பூப்பு வெடி
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 5,088
(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சுரேந்திரன் அன்று காலையிலேயே வெகு சுறுசுறுப்பாகவிருந்தான். அந்த லயத்தைச் சுற்றியிருந்த பகுதிகளை யெல்லாம் மிகுந்த அக்கறையோடு சுத்தம் செய்தான். சூழவர அடுத்தடுத்த திட்டுகளிலெல்லாம் தேயிலைத் தளிர்கள் பளபளப்பாகக் காட்சி யளிப்பதொன்றும் புதிய விஷய மல்லவே!
‘கனகம்… கனகம்’ உள்ளே ஏதோ வேலைகளில் ஈடுபட்டிருந்த மனைவியை அழைத்தான் அவன்.
‘என்னா ரொம்ப அவசரமோ?’ என்றவாறு அகப்பையும் கையுமாக வந்தாள் கனகம்.
‘அங்க செல்லாச்சி யக்கா வருதுபோல தெரியிது. எல்லாம் ரெடியா?’
‘அவங்களைப் பத்தித்தான் தானும் யோசிச்சிக்கிட்டிருக்கிறேன்… அவங்கதாள் வாராங்களோ’ என்று கீழ்ப்பக்கமாகக் கழுத்தை நீட்டிப் பார்த்தாள் அவள்.
‘சந்திக் கடைக்குப் போயி சீக்கிரமா அந்தச் சாமான்களைக் காண்டுகிட்டு வாங்க.. இன்னக்கி நேரம் போறதே தெரியல்லீங்களே’ என்றவாறு உள்ளே சென்றாள் அவள்.
சுரேந்திரன் – கனகம் தம்பதிக்கு நான்கு பிள்ளைகள். ஒரே மகள் பூரணி. அவள் பூப்படைந்து இன்றைக்கு ஏழாவது நாள். அவ்வளவு செறிவாகத் தோட்டத் தொழிலாளர்களைக் கொண்டிராத இந்தக் குரூப்பில் இருபத்தைந்து குடும்பங்களுக்கு மேல் போகாது. ஆறே ஆறு லயங்கள்தான்.
சுரேந்திரன் குடும்பத்தில் மாத்திரம் இதுவரையில் எந்த விதமான சடங்கும் நடந்ததே யில்லை. முதன்முதலாக பூரணியின் ‘பூப்பு நீராட்டல்’ நடை பெறுவதால்தான் இத்தனை உசார் அவனுக்கு.
அப்பொழுது சூரியக் கிரணங்கள் கோடுபோட்டுக் கிழித்துக் கொண்டிருந்தன. சேட்டை மாட்டிக்கொண்டு உமலும் கையுமாக ஒற்றையடிப் பாதைக்கு இறங்கினான் அவன். துருத்தி நிற்கும் கற்களும் மேடுபள்ளமும் கொண்ட அப்பாதை அப்படி யொன்றும் புதிதானதல்லவே! இருநூறு மீற்றர்போல இப்படிப் போன பின்புதான் மண்பாதை யொன்று கைகுலுக்கும்!
சந்திக் கடைக்குப் போய் தேவையான சாமான்களையெல்லாம் சுமந்துகொண்டு வந்து சேரும்போது… செல்லாச்சியக்காவின் குரல்தான் அங்கே எதிரொலித் ததுக்கொண்டிருந்தது.
எந்தக் காரியங்களுக்கும் அங்கே செல்லாச்சியக்காதான் பிரதம அமைப்பாளர்.
‘அப்பா……’
இந்தச் சில நாட்களாக மூலைக்குள் முடங்கி நின்ற பூரணியின் குரல் அங்கு புதிதாக ஒலித்த இதம், சுரேந்திரனின் மனமெல்லாம் நிறைந்து விட்டது. ஆமாம் அவள் புத்தம் புதுப் பாவாடையும். தாவணியுமாகக் காட்சிதந்தாள்.
பகல் பன்னிரண்டு மணி நகர்ந்து கொண்டிருந்தது.
‘ஆ… வாங்க வாங்க…’ சுரேந்திரனும் கனகமும் முகமெல்லாம் சிரிப்பாக கைகூப்பி அவர்களை வரவேற்றனர். அவர்கள் பிரதம விருந்தினர்கள் அல்லவா?
‘எங்க பூரணி’ என்று கேட்டவாறு பொடிமெனிக்கே தலையைப் பணித்து உள்ளே புகுந்தாள் . அவளைத் தொடர்ந்து அவளது கணவன் சுமதிபால.
அவளது கையிலேயிருந்த பெரியதொரு பரிசுப் பொதி பூரணியின் கைக்கு மாறியது. அவர்களுக்காகப் பிரத்தியேகமான விருந்து ஏற்பாடுகளும்கூட அங்கே செய்யப்பட்டிருந்தன.
சுமதிபால களுத்துறைக் கச்சேரியில் உயர் அதிகாரியாகக் கடமையாற்றுகின்றவன். பொடி மெனிக்கே பள்ளிக்கூட ஆசிரியை, இதைவிட அப்பகுதி தொழிலாளர்களோடு அன்னியோன்யமாகப் பழகுகின்றவர்கள்.
இது இன்று நேற்றுள்ளதல்ல. அவர்கள் அப்பகுதிக்கு வந்து சேர்ந்த இந்தப் பதின்மூன்று வருடங்களாகவே உள்ளதுதான். சித்திரை… வெசாக் தீபாவளி… என்றால் பரஸ்பரம் அவர்களிடையே உறவு வேரூன்றும்.
கீழ்ப்பகுதியில் அவர்கள் அழகான கல்வீடொன்று கட்டியிருந்தார்கள். லயப் பகுதிக்குச் செல்வதென்றால் அதே வீட்டின் முன்னால்தான் எவரும் சென்றாக வேண்டும்.
‘சாப்பிடுங்க…சாப்பிடுங்க..’.
அவர்களுக்குப் பரிமாறுவதில் செல்லாச்சியக்கா கூடப் நிற்கவில்லை. செல்லாச்சியைப் பொறுத்தவரையில் அவர்களோடு நெருக்கம் அதிகம். அவர்களது பேபியை ‘மொண்டிஸோரிக்கு’ அழைத்துச் செல்வதுகூட அவள் தானே!
அவர்கள் அங்கே அதிக நேரம் தாமதிக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்குப் பின்புதான் உள் வட்ட விருந்தே ஆரம்பிக்கவிருந்தது.
‘நாங்க போயிட்டுவாரம் பூரணி!’
விடை பெற்றுக் கொண்டு இறங்கியபோது அங்குமிங்குமாகச் சிதறி நின்றவர்கள் ஒன்று கூடினர். இனியென்ன விருந்து தான்!
‘சட்.. பட்.. பட்.. படார்…’
முகுந்தன் கொழுத்திய பட்டாசுகள் வெடித்தபோது கை கொட்டிக் கூத்தாடினார்கள் தோட்டத்துச் சிறுவர்கள்.
‘டே… டேய்… என்னடா இது…இவன்வேற இதுக்குள்ள பட்டாசு வெடிக்கிறான். யார்டா ஒனக்கு சல்லி கொடுத்தது’ மகனைப் பார்த்து இரைந்தான் சுரேந்திரன்.
‘இங்க . இங்க.. அவன் என்னமோ சந்தோஷத்தில செய்றான் போல நீங்க ஏன் அவனத் திட்டிறீங்க’ மகனுக்கு ஸப்போட் பண்ணியபடி வந்தாள் கனகம்.
‘ஒண்ணுரெண்டெண்ணாலும் பரவால்லியே… மூணு பக்கட்டில்ல கொண்டாந்திருக்கிறான்’ என்றவாறு மடியிலிருந்து பீடி யொன்றை வெளியே எடுத்தான் அவன்.
சடங்கிற்கு வந்து சேர்ந்தவர்களெல்லாரும் இன்னும் முற்றாக விடை பெற்றுவிடவில்லை. ஒதுங்க வைக்கும் வேலைகளும் இன்றும் இருக்கத்தான் செய்தன. களைப் பகற்ற நிழல் மரத்தடியில் சாய்ந்த சுரேந்திரனுக்கு மெல்ல தூக்கம் வருவது போன்ற உணர்வு.
‘தடார்… தடார்…’
திடுக்கிட்டெழுந்தது சுரேந்திரன் மாத்திரமல்ல, அங்கு நின்ற அனைவருந்தான். தகரக்கூரைக்கு மேலால் இத்தனை பெரிய கற்களா?
திகைத்துப் போய்விட்டார்கள் அத்தனைபேரும். கீழே வெறி பிடித்த பாங்கில், தடிகளும் கற்களுமாக ஒரு கூட்டம் ஓடிவந்தபடி… முகங்களில் இரத்தவெறி…
‘கடவுளே இதென்னங்க…’ எதையெதையோ நினைத்துப் பிரலாபித்தனர் பெண்கள்.
அப்பொழுதுதான் அவர்களுக்கிடையே பாய்ந்தார்கள் சுமதிபாலாவும் பொடிமெனிக்கேயும்.
‘நாங்க நாட்டப் பறிகொடுக்கிற கவலயில இருக்கிறம்.. இவங்க வெடிவெடிச்சி சந்தோஷம் கொண்டாடுறாங்க’ அவர்களில் ஒருவன் ஆக்ரோஷமான குரல்.
‘என்ன…என்ன இது அவங்க வீட்டில ஒரு சடங்கு… அதத்தான் கொண்டாடுறாங்க… நீங்கெல்லாம் விஷயம் விளங்காம இப்பிடி வந்திருக்கீங்க…’ சுமதிபால எல்லோரையும் தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து சொல்லவேண்டியதை விளங்கும் படியாகச் சொன்னான்.
தடிகளும், கற்களும் மட்டுமல்ல உயர்த்திக் கட்டியிருந்த சாரன்களும்கூட கீழே விழுந்த பின்புதான், மேலேயிருந்து அவதானித்துக் கொண்டிருந்தவர்களின் நெஞ்சப் படபடப்பு தணிந்தது.
வந்தவர்கள் அமைதியடைந்து திரும்பி நடந்தபின்பு, என்னதான் சங்கதியென்றறிய சுரேந்திரன் கீழே இறங்கி நடந்தான், சுமதி பால தம்பதிகள் மீண்டும் ரீ.வீ. பார்க்கத் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.
அன்று 1987-17-29-ந் திகதி.
ரஜீவ் – ஜே.ஆர், சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான தினம் அன்றுதான்.
– மல்லிகை 1988.10