பிரேத ஊர்வலம்




(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பகையரசன் கோட்டை மதிலைப் போல உயர்ந்து எழுந்து நிற்கும் மலைகள். மதில்கள் போல என்ன, மதில் களே தான்! வானத்தைத் தொட்டு நிற்கும் மலைகளை அர ணாக்கி இந்த நாட்டில் அந்நியர் ஆட்சியை இறுதிவரை எதிர்த்து நின்ற சுதந்திர பூமியல்லவா மலைநாடு…
சோம்பல் முறித்தவாறே கட்டிலில் படுத்த வண்ணம் ஜன்னல் வழியாக, வானமளந்து எழுந்து நிற்கும் மலை களைக் கண்டவுடன் எப்போதோ மூளையில் படிந்துவிட்ட உண்மைகளும், நெஞ்சில் நிலைத்துவிட்ட நிகழ்ச்சிகளும் தொடுப்புகளாகிக் கற்பனை ஓட்டத்தை நீட்டுவிக்கின்றன.
“என்னா வந்திரிச்சி… சனியன் புடிச்ச பசங்க ஒருத்த னைக் கூடக் காணோம்” என்று கோபத்தோடு வீட்டுக்குள் நுழைந்தார் என் தந்தை. கட்டிலிலேயே இன்னும் நான்படுத் திருப்பதைக் கண்டதும் ‘”என்ன தம்பி கூதலடிக்குதா? இப் பவே இப்படீன்னா மார்கழி மாதம் பொறந்தா தாங்க முடி யாதே! எங்களுக்கு இதெல்லாம் பழகிப் போயிருச்சி” என்று கூறிக் கொண்டே தலையில் குளிரை மறைப்பதற்காகக் காதைச் சுற்றிக் கட்டியிருந்த மப்ளரைக் கழற்றி எறிந்தார். கோட்டைக் கழற்றி நாற்காலி மீது போட்டுவிட்டு “என்ன மீனாட்சி! முகம் கழுவலாமா” என்று கேட்டார்.
‘வெந்நீர் தயாராயிருக்கு’ சமையலறையிலிருந்து என் அன்னையின் குரல் கேட்டது.
“தம்பி எழுந்திருக்கலியா. அப்பா காப்பி கொண்டு வரட்டுமா…”
“இதோ அம்மா! எழுந்து விட்டேன்…” என்று சொல்லிவிட்டேனே தவிர எழுந்திருப்பதற்கு என்னவோ சோம்பலாகத்தானிருந்தது. வெளியிலடித்துக் கொண்டிருந்த குளிர்காற்று வேறு இன்னும் படுத்திருக்கவே என்னைத் தூண்டியது.
காப்பி குடித்தால்தான் எழுந்திருக்க முடியும் போலத் தோன்றியது. நகரத்தில் தங்கிக் கல்லூரியில் படித்த நாள் முதலாய் ஏற்பட்ட கெட்ட பழக்கங்களில் இதுவுமொன்று. தன் ஐம்பதாவது வயதிலும் விடிய இந்தக் குளிரில் பிரட்டுக் களத்துக்குச் சென்று வருகிறாரே என் தந்தை… நினைக் கவே எனக்கு வெட்கமாகத்தானிருந்தது.
“இந்தாப்பா காப்பி!” போர்வைக்கு வெளியே கையை மாத்திரம் நீட்டி அம்மாவிடமிருந்து காப்பியை வாங்கிக் கொள்கிறேன்.
”எங்கம்மா, அப்பா வந்தாரு, காணமே”
“வெளியில் கதைத்துக் கொண்டிருக்கிறார்.”
“யாரோடு இந்த நேரத்தில்? வரும்போதே யாரையோ வாரிக்கட்டிக் கொண்டு வந்தாரே.”
“அது தான் வினையத்தான் தலைவருக்கிட்ட.”
“வினையத்தானா? விஷயம் என்னாவாம்…”
“நேத்து ராத்திரி யாரோ தோட்டத்தில் செத்துப் போயிட்டாங்களாம். அதனால், ஆளுங்கெல்லாம் இன்னைக்கி வேலைக்குப் போறதில்லேன்னு தீர்மானிச்சிட்டாங்களாம்…” என் தாயாரின் குரலையும் அடக்கிக் கொண்டு கேட்டது வெளியிலிருந்து வந்த என் தந்தையின் குரல்.
குளிரையும் பொருட்படுத்தாது, சற்று நிமிர்ந்து எழுந்து உட்கார்ந்து காதையும் தீட்டி வைத்துக் கொள்கிறேன்.
“நீங்க செய்யிறது ஒங்களுக்கே நல்லாயிருக்காடா… ஏண்டா! ஒங்களுக்கும் புத்தி இப்படி வீணாப் போவுது…” ஆக்கிரோஷத்தோடு என் தந்தை பேசிக் கொண்டிருக்கிறார்.
“நீங்க என்னாத்த சொல்லுங்க அய்யா; எனக்கென்னவோ சொல்ல வேண்டியதைச் சொல்லிப்புட்டேன் அதுக்கப் புறம் வருத்தப்பட்டுக்காதீங்க.”
வினையத்தான் குரலை எனக்கு இன்றும் இனம் கண்டு. கொள்ள முடிகிறது. ஆறு வருடங்களுக்கு முன்பு, சின்ன வயதில் தோட்டப் பள்ளியில் படிக்கும்போது கேட்டது. அப் பொழுதும் இப்படித்தான். அடித்தொண்டையில் காட்டுக் கூச்சல் போடுவான். மெதுவாய்ப் பேசவே தெரியாது. “தோட்டக்காட்டுப் பசங்களோடு இப்படித்தான். ஒரே கரச்சலாயிருக்குது. அந்த வினையத்தான் எப்ப தொலை கிறானோ, அப்பத்தான் தோட்டம் உருப்படும். முள்ளுக் குத்துக் காட்டில் தன்னை எதிர்த்துப் பேசி விட்டானென்ற ஆத்திரத்தில் அம்மாவிடம் எப்போதோ ஒருநாள் என் தந்தை. இப்படிச் சொன்னதாக நினைவு.
”அடே இப்படியெல்லாம் நீ செய்யுறது ஒனக்கு நல்லா இல்ல. ஓம் மேல தொர இப்பவே ஒரே காட்டமா இருக்கு றார். நெனச்சதுக்கெல்லாம் பெட்டிஷன் போடுற உங்க புத்தியும், ஸ்ட்ரைக் பண்ணுற சுபாவமும் என்னைக்கு ஒங்களை விட்டுத் தொலையுதோ, அன்னைக்குத்தாண்டா நீங்கெல்லாம் உருப்படப் போறீங்க. அன்ன மட்டும் இப்படி காங்கிரஸ், கட்சி அப்படி இப்படீன்னு நாசமாத்தான் போகப் போறீங்க.”
”ஏய்யா, காலையிலயே இப்படி சத்தம் போடுறீங்க. சொல்லவேண்டிய எடத்தில சொன்னாப் போவுது… தொரைச்கு என்ன கொம்பா மொளச்சிருக்கு…”
வினையத்தான் குரலில் ஏற்படும் மாற்றம் என்னை வருத்துகிறது! ”சே! … நம் தொழிலாளர் இனம் கெட்ட தற்கே இதுதான் முதல் காரணம், விஷயம் சரியோ விழையோ பிரச்சனையை அணுகவேண்டிய முறையில் அணுக வேண்டும். அமைதியாகவும், பணிவாகவும் பேசி விஷயத்தை முடித்துக் கொள்கின்ற நளினம் கொஞ்சங்கூட இல்லை.!’
பேசுகிற முறை தெரியாது எதற்கெடுத்தாலும் பெட்டிஷன் போட்டாத்தான் சரியா வருவீங்கண்ணு சொல்லுவதும், சொல்லுகிற எடத்தில சொல்லிக்கிறேன்னு சவால் விடுவதும், தெரிந்த விஷயத்தை அரைகுறையாய்ப் போட்டுக் குழப்புவதும்’… தொழிலாளர்களின் நியாயமான பல கோரிக்கைகள் மறுக்கப்படுவதன் காரணம் கூட இதுதான்!
அந்தப் பாமர மக்களுக்குப் பரிந்து பேசுகிற கட்சிகளும் சங்கங்களும் முதலில் செய்ய வேண்டியது இந்தக் குறையைப் போக்குவதுதான்.
… சொல்ல வேண்டிய எடத்தில சொல்லுறானாமே, பார்த்துக்கிறேன்…” முணுமுணுத்தவாறே அறைக்குள் நுழைகிறார் என் தந்தை. வினையத்தான் போய் விட்டான் போலிருக்கிறது.
“என்னப்பா, என்னாங்க விஷயம்?” போர்வை இல்லாமலே குளிரைத் தாங்க முயன்றபடி கட்டிலிலிருந்து எழுந்தவாறே கேட்கிறேன்.
”அவன் தாப்பா, வினையத்தான். நேத்து ராத்திரி முனியாண்டி செத்துப் போயிட்டானாம்.”
”எந்த முனியரண்டி, ஏனாம்’ இடையில் குறுக்கிடு கிறேன், நான். “தொரபெரட்டு முனியாண்டி. கொஞ்ச நாட்களாக சொகமில்லாம இருந்தான் இல்லையா… அந்தப் பயல் செத்தா இவன்களுக்கு என்ன? பேசாம வேலைக்கு வரவேண்டியதுதான்”. சுருக்கென்றது எனக்கு.
எனக்கென்னவோ அவரின் பேச்சு சரியாகப் படவில்லை. உழைத்துழைத்து ஓடாகிப் போன தொழிலாழிப் பெருமகன் ஒருவனுக்கு வாழும் காலத்தில் சேர்ந்து ஒன்றாக உறவாடாத குறைக்காக, செத்த பின்னராவது ஒரு வேலைக்கும் போகாமலிருந்து மரியாதை செலுத்துவது அவசியமல்லவா?
இந்த நெலமையில இந்தப் பசங்க வேலைக்குப் போகாம இருப்பது நல்லா இருக்காங்குறன்…”
வருடக் கணக்காக மலைநாட்டுத் தேயிலைத் தோட்டத் தில் மாடாக உழைத்து உழைப்பைத் தன்னுயிராகவும், தேயிலையை உயிர் வளர்க்கும் செவ்வணுவாகவும், கருதி வந்திருக்கும் காரணத்தால் அவர் அப்படிப் பேசுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை.
“அப்பா நீங்கள் சொல்லுவது உண்மைதான். துரைக் கும், இந்தக் தோட்டத்துச் சொந்தக்காரனுக்கும் வரவேண் டிய எண்ணம் உங்களுக்கு உதித்திருப்பதுதான் காரணம், தோட்ட வளத்தில் தீங்கள் கொண்டிருக்கும் ஈடுபாடுதான், உங்கள் கண்ணோட்டத்தில் உங்கள் கருத்து சரிதான். ஆனால், தொழிலாளர் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஆகையினால் அவர்களது கண்ணோட்டத்திலும் இதை அணுகிப் பார்க்க வேண்டும்.”
நீ என்னப்பா சொல்லுற வெளங்கிருப்பலாதான் சொல்லேன் சற்றுத் தைரியத்தோடு.
“தொழிலாளர் செய்வது தவறு என்கிறீர்களா?…” என் தொனியிலிருந்தே என் கருத்தின் சார்பைப் புரிந்து கொண்ட என் தந்தை ஒரே அடியாக குதித்தார். “பின்ன என்னாவாம்! பங்குனி மாசமா அதுவும் கொழுந்தெல்லாம் சடைசடையா வளந்து கெடக்கு. கொழுந்து காட்டுல்ல வேற ரவுணெல்லாம் பிந்திக் கெடக்கு… நேத்தோடு முடிஞ்சிருக்க வேண்டிய கவ்வாத்துக்காடு இன்னும் இழுத்துக் கிட்டுக் கெடக்கு. தொழிலாளர்களுக்குப் பரிந்து பேச ஆரம்பித்து விடுகிறேன். வாக்கிழந்த காரணத்தால் வாயிழந்த தொழிலாளர்களுக்குச் சம்பந்தமும், வர்க்கத் தொடர்புமில்லாத யாராரோ வக்காளத்து வாங்க ஆரம்பித்து விட்ட இந்நாட்களில், அந்த உழைப்பாள வர்க்கத்தின் மத்தியிலேயே பிறந்து வளர்ந்த நான் பேசுவது தவறாகி விடுமா?”
”அப்பா, இந்தத் தோட்டத்துத் தொழிலாளர்களைப் பற்றி உங்களுடைய தனிப்பட்ட அபிப்பிராயம் என்ன?” என் கருத்துக்கு அவரை இணங்க வைத்துவிட வேண்டும் என்ற உறுத்தலில் வார்த்தைகளை அளந்து பேசுகிறேன்.
“அப்பாவிப் பசங்க. ஆனா ராங்கித்தனமும் இல்லாமல் இல்ல. முந்தி எங்க காலத்தில் இந்தியாவில இருந்து வர்றப்போ கோச்சைவிட்டு இறங்கினதுதான் அதிக்கப்புறம் எங்க காலமெல்லாம் இந்தத் தோட்டமே கதிண்ணுகெடக் கிறம். இப்ப என்னாடான்னா வாராவாரம பயஸ்கோப் பார்க்கிறதுக்கு பயங்க காருஎடுத்துக்கிட்டுல்ல போறாங்க.”
எனக்குப்பிடி கிடைத்து விடுகிறது. “அப்படிச் சொல்லுங்கள். உங்கள் காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் காலம் மாறுகிறது. இது எங்களுடைச காலம் அதற்கேற்ப நீங்களும் மாற வேண்டும்.”
“மாறாமலா இருக்கோம்… தனித்தனியாகப் பார்க்கும் போது நாங்க மாறுனது தெரியாம இருக்கலாம். ஆனால் கூட்டமாக ஒண்ணு சேர்ந்த எங்க கணக்கப்பிள்ளை சம்மேளத்தில இந்த மாற்றத்தை நல்லாப் பளிச்சிண்ணு பார்கலாம்!”
“தோட்டத்தில் உழைக்கிற இந்தப் பரிதாபத்துக்குரிய மக்களின் உழைப்பினால்தான் இந்த நாடே உயிர் வாழ்கிறது. அதனால் இவர்களின் பிரச்சனைகளை அனுதாபத்தோடும், மனிதாபிமானத்தோடும், அணுக வேண்டும்.”
“நீ என்னாப்பா சம்பந்தம் இல்லாமல் பேசிக்கிட்டுப் போற..”
“கொஞ்சம் பொறுங்கப்பா விஷயத்துக்கு வந்துட்டேன். எதோ நாலு எழுத்து தெரிந்தவர்களென்ற காரணத்தினால் உங்கள் யூனியனில் உங்கள் பிரச்சினைகளெல்லாம் கவனிக்கப்படுகிறதேயல்லாமல், இந்த அப்பாவிப் பசங்கள்போல் ஒண்ணுந்தெரியமலிருந்தால் உங்கள் நிலைமையும் இப்படித்தான். சந்தாப்பணம் கட்டுவதோடும், தலைவரைக் கண்டவுடன் ஜே! போடுவதோடும் கடமை முடிந்துவிடுமென எண்ணியிருப்பீர்கள்.”
“ம்ம்….ம்…” போட்டுத் தலையை ஆட்டி ஆமோதிக்கிறார்.
“இந்தத் தொழிலாளர்களுடைய இன்றைய நிலைமை இதுதான். தலைவர் ஸ்தானத்தில் இருக்கின்ற ஒருவருக் காக, இன்றைக்கு ‘ஜே!’ என்று சொன்ன ஒருத்தருக்கு நாளைக்கே ‘ஒழிக!’ போட மறுக்க மாட்டார்கள். செம்மறி யாட்டு நிலைமையிலிருக்கிற இந்த மக்களுடைய நிலைமை திருந்திவரும் வரைக்கும்; இவர்களுடைய பிரச்சினைகளை வர்க்க ஆசாபாசங்களையும் உள்ளமொன்றிய ஈடுபாட்டோடு கவனிக்கும் சங்கங்கள் தோன்றும் வரைக்கும் உங்களைப் போன்ற நிலையிலுள்ளவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை உங்கள் ஸ்தானத்திலிருந்து பார்ப்பதோடு, தொழிலாளர் கண்ணோட்டத்திலும் கவனித்துத்தான் தீரவேண்டும் கடைசி யில் நாமெல்லோரும் பிடி சாம்பலாகத்தான் போகப் போறோம் என்கிற நினைவை மறக்காமல் இருக்கும் வரைக் கும் இது ஒன்றும் முடியாத செயலல்ல.”
கட்டிலில் போய் உட்கார்ந்து கொள்கிறார். தலை குனிந்தவண்ணம் சிறிது நேர யோசனை. இதுகாறும் நான் கூறியதையெல்லாம் இதுநாள் வரைதான் ஈடுகொடுத்து வந்திருக்கும் நிகழ்ச்சிகளோடு பின்னிப் பிணைத்துப் பார்க் கிறார் போலிருக்கிறது.
சமையலறையிலிருந்து எட்டிப் பார்க்கிற தாயாருக்கு கொஞ்சம் பொறுங்கம்மா’ என்று சைகை காட்டிவிட்டு அவர் சொல்லப்போகும் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
“லேசா சொல்லிப்புடலே தம்பி. ஆனா என்னைப்போல் ஒரு வேலை இருக்கும் போதுதான் அதன் கஷ்ட நஷ்டம் தெரிய வரும். இந்தப் பசங்களோட பிரச்சினைகளை இவுங்க எடத்தில் இருந்து கவனிச்சேனா, என் வேலைக்குத் துரை சீட்டுக் கிழிக்காமலிருக்க மாட்டான். இந்தப் பயங்களுக்கு என்னா? சங்கடிக்கிறதையும், கம்பளம் போடுவதையும் நினைவுல வச்சிக்கிட்டு வேலைக்கு வர்றாங்களே தவிர வேலைய ஒழுங்காச் செய்யணுமேங்கிற அக்கறை ஒரு பயலுக் காச்சும் இருக்கா? நாள் முழுதும் எங்களைப் போல ஒரு ஆளு இருந்து குத்திக்கிட்டு இருந்தாத்தான் வேல நடக்குது. இப்படி இருக்கையில் இவுங்க செய்யுறதைச் சரின்னு சொல் லிப்புட்டோம். பின்ன கேக்கவே வேண்டாம். இவுங்கல கையில புடிக்க முடியாது… “
இந்த இடத்தில் என் அன்னை குறுக்கிடுகிறாள்.
“காலையில் எந்திருச்சதும் மூஞ்சிக்கூட கழுவாம இது என்னா கதை வேண்டிக்கிடக்கு? தண்ணி ஆறப் போவுது, மூஞ்சை கழுவி சாப்பிட்டுட்டு பிறகு கதைக்கலாம்…”
”ஆமா தம்பி, முகத்தைக் கழுவுகிட்டு சாப்பிட்ட பிறகு பேசிக்கிடலாம். நானும் துரைக்கிட்ட போயி விஷயத்தை சொல்லிப்பிட்டு வரணும்”
அவர் எழுந்து குசினிப் பக்கம் போகிறார். செம்பில் வார்த்து வைத்திருந்த வெந்நீரை எடுத்துக் கொண்டு வெளி யில் போகிறேன்.
மணி ஒன்பதரையாகி விட்டது. பனி மூட்டம் மறைந்து விட்டது. கதிரவனின் ஒளி தேயிலைச் செடிகளின் மீது பட்டு அதன் பசுமைக்கு மெருகூட்டுகிறது. மங்கிய வெளிச்சத்தில் காலை பனி மூட்டத்தில் கண்ணுக்குத் தெளிவாக்கப்படாத தெல்லாம் இப்போது நன்றாகப் புலப்படுகின்றன.
உயரமான குன்றில் கட்டப்பட்டிருக்கும் பங்களாவாத லால் கதிரவனின் ஒளி ஜன்னல் வழியாக வந்து என் மேல் விழ ஏதுவாயிருக்கிறது. அதன் இளம் சூட்டில் இலயித்த வாறே, கீழே பள்ளத்தில் கட்டப்பட்டிருக்கும் லயங்களையும் மக்கள் நடமாட்டத்தையும் கவனிக்க முயல்கிறேன்.
கும்பலாகப் பத்துப்பதினைந்து லயங்கள் ஓரிடத்திலேயே காணப்படுகின்றன. பழைய மோஸ்தரில் கட்டப்பட்ட லயங் களைத் தவிர புதிய மாடலிலும், ஒன்றிரண்டு கட்டிவிட்டிருக் கிறார்கள். அவைகளிலிருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப்புற மாக அமைந்திருக்கும் புதிய லயனுக்கருகில்தான் ஆட்கள் கூட்டமாக நிற்பது தெரிகிறது. அந்த லயத்தில்தான் இறந்து விட்ட தாகச் சொல்லப்படும் முனியாண்டி என்கிற தொழி லாளியின் வீடு இருக்க வேண்டும்.
உயிரிருந்த நாட்களில் வேர்வையை நீராக்கி நிலத்துக்கு வளமூட்டிய ஜீவனொன்று, உயிரிழந்த பின்னர் உடலை எருவாக்கி நிலத்துக்கான வளசத்தாக மாறிவிடப் போகிற பரிணாமக் கலவை என் கண் முன்னே நடந்து கொண்டிருக் கிறது. அருகில் சென்று பார்க்க வேண்டுமென்ற நினைப்பு எழுகிறது. அடக்க நினைக்கிறேன். முடியவில்லை. தாயார் சமையலறையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். தந்தை வீடு திரும்புவதற்கு நேரமாகும்.
மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்து அந்த லயத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறேன்.
நான் வருவதைக் கவனித்துவிட்ட வினையத்தான் கூட்டத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு என்னை நோக்கி ஓடி வருகிறான்.
“எப்பங்க ஐயா வந்தீங்க. காலையில வந்தேன். காணோமுங்களே” மீண்டும் அடித்தொண்டைக் குரல் தான்.
”எப்படி, சுகமா இருக்கிறாயா” சம்பிரதாயத்துக்குக் கேட்டு வைத்தேன்.
“ஐயாவோட புண்ணியத்துல அதுக்குக் கொறைவு இல்லீங்க. நமக்கு இன்னும் படிப்பு முடியலீங்களா?”
“போன வருஷமே முடிந்துவிட்டதே! இப்போது அங்கேயே உபாத்தியாராயிருக்கிறேன். இப்ப லீவுதானே”
“நீங்க வேலை செய்யுறதைக் கேட்டது ரொம்ப சந் தோஷமா இருக்குங்க. அதுலேயும் இந்தத் தோட்டக் காட்டு வேலைக்கு வராம வேற வேலைக்குப் போயிட்டீங்க. மிக்க நல்லதாப் போச்சுங்க.”
மற்றவர்களின் வாயைக் கிளறிவிட்டு, அவர்களிட மிருந்து வெளிவருகின்ற சொற்களுக்கெல்லாம் புதிது புதி தாக அர்த்தம் பண்ணிக் கொண்டு மன நிறைவு காணுகிற சுபாவம் என்னுடையது.
”ஏம்பா! தோட்டத்து உத்தியோகம் சரியில்லையா. ஒரு மாதிரிப் பேசுகிறாயே. ஏன் அது கூடாதா?”
“கூடாதுதாங்க, நம்ம ஐயாவையே எடுத்துக்கங்க. அவரு மாதிரி தங்கமான மனசு உள்ளவரு கெடைப்பாங் களா? அப்படி இருந்தும் அவரோட நாங்க சண்டை போட் டுக்கிட்டுத்தான் இருக்கிறோம். அவரை எதித்திட்டுத்தா னிருக்கிறோம். தோட்டத்து வேலையே இப்படித்தாங்க, ஒங்களுக்கெல்லாம் லாயக்கில்லை.”
“எங்க அப்பாவுடைய குணம் மட்டும்தான் நல்லதா? உங்களிடத்தே யாருக்குமே நல்ல குணம் இல்லையா?”
“இல்லாம என்னாங்க சாமி? எங்களிலும் நல்லவுங்க இருக்காங்கத்தான். ராத்திரி செத்துப்போன முனியாண்டி யைத்தான் எடுத்துக்கொள்ளுங்களே. அவன் நல்லவன்தான். இருந்தாலும் நம்ம ஐயா அவனை ஏசாத நாளே கெடையா தூங்களே” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறான்.
அவனது சிரிப்பிலும் அந்த முரட்டுத் தனம் வெளிப்படத் தான் செய்கிறது. உழைப்பாளி வர்க்கத்துக்குச் சொந்தமான குரலே அதுதான் போலிருக்கிறது.
“ஏன் அப்படி…” மேலும் அவனிடமிருந்து விஷயத் தைக் கிரகிக்க முயலுகிறேன்.
“என்னிடம் கேட்டா எனக்கென்னங்க ஐயாத் தெரியும் எங்கிட்ட வேலை வாங்கணும்னா ஐயா மாதிரி ஏசினாத்தான் முடியும். வேலை செய்யிற வேதனை தெரியாம இருக் கணும்னா நாங்களும் அப்படி வம்பு தூம்பா கதைச்சாதாங்க முடியும்”
அவன் சொல்வது உண்மைதான். எதிராளியின் கைஇறுக இறுகத்தானே நாமும் விழிப்பாயிருக்கிறோம்.’ எதிர்ப்பை வளர்த்து, அந்த எதிர்ப்பிலேயே தன்னை வளர்த்துக்கொள்ளும் முறை வாழ்க்கையில் உயர்வதற்கான வழிகளிலொன்றுதான். சந்தேகமேயில்லை!
“முனியாண்டி எப்படிச் செத்தான்? சுகவீனமாயிருந்தானோ..”
“ஆமாங்க. ரெண்டு கெழமையா படுத்த படுக்கையா கெடந்தான். பிள்ளையா குட்டியா? தண்ணி மண்ணி வச்சிக் கொடுக்க நாதியில்ல. யாராவது எரக்கப்பட்டு ஒதவி செஞ்சாத்தாங்க.”
“உயிரோடு இருக்கிறபோது கவனிக்காம செத்த பிறகு தான் வேலைக்குப் போகாம இருந்து மரியாதை காட்டுகிறீர்களாக்கும்! நல்ல மனிதர்களப்பா நீங்கள்”.
மௌனமாக நின்று நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
“பிழைத்திருக்கும்போது அண்ணன் தம்பி என்றுகூட உறவு பார்க்கறது, சண்டை போட்டுக் கொள்ளும் நீங்கள், செத்தபிறகாவது ஒற்றுமையாக மௌனம் அநுட்டிக்கிறீர்களாயென்றால், அதுவுமில்லை கட்சிப்பிளவும், சாதிப் பாகு பாடும் அதற்கு இடம் கொடுப்பதாயில்லை. போதாததற்குக் குழிவெட்டி, தப்படித்து பிணப் பெட்டி. தூக்கி அந்திமக் கிரியைக்கான எடுபிடி காரியங்கள் செய்பவர்களுக்குச் சாராயத்தைக் கொடுத்து. கலவரம் மூட்டி விடுகிறீர்கள். நீங்களே உங்கள் நிலைமையைக் கெடுத்துக்கொண்டு, உங்களுடைய பிரச்சினையை எடுத்துக் கூறும் சக்தியை இழந்துவிட்டு, பின் துரையையும் கணக்கப் பிள்ளையையும் குறை கூறுவதில் அர்த்தமேயில்லை…”
வினையத்தான் தலைகுனிந்து நின்று தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
“எத்தனை மணிக்குப் பாடை தூக்கப் போறீங்க?”
“நாலரை மணிக்குங்க…” வழக்கமான அவனது முரட்டுக் குரல் சற்றுக் கம்மியிருக்கிறது.
“வரவேண்டியவர்களெல்லாம் வந்துவிட்டார்களா?”
“வருறதுக்கு யாருங்க இருக்கா. அடுத்த தோட்டத்தில் தான் தூரத்து உறவுக்காரன் யாரோ இருக்கானாம். சொல்லி அனுப்பி இருக்கிறோம். வந்தா வர்றான் வராட்டிப் போறான். நீங்க வந்திடுங்க சாமி.”
“நான் மட்டும் வந்தா போதுமா?”
“நம்ப ஐயாவும் வரணுங்க”
”வருவார்தான்?”
“அது எப்படிங்க முடியும்? அழைக்கவேண்டியது எங்க கடமை. எங்களுக்குப் பெரியவரு சாமிமாதிரி. வர்றாரேல் லியோ அது அவருடைய இஷ்டம்.”
நேரமாகிக் கொண்டிருக்கிறது. ஆட்களெல்லாம் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். போய் ஆக வேண்டியதைக் கவனி, என்று கூறி அவனிடமிருந்து விடு வித்துக் கொண்டு வீட்டை நோக்கித் திரும்புகிறேன்.
வழிநெடுக ஒரே சிந்தனைதான். ”எங்களுக்குப் பெரிய வரு அவரு சாமி மாதிரி. வர்றாரோ வரலியோ அது அவரு இஷ்டம்” என்ற வினையத்தானின் குரல் திரும்பத் திரும்ப என் செவிகளில் ஒலித்து என் கருத்துக்கு வலு கூட்டுகிறது.
வீட்டுக்கு வந்து சேர்கையில் மணி பன்னிரண்டுக்கும் மேலாகி விட்டது. என் தந்தை திரும்பி விட்டார். மேசையில் உணவு பரிமாறப்பட்டிருந்தது. அவர் சாப்பிடாமல் எனக்காக உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
கையை அலம்பிக்கொண்டு அவருக்கெதிரே நாற்காலி யில் போய் உட்கார்ந்தேன். ஒருவரும் ஒன்றும் கதைக்க வில்லை. அவர் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண் டிருந்தார். நான் தலை குனிந்தவண்ணம் பேசாமல் அமர்ந் திருந்தேன்.
”சோறு ஆறப்போகுது. சாப்பிடுங்க” அம்மாதான் அங்கு குடிகொண்டிருந்த அமைதியைக் கலைத்தாள். எதுவித பதிலுமில்லை. கோப்பையில் சோறு போட்டது போட்ட வண்ணமிருந்தது. அதினின்றும் எழுகின்ற ஆவியினூடாக என்ணுணர்வுக்கு உயிர்ப்புக் கொடுத்து, தொண்டையைக் கனைத்துக்கொண்டே, “துரையைப் பார்த்தீர்களா? ” என்று பேச ஆரம்பித்தேன்.
“ஆமாம்.” என்று தலையை அசைக்கிறார். அவரே பேசவும் ஆரம்பிக்கிறார்.
“இவ்வளவு நேரம் எங்கப்பா போயிருந்தாய் வீட்டுல இல்லியாம. ஒங்க அம்மா சொன்னா.”
“ஆமாப்பா. இப்படியே கீழே லயம் வரைக்கும் போய் விட்டு வந்தேன்.”
களவு செய்து பிடிபட்டவனைப் போன்ற குரலில் பதிலளித்தேன்.
“….லயத்துக்கா ஏன் அங்க என்னா வேலை?”
“லயத்துக்குப் போக வில்லையப்பா. ரோட்டில் நின்று நடந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.”
“அதுதான் கேக்கிறேன். அங்க நமக்கென்ன வேலை? தோட்டத்தில் உள்ள எந்தெந்தப் பயலோ சாவுறான். அதுக் கெல்லாம் நாம் போய்க்கொண்டிருக்க முடியுமா?”
எப்படிப் பேச்சை ஆரம்பிக்கலாம் என்று மூளையைப் போட்டுக் குழப்புகிறேன். மூளையின் குழப்பம் கை விரல்களின் வேகமான அசைப்பில் சாதம் பிசையப்படுவதில் வெளிப்படுகிறது.
“எப்பா சாமி கும்பிடுறாங்க.”
“ஏன்? சித்திரை கடைசியிலயாயிருக்கும்.”
“தெய்வ சந்திதானத்தில் சாதி, தொழில் வித்தியாசம் பாராட்டுவீர்களா?”
“இல்லை அவள் கருணை எல்லாத்துக்கும் ஒரே மாதிரிதான்.”
”அப்படிச் சொல்லுங்கள். படித்தவர்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில்கூட சாதி வித்தியாசம் சுவாமி தரினத்தில் குறுக் கிடுகிறது. நம் தோட்டப் பகுதிகளில் அவ்வாறில்லைத்தான் ஒவ்வொருத்தரும் தன்னாலியன்ற வரையில் தனது பங்கைச் செலுத்தி வருகின்றார். மனிதர்களிடம் கடன் வாங்கியாவது தெய்வக் கடனை அடைத்து விடுகின்றனர்.”
எதை மனத்தில் வைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக் கிறேன் என்பதை விளங்கிக் கொள்ளாது மிரள மிரள விழித் தார்.
“சுவாமிக்கு முன் மனிதர்களின் அறிவுக்கு ஒவ்வாத பாகுபாடெல்லாம் மறைந்து விடுவதைப் போலத்தானே சாவுக்கு முன்னும்… ” மௌனம் சாதித்து என் கருத்தை ஆமோதிக்கிறார்.
”உயிரோட இருக்கும் போதுதான் தொழிலாளி, அதிகாரி என்று தரம்பிரித்து மனித ஆசாபாசங்களையெல்லாம் போலிக்கௌரவத்தால் மதிக்காது விடுகிறோமென்றால், செத்த பினனருமா அந்தத் தவறைச் செய்வது?”
நாற்காலியின் பின்புறச் சாய்வு பலகையில் முதுகை உராய்ந்து, நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு என் பேச்சைக் கேட்க ஆரம்பிக்கிறார். கோப்பையிலிருந்த கையை எடுத்து. பக்கத்திருந்த கிண்ணத்திலுள்ள நீரில் அலம்பிக்கொண்டு தொடர்கிறேன்.
“தொழிலாளி ஒருவன் செத்துவிட்டானென்றால் அது சாதாரண சாவு அல்ல, உழைப்பாளர் கூட்டத்துக்கே பெரு நஷ்டம். நாட்டின் வளம் சேர்க்கும் பலத்தின்குறைவு. அதை விடுத்து, உழவு மாடு ஒன்று செத்தால் இன்னொன்று வாங்குகிறதில்லையா, அதைப்போல ஒருத்தன் செத்தால் இன்னொருத்தன் என்ற மனப்பாங்கில் தொழிலாளிகளின் மரணத்தைக் கணித்து, அந்திமக் கிரியைகளை அலட்சியம் செய்து ஒதுங்கி நிற்பது நல்லதல்ல. தொழிலாளி அதிகாரி உறவு ஸ்திரமாகாமல் போய்விடும்.”
“அது சரிப்பா. ஆனா, கொழுந்து தளைச்சிருக்கதை பாத்தியா அதுதான் நம்ம செல்வம் அதை ஒழுங்கா கவனிச்சாதான் நம்ம நல்லா வாழலாம்” இடையில் குறுக்கிட்டுப் பேசினார் தந்தை.
“மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகத்தான் படும். ஆனால், உண்மையில் தொழிலாளர்கள்தான் செல்வம். மக்கட் செல்வம் சிறந்தால்தான் பொருட்செல்வம் சிறக்கும். பொருளை இழந்தால் மீட்டுக்கொள்ளலாம். உயிர் அப்படிப்பட்டதல்ல. ஒருமுறை போனால் போனதுதான்.”
“அதுக்காக தோட்டத்தில் ஒவ்வொருத்தன் செத்தாலும் வேலையை நிப்பாட்டணுமா…” ஏதோ என் கருத்தைத் தடுத்துப் பேச வேண்டுமென்பதற்காக அதைச் சொன்னார்..
இங்கிலாந்தில் எங்கோ ஒரு மூலையில் இறந்துவிட்ட இந்தத் தோட்டத்து கம்பெனியின் பங்குகாரருக்காக போன வருடத்தில் ஒருநாள் வேலைக்குப் போகாமல் இருந்தீர்களே. நினைவிருக்கிறதா? எந்தவித உறவும் தொடர்புமில்லாத. முன்பின் தெரியாத ஒருத்தர் செத்துவிட்டதற்காக வேலைக் குப் போகாமல் இருப்பது முறையென்றால், பிறந்தது முதல் தோட்டத்து மண்ணிலேயே தவழ்ந்து வளர்ந்து உழைத்து ஓய்ந்துமடிந்துவிட்ட ஒரு ஜீவனுக்கு மரியாதை செலுத்துவது மட்டும் எப்படி முறையற்றதாகிவிடும்!”
எந்தவிதமான பதிலையும் சொல்லாது கண்ணின் கரு மணிகளை இமைக்குள்ளாகச் சொருக விட்டுச் சிந்தனை செய்தார். அவரும் அந்த மண்ணில் பிறந்தவர்தானே. மண்ணின் தொடர்பு சிந்தனையைக் கிளறிவிட்டது. போலும்.
”இதே தினத்தில் நம் வீட்டில் யாராவது இறந்திருந்து இந்தத் தொழிலாளர்கள் வேலைக்குப் போனார்கள் என்றால் உங்களுக்கு மனம் நோகாதா? மாறாக, போகாமலிருந்தார்க. ளென்றால் அது முறையற்ததாகி விடுமா?”
மண் தொடர்பில் கிளர்ந்தெழுந்த சிந்தனையோட்டம் குடும்ப உறவில் வளர்ந்தோடியது.
“தொழிலாளர்கள் உங்களை வெறும் கணக்கப் பிள்ளை யாக மாத்திரம் கருதவில்லை. தெய்வத்துக்குச் சமானமாகக் கருதுகிறார்கள். அவர்களின் மனத்தைப் புண்படுத்தி விடா தீர்கள். பிரேத ஊர்வலத்தில் நீங்கள் கலந்து கொண்டீர்க ளென்றால் நாளாந்தம் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போன உங்கள் அதிகாரக் குரலில் மறைந்து கிடக்கும் கனிவைத் தெரிந்து கொள்வார்கள். வெறும் தொழில் உறவால் பிரிந்து கிடக்கும் மனித உணர்ச்சியைப் புரிந்து கொள்வார்கள். அதுவே அவர்களுக்கு ஒரு நிறைவு; உங்களுக்கு ஒரு வெற்றி தொழிலாளி முதலாளி உறவுக்கான பிணைப்பு. இதை மறந்து விடாதீர்கள்” என்று சொல்லிக்கொண்டே எழுந்தேன்.
மண் தொடர்பில் கிளர்ந்து, உறவு முறையில் வளர்ந்து, உத்தியோகத் தொடர்பில் உச்சிக்கே சென்றுவிட்ட சிந்தனை அவரை இயக்கியது. ஆம், அவரும் எழுந்தார்.
எதிரே மேற்குத் திசையில் கோட்டை மதிலைப்போல எழுந்து நிற்கும் மதில்களுக்கூடாக மாலைக் கதிரவனின் மங்கிய செவ்வொளி படர்ந்து நிற்கிறது. சுடுகாட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது பிரேத ஊர்வலம்.
– 1963
– மலைக் கொழுந்தி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: டிசம்பர் 1994, பாரி நிலையம், சென்னை.