பிரதாப முதலியார் சரித்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2024
பார்வையிட்டோர்: 1,461 
 
 

(1879ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். அதுவரை செய்யுள் வடிவ புனைகதை இலக்கியங்களே இருந்துகொண்டிருந்த தமிழிற்கு உரைநடை வடிவிலான புனைகதை இலக்கிய வகை இந்நூல் வழியாக அறிமுகமானது. அவ்வகையில் இது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் முதலாவதாக இடம்பெற்ற நாவல்.

அதிகாரம் 31-35 | அதிகாரம் 36-40 | அதிகாரம் 41-43

36-ஆம் அதிகாரம்

குடி யரசை நீக்கி,முடி யரசை நியமித்தல் ஞானாம்பாள் ஆண் வேஷம் பூண்டு, அரசாண்டது 

சூரியனைப் பிடித்த கிரகணம் நீங்கியும், என்னைப் பிடித்த பீடை நீங்காமையினால், நான் காவற் கூடத்திலே யிருந்தேன். அரசனை நியமிக்கிறதற் காக போன ஜனங் கள், உடனே தேவாலயத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்த பிறகு, பட்டத்து யானை கையிலே பூமாலையைக் கொடுத்து விட்டதாகவும், அது ஒரு மகாபுருஷன் கழுத் திலே மாலையைப் போட்டுத் தன் முதுகின் மேலே தூக்கி வைத்துக் கொண்டதாகவும், அந்த மகா புருஷனை ஜனங்கள் அரசனாகத் தெரிந்து கொண்டதாகவும், அன்றையத் தினம் சாயங்காலத்தில் நான் கேள்விப்பட்டுத் திருப்தி அடைத்தேன். அந்த அரசனுடைய ஊர், பெயர், ஜாதி முதலிய பூர்வோத்தரங்களும், குணாகுணங்களும், ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனால், அவருடைய அதி ரூப சௌந்தரியத்தைப் பற்றிப் புகழாதவர்கள் ஒருவரு மில்லை. அன்றையத் தினம், சூரியன் அஸ்தமித்து, இருட் டின பிறகு, சில சேவகர்கள் ஓடி வந்து,”புதிதாக வந்தி ருக்கிற அரசர், அநேக வழக்குகள் விசாரணை யாகாமல் வெகு காலமாய்ப் பாக்கியிருக்கின்றன வென்று கேள்விப் பட்டு, உடனே எல்லாரையும் அழைத்துக் கொண்டு வரும் படி ஆக்ஞாபித்தார்” என்று தெரிவித்தார். உடனே, நாங்கள் எல்லாரும் புறப்பட்டு, கொலு மண்டபத்துக்குப் போனோம்.புது இராஜாவி னுடைய மாதிரி தெரியாமை யினால், எப்படித் தீர்மானம் செய்வாரோ வென்று நான் பயந்து, அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு போவது போற் போனேன்! அப்போது இராக் காலமா கவும், அநேக ஜனக் கூட்ட மாகவும் இருந்த படியால், அரச ருடைய முகம் எனக்கு நன்றாகத் தெரிய வில்லை. அவர் மிருது பாஷியா யிருந்த படியால், அவருடைய குரலும் நன்றாகக் கேட்க வில்லை. 

ஒரு உத்தியோகஸ்தன், என்னுடைய வாதி யான சக்கிலியன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்ட உடனே, சக்கிலியன் சபை முன்னே வந்து, “இந்த மனுஷன் என் னுடைய ஜோட்டை வாங்கி உபயோகித்துக் கொண்டு, அதற்காக என்னைச் சந்தோஷப்படுத்துவதாக ஒப்புக் கொண்டவள், அந்தப்படி செய்யாததினால் என்னைச் சந்தோஷப்படுத்தும்படி உத்தரவு செய்யவேண்டும்” என்று பிரார்த்தித்தான். நானும், என்னுடைய எதிர்வாதங்களைத் தெரிவித்தேன்.அரசர், சற்று நேரம் மௌனமா யிருந்து, பிறகு சக்கிலியளை நோக்கி, “நாம் இப்போது அரசனாக வந்திருக்கிறோமே உனக்கு எப்படி யிருக்கிறது?” வினாவினார். அவன், “எனக்குச் சந்தோஷமா யிருக்கிறது” என்றாள். உடனே அரசர், “நீ சந்தோஷமா யிருப்பதாக ஒப்புக்கொள்ளுகிறபடியால், ஜோட்டுக்காக அந்தச் சந்தோ ஷத்தை எடுத்துக் கொள்!” என்று சொல்லி, அவனைப் பிடித்துத் தள்ளிவிடும்படி உத்தரவு கொடுத்தார். 

இரண்டாவது, சூதாடிகள் வந்து, சும்மாவை வாங்கிக் கொடுக்கும்படி வேண்டினார்கள். அரசர் சற்று நேரம் ஆலோசிக்கிறவர் போல மௌனமா யிருந்து, பிறகு சிம்மா சனத்துக்குப் பக்கத்தில் வெறுமையா யிருந்த ஒரு வெண்கலப் பானையைச் சூதாடிகளுக்குக் காட்டி, “அதில் என்ன இருக்கிறது, பாருங்கள்” என்றார். அவர்கள் உள்ளே பார்வையிட்டு, “சும்மா இருக்கிறது” என்றார்கள். உடனே அரசர் அவர்களைப் பார்த்து, ”அந்த சும்மாவை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று தீர்மானித்தார். 

மூன்றாவது, ஒற்றைக் கண் குருடன் வந்து, ‘இவன் தன்னுடைய குருட்டுக் கண்ணைக் கொடுத்து விட்டு, என் னுடைய நல்ல கண்ணை இரவல் வாங்கிக் கொண்டு போனவன் மறுபடியும் கொடாததினால், என்னுடைய நல்ல கண்ணை வாங்கிக் கொடுக்க வேண்டும்” என்றான். உடனே அரசர் அவனைப் பார்த்து, ”நீ பிரதி வாதியினுடைய குருட்டுக் கண்ணை முந்தி வாங்கிக் கொண்டதாக ஒப்புக் கொள்ளுகிற படியால், அந்தக் கண்ணைத் தோண்டி, அவருக்குக் கொடுத்து விடு. உன் னுடைய நல்ல கண்ணைப் பற்றி, பிற்பாடு தீர்மானம் செய்கிறோம்’ என்றார். அவன், “குருட்டுக் கண்ணை எப்படித் தோண்டுவேன்?* என்றான். “அது உன்னாற் கூடாத பக்ஷத்தில், நாம் தோண்டும் படி செய்விக்கிறோம்” என்று, ஒரு குறடு கொண்டு வரும்படி அரசர் உத்தரவு கொடுத்தார். இதைக் கேட்ட உடனே அந்த ஏகாக்ஷி, “என்னைச் சும்மா விட்டு விட்டாற் போதும்? எனக்கு நல்ல கண் வேண்டாம். வேண்டாம்!” என்று கதறிக் கொண்டு ஓடினான். 

நொண்டிக் காலன் வழக்கிலும் நொண்டிக் காலை முந்தி எனக்கு வெட்டிக் கொடுக்கும் படி தீர்மானம் செய் யப்பட்டது. அவனும் ”எனக்கு நொண்டிக் காலே போதும்! நல்ல கால் வேண்டாம்! வேண்டாம்!!” என்று சொல்லி ஓடினான். 

பாக சாலைக்காரன் அவனுடைய வழக்கைச் சொல்லிக் கொண்ட உடனே அரசர் சில வெள்ளி நாணயங்களை எடுத்து கலகலவென்று சப்திக்கும் படியாக ஒரு வெண்கலத் தட்டிற் கொட்டி பாகசாலைக் காரனைப் பார்த்து, “அந்தப் பணங்களின், ஓசையைக் கேட்டாயா?” என்றார். அவன், “கேட்டேன்” என்றான். உடனே, அரசர் அவனைப் பார்த்து, “பிரதிவாதி உன்னுடைய சாதத்தின் வாசனையை மூக்கினால் கிரகித்ததற்கும், அதன் கிரயப் பணத்தின் சப்தத்தை நீ காதினால் கேட்டதற்கும் சரி யாய்ப் போய் விட்டது. ஆகையால், நீ வீட்டுக்குப் போகலாம்” என்று உத்தரவு கொடுத்தார். 

பிறகு, தாசி யானவள் வந்து, பிரதிவாதி தன்னை நிழலினால் ஆலிங்கனஞ் செய்ததாகத் தெரிவித்தாள். உடனே, அரசர் அவளைப் பார்த்து, “பிரதிவாதி உன்னை நிழலினால் ஆலிங்கனம் செய்தபடியால், நிழலினால் உனக்குப் பணம் கொடுக்கப்படும்” என்று சொல்லி, அந்தத் தாசியை வெளிச்சத்தில் நிறுத்தி, அவள் மேலே பண நிழல் படும் படி, பணத்தை மேலே தூக்கிக் காட்டும்படி திட்டம் செய்தார். மலை போல வந்த துன்பமெல்லாம் பனி போல் நீங்கினது போல, என் மேலே வந்து துர் வழக்குக ளெல்லாம் எனக்கு அநுகூலமாக முடிந்த படியால், நான் கரை காணாத களிப்புக் கடலில் மூழ்கினேன். 

என்னுடைய வழக்குகள் முடிந்த பிற்பாடு, அரசர் ஜனங்களை நோக்கிச் செல்லுகிறார்:- “இப்போது நாம் விசாரணை செய்த துர் வழக்குகளினால், இந்த ஊர் எவ்வளவு கெட்ட ஸ்திதிக்கு வந்திருக்கிற தென்பதை நாம் கரதலாமலகம் போற் கண்டு கொண்டோம். இப்படிப் பட்ட வழக்குகளை நாம் எந்த ஊரிலும் கேள்விப் பட்ட தில்லை. இப்படிப்பட்ட வழக்குகளைக் கொண்டு வருகிற வர்கள், நம்மையும், நம்முடைய நியாயாசனத்தையும், அவமானப் படுத்துகிற படியால், அவர்களைத் தண்டிக்க வேண்டியது நம்முடைய கடமையாயிருக்கின்றது. ஆயினும், நமக்குப் பட்டாபிஷேகமான இந்த மங்கள தினத்தில் ஒருவரையும் தண்டிக்க நமக்கு இஷ்ட மில்லாதபடியால், அந்தத் துர் வியாஜியக்காரர்களை இந்தத் தடவை மன்னித்திருக்கிறோம். இனிமேல் இத் தன்மை யான வழக்குகளை யாராவது கொண்டு வருவார்களானால், அவர் கள் தப்பாமல் தண்டிக்கப் படுவார்கள். ஸ்தாவர ஜங்க மங்களை அநியாயமாக இழந்து போனவர்களும், அல்லது வேறுவிதமான துன்பத்தை அடைந்தவர்களும், நம்மிடத்தில் வந்து முறையிட்டுக்கொண்டால், நாம் கிரமப்படி விசாரணை செய்து நிஷ்பக்ஷபாதமாகவும், நிர்த்தாட் சண்ணியமாகவும் தீர்மானம் செய்ய, சித்தமாயிருக்கிறோம். இந்த ஊரிலே குடியரசு நிலைத்த பிற்பாடு, அக்கிரமம் நிலை பெற்று, தர்மம் குடியோடிப் போய்விட்டதாகத் தெரிய வருகிறது. நம் முடைய காலத்தில், தர்மம் தலை யெடுக்கும்; அநியாயம் அதோ கதியாய்ப் போகும். இதை நீங்கள் சீக்கிரத்திற் காண்பீர்கள்!” என்றார். 

இந்த உபந்நியாசத்தைக் கேட்ட உடனே, சருக்க ரைப் பந்தலிலே தேன்மாரி பொழிந்தது போல், சாதுக்க ளெல்லாரும் பரம சந்தோஷம் அடைந்தார்கள்; துஷ்டர்க ளெல்லாரும், கருடனைக் கண்ட பாம்பு போல, அடங்கி னார்கள். நான் இதுதான் சமயமென்று நினைத்து என்னுடைய வஸ்திராபரணங்களைக் கவர்ந்து கொண்ட காவல் வீரர்களை நோக்கி, “நீங்கள் செய்த அக்கிரமங்களை நான் அரசனுக்குத் தெரிவிக்கப் போகிறேன்” என்று சொல்லி, என் காலை எட்டி வைத்தேன். அவர்கள் உடனே, என்னை வழி மறைத்துக் கொண்டு, “ஸ்வாமி! உங்களுடைய சொத்துக்களைக் கொடுத்து விடுகிறோம். எங்களுடைய செய்கையை அரசனுக்குத் தெரிவிக்க வேண்டாம்!” என்று, பதினாறு பல்லையும் காட்டிக் கெஞ்சி னார்கள். நான் அரசனிடத்துக்குப் போகாமல் திரும்பி, என்னுடைய உடைமைகளைக் கொடுக்கும்படி கேட்டேன். அவர்கள் என்னைப் பார்த்து, “ஸ்வாமி! இந்த ஆடை யாபரணங்கள் உங்களுக்கு ஒரு விஷயமா? பொழுது விடிவதும் விடியாமற் போவதுமே உங்களுடைய ஸ்வாதீனத்தி லிருக்கும் போது, உங்களுடைய சக்திக்கு மேற் பட்டது யாது? நீங்கள் வானத்தை வில்லாக வளைப்பீர்கள்! மணலைக் கயிறாகத் திரிப்பீர்கள்!!” நீங்கள் ஆகாயத்தை ஆடை யாக்கி அணிந்து கொள் வீர்கள். மண்ணையும் கல்லையும் ஆபரண மாக்கிப் பூண்டு கொள்வீர்கள். எங்களுக்குக் கொடுத்து விட்ட ஆடை யாபரணங்களை மறுபடியும் கேட்கலாமா?” என்றார்கள். தான் அவர்களைப் பார்த்து, “நான் அவைகளை உங்களுக்கு மனப் பூர்வமாய்க் கொடுத் திருந்தால், நான் மறுபடியும் கேட்க மாட்டேன். அவைகளை நீங்களே துராக்கிருதமாய்க் கவர்ந்து கொண்ட படியால், மறுபடியும் கொடுக்க வேண்டும்” என்றேன். அவர்கள் என் சொத்துக்களைக் கொண்டு வருவதாகச் சொல்லி, வெளியே போய், சற்று நேரத்துக்குப் பின்பு, ஒரு மூட்டையைக் கொண்டு வந்து, என் கையிலே கொடுத்து, என்னுடைய உடைமக ளெல்லாம் அதற்குள் இருப்ப தாகச் சொல்லி, போய் விட்டார்கள். அவர்களை நான் பயமுறுத்தி என்னுடைய சொத்துக்களை மறுபடியும் வாங்கிக் கொண்ட விஷயத்தில், என்னுடைய சாமார்த்தியத்தை நானே மெச்சிக் கொண்டேன். நடுச் சாமத்தில், இராஜ சபை கலைந்து, அரசன் முதலிய எல்லாரும் அவரவர்களுடைய கிருகங் களுக்குப் போய் ட்டார்கள். வாய்க் கொழுப்புச் சிலையால் வடிந்தது போல, அந்த ஊராரிடத்தில் வாயைக் கொடுத்தால் பாடாவிதியாய் வருகிற படியால், இனிமேல் ஒருவ ரிடத்திலும் வாயைத் திறக்கிற தில்லை. யென்றும், பொழுது விடிகிற வரையில் எங்கே யாவது படுத் திருந்து, விடிந்த வுடனே அந்த ஊரை விட்டுப் போய் விடுகிற தென்றும், நிச்சயித்துக் கொண்டேன். நான் கொலு மண்டபத்தை விட்டு வெளியே போவதற்கு முன், வஸ்திரத்தைத் தரித்துக் கொள்ளலா மென்று நினைத்து, அந்தச் சேவகர்கள் கொடுத்த மூட்டையை அவிழ்த்தேன். வெண்காயம் உரிக்க உரிக்கத் தோலா யிருப்பது போல அந்த மூட்டை அவிழ்க்க அவிழ்க்கப் பழங் கந்தையா யிருந்ததே யல்லாமல், என்னுடைய ஆடைகளையும் காணேன்; ஆபரணங்களையும் காணேன். எனக்காக இத்தனைக் கந்தைகளை அந்தப் படு பாவிகள் எப்படிப் பொறுக்கிச் சேர்த்து வைத்திருந்தார்க ளென்பது, எனக்குப் பெரிய ஆச்சரியமா யிருந்தது. நமன் வாயில் அகப்பட்ட உயிர் திரும்பினாலும், அவர்க ளிடத்தில் அகப்பட்ட சொத்து மீளா தென்கிற உண்மை,அப்போது தான் எனக்குத் தெரிந்தது. 

நான் கொலு மண்டபத்தை விட்டு வெளியே போக யத்தனமா யிருக்கையில், ஒரு சேவகன் ஓடி வந்து, என்னைப் பார்த்து, “ஐயா! இந்த ஊர் துஷ்டர்களுக்கு வாசஸ்தானமா யிருப்பதால், இந்த அர்த்த ராத்திரியில் நீங்கள் வெளியே போகாமல், கொலு மண்டபத்திலே படுத்துக் கொள்ளும்படி, மகா ராஜா உத்தரவு செய் தார்கள்” என் ன்று சொல்லிப் போய் விட்டான். நான் அரச ருடைய ஜீவ காருணியத்தை வியந்து கொண்டு. அவர் தீர்க்காயுசா யிருக்க வேண்டு மென்று கடவுளைப் பிரார்த்தித்த பிறகு, அந்த மண்டபத்தில், ஒரு மூலையில், பூமியே புஷ்ப மெத்தை யாகவும், என் கையே தலையணை யாகவும் வைத்துக் கொண்டு, கௌபீனத் துடன் படுத்துக் கொண்டேன். படுத்த உடனே, அந்த மண்டபத்தில் புத்திர பௌத்திர பிரபெளத்திரர்க ளுடன் தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்து கொண் டிருந்த மூட்டுப் பூச்சிகள் வந்து, என் மேலே ஏறி, கவசம் போட்டது போல மொய்த்துக் கொண்டன, அவைகள் உபத்திரவத்தினால் எனக்கு நல்ல நித்திரை யில்லாமற் பாதி நித்திரையாய்க் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தேன். 

படுத்துச் சற்று நேரத்திற்குப் பின்பு, அந்தக் கொலு மண்டபத்துக்கும் இராஜ மாளிகைக்கும் மத்தியி லிருந்த வாசற் படிக் கதவு படீ ரென்று திறந்த சப்தம் கேட்டு, என்ன ஆபத்து வருமோ வென்று பயந்து கொண்டு என் னுடைய இரண்டு கண்களையும் இறுக மூடிக் கொண்டேன். சற்று நேரத்துக்குப் பின்பு யாரோ வந்து என்னை மிருது வாகத் தட்டினார்கள். முழுக் கண்ணையும் திறவாமல் பாதிக் கண்ணைத் திறந்து பார்த்தேன். ஞானாம்பாள் வந்து நிற்பது போலத் தோன்றிற்று. இந்த இடத்துக்கு ஞானாம்பாள் எப்படி வரக் கூடும்? நாம் கனவு காண்கிறோ. மென்று நினைத்து. மறுபடியும் கண்ணை மூடிக் கொண் டேன். அவள் தன்னுடைய இரண்டு கைகளாலும் என்னைப் பிடித்துக் தூக்கி, உட்கார வைத்து, “ஐயோ! அத்தான்!! இந்தப் பஞ்சைக் கோலத் துடன் தேவரீரைப் பார்க்க நான் என்ன பாவம் செய்தேன்?” என்று சொல்லி அழுதாள். நான் கண்ணை விழித்து, “நீ யார்?” என்றேன். அவள், “என்னை இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட்டீர் களா? நான் ஞானாம்பாள் அல்லவா?” என்றாள் நான் அவளைப் பார்த்து, “நான் தூங்குகிறே னென்றும், விழித் திருக்கிறே னென்றும் நிச்சயம் தெரிய வில்லை. அந்த நிச்சயம் தெரியும் பொருட்டு, உன்னுடைய நகத்தினாலே என்னைக் கிள்ளு!” என்றேன். அவளை நான் பூரண பக்ஷத்துடன் அங்கீகரிக்க வில்லை யென்கிற கோபத்தினா லும், என்னுடைய நித்திரை மயக்கத்தைத் தெளிவிக்க வேண்டு மென்கிற எண்ணத்தினாலும், அவள் என்னைப் பலமாகக் கிள்ளி, எனக்கு முத்தம் கொடுப்பது போல, என்னை வெடுக் கென்று பல்லாலே கடித்தாள். உடனே நான் திடுக் கென்று விழித்துக் கொண்டேன். எனக்கு. நித்திரை மயக்கம் தெளிந்து அவள் ஞானாம்பா ளென்று நிச்சயம் தெரிந்த உடனே, அவளைக் கட்டிக் கொண்டு சிறு பிள்ளை போல நெடுநேரம் கதறினேன். அவளும் என்னுடன் புலம்பின பிறகு என்னைப் பார்த்து, “உங்களை இந்தக் கோலத்தோடு நான் ஒருநாளும் பார்த்த தில்லை. உங்களைப் பார்க்கப் பார்க்க என் வயிறு பற்றி எரிகின்றது. நீங்கள் ஊரை விட்டுப் புறப்பட்டது முதல் நடந்த சங்கதி களை யெல்லாம் தெரிவிக்க வேண்டும்” என்றாள். 

நான் வேட்டை பார்க்கப் புறப்பட்டது முதல் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் தெரிவித்ததும் தவிர, கடைசி யாகப் புது அரசன் என்னை விடுதலை செய்த விவரத்தையும், சொல்லி, “அந்த அரசருக்குக் கடவுள் பூரண ஆயுசைக் கொடுக்க வேண்டும்; அவராலே தான், உன்னை நான் இப்பொழுது காணும் படி யான பாக்கியம் கிடைத்தது’ ன்றேன். ஞானாம்பாள் என்னைப் பார்த்து, “உங்களை விடுதலை செய்த புது அரசன் நான் தான்” என்றாள். இதைக் கேட்ட வுடனே, நான் ஆச்சரியம் கொண்டு பிரமித்து, நான் மறுபடியும் தூங்குகிறேனோ, விழித் திருக்கிறேனோ வென்று, என் கண்ணை தடவிப் பார்க்க ஆரம்பித்தேன். அவள் என்னைப் பார்த்து, “உங்களுடைய புத்தியைச் சிதற விடவேண்டாம். நான் சொல்லுவது வாஸ்த வந்தான். எல்லாக் காரியங்களையும் சவிஸ்தார மாகச் சொல்லுகிறேன்; வாருங்கள்” என்று சொல்லி, என் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, அரண்மனைக்குப் போனாள். 

37-ஆம் அதிகாரம்

ஞானாம்பாள் தன்னுடைய வரலாறுகளைத் தெரிவித்தல்

நானும், ஞானாம்பாளும் கொலு மண்டபம், ஆஸ்தான மண்டபம், சித்திர மண்டபம், சிங்கார மண்டபங்க ளெல் லாம் கடந்து, ஏகாந்த மண்டபத்திற் போய்ச் சேர்ந் தோம். இராத்திரி யென்பதே தெரியாமற் பட்டப் பகலென்று சொல்லும் படியாக, அநேக தீப கோடிகள் அந்த மண்டபங்களிற் பிரகாசித்தன. ஞானாம்பாள் என்னை ஒரு ஆசனத்திலிருத்தி, அவளுடைய வரலாறுகளைச் சொல்லத் தொடங்கினாள். 

“நீங்கள் வேட்டை பார்க்கப் போன பிறகு, கானகத் தில் என்ன ஆதங்கம் நேரிடுமோ வென்று, நான் சித்த சாஞ்சல்லியப் பட்டுக் கொண்டிருக்கும்போது, நீங்களும், நீங்கள் ஏறிய யானையும், யானைப் பாகனும் போன வழி தெரிய வில்லை யென்றும், நீங்கள் ஆதியூருக்குத் திரும்பி வந்து விட்டீர்களா வென்று விசாரித்துக்கொண்டு வரும்படி கனகசபை யண்ணன் உத்தரவு கொடுத்த தாகவும் சிலர் வந்து தெரிவித்தார்கள். நீங்கள் ஆதியூருக்குத் திரும்பி வராமையினால், தேவராஜ பிள்ளையும், இன்னும் அநேகரும், உடனே புறப்பட்டுக் கானகத்துக்குப் போய்த் தேடியும், உங்களுடைய செய்தி ஒன்றும் தெரிய வில்லை. வேடர்கள் வேட்டை யாடிக் கொண்டிருந்த இடத்துக்கும் யானை நின்ற இடத்துக்கும் அதிக தூர மாகையால், யானை வீரிட்டுக் கொண்டு போன சப்தம் மட்டும் தங்கள் காதில் விழுந்த தாகவும். அந்த யானை எந்தத் திசை நோக்கி நடந்த தென்பது தெரியா தென்றும், வேடர்கள் தெரிவித்தார்கள். வேட்டை யாடுவதை நிறுத்தி விட்டு வேடர்களும், மற்றவர்களும், அந்தக் காட்டில் நுழையக் கூடாத இடங்களெல்லாம் நுழைந்து தேடியும், நீங்கள் அகப்பட வில்லை. தேவராஜ பிள்ளை, கனகசபை யண்ணன் முதலானவர்கள், வீட்டுக்குத் திரும்பி வராமல், அந்தக் காட்டிலே கூடாரம் அடித்துக் கொண்டு பலநாள் வரைக்கும் தேடியும், தாங்கள் அகப்படாமையினால், நான் சித்தம் கலங்கி, தேக ஸ்மரணை தப்பி, பைத்தியம் பிடித்த வள் போற் புலம்பிக் கொண்டு திரிந்தேன். தேவராஜ பிள்ளை முதலானவர்கள் எனக்கு ஆறுதலாகச் சொன்ன வார்த்தைகளெல்லாம், செவிடன் காதிற் சங்க நாதம் செய்தது போல, நிஷ்பல மாகி விட்டன. நான் சரியான ஆகாரமும், உறக்கமு மில்லாமல், எப்போதும் அழுது கொண்டு, வடதிசையை நோக்கிப் பார்த்த வண்ணமா யிருந்தேன். ஒரு நாள் இராத்திரி, நடுச் சாமத்தில், நான் மேல் மாடியில் உட்கார்ந்து கொண்டு, சாளரத்தின் வழி யாக வடக்கை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அதிக தூரத்தில், ஒரு கரிய மேகம் நடந்து வருவது போல், ஒரு யானையானது பாகனுமில்லாமல், அம்பாரி முதலிய அலங்காரமு மில்லாமல், வெறுமையாய் நடந்து வந்தது. அந்த யானை சமீபத்தில் வந்த உடனே நிலா வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தேன். அதுதான் உங்களை மோசம் செய்த பட்டத்து யானை யென்று எனக்கு பரிஷ்காரமாய் விளங்கிற்று. அந்த யானையானது வழக்க மாய்க் கட்டப்படுகிற கொட்டத்துக் குள்ளே வந்து, தானே நுழைந்து கொண்டது. அப்போது எல்லோரும் அரு நித்திரையாயிருந்த படியால், அந்த யானை வந்தது என்னைத் தவிர வேறொருவருக்கும் தெரியாது; அந்த யானையைப் பார்த்த உடனே, எனக்குச் சகிக்கக் கூடாத சஞ்சலம் உண்டாகி, நான் ஒருவருக்கும் தெரியாமல் எழுந்து, அந்த யானை நின்ற இடத்துக்குப் போனேன். அந்த யானை என்னைப் பார்த்த உடனே, அதனுடைய துதிக்கையை என் மேல் நீட்டி, மிருதுவாகத் தடவிற்று. நான் உடனே அந்த யானையைப் பார்த்து, “ஐயோ! துஷ்ட மிருகமே!! என்னுடைய பர்த்தாவை என்ன செய் தாய்? எந்தத் திக்கிலே கொண்டு போய் விட்டாய்? அவரைக் கொன்று விட்டாயோ? அல்லது உயிரோடே விட்டு விட்டாயோ? ஒன்றும் தெரிய வில்லையே! நீ ஆணோடு பெண்ணோடு பிறக்கவில்லையா? நீ ஆணோடு பிறந் திருந்தால், என் பர்த்தாவை ஏன் அவகடம் செய்தாய்? நீ பெண்ணோடு பிறந்திருந்தால், பெண்ணாகிய எனக்கு நீ இரங்கமாட்டாயா? என் பர்த்தா இருக்கும் இடத்தைக் காட்டாயா? என் துன்பத்தை ஓட்டாயா?” என்று பல விதமாகச் சொல்லிப் புலம்பினேன்.என்னுடைய கண்ணீர்த் துளிகள் அந்த யானையின் துதிக்கையை நனைத்துவிட்டன. உடனே அந்த யானையானது தன்னுடைய துதிக்கையை என்னுடைய இடுப்பிலே சுற்றி, என்னை அதி மிருதுவாகத் தூக்கி, தன் முதுகின் மேலே வைத்துக் கொண்டு, நடந்தது. ஆரம்பத்தில் எனக்குப் பயம் ஜனித்த போதிலும், அந்த யானை வட திசையை நோக்கி நடந்த படியால், நீங்களிருக்கிற இடத்திலே என்னைக் கொண்டு போய் விட்டாலும் விடுமென்று, நாள் மனத் திடம் செய்து கொண்டேன். அப்போது அர்த்த சாமமாகவும், எல்லாரும் தூங்குகிற சமய மாகவும் இருந்தபடியால், யானை என்னைத் தூக்கிக் கொண்டு போனது ஒருவருக்கும் தெரியாது. 

அந்த யானை யானது. உள்நகர் புறநகரெல்லாம் கடந்து, கானகத்துக்குள் நுழைந்து, மரம் செடிகளெல்லாம் நெறு நெறென்று சாய்த்துத் தள்ளிக் கொண்டு, அநேகம் காடுகள், மலைகள், ஆறுகளெல்லாம் தாண்டி, வட திசையை நோக்கி இரவும் பகலுமாகக் கடுமையாக நடந்தது. நான் வழியிலிருக்கிற மரக்கனிகளை உண்டு பசி தீர்த்துக் கொண்டு போனேன். யானை பல நாள் நடந்த பிறகு, ஒரு பெரிய மலையடிவாரத்தில் வந்து சேர்ந்து, அந்த மலையோரத்தில் அசையாமல் நின்றது. நான் அந்த மலையில் ஒரு பக்கத்தில் அம்பாரி உடைந்து கிடப்பதைக் கண்டு, யானையை விட்டுத் தாண்டி, அந்த மலை மேலே தொற்றிக் கொண்டேன். அந்த அம்பாரி’ கிடந்த இடத்துக்குக் கொஞ்ச தூரத்தில், சில வஸ்திரங்கள் கிடந்தன. அவைகளை ஒரு நீளக்கழியினால் இழுத்து. என் கையிலே எடுத்துப் பார்க்சு. அவைகள் உங்களுடைய. சட்டையாகவும் முண்டாசாகவுமிருந்த படியால், எனக்கு உண்டான மனோ விசாரம் இவ்வளவென்று சொல்ல ஒண்ணாது. அவைகளைக் கண்களில் ஒத்தி, தலையிலே சூடி, வாயிலே வைத்து அநேக முத்தங்கள் கொடுத்தேன். அவைகளைக் கையில் எடுத்துக் கொண்டு மலை மேல் ஏறும் பொழுது, உங்களுடைய பெயர் எழுதப்பட்டிருந்த மரங்களையும் பார்வை யிட்டேன். அந்த மரங்களையே வழி காட்டியாக வைத்துக் கொண்டு நடந்து. மலையின் உச்சியில் வந்து சேர்ந்தேன். அந்த மலைக்கு வடபுறத்தில் வெட்டப்பட்டிருந்த படிகளைக் கண்ட உடனே, அவை களின் வழியாக நீங்கள் இறங்கிப் போயிருக்கலாமென்று நினைத்து, நானும் இறங்கி வருகிற தென்று நிச்சயித்துக் கொண்டேன். ஆனால், பெண் வடிவாய்ப் போகிறது. எப்போதும் ஆபத்தை விளைவிக்கு மானதால், புருஷ.. வேஷம் தரித்துக் கொண்டு போவது சர்வோத்தம மென்று நினைத்து, அப்போது நான் இடையில் தரித் திருந்த வெள்ளைச் சல்லாச் சேலையை இரண்டாகக் கிழித்து, இடுப்பு வேஷ்டியாகவும் அங்கவஸ்திரமாகவும் உபயோகித்துக் கொண்டு, உங்களுடைய சட்டையை மேலே தரித்துக் கொண்டு, உங்களுடைய முண்டாசையும் என் தலை மேலே தரித்துக் கொண்டேன். இப்படியாக, ஆண் வேஷம் தரித்துக் கொண்டு, படி வழியாயிறங்கி, அடிவாரத்தில் வந்து சேர்ந்தேன். 

நான் வந்து சேர்ந்த போது, பட்டணத்து ஜனங்க ளெல்லோரும் மலையடிவாரத்தில் ஏகமாய்க் கூட்டம் கூடி யிருந்தார்கள். அவர்களால் விடப்பட்ட ஒரு யானை யானது, என்னிடத்தில் வந்து, என் கழுத்தில் பூமாலை யைப் போட்டு, என்னைத் தூக்கித் தன் முதுகின் மேலே வைத்துக் கொண்டது. உடனே ஜனங்கள் எல்லாரும் என்னை நோக்கி, “மகாராஜாவே! சக்கரவர்த்தியே!!. நீங்கள் தீர்க்காயுசா யிருக்க வேண்டும். நாங்கள் ஒரு இராஜாவை நியமிக்க வேண்டியதற்காக, யானையின் கையிலே பூமாலையைக் கொடுத்து அனுப்பினோம். அது உங்களுடைய கழுத்திலே மாலையைப் போட்ட படியால், இனி நீங்கள்தான் எங்களுக்கு மகாராஜா; நாங்கள் உங்களுக்குப் பிரஜைகள். நீங்கள் எங்களுக்குப் பிதா; நாங்கள் உங்க ளுக்குப் பிள்ளைகள்” என்று சொல்லி, பூமியில் சாஷ்டாங்க. மாக விழுந்து என்னை நமஸ்கரித்தார்கள். கூத்துப் பார்க்கப் போன இடத்திலே பேய் பிடித்தது போல, புருஷனைத் தேடி வந்த இடத்தில், இப்படிப் பட்ட சகட யோகம் வந்ததே யென்று நான் திகைத்து, இராஜாங்கம் வேண்டா மென்று நிராகரிக்க எண்ணங் கொண்டேன். ஆனால், நான் வேண்டா மென்றாலும் ஜனங்கள் என்னை விட மாட்டார்க ளென்கிற பயத்தினாலும், நான் அரசனா யிருக்கிற பக்ஷத்தில் நீங்கள் இருக்கிற இடத்தை அநாயாசமாய்க் கண்டு பிடிக்கலா மென்கிற நம்பிக்கையினாலும், நான் இராஜாங்கம் வேண்டா மென்று சொல்லாமல், சும்மா யிருந்து விட்டேன். உடனே, அவர்கள் என்னைப் பட்டணப் பிரதக்ஷணம் செய்வித்து, அரண்மனைக்குக் கொண்டு போய், மகுடம் சூட்டினார்கள். அப்போது ஒரு பக்கத்தில் பரத நாட்டியமும், ஒரு பக்கத்தில் மேள வாத் திய முழக்கமும், ஒரு பக்கத்தில் சங்கீத கானமும், ஒரு பக்கத்தில் பிராமணர்க ளுடைய வேத கோஷமும், ஒரு பக்கத்தில் வித்வான்க ளுடைய ஸ்தோத்திரப் பாடல்களும், ஒரு பக்கத்தில் ஆசியக்காரர்க ளுடைய விகடங்களும் கூடி, எனக்குத் தலை மூர்ச்சனையாய்ப் போய் விட்டது. அந்த ஆரவாரங்க ளெல்லாம் போது மென்றும், நான் ஏகாந்தமா யிருக்க அபேக்ஷிக்கிறே னென்றும், நான் ஆயிரம் தரம் தெரிவித்த பிறகு, அவர்கள் ஒருவர் ஒருவராய்த் தொலைந்தார்கள். அவர்கள் தொலைந்ததும், ஆயிரம் பேர் என்னைச் சுற்றிக் கொண்டு பங்காப் போடுகிறவர்களும் கவரி வீசுகிறவர்களும், குடை பிடிப்பவர்களும், படிக்கம் ஏந்துகிறவர்களும், அடைப்பம் ஏந்துகிறவர்களும், பன்னீர் தெளிப்பவர்களும், கந்தப்பொடி இறைப்பவர்களும், பூமழை பொழிபவர்களும், “சுவாமி! பராக்கு! பராக்கு!”, என்று கட்டியங் கூறுகிறவர்களும், வாழ்த்துகிறவர்களும், இன்னும் அநேக வித கோலாகலம் செய்கிறவர்களுமா யிருந்தார்கள். அவர்கள் எந்தச் சமயத்திலும் என்னுடன் கூட இருக்கிறார் களென்று கேள்விபட்டு, எனக்கு மகத்தாகிய சிந்தாகுலம் உண்டாயிற்று. 

நான் அரண்மனையைச் சேர்ந்த சிங்கார தனத்துக் காவது போய், சற்று நேரம் ஏகாந்தமாயும் அமரிக்கை யாயும் இருக்கலாமென்று நினைத்து புறப்பட்டேன். நான் பகிர் பூமிக்குப் போவதாக நினைத்து, என்னை நூறு பேர் தொடர்ந்து வந்தார்கள். “ஏன் வருகிறீர்கள்?” என்று கேட்டேன். மகாராஜாவுக்குக் கொல்லையிலே.. பங்காப் போடவும், கால் கழுவி விடவும், பல் விளக்கி விடவும், முகம் கழுவித் துடைக்கவும், வேஷ்டி கட்டி விடவும், இன்னும் பலபல வேலைகள் செய்யவும், கொல்லை யில் நூறு பேர் காத்திருக்கிற வழக்கமென்று சொன்னார் கள். நான் உடனே கொல்லைக்குப் போகாமல் திரும்பி வந்துவிட்டேன். உங்களைத் தவிர வேறு புருஷர்களை நான் முகாவலோகனஞ் செய்ததே யில்லை. நம்முடைய வீட்டில் வேலைக்காரர்களிடத்திற் பேசும் போது கூட எனக்கு நாணமும் சங்கோசமுமா யிருக்கும். இப்படிப் பட்ட எனக்கு, அத்தனை புருஷர்களுடைய மத்தியிலிருப்பது எவ்வளவு மன வருத்தமாயிருக்கு மென்பதை நீங்களே ஹித்துக் கொள்ள வேண்டும். நான் உடனே இதற்குப் பரிகாரம் தேட வேண்டு மென்று நினைத்து, அந்தப் புருஷர்களை நோக்கி, “எந்தத் தேசத்திலும், இராஜாக் களுக்கு ஸ்திரீகள் பணிவிடை செய்வது வழக்கமாயிருக் கின்றது. இந்த ஊரில் அந்த வழக்கம் ஏன் அனுஷ்டிக்கப் படவில்லை? இது ஸ்திரீகள் இல்லாத நகரமா? அல்லது இராஜாவுக்கு ஊழியம் செய்வதை ஸ்திரீகள் தங்களுக்குக் கௌரவக் குறைவாக எண்ணுகிறார்களா? அதின் வயணம் தெரிய வேண்டும்” என்றேன். உடனே. அவர்கள், “மகா ராஜாவே! உங்களுடைய அபிப்பிராயம் தெரியாமையினால், நாங்கள் உங்கள் பணிவிடைகளைச் செய்ய ஆரம்பித்தோம். கணக்கில்லாத ஸ்திரீகள் உங் களுடைய ஊழியங்களைச் செய்யச் சித்தமாய்க் காத்துக் கொண் டிருக்கிறார்கள். அவர்களை அழைப்பிக்கும் படி உத்தரவானால், இந்த நிமிஷத்தில் வரவழைக்கிறோம்” என்றார்கள். நான் அவர்களை நோக்கி, “எனக்கு ஸ்திரீகள் பணிவிடை செய்வது திருப்தியே யல்லாது. புருஷர்கள் பணிவிடை செய்வது திருப்தி அல்ல. ஆகையால், நீங்கள் போய் ஸ்திரீகளை வரச் சொல் லுங்கள்” என்றேன். அவர்கள் நான் ஸ்திரீ லோல னென்றும், கோலாகல புருஷ னென்றும் எண்ணிக் கொண்டு, உடனே புறப்பட்டுப் போய், நூறு ஸ்திரீகளை அனுப்பினார்கள். நான் உட்கார்ந்திருக்கும் போதே, சில ஸ்திரீகள் எனக்குக் கால் பிடிக்கவும், சிலர் கை பிடிக்கவும், பல ஸ்திரீகள் உடம்பெல்லாந் தடவி விடவும் ஆரம்பித் தார்கள்.நான் அவர்களை வரவழைத்தது, சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கில் மாட்டிக் கொண்டது போல் ஆயிற்று. ஏனென்றால் அந்தப் புருஷர்கள் என் சமீபத்தில் வரப் பயந்து கொண்டிருந்தார்கள். இந்த ஸ்திரீகளோ என்றால்,நிர்ப்பயமாக என்னை நெருங்கித தாடவும்,மோகாபிநயங்கள் செய்யவும் ஆரம்பித்தார்கள். அவர்களை நான் கடு கடுத்துக் கொண்டு, “என்னுடைய உத்தர வில்லாமல் என்னை யாராவது தொட்டாலும், கிட்ட நெருங்கினாலும், அவர்கள் சிரச் சேதஞ் செய்யப் படுவார்கள்” என்று அச்சுறுத்தினேன். உடனே அவர்கள் என்னை விட்டு விலகிப் போய் விட்டார்கள். 

நான் ஸ்நான கட்டத்துக்குப் போன போது, எனக்கு அழுக்குத் தேய்க்கிறதற்காக, சில ஸ்திரீகள் என் வலது காலைப் பிடித்துக் கொண்டார்கள். சிலர் இடது காலைப் பிடித்துக் கொண்டார்கள். சிலர் இடது கையைப் பிடித்துக் கொண்டார்கள். அப்படியே, பல ஸ்திரீகள் என்னுடைய பல அவயவங்களையும் பங்கிட்டுக் காண் டார்கள். அப்போதும், அவர்களை நான் கடிந்து கொண்டு, என்னுடைய கர சரணாதி அவயவங்கள் அவர்களுடைய ஸ்வாதீனத்தி லிருந்து என் ஸ்வாதீனப் படுத்திக் கொள்ள நான் பட்டபாடு, போது மென்றாய் விட்டது. 

ஸ்நானம், ஜபம் முதலிய நித்திய கர்மாநுஷ்டானங்கள் முடிந்த பிற்பாடு, நான் அமுது செய்வதற்காகப் போஜன சாலைக்குள் நுழைந்தேன். அங்கே எனக்கு அமுது படைக் கிறதற்கு முன், இரண்டு பெயருக்கு இலையில் அழுது படைக்கப்பட்டு, அவர்கள் எனக்கு முந்திப் புசிக்க ஆரம் பித்தார்கள். நான் ஆச்சரியம் அடைந்து, அவர்கள் யாரென்று வினவினேன். உடனே, மடைப்பள்ளி விசாரணைக் கர்த்தர்கள் என்னை நோக்கி, “மண்டலாதிபதியே!அந்த இருவருக்கும் ‘உண்டு காட்டிகள்’ பெயர், அவர்களை விஷ பரீக்ஷகர்க ளென்றுஞ் சொல்லலாம். மகா ராஜாவி னுடைய உணவில் யாராவது சத்துருக்கள் விஷங் கலக்கக் கூடு மாகையால், அதைப் பரீக்ஷிப்பதற்காக, அந்த இருவருக்கும் சாதம் படைப்பதும், அவர்கள் முந்திப் புசிப்பதும் வழக்கம். அவர்கள் போஜனஞ் செய்து, இரண்டு நாழிகைக்குப் பிறகு, அவர்களுக்கு விஷ உபத்திரவம் இல்லை யென்று தெரிந்த பிறகு, மகா ராஜா சாப்பிட வேண்டும்” என்றார்கள். எனக்குத் தாளக் கூடாத பசியா யிருந்தாலும், விஷ சோதனை செய்வதற்காக, நான் வெகு நேரம் வரையில் அன்னத்தைத் தொடாமல் உட்கார்ந் திருந்தேன். பிறகு, வாழை இலை போலத் தங்கத்தினாற் செய்யப்பட்ட இலையிலே, அன்னமும், பல வகையான அறுசுவை பதார்த்தங்களும், படைக்கப்பட்டன. நான் போஜனஞ் செய்வதற்காக இலைக்கு முன்பாக உட்கார்ந்தேன். என் பக்கத்திலே பல ஸ்திரீகள் உட் கார்ந்து, ஒரு ஸ்திரீ எனக்குச் சாதம் ஊட்டவும், பல ஸ்திரீ கள் பல கறிகளை எடுத்து என் வாயில் வைக்கவும் ஆரம்பித்தார்கள். நான் அவர்களை முனிந்து கொண்டு, “எனக்கு ஒருவரும் ஊட்ட வேண்டாம். நானே அள்ளிச் சாப்பிடுகிற வழக்கம்” என்று சொல்லி, அதட்டினேன். அவர்கள் நடுநடுங்கிக் கொண்டு, தூரத்திற் போய்விட்டார்கள். சகல விகாதங்களுந் தீர்ந்து போய் விட்டபடியால், இனிமேல் அமரிக்கையாய்ப் புசிக்கலாமென்று நினைத்து, சாதத்தை அள்ளி, வாயில் வைத்தேன். உடனே இரண்டு வைத்தியர்கள் என் முன்பாக நின்றுகொண்டு, “மகாராஜா! இராஜேந்திரா!! அந்தப் பதார்த்தம் வாயு; இந்தப் பதார்த்தம் சூடு; அந்தக் கறி பித்தம்; இந்தக் கறி சீதளம், என்று சொல்லி, அநேக பதார்த்தங்களை நான் புசிக்காத படி தடுத்தார்கள். நான் அவர்களுடைய வார்த்தைகளைக் காதிலே வாங்கிக் கொள்ளாமல், எனக்கு இஷ்டமான பதார்த்தங்களை யெல்லாம் பரிபூரணமாக உண்டு.பசி தீர்த்துக் கொண்டேன். பிறகு, நான் சுயம்பாசிகளைப் பார்த்து, ‘இந்த வைத்தியர்கள் கறிகளுக் நெல்லாந் தோஷஞ் சொல்லுகிறபடியால், அவர்கள் சாப்பிடும் போது, அவர்களுக்குக் கறிகள் படைக்காமல், தண்ணீருஞ் சாதமும் படையுங்கள்” என்று ஆக்ஞாபித்தேன். அந்தப் படி சுயம்பாகிகள் உடனே நிறைவேற்றினார்கள். 

நான் சாப்பிட்ட பிறகு நடந்த உபசாரங்களும் அனந்தம். அந்த உபசாரங்களை யெல்லாம் நான் அபசாரங் களென்றே நினைத்தேன். நான் இராஜாவாயிருந்து பட்ட பாடுகள் நீங்கள் காவற்கிடங்கிற்கூடப் பட்டிருக்க மாட்டீர்கள்! 

“ஆரியக் கூத்தாடினாலுங் தாரியத்திலே கண்” என்பது போல, நான் பட்ட உபத்திரவங்களின் மத்தியில், கண்’, உங்களை நான் மறக்கவில்லை. இந்த ஊரில், என்ன விசேஷ மென்றும், யாராவது அந்நியர்கள் வந்திருக்கிறார்களா வென்றும், நான் பொதுவாக வேவுகாரர்களை விசாரித்த போது, அவர்கள், “ஒரு அன்னிய தேசத்தார் வந்திருக்கிறார். அவர் மேலே பல துர் வழக்குகள் வந்திருக்கின்றன. அவர் பொழுதை விடியச் சொன்னால் விடிகின்றது. விடிய வேண்டா மென்றால் விடிகிறதில்லை” என்றார்கள். அவர்கள் சொன்ன அந்த அடையாளங்களைக் கொண்டு, நீங்கள்தானென்று நிச்சயித்துக் கொண்டு, உடனே உங்களையும், மற்றவர்களையும், விசாரணைக்குக் கொண்டு வரும்படி உத்தரவு செய்தேன். நீங்களிருந்த கோலத்தை நான் நியாய சபையிற் பார்த்தபோது, என் பிராணன் துடித்துப் போய்விட்டது. நான் மெய்ம்மறந்து, சிங்கா சனத்தை விட்டுக் கீழே விழும்படியான ஸ்திதியிலிருந்தேன். ஆயினும், பூண்ட வேஷத்தைச் சரியாக நிறைவேற்ற வேண்டு மென்கிற எண்ணத்துடன், நான் மனத்திடஞ் செய்துகொண்டு, உங்கள் மேல் வந்த விசாரித்தேன். அந்த விசாரணை முடிந்த பிறகு, நீங்கள் வழக்குகளை கொலு மண்டபத்தை விட்டு அப்பாற் போகவேண்டா மென்று, ஒரு சேவகன் மூலமாக நான் தான் உங்களுககுச் சொல்லி யனுப்பினேன்” என்றாள். இந்த வரலாறுகளை யெல்லாங் கேட்ட உடனே, எனக்கு உண்டான ஆச்சரியம். அளவுகடந்து போய்விட்டது. 

38-ஆம் அதிகாரம்

அரசன் குடிகளுக்குச் செய்ய வேண்டிய நன்மைகள் – உத்தியோக விஷயம் – பரிதான கண்டனம்

நானும், ஞானாம்பாளும், எங்களுடைய துயரங்களை ஒருவருக்கொருவர் சொல்லி மனந் தேறின பிறகு, ஞானாம்பாள் என்னை நோக்கி, “நீங்கள் உங்களுடைய வரலாறுகளை எனக்குத் தெரிவித்த போது, ஒரு முக்கிய மான சங்கதியைத் தெரிவிக்காமல் விட்டு விட்டீர்கள்* நீங்கள் பொழுது விடியாமற் பாடின தாகவும், அந்தப் பிரகாரம் பொழுது விடியாமலிருந்த தாகவும், பிறகு. நீங்கள் வேறொரு பாட்டுப் பாடிப் பொழுது விடியும் படி செய்த தாகவும், நான் கேள்விப் பட்டேன். அந்தச் சங்கதியை எனக்கு விவரமாகத் தெரிவிக்க வேண்டும்” என்று சொல்லிக் கும்பிட்டாள். சக்கிலியன் பக்ஷமாக நியாயாதிபதி தீர்மானஞ் செய்தாலும், நான் கிரகணத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு பொழுது விடியாமற் பாடினதும், பிறகு ஜனங்களுடைய வேண்டுகோளின் பிரகாரம் நான் பொழுது விடியும்படி பாடினதும், ஞானாம்பாளுக்குப் பூரணமாகத் தெரிவித்தேன். அதைக் கேட்ட வுடனே, அவள் நெடு நேரம் வரைக்கும் குலுங்கக் குலுங்கச் சிரித்தாள். பிறகு, அவள் என்னுடைய சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டு, “என்னுடைய அத்தான் நெருப்பைச் சுடு மென்பார். தண்ணீர் குளிர்ந் திருக்கு மென்பார். ஈப் பறக்கு மென்பார். காகங் கறுப் பாகவும், கொக்கு வெண்மை யாகவும் இருக்கு மென்பார். ஆகையால், அத்தானைப் போற் சமர்த்தர்கள் யார்?” என்னுங் கருத்தை யடக்கி, ஒரு வெண்பாப் பாடினாள். அஃது பின் வருமாறு:- 

தீயே சுடுமென்பர் தெண்ணீர் குளிருமென்பர்
ஈயே பறக்குமென்ப ரின்னமுந்தான்- பாய்காகஞ்
சுத்தக் கறுப்பென்பர் சூழ்கொக்கு வெண்மையென்பர்
அத்தானைப் போற்சமர்த்தர் யார்? 

நான் அத்தா னென்கிற முறைமை பற்றி ஞானாம்பாள் பரிகாச மாகப் பாடின படியால், ஒருவரும் விகற்பமாக எண்ணார்க ளென்று நம்புகிறேன். 

ஞானாம்பாள் என்னைப் பார்த்து, “நீங்கள் இருக்கு மிடத்தைத் தேடிக் கண்டு பிடிப்பதற்குச் சாதகமா யிருக்கு மென்று நினைத்தே, நான் இந்த இராச்சிய அங்கீகரணஞ் பாரத்தை செய்தேன். இப்போது என்னுடைய மனோரதம் நிறைவேறி, உங்களைக் காணும் படியான பெரும் பேறு கிடைத்து விட்டதால், இனி நமக்கு இந்த இராஜிய பாரம் வேண்டுவ தில்லை. எனக்கு நீங்களே இராஜா; நானே உங்களுக்குக் குடி. எனக்கு நீங்களே எசமான்; நான் உங்களுடைய ஊழியக்காரி. நான் உங் களுடைய ஊழியத்தை விட்டு விட்டு, இராஜாங்கத்தை வகிப்பது முறையல்ல. அன்றியும், அரசாட்சி செய்யத் தகுந்த யோக்கியதையும் என்னிடத்தில் இல்லை. ஆகையால், ஒருவருக்குந் தெரியாமல், நாம் இந்த ஊரை விட்டுப் போய் விடுவதே சர்வோத்தமம்” என்றாள். நான் அவளைப் பார்த்து, “இந்த ஊர் சில காலமாக அரச னில்லாமல் அராஜரீகமா யிருப்பதால், துஷ்டர்கள் அதி கரித்து, சாதுக்க ளெல்லாரும் ஆலையில் அகப்பட்ட கரும்பு போலத் துன்பப் படுகிறார்கள். இதை நாம் வ்வாநு போகமாகத் தெரிந்திருந்தும், அந்தச் சாதுக்களைக் கைவிட்டுப் போவது தர்மமா? அன்றியும், நீ மகா ராணியா யிருப்பதும்,உனக்கு நான் கணவனா யிருப்பதும், எனக்கு எவ்வளவோ மேன்மை. அந்த மேன்மையை இழந்து விட எனக்குக் சம்மதமில்லை” என்றேன். அதற்கு ஞானாம்பாள் சொல்லுகிறாள்:- “இராஜ்ய பாரத்தை வகிப்பது எனக்கு அசம்மதமா யிருந்தாலும், அது உங்களுக்குப் பிரியமா யிருக்கிற படியால், உங்களுடைய சித்தப் பிரகாரம் நடக்கக் காத்திருக்கிறேன். பெரிய மலையைத் தூக்கித் தலைமேல் வைத்துக் கொண்டது போல, இராஜாங்க பாரத்தை நான் வகித்துக் கொண்ட படியால், அதை நான் தாங்கும்படி நீங்களும் எனக்கு உதவி செய்ய வேண்டும். ஏனென்றால், அரசு செலுத்துவது நம்முடைய வீட்டுக் கிள்ளுக் கீரையல்ல. உலகத்தி லுள்ள சகல தொழில்களிலும், அதிகாரங்களிலும், இராஜாதிகாரம் எப்படி மேலானதா யிருக்கிறதோ, அப்படியே அதைச் சேர்ந்த வேலைகளும் அபாரமா யிருக்கின்றன. ஒரு குடும் பத்துக்கு தலைவனாயிருக்கிறவன் அந்தக் குடும்பத்துக்காக ஓயாமற் பாடுபடுகிறான். கோடானுகோடி குடும்பங் களுக்குத் தலைவனா யிருக்கிற இறைவன், ஒரு நிமிஷ மாவது சும்மா இருக்கலாமா? சொற்பக் கூலியை வாங்கிக் கொண்டு வேலை செய்கிறவன் அகோராத்திரம் உழைக் கிறான். அப்படியானால், எண்ணிக்கை யில்லாத வருமானங் களையும், ஊதியங்களையும், இராஜ சுதந்தரங்களையும், ஜனங்களிடத்தில் பெற்றுக் கொண்டு அனுபவிக்கி அரசன், அந்த ஜனங்களுக்காக எவ்வளவு பாடுபட வேண்டும்? அரசனுடைய நேரமும், புத்தியும், சக்தியும், ஜனங்களுக்குச் சொந்தமே யன்றி,அரசனுக்குச் சொந்தம் அல்ல. ஜனங்களுடைய சௌக்கியத்துக்காக இராஜாங்கம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, தன்னுடைய சௌக்கியத்துக் காக ஏற்பட்டிருக்கவில்லை யென்பதை, அரசன் எப்போதுந் தன்னுடைய கருத்தில் வைக்க வேண்டும். அரசன் ஜனங்களுடைய சுகாசுகங்களையே, தன்னுடைய சுகாசுகங்களாக எண்ணவேண்டுமே யல்லாது, தன்னையும் ஜனங்களையும் பிரத்தியேகமாக எண்ணக் கூடாது. அப்படிப் பிரத்தியேகமாக எண்ணுகிற பக்ஷத்தில், தன்னைப் பார்க்கிலும் ஜனங்களையே விசேஷமாக எண்ண வேண்டும், ஒரு அன்புள்ள தகப்பன், பிள்ளைகளுடைய சௌக்கியத்தின் மேலே நாட்டமா யிருப்பதுபோல, அரசனும் பிரஜைகளுடைய நன்மைகளையே எப்போதுந் தேட வேண்டும். அரசன் நல்ல சட்ட திட்டங்களை உண்டு பண்ணி, அந்தப்படி தான் முந்தி நடந்து, வழி காட்ட வேண்டும். எப்போதும் யாவருங் காணும்படியான முகாரவிந்தத்தை யுடையவனாகவும், அருள் பொழியா நின்ற கண்ணை யுடையவனாகவும், ஜனங்களுடைய குறைகளைக் கேட்க எப்போதுஞ் சித்தமாயிருக்கிற காதுகளை உடையவனாகவும், சத்தியமும் இன்சொல்லுங் குடிகொண்ட நாவை யுடையவனாகவும், ஜனங்களுடைய பயத்தைத் தீர்க்கும் அபயாஸ்தங்களை யுடையவனாகவும், பரஸ்திரீகள் காணாத மார்பை யுடையவனாகவும், சத்துருக் கள் காணாத முதுகை யுடையவனாகவும், அவதரித்தது போன்ற நற்குண நற்செய்கைகளை உடையவ. தர்மமே னாகவும், அரசன் பிரகாசிக்க வேண்டும். 

ஜலமும், விவசாயத் தொழிலும், உலகத்துக்கு முக்கிய மானதால், ஆறுகள், குளங்கள், ஏரிகள், வாய்கால்கள், வடி கால்கள் முதலியவைகளை நன்றாக வெட்டி, வேளாண்மைக் குரிய சாதகங்களை அரசன் செய்து கொடுக்க வேண்டும். வியாபாரங்களும் பல தொழில்களுங் கிரமமாய் நடக்கும் படி, சர்வ ஜாக்கிரதை செய்ய வேண்டும். பாலங்கள், மதகுகள், இரஸ்தாக்கள், சாலை மார்க்கங்கள் முதலியவை களை உண்டாக்கி, அவைகளை எப்போதுஞ் செவ்வையான ஸ்திதியில் வைத்திருக்க வேண்டும். குருடர், முடவர். முதலிய அங்கவீனர்களும், பாடுபடச் சக்தி யில்லாத விருத்தர்களும், ஸ்திரீகளும், உரோகஸ்தர்களும், அநாதப் பிள்ளைகளும், பரம ஏழைகளும், வெளியே போய்ப் பிக்ஷை எடுக்காதபடி, தர்ம சாலைகளை உண்டாக்கி, அவர்களை அரசனே சம்ரக்ஷிக்க வேண்டும். வைத்திய சாலை, ஒளஷத சாலை முதலியவைகளை ஊர்கள் தோறும் ஏற்படுத்தி, ஏழைகளுக்குத் தர்ம வைத்தியஞ் செய்யும்படி, தகுந்த வைத்தியர்களை நியமிக்க வேண்டும். வித்தியா சாலைகளை உண்டாக்கி, அக்ஷராப்பியாசம், இலக்கணம், இலக்கியம், பூகோளம், ககோளம், கணிதம், பல தேச சரித்திரம் முதலி யவைகளைப் படிப்பிப்பது மன்றி, சத்தியம், பிரமாணிக்கம், நீதி நெறி, தெய்வ பக்தி, பரோபகாரம் முதலிய சன்மார்க் கங்களையுங் கற்பிக்க வேண்டும். பணங் கொடுத்துப் படிக்க நிர்வாக மில்லாத பிள்ளைகள் இலவச மாகப் படிக் கும்படி, அரசன் திட்டஞ் செய்ய வேண்டும். பிள்ளை களுக்குத் தேக பலமும், சௌக்கியமும் உண்டாகும்படி, சிலம்பக் கூடம் முதலியவைகளை ஸ்தாபிக்க வேண்டும். சிற்பவேலை, நெசவுத் தொழில், தச்சுவேலை, கொற்றுவேலை முதலிய பல தொழில்களைக் கற்றுக் கொள்ள இஷ்ட முள்ளவர்களுக்கு உபயோக மாகும்படி, பல தொழிற் சாலைகளை நிருமிக்க வேண்டும். மார்க்கங்களிலும், இன்னும் முக்கியமான இடங்களிலும், வழிப்போக்கர்கள் தங்கும்படியாகச் சத்திரஞ் சாவடி முதலியவைகளை நிலைப் படுத்த வேண்டும். ஜனங்களுடைய வீடுகளும் தெருக் களும் சுத்தமாகவும், நாகரிகமாகவும், காற்று நடமாட்ட மாகவும் இருக்கும்படி, ஜாக்கிரதை செய்வது மன்றி, குப்பைகளும், மல ஜலாதி அசுத்தங்களும் ஜனங்களுடைய பார்வையிற் படாதபடி, அடிக்கடி அப்புறப் படுத்தப்பட வேண்டும். 

பெயர் போன வித்தியா பாரங்கதர்களுக்கும், அருமையான தொழிலாளிகளுக்கும், அரசன் வெகுமதி களும் உபகாரச் சம்பளங்களும் கொடுத்து, அவர்களைக் கனப்படுத்த வேண்டும். அரசன் சாது ஜன மித்திரனாகவும், அசாது சத்துருவாகவு மிருக்க வேண்டும். அரசன் ஜனங்களை அறியா விட்டால். அவர்களை எப்படி ஆளக் கூடும்? ஆகையால், அரசன் ஜனங்களுக்குள்ளே தானும் ஒருவனாகச் சஞ்சரித்து, அவர்களுடைய குணாகுணங் களையும், ஹிதாஹிதங்களையும், ஆசாரக் கிரமங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். அரசன் காட்சிக் கெளியவனாய், மதுர பாஷியாய், சகலருடைய குறை களையுங் கேட்டு, உடனே பரிகாரஞ் செய்ய வேண்டும். அரசன் எல்லாருக்குங் காது கொடுக்க வேண்டுமே தவிர, தகுந்த விசாரணை யில்லாமல், எல்லாருடைய வார்த்தை களையும் நம்ப வொண்ணாது. 

கடவுளைப்போல, அரசனுக்குச் சர்வலோக சஞ்சாரமும் சர்வ சக்தியும் இல்லாத படியால், உத்தியோகஸ்தர்கள் மூலமாகவே, அரசன் அநேக காரியங்களை நடத்த வேண்டியதா யிருக்கும். அந்த உத்தியோகஸ்தர்கள் இராஜப் பிரதிநிதிக ளாகையால், அவர்கள் சர்வோத்தமர் களாயிருக்க வேண்டும். அப்படி யில்லா விட்டால், அரசனைப் பாவமும், பழியும் தொடரு மான தால், அரசன் திறமையும், சன்மார்க்கமும் உள்ளவர்களைத் தேடி, அவர் களுக்கே தகுந்த உத்தியோகங்களைக் கொடுக்க வேண்டும். ஒருவன் வேலை பார்க்குந் திறமையில் அதி மேதாவியா யிருந்தாலும், நற்குண சூனியனா யிருப்பானானால், அவனுக்கு அரசன் அற்ப உத்தியோகமுங் கொடுக்கக் கூடாது. அரசன் யோக்கியர்களையே நாடுகிறானென்று யாவருக்குந் தெரிந்தால், உலகத்தில் யோக்கியதை அதிகரிக்கவும், அயோக்கியதை வலசை வாங்கிப் போகவும், இடமாகு மல்லவா? சில இராஜாங்கத்தார் யோக்கியதையைக் குறித்து யாதொரு பரீக்ஷையுஞ் செய்யாமல், கல்விப் பரீக்ஷை மட்டுஞ் செய்து கொண்டு, அதில் யார் தேர்ந்து வருகிறார்களோ, அவர்களுக்கே எந்த உத்தியோகங்களையும் கொடுக்கிறார்கள். நாம் வித்தியா பரீக்ஷையோடு கூட யோக்கியதாப் பரீக்ஷையுஞ் செய்யாமல், ஒருவருக்கும் உத்தியோகங் கொடுக்கக் கூடாது. இங்கிலீஷ் துரைத் தனத்தாரால் நியமிக்கப்பட்டிருக்கிற பாடசாலைகளில், ஈசுர நிச்சயம் சன்மார்க்கம் முதலிய ஆத்மார்த்தமான விஷயங்கள் கற்பிக்கப் படாமல், லௌகீக சம்பந்தமான சில காரியங்கள் மட்டுங் கற்பிக்கப்படுகிற படியால், அந்த பாடசாலைகளிற் கல்வி கற்கிற பிள்ளைகள், உலகாயதர் களாயும், நாஸ்திகர்களாயும், பரிணமிக்கிறார்கள். அவர் களுக்கு உத்தியோகமான உடனே, பணமே தெய்வமென்று நினைத்து, அதைச் சம்பாதிக்கிறதற்காகச் சகல அக்கிர மங்களையுஞ் செய்கிறார்கள். இங்கிலீஷ் துரைத்தனத் தாருடைய சட்டத்தில், இலஞ்சம் வாங்குகிறவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது போலவே. இலஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட் டிருக்கிறது. இலஞ்சம் வாங்குகிறவர்களுக்குச் சர்வாநுகூலமான சட்டம் இதைவிட வேறொன் றிருக்கக் கூடுமோ? திருட ருடைய ம்சைக்குப் பயந்து, அவர்களுக்குப் பொக்கிஷத்தின் திறவு கோலைக் கொடுப்பவர்கள் போல, உத்தியோகஸ்தர் களுடைய நிர்ப்பந்தத்தினால் அவர்களுக்கு இலஞ்சம் கொடுக்கிறார்களே தவிர, அவர்களுக்கு மனப் பூர்வமாய் இலஞ்சம் கொடுக்கிறவர்கள் ஒருவருமில்லை. ‘அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியான வன் வீட்டு அம்மியை உடைக்கும்’ என்கிற பழமொழிப்படி, ஒரு அதிகாரிக்கு யார் மேலே துவேஷமிருக்கிறதோ, அவர்களைக் கெடுக்கிறதற்குப் பல சமயங்கள் நேரிடுகின்றன. வழக்க மாய் இலஞ்சம் வாங்குகிற அதிகாரிக்கு, எவன் இலஞ்சம் கொடுக்கவில்லையோ, அவன் அந்த அதிகாரிக்கு ஜன்ம சத்துரு வாகிறான். அவனுடைய வழக்குகளை யெல்லாங் கெடுத்து, மடி மாங்காய் போட்டு கழுத் தறுக்க, அதிகாரி சமயந் தேடுகிற படியால், கைலஞ்சம் கொடுத்து, அவ னுடைய தயவைச் சம்பாதிக்க வழக்காளிகள் உடன்படு கிறார்கள். இப்படிப் பட்ட நிர்ப்பந்தங்களினால் இலஞ்சங் கொடுக்கச் சம்மதிக்கிறார்களே தவிர, மனத் திருப்தியாக லஞ்சம் கொடுக்கிறவர்கள் ஒருவருமில்லை. ஆகையால், இலஞ்சம் கொடுப்பவர்களைத் தண்டிப்பது நியாயமா யிருக்கு மானால், திருடர்களுடைய தடியடியைப் பொறுக்க மாட்டாமல், அவர்களுக்கு யார் பொருளை யெடுத்துக் கொடுக்கிறார்களோ, அவர்களையுந் தண்டிப்பது கிரமமா யிருக்கும். இங்கிலீஷ் ஆளுகையில், இலஞ்சங் கொடுத்த வர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், இலஞ்சப் பிரியாது கொண்டு வர ஒருவருந் துணிகிற தில்லை. அப்படி யாராவது துணிந்தாலும், அதிகாரிகளுக்கு விரோதமாகக் சாக்ஷிகள் அகப்படுவது துர்லபமா யிருக்கின்றது. இலஞ்சப் பிரியாது உருசு வாகா விட்டால், பொய்ப் பிரியாது செய்த குற்றத்துக் காக, பிரியாதுக்காரன் பல வகையாகத் தண்டிக்கப் படுகிறது மன்றி அவன் எப்போதும் அதிகாரி களினுடைய க்ஷாத்திரத்துக்குப் பாத்திரன் ஆகிறான். இவ்வகையாக, இலஞ்சம் வாங்கிகளுக்குப் பல சாதகங்க ளிருக்கிற படியால், அவர்கள் இலஞ்சம் வாங்குகிறதற்கு உத்தாரச் சீட்டுப் பெற்றுக் கொண்டது போல,நிர்ப்பய மாய்ச் சர்வ கொள்ளை யடிக்கிறார்கள். அதுவும் போதா தென்று, அவர்களுடைய ஆயுசு வரையில், அவர்களுக்குத் துரைத் தளத்தார் உபகாரச் சம்பளங்களையுங் கொடுக்கிறார்கள். 

இலஞ்சம் கொடுக்கிறவர்களைத் தண்டிக்கிற தென்கிற விதியை நாம் பரிச்சேதம் அநுசரிக்கப் படாது. அன்றியும், ஒரு உத்தியோகஸ்தன் பரிதானம் வாங்குகிறா னென் றாவது, அல்லது வேறு, ‘பிரபல மான துஷ்கிருத்தியங்கள் செய்கிறா னென்றாவது, பல பெயர்களுக்குப் பகிரங்க மாய்த் தெரிந் திருந்தால், அதைப் பற்றிப் பூரண விசா ரணை செய்து கொண்டு, அவன் மேலே பிரியாது வராம லிருந்தாலுங் கூட, அவனை உடனே உத்தியோகத்தி னின்று நீக்கி விட வேண்டும். அரசன் அயோக்கியமான த்தியோகஸ் தர்களை வர்ஜிப்பது மன்றி, யோக்கிய மான உத்தியோகஸ்தர்களை எப்போதும் நன்கு மதித்து அபி மானிக்க வேண்டும். அவர்கள் மூப்பு, உரோகம் முதலிய காரணங்களால் வேலை பார்க்க அசக்தர்களா யிருக்கும் போது, அவர்களுக்கு அரசன் உபகாரச் சம்பளங் கொடுத்து,ஆதரிக்க வேண்டும். அவர்கள் அகால மரண மாய் இறந்துபோய், அவர்களுடைய புத்திர களத்திராதி கள் அன்ன வஸ்திரத்துக்கு வழி யில்லாமல் நிர்க்கதியா யிருப்பார்களானால், அவர்களை அரசன் போஷிக்கவேண்டும். தங்களுக்குப் பிற்காலம் தங்களுடைய குடும்ப சம்ரக்ஷ ணைக்கு மார்க்கஞ் செய்ய வேண்டு மென்கிற எண்ணத் துடன், அநேகர் இலஞ்சத்தைக் கையாளுகிறபடியால் அரசன் தங்களுக்குப் பிற்காலத்தில் தங்களுடைய குடும் பங்களைப் போஷிப்பானென்கிற நிச்சயமிருந்தால், அநேகர் இலஞ்சம் வாங்காமற் பரிசுத்தரா யிருப்பார்க ளென்பது உண்மையே. 

இராஜ பதவி எல்லாருடைய அந்தஸ்துக்கும் மேற்பட்டதாயிருப்பது போலவே, அரசன் நற்குணங் களிலும், புத்தியிலும், சாமர்த்தியங்களிலும், மற்றவர் களுக்கு மீசரமா யிருக்க வேண்டும். அப்படி யில்லா விட்டால், அவனை யார் மதிப்பார்கள்? சூரியன் தன்னுடைய ஒளியினால் எல்லாப் பொருள்களையும் பிரகாசிக்கச் செய்வது போல், அரசனும் தன்னுடைய நற்குணங்களாற் குடிகளுடைய குணந்திருந்தும்படி செய்ய வேண்டும். அரசன் சிற்றின்பத்தைத் திரஸ்கரிக்க வேண்டும். அந்நிய ஸ்திரீகளுடைய அழகுக் குருடஞ யிருக்க வேண்டும். தப்பு ஸ்தோத்திரத்துக்குக் செவிடனா யிருக்க வேண்டும். அரசனுக்குச் செங்கோலின் பலம் பலமே யல்லாமல், இரதஜக துரக பதாதிகள் பல மல்ல. செங்கோல் கோணாமல் அரசாளுகிற மன்னனுக்கு நாடெல்லாம் அரணானதால், வேறு அரண் வேண்டுவ தில்லை.குடிகளெல்லாம் அவனுக்குப் படையாகையால், வேறு படை வேண்டுவ தில்லை. அவர்களுடைய மனங்க ளெல்லாம் அவனுக்கு வாசஸ்தல மானதால் வேறு அரண்மனை வேண்டுவ தில்லை. அந்த அரசனுக்குச் சத்துருக்களு மில்லை. கொடுங்கோல் மன்னனுக்குக் குடிகளே பகைவர். அவனுடைய கோட்டையே யுத்தபூமி, அவன் அடி வைக்கும் இடமெல்லாம் படு குழி. அவன் உண்ணும் அன்னமே விஷம். அவனைச் சூழ்ந் திருப் யவர்கள் எல்லாரும் இயம தூதர்கள். அவனுடைய அரண்மனையே மயானம். ஆகையால் கொடுங்கோல் மன்னர் உய்வதற்கு வழி இல்லை” என்று தேன்மழை பொழிவது போல, ஞானாம்பாள் பிரசங்கித்தாள். நான் அளவற்ற ஆக்லாத மடைந்து, அவளைப் பார்த்து, “நீ இவ்வளவு கையிருப்பு வைத்துக் கொண்டு, அரசாளத் தெரியா தென்று சொன்னாயே! இப்போது உலகத்தில் அரசு செய்கிறவர்களுக்கு, உனக்குத் தெரிந்த காரியங் களில், நூற்றில் ஒரு பங்கு கூடத் தெரியுமா?” என்றேன். அவள் என்னைப் பார்த்து, ‘வார்த்தைக்குத் தரித்திர முண்டா? வாய்ப் பந்தல் போட யாராலே கூடாது? அரசன் நடக்க வேண்டிய நெறிகளைப் பற்றி நான் வாசா கைங்கரிய மாகப் பேசின போதிலும், பேசினபடி நடப்ப தல்லவோ கஷ்டம்?” என்றாள். நானும் ஞானாம்பாளும் ஒருவரை யொருவர் சந்தித்த சந்தோஷத்தினால், நேரம் போவது கூடத் தெரியாமல், நாங்கள் சம்பாஷித்துக் கொண்டிருக்கும் போது உதய பேரி முதலிய வாத்தி யங்கள் முழங்கின படியால், விடியற் காலம் ஆய்விட்ட தென்று தெரிந்து கொண்டோம். உடனே, ஞானாம்பாள் எழுந்து, ஒரு அறைக் குள்ளே போய், பெண் ரூபத்தை மாற்றி, புருஷ ரூபந் தரித்துக் கொண்டு, என் முன்பாக வந்தாள். அதற்கு முன் பெண்ணுக்குப் பெண் ஆசிக்கும் படியான அதி ரூபவதியாயிருந்தவள், இப்போது ஆணுக்கு ஆண் ஆபேஷிக்கும் படியான அழகிய புருஷ வேஷம் பூண்டு கொண்டு வந்தாள். அவள் சாக்ஷாத் வடிவமாகவே யிருந்தபடியால், அவள் ஆண் பெண் ணெண் புருஷ பதை மறந்து விட்டு, “இந்த மகா புருஷளை மணஞ் செய் வதற்கு நாம் பெண்ணாய்ப் பிறக்காமற் போய் விட்டோமே” என்று சற்று நேரம் நான் மதி மயங்கி, பிற்பாடு தெளிந்து கொண்டேன். 

39-ஆம் அதிகாரம்

உபராஜ நியமனம் – தேச பரிபாலனம்- உத்தியோகச் சீர்திருத்தம்

நான், அருணோதய மாவதற்கு முன் ஞானாம்பாளைப் பார்த்து, “நீ மகா ராஜாவா யிருப்பதால், உன்னோடு கூட நான் சமான ஸ்கந்தமா யிருப்பதைப் பார்க்கிறவர்கள் விபரீதமா யெண்ணிக் கொள்வார்கள். நான் இன்னா னென்று உண்மையைத் தெரிவிப்பதும் கூடாத காரியமா யிருக்கின்றது. நீயும் பொய் சொல்ல மாட்டாய். இந்தச் சங்கடங்களை யெல்லாம் யோசிக்கும் போது, நான் ஒரு இடத்தில் தனிமையி லிருப்பது உத்தம மென்று நினைக் கிறேன்” என்றேன். அவள் என்னைப் பார்த்து, “மத யானை ஏறியும், திட்டி வாசலில் நுழைவது போல, நமக்கு இராஜ பட்டம் கிடைத்ததும், நாம் ஒருவருக்குப் பயப்பட வேண்டுமா? உங்களை மேலான இடத்தில் வைத்து, நான் கை கட்டிச் சேவிக்காமல், இந்த இராஜங்க நிமித்தம் உங்களை எனக்குச் சமான மாக வைத்துக் கொள்ளும்படி நேரிட் டிருப்பது, எனக்கு எவ்வளவோ மனஸ்தாபமா யிருக்கிறது. நீங்கள் அதைக்கூட ஜனங்கள் வித்தியாச மாய் நினைப்பார்களென்று சொல்லுகிறீர்கள். ஜனங்கள் எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும். நான் இனிமேல் உங்களை ஒரு நிமிஷங் கூடப் பிரிகிற தில்லை யென்று பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறேன். நான் இதற்கு முன் உங்களைப் பிரிந்து பட்ட துன்பம் போதாதா? இன்னமும் பிரியவேண்டுமா? நீங்கள் இன்னா ரென்று மற்றவர்களுக்கு உண்மையைத் தெரி விப்பது அசாத்தியமா யிருந்தாலும் நான் பொய்யும் சொல் லாமல், தக்கபடி சொல்லிச் சமாளித்துக் கொள்ளுவேன்’ என்றாள். நான் ஞானாம்பாளைப் பார்த்து, “ஓ! மகா ராஜாவே! உங்களுடைய கட்டளைப் பிரகாரம் நடக்கச் சித்தமா யிருக்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தேன். அவளுடைய சிவந்த வாயைத் திறந்து, பல் வரிசை தோன்றும்படி யாக அவள் சிரித்தது எப்படி யிருந்த தென்றால், பவளப் பெட்டியைத் திறந்து, அதி லிருக்கிற முத்துச் சரங்களை விரித்துக் காட்டினது போலிருந்தது. 

அன்றையத் தினம் பட்டாபிஷேக மான மறு நாளான தால் மந்திரி பிரதானி முதலானவர்கள் வந்து, தரிசன மாலில், இராஜ பேட்டிக்குக் காத்திருப்பதாக, உத்தியோ கஸ்தர்கள் தெரிவித்தார்கள். நானும் ஞானாம்பாளும், உயர்ந்த வஸ்திராபரணங்களைத் தரித்துக் கொண்டு, தரிசன மாலுக்குப் போய், சித்திராசனத்தில் வீற்றிருந் தோம். நான் இராஜாவோடு கூடச் சமானமா யிருப் பதைப் பார்த்தவர்கள் எல்லாம் ஆச்சரியம் அடைந்து, என் முகத்தை வெறிக்க வெறிக்கப் பார்த்தார்கள். உடனே, ஞானாம்பாள் அவர்களை நோக்கிச் சொல்லு கிறாள்:- “என்னோடு கூட ஆசனத்தி லிருப்பவர் என்னு டைய அத்தை குமாரர். அவரும் நானும் ஒரே இடத்திற் பிறந்து, ஒரே இடத்தில் வளர்ந்து, ஒரே இடத்திற் கல்வி கற்று, ஒரே இடத்தில் வாழ்ந்தோம். எனக்குப் பிராணன் அவர்தான்; அவருக்குப் பிராணன் நான்தான். எனக்கு அவரே பிரியர்; அவரே அன்பர். இளமைப் பருவ முதல் எனக்கு அவரே காவலர்; அவரே துணைவர். என்னை ஒருநாளும் பிரியாதவர், பிரிந்து, வெளிப்பட்டு, வந்து விட்டதால், அவரைத் தேடிக் கொண்டு நான் வந்த இடத்தில், எனக்குப் பட்டாபி?ஷகம் கிடைத்தது. அவ ருடைய யோக்கியதையை நீங்களும் அறிவீர்கள். பொழுது விடியாத படி முந்திப் பாடி, பிறகு பொழுது விடியும் படியாகப் பாடியவர் இவர்தாம்” என்றாள். இதைக் கேட்டவுடனே, மந்திரி பிரதானிகள் எல்லாரும், “ஆம்! ஆம்! இவர் மகா வரப் பிரசாதி; புண்ணி யாத்மா. இவரை அரச ராக நியமிக்க வேண்டு மென்பது அநேக ருடைய கருத்தா யிருந்தது. இவர் மகா ராஜாவுக்குச் சமீப பந்துவா யிருந்தது எங்களுக்குப் பரம சந்தோ ஷம்” என்றார்கள். உடனே ஞானாம்பாள் அவர்களை நோக்கி, ‘இவரை அரசராகத் தெரிந்துகொள்ள அநேகர் அபேக்ஷித்த தாக நீங்கள் சொல்லுகிற படியால், இவரை உபராஜா வாக வைத்துக் கொண்டு இராஜிய பாரம் செய்ய வேண்டு மென்பது என்னுடைய ஆசத்தியா யிருக்கிறது. அதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்றாள். உடனே அவர்கள், “இவருடைய மகிமையை நாங்கள் பிரத்தியக்ஷமாக அறிந்திருக்கிறோ மாதலால், அவர் உங்களுக்கு உபராஜாவா யிருக்க எங்களுக்குச் சம்மதந்தான். நீங்களிருவரும் அரோக திடகாத்திரராய். நெடுங்காலம் அரசாளும்படி கடவுள் அனுக்கிரகிப்பார்” என்று சொல்லி, உத்தரவு பெற்றுக் கொண்டு போய். விட்டார்கள். அவர்கள் போன பிற்பாடு, நான் ஞானாம் பாளைப் பார்த்து, “உன்னுடைய சாமர்த்தியமே. சாமர்த்தியம்! நீ நினைத்தபடி நிறைவேற்றி விட்டாய். நான் இன்னானென்று அவர்களுக்குத் தெரிவித்த விஷயத் தில், நீ ஒரு பொய்யையும் கலக்காமல் உண்மையையே பேசினாய். பிரியன், அன்பன், காவலன், துணைவன் என்கிற வார்த்தைகளினால், நான் உனக்குப் பர்த்தா வென்று தெரிவித்தாய். ஆனால், அந்த வார்த்தைகளை நீ உபயார்த்தமாக உபயோகித்த படியால், நான் உனக்குப் பிரியமான நேசன், சிறு பருவ முதல் நான் உனக்குத் துணையா யிருந்தவன், காவலா யிருந்தவ னென்று அவர்கள் அர்த்தம் பண்ணி யிருப்பார்களேயன்றி, நான் உனக்குக் கணவனென்று கிரகித்திருக்க மாட்டார்கள். இவ்வளவு வாக்குச் சாதுரியமாகப் பேச யாருக்காவது வருமா?” என்றேன். அவள் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு, “நீங்கள் பொழுது விடியாமற் போகவும், பிறகு விடியவும் செய்த சாமர்த்தியமும், என்னுடைய வாய்ச் சாமர்த்திய மும், இரண்டும் சமானந்தான். மனசிலே கபடத்தை வைத்துக் கொண்டு, சிலேஷையாக ஒருவரிடத்திற் பேசுவது பொய்தானே. நம்முடைய வார்த்தைக்குப் பிறர் தப்பான அர்த்தம் செய்கிறார்களென்று தெரிந்த உடனே, அவர்களைத் திருத்தாம லிருப்பதும் கரவடம் அல்லவா? ஆனால், முழுப் பூஷணிக்காயைச் சோற்றில் மறைத்தது போல, நான் தரித்துக் கொண்டிருக்கிற ஆண் வேஷமே முழு மோசமானதால், அதை ஸ்தாபிக்கிறதற்கு இத்தனை பொய்களினுடைய சகாயம் வேண்டியிருக்கிறது” என்று சொல்லிப் பெருமூச்செறிந்தாள். 

மகாராஜாவாகிய ஞானாம்பாளும், உப ராஜாவாகிய நானும் சிங்காசனம் ஏறி, இராஜிய பரிபாலனம் செய்யத் தொடங்கினோம். செங்கோல் கோணாமலும், மநு நீதி தவறாமலும், வர்ணாசாரங்கள் பேதிக்காமலும், மாத மும்மாரி பெய்யவும், முப்போகம் விளையவும், ஆறில் ஒரு கடமை வாங்கி, அரசாட்சி செய்தோம். முந்தின அதிகாரத்தில் விவரித்தபடி, இராஜாக்கள் பிரஜைகளுக்குச் செய்ய வேண்டிய அநுகூலங்களை யெல்லாம் குறைவறச் செய் தோம். தேவாலயம், தர்ம சத்திரம், பாடசாலை, வைத்தியசாலை, பல தொழிற்சாலை முதலியவைகளிற் பழமையா யிருந்தவைகளை யெல்லாம் புதுப்பித்தோம். இல்லாத கட்டடங்களை நூதனமாகக் கட்டுவித்தோம். ரணமாக யிருந்தவைகளை ஜீரணோத்தாரணம் செய்தோம். 

பழைய இராஜாங்கத்தில் உத்தியோக நியமன விஷயத்தில் நடந்திருந்த அக்கிரமங்களை யெல்லாம் நாங்கள் திருத்திச் சீர்படுத்தினோம். எப்படி யென்றால், “அறுக்க மாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்” என்கிற பழமொழிப்படி, ஒரு வேலை கூடப் பார்க்கச் சக்தி யில்லாதவனுக்கு ரிவினியூ வேலை, மாஜிஸ் திரேட்டு வேலை, சிவில் வியவகார வேலை முதலிய பல வேலைகள் கொடுக்கப்பட்டிருந்தன. பல சரக்குக் கடைக் காரனைப் பயித்தியம் பிடித்தது போல, அந்த அதிகாரி ஒரு வேலையையாவது சரியாய்ப் பார்க்காமல், எல்லா வேலை களையும் போட்டுக் குழப்பிக் கொண்டு, காலம் போக்கினான். நாங்கள் ஒவ்வொரு வேலையையும் தனித்தனியே பிரித்து, ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு உத்தியோகஸ்தளைப் பிரத்தியேகமாக நியமித்தோம். இரு காத வழி முக்காத வழி தூரத்துக்கு அப்பால் ஒவ்வொரு கச்சேரி இருந்த படியால், ஜனங்கள் அவ்வளவு தூரம் போய் நியா யம் பெற்றுக் கொள்வது பிரயாசமா யிருந்தது.நாங்கள் சமீபமான இடங்களில் கச்சேரிகளை ஸ்தாபித்து, ஜனங்க ளுக்குச் சகாயம் செய்தோம். உத்தியோக வரிசையில் ஒழுங்கீனமாய்க் கீழ்ப் படியிலிருக்க வேண்டியவர்கள் மேற்படியிலும், மேற் படியி லிருக்க வேண்டியவர்கள் கீழ்ப் படியிலும் வைக்கப்பட் டிருந்தார்கள். நாங்கள் அந்த ஏற்பாட்டைத் தலை கீழாக மாற்றி, அவரவர் களுடைய யோக்கியதைக்குத் தகுந்த ஸ்தானங்களில் நியமித்தோம். அதிக வேலையுள்ள உத்தியோகஸ்தர் களுக்குக் குறைந்த சம்பளமும், குறைந்த வேலை யுள்ளவர் களுக்கு அதிக சம்பளமும், நிஷ்கரிஷிக்கப்பட்டிருந்தன. நாங்கள் அந்த அக்கிரமத்தையும் திருத்தி, சரிப் படுத்தினோம். சில உத்தியோகஸ்தர்களுக்கு ஒரு வேலையும் இல்லாம லிருக்க, அவர்களுக்கு வகை தொகை. யில்லாமல் ஏராளமாய்ச் சம்பளங்கள் ஏற்பட்டிருந்தன நாங்கள் அந்த உத்தியோகங்கள் அநாவசிய மென்று அடியோடே மர்த்தனம் செய்து விட்டோம். 

ஜனங்களுடைய நன்மைக்கு விரோதமாக உத்தியோ கஸ்தர்களுக்கு அபரிமிதமான சம்பளங்களை ஏற்படுத்தி. அந்தச் சம்பளங்களைக் கொடுப்பதற்காகவே, நிலவரி, வீட்டு வரி முதலிய நியாயமான வரிகளைத் தவிர, காற்று வரி, மழை வரி, தீப வரி, கால்நடை வரி, மார்க்க வரி, கலியாண வரி, துக்க வரி, ஜனன வரி, மரண வரி, மல ஜல வரி முதலிய பல அநியாய வரிகளை ஏற்படுத்தி யிருந் தார்கள். நாங்கள், நில வரி, வீட்டு வரி முதலிய நியாயமான வரிகளை வைத்துக் கொண்டு, மற்ற வரிகளை யெல்லாம் நீக்கி விட்டோம். 

சில தேசங்களில் வியாஜியங்களுக்கு முத்திரை வரி ஏற்பட்டிருப்பது போல, விக்கிரமபுரியில் வியாஜியங் கொண்டு வருகிற ஒவ்வொருவனும், வியாஜியக் தாகைக்குத் தக்கபடி முந்தி வரி கொடுக்க வேண்டு மென்றும், வரி கொடாதவர்களுடைய வழக்கை அங்கீ கரிக்கக் கூடாதென்றும், சட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்தச் சட்டம் அக்கிரம மென்று நாங்கள் மாற்றி விட்டோம். ஏனென்றால், ஜனங்களுக்குச் சரீரத் துன்பம் இல்லாமலும், சொத்து நஷ்ட மில்லாமலும் இரக்ஷிக்க வேண்டியது, இராஜாக்களுடைய பிரதான கடமையா யிருக்கிறது. அதற்காகவே, நிலவரி, வீட்டு வரி முதலான பல வரிகள் வாங்கப்படுகின்றன. அந்தக் காரணத்தைப் பற்றியே, சரீரத் துன்பம், களவு முதலிய குற்ற விஷயங்களில், ஒரு வரியும் வாங்காமல், இராஜாவே வாதியா யிருந்து, துன்ப நிவாரணம் செய்கிறான். அப்படியே, சிவில் வியவகாரங்களிலும், இராஜாவே வாதியாயிருந்து, சொத்து நஷ்டம் அடைந்தவர்களிடத்தில் யாதொரு வரியும் வாங்காமல், அவர்களுக்கு நஷ்ட பரிகாரம் செய்ய வேண்டியது நியாயமா யிருக்கிறது. முன்னமே பொருள் நஷ்டம் அடைந்து வியாஜியம் கொண்டு வருகிறவனைப் பார்த்து, “நீ நமக்கு வரி கொடுத்தால்தான் உன் வழக்கை அங்கீகரிப்போம்; அல்லா விட்டால் உன் வழக்கை அங்கீ கரியோம்” என்று சொல்வது, எவ்வளவு அநியாயம்! துன்பப்பட்டவர்களுக்கு யாதொரு செலவு மில்லாமல், துஷ்ட நிக்கிரகம் சிஷ்ட பரிபாலனம் செய்ய வேண்டியது இராஜாக்களுடைய முக்கியமான கடமையல்லவா? நியாய பரிபாலனத்துக்கு வரி வாங்குவது, துஷ்டர்களுக்கு அநு கூலமாயும், சிஷ்டர்களுக்குப் பிரதிகூலமாயும் முடியும் அல்லவா? வியாஜியங்களுக்கு வரி வாங்காவிட்டால், துர் வியாஜியங்கள் அதிகரிக்கு மென்று சிலர் சொல்லுகிறார்கள். ஒருவன் துர் வியாஜியம் கொண்டு வந்ததாக ருசுவான பிற்பாடு, அவனை மட்டும் தண்டிப்பது கிரமமே யல்லாமல், துர் வழக்குகள் வரு மென்கிற காரணத்துக்காக, நியாய வழக்குகளிலும், முந்தியே வரி வாங்குவது அக்கிரமம் அல்லவா? ஒரு ஊரில் குற்றவாளி இன்னா னென்று தெரியாம லிருக்கும் போது, அந்த ஊரில் உள்ளவர்களை யெல்லாம் தண்டித்து விட்டால் குற்றவாளியும் தண்டனை யடைவான் என்கிற எண்ணத்துடன், ஊரில் உள்ள வர்களை யெல்லாம் தண்டிப்பது கிரமமா யிருக்குமா? அப் படியே, துர் வழக்குக்காரன் இன்னொன்று தெரிவதற்கு முன்னமே, அவனைத் தண்டிப்பதற் காக நியாய வழக்குக் காரர்க ளிடத்திலும் வரி வாங்குவது நியாயமா யிருக்குமா? நியாய ஸ்தலங்களில் நூறு வழக்குகள் வந்தால், தொண்ணூறு,வாதி பக்ஷத்திலும், பத்து மட்டும் பிரதிவா திகள் பக்ஷத்திலும், தீர்மான மாகிறது, சர்வத்திர சாதாரணமாயிருக்கிறது. அந்தப் பத்துத் துர் வழக்காளிகள் இன்னா ரென்று தெரிவதற்கு முன்னமே, அவர்களைத் தண்டிப்பதற்காக, தொண்ணூறு நியாய வழக்காளிகளையும் தண்டிப்பது முறையா? துர் வழக்குகள் வருகிறதற்கு நியாயாதிபதிக ளுடைய அறியாமையும், பபாதமும், அபரிசுத்தமுமே, முக்கிய காரணமா யிருக்கிறது. நியா யாதிபதிகள் தகுந்த சமர்த்தர்களாயும், சாஸ்திர விற்பன் னர்களாயும். அனுபோகஸ்தர்களாயும், நீதிமான்களாயும் இருப்பார்க ளானால், அவர்கள் முன்பாகத் துர் வழக்குகள் வருமா? வந்தாலும் ஜயிக்குமா? உலகத்தில் ஆஸ்தி வந்தர்கள், ஏழைகள் என்கிற இரண்டு வகுப்பில், ஆஸ்தி வந்தர்கள் எந்த வரியா யிருந்தாலும் கொடுத்து வியாஜியம் தொடருவார்கள். ஆஸ்திவந்தர்களால் துன் பத்தை அடைந்த ஏழைகள், வரி கொடுக்க நிர்வாக மில்லாமையினால்,வியாஜியம் செய்ய அசக்தர்களா யிருப் பார்கள். ஆகையால்,வியாஜிய வரி பணக்காரர்களுக்கு மட்டும் சாதகமாயும், ஏழைகளுக்குத் துன்பமாயு மிருக்கும். இப்படிப் பட்ட பல காரணங்களால் வியாஜிய வரியை நீக்கி விட்டோம். ஆனால், துர் வழக்குக்காரர்களைத் தண்டிக்க வேண்டியது அகத்திய மானதால், நியாயாதி பதிகள் பூரண விசாரணை செய்து, துர் வழக் கென்று அபிப்பிராயப் பட்டால், அந்த வழக்காளி இராஜாவுக்கு அபராதமும், பிரதிவாதி யினுடைய செலவுகளும் கொடுக்கும்படி, சட்டம் ஏற்படுத்தினோம். அந்தத் துர் வழக்குக் காரன் அப்பீல் செய்யா விட்டாலும், அல்லது அப்பீல் செய்து தோற்றுப் போனாலும், அவனிடத்தில் அந்தத் தொகையை வசூல் செய்கிற தென்று நிபந்தனை செய்தோம். 

லிகித ரூபமாகப் பிறக்கிற சகல பத்திரங்களையும், ஆதரவுகளையும் பதியும்படி, ஊருக்கு ஒரு உத்தியோக சாலையை உண்டு பண்ணி, தகுந்த உத்தியோகஸ்தர்களை நியமித்தோம். அவர்கள் ஒவ்வொரு ஆதரவும் வாஸ்தவமா வென்றும், உபய வாதிக ளுடைய பூரண சம்மதத்துடன் பிறந்ததா வென்றும், நியாயத்துக்கும் தர்மத்துக்கும் ஒத்திருக்கிறதா வென்றும், பூரணமாய் விசாரித்துத் தெரிந்து கொண்டு, புஸ்தகத்திற் பதியும் படிக்கும், அப்ப டிப் பதிவான ஆதரவுகள் நியாய ஸ்தலத்தா ருடைய தீர்ப்புக்குச் சமான மென்றும், அவைகளைப் பற்றி வேறே வியாஜியஞ் செய்யாமவே நிறைவேற்றலா மென்றும், நிபந்தனை செய்தோம். அதனால், ஜனங்களுக்குச் சந்தோ ஷம் உண்டாகி,எங்களை மேன் மேலும் ஆசீர்வதித்தார் கள். வக்கீல்களுக்கும், எழுத்துக் கூலிக்காரர்களுக்கும், வருமானங் குறைந்து போய் விட்டதால், அவர்கள் எங்க ளுக்கு அள விறந்த சாபங்கள் கொடுத்தார்கள். அவர்க ளுடைய சாபங்களுக்கு ஜனங்களுடைய ஆசீர்வாதங்களை ஈடாகக் கொடுத்து விட்டு, நாங்கள் நினைத்த கார்யங் களை நிர்ப்பய மாக நடத்தினோம். இலிகித சம்பந்த மான வியாஜியங்க ளெல்லாம், மேற் கண்டபடி சுலபமாய்த் தீர்ந்து போய் விட்டபடியால், பாக வழக்குகள், பாத்திய வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாயுடம்படிக்கையைப் பற்றின வழக்குகள், டார்ட் (Tort) என்கிற நஷ்ட வழக்குகள் முதலியவைகள் மட்டும் நியாய ஸ்தலங்களிற் செய்யப்பட்டன. அந்த வழக்குகளும் கால தாமத மில்லா மலும், ஜனங்களுக்குத் தொந்தரவும் செலவு மில்லாமலும், சீக்கிரத்திலே தீரும்படிக்கு அநேக விதிகளை ஏற் படுத்தினோம். 

முந்தின இராஜாங்கத்தில் நியமிக்கப் பட்ட சில அதிகாரிகள், தினந்தோறும் உத்தியோக சாலைக்குப் போகாமல்,  கார்த்திகைப் பிறை போலவும், வால் நட்சத்திரம் போலவும், எப்போதாவது ஒரு காலத்தில் தோன்றி மறைந்து போனார்கள். சில நியாயதிபதிகள் நியாய சபைக்குப் போகிற நேரம் ஒரே தன்மையாயிராமல், ஒரு நாள் காலையிலும், ஒரு நாள் மத்தியானத்திலும், ஒரு நாள் மாலையிலும், ஒரு நாள் அஸ்தமித்த பின்பும் நியாய சபைக்குப் போகிற வழக்கமாயிருந்தபடியால்,வியாஜியக் காரர்கள் தாங்கள் எந்த நேரத்தில் நியாய ஸ்தலத் துக்குப் போகிறதென்று தெரியாமல், அவஸ்தைப்பட்டார் கள். நியாயாதிபதி நேற்றைத் தினங் காலையில் வந்த படியால், இன்றைத் தினமுங் காலையில் வருவாரென்று வழக்காளிகள் போய்க் காத்திருந்தால், நியாயாதிபதி காலையில் வராமல், கக்ஷிக்காரர்கள் இல்லாத சமயங்களில் வந்து, கூப்பிட்ட போது கட்சிக்காரர்கள் ஆஜராக ல்லை யென்னுங் காரணத்தால்,வியாஜியங்களைத் தள்ளிக் கொண்டு வந்தார். கூப்பிட்டபோது ஆஜராகிறவர் களுடைய வழக்குகளை விசாரிக்கிறதில்லை. அவர்கள் ஆஜராகாமற் போனால் மட்டும் வழக்குகள் தள்ளப்பட்டன. சில கலெக்டர், தாசில்தார் முதலான அதிகாரிகள், சித்தாதிகளைப் போல இன்றைக்கு ஒரு ஊர், நாளைக்கு ஒரு ஊராகச் சஞ்சரித்து, ஒரு ஊரில் மனுக் கொடுத்த வர்களை அதற்குத் தூரமான வேறொரு ஊரிற் கூப்பிட்டு, அவர்கள் காத்திருக்கவில்லை யென்னுங் காரணத்தினால், அவர்களுடைய மனுக்களை நிர்மூலஞ் செய்தார்கள். சில நியாயாதிபதிகள் வியாஜியங்களை விசாரிக்கும் படியான சிரமத்தை நீக்கிக் கொள்வதற்காக, நான் – ஜாயிண்டர் (Non-joinder), மிஸ் -ஜாயிண்டர் (Mis-joinder) முதலிய பல தோஷங்களைச் சொல்லி, வழக்குகளைச் சர்வ சங்காரஞ் செய்து வந்தார்கள். சில நியாயாதிபதிகள் பிரியாது முதலிய தஸ்தாவேஜுகளைப் பார்வை யிடாமலும், ஒவ்வொரு வியாஜியத்துக்கும் ஆதாரமான சட்ட சாஸ்திரங்களைத் தாங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளாமலும், வக்கீல்களுடைய வாய்ப்பிறப்பைக் கொண்டு தீர்மானிக் கிறதும், வக்கீல்கள் நியாயத்தை எடுத்துக் காட்டவில்லை. யென்று அவர்கள் மேலே குறை சொல்லி, அநியாயத் தீர்ப்புச் செய்கிறதுமா யிருந்தார்கள். சில அதிகாரிகள், அஷ்டாவதனஞ் செய்வது போல், அநேக வியாஜியங்களை ஒரே காலத்தில் விசாரிக்கத் தொடங்கி, ஒன்றையும் முடிக் காமல், திருப்பதி அம்பட்டன் க்ஷவரம் செய்வது போல, அரையும் குறையுமாகத் தீர்த்து வந்தார்கள். சில அதிகாரிகள் விசாரணைக் கெடுவை ஒத்தி ஒத்தி வைத்து, காலத்தை நீட்டி விட்டுக் கொண்டு, கக்ஷிக்காரர்களைச் சிக்ஷித்து வந்தார்கள். சிலர் விசாரணைக் கெடுவை வழக்காளி களுக்குத் தெரிவிக்காமல், அவர்களை அகோராத்திரங் காத்திருக்கும்படி செய்வித்தார்கள். குட்டிச் சுவரிலே தேள் கொட்டத் தண்ணீர் மிடாவிலே நெறி கட்டினது போல, நியாயம் ஒரு பக்ஷத்திலிருக்க, வேறொரு பக்ஷத்தில் நியாயாதிபதிகள் இருந்து கொண்டு, அதற்குத் த்தாநுசாரமாகச் சாட்சிகளை அதட்டி உருட்டி வாக்கு மூலங்கள் வாங்கிக் கொண்டு, எக்கசக்கமாய்த் தீர்மானித்து வந்தார்கள். சில நியாயாதிபதிகள், தீர்க்கதரிசிகள் போல, வழக்காளிகளைப் பார்த்த மாத்திரத்தில், இவன் யோக்கியன், அவன் அயோக்கியனென்று, தப்பான எண்ணங் கொண்டு, அதற்குத் தக்கபடி சாதக பாதகம் செய்து வந்தார்கள். செப்பிடு வித்தைக்காரர்கள் ஒரு நிமிஷத்திற் செப்பையும் பந்தையு மாற்றுவது போல, சில நீதியதிபர்கள் ஒருவருடைய அநுபவ சுதந்தரங்களை ஒரு நிமிஷத்தில் மரற்றி அநியாயஞ், செய்தார்கள். குற்ற விசாரணை செய்வதற்கு முன்னமே, ஒவ்வொருவனையுங் குற்றவாளி யென்று நிச்சயித்து, தண்டனை செய்வதிலே முயற்சியா யிருந்த நீதிக்காரர் களும் பலரே. சில நியாயாதிபதிகள் எப்போதும் வாதி பக்ஷத்திலும், சில நியாயாதிபதிகள் எப்போதும் பிரதிவாதி பக்ஷத்திலு மிருந்து நியாயத்தைப் புரட்டினார்கள். சில நியாயாதிபதிகள் வியாஜியக்காரர்களைக் கண்டவுடனே, அக்கினி தேவனுக்கு அபி ஷேகஞ் செய்தது போல், அவர்கள் மேற் சீறி விழுந்து, அசப்பிய வார்த்தைகளைப் பிரயோகித்து வந்தார்கள். நாங்கள் அந்த அதிகாரி களுக்கு அபராதம், ஆக்கினைகள் விதித்து, அவர்கள் இனிமேல் அநுசரிக்க வேண்டிய நீதி நெறிகளைப் போதித்தது மன்றி, ஒவ்வொரு வழக்கிலும் உண்மையைக் கண்டு பிடிக்க அவர்களாற் கூடிய பிரயாசம் எடுத்துக் கொள்ள வேண்டு மென்றும், எந்த நியாயாதிபதியாவது நியாயத்தைக் கண்டு பிடியாமல் தீர்மானஞ் செய்தால், அவன் உத்தியோகத்துக்கு அநர்ஹ னென்றும், எச்சரிக்கை செய்தோம். 

வியாதி வந்த பிற்பாடு பரிகாரம் செய்வதைப் பார்க்கிலும், வியாதி வராமலே தடுக்கப் பிரயாசைப் படுவது நன்மையா யிருப்பது போல, குற்றம் நடந்த பிற்பாடு தண்டிப்பதைப் பார்க்கிலும், குற்றம் நடவாமலே தடுக்கப் போலீசு வீரர்கள் பிரயாசைப்பட வேண்டு மென்று, உத்தரவு செய்தோம். குற்ற வாளியைத் தண்டிக்கிற விஷயத்தில், நீதியும் இரக்கமும் பொருந்தி யிருக்க வேண்டு மென்றும், குற்றம் உருசு வாகிற வரையில் ஒவ்வொருவனும் மாசற்றவ னென்று ஊஹிக்க வேண்டு மென்கிற விதியையும், சந்தேகத்தின் பிரயோசனத்தைக் குற்றவாளிக்குக் கொடுக்க வேண்டு மென்கிற விதியையும், நியாயாதிபதிகள் தப்பாமல் அநுசரிக்க வேண்டுமென்றும், தண்டனையான குற்றவாளி அப்பீல் செய்கிற பக்ஷத்தில், அப்பீல் முடிவாகிற வரையில் தண்டனையை நிறை வேற்றாமல் நிறுத்தி வைக்க வேண்டு மென்றும், கட்டளை யிட்டோம். குற்றவாளிகளைச் சாட்டை முதலிய கருவி களால் அடிக்கும்படி விதிக்கப்படுகிற தண்டனையானது மிருகங்களுக்கும், மிருகப் பிராயமான மிலேச்சர்களுக்கும் உரியதே தவிர, நாகரீகம் அடைந்த தேசங்களுக்கு அநுசித மாகையால், அந்தக் கொடிய தண்டனை எங்களுடைய இராஜியத்தில் இல்லாதபடி நீக்கி விட்டோம். பகுத்தறிவுள்ள சிறு பிள்ளைகள் தண்டிக்கப்படுகிற பக்ஷத்தில் அவர்களை மற்றக் குற்றவாளிகளுடன் சேர்க்காமல், பிரத்தியேகமான இடத்தில் வைத்து, அவர்களுக்குரிய தொழில், கல்வி முதலியவைகளைப் பயிற்றும்படி. திட்டம் செய்தோம். அப்படியே, தண்டனை யடைந்த ஸ்திரீ களுக்கும். பிரத்தியேகமான காராக் கிருகம் ஏற்படுத்தி அவர்களுடைய மானத்தைக் காப்பாற்றினோம். 

40-ஆம் அதிகாரம்

குடிகள் இயல்பு – இராஜ பக்தி – அநியாய பஞ்சகம்

விக்கிரமபுரி சில காலம் குடியரசா யிருந்த நிமித்தம் அநேக ஜனங்கள் இராஜ பக்தி யென்பதையே சுத்தமாய் மறந்து விட்டார்கள். இராஜாவா யிருக்கிற நாங்களே இராஜ பக்தியை உபதேசிப்பது கிரம மல்ல யென்று நினைத்து, சில விவேகிகளை ஏவி, ஜனங்களுக்கு இராஜ பக்தியைப் போதிக்கும்படி செய்வித்தோம். அவர்கள் அடியிற் கண்டபடி பிரசங்கித்தார்கள். 

“ஒவ்வொரு மனுஷனும் ஜீவிக்கிறதற்குப் பலருடைய உதவி வேண்டி யிருப்பதால், ஒவ்வொருவனும் தனிமையாக ன் வாசம் செய்வது சாத்திய மில்லாத காரியமா யிருக்கிறது. ஆகையால், ஆதிகாலந் துவக்கிக் கிராமங் களிலும், நகரங்களிலும், ஜனங்கள் கூட்டுறவாய் வாழ்வது வழக்கமா யிருக்கின்றது. விவசாயம், நெசவு, சிற்பம், தச்சு வேலை, கொல்லு வேலை முதலிய பல தொழில்கள் உலகத்துக்கு முக்கிய மான படியாலும், அந்தத் தொழில்களை ஒவ்வொருவனும் கற்றுக் கொள்வது அசாத்திய மாகையாலும், அந்தத் தொழிலாளிகள் உள்ள இடங்களில் வசிப்பது ஜனங்களுக்குப் பெரிய சௌகரியமா யிருக்கிறது. கூட்டுறவாய் வாழுகிற ஜனங்கள், ஒருவர்க் கொருவர் உபத்திரவம் செய்து கொள்ளாமலும், ஒருவ ருடைய சொத்தை ஒருவர் அபகரிக்கலாமலும் பாதுகாப் பதற்காகவும், இன்னும் தேசோபகார மான பல நன்மை களைச் செய்யவுமே, ஒவ்வொரு தேசத்திலும் இராஜாங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஜனங்கள் தங்கள் நன்மைக் காக அரசனை நியமித்துக் கொண்டி ருப்பதால், அரச னுடைய கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டியது அகத்தியமா யிருக்கிறது. ஒரு சிறிய குடும்பத் தலைவன் சொற்படி நடவாத குடும்பஸ்தர்கள் துன்பம் அடைவர் களானால், அனந்தங் குடும்பங்களுக்குத் தலைவனாகிய அரசன் சொற்படி கேளாதவர்கள் எப்படி க்ஷேமம் அடை வார்கள்? உலக மாகிய உடலுக்கு அரசன் தலையாகவும், பிரஜைகள் பல அவயவங்களாயு மிருக்கிறார்கள்; எண்சா ணுடம்பிற்கும் சிரசே பிரதானமா யிருப்பது போல், உலக மாகிய உடலுக்கு அரசனே பிரதானமா யிருக்கிறான் தலையில்லாத சரீரம் எப்படி ஜீவிக்காதோ,அப்படியே அரச னில்லாத தேசம் நாசத்தையும் அடையும். 

சகல சாஸ்திரங்களும், புராணங்களும், சமய நூல்களும், அரசனை விசேஷமாகச் சொல்லுகின்றன. அரசன் ஜனங்களால் நியமிக்கப் பட்டவனா யிருந்தாலும், அவன் சகலருக்கும் மேலான புருஷ சிரேஷ்ட னென்று சகல தேசங்களிலும் நன்கு மதிக்கப் படுகிறான். சூரியன் உயர் வான இடத்தி லிருந்து பிரகாசியா விட்டால், உலகம் ஒளி பெறுமா? மேகம் மேலான இடத்தி லிருந்து வருஷியா விட்டால், உலகத்துக்குப் பயன் படுமா?ஆறு, குளங்கள் உயர் வாகவும், வயல்கள் தாழ் வாகவு மிருந்தால் மட்டும், ஜலம் பாயுமே யல்லாமல், ஆற்றைப் பாக்கிலும் உயர்வா யிருக்கிற கழனிகளுக்கு ஜலம் பாயுமா? அப்படியே அரசனுக்குக் குடிகள் தாழ்ந் திருக்க வேண்டியவர்களே யல்லாது, அரசனுக்குக் கீழ்ப்படியாத குடிகள் க்ஷேமத்தை அடைவார்களா? ‘மாதாவுக்குச் சுகமிருந்தால், கர்ப்பத் துக்கும் சுகம்’ என்பது போல, அரசன் சுகமா யிருந்தால் மட்டும், ஜனங்களுக்கும் சுகமானதால், அவனுடைய க்ஷேமத்தை ஜனங்கள் எப்போதும் பிரார்திக்க வேண்டும். அரசனை வணக்கமாயும், மரியாதையாயும்,பயபக்தியாயும் பூஜிதை செய்யவேண்டும். அரசனுடைய சுக துக்கங்களைத் தங்களுடைய சுக துக்கங்களாகவும், அரசனுடைய காலிற் பட்டது தங்களுடைய கண்ணிற் பட்ட தாகவும் பிரஜைகள் எண்ணி, எப்போதும் இராஜ பக்தி செய்ய வேண்டும். சூரிய னிடத்தில் வெப்பமும், சந்திர னிடத்திற் களங்கமும், மேகத்தி னிடத்தில் இடியும், புஷ்பங்க ளிடத்தில் முட்களும் இருப்பது போல, அரசனும் நம்மைப் போல் மனுஷ னானதால், அவனிடத்திலே சில குண தோஷங்க ளிருப் பதும் சகஜம். அதற்காக அரசனை நாம் அவமதிக்காமல், நீரைப் பிரித்துப் பாலை உண்ணும் அன்னம் போல, அரச னுடைய குற்றத்தை நீக்கிக் குணத்தை மட்டும் கிரகித்துக் கொள்ள வேண்டும். அரச னுடைய செய்கை களுக்கு நமக்குக் காரணம் தெரியாதபோது, அவன் நல்ல எண்ணத் துடனே செய்த தாக ஊஹிக்க வேண்டுமே தவிர, விபரீத மாக எண்ணக் கூடாது. அரசன் ஒரு அக்கிரமம் செய் தாலும் கூட, அதைக் கிரம மான மனு மூலமாகப் பரிகரிக்க வேண்டுமே யல்லாது, இராஜ துரோகத்தைக் கனவிலும் சிந்திக்கக் கூடாது. இராஜ நிந்தையை நாமும் பேசக் கூடாது. பிறர் பேசவும் இடம் கொடுக்கக் கூடாது. 

சத்துருக்களையும் துஷ்டர்களையும் அடக்கவும், நியாய பரிபாலனம் நடத்தவும், தேச நன்மைக் கடுத்த பல வேலை களைச் செய்யவும், போது மான சதுரங்க சேனைகளையும், உத்தியோகஸ்தர் முதலியவர்களையும் நியமித்து, அநுபா லிக்க, அரசன் கடமைப்பட் டிருப்பதால், அதற் காக விதிக்கப்பட்ட வரிகளை ஜனங்கள் மனோற்சாக மாகச் செலுத்த வேண்டும். வரி வாங்கா விட்டால், அரசன் தேச காரியங்களை எப்படி நடத்தக் கூடும்? வேரில் விடப்பட்ட ஜலம் மர முழுதும் பரவுவது போலவும், நாம் வயிறு நிரம்பப் புசிக்கும் உணவு ஜீரணித்துத் தேக முழு வதும் வியாபிப்பது போலவும், அரசனுக்குப் பிரஜைகள் கொடுக்கிற வரிகள் பிரஜைகளுக்கே உபயோக மாகிறபடி யால், அரசனால் விதிக்கப்பட்ட நியாயமான வரிகளைப் பிரஜைகள் நிராடங்கமாகச் செலுத்த வேண்டும். 

ரோமா புரியிலே பல வரிகள் ஏற்பட்டிருந்த காலத் தில், ஜனங்கள் வரி கொடுக்க மாட்டோ மென்று நிராக ரித்து, ஊரை விட்டு வெளியே போய் விட்டார்கள். அவர்களை அழைத்து வரும்படி அகிரிப்பா என்னும் தளகர்த் தனை ஆலோசனைச் சங்கத்தார் அனுப்பினார்கள். அந்தத் தளகர்த்தன் ஒரு விசித்திர மான கட்டுக் கதையைச் சொல்லி, ஜனங்களை வசியப் படுத்தினான். அஃதென்னை யெனில்:- 

‘முற்காலத்தில் வயிற்றுக்கும் மற்ற அவயவங்களுக்கும் சடுத்தம் உண்டாகி, அந்த அவயவங்க ளெல்லாம் ஒன்று கூடி, வயிறு ஒரு வேலையும் செய்யாம லிருப்பதால், இனிமேல் வயிற்றுக் காகத் தாங்கள் ஒரு பாடும் படுகிற தில்லை யென்று பிரதியக்ஞை செய்து கொண்டன. கைகள் “ஒரு வேலையும் செய்யோம்” என்று சும்மா இருந்தன. கால் ‘வயிற்றுக் காக ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட் டேன்’ என்றது.வாய் “ஒன்றையும் புசிக்க மாட்டேன்” என்றது. கண், காது முதலியவைகளும், தங்க ளுடைய தொழில்களைச் செய்ய நிராகரித்தன. இவ் வகையாக அந்த அவயவங்கள் செய்த பந்துக் கட்டு, தங்களுக்கே தீங்காய் விளைந்தது. வயிற்றுக்கு ஆகார மில்லாமை யினால், கை சோர்ந்து, கால் அயர்ந்து, வாய் உலர்ந்து, கண் இருண்டு, காது அடைத்து தங்களுக்கே உபத்திரவம் உண்டான படியால், வயிறுதான் பிரதான மென்றும் வயிற்றுக்கு ஆகாரம் கொடா விட்டால், தாங்கள் ஜீவிக்கிறதற்கு மார்க்க மில்லை என்றும், அந்த அவயவங்கள் அறிந்து கொண்டன. வயிற்றுக்கு இடுகிற அன்னம் தேகத்தின் அவயவங்களுக் கெல்லாம் பிரயோஜன மாவது போல, அரசனுக்குக் கொடுக்கப் பட்ட வரிகன் ஜனங்க ளுக்கே உபயோக மாகிற படியால், வரி கொடுக்கிற விஷயத்தில் ஜனங்கள் ஆடங்கம் செய்யக் கூடாது என்றார்கள். அந்தப் பிரசங்கிகள் மறுபடியும் ஜனங்களைப் பார்த் துச் சொல்லுகிறார்கள்:- “இந்த ஊர் குடியரசா யிருந்த காலத்தில் நாம் பட்ட அவஸ்தைகளும், இப்போது நமக்கு உண்டா யிருக்கிற சௌக்கியங்களும், நமக்குப் பிரத்தி யக்ஷப் பிரமாணமாய்த் தெரிந்திருக்கின்றன. இப்படிப் பட்ட தர்ம ராஜாங்கம் இந்தப் பூமண்டலத்தில் எங்கே யாயினும் இருக்குமா? சில மூட ராஜாக்கள் செய்த அக்கிரமங்களை நீங்கள் கேள்விப் பட்டால், இப்போது நீங்கள் எவ்வளவு பாக்கியசாலிக ளென்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்! ஒரு சமஸ்கிருத வித்வான் அநியாய பஞ்சகம்’ என்று ஐந்து சுலோகங்கள் செய்தி ருக்கிறார். அவைகளுள் மூன்று சுலோகங்களை மொழி பெயர்த்து, உங்களுக்குத் தெரிவிக்கிறோம். 

அநியாய பஞ்சகம் 

I. “அநியாயபுரி என்னும் பட்டணத்தை மூர்க்க ராஜன் என்பவன் ஆண்டு கொண்டு வந்தான். அவன் எலி வேட்டைக்குப் போயிருந்த போது, அவனுடைய பத்தினியை ஒரு பாம்பு கடித்து விட்டதாகவும், விஷம் தலையில் ஏறின உடனே அவளுக்குப் பிராண இலயம் உண்டாகுமென்றும், அரண்மனை உத்தியோகஸ்தர்கள் மந்திரிக்குத் தெரிவித்தார்கள். விஷம் தலையில் ஏறாதபடி, தலையை வெட்டிப் பத்திரமாய் வைத்திருக்கும்படி, மந்திரி உத்தரவு செய்தான். அந்தப்பிரகாரம் இராஜ பத்தினியின் தலை வெட்டப்பட்டது. பாம்பு ஒரு வீட்டில் நுழைந்து வெளிப்படாமலிருந்தபடியால், அந்த வீட்டைக் கொளுத்தி விடும்படி மந்திரி ஆக்ஞாபித்து, அந்தப் பிரகாரம் நெருப்பு வைக்கப் பட்டது. அந்த நெருப்பு நகரமெங்கும் பரவி, எல்லா வீடுகளையும் பொருள்களையும் நாசம் செய்து விட்டது. அந்தத் தீயை அவிப்பதற்காக ஏரியின் கரையை உடைக்கும்படி மந்திரி உத்தரவு செய்து, அந்தப் பிரகாரம் ஏரியின் கரை உடைக்கப் பட்டது. ஏரியின் ஜலமெல்லாம் வீணாய்ப் போய்விட்டதால், வயலுக்குப் பாய்ச்சத் தண்ணீரில்லாமல், பயிர்களெல்லாம் வாடி வதங்கின பயிர்கள் வெயிலினால் வாடாதபடி, ஊரில் உள்ள மரங்களை யெல்லாம் வெட்டிப் பயிருக்குப் பந்தலிடும்படி செய்வித்தான். இந்தப் பிரகாரம், மந்திரி ஊரை யெல்லாம் பாழாக்கிவிட்டான். 

II. பயறு அளக்கிற விஷயத்தில், விற்கிறவனுக்கும் கொள்ளுகிறவனுக்கும் கலகம் உண்டாகி, மத்தியஸ்தர் களிடத்தில் முறையிட்டுக் கொண்டார்கள். விற்கிறவன், ”மரக்காலைக் கவிழ்த்துப் பின்புறத்தால் அளப்பேன்” என்றான். வாங்குகிறவன், “வழக்கப்படி மரக்காலின் முன் புறத்தால் அளக்க வேண்டும்” என்றான். மத்தியஸ் தர்கள் இருவருக்கும் பொதுவாக மரக்காலைப் படுக்க வைத்துக் குறுக்காக அளக்கும்படி தீர்மானித்தார்கள். 

III. ஒரு சேணியனுடைய பிள்ளை குளத்தில் விழுந்து, இறந்து போய் விட்டது. அந்தக் குளத்துக்கு உடையவன் மேலே சேணியன் குற்றம் சாட்டினான். உடையவனை அரசன் வரவழைத்து விசாரித்தபோது, அவன் குளம் வெட்டின கூலிக்காரர்கள் மேலே குற்றம் சுமத்தினான். அவர்கள் குளம் நிறையும்படி மழை பெய்த மேகத்தின் மீது குறை கூறினார்கள். குயவர்களுடைய சூளையி னின்று கிளம்புகிற புகையினால் மேகம் உண்டாவதாக அரசன எண்ணிக் குயவர்களை யெல்லாம் இல் நாசம் செய்தான்” என்றார்கள். 

என்னுடைய அபிப்பிராயமும் ஞானாம்பாளுடைய அபிப்பிராயமும் அநேக விஷயங்களில் ஏக பாவமாக.. ஒத்திருந்தாலும், இரண்டொரு விஷயங்களில் நானும் அவளும் பின்னாபிப்பிராயப் பட்டோம். இராஜாங்க வரு மானத்தைப் பார்க்கிலும் செலவு அதிகரித்துப் பணம் போதாமலிருந்தபடியால், ஜனங்களிடத்தில் அதிக வரி வசூல் செய்ய வேண்டு மென்பது என்னுடைய கருத்தா யிருந்தது. ஞானாம்பாள் என்னுடைய அபிப்பிராயத்தை ஒப்புக் கொள்ளாமல், என்னைப் பார்த்துச் சொல்லு கிறாள்:- ”ஜனங்களுக்கு நியாயமாக எவ்வளவு வரி ஏற் படுத்தக் கூடுமோ அவ்வளவு வரி முன்னமே ஏற்பட்டிருப்ப தால், நாம் செலவைக் குறைக்க மார்க்கம் தேட வேண்டுமே யல்லாது, ஜனங்களுடைய தலை மேலே அதிக வரிகளைச் சுமத்துவது தர்மமல்ல. “சுண்டைக்காய் காற் பணம், சுமை கூலி முக்காற் பணம்” என்பது போல, அநேக உத்தியோகஸ்தர்களுக்கு வேலை குறைவா யிருக்க, அவர்களுக்கு, அபரிமிதமான சம்பளங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. இந்தப் பூலோகத்தில் ஒரு இராஜங்கத் திலும் இவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட வில்லை. கோட்டை போல நாலு பக்கத்திலும் மலைகளும் கடலும் சூழ்ந்திருக்கிற இந்த நாட்டுக்கு, சத்துரு பய மென்கிற பிரசக்தியே யில்லாம லிருக்க, எண் ணிறந்த இரத கஜ துரக பதாதிகளை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு நாம் சம்பளம் கொடுப்பது அக்கிரம மல்லவா? அன்றியும், மராமத்து டிபார்ட்டு மென்று என்கிற ஒரு பெரும் பூதமானது, நம்முடைய பொக்கிஷப் பணங்களை யெல்லாம் புசித்து விடுகின்றது. அநாவசியமான செலவுகளை யெல்லாம் குறைத்து விட்டால், நம்முடைய வருமானம் செலவுக்கு மேல் மிஞ்சி, கையிருப்புக்கும் இடம் உண்டாகும். சம்பளங்களைக் குறைப்பது உத்தியோகஸ் தர்களுக்கு அதிப்தியா யிருக்கு மென்பது நிச்சயந்தான். ஆனால், சில உத்தியோகஸ்தர்களுடைய திருப்திக்காக, கோடானு கோடி ஜனங்களுடைய சௌக்கியத்துக்கு நாம் குறைவு செய்யலாமா?” என்றாள். ஞானாம்பாள் சொன்ன நியாயங்கள் மறுக்கக் கூடாதவைகளா யிருந்த படியால், நானும் அவளுடைய கருத்துக்கு இசைந்தேன். விசுவாமித்திரர் அண்டங்களைப் புதிதாகச் சிருஷ்டிக்க ஆரம்பித்தது போல, நாங்களும் புதிய ஏற்பாடுகள் செய்யத் துவக்கினோம். விசுவாமித்திரர் நினைத்தபடி முடிக்காமல் மத் தியில் தங்கி விட்டது போல் நாங்கள் தங்காமல், எங்களு டைய எண்ணங்களை பரிபூர்த்தி செய்தோம். ஒரு ஆயுதமு மில்லாமல், யுத்தமும் செய்யாமல், ஒரு வார்த்தையினாலே படைகளை யெல்லாம் ஒழித்து விட்டோம். மராமத்துப் பூதத்தைக் கிழித்து விட்டோம். அதிகச் சம்பளங்களைக் கழித்து விட்டோம். இவ்வாறு செழித்து விட்டோம். படை களிலும், மராமத்து வகுப்பு உத்தியோகத்திலும், அவசிய மானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவர்கள் வீட்டுக்குப் போகும்படி உத்தரவு கொடுத்து விட்டோம். எங்களாற் பிரதிகூல மடைந்தவர்க ளெல்லாரும் எங்களைத் தூஷித்தார்கள்; அனுகூலம் அடைந்தவர்கள் எல்லோரும் பூஷித்தார்கள். நாங்கள் ஒன்றுக்கும் அஞ்சாமல், ஒரு கதையிற் சொல்லியபடி எங்களுக்கு யுக்தமாய்த் தோன்றின பிரகாரம் நடப்பித்தோம். அந்தக் கதையைச் சுருக்கிச் சொல்லுகிறேன். 

“பேசுகிற பக்ஷியும், பாடுகிற மரமும், தங்கத் தண்ணீரும், ஒரு மலைச் சிகரத்தி லிருப்பதாக ஒரு இராஜ குமாரத்தி கேள்வி யுற்று, அவைகள் தனக்கு வேண்டுமென்று தன்னுடைய தமையன்மார்க ளிடத்திலே தெரி வித்தாள். மூத்த தமையன் அவைகளைத் தான் கொண்டு வருவதாகச் சொல்லிப் பயணம் புறப்பட்டான். அவள் புறப்பட்ட இருபதாம் நாள் ஒரு சந்நியாசியைக் கண்டு, அந்த மலைக்குப் போகிற மார்க்கத்தை விசாரித் தான். சந்நியாசி இராஜ குமாரனைப் பார்த்து, “அந்த மலை மேலே ஏறுவது சுலப சாத்திய மல்ல. ஏறும் போது, பயங்கரமான சப்தங்களும், தூஷணமான வார்த்தைகளும் பல பக்கங களிலும் கேட்கப்படும். அந்தச் சப்தஞ் செய்கிறவர்கள் அரூபிகளான தால், அவர்கள் நம்முடைய கண்களுக்குத் தோன்றார்கள். மலை மேல் ஏறுகிறவன் அந்தச் சப்தங்களுக்குப் பயப்படாமலும் பின்னே திரும்பிப் பாராமலும் ஏறுவானானால், அவன் மலை மேலே போய்க் சேர்ந்து, அந்த அபூர்வ வஸ்துகளையுங் கைவசஞ் செய்து கொண்டு, திரும்புவான். அவன் பின்னே திரும்பிப் பார்ப்பானானால், உடனே கருங் கல்லாய்ச் சமைந்து போவான். அநேகர் என் சொல்லைக் கேட்காமற் போய்க் கல்லாய்ச் சமைந்து போனார்கள். நீ போனாலும் அப் படித்தான் சம்பவிக்கும்” என்று, சந்நியாசி இராஜ குமாரனைப் போக வேண்டா வென்று தடுத்தான். இராஜ குமாரன் தான் அகத்தியம் போக வேண்டுமென்று முஸ்கரஞ் செய்த படியால், சந்நியாசி மலைக்குப் போகிற மார்க்கத்தைத் தெரிவித்தான். இராஜகுமாரன் மலை மேல் ஏற ஆரம்பித்த உடனே, சந்நியாசி சொன்னபடி பல சப் தங்கள் உண்டாயின. “அந்த மூடன் எங்கே போகிறான்? அவனை விடாதே! பிடி! அடி! கொல்லு!” என்றும், இன்னும் பல வித மாகவும், சப்திப்பதைக் கேட்டு, இராஜ குமாரன் பீதி உடையவனாய், பின்னே திரும்பிப் பார்த் தான். உடனே கல்லாய்ச் சமைந்து போனான். அவனைத் தேடிக் கொண்டு வந்த அவனுடைய சகோதரனும், சந்நி யாசி வார்த்தையைக் கேளாமல், மலைக்குப் போய்க் கல்லா னான். ஆண் வேஷம் பூண்டு கொண்டு, அண்ணன்மார் களைத் தேடிப் போன இராஜ குமாரத்தி, சந்நியாசியைச் சந்தித்து, மலைக்குப் போகிற மார்க்கத்தை விசாரித்தாள். அவளையும், போக வேண்டா மென்று சந்நியாசி தகுந்த புத்திமதிகள் சொல்லியும், அவள் கேட்கவில்லை. ஒரு சப்தமுங் கேளாத படி தன்னுடைய இரண்டு காதுகளிலும் பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டு, நிர்விக்கினமாய் மலைமேல் ஏறி, அந்த அபூர்வ வஸ்துக்களையும் ஸ்வாதீனஞ் செய்து கொண்டு, கல்லாய்ச் சமைந் திருந்த அண்ணன் மார் முதலானவர்களையும் எழுப்பிக் கொண்டு, ஒட்டோ லகமாய்ப் பட்டணத்துக்குத் திரும்பினாள்.” 

அந்த இராஜ குமாரத்தியைப் போல, நாங்களும் அந்நியர்களுடைய தூஷணைகளை யாவது பூஷணைகளை யாவது கவனிக்காமல், எங்களுக்கு நியாயமாகத் தோன்றின காரியங்களை ஊக்க மாகவும் நிர்ப்பய மாகவுஞ் செய்து முடித்தோம். 

– தொடரும்…

– மாயூரம் மாஜி டிஸ்டிரிக்ட் முன்சீப் ச.வேதநாயகம் பிள்ளையவர்கள் (1826-1889) இயற்றியது, முதற் பதிப்பு: 1879.

– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் முதலாவதாக இடம்பெற்ற நாவல்.

– பிரதாப முதலியார் சரித்திரம், நூற்றாண்டு விழா புதிய பதிப்பு: அக்டோபர் 1979, வே.ஞா.ச.இருதயநாதன் (வேதநாயகம் பிள்ளை மகன் பேரர்), ஆவடி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *