பிரதாப முதலியார் சரித்திரம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 1,454
(1879ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். அதுவரை செய்யுள் வடிவ புனைகதை இலக்கியங்களே இருந்துகொண்டிருந்த தமிழிற்கு உரைநடை வடிவிலான புனைகதை இலக்கிய வகை இந்நூல் வழியாக அறிமுகமானது. அவ்வகையில் இது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் முதலாவதாக இடம்பெற்ற நாவல்.
அதிகாரம் 36-40 | அதிகாரம் 41-43 | அதிகாரம் 44-46
41-ஆம் அதிகாரம்
நியாய வாதிகள்
மொட்டைத் தலைச்சிக்குக் கூந்தல் அழகி யென்று பெயர் வைத்தது போல, விக்கிரமபுரியில், நியாய சாஸ் திரந் தெரியாதவர்க ளெல்லாரும் நியாய வாதிக ளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை யெல்லாம் ஞானாம் பாள் வரவழைத்து, பின் வருமாறு பிரசங்கித்தாள். “உலகத்தில் நடக்கிற வர்த்தகம், வியாபாரம், பல தொழில்கள், கொள்ளல், விற்றல், பரபத்தியங்கள், தூய பாகங்கள் முதலிய பரஸ்பர, நிபந்தனைகளைப் பற்றி எண் ணிறந்த சட்ட திட்டங்களும், ஒழுங்குகளும் மனு நீதிகளும், நியாயப் பிரமாணங்களும் உண்டா யிருக்கிற படியாலும், அந்த ஒழுங்குகளை யெல்லாம் ஒவ்வொருவனுங் கற்றுக் கொண்டு நியாய சபைகளில் விவகரிப்பது கஷ்ட சாத்தியம் ஆகையாலும்,சட்டந்தெரியாத பாமர ஜனங்களுக்கு உபகா ரார்த்த மாக, நியாய வாதத் தொழில் சகல தேசங்களிலும் ஸ்தாபிக்கப்பட் டிருக்கின்றது. நியாய வாதிகள் துன்பம் அடைந்தவர் களுக்குத் துணைவர்களாயும். ஆஸ்திகளை இழந்தவர்களுக்கு அடைக்கல ஸ்தானமாயும், பாத்தியக் கிரமங்களுக்குப் பாதுகாவலராயு மிருக்கிறார்கள். நியாய வாதிகளே நியாய சாஸ்திரந் தெரியாமலிருப்பார் களானால் அவர்கள் மற்றவர்களுக்கு எப்படிச் சகாயஞ் செய்யக் கூடும்? குருடனுக்கு குருடன் வழி காட்டவும், செவிடனுக்கு ஊமையன் உபதேசிக்கவும் கூடுமா? கூடாதாகையால், நியாய வாதிகள் சகல சாஸ்திர பண்டிதர்களா யிருக்க வேண்டும். நியாய ஸ்தலங்களில் சகலவித மான வழக்கு களும் வருகிற படியால், அந்த வழக்குகளுக்குச் சம்பந்த மான சகல சட்டங்களும், சாஸ்திரங்களும், தேசாசாரங் களும், நியாய வாதிகளுக்கு உள்ளங்கை நெல்லிக் கனி போலப் பாடமாயிருக்க வேண்டும். ஒரு அற்பத் தொழிலாளி கூட, வெகு காலம் பிரயாசைப் பட்டுக் கற்றுக் கொண்டு, பிறகு அந்தத் தொழிலிற் பிரவேசிக் கிறான். அப்படியானால், வக்கீல் வேலையைக் கற்றுக்கொள் வதற்கு ஒவ்வொருவனும் எவ்வளவு பரிசிரமப் பட வேண் டும்? யுத்த சாஸ்திரந் தெரியாதவன் யுத்தத்திற் பிரவேசித்தது போலவும், மாலுமி சாஸ்திரந் தெரியாதவன் மரக்கலம் ஓட்டப் புகுந்தது போலவும், நியாய சாஸ்திரந் தரியாத நியாய வாதி எப்போதும் பரம சங்கடப்பட ஹேது வாகு மாகையால், நியாய வாதிக்குச் சகல சாஸ்தி ரங்களும், விவகார அநுபோகங்களும் தெரிந்திருக்க வேண்டும்.
வக்கீல் ஒரு வழக்கை அங்கீகரித்துக் கொள்வதற்கு முன், அதை நன்றாகப் பரிசோதித்து, நியாய வழக்காயிருந்தால் மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, அநியாய் வழக்குகளை அங்கீகரிக்கக் கூடாது. வக்கீல் தன் னிடத்தில் வருகிற வழக்காளிகளின் சங்கதிகளைப் பூராயமாய் விசாரித் தால், பெரும்பாலும் உண்மையைக் கண்டு பிடிப்பது பிரயா சமா யிராது. ஒருவன் கொலை செய்திருப்பதாக வக்கீலுக்கு உண்மை தெரிந்த பிற்பாடு, அவன் கொலையே செய்யவில்லை யென்று வக்கீல் பேசுவது தெய்வ சம்மத மாகுமா? அந்த வக்கீலி னுடைய மனசாக்ஷிக்குத் தான் பொருத்தமா யிருக் மா? ஒருவன் திருட னென்று வக்கீலி னுடைய மனசுக்குத் தெரிந்திருக்க, அவன் திருடவே யில்லை யென்று வக்கீல் சலஞ் சாதிப்பது, எவ்வளவு பெரிய அக்கிரமம்? அந்தக் கொலை யையுங் களவையும் வக்கீலே செய்திருந்தால் எவ் வளவு தோஷமோ, அவ்வளவு தோஷம் வக்கீலைச் சாராதா? ஒருவன் பொய்ப் பத்திரத்தை உண்டு பண்ணின தாக வக்கீ லுக்குப் பரிஷ் காரமாய்த் தெரிந்த பிறகு, அந்தப் பத்திரம் உண்மை யென்று வக்கீல் வாதித்தால், அந்தப் பத்திரத்தை சிருஷ்டி செய்தவனுக்கும், வக்கீலுக்கும் என்ன பேத மிருக் கிறது? அந்த வழக்காளியும் மன தறியப் பொய் யாதரவை உண்டு பண்ணினான்; வக்கீலும் மனதறியப் பொய்ப் பத்தி ரத்தை மெய்ப் பத்திர மென்று சாதித்தான். ஆகையால், அவர்க ளிருவருங் குற்ற விஷயத்தில் துல்லியமா யிருக்கிறார் கள். ஒரு வழக்கு நிர்த் தோஷமாகக் காணப்படுகிற பக்ஷத் தில், சில அற்ப விஷயங்களில் இப்படியோ அப்படியோ என்கிற சந்தேக மிருந்தாலுங்கூட, அந்த வழக்கை வக்கீல் ஏற்றுக் கொள்ளத் தடையில்லை ஏனென்றால், உண்மை யைக் கண்டு பிடிப்பது கோர்ட்டாருடைய கடமையே யல் லாது, வக்கீ லுடைய கடமை யல்ல. அன்றியும்,ஒரு கக்ஷி பொய் யென்று ஸ்தாபிக்கப் படுகிற வரையில், அதை மெய் யென்றே ஊஹிக்க வேண்டியது சுபாவ முறைமையாயிருக் கிறது. சில வக்கீல்கள் வழக்கின் தன்மையை யோசிக்காமல், வந்த வழக்கு எந்த வழக்கா யிருந்தாலும், உடனே அங்கீ கரித்துக் கொண்டு, தங்க ளுடைய மனோ சாஷிக்கு விரோத மாக, கறுப்பை வெள்ளை யென்றும், வெள்ளையைக் கறுப் பென்றும் வாதித்து, பெயரைக் கெடுத்துக் கொள்ளுகிறார் கள். அவர்களுக்கு அநியாய வாதிகள் என்கிற பெயர் பொருந்துமே யல்லாமல், நியாய வாதிகள் என்கிற பெயர் பொருந்துமா?
ஒரு வழக்கை வக்கீல் அங்கீகரிக்கும் போது, அது துர் வழக் கென்று தெரியாம லிருந்து, பிறகு எப்போது தெரிந் தாலும் அதை உடனே நிஷேதித்துவிட வேண்டியது வக்கீ லின் கடமையா யிருக்கிறது. ஒருவனுடைய கக்ஷியை வக்கீல் பார்வையிட்டு, அதை அங்கீகரிக்க மாட்டே னென்று நிராகரித்த பின்பு, அவனுடைய எதிரியின் கக்ஷியையும் வக்கீல் ஏற்றுக்கொள்வது முறையல்ல. ஏனென்றால், எந்தக் கக்ஷிக்கார னுடைய வழக்கை வக்கீல் முந்திப் பார்வை யிட் டாரோ, அந்தக் கக்ஷிக்கார னுடைய இரகசியங்களும் பலா பலங்களும், வக்கீலுக்குத் தெரிந்திருக்கு மான தாலும் அவை களை அந்தக் கக்ஷிக்காரனுக்கு விரோதமாகவும் எதிர் கக்ஷிக் காரனுக்கு சாதக மாகவும் உபயோகிக்கும் படியான துர்ப் புத்தி வக்கீலுக்கு உண்டாகு மானதாலும், வக்கீல் எதிர் கக்ஷியை ஏற்றுக் கொள்வது தர்ம மல்ல. வக்கீ லிடத்தில் வருகிற கக்ஷிக்காரன், அறியாப் புத்தியினால் ஆதார மற்ற வழக்கைச் செய்ய யத்தனித் திருக்கிறா னென்று வக்கீலுக் குத் தெரிந்த மாத்திரத்தில், அவன் வீண் வழக்காடி நஷ்டப் படாதபடி, அவனுக்கு வக்கீல் புத்தி போதிக்க வேண்டும். சமாதானமாகக் கூடிய வழக்குகளைச் சமாதானப்படுத்த வேண்டியதும், வக்கீலின் கடமையா யிருக்கிறது. வக்கீல்கள் தங்களுடைய சொந்தப் பிரயோஜனத்துக்காக வழக்குகள் சமாதானமாகாதபடி விக்கினஞ் செய்கிறார்க ளென்னும் அபவாதத்துக்கு, வக்கீல்கள் டங் கொடுக்கக் கூடாது.
ஒரு துர் நியாயவாதி யானவன் கக்ஷிக்காரனைக் கண்டவுடனே, “உன்னுடைய அதிர்ஷ்டந்தான் உன்னை என்னிடத்திற் கொண்டு வந்துவிட்டது. என்னிடத்தில் எப்போது வந்தாயோ, அப்போதே உன்னுடைய காரிய மெல்லாம் அநுகூலந்தான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல, உன்னுடைய வழக்கு எப்படிப் பட்ட வழக்கா யிருந்தாலும், ஜயித்துக் கொடுக்கிறேன். உன்னுடைய எதிரியைத் தலை காட்டாதபடி அடிக்கிறேன். மேலே போனால், நான் ஈக்விட்டி லா (Law) (Equty) மேலே போவேன். அவன் தர்ம சாஸ்திரத்தை ஆதாரமாகக் காட்டினால், நான் இங்கிலீஷ் லாவைக் கொண்டு வெல்லுகிறேன். அவன் பிராஞ்சு லாவைப் (French Law) பிரயோகித்தால், நான் ஜெர்மன் லாவைப் (German Law) பிரயோகிக்கிறேன். அவன் ஜெர்மன் லாவால் என்னை அடித்தால், அவனை ரோமன் லாவால் (Roman Law) அடிக்கிறேன்” என்று மெய்யாகவே யுத்தத்துக்குப் புறப்படுகிறவன் போல, வீர சல்லாபம் கூறுகிறான். மதில் மேல் ஏறிய பூனை போலவும், சேற்றில் நட்ட கம்பம் போலவும்,வியாஜியம் எந்தப் பக்கம் தீரு மென்பது நிச்சய மில்லாம லிருக்க, வக்கீல் நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லி, கக்ஷிக்காரர்களை ஏமாற்றுவது தர்மா?
வியாஜியத் தொகையையும், வக்கீலினுடைய பிரயா சத்தையும், வழக்காளியினுடைய நேர் நிர்வாகத்தையும் யோசித்து, அதற்குத் தக்கபடி கிரமமான பீசு (Fees) வக்கீல் வாங்க வேண்டுமே தவிர, அதிகப் பீசு கேட்பது கிரமமல்ல. வியாஜியக்காரனுக்குப் பல செலவுகளுந் துன்பங்களும் நேரிடுகிறபடியால், வக்கீலும் அதிகப் பீசு வாங்கி, அவனைத்துத் துன்பப் படுத்துவது நியாயமல்ல. ஒரு வழக்காளி தோற்கிற பக்ஷத்தில், அவன் கொடுத்த பீசு களும், செய்த செலவுகளும், அவனுக்கு மறுபடியும் கிடைக் கிறதற்கு மார்க்கமில்லாமல், நஷ்டம் அடைகிறான். அவன் ஜயிக்கிற பக்ஷத்தில், சட்டத்திற் குறிக்கப்பட்ட கிரமமான பீசு மட்டும், அவனுக்கு எதிரியினால் கிடைக்குமே யல்லாமல், அவன் அதிகமாகக் கொடுத்த பீசு அவனுக்குக் கிடைக்க வழியில்லை. ஆகையால், இந்த விஷயங்களை யெல்லாம் வக்கீல்கள் யோசித்து, பீசு வாங்குகிற விஷயத்தில் அதிக் கிரமிக்கக் கூடாது. துன்பப் படுகிறவர் களுக்குச் சகாயம் செய்ய வேண்டியது எல்லாருடைய கடமையாகவுமிருப்பது போலவே, வக்கீல்களுக்கும் முக்கிய கடமையாயிருக்கிறது. சொத்து நஷ்டமாவது அல்லது சரீரத் துன்பமாவது அடைந்து, பீசு கொடுக்க நிர்வாக மில்லாத பரம ஏழைகளிடத்தில், வக்கீல்கள் ஒன்றும் வாங்காமல், அவர்களுடைய கக்ஷியைப் பேசிச் சாதிப்பார் களானால், அவர்களுக்குப் பரம சுகிர்தமும் கீர்த்தியுமா யிருக்கும். மற்றவர்கள் பொருள் கொடுத்துச் சம்பாதிக்கிற புண்ணியம், வக்கீல்களுக்கு வாய் வார்த்தையால் வருகிறபடியால், அவர்கள் எப்போதும் ஆபத்சகாயிக ளாயும் தீனோபகாரிகளாயு மிருக்க வேண்டும். அந்த ஏழைகளுக்குப் பொருளுதவி வேண்டுமானாலும் செய்து, அவர்கள் ஜயித்த பின்பு, அந்தத் தொகையை வாங்கிக் கொள்வதும் பெரிய உபகாரம்தானே!
சில தேவதைகள் அடிக்கடி பலி கேட்பது போல, சில வக்கீல்கள், ஒரு வழக்கில் அடிக்கடி பீசு கேட்பதாகக் கேள்விப்படுகிறோம். எப்படி யென்றால், அவர்கள் வியாச்சிய ஆரம்பத்திலே சரியான பீசு வாங்கி யிருக்க, பிறகு வியாச்சியம் முதல் விசாரணை யாகும் போது, வேறு பீசு கொடுக்க வேண்டு மென்றும், கொடாத வரையில் கோர்ட்டில் ஆஜராக மாட்டோ மென்றும், பிடிவாதம் செய்கிறார்கள். கக்ஷிக்காரனுக்கு வேறே மார்க்க மில்லாமையால், அப்போதும் பீசு கொடுக்கிறான். பிறகு, சாக்ஷி விசாரணை யாகும் போதும், வக்கீல்கள் கோர்ட்டுக்கு. வரமாட்டோ மென்று படுத்துக் கொள்ளுகிறார்கள்; அல்லது வேறொரு கோர்ட்டில் அதிக பீசு வருவதாகச் சொல்லி, பயண சந்நாகமா யிருக்கிறார்கள். அப்போதும், அவர்களுக்கு தக்ஷிணை கொடுத்து, வசப்படுத்த வேண்டியதா அவர் யிருக்கிறது. இப்படியாக, சிவில் விஷயமாவது, அல்லது, கிரிமினல் விஷயமாவது, விசாரணை யாகிற ஒவ்வொரு தினத்திலும், புதிது புதிதாக வக்கீலுக்குக் காணிக்கை கொடுத்து, கக்ஷிக்காரன் பிக்ஷைக்காரன் ஆகிறான். ஒரு வழக்குக்காக வக்கீல் பூரண பீசு வாங்கிக் கொண்டு அதைக் கோர்ட்டில் தாக்கல் செய்த பின்பு அந்த வழக்கு வேறொரு கோர்ட்டுக்கு அனுப்பப் படுகிற பக்ஷத்தில். அந்தக் கோர்ட்டிலும் பேச அந்த வக்கீலுக்குப் பாத்திய மிருந்தாலுங் கூட, வேறு பீசும், போக வர வழிச் செலவு, படிச் செலவு முதலியவைகளும் வாங்கிக் கெ ண்டு தான், அந்த வக்கீல் மற்றொரு கோர்ட்டுக்குப் போகிறார். குறித்த தினத்தில் விசாரணை யாகாத பக்ஷத்தில், மறுபடியும் வேறு பீசும், படிச் செலவுகளும், வக்கீல் வாங்கிக் கொள்ளுகிறார்.
சில வக்கீல்கள், பல ஜில்லாக்களில் வழக்குகளை வாங்கிக் கொண்டு பூப் பிரதக்ஷணம் செய்து வருகிறார்கள் அவர்களைக் காலையிற் காசியிற் பார்க்கலாம்; மத்தியா னத்தில் மதுரையிற் பார்க்கலாம். அந்தி நேரத்தில் அயோத்தியிற் பார்க்கலாம். அவர்கள் ஆசையையே இறகாகக் கொண்டு, பக்ஷி போற் பறந்து திரிகிறார்கள். அவர்களுக்கு ரெயில் வண்டி வேகமும் போதாமையினால், தந்தித் தபால் வழியாய்ப் பிரயாணம் செய்யக் கூடாம லிருப்பதற்காக, சார்வதா விசனப்படுகிறார்கள். இந்த விசுவ சஞ்சாரிக ளிடத்தில் வியாச்சியங்களைக் கொடுப்பதைப் பார்க்கிலும், சகல அஸ்தாந்தரங்களையும் அக்கினிக்குத் தத்தம் செய்து விடுவது நன்மையா யிருக்கும். ஒரு ஊரை விட்டு மற்றொரு ஊருக்குப் போகிற வக்கீல், தனக்காக வேறொரு வக்கீலை ஆஜராகும்படி சொல்லி விட்டுப் போவது வழக்கமா யிருக்கிறது. இந்த வழக்கம் யாரால் எக்காலத்தில் ஏற்பட்ட தென்பது ஒருவருக்கும் தெரியாது. ஒரு வக்கீல், கக்ஷிக்காரனிடத்தில் பீசு வாங்கிக் கொண்டு, அவனுடைய வழக்கு முழுமையும் தானே சுயமாக நடத்துவதாக ஒப்புக் கொண்டிருக்க, அந்த உடன் படிக்கைக்கு விரோதமாக, அந்த வக்கீல் வேறொரு வக்கீலை எப்படி நியமிக்கக்கூடும்? கவர்மென்றாரால் நியமிக்கப் பட்ட ஒரு உத்தியோகஸ்தன் சுயமே வேலை பாராமல், தன்னுடைய ஸ்தானத்தில் வேறொரு உத்தியோகஸ்தனை நியமிக்கக் கூடுமா? ஒரு காரியஸ்தன், எசமானுடைய உத்தர வில்லாமல், தனக்குப் பதிலாக வேறொரு காரியஸ்தனை நியமித்து விட்டு, நினைத்தபடி திரியலாமா? இந்த வினாக்களுக்கு யாவரும் எதிர்மறையாக உத்தரம் சொல்லுவார்களெனறு நம்புகிறோம். அப்படியானால், ஒரு கக்ஷிக்காரனால் நியமிக்கப்பட்ட வக்கீல், தனக்காக ஆஜராகிப் பேசும்படி வேறொரு வக்கீலுக்கு எப்படி அதிகாரம் கொடுக்கக்கூடும்? ஒரு வக்கீல் சம்பந்தப்பட்ட வழக்கைக் கோர்ட்டார் விசாரிக்கப் போகிற தற்சமயத்தில், அந்த வக்கீல் வேறொரு விக்கீலை நியமித்து விட்டுப் போகிற படியால், அந்தப் புது வக்கீலுக்கு வியாஜிய நடபடிகளைப் பார்க்க மனமு மில்லாமல், நேரமு மில்லாமல் அநேக வழக்குகள் அதோகதியாய்ப் போகின்றன. சில சமயங்களில், அந்தப் புது வக்கீலுக்கும் கக்ஷிக்காரன் தஸ் தூரி கொடுத்து, பல விதத்திலும் நஷ்டம் அடைகிறான். தன்னுடைய வக்கீல் ஆஜராகாமற் போனதினால் நஷ்டம் அடைந்த கக்ஷிக்காரன், அந்த நஷ்டத்துக் காக வக்கீல் மேலே தாவா செய்ய யாதொரு தடையு மில்லை. ஒரு வக்கீலுக் காக வேறொரு வக்கீல் ஆஜராகிற வழக்கம் அக் கிரமத்திலே பிறந்து, அக்கிரமத்திலே வளர்ந்து, அக்கிரமத் திலே நிலைமை பெற்றிருப்பதால், அதை ஒவ்வொரு கோர்ட் டாரும் திக்காரம் செய்ய வேண்டும். அந்தத் துர் வழக்கம் மேலான கோர்ட்டுகளிலும் நடந்து வருவதாகச் சிலர் சொல்லுகிறார்கள். அக்கிரமத்தை கிரம மாக்கவும், கிர மத்தை அக்கிரம மாக்கவும் ஒரு கோர்ட்டாருக்கும் அதி கார மில்லை யென்பது, பொது விதியா யிருக்கிறது.
வக்கீல் தனக் குள்ள நேரத்தையும், சாவகாசத்தையும். தன்னுடைய சக்தியையும் ஆலோசித்து, மிதமாக வியாஜி யங்களை அங்கீகரிக்க வேண்டுமே தவிர, பொருளா சையினாற் பல ஊர்களிலும் கோர்ட்டுகளிலும், எண்ணிக்கை யில்லாத வியாஜியங்களை வாங்கிக் கொண்டு, ஒன்றையும் கவனிக்க நேர மில்லாமல் திண்டாட்டப் படக் கூடாது வக்கீலுடைய சக்திக்கு மேற்பட்ட வழக்குகளை வாங்குவது, கக்ஷிக்காரர்களுக்கு நஷ்டகர மாயும், வக்கீலுடைய சரீர சௌக்கியத்துக்கே குறைவாகவும் முடியும். ஒரு வழக்கை வக்கீல் அங்கீகரித்துக் கொண்டால், அது அநுகூலிக்கும் பொருட்டு, வக்கீலாற் கூடிய மட்டும் பரிசிரமப் பட வேண் டும். அந்த வழக்கின் சாராம்சங்களையும், சகல சக்திகளை யும், !வக்கீல் நன்றாக கவனித்து, அதற்கேற்ற சட்டங்களை யும், சாஸ்திரங்களையும், மேற் கோர்ட்டா ருடைய சித்தாந் தங்களையும், எதிர் கக்ஷியின் துர்ப் பலங்களையும் எடுத்துக் காட்டி, சபா கம்பமில்லாமல், வாசக தாட்டி யாகவும், சமய ரஞ்சிதமாகவும், வாதிக்க வேண்டும். ஆனால் நடந்த காரியங்களை வக்கீல் விவரிக்கிற விஷயத்தில்; கக்ஷிக்காரன் சொன்ன படி விவரிக்க வேண்டுமே யல்லாது, நூதன சங்கதிகளைச் சிருஷ்டிப்பதும், கக்ஷிக்காரனுக்குச் சாக்ஷி திட்டம் பண்ணிக் கொடுப்பதும், வக்கீலுடைய வேலையல்ல. சில வக்கீல்கள், எதைக் கிரம மென்று ஒரு வழக்கில் வாதித்தார்களோ, அதைத் தானே அக்கிரம மென்று வேறொரு வழக்கில் வாதிக்கிறார்கள். பிள்ளைகளுக்குத் தகுந்த வயசு வராமலிருக் கும்போது, தகப்பன் எந்தக் காரணத்தைப் பற்றியும் சொத்துக்களை விநியோகம் செய்யக்கூடாதென்றும், அப்படி விநியோகம் செய்தால், தகுந்த வயது வந்த வுடனே பிள்ளைகள் ஆக்ஷேபிக்கலா மென்றும், ஒரு வழக்கில் வக்கீல் வாதிடுகிறார்.பிறகு அந்த வக்கீல் தானே அன்றையத்தினம் விசாரணையாகிற வேறொரு வழக்கில், பிள்ளைகள் பாலியர் களா யிருக்கும் போது தகப்பன் யதேச்சா விநியோகம் செய்யாலா மென்றும், பிள்ளைகள் ஒரு காலத்திலும் அதை ஆக்ஷேபிக்கக் கூடாதென்றும் வாதிடுகிறார். யாதொரு காரணமு மில்லாமல் புருஷளை விட்டு வெளிப் பட்டுப் போய் விட்ட ஸ்திரீக்கு, புருஷன் பிரத்தியேக மான ஜீவனாம்சம் கொடுக்க வேண்டு மென்று, ஒரு வழக்கில், வக்கீல் வாதிக் கிறார். அதே விதமான வேறொரு வழக்கில், பெண்சாதிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய தில்லை யென்று வாதிக் கிறார். இப்படியாக, சமயத்துக்குத் தக்கபடி, வழக்குக்கு வழக்கு பரஸ்பர விரோத மாக, வக்கீல் செய்யும் வாதம் துர் வாதம் அல்லவா?
சகல வழக்குகளிலும், சாஸ்திரமும் நியாயமும் ஒரே தன்மையா யிருக்குமே யல்லாது, வழக்குக்கு வழக்கு பேதிக்குமா? ஆனால், நடந்த சங்கதிகளிலும் விஷயாந் தரங்களிலும் பேத மிருக்கு மானால், அந்தந்த வியாஜிய ரீதிக்குத் தக்க படி வெவ்வேறு விதமாக வாதிப்பது கிர மமே, எப்படி யென்றால், தகப்பன் ஊதாரியாயும், ஆரா தூரிக்காரனாயும், தூர்த்தனாயு மிருந்து, சிறு பிள்ளைகளு. டைய ஹிதத்துக்கு, விரோதமாகச் சொத்துக்களைத் துர் விநி யோகம் செய்திருப்பா னானால், அந்த விநியோகம் செல்லாதென்று வக்கீல் ஆக்ஷிேபிக்க என்ன தடையிருக்கிறது? வேறொரு வக்கீல், தகப்பன் பிள்ளைக ளுடைய ஹிதத்தை நாடியே குடும்ப உபயோகார்த்தமாக சத் விநியோகம் செய் திருந்தால். அந்த விநியோகம் செல்லு மென் று வக்கீல் வாதிக்கவும் பிரதி பந்த மில்லை. ஒரு வழக்கில், புருஷன் ஒரு பர ஸ்திரீயைச் சேர்த்துக் கொண்டு, தன் பத்தினியை நிஷ்காரண மாக அடித்துத் துரத்தி, அநியாயம் செய்திருப் பானானால், அவன் பெண்சாதிக்குப் பிரத்தியேக ஜீவனாம்சம் கொடுக்க வேண்டு மென்று வக்கீல் வாதிக்கலாம். வேறொரு வழக்கில், பெண்சாதி யாதொரு காரண மில்லாமல், ஸ்வேச் சையாய்ப் புருஷனை விட்டு விலகிப் போயிருப்பா ளானால், அவள் பிரத்தியேக ஜீவனாம்சத்துக்கு அபாத்தியஸ்தி யென்று வக்கீல் பேச என்ன விக்கின மிருக்கிறது? இப் படிப் பட்ட விஷய பேத மான வழக்குகளில் வக்கீல் வெவ் வேறு வித மாக வாதிக்கலாமே யல்லாது, ஒரே தன்மை யான வழக்குசளில் வித்தியாச மாகப் பேசுவது விபரீத மல் லவா? நியாய வாதிகள் நியாயாதிபதிகளுக்கு அடுத்த படியி லிருப்பதாலும், ஒரு கால் அவர்கள் நியாயாசனத்தில் ஏறவும் கூடு மாகையாலும், நியாய வாதிகள் நீதிமான்களா யும்,சர்வ குணோத்தமர்களாயும் பிரகாசிக்க வேண்டும்,” என்றாள்.
42-ஆம் அதிகாரம்
சுதேச பாஷாபிவிர்த்தி-தமிழின் அருமை
முந்தின அதிகாரத்திற் கூறிய படி, ஞானாம்பாள் வக் கீல்களுக்கு நியாய பேதம் செய்த பிறகு, மறுபடியும் அவர் களைப் பார்த்துச் சொல்லுகிறாள்:- “இங்கிலீஷ் அரசாட் சியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற தமிழ்க் கோட்டுகளில், சில தமிழ் நியாய வாதிகள், தமிழில் வாதிக்காமல், இங்கிலீஷில் வாதிக்கிறார்க ளென்று கேள்விப்படுகிறோம். தேச பாஷை யும் தமிழ்! கோர்ட்டில் வழங்கா நின்ற பாஷையும் தமிழ்! நியாயாதிபதியும் தமிழர்! வாதிக்கிறவக்கீலும் தமிழர்! மற்ற வக்கீல்கள் கக்ஷிக்காரர்கள் முதலானவர்களும் தமிழர் கள்! இப்படி யாக, எல்லாம் தமிழ் மயமா யிருக்க, அந்த வக்கீல்கள் யாருக்குப் பிரீதி யார்த்த மாக இங்கிலீஷில் வாதிக்கிறார்களோ தெரிய வில்லை! அப்படி வாதிக்கிறதினால், அவர்களுக்குத்தான் என்ன சிலாக்கியம்? மற்றவர்களுக்குத் தான் என்ன பாக்கியம்? நியாயாதிபதி யாவது அல்லது வக்கீ லாவது இங்கிலீஷ்காரரா யிருக்கிற பக்ஷத்தில், இங் லீஷில் வாதிப்பது நியாயமா யிருக்கலாம். தமிழ் நியாயாதி பதி முன்பாக, தமிழ் வக்கீல், இங்கிலீஷில் வாதிப்பது ஆச்ச ரிய மல்லவா? ஜனங்களுக்கு இங்கிலீஷ் தெரியா தாகை யால், ஐரோப்பியர்கள் கூட, இத் தேச பாஷையில் பரீக்ஷை கொடுக்க வேண்டு மெனறும், அவர்கள் தேச பாக்ஷையிலே சம்பாஷிக்க வேண்டுமென்றும். சட்டம் ஏற்பட் டிருக்கிறது. அவர்கள் அந்தப் படி பரீக்ஷை கொடுத்து வருவது பன்றி, கட்சிக்காரர்க ளிடத்தில் தேச பாஷையிலே சம்பாஷிக்கப் பிரியப் படுகிறார்கள். அப்படி யிருக்க, சுதேசிக ளான வக்கீல்கள் சொந்தப் பாஷையைத் தள்ளி விட்டு, அந்நிய பாஷையில் வாதிப் பது அசந்தர்ப்ப மல்லவா? தங்களுக்குத் தமிழில் நன்றா கப் பேசத் தெரியாமையினால், இங்கிலீஷில் வாதிப்ப தாக, தங்களுக்குக் கௌரவம் போலச் சொல்லிக் கொள்ளுகி றார்கள். சுய பாஷை பேசத் தெரியாம லிருப்பது போல இழிவான காரியம் வேறொன் றிருக்கக் கூடுமா? ஒரு ஐரோப்பியர் தம்முடைய சுய பாஷையில் தமக்குப் பேசத் தெரியா தென்று சொன்னால், இந்த வக்கீல்களே அவரைப் பழிக்க மாட்டார்களா? அப்படியே, தங்களுடைய சுய பாஷையில் தங்களுக்கு வாதிக்கத் தெரியா தென்று சொல்வது, அவர்களுக்கு அவமானம் அல்லவா?
நியாய சாஸ்திரங்க ளெல்லாம் இங்கிலீஷ் பாஷையி லிருப்பதாலும், இங்கிலீஷிலிருக்கிற நீதி வாக்கியங்களுக்குச் சரியான பிரதி பதங்கள் தமிழில் இல்லாமை யாலும், தாங்கள் இங்கிலீஷ் பாஷையை உபயோகிப்ப தாகச் சில வக்கீல்கள் சொல்லுகிறார்கள். இங்கிலீஷ் வார்த்தைகளுக்குச் சரியான பிரதி பதங்கள் தமிழில் இல்லை யென்று வக்கீள்கள் சொல்வது, அவர்களுடைய தெரியாமையே யல்லாமல் உண்மை யல்ல. தமிழ் நூற்களைத் தக்கபடி அவர்கள் ஆராய்ந்தால், பிரதி பதங்கள் அகப்படுவது பிரயாசமா? அப்படித்தான் இரண்டொரு சங்கேத வார்த்தைகளுக்குத் தமிழிலாவது சமஸ்கிருதத்திலாவது பிரதி பதங்கள் அந்த வார்த்தைகளை மட்டும் அகப்படாத பக்ஷத்தில், இங்கிலீஷிலே பிரயோகித்தால், அவர்களை யார் கோபிக்கப் போகிறார்கள்? தமிழிலே வாதித்தால், இங்கிலீஷ் மறதியாய்ப் போகு மென்கிற பயத்தினால், சிலர் இங்கிலீஷிலேயே வாதிக் கிறார்கள். அவ்வளவு சொற்பத்தில் மறந்து போகிற இங்கிலீஷ், இந்த வக்கீல்களுடன் எத்தனை நாள் கூடி வாழப் போகிறது? வக்கீல்கள் இங்கிலீஷில் வாதிப்பது அக்கிரம மென்று சில தமிழ் நியாயாதிபதிகளுக்குத் தெரிந் திருந்தும், அதைக் கண்டித்தால், தங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதென்று வக்கீல்களும் மற்றவர்களும் நினைப்பார் களென்று எண்ணி, இங்கிலீஷ் வாதத்துக்கு இடங் கொடுத்து வருகிறார்கள். பின்னும், அந்த நியாயாதிபதி களும், கோர்ட்டுகளில் எப்போதும் இங்கிலீஷையே உப யோகப்படுத்தி, அநேக நடவடிக்கைகளை இங்கிலீஷிலே நடத்துகிறார்கள். சில சமயங்களில், வக்கீலும் நியாயாதி பதியும் இங்கிலீஷை நன்றாகப் படியாதவர்க ளானதால், ஒருவர் சொல்வது ஒருவருக்குத் தெரியாமல், கைச்சாடை செய்து கொண்டு, சர்வ சங்கடப் படுகிறார்கள். அந்தக் கோர்ட்டுகள் நாடக சாலையாகத் தோன்றுகின்றனவே யல்லாமல், நியாய சபையாகத் தோன்றவில்லை. ஒவ்வொரு வழக்கிலும் உண்மையைக் கண்டுபிடித்து நீதி செலுத்த வேண்டியது கோர்ட்டாருடைய கடமையா யிருக்கிறது. ஜனங்களுக்குத் தெரிந்த பாஷையிலே வக்கீலினுடைய வாதமும் மற்ற நடபடிகளும் நடந்தால் மட்டும் உண்மை வெளியாகுமே தவிர, அவர்களுக்குத் தெரியாத பாஷையில் நடந்தால் எப்படி உண்மை வெளியாகும்? இங்கிலீஷ் தெரிந்த சுதேச நியாயாதிபதிகள் சித்தாந்த மட்டும் இங்கிலீஷில் எழுதலா மென்று, சிவில் புரோசிடியூர்க் கோடு (Civil Procedure Cods) சொல்லுகிறதே யல்லாமல், மற்ற நடபடிகளையும் இங்கிலீஷில் நடத்தும்படி சொல்ல வில்லை. வெளிப் பிரதேசக் கோர்ட்டுகளில் சுதேச பாஷை களையே உபயோகிக்க வேண்டு மென்றும், அந்நிய பாஷைகளை உபயோகிக்கக் கூடா தென்றும், இங்கிலீஷ் துரைத்தனத்தாரே உத்தரவு செய்திருக்கிறார்கள். அப்படி யிருக்க சில தமிழ் நியாயாதிபதிகளும், சில வக்கீல்களும், இங்கிலீஷ் பாஷையை மறந்து போகாமலிருக்க வேண்டிய தற்காக, இங்கிலீஷைக் கலந்து, நியாய பரிபாலனத்தைக் குளறுபடி செய்வது கிரமமா?
கோர்ட்டில் நடக்கிற விசாரணைகளும், தீர்மானங் களும், அபராதங்களும், ஆக்கினைகளும் சகல ஜனங்களுக்கும் பிரசித்தமாய்த் தெரிந்திருந்தால், அவர்கள் தங்கள் தங்களுடைய காரியங்களில் ஜாக்கிரதையா யிருக்கவும், துன்மார்க்கங்களிற் பிரவேசிக்காம லிருக்கவும், எல்லா ருக்கும் அநுபோகம் உண்டாகும் அல்லவா? கோர்ட்டில் நடக்கிற விவகாரங்களைக் கேட்டு விவேகம் அடைவதற்காகவே, ஜனங்கள் கூட்டம் கூட்டமாய்க் கோர்ட்டுகளுக்குப் போய், காத்திருக்கிறார்கள். அவர்களுடைய முகத்திலே கரியைத் தடவுவது போல, அவர்களுக்குத் தெரியாத பாஷையில் விவகாரம் நடந்தால், அவர்களுக்கு என்ன ஞானம் உண்டாகக்கூடும்? குருடன் கூத்துப் பார்க்கப் போனது போலவும், செவிடன் பாட்டுக் கேட்கப் போனது போலவும், யாதொரு பிரயோஜனமு மில்லாமல், அவர்கள் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். தமிழ்க் கோர்ட்டு களில், இரண்டொரு வக்கீல்களுக்கு மட்டும் இங்கிலீஷ் தெரியுமே யன்றி, மற்ற வக்கீல்களெல்லாரும் இங்கிலீஷ் தெரியாதவர்களா யிருக்கிறார்கள். ஒரு வக்கீல் இங்கிலீஷில் வாதிப்பது, இங்கிலீஷ் தெரியாத மற்ற வக்கீல்களுக்கு அவமானம் அல்லவா? அவர்களுடைய வருமானத்துக்குக் குறைவு அல்லவா? தமிழ் நியாயாதிபதி முன்பாக, இங்கிலீஷில் வாதிக்கிற தமிழ் வக்கீல், இந்தத் தமிழ் நாட்டையும், தமிழ்ப் பாஷையையும், மற்ற வக்கீல்களையும், கட்சிக்காரர்களையும், சகல ஜனங்களையும் மெய்யாகவே அவமானப் படுத்துகிறார். அவருடைய வாதம் யாவருக்கும் கர்ண கடோரமா யிருப்பதால், அவர் எப்போது நிறுத்துவாரோ வென்று எல்லாரும் கடுகடுத்துக் கொண் டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் முக மிருக்கிற கோரத்தை இந்த வக்கீலே திரும்பிப் பார்ப்பாரானால், அப்பால் ஒரு வார்த்தை கூடப் பேச அவருக்குத் தைரியம் ண்டாகாது. இப்படியாக, அந்த வக்கீல்களுடைய வாதம் அபவாதமாக முடிகிறபடியால், நீங்களும் அவர் களைப் போல அந்நிய பாஷைகளில் வாதிக்காமல், தமிழிலே வாதிப்பீர்களென்று நம்புகிறோம்.
புலியைப் பார்த்து நரி சூடிட்டுக் கொண்டது போல, இங்கிலீஷில் வாதிக்கிற வக்கீல்களைப் பார்த்து, இங்கிலீஷ் நன்றாகத் தெரியாத சில வக்கீல்களும், அரைப் படிப்பைக் கொண்டு அம்பல மேறுவது போல, இங்கிலீஷில் வாதிக்கத் துணிகிறார்கள். அவர்கள் சொல்வது கோர்ட் டாருக்குத் தெரியாமலும், கோர்ட்டார் சொல்வது அவர் களுக்குத் தெரியாமலும், அவஸ்தைப்படுகிறார்கள். அப்படிப் பட்ட ஒரு வக்கீல், ஒரு பெரிய வழக்கில் ஒரு ஜமீன் தாருக்கு வக்கீலாயிருந்தார். அந்த வக்கீலினுடைய இங்கிலீஷ் வாதத்தினாலேயே அந்த வழக்கு அப ஜெய மாய்ப் போய், ஜமீன் தாருக்கு விரோதமாய்க் கோர்ட்டார் இங்கிலீஷில் ஒரு பெரிய சித்தாந்தம் எழுதிப் படித்தார். அந்தச் சித்தாந்தம் ஜமீன்தாருக்கு அனுகூலமென்று வக்கீல் பிசகாக எண்ணிக்கொண்டு, ஜமீன்தாருடைய ஊருக்குப்போய், அவர் பக்ஷம் தீர்ப்பானதாகத் தெரிவித்தார். அதைக் கேட்டவுடனே, ஜமீன்தாருக்கு ஆநந்தம் உண்டாகி, வக்கீலுக்கு அளவற்ற வெகுமானம் செய்ததுமன்றி, கோயிலுக்குக் கோயில் அபிஷேகங்களும் தான தர்மங்களும், ஏழைகளுக்குக் கலியாணங்களும், விருந்துகளும், வேடிக்கைகளும் செய்தார். கோர்ட்டார். தீர்மானம் சொன்ன அன்றைத் தினமே கோடை காலத்துக்காக இரண்டு மாசக் காலம் கோர்ட்டு நிறுத்தப் பட்டு, எல்லாரும் அவரவர்களுடைய ஊர்களுக்குப் போய் விட்டதால், ஜமீன்தாருக்கு உண்மை தெரிய இட மில்லாமற் போய்விட்டது. அவர் வரப்போகிற வியாஜ்யச் சொத்தை நம்பி, கையிலிருந்த சொத்துக்களை யெல்லாம் மேற் கூறியபடி விருதா விரயம் செய்து விட்டார். கோர்ட்டுத் திறந்து, உண்மை தெரிந்த உடனே, ஜமீன் தாருக்கும் வக்கீலுக்கும் என்ன பிரமாதம் நடந்திருக்கு, மென்பதை நான் சொல்ல வேண்டுவ தில்லையே.
இங்கிலீஷ் அரசாட்சியில், வக்கீல்களைப் போலவே, மற்ற உத்தியோகஸ்தர்களும், வித்தியார்த்திகளும், சுதேச பாஷைகளை நிகிர்ஷடம் செய்கிறார்கள். “ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்தினது” போல, இங்கிலீஷ், பிரான்சு முதலிய அந்நிய பாஷைகள் மேலிட்டு, பாஷைகளின் சீரைக் குலைத்து விட்டன. அந்த இராஜ பாஷைகள் ஜீவனத்துக்கு மார்க்கமா யிருக்கிறபடி யால், அநேகர் வயிறே பெரி தென் றெண்ணி, அந்தப் பாஷைகளை மட்டும் அதிக சிரத்தையாகப் படிக்கிறார்கள். இராஜாங்கத்தாருடைய சகாயம் இல்லாம லிருக்கு மானால், சில வருஷங்களுக்கு முன்னமே சுதேச பாஷைகள் இருந்த இடம் தெரியாமல் அப்பிரசித்தமாய்ப் போயிருக்கும். இரா ஜாங்கத்தார் சுதேச பாஷைகளைச் சில பரிக்ஷைக ளுடன் சேர்த்து, அவைகள் இந்நாளளவும் ஜீவித்திருக்கும்படி ஆதரித்து வந்தார்கள். அப்போது, அவர்களே உபேக்ஷையா யிருப்பதால், சுதேச பாஷைகளுக்கு நாளுக்கு நாள் ஜீவ தாது குறைந்து வருகின்றது. வித்தியார்த்திகளுடைய இஷ்டப்படி, சுதேச பாஷைகளை யாவது, அல்லது லத்தீன் (Latin), சமஸ்கிருதம் (Sinskrit) முதலிய பாஷைகளை யாவது படிக்கலாமென்று, துரைத்தனத்தாரே நியமனம் செய்திருப்பதால், சுதேச பாஷைகளுக்கு ஜீவாந்த காலம் சமீபித்திருக்கின்றது. சென்னப்பட்டணம் ஸெனட் (Snate) என்னும் ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்த அநேக பிரபுக் கள், சுதேச பாஷைகளை ஆதரிக்காமல் விட்டு விட்டார்கள். ஆனால், அந்தச் சங்கத்தில் இரண்டொரு சுதேச கனவான் கள், அத்தியாவஸ்தையி லிருக்கிற சுதேச பாஷைகளுக்குப் பிராண தரகங் கொடுந்து, காப்பாற்றி வருகிறார்கள். இங் லீஷ்காரர்கள், தங்களுடைய சுதேசங்களில், இங்கிலீஷை யாவது அல்லது வேறெந்தப் பாஷையை யாவது இங்கிலீஷ் பிள்ளைகள் படிக்கலா மென்று உத்தரவு செய்வார்களா? அப்படி இராஜாங்கத்தார் உத்தரவு செய்தாலும், ஜனங்கள் இங்கிலீஷ் பாஷையை விட்டு விட்டு அந்நிய பாஷைகளை அப்பியசிப்பார்களா? அப்படி யிருக்க, இந்தத் தேசத்தார் சொந்தப் பாஷைகளை யாவது, அல்லது எந்தப் பாஷைகளை யாவது படிக்கலா மென்று இங்கிலீஷ் துரைத்தனத்தார் உத்தரவு செய்திருப்பதும், அந்த உத்தரவைச் சுதேச கன வானகள் ஆக்ஷேபிக்காமல் சும்மா இருப்பதும் நியாயமா? நம்முடைய தேசாசாரங்களையும், குல சம்பிரதாயங்களையும், அதிகாரிகள் விட்டுவிடச் சொன்னால், விட்டு விடுவோமா? மத்தியில் உண்டான தேசாசாரங்களைப் பார்க்கிலும், ஆதி கால முதல் உண்டா யிருக்கிற தேச பாஷை அதி உத்திருஷ்ட மல்லவா?
எண் ணிறந்த தேவாலயங்களும், பிரமாலயங்களும், அன்ன சத்திரங்களும், நீர்வளமும், நிலவளமும், நாகரீகமும், ஆசார நியமங்களும் நிறைந்த இந்தத் தமிழ்நாடு, மற்றைய நாடுகளிலும் விசேஷமென்றும், அப்படியே, தமிழ்ப் பாஷை யும் சர்வோத்கிருஷ்ட மான பாஷை யென்றும் சகலரும் அங்கீகரிக்கிறார்கள். அகஸ்தியர் நாவிலே பிறந்து, ஆரி யத்தின் மடியிலே வளர்ந்து, ஆந்திரம் முதலிய பாஷை களின் தோழமைபெற்று, சங்கப் புலவர்களுடைய நாவிலே சஞ்சரித்து, வித்துவான்க ளுடைய வாக்கிலே விளை யாடி, திராவிட தேசம் முழுதும் ஏக சக்ராதிபத்தியம் செலுத்தி வந்து தமிழ் அரசியை இப்போது இகழலாமா? நம்மைப் பெற்றதும் தமிழ், வளர்த்ததும் தமிழ்; நம்மைத் தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ். நம்முடைய மழலைச் சொல்லால், நமது தாய் தந்தையரைச் சந்தோஷித்ததும் தமிழ். நம் குழந்தைப் பருவத்திற் பேச ஆரம்பித்த போது, முந்தி உச்சரித்ததும் தமிழ். நம்முடைய அன்னையும் தந்தை யும் நமக்குப் பாலோடு புகட்டினதும் தமிழ். தாய்,தந்தை, குரு முதலானவர்கள் நமக்கு ஆதியில் உபதேசித்ததும் தமிழ். ஆதி காலம் முதல் நம்முடைய முன்னோர்க ளெல்லோரும் பேசின பாஷையும், எழுதி வைத்த பாஷையும் தமிழ். இப்போது நம்முடைய மாதா பிதாக்களும், பந்து ஜனங் களும், இஷ்ட மித்திரர்களும் இதரர்களும் பேசுகிற பாஷையும் தமிழ். நம்முடைய வீட்டுப் பாஷையும் தமிழ்; நாட்டுப் பாஷையும் தமிழ். இப்படிப்பட்ட அருமை யான பாஷையை விட்டு விட்டு சமஸ்கிருதம், லத்தீன் முதலிய அந்நிய பாஷைகளைப் படிக்கிறவர்கள், சுற்றத்தார் களை விட்டுவிட்டு, அந்நியர்க ளிடத்தில் நேசம் செய்கிறவர் களுக்குச் சமானமா யிருக்கிறார்கள். ஆபத்துக் காலத்தில் சுற்றத்தார் உதவுவார்களே யல்லாது, அந்நியர்கள் எப்படி உதவ மாட்டார்களோ, அப்படியே, எந்தக் காலத்திலும் நமக்குச் சுய பாஷை உதவுமே யல்லாமல், அந்நிய பாஷை கள் உதவுமா? லத்தீனுக்கும் சமஸ்கிருதத்துக்கும் சொந்தக் காரர்கள் இல்லாமையால், அவைகள் இறந்துபோன பாஷை களாயும், தமிழ் முதலிய தேச பாஷைகள் ஜீவிக்கிற பாஷை களாயும், இருக்கின்றன. பல பாஷைக்காரர்கள் ஒரு வருடன ஒருவர் கலந்து பேசுவதும், ஒருவருடைய கருத்தை ஒருவருக்கு வெளிப்படுத்துவதுமே, பாஷாந்தரங்களை படிப் பதினால் உண்டாகிற முக்கிய பிரயோஜனமா யிருக்கிறது. ஒரு பாஷைக்குச் சொந்தக்காரர்களே இல்லாம லிருப்பார் களானால், அந்தப் பாஷையை நாம் படித்து யாரிடத்திலே சம்பாஷிக்கப் போகிறோம்? சமஸ்கிருதம் லத்தீன் முதலிய பாஷைகள் அதிக கடினமும் வருத்தமுமான பாஷை களாயும், சீக்கிரத்தில் மறந்து போகத் தக்கவைகளாயும் இருக்கின்றன. அவைகளில் இலக்கணம், இலக்கியம், தர்க்கம் முதலிய பல பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவைப் படிப்பதற்கு ஒரு புருஷ ஆயுசு போதா தென்று, அந்தப் பாஷைகளை உணர்ந்தவர்கள் சொல்லுகிறார்கள். சம்பா ஷணைக்கும் உலக வியாபாரங்களுக்கும் உபயோகமில்லாத அந்தப் பாஷைகளை அவ்வளவு பிரயாசைப் பட்டுப் படித்தும் பிரயோஜன மென்ன? ஆனால் சமஸ்கிருதமும், லத்தீனும் அதிக சிறப்பும் அழகும் அலங்காரமும் பொருந்திய பாஷைகளென்பதற்குச் சந்தேக மில்லை. அவகாச முள்ளவர்கள் சொந்தப் பாஷைகளோடு கூட அந்தப் பாஷைகளையும் படிப்பது, அதிக விசேஷந்தான். ஆனால், சொந்தப் பாஷைகளை நன்றாகப் படிக்காமல், அந்த அந்நிய பாஷைகளிலே கால மெல்லாம் போக்குவது அகாரிய மென்றுதான் நாம் ஆக்ஷேபிக்கிறோம்.
இங்கிலீஷ், பிரான்சு முதலிய இராஜ பாஷைகளைப் படிப்பிக்க வேண்டா மென்றும் நாம் விலக்க வில்லை. ஏனென்றால், நாம் நடக்க வேண்டிய சட்டங்களும், ஒழுங்கு களும், நியாயப் பிரமாணங்களும், இராஜ பாஷைகளிலே யிருக்கிற படியால், அந்தப் பாஷைகள் நமக்குத் தெரியா விட்டால், அந்த இராஜாங்கத்தில் நாம் எப்படி நிர்வகிக்கக் கூடும்? அன்றியும், சன்மார்க்கங்களைப் பற்றியும், உலகத்துக்கு மிகவும் உபயோகமான பல விஷயங்களைப் பற்றியும், அந்த இராஜ பாஷைகளில் அநேக அருமையான கிரந்தங்கள் இருக்கிற படியால், அவைகளைப் படிக்கப் படிக்க அறிவு விசாலிக்கு மென்பது திண்ணம். ஆனால், மாதா வயி றெரிய மகேசுர பூஜை செய்வது போல், சொந்தப் பாஷைகளைச் சுத்தமாக விட்டு விட்டு, இராஜ பாஷைகளை மட்டும் படிப்பது அநுசித மல்லவா? அநேகர், தங்கள் சுய பாஷைகளில், தங்களுடைய கையெழுத்துக்களைக் கூடப் பிழை யில்லாமல் எழுத அசக் தர்களா யிருக்கிறார்கள். சிலர் தமிழ்ப் பாஷை தெரியாம லிருப்பது தங்களுக்குக் கௌரவ மாகவும், அந்தப் பாஷையை அறிந்திருப்பது தங்களுக்கு அகௌரவமாகவும், எண்ணுகிறார்கள். சுய பாஷா ஞானம் தங்களுக்கு எவ்வளவு குறைவாயிருக்கிறதோ, அவ்வளவுக்கு இராஜ பாஷைகளில் தங்களைச் சமர்த்தர்க ளென்று சகலரும். எண்ணுவார்களென்று நினைத்து, சுய பாஷைகளை முழுதும். அலக்ஷியம் செய்கிறார்கள். அவர்கள் தமிழ்ப் புஸ்த கங்களைக் கையிலே தொடுகிறதா யிருந்தால், பாம்பின் புற்றுக் குள்ளே கையை விடுவதுபோலிருக்கும். அவர் களுக்குத் தமிழ்ப் பாஷை பேசுகிறது வேப்பிலைக் கஷாயம் குடிப்பது போலிருக்கும். தமிழ் வார்த்தைகளைக் கேட்பதும் அவர்களுக்குக் கர்ண கடோரமாயிருக்கும். அவர்கள் தமிழ்ப் பாஷையைப் பேசினாலும், முக்காற் பங்கு இங்கிலீஷம், காற்பங்கு தமிழுமாக, கலந்து பேசுவார்கள். அவர்களுக்குத் தேசாபிமானமுமில்லை, பாஷா பிமானமுமில்லை. யானை முதல் எறும்பு கடையாக உள்ள சகல ஜீவ ஜந்துக்களுக்கும், தனித்தனியே ஒவ்வொரு பாஷை சொந்தமா யிருக்கின்றது. அந்தந்த ஐந்துக் களுக்குரிய பாஷைகளை அவைகள் ஒரு காலத்திலும் மற வாமல், எப்போதும் உபயோகித்துக்கொண்டு வருகின்றன. இங்கிலீஷ்காரர் முதலிய ஐரோப்பியர்கள், தங்கள் தங்களுடைய சொந்தப் பாஷைகளை எவ்வளவோ கௌரவ மாகப் போற்றி வருகிறார்க ளென்பதை இந்த வித்தியார்த்திகளே அறிவார்கள். இவர்கள் மட்டும், தங்கள் ஜன்ம பாஷையாகிய தமிழையும், தமிழ் வித்துவான். களையும், அவமதிக்கலாமா? தமிழ் நூற்களையே பாராத இவர்கள் அவைகளுக்கு எப்படிப் பழுது சொல்லக்கூடும்? திருவள்ளுவருடைய குறளை அவர்கள் ஜன்மாந்திரத் திலும் பார்த்திருப்பார்களா? கம்பருடைய கற்பனையைக் கனவிலும் கேட்டிருப்பார்களா? நாலடியார் செய்தவர் களுடைய காலடியை யாவது கண்டிருப்பார்களா? ஒளவையாருடைய நீதி நூலைச் செவ்வையாக அறிவார் களா? அதிவீரராம பாண்டியனை அணுவளவும் அறிவார் களா? இன்னும், எண்ணிக்கை யில்லாத தமிழ்ப் புலவர் களுடைய பிரபந்தங்களை இவர்கள் எக்காலத்திலும் பார்த்திரார்கள்.
இங்கிலீஷ் பிரான்சு முதலிய பாஷைகளைப் போல, தமிழில் வசன காவியங்கள் இல்லாமலிருப்பது பெருங் குறை வென்பதை நாம் ஒப்புக்கொள்ளுகிறோம். அந்தக் குறைவைப் பரிகரிப்பதற்காகத்தான், எல்லாரும் இராஜ பாஷைகளும் தமிழும் கலந்து படிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். இராஜ பாஷைகளும், சுதேச பாஷை களும், நன்றாக உணர்ந்தவர்கள் மட்டும், உத்தமமான வசன காவியங்களை எழுதக் கூடுமே யல்லாது, இதரர்கள் எழுதக் கூடுமா? வசன காவியங்களால் ஜனங்கள் திருந்த வேண்டுமே யல்லாது, செய்யுட்களைப் படித்துத் திருந்து வது அசாத்தியம் அல்லவா? ஐரோப்பிய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்குமானால், அந்தத் தேசங்கள் நாகரீகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக் கூடுமா? அப்படியே நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்கிற வரையில், இந்தத் தேசம் சரியான சீர்த்திருத்தம் அடையாதென்பது நிச்சயம். சுதேச பாஷைகளைப் படிக்காமல், இராஜ பாஷைகளை மட்டும் படிக்கிறவர்கள், மற்ற ஜனங்களுடன் கலவாமல், தாங்கள் ஒரு அந்நிய தேசத்தார் போல ஜீவிக்கிறார்கள். இராஜ பாஷை தெரியாத தங்களுடைய மாதா பிதாக்கள். மனைவி, மைந்தர் முதலியோர்களிடத்திற், பேசுவது கூட, அவர்களுக்கு அருவருப்பா யிருக்கிறது. தாங்களும் சுய பாஷைகளை நன்றாகப் படிக்காமலும், மற்றவர்களுக்குப் போதிக்காமலுமிருப்பது, அவர்களுடைய பிசகேயல்லாமல், அவர்களுடைய பந்து ஜனங்களின் பிசகல்லவே! இராஜ பாஷைகளைப் படித்துக் கல்வியின் அருமை அறிந்தவர் களே சுய பாஷைகளைக் கவனிக்காம லிருப்பார்களானால் இதர ஜனங்கள் எப்படிக் கவனிக்கக் கூடும்? ஸ்திரீ களும் மற்ற ஜனங்களும் சுய பாஷைகளைப் படித்துத் திருந்த வேண்டுமே யல்லாது, அவர்கள் எல்லாரும் இராஜ பாஷைகளைக் கற்றுணர்வது சாத்தியமான காரி யமா? சுய பாஷையைக் கல்லாமல், இராஜ பாஷையை மட்டும் படிக்கிறவர்கள், தாங்கள்மட்டும் பிழைக்க அறிவார்களே யன்றி, மற்றவர்களுக்கு அவர்களால் என்ன சாதகம்? சுய பாஷைகளைப் படிக்காதவர்கள், தாங்கள் கெடுவது மன்றி, ஐரோப்பியர்களையும் கெடுக்கிறார்கள். முன்வந்த ஐரோப்பியர்கள், இத் தேச பாஷைகளை எவ்வளவோ கவனமாகப் படித்தார்கள். இப்போது, சுதேசிகளே சுய பாஷைகளைக் கைவிட்டு விட்டபடியால், ஐரோப்பியர்களும், அந்த பாஷைகளை அபதார்த்தமாக எண்ணுகிறார்கள். இவ்வாறு நம்முடைய பாஷைகளை அந்நியர்கள் அவமதிக்கும்படி செய்வது அயுக்தம் அல்லவா?
இந்தத் தேசத்துப் பெரிய பிரபுக்கள், தனவான்கள், மிராசுதார்கள், ஜமீன்தார்கள், பாரிவர்த்தகர்கள் முதலான வர்களுடைய அறியாமையை நினைக்கும்போது, நமக்குப் பிரலாபமும், பெருமூச்சும், உண்டாகின்றன. அவர்களில் அநேகர் சுத்த நிரரகுக்ஷிகளா யிருக்கிறார்கள். சிலர் தங்களுடைய கையெழுத்துக்களை மட்டும் எழுதக் கற்றுக் ‘கொண்டிருக்கிறார்கள். “சுப்பிரமணியன்” என்பதற்கு, ”சுக்கிரமணியன்” என்றும், “சிதம்பரம்” என்பதற்கு, “செலம்பரம்’ என்றும், “துரைசாமி” என்பதற்கு, “தொறைசாமி” என்றும், “பொன்னம்பலம்” என்பதற்கு, “பொண்ணம்பளம்” என்றும். “வைத்திய லிங்கம்” என்பதற்கு, “வயித்துலிங்கம்” என்றும், கையெழுத்து வைக்கிறார்கள். இந்த வித்துவ சிரோ மணிகளே, ஜூரிகளாகவும் (Juries), முனிசிப்பல் கமிஷனர் களாகவும் (Municipal Commissioners), லோக்கல் போர்டு மெம்பர்களாகவும் (Local Board Members), பெஞ்சு மாஜிஸ் திரேட்டுகளாகவும் (Bench Magistrates), தேவாலய தர்மாலய (Trustees of temples and charitable institutions) விசாரணைக் கர்த்தாக்களாகவும், நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய அதிகார ஸ்தானங்களுக்குப் போகும்போது பிரதிமைகளைப் போல நாற்காலிகளில் வீற்றிருக்கிறார்களே யல்லாது, அவர்களுடைய வேலை இன்னதென்பதைப் பரிச்சேதம் அறியார்கள். பிரதிமைகளுக்கும் இவர் களுக்கும் பேதம் என்னவென்றால், பிரதிமைகள் அசையாமலிருக்கின்றன. இவர்கள் நாற்காலிகளில் தூங்கி விழுந்து அசைந்து கொண்டிருக்கிறார்கள். தேச பாஷைகளில் தகுந்த வசன காவியங்க ளிருக்குமானால், இவர்கள் இவ்வளவு நிர்ப்பாக்கியமான ஸ்திதியிலிருப்பார்களா? ஆதலால் இங்கிலீஷ்,பிராஞ்சு முதலிய இராஜபாஷைகளைப் படிக்கிறவர்கள், தேச பாஷைகளையும் தீர்க்கமாக உணர்ந்து, இந்தத் தேசத்தைச் சூழ்ந்திருக்கிற அறியாமை யென்னும் அந்தகாரம் நீங்கும்படி, வசன காவியங்க ளென்னும் ஞான தீபங்களை ஏற்றுவார்களென்று நம்பு. கிறோம். தமிழ் படிக்காதவர்கள், தமிழ் நாட்டில் வசிக்க யோக்கியர்கள் அல்ல. அவர்கள் எந்த ஊர்ப் பாஷைகளைப் படிக்கிறார்களோ, அந்த ஊரே அவர்களுக்குத் தகுந்த இட மாகையால், சுய பாஷையைப் படிக்காமல் இங்கிலீஷ் மட்டும் படிக்கிறவர்களை இங்கிலீஷ் தேசத்துக்கு அனுப்பி விடுவோம். பிரான்சு மட்டும் படிப்பவர்களைப் பரீசுப் (Paris) பட்டணத்துக்கு அனுப்புவோம். இலத்தீனுக்கும் (Latin) சமஸ்கிருதத்துக்கும் சொந்த ஊர் இல்லாத படியால், அந்தப் பாஷைகளைப் படிப்பவர்களை அநாம் கரணத் தீவுக்கு அனுப்புவோம்” என்றாள்.
43-ஆம் அதிகாரம்
உத்தியோக மமதை-கர்விகளுக்கு நற்புத்தி
விக்கிரமபுரியில் முந்தின இராஜாவால் நியமிக்கப் பட்ட ஒரு அதிகாரி, கர்விஷ்டனாயும், பரம துஷ்டனாயும், இருந்தான். “அற்பனுக்கு ஐசுவரியம் வந்தால் அர்த்த ராத்திரியிற் குடை பிடிப்பாள்’ என்கிற பழமொழிப்படி. அவனுக்கு அதிகாரம் கிடைத்த வுடனே, தன்னுடைய பூர்வ திதியைச் சுத்தமாய் மறந்து, தன்னை ஒரு அவதார புருஷன் போல எண்ணிக் கொண்டான். வித்தையிலும், புத்தியிலும், தனத்திலும், குலத்திலும் தனக்குச் சமான மானவர்கள் ஒருவரும் இல்லை யென்கிற அகம்பாவ மும், மமதையும், உடையவன் ஆனான். அவன் இருக்கிற இடத்தில் ஈ பறக்கக் கூடாது, எறும்பு ஊரக் கூடாது, குருவி கத்தக் கூடாது, ஒருவரும் பேசக்கூடாது; எப் போதும் நிசப்தமாயிருக்க வேண்டும். அவனுடைய வீட்டுக்கு எதிரே ஒருவரும் ஜோடு போட்டுக் கொண்டு கூடாது. நடக்கக் கூடாது. அங்க வஸ்திரம் போடக் கைவீசிக்கொண்டு நடக்கக் கூடாது, தாம்பூலம் தரிக்கக் கூடாது. சிங்கத்தின் குகை ஓரத்திற் போகிறவர்கள் பயந்து, பதுங்கிக் கொண்டு, போகிறது போல, இவன் வீட்டுக்கு எதிரே போகிறவர்களும் நடுங்கிக் கொண்டு, நிசப்தமாகப் போக வேண்டும். அவன் வெளியே புறப் பட்டால், உட்கார்ந்திருக்கிறவர்கள் எல்லாரும் எழுந்து விடவேண்டும்; நடக்கிறவர்கள் நின்றுவிட எல்லாரும் வேண்டும். சகலரும் பூமியிலே விழுந்து சாஷ்டாங்க தண்டம் செய்யவேண்டும். அப்படிச் செய்யாதவர்களுக்கு அபராதங்களும், ஆக்கினைகளும் கிடைப்பது சித்தமே. அவளைக் கண்ட வுடனே, ஜோடு போட்டுக் கொண்டிருப் பவர்கள் எல்லாரும், அவைகளைக் கழற்றுகிற வேகத்தைப் பார்த்தால், அவனை அடிப்பதற்காகவே கழற்றுகிறது போலத் தோன்றும். ஆனால், வாஸ்தவத்தில் மரியாதைக்காக ஜோடுகளைக் கழற்றுகிறார்களே யன்றி, அவனை அடிப்பதற்காக அல்ல. அவன் தெருவில் நடக்கும்போது, தெரு முழுதும் தனக்கே சொந்தம் போல அடைத்துக் கொண்டு, கால் ஒரு பக்கம், கை ஒரு பக்கம், வேஷ்டி யொரு பக்கம், தான் ஒரு பக்கமாக, விறைத்துக் கொண்டு நடப்பான். அவன் நடக்கும் போது, அவனுடைய ஜோடு, அவனைப் படீர் படீரென்று அடித்துக் கொண்டே போகும். அவனை மட்டும் எல்லாரும் வணங்க வேண்டுமே தவிர, அவன் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு நடக்கிறதே யல்லாது, எவரையும் வணங்குகிற தில்லை. அவன் இறுமாப்புடன் பூமியைப் பார்த்து நடக்கிற தில்லை. அவன் காலிலே விஷம் தீண்டினாலும் குனிந்து பார்க் கிறதில்லை. தலையிலே வாசற்படி யிடித்தாலும் குனிகிறதில்லை.
அவன் அதிகார ஸ்தானத்தில் இருக்கும்போது ஜனங்கள் எல்லாரும் கை கட்டிக் கொண்டும், வேஷ்டிகளைத் தூக்கிக் கட்டிக்கொண்டும், தூரத்தில் நிற்க வேண்டுமே யல்லாது, அவன் சமீபத்தில் ஒருவரும் நெருங்கக் கூடாது. அவன் கண்ணாலே ஒருவரையும் ஏறெடுத்துப் பார்க்கிற தில்லை. அவனுடைய வாயிலே, திட்டுகளும், உதாசினங்களும் புறப்படுமே யல்லாது, நல்ல வார்த்தைகள் புறப்படுகிற தில்லை. பேய்க்குக் கள் வார்த்தது போல், அவனுடைய முகத்தில் எப்போதும் கோபம் கூத்தாடிக் கொண்டிருக்கிறதே யல்லாது, பொறுமையாக ஒரு காரியத்தையும் விசாரிக்கிற தில்லை. அவனை யார் அதிகமாக வணங்கித் தப்பு ஸ்தோத்திரம் செய்கிறார்களோ, அவர்கள் பக்ஷம் தீர்மானிக்கிறதே யன்றி, உண்மையைக் கண்டு பிடித்துத் தீர்மானிக்கிற தில்லை. நான் ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக் கொண்டு அவ னுடைய அதிகார ஸ்தானத்துக்குப் போய், மற்ற ஜனங் களுடன் தூரத்தில் நின்று கொண்டிருந்தேன். அவனை ஏமாற்றித் தீர்ப்புப் பெற்றுக் கொள்வதற்காக, அவளை ஒரு வழக்காளி ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான். எப்படி யென்றால், “மஹாப் பிரபுவே! மண்டலாதிபதியே! இந்தப் பஞ்சாஷ்ட கோடி பூமண்டலத்தில், உங்களுக்குச் சமானமாக யாரிருக்கிறார்கள்? தனத்திலே நீங்கள் குபேரன், வித்தையிலே நீங்கள் ஆதிசேஷன், புத்தியிலே பிரஹஸ்பதி, அழகிலே மன்மதன்; சாக்ஷாத் கடவுள் நீங்களே. அது பேசாத் தெய்வம், நீங்கள் பேசும் தெய்வம். அது அப்பிரத்தியக்ஷம்; நீங்கள் பிரத்தியக்ஷமான தெய்வம். இப்போது, நீங்கள் நினைத்தால், அநேகங் குடிகளை வாழ்விக்கலாம்; அநேகங் குடிகளைக் கெடுத்து விடலாம். அந்தத் தெய்வத்தினாலே அப்படிச் செய்ய முடியுமா?” என்று, பலவாறாக முகஸ்துதி பேசிக்கொண்டிருந்தான். அந்த அதிகாரியும் தன்னைத் தெய்வமென்றே மனஸ்கரித்துக் கொண்டு, புன்னகையுடன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். அப்போது, ஒரு கொள்ளித் தேள் எப்படியோ வந்து, அதிகாரியை நறுக்கென்று கடித்து விட்டது. உடனே, அந்தப் பிரத்தியக்ஷமான தெய்வம் விட்டது.உடனே, கீழே விழுந்து, கடகட வென்று உருள ஆரம்பித்தது. வைத்தியர்களும் மாந்திரீகர்களும் வந்து கூடிவிட்டார்கள். நான், ”தெய்வத்தையும் தேள் கொட்டுமா?” என்று சொல்லிக்கொண்டு, அரண்மனைக்குப் போய். நடந்த சங்கதிகளை யெல்லாம் ஞானாம்பாளுக்கு விளம்பினதுமன்றி, அந்த அதிகாரியை ஒரு நாள் அழைப்பித்துத் தனிமையாக வைத்துக் கொண்டு, பின்வருமாறு அவனுக்குப் புத்தி சொன்னேன்.
“மனுஷன் தன்னைத் தானே அறிவானானால், அவன் ஒரு நாளும் கர்வப்பட மாட்டான். நம்முடைய தேகத்தின் அசுத்தங்களையும், நம்முடைய ஆசாபாசங்களையும், தூர்க் குணங்களையும்,துஷ் கிருத்தியங்களையும், சித்த விகாரங் களையும், நமக்கு உண்டாகிற வியாதிகளையும், துர்ப பலங்களையும், தேக அநித்தியத்தையும், மரணத்தையும் நாம் யோசிப்போமானால், நாம் வெட்கப்பட்டுத் தலை குனிய வேண்டியதே யல்லாமல், கர்வப்படு கிறதற்கு என்ன இடமிருக்கிறது? நாம் அசுத்தமான கர்ப்பத்திலே உற்பத்தியாகி, அசுத்தத்திலே பிறந்து, அசுத்தத்திலே வளர்ந்து, அசுசியான பதார்த்தங்களையே புசித்து, அசுசி யாகவே ஜீவித்து, அசுசியாகவே இறந்து போகிறோம். ரத்தமும், மாமிசமும், எலும்பும், நரம்பும், மலஜலாதி களும் கூடிய நம்முடைய தேகம் அசுத்த மயமே யன்றி வேறல்லவே. கண்ணிலே பீளை, காதிலே குரும்பி, மூக்கிலே சளி, வாயிலே எச்சில், தலையிலே பேன், தேசு முழுதும் துர் நாற்றம்; இப்படியாக முழுதும் அசுத்த மாகவே இருக்கிறது. நாம் அடிக்கடி தேகத்தைக் கழுவா விட்டால், நம்முடைய துர்க் கந்தம் நமக்கே சகிக்குமா?
நம்முடைய வாழ்வும், தாழ்வும், சுவாமியினுடைய கையில் இருக்கின்றனவே யல்லாது, நம்முடைய ஸ்வாதீ த்தில் என்ன இருக்கிறது? அடுத்த நிமிஷத்தில் இன்னது வருமென்பது, நமக்குத் தெரியுமா? நம்முடைய ஆஸ்திகளை நினைத்துக் கர்வப்படுவோ மானால் அந்த ஆஸ்திகளும் அநித்தியம். அவைகளை அனுபவிக்கிற நாமும் அநித்தியர்களா யிருக்கும்போது, நாம் எப்படிக் கர்வப்படக் கூடும்? நாம் பிறக்கும் போது, ஒரு கோவணத்துக்குக் கூட வழியில்லாமல், சுத்த நிர்வாணி களாய்ப் பிறந்து, நிர்வாணிகளா யிறந்து போகிறோம். நாம் பிறக்கும் போது, ஒரு ஆஸ்தியையும் நாம் கூடக் கொண்டு வந்ததுமில்லை; கூடக் கொண்டு போவதுமில்லை. நாம் அநுபவிக்கிற பொருள்கள் எத்தனை நாள் நம்மோடு கூடி யிருக்குமென்பதும் நிச்சயமில்லையே! நம்முடைய கல்வியைப்பற்றி நாம் இறுமாப்பு அடைவோமானால் அது நமக்குப் பிறர் போதித்ததேயன்றி, நாம் பிறக்கும் போது நம்மோடு கூடப் பிறந்ததல்லவே! அல்லாமலும், தம்முடைய தலையை மிதிக்கும்படியான கல்விமான்கள், உலகத்தில் அநேகர் இருக்கவில்லையா?”எவன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளுகிறானோ, அவன் தாழ்த்தப் படுவான்; எவன் தன்னைத் தானே தாழ்த்துகிறானோ, அவன் உயர்த்தப் படுவான்” என்பது வேத வாக்கியமல்லவா?
ஜனங்களுடைய நன்மைக்காக அதிகாரிகள் நியமிக்கப் பட்டு, ஜனங்களுடைய சம்பளங்களையே அதிகாரிகள் வாங்கிச் சாப்பிடுகிறபடியால் அதிகாரிகள் ஜனங்க களுக்கு ஊழியக்காரர்களே யல்லாது, எஜமான்கள் அல்ல வென்பதை அவர்கள் எப்போதும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். அப்படி எண்ணாமல் ஜனங்களைத் தங்களுக்கு அடிமைகள் போல எண்ணுகிற அதிகாரிகள், அக்கிரமிகள் அல்லவா? நீர் மேற்குல மென்று பெருமை பாராட்டிக் கொண்டு, மற்றவர்களை யெல்லாம் ஈன ஜாதிகளென்றும், ஏழைகளென்றும், அடிக்கடி தூசிப்பதாகக் கேள்விப் படுகிறோம். குணமும், புத்தியும், சிரேஷ்டமே தவிர. ஜாதி பேதங்களும், அந்தஸ்துக்களும், மனுஷர்களுடைய கட்டுப்பாடு என்பதை நீர் அறியாமற் போனது பெரிய ஆச்சரியம் அல்லவா?
நல்ல மரத்திலே புல்லுருவி பாய்ந்தது போல், ஒரு நற்குணம் உடைய அரசனுக்குத் துர்க்குணம் உள்ள புத்திரன் ஒருவன் இருந்தான். அவன் தன்னை மிகவும் உயர்வாக எண்ணி, மற்றவர்களைத் தாழ்வாக நடத்தி வந்தாள். அவளை திருத்துவதற்காக, இராஜா எவ்வளவு பிரயாசைப் பட்டும், அவன் திருந்தவில்லை. அந்த இராஜ குமாரனுக்கு விவாகம் ஆகி, ஒரு குழந்தை பிறந்தது. அந்தப் பிள்ளைக்கும். அப்போது பிறந்த வேறொரு ஏழைப் பிள்ளைக்கும் ஒரே மாதிரியாக உடை உடுத்தி, இரண்டு பிள்ளைகளையும் ஒரே இடத்தில் வைத் திருக்கும்படி இராஜா திட்டம் செய்தார். அந்த இராஜ குமாரன் தன் பிள்ளையைப் பார்க்கிறதற்காக ஆவலாக ஓடின போது, இரண்டு பிள்ளைகளைக் கண்டு, தன் பிள்ளை இன்ன தென்று தெரியாமல் மயங்கி, வேலைக்காரர்களைக் கோபித்துக் கொண்டான். அந்தச் சமயத்தில், இராஜா வந்து, தன் புத்திரனைப் பார்த்து “மகனே! மேன்மையான அந்தஸ்தும் உயர்ந்த இரத்தமும் உள்ள உன் பிள்ளையை நீ கண்டு கொள்ளக் கூடாதா? ஏன் மயங்குகிறாய்?” என்றார். இராஜ குமாரனுக்கு நாணம் உண்டாகி, தலை கவிழ்ந்து கொண்டு, அதோமுகமாக நின்றான். உடனே இராஜா, அந்தப் பிள்ளைகளில் ஒரு பிள்ளையைத் தொட்டுக் காட்டி, “இதுதான் உன் பிள்ளை. இந்தப் பிள்ளையின் காலில் ஒரு நாடாவை நான் கட்டி வைத்திருந்தேன். அப்படிச் செய்யாவிட்டால், உன் பிள்ளை இன்ன தென்று தெரியாது. பிறக்கும் போது எல்லாரும் சமான மென்றும். உயர் குலமும், மேம்பாடும், சுத்தக் கற்பித மென்றும் அறிந்து கொள்” என்றார்.
அந்த இராஜ குமாரனும், ஒரு வேலைக்காரனும் வியாதியா யிருந்த போது, வைத்தியர் வந்து பார்வை யிட்டு, இருவருக்கும் இரத்தங் குத்தி வாங்கும்படி சொன்னார். அந்தப்படி இருவருடைய இரத்தமும் எடுத்து, வெவ்வேறு பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்தது. அந்த இராஜா தன்னுடைய குமாரன் கூட இருக்கும் போது, வைத்தியரை அழைத்து, அந்த இரண்டு பாத்திரங்களில் இருக்கிற இரத்தங்களில், எது நல்ல இரத்த மென்று பரிசோதித்துத் தெரிவிக்கும்படி சொன்னார். வைத்தியர் பரிசோதித்து, வேலைக்காரனுடைய இரத்தம் சுத்தமாயும், நல்ல வர்ணமாயும் இருப்பதாகச் சொன்னார். உடனே இராஜா தன் குமாரளைப் பார்த்து, “நம்முடைய வம்சமும் இரத்தமும் மேலான தென்று எண்ணிக் கொண் டிருந்தோம். உன்னுடைய இரத்தத்தைப் பார்க்கிலும் வேலைக்காரனுடைய இரத்தம் மேலாயிருப்பதாக வைத் தியர் சொல்லுகிறார். அவன் நம்மைப் போலக் கண்ட பதார்த்தங்களை யெல்லாம் புசிக்காமல், மித போஜனம் செய்கிற படியாலும். அவன் தேகப் பிரயாசைப்பட்டு ஜீவிக்கிற படியாலும், அவனுடைய இரத்தம் அதிக சுத்தமா யிருக்கிறது. அப்படி யிருக்க, நம்முடைய இரத்தம் மேலான தென்று நாம் அகம்பாவம் அடைவது தகுமா?” என்றார்.
ஒரு ஊரில், ஒரு பெரிய பிரபுவினுடைய சிகரத் துக்குச் சமீபத்தில், ஒரு நாணற் காடு இருந்தது. அது கூடை பின்னி விற்கிற ஒரு ஏழைக்குச் சொந்தமா யிருந் தது. அந்தக் காட்டை விலைக்கு வாங்க வேண்டு மென்று அந்தப் பிரபு முயற்சி செய்தான். அந்த ஏழைக்கு அந்தக் காட்டைத் தவிர, வேறே ஜீவனத்துக்கு மார்க்க மில்லாத படியால், காட்டை விலைக்குக் கொடுக்க நிராகரித்தான். அந்தப் பிரபுவுக்குக் கோபம் உண்டாகி, அந்த நாணல் களில் நெருப்பு வைத்து நிர்மூல மாக்கி, அந்த ஏழையையும் அடித்து,உபத்திரவம் செய்தான். எளியவன் இராஜாவி னிடத்தில் முறையிட்டுக் கொண்டதினால், இராஜா பிரபுவை வர வழைத்து விசாரணை செய்தார். பிரபு அரசனைப் பார்த்து, “அந்த அற்பப் பயல் என்னுடைய கௌரவத்தை எவ்வளவும் ‘மதிக்காமற் போய் விட்டதால், அவனை நான் அடித்தது கிரமந்தான்” என்றான். அரசன் பிரபுவைப் பார்த்து, “உன்னுடைய முற்பாட்டன் விறகு வெட்டிக் காலக்ஷேபம் செய்து வந்தான். பின்பு அவன் படைவீரன் ஆகி, சௌரிய பராக்கிரமங் காட்டின படியால், என்னுடைய பாட்டனாருக்குச் சந்தோஷ முண்டாகி, அவனை மேன்மைப் படுத்தித் திரவியவந்தன் ஆக்கினார். உன்னுடைய முற் பாட்டன் ஆதியில் விறகு தலையனா யிருந்த போதிலும், பிறகு தன்னுடைய சுய சாமர்த்தியத் தினால் மேன்மை அடைந்தான். நீ அவன் தேடின ஆஸ்தியை வைத்துக் கொண்டு சுய யோக்கியதை இல்லாமற் காலம் கழிக்கிறாய்” என்றார். பிறகு, அரசன் ஒரு மாலுமியைப் பார்த்து, “இவர்கள் இருவரையும் ஒரு கப்பலில் ஏற்றிக் கொண்டு போய், ஒரு தீவில் நிர்வாண மாய் விட்டு விடு. இவர்களில் எவன் சமர்த்தன் என்பதை அறிவோம்” என்றார். உடனே அந்தப் படி நிறைவேற்றப் பட்டது. அந்தத் தீவில், அந்தப் பிரபு, வஸ்திர மில்லா மல் பனியிலும் குளிரிலும் பட்ட அவஸ்தை மரணாவஸ் தைக்குச் சமானமா யிருந்தது. அந்த ஏழைக்கு ஒரு கஷ்டமும் தோன்ற வில்லை. அவன் சில செடிகளைப் பிடுங்கி, நார் உரித்து, தனக்கும் அந்தப் பிரபுவுக்கும் வஸ்திரம் நெய்து கொண்டான். அந்தத் தீவில் வசிக்கிற அநாகரீக மான காட்டு ஜனங்களுக்கு, அந்த எளியவன் கூடை முதலானது பின்னிக் கொடுத்த படியால், அவர்க ளுக்குச் சந்தோஷம் உண்டாகி, அவனுக்கு உணவு முதலிய பதார்த்தங்கள் கொடுத்தார்கள். அவன் தானும் புசித்து, அந்த வெறும் பிரபுவுக்கும் சாப்பாடு கொடுத்து, இரக்ஷித் தான். அந்தப் பிரபு. ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருப்பதை அந்த மிலேச்சர்கள் அறிந்து, அவனைக் கொல்ல. ஆரம்பித்தார்கள். அப்போது அந்த எளியவன் சிபார்சு செய்து, பிரபுவை விடுவித்துப் பிராணப் பிரதிஷ்டை செய்வித்தான். உடனே பிரபுவுக்கு ஞானோதயம் உண்டாகி, அந்த எளியவன் இல்லா விட்டால், அந்தத் தீவே தனக்கு மயான பூமியா யிருக்கு மென்று தெரிந்து கொண்டான். சில நாளைக்குப் பிறகு, இராஜா அந்த இருவரையும் கொண்டு வரும்படி உத்தரவு செய்தார். ராஜா முன்பாக, அந்தப் பிரபு, தன்னுடைய அறியாமை யையும், எளியவன் தனக்குச் செய்த உபகாரங்களையும் ஒப்புக் கொண்டு, தன்னுடைய ஆஸ்திகளிற் பாதியை அந்த ஏழைக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். இராஜா அந்தப் பிரபுவைப் பார்த்நுச் சொல்லுகிறார்:- “அந்த ஏழை இல்லா விட்டால், அந்தக் கானகத்தை விட்டு நீ வானகத்துக்குப் போயிருப்பா யென்பது நிச்சயம். அப்படியே, சகல தேசங்களி லிருக்கிற பிரபுக்களும், ஏழைகளால் ஜீவிக்கிறார்களே யல்லாமல், மற்றப்படியல்ல. எண்ணிக்கை யில்லாத ஏழைகளுடைய தேகப் பிரயாசத் தினால் நமக்குச் சகல பாக்கியங்களும் கிடைக்கிற படியால், அவர்களை நாம்:பெரிய உபகாரிகளாக மதிக்க வேண்டும்’ என்றார்.
ஒரு பிரபு, தனக்குப் பிள்ளை பிறந்த உடனே, பால் கொடுப்பதற்காக அந்தப் பிள்ளையைப் பாற்காரி கையில் ஒப்புவித்தார். அந்தப் பிள்ளையும், பாற்காரி பிள்ளையும், சமான வயதாகவும், அபேதமாகவும் இருந்தபடியால், அந்தப் பாற்காரி தன் பிள்ளையைப் பிரபு பிள்ளையாகவும், பிரபுவின் பிள்ளையைத் தன் பிள்ளையாகவும் மாற்றி விட்டாள். இந்த பிரகாரம், பாற்காரி பிள்ளை பிரபுவாகவும், பிரபு வீட்டுப் பிள்ளை ஏழையாகவும், மாறிப் போய் விட்டார்கள். சில பிரபுக்கள், அகம்பாவத்தினால், அந்நிய ரிடத்தில் வாயைக் கொடுத்து, அவமானப்பட்டிருக் கிறார்கள். அப்படிப்பட்ட சில திருஷ்டாந்தங்களைத் தெரிவிக்கிறேன்.
ஒரு அரசன், சில அந்நிய தேசத்து வர்த்தகர் களிடத்தில், சில குதிரைகளை விலைக்கு வாங்கிக் கொண்டு, பின்னும் இரண்டு இலக்ஷ ரூபாய் அவர்கள் கையில் அதிக மாகக் கொடுத்து, அந்தப் பணத்துக்குள்ள குதிரைகளைக் கொண்டுவரும்படி சொன்னான். அந்த வியாபாரிகள் பணத்தை வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். பிறகு, ஒரு நாள், அந்த இராஜா தன் மந்திரியை அழைத்து. தன் தேசத்தில் உள்ள மூடர்களுடைய பெயர்களை யெல்லாம் எழுதிக் கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தான். மந்திரி இராஜாவைப் பார்த்து, “நான் முன்னமே அந்தப்படி ஒரு அட்டவணை எழுதி வைத்திருக்கிறேன். அதில். எல்லாருக்கும் முந்தி உங்களுடைய பெயரை எழுதி யிருக்கிறேன். ஏனென்றால், அந்த வர்த்தகர்கள் இன்ன. ஊரென்று தெரிந்து கொள்ளாமலும், அவர்களிட த்தில் ஜாமீன் வாங்காமலும், இரண்டு இலக்ஷ ரூபாய் அவர்கள் கையில் நீங்கள் கொடுத்து விட்டதால், மூடருடைய ஜாப் தாவில் முதன்மையாக உங்களுடைய பெயரை எழுதி யிருக்கிறேன்” என்றான். அரசன் மந்திரியைப் பார்த்து, “அவர்கள் குதிரைகளைக் கொண்டு வந்தால், அப்போது என்ன செய்வாய்?” என்றான். “அவர்கள் குதிரைகளைக் கொண்டு வந்தால், உங்கள் பெயரைக் கிறுக்கி விட்டு, அவர்கள் பெயரைப் பதிந்து கொள்ளுவேன்” என்று மந்திரி பிரதி உத்தரம் சொன்னான்.
ஒருவனுக்குப் பெரிய உத்தியோகம் கிடைத்தபடி யால், அவனுடைய சிநேகி தன் அவனுக்கு மங்கள வார்த்தை சொல்வதற்காக வந்தான். அவன் தன்னுடைய உத்தியோக மமதையால், சிநேகிதனைப் பார்த்து, “நீ யார்?” என்று வினவினான். சிநேகிதனுக்கு கோபம் ஜனித்து, “நான் உன்னுடைய பழைய நேசன்; உனக்கு இரண்டு கண்ணும் அவிந்து போன தாகக் கேள்விப் பட்டு, துக்கங் கொண்டாட உன்னிடத்துக்கு வந்தேன என்றான்.
ஒரு நியாயாதிபதி ஒரு சாக்ஷிக்காரனைப் பார்த்து, ‘நீ திருடனென்று கண்ணாடி போல உன் முகம் காட்டு கிறது” என்றான். உடனே, சாக்ஷிக்காரன், அந்தக் கெட்ட நியாயாதிபதியைப் பார்த்து, “என்னுடைய, முகம் கண்ணாடி யானதால், இதில் உங்கள் முகத்தைக் காணுகிறீர்கள்” என்றான். ஆகையால், நியாயாதிபதி திருடனென்பதாயிற்று.
ஒரு வழக்காளி நியாய சபையிற் பேசிக் கொண் டிருக்கும் போது, அவனை அவனுடைய எதிரியின் வக்கீல் பார்த்து, “நீ ஏன் நாய் போற் குரைக்கிறாய்?” என்றான். “திருட்டுப் பயலைப் பார்த்தால், நாய் குரைக்காதா?” என்று, அந்த வழக்காளி மறுமொழி சொன்னான். இதனால், வக்கீலைத் திருடன் ஆக்கிவிட்டான்.
ஒரு அரசனும், அவனுடைய மகனும் ஒரு விகட கவியை அழைத்துக் கொண்டு, வேட்டைக்குப் போனார்கள். வேட்டை ஆடிக் கொண்டிருக்கும்போது, மழை பிடித்துக் கொண்டு, இராஜாவும் அவர் மகனும் நனைந்து போய் விட்டார்கள்; நனைந்து போன அவர்களுடைய உடுப்புகளைக் கழற்றி, ஒரு மூட்டையாகக் கட்டி விகட கவி தலை மேலே வைத்தார்கள். அவன் தூக்கிக் கொண்டு போகும் போது, “இராஜாவும், அவர் மகனும், “விகடகவி ஒரு கழுதைப் பாரம் சுமந்து கொண்டு போகிறான்” என்று பரிகாச மாகப் பேசிக் கொண்டு போனார்கள். விகடகவி அவர்களைத் திரும்பிப் பார்த்து, “ஒரு கழுதைப் பாரந்தானா? இரண்டு கழுதைப் பாரம் சுமக்கிறேன்” என்று சொல்லி, இராஜாவையும் அவர் மகளையும் கழுதைகள் ஆக்கிவிட்டான்,
தரித்திர னான ஒரு வித்துவான், ஒரு தனவான் வீட்டுக்குப் போய். அவனுக்கும் தனக்கும் ஒரு சாண் தூரம் இருக்கும் படியான சமீபத்தில், உட்கார்ந்தான். அந்தத் தனவான் கோபம் கொண்டு, வித்துவானைப் பார்த்து, “கழுதைக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?” என்றான். வித்துவான், “ஒரு சாண் தான் வித்தியாசம்’ என்று அளந்து காட்டினான்.
ஒரு அரசன் பொழுது விடியு முன் எழுந்து, வேட்டை யாடுவதற் காகக் காட்டுக்குப் போனான். காட்டில் மத்தி யானம் வரைக்கும் சுற்றித் திரிந்தும், வேட்டை அகப்பட வில்லை. அன்றையத் தினம் விடியற் காலத்தில், அரசன் முகத்தில் விழித்த படியால், அது ஒரு குடியானவன் நிமித்தம் தனக்கு வேட்டை அகப்பட வில்லை யென்று நினைத்து, அந்தக் குடியானவனைக் கொன்று விடும்படி உத்தரவு செய்தான். அந்தக் குடியானவன் அரசனைப் பார்த்து, “மகா ராஜாவே! பிராதக் காலத்தில் நீங்கள் என் முகத்தில் விழித்தது போலவே, நானும் உங்கள் முகத்திலே விழித்தேன். என் முகத்தில் நீங்கள் விழித்ததற்கு உங்களுக்கு வேட்டை அகப்படவில்லை. உங்கள் முகத்தில் நான் விழித்ததற்கு என்னுடைய பிராணனை இழந்து போகும் படி சம்பவித் திருக்கிறது” என்றான். இதைக் கேட்டவுடனே அரசனுக்கு விவேகம் உண்டாகி, ”குடியானவனைக் கொல்ல வேண்டாம்” என்று உத்தரவு செய்தான்.
ஒரு வக்கீல் ஒரு நியாய சபையில், நியாய வாதம் செய்து கொண்டிருக்கும் போது, நியாயாதிபதி, ‘கழுதை கத்துகிறது, கழுதை கத்துகிறது” என்று வாய்க் குள்ளே முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அதை வக்கீல் கேட்டும் கேளாதவர் போலத் தன் கக்ஷியைப் பேசினார். பிறகு, நியாயாதிபதி தீர்மானம் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஒரு யதார்த்தமான கழுதை தெருவிலே கத்தத் துவக்கிற்று. உடனே நியாயாதிபது தீர்மானம் சொல்வதை நிறுத்தி, ”அது என்ன சப்தம்?” என்றார். அந்த வக்கீல் எழுந்து, ‘அது கோர்ட்டா ருடைய எதிரொலி தன். வேறொன்றும் அல்ல” என்றார். நியாயாதிபதி வெட்கத்தினால் அதோமுகம் ஆனார்.
ஒருவனை ஒருவன் அடித்த சங்கதியைப் பற்றி நியாய சபையில் விசாரணை நடந்த போது, பிரியாதுக்காரனைக் குற்றவாளி அடித்ததைத் தான் பார்த்த தாக ஒரு சாஷிக்காரன் சொன்னான். குற்றவாளியின் வக்கீல் அந்தச் சாக்ஷிக்கரனைப் பார்த்து, “அந்த அடி எப்படிப் பட்ட அடி?” என்று கேட்டார். கையை ஓங்கிப் பலமாக அடித்த தாகச் சாக்ஷிக்காரன் சொன்னான். வக்கீல் அவனைப் பார்த்து, “அது இப்படிப் பட்ட அடி யென்று எனக்கு நீ மெய்ப்பிக்க வேண்டும்” என்றான். சாக்ஷிக் காரன் கோர்ட்டாரைப் பார்த்து, ‘அது இப்படிப்பட்ட அடி யென்று நான் எப்படி மெய்ப்பிப்பேன்? அது பல மான அடிதான்” என்றான். நியாயாதிபதி சாக்ஷிக்கா ரனைப் பார்த்து, ‘வக்கீல் சொல்லுகிறபடி அவருக்கு நீ மெய்ப்பிக்கத்தான் வேண்டும்” என்றான், உடனே சாக்ஷிக்காரன் இரண்டு கைகளையும் ஓங்கி, தன் பல மெல்லாம் கூட்டி, வக்கீலை அடித்து, “இவ் வகையாகத் தான் குற்றவாளி அடித்தான்,” என்றான். வக்கீல் அந்த அடி பொறுக்க மாட்டாமல் கீழே விழுந்து விட்டார். இது வக்கீலினுடைய ஸ்வயங்கிருத அபராதமான தால், சாக்ஷிக் காரனை ஒன்றும் செய்யக் கூடாமற் போய்விட்டது” என்றேன்.
– தொடரும்…
– மாயூரம் மாஜி டிஸ்டிரிக்ட் முன்சீப் ச.வேதநாயகம் பிள்ளையவர்கள் (1826-1889) இயற்றியது, முதற் பதிப்பு: 1879.
– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் முதலாவதாக இடம்பெற்ற நாவல்.
– பிரதாப முதலியார் சரித்திரம், நூற்றாண்டு விழா புதிய பதிப்பு: அக்டோபர் 1979, வே.ஞா.ச.இருதயநாதன் (வேதநாயகம் பிள்ளை மகன் பேரர்), ஆவடி, சென்னை.