புறப் பார்வையும், அகப் பார்வையும்
மேலை நாடுகள் உலகாயதத்தில் மேலோங்கியவை என்பதால் புறப் பார்வையோடும், கீழை நாடுகள் ஆன்மிகத்தில் ஆழ்ந்தவை என்பதால் அகப் பார்வையோடும் இருக்கும்.

ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்த சமயம் நிகழ்ந்த ஒரு சம்பவம் இது.
விவேகானந்தர் தனது உடலைச் சுற்றி காவி ஆடையுடன், அவருக்கே உரித்தான தலைப்பாகையும் அணிந்தவராக, சாலையில் சென்றுகொண்டிருந்தார். அவரது ஆடைகளைப் பார்த்துவிட்டு ஒரு பெண், “இந்த மனிதரைப் பார்த்தால் கண்ணியமானவராகத் தெரியவில்லை” என தனது கணவனிடம் சொன்னாள்.
விவேகானந்தர் அதைக் கேட்டுவிட்டு அவர்களிடம் சென்று, அந்தப் பெண்மணியிடம் கூறினார்: “அமெரிக்காவில் ஒரு மனிதரை தையல்காரர்தான் கண்ணியமானவராக ஆக்குகிறார். ஆனால், எங்கள் நாட்டில் மனிதர்களை அவர்களின் குணாதிசியங்கள்தான் கண்ணியமானவர்களாக ஆக்குகிறது.”
ஒரு மனிதர் யார், அவர் எப்படிப்பட்டவர், அவரது குணங்களும் தகுதிகளும் என்ன என்பதையெல்லாம், அவர் அணிந்திருக்கும் ஆடைகளைப் பார்த்து எடைபோடுகிற வழக்கம் எல்லா நாடுகளிலுமே இருப்பதுதான். மேற்கு நாடுகளில் அது அதிகமாகவே இருக்கும். இந்து மதத்தில் ஞானிகள், யோகிகள், மகான்கள், சன்யாசிகள் போன்றவர்கள், மலிவானதும் எளிமையானதுமான ஆடைகளை உடுப்பது சர்வ சாதாரணம். ஆகக் குறைந்தபட்ச ஆடையாக கோவணம் மட்டும உடுத்தி இருப்பதும், நிர்வாண சாமியார்களும் நம் நாட்டில் சகஜம். இங்கே இது மதிப்புக்குரியதாக போற்றப்படும். மேலை நாடுகள் கோட்டும் சூட்டும் அணிந்திருப்பதையே கண்ணியமானதாகக் கருதும். அதனாலேயே விவேகானந்தரைப் பற்றி அந்தப் பெண் அவ்வாறு கருதினார் என்பது வெளிப்படை.
இதே போல இன்னொரு சம்பவம். ஒரு முறை விவேகானந்தரை சந்தித்த அழகிய இளம்பெண் ஒருத்தி, அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவரிடம் தெரிவித்தார்.
சன்னியாசியான தன்னைப் பார்த்து இப்படிக் கேட்கிறாரே என வியந்த அவர், “எதற்காக நீங்கள் என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்கள்?” என்று வினவினார்.
“அச்சு அசலாக உங்களைப் போலவே இருக்கும் ஒரு குழந்தையை நான் பெற விரும்புகிறேன்; அதனால்தான்” என்றாள் அந்தப் பெண்.
உடனே விவேகானந்தர் குனிந்து அந்தப் பெண்ணின் பாதத்தைத் தொட்டு வணங்கி, “இன்று முதல் நீங்கள் எனக்குத் தாய். அசலான நானே உங்களுக்கு மகனாக இருக்கிறேன். நகலாக இன்னொன்று எதற்கு?” என்றார்.
அதைக் கேட்டு அந்த இளம் பெண், மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி வருந்தினாள். அவள் பிற்பாடு விவேகானந்தரின் பின்பற்றுநராகவும் ஆகிவிட்டாள்.