பைத்தியம்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 24, 2012
பார்வையிட்டோர்: 5,578
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு எனது பால்ய நண்பரும் பக்கத்து வீட்டுக்காரரும் பஞ்சாயத்து உறுப்பினருமான நீங்கள், நான் குடியிருக்கும் இந்தக் குவார்ட்டர்ஸுக்கு வந்தீர்கள். அப்போது இங்கு நடந்ததை மறந்திருக்க முடியாது.
இருந்தாலும் நான் அதை இன்னொரு தடவை சொல்லிவிடுகிறேன். ஒரு சம்பவத்தைக் குறைந்தது இரண்டு நபர்களாவது தங்கள் கண்களாலோ கண்ணாடிகளாலோ பார்த்தால்தான் அதன் பொருளின் தும்பாவது கிடைக்கும். அதனால் இப்போது என்னுடைய வார்த்தைகளுக்கு நீங்கள் காதுகொடுத்தே ஆக வேண்டும்.
நீங்களும் உங்கள் கூட்டமும் அன்று காலையில்தான் இங்கே வந்து கதவைத் தட்டினீர்கள். நான் கதவைத் திறந்தேன்.
நீங்களும் உங்கள் கிங்கரர்களும் தண்ணீரைத் திறந்துவிட்டதுபோலப் பேசினீர்கள். நான் கொஞ்சம் பதறித்தான் போனேன். பதற்றம் மட்டுப்பட்டதும் உங்களுடைய வார்த்தைகளிலிருந்தும் மற்றவர்களின் வார்த்தைகளிலிருந்தும் எனக்கு இரண்டு விஷயங்கள் புரிந்தன. ஒன்று: என்னுடைய சகோதரியின் பைத்தியம் முற்றிவிட்டது. இரண்டு: அவளைப் பக்கத்திலிருக்கும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்க நான் உங்களுக்கு உதவ வேண்டும்.
நான் சொன்ன பதில் இப்போதும் ஞாபகமிருக்கிறது. என்னுடைய சகோதரியின் நோயைப் பற்றி என்னைவிட உங்களுக்கு அதிகம் தெரியும் என்ற பம்மாத்து மனத்திலேயே இருக்கட்டும். அவளுக்கல்ல; அவளுக்காக வசூலித்து, நிதிதிரட்டி காரும் கோலாகலமுமாக வந்திருக்கும் உங்கள் எல்லாருக்கும்தான் பைத்தியம்.
அப்போது ரோட்டோரம் நிறுத்தியிருந்த காரில் உட்கார்ந்து சங்கிலியை நொறுக்கக் கூப்பாடுபோடும் சகோதரியை நோக்கி நீங்கள் விரலை நீட்டினீர்கள். நான் சொன்னேன்: ஒன்றும் தெரியவில்லையே. இந்தச் சமயத்தில் உங்களுடைய ஆச்சரியமும் வேதனையும் நிரம்பிய கேள்வியைக் கேட்டுக் கொஞ்சம் வெளிறிப் போனாலும் முற்றிலும் நாடகத்தனமாகக் கதவைச் சாத்தி நான் தப்பித்தேன்.
– என்னைப் பற்றிய எல்லா எண்ணங்களையும் குப்புறத் தள்ளியது இந்தச் சம்பவம்தான், இல்லையா? நான் செய்தது அசல் காட்டுமிராண்டித்தனமாகப் போயிற்று என்றும் வேறு ஏதாவதும் உங்களுக்குத் தோன்றலாம். சாமான்யமாக நல்ல வேலையும் அழகியும் வேலைக்குப் போகிறவளுமான ஒரு மனைவியும் கைக்கு வந்தபோது நான் நிலைமறந்துவிட்டதாகவும் உங்களுக்கு ஆட்சேபமிருக்கலாம். இது எதற்கும் நான் தற்போது பதில் சொல்லப் போவதில்லை. அந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.
உண்மையில் நான் அப்போது என்ன செய்தேன் என்று சட்டென்று எனக்கே புரியவில்லை. சங்கதி பிடிபட்டபோது எனக்கு என்னைப் பற்றியே பெரும் மதிப்புத் தோன்றியது. நான் மிகவும் புத்திசாலித்தனமாகவே நடந்து கொண்டிருந்திருக்கிறேன். நான் என்னையே பாராட்டிக்கொண்டேன்.
நான் சொல்வது புரியக் கூடியதாக இருக்காது. எனவே, நான் எல்லாச் சங்கதிகளையும் இன்னொரு தடவை சொல்லிவிடுகிறேன். உங்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்பதும் மனத்தின் திசையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதும் இந்தத் தற்பேச்சின் நோக்கம்.
அன்பு நண்பரான நீங்களும் ஊர்க்காரர்களும் சொன்னதுபோலச் செய்திருந்தால் எனக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று உங்களில் யாராவது ஒருவர் யோசித்தீர்களா?
நான் உங்களுடன் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வந்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் குடியிருக்கும் குவார்ட்டர்ஸிலிருந்து ஆஸ்பத்திரிக்கு அதிகத் தூரமில்லை. அதனால் இங்கே இருப்பவர்களும் சங்கதியைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு உண்டு. யாருக்கும் தெரியாமல் போனாலும் அவார்ட் வாங்கிய படைப்புகளிலிருந்து வரிகளையும் வாசகங்களையும் வெகு திறமையாகத் திருடி, கதை எழுதும் அந்த இலக்கியவாதி மோப்பம் பிடித்துத் தெரிந்துகொள்ளாமல் இருக்கமாட்டார். அத்தோடு குவார்ட்டர்ஸில் குடியிருப்பவர்கள் எல்லாருக்கும் தெரிந்துவிடும். கிருஷ்ணன் மாஸ்டரின் சகோதரிக்குப் பைத்தியம்.
இதனாலெல்லாம் பெரிய பிரச்சினையில்லை என்று தோன்றலாம். ஆனால் அடுத்த படி ஆபத்துக்குத்தான் அழைத்துச் செல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். குவார்ட்டர்ஸ்காரர்களில் பலரும் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள்.
அவர்களில் சிலராவது எனக்கும் என் சொந்தக்காரர்களுக்கும் நடுவிலிருக்கும் இடைவெளியைக் கவனிக்காமல் இருக்கமாட்டார்கள். பைத்தியக்காரியின் காரியம் போகட்டும். அவளைப் பராமரிப்பதற்காகக் கூடவே இருப்பவர்களால்தாம் பிரச்சினை. அவர்களுடைய தோற்றமும் என்னுடைய தோற்றமும் ஒப்பீட்டுக்கு இலக்காகும். அத்தோடு குவார்ட்டர்ஸ்காரர்கள் தம்மையறியாமல் சொல்லித் தொலைப்பார்கள்: கிருஷ்ணன் பிசகாகப் பெரிய மாஸ்டர் என்றாலும் அவருடைய சொந்தக்காரர்கள் எல்லாம் தாழ்ந்த சாதிக்காரர்கள்.
சங்கதி வெட்கக் கேடானது என்று சொல்ல வேண்டியதில்லையே. ஆனால் அதையும் நான் சகித்துக்கொள்ளத் தயார். அப்போதுதான் இன்னொரு பிரச்சினையின் நெருப்புக் கண்களுக்கு முன்னால் அகப்படுகிறேன்.
என் சகோதரி நோயால் பீடிக்கப்பட்டு இவ்வளவு பக்கத்திலுள்ள ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கும் நிலையில் அவளைப் பார்க்க என் மனைவி போக வேண்டும் என்றுதான் யாரும் சொல்லுவார்கள். எனக்கும் மாறுபட்ட அபிப்பிராயம் கிடையாது. ஆனால் என் மனைவி கணவனின் உறவுக்காரர்களை வெளிப்படையாக வெறுப்பவள். ஆரோக்கியமானதல்லவென்றாலும் அவளுடைய இந்த எதிர்வினை இயல்பானதும் உண்மையானதும்கூட. தாழ்த்தப்பட்டவள் என்று ஒருபோதும் தோன்றாத நிறமும் அழகுமுள்ள அவள், வாய் வெடித்துச் செத்த மாட்டைத் தின்று வாழ்ந்தவர்களின் வாரிசுகளை அருவருப்புடன் பார்ப்பதில் பெரிய அநாகரிகமொன்றுமில்லையே.
சங்கதி இப்படித்தானென்றாலும் இவளை எப்படியாவது வாயடக்கி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகலாம். என் வகையறாக்களின் பண்பாடில்லாத நடத்தை பற்றி அவதூறு சொல்லும்போது செவிடனைப் போல நின்றுகொண்டால் அவளாகவே ஓய்ந்துவிடுவாள். அந்த நேரம் அவளைக் கட்டிப்போடவோ பழக்கப்படுத்தவோ செய்யலாம்.
ஆனால் நான் இனிமேல் ஒருபோதும் வெளியேற வழியில்லாத இன்னொரு பிரச்சினையின் சிறைக்குள் அகப்பட்டுக்கொள்கிறேன். அந்தப் பக்கமிருக்கும் கதவைத் திறப்பவள் எங்களுடைய ஒரே மகள். இவளுக்கு அசாதாரணமான குணம். தோற்றத்திலும் பார்வையிலும் அவளுடைய அம்மாவின் சின்னப் பதிப்பு. இவளைப் பார்க்க வந்த என்னுடைய அம்மா அனுபவித்த அவமானமும் வேதனையும் உங்களுக்குத் தெரியுமா? இல்லையே? சொல்கிறேன்.
பல வருடங்களுக்கு முந்தைய சம்பவம். அன்று நாங்கள் இங்கே குடியிருக்கத் தொடங்கி ஐந்தாறு வருடங்களாகியிருக்கும். அம்மா, நமது மானேஜரின் டீக்கடையிலிருந்து நாலைந்து பப்பட வடைகளைப் பொட்டலம் கட்டிக்கொண்டு பேத்தியை ஒரு பார்வை பார்த்துவிடலாமென்று ஆவலோடு இங்கே வந்தாள். அன்று மகளுக்கு ஆறு வயது. அம்மா பல தடவை கூப்பிட்டும் நான் கோபித்துக் கொண்டும் என் மகள் தன்னுடைய பாட்டியின் பக்கத்திலேயே போகவில்லை. வெளிக் கதவை இழுத்து மூடிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் அருகிலிருக்கும் தோழியின் குவார்ட்டர்ஸுக்கு ஓடிப் போனாள்.
அம்மா போய்விட்ட தகவல் கிடைத்த பிறகுதான் திரும்பி வந்தாள். அப்போது நான் அவளிடம் எதுவும் சொல்லவில்லை. குழந்தையாயிற்றே? அதைத் தவிர, அம்மா பக்கத்திலும் தப்பு இருப்பதாகத் தோன்றியது. முதல் தடவையாக அவள் அம்மாவைப் பார்க்கிறாள் என்பது அத்தனை பெரிய பிரச்சினையாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அம்மாவும் கொஞ்சம்கூட வெளுத்ததும் சுத்தமானதுமான முண்டும் பிளவுசும் உடுத்திருந்திருக்கலாம். அதுவுமில்லாமல் அம்மாவுக்கு அவ்வளவு நிறமும் இல்லையே. மகளுக்கு கறுப்பு நிறத்துடன் பழக்கமேயில்லை. நகரத்தில் பெரிய ஜவுளிக் கடைகளின் முன்னால் நிறுத்தியிருக்கும் பூலோக தேவதைகளின் நிறமுள்ளவர்கள்தாம் மகளின் தோழிகளில் அதிகமானவர்களும்.
இதுபோன்ற பிரச்சினைகள் சிக்கல்களாவது என்னுடைய கையாலாகாத்தனத்தால்தான் என்று உங்களுக்கெல்லாம் தோன்றலாம். ஆனால் உண்மையில் கையாலாகாத்தனத்தின் பிரச்சினை இதில் உள்ளடங்கியிருக்கவில்லை.
என் மனைவிக்கும் மகளுக்கும் சொல்லும்படியான குணக்கேடுகள் எவையுமில்லை. அவர்கள் என்னுடைய ஆட்களை வெறுப்பது ஆத்மார்த்தமாகத்தான். மனைவியால் என்னுடைய ஆட்களைக் கொள்கை அடிப்படையில் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். மகளுக்கு அம்மாவின் கொள்கைகூடக் கிடையாது. அதிகாரிகளும் ஓரளவுக்கு வசதியானவர்களுமான பெற்றோரின் மகளாக வளர்ந்து பெரியவளான என் மனைவிக்கு உலக அறிவு மிகவும் குறைவு.
மகளின் விஷயம் மேலும் சிக்கலானது. அவள் பிறந்ததும் வளர்ந்ததும் மேல் நடுத்தர வர்க்கத்துக்காரர்களின் குவார்ட்டர்ஸில் ஆயிற்றே? இங்கே கறுப்பானவர்களாகவும் அழுக்கு உடை அணிபவர்களாகவும் அவள் பார்த்திருப்பது கூலிக்காரர்களான தமிழர்களையும் பிச்சைக்காரர்களையும்தாமே. கஷ்டகாலத்துக்கு என் உறவுக்காரர்களும் அவர்களுடைய நிறத்தில் இருந்தார்கள்.
என்னுடைய மனைவியும் மகளும் வராவிட்டாலும் ஏன் நோயாளியான என்னுடைய சகோதரியை நானாகப் போய்ப் பார்க்கக் கூடாது? இந்தக் கேள்விக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் என்னுடைய நிராதரவான நிலைமை ஏன் உங்கள் எல்லாருடைய கடின இதயங்களைத் தொடுவதேயில்லை என்ற எதிர்க்கேள்வியை நான் கேட்கிறேன்.
நான் என் சகோதரியை ஆஸ்பத்திரியில் சேர்க்கவும் பராமரிக்கவும் தயாரானால் குடும்பக் கலவரம் நிச்சயம். என் மனைவிக்கும் மகளுக்கும் கோபம் வந்தால் அவர்களைப் பார்க்கவே சகிக்காது. இவர்களை எப்படியாவது சகித்துக்கொள்ளலாம் என்று நினைத்தாலும் பயனில்லை. கேலியின் கண்ணாடி வழியாக என்னைப் பார்க்கும் தெரிந்தவர்களிடமிருந்து நான் எப்படித் தப்புவது? ஊர்க்காரர்கள் நிதி திரட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்த பைத்தியக்காரியின் சகோதரன்தான் நான் என்று தெரியவருவது எனக்குப் பெரிய அவமதிப்பாகிவிடும். ஏற்கனவே குற்றவுணர்வால் கூனிக் குனிந்தும் நொண்டியும்தான் என்னுடைய நடை. அதற்குமேல் இதுவும் சேர்ந்தால்…
— இல்லை, நான் ஒரு தவறும் செய்யவில்லை.
மேலும் ஒரு கேள்வியைக் கேட்பதும் நானேதான்.
என்ன இருந்தாலும் சுகமில்லாத சகோதரி ஆஸ்பத்திரியில் படுத்துக்கிடக்கும்போது ஒரு தடவையாவது போய் அவளைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவளுடைய சகோதரனுக்கில்லையா?
நெருக்கமானவர்களும் பழகியவர்களும் நோயாளியைப் போய்ப் பார்ப்பது என்பது பயன் தருவதுதான் என்று ஒப்புக்கொள்ள எனக்கும் தயக்கமெதுவும் இல்லை. இது போன்ற சந்தர்ப்பங்களில் மனிதாபிமானத்தின் அகல் விளக்குகளும் பண்பாட்டின் அகல் விளக்குகளும் சுடர்விட்டு எரியும் என்பதை நானும் புரிந்துகொண்டிருக்கிறேன்.
ஆனால் தற்போது அதைச் செய்யும் எண்ணமும் எனக்கில்லை. நான் கெட்டவனாக மாறிவிட்டதுதான் காரணம் என்று நினைக்க வேண்டாம். பைத்தியக்காரியான சகோதரியை நான் போய்ப் பார்த்து எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவளுக்கு என்னை அடையாளம் தெரிந்துகொள்ள முடியாது. அதனால் என்னுடைய சந்திப்பு அவளுக்கு ஒரு பொருட்டில்லை. பயனில்லாத வேலையைச் செய்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனமல்ல என்று எனக்குத் தோன்றியது. எனக்குக் கொஞ்சமாவது புத்தியிருக்கிறது என்று ஒப்புக்கொள்ள உங்களுக்குத் தயக்கமிருப்பதாகத் தோன்றுகிறது. இல்லையென்றால், காரில் உட்கார்ந்து கூப்பாடு போடும் சகோதரியைப் பார்த்தும் ‘ஒன்றும் தெரியவில்லையே’ என்று நான் சொன்னபோது ஆச்சரியமும் வேதனையும் நிரம்பிய குரலில் எனது பால்ய நண்பரான நீங்கள் இப்படிக் கேட்டிருக்கவே மாட்டீர்கள்: “கிருஷ்ணன் குட்டி, உனக்கும் பைத்தியமா?” எனக்கு எந்தக் கோளாறுமில்லை என்று இப்போதாவது தெளிவாகியிருக்குமே.
– மலையாளச் சிறுகதை – சி. அய்யப்பன், தமிழில்: சுகுமாரன், மே 2012