கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: February 21, 2025
பார்வையிட்டோர்: 5,186 
 
 

(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 46-50 | அத்தியாயம் 51-55 | அத்தியாயம் 56-61

51. நன்றியுள்ள ஜீவன்

தங்கள் சூழ்ச்சித் திறனுக்கு ஒவ்வொரு கட்டமாக வெற்றி கிடைத்து வருகிறது என்பதை எண்ணி எல்லையிலா மகிழ்ச்சி யில் திளைத்துவிட்ட செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தியப் பனும் அந்த மகிழ்ச்சியை நிலத்தடி நீர் போல மறைத்துக் கொண்டு வெளியே வெடித்துக் கிடக்கும் பூமியைப் போல வேதனையை முகத்தில் தேக்கிக் கொண்டு தலையூர்க் காளி யிடம் இந்தப் பூனைகளும் பாலைக் குடிக்குமா என்பதுபோல வஞ்சக வலையை மிகச் சாதுர்யமாகப் பின்னத் தொடங்கினர். 

“அரசே! தங்கள் மடலில் தாங்கள் தந்துள்ள விளக்கத்திற்கு மேலாக நானும் எவ்வளவோ விளக்கங்களை பொன்னரிட மும் சங்கரிடமும் அளித்தேன். போர் புரிந்து தலையூர்க் காளியை வீழ்த்தி விட்டுத் தலையூர் நாட்டைத் தரைமட்டமாக்கு வதைத் தவிர தங்களுக்கு வேறு குறிக்கோளே இல்லையென்று அந்த சங்கர் வாளையோங்கிக்கொண்டு என் மீது பாய்ந்தேவிட் டான். பொன்னர் பொல்லாதவனாக இருந்தாலும் பொறுமை யைக் கடைப்பிடிப்பவனைப்போல நடிப்பதில் கெட்டிக் கார னல்லவா, அதனால் அவன் சங்கரைத் தடுத்துவிட்டான். தூது வந்தவரைக் கொல்வது தர்மமல்ல என்று பாரதத்துத் தர் மனைப் போலத் தம்பிக்கு உபதேசம் செய்த அவன், தனக்கேயுரிய ராஜதந்திரத்தோடு என்னிடம் என்ன பேசி னான் தெரியுமா?” 

மாந்தியப்பனின் வார்த்தைகளில் சிலந்தி வலை எனத் தெரியாது சிக்கிக்கொள்ளும் பூச்சியைப் போல தலையூர்க் காளி மயங்கிவிட்ட காரணத்தால், “என்ன பேசினான் அந்தப் பொன்னர்?’ என்ன பேசினான்?” என்று ஆவலுடன் கேட்டான். 

“என்ன பேசினானா? அதைச் சொல்லவே எனக்கு நெஞ்சு பதைக்கிறது! என்னைப் பற்றியும் அப்படி ஒருவனுக்கு நினைக்கத் தோன்றியதேயென்று பதறிப்போய் விட்டேன்! சொர்க்கலோகத்தையே உன் வாசஸ்தலமாக அமைத்துத் தருகிறேன் சுந் தரி -நீ எனக்கு ஒரே ஒரு தடவை சுகம் கொடு போதும் என்று பத்தினிப் பெண் ஒருத்தியிடம் பல் இளிக்கும் பேய் மனி தனைப் போல அந்தப் பொன்னர், தலையூர் மன்னன் மீது நானும் என் தந்தையும் கொண்டிருக்கும் ராஜ விசுவாசத்துக்கே அறைகூவல் விடுத்தான்!” 

“ஏனப்பா சுற்றி வளைக்கிறாய்? எனக்கு உடம்பெல்லாம் சூடேறுகிறது! நமது ராஜபக்தியை சோதிக்கிற அளவுக்கு அப்படி என்னதான் அறைகூவல் விடுத்தான்? சீக்கிரம் சொல்!” என்று சீறினார் செல்லாத்தாக் கவுண்டர். 

ஒழுங்காக ஒத்திகை பார்க்கப் பட்டுத் தன் முன்னிலையில் நடை பெறுகிற நாடகம் என்பதை உணர முடியாத காளி மன்னன், மாந்தியப்பனிடமிருந்து என்ன விபரம் வரப்போ கிறது என்பதை உணர்ச்சி பொங்கிடக் கூர்ந்து நோக்கினான். 

“மாந்தியப்பா, நீயும் உன் தந்தை செல்லாத்தாக் கவுண்டரும் யார்? நாமெல்லாம் பங்காளிகள்தானே! நமது பங்காளிக் காய்ச்சலால் ஒன்றாக இருந்து ஓங்கிச் செழித்த கோளாத்தாக் கவுண்டர் குடும்பம் எங்கள் தந்தை குன்றுடையார் காலத்தில் வளர்ந்த பகையால் எப்படியெல்லாமோ சிதறிப் போய் விட் டது! இனிமேலாவது நடந்ததை மறந்து செயல்படுவோம்! நீயும் உன் தந்தையும் எங்களோடு சேர்ந்து விடுங்கள்! வளநாட்டை யம் யும் அதன் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளையும் நாம் பிரித்துக் கொண்டு ராஜ பரிபாலனம் செய்வோம் நாம் ஒன்றாக இணைந்துவிட்டால் அந்தக் தலையூர்க் காளியையும் அவனது குலத்தையும் சாம்பல் மேடாக ஆக்கிவிடலாம் – என்ன சொல்லுகிறாய்?”என்று அந்தப் பொன்னர் என்னைப் பார்த்துக் கேட் டான் மன்னா, கேட்டான்! 

மகன் இதைச் சொன்னதும் அக்கினி குண்டத்தில் தூக்கி வீசப்பட்டவர்போல செல்லாத்தாக் கவுண்டர் துடிதுடித்து, தவிதவித்து, “அடப்பாவி! நம்மை நன்றி கெட்ட ஜென்மங்கள் என்றா அந்தப் பொன்னன் நினைத்துக் கொண்டான்? நீ ஒரு கோழை. எதுவும் செய்யாமல் திரும்பி விட்டாய்! நானாக மட்டும் இருந்திருந்தால் அந்தப் பொன்னரின் நாக்கை அந்த இடத்திலேயே அறுத்து நாய்க்கு விருந்தாக்கியிருப்பேன்!” என்று கர்ச்சனை செய்தார். 

இருவரும் சேர்ந்து தலையூர்க் காளியை யோசிப்பதற்கே விடவில்லை. 

“சரி! என்னதான் அவர்கள் முடிவாகச் சொன்னார்கள்?” எனக் காளி மன்னன் மீசையைத் திருகிக்கொண்டே கேட்டான். 

“அவர்கள் கூறிய சொற்களை அப்படியே கொட்டி விடு கிறேன் இங்கே! அந்தக் கர்ணகடூரமான சொற்களுக்கு சொந் தக்காரர்கள் பொன்னரும் சங்கரும் என்றாலுங்கூட, அவற்றை இங்கேயொரு முறை சொல்வதற்கே என் மனம் இடம் தர வில்லை. இருந்தாலும் அவர்களின் வெறி உணர்வு எந்த அளவு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டுமல் லவா? அதற்காகக் கூறுகிறேன்! தலையூர்க்காளிக்கு எவ்வளவு தடித்தனம் இருந்தால் எங்கள் தளபதி வீரமலையைச் சிறை யில் போடுவான்? எவ்வளவு திமிர் இருந்தால் மாயவரைக் கொன்றது மல்லாமல் அவர் சவ அடக்கத்திற்கு வா என்று அழைப்பு விடுவான்? எங்கள் வீரத்தை கேலி செய்கிறானா காளி மன்னன்? அவனுடன் இனி சமரசப் பேச்சுக்கே இ மில்லை! அவன் ஒரு கோழை என்பது எங்களுக்குத் தெரியும்! யுத்த களத்தில் எங்களை எதிர்கொள்ளும் ஆற்றலோ துணிச் சலோ இல்லாத மண்டூக மன்னன்தான் தலையூரான் என்பதும் எங்களுக்குப் புரியும்! எங்கள் வாள் முனையின் முன்னால் ஆமையைப் போல அடங்கி ஒடுங்கி உயிர்ப் பிச்சை கேட்கப் போகும் அந்த உலுத்தனிடம் சொல் போருக்குக் கிளம்பும் போதே மறந்துவிடாமல் வாய்க்கரிசி வாங்கிப் போட்டுக் கொண்டு கிளம்பச்சொல்! களத்தில் அவனை ஒரு கணத்தில் முறியடிப்போம் – சிறை பிடிப்போம் – தலைமுடியைச் சிரைக் கச் செய்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்துவோம் – கழுதை மீது ஊர்வலம் விடுவோம் அதைப் பார்த்து ஊரார் கெக்கலி கொட்டிச் சிரித்தபிறகு அவன் உடலைக் கூறாக்கி வளநாட்டுத் தெருக்களில் வற்றலாகக் காய வைப்போம் என்றெல்லாம் அந்தப் பொன்னரும் சங்கரும் இடிஇடியெனச் சிரித்து என் னிடம் சொன்னபோது என் நரம்பு மண்டலமே உலைக்கள மாகக் கொதித்தது! இருந்தாலும் தூதனாகச் சென்ற நான் தலையூர் மன்னனின் அனுமதியில்லாமல் எதுவும் விபரீதமாகச் செய்துவிடக் கூடாதேயென்றுதான் அமைதியாக வந்து விட் டேன். இல்லையேல் என்னுயிரை ஒரு பொருட்டாக மதிக் காமல் அந்தப் பொன்னர் – சங்கர் இருவரில் ஒருவர் தலையை யாவது உருட்டி விட்டுத்தான் நான் பிணமாகியிருப்பேன்.” 

மாந்தியப்பனின் தத்ரூபமான நடிப்பைக் கண்டு தந்தையே வியந்து போனார்! நயவஞ்சகம் கக்கிடும் வித்தையில் தன்னை யும் மிஞ்சிவிட்டானே பிள்ளையென்று அகங்குளிர்ந்தார் கவுண்டர்! ஆனாலும் கொதிப்படைந்திருப்பதாகக் காளி மன்னனிடம் காட்டிக் கொண்டார்! காளி மன்னன் கால்கள் இப்போது நிலத்தில் பதிய வில்லை நெருஞ்சில் முள் காட்டில் அடி வைத்தது போல அங்குமிங்கும் உலாவினான்! நெஞ்சமோ மூங்கில் காட்டுத்தீப்போல வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது! 

“கோழையென்றனர் என்னை! கோட்டைகள் பலவற்றைத் தவிடு பொடியாக்கிய இந்தத் தலையூரானைப் பார்த்துக் கோழை யென்றனர். மாளிகைகளை மண்மேடாக்கி பல சிற்றரசுகளை மண்டியிடச் செய்த என்னை மண்டூகமென இகழ்ந்தனர். அரண் மனைகளைப் பந்தாடி அற்புத வெற்றிகளை ஈட்டிய நான் ஆமையாம் ஓங்கிய வாளைக் கீழே போடாமல் ஓராயிரம் வீரர்களை உயிரற்ற சடலங்களாக்கிப் பல போர்க்களங்களில் ரத்த வெள்ளத்தில் தெப்பங்களாக மிதக்கவிட்ட நான் உலுத்தனாம்! என்னை முறி யடிப்பர் – சிறை பிடிப்பர் – கழுதையில் ஏற்றுவர் கண்ட துண்டமாகச் சிதைப்பர் தலையூர்க் காளியின் தடந்தோள் வலிமை புரியாத அந்தத் தருக்கர்களுக்குத் தக்க பாடம் புகட் டியே தீர வேண்டும்! தர்ம நியாயப்படி நடந்து கொள்ள நினைத்தது என் தவறு! இனி யோசனைக்கே இடமில்லை! போர்! போர்! போர் நடந்தே தீரும்! 

அப்போதும் செல்லாத்தாக் கவுண்டர், முதிர்ந்த அனுபவத்தின், முத்திரையைப் பொறிப்பவர் போல, தலையூர்க் காளி யைப் பார்த்து, “போர் தவிர்க்க முடியாதது என்றாலும் அதற்கு சற்று அவகாசம் எடுத்துக் கொண்டு ஆயத்தமாவது நல்லதல்லவா? எதற்கும் இந்த விபரங்களைச் சோழமன்ன னுக்குச் சொல்லியனுப்பி அவனைத் தலையிடச் செய்தால் நல மெனக் கருதுகிறேன். ஒருவேளை சோழ மன்னன் அக்கள தேவனின் படைத்துணையைக்கூட நாம் பெறக்கூடிய வாய்ப் பும் கிட்டுமல்லவா?” என்றார் சகுனித்தனத்துடன்! 

அதை உடனே மறுத்து மாந்தியப்பன், காளி மன்னனின் முன்னால் வந்து நின்று இந்த விஷயத்தில் என் தந்தையின் நிதானத்தை ஏற்றுக் கொள்ளவே கூடாது! என்னதான் இருந் தாலும் சோழ மன்னன், பொன்னர் சங்கரின் பக்கம்தான் இருப்பான். இன்னமும் அவனுக்கு இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தெரிந்திருக்காது. ஒரு வேளை பொன்னர் – சங்கர்,சோழனுக் குச் செய்தி அனுப்பி அவனது படைகளையும் இணைத்துக் கொண்டு தலையூரைத் தாக்கிட முந்திக்கொள்ளவும் கூடும். எனவே நாம் ஒருக்கணம் கூடத் தாமதிக்காமல் இப்போதே நமது படைகளுடன் வளநாட்டை நோக்கிச் செல்லவேண்டும். 

“பொன்னரும் சங்கரும் வளநாட்டுக் கோட்டைக்குள்ளிருக் கும் போதே அவர்களை வளைத்துவிட வேண்டும். அவர்கள் கோட்டையிலிருந்து போர்க்கோலம் பூண்டு படைத்தலைமை யேற்றுப் புறப்படுவதற்குள்ளாக நமது படைகள் அவர்களது கோட்டையை முற்றுகையிட்டாக வேண்டும்” என்று, எரிந்து கொண்டிருக்கிற பஞ்சுக் கிடங்கில் கடுகு மூட்டையை அவிழ்த் துக் கொட்டுவது போலத் தன் பணியை செய்து முடித்தான். 

“முழங்கட்டும் போர் முரசம்! விற்படை வீரர் படைக்கு நான் தலைமையேற்கிறேன்! தேர்ப்படைக்கு செல்லாத்தாக் கவுண்டர் தலைமையேற்கட்டும்! வாட்படைக்கு மாந்தியப்பன் தலைமை! இப்போதே நமது படைகள் தயாராகட்டும் வளநாட்டுக் கோட்டையை இன்றைக்கே வளைத்து அழிப்போம்!” எனச் சிம்ம கர்ச்சனை செய்துகொண்டே, அந்தக் கூடத்திலிருந்த போர் முரசத்தைத் தலையூர்க் காளி அடித்து முழக்கினான். 

முரச ஒலி கேட்ட விற்படை, வாட்படை, தேர்ப்படை வீரர் கள் தலையூர்க் கோட்டை முகப்பில் புற்றீசல் என மொய்த்து விட்டனர். தலையூர்க் காளிக்குத் தக்க தருணத்தில் உண்மை நிலை உணர்த்தக் கூடிய அந்த ஒற்றன் ஒரு குதிரையை அதிவேகமாக ஓட்டிக் கொண்டு, தனது அரசனைக் காணவும் – செல்லாத்தாக் கவுண்டரும், மாந்தியப்பனும் செய்துள்ள சூழ்ச்சிகளை விளக்கவும் அப்போதுதான் அரண்மனை வாயிற் புறத்தில் வந்து இறங்கினான். 

வாயிற்படிகளேறி காளி மன்னன் இருக்கும் கூடத்தை நோக்கி அவன் அவசரமாகச் சென்று கொண்டிருப்பதை, அப்போதுதான் போருக்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக அரசனிடம் விடைபெற்றுத் திரும்பிக் கொண்டிருந்த செல்லாத் தாக் கவுண்டரும் மாந்தியப்பனும் கவனித்து விட்டனர். 

செல்லாத்தாக் கவுண்டர், மாந்தியப்பனிடம் ஜாடை காட்டி னார். உடனே இருவரும் அந்த வழியில் உள்ள பெருந்தூண் ஒன்றில் மறைந்து கொண்டனர். 

”மாந்தியப்பா! இவன் காளி மன்னனைச் சந்தித்துவிட்டால் எல்லாமே தலைகீழாக மாறினாலும் மாறிவிடும்! நமது சதித் திட்டங்களை இந்தப் படுபாவி ஒற்றன் அறிந்திருக்கக்கூடும்! அவற்றை காளியிடம் சொல்லிவிட்டால் காரியம் கெட்டுவிடும். நமக்கும் ஏதாவது விபரீதம் ஏற்படலாம். அதனால் இவனை அரசனிடம் போகாமல் இங்கேயே தடுக்க வேண்டும்” என்று செல்லாத்தாக்கவுண்டர் சொல்லி, வாய் மூடுவதற்குள், மாந் தியப்பன் தனது வாளை உருவி ஒற்றனின் நெஞ்சில் ஆழ மாகப் பாய்ச்சிவிட்டான். அவன் அலறக்கூட முடியாமல் வாயைப் பொத்தி,உயிரையும் முழுமையாகப் போக்கிட கழுத் தையும் நெரித்து – தூண்களின் மறைவுகளில் ஒரு மூலையில் கிடத்திவிட்டு, எதுவும் தெரியாதவர்கள் போல அங்கிருந்து சென்றுவிட்டனர். 

காளி மன்னனும் போர்க்கோலம் பூணப் புறப்பட்டுவிட் டான். புதையல் ஒன்று தானாகப் பூமி வெடித்து வெளியே வரும் பொழுது திடீரென மற்றொரு பூகம்பம் ஏற்பட்டு அந்தப் புதையல் பாதாளத்திற்குப் போய்விட்டது போல, காளி மன்னனுக்கு அவனது நம்பிக்கைக்குரிய ஒற்றன் மூலமாகக் கிடைக்கவேண்டிய உண்மைத் தகவல் ஊமை யாகவே ஆகிவிட்டது! தலையூர்க் காளி முரசுகொட்டி அறி வித்ததுபோல, விற்படை, வாட்படை, தேர்ப்படைகளுக்கு மூவரும் தலைமை தாங்கினர். கூர்மையான கணைகளை, அம்புக் கூட்டில் நிரப்பிக் கொண்டு வில்லேந்திய வீரர்கள் குதிரைகளில் அமர்ந்து புறப்பட்டனர். வாள் வீரர்களும் தூக்கிப் பிடித்த வாட்களுடன் குதிரைகளில் அணி வகுத்தனர், ஆவேசக் கூச்சலிட்டுக் கொண்டு! இரு படைகளுக்குமிடையே செல்லாத்தாக் கவுண்டர் தலைமையில் தேர்ப்படை சென்றது! 

வளநாட்டுத் தளபதி வீர மலையோ தலையூர்ச் சிறையில்! மாயவர் உடலோ தலையூர்க் கோட்டையில் ஒரு பிண அறை யில்! செம்பகுலன் சூழ்ச்சியில் சிக்கிய பொன்னரோ, வெள் ளாங்குளக் கரையில்! அவன் தம்பி சங்கரோ சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஒரு இருட்குகையில் ! தங்கை அருக்காணித் தங்கமோ பெரிய காண்டியம்மன் பாதங்களில்! வளநாட்டுக் கோட்டையைச் சூழ்வதற்குத் தலையூர்ப் படைகளோ வழியில்! 

இந்தப் பயங்கரமும் – பரிதாபமும் நிறைந்த சூழ்நிலையில் ஒரு குதிரை மட்டும், காடு கரம்பு வயல் வரப்பு – கல் முள் என்று பாராமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மீது ஆள் யாரும் இல்லை. அதுவே ஓடிக்கொண்டிருக்கிறது. சங்கரின் குதிரைதான் அது தனது தலைவன் சிறைப்பட்டிருக்கும் செய்தியைத் தனது வருகையினால் உணர்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு அது வளநாடு நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறது. பாறைகள் அடர்ந்த ஒரு இடத்தில் சிறியதோர் கால்வாயைத் தாண்டிச் செல்ல முனையும்போது, அந்தக் குதிரை கீழே விழுந்து முன்னங்கால்களில் இரத்தம் கசிகிறது! அதை அந்தக் குதிரை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஓடிக்கொண்டேயிருக்கிறது. மனிதர்களுக்கு ஆறாவது அறிவு ஒன்று இருக்கிறது. அந்த ஆறாவது அறிவுக்குப் பதிலாக வாயில்லாப் பிராணிகள் சில நன்றி செலுத்தும் ஓர் உன்னதப் பண்பைப் பெற்றிருக்கின்றன அல்லவா; அதற்கு எடுத்துக் காட்டாகத்தான் அந்தக் குதிரை தனது கடமையைச் செய்திடத் துடித்தது. சில குறுகிய வழிகளில் அதனால் ஓட முடிய வில்லை.அடிப்பட்ட கால்களில் வலி வேறு குடைந்தெடுத்தது. இருந்தாலும் அந்த நன்றியுள்ள மிருகம் சோர்ந்து போய்விட வில்லை. ஓடிற்று,ஓடிற்று, ஓடிக் கொண்டேயிருந்தது. 

வளநாட்டுக் கோட்டை முகப்பின் கொடி அசைவது குதிரை யின் கண்களுக்கு வெகு தொலைவிலேயே தெரிந்து விட்ட தால் – வந்து சேர வேண்டிய இடத்துக்கு வெகு விரைவிலேயே வந்துவிட முடியும் என்ற நம்பிக்கை அதற்குண்டாயிற்று. ஆனால் அதன் உடல்நிலை அதற்கு இடங்கொடுப்பதாக இல்லை. மூச்சைப் பிடித்துக்கொண்டு – வலியைப் பொறுத்துக் கொண்டு தனது பணியை முடித்த பிறகே கீழே விழ வேண் டும் என்று அது எண்ணிச் செயல்பட்டது. 

பெரியகாண்டியம்மன் கோயிலைத் தாண்டி இரண்டொரு கல்தொலைவு சென்றால் வளநாட்டுத் தலைநகரின் எல்லையைத் தொட்டுவிடலாம். ஆனால் அம்மன் கோயில் அருகே வரும் பொழுதே குதிரையின் கால்கள் ஒன்றோடொன்று பின்னத் தொடங்கி விட்டன. 

சற்று நின்று பார்த்தது! பெரிய காண்டியம்மன் ஆலயத்தைக் கண்டதும் அதற்கு ஒரு புது யோசனை வந்தது போலும்! அந்தக் கோயிலை நோக்கி மெதுவாகத்தான் அதனால் நடக்க முடிந்தது. கோயிலருகே, அதுவும் கோயில் வாசற்படியருகே வந்துவிட்ட அந்தக் குதிரையை அருக்காணியுடன் அம்மன் கோயில் தொண்டு செய்யும் அவளது தோழிகள் சிலர் பார்த்து விட்டனர். திடுக்கிட்டுப் போய்க் குதிரையிடம் ஓடி வந்தனர். குதிரை அவர்களை நோக்கித் தலையைக் குலுக்கிற்று! கால் களைப் பூமியில் ஓங்கி ஓங்கி உதைத்தது! தோழிகளில் ஒருத்தி கோயிலுக்குள் ஓடினாள். அடுத்துச் சில நொடிகளில் அருக் காணித் தங்கம் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந் தாள். அதற்குள் குதிரை கீழே விழுந்துவிட்டது! ”அண்ணா!” எனக் கதறிக்கொண்டு, குதிரையின் கழுத்தைக் கட்டிப் பிடித் தாள். குதிரையின் கண்களிலிருந்து பொல பொலவென நீர் கொட்டியது. 

அருக்காணிக்குப் புரிந்துவிட்டது, அண்ணன் சங்கருக்கு ஏதோ ஆபத்தென்று! குதிரையினால் பேச முடியாது என் பதைக் கூட மறந்து விட்டு அண்ணா எங்கே? சங்கர் அண்ணா எங்கே? என்று அழுது கொண்டே கேட்டாள்! குதிரை அவளை நிமிர்ந்து பார்த்தது! கண்ணீர் நிற்கவில்லை அந்த நன்றியுள்ள ஜீவனுக்கு! 

“சங்கர் அண்ணா என்ன ஆனார்? அவர் இருக்குமிடத்தைத் தயவு செய்து காட்டிவிடு!’ என்று குதிரையைத் தழுவிக் கொண்டு அருக்காணி, தேம்பித் தேம்பி அழுதாள். அவளின் வேதனையைச் சகிக்க முடியாத ஒரு உணர்வு அந்தக் குதி ரைக்குப் புதிய வலிவை அளித்தது போலும் தட்டுத் தடு மாறிக் கால்களை ஊன்றி எழுந்து நின்றது! அருக்காணிக்குத் தெம்பு பிறந்து விட்டது – ஆலயத்துக்குள் மீண்டும் ஓடினாள், தனது தோழிகளை அழைத்துக்கொண்டு! 

ஆயுதங்களை ஏந்திக்கொண்டு அவளும் அவளது தோழிகள் சிலரும் அவர்களுக்குரிய குதிரைகளுடன் வெளியே வந்தனர். அருக்காணியும் வெள்ளை நிறக் குதிரையொன்றில் ஏறிக் கொண்டு சங்கரின் குதிரை அருகே வந்தாள். தன்னுடன் அழைத்துக் கொள்ளாமல் ஆலய வாசலில் விடப்பட்ட ஒரு தோழியிடம், “நீ உடனே போய் என் அண்ணியார்களிடம் விஷயத்தைச் சொல்! பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறு! பெரியண்ணன் வெள்ளாங்குளத்திலிருந்து திரும்பாவிட்டால், அவருக்கு உடனே செய்தி அனுப்ப ஏற்பாடு செய்! நான் சின்ன அண்ணா என்ன ஆனார் என்பதைத் தெரிந்து கொண்டு வருகிறேன். எனக்காக யாரும் அஞ்சத் தேவையில்லை. துணைக்குத் தோழிகளும் என்னுடன் இருப்பதையும் பெரியண்ணனிடமும் அண்ணியார்களிடமும் சொல். ஏதோ விபரீதம் நேரப் போவ தாக உணர்கிறேன். அண்ணனையும் அண்ணியார்களையும் எச்சரிக்கையாக இருக்கும்படி நான் கேட்டுக் கொண்டதாகக் கூறிடு!’ என மொழிந்திட்ட அருக்காணித் தங்கம், சங்கரின் குதிரையைக் கெஞ்சுகிற பாவனையில் பார்த்து, முன்னே நடந்து வழி காட்டுமாறு விழியால் கேட்டுக் கொண்டாள். 

தளர்ந்து, துவண்டு, நலிந்து போயிருந்த அந்தக் குதிரை, முதலில் அது வந்த பாதையில் உயிரைப் பிடித்துக்கொண்டு நடக்கத் தொடங்கிற்று. அதைப் பின் தொடர்ந்து அருக்காணி யின் குதிரையும் தோழிகளின் குதிரைகளும் சென்றன. 

52. தலையைக் குறிபார்த்த கல்! 

அருக்காணித் தங்கத்தினால் அவசரமாக அனுப்பி வைக்கப் பட்ட தோழி மிக வேகமாக வளநாட்டு அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள்.அப்போது முத்தாயி பவளாயி இருவரும் இருக்கும் மாளிகையின் வாயிற்புறத்தில் ரதவண்டியொன்று நின்று கொண்டிருந்ததைக் கண்டாள். ஆரிச்சம்பட்டி மணியங்குரிச் சியைச் சேர்ந்த ரதவண்டியென்பதை அவள் புரிந்துகொண் டாள். சாரதியைக் கேட்டு, சின்னமலைக்கொழுந்துக் கவுண் டரும் வையம்பெருமானும் வந்திருப்பதை அறிந்துகொண் டாள். தயக்கம் ஏதுமின்றி உள்ளே நுழைந்தாள். மாளிகைக் கூடத்தில் வேதனை உருவங்களாக முத்தாயி பவளாயி நின்று கொண்டிருந்தனர். இருக்கைகளில் சின்னமலைக்கொழுந்தும், வையம்பெருமானும் அவர்களுக்கு ஆறுதல் கூறும் நிலையில் வீற்றிருந்தனர். 

“அவர்கள் இருவருக்கும் ஏதாவது ஆபத்து நேரிடுமோ என்று எங்களுக்குப் பயமாயிருக்கிறது அப்பா! தயவுசெய்து நீங்களும் அண்ணனும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பதை உடனடியாகத் தெரிந்து கொண்டு வந்து சொன்னால்தான் எங்கள் உயிரே இருக்கும் என்று முத்தாயி அழுது கொண்டே சொன்னபோது பவளா யியும் தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டாள். 

அந்தச் சமயத்தில் அருக்காணியின் தோழி பதைபதைப்புடன் உள்ளே நுழைந்தது அவர்கள் நால்வரையும் அதிர்ச்சிக்குள் ளாக்கியது. 

“நிச்சயமாக ஏதோ ஆபத்துதான்! சின்ன அண்ணா ஏறிச் சென்ற குதிரை மட்டும் காயங்களுடன் வந்து சேர்ந்திருக்கிறது. அவரைக் காணவில்லை. அந்தக் குதிரையை அழைத்துக் கொண்டு, சின்ன அண்ணாவைத் தேடி அருக்காணித் தங்கம் போயிருக்கிறாள்” என்று அந்தத் தோழி சொல்லி வாய் மூடுவதற்குள்ளாக பவளாயி ‘அக்கா!’ என அலறிக் கொண்டு முத்தாயியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு விம்மினாள். 

“பயப்படாதேயம்மா, இதோ நான் வெள்ளாங்குளம் ஏரிக்குப் போய் பொன்னரைப் பார்க்கிறேன். வையம்பெருமான் இப்போதே சங்கரைத் தேடிப் புறப்படுவான்” என்று கூறிய சின்னமலைக்கொழுந்து, மகனைப்பார்த்து – “நீ இங்கிருந்து ஒரு படையுடன் புறப்பட்டு அருக்காணித் தங்கம் சென்றுள்ள இடத் தைத் தொடர்ந்து சென்றிடு! நானும் இங்குள்ள இன்னொரு படைப் பிரிவுடன் வெள்ளாங்குளத்துக்குக் கிளம்புகிறேன்” என்றார். 

பொன்னர் இல்லை – சங்கர் இல்லை தளபதி வீரமலையோ தலையூர் சிறையில் – இந்த நிலையில் முத்தாயி, பவளாயி இரு வரின் ஒப்புதலுடன் சின்னமலைக்கொழுந்து வளநாட்டுப் போர் முரசை வையம்பெருமானை விட்டு ஒலித்திடச் செய் தார். முரசின் முழக்கம் கேட்டமாத்திரத்தில் வளநாட்டுப் படைகளின் துணைத் தளபதிகளின் தலைமையில் வீரர்கள் குழுமினர் படைக்கலன்களுடனும், குதிரைகள், தேர்களுடனும் கோட்டை முகப்பில்! வளநாட்டு மக்களும் ஏதோ திடீர் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து அவரவர்களுக் குக் கிடைத்த ஆயுதங்களை ஏந்தி நூற்றுக்கணக்கில் கூடி விட்ட னர். சின்னமலைக்கொழுந்து வழிநடத்திட ஒரு படைப்பிரிவும் வையம்பெருமான் வழிநடத்திட மற்றொரு படைப்பிரிவும் வளநாட்டுக் கோட்டை முகப்பிலிருந்து வீர முழக்கத்துடன் ஆர்த்தெழுந்து புறப்பட்டு விட்டன. 

பதற்றத்திலும் பரபரப்பிலும் பொன்னர் சங்கருக்கு சூழ்ச்சி யின் விளைவாக எந்த விபத்து ஏற்பட்டிருந்தாலும் அவற்றி லிருந்து அவர்களிருவரையும் மீட்டுக் கொணர வேண்டுமென்ற ஒரே குறிக்கோள் மட்டுமே கொடிகட்டிப் பறந்த காரணத்தால் வளநாட்டுக் கோட்டைக்குப் போதுமான பாதுகாப்புக்குத் தேவையான வீரர்கள் இருக்கிறார்களா என்பதைக்கூட -யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. நூறுக்கும் குறைவான வீரர்கள் மட்டுமே கோட்டையைக் காத்து நின்றனர். 

சின்னமலைக்கொழுந்தின் தலைமையில் புறப்பட்ட படைப் பிரிவு வெள்ளாங்குளம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. 

வையம்பெருமானின் பெரும்படையோ. சங்கர் இருக்குமிடத் தைச் சரியாகத் தெரிந்துகொள்ளாதநிலையில் அருக்காணித் தங்கமும் அவளது தோழிகளும் ஏறிச்சென்ற குதிரைகளின் குளம்படிச் சுவடுகளைப் பார்த்துக்கொண்டு முன்னேறியது. 

இதற்கிடையே வேறொரு திசையில் தலையூர்க் காளியின் படை வளநாட்டை நோக்கிக் கடல் பொங்கி வருவதுபோல வந்து கொண்டிருந்தது. 

அருக்காணித் தங்கத்துக்கு வழிகாட்டியவாறு அழைத்துச் சென்ற சங்கரின் குதிரையோ சாவுடன் போராடிக்கொண்டே தனது கடமையை எப்படியும் நிறைவேற்றித் தீரவேண்டுமெனச் சங்கற்பம் செய்துகொண்டதைப்போல நடக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தது. சங்கர் அடைபட்டுக் கட்டுண்டு கிடக்கும் மண்டபம் இன்னும் ஓரிரு கல் தொலைவுதான் என் பதை உணர்ந்ததாலோ என்னவோ அந்த நன்றியுள்ள ஜீவ னின் தள்ளாட்ட நடையிலும் ஒரு நம்பிக்கை கலந்த ஊக்கம் இருந்தது. குதிரை படும் கொடுந்துன்பத்தைக் கண்ட அருக் காணித்தங்கத்தின் கண்களின் ஓரத்தில் நீர்த்துளிகள் புல் நுனி யின் பனி முத்துக்களைப்போலத் தொங்கின! 

ஒரு வழியாக சங்கரின் குதிரை அந்த மண்டபத்துக்கருகே வந்து விட்டது. பக்கத்தில்தான் மண்டபம் இருக்கிறது – அங்கு தான் சங்கர் இருக்கிறான் என்பதை உணர்த்தும் வகையில் அது பெருங்கனைப்பொன்றைக் கனைத்தது. புதர்களின் மறைவிலிருந்து குதிரையின் பயங்கரக் கனைப்புச் சப்தமும் அதைத் தொடர்ந்து குதிரைகள் நடக்கும் குளம்படிகளின் ஓசையும் மண்டபத்தைச் சுற்றிக் காவல்புரிந்த மாந்தியப்பனின் வீரர்களது செவிகளைக் குடைந்த காரணத்தால் அவர்கள் அங்கிருந்து ஒரே பாய்ச்ச லாகப் பாய்ந்து ஆயுதங்களை ஓங்கியவாறு புதர்களைச் சூழ்ந்தனர். 

அருக்காணித் தங்கம், தனது வாளைச் சுழற்றிக்கொண்டு வீராவேசமாக அவர்களை எதிர்கொண்டவுடன், அவளது தோழிகளும் பெண் புலிகளெனப் படைக்கலன்களைப்பயன் படுத்தி அந்த மண்டபத்துக் காவலர்களை வீழ்த்த ஆரம்பித் தனர். 

வில்லில் இருந்து மிக வேகமாக விடுபட்ட கணையைப் போல வீராங்கனை அருக்காணித் தங்கம், மண்டபத்துக்குள் நுழைந்தாள் தனது குதிரையை விட்டிறங்கி! 

அவள் நுழைந்த வேகத்தில் மண்டபத்துக் கதவு ஓரத்தில் இரு புறமும் ஒளிந்து கொண்டிருந்த மாந்தியப்பனின் ஆட்களைக் கவனிக்கவில்லை. அவளது கண்கள் அவளுக்கெதிரே ஒரு தூணில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த சங்கரை மட்டுமே கண்டு கனல் வீசிக்கொண்டிருந்தன. அதனால் அவளுக்குக் கதவோ ரத்துக் கயவர்களைக் கவனிக்க முடியாமற் போயிற்று. வேக மாக நுழைந்தவளின் இருகரங்களையும் அந்த வீரர்கள் கெட்டி. யாகப் பிடித்துக் கொண்டனர். அவளால் அசைய முடியாதபடி இன்னும் இரு வீரர்கள் ஓடிவந்து அவளது கால்களை இறுக்கிப் பிணைத்துவிட்டனர். 

முதலையைப் போன்ற வாயும் காட்டெருமை போன்ற தலையுங்கொண்ட காண்டாமிருக உருவத்தினன் ஒருவன், அருக்காணித் தங்கத்தின் கூந்தலைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டே, தூணில் கட்டுண்டிருக்கும் சங்கரைப் பார்த்துப் பேய்ச் சிரிப்பு சிரித்தான். 

“அடேய், முட்டாள். சங்கர்! சிங்கக்குட்டியே! நீ இப்போது மேலும் அசிங்கப்படப் போகிறாய்! ஆமாம் உன் முன்னா லேயே உன் தங்கையாம் இந்த மான்குட்டியின் மானத்தை நான் பறிக்கப் போகிறேன்!” என்று அந்த மனித மிருகம் கர்ச்சித் தது! அது மட்டுமல்ல, அவளது ஆடையை உருவிடவும் எத் தனித்தது! 

அருக்காணித் தங்கமோ தனது வலிமை முழுவதையும் ஒன்று திரட்டித் தன்னை விடுவித்துக் கொண்டதுமல்லாமல் தனது கரங்களைப் பிடித்திருந்த இரண்டு வீரர்களை வாளால் வெட் டியும் சாய்த்தாள்! இருந்தாலும் அவள் முற்றிலும் மீண்டு விட் டாள் என்று சொல்ல முடியவில்லை – அந்தப் பயங்கர முரட்டு மனிதன் மலைகள் இடிந்து விழுவது போல சிரித்துக் கொண்டு அவள் கையிலிருந்த வாளைத் தனது வாளினால் தட்டி விட் டான். கீழே விழுந்த வாளை எடுப்பதற்கு அருக்காணித் தங்கம் சற்று உடலை வளைத்துத் திரும்பியபோது அந்தத் திமிங்கலம் அவள்மீது விழுந்து அவளைத் தரையில் புரட்டியது! 

இனி தப்ப முடியாது மானத்திற்கு மரணம் வந்துவிட்டது என்ற துடிதுடிப்பில் அவள் அய்யோ! அண்ணா!” என்று உரக்கக் கூச்சலிட்டு விட்டாள்! 

தங்கை அருக்காணியின் அந்தக் கூச்சல் கேட்டது மட்டுமல்ல தன் கண்களுக்கு நேராகவே அவளது மானம் இன்னுமொரு நொடியில் பறிக்கப்படப் போகிறது என்றவுடன் சங்கர் எழுப்பிய ஒலி, அந்த மண்டபத்தையே பிளந்து சுக்கல் சுக்க லாக நெடுந்தொலைவு வீசி எறிந்து விட்டது போல் இருந்தது! ‘அருக்காணி!” என்று அவன் எக்காளக் குரல் கிளப்பிய அதே வேகத்தில் தன்னைத் தூணோடு பிணைத்திருந்த சங்கிலி யையும் தூள் தூளாக அறுத்தெறிந்து விட்டு அந்த முரட்டு மனிதன் மீது உருண்டு வரும் பாறையைப் போல் விழுந்தான். துள்ளிவரும் வேலாக – ஆவேசத்தை அள்ளி வரும் வாளாக- சங்கர் நடத்திய அந்தப் போரில் எதிரிகள் யாருமே மிஞ்ச வில்லை. அடுக்கடுக்காக அந்த மண்டபத்தில் பிணங்கள் விழுந் தன. சங்கரைச் சுற்றிச் சூழ்ந்த பகை வீரர்கள் பந்தாடப்பட் டனர். அவனுக்குக் கையிலே வேலோ அல்லது வாளோ தேவைப்படவில்லை. அவனைப் பிணைத்திருந்த அந்த இரும் புச் சங்கிலிகளின் துண்டங்களைக் கொண்டே எதிரிகளைத் தலைகள் வேறு முண்டங்கள் வேறு என ஆக்கிக் கொண்டிருந் தான். முதலை முரடன் சங்கரை எப்படியும் வீழ்த்திவிடத் தனது வித்தைகள் அத்தனையும் காட்டிப் பார்த்தான். இரு வரும் கட்டிப் புரண்டனர். அந்த வேளையில் அருக்காணியும் அவளது தோழிகளும் மிச்சமிருந்த மண்டபத்து வீரர்களைச் சாவூருக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இறுதியாகச் சங்கர், அவனோடு போரிட்ட மாமிச மலையை ஒரேயடியாகச் சாய்த்து அதன் இறுதி மூச்சை அந்தக் கானகத்துக் காற்றுடன் கலக்கவிட்டான். 

அருக்காணி, ‘சின்னண்ணா’ என ஓடிப்போய் அவனைத் தழுவிக் கொண்டு பெரியண்ணா வெள்ளாங்குளத்துக்குப் போயிருக்கிற விபரத்தைச் சொன்னாள். அதைக் கேட்டு சங்கர் திகைப்புற்ற அதே சமயம் அவனது குதிரை அவனை நோக்கி வருவது கண்டான். நெருப்பை மிதித்தவன் போல் அந்தக் குதி ரையிடம் ஓடினான். அது, தனது தலையால் அவனது உட லைத் தடவியது. பின்னர் நிற்க முடியாமல் தரையில் படுத்து விட்டது. 

“அண்ணா! இதுதான் பெரிய காண்டி அம்மன் கோயிலுக்கு வந்து எங்களை அழைத்து வந்தது” என்று விழிகளில் நீரைத் தேக்கியவாறு அருக்காணி சொன்னாள்.சங்கர் குதிரையின் முகத்தைத் தன் முகத்தோடு வைத்துக்கொண்டான். குதிரையின் கண்களில் பெருகிய நீர் அவன் முகத்தை நனைத்தது. குதிரையின் உடல் வேகமாக நடுங்கிற்று. அனைவரும் துணுக் குற்றனர். அத்துடன் அந்த நன்றியுள்ள ஜீவனின் உயிர் ஒடுங் கிப் போயிற்று. சங்கர் முகத்தில் சோகத்தின் ஆழம் எவ்வளவு என்பதை உணர்த்துகிற ஒரு அமைதி! தன்னைப் பிரிந்துவிட்ட அந்தப் பாசப் பிராணியைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந் திருந்தான்! பிறகு மெல்ல எழுந்தான். குதிரையின் முன்னால் குனிந்து நின்று தொழுதான். அவனைப் போலவே அருக் காணியும் அவளது தோழிகளும் கடமையாற்றிய அந்த ஜீவ னைக் கடவுளாகக் கருதி வணங்கி நின்றனர். 

பெரும்படையொன்று அந்த மண்டபத்தை நோக்கி வரும் பேரொலி எழுந்தது. 

சங்கரும், அருக்காணியும் அவளது தோழிகளும் வாட்களை ஓங்கியவாறு ஒலி வரும் திக்கை நோக்கினர். ஒரு படையை எதிர்க்குமளவுக்கு சிலராக இருக்கிற நம்மால் முடியுமா என் பது போல அருக்காணி, அண்ணனைப் பார்த்தாள். 

“மரணம் மாவீரர்களுக்குத் தரப்படும் மலர்ச்செண்டு, போர்க் களத்தில்! எனவே அஞ்சத் தேவையில்லை!” என்று ரைத்து சங்கர் மட்டும் முன்னேறிச் சென்றான். 

புதர்க்காடுகளைத் தாண்டி அப்படை வந்தபோது அதன் முகப்பில் குதிரையில் அமர்ந்து வையம்பெருமான் வருவதை அவர்கள் பார்த்து வியப்புற்றனர். 

சங்கரைக் கண்டவுடன், சற்று தொலைவிலேயே குதிரையை விட்டிறங்கி வையம்பெருமான் ஓடோடி வந்து அவனைக் கட் டித் தழுவிக் கொண்டான். 

அங்கே ஒரு சிறு போராட்டம் நடைபெற்று சங்கர் மீண் டிருக்கிறான் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. சங்கர், வையம்பெருமானையும் அருக்காணித் தங்கத்தையும் பார்த்துப் பேசினான். 

“வையம்பெருமான்! நீ தக்க தருணத்தில்தான் வந்திருக்கிறாய்! அதுவும் பெரும்படையுடன் வந்திருப்பது மிகவும் நன்று! நாமிருவரும் இப்போதே தலையூர் நோக்கிச் செல்ல வேண்டும். மாயவர், வீரமலை இருவரும் என்ன ஆனார்கள் என்ற ‘உண்மை தெரிந்தாக வேண்டும்! ஏதோ பெரிய சதி உருவாகி யிருக்கிறது! இனி தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தலையூ ரானுக்குத்தான் ஆதாயமாக முடிந்துவிடும்!” எனக் கூறிவிட்டு, அருக்காணியிடம், தங்கம், நீ உடனே வளநாட்டு அரண் மனைக்குத் திரும்பிச் செல்! அங்கே உன் அண்ணியார் இருவருக்கும் நீதான் பாதுகாப்பு! வெள்ளாங்குளத்திலிருந்து அண்ணா பொன்னர் வந்தவுடன் நானும் வையம்பெருமானும் தலையூர் மீது படையெடுத்துச் செல்வதையும், இது தவிர்க்க முடியாதது என்பதையும் விளக்கிடு!” என்றான். 

அருக்காணித் தங்கம் அவனை நோக்கி, சின்னண்ணா! முதலில் வெள்ளாங்குளம் போய் பெரியண்ணாவைப் பார்க்க லாமே!’ என்று கெஞ்சும் குரலில் கேட்டாள். அதற்குள் வையம்பெருமான் குறுக்கிட்டு, 

“வெள்ளாங்குளத்துக்குத்தான் இதேபோல் ஒரு படையுடன் என் தந்தை சென்றிருக்கிறாரே; அதனால் நாம் போகத் தேவையில்லை! எனக்குத் தெரிந்தவரையில் இப்போது நாம் தலையூர் மீது படை கொண்டு செல்வதே முக்கியம்!” என்றான். 

“அதுவே சரி! அருக்காணி! நீயும் உன் தோழிகளும் வள நாடு திரும்புங்கள் நாங்கள் வெற்றியுடன் திரும்புகிறோம்!” என்றான் அனல் வீசும் விழிகளுடன் சங்கர்! 

மண்டபத்தில் நிகழ்த்திய போரில் எதிர்த்தரப்பு வீரன் ஒரு வனது வாள் முனை பட்டு அவளது விரலில் வழிந்து கொண் டிருந்த ரத்தத்தை அருக்காணி அப்போதுதான் பார்த்தாள். அந்த விரலையே சங்கரின் நெற்றியில் அழுத்தி அவனுக்கு ரத்தத் திலகமிட்டு வழியனுப்பினாள். 

அருக்காணியும் அவளது தோழிகளும் வளநாட்டுக்கு வரும் வழியில் வந்து கொண்டிருக்கும்போதே சின்னமலைக் கொழுந்தும் அவர் வழிநடத்திச் சென்ற படைகளும் வெள் ளாங்குளம் ஏரியை நெருங்கி விட்டன. 

ஆனால் ஏரிக்கரையில் சில நூறு வீரர்களுடனும், வளநாட்டுப் பொற்கொல்லர்களுடனும் நின்றுகொண்டிருந்த வளநாட்டுப் துணைத்தளபதியொருவன், சின்னமலைக்கொழுந்து கவுண் டருக்கு முன்னால் வந்து நின்று, அதற்குமேல் போக வேண் டாம் என்பது போல மிக்க மரியாதையுடன் சைகை காட்டினான். 

“ஏன் எங்களைத் தடுக்கிறாய்? பொன்னர் எங்கே? இதெல் லாம் என்ன கூத்து?” என்று சற்று ஆத்திரத்தோடு வினவினார் சின்னமலைக்கொழுந்து! 

“மன்னித்துக் கொள்ளுங்கள்! அவரும் வேடன் வேலப் பனும் வெள்ளாங்குளத்தில்தான் இருக்கிறார்கள். அவர், தனது சத்தியத்தை நிலைநாட்ட வெள்ளாங்குள ஏரியின் உட் குமுழியில் மூழ்கி வெளிக்குமுழியில் எழப் போகிறார். அதனால் அவர் உட்குமுழிப்பக்கம் இருக்கிறார். அந்த வேடனோ அவர் வெளிக்குமுழியில் கரையேறுகிறாரா என்பதைப் பார்ப் பதற்காக – வெளிக்குமுழியருகே நிற்கிறான். அதனால் யாரும் அருகே வரக்கூடாது என்று வேடன் விதித்த நிபந்தனையையும் அவர் ஏற்றுக்கொண்டு யாரையும் உள்ளே வரவிட வேண்டா மென எனக்கு ஆணை பிறப்பித்துள்ளார்” என்று துணைத் தளபதி விபரம் கூறவே, சின்னமலைக்கொழுந்துக் கவுண்டரும் அதைக் கேட்டு ஓரளவு மனநிறைவு கொண்டவராகத் தன் னுடன் வந்த வளநாட்டுப் படைகளுடன் வெள்ளாங்குளம் ஏரிக்கரைக்கருகே நின்றுகொண்டு என்ன நடக்கிறது என உன் னிப்பாகக் கவனிக்கலானார். 

ஏரியின் எதிர்முனையில் வெளிக்குமுழியின் பக்கம் வேடன் அமைதியாக நின்றுகொண்டு, பொன்னர் என்ன செய்கிறான் என்பதையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். 

பொன்னர், தனது வாளை மட்டும் இடையில் கட்டிக் கொண்டு கைகளைக் கூப்பி ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து, “தாயே! பெரியகாண்டி! என் வாய்மைக்கு நீயே சாட்சி!’ எனக் கூறியவாறு அந்தப் பெரிய ஏரியின் உட்குமுழிக்குள் குதித்தான். 

உட்குமுழியிலிருக்கும் கரையில் நின்ற சின்னமலைக்கொழுந் தும் மற்றும் படைவீரர்களும், ஊர்மக்களும்,பொற்கொல்லர் களும் ஏரியையே பார்த்துக் கொண்டிருந்தனர். 

ஏரி நீருக்கடியில் பொன்னர் நீந்திக்கொண்டு அடுத்த கரை யில் உள்ள வெளிக்குமுழியை நோக்கிப் போகிறான் என்பது அந்த நீர்ப்பரப்பில் ஏற்பட்ட அலைகளின் சுழல்களைக் கொண்டு தெரிந்தது. 

வெளிக்குமுழியின் பக்கம் எதிர்க்கரையில் நின்றுகொண் டிருந்த வேடன் வடிவத்து செம்பகுலன், பொன்னர் வெளிக் குமுழியில் தலை தூக்கும்போது அவன் தலையில் போட்டு அங்கேயே அவன் உயிரை முடித்துவிட ஒரு பாராங்கல்லைத் தயார் செய்து அதைக் கையில் தூக்கிட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். 

பொன்னர் ஏரித் தண்ணீருக்கடியிலேயே நீந்திச்சென்று இறுதியாக வெளிக்குமுழிக்கு வந்து விட்டான். அந்தக் குமுழி வழியாக அவன் வெளியே வருவதற்கும் – மின்னல் வேகத்தில் செம்பகுலன் அந்தப் பாராங்கல்லைத் தன் கையில் தூக்குவதற் கும் சரியாக இருந்தது. 

53. தலை தப்பியது – ஆனால்…? 

வேடன் வடிவில் செம்பகுலன் பாராங்கல்லைப் பொன்னர் தலையில் போடப் போவதை ஏரியின் எதிர்க்கரையில் நின்று பார்த்த சின்னமலைக் கொழுந்துக் கவுண்டரும் படைவீரரும் மற்றவர்களும் தங்களையறியாமல் அய்யோ” எனக் கூச்ச லிட்டு விட்டனர். தனது தலை நோக்கி வந்துவிட்ட பாராங்கல் லைக் கண்டுவிட்ட பொன்னர், தலையைச் சற்று வளைத்து சாய்த்துக் கொள்வதற்குள் அவனது வலதுகரமானது ஒரு அனிச்சச் செயல் போல இயங்கி வாளை ஓங்கி அந்தக் கல் லைத் தடுத்து வெட்டிய வேகத்தில் அந்தக்கல், துண்டு துண்டா கச் சிதறிக் கீழே விழுந்தது. கல்லில் மோதிய வேகத்தில் வாளும் வளைந்து போயிற்று. வளைந்த வாளைப் பொன்னர் தரையில் வீசியெறிந்துவிட்டு,”அடேய்! யார் நீ? உண்மையைச் சொல்!” என்று கத்திக்கொண்டே செம்பகுலனின் கையைப் பிடித்து முறுக்கினான். உடனே செம்பகுலன் “அரசே! என்னை மன் னித்துவிடுங்கள்! நான் தங்களைக் கொல்வதற்காக ஏவி விடப் பட்டவன். மூச்சு விட்டுக்கொள்ள அவகாசம் கொடுங்கள். எல்லா உண்மைகளையும் சொல்லி விடுகிறேன்” என்று மன் றாடியவாறு மண்டியிட்டுப் பின்னர் காலிலேயே விழுந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். 

“என்ன உண்மைகளைச் சொல்லப் போகிறாய்? சொல்!” என்று பொன்னர் அதட்டினாலுங்கூட இப்போது அமைதி யாகிவிட்டிருந்தான். எதிர்க்கரையிலிருந்த சின்னமலைக்கொழுந்தும் படை வீரர்களும் பொற்கொல்லர்களும் பொன்னர் இருந்த இடம் நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்தனர். 

“அரசே! நான் சொல்வதைத் தங்களால் நம்ப முடியாது! ஆனாலும் நடந்திருக்கிறது!” என்றான் செம்பகுலன். 

“இன்னும் என்னை எப்படி ஏமாற்ற முனைகிறாய் என்று பார்க்கிறேன்! சீக்கிரம் சொல்! என்ன நடந்தது? யார் உன்னைத் தூண்டி விட்டு என்னைக் கொல்ல அனுப்பியது?” 

“யார் தூண்டிவிடுவார்கள்? இந்த ராஜ்யத்தை அபகரிக்க வேண்டும் தானொருவனே ஏகச் சக்ராதிபதியாக வேண்டு மென்று யார் துடிக்கிறாரோ? அவர்தான் என்னை இந்தக் காரியத்துக்கு அனுப்பினார்!” 

“இன்னும் ஏன் அந்த ரகசியத்தை இருட்டில் போட்டுப் பூட்டி வைக்கிறாய்? திறந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வா!” 

“சொல்லுகிறேன் மன்னா! ஆனால் எப்படிச் சொல்வ தென்று புரியவில்லை இதோ பாருங்கள் என் திரேகமெல் லாம் நடுங்குகிறது!” 

“இப்போது சொல்லப் போகிறாயா? இல்லையா?” 

“சொல்லுகிறேன்! சொல்லுகிறேன்!’ என்று நடுங்கிக் கொண்டே கூறிய செம்பகுலன் பொன்னரால் கீழே வீசப் பட்ட வளைந்து போன வாளைக் கையிலெடுத்து வைத்துக் கொண்டு “அரசே! அந்த ரகசியத்தைக் கூறிய பிறகு நான் ஒரு நொடிப் பொழுதும் உயிரோடு இருக்க முடியாது! அப்படி இருந்தால் என்னைச் செங்கல் சூளையிலே போட்டு தங்களின் தம்பி சங்கர் வேகவைத்துவிடுவார்!” என்று கதறிக் கதறியழுதான். 

“என் தம்பி எதற்காக உன்னைச் சூளையில் வேகவைக்க வேண்டும்?’ என்று பொன்னர் கேட்கவே, செம்பகுலன், வளைந்த வாளைக் கையில் பிடித்தபடியே அரசே! ஏண்டா அந்த ரகசியத்தை வெளியிட்டாய் என்று என்னைச் சங்கர் உடனே தண்டித்தே தீருவார்!” என்று உரக்கக் கூவினான். 

“அவன் தண்டிக்கிறானோ இல்லையோ, இப்போது நான் உன்னைத் தண்டித்து விடுவேன்! உண்மையை உடனே சொல்! என்ன ரகசியம் அது? யார் உன்னைத் தூண்டியது?”
 
“அண்ணன் பொன்னருக்கும் தனக்கும் வளநாடு ராஜ்யம் ஆளுக்குப் பாதி பாதியாக இருக்கிறது! அண்ணனைத் தீர்த்துக் கட்டிவிட்டால் ராஜ்யம் முழுதும் தனக்கே வரும் என்று திட்டமிட்டுத் தங்கள் தம்பி சங்கர் என் மூலம் இந்தச் சதியை வகுத்தார்!” 

செம்பகுலன் சங்கர் பெயரைச் சொன்னவுடன் “ஆ! என் தம்பியா இப்படி?” என்று பொன்னர் அதிர்ச்சி அடைய வில்லை. தம்பியின் இதயத்தில் தனக்கெதிரான துரோகச் சிந்தனையைத் திணிப்பதற்குக் கடவுளால் கூட முடியாது என்பதில் அழுத்தமான நம்பிக்கையுடைய அண்ணன் பொன்ன ருக்கு ஏற்பட்ட துடிப்பெல்லாம் அடப்பாவி! என் தம்பி யையா சொன்னாய்?’ என்றெழுந்த உணர்ச்சி பூர்வமான கேள்வியினால் ஏற்பட்ட விளைவேயாகும். அந்த உணர்ச்சி யில் ”ஆ!’ என உறுமிக்கொண்டு அவன், செம்பகுலனையே உற்று நோக்கினான். அவன் ஸ்தம்பித்து நிற்கும் அந்தக்கணம் தான் சரியான தருணம் எனக் கணக்கிட்ட செம்பகுலன், தனது கையிலிருந்த வளைந்த வாளை பொன்னரின் நெஞ்சில் குத்திடப் பலங்கொண்டமட்டும் ஓங்கி விட்டான். அதைச் சற்றும் எதிர்பாராத பொன்னர், தனது கையை மடக்கி அந்த வாளைத் தடுப்பதற்குள் “ஆ! அம்மா!” என்று பிளிறிக்கொண்டு, அப்படியே மல்லாந்து சாய்ந்தான் செம்பகுலன்! 

பூமியில் சாய்ந்துவிட்ட செம்பகுலனின் மார்பில் ஒரு அம்பு குத்தி ரத்தம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. செம்பகுலன் அந்த அம்பைக் கைகளால் பிடித்துக் கொண்டு ரத்த வெள்ளத் தில் புரண்டு நெளிந்தான். 

யார் விட்ட அம்பு? எங்கிருந்து வந்த அம்பு? பொன்னரை நோக்கி வந்துகொண்டிருந்த சின்னமலைக்கொழுந்து எய்திட்ட அம்பாக இருக்குமா? அல்லது வளநாட்டுத் துணைத் தளபதி யின் வில்லிலிருந்து கிளம்பிய அம்பாக இருக்குமா? 

யார் செய்த வேலை இது? என்னால் இவனை வீழ்த்த முடியாதென எண்ணி என் ஆற்றலைக் குறைத்து எடை போட்டது யார்? என்று பொன்னர் வினா எழுப்பி விழி களைத் தீப்பிழம்புகளாக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, சின்னமலைக்கொழுந்து உட்பட அனைவரும் ஒருவரையொரு வர் பார்த்துக்கொண்டு எதுவும் புரியாமல் விழித்தனர். 

“நான் தான் இந்த நாசகாரனை வீழ்த்தினேன்” என்று ஒரு பாறை மறைவிலிருந்து ஒரு குரல் கேட்டது! குரல் வந்த திக்கை அனைவரும் நோக்கினர்! பெண்ணின் குரல்! 

பக்கத்திலேயே அந்தப் பாறையிருந்ததால் பொன்னர் அந்த டத்தை நெருங்கினான் வேகமாக! யாரது? யார்? யார்? என்று பொன்னரின் கேள்வி, வேகமாக எழவே மீண்டும் “நானேதான்!” என்று அந்தப் பெண் குரல் ஒலித்தது. வய தான ஒருத்தியின் குரலாக அது இருந்ததால் பொன்னர், மிக்க ஆவலுடன் அவள் பாறை மறைவிலிருந்து வெளியே வருவதைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். 

இலவங்காய் மரத்திலேயே முற்றி வெடித்துச் சிலிர்த்துக் கொண்டு நிற்கும் வெண்பஞ்சுப் பத்தை போல தலை முழுதும் நரைத் துப்போன கிழவியொருத்தி நரம்புகள் மட்டுமே கொடிக ளாகி எலும்புகளென்னும் கொழுகொம்புகளில் பின்னிப் படர்ந்திருப்பது போன்ற உருவத்துக்குச் சொந்தக்காரி – அந்த முதியோளின் ஒரு கையில் வில் – மற்றொரு கையில் இரண் டொரு அம்புகள் அவள், பொன்னருக்கு முன்னே வந்து நின்றாள். 

“யாரம்மா தாங்கள்?” என்று அந்தக் கிழவியை மிக்க மரியாதையுடன் கேட்டான் பொன்னர். கிழவியின் கண்களிலோ கனலும் புனலும்! ஆம், தீயும் நீரும் -ஒன்றையொன்று அணைக்காமல் ஒன்றையொன்று தீய்க்காமல் இரண்டும் சமநிலையில்! 

கிழவியைக் கண்ட மாத்திரத்தில் செம்பகுலன் தனது நெஞ் சில் கிழித்த அம்பினால் ஏற்பட்ட மரணவேதனையைவிட அதிக வேதனையடைந்து, அம்மா! நீங்களா? அய்யோ நீங் களா என்னைக் கொன்றுவிட்டீர்கள்?” என்றலறி அழுதான். 

“ஆமாம்! நானேதானடா! குன்றுடையார் வீட்டுக்குக் கோள் நினைக்க வேண்டாம் மகனே! என்று தடுத்திட்ட உன் தாய் தானடா! நாட்டுக்குப் பால் வார்த்த வீட்டுக்குப் பாதகம் நினைக்க வேண்டாம் என்று உன்னைத் தடுத்த உன் தாய் தானடா! பிள்ளையென்று என் வயிற்றில் பெரும்பாவி ஏன் பிறந்தாய்? என்று கேட்டேனே, அந்தத் தாய்தான்! மைந்தன் என்று என் வயிற்றில் மாபாவி ஏன் பிறந்தாய்? என்று கேட் டேனே, அந்தத் தாய்தான்! நீ போன தடம் மீளாமல் போவாய் மகனேயென்று சாபமிட்டேனே, அந்தத் தாய்தான்! உன்னை அழித்த தாய்தான்!” 

கிழவியின் வீராவேசத்தையும், அவள் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளின் புயல் வீச்சையும் கண்ட அனைவரும் அப் படியே அசைவற்று நின்றனர். செம்பகுலன் உடலோ நிரந்தர மாக அசைவற்றுப் போயிற்று! 

அவன் வாழ்வு முடிந்து விட்டது கண்ட அந்தக் கிழவி, அய்யோ மகனே! என புலம்பிக்கொண்டு அவன் உடல் மீது விழுந்து புரண்டாள். மகனின் ரத்தம் அந்த மாதாவின் முகம், மேனியெங்கும் ஒட்டிக்கொண்டு, அவளை ஒரு பயங் கர உருவமாகக் காட்டியது. பொன்னர், அந்தக் கிழவியின் தோளைத் தொட்டு, 

“அம்மா! ஒன்றுமே புரியவில்லையே, என்னம்மா இது? மகனேயென அழுகிறீர்கள் ஆனால் அந்த மகனை நீங்களே மரணத்தின் தொட்டிலில் போட்டுத் தாலாட்டுகிறீர்கள் என்ன இது விபரீதமான விந்தை?” என்று கேட்கவே அந்தக் கிழவி, செம்பகுலனின் சவத்தை விட்டெழுந்து பொன்னரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள். 

சின்னமலைக்கொழுந்தும் மற்றவர்களும் அந்தக் கிழவியின் மூலம் ஏதாவது சதித்திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறதோ எனச் சந்தேகப்பட்டபடி மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர். 

“நான் இவன் தாய்தான்! இவன் வேடனுமல்ல வேலப்பனு மல்ல! என் மகன் செம்பகுலன் தலையூர்க்காளி கோயில் பூசாரியும் இவனே, அரண்மனைப் பொற்கொல்லனும் இவனே! நாங்கள் வேட்டுவர்களாயினும் பரம்பரை பரம்பரையாகக் குன்றுடை யார் குடும்பத்துக்கு விசுவாசமானவர்கள். என் கணவர் – இவனுடைய தந்தை, குன்றுடையாரிடம் அளவற்ற அன்பு கொண்டவர். ஆனால் இவனோ செல்லாத்தாக் கவுண்டருக்கும் மாந்தியப்பனுக்கும் கையாளாகிப் பொன்னுக்கும் பொருளுக் கும் அடிமைப்பட்டு உங்கள் குடும்பத்துக்குப் பகையாளியாகவே மாறிவிட்டான். எத்தனையோ முறை தடுத்தேன். இவன் கேட்க வில்லை. குழந்தைகளாக இருக்கும்போதே உங்களிருவரையும் கொன்றுவிட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் தலையூர் மன்னருக்கு ஆபத்து என்றும் என் மகனை விட்டுத்தான் காளிகா தேவி அருள் வாக்கு சொல்லச் செய்து செல்லாத்தாக் கவுண் டர் சூழ்ச்சி செய்தார். குன்றுடையாரின் தந்தை கோளாத்தாக் கவுண்டர் கருணையினால் கிடைத்த பத்துக் காணி நிலத்திலே யிருந்து வந்துகொண்டிருக்கிற தானியத்தைச் சாப்பிட்டுத்தான் நமது குடும்பத்தினர் உடம்பும், குறிப்பாக உன் உடம்பும் வளர்ந்ததடா மகனே, அதனால் அந்தக் குடும்பத்துக்குத் தீங்கு நினைக்காதேயென்று குறுக்கே நின்றேன்! தான் வாழவும் தன் குடும்பம் வாழவும், தன் வயிற்றுக்கு உணவு கிட்டவும் யார் உதவி செய்தார்களோ, அவர்களுக்குக் கைமாறாக நன்மை செய்யாவிட்டாலும் ஏதாவது தீமை செய்து கொண்டேயிருக்க வேண்டுமென்று கருதுகிற நன்றி கெட்ட பிறவிகளில் ஒன் றாகவே செம்பகுலன் ஆகிவிட்டான். என் கருவில்தான் உதித் தானா? படமெடுத்துத் தீண்ட வரும் பாம்பைக்கூட பதிலுக்கு அடிக்க வேண்டுமென நினைக்காத என் கணவரது ரத்தம் தானா இந்தப் பாவியின் உடலில் ஓடுகிற ரத்தம்? இப்படிக் கூட ஒரு அசிங்கமான சந்தேகம் எனக்கு ஏற்பட்டு விட்டது அரசே! எங்கள் தலையூர்க்காளி மன்னரின் நல்லெண்ணத்தில் எப்படியெல்லாம் நஞ்சு கலக்கவேண்டுமோ – அதற்குத்தக்க விஷத்தைத் தயாரிப்பவர்கள் செல்லாத்தாக்கவுண்டரும் மாந்தியப்பனும் என்றால், அந்த விஷத்தைப் பாலில் கலந்து தருவதற்குப் பயன்படுகிற பாவிதான் என் மகன் செம்பகுலன்! இவனைப் பயன்படுத்தித்தான் மாயவரைக் காட்டுப் பன்றிகளுடன் மோதவிட்டு கொலை செய்தார்கள்!”

இதைச்சொல்லி அந்தக் கிழவி முடிப்பதற்குள், என்ன? மாயவரைக் கொன்றுவிட்டார்களா?’ என வானை நோக்கி நிமிர்ந்தான் பொன்னர்! 

“மாயவரைக் கொன்றது மட்டுமல்ல, வளநாட்டுத் தளபதி வீரமலையையும் தலையூர்ச் சிறையில் அடைத்து வைத்திருக்கி றார்கள். இணைபிரியாமல் இருக்கிற அண்ணன் தம்பிகளாகிய உங்களிருவரையும் பிரித்துவிட்டால் வளநாட்டை அபகரித்து உங்களை ஜெயிப்பது சுலபம் என்று திட்டமிட்டுத்தான் செம்ப குலனை வேடன் வேடத்தில் அனுப்பினார்கள். போகாதே மகனே என்று இவன் காலில் கூட விழுந்து கெஞ்சினேன். பொன்னாசை இவன் கண்ணை மறைத்ததால் என்னையே அடித்து வீழ்த்திவிட்டு இந்தச் சதி வேலைக்கு உடந்தையாகப் புறப்பட்டு விட்டான். சூழ்ச்சிக்கு மேல் சூழ்ச்சி கொடு மைக்கு மேல் கொடுமை என்மகனைத் திருத்தவே முடியாது என்று தெரிந்தவுடன் வேறு வழியில்லாமல் அவனைப் பின் தொடர்ந்தேன். கொங்கு வேளிர் குலத்தின் விளக்குகளையும் அணைத்துவிடப் போகிறானேயென்ற ஆத்திரமும் பதைப்பும் என்னை ஆட்டிப் படைத்தன. கோடிக்கணக்கான குழந்தை களைப் பெற்று வளர்த்து வாழவைக்கும்பூமாதேவியே சில நேரங்களில் வெடித்துக் குலுங்கி நல்ல பிள்ளைகள் கெட்ட பிள்ளைகள் என்று பாராமல் அழித்துவிடும்போது, இந்தத் தாய் ஒரு கெட்ட பிள்ளையை அழித்தால் என்னவென்று துணிந்துவிட்டேன். இன்னொரு அதிர்ச்சியான செய்தியும் சொல்லப் போகிறேன். தங்களின் தம்பி சங்கரையும் தந்திர மாக மடக்கி வீரப்பூர் காட்டில் உள்ள தலையூரான் ரகசிய மாளிகையில் சிறை வைத்து விட்டார்கள்.” 

தம்பி சங்கர் சிக்கிக்கொண்டிருக்கிறான் சிறைப்பட்டான்- என்பது கேட்டதும் பொன்னருக்கு ரத்த நாளங்கள் சூடேறிக் கொதித்தன. 

‘சங்கர்!’ என்ற ஒலி அவனது அடிவயிற்றின் ஆழத்திலிருந்தா – அல்லது இருதயத்தை இருகூறாகக் கிழித்துக்கொண்டா – எப் படி வெளிக்கிளம்பி அந்த வெள்ளாங்குளம் ஏரிக்கரையை நடுங்க வைத்தது மட்டுமல்ல, ஏரியில் கரைபுரண்ட தண்ணீரை யும் சூறாவளி வீசும்போது கொந்தளிக்கும் கடல்நீரைப் போலாக்கியது! 

“புறப்படட்டும் நமது படை! போர் முரசம் வள நாடு முழுமையும் கேட்கட்டும்! தலையூர் நாட்டைத் தரைமட்டமாக்கி விட்டே இனி திரும்புவது எனச் சபதமேற்றுக் கிளம்பிடுக!’ 

பொன்னரின் வீர உரைக்கிடையே சின்னமலைக்கொழுந்து மெல்லக் குறுக்கிட்டு. 

”சங்கரை மீட்டு வரப் பெரும் படையுடன் வையம்பெருமான் சென்றிருக்கிறான். அதற்குமுன்பே அருக்காணித் தங்கமும் சங்கரைத் தேடிப் போயிருக்கிறாள்’ என்றார். 

அவரது பேச்சுக்குப் பொன்னர் காது கொடுத்தது போல் தெரியவில்லை. 

மாயவரைக் கொன்று விட்டனர்! வீரமலையைச் சிறையிட்டு விட்டனர். சங்கரையும் சதியில் வீழ்த்திவிட்டனர்! என்னையும் சாய்க்கப் பார்த்தனர்! இனிப் பொறுமையாக சிந்திப்பதற்கு எதுவுமில்லை. எதை இழப்பது பற்றியும் சிறிது சிந்திக்கலாம் ஆனால் மானத்தை இழக்கும் நிலை ஏற்படும்போது அதைக் காத்திட எதையும் இழந்திட முற்பட வேண்டுமேயல்லாமல் அப்போது சிந்தனைக்கே இடமில்லை!” 

பொன்னர், அந்த அணிவகுப்பில் நின்ற ஒரு குதிரையின் மீது தாவி ஏறி அமர்ந்தான்! போர் முரசு அதிர்ந்தது!. 

ஏரிக்கரையில் புழுதி மண்டிலத்தை உருவாக்கிக்கொண்டு கிளம்பிய அந்தப் படைக்கு முன்னே -மிக வேகமாகக் குதிரை யொன்றில் வளநாட்டு வீரன் ஒருவன் வந்துகொண்டிருந்தான். படை முகப்பில் பொன்னர் இருப்பதைப் பார்த்ததும் அந்த வீரன், குதிரையிலிருந்து கீழே குதித்து பொன்னரின் குதிரை யருகே ஓடி வந்தான். 

”என்ன?’ என்று புலி போல உறுமினான் பொன்னர்! 

“அரசே! வளநாட்டு எல்லைக்குள் தலையூர்க் காளியின் பெரும் படைகள் மூன்று கடல்களும் பொங்கி வருவது போல் வந்து விட்டன!” 

பொன்னரின் மீசைகள் கையில் தூக்கிப் பிடித்த வாட்கள் போல் நிமிர்ந்து கொண்டன! 

“என்னைப் பின் தொடருங்கள்!” எனக் கூவியபடி குதிரை யைத் தட்டி விட்டான். 

தலையூர் நோக்கி சின்ன அண்ணன் சங்கரையும் படை வீரர்களையும் அனுப்பிவிட்டு வளநாட்டு அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்த அருக்காணித் தங்கமும் அவளது தோழிகளும் வள நாட்டுக் கோட்டைக்குள் பெரும் போர் நடப்பதைக் கண்டார்கள். இன்னும் வெள்ளாங்குளத்திலிருந்து பொன்னர் திரும்பி வரவில்லையென்பதைத் தெரிந்து கொண்டு திகைத்தாள் அருக்காணி! 

திடீரெனப் பெரும் வெளிச்சம்! தன்னைச் சுற்றி எல்லாமே தீக்காடாக இருப்பது போன்ற தோற்றம்! அவள் கண் எதிரே வள நாடு கோட்டையும் கோட்டைக்குள்ளிருந்த அரண்மனை மாளிகைகளும் எரிந்து கொண்டிருந்தன! அய்யோ! என் அண்ணியார்கள் என்ன ஆனார்களோ?” என்று தவித்தாள் அருக்காணித் தங்கம். 

54. நடந்தாள்! நடந்துகொண்டேயிருந்தாள்! 

வளநாட்டுக் கோட்டைக்குள்ளிருந்த வீரர்களின் எண்ணிக் கையையும் தலையூர்ப் படைவீர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டால் அவ்வளவு நேரம் அந்தக் கோட்டைக்குள்ளிருந்து தாக்குப் பிடிக்க வளநாட்டு வீரர்களால் எப்படி முடிந்தது என்ற வியப்பே மேலிடும். கோட்டையின் எல்லாத் திசைகளிலும் உடைப்பெடுத்த பெரு வெள்ளம்போலப் பாய்ந்து நுழையும் தலையூர் வீரர்களைத் தங்கள் உயிரைக் கொடுத்து, உடல் களைத் தடைகளாக்கிச் சில நூறு பேர்களால் எத்தனை நாழிகை சமாளிக்க முடியும்! அந்த நிலைமையிலும் தலையூர் வீரர்கள் ஏராளமானவர்கள் வளநாட்டுக் கோட்டைக்குள்ளே பிணங் களாக வீழ்த்தப்பட்டனர். இருப்பினும் வெற்றி தலையூர்ப் படையின் பக்கமே இருந்தது! 

இன்னும் சில நொடிகளில் கோட்டை முழுவதும் தலையூர்ப் படையின் வசமாகி, அந்த எதிரிகள் முத்தாயி பவளாயி இருக் கும் அரண்மனைக்குள் நுழையக்கூடும் என்பதை அந்தச் சகோ தரிகள் உணர்ந்துகொண்டனர். அவர்களது அரண்மனைக் காவலர்கள் எதிரிகளை உள்ளே அனுமதிக்காமல் தடுத்திடத் தங்கள் கைகால்களை இழந்தனர். சிலர் தலைகளையே இழந் தனர். அத்துணை தியாகப் போர்புரிந்தும் பயனில்லை. தலையூர்ப் படை வீரர்கள் அந்த அரண்மனையையும் சூழ்ந்து கொண்டனர். கற்கோட்டை தகர்ந்தது மட்டுமல்ல. தங்களின் கற்புக் கோட்டையும் தகர்க்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நடு நடுங்கி, முத்தாயி பவளாயி இருவரும் தங்கள் அரண் மனையின் மேல் மாடத்திற்கு ஓடினர். அங்கிருந்து அவர்கள் வளநாட்டுக் கோட்டையின் முகப்பைப் பார்த்தபோதுதான் வளநாட்டுக் கொடி மரத்தை மாந்தியப்பன் தனது வாள் கொண்டு வெட்டி வீழ்த்தியதோடு அதைத் தீ வைத்துக் கொளுத் தவும் ஆணை பிறப்பித்தான். மானமறவர்களாம் பொன்னரும் சங்கரும் உயர்த்திப் பிடித்த அந்த வீர வெற்றிக் கொடி, பற்றி எரிவது கண்டு முத்தாயியும் பவளாயியும் பதைத்தனர். என்ன செய்வதென்று தெரியாது திகைத்தனர். 

வளநாட்டுக் கோட்டைக் கொடியின்மீது படர்ந்த தீயின் ஜுவாலை அப்படியே முழுமையாக முத்தாயியின் விழி களிலே பரவியது போல அவளது கண்கள் செவ்வானத் தோற்றம் கொண்டன. பவளாயி! நாம் செய்யக்கூடிய காரியம் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது! எதிரிகளின் சதியினால் என் னுடையவரும் உன்னுடையவரும் எப்படியோ ஏமாற்றப்பட்டு விட்டார்கள்! ஆனால் ஒன்று -அவர்கள் எப்படியும் திரும்பி வருவார்கள்! தங்களின் வீரத்தை நிலைநாட்டுவார்கள்! அதில் சந்தேகமே இல்லை! ஆனால் அவர்கள் வரும்போது அவர்கள் முகத்தில் விழிப்பதற்குத் தகுதியுடையவர்களாக நாம் இருப் போமா என்பதுதான் சந்தேகத்திற்குரியது! பகைவர்கள் நமது அரண்மனைக்குள் நுழைந்துவிட்டாலே -நம்மிருவரின் மான மும் பறிக்கப்பட்டுவிட்டதாகத்தான் அர்த்தம்! அதனால்… அதனால்… என்று – ஏதோ சொல்ல வந்த முத்தாயி, பேச நா எழாமல் திக்குமுக்காடி நின்றாள். 

“அதனால் என்ன செய்யலாம்? எதற்கும் நான் தயார் அக்காள்!” என்று பவளாயி, தனது சகோதரியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறினாள். 

தங்கையின் தலையைக் கோதிவிட்டுக்கொண்டே முத்தாயி “கவலைப்படாதே! இதோ நான் கண்டு பிடித்துவிட்டேன் வழி! நமது வளநாட்டுக் கோட்டையும் பகைவர்கள் கையில் சிக்கக் கூடாது நமது மானமும் அவர்களுக்கு முன்னால் சோத னைப் பொருளாக ஆகிவிடக்கூடாது. அதற்கு ஒரே வழி, இதுதான்!” என்று சொன்னவள் திடீரெனப் பாய்ந்து தூணில் சொருகப்பட்டிருந்த தீப்பந்தத்தை எடுத்தாள். இமைகொட்டித் திறக்கும் வேகத்தில் அங்கு தொங்கிக்கொண்டிருந்த திரைச் சீலைகளுக்குத் தீயிட்டாள். ஒன்றா? இரண்டா? அரண்மனை முழுதும் அழகுறத் தொங்கித் தென்றலில் தவழ்ந்தாடிய நூற் றுக்கணக்கான திரைச் சீலைகளில் தீயின் தாண்டவம்! அவை அனைத்துக்கும் அவளே தீயிட்டாள்! அரண்மனையின் எல் லாப் பகுதிகளிலும் பரவிய தீ கோட்டையிலும் பரவியது! 

அரண்மனையைச் சூழ்ந்து கொண்டிருந்த தலையூர் வீரர் களால் அனல் தாங்க முடியவில்லை! பின்னோக்கி நகரத் தொடங்கினர். அரண்மனை மட்டுமன்றி கோட்டைக்குள்ளும் புயல் வேகத்தில் சென்ற தலையூர்ப் படை, வான்முட்ட எழுந்த நெருப்பை எதிர் கொள்ள இயலாமல் கோட்டையை விடுத்து வெளியேறியது. 

கோட்டைக்கு வெளியே சிறிது தொலைவில் தலையூர்க் காளியும், செல்லாத்தாக் கவுண்டரும் தேர்ப்படையை நிறுத்தி வைத்துக் கொண்டு இருவருமே ஒரு தேரில் அமர்ந்து வள நாட்டுக் கோட்டை எரிந்து கொண்டிருப்பதைக் கண்கொட்டா மல் பார்த்துக்கொண்டிருந்தனர். தலையூர்ப் பெரும் படை பின்தொடர குதிரையொன்றில் அமர்ந்து மாந்தியப்பன் எரி யும் கோட்டைக்குள்ளிருந்து வெளிப்பட்டு அவர்களிருவரும் அமர்ந்திருந்த தேருக்கருகே வந்து சேர்ந்தான். 

“தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத வளநாட்டுக் கோட்டை கொத்தளங்கள் தீக்குளித்து செத்துக்கொண்டிருக்கின்றன!” எனப் பெருஞ்சிரிப்போடு மாந்தியப்பன் மார்தட்டிக் கொண்டான். 

“நமக்குப் பயன்படாதது இப்படி அழிந்து போகட்டும் என்று ஆண்டவன் எண்ணினான் போலும். எப்போதும் ஆண்டவன் நம் பக்கம்தான் இருக்கிறான். பரவாயில்லை. எல்லாமே எரிந்து தணியட்டும். அதன்பிறது வளநாடு நமது வசமானது என்பதை அறிவிக்க இங்கே கொடி நாட்டிவிட்டுத் திரும்பு வோம்!’ என்றார் எக்காளக் குரலில் செல்லாத்தாக் கவுண்டர்! 

வளநாட்டுக் கோட்டையில் சூறாவளியின் சுழற்சியோடு தீ எரியும் காட்சி கோட்டைக்குள்ளிருக்கும் கட்டுமானங்கள் உடைந்து சிதறுவதால் ஏற்படும் பயங்கர ஒலி- தீயில் சிக்கி மீளமுடியாமல் அங்குமிங்கும் ஓடி அலறிடுவோரின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி ஒடுங்கிடும் பரிதாபம் இவற்றுக்கிடையே காளி மன்னனும் செல்லாத்தாக் கவுண்டரும் அமர்ந்திருந்த தேரினை நோக்கி இரண்டு குதிரைகளில் மிக வேகமாகத் தலையூர் வீரர்கள் இருவர் வந்துகொண்டிருந்தனர். 

வளநாட்டுக் கோட்டையை வீழ்த்திய பெருமிதத்தில் சிங்கத் தைப் போலத் தலையை உயர்த்திக் கொண்டே காளி மன்னன் அந்த வீரர்களைப் பார்த்து, ‘என்ன அவசரச் செய்தி? ஏனிந்த பரபரப்பு?’ எனக் கேட்டான் மிக அலட்சியமாக. 

“அரசே! சங்கர் பெரும் படையுடன் தலையூர்க் கோட்டைக் குள் நுழைந்து நமது வீரர்கள் பலரைக் கொன்றது மட்டுமில்லாமல் வளநாட்டுத் தளபதி வீரமலையையும் சிறையிலிருந்து மீட்டுவிட்டான்.” 

அந்த வீரர்கள் இந்தத் தகவலைச் சொல்லி முடிப்பதற்குள் தலையூர்க்காளி தனது ஆத்திரத்தைக் காட்டிக் கொள்ள அவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்து ‘என்ன? என்ன சொன்னீர்கள்?’ என்று கத்தினான். 

வலியைப் பொருட்படுத்தாத அந்த வீரர்கள் “ஆமாம் அரசே! உண்மையைத்தான் சொல்லுகிறோம். சங்கரும் வையம்பெரு மானும் தலைமையேற்றுத் தலையூரைத் திடீரெனத் தாக்கினார் கள். அதிர்ச்சியால் நமது கோட்டைக் காவலர்கள் நிலை குலைந்து சிதறினார்கள். சங்கர் தனது காலால் ஓங்கி உதைத்து சிறைக்கதவை உடைத்து வீரமலையை விடுவித்தான். சங்கர், வீரமலை, வையம் பெருமான் மூவருமாகச் சேர்ந்து நமது வீரர்கள் பலரைக் கொன்று குவித்தார்கள். மீதமிருந்த காவல் வீரர்கள் நொண்டிகளாக, முண்டங்களாகப் பலத்த காயமுற்று வீழ்ந்து கிடக்கின்றனர். பிண அறையில் வைக்கப்பட்டிருந்த மாயவர் உடலையும் ஒரு தேரில் ஏற்றிக்கொண்டு மூவரும் வளநாடு நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். அரசே! எங்க ளுக்குப் பேசவே நாக்கூசுகிறது. தலையூர்க் கோட்டை முகப் பில் இப்போது பொன்னர் சங்கரின் வளநாட்டுக் கொடி பறக்கிறது!” என்று பதறிக்கொண்டே கூறினர். 

தனது பலமிக்க கோட்டையின் முகப்பில் பகை நாட்டுக் கொடி பறக்கிறது என்ற செய்தியைத் தலையூர்க்காளியினால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தேரிலிருந்து கீழே குதித் தான். செல்லாத்தாக் கவுண்டரும் மாந்தியப்பனும் ஒருவரை யொருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டனர். 

”சங்கரை நான் சங்கிலியால் பிணைத்துக் கட்டிப்போட்டுத் தப்பியோட முடியாதபடி வலுவான காவலுமல்லவா வைத் திருந்தேன். அவன் எப்படித் தலையூருக்கு வந்தான்?” என்று மாந்தியப்பன் கேட்டான். 

“அதற்கெல்லாம் விளக்கம் தேட இப்போது நேரமில்லை. நமது படை புறப்படட்டும்! தலையூரைப் பிடித்துவிட்டதாகக் கனவு கண்டு வளநாட்டுக்குத் திரும்பி வரும் சங்கரை வழியி லேயே வளைத்துக் கொள்வோம்! அவன் தலையூர்க் கோட்டை யில் கொடி ஏற்றிய குற்றத்துக்குத் தக்க தண்டனை அளிப் போம். வளநாடு இனிமேல் சாம்பல் மேடு! அடுத்த குறி சங்கரின் தலை! புறப்படுங்கள் எல்லோரும்!” 

தலையூர்க் காளியின் இந்த வீர கர்ச்சனையைத் தொடர்ந்து முரசுகள் அதிர்ந்தன! காளி மன்னன் படைக்கு முன்வரிசை யில் தலைமை வகித்துச் சென்றான். அடுத்த வரிசையில் செல் லாத்தாக் கவுண்டரும் மாந்தியப்பனும் சங்கரின் வாழ்வை எப்படியும் முடித்து விடுவது என்றும் அந்தக் காரியத்தைத் தலையூர் மன்னனைக் கொண்டே நிறைவேற்றும் வாய்ப்பு கிடைத்து விட்டது என்றும் தங்களுக்குள்ளே மகிழ்ந்தவாறு படை நடத்திச் சென்றனர். 

வளநாட்டுக் கோட்டையைச் சுற்றியிருந்த தலையூர்ப் படை, சங்கரின் படையை வழியில் சந்தித்துத் தாக்குவதற்காக மிக வேகமாகப் புறப்பட்டுச் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வந்த அருக்காணித் தங்கம், ‘அய்யோ! என் அண்ணி யார்கள் என்ன ஆனார்களோ?’ எனக் கதறிக்கொண்டே கொழுந்து விட்டெரியும் நெருப்பையும் பொருட்படுத்தாமல் கோட்டைக்குள் நுழைந்தபோது அருக்காணியின் தோழி யொருத்தி உடலெங்கும் தீக்காயங்களுடன் எதிரே ஓடி வந்து, “அருக்காணீ! போகாதே! உள்ளே போகாதே!’ எனக் கூச்ச லிட்டுக்கொண்டே அருக்காணித் தங்கத்தின் காலடியில் விழுந்தாள். 

தீக்காயங்களுடன் இருந்த அவளை, அருக்காணி மெல்லத் தூக்கித் தனது மடி மீது அவள் தலையை வைத்துக்கொண்டு, “என்னம்மா – என்ன நடந்தது? என் அண்ணியார் இருவரும் எங்கே? தப்பித்து விட்டார்களா?” என்று கண்களில் கனலும் புனலும் பொங்கிடக் கேட்டாள்! 

“முத்தாயி பவளாயி இருவரும் தங்களின் கற்பைக் காத்துக் கொள்ளவும்-பகைவர்களை அவர்களது அந்தப்புரத்து அரண் மனையில் நுழைய விடாமல் தடுக்கவும் அவர்களே அரண் மனைக்குத் தீ வைத்து விட்டார்கள்! நமது கற்கோட்டை அழிந்து விட்டது – அவர்களது கற்புக் கோட்டை காப்பாற்றப்பட்டு விட்டது!” இதை நாக் குழறக் கூறிய அருக்காணியின் தோழி, அதற்குமேல் பேசமுடியாமல் தேம்பித் தேம்பி அழுதாள்! 

“அழாதே! இப்போது என் அண்ணியார்கள் எங்கே? நீ இரு; நான் போய்ப்பார்த்து வருகிறேன்!” என்றுரைத்தவாறு அருக்காணித்தங்கம், அந்தத் தோழியை மடியிலிருந்து மெல்லத் தரையில் படுக்க வைத்துவிட்டு அவசர அவசரமாக எழுந்தாள்! 

எழுந்தவளின் கையை அந்தத் தோழி கெட்டியாகப் பிடித் துக் கொண்டு, “அருக்காணித் தங்கம்! நீ போய் எந்தப் பயனு மில்லை! போகாதே!” என்று கூச்சலிட்டாள். 

“ஏன்? ஏன்?” என்று பதில் கூச்சல் போட்டாள் அருக்காணித் தங்கம்! 

“அந்தப்புர அரண்மனைக்குத் தீ வைத்துவிட்டு உன் அண்ணி யார்கள் இருவரும் அந்த அரண்மனைக்குள்ளேயே கண்களை மூடிக்கொண்டு தபசிகளைப் போல அமர்ந்து விட்டனர். நான் அவர்களிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன். என்னோடு வாருங்கள். தப்பித்து ஓடி விடலாம் என்று மன்றாடினேன். ஆனால் அவர்கள் அரண்மனையை விட்டு வெளியே வந்தால் பகைவர்களின் கையில் அகப்பட்டுவிடுவோம் என்று அஞ்சி னார்கள். அதனால் என் வார்த்தைக்கு அவர்கள் செவி சாய்க் கவே இல்லை. வேறு வழியில்லை எனக்கு! வெளியில் யாரா வது நமது வளநாட்டு வீரர்கள் இருக்கிறார்களா என்று பார்ப் பதற்கு ஓடி வந்தேன். யாருமே இல்லை. எல்லோரும் பிணங்க ளாகத்தான் இருந்தார்கள். திரும்பவும் அரண்மனைக்குள் ஓட முயன்றேன். முடியவில்லை. அரண்மனை வாசல்கள் அனைத் தையும் அடைத்துக்கொண்டு தீ எரியத் தொடங்கி விட்டது! அருக்காணீ, அந்தக் கண்ராவியை நான் எப்படிச் சொல்வேன்! முத்தாயி, பவளாயி இருவரும் கும்பிட்டகைகளை எடுக்காமல் அப்படியே ஆடாமல் அசையாமல் அந்த நெருப்பில் வெந்து சாம்பலானதை இந்தப் பாழும் கண்களால் பார்த்தேனடி!” என்று அலறிக்கொண்டே தனது முகத்தில் மாறி மாறி அறைந்து கொண்டாள் அந்தத் தோழி! 

அண்ணியார் இருவரையும் இழந்துவிட்ட துயரம் -அவர்கள் முடிவுக்குக் காரணமாகிவிட்ட பகைமையைப் பழி வாங்க வேண்டுமென்ற உணர்ச்சி ஒன்றோடொன்று போட்டியிடும் நிலையில் அருக்காணித் தங்கம், தனது தோழி தன் முகத்தில் அறைந்து கொள்வதை தடுத்திட அவளது கைகளிரண்டையும் அழுத்தமாகப் பற்றினாள். அருக்காணியின் கைகளோடு சேர்ந்து அவள் தோழி வதங்கிப்போன கீரைத் தண்டு போலக் கீழே சாய்ந்தாள். 

உள்ளே தீயோடு தீயாகக் கலந்து கரைந்துவிட்ட அண்ணி யார்கள்- அய்யோ! அவர்கள் மணமானவர்கள்! ஆனால் வா வாழ்வின் மணம் இன்னதென்றே உணர்ந்தறியாதவர்கள் அந்த மலர்கள் தணலில் கருகிவிட்ட செய்தி அறியாமல் தனது அண்ணன்மார்கள் சபதம் நிறைவேறும் வரையில் சதிபதி களாக வாழ்வதில்லையென்று உறுதி எடுத்தவர்கள் இனி அந்தச் சாம்பல் மேடுகளைத்தான் தழுவிட வேண்டும் – அருக் காணித் தங்கமே இப்போது நெருப்பானாள்! அவள் காலடி யிலே அவளது ஆருயிர்த் தோழிகளில் ஒருத்தியின் பிணம்! 

ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? இதற்கு ஒரு முடிவே கிடையாதா? எங்க குடும்பத்தைச் சீரழிப்பது என்ற கெடு நினைப்பால் இந்த நாட்டையும் தங்களின் சொந்த மக்களையும் சீரழித்திடும் சிறுமதியாளர்களுக்கு ஒரு முடிவு ஏற்பட்டால் தான் எல்லாவற்றுக்கும் நல்ல முடிவு ஏற்படும்! 

கொதித்துக் குழம்பை வாரி இறைக்கும் எரிமலைகள் கூட் டம் கூட்டமாக ஒன்றோடொன்று மோதிக்கொள்வது போல அருக்காணித் தங்கத்தின் உள்ளத்திலே குமுறல்! கொந்தளிப்பு! 

தோழியின் பிணத்தை உற்று நோக்கினாள்! அவளருகே குனிந்து நெற்றியில் ஒரு முத்தம் பதித்தாள்! அவள் கண்களில் இருந்து உருண்ட நீர்த்துளிகள் அந்தத் தோழியின் முகத்தில் பூவரும்புகளாக உதிர்ந்தன! 

அண்ணியார் இருவரும் இருந்த அரண்மனை நோக்கி ஓடி னாள்! அந்தக் திருவிளக்குகளை அணைத்துவிட்ட நெருப்பு கூட தனது வேதனையைக் காட்டிக் கொள்வதுபோலத் தணிந்து எரிந்து கொண்டிருந்தது! வெளியில் நின்றவாறே அண்ணி யார்கள் இருந்த அந்த அரண்மனையின் பாழடைந்த பகுதி களை நோக்கித் தொழுது தரையில் விழுந்து தண்டனிட்டாள்! 

பிறகு கம்பீரமாக எழுந்து நின்றாள் இப்போது அவள் முகத்தில் சோகமில்லை விழிகளில் நீர் இல்லை உறை பெண்மைக்கேயுரிய விட்டு வாளை உருவிக் கொண்டாள் மென்மை விடைபெற்றுக்கொண்டு அந்த அனிச்சமலர் முகத் தில் ஆண்மை குடியேறிக் கொண்டது! 

வாளை ஓங்கியவாறு வளநாட்டுக் கோட்டையை விட்டு நடந்தாள்! அவளைத் தொடர்ந்து அவளது தோழிகளும் வாட் களைக் கைகளில் ஏந்தி நடந்தனர்! 

பிரளயம் ஒன்று பெண்ணுருக் கொண்டது போல நடந்தாள்! 

பூவையரும் பூகம்பமாவாரோ என அதிசயிக்கத்தக்கவாறு நடந்தாள்! 

ஊழித் தீயாக மாறவும் ஒரு தென்றலால் முடியும் என்ப தற்கு உதாரணமாக நடந்தாள்! 

நடந்தாள் நடந்தாள் -நடந்து கொண்டேயிருந்தாள்! 

55. சதிவலைக்குள் சங்கர் 

கோட்டையும் அரண்களும் முற்றாக எரிந்து அடங்கிக் கொண்டிருந்தன. குலவிளக்குகளாகக் குடியேறிய முத்தாயி, பவளாயி இருவரும் முடிவிலொரு பிடி சாம்பல் எனும் வாழ்க்கை நிலையாமைத் தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாகி விட்டனர். சூடப்படாத மலர்கள்! சுவைக்கப்படாத கனிகள்! காதல் தேன் பருகிட – வாழ்க்கை அமுதம் அருந்திட வசந்த காலத்துப் பறவைகளாக இல்லறவானில் மிதந்திட எத்தனை காலம் எனினும் காத்திருப்போம் எங்கள் அத்தான்களுக்காக என்று பொறுத்திருந்த பூங்கொத்துக்களை, பாழும் காலம் அக்கினிக் கரங்களால் கசக்கியல்லவோ எறிந்து விட்டது! 

கலனாகிவிட்ட கோட்டைக்காக கண்ணீர் விடவும், தனது ஆருயிர்த் துணைவியும் தம்பியின் துணைவியும் தணல் வாய் வீழ்ந்ததற்காகத் தவித்துப் புலம்பவும் பொன்னருக்கு நேரமுமில்லை! நினைப்புமில்லை! 

பழிக்குப் பழி வாங்கவேண்டும்- பகைப்புலத்தைப் பாதாள மூலியை வெட்டித் தகர்ப்பது போல் தகர்த்திட வேண்டும்- வளநாட்டுக் கோட்டையை அழித்துவிட்டு – பொன்னர் சங்க ரின் வீரத்துக்கும் மானத்துக்கும் அறைகூவல் விட்டுத் திரும்பி யிருக்கும் பகைவர்கள் தலையூர் போய்ச் சேருவதற்குள் அவர் களின் மரண ஓலையை மதுக்கரைக்கு இப்பாலேயே எழுதி முடிக்க வேண்டும்! 

உலைக்களத்தில் சம்மட்டியடி பட்டுப் பழுக்கக் காய்ச்சிய இரும்பிலிருந்து பறக்கும் – தீப்பொறிகள் போலப் பொன்ன ரின் விழிகளில் கனல் பறந்தது! அவன் நாவில் ருத்ரதாண்டவ மாடிய சொற்களோ ஆமைகளையும் அரிமாக்களாக்கக்கூடிய தாக புழுக்களையும் புலிகளாக்கிடக்கூடியதாக வெளிப்பட்டன! 

“வாளோங்கி நிற்கும் வீரர்களே! வளநாட்டு மண்ணின் பெருமை காத்திட நமது உயிரைத் தூசாக மதிக்கும் இனிய வேளை வந்து விட்டது! என் தம்பி சங்கர், “போர்! போர்!’ எனத் துடித்தபோதெல்லாம், “பொறு! பொறு!” என் அமை திப்படுத்திய நான்தான் அழைக்கிறேன் உங்களை! குன்றுடை யார் குடும்பத்தை அழித்தே தீருவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டு எதிரிக்கு நம்மைக் காட்டிக்கொடுத்த நம்மவர்கள் இருக்கிறார்களே, அந்தத் துரோகிகள்தான் நமது எதிரிகள் வீழ்வதற்கு முன்னால் வீழ்த்தப்பட வேண்டியவர்கள். அந்தக் கயவர்களின் சூதும், சூழ்ச்சியும்,சதியும், சண்டாளச் செயலும், சுக்கல் சுக்கலாக உடைத்தெறியப்படுவதற்கு உகந்த நேரம் வந்துவிட்டதாகவே நம்புகிறேன்! முதியவர் – அறிவில் முதிர்ந் தவர்- ஆற்றலில் சிறந்தவர் அனுபவக் களஞ்சியம் – அமை திக் கருவூலம் அந்த மாயவர் பிணமாக்கப்பட்டுள்ளார் மாற் றான் கோட்டையிலே! விசுவாசத்தின் மொத்த உருவம் நமது தளபதி வீரமலை தலையூர் சிறைச்சாலையில்! தம்பி சங்கரின் கதி என்னவோ தெரியவில்லை! நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் எதிரிகள் நம் கையிலிருந்து தப்பித்து விடுவதற்கு வாய்ப்பு வழங்கும் நேரமாகிவிடும்! புறப்படுவோம்! அந்தப் புல்லர்களை எங்கே சந்திக்கிறோமோ அந்த டத்தை போர்க்களமாக்குவோம்!” 

பொன்னர் அமர்ந்திருந்த அந்த கம்பீரமான குதிரை. கால்கள் இரண்டையும் உயரத் தூக்கிப் பெருமிதமுடன் பெருங் கனைப்புக் கனைத்துக்கொண்டே பாய்ச்சலைத் தொடங்கி விட்டது! அதே வேகத்தில் பொன்னரைத் தொடர்ந்து படை கள் கரையுடைத்துக் கிளம்பிய வெள்ளமெனக் காட்சியளித்தன! போர்முரசின் ஒலி முழக்கம், எரிந்து சாம்பல் மேடாகக் கிடக் கும் வளநாட்டுக் கோட்டையே திரும்ப எழுந்து தலையூரைப் பழிவாங்கப் புறப்பட்டுவிட்டதற்குப் பின்னணி போலத் தோன்றியது! 

அண்ணன் பொன்னர் இவ்வாறு தலையூர்ப் படையைத் துரத்திக் கொண்டு வரும்போது – தலையூர்க் கோட்டையில் வளநாட்டுக் கொடியைப் பறக்க விட்டு விட்டுத் தம்பி சங்கரும் வையம் பெருமானும் வீரமலையும் திரும்பி வந்து கொண்டி ருந்தனர். 

தலையூர் நோக்கி விரைந்து கொண்டிருந்த காளி மன்ன னுக்கு எதிரே சங்கரின் படை வருகிற தகவல் முதலில் தெரி விக்கப்பட்டிருந்தாலும், அப்படை மிக அருகாமையில் வந்து கொண்டிருக்கிறது என்ற இரண்டாவது தகவலும் கிடைத்து விட்டது! வேகமாகச் சென்று கொண்டிருந்த காளி மன்னன், திடீரெனத் தனது கையை உயர்த்தித் தன் பின்னால் வந்து கொண்டிருந்த வீரர்களையும் தளபதிகளையும் நிறுத்தினான். காளி மன்னனின் எண்ணம் என்னவென்று அறிந்து கொள்ள செல்லாத்தாக்கவுண்டரும் மாந்தியப்பனும் அவனருகே சென்று ”என்ன? என்ன? என்ன திடீர் யோசனை?” என்று கேட்டனர். 

“ஒன்றுமில்லை! சங்கரை நேருக்கு நேர் எதிர்த்து வெற்றி காண்பதென்பது ஒருவேளை இயலாமற் போய்விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறேன்!” 

காளி மன்னனே கலங்குகிறான் எனக் கண்ட மாந்தியப்பன், சிறிது கூடத் தயங்காமல் பரபரப்புடன், அப்படியானால் வேறு வழியாக நாம் போய்விடலாமா?’ என்று கேட்டுவிட் டான். அவனது குரலின் நடுக்கத்தைக் கண்ட தலையூர்க்காளி ஏளனப் புன்னகை புரிந்தான் என்றாலும் மாந்தியப்பனின் கோழைத்தனத்தை வெளிப்படையாக இகழ்ந்துரைப்பது அந்தச் சமயத்திற்கு ஏற்றதல்ல எனக்கருதி பேச்சை வேறு திசைக்கு மாற்றினான். 

கோழையுள்ளம் படைத்தவர்களுக்குத்தானே சூதும் சூழ்ச்சி யும் கைவந்த கலையாக இருக்கும் என்பதைத் தலையூரான் அறியாதவனல்லன்! தர்மம், நியாயம், நேர்மை, இவற்றுக்குத் தன் இதயத்தில் முக்கிய இடம் அளிக்க வேண்டுமென்று அவன் உறுதியாக இருந்தபோதெல்லாம் அந்த உறுதியைக் குலைத்துத் தங்களின் சுயநலத்திற்காக அவனைத் தமது கைப்பாவையாக் கிக் கொண்டவர்கள் செல்லாத்தாக்கவுண்டரும் மாந்தியப்ப னும் என்பதை அவன் உணர்வதும், சூழ்நிலைகளின் காரண மாக, உணர்ந்ததை உடனடியாக மறந்து விடுவதும் – நினைத்த தைச் செயல்படுத்த முடியாமல் நிலைகுலைவதும் அவனது வாடிக்கை! அதுவே அவனது அரசியல் வாழ்க்கையுங்கூட! ஆனால் இப்போது தலைக்கு மேல் வெள்ளம் வந்து விட்டது. இனி சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியதுதான் என்ற முடி வுக்கு வந்து விட்டான் தலையூர்க்காளி! எனவே, அவன் செல் லாத்தாக் கவுண்டரைப் பார்த்து,”இந்தத் தருணத்தில் சங்கரை நேரடியாக எதிர்கொள்ளாமல் அவனையும் அவன் படை வீரர்களையும் வீழ்த்தி, வெற்றி காண வழி என்ன?” என்று கேட்டான். 

தனது திறமையிலும் போர்த்தந்திரத்திலும் தலையூர்க் காளி அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பதறிந்த செல்லாத்தாக் கவுண்டர், தன் மனதிற்குள்ளாகவே ஒரு மமதை நிறைந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தார். அவர் சொல்லப் போகும் யுத்த முறை என்ன என்பதைத் தலையூர்க்காளி மிக மிக உன்னிப்பாக எதிர்பார்த்துக் கொண்டு அவரையே இமை கொட்டாமல் நோக்கினான். 

“காளி மன்னா! சங்கரின் புஜபல பராக்கிரமத்தைக் குறைத்து எடை போடாமல், அவனைத் தந்திரத்தால் வெல்லவேண்டு மென்று திட்டமிட்ட உனது அறிவுக்கு என் வாழ்த்துக்கள்! இராமாயணத்தில் வாலியை நேருக்கு நேராக நின்று வதைக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட இராமன் என்ன செய் தான்? தனது வீரத்துக்கும் யுத்த தர்மத்துக்கும் இழுக்கு ஏற் படுமேயென்று கவலைப்படாமலே மறைந்திருந்து வாலியைத் தாக்கி அவனைக் கொன்றான்! மகாவிஷ்ணுவின் அவதார மெனப்படும் இராமச்சந்திர மூர்த்தியாகிய நீயே மறைந்திருந்து என்மீது அம்பு எய்தி என்னை மாய்த்தது நியாயமா என்று வாலி கேட்டபோது, இராமன், தனது செயலுக்கு ஏதோ ஒரு காரணம் கூறவில்லையா? யுத்த தர்மம் தவறவில்லையென்று வாதிடவில்லையா? தெய்வத்தின் திருஅவதாரமான இராமனே யுத்த களத்தில் சூழ்ச்சி முறையைக் கடைப்பிடித்திருக்கிறபோது சாதாரண மானுடர்களாகிய நாம், சூழ்ச்சித் திறனால் பகையை முறியடிப்பது பாபகாரியமல்ல! தர்மம் நியாயம் என்றெல்லாம் அடிக்கடி உன் நெஞ்சத்தில் உருவாகும் குழப்ப அலைகளுக்கு இப்போதாவது ஒரு முடிவு கட்டித்தான் ஆக வேண்டும்!” 

செல்லாத்தாக் கவுண்டர், உபதேச காண்டத்தில் தன்னை மறந்து ஈடுபட்டு விட்டதை உணர்ந்த காளி மன்னன், இடை மறித்து, ‘இப்போது உடனடியாக என்ன செய்யலாம்? அதைச் சொல்லுங்கள்!” என்றான் சற்று சலிப்புடன்! 

வாள் வீச்சிலும், ஈட்டி எறிவதிலும், நேர் நின்று போர் புரிவதிலும் வள நாட்டு வீரர்கள் வல்லவர்கள்! ஆனால் தொலைவிலிருந்து வில்லில் கணை பூட்டி எதிரிகளை வீழ்த் தும் போர் முறையில் நமது தலையூர் வீரர்களே சிறந்தவர் கள்!” என்று தனது சூழ்ச்சிப் புலமைக்கான முன்னுரையை ஆரம்பித்தார் கவுண்டர்! 

“தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை! ஆனால் ஆயி ரம் கணைகளானாலும் அவற்றைத் தன் கையில் உள்ள கேட் யத்தால் தடுத்து நிறுத்தி – வான்மழை போலப் பொழிகின்ற கணைகளையும் வாள் வீசி முறித்தெறிகிற சக்தி படைத்தவன் சங்கர் எனக் கேள்விப்பட்டிருக்கிறோமே!’ என்று எதிர்க் கேள்வி போட்டான் தலையூர் மன்னன்! 

“மன்னா! அதையெல்லாம் நான் யோசிக்காமல் இல்லை! அதையும் யோசித்தபிறகு எனது மூளையில் உதித்த திட்டத் தைத்தான் இப்போது விளக்குகிறேன்!” 

“விரைவாக விளக்குங்கள்!” 

”நாம் இப்போது வீரப்பூர் காட்டின் நடுப்பகுதிக்கு வந்து விட்டோம். இன்னும் சிறிது நேரத்தில் சங்கரின் படையும் இந்த இடத்துக்கு வந்துவிடும். அந்தப் படை வருவதற்கு முன்பு நாமும் நமது படையினரும் புதர்களோடு புதர்களாக – பாறை களோடு பாறைகளாக ஒளிந்து கொள்ள வேண்டும்! சிறு சந்தடியும் இல்லாமல் மிகத் தந்திரமாக இதைச் செய்ய வேண் டும். முன்னேற்பாடாக நமது குதிரைப் படைகளும் தேர்ப் படையும் வேறு வழியில் போக்குக் காட்டி தலையூர் நோக்கிச் செல்ல வேண்டும். தலையூர் படை வேறு வழியாகத் தலையூர் நோக்கிச் செல்கிறது என்ற செய்தி எப்படியும் சங்கருக்கு அவ னது ஒற்றர்கள் மூலம் கிடைக்கும். அதை நம்பி அவன் வீரப் பூர் காட்டில் நாம் வலைவிரிக்கப் போகும் பகுதிக்குப் படை களுடன் வந்து சிக்கிக் கொள்வான். நான்கு பக்கமிருந்தும் புதர்களிலே பதுங்கியுள்ள நமது வில் வீரர்கள் அம்புகளைப் பொழிந்தால் எதிரிகளின் கைகளில் எத்தனை கேடயங்கள் இருந்தாலும் என்ன செய்து விட முடியும்? குழிக்குள் விழுந்து விட்ட யானையைப் போல் சங்கரின் படை இந்த வீரப்பூர் காட்டுக்குள்ளே திக்குமுக்காடத்தான் போகிறது குழிக்குள் கிடக்கும் யானையையாவது சிலநாள் பட்டினி போட்டு அடக் கிப் பிறகு வெளியே தூக்கிப் பழக்குவார்கள்! ஆனால் நாம் தூக்கப்போவது சங்கரின் பிணத்தை! வீரமலையின் பிணத்தை! வளநாட்டு வீரர்களின் உயிரற்ற சடலங்களை!” 

செல்லாத்தாக் கவுண்டர் வெறிச் சிரிப்பு சிரித்துக்கொண்டே இப்படி விளக்கமாக ஒரு வியூகம் வகுத்துக் கொடுத்தார். 

தலையூர்க்காளிக்கு மீண்டும் குழப்பம் மறைந்திருந்து தாக்கி வளநாட்டுப் படையை விரட்டியடிக்கலாம் என்பது சரி.
 
தன்னந்தனியாகச் சங்கரைச் சூழ்ந்து கொண்டு கொல்வது என்பது தர்மமாகப் படவில்லையே என்று முணுமுணுத் தான். தர்ம நியாயங்களைப் பற்றி அவன் அதிக நேரம் சிந் தித்துவிடக் கூடாது என்று அவசரப்பட்ட செல்லாத்தாக் கவுண்டர், “காளி மன்னா! தலையூர்க் கோட்டையில் நமது கொடி மரம் விழுந்து விட்டது என்பதை மறந்துவிடாதே! அந்தக் கொடியை யார் வீழ்த்தியது என்பதையும் மறந்து விடாதே! நீயும் உனது நாட்டு மக்களும் உனக்காகவே எல்லா வித சோதனைகளையும் தாங்கிக்கொண்டு உன் பக்கத்திலேயே இருக்கும் நானும் மாந்தியப்பனும் பொன்னர் சங்கருக்கு அடிமைகளாக இருப்பது என்று நீ முடிவுசெய்து விட்டால் அதற்கு மேல் நான் எதுவும் சொல்வதற்கில்லை!” என வார்த் தைகளில் சூடேற்றினார். உருக்கப்பட்ட ஈயம் வார்க்கப்பட்ட இடத்துக்குத் தகுந்தாற் போல உருமாற்றம் பெறுவதைப் போல தலையூர்க் காளியின் மூளையும் செல்லாத்தாக் கவுண்டரின் திறமைக்கேற்பத் திரும்பிக் கொண்டது! 

அவர் வகுத்த வியூகப்படியே வில்லேந்திய வீரர் படையை புதர்களின் மறைவுகளில் ஒளியச் செய்தான். விற்படை தவிர மற்ற படைகள் வேறு வழியாகத் தலையூர் நோக்கி முரசறைந்த வண்ணம் அணிவகுத்துக் கிளம்பின. தலையூர்க்காளி மலைக் கூடு ஒன்றில் எதிரிப்படையின் எந்தவொரு வீரனின் கண்ணி லும் படாதவாறு ஒளிந்து கொண்டான். செல்லாத்தாக் கவுண் டர், மாந்தியப்பன் இருவரும் நூற்றுக்கணக்கான வில் வீரர் களைத் தங்களைச் சுற்றிலும் நிறுத்திக்கொண்டு பெரும் பாறை களுக்குப் பின்னால் ஒளிந்திருந்தனர். செல்லாத்தாக் கவுண்ட ரின் வில்லில் இருந்து ஆகாயத்தை நோக்கி ஒரு அம்பு எப் போது பறந்து போகிறதோ அப்போது தலையூர் வீரர்கள் வள நாட்டுப் படைமீது அம்புகளைப் புதர் மறைவுகளிலிருந்து பொழிய வேண்டுமென்று ஏற்பாடு! வில்லில் இருந்து அம்பின் நுனிகள் குறி பார்த்து நீண்டிருப்பது போலவே புதர்களுக்கு மறைவிலிருந்த தலையூர் வீரர்களின் விழிகளில் இருந்து கூரிய பார்வைகள் வீரப்பூர் காட்டின் அந்த பயங்கரப் பள்ளத் தாக்குப் பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருந்தன. 

தலையூரில் பெற்ற வெற்றிக் களிப்பு ஒரு புறம் வீரமலையை விடுவித்த பெருமிதம் ஒருபுறம் -,மாயவரை இழந்து விட்ட மனக் கவலை ஒரு புறம் – வளநாட்டு நிலை என் னவோ என்றறியும் ஆதங்கம் ஒருபுறம் -இப்படியொரு கலப் படமான உணர்வுடனே சங்கர், தனது படையை வீரப்பூர் காடு நோக்கி நடத்திக்கொண்டு வந்தான். அப்போது வாய்க்கால் வரப்புகளைத் தாண்டிக்கொண்டும் ஒற்றையடிப் பாதை யில் ஓடி வருவதும் தடுமாறி வயல்களில் இறங்குவதுமாகக் குதிரையொன்றில் வளநாட்டு வீரன் ஒருவன், தன்னை வள நாட்டுக்காரன் என அடையாளம் காட்டிக்கொள்ளும் கொடி யொன்றைக் கையில் தூக்கிப் பிடித்து அசைத்தவாறு அங்கு வந்து சேர்ந்தான். 

”ஒற்றனே! என்ன விசேஷம்?” என்று சங்கர் கேட்டான். படையொன்று முன்னேறும்போது எதிரே என்னென்ன தடைகள் இருக்கின்றன என்பதை அறிந்து வர வழக்கமாக அனுப்பப்படுபவர்களில் ஒருவனே அந்த ஒற்றன். ஒற்றர்களும் மனிதர்கள்தான். அந்த வேலையின் நிமித்தம் அதற்குரிய பயிற்சி களைப் பெறுகிறார்கள். சில நேரங்களில் அவர்களும் தப்புக் கணக்கு போட்டு விடுவது உண்டு! அதற்கு உதாரணம்தான் இந்த ஒற்றன்! செல்லாத்தாக் கவுண்டரின் யோசனையின்படி தலையூருக்கு வேறு வழியாகப் போக்குக் காட்டி அனுப்பப் பட்ட படைகளைப் பார்த்துவிட்டு ஏமாந்துபோன அவன், சங்கரை நோக்கி, ”அரசே! தலையூர்ப் படைகள் அனைத்தும் வீரப்பூர் காட்டுப் பாதையில் வராமல் மயிலம்பட்டியைச் சுற் றிக் கொண்டு தலையூருக்குப் போய்க்கொண்டிருக்கின்றனர்” என்றான். 

அதற்குள் வீரமலை அவனைப் பார்த்து, “ஏன்? எதற்காக? சுருக்கமான வீரப்பூர் பாதையை விட்டுவிட்டு சுற்று வழியில் செல்ல வேண்டிய அவசியம் என்ன?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான். 

“எதிரே வரும் நமது படையை எதிர்ப்பதற்கு பயந்துகொண்டு தலையூர் மன்னன் அந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்” என்று அந்த ஒற்றன், தனது யூகத்தை வெளியிட்டான். சங்கர் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல், “இருக் காது! இதில் ஏதோ சதி இருக்கிறது! மயிலம்பட்டி வழியாக ஒரு பகுதி படையும் மாயனூர் வழியாக மற்றொரு பகுதிப் படையும் போவது போல நமக்குப் போக்குக் காட்டிவிட்டு, திடீரென இருபுறமிருந்தும் வந்து நம்மீது இடுக்கித் தாக்குதல் நடத்துவார்கள்!” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தான். 

அந்த ஒற்றனை விடச் சங்கர் பரவாயில்லை என்றாலும் தலையூர்ச் சதியைச் சரியாகப் புரிந்து கொண்டு பேசவில்லை என்பதே உண்மை! ‘சங்கர் சொல்வது போலவும் நடக்கலாம்! எதிரிகளின் இடுக்கித் தாக்குதலைச் சமாளிப்பதுபோல நமது படையினர் வியூகம் அமைத்துக்கொண்டு அணி வகுக்கட்டும்!” என்று தளபதி வீரமலை ஆணை பிறப்பித்தான். அப்போது சங்கருக்குத் திடீர் என ஒரு சிந்தனை! 

“இடுக்கித் தாக்குதலை நாம் சமாளிப்போம்! எதிரிகளை வீழ்த்துவோம்! அல்லது அவர்களை விரட்டியடிப்போம்! அதில் எந்தச் சந்தேகமுமில்லை! ஆனால் ஒன்று அவர்கள் எறியும் ஈட்டிகள், வீசும் வாட்கள், பொழியும் அம்புகள், மாயவரின் பூத உடலில் பட்டு அந்தப் பொன்னுடலைச் சிதைக்க நேரிட்டால் என்ன செய்வது?” 

சங்கரின் சஞ்சலத்தைப் போக்கத் தளபதி வீரமலை, உடனே பதில் அளித்தான். 

“மாயவரின் உடலை வளநாட்டுக்குக் கொண்டுபோய்த்தான் சமாதி வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத் தைக் கைவிட்டுவிட வேண்டும்.” 

“என்ன தளபதியாரே சொல்கிறீர்? அந்த உத்தமரை பாதி வழியிலேயே போட்டுவிட்டுப் போய் விடுவதா?” 

“நான் அப்படிச் சொல்லவில்லை! வழியிலேயே தக்க இட மாகப் பார்த்து மாயவரின் உடலை அடக்கம் செய்துவிட்டுப் போகலாம் என்பதுதான் என் யோசனை!” 

“அதுவும் நல்ல யோசனைதான்! வீரப்பூர் காட்டுக்குள்ளே பெரிய ஆலமரம் எங்கிருக்கிறதோ அப்படிப் பார்த்து அதனடி யில் மாயவருக்கு சமாதி அமைப்போம்! காரணம், அவர் ஆல் போல் தழைத்த அறிவுச் சுடர்! அதுமட்டுமல்ல, ஆலமரத்து நிழல்தான் பல்லாண்டுகாலம் அவரது கல்லறையின்மீது வெப் பம் படாமல் காத்திருக்கும்.” 

சங்கரின் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் அவனது படைகள் வீரப்பூர் காட்டுக்குள் விரைந்தன. சங்கரின் விருப்பம்போலவே விழுதுகள் விட்டுத் தழைத்துப் படர்ந்து விரிந்து நின்ற ஆல மரத்தடியொன்றும் கிடைத்து விட்டது. 

“இதுதான் பொருத்தமான இடம்! இந்த மரத்து நிழலிலேயே ஆழமாகக் குழி தோண்டுங்கள்” என்று கட்டளையிட்டான் சங்கர்! வீரமலையும் வையம்பெருமானும் மாயவரின் உடலைத் தேரில் இருந்து இறக்குகிற முயற்சியில் ஈடுபட்டனர். குழி தோண்டப்படும் இடத்தில் சங்கர் நின்று கொண்டிருந்தான். அவன் உள்ளம் புலம்பியது. அண்ணன் பொன்னர் இல்லா மல் மாயவரின் சவ அடக்கம் நடைபெறப்போகிறதே என்ப தால் ஏற்பட்ட கலக்கம். எனினும் தன்னைத் தேற்றிக் கொண் டான். மாயவரின் கல்லறைக்கு பொன்னரை அழைத்து வந்து வீர மரியாதை செய்யச் சொல்லலாம் என்பதே அந்த ஆறுதல்! 

குழியை வீரர்கள் ஆழமாக வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது “டங்” என்று ஒரு ஓசை கேட்டது குழிக்குள்ளிருந்து! 

“நிறுத்துங்கள்! வேகமாகவோ முரட்டுத்தனமாகவோ வெட்டாதீர்கள்! மெதுவாகக் கைகளால் தோண்டிப் பாருங்கள், அது என்ன சப்தமென்று!” 

இவ்வாறு பரபரப்படைந்தான் சங்கர்! அவனது உத்திரவுப் படி வீரர்கள், ஓசை வந்த இடத்தில் மெதுவாகத் தோண்டி னர். ஏதோ அந்த மண்ணில் வெள்ளையாக ஒரு பொருள் பளபளத்தது. 

“வையம்பெருமான்! தளபதி! இங்கே வாருங்கள்! வாருங் கள்!” என்று உரத்த குரலில் அழைத்தான் சங்கர்! அவர்க ளிருவரும் மாயவரைத் தேரில் இருந்து கீழே இறக்காமலே அந்தக் குழியருகே ஓடிவந்தனர். அதற்குள் அந்தப் பொருள் குழிக்குள்ளிருந்து வளநாட்டு வீரர்களால் வெளியே எடுக்கப் பட்டு விட்டது. 

வெள்ளிப் பேழை அதனைச் சங்கரின் கையில் வீரர்கள் கொடுத்தார்கள். வீரமலையும் வையம்பெருமானும் வைத்த விழி வாங்காமல் அந்தப் பேழையைப் பார்த்தார்கள். சங்கர், அந்தப் பேழையைத் திறந்தான், திறந்தால்? திறந்தால்? 

ராக்கியண்ணன் தனது மரண சாசனத்தில் குறிப்பிட்டிருந்த அதே மரகதப் பச்சை மாணிக்கக் கிளி! 

சங்கர் உட்பட யாருக்குமே பேசுவதற்குச் சிறிது நேரம் நா எழவில்லை! 

ஆனால் ஒன்று, அவர்களைச் சுற்றியுள்ள பாறைகளின் புதர்களில் தலையூர்ப் படை சூழ்ந்திருப்பதும் அவர்களுக்கு இன்னமும் தெரியவில்லை!

– தொடரும்…

– பொன்னர்-சங்கர் (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1987, குங்குமம் இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *