பிரம்ம ஞானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 4,651 
 
 

திவைத்தா என்கின்ற வர்த்தகமையத்தின் முன்பிருந்த அந்தப் பரந்த வெளிக்கு இயற்கையே வெள்ளைக் கம்பளம் விரித்தது போன்ற அழகு. பனிக்காலத்தின் குழந்தைப் பருவத்தைத் சுதர்மமாக ஏற்ற இயற்கை. அது தனக்குத்தானே பருவகாலத்தில் கொட்டும் பனியின் பலாபலனால் விதவை வேடம் தரித்த அவஸ்தை. புதுப் பனியைக் கண்ட பாலகர்களுக்கு அவளின் முந்தானையில் வழுக்கி ஓடும் அளவில்லா இன்பம். அதற்காகத் திரண்ட வெள்ளையும் கறுப்புமான குதூகலிக்கும் மனிதக் கூட்டம். தெருவையும், தெருவில் இருக்கும் பாலத்தையும் தாண்டி ஒரு சுரங்கரத நிலையம். அதிலிருந்து அக்கணம் பிரசவித்த பிள்ளையைத், தொப்புள்க் கொடியை அறுத்துத் தோளில் போட்டுக்கொண்டு ஓடுவது போல மனிதர்களின் ஓட்டம். சிவப்பு அட்டைகளான பேரூந்தைத் தவறவிடக்கூடாது என்பதில் அவர்களின் அந்த அவதி. அத்தால் அவர்கள் தங்கள் தங்கள் இல்லத்தில் கொண்ட விசுவாசத்தைக் காக்கும் அவா. அவர்களின் ஓட்டமும் பெருமூச்சும் பாம்பின் சீறலாக குளிர்ந்த காற்றை வெப்பமூட்டும் குதர்க்கமான முயற்சியில்…

இல்லத்தில் ஈருடல் ஓருடலாகும் இல்லாள், அல்லது கணவன். யாழினையும் தேனினையும் மிஞ்சும் அல்லது விஞ்சும் உள்ளத்தை உருக்கி உவகை தரும் மழலை மொழி. கொதிக்கின்ற வயிற்றின் பசியாற்றச் சுவைகொண்ட உணவும், நிறம் கொண்ட மதுவும்… உலகவாழ்வின் தூறாக்குழியும், ஆறாக் காமமும் சாந்தி பெறும் புண்ணிய ஸ்தலம்… அந்த முடிவில்லாத அன்றாட வாழ்வின் தேவையை மீண்டும் மீண்டும் சாந்திப்படுத் ஓயாது ஒடும் மனித ஜந்துக்கள். இயற்கையிடம் சோரம் போன, இப்பிறப்பின் உன்னதச் சூட்சுமம் புரியாத, இறப்புவரை அற்ப ஜடமாக, இல்லம் அடைய வேண்டும் என்கின்ற ஏக்கத்தில் துடிக்கும் இம்மானிடர். சிவப்பு அட்டைகளைத் தேடும் அவர்கள் கண்களின் கட்டுக்கடங்காத அவசரம் எச்சணமும்…

பிறை அணியாத, சுடலைப் பொடி பூசாத, சக மனிதர் பித்தன் என்று சொல்லாத, மனித ஜன்மமான மகாதேவனின் அவசரத் தேடுதலும் அதில் ஒன்றாக… இரைதேடும் அவசரத்தில் புறப்படாது, மனிதத் தேவைகளுக்கா நேரத்திற்கு வரும் பேரூந்து அட்டைகளின் பிசகாத அவட்வணையின் இறுக்கமான கடைப்பிடிப்பிற்கு உள்பட்ட ஒழுக்கத்தில் அதன் வரவு.

மாகாதேவன் பேரூந்துத் தரிப்பில் வந்து நின்றான். பலவிதமான மனிதர்கள் பேரூந்துக்காகக் காத்து நின்றார்கள். அதில் பலர் வந்தேறி குடிகள். மீதமானோர் சுதேசிகள். சுதேசிகள் என்றால் மகாதேவனுக்கு ஏனோ வெறுப்பு உண்டாகும். சுதேசிகள் நிறவெறியோடு பிறந்தவர்கள். பிறக்கின்றவர்கள். பிறக்கப் போகின்றவர்கள். வெள்ளைத் தோலும் நீலக் கண்களும் இல்லாவிட்டால் அவர்கள் கொள்ளைக்காரர்கள் அல்லது கொள்ளைநோய்க்காரர்கள் என்கின்ற நினைப்பு அவர்களுக்கு என்பது அவன் எண்ணம். கடற்கொள்ளை பற்றிய சரித்தரம் அவர்கள் இப்போது கதைப்பதில்லை. தம்மைக் கொள்ளையடிக்க வந்த வறிய நட்டினரை காண்பதே பாவம் என்கின்ற மனவோட்டம் பலரிடம். அத்தால் உண்டான பயம் சிலரிடம். கண்டாலும் கறுமிகளோடு பேசுவது மகாபாவம். பேசினாலும் அவர்களோடு நட்பாவது அதைவிடப் பாவம் என்கின்ற நினைப்போடு உள்ளே வெறுப்பை வைத்து வெளியே தமரையிலையின் நீர் போலச் சில காரணங்களுக்காகப் பழகும் வெள்ளைத் தோல் மனிதர்கள். இது மகாதேவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவு. முதிர்ந்த ஞானம்.

சிவாஜி கணேசன் நடித்த கட்டப்பொம்மன் படம் பார்த்த நாளிலிருந்தே வெள்ளையர்கள் என்றால் கொள்ளையர்கள்… எங்களை அடிமையாக்கவே வந்தவர்கள், வராவிட்டாலும் அதைப்பற்றியே நினைப்பவர்கள் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவன். நோர்வே நாட்டுக்காரர்கள் கடற்கொள்ளை அடித்தார்களே தவிரப் பெரும் நாடுகளைப் பிடித்து ஆளவில்லை. அடிமைப்படுத்தி வைத்திருக்கவில்லை. ஆங்கிலேயரைப் போல அஸ்தமிக்காத சூரியனைக் கொண்ட அகண்ட கண்டங்களை ஆளாத நாடு. அதனால் இவர்கள் ஆங்கிலேயரைப் போல் அல்ல என்றாலும் வெள்ளை என்கின்ற மேலாதிக்கம் இவர்களிடமும் இருக்கிறது என்பதில் மகாதேவனுக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. எப்போதும் அடிமை நாடுகள் இல்லாவிட்டாலும் இப்போது பணம் இருக்கிறது. அதனால் எப்போதும் இவர்களால் வேற்று மனிதரை அடிமைப்படுத்த முடியும் என்பது மகாதேவனின் வெறுப்பு.

இன்றைய எண்ணைப்பணத்தில் மனிதர்களையே வாங்கி வரலாம் என்கின்ற எண்ணம் கொண்ட நோர்வே ஆண்களின் பரிகசிப்பையும் அவன் வேலை செய்யும் இடத்தில் கேட்டிருப்பதால் இவர்களின் மேலாதிக்க எண்ணம் ஒருபோதும் மாறாது என்பதில் மாகாதேவனுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது.

பேரூந்துத் தரிப்பிற்கு மேலும் சிலர் வந்து சேர்ந்தார்கள். குளிருக்காகப் புகைப்பவர்களும், புகைக்காமலே குளிரால் வாயில் புகைவிடுபவர்களும் மின்பலகையைப் பார்த்து நிமிடங்களை எண்ணினர். அந்த நிமிடங்கள் கரைந்து சைபருக்கு வந்து சேர்ந்தது. பேரூந்து அட்டையாகத் தோன்றி ஆமைவேகத்தில் வருவதாக தூரத்தே தெரிந்து அருகாமையே மெய் என்பதை அதிர்வோடு நிரூபித்து நின்றது. அது மூச்சு விட்டுக் கதவை உஸ்… என்கின்ற பாம்பின் ஒலியுடன் திறந்து அவசரத்தில் துடித்த ஆன்மாக்களை தன்னுள் ஐக்கியப்படுத்தியது. இது மோட்சமல்ல, இடப்பெயர்ச்சி மட்டுமே என்பது மகாதேவனுக்குப் புரிந்தது.

உள்ளே சென்ற மகாதேவன் ஒரு முறை அங்கிருந்த இருக்கைகளையும் அதில் குந்தி இருக்கும் மனிதர்களையும் பார்த்தான். பல இருக்கையில் வெள்ளையர்கள் இருந்தனர். அதனால் அது மகாதேவனின் முதல் தெரிவாகாது. அவர்களுக்குப் பக்கத்தில் இருந்தால் வழியின்றி மனதில் வெறுப்போடு முள்ளில் இருப்பது போல் அவதியோடு இருப்பார்கள் என்பது அவன் எண்ணம். அந்த அவஸ்தையை இந்த ஆத்மாக்களுக்கு கொடுப்பானேன் என்கின்ற பரோபாகாரம். வேறு ஒரு இருக்கையில் சோமாலியாக்காரி ஒருத்தி கண்ணாடியருகில் இருந்தாள். அவள் முக்காடு போட்டுக் கறுப்பு அங்கி அணிந்திருந்தாள். சோமாலியரில் பலர் அப்படித்தான் மத விசுவாசத்தோடு உடையணிந்து கொள்வார்கள். சிலர் வடிவாக முக்காடு இல்லாமல் முடிச்சுக்கட்டிய சுருள் மயிரோடு கிளியோபற்றா போலும் போவார்கள். அவர்களில் பல மதத்தவரும் உண்டு.

சோமாலியர்கள் ஆப்பிரிக்கர்கள். அவர்கள் எங்களை நிறவெறியோடு பார்க்க முடியாது என்பது மாகாதேவனின் தெளிந்த பிரம்மஞானம். மாகாதேவன் சென்று அவள் பக்கத்தில் இருந்த மற்றைய இருக்கையில் அமரப் போனான். அவள் அவசரமாக பொறு என்று கையை இவன் முகத்தை நோக்கிக் காட்டினாள். பின்பு தனது கைப்பையை அவசரமாக எடுத்துக்கொண்டு இருக்கையை விட்டு வெளியே வந்தாள். நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போகிறேன் என்று அவனிடம் கூறிவிட்டு முன் நகர்ந்து பேரூந்தின் நடுப்பகுதியில் இருக்கும் கம்பியைப் பிடித்தவண்ணம் நின்றாள். பின்பு தனது அலைபேசியை எடுத்து நோண்டினாள். அடுத்த நிறுத்தம் வந்தது. அவள் நோண்டுவதை நிறுத்தவில்லை. பேரூந்தில் இருந்தும் இறங்கவில்லை. எந்த அவசரமும் அவளிடம் இல்லை. அந்தத் தரிப்பைத் தவறவிட்ட பதற்றம் இல்லை. பேரூந்து நகர்ந்தது. அவள் நகராது கவலையற்று அலைபேசியை நோண்டினாள். அதன் பின்பு மாகாதேவனின் நிறுத்தமும் வந்தது. அவள் அலைபேசியை அப்போதும் நோண்டிக்கொண்டுதான் நின்றாள். நிறம் மட்டும் இந்த உலகை ஆட்டிப் படைப்பதல்ல. அதைவிடப் பலவும்…?

மாகாதேவனுக்கு அப்போதுதான் தனது பிரம்மஞானம் பிழைத்துப் போனது புரிந்தது. இனி இவ்வுலகின் புதிய ஞானத்தைக் கற்க வேண்டும் என்று தோன்றியது.

– பிப்ரவரி 5, 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *