புரிகிறதா





கிருத்திகா! இன்னிக்கி ஊருக்கு புறப்படுறதுக்கு என் உடைகளையெல்லாம் சூட்கேசுல வச்சுக்கிட்டேன், என்று சொன்னாள் மனோகரி. சரியாகவே நீங்க வைக்கல
அண்ணி. நான் வைக்கிறேன் பாருங்க என்றவாறே மனோகரியின் உடைகளை அனைத்தையும் மடிப்பு கலையாமல் வெளியில் எடுத்து, ஒவ்வொன்றாக நீவி,
இரண்டு தட்டு தட்டி, பின்னர் சூட்கேசில் அடுக்க ஆரம்பித்தாள் கிருத்திகா.
மாலையானதும் கணவனுடன் மனோகரியை பஸ்சில் ஏற்றிவிடப் போனாள். அடுத்த வீட்டு மிருணாளினிக்கு குழப்பமாயிருந்தது.
மனோகரி விருந்தாளியாக வந்ததுவே பிடிக்காத கிருத்திகா அவளுக்கு எடுபிடி வேலை எல்லாம் இப்படி புன்னகைத்தவாறே எப்படி செய்கிறாள்?
சிரித்தாள் கிருத்திகா. அண்ணி உடைகளை எதுக்காக சூட்கேசில் அடுக்கினேன்னா அண்ணியோட, அயர்ன் பண்ணியிருக்குற டிரஸ்க்குள்ளே எனக்கு தெரியாம ரூபா நோட்டுகளை என் கணவர் மறைச்சு வச்சுக் குடுத்திருப்பாரோங்குற சந்தேகம் தான். பஸ்சுல ஏத்திவிட கூடவே நான் போனதுக்கு காரணம் பஸ் புறப்படுறப்பா
அண்ணியோட கையில பெரிய தொகை ஏதாவது குடுத்துடக்கூடாதுங்கிறக்காக புரியுதா?
மலைத்து நின்றாள் மிருணாளினி.
– அன்பிற்கினியன்