புலி வேட்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 1, 2025
பார்வையிட்டோர்: 150 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிட்டிபாபு ஒரு முட்டாள்பையன் என்பது’ அவனுடைய வாத்தியாரின் அபிப்பிராயம். சுப்பையா வாத்தியார் ஒரு ‘ராட்சஸன்’ என்பது சிட்டிபாபுவின் எண்ணம். 

மாசத்திலே முப்பது நாள் சிட்டிபாபு பள்ளிக் கூடத்திலே ‘ஆப்ஸென்ட்; ஊருக்கு ஒதுப்புறமான ஐயனார் கோயில் காட்டிலே ‘ப்ரஸன்ட்’, பகல் முழுவதும் மரத்துக்கு மரம் தாவி, பாலைப்பழமும் நாவல்பழமும் பறித்துச் சாப்பிட்டுக்கொண் டிருப்பான். பள்ளிக்கூடம் விடும் மணி அடித்ததும் கீழே இறங்குவான். இறங்கி நேரே கோயிலுக்குப் போவான். பிள்ளையாருக்கு நூறு தோப்புக்கரணம் போடுவான். நூற்றெட்டுத் தடவை, இந்தச் சுப்பையா வாத்தியார் தொலையணும், தொலையணும்! தொலையணும்’ என்று ஜபித்துவிட்டு, வீட்டுக்குச் செல்வான். 

இப்பேர்ப்பட்ட சிட்டிபாபு சென்ற சில தினங் களாக மிக ஒழுங்காகப் பள்ளிக்கூடத்துக்கு வரு வதைக் கண்ட சுப்பையா வாத்தியாரே பெரிதும் ஆச்சரியப்பட்டுப் போய்விட்டார். 

“சிட்டி, காட்டுக்குப் போகலே” 

“இல்லை, ஸார்.” 

“நாளைக்கிப் போவையோ?” 

“மாட்டேன், ஸார்.’ 

“பொய் சொல்றே?” 

”இல்லை, ஸார்.” 

“நிசம்மா?” 

“ஆமாம், ஸார்.” 

வாத்தியார் சுப்பையாவுக்கு நம்பிக்கையில்லை. ‘இந்தப் பயல் ஏதோ இரண்டு நாள் இப்படி இருக்கான். நாளைக்குப் பழையபடி அந்தப் புத்தி வந்திடும்’ என்று நினைத்தார். 

“ஏண்டா இப்ப நீ காட்டுக்குப் போறதில்லே?” என்று மீண்டும் கேட்டார். 

வாத்தியாரின் இந்தக் கேள்வியைக் கேட்டதும், சிட்டிபாபு பேந்தப் பேந்த விழித்து, நாலுபக்கமும் கண்ணோட்டம் விட்டு, இரண்டடி முன்னே எடுத்து வைத்து, மாறிய குரலில், விசேஷ சுரங்களோடு, ஏற்றியும் இறக்கியும், “அங்கெ, ஸார்,காட்டிலே, ஸார், புலி ஸார், ஒண்ணு, ஸார், வந்திருக்கு. ஸார்” என்றான். 

புலி என்ற பெயரைக் கேட்டதுமே சுப்பையா வாத்தியார் கலகலத்துவிட்டார். “புலியா! புலி அட பயலே, கேலி பண்ணினியோ தொலச்சிடுவேன். நிசம்மா நீ புலி பாத்தே?” என்று கடுமையாகக் கேட்டார். 

சிட்டிபாபு கொஞ்சங்கூடத் தளராமல் மிக உறுதியாக, தான் ‘நிசம்மாய்’ப் புலி பார்த்ததாகச் சாதித்தான். 

இதற்குமேல் சுப்பையா வாத்தியார் ஒரு மூன்றாம் வாசகப் புத்தகத்தை எடுத்து, “இதோ பார், இந்த மாதிரிப் புலியா?” என்று ஒரு படத்தைக் காட்டிக் கேட்டார், 

“இதே மாதிரிதான் ஸார்!” என்றான் சிட்டிபாபு. வாத்தியாரின் மனக் கதவைக் ‘கிலி’ வந்து தட்ட ஆரம்பித்து விட்டது. காலையிலே, பல் துலக்கக் வேலங் குச்சி ஒடிக்க அவர் அந்தப் பக்கந்தானே போகிறார்? புலி மேலே வந்து பாய்ந்துவிடுமோ? முந்தாநாள் அந்தக் காட்டாமணக்குப் புதரிலே சல சலவென்று ஏதோ சத்தம் கேட்டதே; அது இந்தப் புலியாகத்தான் இருக்குமோ? இப்படி யெல்லாம் அநேகம் எண்ண அலைகள் அவர் மூளை குறுக்கும் நெடுக்குமாக எழும்பி ஓடலாயின. 

“சரி, சிட்டி, நீ உன் இடத்துக்குப் போ” என்று கம்பீரமாகக் கூறிவிட்டு, மறுபடியும் நீண்ட யோசனை புரியத் தொடங்கிவிட்டார். 

2 

மகிழம்பூர்க் காட்டிலே புலி வந்திருக்கிற சமாசாரம் முதல் முதலாக இவ்வாறு சுப்பையா வாத்தியாரின் பள்ளிக்கூடத்திலேதான் பிரகடன மாயிற்று. விஷயம் அங்கிருந்து மெல்ல மெல்ல ஊர் முழுவதும் பரவியது; காட்டிலே புலி என்ற செய்தியை ஒருவருக் கொருவர் மிக மெல்லிய குரலில் வெகு ரகசியமாகப் பரிமாறிக் கொண்டார்கள். ஒருகால் புலியின் காதிலே இது விழுந்து அது எங்கேயாவது கோபித்துக்கொண்டுவிடப் போகிறதே என்ற பயம் போல் இருக்கிறது! ஊரார் ஒவ்வொருவரும் புலி தங்கள் தங்களையே குறிவைத்துத் தேடிக்கொண் டிருப்பதுபோலப் பதுங்கிப் பதுங்கி நடமாடினார்கள். 

பையன்கள் அந்தப் பக்கம் ஆடுமாடு மேய்க்கப் போவதையே நிறுத்திவிட்டார்கள்; சிறுமிகள் சுள்ளி பொறுக்கச் செல்வது தடைப்பட்டது. ஊரிலே எங்கே பார்த்தாலும் ‘கிலி’. 

இந்த நிலைமையில், உள்ளூர்ப் பட்டாமணியக் காரர் சொக்கநாத பிள்ளைக்கு ஒரு யோசனை தோன்றிற்று. 

பக்கத்துப் பட்டணத்திலேதான் ‘சப் கலெக்டர் இருக்கிறார். அவர் ஓர் ஐ.ஸி. எஸ். சீமைத் தேசங் களுக் கெல்லாம் போய்வந்தவர். காந்தியின் சத்தியாக் கிரகம் நடந்த தல்லவா? அப்போது. துப்பாக்கியால் ‘சடசட’ என்று ஆகாசத்திலே சுட்டு, ஜனங்களை யெல்லாம் தடியால் அடிக்கச் செய்து வெகு சீக்கிர மாகக் கலையச் செய்தவர்; மிகவும் கெட்டிக்காரர்; தைர்யசாலி. போன மாசம் இதே மகிழம்பூர்க் காட்டிலே காட்டுப் புறா வேட்டையாடியவர். அவ ருக்குப் புலி சுடக் கட்டாயம் தெரிந்திருக்கும். ஆகை யால் அவரிடம் போய் முறையிட்டுக்கொள்வ டது. என்று முடிவு செய்தார் சொக்கநாதபிள்ளை. 

3 

“ப்யூன்” என்று உள்ளேயிருந்து புறப்பட்டது ஒரு சப்தம். 

வாசலிலே கிசு, முசு, கிசு முசு என்று நடந்து கொண்டிருந்த சம்பாஷணை சடக்கென்று நின்றது. 

மறுபடியும் “ப்யூன்” என்ற சப்தம் எச்சு ஸ்தாயி யில் கிளம்பியது. 

பியூன் சின்னதுரை உள்ளே ஓடிவிட்டான். அவ னுடைய ‘நாஸ்தா’வுக்குச் சில்லறை எடுத்த கையை மறுபடியும் ஜேபியிலே போட்டுவிட்டார் சொக்கநாத பிள்ளை. 

சற்று நேரத்துக்கெல்லாம் வெளியே வந்த சின்ன துரை, “எடு, எடு. எடு காசை” என்று மெல்லிய குரலிலும் படபடப்பாகவும் கூறினான். 

பிள்ளையவர்கள் இரண்டணாவை அவன் கையில் வைத்து அமுக்கினார். “இதென்ன பிச்சைக் காசா? நீயே வச்சுக்கோ, மணியாரரே” என்றான் சின்னதுரை. 

கொஞ்சநேரம் பேரம் நடந்தது. இன்னும் ஓர் அணா சின்னதுரையின் கையில் ஏறியதும், ‘சட்டுனு போங்க, சட்டுனு போங்க; குளிக்கப் போயிடப் போறாரு என்று பிள்ளையை அவன் துரிதப் படுத்தினான். 

பிள்ளை தம் சட்டை, துணி வகையறாக்களை யெல்லாம் ஒழுங்கு படுத்திக்கொண்டு, பயபக்தியோடு உள்ளே பிரவேசித்து, இரு கையும் கூப்பி ஒரு கும்பிடு போட்டார். 

ஆட்டுக்குட்டியை நோக்கும் சிங்கம்போல் சப் கலெக்டர் மேனன் கம்பீரமாகப் பிள்ளைமீது பார்வையைச் செலுத்தி, “என்னங்காணும், என்னா? நீர் மகிழம்பூர்ப் பட்டாமணியமில்லே?….. ப்யூன்’ என்றார். 

“ஆமாம், எஜமான்” என்று மகிழம்பூர்ப் பட்டா மணியக்காரர் சொன்னதைக் காதில் வாங்காமலே மறுபுறம் திரும்பிய மேனன்முன் பியூன் சின்னதுரை வந்து நின்றான். 

“அதோ அந்தப் பேனாவை எடுத்து இங்கே வை; இதோ இந்தப் பேப்பரை எடுத்து அங்கே வை” என்றார் மேனன். 

பியூன் அந்த வேலைகளைச் செய்துகொண் டிருந்த சமயத்தில், சொக்கநாதபிள்ளை மெல்லத் தாம் வந்த காரியத்தைச் சப் கலெக்டருக்கு எடுத்து ஓதினார். 

“மகிழம்பூரிலே புலியா?-ப்யூன், என் துப்பாக்கி எங்கேடா? கொண்டாடா இங்கே” என்று வெகு ஆவேசத்தோடு மேனன் கூறியபோது, தம்மைத்தான் எங்கேயாவது சுட்டுவிடப் போகிறாரோ என்றுகூடச் சொக்கநாதபிள்ளை பயந்தார். அவ்வளவு மிடுக்காக இருந்தது மேனனின் தொனி. 

இறுதியில் மேனன் தாம் நேரே வந்து அந்தத் திருட்டுப்புலியை ஹதம் செய்வதாகச் சொக்கநாத பிள்ளைக்கு அபயம் கொடுத்தார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் சொல்லி அனுப்பினார். 

சப் கலெக்டர் மேனன் புலிவேட்டையாடுவதற் காக, மகிழம்பூர்க் காட்டின் நடுவிலே ஓர் பரண் கட்டி யாயிற்று. ஊரிலுள்ள அத்தனை தென்னமரங்களி லிருந்தும் இளநீர்களை வீழ்த்தினார்கள். அவற்றில் பொறுக்கி எடுத்த சில இளநீர்களை நன்றாகச் சீவி, பரண்மீது எலுமிச்சம்பழம் ஸகிதமாக வைத்தார்கள். 

பரணுக்குச் சற்று எட்டப் ‘பே! பே!’ என்று சிறிது நேரத்துக்கு ஒரு தரம் கத்திக்கொண்டும் எதிரேயிருக்கும் புல்லை மென்றுகொண்டும் இருந்தது ஓர் ஆட்டுக்குட்டி. புலியை இழுக்கும் இரையாக அந்த டுக்குட்டியை ஒரு மரத்தில் கட்டியிருந்தார்கள். 

காட்டைச் சுற்றி நாற்புறமும் பல கொம்பு: தம்பட்டைக்காரர்கள் ஈட்டி, பிச்சுவா முதலிய ஆயுதங்களோடு முஸ்தீப்பாக நின்றுகொண்டார்கள். புலி தப்பித் தவறி வெளியே வர முயன்றால், பயமுறுத்தி உள்ளே அனுப்புவதற்காக இந்த ஏற்பாடு. 

சப் கலெக்டர் மேனனின் கார் வந்துவிட்டது. முதல் தரமான சிக்காரி மாதிரி தோளிலே துப்பாக்கி யுடன் இறங்கினார் மேனன். 

“ப்யூன்!” 

“எஜமான்” என்று கைகட்டி எதிரே வந்து நின்றான் சின்ன துரை. 

“எங்கே அந்த மணிகார்?’ 

எதிரேயுள்ள மணியக்காரரை அவருக்குத் தெரிய வில்லை; அந்தச் சமயம் அவ்வளவு ஆவேசமாக இருக் கிறார். 

மணியக்காரர் எதிரே போய் நின்றார். “எங்கே ஐயா, அந்தப் புலி?’ 

காட்டுக்குள்ளே இருப்பதாகவும், நடுக்காட்டிலே யரண் எல்லாம் கட்டியிருப்பதாகவும் தெரிவித்தார் பிள்ளை. 

“பரணை ஏனையா அங்கே போய்க் கட்டினீர்? இப்ப எப்படி ஐயா அங்கே போறது? போய்ப் பரண்லே ஏறத்துக்குள்ளே அது வந்திட்டா என்னையா பண்றது?” என்று கேட்டார் சப் கலெக்டர் 

“காட்டுக்கு வெளிலே பரணைக் கட்டினால் புலி வராதுங்களே” என்றார் மணியக்காரர். 

“என்ன, மான், உளர்றே? – ப்யூன்” என்றார் மேனன். 

பியூன் எதிரே வந்து நின்றான். 

“சரி; துப்பாக்கியைக் கண்டால் புலி மிரண்டுடும். அதுனாலே, எல்லாரும் என்னைச் சுத்தி வட்டமா வளைச் சுக்குங்கோ. உள்ளே போவோம்” என்றார் மேனன். 

‘துரை’ உத்தரவுக்கு மாறு உண்டா? மனிதச் சுவர் ஒன்று புடைசூழ மேனன் பரணருகே போய்ச் சேர்ந்தார். 

“ப்யூன், என்னைப் பரண்மேலே ஏத்து” என்றார் மேனன். 

அப்படியே செய்தான் சின்னதுரை. 

“நீயும் ஏறிக்கோ.” 

சின்னதுரையும் ஏறிக்கொண்டான். “எங்கே அந்த மணிகார்? அவரையும் ஏறச் சொல்.” 

சொக்கநாதபிள்ளையும் ஏறிக்கொண்டார். மற்றவரெல்லாம் அகன்றார்கள். 

பரணில் ஆரோகணம் செய்துகொண்ட மூவருக்கும் ஆரம்பத்தில் வெகு பரபரப்பாக இருந்தது. 

ஏறிய உடனேயே சப் கலெக்டருக்கு உடம் பெல்லாம் வேர்த்தது. இளநீர் ஒன்றைச் சீவச் செய்து, எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, பாதி மேலும் கீழும் சிந்த வாயிலே ஊற்றிக்கொண்டார். 

பட்டாமணியக்காரர் பிள்ளைக்கோ தாகமே எடுக்கவில்லை. அவர் ஆகாசத்தை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். 

பியூன் சின்னதுரை மாத்திரம் எக்கவலையும் இல்லாமல் இளநீர் வழுக்கையைச் சுரண்டிச் சுரண்டித் தின்றுகொண்டிருந்தான். 

“பே! பே!” என்று ஆட்டுக்குட்டி சற்று நேரத்துக்கு ஒரு தடவை கத்திக்கொண் டிருந்தது. ஆட்டுக்குட்டியின் ஒவ்வொரு கத்தலின்போதும், புலியின் சீறலைக் கேட்டாற்போலத் துள்ளி நிமிர்ந்து உஷாராகி வந்தார் மேனன். 

இருந்தாற்போல் இருந்து சின்னதுரை, “அதோ! அதோ! அதோ பாருங்க” என்று கூச்சலிட்டுப் பின் புறம் இருந்த ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டினான். 

லகான் போட்டு இழுத்த குதிரைகளைப்போல் மேனனும் பிள்ளையும் ஏககாலத்தில் தலையைக் குலுக்கித் திரும்பிப் பார்த்தார்கள். 

சின்னதுரை சுட்டிக்காட்டிய மரத்தின் கிளையிலே வாலில்லாக் குரங்கைப்போல் கொல் என்ற சிரிப்புடன் ஒரு சிறுவன் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தான். 

“அட மூடா! புலிதான் வந்திடுத்தோன்னு பயந்திட்டேண்டா! இப்படித்தான் கத்தறதோ?’ என்று கோபித்துக்கொண்டார் மேனன். 

“ஓ! அது அந்தச் சிட்டிபாபு இல்லே! குரங்குப் பயல்! என்ன சேட்டை பண்றான் இவன்!’ என்றார் மணியக்காரர். 

இந்தச் சமயத்தில் திடீரென்று, “ப்யூன்! ப்யூன்’ என்று உரக்கக் கத்திக்கொண்டே பரணுக்குள்ளே பிரளய மாடினார் மேனன். 

“என்ன எஜமான்!” என்றான் சின்னதுரை. 

“எட்டுக்கால் பூச்சி!-தடி எங்கே? கொண்டா- அடி கொல்லு” என்று கத்தினார் மேனன். 

சின்ன துரை அந்த எட்டுக்கால் பூச்சியைக் கொல்லுவதற்காகக் குச்சி தேடினான்; அகப்படவில்லை. 

“மணிகார்! எட்டுக்கால் பூச்சி! கிட்டப் போகாதீங்கோ, ரொம்ப விஷம்! நான் படிச்சிருக்கேன் ப்யூன்! – எங்கே – என்னடா பண்றே – கொல்லு – அடி” என்று ஓயாமல் ‘சளசள’ என்று கத்தினார் மேனன். 

இதற்குள் பியூன் சின்னதுரை ஒரு தேங்காய் மட்டையை எடுத்து, எட்டுக்கால் பூச்சியைத் தாக்கினான். அது தப்பித்துக்கொண்டு, மேனன் பக்கமாக ஓடியது. 

“அட முட்டாளே! ஏண்டா இங்கே விரட்டினே?” என்று சொல்லி, அந்த எட்டுக்கால் பூச்சிக்குப் தப்பு வதற்காகக் காலைத் தூக்கி நாட்டியமாடினார் மேனன். கால்தவறிப் பொதீர் என்று பரணிலிருந்து கீழே விழுந்தார். அவருடைய துப்பாக்கிக் கொக்கி ஏதோ கட்டையில் மோதி, ‘டபார்’ என்று சுட்டது. நல்லவேளையாக யார்மீதும் படாமல் தப்பினார்கள். 

ஆனால், மேனன்மட்டும் புலியோடு போராடியவர் என்ன களைப்பும் பரபரப்பும் அடைவாரோ அவ்வளவும் அடைந்து நிஸ்திராணியாகக் கீழே கிடந்தார். 

அவரை எல்லாருமாகத் தூக்கிக்கொண்டு போய்ச் சைத்யோபசாரங்களும் சிகிச்சையும் நடத்தியதோடு வேட்டையும் முடிந்தது. 

4 

மறுநாள் சிட்டிபாபு பள்ளிக்கூடத்துக்கு வர வில்லை. 

வாத்தியார் சுப்பையாவுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. வீட்டிலே விசாரித்ததில் காலையிலேயே அவன் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டுவிட்டதாகத் தெரிந்தது. 

மாலைக்குள் எப்படியோ அவனைத் தேடிப்பிடித்தே விட்டார் சுப்பையா. 

பையன் பாலைப்பழப் பிசுக்கு வாயுடன், வாத்தியா ரைக் கண்டதும், ஆந்தைமாதிரி விழிக்க ஆரம்பித்தான்.. 

“எங்கடா போயிருந்தே?” 

“காட்டுக்கு.” 

“அங்கே புலி இல்லையா?” 

“அதான் சுட்டாச்சே.” 

“யார்ரா சுட்டா?” 

“நேத்து வந்தாரே ஒரு துரை; அவுரு.” 

“என்னடா கதை பண்ணறே?” 

“நிசம்மாச் சொல்றேன். சுட்டுட்டாரு. புலி காட்டிலே செத்துக் கிடக்குது.'” 

இந்தப் பயல் வார்த்தையை நம்பிக் காட்டுக்குப் போகச் சுப்பையா வாத்தியாருக்குப் பயம். இருந்தா லும் இருக்கட்டும் என்று, ஈட்டி, வாள் முதலியவை சகிதம் மற்றும் பலரையும் அழைத்துக்கொண்டு காட்டுக்குப் போனார். 

காட்டின் நடுவிலே செத்துக்கிடந்த ஒரு பெரிய ஜந்துவை, சிட்டிபாபு, “இதோ” என்று காட்டினான். 

அது ஒரு பெரிய பழந்தின்னி வௌவால். மேனனின் துப்பாக்கியிலிருந்து அவரை அறியாமலே வெளிக்கிளம்பிய தோட்டா, சிட்டிபாபுவின் ‘புலி’ யான அதன்மீது பாய்ந்து அதைக் கொன்றுவிட்டது. சிட்டிபாபுவின் அறியாமையில் பிறந்த புலி இப்படி வெறும் புரளியாக முடிந்துவிட்ட தென்றாலும், மகிழம்பூர்க் கிராமவாசிகளின் கிலி மாத்திரம் இன்னும் நீங்கவில்லை. “எங்கள் ஊரிலே புலி இருக்கிறது” என்று அவர்கள் ஒவ்வொருவரும் இன்னும் பெருமை யடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

– நொண்டிக் கிளி, முதற் பதிப்பு: ஸெப்டம்பர் 1949, கலைமகள் காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *