கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: February 17, 2025
பார்வையிட்டோர்: 7,621 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஐயா, என் பையனுக்குப் பூணூல் போட வேண்டும். தயவுசெய்து ஏதாவது உதவி செய்யுங்கள்” என்று குரல் கேட்டது.

நகைக் கடை வாசலில் அந்த வயோதிக அந்தணர் நின்று கொண்டிருந்தார். பரம ஏழை, கந்தல் வேட்டி, கூடு கட்டிய மார்பு. முகத்தில் ஒரு மாத வளர்ச்சி, கையும் காலும் வெறும் ஈர்க்குச்சிகள்! பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது.

நகைக் கடை முதலாளி திண்டு மெத்தையில் சாய்ந்திருந்தான், கையிலும் காதிலும் வைரங்கள். கழுத்தில் தங்கச் சங்கிலி, தேகம் முழுதும் பொன் மினுமினுப்பு.

“போய்யா, போ! வெள்ளிக் கிழமையும் அதுவுமா? போய் நாளைக்கு வாய்யா!” என்றான் முதலாளி.

முதலாளியின் பெயர் ஸ்ரீனிவாசன். கஞ்சன் என்றால் மகா கஞ்சன். அவருடைய கருமித்தனம் பிரசித்தி பெற்றது. சிறு வயதிலிருந்தே வளர்ந்தது அது. காசைக் கண்டால் ஆசை, பொன்னைக் கண்டால் மோகம். ஒரு செப்புக் காசு வீணடிக்க மாட்டார்.

மறுநாள் அதே நேரம், வாசலில் அதே வயோதிகர் வந்து நின்றார்.

“ஏன் பெரியவரே! சனிக் கிழமை அன்னிக்கு யாராவது தர்மம் பண்ணுவாங்களா? போம். போம்! நாளைக்கு வாரும்!”

மறுநாள்,

அதே நேரம். வயோதிகர் திரும்பி வந்தார்.

“இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை சுவாமி! சூரிய பகவானுக்கு ஆகாது! நாளைக்கு வாரும்” என்றார் ஸ்ரீனிவாசன்.

அடுத்த நாள்.

அதே நேரம்.

வயோதிகர் தென்பட, அன்றைக்கு ஒரு காரணத்தைக் காட்டி, மறு நாள் வரச் சொன்னார்.

மறுநாள் வர, அதற்கும் காரணம் சுற்பித்து அதற்கு மறு நாள் வரச் சொல்ல… இப்படி மறுநாள் மறுநாள் என்று ஆறு மாதம் ஓடிவிட்டது.

வயோதிகரும் விடாது வந்து கொண்டிருந்தார். அவரது பொறுமை ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

நகைக் கடை ஸ்ரீனிவாசனின் மனம் தளரவே இல்லை. வயோதிகர் தினம் தினம் வர, ஸ்ரீனிவாசனுக்கு வீம்பு தான் கூடியது, கூசாமல் ‘மறுநாள் வா!’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

ஸ்ரீனிவாசன் புரந்தர காடு என்ற ஊரில் பிறந்தவன். “பூனாவிலிருந்து பதினெட்டு மைலில் இருக்கிறது இந்த ஊர், தந்தை பெயர் வரதப்ப நாயகர். தாய் பெயர் கமலாதேவி, இவர்களுக்கு வெகு நாட்கள் குழந்தை பிறக்காமல் பிரார்த்தனை செய்து திருப்பதி யாத்திரை போய் தவம் செய்து பெற்ற குழந்தைதான் ஸ்ரீனிவாசன்.

ஒரே ஒரு பிள்ளையான ஸ்ரீனிவாசனைப் பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக வளர்த்தார்கள், நன்றாகப் படிக்க வைத்தார்கள். வடமொழியிலும் சங்கீதத்திலும் மிகவும் தேர்ச்சி பெற்றான் ஸ்ரீனிவாசன், நல்ல குணமுள்ள சரஸ்வதிபாய் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.

பெற்றோர்கள் காலப்போக்கில் இறந்து விட, தந்தையின் நகைத் தொழிலை ஏற்றுக் கொண்டான் ஸ்ரீனிவாசன்.

இப்போது நகைத் தொழிலில் இறங்கியவுடன், பேராசையுடன் பணம் சேர்ப்பதில் ஈடுபட்டான், எந்த வழியானாலும் தயங்குவதில்லை, வட்டிக்குப் பணம் கொடுத்தான். சதா சர்வகாலமும் பொருளையே நினைத்துக் கொண்டு வேறு எதிலும் சிந்தையே செலுத்தவில்லை. பணம் அவருக்குப் பல கோடி சேர்ந்ததால் அவரை ‘நவகோடி நாராயணன்’ என்று அழைத்தார்கள்.

அவர் மனைவி சரஸ்வதி பாய் தர்ம சிந்தனை உள்ளவள். ஆனால் அவள் ஏதாவது தர்மம் செய்ய விரும்பினால் கூட அதை உடனே தடுத்து நிறுத்துவார். கோவிலுக்கு என்று அவள் ஏதாவது செலவழிக்க விரும்பினாலும் அதையும் உடனே தடுத்து நிறுத்துவார்.

ஆறு மாதம் ஸ்ரீனிவாசனிடம் தர்மம் கேட்டு நடையாக நடந்த வயோதிகர் கடைசியில் அலுத்து விட்டார்.

இவரிடம் கேட்டு இனிப் பிரயோசனம் இல்லை, இவர் மனைவியிடமாவது கேட்கலாம் என்று நினைத்து, ஒரு நாள் ஸ்ரீனிவாசனது வீட்டுக்குச் சென்றார்.

வீட்டில் ஸ்ரீனிவாசன் மனைவி சரஸ்வதியைப் பார்த்து,

“அம்மணி! நான் வயோதிகன், பரம் ஏழை! எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்குப் பூணூல் போட வேண்டும். அதற்கு வகையில்லாமல் இருக்கிறேன். தங்கள் குடும்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன். தங்களைப் போன்ற செல்வந்தர்கள் இந்தப் பதினான்கு உலகத்திலும் கிடையாது என்றார்கள். எனவே தங்களை அணுகி தர்மம் கேட்பது முறை என்று வந்தேன்” என்றார்.

“ஐயா! என் கணவர் நகைக் கடை வைத்திருக்கிறார். அவரிடம் போய்க் கேட்பது அன்றே முறை!” என்று கூறினாள் சரஸ்வதி பாய்.

“கேட்டேன் அம்மணி! ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல! ஆறு மாதம் நடையாக நடந்தேன். இன்றைக்கு வா, நாளைக்கு வா என்று சொல்லி இத்தனை நாள் அலைக் கழித்து விட்டார். என் கால்கள் இற்றுப் போய்விட்டன. உடம்பு தள்ளாடிவிட்டது” என்று நொந்துபோய்க் கூறினார் அவர்.

சரஸ்வதி பாய்க்கு வருத்தம் ஏற்பட்டது.

வயோதிகரைப் பார்த்து இரக்கம் ஏற்பட்டது. அவள் மனம் கருணையினால் நிரம்பியது.

சிறிது யோசித்தாள்.

பிறகு உள்ளே பொக்கிஷ அறைக்கு ஓடினாள். தங்க வாடை முகத்தில் அடித்தது.

ஒரு சிறிய பேழையை எடுத்தாள். அதில் அவளது வைர மூக்குத்தி இருந்தது.

அதை எடுத்து அவரிடம் தந்தாள், “சுவாமி! என் கணவர் நல்லவர். ஏதோ நினைப்பில் உங்களுக்குத் தர்மம் செய்யாது இருந்து விட்டார். இந்தாருங்கள்! இந்த மூக்குத்தியை எங்கேயாவது வைத்துப் பணம் ஈட்டிக் கொள்ளுங்கள்” என்றாள்.

இழவர் மகிழ்ச்சியுடன் மூக்குத்தியை வாங்கிக்கொண்டார்.

சரஸ்வதியை வாழ்த்திவிட்டு நேராக ஸ்ரீனிவாசனின் நகைக் கடைக்குச் சென்றார்.

“ஐயா, இந்த வைர மூக்குத்தியை வைத்துக்கொண்டு 4000 வராகன் தாரும். என் மகனின் பூணூல் சடங்கைச் செய்து முடிப்பேன், ஒருவேை இந்த மூக்குத்தியைப் பார்த்துப் பணம் கொடுக்க வேண்டாம் என்று உமக்குத் தோன்றினால் நீங்கள் பணம் தரவேண்டாம். மூக்குத்தியையும் தாங்களே வைத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறினார்.

ஸ்ரீனிவாசன் தம் கையில் அந்த மூக்குத்தியை வாங்கி ஆச்சரியமுடன் பார்த்தார்.

அதைப் பார்த்ததும் அவருக்குச் சந்தேகம் தோன்றியது. “இது என் மனைவியின் மூக்குத்தி அல்லவோ? இது எப்படி இவர் கையில் வந்தது? உண்மை அறிய வேண்டுமே!” என்று நினைத்து நிமிர்ந்து பார்த்தார்.

கிழவரைக் காணவில்லை.

அவ்வளவுதான், ஸ்ரீனிவாசனுக்குச் சந்தேகம் வலுத்து விட்டது.

மூக்குத்தியை அப்படியே நகைக் கடைப் பெட்டியில் வைத்துப் பூட்டினார்.

கடையைச் சாத்திப் பூட்டி, வீட்டுக்கு அவசரமாகப் புறப்பட்டார்.

வீட்டில் மசைவியைப் பார்த்து, “எங்கே உன் மூக்குத்தி” என்றார்.

மனைவிக்குப் பயம் வந்தது.

“பூஜை அறையில் வைத்திருக்கிறேன்” என்று சொல்லிச் சமாளித்தாள்.

“அதைக் கொண்டா?” என்றார் ஸ்ரீனிவாசன்.

சரஸ்வதி பாய் நடுங்கிக்கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தாள்.

மூக்குத்தி இல்லாவிட்டால் அவள் கணவர் எப்படி மாறுவார் என்று அவளுக்குத் தெரியும்.

நிச்சயம் நையப் புடைந்து வீட்டை விட்டுத் துரத்துவார்.

அவ்வளவு நகை மோகம் அவருக்கு.

இனி உண்மையை மறைக்கவும் வழியில்லை. ஆகவே யோசித்து, உள்ளே சென்று விஷ இலைகளைக் கொணர்ந்து அவசரமாகச் சாறு எடுத்தாள். திண்மையான விஷம் உற்பத்தியாயிற்று. அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் குடிப்பதற்காக வாய்வரை தூக்கினாள்.

கிலுகிலு என்று பாத்திரத்தில் ஒரு சத்தம்.

சட்டென்று குடிப்பதை நிறுத்தி, பாத்திரத்தில் விரலை விட்டுத் துழாவினாள்.

உள்ளே ஏதோ பிள்ளதாக நெருட, வெளியில் எடுத்தாள்.

அது வைர மூக்குத்தி என்று தெரிந்ததும் கண்கள் அதிசயத்தில் மலர்ந்தன.

கடவுளின் செயல் இது என்று கருதி, அவருக்கு நன்றி சொல்லி வெளியே வந்தாள். ஸ்ரீனிவாசனைப் பார்த்து “இந்தாருங்கள் உங்கள் மூக்குத்தி” என்றாள்.

ஸ்ரீனிவாசனுக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை.

“மூக்குத்தி மட்டுமில்லை. எல்லா நகைகளையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்! செத்த பிறகு இவைகளைக் கொண்டு போகவா போகிறோம், சீ” என்று சொல்லி நகைகள் யாவற்றையும் கழற்றி அவர் முன்னால் எறிந்தாள்.

ஸ்ரீனிவாசன், “சரஸ்வதி! இது என்ன?” என்று கேட்கும்போது அவள் நடந்ததை எல்லாம் கூறி, “என் விட்டலர் என்னைக் காப்பாற்றினார். இனி அவர்தான் என் ஒரே கதி! உங்கள் நகைகளை நீங்களே வைத்துக் கொண்டு அழுங்கள்!” என்று கூறினாள்.

ஸ்ரீனிவாசன் உடனே எழுந்தார். இன்னும் நம்பிக்கை இல்லை, நேராகக் கடைக்கு ஓடினார். நகைப் பெட்டியை எடுத்தார். அதைப் பரபரப்போடு திறந்து பார்க்க, உள்ளே அந்த மூக்குத்தியைக் காணவில்லை,

உடனே வீட்டுக்கு ஓடோடி வந்தார்.

”சரஸ்வதி! இது என்ன அதிசயம்? கடையில் மூக்குத்தி இல்லை” என்று கத்தினான்.

“பார்த்தீர்களா?அந்தக் கிழவர் நமது பாண்டுரங்கனே தான்!”’ என்று கூறினாள் சரஸ்வதி.

ஸ்ரீனிவாசனுக்கு மனம் கரைந்தது. உடம்பு நடித்தது. கண்ணீர் ஆறாய்ப் பெருக, “சுவாமி! தாங்களா என்னிடம் பிச்சைக்கு வந்தீர்கள்? தங்களை அவமதித்து விட்டேனே!” என்று மனம் உருகப் பிரார்த்தனை செய்தார்.

பிறகு கணவனும் மனைவியும் கிழவர் வந்து நின்ற இடத்திலேயே அமர்ந்து மூன்று நாள் எதுவும் சாப்பிடாமல் விட்டலரின் தியானத்திலேயே இருந்தார்கள்.

அவர்களது சிரத்தையைக் கண்டு மூன்றாம் நாள் விட்டலர் அவர்கள் முன்னால் தோன்றினார், மனைவி சரஸ்வதியின் கண்களுக்கு மட்டும் தெரிந்தார்.

“சரஸ்வதி, உன் கண்களுக்கு மட்டும் தான் நாம் புலப்படுவோம். உன் கணவர் எப்போது எல்லாவற்றையும் துறந்து கடவுள் தாசர் ஆகிறாரோ அப்போதுதான் நமது தரிசனம் கிடைக்கும்” என்று அருளினார்.

ஸ்ரீனிவாசனுக்கு விட்டலரின் குரல் மட்டுமே கேட்டது. அவரைப் பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். மறுநாள் தமது பொருள்களை யெல்லாம் தான தருமங்களில் செலவு செய்தார். எல்லாவற்றையும் துறந்த பிறகு, தமது மனைவி, நான்கு குழந்தைகளுடன் இறைவனைத் தேடுவதில் தீவிரமாக இறங்கினர்.

ஊர் ஊராகச் செல்ல ஆரம்பித்தார்.

ஹம்பியில் சுவாமி வியாசராயர் என்பவரைச் சந்தித்தார்.

அவரது அனுக்கிரகத்தால் துறவு கோலம் பூண்டார்.

“பொருள் சேர்க்காதே! யாரிடமும் எதுவும் வாங்காதே! கடவுள் அருளில் கிடைப்பதை மட்டும் ஏற்றுக்கொள்!” என்று கூறினார் குரு.

ஸ்ரீனிவாசனுக்கு துளசி, சதங்கை, சிப்ளாக் கட்டை, தம்புரா நாலும் நல்கி.

‘புரந்தரதாசர்’ என்ற துறவுப் பெயரையும் அருள் கூர்ந்து வழங்கினார்.

புரந்தரதாசர் தமது இனிய குரலால் கடவுளைப் பாடி எங்கும் யாத்திரை செய்தார்.

ஆயிரக் கணக்கில் அவர் இயற்றிய கீர்த்தனைகள் மக்களால் பெரிதும் போற்றப்பட்டன. (அவரது கீர்த்தனைகள் பிற்காலத்தில் தியாகராஜரைப் பெரிதும் கவர்ந்தது. அவரையும் அவ்விதமே பாடவைத்தது.)

அவர் பாடல்கள் நாட்டையே உன்மத்தம் கொள்ளச் செய்தன.

இன்றும் அந்தப் பாடல்கள் நம்மிடையே வழங்கி வருகின்றன. கச்சேரிகளில் அவைகளைப் பாடாதவர்கள் இருக்க முடியாது.

புரந்தரதாசர் கடைசியில் விஜய விட்டலர் சந்திதியில் மெய்மறந்து பாடும்போது, இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

அவர் வாழ்ந்தது பதினைந்தாம் நூற்றண்டு.

– மங்கையர் மலர், ஆகஸ்டு 1981.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *