ஆளாக்கியவர்களின் முதுகி லேயே குத்துவது என்பதே இன்றைக்குப் பலரது குணாதிசயங் கள் ஆகிவிட்டிருக்கும்போது அவர்களுக்கு மத்தியில் உப்பிட்ட வரை உள்ளளவும் நினைக்கின்ற உண்மையான நெஞ்சங் களும் இருக்கின்றன என்பது மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது! பொன்னர் – சங்கரின் இந்தப் புனித எண்ணத்தை நாம் அனைவரும் மதித்தே ஆக வேண்டும்” என்று உணர்ச்சி மேலிட மாயவர் கூறினார்.
“அப்படியானால் இப்போதே இங்கிருந்து குன்றுடையார் மாரிக்கவுண்டன்பாளையத்துக்கு ஒரு ஓலையனுப்பி, ராக்கி யண்ணனை உடனே புறப்பட்டு வருமாறு செய்யலாமே!’ என்று சின்னமலைக்கொழுந்து யோசனை தெரிவித்தார்.
பொன்னரும் சங்கரும் அந்த யோசனையை ஏற்றுக்கொள்ள வில்லை. ஆசானால் வளர்க்கப்பட்ட நாங்களிருவரும் இங்கே இருந்துகொண்டு, எங்களைப் பார்க்க அவரை அழைப்பது எந்த வகையில் நியாயமாகும்? எங்களுக்கு தாயாக – தந்தையாக – ஆசானாக விளங்கிடும் அந்தத் தியாகத் திருவிளக்கு இருக்குமிடம் நோக்கி நாங்கள் சென்று, நடந்தவைகளைச் சொல்லி, அவர் காலைப் பிடித்துக் கொண்டு ஆனந்தக் கண் ணீர் வடிக்கும் வரையில் எங்கள் பரபரப்பும் பதற்றமும் நிற் காது. எனவே எங்களுக்கு விடை கொடுங்கள்” என்று அவர்கள் கேட்டனர்.
“என் பிள்ளைகள் சொல்வது தான் சரி! அவர்களை வாழ வைத்த தெய்வத்தை அவர்கள் சென்று வணங்கட்டும். அவர்க ளுடன் நானும் தாமரைநாச்சியும் போகிறோம். எங்கள் குடும் பத்துச் செல்வங்களைக் காப்பாற்றுவதற்காகக் தியாகத்திலேயே மிக உயர்ந்த தியாகத்தைச் செய்த ராக்கியண்ணனை நாங்க் ளும் பார்க்கத் துடிக்கிறோம்” என்றான் குன்றுடையான்.
“நீங்கள் வருவதைப் பற்றி ஒன்றுமில்லை. ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிடக் கூடாது. ராச்சாண்டார் மலையில் நடந்த போரில் தோற்றுவிட்டதையும் தலையூர்த் தளபதி திருமலை மாண்டு விட்டதையும் இந்நேரம் தலையூர்க் காளி மன்னன் அறிந்திருக்கக் கூடும். தலையூர்க் காளியை உசுப்பித் தூண்டிவிட செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தியப் பனும் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருப்பார்கள். அவர் கள் பேச்சைக் கேட்டுத் தலையூர் மன்னன் ஆரிச்சம்பட்டியின் மீது பாய்வதற்குத் திட்டம் தீட்டக் கூடும். இப்படிப்பட்ட சம யத்தில் ஆரிச்சம்பட்டிக் குடும்பத்தினரை அவர்களது அரண் மனைக்கு அனுப்புவதும் நல்லதல்ல; அதே போல இங்கே சங்கரமலைக்கோட்டையிலும் அவர்களைத் தனியாக விட்டு விட்டு குன்றுடையாரும் தாமரைநாச்சியார் அம்மையாரும் மாரிக்கவுண்டன்பாளையம் வருவதும் எனக்குச் சரியாகப் படவில்லை” என்று வீரமலை குறுக்கிட்டுச் சொன்னதும், அந்தக் கருத்தை யாரும் மறுத்துப் பேச முன்வரவில்லை.
“பொன்னர் – சங்கர் இருவரையும் அழைத்துக் கொண்டு நான் ராக்கியண்ணனிடம் போகிறேன். திருமணத்துக்கான ஒப்புதலை அவரிடம் பெறுவதோடு; பொன்னரையும் சங்கரை யும் சோழ மன்னரிடம் அழைத்துப் போவது குறித்தும் ஆலோ சனை கேட்கிறேன். ராக்கியண்ணனே இங்கு வந்து உங்களை யெல்லாம் ஒரு சேரப் பார்க்க விரும்புவார் என்பது எனக்குத் தெரியும். எதற்கும் அவருக்குக் காட்ட வேண்டிய மரியாதைக் காக நானும் பொன்னர்-சங்கரும் இன்றே புறப்படுகிறோம். வீரமலை இங்கு துணையாக இருப்பது நல்லது என நினைக் கிறேன். வீரமலை விரும்பினால், குன்றுடையாரும் சம்மதித் தால் வீரமலையின் பொறுப்பில் சங்கரமலைக்கோட்டையின் பாதுகாப்புப் பகுதி ஒன்று இருக்கலாம். வலிமையிலும் திறமை யிலும் அறிவுக்கூர்மையிலும் அதற்குப் பொருத்தமான வீரன் தான் வீரமலை என்பது என் கணிப்பு என்று விவரித்துக் கொண்டே மாயவர் குன்றுடையானை நோக்கினார். அதில் தனக்கு முழுச் சம்மதம் என்றார் குன்றுடையான். வீரமலை மட்டும் ஆசானிடம் சென்று அதன் பிறகு திரும்பி வரலாமே என எண்ணியதால் தயக்கம் காட்டினான்.
“உனக்காக ராக்கியண்ணனிடம் நான் பேசிக் கொள்கி றேன். சங்கரமலைக்கோட்டையில் நீ இருக்க வேண்டியது மிக அவசியமாகும்!’ என்று மாயவர் கூறிக் கொண்டே புறப்படத் தயாரானார். வீரமலையிடம் விடை பெற்றுக் கொள்ளும் சாக் கில் அவன் பக்கம் திரும்புவது போலத் திரும்பிக் கண்களை விட்டுத் தேடிப் பிடிக்கச் சொன்னார்கள் பொன்னரும் சங்க ரும்; முத்தாயி பவளாயியை!
அவர்கள் முகம் முழுமையாகத் தெரியாவிட்டாலும் அந்தத் திங்கள் முகங்கள் மறைந்திருந்த திரைச்சீலை மட்டும் மெல்ல அசைந்து அவர்கள் அங்கேதான் இருக்கிறார்கள் என்ற ரகசி யத்தைச் சொல்லிற்று. எங்களைத் தவிக்க விட்டுப் போகிறீர் களா? என்று அந்த விழிகள் கேட்டன. பிரிய முடியாமல் பிரி கிறோம் என்று ஏக்கத்துடன் விடையளித்தவாறு அங்கிருந்து மெல்ல விலகின பொன்னர் சங்கரின் விழிகள்! தாயும் தந்தையும் தழுவி முத்தமீந்து விடைகொடுத்து வாழ்த்தியனுப்பி னர். சின்னமலைக்கொழுந்து சிலம்பாயி வையம்பெருமான் மூவரும் புன்னகை மலர நின்றனர். அருக்காணித் தங்கம் திரைமறைவில் நின்றவள் ஓடோடி வந்து, பொன்னர் – சங்கர் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு, அண்ணா! அண்ணா! சீக்கிரம் வந்து விடுங்கள்!” என்று பாசத்தைப் பொழிந்தாள்.
மாயவர், பொன்னர், சங்கர், மூவரையும் ஏற்றிக் கொண்ட குதிரைகள் சங்கர் மலைக்கோட்டையிலிருந்து புறப்பட்டன.
மாரிக்கவுண்டன்பாளையம் பாசறையில் சோலைப் பக்க மாக உலவிக் கொண்டிருந்த ராக்கியண்ணன் குதிரைகளின் குளம்படிச் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். அவர் பார்த்தவுடனேயே பொன்னரும் சங்கரும் தங்கள் குதிரைகளில் இருந்து கீழே குதித்து ஆசானுக்குத் தீமது பணிவை உணர்த் தும் வகையில் குதிரைகளைப் பிடித்தவாறு நடந்து வந்தனர். மாயவர் மட்டும் ராக்கியண்ணன் உலவிக் கொண்டிருந்த இடம் வரையில் குதிரையில் வந்து மெல்ல இறங்கினார்.
ராக்கியண்ணன் பேசுவதற்கு இடம் வைக்காமலே மாயவர் முந்திக் கொண்டார். பொன்னர் சங்கர் புரிந்த வீரச் செயல் களை மாயவர் சொல்லக்கேட்டு ராக்கியண்ணன் மகிழ்ச்சியில் திளைத்தார்.
தங்களை யாருடைய மக்கள் என்று தெரிவிக்காதது மட்டுமல்ல; தன்னுடைய மக்களாகவே வளர்த்து ஆளாக்கிய ஆசானின் முகத்தைப் பார்த்த போது பொன்னர் சங்கருக்கு அவர் மீது ஏற்பட்ட பக்தி எல்லை கடந்து நின்றது. அவர்கள் இரு வரும், தான் எதிர்பார்த்தவாறு ஈடு இணையற்ற வீரத்திலகங்க ளாகத் தன் முன்னால் நிற்பது ஆசானுக்கும் மிகப் பெருமித மாக இருந்தது. ராக்கியண்ணனின் அருகில் அங்கிருந்த கருங் கல்லால் ஆன ஒரு பலகையில் மாயவர் அமர்ந்து கொண் டார். பொன்னர் சங்கர் இருவரையும் பார்த்து ஆசான் ஏதோ சைகை செய்திட, அதைப் புரிந்து கொண்ட அவர்கள் ஆளுக்கொரு பக்கம் விரைந்தார்கள். சில நொடிகளில் திரும்பி வந்த பொன்னரின் கையில் பழங்கள் நிறைந்த தட்டொன்று திருந்தது. சங்கரின் கையில் இரண்டு கிண்ணங்களில் பால் இருந்தது. அவர்கள் கொண்டு வந்ததை ஆசானுக்கும் மாய வருக்கும் நடுவில் அந்தக் கருங்கல் பலகையில் வைத்தார் கள். பாலில் தேன் ஊற்றியிருக்கிறதா என்று ஆசான் கேட் கவே சங்கர் ‘ஆம்’ என்று தலையசைத்தான். மாயவர், ராக்கி யண்ணனைப் பார்த்து, ‘இத்தனை வயதுக்கும் உமது தேகக் கட்டு உடையாமல் வலிமையாக இருப்பதற்கு பாலில் தேனைக் கலந்து அருந்துவதும் ஒரு காரணமாக்கும்!’ எனக் கூறிச் சிரித் தார். அதிலென்ன சந்தேகம்? இளமை முதலே எனக்கு இந் தப் பழக்கம் உண்டு! நாம் கஷ்டப்பட்டு சேகரிக்க வேண்டிய மூலிகைகளைப் பசு மாடு உணவாகக் கொண்டு அதன் சத் திலிருந்து பால் தருகிறது! அதைப் போலவே விதவிதமான மலர்களில் காணப்படும் அருமருந்து போன்ற மதுவைக் கொண்டு வந்து தேனீக்கள் அடை கட்டுகின்றன! ஆகவே பாலும் தேனும் படாடோபமானதும் ஆடம்பரமானதுமான உணவாகத் தோன்றாவிட்டாலும் உடலுக்கு உரமேற்றி, அறி வுக்குத் தெளிவேற்ற மெத்தவும் பயன்படுகிறது என்பது மூத் தோர் கருத்து!” என்று ராக்கியண்ணன் அளித்த பதில் மாய வருக்கு மன நிறைவைத் தந்தது.
தேனும் பாலும் தரும் இனிப்பை விட இனிப்பான செய்தி யொன்று சொல்லப் போகிறேன்” என்றார் மாயவர். ராக்கி யண்ணன் ஆவலுடன் கவனித்தார். மாயவர், ஒரு பழத்தை உரித்து சுளையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். மற்றொரு சுளையை ராக்கியண்ணனிடம் கொடுத்தார். ராக்கி யண்ணன் அந்தச் சுளையைத் தனது வாயில் மென்றவுடன் முகத்தைச் சுளித்தார். ஆசான் முகம் சுளிப்பதை மாயவர் மட்டுமல்லாமல் பொன்னர் சங்கர் இருவரும்கூட கவனித்தார்கள்.
“என்ன; புளிக்கிறதா? நீங்கள் கொடுத்த பழம்தானே?” என்றார் மாயவர் வினயமாக!
“நீங்கள் நல்ல சுளையை எடுத்துக் கொண்டு எனக்குப் புளிப்பான சுளையைக் கொடுத்திருக்கிறீர்கள்!’ என்று பதி லுக்குக் கேலி செய்தார் ஆசான்!
“பழச்சுளையில் ஒன்றும் புளிப்பும் இனிப்பும் இல்லை; ராக்கியண்ணரே! நான் சொல்லப் போகும் செய்திக்கு உம் மிடமிருந்து வரப்போகும் பதிலில்தான் இனிப்பு இருக்கிறதா; புளிப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்றார் மாயவர்!
என்ன சொல்லப் போகிறார் என்பதை ராக்கியண்ணன் கூர்ந்து கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
“பொன்னர் சங்கர் இருவரையும் சோழ மன்னரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அதற்கு உமது விருப்பத்தை அறிய வேண்டும் என்று பொன்னர் – சங் கர் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்” என்று மாயவர் சொல்லி நிறுத்துவதற்குள்; “அதில் எனக்கு பூரண திருப்தி! சோழ மன் னரின் பேரன்புக்குப் பாத்திரமாகப் பொன்னர் – சங்கர் திகழ்ந்தால் தான் கொங்கு மக்களின் குலப்பெருமையையும், மரபின் மாண்பையும் கட்டிக் காத்து அந்த மக்களின் எதிர்கால நல் வாழ்வுக்கு உத்திரவாதமளிக்க முடியும். இன்று கொங்கு மண்ட லத்தில் செல்லாத்தாக்கவுண்டரும் மாந்தியப்பனும் தங்கள் இஷ்டத்துக்கு தலையூர்க்காளி மன்னனை ஆட வைத்து நடத்து கிற கொடுமைகள் கோணங்கிச் சேட்டைகள் இவைகளை எல்லாம் குழிக்குள் போட்டு மூட வேண்டுமேயானால் பொன் சங்கர் இருவரும் வருங்காலத்தில் நடத்த இருக்கும் சாத னைகளுக்குச் சோழ மன்னரின் தூய துணை இருந்தே ஆக வேண்டும். நீங்கள் இவர்களை இன்றைக்கே வேண்டுமானா லும் சோழ மன்னரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத் துங்கள். அதற்காவன செய்ய நான் தயரீர்!’ என்று உற்சாகம் கரை புரள ராக்கியண்ணன் கூறினார்.
“இன்றைக்கே தேவையில்லை! எனக்கும் தலையூர் அரண் மனையில் வேறு பணிகள் காத்திருக்கின்றன. அவற்றை முடித்து விட்டுத்தான் சோழ மன்னரிடம் நான் சென்றிட இயலும்! எப்பொழுது அழைத்துச் செல்வது என்பது முக்கியமல்ல! அழைத்துச் செல்லலாம் என்பதற்கு ஆசானிடம் அனுமதி கிடைத்து விட்டதே; அதுவே போதும்!” என்றார் மாயவர் முகப் பொலிவுடன்!
ராக்கியண்ணன், பால் கிண்ணத்தையெடுத்து மாயவரிடம் கொடுத்து, ஆறுவதற்குள் அருந்துங்கள்!” என்றார்.
“பால் இருக்கட்டும்; சாப்பிடுகிறேன்! ராக்கியண்ணரே; நான் இப்போது இன்பத்துப் பாலைப் பற்றிப் பேசப் போகிறேன்” எனக் கண் சிமிட்டினார் மாயவர்!
“ஆதாரத்துடன் பேச வேண்டுமானால் திருக்குறள் சுவடி இருக்கிறது. எடுத்து வரச் சொல்லட்டுமா?” என்று கேலியைத் தொடர்ந்தார் ஆசான்!
“தேவையில்லை! நான் இப்போது இன்பத்துப் பாலைப் பற்றி விரிவுரையும் விளக்கவுரையும் ஆற்றப் போவதில்லை நமக்குள்ளே பேசித் தீர்க்க வேண்டிய ஒரு விவகாரம். அவ் வளவுதான்!” என்றவாறு மாயவர், பொன்னர் சங்கரைப் பார்த்தார்.
இன்பத்துப் பால் என்றதும் ஏதோ விரசமான செய்தி சொல்லப் போகிறார் என நினைத்து விட்ட ராக்கியண்ணன், பொன்னரையும் சங்கரையும் ஒதுங்கிச் செல்லுமாறு கண்க ளால் கட்டளையிட்டார். அவர்களும் ஒருக்கணம் தயங்கி நின்று, பிறகு அங்கிருந்து நகர ஆரம்பித்தனர். அதைப் பார்த்து விட்ட மாயவர்; ”அடேடே! விஷயமே அவர்களைப் பற்றி யது தானே! அவர்களும் இருக்கட்டும்” என்றார்.
மின்னல் வேகத்தில் மாறிய ஆசானின் முகம், மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. பொன்னர் சங்கரை அங்கேயே இருக்குமாறு பணித்து விட்டு, மாயவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை மிக்க பரபரப்புடன் கவனித்தார்.
“குன்றுடையான் திருமணத்தின் போது தாமரைநாச்சியார் செய்த சபதப்படி சின்னமலைக்கொழுந்தின் பெண்கள் இரு வரையும் பொன்னரும் சங்கரும் மணந்து கொள்ள வேண்டும். ராச்சாண்டார்மலையில் அடைக்கப்பட்ட மகள்களை வடுவித் தால் அந்த மகள்களையே பொன்னர் சங்கருக்கு மணம் முடிப்பதாக சின்னமலைக் கொழுந்து அறிவித்த வாக்குறுதிப் படியும் அந்த மணம் நடந்திட வேண்டும். அந்த மணவிழா வுக்கு உமது ஒப்புதல் தேவை.”
இதை மாயவர் சொன்னவுடன் ராக்கியண்ணன் திடுமென எழுந்து நின்றார். வானத்தை நோக்கினார். வலுவான கை கொண்டு கழுத்தைப் பிடித்து விட்டுக் கொண்டார்.
“தாமரைநாச்சியாரின் சபதப்படி பொன்னரும் சங்கரும் சின்னமலைக் கொழுந்தின் பெண்களை மணக்கத்தான் வேண் டும். அதில் எனக்கு எந்தவிதமான மறுப்பும் இல்லை” என்று ஆசான் சற்று உரத்த குரலில் சொன்னது பொன்னர் – சங்கருக்கும் மாயவருக்கும் சிறிது வித்தியாசமாகத் தோன்றி னாலும் மறுப்பு இல்லை” என்று திட்டவட்டமாகச் சொன் னது கேட்டுப் பூரித்துப் போனார்கள். அந்தப் பூரிப்புக்கிடையே ராக்கியண்ணனின் வார்த்தைகள் ஒலித்தன!
“ஆனால் ஒன்று!” என்று ராக்கியண்ணன் அழுத்தம் திருத்தமாகக் கத்திப் பேசினார்.
பூரிப்பால் மயங்கி நின்ற பொன்னர், சங்கர், மாயவர் மூவரும் திடுக்கிட்டு, ”என்ன ஆனால்?” என விழிகளை அகல விரித்துப் பார்த்தனர்.
“எனது சபதம் ஒன்று இருக்கிறது! அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு பொன்னர் சங்கருக்கு இருக்கிறது.”
இவ்வாறு ஆசான் ஆவேசமாக முழங்கினார்.
“என்ன சபதம்?” என்று மாயவர் அவசரப்பட்டார். ராக்கி யண்ணனின் தொனியில் ஏற்றம் குறைந்தது! அவரது தொண்டை அடைத்துக் கொண்டது போல ஒரு கரகரப்பு! ‘என்ன சப தம்? என்பதைக் கேட்பதற்கு முன் அதை நிறைவேற்றி வைப்ப தாக பொன்னரும் சங்கரும் எனக்கு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்! கொடுப்பீர்களா?’ என்று அவர்களைப் பார்த்து ஆசான் கேட்டார். பொன்னரும் சங்கரும் ஓடோடி வந்து ஆசான் முன் பணிவுடன் குனிந்தார்கள். அவரது காலைத் தொட்டுக் கும்பிட்டார்கள். நீட்டப்பட்டிருந்த அவரது கையில் அடித்துச் சத்தியம் செய்து கொடுத்தார்கள். அதன்பிறகு ஆசான் மிகவும் தாழ்ந்த குரலில் பேச ஆரம்பித்தார்.
“என் குலக்கொழுந்துகளைக் காப்பாற்ற வேண்டுமென்பதற் காக என் குடும்பத்துக் கொழுந்துகளைக் கொண்டு போய் தலையூர்க்காளியிடம் கொடுத்தேன். அவன் அவைகளைக் கொன்றானா; கொல்லாமல் விட்டானா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் நிச்சயம். சகுனியை விட மோச மான குணம் கொண்ட செல்லாத்தாக் கவுண்டரும் அவர் மகன் மாந்தியப்பனும் குன்றுடையானின் வமிசம் வளரக் கூடாது என்பதற்காக அந்தக் குழந்தைகளைக் கொல்லத்தான் சொல்லியிருப்பார்கள் என்பது திண்ணம். என் குழந்தைகள் என்ன ஆயின என்பது பற்றி எனக்குச் செய்தி கிடைக்காமலே போய்விட்டது. அவைகள் இருப்பதும் ஒன்றுதான் இறப்பதும் ஒன்றுதான். கொல்லப்பட்டிருந்தால் இந்நேரம் அவைகள் புதைக்கப்பட்ட இடம் புல் முளைத்து அதுவும் மாறிப் போய் அடையாளம் தெரியாமல் போயிருக்கும். கொல்லப்படாவிட் டாலும் அவைகளை ஒழுங்காக வளர்த்து உயர் தனி வீரர் களாக ஆக்கியிருக்க மாட்டார்கள். அதனால் என் குழந்தைகள் இறந்து விட்டதாகவே முடிவு செய்து கொண்டேன். அந்த முடிவோடுதான் தலையூரிலிருந்து மாரிக்கவுண்டன் பாளையத் துக்குப் புறப்பட்டேன். என் மனைவி அழகுநாச்சியாரை எப் படி சமாதானப்படுத்தப் போகிறோம் என்று கவலைப்பட்டுக் கொண்டே வந்தேன். அந்தக் கவலையை எனக்கு வைக்காமல் அதைவிடப் பெருங்கவலையைத் தந்து விட்டு அவள் என்னை விட்டே போய் விட்டாள். அழகுநாச்சியாருக்கு நடத்த வேண் டிய ஈமச் சடங்குகளை நடத்தி முடித்தேன். இரவு வீட்டுக் குள்ளே தூக்கமின்றித் துடித்தேன். இதோ இந்தப் பொன்னர் சங்கர், குழந்தைகளாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அழகு நாச்சியைப் பற்றிய நினைவு, ஏதோ ஒரு ஆவேசத்தை என் இதயத்தில் புயலாக வடிவெடுக்கச் செய்தது. ஒரே பாய்ச்ச லாகப் பாய்ந்து குழந்தைகள் பொன்னர் சங்கரைத் தூக்கிக் கொண்டு, என் மனைவியை அடக்கம் செய்த இடத்திற்கு ஓடி னேன். குழந்தைகளைக் கையில் வைத்துக் கொண்டு அந்த மயான அமைதியைக் கிழிக்குமளவுக்கு பலங்கொண்ட மட்டும் கத்தினேன். அது கத்தல் அல்ல; சபதம்! இதோ என் பொன் னரும் சங்கரும் நிறைவேற்றித் தரவேண்டிய சபதம்!”
ஆசான் கண்கள் கனலாக மாறி நின்றார்.
“என்ன சபதம்? சொல்லுங்கள் நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம்!”
பொன்னரும் சங்கரும் எக்காள முழக்கமிட்டனர்.
“அழகுநாச்சியாரே! என் அன்பே! ஆருயிரே! உன் குழந்தை களை நான் கொன்று விட்டதாக என் மீது கோபம் கொள் ளாதேயம்மா! நமது குழந்தைகளை நாட்டுக்காக அர்ப்பணித்திருக்கிறோம் நமது குலப்பெருமை ஓங்குவதற்காக தியாகம் செய்திருக்கிறோம். நமது குழந்தைகளைக் கொல்வதற்கு யார் காரணமாக இருந்தார்களோ; அவர்களைப் பழிவாங்குவதற்கு இதோ இந்தக் குழந்தைகளை பயன்படுத்துவேன்! இந்தக் குழந் தைகள் வாழத்தானே நமது குழந்தைகளை இழந்திருக்கிறோம்! இன்று முதல் இவை நமது குழந்தைகள்! இந்தக் குழந்தை களை வளர்ப்பேன் – வீரர்களாக வளர்ப்பேன் வீணர்களை வீழ்த்த இவர்களையே பயன்படுத்துவேன்! இது சத்தியம்! சத்தியம்! என்னுடைய இந்தச் சபதம் நிறைவேறும் வரையில் இந்தக் குழந்தைகள் பொன்னரும் சங்கரும் பிரும்மச்சாரிகளாகவே வாழ்வார்கள்! இதுவும் சத்தியம்! சத்தியம்!”
ராக்கியண்ணன் மாயவரையும், பொன்னர் சங்கரையும் பார்த்து, ‘இதுதான் நான் செய்த சபதம்! இதைத்தான் பொன் னர் சங்கர் எனக்கு நிறைவேற்றித் தர வேண்டும் – அதுவரை யில் இவர்கள் பிரமச்சாரிகளாகவே இருக்கவேண்டும்!” என்றார்.
25. நீயாயம் எடுபடாத நிலையில்…!
வீரமலை யூகித்துச் சொன்னபடியே வளநாட்டுப் படை ஆரிச்சம்பட்டி அரண்மனையை வளைத்து முற்றுகையிட்டு விட்டது. ஆரிச்சம்பட்டியிலிருந்து பெரும்பாலான வீரர்கள் ஏற்கனவே ராச்சாண்டார்மலைக்குச் சென்று முத்தாயி பவளா யியை மீட்டுக் கொண்டு சங்கரமலைக்கோட்டைக்குப் போயிருந்த காரணத்தால் வளநாட்டுப்படையை நீண்ட நேரம் எதிர்த்து நிற்க முடியாமல் ஆரிச்சம்பட்டி திணறியது. மாந்தியப்பனின் தலைமையில் வளநாட்டுப் பெரும் படையை ஆரிச்சம்பட்டிக்கு அனுப்பி விட்டு செல்லாத்தாக் கவுண்டர் தலையூருக்கு விரைந்து காளி மன்னனிடம் ராச்சாண்டார் மலையில் தலையூர்த் தளபதி களில் ஒருவனான திருமலை கொல்லப்பட்டதைக் கூறி ஆரிச்சம் பட்டியின் மீது காளிக்குக் கடுங்கோபம் ஏற்படுமளவுக்குத் தூபம் போட்டார்.
“காளி மன்னா! உனக்கு நான் புரவலாக இருந்து என்ன பயன்? அடிமை போல் இருக்க வேண்டிய ஆரிச்சம்பட்டியான் வீட்டுப் பெண்களை என் மகன் மாந்தியப்பனுக்கு மணம் முடிக்க முடியாமல் என் மதிப்பு மரியாதை அனைத்தையும் இழந்து நிற்கிறேன். அந்த சின்ன மலைக்கொழுந்தின் தங்கை தாமரை நாச்சியை மாந்தியப்பனுக்குத் தருவதாகச் சொல்லி, மணவிழாத் தருணத்தில் நம் அனைவரின் மானத்தையும் பறித் தவர்கள்தான் ஆரிச்சம்பட்டிக்காரர்கள்! எப்படியும் அந்த வீட்டில் பெண் எடுக்க வேண்டும் – இரத்தம் சிந்தாமல் ஆரிச்சம் பட்டியையும் நமது எல்லைக்குள் இணைத்துக் கொள்ள வேண் டும் – என்ற எனது திட்டத்தை நிறைவேற்ற எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் பயனில்லாமல் போய்விட்ட காரணத் தால்தான் அந்தப் பெண்களை சிறையெடுத்து ராச்சாண்டார் மலையில் வைக்க நேரிட்டது. அதைக் கேள்விப்பட்ட சின்ன மலைக்கொழுந்து நேராக உன்னிடம் வந்து முறையிட்டிருக்க வேண்டும். நீ அவனுக்காக மனமிரங்கி அந்தப் பெண்களை விடுவிப்பதற்கு நிபந்தனையாக இருவரையும் மாந்தியப்பனுக்கு மணமுடிக்க சின்னமலைக்கொழுந்தின் சம்மதத்தைப் பெற்றி ருக்க வேண்டும். அப்படித் தான் நடக்குமென்று நான் எதிர் பார்த்ததற்கு மாறாக அந்தச் சின்ன மலைக்கொழுந்து ராச் சாண்டார்மலையின் மீது படையெடுத்து நமது படைத் தளபதி யையும் கொன்றுவிட்டான் என்றால்; எனக்கு மட்டுமல்ல வெற்றியன்றி வேறொன்றையும் இதுவரை அறியாத தலையூர் அரசுக்கு மிகப் பெரிய தலைக் குனிவு!”
செல்லாத்தாக் கவுண்டரின் வார்த்தைகள் தலையூர்க் காளி யின் உரமிக்க நெஞ்சத்தைக் குன்றிடச் செய்தது எனினும்; அவன் பொறுமையிழக்காமல் அவரைப் பார்த்துக் கேட்டான்.
“ஆரிச்சம்பட்டிக்காரர்கள் ராச்சாண்டார் மலையில் நமது வீரர்களை வெற்றி கொண்டதற்குக் காரணம்; சின்னமலைக் கொழுந்தின் வீரமோ, திறமையோ அல்ல என்றும் – இரண்டு இளம் வீரர்களின் ஆற்றலின் விளைவு தான் நமக்கேற்பட்ட தோல்வியென்றும் நான் கேள்விப்பட்டேனே; அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
செல்லாத்தாக்கவுண்டர், தலையூர்க்காளியின் இந்தக் கேள் விக்குத் தெளிவாகப் பதில் சொல்ல இயலவில்லை. காரணம்; அவருக்கும் அந்த வீரவாலிபர்களைப் பற்றிய விபரம் எதுவும் தெரியாது. ஆனால் அந்த வாலிபர்களின் சாகசத்தினால்தான் ராச்சாண்டார்மலைத் தோல்வி ஏற்பட்டது என்பது மட்டும் அவருக்குத் தெரிந்திருந்தது.
“அந்தப் பொடியன்களை யாரென்றே எனக்கும் தெரிய வில்லை! போரில் புலிகளாக இருக்கிறார்கள் என்று ராச்சாண் டார்மலையில் காயம்பட்டுக்கிடக்கும் நமது துணைத் தளபதி களில் ஒருவனே என்னிடம் சொன்னான்!” என்று செல்லாத்தாக் கவுண்டர் நெஞ்செரிச்சலுடன் கூறினார்.
“ஆரிச்சம்பட்டி வெற்றிக்குத் திடீரெனத் தோள் கொடுத்த அந்தத் தீரமிக்க வீரர்கள் இருவரும் யாராகத்தான் இருப்பார் கள்? என்று வியப்புக்குறியை விழிகளில் பதித்து உலவிய தலையூர்க் காளியின் காதுகளில் “அவர்கள் யார் என்று நான் கூறுகிறேன்” என்ற சொற்கள் விழுந்திடவே அவன் மட்டு மல்ல; செல்லாத்தாக் கவுண்டரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்.
இதழோரம் புன்னகையை நெளியவிட்டுக் கொண்டு மாய வர், அவர்களை நோக்கி மெல்ல நடந்து வந்தார்.
“உங்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறேன்; எங்கு போய் விட்டீர்கள்?’ எனச் சற்றே ஆறுதல் பெற்றவனாக தலையூர்க் காளி ஆவலுடன் கேட்டான்.
“உன்னிடம் சொல்லிவிட்டுத்தானே புறப்பட்டேன். அண்டை அருகாமையில் உள்ள ஆட்சியாளர்கள் எப்படியிருக்கிறார்கள்; அவர்களிடமெல்லாம் நமது தலையூர் அரசின் அணுகுமுறைகள் எவ்வாறு அமைதல் வேண்டும்; என்ற விபரங்களை ஆங்காங்கு சென்று அறிந்து வரத்தான் சென்றிருந்தேன். எனது பழைய நண்பர். ஆசான் ராக்கியண்ணனைச் சந்தித்தேன். குன்றுடை யான் குடும்பத்தினரைப் பார்த்தேன், பேசினேன். அந்தச் சமயம் நான் எதிர்பாராதவிதமாக இப்போது நீயும் செல் லாத்தாக் கவுண்டரும் எந்த இளைஞர்களைப்பற்றி விவா தித்துக் கொண்டிருக்கிறீர்களோ; அந்த இளைஞர்களும் அங்கு வந்து விட்டார்கள்!”
இதைக் கூறிக் கொண்டு மாயவர், காளி மன்னனின் தோளில் தட்டிக் கொடுத்தார். அப்படித் தட்டியது பொறுமையாக இரு பொங்கியெழுந்து விடாதே என்று அவனை அமைதிப் படுத்துவது போல இருந்தது.
“அந்த இளைஞர்கள்தான் யார் என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ராச்சாண்டார்மலையில் நமது தளபதி திருமலை யையே வீழ்த்துகிற அளவுக்கு ஆற்றல் பெற்ற வீரர்கள் யாராக இருக்க முடியும்?
காளி மன்னன் மாயவரிடம் உடனே பதிலை எதிர்பார்த் தான். மாயவர் அவன் எதிர்பார்த்தவாறு பதில் கூறியிருப்பாரோ என்னவோ; அதற்குள் செல்லாத்தாக் கவுண்டர் குறுக் கிட்டு விட்டார்.
“தலையூர்த் தளபதி மட்டும் கொல்லப்படவில்லை. ராச் சாண்டார்மலையை இழந்து விட்டதால் தலையூரின் மானமும் கொல்லப்பட்டு விட்டது! அதற்குத் துணை நின்ற அந்தத் துடுக்கு மிக்கப் பொடியன்களை யாரென்று கண்டுபிடித்தேயாக வேண்டும்.”
செல்லாத்தாக் கவுண்டரின் பேச்சில் எரிச்சல் எரிமலை குமுறியதை மாயவர் உணர்ந்து கொண்டார்.
“கவுண்டர் அவர்களே; காளி மன்னன் இயல்பாகவே நல்ல உள்ளம் படைத்தவன் என்பது எனக்குத் தெரியும். ஓங்கி உயர்ந்த மலையிலிருந்து கீழே விழும் அருவியாக இருந்தால் நீங்கள் கலக்கும் விஷத்தை அடித்துக் கொண்டு சென்று விடும். இவனோ; தேங்கி நிற்கும் திருக்குளமாக இருக்கிறான் அத னால் நீங்கள் சிறிதளவு விஷம் தூவினாலும், அது பரவிப் பாழாக்கி விடுகிறது இவனது உள்ளத்தை!”
மின்னல் போன்ற மாயவரின் தாக்குதல் செல்லாத்தாக் கவுண்டரை உலுக்கிவிட்டது. காளிமன்னனும் சிறிது அதிர்ச்சி அடைந்தான்.
“மாயவரே! தலையூருக்கு நீர் அமைச்சர் மட்டுமே! நான் மன்னனுக்குப் புரவலர் என்பதை மறந்து விடவேண்டாம். மமதை உமது கண்களை மறைத்தால் பிறகு நான் பொல்லாதவ னாக மாறி விடுவேன்” எனச் சீறினார் செல்லாத்தாக் கவுண்டர்.
“நீர் என்னை பயமுறுத்துவது எப்படியிருக்கிறதென்றால் பாம்பு, கடிப்பேன் என்று சொல்வது போலிருக்கிறது!”
“சொல்லி விட்டு கடிக்காது பாம்பு! அதன் வாலை மிதித் தாலே போதும்; நச்சுப்பல் உடலில் ஏறும்-பிறகு உச்சி முதல் உள்ளங்கால் வரையில் விஷமாக மாறும்!”
“எப்படியோ நீர் யார் என்பதை நீரே முன்வந்து ஒத்துக் கொண்டதற்கு நன்றி!”
“இதற்கு மேல் என் வாய் பேசாது; வாள்தான் பேசும்!” என்று உரத்த குரலில் கத்திக் கொண்டே செல்லாத்தாக் கவுண் டர் வாளை உருவினார். அதற்குள் காளி மன்னன் பாய்ந்து சென்று அவரது கையைப் பிடித்துக் கொண்டு,
“தயவுசெய்து அமைதியாக இருங்களேன். நமது தளபதி திருமலையைக் கொன்று ராச்சாண்டார்மலையில் வெற்றிக் கொடி நாட்டி விட்டுச் சென்ற அந்தப் பொடியன்கள் யார் என்று மாயவர் சொல்லட்டுமே! அதற்குள் ஏன் அவசரப்பட வேண்டும்? எதற்காகப் பேச்சில் அபசுரம் கிளம்ப வேண்டும்?” என்று திடமான தொனியில் கூறி, அங்கு தோன்ற இருந்த அமளிக்குத் தொடக்கத்திலேயே முற்றுப்புள்ளி வைத்தான்.
“அந்த இளம் வீரர்கள் யார் என்று சொல்லுகிறேன்” என்று மாயவர் தனது தாடியைத் தடவிக் கொண்டபோது, காளி மன்னனின் ஆவல் முகத்தில் ததும்பி வழிந்தது.
“ஆசான் ராக்கியண்ணனின் மாணவர்கள் அவர்கள்!”
“ஆசானின் மாணவர்களா?”
“ஆமாம் காளி! ஆசானின் மாணவர்கள் மட்டுமல்ல; அவரது வளர்ப்புப் பிள்ளைகள் கூட!”
”அப்படியா? ராக்கியண்ணர் நமது சொற்கேட்டு, நம்முடைய அரசுக்கு விசுவாசமாக இருப்பவராயிற்றே! அவரது வளர்ப்புப் பிள்ளைகள் நமது தளபதியைக் கொன்றார்கள் என்பது வேடிக் கையாக இருக்கிறதே!”
“காளி மன்னா! சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் கூட; இதோ இந்தச் செல்லாத்தாக் கவுண்டரின் யோசனைப் படி ஆசான் ராக்கியண்ணன் உனக்கு மாபெரும் உதவி யொன்றைச் செய்துள்ளார் அல்லவா?’
“எந்த உதவியைச் சொல்லுகிறீர்கள்?”
“அது மறந்து விட்டதா உனக்கு? மறக்கக் கூடாத ஒன்றா யிற்றே அது! அதாவது; குன்றுடையானுக்குப் பிறந்த குழந்தை களால் உன் உயிருக்கு ஆபத்து ஏற்படுமென்று அம்மன் சொன்னதாகப் பூசாரி மீது ஆவேசம் வந்து சொல்ல அத னால் அந்தக் குழந்தைகளை கொன்று விடத் திட்டம் தீட்டி னீர்கள் – அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை ராக்கி யண்ணன் அவரே முன்வந்து ஏற்றுக் கொண்டார்…
“இதெல்லாம் தங்களுக்கு யார் சொன்னது?”
“உண்மைகள் தங்கம் மாதிரி!. ஓராயிரம் ஈராயிரம் அடி மண்ணுக்குக் கீழே மறைந்து கிடக்கும். என்றாவது ஒரு நாள் சுரங்கங்கள் அமையும். தங்கத் துகள்கள் வெளியே வ மாதிரி உண்மைகளும் வெளியே வருவது வந்து ஒளி உமிழும்.”
“உவமை போதும்! உண்மையை வெளிப்படுத்தியது யார்?”
“ராக்கியண்ணனே தான்!”
“ராக்கியண்ணனா?”
“ஆச்சரியமாயிருக்கிறதா காளி? அந்தக் குழந்தைகளைக் குன்றுடையான் குடும்பத்திலேயிருந்து பிரித்து உன்னிடம் கொண்டு வந்து கொடுத்த அதே ராக்கியண்ணன் எதற்காகத் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்று ஆச்சரியமாகத்தானிருக்கும் உனக்கு! ஆனால் ஒன்று; அவர் அந்தக் குற்றத்தைச் செய்யாத காரணத்தால்தான் என்னிடம் உண்மையை விரித்து வைத்து விட்டார்!’
“என்ன சொல்கிறீர்கள்? ராக்கியண்ணர் அந்தக் காரியத் தைச் செய்யவில்லையா? அந்த இரட்டைக் குழந்தைகளை அவர் என் கையில் ஒப்படைத்தார். அவர் அந்தக் குற்றம் செய்யவில்லையென்று எப்படிக் கூறுகிறீர்கள்?’
“குழந்தைகள் உன் கையிலே ஒப்படைக்கப்பட்டது உண்மை! ஆனால் அந்தக் குழந்தைகள் குன்றுடையானின் குழந்தைகள் அல்ல!’
”என்ன? என்ன மாயவரே சொல்லுகிறீர்கள்?”
”மாயத்தீவு அதில் ஒரு மர்ம மனிதன் – அவன் மந்திரத்தில் மாங்காயைத் தேங்காயாக்கிக் காட்டுகிறான் என்கிற கதை மாதிரி இருக்கிறதே என்று நினைக்காதே! நடந்ததைத்தான் நான் சொல்லுகிறேன். உதயமாகும் செங்கதிருக்குக் கருந்திரை யிட்டு உலகத்தை இருட்டாக்கி விடமுடியாது. அதைப் போலத் தான் விடிய வேண்டிய நேரம் வந்து, வெள்ளியும் முளைத்து விட்டது. எனவேதான் உனக்கும் தலையூருக்கும் நான் ஆற்றிட வேண்டிய கடமையை உணர்ந்து செயல்படத் துடிக்கிறேன். நல்லவைகள் கசக்கும்; நானறிவேன்! ஆனால் அதுவேதான் நலிவு போக்கும் மருந்து என அருந்தி நலம்பெற வழி காண வேண்டும்!”
“வளர்த்த வேண்டாம்; சொல்லுங்கள்! அவை குன்றுடை யானின் குழந்தைகள் அல்ல என்றால்; பிறகு யாருடைய குழந்தைகள்?”
“ஆசான் ராக்கியண்ணனின் குழந்தைகள்! அவரது குழந்தை களைத்தான் நீ கொன்றிருக்கிறாய். குன்றுடையான் பெற்ற குல மாணிக்கங்களைக் காப்பாற்றுவதற்காக – தனது குழந்தைகளைத் தியாகம் செய்த உத்தமனின் காலடிகளைக் காலமெல்லாம் பூஜை செய்யலாம்.”
”சரி! சரி! ஆசான் அவ்வளவு பெரிய மனிதர் – என்னை ஏமாற்றியிருக்கிறார். அவருக்குப் புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படியானால் அந்தக் குன்றுடையானின் குழந்தைகள் என்ன ஆனார்கள்?”
“அவர்கள்தான் ராச்சாண்டார் மலையில் தங்களது திண் தோள் வீரத்தைக் காட்டித் தளபதி திருமலையையும் தீர்த்துக் கட்டிய பொன்னர் சங்கர் எனும் புலிக் குட்டிகள்!”
“அவர்கள்தானா?”
“ஆமாம் காளி; அவர்களேதான்! ஆசான் ராக்கியண்ண னின் பாசறையில் பயின்றவர்கள்! இப்போதும் சொல்கிறேன், அவர்களை நீ எதிரிகளாகக் கருதவே தேவையில்லை.’
“ஓகோ, குத்தவரும் கொம்பு மாடுகளைக் கும்பிட்டுத் தொழுது, குடலைக் கிழித்துக் கொண்டு சாவு என்கிறீர்களா?”
தலையூர்க்காளி பொறுமையிழந்து இந்தக் கேள்வியைக் கேட்டவுடன்; சமயம் பார்த்திருந்த செல்லாத்தாக் கவுண்டர் மாயவர் மீது வார்த்தைக் கணைகளைத் தொடுத்தார்.
“ஏதோ மாபெரும் சதியொன்று பின்னப்பட்டிருக்கிறது. இந்த சதிக்கு மாயவரும் உடந்தையோ எனச் சந்தேகப்படும் அளவுக்கு அவரது பேச்சு இருக்கிறது. குன்றுடையானின் குழந்தைகளால் வர இருக்கும் ஆபத்தைத் தவிர்த்துக் கொள்ள, அம்பாள் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டிய நிலைமை நமக்கு! அதற்குத் துணை நிற்பதாக நடித்த ராக்கியண்ணன் கடைந்தெடுத்த துரோகமே செய்திருக்கிறார். இந்தச் சூழலில் அவரால் தயாரிக்கப்பட்ட அந்தப் பொன்னரும் – சங்கரும் நமக்கு விரோதிகள் அல்ல என்பது ஒரு மாய்மாலம்! அதை நம்புவது பைத்தியக்காரத்தனம்!”
“செல்லாத்தாக் கவுண்டர் அவர்களே! உமது சொந்தக்காரர் களை அழிப்பதற்கும் உமது ஆட்சி எல்லைக்கு உரிமை கொண்டாட யாரும் முளைத்து விடக் கூடாது என்பதற்கும் குன்றுடையானிடமிருந்து பறித்துக்கொண்ட வளநாடு ஆட்சிக்கு அவனுடைய வாரிசுகள் யாரும் வந்துவிடக் கூடாது என்ப தற்கும் – நீர் போட்ட திட்டமே, அம்பாள் அருள்வாக்கு என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உமது மாயையில் சிக்கி, நீர் சொல்வதை அப்படியே நம்பிவிடும் காளி மன் னனும் குழந்தைகளைக் கொல்லுமாறு ராக்கியண்ணனைப் பணித்து விட்டான். ராக்கியண்ணன் உம்மைப் போல சுயநல வாதியல்ல! கொங்குச் சமுதாயத்தின் வீர காவியங்கள் பொன்னர் சங்கர் எனும் மனித உருவங்களில் வந்திருக்கின்றன என் பதை முன்கூட்டி உணர்ந்தவர் போல அவர்களைக் காப் பாற்ற தனது குழந்தைகளைத் தியாகம் செய்திருக்கிறார்.”
மாயவரின் விளக்கத்தைத் தலையூர்க் காளியினால் நம்பவும் முடியவில்லை – தன்னிடம் பொய்யுரைத்துக் குன்றுடையானின் குழந்தைகளைக் காப்பாற்றி தனக்கு எதிரான அணியில் நிறுத்தி யுள்ள ராக்கியண்ணனின் செயலைப் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. அதற்கும் மேலாக ராக்கியண்ணனுக்காக, மாயவர் பரிந்து பேசுவதைச் சகிக்க முடியாமல் அவன் கொதித் தான். காளியின் உதடுகள் மிகச் சூடான சொற்களை உச்ச ரித்தன.
“துரோகம்! துரோகம்! என்னைச் சுற்றிலும் துரோகம்!” என்று காளி மன்னன் கத்தினான்.
அவனைச் சுற்றியிருக்கும் துரோகம், செல்லாத்தாக் கவுண் டர்தானே; என்று எண்ணியவாறு பரிதாபமாகச் சிரித்தார் மாயவர்.
காளி மன்னன், தனது கையைத் தட்டி, “யாரங்கே?” என்று அதட்டினான். பாதுகாப்பு வீரர்கள் இருவர் ஓடோடி வந்து வணங்கி நின்றனர். தலைமைத் தளபதியைக் கூப்பிடு” என்று ஆணையிட்டான். பறந்து வந்தது போல் படைத் தளபதி பராக்கிரமன், முகத்தில் பாதியை மீசைகள் ஆக்கிரமித்துக் கொண்ட நிலையில் மன்னனுக்கு எதிரே வந்து, தலை குனிந்து வணக்கம் தெரிவித்தான். காளி மன்னன் பராக்கிரமனிடம் ஆணை பிறப்பித்தான்.
“நமது படையில் ஒரு பகுதி உடனடியாக ஆரிச்சம்பட்டிக்குப் போகட்டும். அங்கே கோட்டையை முற்றுகையிட்டிருக்கும் மாந்தியப்பனுக்கு உதவியாக நமது படை செயல்படட்டும். இன்னொரு பகுதியை இப்போதே குடையூருக்கு அனுப்புக. குடையூரில் குன்றுடையானின் அரண்மனையும் அவனது படையும் நாளை காலைக்குள் நமது காலடியில் விழ வேண்டும். இந்தப் படையெடுப்பின் நோக்கம் ஆரிச்சம்பட்டி, ராச்சாண் டார் மலைப்பகுதி முழுமையும் செல்லாத்தாக் கவுண்டரின் வளநாட்டு ஆட்சிக்குக் கீழே வரப்பட வேண்டும் என்பதாகும். சின்னமலைக்கொழுந்துக்குப் பக்கபலமாகவும் பாதுகாப்பாகவும் இருந்திடும் குன்றுடையானின் கொட்டத்தையும் அடக்க வேண் டும். அதற்காகத்தான் அவனது குடையூரைக் கைப்பற்ற வேண்டு மென்று கட்டளை பிறப்பிக்கிறேன். மூன்றாவதாக நமது படையில் ஒரு பகுதியினர், திறமைமிக்கத் துணைத் தளபதி களின் கண்காணிப்பில் சங்கரமலைக் கோட்டைக்குப் புறப்பட வேண்டும். அங்கேயிருக்கும் குன்றுடையான் குடும்பத்தார், சின்னமலைக் கொழுந்தின் குடும்பத்தார் யாரையும் பாக்கியில் லாமல் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.”
கட்டளைகளைப் பிறப்பிக்கும்போது கூட செல்லாத்தாக் கவுண்டரால் சும்மாயிருக்க முடியவில்லை.
“அங்கேதான் அந்தப் பொடியன்கள் பொன்னர் சங்கர் இருப்பார்கள். அவர்களை உயிரோடு கைது செய்யுங்கள். அல்லது களத்திலேயே வீர சுவர்க்கத்துக்கு அனுப்பி வையுங் கள்” என்று குறுக்கே ஒரு உத்திரவு போட்டார். மாயவரால் மௌனமாக இருக்க முடியவில்லை. தலையூரான் தணல் மீது நிற்கிறான் என்பதையும், இந்த நேரத்தில் அவன் சினம் தணித் திட எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காது என்பதையும் அவர் புரிந்து கொண்டிருந்தாலும் கூட, தனது கடமையைச் செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் காளி மன்னனின் அருகே சென்று அவன் கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.”
“அவசரப்பட்டு முடிவுகளை மேற்கொள்ளாதே! பொன் னரும் – சங்கரும் தலையூரின் எதிரிகளாக வருவார்கள் என்று யாருடைய சுயநலத்துக்காகவோ சொல்லப்பட்ட பொய்யுரையை நம்பி நீ செயல்படுகிறாய்! உனது செயல்களின் மூலம்தான் அவர்கள் இனி உனக்கு எதிரிகளாக மாறுவார்களே தவிர, அம்மன் அருள்வாக்கின்படி அவர்கள் பிறக்கும்போதே உனது எதிரிகள் அல்ல! அம்மன் பெயரைச் சொல்லி, பூசாரி செம்ப குலனைக் கையில் போட்டுக் கொண்டு, இதோ நிற்கும் இந்த செல்லாத்தாக் கவுண்டர் செய்த ஏமாற்று வேலை அது என்பதே என் கருத்து!”
மாயவர் சொல்லி முடிக்கவில்லை; அதற்குள் ஆவேசம் வந்தவனைப் போல காளி மன்னன் அலறிவிட்டான்.
“செல்லாத்தாக் கவுண்டரை இழித்துரைக்க நான் யாரையும் அனுமதிக்கமாட்டேன்!”
இது போதாதா செல்லாத்தாக் கவுண்டருக்கு? இப்படி யொரு வாய்ப்பைத்தானே அவர் எதிர்பார்ப்பார். மளமள வென்று அவர் பேசலானார்.
“பெரிய மன்னர் என்னை இந்த அரசுக்கும், காளி மன்ன னுக்கும் புரவலராக நியமித்த காலம் தொட்டு அணுவளவும் பிரியாமல் அருகிருந்து ஒரு தாயைப் போல் பரிவு காட்டி வருகிறேன் நான். மந்திரி மாயவரோ, நாட்டுப்பற்று சிறிது கூட இல்லாமல், கோபதாபங்களைக் காரணம் காட்டி பல ஆண்டுக்காலம் ஊர் சுற்றி விட்டு மீண்டும் பதவிக்காக இங்கு வந்தவர். ஏதோ பெரியவர், மேதை என்பதற்காக காளி மன் னன் மரியாதை காட்டியதையும், நானும் இவரை ஒரு பொருட் டாக மதித்து இவரது கருத்துக்களுக்கு இதுவரை மறுப்புத் தெரிவிக்காமல் இருந்ததையும் நமது பலவீனம் என்றே நினைத்து விட்டார். எனக்கென்ன வந்தது? எனக்கேது சுயநலம்? என் னுடைய வளநாடு, அரண்மனை, கோட்டை, அனைத்துமே தலையூருக்கு தாரை வார்க்கப்பட வேண்டுமென்றால், அதை உடனே செய்து விட்டு ஒரு துறவி போலக் காவியுடை அணிந்து, தலையூர் அரண்மனையில் ஒரு மூலையில் கிடந்து ஆண்ட வனைச் சேவித்துக் கொண்டிருக்க நான் தயார்! என்னைப் பார்த்து மாயவர் மனந்துணிந்து குறை சொல்லவும், அதை நான் கேட்டுக் கொண்டிருக்கவுமான ஒரு காலமும் வந்து விட்டதே! அதுவும் மன்னனுக்கு நேராக என் கௌரவம் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்படுகிறதென்றால்; இதை யெல்லாம் கேட்டுக்கொண்டு இனியும் நான் உயிர் வாழ வேண்டுமா?”
உருக்கத்தை மிக அதிகமாகவே கலந்து நடித்த செல்லாத்தாக் கவுண்டரின் நாடகத்தில் தலையூர்க்காளி மேலும் மயங்கினான்.
“எதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டும்? மாயவர் யோச னையைக் கேட்டு நான் போரை நிறுத்தப் போவதில்லை! படைத்தளபதி பராக்கிரமனுக்கு நான் பிறப்பித்த ஆணைகள் திரும்பப் பெறக்கூடியவைகள் அல்ல! குடையூர் கோட்டை கொத்தளங்கள் நமது வசமாகும். ஆரிச்சம்பட்டி இனி மேல் நமது கொடி நிழலில்! சங்கரமலையில் உள்ள குன்றுடையான் குடும்பமும், ஆரிச்சம்பட்டி குடும்பமும் தலையூர் சிறைச்சாலை யில் தவமிருக்க வேண்டும்!’
தலையூர்க்காளி முழக்கம் செய்தான்.
“ராக்கியண்ணனை வெளியே விட்டு வைப்பதும் நல்ல தல்லவே?’ செல்லாத்தாக் கவுண்டர், தனது தூபத்தில் ஒரு பிடி சாம்பிராணி அள்ளிப் போட்டார். அது நன்றாகப் புகைந்தது.
“ஆமாம்! ஆசான் என்று பார்க்காமல் அந்த துரோகி ராக்கி யண்ணனையும் கைது செய்க!” என்று கூச்சலிட்டான் தலையூர்க் காளி!”
“நான் சொல்வதைக் கேள், காளி!” என்றார் மாயவர்.
“முடியாது! பராக்கிரமா! ஆணையை நிறைவேற்று!” என்று கூறிவிட்டுக் காளி மன்னன் அந்த இடத்தை விட்டு அகன்றான். ‘இனி எனக்கு இங்கு வேலையில்லை” என்று சொல்லிய வாறு மாயவர் அங்கிருந்து வெளியேறுவதை காளி பார்த்தான் என்றாலும் அதற்காக அவன் கவலைப்பட்டு அதிர்ச்சி அடைய வில்லை.
– தொடரும்…
– பொன்னர்-சங்கர் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1987, குங்குமம் இதழ்.