கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 11, 2025
பார்வையிட்டோர்: 3,236 
 
 

அத்தியாயம் 1.4-1.6 | அத்தியாயம் 2.1-2.3 | அத்தியாயம் 2.4-2.6

2.1 மலர்

தாயின் புனிதமான அன்பை ஆண்டவன் அடியிணையில் ஏற்படும் ஆனந்தத்துக்குச் சமமாக, அறிந்தோரால் தான் உணர முடியும். தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் சண்டமாருதமும் தென்றலும் கலந்து வீசும். மென்மையுடனும் தூய்மையுடனும் ஆழமும் சுழிகளும் இட்டு ஓட்ம். பனிக்கட்டியை ஒத்த ஜிலு ஜிலுப்புடன் கூடக் கொதி நீரில் பொங்கும் ஆவியும் தாயன்பில் பிணைந்து நிற்கும். கற்கண்டின் இனிமையுடன் கடலுப்பின் உவர்ப்பும் போட்டி போடும். முற்றும் அறியாத அஞ்ஞானிக்கும் நீரின் ஓட்டத்துக்கும் கம்பீரம் கொடுக்க ஆழமும் சுழலும் அவசியம் என்றும், சண்டமாருதம் இன்றித் தென்றலின் சுகம் அனுபவிக்க முடியாது என்றும் தெரியாது. கற்கண்டைச் சுவைத்து உப்பைத் தூவென்று துப்பும் இயல்பு வாய்ந்த குழந்தையால் எல்லையில்லாத, ஒப்புவமை கூற இயலாத உயர்தரமான தாயுள்ளத்தை உண்மையாக அறிய முடியாதுதான். என் நலனுக்காகவும் மேன்மைக்காகவுமே என்னைக் கண்டிக்கவும் கோபிக்கவும் அம்மா முன் வருகிறாள் என்ற உண்மை எனக்கு ஒரு போதும் உறைத்ததில்லை.

“உனக்கு ஜகதுவும் தங்கமுந்தான் உயர்த்தி! அவர்கள் தாம் சாதிக்கப் போகிறார்கள்! என்னை இப்படிக் குட்டுவதைப் போல் அவர்களை நீ விரலாலாவது தொட்டிருக்கிறாயா? இப்படி வேண்டாப் பெண்ணாக நடத்துவதை விடக் குளத்தில் கிணற்றில் அப்போதே தள்ளியிருப்பதற்கு என்ன?” என்று பிஞ்சில் பழுத்த பழமாகப் பேசும் போது அவள் இருதயம் நோகும் என்று நான் உணர்ந்ததில்லை. என் முற்றாத இருதயம் இப்படி ஆத்திரத்தில் நொந்து வார்த்தைகளைக் கொட்டியதற்குக் காரணம், அவளுடைய அன்பில் என் சகோதரிகளுக்கும் எனக்கும் ஆனைக்கும் பூனைக்கும் உள்ள வித்தியாசம் இருந்ததுபோலத் தோன்றிய தோற்றந்தான். அவள் காட்டிய அன்பிலே வித்தியாசம் கண்ட நான், அவர்கள் வளர்ந்த விதத்திற்கும், நான் வளர்ந்த விதத்திற்கும் இடையே இருந்த வேற்றுமையைக் காணும் சக்தி படைத்திருக்கவில்லை.

பள்ளிப் படிப்பு முடியும் வரையில், வீட்டு வேலை என்றால் என்ன என்பதையே நான் அறிந்திருக்க மாட்டேன். பொழுது விடிந்தால் பள்ளிப் பாடம் தயாரித்துக் கொள்ளவும், பாட்டு வாத்தியாரிடம் உட்காரவுமே எனக்கு நேரம் சரியாக இருக்கும். என் துணிமணிகளைப் பிறர் கவனிக்க வேண்டும். நான் சாப்பிட உட்காரும் போதே அம்மா தலைவாரிப் பின்னி விட வேண்டும். பள்ளிக்குக் கிளம்பு முன் தயாராக இடைவேளை உணவு கட்டி வைத்திருக்க வேண்டும். தள்ளாமையால் அம்மா சில சமயங்களில் முணுமுணுப்பாள். அப்பாவின் சலுகை எனக்கு அதிகம் என்று குற்றமும் சாட்டுவாள். அந்தச் சமயங்களில் அவள் உள்ளத்தை அறியாத நான், ஏதோ கடனே என்று எனக்கு எல்லாம் செய்ததாகப் பிரமை கொள்ளுவேன்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் அம்மாவின் குணம் ராட்சச குணமாகத் தோன்ற எனக்குச் சந்தர்ப்பங்கள் உதவின. அத்தனை நாட்களுக்குப் பின் என்னைப் பழி வாங்குவது போல, காலை வேளையில் குளித்துவிட்டு, வீட்டு வேலைகளை நானே செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டாள். சரியாகச் செய்யாவிட்டால் கோபிப்பாள். நான் வாயாடி அடித்தால் அடிக்கவும் அடித்து என்னை அடக்கினாள். அறியாமை அகலாத நான் எனக்கு அவள் மீது பாசமே இல்லை என்று மட்டுமல்ல, இந்த வீட்டை விட்டுப் போய்விட்டால் வருந்தி வருந்தி அவள் அழைத்தால்ம் வரக் கூடாது என்று முடிவு கட்டியிருந்தேன்.

அந்த வேளை எனக்கு வந்து விட்டது. என்றென்றைக்கும் நான் வேறொரு புது வீட்டிற்கு, புது மனிதர்களின் நடுவே புது அன்புப் பிணைப்பில் குடிபுகப் போகிறேன்.

உறுதியும் வைராக்கியமும், உண்மையை அஸ்திவாரமாகக் கொண்டு வளம் பெற்ற மனத்திலே எழுந்தால் தான் நிலைநிற்கும். அப்படி இருக்க, என் உள்ளமோ முற்றாதது. என்னுடைய முடிவில் பிரமையில் எழுந்தது, எப்படி நிலைநிற்கும்? நான் புக்ககம் செல்லும் வேளை நெருங்க நெருங்க என்னை மூடியிருந்த அஞ்ஞானமும் பிரமையும் விலக ஆரம்பித்தன. அவள் எதுவும் கோபித்தால் இனி நெஞ்சு புண்ணாகும்படி, சுடச்சுட ஏதும் பேசக் கூடாது என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் அம்மா என்னைக் கோபிக்கும் சந்தர்ப்பமே வரவில்லை. “இன்னும் கொஞ்ச நாள் தானே? அந்தப் பாட்டைப் பாடு; இந்தப் பாட்டைப் பாடு; அடுப்புப் பக்கம் நீ வர வேண்டாம்” என்று என்னை உள்ளூற வெட்கமுறச் செய்தாள்.

ஏற்கனவே கல்யாணத்தின் அபாரச் செலவினால் அப்பா ஒரேயடியாகக் கூனிக் குறுகியிருந்தார். அதனுடன் அத்தையின் உதவியும் இன்றி அவர் மேலும் நெருக்கிய செலவுகளைச் சமாளிக்க அம்மாவின் ஒத்துழைப்பும் பரிபூரணமாகத் தேவையாக இருந்தன. அவளுடைய உடமைகள் முழுமையும் என்னைக் கணவன் வீடு கொண்டு விட வேண்டிய புதிய செலவுகள் கபளீகரம் செய்து விட்டன. வெறும் மஞ்சள் சரட்டுடனும் கம்பி வளையலுடனும் அவள் வளைய வரும் போது, என் குற்றமுள்ள நெஞ்சம் “அம்மா” என்று கட்டிக் கொண்டு கதற விழைந்தது. இதெல்லாம் என்ன கொள்கைகள்? தாயும் தந்தையும் ஆசையுடன் தங்கள் சக்திக்கு உகந்தபடி பெண்ணுக்குப் பரிசுகள் வழங்க வேண்டியிருக்க, இப்போது இப்படி நிர்பந்தமாகவும் கஷ்டப்பட்டுக் கொண்டும், கடன் பட்டுக் கொண்டும் செய்தே தீர வேண்டும் என்ற கடும் சம்பிரதாயமாக ஆகிவிட்டதே! இந்தப் பாசி படிந்த கொடிய சம்பிரதாயங்களை ஒழிக்க ஏன் யாரும் முன் வரவில்லை? பெண்ணிடம் உள்ள ஆசையும், அன்பும் குன்றும்படி இந்தச் சீர்ப் பிரச்சனைகள் மலை போல் அல்லவோ நிற்கின்றன?

நானாகவே, “கெட்டிச் சரிகைப் புடவை வேண்டாம், அம்மா. இது போதும். பாத்திரம் பண்டங்கள் தாம் வேண்டாம் என்றார்களே. வேணுமானால் நான் எழுதுகிறேன். பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றெல்லாம் மிகமிகக் குறைந்த செலவிலேயே என் தேவைகளை நிரப்பிக் கொண்டேன்.

‘அவரிடம் இந்த அசட்டுக் கொள்கைகளையும் அப்பாவின் நிலைமையையும் விளக்க வேண்டும். இதுவரை யாருமே கண்டிராதபடி புதுமையாக, எனக்காகச் செலவழித்து விட்டுக் கடனடைக்க வகையறியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் அப்பாவுக்கு வரதட்சிணைப் பணத்தையாவது திருப்பி விடும்படி என் கணவரிடம் வேண்டிக் கொள்வேன். சுசீலா – ராமநாதன் என்றாலே அப்பா, அம்மா, ஏன் ஊர்க்காரர்களுக்குக் கூடப் பெருமை பொங்கும்படி என்னால் செய்து விட முடியும்’ என்றெல்லாம் மனக்கோட்டை என் அந்தரங்கத்தில் உயிர் பெற்றது.

ஆயிற்று. வாசலில் வண்டி கூட வந்துவிட்டது. என்னைக் கொண்டு விட்ட பின் அப்பாவால் ஒரு நாள் கூடத் தங்க முடியாது. அன்று மாலையே திரும்பி விட வேண்டும். அவர் கஷ்டத்தைக் கண்ணுற்ற போது, என் இன்ப துன்பம், அபிலாஷைகள் எல்லாமே கரைந்து விட்டன. “பெண்களுக்காக உடலை ஓடாக உழைத்து உழைத்து அவர் என்ன பயன் காணப் போகிறார்? நாம அவர் கஷ்டத்துக்குப் பிரதியாக என்ன செய்யப் போகிறோம்? ஒரு நாளைக்கு அன்பாகக் கூப்பிட்டு மனம் குளிர உபசரிக்கக் கூடப் பிறர் முகத்தைக் கவனிக்க வேண்டி இருக்கிறது” என்று ஜகது சொல்வது வழக்கம். புறப்படும் சமயம், ‘நான் அப்படி இருக்க மாட்டேன். என்னுடைய வீட்டார் முன்னேற்றம் அடைந்தவர்கள். எனக்குச் சகல சுதந்திரங்களும் இருக்கும். ஏன் ‘ரிடையரா’கி விட்டால் அப்பாவை என்னிடமே கூட வைத்துக் கொள்வேன்!’ என்று பெருமிதத்துடன் எண்ணிக் கொண்டேன்.

“போய் வருகிறாயா அம்மா சுசீ? சமர்த்தாக இரு. கடிதாசி போடு அடிக்கடி” என்று அம்மா கூறி என் நெற்றியில் சுவாமி விபூதியை இட்ட போது என் கண்கள் கலங்கி விட்டன. வெற்றிலை பாக்குப் பெற்றுக் கொண்டு, எல்லோரையும் வணங்கினேன். கடைசியாக அதுவரையில் ஆடி ஓடி வளர்ந்த வீட்டிலிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.

அப்பா வண்டியருகில் நின்றார். நான் ஓர் எம்பு எம்பி வண்டியில் ஏறப் போனேன். புடவையின் ஓரம் பாதம் வைக்கும் விளிம்பில் மாட்டித் தாறாகக் கிழிந்தது.

“மெதுவாக ஏறக் கூடாது?” என்று அப்பா கடிந்து கொண்டார்.

“என்ன? புடவையைக் கிழித்துக் கொண்டாளா. புறப்படும் சமயம் பார்த்து? கொஞ்சங் கூட நிதானம் கிடையாது! இறங்கி வா, ஒரு தம்ளர் தீர்த்தம் சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்றாள் அம்மா, கோபமும் பதைபதைப்பும் கலந்த குரலில்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. வண்டிக்கு நேரமாகி விட்டது. விடப்பா வண்டியை!” என்று அப்பா வண்டியில் ஏறிவிட்டார். சதங்கை ஒலிக்க வண்டி கிளம்பி விட்டது. பக்கத்து வீட்டில் நின்றிருந்த ஜானி உட்பட எல்லோருக்கும் “போய் வருகிறேன்!” என்று கத்தினேன். தெரு மறையும் வரை அம்மா, ஜகது, சுந்து, ஜானி எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என் பார்வையிலிருந்து மறைந்த பின் தான் கிழிந்த புடவையின் ஓரம் என் கண்களில் உறுத்தியது.

புறப்படும் சமயத்திலே இது ஏன் கிழிய வேண்டும்?

என் உள்ளத்து ஒலியிலே கீறல் விழுந்து விட்டது.

ஊர்வலத்தின் இறுதியில் குமுறிய வானம், அந்தப் பாட்டு, இதோ புடவைக் கிழிசல்! இதெல்லாம் என்ன? வருங்காலத்தில் நிகழக் கூடிய சம்பவங்களை அறிவுறுத்தும் சூசகமோ?

வண்டியின் ஓட்டத்தில் ஒரு குலுக்கல் உள்ளத்துடன் உடலும் குலுங்கியது. மண்டை ‘நங்’கென்று பிரம்புச் சட்டத்தில் இடித்தது. நான் கையில் பிடித்திருந்த கூஜா நழுவிச் சாய்ந்தது.

“சற்று மெதுவாக ஓட்டப்பா” என்றார் அப்பா. வண்டிக்காரனைப் பார்த்து. தெளிவாகச் சிந்திக்கவே முடியாதபடி புகையைப் போல் என் மனதை நினைவுகள் கப்பிக் கொண்டன.

அவள் ஏன் அந்தப் பாட்டைப் பாட வேண்டும்? வேறு நல்ல பாடல்கள் எத்தனையோ இல்லையா? அப்போதுதான் கட்டும் புடவை சற்று மாட்டிக் கொண்டதை வியாஜமாகக் கொண்டு கிழிய வேண்டுமா? இத்தனைக்கும் புடவை நைந்ததன்று. பழசு இல்லை; இரண்டு நனைப்புகளே ஆகியிருக்கும் புதுப் புடவை.

முன் காலத்துக் கதைகளில் எல்லாம் வருமே, போர் வீரனைப் போருக்கு அனுப்பு முன் மனைவிக்கு ஹாரத்தி தாம்பாளம் கீழே விழுந்தது, மலர் மாலை வாடியது என்று; அவள் துணுக்குறுவாள். அவன் ‘சகுனமாவது மண்ணாவது! பீதியிலே கை நடுங்கித் தாம்பாளத்தைக் கீழே போட்டிருப்பாய்’ என்று சமாதானம் சொல்லிவிட்டுப் போவான். கடைசியில் முக்காலும் சகுனமே பலிக்கும். அவன் திரும்பியே வரமாட்டான். எப்படியாவது இதெல்லாம் மூட நம்பிக்கை என்று ருசுப்படுத்தும்படி பலியாமல், நல்லது நடந்திருக்குமோ? ஊஹூம், அல்லவே இல்லை!

அப்படியானால் இவை எதைக் குறிக்கின்றன?

“அவள் இந்தப் பெண்ணை ஆட்டி அம்பலத்தில் வைத்து விடுவாள்!”

அத்தையின் வார்த்தைகள் என் காதுகளில் ரீங்காரம் செய்தன. ‘என்னை என்ன ஆட்டி வைப்பது அவள்? கிராமாந்தரமாக இருந்தால் அந்தக் காலத்தில் சொல்லுவார்கள்; புது மாட்டுப் பெண் பேசக் கூடாது, வாயிலில் வரக் கூடாது, வீட்டுப்பாடு என்று உழைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அதற்கெல்லாம் இங்கு இடம் இல்லையே! மேலும் அன்று ஒரு நாழிகை உடல் நலம் கெட்டதற்கு அம்மாவைக் குற்றம் சொன்ன அவர், அவள் ஆட்டி வைக்கப் பார்த்துக் கொண்டு கல்லுப் பிள்ளையாராக இருப்பாரா?’

‘இதெல்லாம் சுத்த மனப்பிரந்தி காக்கை உட்காருவதும் பனம்பழம் விழுவதும் போல சில சமயங்களில் சில நிகழ்ச்சிகள் மனக் குரங்குகள் இணைந்தாற் போல அமைந்து விடுகின்றன. இதை வைத்துக் கொண்டு மனத்தில் அசட்டு எண்ணத்தை வளரவிட்டுச் சந்தோஷத்தைக் குறைத்துக் கொள்வார்களா? இப்படி நான் முட்டாள்தனமாக எண்ணினேன் என்பதைக் கேட்டால் கூட அவர் நகைப்பார்!’

மழையுடன் சில சமயங்களில் வெயிலும் கலந்து அடிப்பது உண்டு. எந்த நிகழ்ச்சியையும் ஆழத்திலே அமுக்கி ஜீரணித்துக் கொள்ளச் சக்தியில்லாத பொறுமையற்ற இயல்பு படைத்த மனம் மாறி மாறி எண்ணமிட்டது. புங்கனூரிலிருந்து தஞ்சாவூர் ஜங்ஷன் வந்து தான் நாங்கள் சென்னை வண்டி ஏற வேண்டும். நல்லவேளை மாலையிலேயே இருட்டுகிறதென்று புறப்பட்டு விட்டோமே ஒழிய ஜங்ஷனில் அடைத்துக் கொண்டிருந்த ஜனக் கும்பலில் நாங்களும் இருவராக அமர்ந்து கொண்டோம். அப்போது எனக்கு மூர்த்தியுடன் சுகமாக மேல் வகுப்பில் பிரயாணம் செய்ததும், பெங்களூரில் சகல வசதிகளுடன் கூடிய ‘வெயிட்டிங் ரூமி’ல் இளைப்பாறியதும் தென்றலின் குளுமை போல நினைவில் பரவின. ஒருவேளை அடுத்த தடவை சென்னையிலிருந்து அவருடன் வரும்போது அப்படி வருவேனோ என்னவோ?

அப்பா தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “சுசீ!” என்று அழைத்தார்.

ஊரிலிருந்து கிளம்பியதிலிருந்து எதுவுமே பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருந்த அவர் திடீரெனக் கூப்பிட்டதும் நான் நிமிர்ந்து, “என்னப்பா?” என்றேன்.

“நாளைக்கு நான் உடனே திரும்பி விடுவதால் உன்னுடன் பேச முடியுமோ முடியாதோ? நீ சில சமயங்களில் மிகவும் துடுக்காக நடந்து கொள்கிறாய். அன்றைக்கு அந்தப் பிள்ளையாண்டானிடம் புடவையைக் கொடுத்து விட்டு நீ என்னிடம் பொய் தானே சொன்னாய்?” என்றார். போகாமல் போன விருந்தைப் புளியிட்டு அழைத்த மாதிரியில் அவர் என்னிடம் அந்தப் பழைய சங்கதியை, தீர்ந்து போயிற்று என்று அதனுடன் நான் அறவே மறந்திருந்த விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்குவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. பதில் எனக்குச் சட்டென்று எப்படி வரும்?

“அத்திம்பேர் நீ இந்த மாதிரி மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதைக் குறித்து வருத்தப்பட்டுக் கொண்டு எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அவர்கள் பணம் பெருத்தவர்கள். நமக்கோ அது தேவையாக இருக்கிறது. எப்போது சுழலும் சக்கரத்தில் அகப்பட்டுக் கொண்டு விட்டோமோ, கஷ்டமோ நஷ்டமோ அதன் போக்குப்படித்தான் சுழல வேண்டும் அம்மா! நீ சிறு பெண். அவர்கள் ஏதேனும் கடுஞ்சொல் மூலம் உன் மனத்தை நோவ வைத்திருக்கலாம். என்றாலும் நீ செய்தது தவறு. இப்போதே இத்தனை ரோசம் வைத்துக் கொண்டிருப்பது பின்னாடி உனக்கே கஷ்டமாக ஆகிவிடக் கூடாதே என்று எனக்குக் கவலையாக இருக்கிறது. நாளை நீ பெரிய குடும்பம் ஒன்றில் காலெடுத்து வைக்கப் போகிறாய். உன் ஓரகத்தி, அவள் தாய், தங்கை, உன் மாமியார், மைத்துனர் என்று மூன்று குடும்பத்து மக்கள் அங்கு ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது இருக்கும் நிலையுடன் நீயும் ஒட்டி இருக்க வேண்டும். ஒவ்வொருவர் அபிப்பிராயங்களும் குணமும் வெவ்வேறாக இருக்கலாம். நீயும் அவர்களுக்குத் தகுந்தாற் போல் இணைந்து போனால்தான் நலமாக இருக்கும். ஆயிரம் பேராக இருந்தாலும் புருஷர்கள் ஒத்துப் போய் விடுவார்கள். பெண் மக்கள் அப்படி அல்ல. அத்தியந்த சிநேகிதர்களாக இருந்தால் கூடச் சகஜமாகப் பழக மாட்டார்கள். குற்றம் கண்டுபிடிக்கும் நுண்ணிய சக்தி அவர்களுக்கு அபாரம். அதனாலேயேதான் அபிப்பிராய பேதம், மனத்தாங்கல் ஏற்படுவது பெண்களிடையே சுலபமாகி விடுகிறது. இந்த வழியில் நீ உன் அறிவை ஒரு போதும் செலுத்தி விடக் கூடாது. எந்த அபிப்பிராயத்தையும் மேலெழுந்த வாரியாகவே எடுத்துக் கொள். அடுத்தபடியாக உழைப்பைத் துச்சமாகக் கருதி நீ சோம்பேறியாகி விடக் கூடாது, சுசீலா. சந்தனக்கட்டை தேயத் தேயத்தான் மணம் பெறும். இன்னும் உன்னுடைய சௌகரியங்களை நீ எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொண்டு பழகுகிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு உனக்கு நல்லது. ‘அது இல்லாவிட்டால் எனக்குச் சரிவராது’ என்று அபரிமிதமான சுகங்களுக்கும் சௌகரியங்களுக்கும் ஒரு போதும் நீ இரையாகி விடக் கூடாது. தியாக புத்தி கொஞ்சமும் இன்றி உண்மையான பெருமையும் இல்லை. இன்பமும் இல்லை. பெண்கள் குடும்பத்துக்குத் தூண் போன்றவர்கள். அதன் வாழ்வையும் தாழ்வையும் அவர்கள் தாம் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ‘நாட்டுப் பெண் வந்தாள்; மறுநாளே சட்டியைத் தூக்கி வேறு வை என்று சொல்லிவிட்டாளே’ என்று நாலு பேர் அபிப்பிராயம் கொடுக்கும் நிலையில் நீ நடந்து கொள்ளக் கூடாது. உன் புருஷன் அண்ணனிடமும் மதனியிடமும் அலாதியான மதிப்பு வைத்திருக்கிறான். அந்த மதிப்புக் குறைந்து, ஒட்டுதல் விட்டுப் போகும்படியான நிலைமை இனிமேல் எப்போது வந்தாலும் அது உன்னால் வந்ததாகத்தான் கருதும்படி இருக்கும். இத்தனை சிரமப்பட்டு உனக்கு உரிய இடத்தைத் தேடி மணம் செய்வித்தது கூட எனக்குப் பெரிதல்ல. நாளைக்கு உன்னால் ஒரு வார்த்தைக்கு இடம் இருக்கக் கூடாது. தெரிகிறதா அம்மா?” என்று முடித்தார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பார்த்தால் பசுப்போல் இருக்கும் அப்பா என்னவெல்லாம் தெரிந்து கொண்டு சொல்லுகிறார்!

“நீங்கள் இப்போது கூறியது அத்தனையும் எனக்கு எப்போதும் நினைவிருக்கும் அப்பா. அப்படியே நடந்து கொண்டு நல்ல பெயர் வாங்குவேன்” என்று உறுதியுடன் மொழியும் போது ஏனோ எனக்கு நாத் தழுதழுத்தது.

“தங்கமும் புக்ககம் போனாள்; ஜகதுவும் புக்ககம் போனாள். அப்போதெல்லாம் நான் இவ்வளவு சிரத்தை கொள்ளவில்லை. சிரமமும் கொள்ளவில்லை. கவலையும் இருக்கவில்லை. உன் விஷயம் அப்படி எனக்கு எளிதாகத் தோன்றவில்லை. எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் உனக்குக் கல்வி புகட்டினேன்; சங்கீதம் பயிற்றினேன். ‘சுசீலா ஆண் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டியவள். அவளுக்குக் கல்யாணம் பண்ண வேண்டாம் ஸார்! காலேஜில் சேர்த்து விடுங்கள்! மேலே படித்து உத்தியோகம் பண்ணி முன்னுக்கு வரட்டும்’ என்று கூட நீ படிப்பில் காட்டிய ஊக்கத்தைக் கண்டு என்னிடம் தலைமையாசிரியர் உட்பட எல்லோரும் உரையாற்றினார்கள். ஆனால் நான் ஜீவனத்துக்காகவும் விவாகச் செலவு குறைவதற்குமாகவா உனக்குக் கல்வி புகட்டினேன்? குடும்பப் படகை வலித்துப்போக ஓரளவாவது பெண்களுக்கு அறிவு கூர்மையாக வேண்டும் என்றே உனக்குக் கல்வி வசதி அளித்தேன். ஆனால் கல்வியறிவைப் பெண்கள் சீரிய முறையிலும், ஒழுக்கமான வழியிலும் பயன்படுத்த வேண்டும். ‘என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். நான் அதற்காக அடிமையாக இருக்க மாட்டேன்’ என்று கணவனை எதிர்த்து வாயாடுவதற்காக அந்த அறிவை உபயோகிப்பது முறை அல்ல. ஒருவருக்கொருவர் பலவந்தமான அதிகாரத்துக்குட்பட்ட அடிமைகளாக இருப்பதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அன்பின் பின்னலுக்கு உட்பட்டு ஒருவருக்கொருவர் கட்டுப்பட்ட வாழ்க்கையைத் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சதிபதிகளே இன்பம் பெறுவார்கள் என்பது என் கருத்து. இந்தக் கணவனும் மனைவியும் தேர்ந்த அறிவுடன் தெள்ளிய மனமும் படைத்திருப்பதாக நடுநடுவே வாழ்க்கைக் கடலில் ஏற்படும் சிறு பூசல்களைக் குழப்பமோ கலக்கமோ இன்றி, ஆழ்ந்த சிந்தனையின் மூலம் தாங்களாகவே தெரிவித்துக் கொள்வார்கள். இத்தகைய மனமொத்த குழந்தைகளாக நீங்கள் வாழ வேண்டும் என்பது என் அவா, சுசீலா!” என்று கூறிவிட்டு என் முகத்தை அவர் உற்று நோக்கினார்.

எங்கள் ஊரில் ஒரு குளம் உண்டு. அதன் வடக்கு மூலையில் ஒரு வடிகாலும் உண்டு. மழை அதிகம் பெய்து தண்ணீர் நிறைய வந்துவிட்டால் வடிகாலைத் திறந்து விடுவார்கள்.

நான் பள்ளிக்கூடம் போகும் காலத்தில் குளத்திலிருந்து தண்ணீர் வடிகாலில் ‘கோ’ என்ற சத்தத்துடன் பீறி எழும் ஆவேசத்துடன் ஓடி உருண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டே ஆச்சரியப்பட்டவள் போல் நிற்பேன். ‘குளத்திலே சலனமில்லாமல் சப்தமில்லாமல் தேங்கியிருக்கும் நீர் சிறிது வழி கிடைத்தவுடன் எப்படி ஆவேசமாக வருகிறது! அத்தனை தண்ணீரையும் திறந்து விட்டால் எப்படிப் போகும்?’ என்று சிந்திப்பேன். எனக்கு அது நினைவுக்கு வந்தது. அப்பாவின் மன ஆழத்திலே நிரம்பியிருக்கும் அன்புக்கும் அநுபவத்துக்கும் இப்போது சற்றுப் போக்குக் கிடைத்திருக்கிறது போலும்! ஜகதுவினிடமும் தங்கத்தினிடமும் அவருக்கு இல்லாத பாசம் என்னிடம் இருக்கிறது என்று அவர் வாயிலிருந்தே வந்ததே! குளத்து நீரைப் போல் அவர் உள்ளத்திலிருந்து பெருக்கெடுத்து வந்த அன்புணர்ச்சி என் மனத்தைக் கிளர்த்தி விட்டது. முழுதும் வழுக்கையாகிப் பளபளவென்று பிரகாசித்த தலையும், ஒட்டி உலர்ந்த முகமும், எப்போதோ வேலைக்கு வந்த போது தைத்துக் கொண்ட ஓரங்களில் விரிசல் விழுந்த கோட்டும் அவருடைய தன்னலமற்ற தியாகத்தை எனக்கு எடுத்துப் பறைசாற்றின. தம் உயிரின் அணுக்களால் ஆக்கப்பெற்ற எனக்காக அவர் தம் சொந்தச் சௌகரியங்களைக் கொஞ்சமாகவா தியாகம் செய்திருக்கிறார்? இதற்கெல்லாம் நான் பிரதி செய்யக் கூடிய காலம் வருமா?

தூரத்தில் வண்டி வருவதன் அறிகுறியாகச் சத்தம் கேட்டது.

“வண்டி வந்துவிட்டது போலிருக்கிறதே, அம்மா!” என்று எழுந்தார் என் தந்தை.

என் வாழ்வின் நீண்ட யாத்திரையிலே என்னை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு முக்கியமான கட்டத்திற்குக் கடத்திப் போகும் அந்த வண்டி நள்ளிரவிலே தென்படும் கரும் பூதம் போல் அலறிக் கொண்டு வந்தது.

2.2 மலர்

கரிய கங்குலைப் பிளந்து கொண்டு தன் பொன்மேனியுடன் மலர்ந்து உதய கன்னி என்னை வரவேற்க, நான் என் புது வாழ்வின் உதயத்தில் இணைய அடி எடுத்து வைத்தேன். வண்டியிலிருந்து என் கண்களில் முதல் முதலாக மைத்துனர் தென்பட்டார். அவருக்குப் பின்னால், மூன்று நாலு வயசிருக்க்ம் பெண் குழந்தை ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டு வெள்ளை நிஜாருடனும் ஷர்ட்டுடனும் என் கணவர், லேசான நகையுடனும் கனிவு கொண்ட விழிகளுடனும் என்னைப் பார்த்துக் கொண்டு நின்றார். காலை வேளையின் புத்துணர்ச்சி அவர்களிடம் நிரம்பி இருந்தது. எனக்கோ சரியாகக் கூட உட்கார இடமில்லாமையால், உடம்பெல்லாம் வலித்தது. தூக்கம் இல்லாததால் கண்கள் ஜிவு ஜிவுவென்று எரிந்தன. மரத்துப் போயிருந்த கால்களைக் கூட வண்டியில் அடைந்திருந்த கூட்டம் இறங்கிய பின்னரே நீட்ட முடிந்தது. ரெயில் சூட்டில் கருகித் தலையிலிருந்து தொங்கிய மல்லிகைச் சரத்தை எடுத்துக் கொண்டே வண்டியை விட்டு இறங்கினேன். பிரிந்த குழல் பறந்து பறந்து கண்முன் வந்து விழுந்தது. அப்பா சாமான்களை எடுத்துக் கொடுக்க, அவர் ஒரு கை பிடிப்பதைக் கண்ட என் மைத்துனர், “போர்ட்டர் போர்ட்டர்!” என்று கூலி ஒருவனைப் பார்த்துக் கூவினார்.

“நல்ல கூட்டம் போலிருக்கிறது. சௌகரியமாக உட்காரக் கூட முடியவில்லையோ?” என்று கேட்ட என் கணவர் என்னை நோக்கிச் சிரித்தார். கூட்டம் என்பதைத் தெரிவிக்கும் அத்தாட்சியாக நான் இருக்கிறேனோ என்ற வெட்கத்துடன் தலை மயிரைக் கோதிக் கொண்டேன். பிறகு அவர்களுடன் ஸ்டேஷன் கட்டிடத்தைத் தாண்டி வெளியே வந்தேன். அவர்கள் காட்டிய நீல வர்ணக் கார் ஒன்றில் கூலி சாமான்களை எல்லாம் வைத்தான். முன்புறம் வண்டி ஓட்டியின் ஆசனத்திலே என் கணவர் அமர்ந்ததைக் கண்ட என் மனம், ‘ஓகோ! சொந்தக் கார் போலிருக்கிறது!’ என்ற உவகையால் விரிந்தது.

அவருக்குப் பக்கத்தில் என் மைத்துனர் மடியில் குழந்தையுடன் அமர்ந்து கொள்ள அப்பாவையும் என்னையும் பின்புற ஆசனத்தில் தாங்கிக் கொண்டு பட்டணத்தின் வழு வழுப்பான தார் ரோட்டில் கார் சென்ற போது எனக்கு வான ஊர்தியில் சஞ்சரிப்பது போல் இருந்தது. கண் மூடிக் கண் திறப்பதற்குள் வீடு வந்துவிட்டது போல் எனக்குத் தோன்றியது. முன் வாசல் முகப்பில் பிரம்பு நாற்காலி ஒன்றில் சாய்ந்து கொண்டிருந்த என் ஓரகத்தி எங்களைக் கண்டதும் எழுந்து நின்றாள். நாங்கள் எல்லோரும் வீட்டுக்குள் புகும் போது, அப்பாவின் எளிய தோற்றமும் உடை எல்லாவற்றையும் அந்தச் செல்வச் சூழ்நிலை மிகைப்படுத்திக் காண்பித்தது. சுகமாக உண்டு உறங்கிச் செல்வத்தில் புரளுபவர்கள் மத்தியில் வறுமையின் சின்னமாகவும், உழைப்பின் பிரதிநிதியாகவும் அவர் தென்பட்டது போல் எனக்குத் தோன்றியது. சிரமத்துடன் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றிருந்த என் ஓரகத்தி, “வா” என்று புன்னகை மலர்ந்த வதனத்துடன் என்னை வரவேற்றாள். அவள் தோற்றம், அவள் அப்போது கர்ப்பிணி என்பதைச் சுலபமாக எனக்கு அறிவித்தது.

அதற்குள் எதிரே அவசர அவசரமாக வந்த என் மாமியார், “ஏன் பட்டு! ஆரத்தி எடுக்க வேண்டாமோ? அதற்குள் உள்ளே வந்துவிட்டாளே!” என்றாள். “எடுக்க வேண்டுமா? இதெல்லாம் யாருக்கு ஞாபகம் இருக்கிறது?” என்று கூறிய அவள் என்னை நோக்கி மறுபடியும் புன்னகை செய்தாள்.

திரும்பவும் வாசலில் போ என்பார்களாக்கும் என்று நான் தயங்கி நிற்பதைக் கண்ணுற்ற என் கணவர், “பரவாயில்லை, உள்ளே போகலாம்” என்று நகைத்தார். முன் சென்ற மாமியாரைத் தொடர்ந்து நான் சென்றேன். சமையலறையில் ஓர் அம்மாள் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். “இது தான் பட்டுவின் அம்மா; நமஸ்காரம் பண்ணு” என்றாள் என் மாமியார்.

கீழே குனிந்து பணிந்த என்னைப் பார்த்து, பர்வதம் போல் உட்கார்ந்திருந்த அந்த அம்மாள், “பாவம், கண்ணெல்லாம் சிவந்திருக்கிறது. ரெயிலிலே கூட்டம் போலிருக்கிறது” என்று மெல்ல நகைத்தாள். அவள் காதிலே இருந்த வயிர ஓலையும், கையிலே மின்னிய மோதிரங்களும், இடுப்பிலே தகதகத்த காவி நிறப் பட்டும் அவள் ஒன்றுக்குமில்லாமல் மகள் வீட்டில் வந்து இருக்கவில்லை என்பதை அறிவித்தன. அடுப்பைக் கவனிக்கப் போன என் மாமியாரிடம், “முதலில் காபியைக் கலந்து கொடுங்கள்” என்றாள்.

“இல்லை, நான் இன்னும் பல்லே தேய்க்கவில்லை” என்று கூறிய நான் சமயலறையைச் சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டே நின்றேன். புது மனிதர்களும் புது இடமும் எனக்கு அங்கே எப்படிப் பழகுவது, சகஜமாக எப்படி வளைய வருவது என்பதே புரியாதபடி இருந்தன. அத்தையகத்து வாழ்க்கையின் வாசனை என் மனத்தில் லேசாகப் பரவியது.

“இதோ இருக்கிறாளே, இது யார் தெரியுமா?” என்று குழந்தைகளின் சிரிப்பொலிக்கும் அழுகையொலிக்கும் மத்தியிலே தம் குரல் கேட்க, என் கணவர் சமையலறை வாசற்படியிலே வந்து நின்றார்.

பட்டுப் பாவாடையின் இழையைத் தொட்டுக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்திருந்த பெண் குழந்தை, “இது தான் சித்தி! எனக்குத் தெரியுமே!” என்று தன் மழலை மொழியில் கூறி நகைத்தது.

“ஏண்டா குமார், இந்தச் சித்திக்கும் ரொம்ப நன்றாகக் கணக்குச் சொல்லிக் கொடுக்கத் தெரியுமாம். அந்தச் சித்தி போல இரண்டைத் தொண்டையால் கத்திக் கத்தி அடிக்கவே மாட்டாளாம்!” என்று அழுத கண்களை ஷர்ட்டுத் துணியால் துடைத்துக் கொண்டு நின்ற எட்டு வயசுச் சிறுவனுக்கு என்னை பழக்கம் செய்வித்தார் அவர்.

‘குழந்தைகள் இருக்கிறார்கள் இங்கு. அன்புடன் இருக்க வேண்டும்’ என்று நினைத்த வண்ணம் நான் அவர்களை நோக்கி முறுவலித்தேன்.

“ஓகோ! ஆசாமியை எங்கே காணோம் என்று பார்த்தேனே! அதற்குள் இங்கே மிஸஸ்ஸுடன் பேச வந்துவிட்டாரோ?” என்று இரட்டைத் தொண்டையில் கட்டைக் குரல் ஒன்று கேட்டதும் நான் திரும்பிப் பார்த்தேன். ஒரு பெண், அழகே உருவெடுத்தாற் போன்றவள், காலைப் பொழுதின் மனோகரத்தில் முழுகி எழுந்ததைப் போன்ற கவர்ச்சியுடன் நின்றாள்.

“இவர்களுக்கெல்லாம் ‘இன்ட்ரட்யூஸ்’ பண்ணிக் கொண்டிருந்தேன். வா, உனக்கும் சொல்லுகிறேன். இவள் தான் என் மிஸஸ் சுசீலா, எப்படி?” என்று எடுத்த எடுப்பிலேயே அவளை அபிப்பிராயம் கேட்டார் என் கணவர். தன் முல்லைப் பற்களை வெளியே காட்டிச் சிரித்துக் கொண்டு, அவள் கனிவு ததும்பிய பெண்மை விழிகளுடன் என்னைப் பார்த்தாள்.

“எப்படி என்றா சொல்ல வேண்டும்? இதோ சொல்லுகிறேன். கேட்டுக் கொள். கார்மேகக் கூந்தல், கருவண்டை யொத்த கொஞ்சும் விழிகள். குமிழ் போன்ற அழகிய மூக்கு!” என்று அவள் வர்ணித்ததைக் கண்டு நடுவே குறுக்கிட்ட என் கணவர், “ஏது ஏது? எனக்கு மூச்சுத் திணறுகிறது! பெரிய நாவலாசிரியர் தோற்று விடுவார் போல் அளக்கிறாயே!” என்று நகைத்தார். ஆண்களும் பெண்களும் சகஜமாகப் பேசுவது, வித்தியாசமின்றிப் பழகுவது என்பதை அறிந்திருந்தாலும் இப்படி எல்லாம் பேசி நான் கேட்டவளே அல்ல.

“பார், பார். உண்மையைச் சொன்னால் நான் அளக்கிறேனாம்? நான் சொல்கிறேனே என்று நீ வேண்டுமானால் பார்; கருவண்டையும் கார் மேகத்தையும் கவனிக்கும் போது, சுசீலாவின் கூந்தல் இன்னும் கருப்பாக இருக்கும். அவள் கண்களின் கவர்ச்சி இந்தக் கருவண்டுக்கு வராது என்று தோன்றுகிறதா இல்லையா?”

“இதெல்லாமா நான் உன்னிடம் கேட்டேன்? அழகு தான்” என்றார் அவர்.

“ஓகோ! என்னடாப்பா என்று பார்த்தேனே? ஏற்கனவே எனக்கு மதி மயக்கம் தலைக்கேறி இருக்கிறதே என்பதை ஒப்புக் கொள்கிறாயா? என் அபிப்பிராயத்தைச் சொல்லட்டுமா?” என்று என் அருகில் வந்து தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டு என் முகத்தைப் பார்த்து அவள் முறுவலித்தாள்.

‘இவள் அபிப்பிராயம் என்னவாக இருக்குமோ? பீடிகை போடுகிறாளே!’ என்று எனக்கு உள்ளூறச் சிரிப்பு வந்தது. சட்டென்று கையை எடுத்த அவள், “கிடக்கட்டும். நான் யாரென்று அவளுக்கு நீ சொல்லவே இல்லையே?” என்று கேட்டாள்.

“நான் சொல்லுவானேன்? உன் தொண்டையே லீலா என்று அவளுக்கு அறிவித்திருக்குமே! இந்தக் குமார் அதற்குள் வந்து, சித்தி இரட்டைத் தொண்டையில் கத்திக் கத்திச் சொல்லிக் கொடுப்பது பிடிக்க வில்லை என்று புதுச் சித்தியிடம் புகார் சொல்ல ஆரம்பித்து விட்டான்” என்றார் அவர்.

“அடடே! இவ்வளவுக்கு வந்துவிட்டீர்களா நீங்கள்? இருக்கட்டும் இருக்கட்டும்” என்று பொய்க் கோபம் கொண்டு குழந்தைகளைப் பார்த்து அவள் கறுவினாள்.

அவளுடைய ஒவ்வொரு பேச்சையும் உண்டாகும் முக அசைவையும் எனக்கு அன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கலாம் போல இருந்தது.

“அவள் வந்து இறங்கி இன்னும் காபி கூடச் சாப்பிடவில்லை. அதற்குள் உங்கள் அரட்டையைத் துவக்கி விட்டீர்களே; முகமெல்லாம் சோர்ந்து கிடக்கிறது” என்றாள் அவளுடைய தாய்.

“நீ மகா மோசம் ராமு. ஏதடா ரெயிலில் அவஸ்தைப்பட்டு வந்து இறங்கி இருக்கிறாளே, ஒரு ‘கப்’ காபி கொடுத்து உபசாரம் பண்ணுவோம் என்று தோன்றுகிறதா, பார்! அவளை உட்காரக் கூடச் சொல்லாமல் கால் கடுக்க நிற்க வைத்து இப்படியா அவமானம் பண்ணுவது? புது மனைவி வந்திருக்கிறாள் என்றால், எந்த நிமிஷம் கோபித்துக் கொள்வாளோ என்ற பயம் வேண்டாமோ?” என்று அவள் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கும் போதே, என் ஓரகத்தி, அவளுடைய சகோதரிதான், “ஏண்டி லீலா அவருக்குக் காபி கொண்டு வா என்று உன்னை அனுப்பினேனா? இல்லை இங்கு வந்து வாயாடச் சொன்னேனா? ஏய் நளினி! இந்தப் பட்டுப் பாவாடையை நாசமாக்காமல் அவிழ்த்து வை. இரவெல்லாம் ஜுரம் கண்ணைத் திறக்கவில்லை. வா, டாக்டர் வீட்டுக்குப் போக வேண்டும்” என்று கடிந்த குரலிலே கூறிக் கொண்டே வந்தாள்.

சலுகையுடன் சிற்றப்பாவின் கால்களைக் கட்டிக் கொண்ட நளினி, “நான் மாட்டேன்” என்று பிடிவாதமாக அழுகைக்கு ஆயத்தம் செய்தாள்.

பலவந்தமாகக் குழந்தையைத் தரதரவென்று அவள் இழுத்துச் செல்கையில் குமாருக்கும் மைதிலிக்கும் கூட ஒரு சூடு விழுந்தது. “ஏண்டா தடியா, பள்ளிக்கூடத்துக்கு நேரமாகவில்லை? புத்தகத்தை எல்லாம் கடை பரத்தி வைத்திருக்கிறீர்களே. அடி மைதிலி, குளித்து விட்டு வாயேன். பின்னிக் கொள்ள வேண்டாம்?” என்று இரைந்து விட்டுச் சென்றாள்.

லீலா அப்பாவுக்குக் காபி கொண்டு போகிறாள் என்பதை அறிந்த நான், “வேண்டாம், அப்பா காப்பி சாப்பிடும் வழக்கம் கிடையாது. காலை வேளையில் அவர் ஒன்றும் சாப்பிடவே மாட்டார். அதுவும் ஸ்நானம் செய்யாமல்…” என்றேன்.

“என்னது? ஒன்றும் குடிக்க மாட்டாரா?” என்று அதிசயத்துடன் கேட்ட அவள், “பின் இந்தக் காபி இப்போது யாருக்கு வேண்டும்?” என்று கையில் தம்ளருடன் விளையாட்டுக் குழந்தை போல ஏலம் கூறினாள்.

“இங்கே கொண்டா” என்று அவளிடமிருந்த தம்ளரை வாங்கிக் கொண்ட என் கணவர், “எனக்கு அதிகாலையில் சாப்பிட்டது மறந்து போய் விட்டது” என்ரு தாம் அருந்தலானார்.

“அட ராமா! வாங்கி அவளுக்குத்தான் கொடுக்கப் போகிறானாக்கும் என்றல்லவா நினைத்தேன்? மடக் மடக்கென்று தான் குடிக்கிறானே!” என்று லீலா கூறிக் கொண்டிருக்கும் போதே புன்னகையுடன் அவர் அங்கிருந்து அகன்றார்.

அவர் பேச்சிலும் நடவடிக்கையிலும் புதுமை கண்ட நான் மனக் களிப்பிலே மிதந்தேன். குளித்துவிட்டு எல்லோருடனும் உணவருந்த வந்து உட்கார்ந்த என் மைத்துனர், “இன்று தான் நான் குளிக்கச் சென்ற போது அறை சுத்தமாக இருந்தது. வெந்நீரடுப்புப் புகையவில்லை. வெந்நீர் சரி சூடாக இருந்தது. புது மாட்டுப் பெண் வந்துவிட்டாள் என்பதைக் காட்டி விட்டது’ என்று கூறிய போது எனக்குச் சந்தோஷம் கரைபுரண்டது. ‘இந்த அற்ப விஷயத்திற்கே இத்தனை திருப்தி கொண்டாடுகிறாரே? வெகு சீக்கிரத்தில் இங்கு எல்லோரையும் கவர்ந்து விட முடியும்’ என்று உள்ளூற எண்ணிக் கொண்டேன். அப்பா பரிமாற வந்த என்னைப் பெருமையுடன் நோக்கினார்.

எல்லோரும் இலைகளை விட்டு எழுந்திருக்கவில்லை. என் ஓரகத்தி டாக்டர் வீட்டுக்குக் குழந்தையை அழைத்துப் போயிருந்தவள், உள்ளே வந்தாள்.

தட்டிலே கையைக் கழுவிக் கொண்டிருந்த என் மைத்துனர், “என்ன? குழந்தைக்கு உடம்பு ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டாரோ டாக்டர்?” என்று ஏளனம் தொனிக்கும் குரலில் அவளைக் கேட்டார்.

“ஆமாம்! உங்களுக்குக் கேலியாக இருக்கிறது. இந்த நெஞ்சுக் கட்டுச் சாதாரணமாக இல்லை என்று நான் அப்போதே சொல்லவில்லையா? அத்துடன் காலையிலே ராமு திரட்டுப் பாலை வேறு கொடுத்து வைத்திருக்கிறான். குழந்தை நோவுக்குக் கள்ளமில்லை என்று எழுந்து நடமாடியிருக்கிறது. ஜுரம் நூற்றுநாலு இருக்கிறது. இப்போது டாக்டர் நியுமோனியா என்று சந்தேகப்பட்டு ‘நர்ஸிங் ஹோமி’லேயே விட்டு விட்டுப் போங்கள் என்றார். கத்து கத்து என்று கத்துகிறது. விட்டு விட்டுக் குளித்துச் சாப்பிட்டுப் போகலாம் என்று வந்தேன். நான் சொன்னால் யார் கேட்கிறார்கள்? ராமுவினுடைய செல்லம் அதற்குத் தலைக்கு மேலே ஏறிப் போயிருக்கிறது!” என்று படபடப்பாக அவள் என் கணவர் மீது குற்றம் சாடினாள்.

“வெகு அழகுதான்! நானா திரட்டுப் பால் கொடுத்தேன். எல்லாம் உங்கள் அருமைத் தங்கையின் வேலை! கார் வந்த சப்தம் கேட்டவுடனேயே ஆளைக் கூட அவள் கவனிக்கவில்லை. பட்சணங்களை ஆராய ஆரம்பித்து விட்டாள். எல்லாம் காலியாவதற்குள் நான் நல்ல வேளை பார்த்தேன். குழந்தைகளுக்கெல்லாம் அவள் தான் விநியோகம் செய்தாள்” என்று அவர் லீலாவைச் சாடினார்.

“அதனாலேயே ஜுரம் இப்போது நூற்று நாலு வந்து விட்டதாக்கும்? நான் கண்டேனா ஜுரம் என்று? காலையில் பட்டுப் பாவாடை எல்லாம் கட்டிக் கொண்டு தடபுடலாக ஸ்டேஷனுக்கு வேறு போய் விட்டு வந்தது. எனக்கு எப்படித் தெரியும்? எல்லோரும் தின்னும் போது குழந்தை கேட்டது, கொடுத்தேன். உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடனேயே படுக்கையில் விடாமல் கண்டபடி அலையவிட்டால்? உங்களுக்குக் குழந்தையை வளர்க்கத் தெரிந்தால்தானே?” என்று முடிவாக ஒரு போடு போட்ட லீலா கலத்தை விட்டு எழுந்து போனாள்.

“ராமுவுக்குத் தெரியாதா ஜுரம் என்று? சிற்றப்பாவிடம் போகிறேன். சிற்றப்பாவிடம் போகிறேன் என்று ராத்திரி என் பிராணனை வாங்ன்கி அவனிடம் போய்ப் படுத்துக் கொண்டதே. ஸ்டேஷனுக்கு நான் கூட்டிப் போக வேண்டாம் என்று சொன்னதை யார் கேட்டார்கள். நீங்கள் தலைக்கு ஒரு விதமாகச் செல்லம் கொடுங்கள். அப்புறம் எனக்குக் குழந்தை வளர்க்கத் தெரியவில்லை என்று குற்றம் கூறுங்கள்” என்று பட்டு கடுகடுத்தாள்.

இந்தச் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாடிக் கொண்டு சிறு குழந்தைகள் போல் பேசிக் கொண்டது எனக்கு வியப்பைத் தந்தது. ஓடியாடும் குழந்தை உடம்புக்கு வந்திருக்கிறது. அதற்கு இத்தனை பிரமாதப்படுத்துகிறார்களே? எங்கள் வீட்டில் எங்களில் யாருக்காவது ஜுரம் வந்தால் அநேகமாக அது அப்பாவுக்குக் கூடத் தெரியாது. இரண்டு வேளை கஞ்சி கொடுப்பாள் அம்மா. அதற்கும் தணியாவிட்டால் லோகல் கண்டு ஆஸ்பத்திரியில் தருமத் தண்ணீர் இரண்டு வேளை வாங்கிக் கொடுப்பாள். அத்துடன் சரி. எடுப்பாரும் பிடிப்பாரும் இருந்தால் இப்படித்தான் இருக்கும் போலும்! அத்தை வீட்டில் ஹேமாவுக்கு வந்ததையும் நடந்ததையும் விட இது பெரிது அல்லவே?

பதினொரு மணிக்குள் வீடு நிசப்தமாகி விட்டது. குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விட்டனர். லீலா கல்லூரிக்குப் போய்விட்டாள். என் மைத்துனரும் கணவரும் காரியாலயம் சென்று விட்டார்கள். பட்டுவுங்கூடச் சிகிச்சை இல்லம் போய் விட்டாள். கிழவிகள் இருவரும் கீழே முன் கட்டில் கட்டை மணை சகிதம் படுத்து விட்டார்கள். நான் ஸ்நானம் செய்த கூந்தலை ஆற்றிக் கொண்டு மெள்ள மாடிப் பக்கம் சென்றேன். வராந்தாவை அடுத்த கூடத்தில் அப்பா கீழே சிமென்ட் தரையில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். மேலே மின்சார விசிறி சுழன்று கொண்டிருந்தது. அவருக்கு எத்தனை உடல் சிரமம்.

ரேடியோ, கண்ணாடி, அலமாரி, சோபாக்கள், எல்லாமாக அந்தக் கூடத்தை அலங்கரித்தன. ஒரு புற வாயில் வராந்தாவுக்கு வழி காட்டியது. இன்னொரு புற வாயில் வழியாக ஒரு குறுகிய தாழ்வரை சென்றது. அதை ஒட்டி அடுத்தடுத்து மூன்று அறைகள் இருந்தன. முதல் அறையின் கதவு திறந்திருந்தது. எதிரே பெரிய நிலைக் கண்ணாடி பொருத்திய மேஜையில் இருந்த அலங்காரப் பொருள்கள், புத்தக அலமாரி, கொடியில் மடித்துப் போட்டிருந்த புடவைகள் எல்லாம் அது லீலாவின் அரை என்று யாரும் சொல்லாமலே விளங்கின. கதவு சாத்திப் பூட்டப் பெற்றிருந்தது. கடைசி அறையும் திறந்தே கிடந்தது. மூலையில் ஒரு பிரம்பு மேஜை, நாற்காலி, ஓர் அகலப் பெஞ்சி, ஒரு கோட் ஸ்டாண்டு, துணிமணிகள் வைக்கும் அலமாரி ஒன்று எல்லாம் அந்த அறையில் இருந்தன. கோட் ஸ்டாண்டில் தொங்கிய ஷர்ட்டையும், பெஞ்சின் மேல் கிடந்த வேஷ்டியையும் கண்ணுற்ற நான் அது என் கணவருடைய அறை என்று ஊகித்துக் கொண்டேன். உள்ளே ஒரு தூசு தும்பு கூட இல்லாமல் எல்லாம் துப்புரவாக இருந்தது. கீழிருக்கும் என் பெட்டியைக் கூட இங்கே கொண்டு வைக்க வேண்டும் என்று எண்ணியவாறு அங்கிருந்து அடுத்த வீடு தெரியும் ஜன்னலில் கண்களை ஓட்டினேன். அடுத்த வீட்டு முற்றத்தில் அந்த ஜன்னல் இருந்தது. முற்றத்தை ஒட்டிய வராந்தாவின் கைப்பிடிச் சுவரில் அழகழகான பூந்தொட்டிகள் அலங்காரமாக வைத்திருந்தன. உட்புறச் சுவரிலே பெரிய பெரிய படங்கள் தெரிந்தன. ஆனால் ஜன நடமாட்டமே இல்லாதது போல் நிசப்தம் நிலவியது. என்ன இருந்தாலும் பட்டணத்துத் தினுசே அலாதிதான். புங்கனூராக இருந்தால் புது மாட்டுப் பெண் வந்த அன்று வீட்டுக்கு எத்தனை பேர்கள் வருவார்கள், போவார்கள்! சேர்ந்தாற் போல் வீடுகள் இருந்தும் இங்கு அவரவர்கள் ஜோலியைக் கவனித்துக் கொண்டு பேசாமல் இருந்து விடுவார்கள் போலும்!

இப்படி நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே, அடுத்த வீட்டு மாடிக்கு ஒரு பெண் வந்தாள். அவள் தான் வீட்டுக்கு உரியவளாக இருக்க வேண்டும். நான் அவளைப் பார்த்த போது அவளும் என்னைப் பார்த்தாள். ஆனால் சிரிக்கக் கூட இல்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போய் விட்டாள். உள்ளே ரேடியோவைத் திருப்பி விட்டிருக்கிறாள் போலிருக்கிறது. ‘ஜம்’மென்று என் செவிகளில் இசை பாய்ந்தது.

‘இங்கும் இருக்கிறதே, அத்தை வீட்டைப் போல். கூசாமல் நானும் போட்டுப் பார்க்கலாமே! எனக்கும் உரிமை உள்ள வீடுதானே இது?’ என்று நினைத்துக் கொண்டு எழுந்து வந்தேன்.

கீழிருந்து, “சுசீலா! சுசீலா!” என்று மாமியாரின் குரல் ஒலித்தது.

“இதோ வந்துவிட்டேன்” என்று குரல் கொடுத்தவாறு அப்படியே பின்புறம் சென்ற படிக்கட்டுகள் வழியாகக் கீழிறங்கி வந்தேன்.

“சற்றுக் கும்மட்டியைப் பற்ற வை. லீலா வந்துவிடுவாள். மணி ஒன்றாகப் போகிறது” என்றாள்.

‘இப்போது இடைவேளைக்கு வருவாளாக்கும்! அவர் கூட வருவாரோ?’ என்று என்னுள்ளேயே கேட்டுக் கொண்டவளாக நான் வேலையில் முனைந்தேன்.

“ஒரு பில்டரில் காபிப் பொடி போட்டால் போதும். புருஷர்களுக்குச் சாயங்காலம் புதிதாகப் போடலாம்” என்றாள் மாமியார்.

“சாயங்காலந்தான் அவர்கள் வருவார்களோ?” என்று நான் மெதுவாகக் கேட்டேன்.

“ஆமாம், ஆறு மணியாகும். இந்தச் சேப்பாக்கம் ஆபீஸில் இருக்கும் வரை ராமுவும் வருவான், லீலாவுடன். இப்போது இதை விட்டுவிட்ட பிறகு வருவதில்லை” என்றாள் அவள்.

‘இதை விட்டு விட்ட பிறகா? ஆனால் பழைய இடத்தில் இப்போது வேலை செய்யவில்லையா? அப்பா கூடச் சொல்லவில்லையே, இதைப் பற்றி?’ சிந்தையை இந்தக் கேள்விகள் கிளர்த்தின. ஆனால் கேட்கத் துணிச்சல் வரவில்லை. தானாகத் தெரிந்து போகிறது. அப்புறம் எனக்கு வேலை சரியாக இருந்தது. அப்பா ஊருக்குக் கிளம்புவது கூட உள்ளே எட்டிப் பார்த்து, “போய் வரட்டுமா அம்மா சுசீலா?” என்று கூப்பிட்ட பிறகுதான் நினைவுக்கே வந்தது. தூக்கிச் செருகியிருந்த புடவையை அவிழ்த்து விட்டுக் கொண்டே, “கிளம்பி வீட்டீர்களா அப்பா?” என்று வெளியே வந்தேன். அருகில் வந்து நின்ற என் மாமியாரிடம் அவர் “குழந்தையை உங்கள் பொறுப்பில் விட்டாச்சு அம்மா! இதுவரை அவள் வீட்டை விட்டு எங்கும் போய் இருந்ததில்லை. அதனால் ஏறவோ தாழவோ இருந்தாலும் மனசில் வைத்துக் கொள்ளக் கூடாது. உங்கள் பெண் அவள் இனிமேல்” என்று கூறும் போது தொண்டை கரகரத்தது.

“கவலையே படாதேயுங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று சம்பிரதாயமாக அவள் விடை கொடுத்தாள்.

கூடவே வாயில் வரை போய் நின்ற நான், “அவர் வருகிறாரா அப்பா ஸ்டேஷனுக்கு?” என்று மெதுவாகக் கேட்டேன். யாருமே அப்பாவைக் கவனிக்கவில்லை போல எனக்குத் தோன்றியது.

“மாப்பிள்ளைதானேயம்மா காரை ஓட்டிக் கொண்டு வரப்போகிறார்?” என்றார் அப்பா. அவர் கதவைத் திறந்து ஏறிக் கொண்அதைப் பார்த்துக் கொண்டே பேச்சற்று நான் வாயிற்படியிலேயே நின்றேன். மாடிப் படியிலே வேகமாக இறங்கி வந்த என் கணவர் நான் நின்றதைப் பார்த்தார். மங்கலான வாயில் விளக்கின் நீல ஒளியில் என்னை அறியாமலேயே என் கண்களில் துளித்திருந்த கண்ணீர் முத்துக்கள் அவருக்குத் தெரிந்து விட்டன போலும்! என் மோவாயைப் பற்றி மெல்லிய குரலில், “அப்பா ஊருக்குப் போவதற்காகவா அழுகிறாய்? அசடு!” என்றார். யாரோ என்னை எங்கோ அலேக்காகத் தூக்கிச் செல்வது போல் இருந்தது.

வீட்டு வேளைகள் முடிந்து விட்டன. ஸ்டேஷனுக்குச் சென்றிருந்த அவர் இன்னமும் வரவில்லை.

எங்கள் அறையில் வந்து ஜன்னலைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த என் மனத்தில் அப்போது லீலாவைப் பற்றிய எண்ணங்களே நிரம்பியிருந்தன. ஆம், சற்று முன் தான் அவள் கேலியும் குறும்பும் கலந்த பேச்சுடனும் நகைப்புடனும் என் கூந்தலை வாசம் வீசும் மல்லிகைச்சரம் கொண்டு அழகு செய்துவிட்டுப் போயிருந்தாள். எத்தனை அன்பும் அநுசரணையும் வாய்ந்த வெகுளியான பெண் இவள்! படித்திருக்கிறாள்; அழகு இருக்கிறது; செல்வம் இருக்கிறது; துளி கர்வம் இல்லையே!

அவள் வீட்டில் இருக்கிறாள் என்றாலே எனக்கு ஏதோ சொல்ல முடியாத சந்தோஷம் உண்டாயிற்று. ஒரு நாளிலேயே குறுகுறுக்கும் அவள் முகமும் கபடமற்ற இருதயத்திலிருந்து வந்த அவள் பேச்சும் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டன. அவளுடைய தோழமை எனக்குக் கிடைத்தற்கரிய பாக்கியம் எனக் கருதி மகிழ்ந்தேன்.

ஜன்னல் வழியாக நிலவின் கதிர்கள் என் மீது விழுந்தன. அதன் குளுமையை ரஸிக்க நான் எழுந்து விளக்கை அணைத்தேன். அடுத்த வீட்டு மாடியில் நான் பகலில் கண்ட பெண் பால் செம்பு சகிதம் வந்தாள். அதை உள்ளே கொண்டு வைத்துவிட்டு, அவள் பூந்தொட்டியின் அருகே வந்து நின்று கொண்டு வானைப் பார்த்தாள். சற்றைக்கெல்லாம் ஓர் ஆடவன் அங்கு வந்தான். வந்தவன் சப்தம் செய்யாமலேயே பின்னால் சென்று அவள் கண்களைத் தன் கரங்களால் மூடினான்.

அவ்வளவுதான் தண்ணென்ற வலிய கைகள் என் பார்வையை மறைத்தன. உடல் சிலிர்த்தது எனக்கு.

“நாளைக்கு இந்த ஜன்னலுக்கு ஒரு திரை போட்டு விட வேண்டும்” என்று புன்னகை செய்தார் என் கணவர்.

ஊமைப் பெண்ணைப் போல நான் அந்தச் சமயத்தில் சங்கடப் பட்டேன். மனத்திலே கரை புரண்ட உணர்ச்சிப் பெருக்கு என் தொண்டையைத் தடை செய்தது.

“வாயைத் திறந்து பேச மாட்டேன் என்கிறாயே சுசீ? இதோ இந்த நிலவு உன் பொன் முகத்தில் விழும் போது எப்படி இருக்கிறது தெரியுமா?” என்று என் முகத்தைப் பிடித்து நிமிர்த்தினார் அவர்.

வானத்துக் கருமேகங்களின் மீது தண்ணிய காற்றுப் படும்போது மழை பொழிகிறதே, அது போல என் நெஞ்சத்தைப் பிடித்துக் கொண்டிருந்த உணர்ச்சிகள் யாவும் அவருடைய ஸ்பரிசத்தால் கண்களை வந்து திரையிட்டன.

“அழுகிறாயா என்ன? என்ன சுசீ?” என்று அவர் அதற்குள் பதறி விட்டார்.

கண்ணீரின் நடுவே நான் மெல்ல சிரித்தேன்.

“இல்லை, அழவில்லை” என்று திணறினேன்.

“நான் பயந்து போய்விட்டேன்! இன்னமும் அப்பா ஊருக்குப் போனதை நினைத்துத்தான் அழுகிறாயோ என்று. சுசீ, உன் கண்களில் நீர் வந்தால் என் நெஞ்சை யாரோ அமுக்கிப் பிழிவது போலல்லவா இருக்கிறது? இன்று காலையில் லீலா கூறினாளே, அது போல் உன் செவ்விதழ்களைத் திறந்து நீ நகை புரியும் போது என் ஆவி என் வசம் இருப்பதில்லை. காரியாலயத்தில் எனக்கு ஏதாவது வேலை ஓடினால்தானே?” என்று என் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்ட அவர் முகம் என் முகத்துக்கு வெகு சமீபமாக நேராக வந்தது. அவர் இதழ்கள் என் இதழ்களில் பொருந்தி இருக்கும். ஆனால்…?

திடீரென்று அறைக்கு வெளியே, “ராமு! ராமு!” என்று என் மைத்துனர் கூப்பிடும் குரல் கேட்டது. இவ்வுலகையே மறந்திருந்த அவர் திடுக்கிட்டுப் பின் வாங்கினார். என் உள்ளம் துணுக்குற்றது.

கதவைத் திறந்து கொண்டு, “என்ன அண்ணா?” என்ற அவருடையை கேள்வி எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பதாக எனக்குத் தோன்றியது.

“குழந்தைக்கு உடம்பு மிகவும் நன்றாக இல்லை. ராமு, சிற்றப்பா சிற்றப்பா என்று சாயங்காலம் நான் பார்த்த போதே அரற்றிக் கொண்டிருந்தாள். இப்போதும் அதே ஸ்மரணைதான். நெஞ்சு பாறையாகி மூச்சுத் திணறுகிறது. இந்த நிலையிலும் அவள் உன் நினைவாகப் பிதற்றுவது பார்க்கச் சகிக்கவில்லை. மன்னியைக் கொண்டு விடப் போயிருந்தேன் அல்லவா? டாக்டரே சொல்லுகிறார். உன்னைக் கூப்பிடவே எனக்கு…” என்று தயங்கினார் மைத்துனர்.

“அடாடா! அப்போதே சொல்லக் கூடாது? இதோ வந்துவிட்டேன்” என்று அவருடைய மறுமொழி எனக்குக் கனவிலே கூறுவது மாதிரி இருந்தது. அடுத்த கணம் அவருடைய செருப்பு, தாழ்வரையில் சிமிட்டித் தளத்தில் ‘சடக் சடக்’ கென்று உரசியது என் நெஞ்சில் உரசியது போலிருந்தது. வானத்திலிருந்து கல் மாரியோ, மண் மாரியோ பொழிந்து என்னை நெருக்குவது போல் உணர்ந்தேன். அவற்றின் நடுவே அந்தப் பழைய சம்பவங்கள். ஊர்வலத்தின் இறுதிக் கட்டம். புறப்படுமுன் கிழிந்த புடைவை. எல்லாம் ‘டங் டங்’கென்று இரும்புக் குண்டுகள் போன்று என் நினைவில் வந்து மோதின. செயலற்றுத் துவண்டு படுக்கையில் வீழ்ந்த என்னை நோக்கி ஜன்னல் வழியாக வந்த நிலவு, தலையிலே தொங்கிய மல்லிகையின் மனம் எல்லாம் பரிகசித்தன.

2.3 மலர்

இரவின் தனிமையூடே நான் எத்தனை நேரம் விழித்திருந்தேனோ? நித்திராதேவிக்கு என் மீது எப்போதுமே கருணை உண்டு. அவள் என்னை அறியாமலேயே என்னைத் தன் வசம் ஆட்கொண்டு விட்டாள்.

“அவர் எப்போது வருவாரோ?” என்று நினைவில் படிந்த எண்ணத்தினூடனே உறங்கிவிட்ட என்னை, “சுசீலா, சுசீலா!” என்று மெதுவாக அழைக்கும் குரலும், குப்புறப்படுத்துக் கொண்டிருந்த என் முதுகில் யாரோ தட்டிய உணர்வும் என் நித்திரையைக் கலைத்தன. ‘அவர் வந்து விட்டார்’ என்ற புல்லரிப்புடன் நான் திரும்பிக் கொண்டு கண்களை விழித்தேன். எத்தகைய ஏமாற்றம் எனக்குக் காத்திருந்தது? காவிப் புடவையும் தானுமாக விடியற் காலையின் மங்கிய வெளிச்சத்தில் என் மாமியார் முன் நின்றாள்!

“சற்று எழுந்து வந்து காபி கொட்டையை அரைத்து வை, சுசீலா. பால்காரன் வந்துவிட்டான். நான் போய்ப் பார்த்து வாங்க வேண்டும்” என்று உதய கீதத்துடன் என்னை எழுப்பி விட்டு அவசர அவசரமாகச் சென்றாள் அவள்.

குறிக்கோள் ஒன்றைக் கொண்டு செல்லும் மனத்துக்கு நடுவே வரும் தடங்கல்கள் ஒன்றையொன்று மிஞ்சிக் கொண்டு பிரமாண்டமாகத் தோன்றினாலும், அதை விட இது சிறியது. கடந்துவிடலாம் என்ற தைரியம் கொண்டால் முன்னேறிச் செல்வது எளிதாகுமாம். என் வாழ்விலே குறிப்பிட்ட லட்சியம் ஏதும் இருப்பதாக எனக்கு அதுவரை தோன்றியதே இல்லை. அந்த மாதிரியான லட்சியத்தைச் சிருஷ்டித்துக் கொண்டு அதை அடையும் ஆர்வம் கொள்ளும் சூழ்நிலையில் நான் பண்படையவில்லை. ‘பெண்கள் மணமாகி கணவன் வீட்டுக்குப் போவார்கள். அங்கே சுகமாகவும் சந்தோஷமாகவும் அன்பின் பிணைப்பில் வாழ்க்கை நடத்துவார்கள். அப்படி இல்லாதவள் துரதிருஷ்டசாலி, என்ற எண்ணங்களிலே தான் நான் ஊறியிருந்தேன். இரவின் ஏமாற்றமும், காலை உதயத்தில் அதைத் தூக்கியடித்த இன்னோர் ஏமாற்றமும் எனக்கு ஏதோ என் வாழ்விலே தெளிவில்லாத லட்சியம் ஒன்று உண்டென்றும், அதை அடைய நான் இது சிறியது, இதைவிட முன்னது பெரியது என்று எனக்கு ஏற்படும் தடங்கள்களை மனத்துணிவு கொண்டு கடக்க வேண்டுமென்றும் தோன்றச் செய்தன.

அவருடைய மேனிபடாத அந்தப் புத்தம் புதுப் படுக்கையைச் சுற்றி வைத்து விட்டு வாடிச் சோர்ந்த இருதயத்துடன் நான் அன்றையப் பொழுதின் அலுவல்களை அணைய வந்தேன். அடுத்த அறையின் ஒருக்களித்த கதவிடுக்கின் வழியாக என் மைத்துனர் நிச்சிந்தையாகத் தூங்குகிறார் என்று அறிவிக்கும் குறட்டைச் சத்தம் வெளி வந்தது. லீலாவின் அறையில் விளக்கு எரிந்தது. மேஜையின் மீது சாய்ந்து கொண்டு அவள் ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். முன் கூடத்தில் குழந்தைகள் உறங்கினார்கள். கடிகார முள் மணி ஐந்தேகால் என்று அறிவித்தது. ‘அதற்குள்ளாகவா காபி?’ என்று எண்ணியவளாகக் கீழே வந்த நான் பல்லைத் தேய்த்துவிட்டுக் காபி கொட்டையை அரைக்கலானேன்.

முதல் நாள் ரெயிலில் கண் விழித்திருந்தேன். ஆனாலும் புது மலர்ச்சியிலே உள்ளம் கொண்ட ஆவலால் உடல் சோர்வு சிறிதும் தெரியவில்லை. அவயங்கள் வேலை செய்யத் துறுதுறுப்பாகப் புத்துணர்ச்சி பெற்றிருந்தன. இன்றே மலருவதற்கான ஆவலுடன் சூரியோதயத்தை எதிர்பார்த்து நிற்கும் மடலவிழும் மலரின் மேல் திடீரெனக் கார் மேகங்கள் மழை பொழிந்தால் கூம்பி விடுவது போல என் இருதயத் தாமரை சோர்ந்து கிடந்தது. உடலில் சுறுசுறுப்பு உயிர் அணுக்களை விட்டு அப்பால் உறங்கிக் கிடந்தது. செய்யும் வேலை எனக்கு மகிழ்வை ஊட்டுவதற்குப் பதிலாகப் பாரமாய் இருந்தது.

வாழ்நாள் முழுவதும் இப்படிப் பாரமாகி விடுமோ என்னவோ?

‘என்ன பேதமை! குடும்பம் என்றால் அதில் கடமை, அன்பு, ஆட்சி, அலுவல் எல்லாமே பின்னிக் கிடக்கும். ஒன்றுக்கு அவசியம் நேரிடும் போது இன்னொன்றின் வரையறையை விட்டுச் சற்று விலக வேண்டியே வரும். இதை எல்லாம் பொருட்படுத்தித் தைரியத்தை இழந்து தன்னைத் தானே கோழையாக்கிக் கொள்ளலாமா? குன்றி விடும்படி இப்போது என்ன விதத்தில் தாழ்ந்து விட்டேன்?

கோபம் வரும் சமயத்தில் ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணினால் போதும். கோபம் தணிந்து விடும் என்று சொல்வது வழக்கம். சில சமயங்களில் மனத்தில் ஏற்படும் சஞ்சலங்களும் அப்படித்தான். சிந்தித்துப் பார்த்ததில் பிரமாதமாக எதுவும் நடந்து விடவில்லை என்றே தோன்றுகிறது.

கொஞ்சம் ஆறுதல் பெற்றவளாக அடுப்பில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த போது லீலா வந்தாள். “என்ன அத்தை, புது மாட்டுப் பெண்ணை அதற்குள் அடுப்படியில் உட்கார்த்தி வைத்து விட்டீர்களே?” என்று என் மாமியாரைக் கேட்டுக் கொண்டே அவள் என் அருகில் வந்து உட்கார்ந்தாள்.

“ராத்திரி என்னவோ, நளினிக்கு உடம்பு அதிகமாக இருக்கிறது, சிற்றப்பா என்று அலறுகிறாள் என்று அத்திம்பேர் ராமுவைக் கூப்பிட்டார். இப்போது எப்படி இருக்கிறதாம்?” என்று கேட்டாள் அவள்.

எனக்கு எதுவுமே தெரியாது போல் நான் தலையைக் குனிந்து கொண்டு மௌனம் சாதித்தேன்.

“ஒன்றும் தெரியவில்லையே. பட்டுவையும் காணோம். இன்னும் அவனும் வரவில்லையே!” என்று என் மாமியார் கவலை தொனிக்க பதிலிறுத்தாள்.

“ஆனால் இரவு முழுவதும் ராமு அங்கே தான் இருக்கிறானா?” என்று வினவிய லீலா ஆச்சரியத்துடன் குனிந்து என் முகத்தை நோக்கினாள்.

மனத்திலே இருக்கும் துயரம் தானாக அமுங்கிக் கிடக்கும். யாராவது அநுதாபமாக இருப்பது தெரிந்து விட்டாலோ, குபுக்கென்று வெளிக் கிளம்பிவிடும். லீலாவின் அநுதாபம் தோய்ந்திருந்த அந்தக் கேள்வி சாம்பல் பூத்திருந்த என் உள்ளக் கனலை ஊதிவிட்டு விட்டது. எனக்கு மட்டும் கேட்கும்படியான மெல்லிய குரலிலே “பாவம்!” என்று அவள் பகர்ந்த போது உண்மையில் எனக்கு அழுகையே வந்து விடும் போல் இருந்தது. ஒரு வேலையை நான் செய்து முடிப்பதற்குள் நாசுக்காக இன்னொரு வேலைக்குத் தயாராகக் கட்டளை இடுவதில் என் மாமியாருக்கு ஈடு அவளேதான். ஒரு நாளைய அனுபவத்திலேயே இதை நான் தெரிந்து கொண்டேன்.

லீலா கவனித்து விடப்போகிறாளே என்ற அச்சத்துடன் சாம்பல் கண்களில் பறந்து விட்டது போல் பாவனை செய்து கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டேன். பிறகு கரண்டியில் நெருப்பை எடுத்துக் கொண்டு வெந்நீரடுப்புப் பற்ற வைப்பதற்காகக் குளிக்கும் அறைப் பக்கம் போனேன். பல்விளக்கும் ப்ரஷ்ஷில் பசையை விட்டுக் கொண்டு அவர் வாயிற்படியில் நின்றார். அப்போதுதான் வந்திருக்கிறார் போல் இருக்கிறது.

சற்று முன்னே என்ன என்னவோ சமாதானம் செய்து கொண்டேன்? அவரைக் கண்டவுடன் அவை அனைத்தும் போன இடம் தெரியவில்லை. போனது தான் போனாரே, இரண்டு மணியோ, மூன்று மணியோ இருந்து விட்ட பிறகு வந்தாரா? குழந்தைக்குத் தந்தை இங்கே சுகமாகக் குறட்டை விடுகிறார்! என்ற கோபம் என் நெஞ்சுக்குழியிலே திரளாக வந்து நின்றது. அவரைப் பார்த்தது போலவே காட்டிக் கொள்ளாமல் கை வேலையில் கவனம் செலுத்தலானேன். அவர் என்னையேதான் நோக்கிக் கொண்டு நின்றார் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. உட்கார்ந்து அடுப்பு மூட்டிக் கொண்டிருந்த என்னைப் புஜத்தைப் பற்றி எழுப்பினார். அப்போதும் நான் என் பார்வையை உயர்த்தவில்லை. “கோபமா சுசீ” என்று என் முகத்தைப் பிடித்து அவர் நிமிர்த்தினார். அவர் குரலிலும் விழிகளிலும் குலவிய கனிவு தான் என்னை எப்படி அவர் வசம் இழுத்தது! யாரேனும் கவனித்து விடப் போகிறார்களே என்ற அச்சமும் நாணமும் கௌவிக் கொள்ள நான், “இல்லை” என்று தலையை ஆட்டியவாறு அவர் பிடியிலிருந்து திமிறினேன். “நல்ல வேளை, இதோ ராமு வந்து விட்டானே?” என்று கூறிக் கொண்டே லீலா சோப்புப் பெட்டி சகிதம் வந்தாள். “குழந்தைக்கு எப்படி இருக்கிறது?” என்று கேட்டாள்.

“நியுமோனியாதான். அவ்வளவு சீக்கிரம் ஜுரம் குறைந்து விடுமா? இப்போது கூடக் கண்ணை விழித்துக் கொண்டு, ‘போகாதே’ என்று அழுதாள். இரவெல்லாம் நான் எங்கே போய்விடுவேனோ என்ற பயம். என் கையைப் பிடித்துக் கொண்டே இருந்தாள். அப்படி இப்படிச் சற்று நகர்ந்து விட்டால் கூடப் போதும், அழ ஆரம்பித்து விட்டாள். நெஞ்சிலிருந்து குரல் எழும்பினால் தானே? ‘காபி குடித்து விட்டு ஓடி வருகிறேன்’ என்று சமாதானப்படுத்தி வந்தேன்” என்றார் அவர்.

“நல்ல வேளை! தத்துப் பெண் சொன்னாள் என்று அங்கேயே இருந்து விடாமல் இருந்தாயே. கல் நெஞ்சக்காரன் நீ ராமு!” என்று லீலா சற்றும் யாருக்கும் அச்சமின்றிப் பட்டம் சூட்டினாள் அவருக்கு.

மனத்திலே பட்டதைச் சற்றும் தயங்காமல் வெளியிட்டுவிடும் அவளது தீரத்தை உள்ளூறப் பாராட்டினேன் நான்.

அவர் பதிலுக்கு என்னை நோக்கி முறுவலித்தார்.

அதனுடன் அந்தப் பேச்சு முடிந்து விட்டது. முன்னால் போல அண்ணனும் தம்பியும் காரில் ஏறிக் கொண்டு சென்றார்கள். ‘அவர் எந்த இடத்தில் வேலை செய்கிறார்? என்ன வேலை? என்ன வருவாய்? வீடு, கார், ரேடியோ என்று தடபுடலாக நடக்கிறதே, இவை யாவும் என் மைத்துனரால் தான் நடைபெறுகின்றனவா?’ என்பன போன்ற குடும்பச் சங்கதிகளைத் தெரிந்து கொள்ளும் அரிப்பு என் மனத்தைத் தின்றது. ஆனால் யாரிடம் கேட்பது?

மாமியார் வேலை சொன்னாள்; செய்தேனே ஒழிய நெருங்கிக் கேட்கும் அளவுக்கு சகஜ பாவம் வரவில்லை. பட்டுவுடன் நான் இன்னும் சேர்ந்தாற் போல நாலைந்து வார்த்தைகள் கூடப் பேசியிருக்கவில்லை. அவள் தான் வீட்டுக்கும் சிகிச்சை இல்லத்துக்குமாக அலைந்து கொண்டிருந்தாளே? மேலும் அவள் எப்போதும் என் முன் சிரித்த முகத்துடனேயே தென்பட்டாலும் மனம் விட்டுப் பேச முடியாதென்ற அர்த்தமற்ற அச்சம் என்னுள் எழும்பியது. லீலாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றாலும் அதிலும் எனக்குச் சங்கடம் தென்பட்டது.

நான் அவரை மணந்து கொண்ட மனைவி. அந்த வீட்டிலே அடியெடுத்து வைத்திருக்கும் மருமகள். என் கணவர் என்ன உத்தியோகம் செய்கிறார். குடும்பம் எப்படி நடக்கிறது என்பன போன்ற விஷயங்கள் எனக்கு இன்னமும் தெரியவில்லை என்ற என் அறியாமையை நான் அவளிடம் காட்டிக் கொள்ளுவதா? வான வீதியிலே பறக்கும் உல்லாசப் பறவையைப் போலச் சுயேச்சமாக நடமாடும் அந்த நாகரிக ராணியிடம் நான் இத்தகைய சமாசாரங்களைக் கேட்பதனால் எனக்கு மட்டுமல்ல, என்னிடம் இதெல்லாம் தெரிவிக்காத அவரிடமும் அவள் வைத்திருக்கும் மதிப்புக் குறைந்து போகாதா? எனவே, அந்த யோசனையையும் கை விட்டேன்.

அன்று பகல் கல்லூரியிலிருந்து வந்த பின் லீலா, “சுசீலா, நீ இதற்கு முன் இவ்வூருக்கு வந்ததில்லையே?” என்று கேட்டாள்.

நான் உதட்டைப் பிதுக்கினேன்.

என் காதோடு நெருங்கிய அவள், “நல்ல படம் ஒன்று ஓடுகிறது. இன்று ‘மாட்னி ஷோ’வுக்குப் போகலாமா? எனக்கு இனிமேல் முக்கியமான வேலை ஒன்றும் இல்லை. வருகிறாயா?” என்று அழைத்தாள்.

எனக்கு ஒரு புறம் சந்தோஷமாகவும், ஒரு புறம் கஷ்டமாகவும் இருந்தது. மாமியாரிடம் சொன்னால் என்ன சொல்லுவாளோ? வந்து முழுசாக இரண்டு தினங்கள் ஆவதற்குள், “நான் லீலாவுடன் சினிமாவுக்குப் போகிறேன்” என்றால் நன்றாக இருக்குமோ? சிற்றுண்டிக்கு ஆரம்பிக்க வேண்டும்! அரிசி உளுந்து ஊறுகிறது, வேலைக்காரி வருவாள். இத்தனை வேலைகளையும் விட்டு விட்டு எப்படிக் கேட்பது? ஆனால் லீலா, அவ்வளவு குறுகிய காலத்தில் என் உள்ளத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு அன்புடன் அழைக்கும் போது தட்டுவதா?

என் மௌனத்தைக் கண்ணுற்ற அவள், “என்ன யோசனை செய்கிறாய்? ‘போனால் அவருடன் அல்லவோ போக வேண்டும்? இவளுடன் போவானேன்’ என்று இருக்கிறதா, கள்ளி!” என்று என் கன்னத்தைச் செல்லமாக இழைத்துக் குறுநகை செய்தாள்.

“இல்லை, அத்தையிடம் நீங்கள் சொல்லுகிறீர்களா? வேலை நிறைய இருக்கிறதே!” என்று நான் இழுத்தேன்.

“பூ! இவ்வளவு தானா? சமையலறை இருக்கவே இருக்கிறது. மாடிக்குப் போய்த் தலைவாரி ‘டிரஸ்’ பண்ணிக் கொள். நான் சொல்லிச் சரிப்படுத்தி விடுகிறேன்” என்று என் முதுகில் தட்டிக் கொடுத்து அவள் உற்சாகப்படுத்தினாள்.

வீட்டில் அடக்கமாக வளைய வர வேண்டிய மருமகள் நான் என்பதையும் மறந்து சந்தோஷத்துடன் துள்ளிக் கொண்டு மாடிக்கு ஓடினேன். அத்தையிடமும் தாயிடமும் லீலா என்ன கூறினாளோ? சற்றைக்கெல்லாம் தன்னை அலங்கரித்துக் கொள்ள அவளும் மாடிக்கு வந்து விட்டாள். இருவருமாகத் தோள்மேல் தோள் போட்டுக் கொண்டு உல்லாசமாக மாடியை விட்டுக் கீழே வந்த போது, வாயிலில் கூடைக்காரியிடம் என் மாமியார் கத்தரிக்காய் வாங்கிக் கொண்டிருந்தாள். எங்களை அகன்ற விழிகளுடன் நிமிர்ந்து பார்த்த அவளுக்கு லீலா, “அத்தை நான் மாம்பலத்துக்கு ஒரு சிநேகிதி வீட்டுக்குப் போக வேண்டியிருக்கிறது. இவளுந்தான் ஓரிடமும் பார்த்ததில்லையே. எனக்கும் துணையாக இருக்கும் என்று அழைத்துப் போகிறேன்” என்று கூறிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமலேயே செருப்புச் சத்தம் ஒலிக்க என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

“நீங்கள் இப்போதுதான் சொல்லுகிறீர்களா? ஏதாவது நினைத்துக் கொண்டால் என்ன செய்வது?” என்று நான் கலவரத்துடன் வினவினேன்.

“நினைத்துக் கொள்வது என்ன? அவர்களாகப் பார்த்து உன்னை அனுப்ப வேண்டும் என்று எண்ணிப் பயந்தால் நீ பயந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். ஏதடா, நேற்று வந்த பெந்தானே என்று கூட இல்லாமல் உடனே சமையலறைக்குள் உட்கார்த்தி விட்டார்களே! இத்தனை நாட்களாக எப்படிச் சமாளித்தார்களாம்?” என்று ஆத்திரத்துடன் மொழிந்தாள் லீலா.

“அதனால் என்ன? வேலை ஏதும் இல்லாவிட்டால் எனக்கும் எப்படிப் போது போகும்? ‘தேய்ந்த கட்டை தான் மணம் பெறும்’ என்று அப்பா சொல்லுவார். சோம்பேறி வாழ்க்கையில் என்ன சுகம் இருக்கிறது?” என்றேன் நான் பதிலுக்கு.

“அது சரிதான். ‘புதுப் பெண். புதிதான சூழ்நிலையில் நம்மிடம் பழக வந்திருக்கிறாள். நான்கு நாளைக்கு நாம் அன்புடன் அரவணைத்துக் கொண்டு போக வேண்டும்’ என்று இங்கு யார் நினைக்கிறார்கள்? அம்மாவும் அத்தையும் அடுப்பங்கரை உதவிக்கு ஆச்சு என்று நினைப்பது கிடக்கட்டும். அக்கா, ஏதோ ஓடியாடும் குழந்தைக்கு உடம்புக்கு வந்திருக்கிறதென்று இல்லாமல் ஒரேயடியாகப் பிரமாதப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு யாரும் வேண்டாதவர்கள் வந்திருப்பதைப் போன்று இதுதான் சமயமென்று நர்ஸிங்ஹோமி’லேயே உறைந்து கிடப்பது நன்றாகவே இல்லை. நேற்றிரவு சாப்பிடும்போது அத்திம்பேர் ‘மாட்டுப்பெண் சமையல் தானே?’ என்று கேட்கிறார். எனக்கு எரிச்சல் வந்தது. இரவுதான் ஆகட்டும் குழந்தை சற்றுத் தூங்கினதும் அவன் சங்கடப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தால் கூட ‘நீ போ ராமு. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று அக்கா சொல்ல வேண்டாமா? மரியாதை கொடுத்து அல்லவோ மரியாதை வாங்க வேண்டும்? எனக்குப் பொறுக்கத்தான் இல்லை!” என்று விடுவிடென்று சொல்லிக் கொண்டு போனாள் அவள்.

எனக்கு ஒரே பிரமிப்பாக இருந்தது. நான் கூட இவ்வளவு ஆழ்ந்து கவனிக்கவில்லையே! உரியவளான எனக்கே இப்படி எல்லாம் குற்றமாக எடுத்துக் கொள்ளத் தோன்றாத போது, படிப்பிலும் களிப்பிலும் மனதைச் செலுத்தி வரும் கல்லூரி மாணவியான அவள் வீட்டிலும் குடும்பத்திலும் இன்னும் தொடர்பு கொள்ளாதவள். வெகு நுட்பமாகக் கவனித்திருக்கிறாளே! மண வாழ்க்கையை இன்னும் மேற்கொள்ளாத அவளுக்குப் புது மனைவியின் உள்ளத் துடிப்பு எப்படித் தெரிகிறது! அந்த வாழ்விற்கும் உரிய பருவம் வந்துவிட்டால் தானாகவே உணர்ந்து கொள்ள முடியும் போலும்? லீலா என்னை விட வயதில் மூத்தவள் அல்லவா? ‘ஒவ்வொருவருடைய குணமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். எதையும் நுட்பமாக ஆராயமல் சகஜமாக எடுத்துக் கொள்வதுதான் நலம்’ என்று அப்பா உபதேசித்தது என் நினைவுக்கு வந்தது. இப்படி எல்லாம் இருக்கும் என்று முன்பே அறிந்து சொன்னது போல் அல்லவோ நடக்கிறது.

லீலாவின் அபிப்பிராயங்களை அப்படியே மடக்கி நான் பதில் கொடுத்தேன். “இது போன்ற விஷயங்களை ஊன்றி ஊன்றிக் கவனிக்காமல் விட்டுவிடுவதுதான் நல்லது. வீணாக ஆராய்ச்சி செய்து மனத்தைச் சஞ்சலத்திற்குள்ளாக்கிக் கொள்வதில் என்ன லாபம்?”

ஒரு கணம் நடைபாதையிலேயே நின்ற லீலா என்னைப் பிரமிக்கும் விழிகளுடன் பார்த்து, “ராமு அதிருஷ்டசாலிதான்” என்று முணுமுணுத்தாள்.

பஜார் ரோடு ஒன்றுக்கு நாங்கள் வந்தோம். லீலா என் கையைப் பிடித்து அழுத்தி, “இங்கேயே நிற்கலாம். பஸ் இங்கே தான் வரும்” என்றாள். பிற்பகல் வேளையாதலால் துணிக் கடைகளிலும், வளையல் கடைகளிலும் ஏறி இறங்கும் பெண் மக்கள் தாம் அதிகம் காணப்பட்டனர். நான் வைத்த கண் வாங்காமல் எதிர் வரிசையில் உள்ள கடைகளைக் கவனித்துக் கொண்டிருந்த பொழுது, அந்தப்புறம் ஒரு பஸ் வந்து நின்றது. ஆட்கள் இறங்கிய பின் மறுபடியும் அது நகர்ந்தது.

“ஹலோ!” என்று யாரோ பழகிய குரலில் விளித்தது என் கவனத்தை இழுத்தது. எதிர் வெயிலில் முகத்தைச் சரித்துக் கொண்டு பார்த்தேன். பஸ்ஸிலிருந்து இறங்கியவர்களில் ஒருவனான மூர்த்திதான் அப்படிக் கூப்பிட்டிருக்கிறான்.

ரஸ்தாவின் குறுக்கே கடந்து எங்கள் அருகில் வந்த அவன், “நான் காண்பது மெய்தானா? கண்கள் பொய் சொல்லவில்லையே?” என்று முறுவலித்தான்.

“கண்களைத் துடைத்துக் கொண்டு நன்றாகப் பாருங்கள். இந்த உலகத்தில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் பின்னும் குறுக்கிட்டால் கிள்ளி விட்டுக் கொண்டு பாருங்கள்” என்று பதிலுக்குப் புன்னகை செய்தாள் லீலா.

“மிஸஸ் ராமநாதனுக்கு அருகிலே இருக்க வேண்டியவர் மிஸ்டர் ராமநாதனாயிற்றே என்ற சந்தேகம் ஒரு புறம் இருக்க, என் கண்களிலேயே தட்டுப்படாமல் இந்தப் பரந்த பட்டினத்தில் எங்கோ ஒளிந்து கொண்டிருந்த லீலாவை இன்று கும்பிடப் போன தெய்வம் குறுக்கே நின்று மரித்தாற்போல் காண நேரிட்ட செயல் ஒரு புறமாக, என்னை என் கண்களே நம்பிக்கை இழக்கச் செய்து விட்டது” என்றான் அவன்.

“எங்கே… இத்தனை தூரம்?” என்று லீலா கேட்டாள்.

“மௌண்ட் ரோடு வரை ஒரு வேலையாக வந்தேன். அப்படியே மிஸஸ் ராமநாதனைப் பார்க்க, உங்கள் வீட்டைத் தேடிப் பார்க்கலாம் என்று தான் கிளம்பினேன். அவள் எனக்குத் தெரிந்தவளாக்கும்.”

“அட! அப்படியா சங்கதி? என்னிடம் நீ சொல்லவேயில்லையே சுசீ. உங்களுக்கு உறவா அவள்?” என்று லீலா மலர் முகத்துடன் கேள்விகளை அடுக்கினாள். அவனைக் கண்டதுமே எனக்கு அவன் புடைவைகளைக் கொண்டு அத்தையிடம் கொடுத்திருப்பானோ, அத்தை என்ன சொல்லியிருப்பாளோ அவனிடத்தில், அவன் என்ன நினைத்துக் கொண்டிருப்பானோ என்ற எண்ணங்களெல்லாம் மனத்தின் அடித்தளத்திலிருந்து கிளம்பி என்னை உறுத்தத் தொடங்கி விட்டன. அதைப் பற்றி அவன் இப்போது லீலாவுக்கு முன் கேட்டு விடாமல் இருக்க வேண்டுமே என்று நினைத்தேன்.

எங்கள் பரிச்சயத்தை அவனே விளக்கிய பின் லீலா, “ஆனால் சுசீலாவைப் பார்க்க எங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தீர்கள் என்று சொல்லுங்கள்!” என்றாள் சந்தோஷத்துடன்.

என் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ‘அந்த விஷயத்தை அவன் சமய சந்தர்ப்பம் அறியாமல் கேட்டு விட்டால்? இவனிடம் புடவையைத் திருப்பிக் கொடுத்தது என்ன முட்டாள்தனம்?’

“நாங்கள் படம் ஒன்று பார்க்கத் தியேட்டருக்குக் கிளம்பினோம். ஆட்சேபம் ஏதும் இல்லை, வருகிறீர்களா? ஒரு விஷயம் இல்லை, பல விஷயங்கள் வேண்டுமானாலும் கேட்க அவகாசம் இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே லீலா அவனையும் அழைத்தாள்.

அவன் தட்டிக் கழிக்க வேண்டுமே என்று நான் விரும்பினேன். ஆனால் அவனோ, “ஓ! வருகிறேன். ஆனால், அந்தச் சமாசாரம் இப்போது கேட்பதற்கில்லை. அவளிடம் தனியாகத்தான் கேட்க வேண்டும்!” என்று என்னை நோக்கி நகைத்த போது, லீலாவின் முகத்தில் கேள்விக் குறியிட்டு விட்டது. “அப்படியானால் எனக்குத் தெரியாமல் நீங்கள் அவளைப் பார்த்துப் பேச வீட்டுக்கு வந்தது தடைப்பட்டு விட்டதாக்கும்!” என்ற அவள் கேள்வியில் தொனித்த வேதனையின் கீறல் என் உற்சாகத்தை விழுங்கி விட்டது.

எனக்குத் தர்ம சங்கடமாகவும் கஷ்டமாகவும் இருந்தது.

“அப்படி முழுக்கவும் சொல்வதற்கில்லை. லீலா அவர்களையும் பார்க்க முடியுமானால் ஒரு விஷயம் பேசலாம் என்ற ஆசையும் இருந்தது” என்றான் அவன் அடுத்தபடியாக. எனக்கு உயிர் வந்தது. உற்சாகமாக, “ஓகோ!” என்று லீலாவை நோக்கிப் புன்னகை செய்தேன்.

“ஆனால் அதுவும் சொந்த விஷயம். இப்போது பேசுவதற்கில்லை” என்றான் மூர்த்தி. லீலாவின் முகம் பட்டுப்போல் சிவந்தது. மூர்த்தியுடன் அவள் வார்த்தையாடிய விதத்தில் எனக்கு ஏனோ அவளிடத்தில் நான் காணாததொரு புதுமை இருந்ததாகப் பட்டது. ஆரம்பம் முதலே அவளைக் கூர்மையாகக் கவனித்து வந்த என் கணவருடன் தங்குதடையின்றி அரட்டையடிக்கும் அவளுடைய இயல்பான மாதிரியில் இப்போது அவனுடன் பேசவில்லை என்று எண்ணினேன்.

இதற்குள் நாங்கள் எதிர்நோக்கியிருந்த பஸ் வந்து விட்டது.

மூவரும் உட்கார்ந்தானதும் லீலா, “நீங்கள் நினைத்தது முற்றும் தவறு. எங்கள் இருவரையும் வீட்டிலே தனித்தனியே சந்தித்துப் பேசுவது என்பது முடியாத காரியம். கிடக்கட்டும். நீங்கள் தனியாகப் பேசும் விஷயங்களை நாங்கள் உடனேயே பரிமாறிக் கொண்டு விடுவோம்! அதற்கு என்ன சொல்கிறீர்களாம்?” என்றாள்.

“அது உங்கள் சொந்த விஷயம், அதைப்பற்றி எனக்கு என்ன? நீ முடியாது என்கிறாய் அல்லவா? நான் உங்கள் வீட்டிலேயே நான் கூறியபடி சந்தித்துக் கேட்க வேண்டியவற்றைக் கேட்கிறேனா இல்லையா பாருங்களேன்?” என்று அவன் புதிர் போட்டான்.

என்னையும் மறைத்து லீலாவிடம் அவனுக்குச் சொந்தச் சமாசாரம் என்ன இருக்கும் என்பதை நான் ஊகித்துக் கொள்ளப் பல தடைகள் தெரிந்தன. அவளைக் கண்டதும் அவன் முகம் அப்படி மலர்வானேன்? அவளுடன் பேசும் போது, குரலில் அத்தனை மகிழ்ச்சி தாண்டவமாடுவானேன்? என்னிடம் தனியாக ஒரு சங்கதி கேட்க வேண்டும் என்று அவன் தெரிவித்த போது, லீலாவின் இருதயம் சுருங்குவதை முகமண்டலம் உடனே எடுத்துக் காட்டுவானேன்? என் பங்குக்கு நான் நகைத்ததும் அவன் ‘சொந்த விஷயம் அதுவும்’ என்று கூறியதும் அவள் முகத்தைக் குங்குமமாக ஆக்குவானேன்? இன்னும் அன்றையப் பொழுதில் நான் நினைத்தபடி அவள் வெற்று உள்ளத்துடன் இருக்கவில்லை என்பது நன்கு புலப்படும்படி பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இரண்டும் இரண்டும் நாலு என்று அறியப் பெரிய பெரிய கணக்குப் போட வேண்டுமா?

களிப்புடன் நாங்கள் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து பின்னும் மூர்த்திக்குப் போக வேண்டுமே என்று இருந்தாலும், “நேரமாகவில்லை இன்னும். கடற்கரைக்கு வருவதானால் நானும் உங்களுடன் வருவேன்” என்றான் அவன்.

எனக்கு அடிமனத்தில் அச்சம் துடித்தது. எங்கே லீலா சரி என்று கூறிவிடப் போகிறாளோ என்று நான், “வேண்டாம் இப்போது” என்று அவள் காதைக் கடித்தேன்.

“இவள் இருக்கிறாளே, நான் கூப்பிடும் போதே அவர் இல்லாமல் வர மாட்டேன் என்றாள். இப்போது வீட்டில் அவர் வந்து விடுவாராம்! துடியாய்த் துடிக்கிறாள்!” என்று லீலா என் கையைப் பிடித்து ‘நறுக்’கென்று கிள்ளினாள்.

“ஓ! நான் மறந்து விட்டேனே! ரொம்பவும் உண்மை. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பாள். அப்படியானால் நான் வரட்டுமா? நாளைக்கு வருகிறேன்” என்று எங்களிடம் அவன் விடைபெற்றுக் கொண்டான். நாங்கள் திரும்பும் போது லீலா என்னுடன் விசேஷமாக எதுவும் பேசவில்லை. ஏதோ ஆழம் காணாத சிந்தனையில் லயித்து விட்டாள் என்பதையும், அவள் மனம் எங்கோ வானத்தில் பறக்கும் பட்டாம் பூச்சி போல் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் அவள் மௌனமும் என் கேள்விகளுக்குச் சம்பந்தமில்லாத பதில்களும் புலப்படுத்தின.

வீட்டில் நாங்கள் திரும்பி அடி எடுத்து வைத்ததுமே பொலிவுள்ள சந்திரனைப் பிடிக்க வரும் ராகுபோல் எங்கள் மகிழ்வு மறையும்படி பட்டு லீலாவை நோக்கி, “ஏண்டி லீலா? அவளையும் அழைத்துக் கொண்டு ஊர் சுற்ற இதுதானா சமயம்? நானும் வீட்டில் இல்லை. அத்தை ஒண்டிக்காரியாக ஊர்ப்பட்ட வேலைகளுடன் சிரமப்படுகிறாள். குழந்தைகள், புருஷர்கள் காப்பிக்கு வருகிறார்கள். மயிலாப்பூரிலிருந்து ஜயமும் மச்சினரும் வேறு அவளைப் பார்க்க வந்துவிட்டுப் போகிறார்கள். வீடு திமிலோகப்படுகிறது. இன்னும் நாலு நாட்கள் கழித்துப் போகக் கூடாதா? வீட்டிலே சமய சந்தர்ப்பம் தெரிய வேண்டாமா?” என்று சிள்ளென்று விழுந்தாள்.

இந்தச் சூடு லீலாவுக்கு மட்டும் அல்ல, எனக்குந்தான் முக்கால்வாசியும் என்று என் உள்ளத்தில் சுரீரென உறைத்தது. குற்றவாளியைப் போல நின்றேன்.

“சமயம் என்ன சமயம்? இந்த வீடு எப்போதுந்தான் திமிலோகப்படும்! அத்தை ஒண்டிக்காரியாகச் சிரமப்படுவது இன்று ஓரகத்தி வந்த பிறகு தான் கண்களில் உறுத்துகிறதாக்கும்! அடாடா!” என்று ஏளனும் கேலியும் கலந்த குரலில் கூறிய அவள் விடுவிடென்று யாரையும் லட்சியம் செய்யாதவளாக மச்சுப் படியில் ஏறினாள்.

– தொடரும்…

– நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது – 1953.

– பெண் குரல், முதல் பதிப்பு: 2011, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி] லிட், சென்னை.

நன்றி: https://www.projectmadurai.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *