புருஷன் எழுதின கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2024
பார்வையிட்டோர்: 449
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கூடத்தில் தரை மீது உட்கார்ந்திருந்த ருக்மணிக் கெதிரே தாள்கள் பரப்பிக் கிடந்தன. உதட்டண்டை பென்சிலை செங்குத்தாகப் பிடித்துக்கொண்டபடியே, அவள் யோசனையிலாழ்ந்திருந்தாள். அப்பொழுது அவள் கணவன், சோமசுந்தரம் போட்டிப்பரிசுத் தாள்களைக் கையிலெடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
‘என்ன யோசனை? ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறாயே?’
‘ஆமாம்-நான் பிறந்த கதையை.’
‘முட்டாள்.’
‘சந்தேகமென்ன? முட்டாளின் கதைதான்.’
‘உனக்கு கிறுக்கு ஜாஸ்தி’ என்று பின்னலைச் சொடுக்கிவிட்டுப் பக்கத்தில் உட்கார்ந்து ஒரு தாளை எடுத்தான்.
அதில் எழுதியிருந்தது ‘சாரதா!’
‘ஏன்?’
‘ரொம்ப அவசரம். ஏதாவது சின்ன நகையாய் வேண்டியிருக்கிறது. மிளகுவளை போதும்.’
‘நீங்கள் எப்பொழுதுமே இப்படித்தான். எனக்குப் போட்ட நகையில் பாதிதான் பாக்கி இருக்கிறது.இப்படி ஒவ்வொன்றாய்-போகட்டும். இப்பொழுது எதற்காக?’
‘எதற்காகவா? இப்படி அந்த நாள் கற்பரசிகள் கணவன்மார்களைக் கனவிலாவது கேட்டிருப்பார்களா? காரியமில்லாமல் கேட்பேன என்று தெரியவில்லையே.’
‘உங்கள் லாப நஷ்டத்தில் நானும் கொஞ்சம் பங் கெடுத்துக்கொள்ள இடம் தரலாகாதா? நமக்குள் அந் தரங்கம் என்பது வேண்டாமா?’
‘தட்டாமல் செய்துவிட்டு விவரம் கேட்பது ஹிந்து ஸ்திரீ தர்மம். எனக்குக் கருத்தில்லையா?’
சாரதா மிளகு வளையலைக் கழற்றிக் கீழே வைத் தாள். ‘இதோ வந்து சமாசாரம் சொல்லுகிறேன்’ என்று ராகவன் வெளியே போய்விட்டான்.
பத்து நாட்கள் சென்றன. மத்தியானமாய் சாரதா அப்பளமிட்டுக்கொண்டிருந்தாள். அருகில் அவளுடைய நாத்தி வில்லை தட்டிக்கொண்டிருந்தாள்.
‘ஏண்டீ சாரதா! மிளகு வளை எங்கே?’
‘எண்ணெய் தேய்த்துக் கொண்டேனல்லவா? கழட்டி வைத்திருக்கிறேன்.’
‘எண்ணெய் தேய்த்துக்கொண்டால் கல் நகையைக் கழட்டி வைக்கிறதென்று கேள்விப்பட்டிருக்கிறேன். கை வளையைக் கழட்டி வைக்கிறதென்று கேள்விப்பட்ட தில்லை … நிஜத்தைச் சொல்லிவிடு.’
‘நிஜமாகத்தான் சொல்லுகிறேன்.’
‘வெறும் பொய். அப்படியென்றால் மூங்கில் வளை மாத்திரம் கையில் இருப்பானேன்?’
‘ஸ்நானம் செய்தபிறகு வெறும் கையாய் இருக்க வேண்டாமென்று அதை மாத்திரம் எடுத்துப் போட்டுக் கொண்டேன்.
‘நான் நம்பவில்லை. எதோ திரிசமன் இருக்கிறது.’
‘சரி.’
‘கெட்டுப் போக்கிவிட்டு சால்ஜாப் சொல்லுகிறாப் போல் இருக்கிறது.’
‘இருக்கும்.’
‘அண்ணா இடத்தில் சொல்ல வேண்டியதுதான். சொல்லட்டுமா?’
‘வேண்டாம், வேண்டாம்.’
‘அப்படி யென்றால் நிஜத்தை மரியாதையாய்க் கக்கி விடு.’
‘அதை மாத்திரம் கேட்க வேண்டாம். பிறகு வருத்தமாயிருக்கும்.’
‘யாருக்கு?’
‘உங்களுக்கு-எனக்கு.’
‘பாதகமில்லை. இந்தப் பனங்காட்டு நரி சலசலப் புக்கு அஞ்சாது: தெரியுமா? நீ பயமுறுத்தினால் பயப்பட மாட்டேன். நிஜத்தை சொல்லிவிடு.’
சாரதா ஒரு நிமிஷமாகியும் பதில் சொல்லவில்லை. உடம்பைப் போட்டு திருகிக் கொண்டிருந்தாள். கை விஷமம் பண்ணிற்று.
‘இப்பொழுது சொல்லப்போகிறாயா இல்லையா?’ என்றாள் நாத்தி.
இதைப் படித்துவிட்டு ‘ஏன் ருக்மணி! பாக்கியை எழுதவில்லை’ என்று கேட்டான் சோமசுந்தரம்.
‘ஒன்றும் ஓடவில்லை.’
‘பேச்சு கிராமபோனில் பிடித்தாற் போலிருக்கிறது. மிச்சத்தையும் எழுதினால் ஏதாவது துட்டு சம்பாதிக்கலாம். ‘
‘துட்டில் தான் எப்பொழுதும் குறி–உங்களுக்கு.’ ‘உனக்கு-உதவாத கற்பனையில்!’
‘சண்டை வேண்டாம் ….. நீங்கள்தான் கதையைப் பூர்த்தி செய்யுங்களேன்.’
‘மத்யானமாய்ப் பார்ப்போம்…. ஒரு எட்டு ரூபாய் பணம் வேண்டியிருக்கிறது. கைமாற்று அகப்படவில்லை.’
‘எதற்காக?*
‘ஐயாயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது.’
‘சம்பாதித்தால், வைரத்தோடு வாங்கித் தருவதா யிருந்தால் சொல்லுங்கள், யோசிக்கிறேன்’ என்று குறும்பாய்ச் சிரித்தாள் ருக்மணி.
‘கட்டாயம்` என்று சோமசுந்தரமும் சிரித்தான்.
‘அதுசரி, பணம் எப்படிக் கிடைக்கும் என்று கேட்க வில்லையே? ‘டைம்ஸ்’ என்று ஒரு பத்திரிகையில் ஊர் கள்` போட்டிப்பரிசு விளம்பரம் செய்திருக்கிறான்.’
‘ஓ? போட்டிப் பரிசா? கட்டாயம் ஜெயம் தான்… கெடு எவ்வளவு?’
‘இன்னும் இரண்டு நாளிருக்கிறது விடை பிச கென்று மூச்சுப் பரியக்கூடாது. அலசி அலசி விடை கண்டுபிடித்திருக்கிறேன்.’
‘நாளைக்குப் பார்ப்போமே.’
மறுநாள் காலையில் சோமசுந்தரம் ருக்மணியிடம் ‘இதோ பார்’ என்று இரண்டு தாள்களை நீட்டிவிட்டு, சாய்மான நாற்காலியில் உட்கார்ந்தான்.
அவைகளில் எழுதியிருந்தவை :-
‘இப்பொழுது சொல்லப்போகிறாயா இல்லையா?’ என்றாள் நாத்தி.
சாரதாவோ மகா உத்தமி. நளாயினியைப் போன்ற வள். கணவன் கிழித்த கோட்டைக் கனவிலும் தாண்டி யறியாதவள். தன்னுடையது என்று ஒருவித உரிமையும் பாராட்டாதவள். கணவனும் கடவுளும் அவளுக்கொன்று. அப்பேர்ப்பட்டவளா ராகவனைக் காட்டிக் கொடுப்பாள்!
‘நீங்கள் நச்சுப்படுத்துகிறீர்களே என்று சொல்லு கிறேன். அவருக்குத் தெரிந்தால் கோபிப்பார். சொல்லி விட வேண்டாம். கோடி புண்யம் உண்டு.’
‘அப்பொழுதே தெரியுமே!’
‘பார்த்தீர்களா அக்கா! செய்தது புத்தியில்லாக் காரியம் என்று ஒப்புக்கொள்ளும்பொழுதே கோபம் வரு கிறதே. சொல்லிவிட்டால்?’
‘இல்லை, இல்லை. அறியாமல் வார்த்தை வழிந்து போயிற்று, நீ சொல்லு.’
‘கோடி வீட்டு செல்லப்பெண் இருக்கிறாளல்லவா, அவள் எங்கோ கல்யாணத்திற்குப் போகவேண்டுமென்று மிளகு வளையை இரவல் கேட்டாள். எனக்கென்ன தெரி யும்? கொடுத்துவிட்டேன். பிறகு போன வாரம் திருப் பிக் கொடுத்தனுப்பினாள். அதை வாங்கி எங்கேயோ இடது கையால் வைத்துவிட்டேன்போல் இருக்கிறது.’
‘நீட்டி முழக்குவானேன்’ என்று நாத்தி குறுக்கிட்டாள்.
‘அப்படி இல்லை. கீழே வைத்தேனல்லவா? அப்புறம் மறந்துபோய்விட்டேன். இரும்படுப்பிலிருந்து தணலைக் கீழே கொட்டி, நெய் உருக வைத்துவிட்டு, கிணற்றங் கரைக்குப்போய் வந்தேன். இந்த வளையல் கண்ணில் பட்டது. சில இடங்களில் கருப்பாக இருந்தது. இதென் னடா என்று எடுத்துப் பார்த்தேன். என் வளையலே இல்லைபோல் தோன்றிற்று. வெறும் இமிடேஷன்! அதை எப்படி செல்லப்பெண்ணைப்போய்க் கேட்கிறதென்ற பயம். அதை யார் போட்டுக் கொள்ளுகிறதென்று ட்ரங் கில் ஒரு மூலையில் போட்டிருக்கிறேன். என்ன செய் கிறது? …அக்கா! மறந்துபோய் அண்ணாவிடம் உளறி விடவேண்டாம்; ஜாக்ரதை.
‘உன் புத்தியை ஜோட்டால் அடித்துக்கொள்’ என்று அனுக்ரகம் செய்தாள் நாத்தி.
அன்றைய தினம் சாயங்காலம் சாரதா ஆற்றங் கரைக்குப் போயிருந்த நேரத்தில், ‘பார்த்தாயா-உன் மனைவி சாமர்த்தியத்தை! மிளகு வளையைத் தொலைத்து விட்டு திருடனைத் தேள் கொட்டினாற்போல் இருக்கிறாள். உனக்குத் தெரியுமா?’ என்று நாந்தி ராகவனைக் கேட்டாள்.
‘எனக்குத் தெரியாது. என்ன விசேஷம்?’ என்றான் சகோதரன்.
அதன்பேரில் சாரதா சொன்ன விஷயத்தை பிரா ஸம் போட்டு நாத்தி சொல்லி முடித்தாள்.
இப்படி சமாசாரம் என்று யார் சொன்னது உனக்கு’ என்று கேட்டான் ராகவன்.
‘சாரதா!’
தொலையட்டும், அவள் நகைதானே என்று தன் அலுவலைப் பார்க்கப் போய்விட்டான்.
இரவு நிலா பளிச்சென்று பிருமானந்தமாய் காய்ந்து கொண்டிருந்தது. மாடியில் சாரதா வெற்றிலை போட் டுக் கொண்டிருந்தாள். ராகவன் தன் வாயிலிருந்த தம் பலத்தை உமிழ்ந்து விட்டுத் திரும்பிவந்தான்.
‘நீங்கள் தான் புகையிலை போட்டுக் கொள்வதில் லையே. ஏன் உமிழ்ந்து விட்டு வருகிறீர்கள்.’ என்றாள் சாரதா.
இன்றைக்கு உன் கையால் வெற்றிலை வாங்கிக் கொள்ள வேண்டுமென் றிருந்தேன். மறந்துபோய் நானாகவே போட்டுக்கொண்டு விட்டேன். அதற்காகத் தான்.’
‘இன்று என் விரலில் புதிதாக ஏதாவது வைரம் வைத்து இழைத்திருக்கிறதா என்ன?’
சந்தேகமென்ன ; பத்தரைமாற்றுத் தங்கமல்லவா நீ ! என்னைக் காட்டிக்கொடாமலிருப்பதற்காக என் தங்கையிடம் இப்படி அண்டப்புளுகு புளுகி இருக்கி றாயே ! இது அந்தக் காலத்துக் கற்பரசிகள் செய்கைபோலிருக்கிறது. பூர்வ ஜன்மத்தில் நல்ல பூஜா பலனைச் செய்திருக்கிறேன்’ என்று சொல்லியபடியே மனைவியின் தாமரை ஒத்த கையை ராகவன் அன்புடன் பற்றினான்.
அதைப் படித்ததும் ‘புருஷர்கள் எழுதிய கதை என்று நெற்றியில் எழுதி ஒட்டி இருக்கிறதே’ என்று ருக்மணி விமர்சனம் செய்தாள்.
‘அதெப்படி?’ என்றான் சோமசுந்தரம்.
‘இதோ சொல்லுகிறேன். நேற்று யோசனை ஓட வில்லை என்று உங்களை எழுதச் சொன்னேனல்லவா?’
‘ஆமாம்’.
‘அதற்குப் பிறகு என்னமோ தோன்றிற்று. விரு விரென்று எழுதி முடித்துவிட்டேன். இதோ கொண்டு வருகிறேன்’ என்று பெட்டியிலிருந்து இரண்டு தாள் களைக் கொண்டுவந்து கொடுத்தாள். சோமசுந்தரம் படித்தான்:
‘இப்பொழுது சொல்லப்போகிறாயா இல்லையா?’ என்றாள் நாத்தி.
‘தொந்தரவு கொடுக்கிறீர்கள், சொல்லி விடு கிறேன், பிறகு ஆனது ஆகட்டும்.. …உங்கள் அண்ணா வாங்கிக் கொண்டிருக்கிறார்.’
‘பாகற்காயைப் பூனை தூக்கிக்கொண்டு போய் விட்டது- அப்படித்தானே, சாரதா’ என்று நாத்தி கேலியாய்ச் சிரித்தாள். சாரதா அழாத தோஷமாய்ச் சாதித்தாள்.
‘ஆனால் அவனைக் கேட்கட்டுமா?’
‘கோடி புண்யம் உண்டு. கேட்கவேண்டாம். ஒருவரிடமும் சொல்லாதே என்று வாங்கிக்கொண்டிருக் கிறார். நீங்கள் கேட்டுவிட்டால் எனக்கு ஆபத்து.’
‘ஹூ’ என்று பெருமூச்செறிந்தாள் நாத்தி. அதற் குப் பிறகு மௌனமாய் இருவரும் அப்பளமிட்டு முடித்தார்கள்.
அன்றைய தினம் சாயங்காலம் சாரதா ஆற்றங் கரைக்குப் போயிருந்தபொழுது, நாத்தி ராகவனைக் கண்டு ‘ஏண்டாப்பா! சாரதா மிளகு வளையைப் பிடுங் கிக்கொண்டிருக்கிறாயாமே’ என்றாள்.
‘பிடுங்கிக்கொள்ள வில்லையே.’
‘ஆனால் ?’
‘அவளைக் கேட்டேன். கொடுத்தாள்.’
‘எதற்காக ?’
‘ஒருவரிடம் கைமாற்று வாங்கியிருந்தேன். நாளாகி விட்டது. அவன் நோட்டீஸ் கொடுத்துவிட்டான். அதற்காக இதை விற்றுக் கொடுத்து விட்டேன்.’
‘அடே ! முட்டாள் பையா!’
இரவு .தலையெழுத்தே என்று நிலாச்சுருணை ஆகா யத்தை அரைகுறையாய் மெழுகி வைத்திருந்தது.மாடி யில் ராகவன் தனிமையாய் உட்கார்ந்திருந்தான். ஒரு கையில் வெற்றிலைத் தட்டும், ஒரு கையில் கூஜாச் செம்பு மாக சாரதா மாடிக்கு வந்தாள். கணவன் அவளைச் சட்டை செய்யவில்லை. எதோ சிரமம் போலிருக்கிறது என்று நினைத்து பரிவுடன் ‘தீர்த்தம் வேண்டுமா!’ என்று கேட்டாள்.
‘வேண்டாம்’ என்று கடுகு வெடித்தாற்போல கூறி னான் ராகவன்.
ரொம்ப அலுத்துப்போய் இருக்கிறார் என்று நினைத்து வாசனைப் பாக்கை சுண்ணாம்பிட்ட வெற்றிலையில் வைத் துக் கட்டி ‘இந்தாருங்கள், பீடா” என்று இன்புறுத்த முயன்றாள்.
‘உன் கையில் மனிதன் வாங்கிச் சாப்பிடுவானோ’ என்று சீறினான். சாரதாவுக்கு திகைப்பு மேலிட்டு சோகம் பிறந்து கண்ணில் நீர்வடிந்தது.
‘என்மீதென்ன கோபம்? நான் ஒரு பிசகும் செய்ய வில்லையே.
‘பிசகு செய்யவில்லையா..? நான் நகை வாங்கிக் கொண்டதை என் தங்கையிடம் சொல்லவேண்டா மென்று கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல சொல்லி யிருந்தேனல்லவா? ஏன் பிதற்றி விட்டாய்’ என்று கொட்டாங்கச்சி அடுப்பில் இரைவதுபோல எரிந்து விழுந்தான்.
‘முதலில் கழட்டி வைத்திருக்கிறேன், அப்படி இப் படி என்று சொல்லிப் பார்த்தேன். நம்பவில்லை. நான் யோசித்தேன். விஷயத்தைச் சொல்லாமலிருந்தாலும் சரி, சொன்னாலும் சரி ; ஏதேனும் என்னைப்பற்றி உங் களிடம் கோள் சொல்லத்தான் போகிறாள். காரிய மென்னவோ முடிந்து விட்டது. நிஜத்தைச் சொல்லித் தான் பொல்லாப்பு அடைவோமே என்று சொல்லி விட் டேன். சொல்லாமல் என்ன செய்கிறது?’
‘ரகசியத்தைப் போட்டு உடைத்துவிடுகிறது! வெகு அழகு. கணவனுக்கும் மனைவிக்குமுள்ள அன்பும் அந்த ரங்கமுமே இந்த நாளில் கிடையாது. கலிகாலம்! நீதான் என்ன செய்வாய்?’
‘நான் ஒன்றும் விகல்பமாய்ச் செய்ததாகத் தெரிய வில்லையே.’
‘அடெ சை! கட்சி பேசாதே. அப்புறம் கோபம் வரும். பேசாமல் போ கீழே’ என்று மாடிப்படியைச் சுட்டிக் காட்டினான் ராகவன்.
சாரதா கண்களைப் பிசைந்துகொண்டாள். சிவனே என்று தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு கீழே இறங்கினாள். மாடிப்படிகளில் இறங்கியபொழுது கால் மெட்டிகள் செய்த ஓசை கர்ண கடூரமாய் இருந்தது…
அதைப் படித்த சோமசுந்தரத்திற்கு ருக்மணியின் முகத்தைப் பார்க்கக் கொஞ்சம் கூச்சமாயிருந்தது. தாளினால் முகத்தை மறைத்தபடியே ‘உன் கதை நன்றாய் இருக்கிறதே’ என்றான்.
‘எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்…… ‘ஊர்கள் போட் டிப் பரிசுக்கு வேண்டுமானால் இன்றே பணம் அனுப்பி விடலாம். பக்கத்து வீட்டில் கேட்டு வாங்கி வைத்திருக் கிறேன். கொண்டுவரட்டுமா’ என்றாள் ருக்மணி.
சோமசுந்தரம் ஜேபியில் இருந்த பரிசுத்தாள்களை எடுத்து நூறு சுக்கலாய்க் கிழித்தெறிந்தான்.வெற்றியை விளக்கும் புஷ்ப வர்ஷம் போல் அவைகள் பறந்து விழுந்தன.
– பதினெட்டாம் பெருக்கு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 1944, ஹிமாலயப் பிரசுரம். இரண்டாம் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை. இந்த கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகையில் வெளியானவை.