பிரார்த்தனை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 9, 2024
பார்வையிட்டோர்: 435
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எல்லோரும் பிரார்த்தனைக்கு வரிசையாக நின்றுகொண்டார்கள்.
அவன் மட்டும் தன் இடத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை. ‘பிரார்த்தனைக்கு’ என்று அழைப்பு சப்தம் ஒரு தரத்துக்கு நாலு தரம் அவன் காதுகளில் விழாமலில்லை. தினமும் முதல் சத்தம் கேட்டவுடனேயே தூக்கத்திலும் சுருட்டி மடக்கி எழுந்து அவன்தான் முதலில் போய் நிற்பவன். ஆனால், இன்று கன்னங்களை இரு கைகளிலும் பதித்து தலையைத் தாங்கிக்கொண்டு தரையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
‘ஜெயசிங், ஜெயசிங்!’
அவனுக்கு அந்த இடத்தில் ஒரு கடமை உண்டு. அவன் நிற்கவேண்டிய இடத்தில் காணாமல் போகவே வரிசையிலிருந்து ஒரு குரல் பலத்து கூப்பிட்டது.
‘ஷ்ஷ்… ஷ்! அவனை கூப்பிடாதே,’ என்று அவர்களுக்குள் கட்டுப்பாட்டிற்காக தாங்களே தேர்ந்தெடுத்திருந்த தலைவன் குறுக்கிட்டுச் சொன்னான்.
‘பிரார்த்தனையை ஆரம்பிக்க-‘
‘வேறு யாராவது ஆரம்பியுங்கள்.’
‘ஏன் அவறுக்கென்ன?’
‘அவன் தாய் இறந்துவிட்டாள், நேற்று மாலை தந்தி வந்தது.’
‘ஆமாம், ஆமாம். அவன் மனதை கிளறவேண்டாம்.’ என்று பல குரல்கள் சேர்ந்தன.
‘ஹும்! யாராவது சீக்கிரம் ஆரம்பியுங்கள்’ தலைவன் அவசரப்படுத்தினான்.
ஒரு குரலும் பதில் கொடுக்கவில்லை.
‘என்ன, ஜெயசிங்கை விட்டால் பாட ஆளே கிடையாதா… குரலைப் பற்றி கவலையில்லை…ஹும் யாராவது?… கருப்பையா, ராமநாதன், நவநீதன் …ஃபைலுக்கு நாழி ஆகிறது.’ என்று ஒரு வரும் பாட முன்வராததைக் கண்டு தலைவன் உரத்துச்சொன் னான்.
இவ்வளவுக்கும் பிறகுதான் இரட்டையாக வகிர்ந்து நின்று கொண்டிருந்த அந்த அணிவகுப்பின் ஒரு கோடியிலிருந்து ஒரு கட்டையான குரல் பிரார்த்தனையை ஆரம்பித்தது.
‘பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்…’ எல்லோரும் கோஷ்டியாக அதை எதிரொலித்தார்கள். பிரார்த்தனை ஞாபகத்திலே ஜெயசிங்கைப் பற்றிய நினைவு அழிந்துவிட்டது.
ஆனால், தன்னைப் பற்றிய சம்பாஷணை ஜெயசிங்கின் காது களில் விழுந்தது. அப்போதும் அவன் அசையவில்லை. தரை யையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஜெயசிங்கின் தாய் இறந்துவிட்டாள்.
அவள் உடல் வெந்து சாம்பலான இடத்திற்கும், அவர்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த இடத்திற்கும் நடுவே ஒரு மூன்று நாள் பிரயாணம் குறுக்கிட்டு நின்றது. கிழத் தாய்க்கு ஜெயசிங் ஒரே பிள்ளை. அவன் கையால் கொள்ளி வைக்கும் ஒரு பாக்கியத்தை அந்த வைரம் பாய்ந்த தேகம் கொடுத்து வைக்கவில்லை. கண்கள் நிலைகுத்திப் போகுமுன் தாயின் கடைசிப் பார்வையை – அவள் அவனிடம் விடைபெற்றுக் கொள்வதை அவன் பார்க்க முடியவில்லை. அவள் கடைசி மூச்சு ஒடுங்குவதை, தான் பெற்ற குழந்தையின் மடியில் தலையை வைத்துக்கொண்டு நிம்மதியாக அந்த ஆத்மா வெளியேறுவதை உணர அந்த பாப ஆத்மாவுக்குக் கிடைக்கவில்லை.
பிராப்தம் – என்று சொல்வார்களே அதுதான் எவ்வளவு பெரிய உண்மை.
இல்லாது போனால் எழுபத்தைந்து வருஷங்களாக ஓடிக் கொண்டிருந்த சுவாசம் இன்னும் சில தினங்களுக்கு நீண்டிருக்காதா?
நாளை கழித்து மறுநாள் ஜெயசிங் விடுதலையாக இருந்தான். ஜெயசிங் உள்பட அந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் அந்தச் சிறை முகாமில் நாட்களை கழித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதுகாப்புச் சட்டக் கைதிகள். தேசத்தின் பாதுகாப்புக்கு இடைஞ்சல் செய்தவர்கள், செய்துவிடக் கூடியவர்கள் என்பதற்காக அவர்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார்கள்.
அந்தச் சிறை நிரந்தரமாக ஏற்பட்ட, உயர்ந்த சுவர்கள் எழுப்பிய ஜில்லா ஜெயில் அல்ல. ஒரு விசேஷ சிறைமுகாம். வெளியே இருந்து வரும் வேகத்தை துண்டு துண்டாக சமாளிக்க முடியாமல் மாகாணம் முழுவதும் உள்ள எல்லோரையும் சேர்த்து திரட்டி வைத்திருந்தது. ஜன சஞ்சாரமே இல்லாத ஒரு பொட்டலில் சிறு சிறு மலைக் குன்றுகளின் சார்பின் அடிவாரத் திலே விசும்பி நிற்கும் பெரிய கட்டிடங்களைச் சூழ்ந்து வேலி போட்டிருந்தது.
இந்தக் கட்டிடங்கள் இன்று நேற்று கட்டப்பட்டனவாக தோன்றவில்லை. பழமை வாசனை கலந்து வீசியது, அவைகளின் தோற்றம். கேவலம் கைதிகளை அடைப்பதற்காக யாரும் அந்தக் காலத்தில் இவ்வளவு சிரத்தை எடுத்து நிர்மாணித்திருக்க மாட்டார்கள்.
கைதியாக முதன் முதலில் கிருகப்பிரவேசம் செய்தவர்கள் இப்பொழுது பிரார்த்தனை செய்துகொண்டிருப்பவர்கள் அல்ல. அந்தப் பெருமை அவர்களுக்குக் கிடையாது.
பத்து வருஷங்களுக்கு முன்னால் தங்கள் உரிமைக்குப் போராடினவர்கள் என்ற குற்றத்திற்காக இவர்களவர்களே அதில் நாட்களைக் கழித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
அதற்கு முன்னால் அந்த இடத்தில் மாப்பிள்ளைக் கைதிகள் பல வருஷங்களைக் கடத்திவிட்டிருந்ததாகச் சொல்லிக்கொண்டார்கள்.
இன்னும் பல வருஷங்களுக்கு முன்பு, மஹா யுத்தத்தின் போது துருக்கியக் கைதிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தார்கள்.
இதற்குமேல் அதன் சரித்திரப் பூர்வீகம் தெரியவில்லை.
கைதிகள் பரம்பரை – இந்தப் பெருமையை அந்த பிரமாண்ட மான கட்டிடங்கள் கொண்டாடலாம். அதன் பழம் பெருமை எதாக இருந்தாலும் சரி, அதன் தற்போதைய சூழ்நிலை ஒரு கிராமாந்திர பவுண்டின் ஞாபகத்தைத் தான் கொண்டுவரும்.
‘பொழுது புலர்ந்தது யாம் செய்த
தவத்தால் புன்மையிருட்கணம்
போயின யாவும்’
பிரார்த்தனையின் வரிகள் ஜெயசிங்கின் காதுகளில் தாக்கின.
இந்த பிரார்த்தனையை தினமும் ஜெயசிங்தான் ஆரம்பித்து வைப்பான். ஜெயசிங்கின் சாரீரம் ரொம்பவும் இனிமையாக இருக்கும். விடியற்காலை சமயம். இயற்கையின் அமைதி இன் னும் கலையவில்லை. உடல் வருத்தம் மிகுந்த ஒரு வாழ்க்கை நடுவே திடத்தை வேண்டி ஆண்டவனைக் கோரும் ஆத்மசிந்தனை; அதை வெளியிட்டு இருதய பூர்வமாக வெளிக் கிளம்பிவரும் வலு மிகுந்த வார்த்தைகளின் ஓசை; ‘காதுகளில் தேன் பாய்வது போல்’ இனிமையைக் கொட்டும் இழைந்த சாரீரம். இத்தனையும் சேர்ந்து அந்த பிரார்த்தனையை உணர்ச்சி வசமாக்கிக் கொண்டிருக்கும்.
இன்று அவன் கலந்து கொள்ளவில்லை. பிடி சாம்பலாகி விட்ட தாயின் உருவத்தையே மனக் கண்முன் நிறுத்திக் கொண்டிருந்தான். இரவு முழுதும் அழுது அழுது, அவன் உடம்பு சோர்ந்துவிட்டது. இரு இமைகளும் ஒன்றுசேரும் அளவுக்கு கண்கள் வீங்கிவிட்டன. இருதயம் ஒரே கல்லாகக் கனத்தது. தனக்கும், அவளுக்கும் கடைசியாக நடந்த சம்பா ஷணை நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.
‘அடேயப்பா, நீ போய் சுயராஜ்யம் கொண்டு வருவது கிடக்கட்டும். சொல்வதைக் கேளு’ என்றாள் தாய்.
அதற்கு அவன் சிரித்துக்கொண்டே பதில் சொன்னான்: கவலைப்படாதே அம்மா, ஆறுமாதத்துக்குள் சவுக்யமாகத் திரும்பிவிடுவேன். கடவுளை பிரார்த்தனை செய்துகொண்டிரு
அதற்கு பதில் ஒரு வறட்டுச் சிரிப்புடன் அந்தக் கிழவி சொன்னாள், ‘ஆமடா, இந்த க்ஷணமே என்னை அவன் கொண்டு போய் விடவேண்டும் என்றுதான் பதில் நான் பிரார்த்தனை செய்யவேண்டும்; உன் நெஞ்சம் கல்லாகி விட்டதேடா.’
‘ஸ்! அம்மா உளறாதே இப்படி எல்லாம். நான் திரும்பி வரும்போது நீ கல்லுப்போல் இருப்பாய் பார்.’
‘கல்லாக இருக்கிறேனோ, மண்ணாகி விடுகிறேனோ பார்ப்போம்’ என்று பெருமூச்சு விட்டாள்.
தான் சொன்னபடியே அவள் இன்று மண்ணாகித்தான் விட்டாள். இந்த க்ஷணமே என்னைக் கொண்டுபோய் விடும்படி பிரார்த்தனை செய்யவேண்டும், என்று சொன்ன வாக்கு பலித்து விட்டது. அவள் பிரார்த்தனையை ஆண்டவன் ஏற்றுக்கொண்டு விட்டான்.
இங்கு அவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஆண்டவன் அவர்கள் பிரார்த்தனைக்கு இரங்காமல் போவானா?
பிரார்த்தனை அடிகள் ஜெயசிங்கின் காதுகளில் விழுந்தன. ஜெயசிங் அதை உற்றுக் கேட்டான்.
தனிமையில் கிடந்து துக்கத்தோடு போராடிக் கொண்டிருக் கும் அவனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் அந்த சமயத்துக் காவது எல்லாவற்றையும் மறந்துவிட்டு பிரார்த்தனையில் ஈடுபட் டிருந்தார்கள். புண்பட்ட இருதயத்துக்குத் தனிமையில் ஆறுதல் கிடைக்கும் என்று அவன் எதிலும் கலந்து கொள்ளாமல் படுக் கையில் புரண்டு கொண்டிருந்தான். ஆனால், தனிமை அவன் துக்கத்தை தூண்டித்தான் விட்டது.
ஜெயசிங் கண்களை மூடிக்கொண்டான். மவுனமாக, தனித்து பிரார்த்தனையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பினான் போலிருந்தது. ஆனால்- அந்த மவுனப் பிரார்த்தனைக்கு, அவன் மனத்தை அதில் லயிக்கச் செய்ய சக்தி இல்லை. மனதுக்கு பிரார்த் தனையை கிரகித்துக்கொள்ளும் பக்குவம் அப்போது இல்லை. திரும்பத் திரும்ப தாய் தான் அவன் மனக் கண்ணில் சுழன்று கொண்டிருந்தாள்.
முதலில் அவள் தடியை ஊன்றிக்கொண்டு, தட்டுத் தடு மாறிக்கொண்டு அவனுக்கு முன் நடந்து வந்தாள். வந்தவள் சட்டென நின்று தலையை உயர்த்தி அவன் முகத்தை பார்த்தாள். அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ‘அடே, நீ போக வேண்டாமடா; கிழவி வார்த்தையைக் கேளுடா என்று கெஞ் சின பார்வை.
அதையடுத்து -அவன் நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டு, ‘சவுக்யமாகப் போயிட்டு வாடாப்பா’ என்று விடை கொடுத்தனுப்பிய அந்த அமைதியான முகம். ஆனால், வெளிக்கு அமைதியாகத் தோன்றின அந்த முகம், உள்ளுக்குள் அடிக்கும் புயலை எப்படி மறைத்துக் காட்டியது என்பதும் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
கடைசியில் அவள் வந்து நின்றாள். அவள் கண்கள் முன் போல் அசையவே இல்லை. விழிகளில் ஒளியில்லை. அவள் முகம் ஒருவித உணர்ச்சியும் இன்றி, மரத்துக் கிடந்தது.
தாயின் பிரேதத்தை அவன் பார்க்கவில்லையானாலும் இந்தக் கற்பனைத் தோற்றம் அவனை நடுக்கி எடுத்தது. அதற்குமேல் அவனால் தாங்க முடியவில்லை. கண்களை வெடுக்கென அகல விழித்துச் சுற்றுமுற்றும் பரபரப்புடன் விழித்தான்.
பிரார்த்தனை அவன் காதுகளில் தெளிவாக விழுந்தது.
ஒரு சின்ன யோசனை ; விருட்டென்று எழுந்தான். தான் வழக்கமாக நிற்கும் இடத்தை நோக்கி நடந்தான். பிரார்த்தனை யில் வாய்விட்டு ஈடுபட்டால் இருதய கனம் சிறிது குறைய லாம் என்று நினைத்தான் போலும்.
பிரார்த்தனையின் இரண்டாம் அடியைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.
அதேசமயம் தலைவனுக்கு அடுத்தாற்போல் வந்து நின்ற ஜெயசிங், ‘நான் பாடுகிறேன்’ என்றான் தீனமான குரலில்.
தலைவன் வியப்புடன் அவன் பக்கம் திரும்பி முகத்தை ஒரு தரம் ஆராய்ந்தான். மிருதுவான குரலில், ‘பாடுகிறாயா, நீ, சரி: பாடு, பாடு’ என்றான்.
கைகளைக் கூப்பிக்கொண்டு மூடிய கண்களுடன் தலைவன் விட்ட இடத்திலிருந்து பிரார்த்தனையைத் தொடரப் போனான்.
‘முதலிலிருந்தே ஆரம்பித்துவிடு’ என்றான் தலைவன். பிரார்த்தனை அன்று சிதறுண்டு போனதால் ஏற்பட்ட அருசியைப் போக்கி ஒருமனதுடன் ஈடுபட விரும்பும் கோஷ்டியும் அதை ஆதரித்தது.
பிரார்த்தனை புதிதாக ஆரம்பமானது.
பொழுது புலர்ந்தது…
என்று ஆரம்பித்தான் ஜெயசிங். அவன் குரல் ரொம்பவும் பலவீனமாகப் புறப்பட்டது. அந்த பலவீனத்தை வெளிக் காட்டிக்கொள்ள விரும்பாதவன்போல், துக்கத்தை மென்று விழுங்கி, நெருங்கிப் போயிருந்த தொண்டையை இரண்டொரு தரம் கனைத்துக் கொடுத்து இளக்கி, வலுவேற்றிக்கொண் டான். மனத்தைப் பிரார்த்தனையில் ஈடுபடுத்த, அவன் குரல் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து கொடுத்துக்கொண்டே வந்தது.
எழுபசும் பொற்சுடர்…
என்ற இரண்டாவது அடியை அவன் திருப்பித் திருப்பிப் பாடும்போது குரல் தன் சுயமான இனிமையைப் பெற்று விட்டது. அதோடு தன்னை மறந்த உணர்ச்சி வேகமும் அதில் இணைந்தது.
அந்த உணர்ச்சி வேகத்தைக் கவனித்து விட்ட தலைவன் அதைச் சற்று அடக்கித் திருப்பிவிட எண்ணி, ‘ஜெயசிங் கொஞ் சம் அடக்கிப் பாடு’ என்று காதுகளில் லேசாகச் சொன்னான்.
ஆனால், வெதும்பின நெஞ்சிலிருந்து விசும்பி எழும் அந்த பிரார்த்தனையில் ஒன்றுபட்டிருந்த ஜெயசிங்கின் காதுகளில் அவை பட்டதாகத் தெரியவில்லை.
தொழுதுனை வாழ்த்தி…
என்ற மூன்றாவது அடியைத் திருப்பிப் பாடிவிட்டு நான் காவது அடியை பாட ஆரம்பித்தான்.
விழிதுயில்கின்றனை
இன்னுமென்.. தாயே…
அவன் உயர்த்திப் பாடிக்கொண்டிருந்தான்.
திடீரென அந்தக் குரலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது.
அந்த நடுக்கத்தோடேயே அவன் தொடர்ந்தான்:
வியப்பிது…காண்… பள்ளி
எழுந்… தரு… ளா…யே..
அவன் குரல் நடுக்கம் உச்ச நிலையை அடைந்துவிட்டது.
எப்படியோ தட்டுத் தடுமாறி அந்த வரிகளை முடித்து விட்டான். அதை முடித்துவிடும் வரையில் தான் சமாளித்துக் கொள்ள முடியும் என்று அவன் நினைக்கவே இல்லை. அவன் உடம்பு குலுக்கி எடுத்தது.
‘ஜெயசிங்! என்னது?’ தலைவன், திடுக்கிட்டுப் போய் கேட்டான்.
இந்த அடியை திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்த கோஷ்டி இதைக் கவனிக்கவில்லை. அவர்கள் பாடித் திரும்பவும் ஜெயசிங் பாடுவதை எதிர்பார்த்து நிறுத்தினார்கள்.
பிரார்த்தனை வரி கிளம்பவில்லை.
விம்மி அழும் குரல்தான் அந்த நிசப்தத்திலிருந்து தெளி வாகக் கேட்டது. ஜெயசிங் முகத்தைக் கைகளில் புதைத்துத் தேம்பிக்கொண்டிருந்தான். அவன் தலை, அருகில் நின்றிருந்த தலைவன் மார்போடு அணைத்திருந்தது.
தலைவன் ஜெயசிங்கின் தோள்பட்டையை மிருதுவாக விரல் களால் தட்டிக்கொடுத்துக் கொண்டே, ‘ஜெயசிங்’ என்று கூப்பிட்டான். பதிலில்லை.
ஜெயசிங் தலைவன் தோளில் முகத்தை அழுத்திக்கொண்டு கதறினான்.
‘ஜெயசிங்!’ தலைவன் குரலிலும் நடுக்கம் ஏற்பட்டது. ஆனால், அதை அமிழ்த்தி, ஜெயசிங்கின் கவனத்தைத் திருப்பும் படியான அதட்டின குரலில், அவனுடைய இரண்டு தோள்களை யும் குலுக்கிக்கொண்டே கத்தினான். ‘ஜெயசிங், சின்னக் குழந்தை மாதிரி…இதோப் பார்.’
ஜெயசிங் தன் முகத்தைத் திருப்பி, தலையை உயர்த்திக் கொண்டான்.
அவன் முகம் கண்ணீரால் தொப்பலாகி இருந்தது.
‘ஜெயசிங், என்னைப்பார்’, என்று அவன் முகத்தைத் தனக்கு நேராகத் திருப்பினான் தலைவன்.
துக்கம் வெடித்து நிற்கும் முகத்தோற்றத்துடன் அவனை ஜெயசிங் பார்த்தான். தலைவன் முகமும், அவன் பார்வையும் ஜெயசிங்குக்கு எதையோ உணர்த்த விரும்புவது போலிருந்தது.
‘ஜெயசிங், சாந்தப்படுத்திக்கொள்.’
‘நானும் தான் பார்க்கிறேன்; முடியவில்லையே.’
அவன் தலை கீழே கவிழ்ந்தது.
‘முடியவில்லையா? என்ன சொல்கிறாய் ஜெயசிங்!’ தலைவன் படபடப்பான குரலில் கேட்டான்: ‘உனக்கா முடியவில்லை? பேஷ், எனக்கு வெட்கமாக இருக்கிறது. உனக்கு முடியவில்லை என்பது.’
தலைவன் விடுவிடெனப் பேசினதைக் கேட்டு ஒரு கேள்விப் பார்வையுடன் தலைவன் பக்கம் திரும்பினான்.
தலைவன் சேர்த்துச் சொன்னான், “ஜெயசிங், உன்னை ஞாபகப்படுத்திக்கொள். நீ ஒரு… நானா அதை உனக்கு ஞாபகப் படுத்த வேண்டும்? உன் பிரதிக்ஞை – அதை மறந்து விட்டாயா நீ?”
அந்த வார்த்தைகள் அவனை வேகமாக ஆகர்ஷித்தன, கீதோப தேசம்போல. அவைகளின் அர்த்தத்தை அறிந்து கொண்டவன் போல முகக்குறி காட்டினான்.
அவன் அழுகையை அடக்க முயன்றான். தலைவன் அதைச் சுட்டிக் காட்டிவிட்ட பிறகு அவன் அழுவது நன்றாக இருக்காது, குழந்தைத்தனமாகும். விக்கலுக்கும், விம்மலுக்கும் நடுவே, தலைவனுக்கு ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தான். ஆனால் அவனால் ஒன்றும் பேச முடியவில்லை.
அவனால், செய்ய முடிந்ததெல்லாம் தலைவன் முகத்தையே வெறித்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது தான்.
விக்கலும், விம்மலும் உள்ளடங்கிப் பெருமூச்சாக வெளி வந்தது.
‘ஜெயசிங்’ என்று மிருதுவான குரலில் தலைவன் அவனை அழைத்துச் சொன்னான் : நீ கதறினாலும் திரும்பக் கிடைக்காத திரும்பி வர முடியாத-ஒரு முடிவிடத்தைப் போய் அடைந்து விட்டாள் அவள். அவளிடம் நீ அன்பு செலுத்தினாய்; பாசம் வைத்திருந்தாய்; அந்தக் கிழவியை, கைத்தாங்கலாக அவளை அழைத்துச் சென்றெல்லாம் உன் கடமையைச் செய்தாய்; அந்தத் திருப்தி உனக்கு இருக்கிறது. தாய் என்ற, வாழ்க்கையில் ஒரேதரம் கிடைத்திருக்கும் பொக்கிஷத்தை இழந்துவிட்டால்- இழந்து விட்டதுதான். ஆனால்-‘
தலைவன் பேச்சைச் சட்டென நிறுத்திவிட்டு, தன்னைச் சுற்றி ஒருதரம் கண்களைச் சுழற்றிவிட்டுத் திரும்பினான்.
ஜெயசிங் தீர்க்கமாகத் தலைவனையே பார்த்துக் கொண்டிருந் தான். தலைவன் முடிவு வார்த்தைகளை அவன் கேட்க ஆத்திரப் பட்டமாதிரி இருந்தது.
தலைவன் குரல் உயர்ந்தது, எல்லோருடைய காதிலும் கேட்கும்படியாக பலத்து ஆரம்பித்தான்:
‘ஆனால், ஜெயசிங், நீ உன் தாயை இழந்து விடவில்லை. அதோ பார். அங்கே இருக்கிறாள், உன் தாய்; உன் தாய் மட்டுமல்ல; நம் எல்லோருடைய தாயும் – அவளைப் பார்க்க வில்லையா?
அந்தத் தாய்க்கு, தன்னைவிடச் சிறந்ததான ஒரு சக்திக்கு உன் தொண்டை, கடமையைச் செய்யத்தான் தன் இருப் பிடத்தைக் காலி செய்துவிட்டுப் போயிருக்கிறாள் அவள்-அந்தக் கிழவி, உன்னுடையவள்… புரிகிறதா? அவள் தன்னைத் தியாகம் செய்து கொண்டுவிட்டாள் ; பதிலுக்கு உன்னிடமிருந்து அதை எதிர்பார்க்கிறாள்…சரி பிரார்த்தனையைப் பாடு… பாடு…
வந்தேமாதரம்!
தலைவன் கண்களை மூடிக்கொண்டு தன் குரலை நீட்டி உயர்த்திக் கோஷித்தான்.
ஜெயசிங் பிரார்த்தனையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பாட ஆரம்பித்தான்.
– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.