கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 3, 2025
பார்வையிட்டோர்: 5,081 
 
 

(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15

6. பெயர் சொல்லாப் பட்டணம்

காரிருளைத் தன் கதிர்க் கரங்களால் ஒதுக்கித் துரத்திவிட் டுக் கீழ்த்திசையில் ஆதவன் உதயமானான். பொன்னிறமாக ஒளி விட்ட வானத்தின் வனப்போடு, கரை புரண்டோடும் அமராவதி ஆற்றின் அழகும் சேர்ந்து கொண்டு இயற்கை யின் திருப்பள்ளி எழுச்சியை இனிய காட்சியாக்கிக் கொண் டிருந்தது. காவிரியைக் கண்டு மகிழவும், கலந்து மகிழவும் அம ராவதி துடிப்போடு இருக்கிறாள் என்பது ஓடும் வேகத்தி லேயே தெரிந்தது. அமராவதி ஆற்றின் கரையோரத்தில் நீண் டுயர்ந்த தென்னை மரங்களின் கீற்றுக்கள் காலை இளங்காற் றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. ஆற்றோரம் செழித்த பயிர்களின் பச்சைநிறம் கொழிக்கும் வளமான கழனிகளில் சின்னஞ்சிறு மீன்குஞ்சுகள் வாய்க்கால் மடைகளிலிருந்து வந்து துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. ஆற்றில் வலைகளை வீசி சிறுவர்களின் துணையோடு பெரியவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். வலையில் வீழ்ந்த மீன்களைத் தாங்கள் கொண்டு வந்திருந்த கூடைகளில் பெண்கள் நிரப்பிக் கொண் டிருந்தனர். வலை வீசும் இடங்களுக்கு அப்பால் நட்டாற்றி லும், அடுத்த கரையிலும் பளபளப்பான கெண்டை மீன்கள் துள்ளும்போது சூரிய ஒளிபட்டு வெள்ளித் தகடுகள் போல் காணப்பட்ட காட்சி உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவதாக இருந்தது. கழனிகளில் தங்கள் பணிகளைக் கவனிக்க மண் வெட்டி போன்ற கருவிகளுடன் உழவர்கள் வரப்புக்களில் நட மாடிக் கொண்டிருந்தனர். அமராவதி வெள்ளத்தின் ஓசையும், மீன் பிடிப்போர், உழவர்கள் – தங்கள் கடமைகளை ஆற்றிடும் பொழுது கிளம்பும் தென்பாங்குப் பாட்டின் ஒலியும் உதயத் திற்கு வரவேற்பு கீதம் இசைப்பது போல இருந்தது. 

ஆற்றின் வடகரையில் மேற்குத் திசையிலிருந்து குதிரை யொன்று வரும் சப்தம்; தொலைவில் கேட்டது. உழவர்களும், மீன் பிடிப்போரும் அந்தத் திசையைத் திரும்பிப் பார்த்து விட்டு, மீண்டும் தங்கள் கடமைகளில் ஆழ்ந்து விட்டதை கவ னித்தால் அடிக்கடி அந்தக் கரையோரத்தில் குதிரைகளில் யாரும் போவார்கள் என்பதும்; எனவே குதிரை வரும் சப் தத்தை அவ்வளவாக எவரும் பொருட்படுத்தவில்லை என் பதும் தெளிவாகப் புரிந்தது. 

கரையோரத்து மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்களை அள் ளிக் கொண்டு காவிரி அன்னையின் மீது பொழிவதற்காக அவசரம் காட்டும் அமராவதி நதியையும் – கரையோரத்தில் உயர்ந்து நிற்கும் தென்னை மரங்களில் குலை தள்ளியிருக்கும் காய்களின் வளத்தையும் – விழிகளுக்கு விருந்தாக்கிக் கொண்டு ஒரு மனிதர் அந்தக் குதிரையின் மீது அமர்ந்திருந்தார். குடுகுடு கிழவனுமல்ல – அதனால் குமரனுமல்ல! ஐம்பத்தி ஐந்து முதல் அறுபதுக்குள்ளாக வயதிருக்கும். வெண்மையும் கருமையும் கலந்த மீசை தாடி அவரது முகத்திற்கு ஒரு அருட்பொலிவை வழங்கிக் கொண்டிருந்தது. தூய வெள்ளை அங்கி அணிந் திருந்தார் எனினும் குதிரை சவாரிக்கேற்ற காலுறை போன் றவை இல்லாமலில்லை. நீண்டு வளைந்த எடுப்பான மூக்கு. கூர்மையான விழிகள். தலைமுடி வளர்ந்து பிடரிக்கும் கீழே சற்று இறங்கி, தோள்பட்டைகளைத் தொட்டுக் கொண்டிருந் தது. கட்டுக் கோப்பான உடல்வாகு கொண்டவராகவே இருந் தார். அமராவதியாற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு குதி ரையை அவர் ஓட்டவில்லை. வேகத்தைப் பொருத்தவரையில் குதிரையின் விருப்பத்திற்கே விட்டு விட்டார் போலும்! ஆனால் போய்ச் சேர வேண்டிய இடத்தை அவர் தானே தீர்மானிக்க வேண்டும். அப்படியொரு தீர்மானத்துடன் வருவதால்தான் அவரது பார்வை ஆற்றோரத்தில் வயல்களில் வேலை செய் வோர்-ஆற்றில் மீன் பிடிப்போர் பக்கமே சுழன்று கொண்டிருந்தது. 

ஆற்றோரமுள்ள ஒத்தமாந்துறையெனும் ஊருக்கருகே வந்த போது, அவர் குதிரையை இழுத்துப்பிடித்து நிறுத்தினார். 

“அடேடே… மாயவர் அய்யாவா? என்னய்யா இந்த நேரத் திலே?” என்று ஆவலோடு கேட்டுக் கொண்டே கழனியி லிருந்து கரையோரம் வந்தாள் ஒரு பெருமாட்டி! குதிரையில் வந்த மாயவரை அவளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. முதிர்ச்சியின் காரணமாக அந்த உழவர் பெருமாட்டிக்கு முன் வாய்ப்பல் ஒன்றிரண்டு இல்லாவிட்டாலும் சொல் மட்டும் அழுத்தம் திருத்தமாகத்தானிருந்தது. 

“ஓ, வாங்கலாயியா? சௌக்கியமா?” என்று மாயவரும் கேட்டுக் கொண்டே, குதிரையை விட்டுக் கீழே இறங்கினார். 

திருக்காம்புலியூரில் செல்வாக்குள்ள தலைமையேற்று – பின் னர் கரூர், வாங்கல் பகுதியிலும் தனது ஆதிக்கத்தைப் பரப் பிய கோளாத்தாக் கவுண்டர் வாங்கலில் இருந்த அம்மன் கோயிலைப் புதுப்பித்துக் குடமுழுக்கு விழாவையும் சிறப்பா கச் செய்ததையொட்டியும் – வாங்கல் பகுதியை தனது பெருங் குடிக் கூட்டத்தாருக்கு காணி உரிமையாக ஆக்கித் தந்ததை யொட்டியும் அவரை வாங்கலான் என்ற அடைமொழியுடன் மக்கள் அழைக்கத் தொடங்கினர். வாங்கலான்’ எனும் நினைவாக வாங்கிலி’ என்றும், “வாங்கலாயி என்றும் முறையே ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெயர்கள் சூட்டப் பட்டன. அப்படிச் சூட்டிய பெயருக்குரிய ஒரு பெருமாட்டி தான் மாயவரைக் குதிரையிலே கண்டு விசாரிப்பதற்காக விரைந்து வந்த வாங்கலாயி! 

“காலையிலே சூடாக் கஞ்சி சாப்பிடுகிறீர்களா? என்னாலே முடிந்தது அவ்வளவுதான்! நீங்கள் அரண்மனையிலேயிருந்து வருகிறீர்கள் – சாப்பிடுவீர்களோ என்னவோ?” 

வாஞ்சையுடன் வாங்கலாயி கேட்டது மட்டுமல்ல; கையில் வைத்திருந்த கஞ்சிக் கலயத்தையும் அவரிடம் நீட்டினாள். 

“குளிர் மதமதப்பிலே கொஞ்சம் உற்சாகமாக இருக்க என்ன கிடைக்குமென்று யோசித்துக் கொண்டே வந்தேன். சரி யான சமயத்தில் சரியான உணவு. எங்கே கொடு! அடேடே… கலயமே நன்றாகக் கொதிக்கிறதே! கஞ்சியும் சூடாகத்தானிருக்கும்!” 

மாயவர், கஞ்சி முழுவதையும் குடித்து விட்டுக் கலயத்தை வாங்கலாயியிடம் கொடுத்தார். ஒருவருடைய பசியைத் தீர்க்க ஒரு கலயம் கஞ்சி கொடுத்து உதவியதால் ஏற்பட்ட பூரிப்பு அவளுடைய முகத்தில் பூத்துக் குலுங்கியது. 

”மாளிகையிலேயிருந்து வருகிறாரே மாயவர்; இந்த மண் குடிசை தருகிற கஞ்சியைக் குடிப்பாரா, என்றுதானே சந்தேகப்பட்டாய் இப்போதாவது இந்த மாயவர் குணம் புரிகிறதா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். 

“உங்கள் குணம் தங்கக் குணம் என்று உலகத்துக்கே தெரியுமே! இனிமேல் நான் புதிதாகவா தெரிந்து கொள்ளப் போகிறேன்?” என்று வாங்கலாயி பதில் அளித்தாள். 

“சரி… சரி… வாங்கலாயி! நான் வந்த விஷயமே வேறு! மாரிக் கவுண்டன்பாளையத்துக்கு எந்தப் பக்கமாகப் போக வேண்டும்?” 

“மாயவருக்குத் தெரியாத ஊர்களா? என்னைப் போய்க் கேட்கிறீர்களே; கேலிதானே இது?’ 

“இல்லையம்மா! அந்தப் பக்கமெல்லாம் போய் எத்த னையோ வருஷங்களாயிற்று; அதனால் தான் கேட்கிறேன். மாரிக்கவுண்டன்பாளையத்தில் எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது!” 

“வடக்குத் திக்கிலே போய் காவேரிக்கரைக்கு முன்னாடியே வாங்கலுக்குக் கொஞ்சம் தென்மேற்காகத் திரும்பிப் போனால் மாரிக்கவுண்டன் பாளையம்!” 

”சரிம்மா; நான் புறப்படுகிறேன். சூடாகவும் சுவையாகவும் அதையெல்லாம் விட உங்கள் கொங்கு வேளாளர் குலத்துக் கேற்ற கள்ளமில்லா உள்ளத்தோடும் கொடுத்த காலை ஆகா ரத்திற்காக உனக்கு மிகவும் நன்றி!” என்றவாறு குதிரையில் ஏறினார் மாயவர்! 

மகிழ்ச்சிப் பெருக்கில் – அந்த வயதிலும் நாண உணர்ச்சியை முகத்தில் வெளிப்படுத்தி வாங்கலாயி, சற்றுத் தலை யைத் தாழ்த்தியவாறு மாயவரை நோக்கி, உங்கள் வேட்டுவர் குலத்திலே மட்டும் கள்ளமில்லா உள்ளம் இல்லையா? தும் பைப்பூ மாதிரி வெள்ளை மனதுக்கு நீங்கள் ஒருவரே உதா ரணமாக இருக்கிறீர்களே!” என்றாள். 

“அம்மா! வாங்கலாயி! நீ சொல்லும்பொழுதுதான் நான் வேட்டுவர் குலத்தில் பிறந்தவன் என்பதே எனக்கு நினைவுக்கு வருகிறது. ஏதோ அவரவர்கள் வாழுகிற இடம், செய்கிற தொழில் கடைப்பிடிக்கிற பண்பாடு இவைகளில் உள்ள வேறு பாடுகளின் அடிப்படையில் மனிதரில் பல பிரிவுகள் உருவா யின. காலப்போக்கில் அந்தப் பிரிவுகள் பிறப்பின் காரண மாக அமைந்தவை என்ற ஒரு தவறான கருத்து ஏற்பட்டு விட் டது. அதனால் என்னை வேட்டுவகுலம் என்றும் உன்னை வேளாளகுலம் என்றும் சொல்லி அடையாளம் காட்ட வேண் டியிருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் எல்லோரும் ஓர் குலம் தான்! வருகிறேனம்மா!” 

மாயவர், குதிரையைத் தட்டி விட, அது மாரிக்கவுண்டன் பாளையத்தை நோக்கி விரைந்தோட ஆரம்பித்தது. ஒத்தமாந் துறை விட்டு, இடைக்காடு போன்ற பகுதிகளைக் கடந்து அம் ராவதி ஆற்றங்கரையிலிருந்து ஏறத்தாழ ஏழெட்டு கல் தொலை விலிருக்கக் கூடிய மாரிக்கவுண்டன் பாளையத்து எல்லையை அடைந்திட மாயவருக்கு அதிக நேரம் பிடிக்க வில்லை. எல் லையில் குதிரையை நிறுத்தி விட்டு சுற்று முற்றும் பார்த்தார். திடீரென அவர் தன் கண்ணெதிரே கண்ட காட்சியை நம்ப முடியாமல் அப்படியே திகைத்துப் போய் விட்டார். 

இருபதுக்கு மேற்பட்ட முரட்டுப் பன்றிகளின் கூட்டம். அந் தக் கூட்டத்திற்கு மத்தியில் மூன்று எடுப்பான தோற்றமு டைய வாலிபர்கள். அவர்களுடைய கைகளில் கட்டாரிகள் மட் டுமே இருக்கின்றன. கச்சையை வரிந்து கட்டிய நிலையில் மூவரும் கட்டாரியை ஓங்கியபடி அந்தப் பன்றிகளின் தாக்கு தலைச் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். சாதாரணமாகத் தெருக்களில் அலையும் பன்றிகளைப் போல அல்லாமல் ஒவ் வொன்றும் காண்டா மிருகத்தைப் போன்ற உடலமைப்புடனும் அதே போன்ற வலிமையுடனும் மூர்க்கத்தனமாக அந்த மூன்று வாலிபர்களையும் சூழ்ந்து கொண்டு அவர்களை மோதி வீழ்த் தப் பாய்ந்தவாறு இருந்தன. வாலிபர்கள் மூவரும் சளைக்க வில்லை. அச்சம் என்பதே அவர்கள் முகத்தில் தென்படவும் இல்லை.மாயவர், குதிரையை அங்கிருந்து நகர்த்தவும் இல்லை. காட்டுப் பன்றிகளின் கோரமான தாக்குதலை மூன்றே வாலி பர்கள் எதிர்த்துப் போராடுகிற நிகழ்ச்சி அவரைப் புல்லரிக் கச் செய்தது. 

பன்றிதானே எனக் கேவலமாக எண்ணுவது எவ்வளவு தவறு என்பதை அந்தக் காட்டுப் பன்றிகளின் வெறிபிடித்த தாக்குதலைப் பார்த்த போது மாயவரால் நன்கு உணர முடிந் தது போலும்; அதனால் திறந்த விழிகள் மூடாமல் ஆவல் ததும்பப் பார்த்துக் கொண்டிருந்தார். கட்டாரிகளைக் காட்டிக் குத்திக் கொல்வது போல போக்கு காட்டியே அந்தப் பன்றி களைக் களைப்படைய வைத்திடும் முயற்சியில் அந்த வாலிபர் கள் ஈடுபட்டிருப்பதை மாயவர் புரிந்து கொண்டார். அவ் வளவு எளிதில் அந்தப் பன்றிகள் களைப்படைவதாகத் தெரிய வில்லை. அந்தப் பயங்கரப் போராட்டம் நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தது. அந்த வாலிபர்களின் கட்டாரி சில பன்றிகளின் வயிற்றில் பாய்ந்தன! சில பன்றிகளின் கழுத்தில் பாய்ந்தன! சில பன்றிகளை அவர்கள் கரும்பாறை களைத் தூக்குவது போலத் தூக்கி தரையில் ஓங்கி அடித்து, அவற்றின் உடல்களை வீசியெறிந்தனர்! 

ஒன்றிரண்டு பன்றிகள் தப்பித்தோம் பிழைத்தோமென்று தலைதெறிக்க ஓடி விடவே, வாலிபர்கள் மூவரும் ஒருவர் தோளைப் பிடித்து ஒருவர் குலுக்கிப் பாராட்டு தெரிவித்துக் கொண்டு; உடலில் படிந்துள்ள மண்ணைக் கழுவுவதற்காக; அங்கு, சற்று தொலைவிலிருந்த பெரிய கிணற்றை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். 

மாயவர், குதிரையை அவர்கள் நடந்து செல்லும் திசையில் முடுக்கி விட்டார். குதிரையில் யாரோ வருவது கண்டு வாலி பர்கள் மூவரும் நின்றனர். அவர்களைப் பார்த்து மாயவர், “தம்பிகளா! இந்த ஊரில் ‘ராக்கியண்ணன் பயிற்சிப்பாசறை எங்கே இருக்கிறது?” என்று கேட்கவே-வாலிபர்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். விழிகளை அகல விரித்தனர். மூவரில் ஒருவன் மட்டும் முன்வந்து; இதோ இந்தப்பக்கம் நேராகப்போனால்… அந்தப் பாசறை போய்ச் சேரலாம்!” என்றான். 

”மிகவும் நன்றி தம்பி! பன்றிகளோடு நீங்கள் நடத்திய யுத் தத்தைக் கண்டு களித்தேன். உங்கள் வீரத்தைப் பாராட்டுகிறேன்.’ 

என்று மாயவர் புன்னகை இழையோடக் கூறினார். அவரை ஒரு முறை ஏற இறங்கப்பார்த்து விட்டு மூன்று வாலிபர்களும் ஒருவருக்கொருவர் ஏதோ கண் ஜாடை காட்டிக் கொண்டனர். பின்னர், அவரிடம் சொல்லிக் கொள்ளாமலே கிணற்றை நோக்கி மீண்டும் நடந்தனர். மாயவர், அவர்களைப் பாசமிகு பார்வையால் ரசித்துக்கொண்டே. அடடா! இந்த வீர வாலி பர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட் டோமே!’ என்றெண்ணியவராக அந்த வாலிபர்கள் நடக்கும் திசை நோக்கியே குதிரையில் சென்றார். “தம்பிகளே! உங்கள் பெயர்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?” மாய வரின் இந்தக் கேள்விக்கு மூன்று வாலிபர்களும் விடையளிக் காமல் நின்றார்கள். “சொல்லமாட்டீர்களா? மாயவர் மீண் டும் கேட்டார். மூவரும் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துக் கொணடனர்! 

போகவேண்டுமென நினைத்த பெரிய கிணற்றுக்குப் போகா மல், வாலிபர்கள் சட்டென வேறு திசையில் திரும்பி கல்லும் முட்செடிகளும் நிரம்பிய ஒரு ஒற்றையடிக் குறுக்குப் பாதை வழியாக வேகமாகச் சென்றார்கள். மாயவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது போன்ற நிலைமை! குதிரையிலிருந்த வாறே அவர்கள் மூவரும் போவதை அவர்களின் உருவங்கள் மறையும் வரை பார்த்துக் கொண்டேயிருந்தார். வாலிபர்களில் ஒருவன் குறிப்பிட்ட வழியில் குதிரையைச் செலுத்தினார். 

மாரிக்கவுண்டன் பாளையத்தின் மற்றோர் எல்லையில் ஒதுக் குப்புறமாக மரங்கள் மிக அடர்ந்த ஒரு பெரிய தோப்புக் குள்ளே மாயவர் குதிரையில் நுழைந்தார். ஒரு புறத்தில் மாமரங்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்திருந்தன. பிறிதோர் புறத்தில் இலந்தை மரங்கள் நிறைந்திருந்தன. மற்றொரு புறத் தில் கொய்யா மரங்களில் கனிகளைத் தின்ன அணில்கள் குதித்தோடிக் கொண்டிருந்தன. தோப்பைச் சுற்றி உயரமாக முள்வேலி அமைக்கப்பட்டிருந்தது. தோப்புக்குள்ளே நுழைந்த மாயவரை ஒரு குரல் அதட்டி நிறுத்தியது. “யாரய்யா நீங்கள்? அனுமதியில்லாமல் எங்கே நுழைகிறீர்கள்?’ என்று கேட்ட அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனாக ஒரு இளைஞன் அவ ருக்கு முன்னால் கம்பீரமாக நின்றான். ‘ராக்கியண்ணனைப் பார்க்க வேண்டும்” என்றார் மாயவர்; அவருக்கே உரியதாகக் காணப்பட்ட நிதானத்துடன்! அவரைப் பார்ப்பது இருக்கட் டும்!: முதலில் நீங்கள் யார் என்று சொன்னால் தானே அவ ரிடம் சொல்லி, உங்களை அனுமதிக்கலாமா என்று நான் அவரிடம் உத்தரவு பெற முடியும்?” என்று சிறிது குறும்பாகப் பேசினான் அந்த இளைஞன்! சிரித்துக் கொண்டே அவர், அந்த இளைஞனைப் பார்த்து; ‘தம்பீ, மாயவர் வந்திருப்ப தாகச் சொல்!” என்றார். “இந்த ஒரு வார்த்தை சொன்னால் போதுமா?’ என்று இளைஞன் திருப்பிக் கேட்டான், “எல் லாம் அதிலேயே அடங்கியிருக்கிறது இதைச் சொன்னாலே ராக்கியண்ணன் என்னை வரவேற்க எழுந்தோடி வருவார்!” என்றார் மாயவர்! இளைஞனது முகத்தில் கோபத்தின் சாயல் திடுமெனப் படர்ந்தது, “ஏனய்யா எங்கள் பாசறை ஆசான் ராக்கியண்ணன் அவர்களை என்னவென்று நினைத்துக் கொண் டீர்? அவர் கொங்கு வேளாளர் குலத்துச் சிங்கம் என்பது உமக்குத் தெரியுமா? அந்தச் சிங்கம் உம்மை எதிர்கொண் டழைக்க எழுந்தோடி வருமா?” என்று சூடாகப் பேசிய இளை ஞனை, மாயவர்; புன்சிரிப்புடன் உற்று நோக்கி ‘தம்பீ! ராக்கியண்ணன் கொங்குச் சிங்கம் என்பதில் சந்தேகமில்லை. நீ சிறு பிள்ளை. எனக்கும் ராக்கியண்ணனுக்கும் இடையே உள்ள அன்புப் பிணைப்பை நீ அறிய மாட்டாய்! போ; போய்ச் சொல்; மாயவர் வந்திருக்கிறார் என்று!’ எனப் பரி வுடன் கூறினார். உடனடியாகச் செல்லாமல் அந்த இளை ஞன்; தயங்கித் தயங்கி அங்கிருந்து உள்ளே சென்றான். 

இளைஞன் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் வேங்கை போல் உருக்கொண்ட ஒருவர் மாயவரை நோக்கி ஓடோடி வந்தார். அவரைப் பார்த்தவுடன் மாயவர், குதிரையிலிருந்து குதித்தோடி தழுவிக் கொண்டார். 

“ராக்கியண்ணா, சுகம்தானா?” 

“நான் நன்றாக இருக்கிறேன்; நீங்கள்?” 

“நானும் நன்றாகத் தானிருக்கிறேன்” 

“மாயவரே! உங்களைப் பார்த்து எவ்வளவு காலமாகிறது… ஆகா… எப்படிப்பட்ட அரிய சந்திப்பு இது… வாருங்கள்; பாசறைக்குள் போகலாம்”. 

இருவரும் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுக் கொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தியவாறு பாசறைக்குள் வந்தனர். மாயவரை, தந்தம் பதித்த ஒரு நாற்காலியில் அமர வைத்து விட்டு ராக்கியண்ணன்; தானும் அவர் எதிரே ஒரு நாற் காலியில் உட்கார்ந்து கொண்டார். மாயவரின் கண்கள் பாச றையை வட்டமிட்டன. வில்லம்பு, வேல், வாள், குத்துக் கட்டை, சிலம்பம், கட்டாரிகள், கேடயங்கள்; இப்படிப் படைக் கலன்கள் நிறைந்து காணப்பட்ட அந்தப் பாசறையை மாயவர் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, இரண்டு இளநீர் களைக் கையில் எடுத்துக் கொண்டு அந்த இளைஞன் விரைந்து வந்து இருவர் கைகளிலும் கொடுத்தான். அவனைக் குறுநகை யுடன் மாயவர் உற்று நோக்கவே; அவன் நெளிந்தான். 

“மாயவரே! இந்தச் சிறுவன் உங்களிடம் கண்டிப்பாக நடந்து கொண்டதற்கு மன்னித்து விடுங்கள்” என்றார் ராக்கியண்ணன்! 

“எதற்காக மன்னிப்பு? அவனுக்கிட்ட பணியை அவன் கடமை உணர்வோடு செய்கிறான். அதற்காக அவனைப் பாராட்டத் தானே வேண்டும்!” என்று இளைஞனின் முதுகில் மாயவர் தட்டிக் கொடுத்தார். 

இருவரும் இளநீர் குடித்து முடித்தனர். இளைஞன், அந்தக் காய்களை இரண்டாக வெட்டி அவற்றிற்குள்ளிருந்த வழுக் கைத்தேங்காயை வழித்தெடுத்து, இரண்டு தட்டுகளில் வைத்துக் கொடுத்தான். மாயவரும் ராக்கியண்ணனும் அதைச் சுவைத் துச் சாப்பிட்டனர். 

“தம்பீ! நீ ஒரு இளநீர் சாப்பிடுவது தானே?’ என்று மாய வர் கேட்க, அந்த இளைஞன் வேண்டாமென்பது போலத் தலையசைத்து அவர் அப்படிக் கேட்டதற்காக கண்ணசை வின் மூலம் நன்றி தெரிவித்துக் கொண்டான். மாயவர் அவனை அன்பு ததும்பப் பார்த்து, ‘தம்பீ, உன் பெயர் என்ன?” என்று கேட்டார். இளைஞன் அவரை உற்று நோக்கினான். பிறகு ராக்கியண்ணனையும் நோக்கினான். மாயவருக்குப் பதில் சொல்லாமலே அங்கிருந்து மெல்ல நகர்ந்து விட்டான். 

என்னங்க ராக்கியண்ணன்! இந்த ஊருக்கு “பெயர் சொல் லாப் பட்டணம்” என்றே பெயர் வைத்து விடலாம் போலி ருக்கிறதே” என்றார் மாயவர்! 

”ஏன்?” என்றார் ராக்கியண்ணன்! 

“யாரைக் கேட்டாலும் பெயர் சொல்ல மாட்டேன் என் கிறார்கள்! நல்ல வேளை தங்கள் பெயர் எனக்குத் தெரிந்த தால் தங்கள் பெயரைச் சொல்லி விசாரித்துக் கொண்டு இங்கேவர முடிந்தது” என்றார் மாயவர்! 

அந்தப் பதிலைக் கேட்டு ராக்கியண்ணன் அந்தப் பாசறையே அதிர்ந்து போவது போல வெடிச் சிரிப்பு சிரித்தார். 

7. உண்மையின் உதயம் 

“என்னங்க ராக்கியண்ணன்; என் கேள்விக்கு உங்கள் வெடிச் சிரிப்புதான் பதிலா?” என மாயவர் மடக்கினார். 

“அப்படியொன்றுமில்லை. என்னிடம் போர்ப்பயிற்சி பெறு கிற மாணவர்கள் பெயரை நானும் யாரிடமும் வெளியிடுவ தில்லை. யார் கேட்டாலும் அந்த மாணவர்களையும் தங்கள் பெயரைச் சொல்லக் கூடாது என்று கண்டிப்பான கட்டளை பிறப்பித்திருக்கிறேன்.” அழுத்தம் திருத்தமாகப் பதில் அளித் தார் ராக்கியண்ணன். 

மாயவர் விடுவதாக இல்லை. “இந்தப் பாசறையில் பயிலும் மாணவர்களுக்கு அப்படியொரு ஆணை முன்பெல்லாம் இருந் ததில்லையே! உங்களிடம் தலையூர் இளவரசன் காளி மாணவ னாக இருந்து போர்ப்பயிற்சிகளைப் பெற்றபோது இங்குள்ள மாணவர்கள் யாருடைய பெயரும் மர்மமாக வைக்கப்பட்டதில் லையே?’ என வியப்பு தெரிவித்தார். 

பெருங் கனைப்பொன்றைக் கனைத்துக் கொண்டு ராக் கியண்ணன் நாற்காலியை விட்டு எழுந்து அந்தப் பாசறையில் வேங்கை போலக் கம்பீரமாக உலவிக் கொண்டே; “மாயவரே! நீங்கள் சொல்வது முப்பது வருஷத்துக்கு முன்பிருந்த சமாச்சாரம் – தலையூர் மன்னன் பெரிய காளியின் மகன் இளவரசன் காளியை அறியாதார் யாருமிருக்க முடியாது. இளம்பருவத்தில் அவன் இங்கே மாணவனாக இருந்து, வில் வித்தை, வாள்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம் போன்ற போர் முறைகளைக் கற்ற போது; அவன் பெயரை மறைக்கத் தேவையில்லாமல் இருந்தது. மறைக்கவும் முடியாமல் இருந் தது. இப்போது நிலைமை அப்படியில்லை. என்னிடமுள்ள மாணவமணிகள் ஒரு சிலருடைய பெயரை வெளியில் சொல் வது அவர்களுக்கே நல்லதல்ல; என்பதற்காக – எந்த மாணவனுமே தங்களுடைய பெயரை யார் கேட்டாலும் சொல்லக் கூடாது என்று இந்தப் பாசறையில் சில ஆண்டுகளாகப் புது விதி செய்யப்பட்டிருக்கிறது” என விளக்கமளித்து விட்டு, மாயவரைப் பார்த்து புதிய கேள்வியொன்றைத் தொடுத்தார். 

“ஆமாம் -சுமார் இருபது அல்லது இருபத்தைந்து வருஷத் துக்கு முன்பு தலையூர் அரண்மனையை விட்டு துறவியாகப் போவதாக அறிவித்து விட்டுச் சென்ற தாங்கள் இரண்டொரு வருஷங்களுக்கு முன்பு திரும்பவும் தலையூர் வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். ஒருமுறை அமராவதிக் கரையில் குதிரை யில் தாங்கள் வேகமாகச் சென்று கொண்டிருந்ததைக் கூட, ஆற்றில் நீச்சலடித்துக் கொண்டே பார்த்தேன். கூப்பிடலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் தாங்கள் சென்ற வேகத் தில் என் கூச்சல் காதில் விழாது என்பதால் பேசாதிருந்து விட்டேன். அனைத்தையும் துறந்து எங்கெல்லாமோ சென்று விட்டு; பிறகு துறவறத்தைத் துறந்து விட்டுத் திரும்பிய கார ணம் என்னவோ?” 

இந்தக் கேள்விக்கு மாயவர் சிரித்துக்கொண்டே விடையளித் தார். 

“நான் துறவறம் பூண்டால் அல்லவா; அதைத் துறப்பதற்கு? தலையூர் ஆட்சியில் பெரிய காளி மன்னருக்குப் பிறகு இள வரசன் காளி; பதவிப் பொறுப்பேற்கும்போது, நானே தான் அமைச்சராக நியமிக்கப் பெற்று ஆட்சிக்குரிய அனைத்துப் பணிகளையும் கவனித்து வந்தேன். என் அறிவுரையை மீறி எந்தக் காரியமும் தலையூரில் நடைபெற்றதில்லை. ஆனால் அந்த நிலை நீண்ட காலம் நீடிக்கவில்லை. என் வார்த்தைகள் தலையூர்க்காளியின் முன்னால் மதிப்பற்றுப் போகிற ஒரு சூழல் தோன்றுவதை உணர்ந்தேன். நடைபெறும் தவறுகளுக்கு நானும் பொறுப்பாக இருக்க வேண்டுமா? என்று என் மனச் சாட்சி குடைய ஆரம்பித்தது. அந்தச் சங்கடத்தில் பதவியில் நீடிக்க விருப்பமின்றி; காளியிடமே கூறிவிட்டு – அரண்மனையை விட்டு வெளியேறினேன். சோழநாடு, சேரநாடு, பாண்டியநாடு என பல பகுதிகளில் பத்தாண்டு காலத்திற்கு மேலாகப் பயணம் செய்தேன். பின்னர் வடபுலத்தில் காசிமா நகர் வரையிலே சென்றேன். கங்கை, யமுனையெனும் நதிக் கரைகளில் உள்ள நகரங்கள், சிற்றூர்களில் எல்லாம் அலைந்து திரிந்தேன். புத்தவிகார்கள், சமணப்பள்ளிகள் அங்கெல்லாம் பல ஆண்டு காலம் தங்கிப் பெருநூல்கள் பலவற்றைக் கற் றேன். இப்படியே இருபது இருபத்தி ஐந்து வருஷங்கள் கழிந்தன என்றாலும்; என்னுடைய எண்ணமெல்லாம் தமிழ்நாட் டையே சுற்றிக் கொண்டிருந்தது. அதிலும் தலையூர்க்காளி யைப் பற்றியே எனக்கு மிகக் கவலை. அவனைத் தனியே விடுத்து இருபத்தி ஐந்து வருஷம் கழித்து விட்டோமே; அவன் தந்தை இறந்தபோது நம் கையில்தானே அவனை ஒப்படைத்து விட்டுத் துணையாக இருக்குமாறு சொல்லிவிட்டுப் போனார் அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டோமே என்ற கவலை வேறு என்னைக் கப்பிக் கொண்டது. சுருக்கமாகச் சொன்னால் பிறந்த மண்ணின் மீதுள்ள பற்று என்னைப் பற்றிக் கொண்டு திரும்ப இழுத்து வந்து விட்டது.” 

மாயவரின் பதில், ராக்கியண்ணன் மனத்தில் மிக உருக்கமாகப் பதிந்தது. 

“அவ்வளவு பற்றும் பாசமும் கொண்ட தலையூர் மண் ணைப் பிரிந்து செல்ல வேண்டிய அளவுக்குத் தங்கள் நெஞ் சில் ஏற்பட்ட புண்தான் என்னவோ? காலத்தால் அந்தப் புண் ஆறியிருக்குமென்று கருதுகிறேன். சரியென்று பட்டால் நானும் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பை நீங்கள் எனக்கு அளிக்கலாம் அல்லவா?” 

“உற்ற தோழரான உம்மிடம் உரைக்காமல் கூட அன்றைக்கு ஊரை விட்டுப் போய் விட்டேன். அதற்குப் பிராயச்சித்தமாக அந்தக் காரணத்தை இப்போது உம்மிடம் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.” 

“என்னிடம் விடைபெற்றுச் செல்ல அப்போது வந்திருந் தால் ஒரு வேளை நான் தடை செய்து விடுவேன் எனத் தயங் கியிருப்பீர்கள்.எப்படியோ நடந்தது நடந்து விட்டது – இனி மேல் நடப்பவைகளாவது நல்லவைகளாக நடக்கத் தங்களின் அறிவும் ஆற்றலும் தூய்மையான இதயமும் பயன்படட்டும்.” 

“ராக்கியண்ணரே! தாங்கள் நல்லதை நினைக்கிறீர்கள். ஆனால் இன்னமும் எனக்குத் தலையூர் மாளிகையில் அந்த நம்பிக்கை பிறக்கவில்லை!” 

“அப்படியா? ஏன் மாயவரே; எதனால் இவ்வாறு சொல்லுகிறீர்கள்?” 

“இப்போதும் தலையூர்க்காளிக்கு அவனது அருமைப் புர வலர் செல்லாத்தாக் கவுண்டரின் முகஸ்துதிப் பேச்சில் தானே மோகம் இருக்கிறது! செல்லாத்தாக் கவுண்டர் பின்னுகிற சிலந்திவலை தானே தலையூர்க்காளியைச் சிக்க வைக்கிறது! ராக்கியண்ணரே! மன்னர் பெரிய காளியைத் தனது வாய்த் திறனால் தன் வயப்படுத்திக் கொண்டு, சிறுவனாக இருந்த இளவரசனை வளநாட்டுக்கே அழைத்துப் போய் வளர்த்தார் செல்லாத்தாக் கவுண்டர். அந்த நன்றிக் கடனைத் தீர்க்கத்தான் செல்லாத்தாக் கவுண்டருக்குப் பெரிய காளி பலவகையிலும் உதவினார்.வாழவந்திச் சீமையை விட்டுத் திருக்காம்புலியூரில் குடியேறி வாங்கலில் உள்ள அம்மன் கோயிலுக்குத் திருப்பணி செய்து குடமுழக்கு விழா நடத்தியவர் கோளாத்தாக் கவுண் டர். இந்த மாரிக்கவுண்டன்பாளையம் மற்றும் பசுபதிபாளை யம், குப்பச்சி பாளையம், பஞ்சமாதேவி, கருப்பம் பாளையம். கடம்பங்குரிச்சி, வாங்கல் போன்ற ஊர்களடங்கிய பகுதிக்கும் கோளாத்தாக் கவுண்டர் சிற்றரசனாக விளங்கியதைத் தாங் களும் சிறு பிராயத்தில் அறிவீர்கள். சிற்றாலைப் பட்டணத் தைத் தலைமைநகராகக் கொண்டு நெல்லிவளநாடு எனும் பகு தியில் அவர் ஆட்சி செலுத்தினார். அவர் அமைத்த ஏரிகளில் ஒன்று வெள்ளாங்குளம் ஏரி. வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து அவர் ஆட்சி நடத்தியதால் “நெல்லிவளநாடு நெற் சூழ்ந்த கோனாடு,” என்று பாராட்டப் பெற்றது. நீண்ட நாட் களாக அவர்களுக்கிருந்த கவலையைப் போக்கப் பிறந்தவனே நெல்லியங்கோடன். ஆசை தணிக்கப் பிறந்த அந்த ஆண் பிள்ளையோ பெற்றோருக்குப் பெருங்கவலை ஏற்படுத்துபவ னாகவே இருந்தான். உலகத்தைப் புரிந்து கொள்ளாமல் வளர்ந்தான், ‘மசை’ என்ற அடைமொழிக்குரியவனாக ஆனான். சுறுசுறுப்பு, விறுவிறுப்பு என்றால் என்ன விலை என்று கேட் பவன். கள்ளங்கபடமற்றவன். அவன் எப்படி நெல்லிவளநாட் டைப் பரிபாலிக்கப் போகிறான் என்ற கவலையில் கோளாத் தாக் கவுண்டர்; தனது சகோதரன் செல்லாத்தாக் கவுண்டரி டம் அவனை விடுத்து அவரது பாதுகாப்பில் வளர்க்குமாறு கூறிவிட்டு உயிர்துறந்தார். தந்தை கோளாத்தாக் கவுண்டரைப் பின்பற்றித் தாயார் பவளாத்தாளும் உயிர் விட்ட பிறகு நெல் லியங்கோடன் அனாதையானான். அவனுக்குரிய வளநாட்டு ஆதிக்கம் முழுமையும் கைப்பற்றிக் கொள்ள செல்லாத்தாக் கவுண்டர் திட்டம் போட்டார். “மசச்சாமி”யாகத் திகழும் நெல்லியங்கோடன் பொறுப்பில் வளநாடு வருமேயானால் வலிமை பொருந்திய பகுதியாக இருக்காது. தலையூர் ஆட்சிக் குத் துணை நிற்கும் பலம் பொருந்திய ஆட்சியொன்று நெல்லி வளநாட்டில் அமைய வேண்டுமேயானால் அதற்கு செல்லாத் தாக் கவுண்டரின் சூழ்ச்சி நிறைந்த மூளையே ஏற்றது என்று தலையூர் மன்னர் பெரிய காளி முடிவு செய்தார். அந்த முடிவைச் செயல்படுத்த, செல்லாத்தாக் கவுண்டர், பெரிய காளி யிடம் திட்டங்களை எடுத்துரைத்தார். செல்லாத்தாக் கவுண் டரின் யோசனைப்படி, நெல்லியங்கோடன் இளம்பருவத்தி லேயே வளநாட்டிலிருந்து துரத்தப்பட்டான். அவன் திரும்பி வந்து, தனது நிலப்பரப்பை தன்னிடம் ஒப்படைக்க வேண்டு மெனச் செல்லாத்தாக் கவுண்டரிடம் வாதிட்ட போதெல்லாம் பெரும் சித்திரவதைக்கே ஆளாகியிருக்கிறான். அதற்கெல்லாம் செல்லாத்தாக்கவுண்டரால் தலையூரின் உதவியைப் பெற முடிந்தது. பெரிய காளி மரணப்படுக்கையில் இருந்த போது அவர் அருகே நானும், செல்லாத்தாக் கவுண்டரும், இளவரசன் காளியும், இன்னும் சில அரசப் பிரதானியர்களும் இருந்தோம். இளவரசன் காளிக்குத் துணையாக இருந்து ராஜ்ய பாரத்தைக் கவனிக்க என்னை அமைச்சர் பொறுப்பில் நியமிப்பதாகக் கூறிய மன்னர் பெரிய காளி; செல்லாத்தாக் கவுண்டர் கையில் இளவரசன் காளியின் கையைப் பிடித்துக் கொடுத்து; “கவுண்டர் அவர்களே! என் மகன் காளிக்கு இனிமேல் நீர்தான் தாயும் தந்தையும்” என்றுரைத்ததோடு; இளவரசனைப் பார்த்து; ”தம்பி காளி! உனக்கு செல்லாத்தாக் கவுண்டர் தான் புரவலர் – அவரது வளநாட்டுக்கும் நமது மேனாட்டுக்குமுள்ள உறவு என்றைக்கும் தொடர வேண்டிய உறவு! அவர் வார்த்தைக்கு மறுவார்த்தை கூறாமல் -அவர் சொல்லை என் சொல்லாகக் கொண்டு நடந்து கொள்!” என்று கூறிவிட்டு உயிர்விட்டார். 

மாயவர் இந்த விபரங்களைச் சொல்லி முடிப்பதற்குள் ராக் கியண்ணன் குறுக்கிட்டு; “அடப்பாவி; அவ்வளவு நாள் பழகி யும் செல்லாத்தாக் கவுண்டரின் குணநலன்களைப் புரிந்து கொள்ளவில்லையா?” என்று தனது ஆதங்கத்தை வெளிப் படுத்தினார். 

மாயவர் தொடர்ந்தார் மேற்கொண்டும் விபரங்களை! 

“அனாதையாக்கப்பட்ட நெல்லியங்கோடன் ஓரிரு முறை ஆரிச்சம்பட்டி மணியங்குரிச்சிக்குப் போய் ரகசியமாகத் தாமரை நாச்சியை சந்தித்து அவள் மூலம் சில உதவிகளைப்பெற்று எப்படியோ. காலந்தள்ளிக் கொண்டிருந்தான். அவர்களுக் குள்ளே அன்பு ஏற்பட்டு விட்டது என்பதைத் தெரிந்து கொண்ட மணியங்குரிச்சியார்; அந்த அன்பு முற்றிப் பழுத்துவிடக் கூடா தேயென்று – அவனை அந்தப் பக்கம் வராமலே துரத்தியடித்து விட்டார். விஷயம் செல்லாத்தாக் கவுண்டருக்குத் தெரிந்தது. மணியங்குரிச்சி மலைக்கொழுந்தாக் கவுண்டருக்கும் நெல்லி யங்கோடனுக்கும் உள்ள நெருங்கிய சொந்தபந்தத்தை அவர் அறியாதவரா என்ன? அதனால் அப்படியொரு சம்பந்தம் வலுப்பெற்று விடக் கூடாது என்பதற்காகவும் – ஆரிச்சம்பட்டி மணியங்குரிச்சி பெரிய காணியாளரின் பலமும் தன்னுடன் சேரவேண்டுமென்பதற்காகவும் தனது மகன் மாந்தியப்ப னுக்கு தாமரைநாச்சியைத் தாரமாக்கத்திட்டமிட்டு அந்தப் பேச்சு வார்த்தையில் வெற்றியும் பெற்றார். 

இடைமறித்த ராக்கியண்ணன்; ”மாயவரே! அந்தத் திரு மணம்தான் செல்லாத்தாக் கவுண்டர் விரும்பியபடி நடக்கவில் லையே! தாமரைநாச்சியாரின் விருப்பம்போல் அல்லவா நடை பெற்றது!’ என்றார் புன்னகையை நெளிய விட்டுக் கொண்டு! 

“அதற்குப் பிறகு ஏற்பட்ட விபரீதங்கள் பிடிக்காமல்தான் நான் தலையூரை விட்டு வெளியேற நேர்ந்தது” என்றார் மாயவர்! 

“இன்னமும் தாங்கள்; இருபது இருபத்தி ஐந்து ஆண்டு களுக்கு முன் தலையூர்க்காளியிடம் கோபங்கொண்டு வெளி யூர்களுக்குக் கிளம்பிய அந்தக் காரணத்தைக் கூறுகிற கட்டத் திற்கே வரவில்லை!” என்றார் ராக்கியண்ணன் கிண்டலாக! 

”வந்துவிட்டேன்! நான் இப்போது தலையூருக்குத் திரும்பி வந்தும் விட்டேன். தாங்கள் அறிய விரும்புகிற காரணத்தின் பக்கமும் வந்துவிட்டேன்’ என மாயவர் தனது தாடியைத் தட விக்கொண்டே குளிர்ந்த ஒரு பார்வையை ராக்கியண்ணன்மீது வீசினார். 

“தாமரைநாச்சி – மாந்தியப்பன் திருமணம் நின்று போன தும்; தலையூர்க்காளி மறுநாள் மாளிகைக்குத் திரும்பினான். நான் அவனைச் சந்தித்துப் பாராட்டினேன். செல்லாத்தாக் கவுண்டர் கிழித்த கோட்டைத் தாண்டாமல் அவருக்குத் துணை நிற்பதில் முதல் ஆளாகச் செயல்படும் நீ; இந்த ஒரு விஷயத் தில் ஒரு பெண்ணின் வாழ்வில் மண் விழாமல் காப்பாற்றி விட்டாய் என்று அவனை மிகவும் புகழ்ந்தேன். அவனும் என் னைத் தனக்குத் கீழே பணியாற்றும் ஒரு அமைச்சர் நிலை யிலே எண்ணாமல்; அவனை விட வயதில் மூத்தோன் என்ற நிலையில் என் காலைத் தொட்டுத் தொழுது; பாராட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டான். எப்போதுமே தலையூர்க் காளி; என்னிடம் அத்தகைய மரியாதையும் மதிப்பும் கொண் டிருப்பவன்தான். செல்லாத்தாக் கவுண்டரின் சிலந்தி வலையி லிருந்து சிறிது சிறிதாக மீளுகிறான் பிள்ளை – என்று எண்ணி நான் மகிழ்ச்சி கொண்டிருந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை!” 

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அச்சம்பவம் இப்போது கூட மாயவரின் மனத்தைக் கலக்கியதால் அவர் கண்கள் சற்றுக் கலங்கிக் காணப்பட்டன போலும்! 

“ஏன் அந்த மகிழ்ச்சி நீடிக்க வில்லை?” என்றார் மிகுந்த ஆவலுடன் ராக்கியண்ணன்! 

“மணியங்குரிச்சியிலிருந்து திரும்புவதற்குள்ளாகவே செல் லாத்தாக் கவுண்டரின் தூண்டுதலின் பேரில் தலையூர்க்காளி மலைக்கொழுந்தாக் கவுண்டருக்கு ஒரு மிரட்டல் கடிதம் எழுதி யிருக்கிறான். அந்தக் கடிதத்தின் விளைவு; நெல்லியங்கோட னும் தாமரைநாச்சியும் உடனடியாக மணியங்குரிச்சி மாளி கையை விட்டு விரட்டப்பட்டார்கள். திருமணமான தினம் மங்கல விழாவைத் தொடர்ந்து நடைபெற வேண்டிய சடங்கு கள் கூட முறையாக நடைபெற்று முற்றுப்பெறவில்லை. தங்கத் தால், வெள்ளியாலான சீர்வரிசைகளையெல்லாம் தாமரை நாச்சியாருக்குக் கொடுத்து; அறுசுவை உணவில் அணுவளவு தான் விஷம் கலந்திருக்கிறேன் ஆனந்தமாக அருந்திடுக; என்று உபசரிப்பதுபோல்; இனி உனக்கும் உன் கணவனுக்கும் இந்த வீட்டுப் படியேற உத்திரவில்லையென்று தங்கத் தாமரை யாளைப் பொங்கும் கண்ணீரோடு துரத்தியடித்து விட்டார் கள். நெல்லியங்கோடனுக்கோ ஒன்றும் புரியவில்லை. எப்படி வாழ்வது என்ற கவலையில் மூழ்கினான். குடிப்பெருமை பண்பாடு இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தாமரை யாள்; தன் கணவனும் தானும் வாழ்ந்தே தீர வேண்டுமென்ற உறுதியும் அதற்காகப் போராடுகிற உரிமை உணர்வும் கொண்ட பெண்மணி என்பதால் செல்லாத்தாக் கவுண்டரி டம் சென்று தனது கணவனுக்குரிய ஆட்சியை ஒப்படைக்க மனமில்லையென்றாலும் அந்த நிலப்பரப்பில் ஒரு பகுதியைத் தருக என்று வாதிடப் புறப்பட்டாள் கணவனுடன்! செல்லாத் தாக் கவுண்டர் மாளிகையில் என்ன நடந்தது தெரியுமா?’ 

மாயவரின் விழிகளில் நீர்த்துளிகள் தொங்கலிட்டன! 

சிறிது நேரம் அமைதி! இப்போது அந்தப் பாசறைக்குள் இருவருமே உலவிக் கொண்டிருந்தனர். ராக்கியண்ணன் மனக் கலக்கத்தை அவ்வளவாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை எனினும் என்ன நடந்தது என்பதை அறிவதில் ஆர்வம் காட்டினார். 

“வந்தவர்களை உபசரிப்பதுபோல செல்லாத்தாக் கவுண்டரும், மாந்தியப்பனும் நன்றாகவே நடித்தனர். தாமரை மாளி கையிலிருக்கட்டுமென்றும் நெல்லியங்கோடனை அழைத்துச் சென்று அவனுக்குத் தேவைப்படுகிற நிலப்பகுதியின் எல் லைக்கோட்டை நிர்ணயிப்பதென்றும் – ஏமாற்றி அவனை மட் டும் செல்லாத்தாக் கவுண்டர் சாரட்டு வண்டியில் ஏற்றிச் சென்றார்!” 

“பிறகு? பிறகு?” மாயவரின் நாவசைவை எதிர்பார்த்து ராக்கியண்ணன் துடித்தார். 

“பிறகென்ன? ஒரு வயலோரம் நெல்லியங்கோடனை இழுத் துச் சென்று ஒரு மரத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டு, கருவேல மிளார் கொண்டு அவன் உடலெல்லாம் ரணமாக அடித்து வதை செய்தனர். மாளிகையிலிருந்த தாம் ரையிடமும் மாந்தியப்பன் குறும்புத்தனம் செய்யத் துணிந்திருக்கிறான். 

மாயவர் சொல்லி முடிக்கவில்லை; ராக்கியண்ணன் “அய் யய்யோ!’ என அலறிவிட்டார். 

“தாமரைநாச்சி கற்பரசி மட்டுமல்ல; கண்ணகி தேவி போலத் துணிச்சலும் உறுதியும் கொண்டவள்! மாந்தியப்பனைக் காலால் உதைத்துக் கீழே தள்ளியிருக்கிறாள்! மண்ணைக் கவ்விய மாந் தியப்பன்; கொடுஞ்சீற்றங் கொண்டு வாளையெடுத்து அவள் கூந்தலை அறுக்க முனைந்திருக்கிறான்.” 

”என்ன?” என்று கேட்ட ராக்கியண்ணனுக்கு மீசை துடித்தது! 

“ஆனால் தாமரை; அவன் கையிலிருந்த வாளைப் பிடுங் கிக் கொண்டு கணவனைத் தேடி ஓடினாள். கருவேலமிளா ரினால் அவனை அடித்துக் கொண்டிருந்த கயவர்கள் மீது வாளை வீசினாள். அந்தப் பொல்லாதவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள். தாம் ரையாளோ; வாளை ஓங்கிய கையுடன் மற்றொரு கையால்; புண்ணாகிப்போன கணவனின் பொன்மேனியைத் தழுவிய வாறு வளநாட்டைவிட்டுப் புறப்பட்டாள்! இந்தச் செய்தியை இரண்டு நாட்களுக்குப் பிறகு கேள்விப்பட்ட நான் உடனடியா கக் காளியைச் சந்தித்து இப்படியெல்லாம் செல்லாத்தாக் கவுண்டர் நடத்தும் அக்கிரமங்களுக்கு நீயும் துணையிருக்க லாமா? என்று வேதனையுடன் கேட்டேன். தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிய காளி; அப்படியொரு நிகழ்ச்சி நடை பெற்றிருந்தால் அது கண்டிக்கப்படவேண்டியதே என்றும் என் னிடத்தில் கூறினான். என்னிடம் சொல்லுவதோடு இருக்கக் கூடாது, செல்லாத்தாக் கவுண்டருக்கும் அவர் மகன் மாந்தியப் பனுக்கும் உனது கண்டனத்தைத் தெரியப்படுத்த வேண்டுமென் றேன். சரியென்பது போல் தலையசைத்தான். கண்டித்துச் செய்தி அனுப்பினானோ இல்லையோ தெரியாது; ஆனால் சிறிது காலத்திற்கெல்லாம் செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தி யப்பனும் நெல்லியங்கோடனுக்கு இழைத்த மற்றொரு அநீதிக்கு தலையூர்க்காளி தனது ஆட்களை அனுப்பித் தனது புரவலரின் புன்னகையைப் பரிசாகப் பெற்றான். 

“அது என்ன அடுத்த அநீதி?” ராக்கியண்ணனின் கேள் விக்கு மாயவர் தனது பதிலை மீண்டும் தொடர்ந்தார். 

“நெல்லியங்கோடனும் தாமரை நாச்சியும் உறையூர்ச்சோழ அரசனிடம் சென்று; சோழ மன்னனின் கீழ் கோளாத்தாக் கவுண்டர் வளநாட்டுக் காவல் ஆட்சியாளராக இருந்ததையும் அவர் மகன்தான் நெல்லியங்கோடன் என்பதையும் நினைவு படுத்தி உதவி கேட்டனர். தலையூர்க்காளியின் துணையோடு செல்லாத்தாக் கவுண்டர் தங்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டதையும் விவரித்தனர். சோழனும் அவர்களது சோகக் கதையைக் கேட்டு மனமுருகினான். ஆனால் அவர்களுக்காக வளநாட்டின் மீது படையெடுப்பதையோ அதன் காரண மாகத் தலையூர்க்காளியின் பகையைத் தேடிக் கொள்வதையோ அவன் விரும்பவில்லை. இருந்தபோதிலும் அவர்களுக்கு உதவி செய்வது கோளாத்தாக் கவுண்டருக்காகத் தான் காட்டும் நன்றி யெனக் கொண்டு ஏராளமான தரிசு நிலங்களையும், உழவு மாடுகளையும். உழவுக் கருவிகளையும் அவர்களுக்கு அளித்தான்.”

“வாழ்க சோழன்!” என்று ராக்கியண்ணனின் உதடுகள் உச் சரித்தன! மாயவரும்; ”ஆமாம்! வாழ்க! வாழ்க!” என்றார். அடுத்து அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை ராக்கி யண்ணன் உன்னிப்பாகக் கவனித்தார். 

“கோல் பிடித்து ஆதிக்கம் செலுத்த வேண்டிய நெல்லியங் கோடன் ஏர் பிடித்து வேளாண்மை செய்யத் தொடங்கினான். தேவையான ஆட்களை வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு நன்செய், புன்செய் நிலங்களில் கணவனும் மனைவியும் கடும் உழைப்பை வழங்கினர். உழைப்பு உயர்வு தரும் என்பதற் கொப்ப அவர்களிட்ட பயிர் தழைத்துக் குலுங்கியது. பச்சைக் கம்பளம் விரித்தது போல் கண்ணுக்கு விருந்தாகக் காட்சி யளித்த தங்கள் நிலப்பகுதியை தாமரையும் நெல்லியங்கோட னும் பார்த்துக் களித்தனர். இச்செய்தி கேள்வியுற்று செல்லாத் தாக் கவுண்டரும், மாந்தியப்பனும் முகம் சுளித்தனர். உடனே ஓலை பறந்தது தலையூர்க்காளிக்கு! அந்த ஓலை வந்த போது நான் தலையூர்க் காளிக்குப் பக்கத்தில்தான் இருந்தேன்!” 

“என்ன ஓலை மாயவரே அது?” ராக்கியண்ணனின் ஆவல் அதிகரித்தது. 

“தலையூர்க்காளியின் படைவீரர்கள் நூற்றுக்கணக்கில் உடனே வர வேண்டும். அவர்கள் காட்டுப் பன்றிகளை விரட்டிக் கொண்டு வந்து நெல்லியங்கோடன் பயிரிட்டுள்ள நிலங்களை யெல்லாம் பாழ்படுத்த வேண்டும். இப்படி ஓலையனுப்பியிருந் தார் செல்லாத்தாக் கவுண்டர்! இது தகாது; வேண்டாம் என்று நான் தடுத்துப் பார்த்தேன். தலையூர்க்காளியும் முதலில் தயங் கினான். செல்லாத்தாக் கவுண்டரின் வேண்டுகோளை எப் படிப் புறக்கணிக்க முடியும்? என்று குழப்பமடைந்தான்! நான் பிடிவாதமாக மறுத்தேன். அவன் கேட்கவில்லை; என் தந்தை சாகும்போது செல்லாத்தாக் கவுண்டரின் விருப்பப்படி நடக்கச் சொல்லியிருக்கிறார்; அதனால் அவர் பேச்சைத் தட்ட முடி யாது என்று காளி கூறினான். வீரர்களையும், பயிர்களை வீணாக்கப் பன்றிக் கூட்டத்தையும் அனுப்பினான். உயிர்கள் பறிக்கப்படுவதைக் கூட வேளாண் பெரு மக்கள் பொறுத்துக் கொள்வார்கள்; பயிர்கள் பாழாக்கப்படுவதை எங்ஙனம் பொறுத் துக் கொள்வார்கள்; அன்றைக்கு என்னால் சகிக்க முடியவில்லை. தலையூரை விட்டுப் புறப்பட்டு விட்டேன். என் இதயத்தின் ரணம் ஆறுவதற்கு இருபத்தி ஐந்து வருஷங்களாயிற்று” என்று பெருமூச்சு விட்ட மாயவர்; ராக்கியண்ணனைப் பார்த்து, ஆமாம்! இப்பொழுது நெல்லியங்கோடனும் அவன் மனைவி தாமரையும் எங்கேயிருக்கிறார்கள்? அமராவதியின் தென்கரை யில் குடையூரில் இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்; உண்மைதானா? உயிரோடு இருக்கிறார்களா?” என்று கேட்டார். 

“உயிரோடு மட்டுமல்ல; உயர்வோடும் இருக்கிறார்கள்! நெல் லியங்கோடனும், தாமரையும் உழைத்துச் சேர்த்த உடமைகள் பெருகி – குன்று சூழ் நிலப்பகுதிகள் பலவற்றுக்கும் நெல்லியங் கோடன் உரிமை படைத்தவனாகி; இப்போது குன்றுடையான் என்னும் பட்டப்பெயருடன் விளங்குகிறான்” என்றார் ராக்கியண்ணன். 

“அதைக்கூடச் சொன்னார்கள்; மகிழ்ச்சி! ஆனால் ஒன்று; தாமரை நாச்சியார் தன் சகோதரனிடம் சபதம் போட்டதற்கேற்ப ஆண் பிள்ளைகள் எதுவுமே இல்லையாமே! ஒரே ஒரு பெண் தான் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்; சரிதானா நான் சொல் வது?” என்றார் மாயவர்! 

இப்போது ராக்கியண்ணன் சிரித்தார். மாயவரை உற்றுப் பார்த்தார். 

“உண்மையான நண்பர் – நல்லவர் – என்பது மட்டுமல்ல; உண்மைகள் வெளிவர வேண்டிய காலமும் மலர்ந்து விட்ட படியால் தங்களிடம் இப்போது சொல்கிறேன்; குன்றுடை யானுக்கும் தாமரைக்கும் பிறந்த பொன்னர் – சங்கர் எனும் ஆண்மக்கள் இருவரும் இந்தப் பாசறையில்தான் என்னிடம் போர்ப் பயிற்சி பெறுகிறார்கள்!” 

“அப்படியா?” 

“நீங்கள் வரும் வழியில் சில பன்றிகளை அடித்து வீழ்த் திய வீர வாலிபர்களைப் பார்த்திருப்பீர்களே?” 

“மூன்று வாலிபர்களையல்லவா பார்த்தேன்!” 

“மூவரில் மூத்தவன் சோழன் தோட்டியின் மகன் வீர மலைச் சாம்புவன் – மற்ற இருவரில் மூத்தவன் பொன்னர்! இளையவன் சங்கர்!” 

8. கரகம் விடும் திருவிழா 

பெயர் என்னவென்று திரும்பத் திரும்பக் கேட்ட மாயவரைத் திகைக்க வைத்து விட்டு பொன்னர், சங்கர், வீரமலைச் சாம்புவன் ஆகிய மூன்று வாலிபர்களும் குறுக்குப்பாதை யிலேயே சிங்கக் குட்டிகளைப்போல நடந்து சென்று காவிரி யின் தென்கரையில் உள்ள வாங்கலம்மன் கோயிலை அடைந் தனர். காவிரியில் வெள்ளம் இரு கரைகளையும் தழுவிச் சென்று கொண்டிருந்தது. கரையோரத்து மரங்களில் இருந்து காற்றின் கரங்களால் பறிக்கப்பட்ட மலர்களையும், செடிகொடி களில் பூத்துக் குலுங்கிய மலர்களையும் தனது அலைக்கரங்களில் ஏந்தி நொங்கும் நுரையுமாக ஒலியெழுப்பிக் கொண்டு வரும் காவிரி மங்கையின் காட்சியையும் மிதந்து செல்லும் பூக்களைப் பின்தொடர்ந்து பறந்து கொண்டிருக்கும் வண்டினம் எழுப்பும் இசையின் மாட்சியையும் கண்ட மூன்று வாலிபர் களுக்கும் தங்களின் ஆசான் ராக்கியண்ணன் பயிற்றுவித்த சிலப்பதிகாரப் பாடல் நினைவுக்கு வரவே காவிரியைக் கண் கொட்டாமல் பார்த்து நின்றனர். 

“மருங்கு வண்டு சிறந்தார்ப்ப 
மணிப்பூ ஆடை அது போர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி” 

என்ற பாடலை அவர்கள் இசையுடன் முணுமுணுத்து உற் சாகத்தை வெளிப்படுத்தினர். 

வாங்கலம்மன் கோயிலை உற்றுப் பார்த்து நின்ற வீரமலைச் சாம்புவன்; இந்தக் கோயில் கோளாத்தாக் கவுண்டர் ஆட்சி யிலே கட்டப்பட்டதாகத் தனது ஆசான் ராக்கியண்ணன் ஒரு முறை சொன்னதை நினைவுகூர்ந்தான். கோளாத்தாக் கவுண்டர்; பொன்னர் சங்கருக்குப் பாட்டானார்தான் என்பது அவர்களுக்கும் தெரியவில்லை வீரமலைச் சாம்புவனுக்கும் தெரியவில்லை என்பது அவர்கள் அந்தக் கோயிலைப் பற்றிப் பேசிய திலிருந்தே நன்கு புரிந்தது. 

“ஏ, அப்பா -இந்தக் கோயிலில் உள்ள அம்மனை எத்தனை ஊர்க்காரர்கள் வழிபாடு செய்கிறார்கள் தெரியுமா? ஆற்றின் இக்கரையில் மட்டுமல்ல; அக்கரையிலும் கூட ; மருதம்பட்டி, நாமக்கல், வகுரம்பட்டி,வசந்தபுரம், பெரியபட்டி,வேட்டாம் பாடி, முத்துக்காப்பட்டி, சாளைப்பாளையம், பழயபாளையம், நெய்காரப்பட்டி, நல்லயக் கவுண்டன்புதூர், எருமப்பட்டி, மரூர்பட்டி முதலிய பல ஊர்களில் வாழும் பெருங்குடி மக்கள் வாங்கலம்மனுக்கு வழிபாடு நடத்தாமல் இருப்பதில்லை!” 

என்று அந்தக் கோயிலுக்குரிய பெருமையை வீரமலைச் சாம்புவன் விரித்துரைத்தான். பொன்னர்-சங்கர் இருவரையும் விட ஏழெட்டு வயது மூத்தவன் என்ற முறையில் வீரமலைச் சாம்புவனுக்கு இந்த விவரமெல்லாம் தெரிந்திருந்தது. 

சேரன் செங்குட்டுவன் வடபுலத்து மன்னர்களான கனகனும் விசயனும் தமிழர் வீரம் குறித்து வாயடக்கமின்றிப் பேசிய தாகக் கேள்வியுற்று; அங்ஙனமாயின் அவர்கள் தலையிலேயே கண்ணகி சிலைக்கான கல்லை ஏற்றி வருவதாகச் சூளுரைத்து அப்படிக் கொண்டு வந்த கல்லில் சிலை வடித்து விழா எடுத் ததையொட்டித் தமிழகத்தில் பல டங்களில் கண்ணகி கோயில்கள் எழுப்பப்பட்டதாகவும் அவற்றில் ஒன்றுதான் வாங்கலில் உள்ள அம்மன் கோயிலென்று பெரியவர்கள் சொல்வதாகவும் ராக்கியண்ணன்; தனது பயிற்சிக் கூடத்தில் மாணவர்களிடம் உரைத்ததும் மூவருக்கும் ஞாபகத்திற்கு வரத் தவறவில்லை. 

“அண்ணா! வாங்கலம்மன் கோயிலுக்கு வரலாற்று அடிப் படையில் இப்படியொரு சிறப்பு இருக்கிறது; இதே காவிரிக் கரையில் உள்ள மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலுக்கு புராண ரீதியான கதையொன்று இருக்கிறதாமே; அது தங் களுக்குத் தெரியுமா?” என்று பொன்னரைப் பார்த்து சங்கர்; மிகுந்த ஆவலுடன் கேட்டான். 

“தம்பி! அப்படியொரு கதையிருந்தால் நமது ஆசான் நமக் குச் சொல்லியிருப்பாரே!” என்று பொன்னர் பதில் அளித்தான். 

அப்போது ஒரு குரல்; “அந்தக்கதை ஒரு பெரிய கதை! அதை நான் சொல்லுகிறேன்” என்று ஒலிக்கவே மூவரும் குரல் வந்த திக்கினை வியப்புடன் நோக்கினர். காவிரியாற்றுக் கரையோரத்தில் மிதந்து கொண்டிருந்த ஓடத்திலிருந்தபடியே ஓடக்காரன் பேசிய குரல்தான் அது! 

“நீ என்னப்பா சொல்கிறாய்?” என்று வீரமலைச் சாம்புவன் ஓடக்காரனின் பக்கத்தில் சென்றான். 

“மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலிலே இன்றைக்கு ஆற்றில் கரகம் விடும் திருவிழா -ஒவ்வொரு வருஷமும் பதி னெட்டாம் பெருக்கையொட்டி அந்தத் திருவிழா தவறாமல் நடக்கும். ஆசையிருந்தால் வந்து பாருங்களேன். என் ஓடத் திலேயே போகலாம்’ என்று சற்று பல் இளித்தவாறு அவர் களைப் பார்த்து ஓடக்காரன் கூறினான். 

“அது என்னப்பா கரகம் விடும் திருவிழா?” என்று பொன் னர் ஆர்வத்துடன் கேட்டான். 

“எல்லாம் உங்களைக் கரையிலே நிறுத்திக் கொண்டே சொல்லிவிட முடியுமா? காசை எடுங்கள்!” என்றான் ஓடக்காரன், கண்டிப்பான தொனியில்! 

“காசு கொடுத்தால்தான் கதை சொல்லுவாயா?” என்று கொஞ்சம் கோபம் காட்டினான் வீரமலைச் சாம்புவன்! 

“இன்றைக்கு எல்லா ஊர்களில் இருந்தும் ஆண்கள் பெண் கள் நூற்றுக் கணக்கில் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயி லுக்கு வருவார்கள், வண்டி கட்டிக் கொண்டு வருபவர்கள், கால் நடையாகவே கட்டு சாத மூட்டையுடன் வருபவர்கள், இதுமாதிரி ஓடங்களிலே ஏறி வருபவர்கள் – ஒரே கூத்தும் கும் மாளமும் – செல்லாண்டியம்மன் கோயில் பக்கத்திலே இந்தக் காவேரி நதியே அமர்க்களப்படுமே! நீங்களும் என் ஓடத்தி லேறி செல்லாண்டியம்மன் கோயிலுக்கு வந்தால், ஓடத்தை விட்டுக் கொண்டே அந்தக் கதையைச் சொல்லிக் கொண்டு வருவேன். இஷ்டமிருந்தால் காசை எடுங்கள்!” என்றபடி, ஓடத்தை மெதுவாக நகர்த்தத் தொடங்கினான் அந்த ஓடக்காரன். 

சங்கருக்கு, கரகம் விடும் திருவிழாவைப் பற்றியும், செல் லாண்டியம்மன் கோயிலைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற துடிப்பு ஏற்பட்டது. அதனால் பொன்னரைப் பார்த்து, ‘அண்ணா! ஆசான்தான் இன்று நமக்கு விடுமுறை வழங்கியிருக்கிறாரே; ஓடத்தில் போய் வருவோமே?” என்று கேட்டான். ஆசானுக்கு அறிவிக்காமல் அவ்வளவு தொலைவு ஆற்றில் ஓடத்தில் போய் வருவது பொன்னருக்கு உகந்ததாகப் படவில்லை. தயங்கினான். 

“வேண்டாம் தம்பி! செல்லாண்டியம்மன் கோயிலைப் பற்றி நமது ஆசானிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அவரிடம் ஒப்புதல் பெறாமல் அடுத்த ஊர் செல்வது முறையல்ல!” என்று தடுத்தான். 

வீரமலைச் சாம்புவன் குறுக்கிட்டு; “ஆசான் ஒன்றும் கோபித்துக் கொள்ள மாட்டார். அப்படியே அவர் ஏதாவது சொன் னாலும் நான் அவரைச் சமாதானப்படுத்துகிறேன். ஓடத்தில் ஏறுவோம் இப்போது!” என்றான். ‘அண்ணனுக்கு என்னைவிட வயதுதான் அதிகம்! ஆனால் என் தம்பியைவிட துடிப்பும் அவ சரமும் அதிகம்! சரி; சரி – உங்கள் இருவர் பிடிவாதத்துக்கே வெற்றி! நானும் வருகிறேன்; போவோம்!” என்று பொன்னர், முதலில் போய் ஓடத்தில் ஏறிக்கொள்ளவே சங்கரும் வீரமலை யும் புன்னகையரும்பிட அவனைத் தொடர்ந்து சென்று ஓடத் தில் அமர்ந்தனர். பொன்னர், தனது இடையில் சொருகி யிருந்த சுருக்குப் பையிலிருந்து காசுகளைப் பொறுக்கியெடுத்து ஓடக்காரன் கையில் கொடுக்கவே ஓடம் வாங்கல் கரைப்பகுதி யிலிருந்து மதுக்கரைப்பகுதி நோக்கிப் புறப்பட்டது காவிரி யாற்றுப் பெருக்கில்! 

“கரகம் விடுகிற விழா கதையைச் சொல்லய்யா!” என்றான் சங்கர்! 

ஓடக்காரன் “இதோ!” என்று தலையை அசைத்துக்கொண்டு ராகம் போட்டுப் பாடவே ஆரம்பித்து விட்டான்! 

“முந்தி முந்தி விநாயகனே 
முக்கண்ணர் தன் மகனே 
சக்திக் கணபதியே 
தையல் நல்லாள் புத்திரனே 
ஆனை முகத்தோனே 
அரனார் திருமகனே” 

பாட்டொலி கேட்டதும்; சங்கர் ஓடக்காரனை தொட்டிழுத்து, “அய்யா! நீ கணபதி ஸ்தோத்திரத்திலேயிருந்து கதையை ஆரம்பிச்சா பொழுது விடிந்து விடும். சுருக்கமாக கரகம் விடுகிற விழாக் கதையைச் சொல்லு!” என்றான். 

“அப்படியா? சரி சரி… சொல்லுகிறேன் கேளுங்கள், கைலா சத்திலே, நாகமலையென்று ஒரு மலை இருக்கிறது. அங்கே ஒரு நாகப்பாம்பு, தனக்குக் குழந்தையில்லாமல் பரமசிவனை நோக் கித் தவம் செய்தது. அந்த நாகப்பாம்புக்கு அஞ்சு தலை. அதன் தவத்தைக் கண்டு மனம் இளகிய பரமசிவன், பார்வதியை அழைத்து, “நீ போய் அந்தப் பாம்புக்குக் குழந்தையாகப் பிற!” என்று கட்டளையிட்டார். பார்வதியும் அப்படியே அந்த நாகப் பாம்புக்குப் பெண் குழந்தையாகப் பிறந்தாள். அந்தக் குழந்தைக்குப் பெரிய காண்டியென்று அந்த நாகப் பாம்பு பெயர் சூட்டி வளர்த்தது. எப்படி வளர்த்தது தெரியுமா?” என்று ஓடக்காரன் மீண்டும் பாட ஆரம்பித்தான்: 

“ஐந்து படம் விரித்து நாகம் அரவக் குடை பிடிக்க
நாகம் குடை பிடிக்க அம்பாளுக்கு நற்சங்கு தாலாட்ட
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய்
சங்குநாதம் தாலாட்ட தாயார் தானே வளருகிறாள்” 

அவனே பாட்டை நிறுத்திவிட்டுக் கதையைத் தொடர்ந்தான்: 

“இப்படியாகத் தானே வளர்ந்த பெரிய காண்டியம்மன், கொல்லிமலை விட்டு வீரமலைக் காட்டுக்குச் செல்வதற்காக காடுமலை வனவனாந்திரமெல்லாம் தாண்டி, தொட்டியம் வழி யாக வந்து காவேரிக் கரையைக் கடக்கும்போது மண்ணுடை யானிடம் தகராறு ஏற்பட்டுக் கடைசியாக அவன் பெரிய காண்டி அம்மனுக்கு மண் கரகம் செய்து கொடுத்து மன்னிப் புக் கேட்கிறான். மண் கரகத்தோடு வரும் பெரிய காண்டியை மதுக்கரை செல்லாண்டியம்மன் பார்த்து விடுகிறாள். பார்வதி தேவிதான் பாம்பு வயிற்றிலே பெண்ணாகப் பிறந்து பெரிய காண்டியாக மண் கரகம் எடுத்து வருகிறாள் என்று செல்லாண் டியம்மனுக்குத் தெரியாது. செல்லாண்டியம்மன் கரகம் பொன் கரகம். அதனாலே அந்த அம்மன் பெரியகாண்டியம்மனைப் பார்த்து; 

“பொன் கரகம் தலையில் வைத்து நான் 
பூமிபதி ஆண்டிருக்க; இவள்
மண் கரகம் தலையில் வைத்து 
வாரவள்தான் ஆருமினி?
இவள் நம்மில் பெரியவளா? 
நலம் மிகுந்த வல்லவளா? 
இப்படி வழியை மறித்துமே தான் செல்லாண்டி
வழக்குரைத்து நின்றாளே” 

ஆக; பெரியகாண்டியம்மனுக்கும் செல்லாண்டியம்மனுக்கும் பெரிய போட்டியே வந்து விட்டது. இரண்டு பேரும் ஒரு பந்தயம் கட்டினார்கள்”. ஓடக்காரன் மீசை படபடக்க உரத்த குரலில் பேசினான். 

“என்ன பந்தயம்?” என்ற வினாக்குறி – மூன்று வாலிபர்களின் விழிகளிலும் தென்பட்டது. 

“பொன் கரகத்தையும் ஆற்றில் மிதக்க விடுவது – மண் கரகத்தையும் ஆற்றில் மிதக்க விடுவது – இரண்டில் எந்தக் கரகம் திருப்பாற்கடல் வரையில் சென்று தீர்த்தமாடி திரும்ப வரு கிறதோ; அந்தக் கரகத்துக்குரியவள் தான் பெரியவள் – என்று பந்தயம்! அதன்படி பெரியகாண்டியம்மன் மண்கரகத்தை விட்டாள். செல்லாண்டியம்மன் பொன் கரகத்தை விட்டாள். என்ன ஆயிற்று தெரியுமா? பொன் கரகம் ஆற்றுக்குள் போய் விட்டது. மண் கரகம் திருப்பாற்கடலுக்குப் போய் தீர்த்தமாடி விட்டுத் திரும்பி வந்தது. உடனே செல்லாண்டியம்மன் பெரிய காண்டியம்மன்தான் பெரியவள் என்று ஒப்புக்கொண்டு தனது பொன் கரகத்தை வரவழைத்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பெரியகாண்டி அப்படியே பொன் கரகத்தை வரவழைத்துக் கொடுத்தாள். செல்லாண்டியம்மனும் பெரியகாண்டியுடன் வீரமலைக் காட்டுக்கு வருவதாகச் சொன் னாள். ‘வேண்டாம்; நீ இங்கேயே இருந்து மக்களுக்கு அருள் புரிந்து கொண்டிரு – நான் காட்டுக்குச் சென்று தவம் செய்து மீண்டும் கைலாசம் செல்ல வேண்டும்” எனக் கூறிவிட்டு பெரிய காண்டியம்மன் போய் விட்டாள். அந்தக் கரகம் விடு கிற விழாவைத்தான் இப்போதும் வருஷாவருஷம் காவேரியில் கொண்டாடுகிறார்கள் என்று ஓடக்காரன் கதையை முடித்தான். 

“சாமிகளுக்குள்ளேயே எவ்வளவு போட்டி பார்த்தீர்களா?” என்றான் சங்கர். 

“போட்டி – பந்தயம் இதெல்லாம் இருக்கட்டும் ஆனால் இந்தக் கதையில் ஒரு தத்துவம் இருக்கிறது; அதை கவனிக்க மறந்துவிடக் கூடாது!” என்றான் பொன்னர்! 

என்ன சொல்லப் போகிறான் என்று ஓடக்காரனுட்பட மூவரும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். 

“மண் கரகம் வென்றது; பொன் கரகம் தோற்று விட்டது! எளிமையாக இருந்தாலும் அடக்கமான இயல்பு என்றைக்கும் வெற்றி பெறும்! ஆனால் ஆடம்பரமும் அதனால் ஏற்படும் கர்வமும் என்றாவது ஒருநாள் தோல்வியடைந்தே தீரும்! என்ற தத்துவத்தைத்தான் இந்தக் கதை விளக்குவதாக நான் நினைக்கிறேன்” என்றான் பொன்னர். 

அவனது நுட்பமான கருத்தைக் கேட்டு சங்கரும் வீரமலைச் சாம்புவனும் புளகாங்கிதம் அடைந்தனர் என்பதை அவர் களின் விழிகளில் தோன்றிய தகத்தகாயமான அந்த ஒளி எடுத் துக்காட்டியது. ஓடக்காரன் அந்தத் தத்துவத்தைப் பற்றிக் கவ லைப்படவில்லை. அன்றைய சம்பாத்தியம் எவ்வளவு என்பதை மடியைத் திறந்து கணக்கிட்டுக்கொண்டே ஓடத்தையும் செலுத் திக் கொண்டிருந்தான். ஓடம் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழாவை நெருங்கி விட்டது என்பதற்கான அறிகுறிகள் ஏராளமாகத் தெரிந்தன! பூக்களைக் கம்புகளில் சுற்றி ஆற்றங் கரையோரத்தில் உயர உயரமாக நட்டிருந்தார்கள். அந்தக் கோயிலைச் சுற்றி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த ஓடங்கள் எல் லாம் அலங்கரிக்கப்பட்டு கரையோரம் நின்றிருந்தன. அவற் றில் ஆடவர் பெண்டிர் அமர்ந்து திருவிழா வேடிக்கை பார்த் துக் கொண்டிருந்தனர். கரையில் பொய்க் குதிரையாட்டம் சிலம்பாட்டம் – போன்ற ஆட்டங்களும் கூத்துக்களும்! பம்பை, உடுக்கு, போன்ற வாத்தியங்கள் செவிகள் செவிடுபட முழங்கிக் கொண்டிருந்தன. நாயனங்கள் தவில்கள் எண்ணற்றவை செல் லாண்டியம்மன் திருவிழாப் பந்தலில் ஒலித்துக் கொண்டிருந்தன. 

ஓடக்காரனைப் பார்த்து சங்கர் கேட்டான்; “ஏனய்யா ; கரகம் விடுகிற திருவிழாவை எப்படி நடத்துவார்கள்?” என்று! 

“வருஷா வருஷம் புதுசு புதுசா இரண்டு பெண்கள் முக் கியமாக குடும்பப் பெண்கள் – அதிலும் கன்னி கழியாத பெண் கள் – ஒருத்தி பெரிய காண்டி அம்மனாகவும், இன்னொருத்தி செல்லாண்டி அம்மனாகவும் அலங்காரம் செய்து கொண்டு ஆற்றில் இறங்கி, மண் கரகத்தையும் பொன் கரகத்தையும் போட்டிக்கு விடுவார்கள்” என்று ஓடக்காரன் சொன்னதும்; 

“அப்படியா? இவ்வளவு ஆழமான ஆற்றில் பெண்கள் இறங்கி கரகம் விடுவதா?” என்று வீரமலைச் சாம்புவன் வியப்பு தெரிவித்தான். 

“இல்லை-இல்லை – அவர்கள் தண்ணீரில் இறங்கமாட்டார் கள். சும்மா இறங்குவதுபோல் ஒரு பாவனை! ஆளுக்கு ஒரு ஓடத்தில் ஏறிக்கொள்வார்கள். அந்த ஓடங்களில் ஓடக்காரர் கள் இருக்கக் கூடாது. ஏன் என்றால் இப்போது அவர்கள் அம் பாளின் அருள் வந்தவர்கள் அல்லவா; அதனால் தனித்தனியே ஒவ்வொருவரும் ஒரு ஓடத்தில் கரகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். போட்டி ஆரம்பமானதும் மண் கரகத் தையும் பொன் கரகத்தையும் இரண்டு பெண்களும் ஆற்றில் போடுவார்கள். அப்போது ஆற்றுக்குள் யாருக்கும் தெரியாமல் ஆண்கள் மூழ்கி மண்கரகத்தை மட்டும் வெளியே எடுத்துக் கொண்டு வருவார்கள்” என்றான் ஓடக்காரன்! 

“அப்படியானால், பொன் கரகம் ஆற்றுக்குள் கிடக்கும். அதை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போய் விடலாமா?” என்றான் வீரமலைச் சாம்புவன்! 

“ஓ! அய்யாவுக்கு ஆசைதான்! அதுதான் முடியாது! கதைப் படி செல்லாண்டியம்மன் வேண்டிக் கொண்டதும் பெரிய காண்டியம்மன், அந்தப் பொன் கரகத்தை வெளியே எடுத்துக் கொடுக்க வேண்டுமே!” என்று கூறி கலகலவென சிரித்தான் ஓடக்காரன்! அவர்கள் வந்த ஓடம், திருவிழா நடக்கும் இடத் துக்கு வந்து விட்டது. 

விழா தொடங்குவற்கான இசை முழக்கம் வாத்திய ஒலிகள் வாணவெடிகள் “அம்பிகே! அம்பிகே!” என்று பக்தர் களின் கோஷங்கள். இவற்றுக்கிடையே இரண்டு ஓடங்களில்; கைகளில் ஒருத்தி மண் கரகத்தையும், இன்னொருத்தி பொன் கரகத்தையும் தாங்கியபடி ஆற்றில் அன்னங்களைப்போல் அசைந்து வந்தனர். பெரியகாண்டியம்மன் போலவும் செல் லாண்டி அம்மன் போலவும் இருவரும் அலங்கரித்து வந்த காட்சி கண்டு, ஆற்றின் இருபுறம் குழுமியிருந்த விழாக் காண வந்திருந்த மக்கள் வாய் திறந்தவாறு அசைவற்றுப் போயினர். எத்தனையோ ஆண்டு இந்தத் திருவிழா பார்க்க வந்திருக்கிறோம்; எந்த ஆண்டிலும் இப்படிப்பட்ட பேரழகிகள் பெரிய காண்டி யாகவும், செல்லாண்டியாகவும் சிங்காரித்துக் கொண்டு வந்த தேயில்லை என்று பேசிய மக்கள் கூட்டத்தில்; ”ஆமாம், யார் இந்த தேவதைகள்?” என்ற கேள்வியும் எழுந்தது. 

அதே கேள்வியை வீரமலைச் சாம்புவனும் ஓடக்காரனைப் பார்த்துக் கேட்டான். ஓடக்காரன் கொஞ்சம் யோசித்து; பிறகு திடீரென நினைவு வந்தவனாகப் பதில் சொன்னான். 

“மணியங்குரிச்சி மலைக்கொழுந்தாக் கவுண்டருடைய பேத்தி கள். அவர்தான் இப்போது உயிரோடு இல்லையே; இந்தப் பெண்கள் இருவரும் சின்னமலைக்கொழுந்தாக் கவுண்டரின் மகள்கள், 

ஓடக்காரன் இந்தப் பதிலை சொல்லி முடிப்பதற்குள் அந்தப் பகுதியிலுள்ள மரங்களையெல்லாம் பெயர்த்தெடுத்துக் கொண்டு போவதற்காக ஆவேச தாண்டவமாடிக் கொண்டு வந்தது போல ஒரு சூறைக் காற்று வீசியது! 

திருவிழாக் கூட்டத்தில் குய்யோ முறையோ எனப் பேரிரைச் சல்! ஆற்றோரம் மிதந்து கொண்டிருந்த ஓடங்கள் பல கவிழ்ந்து அவற்றில் இருந்தோர் ஆற்றில் விழுந்து தவித்தனர்! பொன்னர்-சங்கர் வந்த ஓடமும் பெருஞ்சுழலில் தத்தளித்தது. தத் தளித்த வேகத்தில் அதனைத் தடுத்துத் தூக்கிப் பிடிக்காவிட் டால் கவிழ்ந்து விடுமென்பதற்காக, சட்டென்று தண்ணீரில் குதித்து வீரமலைச் சாம்புவன் ஓடத்தை நிமிர்த்தி நிறுத்தினான். அந்தப் பரபரப்பில் ஓடக்காரன் ஆற்றுக்குள் விழுந்து, நீச் சலடித்துக் கொண்டிருந்தான். 

பொன்னர்-சங்கர் மட்டுமே ஓடத்தில் இருந்தனர். அவர்கள் கண்ணெதிரே ஒரு பயங்கரம்.பெரியகாண்டி அம்மனாகவும், செல்லாண்டி அம்மனாகவும் அமர்ந்திருந்த அந்தப் பெண்களின் ஓடங்கள் இரண்டும் காற்றடித்த வேகத்தில் நிலை தடுமாறி ஆற் றோடு போய்க் கொண்டிருந்தன. அந்த ஓடங்களை நோக்கிப் பொன்னர் சங்கர் தங்கள் ஓடத்தை வேகமாகச் செலுத்தினர். 

9. மணியங்குறிச்சி மாவீர்கள் 

“முத்தாயி! பவளாயி!” என்று அலறியடித்துக் கொண்டு நடுத்தர வயதுப் பெண்மணியொருத்தி காவிரிக் கரையில் அந்த சூறைக் காற்றையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண் டிருந்தாள். அவளைத் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டு கரையோரமாக சின்னமலைக்கொழுந்து ஓடிக்கொண்டிருந்தார். அவர்களிருவரின் பரபரப்பையும், கதறலையும் காண் போர்; ஓடத்துடன் நதியில் அடித்துச் செல்லப்படுபவர்கள் முத்தாயி, பவளாயி என்ற பெயருடையோர் என்பதையும் அவர்களின் தாய் தந்தையரே சின்ன மலைக்கொழுந்தும் அவருக்கு முன் பறந்தோடி வரும் அந்தப் பெண்மணி சிலம்பாயி. என்பதையும் -எளிதாகவே புரிந்து கொள்வர். 

கரை புரண்டோடும் வெள்ளம் அத்துடன் சூறாவளிக் காற்றும் சேர்ந்து கொண்டதால் முத்தாயி, பவளாயி இருவரு மிருந்த ஓடங்கள் வெகுவேகமாகக் காவிரியில் கிழக்கு நோக் கிப் போய்க் கொண்டிருந்தன. பெரிய காண்டியம்மனாகவும் செல்லாண்டியம்மனாகவும் அலங்கரித்துக் கொண்டிருந்த கார ணத்தாலோ என்னவோ; அந்தப் பெண்மணிகள் பதட்டமடை யாமல், நடப்பது நடக்கட்டும் என்ற நினைவுடன் அமைதியாக, அசைவற்று ஓடங்களில் உட்கார்ந்திருந்தனர். மண் கரகத்தை யும் பொன்கரகத்தையும் ஏந்தி; பக்திப் பிரவாகமுடன் ஓடத் தில் ஏறியமர்ந்தது போலவே; சூறாவளியில் ஓடங்கள் அடித் துச் செல்லப்படும் போதும் அவர்கள் விழிகளை மூடியவாறு வீற்றிருந்தனர். 

பொன்னரும் சங்கரும் தாங்கள் இருந்த ஓடத்தைத் தங்கள் கைகளைத் துடுப்பாக்கி செலுத்திக் கொண்டு; தங்களுக்கு முன்னால் சுழன்று சுழன்று செல்லும் முத்தாயி – பவளாயி ஓடங்களைப் பிடிக்க மிக வேகமாக முயன்று பார்த்தனர். 

ஒரு சமயத்தில் முத்தாயி பவளாயி இருவரின் ஓடங்களும் காற்றின் வேகத்தில் ஆற்றின் கரையொதுங்குவது போல் சென் றன். அப்போது அந்தக் கரையருகே வந்துவிட்ட அவர்களின் பெற்றோர்; கரையில் ஒரு கால் ஆற்று நீரில் ஒரு கால் வைத்தவாறு, ”அய்யோ! மகளே! மகளே!” என்று கூவியழுது கொண்டு ஓடங்களை நெருங்கினர். ஆனால் கண் மூடிக் கண் திறப்பதற்குள் கரையோரத்திலிருந்த ஒரு பெரிய மரத்தை சூறைக்காற்று பெயர்த்துக் கீழே தள்ளியது. பலத்த ஒலியுடன் முறிந்து விழுந்த அந்த மரம் பெற்றோர்களுக்கும் முத்தாயி பவளாயி இருந்த ஓடங்களுக்கும் நடுவிலே சாய்ந்து விட்டது. ஒரு நூலிழை தவறியிருந்தால் ஓடங்கள் இரண்டும் சிதறிப் போய், அந்த அழகிய இளம்பெண்களும் ஆற்றில் பிணமாக மிதந்திருப்பர். மரம் விழுந்த வேகத்தில் ஆற்றுத் தண்ணீர் மேலெழுந்து ஓடங்கள் இரண்டும் தத்தளித்து மீண்டும் நட்டாற் றில்; காப்பாற்றுவதற்கு யாருமின்றி சுழன்றோடத் தொடங்கின. 

தங்களின் செல்வங்களை காற்றுக்கும் காவிரிக்கும் பலி கொடுத்து விட்டதாகவே கருதி சின்னமலைக் கொழுந்தும் அவ ரது மனைவியும் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்கள். கரையோரத்தில் தாய் தந்தையர் தவியாய்த் தவிப்பதையும் அவர்களைச் சுற்றி பெருங்கூட்டம் கூடியிருப்பதையும் பார்த்த முத்தாயியும், பவளாயியும் தங்கள் கைகளை அசைத்து அவர் களைப் பதட்டமில்லாமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். தங்களை நோக்கி ஒரு ஓடத்தில் இரண்டு வாலிபர்கள் வேக மாக விரைந்து வருவதையும் அவர்கள் கண்டனர். 

கொந்தளிக்கும் கடலையும் மிஞ்சி காவிரியின் அலைகள் மேலே உயர்ந்து எல்லாப் படகுகளையும் எங்கேயோ தூக்கி யெறிந்து மோதி உடைப்பதற்குத் தயாராகி விட்டதைப் போல் காற்றின் சுழற்சி மூர்க்கத்தனமாக ஆட்டம் போட்ட அந்தச் சூழலில் பொன்னர் சங்கர் ஏறி வந்த படகு, எதிர்நீச்சல் போட்டு அந்தச் சூறையோடு போராடி முத்தாயி பவளாயி யின் படகுகளைத் தடுத்து நிறுத்த வலப்புறம், இடப்புறம், எதிர்ப்புறமென அலைந்து பார்த்து அலுத்துப் போய் விட்டது. தங்கள் படகுகளைப் பின் தொடர்ந்தும் சுற்றி வளைத்தும் வருகிற அந்தப் படகில் இருப்போர் இருவரும் தங்களுக்கு மேலும் ஏதாவது ஆபத்து விளைவிக்க வருகிறார்களோ என்ற ஐயப்பாடும் அச்சமும் கொண்டவர்களாக முத்தாயி – பவளாயி காணப்பட்டனர். 

அவர்கள் அவ்வாறு எண்ணி பயந்து போய்விடக் கூடாது எனக் கருதியவர்களாகப் பொன்னரும் சங்கரும் அவர்களைப் பார்த்து,’பயப்படாதீர்கள்! பயப்படாதீர்கள்! என்று உரக்கக் கத்தினார்கள். சூறைக் காற்றின் ஆவேச மூச்சின் பேரிரைச்ச லில் அவர்களது கூச்சல் அந்தப் பெண்மணிகளின் காதிலே விழுந்த காரணத்தால் அவர்கள் தாங்களிருந்த படகுகளை இன்னும் கொஞ்சம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அவற்றி லிருந்து ஆற்றில் விழுந்து விடாமல் பார்த்துக் கொண்டனர். 

ஓடத்தில் சென்று அந்தப் பெண்களைக் காப்பாற்ற முடி யாது என்ற முடிவுக்கு வந்து விட்ட பொன்னர் – சங்கர் இரு வரும் – ஓடத்திலிருந்து குதித்து நீச்சலடித்தனர். நீந்திச் சென்றே அந்த ஓடங்களை இருவரும் பிடித்து நிறுத்தி அந்தப் பெண் களைக் காப்பாற்றலாமென நினைத்தனர். என்னதான் கஷ்டப் பட்டு இருவரும் நீந்தினாலும் கூட; அந்த ஓடங்களை மறித்து நிறுத்துவது அவ்வளவு எளிதான செயலாகத் தோன்றவில்லை! 

அதற்காக அவர்கள் பின்வாங்கிடப் போவதில்லை! வீரத் திற்கு மட்டுமல்லாமல் ஈரத்திற்கும் நிரம்ப இடமுடைய நெஞ் சங்களுக்குத் தாங்கள் சொந்தக்காரர்கள் என்பதை நிரூபிப்பது போலப் பொன்னரும் சங்கரும் நீந்திக் கொண்டிருந்தார்கள். 

“அந்த வாலிபர்கள் தங்கள் பெண்களிருவரையும் காப் பாற்றி விடுவார்களா?” என்ற துடிப்போடு வைத்த விழி வாங்காமல் சின்ன மலைக்கொழுந்தும் சிலம்பாயியும் கரை யோரம் ஓடிக் கொண்டேயிருந்தனர். இதற்கிடையே வீரமலைச் சாம்புவன் நீந்திக் கரையேறி அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டு ஆற்றில் நடக்கும் அல்லோலகல்லோலத்தைப் பார்த் துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தான். 

திருவிழா காண வந்திருந்த மாந்தியப்பன் வழக்கம்போல் கையிலே ஒரு வேலுடன் களம் புகும் வீரனைப் போல் போர் உடைகளை அணிந்து கொண்டு அந்தப் பரபரப்பான இடத் திற்கு வந்து சேர்ந்தான். 

தாமரை நாச்சியாரை மணக்க வந்து ஏமாற்றத்துடன் திரும் பிய அவனுக்கு இப்போது தாமரைநாச்சியாரின் பிள்ளை களான பொன்னர் சங்கர் இருவரும்; தாமரைநாச்சியின் அண் ணனின் பெண்களைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள் என்பதே தெரியாது! ஏன்; பொன்னர் சங்கருக்கே கூட; தாங்கள் தாமரைநாச்சியின் மக்கள் என்பதும் அதன் தொடர்பான விவரம் எதுவும் தெரியாது! 

தாமரை நாச்சியை மணக்க, மணக் கோலத்துடன் வந்தபோது மாந்தியப்பனிடம் காணப்பட்ட இளமை குறுகுறுப்பு இப் போது இல்லாவிட்டாலும் -நல்ல முறுக்கேறிய கட்டுக்கோப் பான உடலுடனும், அடர்த்தியான மீசையுடனும், கம்பீரமான தோற்றத்துடனும் அவன் விளங்கினான். 

நெல்லி வளநாடு எல்லைக் காவல் ஆட்சித் தலைவர் செல்லாத்தாக் கவுண்டரின் மகன் இளவரசன் மாந்தியப்பன் அந்த இடத்துக்கு வந்ததுமே; அவனுக்கு வழிவிட்டுக் கூட்டத் தினர் ஒதுங்கி நின்றனர். 

மாந்தியப்பனைக் கண்டதும் சின்னமலைக்கொழுந்து கண் கலங்கினார். என் பெண்களைக் காப்பாற்றுங்கள் என்பது போல அவரது உதடுகள் நடுங்கின! தன் தங்கை தாமரை நாச்சியாரை மாந்தியப்பனுக்கு மணம் செய்து வைக்காத கோபம் இன்னமும் அவனுக்கு இருக்குமோ என்ற சந்தேகமும் சின்ன மலைக்கொழுந்துக்கு இல்லாமல் இல்லை. 

மலைக்கொழுந்தாக் கவுண்டருக்குப் பிறகு பெருமாயி அம் மாளும் காலமாகி விடவே மணியங்குரிச்சியின் காணியாளர் பொறுப்பை சின்னமலைக்கொழுந்து ஏற்றுக் கொண்டு ஆரிச் சம்பட்டியெனும் மணியங்குரிச்சிப் பகுதியில் தனது ஆதிக் கத்தை நிலைநிறுத்தியிருந்தார். தாய் தந்தையர் உயிருட னிருக்கும் போதே சின்னமலைக்கொழுந்துக்கும் சிலம்பாயிக் கும் திருமணமாகி விட்டது. மணவிழா முடிந்த நாலைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே முத்தாயி, பவளாயி என்ற பெண் குழந்தைகளுக்கும், வையம்பெருமான் என்ற ஆண் மகவுக்கும் சின்னமலைக் கொழுந்தும் சிலம்பாயியும் தாய் தந்தையாயினர். பின்னர் சின்ன மலைக்கொழுந்தின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக மரணத்தைத் தழுவினர். 

ஆரிச்சம்பட்டி மணியங்குரிச்சியில் நடைபெற்ற நல்லவை கெட்டவை எதற்குமே தாமரைநாச்சியோ அல்லது அவளது கணவனோ அழைக்கப்படவில்லை. மதியாதார் தலைவாசல் மிதியாமை கோடி பெறும் என்ற மொழிக்கொப்ப தாமரையும்; தான் பிறந்த வீட்டைத் திரும்பிப் பார்க்கவில்லை! 

ஆனால் இப்போது காவிரியாற்றில் ஓடங்களில் தவித்துக் கொண்டிருக்கும் தனது அண்ணன் பெண்களைக் காப்பாற்றத் தனது மக்கள் இருவரும்தான் முயற்சி செய்கிறார்கள் என்பதும் தாமரைக்குத் தெரியாது! தாமரையாள் ஈன்றெடுத்த தவப் புதல்வர்கள்தான் தாங்கள் என்பதும் பொன்னர் சங்கருக்குத் தெரியாது.

காவிரியாற்றில் உயிர்ச் சிலைகள் இரண்டு மூழ்கிச் செத்து விடக்கூடாதேயென்ற ஆதங்கத்திற்கு ஆட்பட்டு அந்த வீரர்கள் இருவரும் காற்றுடனும் – காவிரிப் பெருக்குடனும் போரிட்டுக் கொண்டே முத்தாயி பவளாயியின் ஓடங்களை நோக்கி முன்னேறினர். 

“பொடிப்பயல்கள்! இவர்களால் என்ன முடியும்?” என்று அவர்களை யாரென்றே அறியாமல் மாந்தியப்பன் அசட்டுச் சிரிப்பொன்றை அவிழ்த்தான். 

மாந்தியப்பன் அப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள் பொன் னர், முத்தாயி அமர்ந்திருந்த ஓடத்திற்கு முன் சென்று அதைத் தடுத்து நிறுத்தி விட்டான். அண்ணனைப் பின்பற்றி சங்கரும் நீச்சலடித்துப் பெரும் சுழல் ஒன்றில் சிக்கி மீண்டு; பவளாயி அமர்ந்திருந்த ஓடத்திற்கு முன் சென்று அதையும் தடுத்து நிறுத்தி விட்டான். 

ஓடத்திலிருப்பவர்கள் பெண்கள் என்பதால் இரு வாலிபர் களும் ஓடத்திலேறுவது முறையல்ல எனக் கருதி: நீந்திக் கொண்டே ஓடங்களைக் கரைப் பக்கமாக மெதுவாகத் தள்ளி வந்தனர். 

பொன்னர் தள்ளி வந்த முத்தாயியின் ஓடம், கரையோரம் வந்தபோது ஆற்றங்கரையில் வேர்விட்டு ஆற்றை நோக்கிக் கிளைகளைப் பரப்பிக் கொண்டிருந்த ஆலமரம் ஒன்றில் விழுது களோடு விழுதாய் தொங்கிக் கொண்டிருந்த மலைப்பாம்பு ஒன்று பொன்னர் உடலைச் சுற்றி வளைத்துக் கொண்டது. பொன்னரோ ஓடத்தையும் விட்டு விட முடியாது. அதைக் ” கொண்டு வந்து கரை சேர்க்க நீந்தியாக வேண்டும். இதற் கிடையே மலைப்பாம்புடனும் போரிட்டாக வேண்டும். பொன் னர் சளைக்கவில்லை. ஒரு கையால் ஓடத்தைப் பிடித்துக் கொண்டான். ஒரு கையால் மலைப்பாம்புடன் சண்டை போட்டான். கால்களோ நீச்சலடித்துக் கொண்டிருந்தன. மலைப் பாம்பு, பொன்னரின் மேனி முழுவதையும் சுற்றி வளைத்துக் கொண்டது. முத்தாயி அது கண்டு அஞ்சி நடுங்கினாள். 

நீண்டு கொழுத்த அந்தப் பாம்பு தனது அகன்ற வாய்க்குள் பொன்னரைத் தள்ளிக் கொள்ள உடல் முழுவதையும் வளைத்து, அவனைச் சுற்றிக் கொண்டு வாயைப் பிளந்து வைத்தவாறு போராடியது. பொன்னரோ அந்தப் பாம்பின் தலைப்புறம் தனது தலைக்கருகே வராமல் தடுத்துக் கொள்வதிலும் – அதே சமயம் அதன் வழுவழுப்பான – ஆனால் வலுவான உடலால், தனது உடல் வளைக்கப்பட்டு விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்து எதிர்ப் போராட்டம் நடத்தினான். முத் தாயி அமர்ந்திருந்த ஓடமும் ஆற்றில் நிலை குலைந்து போய் விடாமல் பாதுகாத்துக் கொண்டு என்னதான் முழு சக்தியை யும் அவன் பயன்படுத்தினாலும் அந்த மலைப்பாம்பின் அழுத்த மானதும் இறுக்கமானதுமான பிடியிலிருந்து அவனால் விடு வித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் மலைப் பாம்பு அவனது கழுத்தையும் சேர்த்து வளைத்துக் கொண்டு வாயைப் பெருங்குகைபோலத் திறந்து கொண்டு அவனது முகத்தை விழுங்க எத்தனித்த போது – அதைக் கண்டு முத் தாயி; அலறியவண்ணம் ஓடத்துக்குள்ளேயே மயங்கி விழுந்து விட்டாள். அந்த நேரம் கரையில் நின்ற வீரமலைச் சாம்புவன் தனது கையிலிருந்த கட்டாரியை மலைப்பாம்பின் தலைக்குக் குறிபார்த்து எறிந்தான். கட்டாரியின் கூர்மையும், அது வந்த வேகமும் மலைப்பாம்பை படபடக்கச் செய்து; அதன் வலிய பிடியிலிருந்து பொன்னரை விடுவிக்கச் செய்தது. பொன்னர், முத்தாயியின் ஓடத்தைக் கரை சேர்க்க மறுபடியும் நீந்த ஆரம்பித்த போது மற்றொரு ஆபத்து சங்கருக்கு காத்திருந்தது. 

பவளாயியின் ஓடத்தைத் தள்ளியவாறு நீந்தி வந்த சங்க ரின் கால்களிரண்டையும் ஒரு அகன்ற வாய் கவ்வியது! சங்கர் தனது கால்களை உதறினான். விடுபட்ட கால்களிலிருந்து பீறிட்ட ரத்தம், காவிரி நதியைச் சிவப்பாக்கியது. முதலை யொன்றின் பிடியில் சங்கர் சிக்கி விட்டான். அந்தக் காட்சி யைக் கண்ட பவளாயியும் மயக்கமுற்றவளாக ஓடத்தில் சாய்ந் தாள்.சங்கர், ஓடத்தை விடவில்லை. கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். முதலையுடன் போரிட்டான். நீருக்குள் இருக்கும் முதலை அதிகாரப் பதவியிலிருக்கும் மூர்க்கனைப் போல வெறியுடன் எதிர்க்கக் கூடியது அல்லவா? அதனால் சங்கரின் உயிருக்கு ஆபத்து நெருங்கி விட்டதைப் போலவே இருந்தது. 

ஓடத்தை, சங்கர் ஒருகணம் விட்டு விட்டு அந்தக் கண நேர இடைவேளையில் முதலையை ஓங்கி அதன் வயிற்றுப் பாகத்தில் குத்துவதும் முதலை, உடனே தண்ணீரில் ஒரு தரம் புரண்டெழுந்து மீண்டும் அவன் மீது பாய்ந்து தாக்குவது மான வெறியுணர்வுடன் போரிட்டது. ஆற்றின் நடுவே செங்குத்தாகக் காணப்பட்ட ஒரு பாறையின் இடுக்கில் பவளாயி யின் ஓடம் சிக்கிக் கொண்ட போது, சங்கர் சற்று நேரம் அந்த ஓடம் பாதுகாப்பாக இருக்கட்டுமென விட்டு விட்டு முதலையுடன் நீரில் கட்டிப் புரண்டு சண்டையிட்டான். அப் போது கொட்டிக் கொண்டிருந்த அவனது குருதியின் செந் நிறம் காவிரியின் ஒரு பகுதியை ஆக்ரமித்துக் கொண்டது. பாறையில் பாதுகாப்பாக சிக்கிய அந்த ஓடம், ஓரிரு விநாடி களில் காற்றின் வேகத்தில் விடுபட்டு அலைகளில் மோதித் தத்தளிக்கவே, சங்கர், முதலையை விட்டு விட்டு ஓடத்தைப் போய்ப் பிடித்துக் கொண்டான். சங்கரின் தாக்குதலால் சோர்ந்து போன முதலை, இதுதான் சமயமென அவன் மீது பாய்ந்து தனது கால்களால் அவனைப் பற்றிக் கொள்ளத் தயாரானது. அப்படியே பற்றியும் விட்டது. அடுத்ததாக முத லையின் வாய்க்குள் சங்கரின் உடல் சிக்கிக் கொள்ளப் போகும் போது, சங்கர் அதைத் தவிர்த்து விட்டு முதலையுடன் கடுமை யாகப் போரிட்டான். 

சிறிது நேரத்தில் அந்தச் சண்டை முடிந்து விடக் கூடும்; சங்கர் பிணமாக மிதக்கக் கூடும் என்ற பயங்கரமான சூழலில் வீரமலைச் சாம்புவன் மின்னல் போலப் பாய்ந்து, மாந்தி யப்பன் கையிலேயிருந்த வேலைப் பிடுங்கி முதலையைக் குறி பார்த்து வீசினான். 

வேல்பட்ட முதலை, சங்கருடன் மோதும் ஆற்றலை இழந்து சுருண்டு விட்டது. சங்கர் பவளாயியைக் கொண்டு வந்து கரை சேர்த்தான். 

சின்னமலைக்கொழுந்து பொன்னரையும் சங்கரையும் கட் டித் தழுவிக் கொண்டு, “தம்பிகளே! நீங்கள் இல்லாவிட்டால் என் செல்வங்களை இழந்திருப்பேன்’ என்று ஆனந்தக் கண் ணீர் வடித்தார். அவரது மனைவி சிலம்பாயியும் மகன் வையம் பெருமானும் முத்தாயி, பவளாயி இருவரையும் மயக்க நிலை யிலிருந்து மீட்டு அருகில் உள்ள ஒரு சிறிய மண்டபத்திற்குக் கொண்டு சென்றனர். சின்னமலைக்கொழுந்து பொன்னர் சங்கர் இருவரையும் பாராட்டியதோடு, வீரமலைச் சாம்பு வனையும் பெரிதும் புகழ்ந்தார். 

“தம்பி! நீங்கள் மட்டும் மலைப்பாம்பையும் முதலையையும் கொல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும்?’ என்று வியப் படைந்தார். வீரமலைச் சாம்புவனைத் தட்டிக் கொடுத்தார். 

மாந்தியப்பனுக்கு ஆத்திரம் கொப்பளித்தது. 

“யார் யாரையோ பாராட்டுகிறீர்கள்? என் கையில் இருந்த வேலைப் பிடுங்கித்தானே இவன் முதலையைக் கொன்றான்! அந்த வேல் மட்டும் இல்லாவிட்டால் முதலை செத்திருக்குமா? என்னால்தான் இந்தப் பொடியன் பிழைத்தான்!” என்று மீசையை முறுக்கிக் காட்டினான் மாந்தியப்பன். 

‘விர்’ரென்று அடித்துக் கொண்டிருந்த சூறைக்காற்று மெல்ல மெல்ல நின்றது. சின்னமலைக்கொழுந்து; பொன்னர், சங்கர், வீரமலைச் சாம்புவன் மூவரையும் பார்த்து, ‘தம்பிகளே! உங்கள் பெயர் என்ன? நீங்கள் யார்?” என்று அன்பொழுகக் கேட்டார். மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட னர். சங்கரின் கால்களில் முதலையின் கடியினால் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை செய்ய வேண்டுமென்று பறந்தான் பொன்னர்! அவனைப் போலவே வீரமலைச் சாம்புவனும் பறந்தான்! 

“கவலையே வேண்டாம். எங்கள் ஆரிச்சம்பட்டி மணியங் குரிச்சியில் அற்புதமான மருத்துவர் இருக்கிறார். அங்கே போய் சிகிச்சை செய்து கொள்ளலாம்” என்றார் சின்ன மலைக்கொழுந்து! 

“பிரார்த்தனை செய்து கொண்டபடி கரகம் விடும் திரு விழாவை நடத்தி விட வேண்டாமா? பிறகு அம்பாள் கோபத்துக்கு ஆளாக நேரும்!” என்று கலங்கினாள் சின்னமலைக் கொழுந்தின் மனைவி சிலம்பாயி. 

“நீயும் வையம்பெருமானும்; முத்தாயி பவளாயியை அழைத்துப் போய் ஆற்றங்கரையில் நின்றபடி கரகங்களை விட்டு விட்டு அம்பாளை வணங்கி வாருங்கள். நான் இவர்களை நமது ஆரிச்சம்பட்டி மணியங்குரிச்சி மாளிகைக்கு அழைத்துப் போகிறேன்’ என்றார் சின்னமலைக் கொழுந்து. 

சங்கரைக் கைத்தாங்கலாகப் பொன்னர் அழைத்துக் கொண்டு கிளம்பினான். வீரமலைச் சாம்புவனும் அவர்களுடன் புறப் பட்டான். சின்னமலைக்கொழுந்து; தனது ஆட்களைக் கூப் பிட்டு ரத வண்டியைச் சீக்கிரம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார். வண்டிகள் வந்து நின்றன. சின்னமலைக் கொழுந்து அந்த மூன்று வாலிபர்களையும் ஒரு வண்டியில் ஏற்றி விட்டு, அவர் இன்னொரு வண்டியில் ஏறப் போகும் போது மாந்தியப்பனின் அருகில் சென்று மரியாதையுடன் வணக்கம் தெரிவித்தார். அவனோ மமதையின் வடிவமாக அவருக்கு விடை கொடுத்தனுப்பினான். 

தாயாருடனும் தனயனுடனும் செல்லாண்டியம்மன் கோயி லுக்குப் புறப்பட்ட முத்தாயி, பவளாயி இருவரும் பொன்னர் – சங்கர் ஏறிச் சென்ற வண்டியைப் பார்த்தனர். 

செல்லாண்டியம்மன் கோயிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அந்தப் பெண்களின் பின்னழகைக் கண்டு மயங்கிய நிலையில் தன்னை மறந்த மாந்தியப்பன் ஒருக்கணம் அசைவற்றுப் போனான். 

பின்னர் அசைந்தான்! அந்த அசைவு அந்த அழகு மயில் களைப் பின் தொடர்வதற்கான நடையின் அசைவாக இருந் தது! தொடர்ந்தான்! 

தாயாருடனும் தனயனுடனும் ரத வண்டியில் செல்லாண்டி கோயிலுக்கு வந்த முத்தாயி பவளாயியை அங்கே குழுமி யிருந்த பெரியோர்களும் பெருமாட்டிகளும் உச்சிமோந்து வாழ்த்தி திருஷ்டி கழித்தனர். 

“சாஸ்திரத்துக்கு கரகம் விட்டால் போதும் அம்மா! ஆற் றில் மறுபடியும் ஓடத்தில் போக வேண்டாம். அம்மன் சன்ன திக்கு நேராக ஆற்றங்கரையில் நின்றபடி கரகம் விடுங்கள்” என்று கோயில் பூசாரியாரும் கூட அறிவுரை கூறினார். 

அவர்களும் அவ்வாறே செய்தனர். அம்பாளுக்கு தீபாரா தனை முடிந்து அனைவருக்கும் குங்குமம் வழங்கப்பட்டது. முத் தாயி, பவளாயி இருவரும் தங்களின் அம்மன் அலங்காரங் களைக் களைந்தனர். 

அலங்காரம் அதிகமில்லாமலும் அவர்கள் அழகின் பிம்பங் களாக இருப்பதை ஒரு தூணின் மறைவிலிருந்து ரசித்துக் கொண்டிருந்தான் மாந்தியப்பன். 

10. அர்ச்சனை யார்பெயருக்கு? 

கரகம் விடும் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காகக் காலையிலிருந்து பட்டினி விரதம் கடைப்பிடித்த முத்தாயி, பவ ளாயி இருவரும்; சூறைக்காற்றின் கொடுமையால் ஆற்றில் அனுபவித்த துன்பமும் சேர்ந்து கொள்ளவே மிகவும் துவண்டு போயிருந்தனர். 

அருமை மகள்கள் இருவரும் தப்பிப் பிழைத்தது அம்மனின் கருணையால்தான் என்று முழுமையாக நம்பிய சிலம்பாயி, செல்லாண்டியம்மன் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி வந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்க விழுந்து கும்பிட்டாள். 

செல்ல மகள் இருவருக்கும் இனிமையானதும் வளமானது மான வாழ்க்கை அமைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொள்ள கரகம் விடும் விழாவுக்கு வந்ததில்; தன் மகள்களுக்கு இருந்த பயங்கரமான கண்டம் விலகிவிட்டது என்றும் சிலம்பாயி பூரித்துப் போனாள். 

மாவிளக்கு ஏற்றிவைத்து சிலம்பாயி, முத்தாயி, பவளாயி மூவரும் கண்களை மூடியவண்ணம் செல்லாண்டியம்மனின் மூல விக்ரகத்துக்கு எதிரே நின்றனர். 

புயலுக்குப் பின் ஏற்பட்ட அமைதி காவிரிக்கரையிலே மட்டுமல்ல; அவர்களின் உள்ளத்திலும் குடிகொண்டிருந்தது. அந்த அமைதி தந்த மென்மையான சுகத்துடன் அம்மனை வழி பட்டது அவர்களின் இதயங்களுக்கு இதமாக இருந்தது. 

விழாக் காண வந்திருந்த பலரும் குடும்பம் குடும்பமாகக் கூடி ஆங்காங்கு மாவிளக்குகளை ஏற்றி வைத்து அம்மன் சன்னதியில் மெய்மறந்து கும்பிட்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். 

ஆரிச்சம்பட்டி மணியங்குரிச்சியார் வீட்டுப் பெண்மணிகள் என்பதால் கோயில் பூசாரியார் மெத்த மரியாதையுடன் அருகே வந்து சிலம்பாயியைப் பார்த்து வணக்கம் தெரிவித்து விட்டு, அம்மணி! அம்பாளுக்கு ஏதும் அர்ச்சனை பண்ண வேண்டு மென்றால் அடியேன் தயாராயிருக்கிறேன்” என்றார். 

“அர்ச்சனைக்கான எல்லா சாமான்களும் கொண்டு வந் திருக்கிறோம்” என்று புன்னகை ததும்ப விடையளித்த சிலம் பாயி, பக்கத்திலிருந்த வெள்ளிக்கூடையொன்றைக் காட்டினாள். 

“அப்படியா?’ என்று மேலும் வணக்கத்துடன் கேட்டுக் கொண்டே பூசாரியார் அந்த வெள்ளிக்கூடையைக் கையில் எடுத்தார். அதில் நாலைந்து தேங்காய்கள், நிறைய வெற் றிலை, பாக்கு, பூச்சரங்கள், பழங்கள் இருந்தன. 

“அம்மணி! யார் பேருக்கு அர்ச்சனை?” என்று பூசாரி, பவ்யமாகக் கேட்கவே; சிலம்பாயி ‘முத்தாயி, பவளாயி இரண்டு பெண் பேருக்கும் – வையம்பெருமான்; அதாவது என்பிள்ளை பேருக்கும் பண்ணுங்கள்’ என்றாள். 

அப்போது வையம்பெருமான் அங்கில்லை. அவன் ரதவண் டியின் அருகேயிருந்து குதிரைகளுக்குத் தீனி போடச் சொல்லி, அவற்றைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். 

தன் மகள்கள் பெயருக்கும் மகன் பெயருக்கும் அர்ச்சனை செய்யுங்கள் என சிலம்பாயி சொல்லி முடிப்பதற்குள்ளாக முத்தாயி குறுக்கிட்டு; 

”ஏம்மா, என்னைக்காப்பாற்றினாரே ஒருவர்; அவர் பெய ருக்கு அம்மனுக்கு ஓர் அர்ச்சனை பண்ணலாமே! என்றாள். 

சிலம்பாயியின் முகத்தில ஆச்சரியக்குறி மின்னலிட்டு எழுந் தது. இருந்தாலும் அவள் தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு; தன் மகள் ஒன்றும் தவறாக அப்படிச் சொல்லி யிருக்க மாட்டாள் என்ற உறுதியோடு; அந்த வாலிபனுக்கு நன்றி காட்டுவது முறைதானே என்ற எண்ணமுடன் பவளாயி யைப் பார்த்து, உன் அக்காள் சொல்வதைப் பார்த்தாயா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். அதையே தானும் சொல்ல நினைத்திருந்த பவளாயி, ஆமாம் அம்மா! நான் கூட சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன். என் ஓடம் கவிழாமல் காப்பாற்றி, எனக்காக முதலையிடமும் கடிபட்டாரே; அவர் பெயருக்குக் கூட ஒரு அர்ச்சனை செய்ய வேண்டும் அம்மா!” என்றாள். 

சிலம்பாயியின் விழிகள் அவளது இமைகளுக்கு வெளியே பிதுங்கி, கூட்டுக்குள்ளிருந்தவாறு தாய்ப்பறவையின் வரவு பார்க்கும் குருவிகளின் தலைகளைப் போல அங்குமிங்கும் சுழன்று அலைந்தன. அதற்காக அவளது முகமொன்றும் சிவந்து விடவில்லை. பற்களால் உதடுகளை அழுத்திக்கொண்டு சிலம் பாயி, மகள்களிருவரையும் பார்த்தாள் என்றாலும்கூட, அந் தப் பார்வையில் கோபத்தின் வீச்சு இல்லை. 

தான் பெற்றெடுத்த தங்கங்கள் இருவருமே நன்றியுணர் வோடுதான் அந்த வாலிபர்கள் பெயரால் அம்மனுக்கு அர்ச் சனை செய்யச் சொல்லுகிறார்கள் என ஏன் கருதக் கூடாது என்ற நினைவலைகளும் சிலம்பாயியின் நெஞ்சத்தை வருடிக் கொண்டிருந்ததால்; 

“அடடே! அந்தப் பிள்ளையாண்டான்கள் பெயர் தெரிய வில்லையே!’ என்று, தன் மகள்களைப் பார்த்துச் சொன் னாள். அப்பாவோ யாரோ அவர்களைக் கேட்டார்கள்… அவர்கள் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை” என்று இருவருமே ஏக காலத்தில் பதிலளித்தனர். ‘அதைச் சரியாகக் கவனித்து அவர்கள் பெயர் என்னவென்று தெரிந்து கொண்டிருக்கக் கூடாதா? அவ்வளவு அக்கறை கூட இல் லையா உங்களுக்கு?” என்று சிலம்பாயி செல்லமாகக் கடிந்து கொண்டாள். ‘ஏம்மா; அண்ணன் அங்கே இருந்தாரே அப் போது அவரைக் கேட்டால் தெரியுமே!” என்று பரபரப் புடன் யோசனை கூறினாள் முத்தாயி! 

அதற்குள் பவளாயி; ரத வண்டிக்கு சற்று தொலைவில் ஓடி வந்து நின்று கொண்டு, “அண்ணா! உன்னை அம்மா அவசரமாகக் கூப்பிடுகிறார்கள்” என்று குரலுயர்த்தினாள். 

குதிரைகளைத் தட்டிக் கொடுத்துப் பயணத்துக்குத் தயார் படுத்திக் கொண்டிருந்த வையம்பெருமான்; தாயார் அழைக் கிறாள் என்று தங்கை கூப்பிட்டதும் வேகவேகமாகக் கோயி லுக்குள் ஓடிவந்தான். 

“என்னம்மா? எதற்காகக் கூப்பிட்டீர்கள்?” 

“ஒன்றுமில்லை! உன் தங்கைகளை ஆபத்திலிருந்து காப்பாற்றிய அந்தப் பிள்ளையாண்டான்கள் நன்றாக இருக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் பெயரால் அம்பாளுக்கு அர்ச்சனை பண்ண வேண்டுமென்று ஆசைப்பட்டேன். 

தாயார்; மகனிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே முத்தாயியின் கண்களும் பவளாயியின் கண்களும் சிறகு முளைத்த வண்டுகளாகி ஒன்றையொன்று தழுவி ரீங் காரமிட்டன. பெற்ற பாசத்தின் அன்புப் பிணைப்பு எப்படித் தனது செல்வங்களைப் பாதுகாக்கிறது பார்த்தாயா என்று அந்த விழிகள் ஒன்றையொன்று கட்டியணைத்துக் கொண்டன. அந்த உணர்ச்சியில் அவர்களின் கன்னங்கள் மாங்கனிச் சிகப்பு வண்ணங்களாயின. பெருமூச்சாக வெளிப்பட்ட இன்ப மூச்சு இந்த இளஞ்சிலைகளின் மார்பகத்தை விம்மியெழச் செய்து காவிரிக்கரையிலோர் கவர்ச்சிப் போட்டியை நடத்தின. 

மறைந்து மறைந்து அவர்களறியா வண்ணம் அந்த உயி ரோவியங்களின் கொள்ளையழகைக் கண்டு போதையேறித் தடுமாறிக் கொண்டிருந்தான் மாந்தியப்பன். அந்த எழிலரசிகள் தங்களின் ‘இஷ்ட தெய்வங்கள்” ஏற்றுக் கொள்ள வேண்டுமே யென்ற கவலையுடன் தங்களையே “நைவேத்யம்” எனப் படைக்கத் தயாராயிருக்கும்போது; கோயிலுக்காகப் பூத்த மலர் களைக் கோவேறு கழுதை, துவைத்துக் கசக்கி மென்று தின் னத் துடிப்பது போல அவன் துடித்து நெளிந்தான். 

“தம்பி; அந்தப் பிள்ளையாண்டான்கள் பெயர் உனக்குத் தெரியுமா?” 

“தெரியாதேயம்மா!”

“உன் தங்கைகளை அவர்கள் காப்பாற்றியபோது கரை யோரத்தில் யாரோ அவர்களைப் பெயர் கேட்டார்கள். அவர் கள் என்ன சொன்னார்கள் என்று நானும் கவனிக்கவில்லை. இவர்களும் கவனிக்கவில்லை. நீயும் கவனிக்கவில்லையா?” 

“இல்லையம்மா!” 

“பிறகு எப்படி அந்தப் பிள்ளையாண்டான்கள் பெயருக்கு அம்பாளுக்கு அர்ச்சனை செய்வது?” 

“பிள்ளையாண்டான்கள் என்றே அர்ச்சனை செய்தால் போகிறது!” என்று சிரித்துக் கொண்டே வையம் பெருமான் சொன்னான். 

“அது எப்படியப்பா முடியும்?” என்று தாயார் தயங்கினாள். 

“இரண்டு பிள்ளையாண்டான்கள்! மூத்தவனை பெரியாண் டான் என்றும் இளையவனை சின்னாண்டான் என்றும் நாமே நினைத்துக் கொள்வது! அப்படியே அர்ச்சனை செய்வது!” 

“என்னடா தம்பி நீ சொல்வது? நாமே எப்படி ஒரு பெயரை நினைத்துக் கொள்வது? அவர்கள் அப்பா அம்மா வைத்த பெயர்தானே நிலைக்கும்!” 

“அந்தப் பெயர் தெரியாததற்கு என்னம்மா செய்ய முடி யும்? ஒன்று; நான் சொன்ன பெயருக்கே அர்ச்சனை செய்வது அல்லது அர்ச்சனை செய்யாமலே விட்டு விடுவது!” 

இப்படியொரு முடிவை வையம் பெருமான் சொன்னபோது முத்தாயி, பவளாயி முகங்கள் மாறிப் போயின. பவளாயி மட்டும் சமாளித்துக் கொண்டு, அண்ணா! அம்மா ஆசைப் பட்டுவிட்டார்கள். அதனால் அர்ச்சனை செய்வதற்கு ஏதாவது வழி சொல்வாயா? அதை விட்டு விட்டு அர்ச்சனையே வேண்டா மென்றால் அம்மாவுக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கும்?’ என்றவாறு பவளாயி தாயின் முகத்தைக் கடைக்கண்ணால் நோக்கினாள். 

தன் பெண்களின் உள்ளத்தை நன்றாகவே புரிந்துகொள்ள இப்போது நல்ல வாய்ப்பு சிலம்பாயிக்குக் கிடைத்து விட்டது. இருந்தாலும் தனக்குப் புரிந்துவிட்ட அந்த உண்மையை இலை மறை காயாகவே வைத்துக் கொண்டு பவளாயியைக் குறும் பாகப் பார்த்தாள். 

“எனக்கொன்றும் வருத்தமில்லை. பெயர் தெரியாவிட்டால் என்ன செய்ய முடியும்? சரி; பூசாரியாரே! என் பெண்கள் பெயருக்கும் பிள்ளை பெயருக்குமே அர்ச்சனையை செய்து முடியுங்கள்” என்றாள் சிலம்பாயி. ஆனால் வையம்பெரு மான் அதற்கு இணங்கவில்லை. 

“கொஞ்சம் இருங்கள் அம்மா… அதோ ஆதிசெட்டிப் பாளையம் தனக்கோடி செட்டியாரும் அவரோடு குன்றுடை யார் குடும்பத்தாரும் அம்மனுக்கு மாவிளக்கு போட்டுக் கொண் டிருக்கிறார்கள். அவர்களிடம் போய் அந்தப் பிள்ளையாண் டான்களின் பெயர் தெரியுமா என்று கேட்டு வருகிறேன்” என்று கூறியவாறு புறப்பட்டான். அதற்குள் பதறிப்போன சிலம்பாயி அவனைப் பிடித்து நிறுத்தி, ”இரு! இரு!” என்று கூச்சலிட்டு விட்டாள். 

”ஏன்; என்னம்மா?” என்று அதிர்ந்து போனான் வையம் பெருமான். சிலம்பாயி, தனது பதட்டத்துக்கு விளக்கமளித் தாள். 

“குன்றுடையார் குடும்பத்தார் என்று சாதாரணமாகச் சொல்லி விட்டாயே! 

“இல்லையம்மா! அவரும் ஒரு பெரிய காணியாளர் என்று எனக்குத் தெரியும். அந்தச் சிறப்புக்களோடுதான் இந்த விழா வுக்குக் கூட வந்திருக்கிறார். நான் ஒன்றும் அவரைச் சாதா ரணமானவராக மதித்துப் பேசவில்லை. 

“அதுவல்ல நான் சொல்வது! குன்றுடையார் குடும்பம் என்பது மாத்திரமே உனக்குத் தெரியும். அந்தக் குன்றுடையார் யார் என்று உனக்குத் தெரியாதல்லவா?” 

“யாரம்மா?” 

“உனது அத்தை தாமரைநாச்சியாரின் கணவர் நெல்லியங் கோடரை உனக்குத் தெரியுமா?'” 

“கேள்விப்பட்டிருக்கிறேன். அத்தையையும், அந்த மாமா வையும் நமது வீட்டை விட்டே துரத்திய அந்தக் கதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன் அம்மா!” 

“கேள்விப்பட்டிருக்கிறாய்! அவர்களை நீ பார்த்திருக்கிறாயா?” 

“அவர்களுக்கும் நமக்கும்தான்; செத்தால் வாழ்ந்தால் கூட உறவு இல்லையென்று ஆகிவிட்டதாக அப்பா அடிக்கடி சொல்வாரே, அப்படியிருக்கும் போது எப்படியம்மா பார்த் திருக்க முடியும்?” 

“இப்போதுதான் பார்த்திருக்கிறாயே!” 

“என்னம்மா சொல்கிறீர்கள்?” 

”உன் மாமா நெல்லியங்கோடர்தான் இப்போது குன்றுடையார். குன்றுடையாருக்குப் பக்கத்தில் இருக்கிற குலவிளக்குத் தான் உன் அத்தை தாமரைநாச்சியார்.” 

இதைக் கேட்டதும் வையம்பெருமான் மட்டுமின்றி முத்தாயி, பவளாயியும் கூட ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டனர். 

“நெருங்கிய சொந்தம் என்பார்களே; அதுபோல விலகிய சொந்தம் இப்போது நெருங்கிவிட்டது அம்மா!” என்று முகத் தில் மகிழ்ச்சி மலர தாயையே பார்த்துக் கொண்டிருந்தான். 

“தம்பி! நீ போய் அவர்களிடம் வேண்டுமானால் அந்தப் பிள்ளையாண்டான்களின் பெயர்களை விசாரிப்பது போல் அவர்களைப் பார்த்து விட்டு வா! தயவுசெய்து சொந்த பந்தம் பற்றி சொல்லி உன் தந்தையின் கோபத்துக்கு ஆளாகிவிடாதே! உன்னை மட்டுமல்ல; என்னையும் வெறுப்பார் உன் தந்தை! நம் குடும்பத்துக்கே பெரிய துன்பம் வந்து சேரும்!” இவ்வாறு எச்சரித்தாள் சிலம்பாயி! 

“சரியம்மா! என் அத்தை மாமா இருவரின் முகத்தை மட் டும் பார்க்கிற பாக்கியத்தைப் பெற்று வருகிறேன்! தங்கை களும் என்னுடன் வரட்டும் அம்மா! அவர்களும் அவர்களைப் பார்க்க ஆசைப்படுவார்கள் என்று நினைக்கிறேன்!’ என்ற வையம்பெருமான், முத்தாயி பவளாயி இருவரையும் நோக்கினான். 

“சரியம்மா! நீங்களும் அண்ணனுடன் போய்விட்டு உடனே திரும்புங்கள்’ என்று விடை கொடுத்து அனுப்பினாள் சிலம்பாயி! 

கோயில் சன்னதியில் அமைக்கப்பட்டிருந்த விழாப் பந்தலில் தனது ஆளம்புகளுடன் குன்றுடையானும் தாமரைநாச்சியும் அம்மனுக்கு மாவிளக்கேற்றும் காரியத்தில். மனமொன்றி ஈடுபட்டிருந்தனர். 

சற்று முதிர்ந்த தோற்றம் குன்றுடையானுக்கென்றாலும் முகத் தில் இருந்த பொலிவு மாறவே இல்லை. கணவனுடன் இணைந்து விவசாயப் பணிகளில் ஓய்வின்றி ஈடுபட்டு உழைத்ததின் அடையாளமாக தாமரையின் மாநிற மேனி கருத்திருந்தது எனி னும் அந்தக் களைபொருந்திய முகம் அப்படியே இருந்தது. இருவரும் சுறுசுறுப்பாகக் காணப்பட்டனர். அவர்களுக் கருகே பொன்சரடுகளைக் கழுத்திலும் – கடகங்களைக் கைகளிலும் மாட்டிக் கொண்டு பத்து விரல்களிலும் கணையாழி கள் ஒளிவிட ஒருவர் இருந்தார். அவர்தான் ஆதிசெட்டிப் பாளையம் தனக்கோடி செட்டியார். அவரும் பயபக்தியுடன் அம்மனை வழிபட்டுக் கொண்டிருந்தார். 

அவர்களை நெருங்கி வையம்பெருமான், முத்தாயி, பவ ளாயி மூவரும் வந்து நின்றனர். வணக்கம் என்ற குரல் கேட்டுக் குன்றுடையானும் தாமரைநாச்சியும் திரும்பிப் பார்த் தனர். அவர்களைப் பார்த்த உடனே தாமரைநாச்சியின் இத யம் படபடவென அடித்துக் கொண்டது. கண்கள் கலங்கின. கைவிரல்கள் நடுங்கின. உடலே ஆடிற்று. 

அவளுக்குத் தெரிந்து விட்டது; தனது அண்ணன் சின்ன மலைக் கொழுந்தின் மக்கள்தான் என்று! 

கரகம் விடும் திருவிழாவுக்கு வந்த ஊரார் அனைவரும் கேள்விப்பட்டது போல அவளும் கேள்விப்பட்டதில் வியப்பிருக்க முடியாதல்லவா? 

சின்னமலைக்கொழுந்தின் பெண்கள் கரகம் விடும்போது காவேரியாற்றில் சிக்கிக் கொண்டதையும் – அவர்களை இரண்டு வீர வாலிபர்கள் காப்பாற்றிக் கரை சேர்த்ததையும் அந்தத் திருவிழாக் கூட்டத்தில் அவர்கள் தெரிந்து கொள்ளாமல் இல்லை. இருப்பினும் இரு குடும்பங்களுக்கிடையே இருபது இருபத்தைந்து ஆண்டுகால பகை வளர்ந்து வேர்விட்டுத் தழைத்துப் போயிருப்பதால் தாமரைநாச்சியார்; அதனை ஒரு செய்தியாகக் கேட்டு திடுக்கிட்டுப் பிறகு ஆறுதலடைந்தாளே தவிர எந்தவிதத் தவிப்பும் கொள்ளவில்லை. 

ஆனால் இப்போது தனது அண்ணன் மக்கள் எதிரில் நிற்கிறார்கள். பகையுணர்வையெல்லாம் தாண்டியும் மிதித்தும் கொண்டு பந்தபாச உணர்வு தலைதூக்கி வந்து அவளை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது. 

திருமண நாளன்று தன்னையும் தன் கணவரையும் வெளியே விரட்டி வேடிக்கை பார்த்தான் அண்ணன் அந்த வேதனை எரிமலையின் நெருப்புக் குழம்பைக் கூட அணைத்து விட்டு; பாசமெனும் பனிக்கட்டி மழை பொழிகிறதே இப்போது! 

தாமரை நாச்சியாரின் நிலைகண்டு குன்றுடையான்; அவள் தோளைக் குலுக்கி – 

”உணர்ச்சி வசப்படாதே தாமரை! உனக்கு ஏற்கெனவே நெஞ்சு வலி! இரண்டு நாளைக்கு முன்பு கூடக் கஷ்டப்பட்டாய்! அதை மறந்து விடாதே! எதையும் சாதாரணமாக எடுத் துக்கொள்!” என்றான். 

தாமரைநாச்சியோ, தன்னை மறந்து முத்தாயி பவளாயியை யும் வையம்பெருமானையும் தழுவிக் கொண்டு உச்சிமோந்து முத்தமீந்தாள். 

அவள் கண்களில் பெருமழை கொட்டியது! அவ்வாறே அந் தப் பெண்களும், வையம்பெருமானும் இதயம் கனத்துப் போய்த் தள்ளாடினர். பாச உணர்ச்சியின் ஆனந்தக் கூத்தில் பல ஆண்டுக்கால வாழ்க்கை வரலாற்று ஏடு புரண்டு கொண் டிருந்தது. வாய் பேசாமலே நெஞ்சங்கள் ஒன்றையொன்று நலம் விசாரித்துக் கொண்டன. குன்றுடையான் வையம்பெரு மானைக் கட்டியணைத்துக் கொண்டு முத்தாயி, பவளாயி இரு வரின் உச்சந்தலையில் முத்தமீந்தான். பிறகு தன்னருகே அசை வற்று நின்று அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்த தனக்கோடி செட்டியாரைப் பார்த்து; 

செட்டியாரைப் பார்த்து; ‘செட்டியார் அய்யா! இவர்கள் சின்னமலைக் கொழுந்தின் செல்வங்கள்! என் மருமகப்பெண்களும், மருமகப்பிள்ளையும்!” என்றான். 

“ஓ! அப்படியா?… உங்கள் பிள்ளைகள் மட்டும் உயிரோடு இருந்தால் இந்தப் பெண்களுக்குத் தாலி கட்டி, தாமரைநாச்சி யம்மையின் சபதத்தை நிறைவேற்றியிருப்பார்கள்” என்று வேதனை கலந்த கேலியாகச் சொன்னார் தனக்கோடி செட்டியார். 

“அதையெல்லாம் இப்போது பேசாதீர்கள். எல்லாம் நாம் நினைத்தபடியா நடக்கிறது?” என்று அங்கலாய்த்துக் கொண்டு பெருமூச்சு விட்டான் குன்றுடையான். 

தாமரை நாச்சியார் மீண்டும் தனது கண்கள் அருவியாவதை இயன்றவரை தடுத்துக் கொண்டு, 

வையம்பெருமானையும், முத்தாயி, பவளாயி இருவரையும் பார்த்து, ‘சரி நீங்கள் போய் வாருங்கள். உங்கள் தாய் தந்தையர் பார்த்தால் வீண் வம்பு” என்றாள். 

“போகிறோம் அத்தை! உங்களிடம் ஒன்று தெரிந்து கொள்ள வந்தோம். உங்களுக்கோ, மாமாவுக்கோ, செட்டியாருக்கோ தெரிந்தால் சொல்லுங்கள்!” என்றான் வையம்பெருமான். 

”என்ன?” என்று குன்றுடையான் இடைமறித்தான். 

“என் தங்கைகளைக் காப்பாற்றினார்களே; அந்த வாலிபர் கள், அவர்கள் நலமோடு வாழ அம்மனுக்கு ஒரு அர்ச்சனை செய்ய அம்மா விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் பெயர் கள் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா என்று கேட்கத் தான் வந்தோம்” என்று பதிலளித்தான் வையம்பெருமான். 

“நாங்கள் கூட விசாரித்தோம்; யார் அந்தப் பிள்ளையாண்டான்கள் என்று! யாருக்குமே தெரியவில்லை!” என்றான் குன்றுடையான். 

– தொடரும்…

– பொன்னர்-சங்கர் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 17-07-1987, குங்குமம் இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *