பூப்பெண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2025
பார்வையிட்டோர்: 67 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பூக்காட்டின் நடுவே படுத்திருக்கிறேன். தலை தூக்கிப் பார்த்தால் எங்கும் மலர்கள். மெல்லிய காம்பில் கொத்து கொத்தாய் சீரான அடர்த்தியில் தொடுவானம் வரை, தென்றலின் தாளத்திற்கு உல்லாசமாய் அசைந்தபடி… 

ஒருபுறம் வெள்ளை டெய்சிகள், மறுபுறம் துலக்க சாமந்தி பாயாய் விரிந்திருந்தது. வெள்ளைக்காரச் சிறுமிகள் கைகோர்த்து ‘சிங்கா ரிங்கா ரோஸஸ்’ என்று சுற்றி வருவது போன்ற சுழற்சியில் டெய்சிகள். சாமந்தி கூட்டம் நம்மூர் குழந்தைகள். 

‘ஒருகுடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம்’ என்று மூச்சு முட்டும் பாட்டுடன் கிராமத்துப் பொடிசுகள் ஜோடியாய்க் குனிந்து வளைந்து போடுகின்ற துள்ளாட்டம், 

அவளது பாதங்கள் நமநமத்தன. இப்போதே ஆட வேணும். அம்மா ஆச்சரியப்படுவாள். 

‘என்னடீ உட்காரதும், எழுந்துக்கறதும் கூட நாட்டியம் போல செய்யுற?’ 

‘ஜதி சொல்றியாமா? தித் தித்தைச் சொல்லு. நான் திஸ்ர நடையிலே வர்றேன்’ – பொய் கோபந்தான். 

‘அப்படியில்ல – ஒரு ஒயில் தெரியுதுன்னேன்’. 

பலர் சொன்னதுண்டு. பிஞ்சிலேயே ஆட்டம் பழகி விட்டதால் அசைவில், பேச்சில் இனிமை படிந்து விட்டது. மணிக்கணக்கில் அடுப்பில் மணிக்கட்டைப் பின்புறமாய் மடித்து வைத்து ஆடியதில், அல்லிக் கொடியாய் வளையும் கைகள், விதவிதமான முத்திரைப் பிடித்துத் தளிரான தாமரை விரல்கள். கற்பனைகளில் முங்கிய கண்களில் கவிதையின் சாயல். இதழோரப் பரவசம். 

தடாலடியாய்ப் பேச, கை, காலை வீசிப்போட முடிவதில்லை. கலை அவளை ஒரு பூவாக்கி விட்டிருந்தது. 

மனிதர்களில் பல வகை: மரம், முள், புல், கல், நீர், மண் என்று. இவள் பூ சுபாவம். அதிமென்மையாகி விட்டால் பலவியைங்கள் இன்னலாகி விடுகின்றன. தீண்டல் சுடும், மிக நெருங்கி நின்று புகை ஊதினால் கூட அவஸ்தை. 

அடிக்கடி கனவுலகில் மலர்களின் நடுவே மஞ்சம் விரித்துக் கொள்வாள். அவைகளும் செல்லமாய் சுற்றி வரும். ஆடும். இவைகளுக்கு யார் நாட்டியம் கற்பித்தது? 

பரதமில்லை இது. ரஷ்ய பாலேயிலிருக்கும் காற்று சுமக்கும் சிறகின் வாசகம். 

இவளின் நினைவு காற்று நிற்க பூக்கள் உறையும். மேடைத்திரை விலகும். முன் உள்ள நாட்டியக்காரியின் சின்ன அலட்சியத்துடன் நிற்கும் அவை. 

அம்மா மலர் ஜாதியில்லை. மண். நீர் பட்டால் குழைந்து கொள்வாள். வறட்சி வந்தாலும் தாங்கத் தயார். 

யதார்த்தமான மனுஷி. 

அம்மா வடகமும் வற்றலும் போட்டுவிட, 

“நீ… இந்த மாயம் செய்வதிலென்ன நியாயம்?” இவள் அபிநயத்துடன் மொட்டை மாடியில் காவல் இருப்பாள். பெரும்பாலான சம்பாஷணைகளும் அப்போது தான். 

“நம்ப வீட்டிலேயேகத்த சிகப்பில் பிறந்தது நீதான் தம்மு.ராஜி சிகப்புன்னு அரக்கிலே இந்தப் பண்டிகைக்குப் பட்டு எடுத்தாங்க. ஆனா, பொருந்தலை. மாநிறந்தான் அவ.”

“உம் பொண்ணைவிட எல்லாரும் எல்லாத்திலேயும் மட்டந்தான். ” 

சிரிக்கும் போது மகளைக் கண்ணெடுக்காமல் பார்ப்பாள்.

“பாட்டு கேட்டுட்டா எப்படி துள்ளுவே! காலடிப்பே. கண்ணை உருட்டுவே. சரின்னு மயங்கி டான்ஸுக்குச் சேர்த்து விட்டோம். ‘கப்’புனு பிடிச்சுகிட்டே: குருவும் ஊரும் சிலாகிச்சதிலே மெட்ராஸ் வரை அனுப்பிச்சோம், நீ ஸ்டேஜ் ஏறி ப்ரோக்ராம் தர்றபோதெல்லாம் இங்க உன் தாத்தா பாட்டியோட எத்தனை சண்டை, சமாதானப் பேச்சு… ம்ம்”. 

“காலம் மாறியாச்சும்மா.” 

“காலங்கறது என்ன – மனுஷ மனத்தானே? இந்த ஊர் பக்கம் அது லேசுல மாறாது. நாமதான் அனுசரிச்சு நின்னுக்கணும்” 

”ஆடின கால் இனி ஓயாதும்மா, சும்மா பொழுது போக ஆடலியே. நீ சொல்லியும் கத்துக்கலை. டி.வி.யில் தலை தெரிஞ்சா போதும்ற லட்சியமா? வெயிட் குறையணுமேன்னு சலிச்சுச் சலிச்சுக் குனிஞ்சு நிமிருற அல்டாப்பு கேஸில்ல. ஆசையாய் படிச்சேன். இப்போ உயிராயிடுச்சு.” 

”புரியுதுடி, புரிஞ்சு ஊர் ஊராய் கூட்டிப் போகலை? எத்தனை போட்டி, ப்ரைஸ் ம்? நகை செட் வாங்க நாகர்கோவில் வடசேரிக்கே போனோம். டிரஸுக்கு பல கடை ஏறி ஆயிரமாயிரமாய் செலவு பண்ணலை? திறமை இருந்துச்சு. ஊர் பாராட்ட பிரமிக்கும்படியா ஆடின. இனி அதே சாமர்த்தியத்தோட வாழ்க்கை அமைச்சுக்கற கட்டம். வர்ற வரனெல்லாம் தட்டி விடாத தம்மு. இந்த முறை சரின்னுடு.”

“வர்ரவனுக்கு நீ ஆடறதெல்லாம் பிடிக்கலை, சலங்கையைக் கடாசிடுன்னு சொல்றதுக்கு ஏம்மா நீ அத்தனை பண்ணினே? சும்மா இருந்திருக்கலாம்ல?”

அம்மா பாவமாய் காக்கைகளைப் பார்த்திருப்பாள். “வான்கோழிக்கு வகை ருசியாய் தீனிவச்சு வளர்த்து, அது ஆடி நிக்கையிலே வெட்டி பண்டிகை பிரியாணி சமைக்கிற கதை.” 

“கல்யாணம்… பிரியாணி போடற மாதிரியின்ற?”

“கரெக்ட். சூடா சாப்பிடும் போது உணக்கைதான். முட்டையும், பச்சடியுமா தொட்டு சாப்பிட்டா ரெண்டு ப்ளேட் நிமிஷத்துல இறங்கும். பிறகு தான் அவஸ்தை. உப்புசம். நெஞ்செரிச்சலோட, வெங்காய வாடையும் ஏப்பமுமாய் நெஞ்சு நீவி தவிக்கணும்.” 

“ஒண்டியா நின்னாலும் நெஞ்செரிச்சல் தான். அவ அவ புருஷனை ஒட்டிகிட்டு பிள்ளையோட போகப் பார்க்கையிலேயும் ஏப்பம் வரும் – வெறுங்காத்தா” 

”கல்யாணம் வேணாங்கலம்மா. எனக்கு ஒத்துப் போறவராய் இணைஞ்ச ருசியுள்ளவராய் பாரு. என் வயித்துக்கேத்த சோறாய்ப் போடு.” 

“இது பெஸ்ட் வரன்டீ மில் ஓனர், மோண்டிகோவாமே அந்த புது தினுசு கார் வாங்கியிருக்காராம். அது மட்டுமே 10 லட்சம்! நம்ப ஜாதியிலே நீ அபூர்வ அழகு. ஆடி ஆடி உடம்பிலே மெருகு போட்டிருச்சு. பேர் பிரபலம், அதினாலதான வலிய கேட்டு வராங்க?” 

“நான் ஆடறதை விட முடியாதும்மா” 

“குடும்பப் பெண்களுக்கு டான்ஸ் அவசியமில்லைங்கறது அவங்க வாதம்.” 

“அப்ப ஆடாத, உரல் மாதிரி உருள்ற ஒருத்தியைம் கட்டிக்கட்டும்”. 

“பெருமை பேசக்கூடாதடீ” 

“என் கலையை யாரும் சிறுமைப்படுத்த வேண்டாம்மா.”

“உன்னை மேடை மேடையா ஆட வைக்கிறேன்னு வந்தவனையும் போடானுட்ட” 

வேதனைப் பார்வைதான் பதிலாகும். அவள் நிராகரிப்புக்கான காரணம் அம்மாவிற்கு நன்றாகவே தெரியும். பிறகென்ன இந்த பேச்சு? 

“சரி. விடுடீ. யோசி” குற்ற உணர்வுடன் அம்மா நகர்ந்து விடுவாள். 

அப்பாவின் செருப்பு தேயவேயில்லை. வரன்கள் தானாய்த் தேடி வந்தன. முதல் வரன், பையனின் அம்மா ‘தமிழ்’மன்றத்தில் இவள் நாட்டிய நாடகத்தைப் பார்த்ததால் வந்தது. 

“நா சிறுவயசிலே வாய்ப்பாட்டு, வீணை எல்லாம் சொல்லிக்கிட்டதுண்டு. அங்கே அதெல்லாம் மருந்துக்கும் கிடையாது” என்று அந்த அம்மா தலையசைத்த போது முக்கிலும் முகத்தின் இருபுறமும் கிடந்த வைரங்கள் ஜொலித்தன. “தமயந்தி எம்மருமகளா வந்தா சந்தோஷம். வீட்டுக்கே நல்ல களை!” 

இவள் மாப்பிள்ளை பற்றி ஒரு கேள்வியுமில்லாமல், “அப்போ நீங்களே என் ப்ரோக்ராமிலே பதம் பாடுவீங்களாம்மா?” கேட்டாள். 

கவ்விய தேளை உதறுவது போல பதறினார்கள். 

“அவ உள்ளூர் ஸ்கூல் விழாக்கள்ல ஜட்ஜ், தலைமைன்னு பொழுது போக்கறா. அதுதான் லிமிட். மருமக ஆட இவ பாடறதா?” துடித்தார்கள். 

தங்கள் கௌரவத்தைப் பாதிக்கும் விஷயமாக எண்ணி பேசியவர்களிடம், “பரதம் அபூர்வ கலை. அதில் திறமை, ஈடுபாடு, ஞானம், அதற்கேற்ற தோற்றம் அமைவது பெரும் பேறு அதை ரசிக்கணும், வளர்க்க வேணும். துச்சமாய்க் கருதறது தப்பு”. குறுகிய நோக்கு என்ற ரீதியில் இவள் பேசி வழியனுப்பிய போதுதான் அப்பா முதன் முதலாக அவளைக் கடிந்து பேசியது.

”குதிரை ஓட ஓடத்தான் வியாபாரிக்கு லாபம். பணத்தைப் பார்ப்பானா? இவ ஆட்டத்தையா?” 

“சரி. பார்க்க வேணாம். வீட்டோட நா ஒரு டான்ஸ் ஸ்கூல் கூட நடத்தக் கூடாதுன்றது தர்மமில்லையே.” 

“வேண்டிய மட்டும் தங்கமிருக்கு. தர்மமும் வேணும்னா?”

“சிவகாசியிலே தீப்பெட்டி ஃபாக்டரி வச்சு சேர்த்த தங்கம் கழுத்துக்குக் கீழே கட்டையக் கொடுத்து பிஞ்சுகளை தலை நிமிர விடாம மருந்து பூச, குச்சியடுக்க வைக்கிறவங்ககிட்ட எங்கேயிருக்கும் தர்மம்?” 

“இவ இப்படியெல்லாம் குடைஞ்செடுப்பான்னு கண்டுதான் ஓடிட்டானுங்க.”
 
அலுத்துக் கொண்டார்கள். 

அடுத்தவரன் பார்வைக்கு ராஜாதான். மாதம் 15,000 சம்பளத்தில் தேயிலை எஸ்டேட் ஒன்றில் மானேஜர். கம்பெனி செலவில் ஒரு ஏக்கரில் மாளிகை தான், கார்தான், வேலைக்கார படைதான். 

“தேயிலைக்குத்துச் செடி நடுவே நீ ஓடி ஆடலாம்க்கா” தம்பி சீண்டினான். 

“சபையிலே ஆடலேன்னா போறதும்மா. நாலு குழந்தைங்களைக் கூட்டிவச்சு ஆடவும் அபிதயமும் சொல்லிக் கொடுக்கவும் முடியாத அத்துவானம். மூச்சை அடைக்கும்…” 

அவளிடம் தனியாகப் பேச வந்தான். வெள்ளையில் ஊசிக் கருப்புக் கோடுகளிட்ட சட்டை, கருநீல பாண்ட் உயரமும், அடர்ந்த புருவங்களும், விரிந்த தோளும், மார்பும் கண்களை நிறைத்தன. கன்னங்களில் அவளறியாமலேயே செம்மை. 

“திறமையான டான்ஸர் நீங்கன்னு தெரியும் தமயந்தி. எஸ்டேட்டில் கிளப் மீட் வருஷத்துக்கு ரெண்டு, மூணு தடவை உண்டு. அதிலே உங்க ப்ரோக்ராம் வைக்கலாம்.” 

கரகரத்த குரல் கெஞ்சியது. 

“எஸ்டேட் ஆளுன்னா குடிப்பழக்கம் இருக்குமோன்னு அப்பா பயந்தாங்க. நீங்க ‘க்ளப் மீட்’டிலே சாப்பிடற ஒரு பெக் விஸ்கியோட சரின்னு உங்க சித்தப்பா சொன்னாராம்”. 

புரியாமல் அவளைப் பார்த்திருந்தான்.

அவளுடையது வட்ட முகம். பூக்கள் பெரும் வாரியாக வட்டம் தானே? நீள, முக்கோண வடிவமெல்லாம் அபூர்வம். செதுக்கிய சித்திர முகத்தை கண்ணெடுக்காமல் பார்த்தான். 

”அந்த பெக் விஸ்கியில்லை. எனக்கு பரதம், தண்ணீர் போல, தினமும் வேணும். அதுவும் தாகமடங்கற அளவு.” 

கலையின் கவர்ச்சி, ஆகர்ஷிப்பு அதிகமாயிருந்தது.

மூன்றாவது துபாய் மாப்பிள்ளை. 

கம்ப்யூட்டர் என்ஜினியராம் கருப்புன்னாலும் ஆறடி உயரம்.

“பாத்ரூம் கூட அந்த ஊரில் ஏ.ஸீ.தானாமே?”

“சொக்கத் தங்கம்னா அது அங்க தான். அப்படியொரு பசும் மஞ்சள்.” 

அவன் பேச்சு கேட்கும் வரை ஆளாளுக்கு உற்சாகமான பேச்சு. 

“வெளியே போகையிலே பர்தா போடணும், தனியா வெளியே சுத்த முடியாது. காரும் ஓட்டக் கூடாது. உங்க பொண்ணுக்குத்தான் ட்ரைவிங் தெரியாதே. ஸோ, நோ ப்ராப்ளம், டான்ஸ்? கூடாரம் மாதிரி பெரிய பர்தா. அதற்குள்ளேயே முடிஞ்ச அளவு ஆடிக்கலாம்.” பகபகவென்று சிரித்தான். 

நான்காவது வந்தவன் தான்- 

“அவ ஏறாத மேடையே இருக்கக் கூடாது. இந்த வருஷம் கொடைக்கானல் சம்மர் ஃபெஸ்டிவலுக்குச் சொல்லி வச்சிடவா?” என்று துடியாய் நின்றான். 

அந்தத் துடிப்பில் சந்தோஷத்திற்குப் பதிலாய் இவளுக்கு வந்ததென்னவோ சந்தேகத்தான்! 

விசாரித்ததில் பல விஷயங்கள் வந்தன. ‘அப்பா இல்லைங்க’ என்றது. ஓரளவு தான் உண்மை. அவன், தகப்பன் பெயர் அறியாதவன். 

அவன் ‘காலேஜ்ல லெக்சரராய் இருக்கான். சீக்கிரமே ப்ரொபஸர்’ என்றதும் ‘இது டெம்பரரி வேலை. மூன்றே மாதங்களுக்கு’ என்று திருத்தப்பட்டது. 

இவள் ப்ரோக்ராமுகளுக்காக அலைந்து, பிடித்து கூடவே பெட்டி சுமந்து, மேக்-அப் பூசுகையில்- 

‘ஸ்பாஞ்சை மோவாயிலே அழுத்துங்க’ என்று மேற்பார்வையிட்டு, தத்து, பில்லாக்கு போன்ற பொடி சாமான்களையும் கவனமாய் எடுத்து வைத்து, ஸ்டேஜ் சரிபார்த்து, சன்மானம் வசூலித்து… இதற்கெல்லாம் துணை இருந்தால் சௌகர்யந்தான். ஆனால், அது புருஷனாகவா இருக்க வேண்டும்?. கலையை வியாபாரமாக்கத் திட்டமிட்டவனையும் விலக்கினாள். 

ஐந்தாவது இது. அதாவது கணக்கில் எடுக்கக் கூடியவற்றில் ஐந்தாவது. அனைவருக்கும் முக்கு முட்ட ஆசை. கோவை அருகே முக்கால் கிராமம் ஒன்று. அவனது தோட்டத்திலே, சிட்டியிலே, மலை மேலே என்று விதத்திற்கு ஒரு வீடு. 

ஆனால், துணையாக வருபவள், தனக்கென்று ஒரு ஆர்வத்தை, வாழ்வை அமைத்துக் கொள்வதில் இவனுக்கும் சம்மதமில்லை.

‘மூணு வீட்டையும் மெய்டெய்ன் பண்ணணுங்க. பார்ட்டீஸ் நிறைய கொடுக்க நேரும். நாமளும் போய் கலந்துக்கணுங்க. டான்ஸ்’, ட்ராமா எல்லாம் எனக்குப் பிடிக்கறதில்ல. புரியறதுமில்லைங்க. அம்மாக்கு ஆஸ்த்துமா, அஞ்சு அக்காமார் எனக்கு, நிறைய பொறுப்பிருக்கு.’ 

பொறுப்புகளுக்கு அஞ்சுபவளில்லை அவள். கலை மீது வெறுப்பு அல்லது அலட்சியம் காண்பிப்பவனுடன் வாழ்க்கை..? அது மூன்று பங்களா, மாண்டிகோ காரோடாயிருந்தால்தான் என்ன கசக்காதோ? 

“பூவாடிப் போயிடும்மா” – மறுத்து விட்டாள்.

“அதென்ன அதிசயம்? பூ வதங்கறதுக்கு முன்னே மாலையாக்கிடணும். உதிர்ந்து போச்சுன்னா முடிஞ்சது போ.” 

அரைக் கனவுலகில்… கற்றிலும் சமுத்திர அலையாய் எம்பியபடி பூக்கள். தங்கள் ஆட்டத்தைத் தாங்களே ரசிக்கும் தலைசாய்ப்பு. இதில் இன்பமில்லாமலா? 

மாலையாக உருவானால் கடவுள் பாதம் சேர வேண்டும். அல்லாமல் அரசியலுக்கு, ஆர்ப்பாட்டம், பிணத்திற்கு என்று விழுவது அவலம். ஒரு பொழுதுக்குள் பிய்ந்து குதறிப்போகும்.

இப்படிச் செடியிலேயே ஆடிக் கிடந்து, இயல்பாய் உதிர்த்து, மண்ணிற்கு உரமாகலாம். 

நிம்மதியாய் விழி செருகி முழு உறக்கத்திற்குள் சரிந்தாள். சுற்றிலும் மலர்கள் அவளைக் குனிந்து பார்த்துப் புன்னகைத்தன. 

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *