புஞ்சை
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: செம்மலர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2026
பார்வையிட்டோர்: 4,326
(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒன்பதாம் வகுப்பு படிக்கிற மல்லிகாவுக்கு புஞ்சை என்றால் உயிர். பள்ளிக்கூடத்தைவிட புஞ்சை மண்தான் ரொம்பப் பிடிக்கும். காட்டு வேலை என்றால் அவளுக்கு றெக்கை முளைத்த மாதிரி.
பள்ளிக்கூடம் என்றால் வேப்பங்காய் தான். காயப்போட்டிருக்கிற ப்ளூ கலர் பாவாடையை எடுத்தால் வெடவெடப்பாக விறைத்துப் போயிருக்கும், தகரத்தகடு போல. அதை உடுத்துவது என்றாலே அவளுக்கு பச்சை வேலி முள்ளை உடம்பில் சுற்றுவது போலத்தான். மனசெல்லாம் கிடந்து ரணப்படும். ச்சீயென்றிருக்கும்.
சனி ஞாயிறு என்றால் அவளுக்குத் தனிக் கொண்டாட்டம் தான். பட்டாம்பூச்சியாய் மனசு பறக்கும். விசிலடிக்கிற மனசின் கும்மாளத்தை மூடி மறைத்துக் கொள்ளவும் தெரியாது.
‘அய்ய்… நாளைக்கு லீவு… நாளைக்கு லீவு’ என்று புழுதி பறக்க குதியாளம் போடுவாள்.
‘அடச்சீ! கழுதை. அதுக்கு இந்தக் குதியா? பொட்டைக் கழுதை இருக்குற இடம் தெரியாம இருக்க வேண்டாம்?’ என்று பார்வதி கண்டிப்பாள். சீறிவிழுவாள். கண்டிப்பில் கண்டிப்பின் உஷ்ணம் இருக்காது. பெருமிதப் பூரிப்புதான் இருக்கும். மகளின் மகிழ்ச்சியில் மனம் கரைந்துபோன தாய்மைப் பொலிவு முகத்தில் தத்தளிக்கும்.
சனிக்கிழமை என்றால்… ஆளுக்கு முந்தி புஞ்சைக்குக் கிளம்பி விடுவாள். ‘இருடி… சித்தே நில்லு. கஞ்சியைக் குடிச்சிட்டுப் போடி’ என்று பார்வதி ‘கட்டை’யைப் போடுவாள். கட்டையைத் தாண்டிக் கொண்டு செண்டிப்பாள், மல்லிகா.
“நீ வர்ரப்ப கஞ்சியைக் கொண்டா. காட்டுக் கஞ்சிதான் நல்லாயிருக்கும்.”
பார்வதி சள்ளைப்படுவாள்.
“மதியத்துலே காட்டுக்கஞ்சியா குடி. இப்ப வா. சாப்புட்டுட்டுப் போயிரு. ஒரு வேலை முடியட்டும்டி.”
மல்லிகாவை சாப்பிட நிறுத்துவதே பெரும்பாடு. சிணுங்கி, அழுது, சடைத்துப் புளித்துத்தான் கஞ்சிகுடிப் பாள். சிவந்த சின்னமுகம் எட்டுக் கோணலாகப் போகும். புஞ்சையில் போய் கால்வைத்த பிறகு தான், அவள் அவளாக உணர்வாள்.
புஞ்சை மண் ரொம்ப மிருது. அவள் பாதங்களுடன் கொஞ்சிப் போசும். ‘கண்ணூ… வந்துட்டீயா? ஏஞ்செல்லம்’ என்று காலின் பிஞ்சு விரல்களைத் தழுவிக் கொஞ்சும். முத்தமிடும். நீர் பாய்ந்து காய்ந்த வாய்க்காலின் குறுமணல் அவள் பாதங்களை ‘கிச்சுக் கிச்சு’ காட்டும். கூச்சம் தாளாத அவளின் வெடிச்சிரிப்பில் புஞ்சை மண்ணின் தாய்மனசு கனிந்து குழையும்.
புஞ்சை வேலையில் மல்லிகாவுக்கு அம்புட்டு நாட்டம். முதல்நாள் போட்ட ரெட்டைச்சடை புஜத்தின் முன்பக்கம் ‘சத், சத்’ தென்று ஆட, ஓடி ஓடிக் களை வெட்டுவாள். நிமிராமல் வெட்டுவாள். புஜத்தில் அடிக்கும் சடையின் சத்தம் சுகமாக இருக்கும். வடிகிற வேர்வை, குனிந்த முகத்தின் நாசி நுனியில் மூக்குத்தி போலத் தொங்கும். அதன் கூச்சமான ஸ்பரிசம் அவளுக்குள் ரொம்பப் பிடிக்கும். வேர்வையில் நனைந்த ரோமங்கள் காதோரங்களில் படிந்து அந்தரங்கம் பேசும். மனசுக்கு மனசான அந்த ரகசியம் அவளுக்குள் ஆயிரமாயிரம் கதைகளாகப் படர்ந்து விரியும்.
எல்லா வேலைகளும் பார்ப்பாள். வெயில், நிலா வெளிச்சம் மாதிரி. ஆம்பளை மாதிரி தண்ணீர் பாய்ச்சுவாள். புழுதியைக் கரைத்துக்கொண்டு வளர்த்த பாம்புக்குட்டிகள் மாதிரி வாய்க்கால் தண்ணீர் ஓடிவரும். வாஞ்சையோடு கரண்டைக் கால்களை உரசும். பூப்போட் பாவாடையின் கீழ்நுனியை எடுத்து இடுப்பில் சொருகிக் கொள்வாள். முழங்கால் வரை வெயில்படும். ரொம்பநாள் பார்க்காத தோழியைப் பார்த்த மாதிரி வெயில் சந்தோஷமாயிருக்கும்.
வாய்மடையைக் கொத்திவிட்டு மம்பட்டியோடு வாய்க்காலுக்குள்ளேயே நிற்பாள். காலடி மண்ணை சன்னச் சன்னமாய் அரித்துக் குறும்பு செய்கிற நீரின் விளையாட்டில் மனம் கரைவாள்.
ஈர மண்ணைக் கொத்தி வாய்மடையை விலக்கியவுடன், காய்ந்த இலைச்சருகுகளை மேய்ந்து கொண்டே படர்கிற கடாக் குட்டிகளைப் போன்ற தண்ணீர்ச் சத்தம் உயிருள்ள ஒரு பாட்டாக அவளுக்குக் கேட்கும். உற்றுக்கேட்பாள்.
பாய்ந்த பாத்திக்குள் மைனாக்கள் றெக்கையடித்துக் குளிக்கும். இவளை ஒரு பயத்தோடும், மறுகணம் அலட்சியமாகவும் அதுகள் பார்க்கும்.
அதுகளின் பார்வைகளையே இவள் பார்ப்பாள். பார்வையின் பாஷை இவளுக்குள் மொழிபெயர்க்கப்படும். மனசு மயங்கிப் பேசுவாள். மெய்மறந்த தருணத்தில் பாத்தி நிரம்பி தளும்பி… வரப்பின் விளிம்பை நனைத்து உடைத்து, நாலாபக்கமும் சிதறியோடும், நீர்.
நாசம். சர்வநாசம். பெரும் குழப்பம். ஓடிஓடி மண்ணைக் கொத்தி புழுதியை அள்ளிப்போட்டு அடைக்கணும். ஒருபக்கம் அடைத்தால் மறுபக்கம் பிடுங்கும். அவள் பாடு நாறிப்போகும். வேர்த்துக் கொட்டும். நெஞ்சுக்கூடு உலரும். கேஸ்ஸு பூஸ்ஸென்று மேல்மூச்சு வாங்கும். அவளுக்கு அதெல்லாம் ஒரு விளையாட்டுத்தான். சந்தோஷ கொந்தளிப்புதான்.
திங்கட்கிழமை நெருங்க நெருங்க… அவளுக்குத் தீயாக இருக்கும்.
மகள் இப்படி மண்ணில் மனசு கரைய வேலை செய்கிற அழகையும் ஆர்வத்தையும் பார்க்கப் பார்க்க பார்வதிக்கு ஒரே பூரிப்பு. பெருமிதம் பொங்கி வழியும்.
‘எங்க அய்யா கொணம், மல்லிகாகிட்டே வந்து அச்சுக்குலையாம எறங்கியிருக்கு. அவரும் அப்படித்தான். புஞ்சைவேலை என்றால்… உசுராக் கெடப்பாரு. உஸ்ஸுன்னு உக்கார மனசு சகிக்காது. எந்நேரமும் என்னத்தையாச்சும் நோண்டிக்கிட்டேயிருப்பாரு’
அந்த நினைவுச் சரட்டைப் பிடித்துப் போக ஆரம்பித்தால்… பார்வதி ரொம்பத் தூரத்துக்குப் போய்விடுவாள், அய்யாவின் அய்யா… தாத்தாவின் அய்யா என்று, பரம்பரையே விவசாயப் பரம்பரை. வேர்வை சிந்தி மண்ணை மகத்துவப்படுத்திய பரம்பரை. பிறவிச் சம்சாரிகள்.
‘சம்சாரி வம்ச ரத்தம் ஒடம்புலே ஓடுது. அதான்… புஞ்சை வேலைக்கு இந்தப் பறப்பு பறக்கா:’
மகளிடம் தம் வம்சத்தையே பார்த்த சந்தோஷத்தை வெளிக்காட்ட மாட்டாள். பொய்க் கோபம்தான் காட்டுவாள்.
“காடு காடுன்னு வெயில்லே திரிஞ்சு கருவாய்க் கட்டையா நின்னேன்னா… ஒரு பயலும் வந்து கட்ட மாட்டான். நாலெழுத்து படிச்சு நறுவிசா இருந்தாத் தான், பொண்ணுன்னு எவனும் கேட்டு வருவான். காலம் மாறிப் போச்சுடி. படிச்சிக் கரையேறுகிற வழியைப் பாருடி.”
2
அறிவியல் நோட்ஸ் புத்தகத்திற்கு அட்டை போட பேப்பர் தேவைப்பட்டது. கையகலப் புத்தகம். சின்ன பேப்பர் இருந்தால்கூடப் போதும். வீடெல்லாம் தேடிப் பார்த்தாள் மல்லிகா. காகிதத்துக்கு எங்கே போவது?
“அம்மா”
“என்னடி?”
“அட்டை போடுறதுக்குப் பேப்பர் வேணும்.”
“நா எங்க போறது?”
“வேணும்லே?”
“என்னை வேணும்னா… கிழிச்சுப் போடு.”
“அட்டை வேணும்மா…”
“அந்தா… பலகையிலே ஒரு பேப்பர் கெடக்கு. அதை வேணும்னா எடுத்துக்க…”
அது டைப் அடித்த பேப்பர். ஸ்டாம்ப் ஒட்டியிருந்தது. தபால் முத்திரை இருந்தது. மங்கலான மையில் டைப். இங்கிலீஷ். அதில் நிறைய வார்த்தைகள் புரியவில்லை. திஸ், நாட், கேஷ், டோட்டல் போன்ற ஒன்றிரண்டு புரிந்தன. பேனா மையால் எழுதிய நம்பர்களும் இருந்தன.
அசல் 13000-00. வட்டி 2376-65.
‘நோட்டீஸ் கண்ட 15 நாட்களுக்குள் முழுக்கடனையும் செலுத்தத் தவறினால்… சங்கம சொத்து, தாவர சொத்து உட்பட சகல உடைமைகளும் ஜப்தி செய்யப்படும்’ என்ற தகவல் மட்டும் தமிழில்.
‘ஜப்தின்னா…. என்ன?’ மல்லிகாவுக்கு ஒன்றும் புரியவில்லை. சப்பாத்தி என்ற சொல் அவளுக்குள் ஒலித்தது. ‘சப்-தீ’ என்றர்த்தமோ… ‘சப்-தீ’ன்னா… துணைத்தீயா? அப்படியோர் தீயா?
கண்டமேனிக்கு கற்பனை ஓட… உட்கார்ந்து அட்டைப் போடத் துவங்கினாள். ஸ்டாம்ப் வெளித்தெரிகிற மாதிரி அட்டை போட்டால் நல்லாயிருக்கும் என்று ஆசைப்பட்டாள்.
அப்படியே போட்டாள்.
3
அன்றைக்கு வியாழன். உறங்கி முழித்த மல்லிகாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. ‘பள்ளிக் கூடம் போகணுமே.’ சள்ளைபிடித்த நினைப்பு வழிந்த கோழையைக்கூட துடைக்காமல் உறக்கச் சடவோடு உட்கார்ந்திருந்தாள், சற்று நேரம்.
அய்யா நாராயணமூர்த்தியின் ‘கடபுடா’ச் சத்தம். கோபமான அதட்டலில் திடுக்கிட்டாள். அரண்டு போனாள்.
“என்ன, பள்ளிக்கோடம் போவலியா?”
“போவணும்.”
“மணி ஆறரையாகப் போவுது. இன்னும் மூஞ்சியைக்கூட கழுவலியா? வெருசா… ஓடைக்குப் போய்ட்டு வா.”
ஓடைக்குப் போய்விட்டு வருகிறபோது- டீக் கடையை சமீபிக்கிற நேரத்தில்…
அய்யா பேரைச் சொல்லி ஆச்சரியமான பேச்சு, டீக்கடையில்.
“ஏய்… இங்க பாருங்கப்பா…. பேப்பர்லே நம்ம நாராயணமூர்த்தி பேரு வந்திருக்கு.”
“எங்க? நம்மூரு நாராயணமூர்த்தியா?”
“ஆமா… ங்கே.”
அதிசயத்தைக் கண்ட பரபரப்பு. ஆவல் பரவசம் எல்லாரிடமும். ஆள் ஆளுக்கு பத்திரிகைக்குள் தலையை நுழைத்தனர்.
“ஆமப்… போ… நெசந்தா.”
என்ற மகிழ்ச்சியான முகவெளிச்சமாக நிமிர்ந்த அந்த ஆள்.
“சொஸைட்டி விளம்பரம் குடுத்துருக்காக. ஜப்தியாகப் போற கடன்காரங்க பட்டியல்லே நாராயணமூர்த்தி பேருதா மொதப் பேரு.”
“மழை தண்ணியில்லே. வெள்ளாமை வெளைச்சல் இல்லே. இந்தக் கோடையிலே எதை வெச்சு கடன் கட்ட?”
“சம்சாரி வெளைய வைக்குற பொருளுக்கு வெலைதரணும்னு நெனைச்சுப் பாக்காத சர்க்காரு… வசூல் பண்றதுக்கு என்ன யோக்யதையிலே வருது?”
“கடன் தள்ளுபடியானாலும் ஆயிரும்னு ஒரு நப்பாசையிலே நாளும் பொழுதும் போயிருச்சு.”
“கடன் தள்ளுபடியா? இனிமேயா? கனாவுலே கூட நெனைச்சுப் பாக்க முடியுமா?”
“டங்கல் திட்டம்னா… சும்மாவா? சம்சாரிகளோட டங்குவாரை அறுத்துப் போடுற திட்டந்தானே?”
“மண்ணை நம்பிப் பாடுபட்டவன்… மண்ணாப் போக வேண்டியதுதான்.”
“நம்மளை கொதிக்க வைச்ச பாவிக மட்டும் நல்லாயிருந்துவாகளா?”
டீக்கடையில் அனுமார் வாலாக நீள்கிற பேச்சு. சற்றுத் தேங்கி நின்ற மல்லிகாவுக்கு எதுவோ புரிகிற மாதிரியுமி ருந்தது; புரியாத மாதிரியுமிருந்தது. இனம்புரியாத உள்பயம். விபரீதத்தை எதிர் நோக்குகிற படபடப்பு. திகில்.
பத்திரிகையில் அய்யா பெயர். அதைப் பார்க்கணும் என்கிற ஆசை. எப்படிப் போக? ஆம்பளைகள் கூடியிருக்கிற இடத்துக்கு இவள் எப்படிப் போக முடியும்? ஆனால், பார்க்க ஆசை.
முதலில் அம்மாவிடம் போய்ச் சொல்லணும்.
சொன்னவுடன் அம்மா முகம் அப்படியே இறுகிப் போயிற்று. உணர்ச்சி பூராவும் வற்றிப்போன மாதிரி யோர் சவக்களை. திகிலடித்த மாதிரி அப்படியே ஸ்தம்பித்துப் போன முகத்தில், பார்வை மட்டும் பறவையாட…
சில கணங்கள்.
அவ்வளவுதான். பார்வதி உடைந்து விட்டாள். தலையில் மடேர் மடேரென்று அடித்துக் கொண்டு கோவென்று கதறியழுதாள்.
“ஐயய்யோ… பாதரவே, இந்தக் குடும்பத்துக்கா… இந்தக் கேவலம்? ஒடம்பைக் கடம்பா கடைஞ்சு உழைச்சதுக்கா இந்தக் கதி வரணும்? என்னத்தை வைச்சு… இப்பக் கடன் கட்ட? இந்தக் கேவலத்தைத் தின்னுட்டு உசுர் வைச்சும் இருக்கணுமா? மானம் கெட்டுப் பொழைக்கணுமா?”
நனைந்து நைந்த சித்திரமாக அம்மா. மல்லிகாவுக்கு கால், கையெல்லாம் நடுங்கிக்கொண்டு வந்தது. மனம் முழுக்க முட்டிக்கொண்டு வருகிற அழுகை. கண்ணில் நீரின் உறுத்தல்.
வீடு ரணகளமாயிற்று. வந்த அய்யாவுடன் அம்மா போட்ட நாறச் சண்டை. அய்யா முகமும் ரத்தம் செத்துப்போய் கருத்துக் கிடந்தது. அப்பிக் கிடந்த வருத்தம். அம்மா… கொதிப்பும் தளதளப்புமாய்க் கத்திக் கொண்டிருந்தாள்.
“வாங்குன கடன் மூவாயிரந்தான். அப்பப்ப..ஐநூறு ஆயிரம்னு மூவாயிரத்துக்கு மேலே கட்டி யாச்சு. வட்டி, தவணை கடந்த வட்டின்னு இப்ப ஏறியிருக்குற கடன். என்ன செய்ய? சர்க்காரு இப்படி இருக்கு. சம்சாரித்தனமும் இப்படிக் கிடக்கு.”
அய்யா சுவரிடம் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். வெறித்த பார்வை. விரக்தியில் நொந்து கிடந்த மனசின் கசப்புக் கசிவு.
மல்லிகாவுக்கு ஒன்றும் ஓடவில்லை. அரவமில்லாமல் பள்ளிக்கூடம் போனாள். அவள் அவளாக இருக்க முடியவில்லை. இனம் தெரியாத பயப்படபடப்பு. திகிலும் கிலியுமாக மனசைத் தின்று தீர்த்தன.
4
திங்கட்கிழமை. பள்ளிக்கூடம் முடிய மணி ஐந்தரையாயிற்று. இவளுக்கு வீட்டுக்குப் போகவே மனசில்லை. கால்கள் பின்னித் தயங்கின. உள்ளுக்குள் நடுக்கம். கண்ணோரங்களில் நீர்த்துளி.
பகலில் சர்புர்ரென்று வந்த கார்கள். ஜீப். பள்ளி வழியாக நடந்து போன சூட்டு போட்ட ஆபிஸர்கள், அமீனா. பேரேடுகளோடு உள்ளூர்ச் செக்ரட்டரி. பின்னால் துப்பாக்கிகளோடு நாலு போலீஸ்.
பள்ளிக்கூடத்திற்குள்ளும் கசகசப்பு. பீதியும் திகிலுமான கிசுகிசுப்பு. வாத்திமார்கள் கூட பாடம் நடத்த மனசில்லா மல், தெருவைத் தெருவைப் பார்த்தனர். அவர்கள் முகங்களிலும் இழவுக் களை.
மழையில் நனைந்த கோழிக்குஞ்சாக மனசு நடுங்க… பதறிப்பதறி வீடு போனாள்.
வீடு கிழிபட்டுக் கிடந்தது. திண்ணையில் குத்துக் கால் வைத்து உட்கார்ந்திருந்த அய்யா. அழப் போவதைப் போன்ற முகம். கண்ணெல்லாம் ரத்தப் பரவல். உள்ளே அம்மா அழுது புலம்புகிற சத்தம்.
மல்லிகாவுக்குள் பூரான் ஊர்கிற உணர்வு. கால்கள் நிலையற்று உதறுகிற பதைப்புணர்வு.
வீட்டு முற்றத்தில், தான்ய மணிச் சிதறல். பண்ட பாத்திரங்களை போட்டெடுத்த அடையாளம். என்னமோ தெரியவில்லை. அவளுக்கும் அழுகை அழுகையாக வந்தது.
வீட்டுக்குள் பைக்கட்டைப் போட்டாள். வழக்கம் போல தண்ணீர் குடிக்கப் போனாள். தண்ணீர்ச் சாலில் சுரீரிடுகிற வெறுமை.
செப்புப்பானையை காணோம். வீட்டுக்குள் கிடந்த நாலு தான்ய மூட்டைகளைக் காணோம். கிடந்த அடையாளம் மட்டும். ரேடியோவைக் காணோம். சைக்கிளைக் காணோம்.
வீடு முழுக்க நிறைய காணோம்கள்.
கேள்வியும் திகிலுமாக அம்மாவைப் பார்த்தாள். அரண்டு போயிருந்த இவளைப் பார்த்ததும், கோவென்று வெடித்துக் கதறி, இவளை ஆவி சேர்த்துக் கட்டிக் கொண்டு அழுதாள்.
“நம்ம குடும்பத்துலே இடிவந்து விழுந்துருச்சே. ஊர் சிரிக்கும் நிலையாச்சே… உஸ்ஸுன்னு உக்காராம ஓடிஓடி ஒழைச்சதுக்கு இதுதான் பலனா? ஐயய்யோ… நாம உசுர் வைச்சு இருக்கணுமா?”
அம்மாவின் கதறலுக்குள் சிக்கிப்போய்… மன செல்லாம் கருகிக் போக… மல்லிகாவும் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்து விட்டாள்.
அப்புறம் –
சனி, ஞாயிறு வந்தது. மல்லிகாவுக்கு என்ன இழவோ… புஞ்சைக்குப் போகத் தோன்றவேயில்லை.
புஞ்சை வேப்பங்காயாயிற்று.
– செம்மலர், அக்டோபர் 1994.
– விரல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1995, கங்கை புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
