பூக்களை மிதிக்கக் கூடாது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2024
பார்வையிட்டோர்: 149 
 
 

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரகு மேசை டிராயரை இழுத்தான். பிறகு பலம் கொண்ட மட்டும் இழுத்தான். டிராயர் வேகமாக வந்து மார்பில் இடித்தது. ‘அம்மா’ என்று கூவினான். அடுப்பங்கரையில் இருந்து என்னடா என்றாள் அம்மா. முழு டிராயரும் வெளியே வந்து விழுந்து விடுவது போல் ஆடியது. சிரமப்பட்டு அதை நிலை நிறுத்தினான். அதற்குள் கால் சட்டை முடிச்சு அவிழ்ந்து தொடை வழியாக வழிந்தது. அதை இடுப்புக்குக் கொண்டு வந்து இழுத்துச் சொருகி, அரணாக் கயிறை கால் சட்டைக்கு மேல் விட்டுக் கொண்டான். 

அடுத்த நாள் டைம்டேபிளுக்குப் புஸ்தகங்களையும் நோட்டு களையும் எடுத்து அடுக்க வேண்டும். முதல் பீரியட் கணக்கு. தினமும் முதல் பீரியட் கணக்காகவே இருந்து தொலைக்கிறது. அவனுக்கு அடி வயிறு வலிப்பது போல் இருக்கவே, தோட்டத் துக்குப் போய், கால் கழுவிக்கொண்டு வந்து மீண்டும் டைம்டேபிளைப் பார்த்தான். முதல் பீரியட் கணக்காகவே இருந்தது. 

கணக்கில் ‘ஓம் ஒர்க்’ பத்துக்கு மேல் இருந்தது. என்ன காரணத்தாலோ ரகுவுக்குக் கணக்குத்தான் ரொம்பக் கஷ்டமாய் இருந்தது. கணக்கு டீச்சர் தேவசகாயம் சார் இவனுக்கு மட்டும் ரொம்ப விரோதமாகிப் போனார். கிளாசுக்குள் வந்த உடனேயே, இவன் ஞாபகம் அவருக்கு வந்து விடுகிறது. ‘ரகுபதி… கம் டு த போர்ட்’ என்பார். ரகு தன்னிடத்தில் இருந்து எழுந்து போர்டுக்கு வருவான். அவனிருக்கும் இடத்துக்கும் போர்டுக்கும் பத்தடிதான் இருக்கும். ஆனால் மத்தியானம் வெயிலில் பல மைல் நடந்தது போல் இருக்கும். நெஞ்சு ‘திக்கு திக்கு’ என்று அடித்துக் கொள்வான். முகம் மாத்திரம் சுருங்காமல் புன்சிரிப்புத் தவழ்ந்தவாறு இருக்கும். 

கணக்கு சார் கணக்கொன்றை எழுதி ‘ஒர்க் இட்’ என்பார். ஒன்று முதல் சைபர் வரைக்கும் நம்பர்கள். அவைகளை ஒட்டிக் கொண்டு சின்ன நம்பர்கள், மாடுகளை ஒட்டிக்கொண்டு நிற்கும் கன்றுக் குட்டிகளைப் போல நிற்கும். அவன் போர்டையே முறைத்துக் கொண்டு நிற்பான். சின்ன எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் போர்டில் வளரும். இன்றும் வளர்ந்து கூரையைத் தொடும் போதுதான் பின் பக்கத்தில் சுளீரென்று வலிக்கும். சார் பிரம்பைத் தடவிக் கொண்டு நிற்பார். பிரம்புக்கும் கூட வலிப்ப தாகத் தோன்றும். ‘கெட் அவுட் ஆஃப் தி கிளாஸ்’ என்பார் சார். சாக்பீஸை டேபிளில் வைத்து விட்டு ரகு வகுப்புக்கு வெளியில் வந்து விடுவான். 

வகுப்புக்கு வெளியில்தான் அவனுக்குச் சந்தோஷமாக இருக்கும். ஒரு நிம்மதி. இஷ்டம் போல மூச்சை இழுத்து வெளியிட முடிந்தது. வகுப்பை ஒட்டி ஒரு பெரிய மைதானம் இருந்தது. தூங்கு மூஞ்சி மரங்கள். மைதானத்தையே நிழலாய் நிரப்பி நிற்கும். ரொம்ப வயசான மரங்கள். ஊரில் உள்ள தாத்தாவைப் போல இருக்கும். வெள்ளையான நரைத்த மயிரைப் போல பூக்கள். ஆயிரம் காக்கைகளாவது அந்த மரங்களை அண்டி வாழும். 

கணக்குகளையெல்லாம் ஒரு வழியாகப் போட்டு முடித்த போது சாயங்காலம் பொழுது தெருவில் முழுசாய்க் கவிழ்ந்து இருந்தது. அதிகாலைகளிலும், சாயங்காலங்களிலும் தெரு அழகாய் இருக்கும். ரகுவுக்கு இடப்பக்கம் ஜன்னல் இருந்தது. எதிர்வீட்டுக் கூரையும் அதற்கு மேல் ஆகாயமும். சதுரமான ஆகாயம். வெளிர் நீலத்தில் வெள்ளை கலந்தது. அவன் பார்த்த போது ஒரு வெள்ளை மலை தெரிந்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே மலை கலைந்து போய் விட்டது. ஒரு கேள்விக்குறி மாதிரி வளைந்து மயில் கழுத்து தோன்றியது. மயில் கழுத்துதான் என்று உறுதியான அந்தக் கணமே அதுவும் கலைந்து போயிற்று. அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேணும் போல இருந்தது. ஆனால் வீட்டுப் பாடங்கள் நிறைய இருந்தன. எழுதி முடித்தே ஆக வேண்டும். அதற்கே எட்டுக்கு மேல் ஆகும். அப்பா வந்து விடும் நேரம். அதற்கு மேல் சரித்திரம், பௌதிகம் எல்லாம் இருந்தன. 

இங்கிலீஷில் ‘புட்’ கான்ஜிகேஷன் ஐநூறு தடவை எழுத வேண்டியிருந்தது. இந்தக் கஷ்டம் நேற்று வாய்த்தது. பொதுவாக இங்கிலீஷ் வாத்தியார் நல்லவர்தான். வாரத்தில் பிரதி வியாழக் கிழமை தோறும் அவர் ‘ஷேவிங்’ செய்து கொள்கிறார். அன்றைக்கு அவருக்கு மகாக்கோபம் வருகிறது. பையன்கள் எல்லோரும் கிலி பிடித்துப் போய் இருப்பார்கள். அன்று பூராவும் அவர் வாயில் ஐநூறு ஆயிரம் தான் வரும். 

நேற்று நடந்தது. கோபாலை ‘வாக்’ சொல்லச் சொன்னார். அவன் வாக் வாக்கிங் வாக்ட் வாக்ட் என்று விட்டு உட்கார்ந்து கொண்டான். அடுத்து மணி. அவனுக்கு ‘செக்’, செக், செக்கிங், செக்ட், செக்ட் என்று விட்டு அவனும் உட்கார்ந்து கொண்டான். அடுத்தது ரகு. அவனிடம் வரும்போது மட்டும் எல்லா வாத்தியார் களும் ரொம்ப யோசிக்கிறார்கள். சார் யோசித்துவிட்டு ‘புட்’ என்றார். ரகு உற்சாகமாக புட், புட்டிங், புட்டட், புட்டட் என்றான். உட்கார்ந்தும் கொண்டான். சார், ‘வெரிகுட்’ என்றார். அவனுக்கு மனது துள்ளியது. 

சில வினாடிகள் கழித்து, ‘சீ கழுதை, வெளியேறு!’ என்று சுத்தமான தமிழில் பேசினார். பிறகு அவர் அவன் காதை மட்டும் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வகுப்புக்கு வெளியே கொண்டுவிட்டார். தலை, அது இருந்த இடத்திலேயே வட்டமாகச் சுற்றுவதுபோல் இருந்தது. அவன் அவர் கையைப் பார்த்தான். காது அவர் கைகளில் இல்லை. காதைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். இன்னும் வலித்தது. 

புட், புட், புட் என்று நுணுக்கி நுணுக்கி எழுதினான். கை வலித்தது. உதறிக் கொண்டான். தினம் தினம் இவ்வளவு வீட்டுப் பாடம் இருந்தது. இவ்வளவு இம்போஷிஷன் இருந்தது. மனசு கஷ்டமாக இருந்தது. ஒன்றும் தோன்றாமல் அப்படியே உட்கார்ந்தி ருந்தான். பள்ளிக் கூடம் விட்டு வீடு சேர்ந்த பிறகு வீட்டுப் பாடங்களைப் படிக்கவும், எழுதவும் தொடங்கினால் தூக்கம் வரும் வரைக்கும் அதுவே வேலையாக இருந்தது. விளையாட ஆசையாக இருந்தாலும் முடியாது. 

ஜன்னலின் ஊடே எதிர்வீட்டு மாடியில் காக்கைகள் பள்ளிக் கூடம் நடப்பது தெரிந்தது. தினம் தினம் இதே நேரத்தில் இது நிகழ்ந்தது. நிறைய காக்கைகள்; வரிசையாக உட்கார்ந்து கொண்டி ருக்கும். அழகானதும், சீர்குலையாததுமான வரிசை. வரிசையை விட்டுத் தள்ளி ஒரு காக்கை. சார் மாதிரி காக்கை போலும், காக்கை சார் எல்லா மரங்களில் இருந்தும் வரும் காக்கைகள். இங்குதான் சேர்ந்து படிக்கும். கரா..முரா…கரா…முரா… அவற்றின் பாஷை அது. அவற்றுக்கு அவற்றின் பாஷை புரியும். 

காக்கை சார் காக்கைகளுக்கு வீட்டுப் பாடம் கொடுக்க மாட்டார். அப்பா! அது எவ்வளவு நிம்மதி. நோட்டுப் புஸ்தகங் களில் அவற்றால் எழுத முடியாது. எழுதினால் கிறுக்குவது போல இருக்கும். எஸ். ஆல்பர்ட் நோட்டைப் பார்க்கும் போதெல்லாம் தமிழ் வாத்தியார், ‘காக்கா மூக்கால் கிறுக்குவது போல’ இருப்பதாகச் சொல்வார். ஆகவே அவை எழுதிப்படிப்பதில்லை. மனுஷனாகப் பிறந்ததைக் காட்டிலும் காக்கையாகப் பிறந்திருந்தால் ரொம்ப சந்தோஷமாக இருந்து இருக்கும். 

ஜன்ன னல் வெளியே கணபதி தலை தெரிந்தது. ரகு எழுந்து ஜன்னல் அருகில் போய் நின்றான். ‘வரியாடா…’ என்றான் கணபதி. அவன் கையில் சைக்கிள் ரிம் சக்கரம் இருந்தது. சவுக்கு மரக் குச்சியும் வைத்திருந்தான். குழிப்பகுதியில் குச்சியை வைத்துத் தள்ளிக்கொண்டு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் அவன் ஓடுவான். ரகுவுக்கும் ஆசையாக இருந்தது. ஒரு சுற்றுச் சுற்றி வரலாம். ஜாலியாகத்தான் இருக்கும். ஆனால் வீட்டுப் பாடம் நிறைய பாக்கி இருக்கிறதே! ‘நான் வரலை. காலை வலிக்குது’ என்றான் ரகு. கணபதி தெருவில் சக்கரத்தை வெகு வேகமாகத் தள்ளிக் கொண்டு ஓடினான். 

எதிர் வீட்டு மல்லிகா குனிந்து கோலம் போட்டுக் கொண்டி ருந்தாள். இங்கிருந்து பார்த்ததில் ஏணி மாதிரி இருந்தது. கூர்ந்து பார்த்ததில் அது கரும்பு எனத் தெரிந்தது. பொங்கல் முடிந்து ரொம்ப நாளாகிவிட்டது. இன்னும் அவளுக்குக் கரும்பின் மீது ஆசை. அவள் காதுகளின் இருபுறமும் சடைகள் தொங்கி ஆடிய வாறு இருந்தன, ஒரு குட்டி யானையின் தும்பிக்கையைப் போல. முனையில் ரிப்பன் வைத்துப் பின்னிக் கொண்டிருக்கிறாள். 

அம்மா அழகாகக் கோலம் போடுவாள். தேர்க் கோலம். மயில் கோலம், இரண்டு பாம்புகள் பின்னிக் கொண்டிருக்கிற கோலம். அவனுக்கும் கோலம் போட ஆசை. ‘எனக்கும் கத்துக் குடும்மா’ என்றான் ஒருநாள். ‘சீ ஆம்பிளைப் பிள்ளைகளுக்குக் கோலம் எதுக்கு’ என்றாள் அவள். ஆம்பிளை என்றால் கோலம் போடக் கூடாதா? என்ன? சுத்த மோசம் இந்த அம்மா. 

தெருவில் பூக்காரி வந்தாள். இவனைப் பார்த்து வெற்றிலைக் காவி ஏறிய பல்லால் சிரித்தாள். ரகு தெருவுக்கு வந்தான். ‘அம்மா, பூ…’ என்று கூவி கூடையை இறக்கி வைத்தாள். 

வழக்கம்போல அவள்கூட அவள் பையனும் வந்திருந்தான். எப்போதும் அம்மாவை ஒட்டிக் கொண்டே திரிவானாம் அந்தப் பையன். அவன்மீது ரகுவுக்கு ரொம்பப் பொறாமையாக இருந்தது. அவனுக்கும் இவன் வயசுதான் இருக்கும். தினமும் அம்மாவோடு பூ கட்டுவது, அவள் முந்தானையைப் பிடித்துக் கொண்டு சுற்றுவது தினமும் ரகு அவனைப் பார்த்தான். எப்போதுமே சட்டை போடும் வழக்கம் இல்லாதவன் அவன். கால் சட்டை மட்டும். அதற்கு பட்டனே இருப்பதில்லை. அதை இழுத்து இறுக்கிக் கட்டி மேலே அர்ணா கயிறை எடுத்து விட்டிருப்பான். 

ரகுவைப் பார்க்கும் போதெல்லாம் பூக்காரி தன் மகனிடம் சொன்னாள். ‘இதுவுந்தான் புள்ளை. எவ்வளவு ஒழுங்கா இருக்கு, பாரு. பள்ளிக்கூடம் போவுது. படிக்குது. நீயும் இருக்கியே. மண்ணாங் கட்டி. அந்தப் புள்ளை மூத்திரத்தை ஒரு கை வாங்கிக் குடி. அப்பவாச்சும் புத்தி வருதா பார்ப்போம்!’ 

அந்தப் பையன் வாயில் நடு விரலை வைத்துக் கொண்டு வெட்கம் கொண்டு நெளிவான். ரகு பூக்காரியின் முகத்தைப் பார்ப்பான். அந்தத் திட்டு திட்டியதற்கான சுவடே இல்லாமல் இருப்பாள் அவள். அவளுக்கும் அவன் கூடவே இருப்பது பிடித்தி ருந்தது என்பது அவள் முகத்தில் இருக்கும். ரகுவுக்கு தான் அவனாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. 

அம்மா வந்து பூ வாங்கிக் கொண்டாள். அவள் பூ வாங்கும் போது, பூக்கூடையின் பக்கத்தில் வந்து நிற்பது ரகுவுக்கு ரொம்பப் பிடிக்கும். நின்றான். வாசனை’ முகத்தைத் தடவிக் கொடுத்தது. கதம்பம், முல்லை அரும்பு, கனகாம்பரம், துலுக்க சாமந்தி ஆகியவை பந்து பந்தாயும், குவியல் குவியலாயும் கூடையுள் பதுங்கிக் கொண்டு கிடக்கும். இன்னும் கொஞ்ச நாழி அவள் அங்கேயே இருக்க மாட்டாளா என்று இருக்கும். மாட்டாள். கூடையைத் தூக்கிக் கொண்டு போய்விடுவாள். 

அம்மா முகங் கழுவிப் பொட்டு வைத்துக் கொண்டு அழகாய் இருந்தாள். புடவையைக் கூட மாற்றி இருந்தாள். வாங்கிய மல்லிகையை, தலையைச் சாய்த்து கொண்டையில் வைத்துக் கொண்டாள். அம்மாவின் கழுத்து மடிப்பில் கோடாக வேர்வை இருந்தது. 

அவள் முந்தானையைக் கையில் எடுத்துக் கொண்டு, அம்மா! குனியேன்…’ என்றான். ‘எதுக்குடா?’ என்றாள் அவள். ‘குனின்னா குனி…’ என்றான் ரகு. 

அம்மா அவன் தலைக்குக் குனிந்தாள். பிடித்திருந்த முந்தானை யால் அவள் கழுத்தைத் துடைத்து விட்டான். ரகு அம்மா அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவளை அப்படியே கட்டிக் கொள்ளவேண்டும் போல் இருந்தது. ஆனாலும் கூச்சமாக இருந்தது. ‘காப்பி சாப்பிடறயா?’ என்று அவள் கேட்டதற்கு ‘ஊம்’ என்று சொல்லிக் கொண்டு, அவள் பின்னயே அடுப்பங்கரைக்குச் சென்று காப்பி சாப்பிட்டு விட்டு மேசைக்கு வந்தான். 

அக்பர், பாபர் இருவரில் யார் முதியவர்கள் என்பதில் ரகுவுக்கு எப்போதுமே குழப்பம் இருந்தது. பாபர் என்று புத்தகத் தில் போட்டிருந்தது. ஆனால் மனசுக்குள் அக்பர் என்றே இருக்கிறது. கேள்வி பதிலிலும் அப்படியே எழுதிக்கொண்டு வருகிறான். அக்பரின் மகன்தான் பாபர் என்பது பேசுவதற்கும் எழுதுவதற்கும் சுகமாய் இருந்தது. சொன்னால் சார் சிரிக்கிறார். மக்கு’ என்கிறார். அக்பர், பாபர் எல்லாரைக் காட்டிலும் மும்தாஜே அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவன் புஸ்தகத் தைப் புரட்டி மும்தாஜ் படத்தைப் பார்த்தான். அவள் கையில் பூ இருந்தது. மும்தாஜ் அவன் அக்கா மாதிரி இருந்தாள். தலையில் என்னவோ வைத்துக் கொண்டிருந்தாள். அந்த மாதிரி ஒன்றும் அக்கா வைத்துக் கொள்வதில்லை. 

பூ என்றதும் இஸ்டரி சார்தான் ஞாபகத்துக்கு வருகிறார். பள்ளிக் கூடத்து காம்பவுண்டை ஒட்டி அந்த மரம் இருந்தது. இலை தடிப்பாக இருக்கும். கிளைகள் கை விரல்களைப் போல முனையில் வளைந்து இருக்கும். அதன் பூக்கள் வெள்ளையும் மஞ்சளுமாய் பார்க்க வெகு அழகாய் இருக்கும். வாசனை முரடாய் மூக்கின் உள் வருடுவது போல் இருக்கும். ரொம்பவும் முகர்ந்தால் மூக்கில் இரத்தம் வரும் என்று எஸ். ஆல்பர்ட் சொன்னான். அதன் பேர் யாருக்கும் தெரியவில்லை. கள்ளியில் அது ஒரு வகை என்றார் சார். பூக்கள் அத்தனையையும் மண்ணில் கொட்டிவிட்டு கொஞ்சம் கூட விசனப்படாமல் இருக்கக் கூடிய மரம் அது. 

எஸ்.ஆல்பெர்ட்டும் ரகுவும் ஒருநாள் அந்த மரத்தடியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அஞ்சாம் கிளாஸ் வரலட்சுமி டீச்சரை பால்காரன் கெட்ட வார்த்தைகளால் திட்டியதை ரகுவுக்கு ஆல்பெர்ட்டிடம் சொல்ல வேண்டியிருந்தது. ஆல்பெர்ட் அவனுக்கு மயில் கொடுத்திருந்தான். அது குட்டி போடும் தறுவாயில் இருந்தது. பொதுவாக அது பரிட்சைக்கு முந்தின நாள்தான் குட்டி போடும். 

ஆல்பெர்ட் குட்டியைக் காட்டினான். பரிட்சைக்கு முந்தின நாள் போட்ட குட்டி. அதை வாங்கிக் கொண்டு வரலட்சுமி டீச்சர் சங்கதியைச் சொல்லிக் கொண்டிருந்த போதுதான் இஸ்டரி சார் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார். ரகு அவசரம் அவசரமாக அந்தச் சங்கதியை யாருக்கும் சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டான். சத்தியத்தை ஆல்பெர்ட் மீறினால், அவன் சாமியாகிய யேசுநாதர் கண்ணைக் குருடாக்கி விடுவார். நிச்சயமாகவே ராத்திரி தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர் அதைச் செய்வார். 

சார் அவர்களுக்குப் பக்கத்தில் வந்து நின்று பூக்களை மிதிக்கக் கூடாது என்றார். அவர்கள் கீழே பார்த்தார்கள். அப்போதுதான் அவர்கள் பூக்களை மிதித்துக் கொண்டு நின்றிருந்தது தெரிந்தது. சார் முகம் என்னவோ போல இருந்தது. சார் எப்போதும் வெள்ளை வெளேரென்று சட்டையும் பேண்ட்டும் போடுவார். கலர் சட்டைகளே போடமாட்டார். படிய தலைவாரி வழவழவென்று ஷேவிங் செய்து கொண்டு எப்போதும் புதுசாக இருப்பார். அவர் பக்கத்தில் இருந்தால் புதிய வண்ணான் வேஷ்டிக்குப் பக்கத்தில் நிற்பது போல புதுசாகவும், வாசனையாகவும் இருக்கும். 

அன்று சார் ஒரு வார லீவில் இருந்து விட்டு வந்திருந்தார். முகத்தில் கறுப்பாக தாடி வளர்ந்திருந்தது. தலை கலைந்திருப்பது போல இருந்தது. சட்டை கூட அவ்வளவு வெளுப்பாக இல்லை. அவருடைய ஒன்னாம் கிளாஸ் படித்துக் கொண்டிருந்த பால மீரா என்கிற பெண் குழந்தை திடீரென்று செத்துப் போய் விட்டதாகத் தமிழ் சார் சொல்லியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. போன திங்கள் கிழமை சாயங்காலம் கடைசி வகுப்பை கேன்சல் பண்ணிவிட்டு எல்லா வாத்தியார்களும் சாவுக்குப் போனார்கள். அன்றைக்கு தான் இஸ்டிரி சார் லீவு முடிந்து வந்திருந்தார். வந்ததும் முதல் முதலாக நம்மைப் பார்த்தா இதைச் சொல்ல வேண்டும் என்று இருந்தது ரகுவுக்கு. 

‘இல்ல சார்.. இல்ல சார்’ என்று சொல்லிக் கொண்டு இரண்டு அடி தள்ளித் தள்ளி நின்றார்கள். அப்போதும் பூக்களை மிதித்துக் கொண்டே நின்றிருந்தார்கள். சார் அவர்களை அணைத்துக் கொண்டே நடத்திப் போய் மைதானத்தில் விட்டார். சாருக்கு ஏனோ கோபமே வருவதில்லை. அவரைப் போய் மற்ற வாத்தி யார்கள் எல்லாம் பைத்தியம் என்று ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். 

சி. வினாயக மூர்த்தி அப்படி மற்ற சார்கள் அவரைப் பற்றிச் சொல்வதை அவரிடமே போய்ச் சொல்லி விட்டான். ‘அப்படியா… நான் பைத்தியம்தானே- அதனால்தான் பைத்தியம்னு சொல் றாங்க.’ என்றார் அவர் சிரித்துக் கொண்டே. நிச்சயம் அவர் பைத்தியம் இல்லை. அவரை அப்படிச் சொன்ன மார்க்க சகாயம் தான் பைத்தியம். மார்க்க சகாயம் தீர்க்க சகாயம் பீர்க்க சகாயம் மூர்க்க சகாயம். 

ரகுவுக்கு இஸ்டரி ரொம்பப் பிடித்தமானதாக இருந்தது. சாரைப் பிடித்தது. ஆகவே பாடமும் பிடித்தது போலும். இஸ்டரி புஸ்தகத்துள் இருக்கும் மயில் குட்டி போட்டு விட்டதா என்று திறந்து பார்த்தான். அதன் கருநீலக் கண் அவனையே பார்ப்பது போல இருந்தது. அதைத் தடவிக் கொடுத்தான். எப்படியும் பரிட்சைக்கு முதல் நாள் குட்டி போட்டுவிடும். திடீரென்று அன்று பூராவும் மயிலுக்குச் சோறு போடாதது ஞாபகத்துக்கு வந்தது. ஐயோ அதுக்குப் பசித்திருக்கும். பாவம். புஸ்தகத்தின் மூலையில் கொஞ்சம் பேப்பரைக் கிழித்து மயிலுக்கு மேல் வைத்தான். 

அடுப்பங்கரைக்குப் போய் சோறு தேடிப் பார்த்தான். தவலை யின் மேல் தவழ்ந்திருந்த பாத்திரம் பெருஞ் சப்தத்துடன் கீழே விழுந்தது. பாத்திரங்கள் அவன் கை வைக்கும் போதெல்லாம், அப்படித்தான் ஏதாவது சங்கடமாகப் பண்ணி வைக்கும். சரே லென்று அம்மா அறைக்குள் வந்து, ‘பூனையோன்னு நெனைச்சேன். நீ என்னடா இங்க பண்ணறே’ என்றாள். ‘சோறு எடுத்துக்கிட்டுப் போலாம்னு வந்தேன்’ என்றான் ரகு. ‘எதுக்குச் சோறு-‘ ‘மயிலுக்கு’. ‘ஐயோ அசடு.’ 

பெரியவர்கள் இப்படித்தான் முட்டாள் தனமாக என்னவாவது சொல்வார்கள் என்று நினைத்துக் கொண்டே, கொண்டு வந்த பருக்கைகளை மயிலுக்கு அருகில் வைத்துப் புஸ்தகத்தை மூடி வைத்தான். 

எல்லாக் கேள்விகளையும் எழுதி முடித்து வெளியே வந்ததும், அவன் முகத்தில் ஜில்லென்று காற்று வீசியது. உற்சாகமாக இருந்தது. மேலே ஆகாசத்தைப் பார்க்கையில் திக்கென்றது. இரண்டு கைகளா லும் கட்டிப் பிடிக்க முடியாத அளவுக்குப் பெரிய நிலாவொன்று சிவந்து எதிர் வீட்டு மாடிக்குப் பக்கத்தில் எழுந்து கொண்டிருந்தது. 

அப்படியே நின்றுவிட்டான் ரகு. கையும், தோளும் வலித்தது. நேராக அறைக்குள் போய் விரித்து வைக்கப் பட்டிருந்த பாயில் படுத்துக் கொண்டான். கண்ணை இழுத்துக் கொண்டே போகும் நேரத்தில் அப்பாவின் குரல் கேட்டது. அம்மா, ‘குழந்தை இன்னேரம் வரைக்கும் படிச்சிக்கிட்டு இருந்தான் – சாப்பிடாமே படுத்துட்டான் – என்று சொல்வது கேட்டது. 

அறையைத் திறந்து கொண்டு அம்மா வருவது தெரிந்தது. கண்ணை இறுக்கி மூடிக் கொண்டான். அம்மா மிக அருகில் உட்கார்ந்து கொண்டு ‘ரகு, எழுந்திருப்பா சாப்ட்டுட்டுப் படுத்துக்கோ… என் கண்ணுல்லே’ என்றாள் அம்மா. அவன் மார்பைத் தடவிக் கொடுத்தாள். அவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டான். அவன் நெஞ்சு ஏறி இறங்கியது. 

‘அடடா.. ஏன் அழறே- தலையை வலிக்குதா-‘ என்று நெற்றியைத் தடவிக் கொடுத்தாள். 

‘இரு. பாலாச்சும் சாப்ட்டுப் படு’ என்று பால் கொண்டு வருவதற்காக அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே போனாள் அம்மா. 

பால் சாப்பிடக் கூட அவனால் விழித்திருக்க முடியவில்லை. கணக்கு வாத்தியார் ‘ரகு’ கம் டு த போர்ட் என்கிறார். எந்த நேரத்திலும் பின்னால் சுளீரென்று அடிவிழும். ரகு புரண்டு படுத்தான். பரிட்சைக்கு முதல் நாள் மயில் போடப் போகும் குட்டி அவன் கனவில் வந்தது. 

– 1978

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *