பிழைப்பு
புரோக்கர் அய்யாதுரை ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை திலகா கைகளில் திணித்தான். அக்கம்பக்கம் உஷாராகப் பார்த்துக் கொண்டு, சட்டென ஜாக்கெட்டுக் குள் பணத்தைப் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
”பார்ட்டி ரெடி பண்ணிட்டேன். நாளைக்கு வந்துடு!” & அய்யாதுரை சுருக்கமாகச் சொன்னான். மற்றதை திலகா அறிவாள்.
”அண்ணே, ஆளு எந்த ஊரு?
”யாராயிருந்தா உனக்கென்ன? ரெண்டு, மூணு மணி நேரம் இருக்கப் போற. நல்லா மேக்கப் பண்ணிட்டு வந்துடு. எல்லாம் முடிஞ்சதும் மீதியை செட்டில் பண்றேன்!”
திலகாவுக்கு 30 வயது. ஆனால், தெரியாது. ஏதேதோ காரணங்களால் திருமணம் கைகூடாமலேயே போய்விட்டது. அதற்குப் பழியாக இப்போதெல் லாம் கிட்டத்தட்ட அவள் நித்தியகல்யாணிதான். திலகா இப்படிச் சம்பாதிப்பது அம்மாவுக்கும் தெரியும். என்ன செய்ய? வறுமை. வெளியே தெரிஞ்சா கேவலம்தான். ஒருமுறை பத்திரிகையில் போட்டோகூட வந்தது. நல்லவேளையாக திலகா தலையைக் குனிந்துகொண்டு இருந்ததால் அடையாளம் தெரியவில்லை.
அய்யாதுரை அந்த ஆளைக் காட்டினான். அவன் கிராமத்தான் போல இருந்தான். இருவரையும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு, தானும் முன் ஸீட்டில் தொற்றிக்கொண்டான் அய்யாதுரை. ஆட்டோ, மண்டப வாசலில் நின்றது. கட்சித் தலைவர் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். அவர் பிறந்த நாளை முன்னிட்டு நூறு ஜோடிகளுக்கு இலவசத் திருமணம்.
நூறு உண்மையான ஜோடிகளுக்கு எங்கே போவது? திலகா போன்றவர்களால்தான் அய்யா துரைக்குப் பிழைப்பு ஓடுகிறது!
– 30th ஏப்ரல் 2008