கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 18, 2025
பார்வையிட்டோர்: 215 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்று இவனது பிறந்த நாள். 

“நீர் கிறிஸ்மஸ் பேபியா? யூ ஆர் றியலி லக்கி போய்” என்று எல்லோருமே இவனைப் பார்த்துச் சொல்வார்கள். இவனுக்குச் சற்று பெருமையாகத் தான் இருக்கும். 

வெள்ளை ‘பாண்ட்,’ வெளுத்த ‘சேட்,’ சவரமிடப்பட்ட சுத்த முகம். இந்த 25 வயதிலேயும் ஒரு கல்லுாரி மாணவனைப் போலவே கம்பீரத்துடன் இவன் காட்சியளித்தான். 

இன்று நத்தார் தினம். ஆனாலும், இன்றும் காரியாலயம் செல்ல வேண்டியதாக இவனது உத்தியோக அமைப்பு. ‘சீ . . .இண்டைக்கு மெட்னி ஷோ போனனெண்டால் ஒரு கலக்குக் கலக்கலாந்தான்.’ அதற்கு இவனுக்கு கொடுத்து வைக்கவில்லை. சுவர்க் கண்ணாடியில் சிகையலங்காரத்தை இறுதித் தடவையாகச் சரி செய்தவாறே ‘றாம் மேற்’றிடம் விடை பெற்றவாறே படியிறங்கித் தெருவுக்கு வருகிறான். 

“நம்பர் செவண்காரர் ‘செக்ஸி’லை கொஞ்சம் பலவீன மானவர்களாக இருப்பார்களாம்”இவனது நண்பன் ஒருவன் சில நாட்களுக்கு முன்னதாக இவனுக்குச் சொன்னான். ‘அதைப் பற்றி எல்லாம் மச்சான் எனக்கொண்டுந் தெரியாது. ஆனால், அடியேன் அதிலை கொஞ்சம் ‘வீக்’கானவன் அவ்வளவுதான்.” என்று இவன் பதில் சொன்னான். 

‘செக்ஸ்’ என்பது மிகவும் புனிதமானது. அது வாழ்க்கையின் ஓர் அங்கம். அதை உரிய வயதிலேயே அறிவுப்பூர்வமாக அனுபவிக்க வேண்டும். கல்யாணத்தை செய்ய வேண்டிய வயதிலேயே முடிக்க வேண்டும். காலந்தாழ்த்தினால் அதிலே சுவை இருக்காது. இப்படியாக ஒரு துணுக்கை அண்மையில் ஏதோ ஒரு சஞ்சிகையில் படித்த போது, இவனுக்குச் சிரிப்பாக இருந்தது. 

இளமைக்கு வடிகால்களாக எத்தனையோ வழிமுறைகள் இருக்கும் போது, இந்த 25 வயதுகளில் கல்யாணத்தை முடித்து மாரடிக்க இவன் தயாராக இல்லை. 

முச்சந்தியைத் தாண்டி இப்போ இவன் காலி வீதிக்கு வந்து விட்டான். வழமைக்கு மாறாக வீதியில் சன நடமாட்டம் சற்றுக் குறைவாகவே இருந்தது. எந்தப் பெண்களையுமே காணவில்லை. ‘என் அதிர்ஷ்டம் இன்று அவ்வளவு தான். சந்தி வரையாவது நடந்து பார்ப்போமே. ஏதாவது சந்திக்குதா எண்டு. அங்கலாய்ப்பில் வெள்ளவத்தை சந்திப் பக்கமாக நடையைக் கட்ட ஆரம்பித்தான். 

நடந்து செல்லும் போதே இவனைத் தாண்டி சில மினிபஸ்கள் ஆறுதலாக சென்று கொண்டிருந்தன. சகல பஸ்களுமே ஆட்கள் இல்லாது! ஆரம்ப காலங்களில் ஐதான பஸ்களில் ஏறி கோணர் சீற்றில் அமர்ந்து ஊருலகம் பார்த்துப் போகும் பழக்கம் இவனிடம் இருந்திருந்தாலும் இப்போதெல்லாம் நெருக்கடியாக வரும் பஸ்களையே இவன் விரும்புகிறான். 

“மச்சான், நெருக்கமாக, சன நெரிசலோடை வாற பஸ்சுகளிலை ஏறினால்தான் இதம் பேசும். உரசல் சுகங்களும், பஸ் ‘பிரேக்’ போடும் இடங்களில் கிடைக்கும் உராய்வுகளும் அப்பப்பா… உண்மையில் குறைந்த செலவிலேயே சொர்க்கத்தை காணலாம்” என அண்மையில் நண்பன் ஒருவன் அளித்த ‘அட்வைஸ்’களின் விளைவே. .ஐதாக வரும் பஸ்களையெல்லாம் கோட்டை விடுத்து, நெரிசலாக வருகிற பஸ்களுக்காக மணிக்கணக்காக என்றாலும் பரவாயில்லை, இவன் காவல் நிற்க ஆரம்பித்தான். 

பெண்களில் ஒரு மர்மம், ஒரு கவர்ச்சி, ஒரு இனிமை இருப்பதாக, எங்கேயோ இவன் படித்திருக்கிறான். மர்மம் இருக்கிறதோ என்னவோ, இவனைப் பொறுத்தவரை பெண்களில் கவர்ச்சி, இனிமை இவைகளே அதிகம் இருப்பதாக உணர்ந்தான். 

ஆனாலும் கூடப் பணிபுரியும் பெண்களில் இவன் ஒரு மதிப்பு வைத்தே பழகி வந்தான். சமயங்களில் அவர்களிடமும் தனது ரசனையை காட்ட தவறுவதில்லை. இப்படித்தான் … அண்மையில் சக ‘ஸ்டாப்பாக’ பணிபுரியும் ஒருத்தியிடம் “மிஸ் உங்களை இந்த ‘ஸ்கேட், பிளவுசோடை,’ பார்க்கைக்குள்ளை நக்மா மாதிரி இருக்கு” என்று கூறி முறையாக வாங்கிக் கட்டிக் கொண்டான். அதன் பிறகு எந்தப் பெண்களிடமுமே சற்று நிதானமாகவே பேசப் பழகக் கற்றுக்கொண்டான். 

நெல்சன் பிளேசையுந் தாண்டி வெள்ளவத்தை பஸ் நிலையத்தடிக்கு வந்தவன், காலை ஆகாரத்தை அருகில் இருந்த கடையில் முடித்துக் கொண்டு அன்றைய பத்திரிகை ஒன்றையும் வாங்கியவாறே மீண்டும் பஸ் நிலையத்தை வந்தடைந்தான். 

கடந்து செல்லும் சகல பஸ்களுமே ஐதாகவே சென்று கொண்டிருந்தன. பள்ளிக் கூட ‘கிறவுட்’ வேறில்லாதது, இவனுக்கு மேலும் எரிச்சலையூட்டியது. 

நெருக்கமான பஸ்களில் மட்டுமல்லாது ஐதாக, சனங்களில்லாது வரும் பஸ்களிலும் சொர்க்கம் காணலாம் என இவனது ‘துரோணாச்சாரியார்’ சொல்லிக் கொடுத்த வழிமுறைகளும் இப்போது இவனது நினைவுக்கு வந்து மீண்டன. இன்று அதை அரங்கேற்றிப் பார்ப்போம் என்று அவாவுற்றவனாக, வந்த பஸ்சில் ஏறி நான்கு ரூபா ரிக்கட் எடுத்தவாறே பஸ்ஸை ஒருமுறை கண்களால் வலம் வந்தான். 

இரண்டாவது ‘சீற்’றில் ஓர் இளம் பெண் தனியாக இருந்தாள். வேகமாக முன்னேறி அருகில் சென்று அமர்ந்து கொண்டான். இவன் இருந்தது தான் தாமதம், அப் பெண் எழுந்து ‘பெல்’ அடித்து பஸ் நின்றதும் இறங்கிச் சென்றாள். 

‘சீ. . . இண்டைக்கு ஆற்றை முகத்திலை முழிச்சனோ?’ பொல்லாத வயிற்றெரிச்சலாக இருந்தது இவனுக்கு. வெளியே பார்வையைப் படர விட்டான். வெள்ளவத்தைப் பாலத்தால் பஸ் சென்று கொண்டிருந்தது. 

அடுத்த பஸ் நிலையத்தில் ஏறிய ஒரு முதியவர் கையில் குடையுடனும், வாயில் சுருட்டுடனுமாக இவனுக்கு அருகில் காலியாக இருந்த ‘சீற்றில்’ வந்தமர்ந்து கொண்டார். கிழவனின் வலது கையில் நான்கு ரூபா ரிக்கட் ஒன்று நீண்டு கிடந்தது. 

இவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. ‘இனி ஆமர் வீதி மட்டும் இதே கதிதானா?’ பின்னால் திரும்பிப் பார்த்தான். நான்கைந்து ‘சீற்’ தள்ளி ஒரு ‘சீற்’ காலியாக இருந்தது. சுருட்டுப் புகைக்கு சகிக்காதவனைப் போலப் பாசாங்கு செய்தவாறே… அந்த ‘சீற்’றைவிடுத்து பின் ‘சீற்’றை வந்தடைந்தான். பிள்ளையார் கோவிலைத் தாண்டி பஸ் வேகமாக முன்னேறுகிறது. 

‘இண்டைக்குப் பிறந்த நாளும் அதுவுமா அம்சமா ஒண்டையும் காணேல்லையே?’ புலம்பியவனாக பத்திரிகை பார்ப்பதற்கும் முடியாதவனாக மூன்று நான்கு பஸ் நிலையங்களைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தான். 

பம்பலப்பிட்டிச் சந்தியில் பஸ் வந்து நின்றது. சிலர் இறங்கினார்கள். பலர் ஏறினார்கள். இவன் எதிலும் லயிக்காதவனைப் போல ‘மார்க்கட்’ பக்கமாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென இவனது மடியில் ஒரு சேலைத் தலைப்பு வந்து விழுந்தது. திடுக்குற்றவனாக திரும்பிப் பார்க்கிறான். ஒரு நடுத்தர வயதுப்பெண் இவன் அருகில் வந்தமர்ந்து கொண்டாள். 

ஓரக்கண்ணால் ஒரு கணம் பார்த்துக் கொண்டான். இவனை விட ஒரு எட்டுப் பத்து வயதாவது முதியவளாக இருக்கலாம். ‘ஆபத்துக்குப் பாவமில்லை.’ புதிய குலுக்கலுடன் பஸ் பௌத்தலோக மாவத்தை வழியாகத் திரும்பி முன்னேறுகிறது. 

தனது மடியில் வைத்திருந்த பத்திரிகையை எடுத்து விரித்தான். பத்திரிகையை விரிக்கும் போது பக்கத்துப் பெண்ணில் ஏற்பட்ட உரசலை தற்செயலானது என்பதைப் போலக் காட்டிக் கொண்டான். ஒரு பக்கத்திலேயே நில்லாது பத்திரிகையின் பக்கம் பக்கமாக. பதினாறு பக்கங்களையும் புரட்டிப் பார்த்தான். பஸ் பல்கலைக்கழகப் பக்கமாக சென்று கொண்டிருந்தது. 

பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தது போதும் என்ற திருப்திபோல மடித்து மீண்டும் மடியில் வைத்துக் கொண்டான். ‘கிளாஸ் ஹவுஸ்’ நிலையத்தில் இவனது முன் ‘சீற்’றில் வெற்றிடம் ஏற்பட்டது. விரும்பி இருந்தால் இவனது பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் அதில் சென்று இருந்திருக்கலாம். ஆனால், அவள் பக்கத்திலேயே இன்னமும் உட்கார்ந்திருந்தாள். 

பஸ் திரும்பும் போது இவனும் மிகையாகவே திரும்பிக் கொண்டான். இதமாகத் தான் இருந்தது. இந்த வழிமுறைகளை சொல்லித் தந்த ‘குருநாதரை’ மனதுள் பல முறையும் வாழ்த்திக் கொண்டான். 

பஸ்ஸில் பிரயாணஞ் செய்யும் ஆண்கள் தங்களைச் சடப்பொருளாக நினைத்துக் கொண்டு பழகுகிறார்கள் என்று சில வருடங்களுக்கு முன்னதாக ஒரு பெண் எழுத்தாளர் போர்க்கொடி தாக்கியதை இப்போ இவன் எண்ணிக் கொள்கிறான். ‘எல்லாப் பெண்களுக்குமே அது பொருத்தமானதாக இல்லை. இதற்கு உடந்தையானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.’ 

வெயில் சூடு பிடிக்க ஆரம்பித்தது. பஸ் சீறிக்கொண்டு செல்கிறது. ஏதாவது நாய், பூனை றோட்டுக்குக் குறுக்கே ஓடாதா என இவன் அங்கலாய்த்துக் கொண்டான். இவன் பிரார்த்தனை பலித்ததைப் போல கெம்பிக் கொண்டு ஓடி வந்த குதிரை ஒன்றினால் விகாரமகா தேவி பூங்கா முடக்கில் மிகையான குலுக்கலுடன் பஸ் ‘பிரேக்’ போட்டு நின்றது. இவன் சரிந்ததில் அந்தப் பெண்ணின் முந்தானை இவனது மடியில் வந்து விழுந்தது. 

பஸ் சாரதியைத் திட்டுந் தோரணையில் நிமிர்ந்து இருந்தவாறே இவன் வெளியே பார்வையை திருப்பினான். நகரசபை மண்டபம் கம்பீரமாக நிமிர்ந்து நின்றது. 

மீண்டும் பஸ் பயணத்தைத் தொடர்கிறது. ஓரக்கண்ணால் அருகில் இருந்த பெண்ணைப் பார்த்துக் கொள்கிறான். 

மஞ்சள் பூசிய மலர்ந்த முகம், உச்சிவகிடெடுத்து பின்னிவிட்ட கூந்தல், நெற்றியிலே குங்குமப் பொட்டு, கழுத்திலே தங்கச் சங்கிலி. நிச்சயம் இவள் ஒரு தமிழ்ப் பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். 

‘பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் என்ன? என்னையும் ஒரு தமிழனாக இவள் இனங்கண்டிருப்பாள். கையில் இருந்த பத்திரிகை வேறு நான் ஒரு தமிழ்ப் பிரியன் என்பதைப் பறைசாற்றியிருக்கும் என்று எண்ணியவனாக சுற்றும் முற்றும் ஓர் தடவை பார்த்துக் கொண்டான். 

சலாக்கா, யூனியன் பிளேஸ் யாவையுந் தாண்டி பஸ் இப்போ டார்லி றோட்டை வந்தடைந்து விட்டது. இனி அதிக ‘திருப்பங்கள்’ ஏதும் இருக்காது. கதைக்க நினைத்தவனாக திரும்பிய போது, அந்தப் பெண் நடத்துநரை அழைத்து தனது மீதிப் பணத்தை வாங்கிக் கொண்டாள். அவள் சரளமாக சிங்களத்தில் உரையாடியது இவனுக்குச் சங்கடமாக இருந்தது. 

மக்கலம் வீதி சந்தியால் திரும்பி பஸ் மருதானையை நோக்கிக் கொண்டிருந்தது. நியூ ஒலிம்பியாவுக்கு முன்னால் பஸ் ஊஞ்சல் போல் ஆடி ஆடிச் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸுக்கு ஏற்றபடி இவனும் ஆடிக் கொண்டிருந்தான். 

சந்தியை அண்மித்து பஸ் பஞ்சிகாவத்தைப் பக்கமாக திரும்ப எத்தனித்த போது, அந்தப் பெண் சேலையைச் சரி செய்தவாறே எழும்ப ஆயத்தமானாள். “தம்பி” என்று ஒரு இனிய குரல். இவன் ஆடிப்போய் விட்டான். யார் அழைத்தது? அருகில் இருந்து வந்த அதே பெண் தான். இவன் திரும்பிப் பார்க்கிறான். 

“தம்பி. நானும் பம்பலப்பிட்டியிலையிருந்து உம்மடை விளையாட்டுக்களை பார்த்துக் கொண்டு தான் வாறன். உமக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேணு மெண்டுதான் இவ்வளவும் பக்கத்திலேயே இருந்து கொண்டு வந்தனான். நினைச்சிருந்தால் ரவுண்ஹோலடியிலேயே உமக்கு என்ரை வந்தனான்.நினைச்சிருந்தால் .. செருப்பாலை தந்திருப்பன். ஆனால். உம்மடை வயதிலை எனக்கும் ஒரு மகன் இருக்கிறதாலை பேசாமல் வந்தனான்…” இவனுக்கு மேற்கொண்டு எதுவுமே கேட்காததைப் போன்ற பிரமை. 

அந்தப் பெண் இறங்க, பஸ் மீண்டும் புறப்பட்டு…டவர்ஹோலை தாண்டிச் சென்று கொண்டிருந்த போது தான் இவனுக்கு நினைவு மீண்டது. 

பஸ் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இப்போ குலுக்கல்கள் இல்லை. திடீர் ‘பிரேக்’குகள் இல்லை. திருப்பங்களும் இல்லை. நேரான பாதையில் வலு நிதானமாகவே ஆமர் வீதியை நோக்கி பஸ் சென்று கொண்டிருக்கிறது. 

– வீரகேசரி வாரவெளியீடு.

– புதிய பயணம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: வைகாசி 1996, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *