பிரதாப முதலியார் சரித்திரம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 10, 2024
பார்வையிட்டோர்: 1,510
(1879ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். அதுவரை செய்யுள் வடிவ புனைகதை இலக்கியங்களே இருந்துகொண்டிருந்த தமிழிற்கு உரைநடை வடிவிலான புனைகதை இலக்கிய வகை இந்நூல் வழியாக அறிமுகமானது. அவ்வகையில் இது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் முதலாவதாக இடம்பெற்ற நாவல்.
அதிகாரம் 21-25 | அதிகாரம் 26-30 | அதிகாரம் 31-35
26-ஆம் அதிகாரம்
தாய் தந்தையர் செய்த உபகாரம்-நல்ல பிள்ளைகளின் சரித்திரம்
நாங்கள் வந்து சேர்ந்த மறு தினமே, எங்களுடைய க்ஷேம லாபங்களைக் குறித்து. தேவராஜப் பிள்ளை என் தகப்பனாருக்கும் மாமனாருக்கும் திருமுகங்கள் அனுப்பினார். காலம் போகப் போக, எங்கள் தாய் தந்தைகளை விட்டுப் பிரிந்த துக்கம், பெரிதா யிருந்தது. எங்கள் தந்தையர் களிடத்தில், எங்களுக் கிருந்த அற்ப மனஸ்தாபமும், நாளா வட்டத்தில் தீர்ந்து போய் விட்டது. ஒரு நாள் நானும் ஞானாம்பாளும், அடியிற் கண்டபடி சல்லாபித்துக் கொண்டோம்:-
“தாய் தகப்பனைப் போல நமக்கு உபகாரிகள் யாரிருக் கிறார்கள்? மற்றவர்கள் எல்லாரும் ஏதாவது அற்ப உதவி செய்வார்கள். தாய் தகப்பன்மாரோ வேன்றால், தேகத் தையும் பிராணனையும் பூலோக வாழ்வையும், நமக்குக் கொடுத்த பரம தாதாக்களாயிருக்கிறார்கள். அவர்கள் நம் மைப் பெற்று, வளர்த்து, பெயரிட்டு, பாலூட்டி, தாலாட்டி, நீராட்டி, சீராட்டிச் சம்ரக்ஷித்தார்கள். மற்றவர்கள் எல் லாரும் யாதொரு பிரதி உபகாரத்தை விரும்பி உதவி செய் வார்கள். தாய் தந்தைகள் யாதொரு பிரதி பலனையும் வேண்டாமல், நம்முடைய சுகமே அவர்களுடைய சுகமாக வும், நம்முடைய துக்கமே அவர்களுடைய துக்கமாகவும் எண்ணி, நாம் அழும் போது கூட அழுதும், நாம் சந்தோஷிக்கும் போது கூடச் சந்தோஷித்தும், அத்தியந்த அன்பு பாராட்டினார்கள். நாம் வியாதி யில்லாமலிருக்கும் பொருட்டு அவர்கள் மருந்துகளை உண்டு பத்தியம் பிடித் தார்கள். நாம் க்ஷேமமா யிருக்கும் பொருட்டுப் பல விரதங் களை அநுஷ்டித்து தேவதாப் பிரார்த்தனை செய்தார்கள். நாம் தூங்கும் போது. அவர்கள் தூங்காமல் நம்மைப் பாதுகாத்தார்கள்.நாம் வியாதியா யிருக்கும் பொழுது அவர்கள் அன்னம் ஆகாரம் நித்திரையைத் துறந்து விட்டார்கள். நம்முடைய வாந்தி, மல ஜலாதி அசுத்தங்களையும் சகித்தார்கள். நம்மை சௌக்கியத்தில் வைக்கும் பொருட்டு அவர்களுடைய சௌக்கியங்கனைக் குறைத்துக் கொண்டார்கள். துக்கங்களை எல்லாம் அவர்கள் தாங்கிக் கொண்டு, சுகங்களை நமக்குக் கொடுத்தார்கள்” என்று பலவாறாக நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் எங்களிடத்துக்கு வந்தார்கள். நாங்கள் தாய் தகப்பன்மார்கள் செய்த நன்மைகளைக் குறித்துச் சம்பாஷிக்கிறோ மென்பதை தேவராஜப் பிள்ளை தெரிந்துகொண்டு அவர் எங்களைப் பார்த்து, கொடுமை யான தாய் தகப்பன்மார்களுக் கூடச் சில நல்ல பிள்ளைகள் எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கிறார்கள். அப்படிப் பட்ட சில சரித்திரங்களைச் சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று சொல்லுகிறார்.
சில காலத்துக்கு முன் தஞ்சை நகரத்திலே சுப்பையன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இரண்டு புத்தி ரர்கள். அவர்களில் மூத்தவனுடைய ஜாதக பலன் தகப்ப னுக்கு ஆகா தென்று ஜாதகத்தில் குறிக்கப்பட்டிருந்த படியால், அவனைத் தகப்பன் சத்துருபாவ மாக எண்ணத் தலைப்பட்டான். அந்தப் பிள்ளையை அவன் கண்ணாற் பார்க் கிறது மில்லை, கையால் தொடுகிறது மில்லை. மூத்த பிள்ளை அவனுக்கு வேம்பாகவும், இளைய பிள்ளை கரும் பாகவும் போய் விட்டார்கள். மூத்த பிள்ளை நன்மை செய்தாலும், அது தகப்பனுக்குத் தீமையாகத் தோன்றும். இளைய பிள்ளை செய்கிற தீமையெல்லாம் நன்மையாகத் தோன்றும். மூத்த பிள்ளையிடத்தில் தகப்பனுக்கு உண்டா யிருக்கிற துவேஷத்தைப் பரிகரிக்கிறதற்கு, அந்தப் பிள்ளையில் தாயார் அவளாற் கூடியமட்டும் பிரயாசைப் பட்டும். நிஷ்பிரயோசனமாய்ப் போய்விட்டது. ஆயினும், மாதா உள்ள வரைக்கும் மூத்த பிள்ளைக்கு ஒரு குறைவு மில்லாம லிருந்தது. அந்தப் பிள்ளைக்குப் பத்தாம் வயதும், இளைய பிள்ளைக்கு ஒன்பதாம் வயதும் நடக்கும்பொழுது, மாதா பரலோகப் பிராப்தி ஆனாள். அதுமுதல் மூத்தபிள்ளைக்குக் கஷ்ட காலம் ஆரம்பித்தது. அந்தப் பிள்ளையைத் தகப்பன் திருப்பிப் பார்க்கிறதே யில்லை. தகப்பனுக்கு ஒரு அற்பத் துன்பம் நேரிட்டாலும், மூத்த பிள்ளையி னுடைய ஜாதக பலன் என்று நினைத்து, அந்தப் பிள்ளையைத் தகப்பன் விரோ தித்து வந்ததும் தவிர, இளைய பிள்ளையும் தமையன் மேலே கோளும் குறளையும் சொல்லி, தகப்பனுடைய துவேஷம் அதிகரிக்கும் படி செய்தான். மூத்த பிள்ளை இன்னும் சில நாள் வரைக்கும் தகப்பன் வீட்டில் இருந் திருப்பானானால், அவனுடைய ஆயுசு முடிந்து, தாய் போன இடத்துக்குப் போயிருப்பான் என்பது சத்தியம். அவன் படுகின்ற கஷ்ட நிஷ்டூரங்களை, அவன் தாயுடன் பிறந்த அம்மான் கேள்விப் பட்டு, அவன் வந்து, அந்தப் பிள்ளை யைத் தன் வீட்டுக்குக் கொண்டு போய்ச் சம்ரக்ஷித்து வந்தான். அவன் எப்படியாவது தொலைந்தானே யென்று தகப்பன் சந்துஷ்டி யடைந்து, தன்னுடைய பிரியத்தை யெல்லாம், இளைய பிள்ளைக்கே தத்தம் செய்து விட்டான். மூத்த பிள்ளைக்கு இருபத்திரண்டு வயது நடக்கும் போது, தகப்பனுக்குக் கபவாத சுரம் கண்டு, அநேக மாசம் வரைக் கும் அவஸ்தைப் பட்டான். அந்த வியாதியும், மூத்த பிள்ளை யினுடைய ஜாதக விசேஷத்தால் நேரிட்டதென்று தகப்பன் எண்ணி, அந்தப் பிள்ளைக்கு ஒன்றும் வைக்காமல், சகல சொத்துக்களுக்கும் இளைய பிள்ளையைப் பாத்தியப்படுத்தி, பிரசித்தமாக ஒரு மரண சாதனம் எழுதி வைத்தான். மூத்த பிள்ளை நற்குண சம்பன்னன் ஆகையால், தகப்பன் என்ன கொடுமை செய்தாலும் அதைப் பாராட்டாமல், வியாதியா யிருக்கிற தன் தகப்பனை அடிக்கடி போய்ப் பார்த்துக்கொண்டு வருவான். அவனைக் கண்டபோ தெல்லாம் தகப்பன் பாம்பு போல் சீறி, வைது, துரத்திக் கொண்டு வந்தான் ஒரு நாள், விழலினால் வேயப்பட்டிருந்த மேல் மாடியில், தகப்பன் வியாதி யுடன் படுத்திருக்கும் போது. அந் மேல் மாடிக்குப் போகிற படிகளில் நெருப்புப் பிடித்துக் கொண்டு, மேல் மாடியிலும் தாவ ஆரம்பித்தது. படிக ளில் நெருப்புப் பற்றிக் கொண்ட படியால், வியாதியஸ் தனை இரக்ஷிக்கும் பொருட்டு, மேல் மாடியில் ஏறுவதற்கு மார்க்க மில்லாமற் போய் விட்டது. இவ்வகையாகத் தகப்பனுக்கு நேரிட்ட ஆபத்தை,மாமன் வீட்டி லிருந்த மூத்த பிள்ளை கேள்வியுற்று, உடனே ஓடி வந்து, படி வழி யாய் மேல் மாடிக்குப் போக யத்தனித்தான். அவனு டைய பிரயத்தனத்துக்கு அக்கினிச் சுவாலை இடம் கொடுக்க வில்லை. அந்த ஜேஷ்ட புத்திர துரோகிக்கு மகன் செய்யும் உபகாரம் அக்கினிக்கு சம்மதம் இல்லா தது போல, வழி மறித்துக் கொண்டது. மேல் மாடியின் பின் புறத்திலிருக்கிற பலகணிகளின் வழியாய் உள்ளே நுழைந்து, தகப்பனை வெளிப்படுத்துகிற தென்று மூத்த பிள்ளை நிச்சயித்துக் கொண்டு, அந்தப் பலகணிகள் ஒரு தென்னைமர உயரத்தி லிருந்த படியால், இரண்டு பெரிய ஏணிகளைச் சேர்த்துக் கட்டி, ஜன்னலுக்கு நேராக நிறுத்தி, அவைகளின் வழியாக ஏறி, ஜன்னலின் மரக் கம்பிகளை அரிவாளால் வெட்டிப் பிளந்து கொண்டு உள்ளே பிரவேசித்து, தகப்பனை மிருதுவாகத் தூக்கி, ஜன் னல் வழியாக இறக்கி, ஏணியின் மேல் நிறுத்தி, கைலானா கொடுத்து, படிப்படியாய் நடத்திக் கொண்டு வந்து, பூமியிலே சேர்த்தான். அப்படிச் செய்யாமல் சிறிது நேரம் தாமதப்பட்டிருக்கு மானால். தகப்ப னுடைய சரீரமும், அவனுடைய ஓர வஞ்சகமும் அவன் இளைய பிள்ளைக்கு எழுதி வைத்த மரண சாதனமும், அக்கினியில் வெந்து படு சூரணமாய்ப் போயிருக்கு மென்பதற்கு, அந்த அக் கினியே சாட்சி. ஒரு காலத்தினும் மூத்த பிள்ளையைத் தொடாம லிருந்த தகப்பன், அன்றையத் தினம் மார்போ டிறுகக் கட்டித் தழுவிச் சொல்லுகிறான்:- ‘என் புத்திர பாக்கியமே! என் குல விளக்கே!! என் கண்மணியே!!! உன்னைப் போலே தர்மிஷ்டர்களும், என்னைப் போலே பாபிஷ்டர்களும், இந்த உலகத்தில் இருப்பார்களோ? நான் உனக்குச் செய்த தெல்லாம் கொடுமை; நீ எனக் குச் செய் த தெல்லாம் நன்மை. நான் உன்னுடைய க்ஷேமத்தை ஒரு நாளும் நினைத்ததே யில்லை; நீ என்னுடைய க்ஷேமத்தை எந்நாளும் மறந்ததே யில்லை. உன்னுடைய குணத்தையும், என்னுடைய குணத்தையும் யோசிக்கு மிடத்தில், நான் உனக்குத் தகப்பனா யிருக்க எவ்வளவும் யோக்கியன் அல்ல. நான் உனக் குச் செய்த துரோகமே நெருப்பாக வந்து விளைந் ததே தவிர வேறல்ல. அந்த நெருப்பி னின்று நீ என்னை இரக்ஷத்த படியால், நீயே என்னைப் பெற்ற தாயும் தகப்பனும் ஆனாய்!” என்று பல வகையாக ஸ்தோத்திரம் செய்தது மன்றி, தான் செய்த கொடுமைகளை நினைத்து நினைத்து, மனம் உருகி அழுதான். அன்று முதல் மூத்த பிள்ளையே தனக்குச் சகல பாக்கியமு மென்று நினைத்து, அவன் வசத்தில் ஆஸ்திகளை யெல்லாம் ஒப்புவித்து, தானும் இளைய குமாரனும் அவனால் போஷிக்கப்பட்டு வாழ்ந்தார்கள்.
வெகு காலத்துக்கு முன்பாக, யூரோப்பிலே, (Europe) சிசிலி (Sicily) நாட்டிலே யிருக்கிற அக்கினி மலை அக்கினியைக் கக்கி, அநேக ஊர்களைச் சுட்டு நிர்மூல மாக்கின போது, ஜனங்கள் எல்லாரும் அதிக விலை பெற்ற சொத்துக்களை எடுத்துக் கொண்டு, தப்பி ஓடினார் கள். அவர்களில் அநப்பியஸ் (Anapius) அம்பிநோமஸ் (Amphinomus) என்கிற இரண்டு வாலர்கள், யாதொரு ஆஸ்தியையும் தொடாமல், வயோதிகர்களான தங்களு டைய தாய் தந்தைகளைத் தூக்கிக் கொண்டு சென்று அவர்களுடைய பிராணனை இரக்ஷித்து, பிரக்கியாதி அடைந்தார்கள்.
ரோமாபுரியை மூவேந்தர் கூடி அரசாட்சி செய்து வந்த காலத்தில், பெயர் பெற்ற பிரசங்க வித்வானாகிய சிசரோ (Cicero) என்பவரையும், அவருடைய சகோதரராகிய குவின்றஸ் (Quintus) என்பவரையும், இன்னும் அநேகரையும் கொன்று விடும்படி, அந்த மூவேந்தர்கள் தீர்மானித்தார்கள். இந்தச் சமாசாரம் கேட்ட வுடனே, சிசரோவும் அவர் சகோதரரும் தப்பி ஓட ஆரம்பித்தார் கள். பிறகு சிசரோ தம்முடைய சகோதரனைப் பார்த்து, “நான் கடற்கரைக்குப் போய் பிரயாணக் கப்பல் திட்டம செய்கிறேன். நீ வீட்டுக்குப் போய், வழிச் செலவுக்குப் பணம் கொண்டு வா” என்று ஆக்ஞாபித்தார். அந்தப் பிரகாரம் குவின்றஸ் என்பவர் வீட்டுக்குப் போனார். அவர் வீட்டுக்கு வந்திருக்கிற சமாசாரம் தெரிந்து, அவரைப் பிடித்துக் கொல்வதற்காக அநேகம் போர் வீரர்கள் வீட்டுக் குள்ளே பிரவேசித்து, அவரைத் தேடினார்கள். அவர் அகப்படாதபடி வீட்டுக்குள் ஒரு பக்கத்தில் ஒளிந்து கொண்டார். அந்தச் சேவகர்களுக்கு ஆக்கிரகம் உண்டாகி அவருடைய மகனைப் பிடித்து, தகப்பன் ஒளிந் திருக்கிற இடத்தைக் காட்டும்படி, அந்தப் பிள்ளையை அடித்துப் பல விதமாக உபத்திரவம் செய்தார்கள். தாங்கக் கூடாத உபத்திரவங்களை யெல்லாம் அந்தப் பிள்ளை யாண்டான் சகித்துக் கொண்டு, தகப்பன் ஒளிந்திருந்த இடத்தைக் காட்டாம லிருந்தான். குவின்றஸ் என்பவ ருக்குத் தமது மகன் படுகிற உபத்திரவம் தெரிந்தவுடனே, மனம் சகியாமல், வெளியே ஓடி வந்து, அந்தக் கொலைஞரைப் பார்த்து, “நிர்த்தோஷி யான அந்தப் பிள்ளையை ஏன் உபாதிக்கிறீர்கள்? என்னைக் கொல்லுங் கள்!” என்று சொல்லி அழுதார். உடனே அவருடைய மகன், “என்னைக் கொல்லுங்கள்! தகப்பனாரைக் கொல்ல வேண்டாம்” என்று பிரார்த்தித்தான். அந்தப் பரம சண்டாளர்கள், சற்றும் இரக்க மில்லாமல், தகப்பனையும் மகளையும் ஒரே காலத்தில் வெட்டிக் கொன்றார்கள்.
பெருமையிற் சிறந்த அலெக்சான்றர் (Alexander) என்னும் அரச னுடைய தாயா ராகிய ஒலிம்பியாஸ் (Olympias) என்பவள், அதிகாரப் பிரியம் உள்ளவளாய், இராஜரீக காரியங்களிற் பிரவேசித்து, மகனுக்கு ஓயாத சஞ்சலத்தைக் கொடுத்துக் கொண்டு வந்தாள். அப்படி யிருந்தும், அந்த அரசனுக்கு மாதாவின் மீதுள்ள அன்பு குறையாமல், அவர் திக்கு விஜயம் செய்யப்போன இடங் களில் அகப்பட்ட அபூர்வ வஸ்துக்களைத் தாயாருக்கு அனுப்பி வந்தார். அவரால் நியமிக்கப் பட்ட கவர்ன ராகிய அன்றிப்பாற்றர் (Antipater) என்பவரே, தேச காரி யங்களை நடப்பிக்க வேண்டு மென்றும், அந்தக் காரியங் களில் தாயார் பிரவேசிக்க வேண்டா மென்றும், அலெக் சான்றர் எழுதிய கடிதத்துக்கு, அவருடைய தாயார் கடுங்கோபமாய் மறுமொழி எழுதியும், அந்த அரசனுக்கு மாதா மேலே எவ்வளவும் கோபம் உண்டாக வில்லை. அவளுடைய உபத்திரவத்தைப் பொறுக்க மாட்டாமல், அன்றிபோற்றர் என்னும் கவர்னர் அலெக்சான்றருக்கு, அநேக கடிதங்கள் அனுப்பினார். அதற்கு அலெக்சான்றர் சொன்னதாவது:- “அன்றிப்பாற்றர் அறுநூறு கடி தங்கள் அனுப்பினாலும், அத்தனை கடிதங்களையும், என் தாயாருடைய ஒரு கண்ணீர்த் துளி அழித்து அபலமாக்கி விடுமென்பதை, அன்றிப்பாற்றர் அறியவில்லை” என்றார்.
புருசியா (Prussia) தேசத்து அரச ராகிய பிரதரிக் (Frederick) என்பவர், ஒரு நாள் வேலைக்காரனை அழைப் பதற்காக, வழக்கப் படி மணியை ஆட்டினார். ஒருவரும் வராத படியால், அவர் வேலைக்கார னிருக்கிற இடத்தைப் போய்ப் பார்க்க, வேலைக்காரன் ஒரு கட்டிலின் மேலே படுத்து, நித்திரை செய்து கொண் டிருந்தான் அவனு டைய சட்டைப் பையில், ஒரு கடிதம் நீட்டிக் கொண் டிருந்த படியால், அவனை எழுப்பாமல் அரசர் அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்து வாசித்தார். அது அந்த ஊழியக்காரனுக்கு அவனுடைய தயாரால் எழுதப் பட்ட கடிதமா யிருந்தது. அதில், **LD 850607! உன்னுடைய சம்பளத்தில் மிச்சம் பிடித்து, என்னுடைய கஷ்ட காலத் துக்கு உதவும் படியாக அனுப்பிக் கொண்டு வருகிறாயே! இந்த உபகாரத்திற்காகக் கடவுள் உனக்குக் கிருபை செய்வார்” என்று எழுதப்பட் டிருந்தது. உடனே, அரசர், சில தங்க நாணயங்களை அந்தக் கடிதத்துடன் சேர்த்து, வேலைக்காரனுடைய சட்டைப் பையில் மிருதுவாக வைத்து விட்டு, மறுபடியும் அவருடைய அறைக் குள்ளே போய், மணியை அதிக பலமாக ஆட்டினார். வேலைக்காரன் விழித்துக் கொண்டு அரசருடைய சமூகத்துக்கு ஓடினான். அரசர் அவனைப் பார்த்து, “நீ நல்ல தூக்கம் தூங்கினாய்” என, அவன் ‘க்ஷமிக்க வேண்டும்” என்று பிரார்த்தித் தான். பிறகு, தன் சட்டைப் பை கனமா யிருக்கிறதைக் கண்டு, உள்ளே கையை விட, அந்தத் தங்க நாணயங்கள் அகப்பட்டன. அந்தத் தங்க நாணயங்கள் வந்த விவரம் தெரியாமல், அவன் மதி மயங்கி அழுது கொண்டு, அரசனுடைய காலில் விழுந்து, “மகா ராஜாவே! யாரோ என் குடியைக் கெடுக்க இந்த நாணயங்களை என் சட்டைப் பையில் வைத்து விட்டார்கள்” என்றான். உடனே வேந்தர், அவனைப் பார்த்து, “கடவுள் சில சமயங்களில் நித்திரையில் நமக்கு நன்மையை அனுப்புகிறதும் உண்டு. நீ என்னுடைய வந்தனத்துடன் அந்த நாணயங்களை உன் தாயாருக்கு அனுப்புகிறதும் அன்றி, உன்னையும் உன் தாயாரையும் கைவிடமாட்டேன் என்று, உன் மாதாவுக்குத் தெரிவி” என்றார்.
ஆஸ்திரியா (Austria) தேசத்தின் இராஜதானியாகிய வியன்னா (Vienna). நகரத்தில், ஒரு எளிய கைம் பெண் சாதி இருந்தாள். அவளுடைய புருஷன் இறந்த பிற்பாடு கால க்ஷேபத்துக்கு மார்க்க மில்லாமல், அவளும் அவளுடைய பிள்ளையும் மகா கஷ்டப்பட்டார்கள். அவளுடைய வறுமையி னிமித்தமே அவளுக்கு வியாதியும் துர்ப் பலமும் அதிகரித்தன; சில நாள்ளவும் படுத்த படுக் கையிலே யிருந்தாள். அவளுடைய புத்திரன் அதி பாவி யனா யிருந்ததால், அவன் யாதொரு கைத்தொழில் செய்ய அசக்தனா யிருந்தான். அந்தச் சிறுவன் பல வைத்தியர் கள் வீட்டுக்குப் போய், தன்னுடைய தாயாருக்கு வைத் தியம் பார்க்க வரவேண்டுமென்று பிரார்த்தித்தான். அவர்கள் எல்லாரும், முன்பண மில்லாமல் வரமாட்டோ மென்று சொல்லி விட்டார்கள். அந்தப் பையன் அவர்க ளுக்கு இரக்கம் உண்டாகும்படி, அவர்க ளுடைய காலில் விழுந்து நமஸ்காரம் செய்து, அவனால் கூடிய மட்டும் இரந்து மன்றாடியும், அந்தப் பாவிகளுக்கு இரக்கம் உண் டாகவில்லை. அந்தப் பாலன் அழுது கொண்டு தெருவிலே போகும் பொழுது, அந்தத் தேசத்துச் சக்கரவர்த்தியாகிய இரண்டரவது ஜோசேப் (Joseph II) என்பவர், ஒரு சாதாரண மான பண்டியின் மேலே ஏறிக்கொண்டு, சாரி போய்க் கொண்டிருந்தார். அவர் சக்கரவர்த்தியென்பது அந்தப் பையனுக்குத் தெரியா தான படியால், அவன் அவருக்கு முன்பாகப் போய், வியாதியா யிருக்கிற தன் மாதாவுக்கு வைத்தியம் பார்ப்பதற்காகப் பொருளுதவி செய்ய வேண்டுமென்று விண்ணப்பம் செய்தான். அவன் மாதாவுக்காகப் படும் பரிதாபத்தைப் பார்த்து, சக்கர வர்த்திக்கு இரக்கம் உண்டாகி, “நான் உன்னுடைய மாதாவுக்கு வைத்தியம் செய்கிறேன்; உன்னுடைய வீட்டைக் காட்டு” என்று சொல்லி, அவனையும் பண்டியின் மேல் ஏற்றுவித்துக் கொண்டு போனார். அவர், அந்த வீட்டுக்குப் போனவுடனே, அந்த ஸ்திரீ பசியினால் வாடிக் கண்ணிருட்டிக் காதடைத்து மெலிந்துபோ யிருக்கிறதைப் பார்த்து, அவளுக்குத் தரித்திரத்தைத் தவிர வேறு வியாதி யில்லையென்றும், அதற்கு ஔஷதம் பொருள்தா னென்றும் தெரிந்து கொண்டு, அந்தப் பையனைப் பார்த்து, “உன்னுடைய தாயார் வியாதிக்குத் தகுந்த ஒளஷதம் இன்ன தென்று எழுதிக் கொடுக்கிறேன்; மைக்கூடும் இறகும் காகிதமும் கொண்டு வா” என்றார். அவன் அந்தப் பிரகாரம் கொண்டு வந்து கொடுத்தான். அவர் அந்தப் பாலனுக்கு நூறு வராகன் கொடுக்கும் படி தம்முடைய பொக்கிஷ சாலை உத்தியோகஸ்தனுக்கு. உத்தரவு எழுதி அனுப்பினார். அந்தப் பிரகாரம். அவர் களுக்கு நூறு வராகன் கிடைத்து, அவர்களுடைய தரித்திர வியாதியை அதம் செய்தது.
27-ஆம் அதிகாரம்
எதிர் பாரா நல்வரவு
ஒரு நாட் சாயரக்ஷை,நானும், தேவராஜப் பிள்ளையும், கனகசபையும் வேடிக்கை யாக உரையாடிக் கொண் டிருந்தோம். அப்பொழுது, என்னுடன் சத்தியபுரியி லிருந்து வந்த பண்டிக்காரன் ஒருவன், வெளியேயிருந்து மேல்மூச்சுக் கீழ்மூச்சுடன் ஓடி வந்து, உள்ளே நுழைந்து, எங்களைப் பார்த்து, “சந்தோஷ சமாசாரம்! சந்தோஷ சமாசாரம்!!” என்று சொல்லிக் கொண்டு ஆநந்த நர்த்தனம் செய்தான். நாங்கள், “அந்தச் சமா சாரம் என்ன?” என்று கேட்க, அவன், “சுவாமிகளே! நான் இரண்டு நாழிகை வழி தூரம் ஓடி வந்ததால், எனக்கு இரைக்கின்றது. இரைப்பு அடங்கினவுடனே சொல்லுகிறேன்” என்று மறுபடியும் குதித்துக் கூத்தாடி னாள். நான் அவனைப் பார்த்து, “இப்பொழுது நீ எத்த னையோ வார்த்தைகள் பேசினாய்! சந்தோஷச் செய்தி, இன்னதென்று ஒரு வார்த்தையிலே சொல்லக் கூடாதா?” என்று உறுக்கினேன். அவன், மறுபடியும், காரியம் இன்னதென்று தெரிவிக்காமல், சம்பந்த மில்லாத காரி யங்களைச் சொல்லி நேரம் போக்கினான். எனக்குக் கோபம் ஜனித்து, அவனை அடிக்கிறதற் காகக் குதிரைச் சவுக்கைக் கையிலே எடுத்தேன். அவன் கத்திக்கொண்டு, “நான் சந்தோஷ சமாசாரம் கொண்டு வந்ததற்கு இது தானா சம்மானம்? நான் இன்று நேற்று வந்தவனா? நான் எத்தனையோ காலமாக, உங்களுக்கு ஊழியம் செய்து வரு கிறேன். பெரிய ஐயா அம்மா கூட என்னை ஒரு வார்த்தை சொன்ன தில்லை; ஒரு அடி அடித்த தில்லையே! நேற்றைப் பிள்ளையாகிய நீங்கள் என்னை அடிக்கலாமா? வையலாமா?”” என்று பல அசங்கதமான காரியங்களைப் பேசினானே தவிர, சங்கதி இன்னதென்று தெரிவிக்க வில்லை. உடனே எனக்கு கோபாக்கினி மூண்டு, குதிரைச் சவுக்கை அவன் மேலே பிரயோகிக்க ஆரம்பித்தேன். அவன் இருபது அடி வாங்கின பிற்பாடு, எங்களை நோக்கி சத்தியபுரியிலிருந்து ஐயா அம்மா எல்லாரும் வருகி றார்கள். நான் ஆற்றுக்குப் போன போது, அவர்களை வழியிலே கண்டு, சந்தோஷ சமாசாரம் சொல்வதற்காக, இரண்டு நாழிகை வழி தூரம் குடல் தெறிக்க ஓடி வந்தேன்” என்றான். இதைக் கேட்டவுனே, தேவராஜப் பிள்ளை பெருங் களிப்புடனே எழுந்து பெட்டியைத் திறந்து, இரண்டு கோடி வஸ்திரங்களை எடுத்து, சந்தோஷ சமாசாரம் கொண்டு வந்ததற்காக அந்தப் பண்டிக்கார னுக்கு வெகுமானம் செய்தார். அவன் அத்தனை அடி பட்டும், எங்களுக்குச் சங்கதியைப் பூரணமாய்த் தெரிவிக்க வில்லை. அவன் சொன்னதைக் கொண்டு, என் தாய் தகப்பனார் வருவதாக மட்டும் எண்ணிக் கொண்டோமே தவிர, சம்பந்தி முதலியாரும் அவருடைய பத்தினியும் வருவ தாக ஊகிப்பதற்கு இடமில்லாமலிருந்தது. ஆனால், அவன் ஞானாம்பாள் இடத்திலே போய், அவளுடைய தாய் தந்தை வருவதாக மட்டும் சொல்லி, என் தாய் தந்தைய ருடைய வரவைப் பற்றி ஒன்றும் பிரஸ்தா பிக்காம லிருந்து விட்டான். நானும் ஞானாம்பாளும் சந்தித்த போது தான், அவளுடைய தாய் தந்தைகள் வருவதாக எனக்கும், என்னுடைய தாய் தந்தைகள் வருவ தாக ஞானாம்பாளுக்கும், வெளி யாயிற்று. ஞானாம்பாள் என்னை நோக்கி: “அந்தப் பண்டிக்கார னுடைய குதூ கலிப்பையும் ஆனந்தத்தையும் யோசிக்கு மிடத்தில், நம்முடைய தாய் தந்தையர் வரவை யன்றி வேறு காரண மும் இருக்க வேண்டும். அதை இப்போது நான் அறி கிறேன்” என்று சொல்லி, அந்தப் பண்டிக்காரனை அழைத்து, அவனைப் பார்த்து, “எல்லாரும் வருகிறதாகச் சொன்னாயே! அவர்களுடன் கூட உன் பெண்சாதியும் வருகிறாளா?” என்று கேட்டாள். அவன், “ஆம் அம்மா! ஆம் அம்மா!” என்று சொல்லி, மறுபடியும் நடனம் செய்யத் தொடங்கினான். அவனுடைய ஆனந்த நடனத் துக்கும், அவன் பாதிச் சமாசாரம் சொல்லிப் பாதியைச் சொல்லாமல் விட்டு விட்டதற்கும், இப்போது தான் காரணம் தெரிந்தது.
அவன் வந்த உடனே காரியத்தைத் தெரிவித் திருப்பா னானால், நானும், தேவராஜப் பிள்ளை முதலான வர்களும், என் தாய் தந்தைமார்களை வழியிலே எதிர் கொண்டு அழைப்பதற்காகப் போயிருப்போம். அவன் காரியத்தைச் சொல்லாமற் கால விளம்பனம் செய்த படியால், நாங்கள் எதிர்கொண்டு போக அவகாசம் இல் லாமற் போய்விட்டது. பிறகு, சற்று நேரத்துக்குள், அநே கம் பண்டிகள் பல்லக்குகள் முதலிய வாகனங்கள் வருகிற ஓசை கேட்டு, நாங்கள் வெளியே ஓடினோம். என் தகப்ப னாரும், சம்பந்தி முதலியாரும், இரண்டு குதிரைகள் பூண்ட இரதத்தினின்று கீழே இறங்கினார்கள். உடனே தேவராஜப் பிள்ளை அஞ்சலி யஸ்தராய், அவர்க ளிடம் சென்று, கைலாகு கொடுத்து, அழைத்துக் கொண்டு வந்து, அவர்களைத் தக்க ஆசனங்களில் இருத்தி, உபசரித் தார். அவருடைய பத்தினி முதலிய ஸ்திரீகள் என் தாயார் மாமியார் முதலியோர்களை எதிர்கொண்டு அழைத்து வந்து, மரியாதை செய்தார்கள். நான் என் தாய் தந்தையரைக் கண்டவுடனே, பூமியில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, அவர்களுடைய திருப் பாதங்களை என் கண்ணீராற் கழுவினேன். அவர்கள் ஒவ்வொருவரும் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டு, நெட்டுயிர்ப்புடன் பொருமி அழுது, அவர்களுடைய கண் ணீரால் என்னை ஸ்நானம் செய்வித்தார்கள். என்னு டைய பிரிவின் நிமித்தம், அவர்கள் பாதி உடம்பாய் மெலிந்துபோ யிருந்த படியால் இப்படிப் பட்ட பக்ஷ முள்ள தாய் தந்தைமார்களை விட்டுப் பிரிந்தோமேயென்று, நினைத்து நினைத்து, நெடு நேரம் விம்மி அழுதேன். பிறகு. என் தந்தையார், ஒரு பிரகாரம் அவருடைய பொருமலை அடக்கிக் கொண்டு, தேவராஜப் பிள்ளையைப் பார்த்து, ‘ஐயா! இந்தப் பிள்ளை பிறந்த நாள் முதல் ஒரு நாளாவது நான் பிரிந்திருந்த தில்லை. அப்படிப் பட்ட என்னை இத்தனை நாளாகப் பிரிந்திருக்கும்படி செய்து விட்டான். எங்களுக்குப் பிராணன் இவனே யன்றி, வேறு பிராணன் இல்லை. இவன் பிரிந்த நாள் முதல், நாங்கள் பிராணன் இல்லாத சரீரம்போ லிருந்தோமே யல்லாமல், மற்றப்படி யல்ல. பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்’ என்கிற பழ மொழியை மெய்யாக்கி விட்டான். ஆயினும், இவன் மேலே தோஷம் சொல் வதற்கு இட மில்லை. நான் இவனையும் ஞானாம்பாளையும் நிஷ்காரணமாய்த் தூக்ஷித்து, ஒரு நாளும் சொல்லாத கடும் சொற்களைப் பிரயோகித்த படியால், அவர்கள் எங்களைப் பிரியும்படி நேரிட்டது. என்னுடைய குற்றத்தை இப்போது நன்றாக உணருகிறேன். இனி ஒருக்காலும் இவனையும் ஞானாம்பாளையும் நான் தூஷிக்கிற தில்லை யென்று, உங்கள் முன்பாக நான் பிரமாண பூர்வ மாகச் சொல்லுகிறேன். இவனும் என்னை ஒரு நாளும் பிரிகிற தில்லை யென்று பிரமாணம் செய்ய வேண்டும்” என்றார். பக்ஷம் நிறைந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட வுடனே, நான் மனம் உருகி, என் தகப்பனார் பாதத்தில் விழுந்து, “ஐயா! உங்களுக்குச் சொல்லாமல் வெளிப்பட்டது, என் மேலே குற்றமே யன்றி, உங்கள் மேலே அணு வளவும் குற்ற மில்லை. நீங்கள் எனக்குக் செய்த எண்ணிறந்த உபகாரங்களுக்குப் பிரதியாக, என் னுடைய தேகத்தை உங்களுக்குச் செருப்பாய்த் தைத்துப் போட்டாலும் தகும். இனி ஒரு நாளும் உங்களுடைய உத்தர வில்லாமல் உங்களைப் பிரிகிற தில்லை யென்று நான் நிச்சயமாகச் சொல்லுகிறேன்” என்றேன். இந்தச் சமயத்தில், சம்பந்தி முதலியாரும் வந்து கலந்து காண்டார் அவர் என்னை ஆலிங்கனம் செய்து கொண்டு, நெடுநேரம் என்னை விடாமற் பெருமினார். என்னை விட்டு விட்டால், நான் மறுபடியும் அவருடைய மகளை அழைத்துக் கொண்டு, தேசாந்தரம் போய் விடுவே னென்று பயந்து, அவர் பிடித்த பிடியை விடாமல், என்னை ஆலிங் களம் செய்ததாகத் தோன்றிற்று. கடைசியாக, அவருடைய ஆலிங்கனமும் நின்றது; மூச்சுத் திணறலும் அடங்கிற்று.
பிறகு, என் தகப்பனாரும், மாமனாரும் தேவராஜப் பிள்ளையை நோக்கி, ஐயா! எங்கள் பிள்ளைகள் முகம் அறியாத தேசத்திலே போய், என்ன துன்பம் படுகிறார் களோ வென்று, நாங்கள் சிந்தாக் கிராந்தர்களா யிருந் தோம். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல, அவர்கள் உங்களிடத்தில் வந்து சேர்ந்திருக்கிற சமாசாரம் தெரிந்த பிறகுதான்,எங்களுக்கு ஆறுதல் உண்டாயிற்று. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெற்றது போல், உங்களிடத்தில் வந்து சேர்ந்த பிற்பாடு, அவர்களுக்கு என்ன குறைவு இருக்கினறது? ஆனால், அவர்கள் வெளிப்பட்ட பிறகு, எங்களுடைய கிருகங்கள் தாமரை யில்லாத தடாகம் போலவும், சந்திர னில்லாத இரவு போலவும், சூரிய னில்லாத ஆகாயம் போலவும், இருள் அடைந்திருக்கின்றன ஆகையால், அவர்களை நாங்கள் சீக்கிரத்தில் அழைத்துக் கொண்டு போகும்படி, தாங்கள் உத்தரவு கொடுக்க வேண்டும். கனகசபைக்குக் கலியாணம் நடக்கும்போது, நாங்கள் அகத்தியம் வருகிறோம். அவனுடைய கலியா ணத்தை நிறைவேற்றாமல், ஏன் தாமதம் செய்கிறீர்கள்?” என்று வினவ, தேவராஜப் பிள்ளை சொல்லுகிறார்:-
“கனகசபை கலியாணத்தை எவ்வளவு சீக்கிரத்தில் முடிக்க வேண்டு மென்று நான் விரும்புகிறேனோ, அவ்வள வுக்கு அது பிந்திப் போகின்றது. பாளையப்பட்டுச் சம்பிர தாயம் என்ன வென்றால், எங்களுக்குள் கலியாணம் நடக் கிறதற்கு முன், கலெக்டர், ரிவினியூ போர்ட் முதலான அதிகாரஸ்தர்களுக்கு எழுதி, உத்தரவு பெற்றுக் கொண்டு, கலியாணம் செய்கிறது வழக்கம். நான் அந்த அதிகாரஸ் தர்களுக்குப் பல மனுக்கள் அனுப்பியும், யாதொரு மறு மொழியும் வர வில்லை. அந்தக் கலெக்டர் கச்சேரி சிரஸ்த தார் கேட்டுக்கொண்டபடி, என் தங்கை மகளைத் தனக்குக் கலியாணம் செய்து கொடுக்க வில்லை யென்கிற அகங் காரத்தினால், கனகசபை கலியாணம் நிறைவேறாத படி, அவன் ஏதேதோ விகற்பங்கள் செய்து வருகிறான். அவனுடைய துர்ப் போதனைகளுக்குச் செவி கொடுத்து, கலெக்டர் என்னுடைய பாளையப்பட்டை ஜப்தியில் வைக்க வேண்டிய முயற்சிகள் செய்கிறார். நான் ஜப்தி செய்யக் கூடா தென்பதற் குள்ள நியாயங்களைக் கண்டு, கவர்ன் மென்றா ரவர்களுக்கு விண்ணப்பம் அனுப்பி யிருக்கிறேன். அதற்கு அனுகூலமான மறுமொழி கிடைக்குமென்று, தினந் தோறும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கனகசபை எனக்குப் பிள்ளை யல்ல வென்றும், கவர்ன்மென்றாரை வஞ்சிக்கிறதற் காக நான் அவனைப் பிள்ளை போல் பாவிப்ப தாகவும், அந்தச் சிரஸ்ததார் கலெக்டர் முதலான அதிகாரி களுக்குப் போதித்து வருகிறான். என் தம்பி செய்த மாறு பாடு, இவ்வளவு பிரமாதமாய் வந்து விளைந்திருக்கிறது. ஆயினும் சத்தியத்தை அசத்தியம் வெல்லுமா? புண்ணியத் தைப் பாவம் ஜயிக்குமா? சுத்த நிர்தோஷியான என்னைக் கடவுள் கைவிடுவாரா? எப்படியும் சில தினத்துக்குள் கனக சபையின் கலியாணத்துக்கு உத்தரவு வருமென்று நிச்சய மாக நம்பி யிருக்கிறேன். அதுவரையும் தாங்களிருந்து, அந்தக் கலியாணத்தைச் சிறப்பிக்க வேண்டு மென்று பிராத் திக்கிறேன்” என்றார். அந்தப் பிரகாரம், என் தகப்பனாரும். மாமனாரும் சம்மதித்து, பயணத்தை நிறுத்தினார்கள். அவர் களுக்கு நடந்த உபசாரங்களும் மரியாதைகளும் அரசர் களுக்குக்கூட நடவா. போக பூமியில் வசிப்பவர்கள் போல. நாங்கள் எங்களுடைய ஊரையும் கிருகங்களையும் சுத்தமாய் மறந்து விட்டோம்.
இந்த அதிகாரத்தின் துவக்கத்திலே சொல்லிய படி, என் தாய் தந்தையர் வரவைப் பற்றி முந்தி வந்து சமா சாரம் தெரிவித்த அந்தப் பண்டிக்காரன், மறுபடியும் என்னிடத்தில் வந்து, “ஐயா! நான் சந்தோஷ சமாச் சாரம் தெரிவித்ததற்காக, நீங்கள் ஒரு வெகுமானமும் செய்ய வில்லையே. இப்போது நாள் கேட்கிறபடி உத்தரவு செய்ய வேண்டும்” என்று என் காலில் விழுந்து வணங்கினான். “நீ கேட்கிற காரியம் கிரமமாயிருந்தால், அந்தப் படி செய்கிறேன். அது இன்னதென்று சொல்லு” என்றேன். அவன், “அது கிரமமா யிருந் தாலும், அக்கிரமமா யிருந்தாலும், அகத்தியம் செய்ய வேண்டும்” என்றான். நான் அவனைப் பார்த்து, “யுக்தா யுக்தம் பாராமல், ஒரு காரியத்தையும் முந்தி வாக்குத் தத்தம் செய்யக் கூடாது. அலெக்சான்றர் மகாராஜனிடத் தில் ஒருவன் வந்து, ‘மகாராஜாவே! நீங்கள் யார் என்ன கேட்டாலும், ஆக்ஷேபியாமற் கொடுக்கிறீர்க ளென்கிற பிரக்கியாதி பெற்றிருக்கிறீர்கள்; எனக்கு ஒரு காசு கொடுக்க வேண்டும்’ என்று கேட்டான். உடனே அந்த அரசர், ‘அவ்வளவு அற்பப் பொருளைக் கொடுப்பது, என் னுடைய அந்தஸ்துக்குத் தகாது’ என்றார். அவன், ‘அப் படியானால் எனக்கு ஒரு இராஜ்யம் கொடுங்கள்!’ என் றான். அவர் அவனைப்பார்த்து, ‘அவ்வளவு பெரிய காரியத்தைக் கேட்பது உன்னுடைய அந்தஸ்துக்குத் தகாது” என்றார். அப்படிப் போல, உன்னுடைய அந்தஸ்துக்கும் என்னுடைய அந்தஸ்துக்கும் தக்க காரியத்தை நீ கேட் டுக்கொண்டால் செய்கிறேன்’ என்றேன் அவன் என்னை நோக்கிச் சொல்கிறான்:- “நான் உட்கார்ந் திருக்கும் போதே தூங்கி விழுகிறே னென்று அடிக்கடி என்னைக் கோபிக்கிறீர்கள்; தூக்கத்தை யடக்க என்னாலே சக்கியப் படவில்லை. நான் சந்தோஷ சமாசாரம் கொண்டு வந்த தற்காக, நான் கேட்கும் வெகுமானம் ஏதென்றால். நான் தூங்கி விழும்படி யாக உத்தரவு கொடுக்க வேண்டும்” என் றான். இதைக் கேட்ட வுடனே, எனக்கும், அப்போது கூட விருந்த தேவராஜப் பிள்ளை முதலானவர்களுக்கும் பெரு நகைப்பு வந்து விட்டது. தேவராஜப் பிள்ளை என் ளைப் பார்த்து, “உங்கள் பண்டிக்கார னுடைய பிரார்த் தனையானது, நான் வாசித்த ஒரு கதையை எனக்கு நினைப் பூட்டுகின்றது. அஃதென்ன வெனில், ஒரு அரசனுக்கு ஷ்டனாயிருந்த ஒரு கல்விமான், அடிக்கடி தன்னுடைய தாடியைத் தடவுவதும், அதில் மயிர் பிடுங்குவதும், வழக்கமா யிருந்தது.அதை ஒரு நாள் அரசன் கண்டு, அந்த வித்துவானைப் பார்த்து, ‘இனிமேல் நீ தாடியில் மயிர் பிடுங்கினால், உன்னைத் தண்டிப்பேன்’ என்று உத்தரவு கொடுத்தான். அந்த உத்தரவு வித்துவானுக்குப் பெரிய பிராண சங்கடமா யிருந்தது. சில தினங்களுக்குப் பின்பு, அந்த அரசனுக்கு அந்தக் கல்விமான் ஒரு பெரிய உபகாரம் செய்த படியால், அரசனுக்குச் சந்தோஷ முண் டாகி, அவனைப் பார்த்து, ‘நீ என்ன வெகுமதி கேட்டா லும் கொடுக்கச் சித்தமா யிருக்கிறோம்.நீ வேண்டிய யதைக் கேள்’ என்றான். உடனே அந்த வித்துவான். நான் முன் போல், தாடியில் மயிர் பிடுங்க உத்தரவு கொடுக்க வேண்டும். இதைத் தவிர வேறு சம்மானம் வேண்டாம்’ என்றான். அரசன் சிரித்துக் கொண்டு, அந் தப் படி உத்தரவு கொடுத்தான். அப்படியே, நீங்களும் உங்களுடைய பண்டிக்காரன் தூங்கி விழும் படி உத்தரவு கொடுக்க வேண்டும்” என்று தேவராஜப் பிள்ளை, அவ னுக்குப் பரிந்து பேசினார். அந்தப் படி, நானும் உத்தரவு கொடுத்தேன். அவனும் தூங்கி விழ ஆரம்பித்தான்.
28-ஆம் அதிகாரம்
சகோதர பக்ஷம்-நல்ல சகோதரனும். கெட்ட சகோதரனும்
தேவராஜப் பிள்ளை யினுடைய பாளையப்பட்டின் எல் லைக் குள்ளாக என்ன குற்றம் நடந்தாலும், அதை விசாரித்துத் தீர்மானிக்கிற அதிகாரம், கவர்மெண்டாரால் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் ஒரு நாள் அதிகாலையில், ஏதோ சில விசாரணை செய்வதற்காக வெளியே போனவர், சூரியாஸ்தமன காலம் வரையில் வீ டுக்கு வர வில்லை. அவர் திரும்பி வந்த வுடனே, எங்க ளைப் பார்த்து, “பெரும் துயரத்துக் குரிய சில சங்கதிகள் இன்று நடந்தன; அவைகளை நினைக்கும் போது எனக்கு மயிர் கூச்சிடுகின்றது; மனம் உருகுகின்றது; கண்ணீர் பெருகுகின்றது. அந்தச் சங்கதிகளைச் சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று சொல்லத் தொடங்கினார்.
”கும்பகோணத்தில் வைசியர் குலத்திலே, இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள்.அவர்களுக்குப் போதுமான பூஸ்திதிகளும், நிதி, நிக்ஷேபம்,நகை, பாத்திர முதலிய ஜங்கமங்களும் இருந்தன. அவர்களில் மூத்தவன் பொய், வஞ்சகம், பேராசை முதலிய துர்க்குண புஞ்சமாயும், இளையவன் சற்குண சம்பன்னனாயு மிருந்தார்கள். அவர்களுடைய தகப்பன் லோகாந்தரம் சென்ற பிறகு, மூத்தவனே குடும்ப வியாபகனாய், மேல் விசாரணை செய்து வந்த படியால், சகல ஸ்திதிகளும், கணக்குகளும் அவன் கைவச மாகவே இருந்தன. இளையவன், தமையனே கதி யென்று நம்பி யிருந்த படியால், தங்களுக்கு இவ்வளவு ஆஸ்தி யென்பதும், இன்னின்ன ஆஸ்தி யென் யதுமே, இளையவனுக்குப் பரிச்சேதந் தெரியாது. இளைய வனுக்குக் கலியாணப் பருவம் வந்து வெகுநா ளாகியும், அவனுக்குக் கலியாணம் செய்விக்காமல், மூத்தவன் காலம் கடத்தி வந்தான். அவர்களுடைய தாயுடன் பிறந்த அம்மானுக்கு, இந்த ஊர் வாசஸ்தல மான படியால். அவன் மேற்படி இளைய பிள்ளையை இந்த ஊருக்கு வரவழைத்து, தன்னுடைய மகளைக் கன்னிகா தானம் செய்வித்து, மகளையும் மருமகளையும் கும்பகோணத்துக்கு அனுப்பினான். அவர்களுக்கு அன்ன வஸ்திரம் கொடாமல், மூத்தவன் அநாதரவு செய்த படியால், இளையவன், தமை யனைப் பார்த்து, ‘அண்ணா! குடும்ப ஸ்திதிகளில் ஏதாவது தங்களுக்கு இஷ்டமானதைக் கொடுத்தால், நான் எங்கே யாயினும் போய்ப் பிழைத்துப் போகிறேன்; தேவரீர் கிருபை செய்ய வேண்டும்’ என்று மிகுந்த பய பக்தியுடன் இரந்து மன்றாடினான். அந்த மன்றாட்டை யெல்லாம் முத்தவன் ஆற்றிற் கரைத்த புளியாக்கி, இளையவனையும் அவன் மனைவியையும் புறக்கணித்துத் தள்ளி விட்டான். அவர்கள் இருவரும், பட்டினியும் பசியு மாக இந்த ஊருக்கு வந்து விட்டார்கள். தமையன் அவ்வளவு கொடுமை செய்தும், அவன் மேலே பாக வியாஜியம் செய்ய, இளையவன் அநிஷ்டனா யிருந்தான். ஆயினும், அவனுடைய மாமனார் முயற்சியினாலே, கும்பகோணத்தில் பாக வழக்குச் செய்யப் பட்டது. மூத்தவன், தன் கையி லிருந்த திரவியங்களையெல்லாம், பலபேர் கையில் இரகசியமாய்க் கொடுத்து விட்டு, தன்னிடத்தில் பூஸ்திதிகளைத் தவிர, வேறொரு பொருளும் கிடையா தென்றும், பூஸ்திதி கள் பல பெயர்களிடத்தில் வாங்கப் பட்ட கடன்களுக்கு உத்தரவாதமா யிருப்பதாகவும், தனக்கு ஒருவரும் கடன் கொடுக்க வேண்டிய தில்லை என்றும், எதிர் வழக் காடி அந்தப் படி பொய்க் கணக்குகளைக் கொண்டும், தப்பு சாக்ஷிகளைக் கொண்டும் நிரூபணம் செய்தான். அன்றியும் தன் தம்பியி னுடைய சாக்ஷிகளைப் பொருள் மூலமாகக் கலைத்து, அவர்கள் தன் தம்பி பக்ஷத்தில் சாக்ஷி சொல்லாத படி அழிம்பு செய்த படியால், தம்பி வழக்கு அபஜயமாய்ப் போய் விட்டது.
இவ்வண்ணம் இளையவன் பிதுரார்ஜிதத்தை இழந்து, பரதேசிக் கோலமாய், மாமனார் வீட்டில் வந்து சேர்த்தான். மாமனா ரிடத்தில் அவன் சில தொகை கடன் வாங்கி, சத்தியம் தவறாமல் வர்த்தகம் செய்த படியால், அவனுைைய யோக்கியதை எங்கும் பரிமளித்தது. புஷ்பத்தை நாடி வரும் வண்டுகள் போல, சகலரும் அவனி டத்திலே கொள்ளல் விற்றல் செய்யவும், பரபத்தியங்கள் பண்ணவும் ஆரம்பித்த படியால், அவனுக்குச் செல்வம் மோகமாய்ப் பெருகிப் பெரிய திரவியவான் ஆனான். இளையவளை அவனுடைய தர்மம் தலை காத்தது போல். மூத்தவனை அவனுடைய மோசமே நாசம் செய்து விட்டது. எப்படி யெனில், அவன் தம்பிக்குப் பயந்து கொண்டு யாரிடத்தில் பொருள்களை அந்தரங்கமாய்க் கொடுத்து வைத்தானோ, அவர்கள் எல்லாரும் அந்தத் தளங்களை அபகரித்துக் கொண்டு, அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார்கள். தனக்கு யாதொரு சொத்தும் கிடையா தென்று அவனே நியாய சபையார் அறியச் சொல்லிவிட்ட படியால், அந்த நம்பிக்கைத் துரோகிகள் மேல் அவன் வழக்குத் தொடர மார்க்கம் இல்லாமற் போய் விட்டது. பூஸ்திதிகள் பல பெயர்களு டைய கடன்களுக்குப் பாத்தியமா யிருப்பதாக அவளே தன் தம்பி வழக்கில் ஒப்புச் கொண்ட படியால், அந்தப் பொய்யான கடன் காரர்க ளெல்லாரும், தங்களுக்கு மெய்யாகக் கடன் வர வேண்டியது போலத் துர்வழக்குகள் செய்து, அந்தப் பூஸ்திதிகளை யெல்லாம் ஏலம் போட்டுக் கைவசப் படுத்திக் கொண்டார்கள். அவனுக்கு வர வேண்டிய கடன்களை யெல்லாம் நியாயஸ்தலத்தில் மறைத்த படியால், கடன் கொடுக்க வேண்டியவர்க ளெல் லாரும் அவனை மோசம் செய்து விட்டார்கள். அவனும், அவர்கள் மேல் வழக்கிடக் கூடாமற் போய் விட்டது. இவ்வாறு கைப் பொருள்களை யெல்லாம் இழந்து, கன தரித்திரனாய்ப் போய் விட்டான். மூத்தவன் வீட்டில். மூத்தவளே வந்து குடியிருக்கத் தலைப்பட்டதால், பிக்ஷைத் தொழிலைத் தவிர, ஜீவனத்துக்கு வேறு வழி யில்லாமற் போய் விட்டது. அவன் கனிஷ்டத் துரோகி யென்று ஊரெங்கும் தெரியு மான படியால், அவனுக்கு இரங்கு வாரு மில்லை; பிக்ஷை யிடுவாரும் இல்லை. அவன் தம்பி யிடத்துக்குப் போகலா மென்றால், அவனுடைய மனச் சாக்ஷி இடம் கொடுக்கவில்லை.
மூத்தவனும் அவன் பெண் சாதி பிள்ளைகளும் கஷ்டப் படுகிறதை இளையவன் கேள்வி யுற்று, அவர்களைத் தன்னி டத்துக்கு வரும்படி அவன் கடிதம் அனுப்பினது மல்லா மல், அவர்களுடைய வழிச் செலவுக் காகப் பணமும் அனுப்பினான். உடனே, மூத்தவன் சமுசார சகிதமாய்ப் புறப்பட்டுத் தம்பியிடம் வந்து சேர்ந்தான். தம்பியைப் பார்த்த உடனே, தமையன் கட்டிக் கொண்டு, ‘தம்பி! பிற ருக்கு வெட்டின குழி தனக்கே வந்து லபித்தது போல், உனக்கு நான் செய்த தீங்கு எனக்கே வந்து லபித்து. விட்டது. உன்னுடைய பாக சொத்தை உனக்கு நான் கொடுத் திருப்பே னானால், மற்ற ஸ்திதிகளை வைத்துக் கொண்டு, நான் க்ஷேமமாய் வாழ்ந்திருப்பேன். உன்னு டைய பாகத்தை வஞ்சிக்க நினைத்து, சொத்துக்களை யெல் லாம் நான் பராதீனம் செய்த படியால், அந்தப் பரா தீனமே நிலைத்து, என்னுடைய ஸ்வாதீனம் மாறிப் போய் விட்டது. ஆடவன் செத்த பிறகு, அறுதலிக்குப் புத்தி வந்தது என்பது போல், சொத்துக்க ளெல்லாம் போன பிறகு, எனக்குப் புத்தி வந்தது அப்பா!’ என்று சொல்லி அழுதான். தமையன் செய்த துரோகங்களைத் தம்பி என் ளளவும் நினையாமல், அவனுக்குச் சர்வோபசாரங்களும் செய்து, தாசாதி தாசனாக நடந்தான். ஆனால், அவனு டைய இல்லாள் கொழுந்தனிடத்தில் துன்பப் பட்டவ ளானதால், அவள் தன் புருஷனுக்குத் தெரியாமல், கொழுந்தனைக் காணும் போதெல்லாம் கடுகடுத்துக்கொண்டு வந்தாள்.
சில நாளாயின பின், தமையன் ஊருக்குப் போக வேண்டு மென்று உத்தரவு கேட்ட படியால், கனிஷ்டன் தன் பத்தினிக்குத் தெரியாமல், பெட்டியைத் திறந்து. நூறு தங்க நாணயங்களை யெடுத்து, தமையன் கையிற் கொடுத்து, அவற்றை மூலதனமாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்யும் படி யாகவும், இன்னும் வேண்டும் காரியங்களுக்கு எழுதும்படி யாகவும் சொல்லி, தமை யன் பத்தினிக்கும் பிள்ளைகளுக்கும் வஸ்திராபாணங்கள் கொடுத்து, அனுப்பினான். அவர்கள் போன பிறசூ இளையவ னுடைய பெண்சாதி பெட்டியைத் திறந்து பார்க்க, தங்க மோகராக்களைக் காணாமையினால். புருஷன் தன் தமையனுக்குக் கொடுத்திருப்பா னென்று நிச்சயித்துக் கொண்டு, அவள் கோபா சன்னதத் துடன் புருஷனுக்குத் தெரியாமல் வெளியே புறப்பட்டு, கொழுந்தனாரைத் தொடர்ந்து கொண்டு ஓடினாள். கொழுந்தலும் அவன் பத்தினி முதலானவர்களும் சிறிது தூரம் போய், வெயிலுக் காக ஒரு பாழ் மண்டபத்தில் உட்கார்ந் திருந்தார்கள். அவள் கொழுந்தனைக் கண்ட வுடனே, அவன் செய்த கொடுமைகளை யெல்லாம் ஒவ் வொன்றாகச் சொல்லிக் காட்டி, அவனை வாயில் வந்த படி ஏசினாள். அவன் அந்தத் தூஷணங்களைச் சகிக்க மாட்டாதவனாய், அந்தக் கொடியவளைப் பார்த்து, ‘இந்தப் பணத்துக் காகத் தானே இவ்வளவு பேச்சும் பேசுகிறாய்? இந்தா உன் பணம்’ என்று சொல்லி, அவன் கையிலிருந்த மோகராப் பையை அவள் முன்பாக எறிந்து விட்டான். அவள் நல்ல காரியம் என்று மோகராப் பையை எடுத்துக் கொண்டு போய் விட்டாள். அவள் சொன்ன தூஷணங் களும், தன்னுடைய சொந்த மனச் சாஷியும், இனி சாப்பாட்டுக்கு என்ன செய்வோ மென்கிற ஏக்கமும் கூடி அவனுக்குச் சித்த விகாரத்தை உண்டு பண்ணின படியால், அவன் தன் பெண்சாதி பிள்ளைகளையும் கொன்று. தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளுகிற தென்று தனக் குள்ளே தீர்மானித்துக் கொண்டான். அந்தச் சமயத்தில், அவனுடைய பெண்சாதி பிள்ளை கள் தாகத்துக்குத் தண்ணீர் வேண்டும் என்று சொன்ன படியால், அவன் ஜலம் கொண்டு வருகிறேன் என்று சொல்லி, குளத்துக்குப் போய், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு, அதில் விஷத்தைக் கலந்து, தன்னுடைய பெண்சாதிக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்து, தானும் விஷ பான பண்ணினான். சற்று நேரத்துக்குள் விஷம் தலை மண்டை கொண்டு, அவர்கள் கால்மாடு தலைமாடாய்க் கீழே விழுந்து, இறந்து போய் விட்டார்கள்.
மூத்தவன் எறிந்து விட்ட மோகாரப் பையை எடுத்துக் கொண்டு, இளையவன் பெண்சாதி வீட்டிற்குள் வந்து நுழைந்தான். அவள் கையில் மோகாரப் பையைக் கண்டவுடனே, அவளுடைய நாயகனுக்குக் கோபம் உண் டாகி, அவளைத் திட்டி,அடித்து, அந்தப் பையை பிடுங்கிக் கொண்டு, அதைத் தமைய னிடத்தில் மறுபடியும் கொடுப்பதற் காக ஓடினான். தமையன் முதலானவர்கள், வெயிலுக்காகப் பாழ் மண்டபத்தில் நுழைந்ததாக, இளை யவன் வழியிலே கேள்வி யுற்று, அவனும் அந்த பாழ் மண்டபத்துக்குப் போனான். அங்கே எல்லாரும் இறந்து கிடக்கிறதைக் கண்டு, அவர்கள் மேலே விழுந்து, கோகோ வென்று கத்தி, அழுதான், பிறகு, அவர்கள் சமீபத்தி லிருந்த விஷஜல பாத்திரத்தைக் கண்டு, அவர்கள் விஷ பானம் பண்ணி இறந்து போன தாக அறிந்து கொண்டு, அதில் மிஞ்சி யிருந்த விஷ ஜலத்தைத் தானும் குடித்து. மரணத்துக்கு ஆயத்தமாய், தமைய னுடைய பிரேதத்தைக் கட்டிக் கொண்டு, படுத்துக்கொண்டான். அவன் விஷ நீர் அருந்தினது சில வழிப்போக்கர்களுக்குத் தெரிந்து, அவர்கள் என்னிடத்தில் ஓடி வந்து, அறிக்கை யிட்டார்கள். நான் உடனே வைத்தியர்களை அழைத்துக் கொண்டு ஓடினேன். மூத்தவனும் அவனுடைய பெண்சாதி பிள்ளைகளும் இறந்து வெகு நேரம் ஆகி விட்டதால், அவர்களுக்கு வைத்தியம் செய்வது நிஷ்பிர யோசன மென்று வைத்தியர்கள் தெரிவித்தார்கள். இளை யவன் எல்லாருக்கும் பின்பு விஷம் உண்ட படியால், அவன் இறவாமற் குற்றுயிரா யிருந்தான். அவனுக்கு வைத்தியர்கள் ஒளஷதப் பிரயோகம் செய்து, அவன் உண்ட விஷத்தை வெளிப்படுத்தி, அவனைப் பிழைப்பித் தார்கள். அவன் எழுந்த உடனே, தன் தமையன் முத லானவர்களைப் பிழைப்பிக்கும்படி வைத்தியர்களை வேண் டிக் கொண்டான். அவர்கள் பிழைப்பது சாத்தியம் அல்ல வென்று அவனுக்குத் தெரிந்த வுடனே, அவன் விழுந்து புரண்டு அழுத பரிதாபத்தை ஒருவரும் கண்கொண்டு பார்க்கக் கூடாது. அவனுடைய தமையனும் மனைவியும் குழந்தைகளும் மாண்டு கிடப்பதையும், அவர்கள் மேலே அவன் விழுந்து அலறி அழுவதையும், பாத்தவர்க ளுடைய மனம் கல்லா யிருந்தாலும் கரையாம விருக்குமா? இரும்பா யிருந்தாலும் இளகாம லிருக்குமா? இளையவ னுடைய மனைவியோ என்றால், தன்னுடைய தௌஷ்யத்தினால் இவ்வளவு பிரமாதம் வந்து விளைந்த தென்று தெரிந்த வுடனே, அவள் மதி மயங்கிக் கீழே விழுந்து, இன்னமும் சித்த ஸ்வாதீனம் இல்லாமல் இருக் கிறாள். மூத்தவன் ஆதியில் தன் தம்பியை மோசம் செய் யாமல், அவனுடைய பாகத்தைக் கிரமப் படி கொடுத்தி ருப்பா னானால், மூத்தவனுக்கு இப்படிப் பட்ட கதி வாய்த் திரா தென்பது உறுதிதான். என்றைக் கிருந்தாலும், துன்மார்க்கர்களைக் கடவுள் இந்த உலகத்திலும் தண்டிக் கிறாரென்பதற்கு, இந்தச் சரித்திரமே போது மான சாக்ஷி யமா யிருக்கிறது. மேற்படி சங்கதிகளை யெல்லாம் நான் லாங்கிஷமாய் விசாரணை செய்து, இறந்து போனவர் களை யெல்லாம் தகனம் செய்யும்படி உத்தரவு கொடுத்து வர, இந் நேரம் சென்றது” என்றார்.
தேவராஜப் பிள்ளை அந்தச் சரித்திரத்தைச் சொல்லி முடித்த வுடனே, என் தகப்பனார் என்னைப் பார்த்து, “நீ கல்வி பயிலும் போது, இரண்டு நல்ல சகோதரர்க ளுடைய சரித்திரத்தை நீ வாசிக்கக் கேட்டிருக்கிறேன். அந்தச் சரித்திரத்தை இப்போது சொல்லு” என்று உத்த ரவு கொடுத்தார்கள். தேவராஜப் பிள்ளையும் அதைக் கேட்க விரும்பின படியால், நான் சொல்லத் தொடங்கினேன்.
“பதினாறாம் நூற்றாண்டில், போர்த்துகல் (Portugal) தேசத்தி லிருந்து கோவைப் (Goa) பட்டணத்துக்குப் புறப்பட்டு வந்த ஒரு கப்பலில், ஆயிரத்து இருநூறு. ஜனங்கள் ஏறி யிருந்தார்கள். அந்தக் கப்பல் ஒரு மலை யில் மோதி உடைந்து போனதால், இருபது பெயர்கள் தவிர மற்றவர்கள் எல்லாரும் சமுத்திரத்தில் முழுகி இறந்து போனார்கள். அந்த இருபது ஜனங்களும் ஒரு சிறு படவி லேறித் தப்பிக் கொண்டார்கள். அவர்களுக் ப் போதுமான புசிகரணங்கள் இல்லாமல் இருந்த படி யால், திருவுளச் சீட்டுப் போட்டு, தங்களிற் சிலரைக் கடலில் தள்ளிவிடுகிற தென்று தீர்மானித்துக் கொண்டார் கள். அவர்களுக் குள்ளாக இரண்டு சகோதரர்கள் இருந் தார்கள். அவர்களிற் மூத்தவனைக் கடலிலே தள்ளும்படி திருவுளச் சீட்டு விழுந்தது. அவனை இளையவன் மிகுந்த அன்போடு கட்டித் தழுவி அழுது கொண்டு, மற்றவர் களைப் பார்த்துச் சொல்லுகிறான்: ‘என் தமையனுக்குப் பெண்சாதியும், பிள்ளைகளும், மூன்று சகோதரிகளும் இருக்கிறார்கள். அவர்களைப் போஷிக்கிறதற்கு என் தமையனாரைத் தவிர வேறு கதி யில்லை; நானோ ஏகாங்கியா யிருக்கிறேன். நான் இறந்து போவதினால் ஒருவருக்கும் நஷ்டமில்லை. ஆகையால், என்னுடைய ஜேஷ்டருக்குப் பநிலாய் என்னைச் சமுத்திரத்தில் தள்ள வேண்டும். என்று பிரார்த்தித்தான். தம்பியி னுடைய பக்ஷ மிகுதி யைக் கண்டு, தமையன் ஆச்சரியம் அடைந்து, ‘இப்படிப் பட்ட உத்தம சகோதரனை எனக்காக இறக்கும்படி செய் வது அநீதி யானதால், என்னையே தள்ளிவிட வேண்டும்’ என்று மன்றாடினான். மூத்தவனைக் கடலில் தள்ளாத படி இளையவன் அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அவன் எவ்வளவு பலமாகத் தமையனைக் கட்டிக் கொண்டா னென்றால், அவர்கள் இருவரையும் வெவ்வே றாய்ப் பிரிப்பது அசாத்தியமா யிருந்தது. இறுதியில், இளையவனுடைய தொந்தரவைப் பொறுக்க மாட்டாமல், அவனுடைய இஷ்டப் படி, அவனைச் சமுத்திரத்தில் தள்ளி விட்டார்கள். அவன் நல்ல நீச்சுக்கார னானதால், அவன் நீஞ்சிக் கொண்டு வந்து, அந்தப் படவின் சுக்கானை ஒரு கையாலே பிடித்தான். அந்தக் கையை ஒரு மாலுமி வாளாலே வெட்டி விட்டான். அவன் உடனே சமுத்திரத் தில் விழுந்து எழுந்து, படவை மற்றொரு கையாற் பிடித்தான். அந்தக் கையையும், அந்த பாவிப் பயல் தறித்து விட்டான். அவன் இரண்டு கைகளையும் இழந்தும் தண்ணீரில் முழுகாமல், இரத்தப் பிரவாகத்துடன் காலினால் நீந்திக் கொண்டு, தண்ணீரில் நிற்கிற பரிதாப மான காட்சியும், அவனுடைய சகோதர பக்ஷமும், படவி லிருந்தவர்களுக்கு இரக்கத்தை உண்டு பண்ணின படி யால், அவர்கள், ‘இந்த ஒரு பிராணனை இரஷிப்பதினால் நமக்கு என்ன நஷ்டம் சம்பவிக்கக் கூடும்?’ என்று சொல்லி, அவனைப் படவின் மேல் ஏற்றிக் கொண்டு, அவனுடைய காயங்களைக் கட்டி, சொஸ்தப் படுத்தினார்கள். அவர்கள் சில நாள் யாத்திரை செய்து, தெய்வ சகாயத்தினால் குறித்த இடத்துக்குச் சிந்தாத்திரையாய்ப் போய்ச் சேர்ந்தார்கள்” என்றேன்.
29-ஆம் அதிகாரம்
படித்துக் கெட்டவன்
ஒரு நாள், தேவராஜப்பிள்ளை,என்னையும் கனகசபை யையும் பார்த்து, “இங்கிலீஷில் சகல சாஸ்திர பண்டித ராகிய பேக்கன் (Bacon) என்பவர், ‘அற்பப் படிப்பு ஆபத்து’ என்று சொல்லுகிறார். அதற்கு அநுகுணமாக, எனக்குத் தெரிந்த ஒரு அற்பப் படிப்பாளியின் சரித்திர ரத்தைக் கேளுங்கள்” என்று செப்ப லுற்றார்.
சென்னை நகரத்தில், சுப்பையன் என்று பெயர் கொண்ட ஒரு ஏழைப் பிராமணன் இருந்தான். அவன் ஒரு தர்ம சத்திரத்தில் குடி யிருந்து கொண்டு, அதில் வந்து இறங்குகிற வழிப்போக்கர்களுக்குக் சாதம் சமையல் பண்ணி விற்று, கால ஷேபம் செய்து வந்தான். அவனு டைய பிள்ளை அளந்தையனைத் தர்மப் பள்ளிக் கூடங்களில் விட்டு, தமிழும் இங்கிலீஷும் அப்பியசிக்கும் படி செய்வித்தான். அனந்தையன் இங்கிலீஷில் அதிக கவன முள்ளவனாய், அந்தப் பாஷையைக் கூடிய வரையில் எழுத வும் பேசவும் கற்றுக் கொண்டு, பாடசாலையை விட்டு விட்டான். இங்கிலீஷில் அவனுக்குத் தெரிந்த அற்பப் படிப் பைக் கொண்டு, அந்தப் பாஷையில் தான் பூரண விற்பத்தி யடைந்து விட்டது போல், அகம்பிரமம் அடைந்தான். தமிழ்ப் பாஷையை அவன் எவ்வளவும் கவனிக்காமையினால், அந்தப் பாஷையின் நெடுங் கணக்குக் கூட அவனுக்குப் பூரணமாய்த் தெரியாது.
தமிழ்ப் பாஷையை வாசிப்பதும் பேசுவதும் தனக்குக் கௌரவக் குறைவாக எண்ணி விட்டான். அவனுடைய தயவு யாருக்காவது வேண்டி யிருந்தால், அவன் இங்கிலீஷில் பூரண வித்வா னென்றும், தமிழில் ஒன்றும் தெரியாதவ னென்றும், யாராவது சொன்னால், அவர்க ளிடத்தில் அத்தியந்த விசுவாசம் வைப்பான். அவனுக்குச் சுதேச பாஷா ஞானம் எப்படி இல்லாமற் போய் விட்டதோ, அப்படியே தேசாபிமானமும் போய் விட்டது. இந்தத் தேசத்தையும் தேசாசாரங்களையும் நிந்திப்பதும், ஐரோப்பாக் (Europe) கண்டத்தைப் புகழ்வதுமே, அவ னுக்கு நித்திய கால க்ஷேபம். அவன் தமிழ்ப் பாஷை பேசுகிற வழக்கத்தைக் கட்டோடே விட்டு விட்டு, எப்போதும் இங்கிலீஷ் பாஷையிலே சம்பாஷிப்பதால், அந்தப் பாஷை தெரியாத அவனுடைய தாய், தந்தை, சுற் றத்தார் முதலானவர்க ளுடைய சல்லாபத்தையும், நேசத் தையும், இழந்து போனான். அவன் அவர்க ளிடத்தில் பேசும் படி யான அகத்தியம் நேரிட்டால், இங்கிலீஷும் தமிழும் தெரிந்து துவிபாஷிகள் மூலமாய்ப் பேசுகிறதே தவிர, அவன் வேறே ஒரு வார்த்தையும் பேசுகிற தில்லை. தொப்பி ஒன்று தவிர, மற்ற விஷயங்களில், ஐரோப்பிய ருடைய நடை, உடை, பாவளைகளை யெல்லாம் அனுசரிக்கத் தலைப்பட்டான். அவனுடன் எப்போதும் இங்கிலீஷ் பேசத் தகுந்த மனுஷர்கள் அகப்படாமையினாலும், இங்கிலீஷ் துரைமார்க ளுடைய சல்லாபம் அவனுக்குக் கிடைப்பது அரிதாகையாலும், அவர்க ளுடைய பரிசார கர்கள், சுயம்பாவிகள், எளிய சட்டைக்காரர்கள் முதலான வர்களுடைய சகவாசமே, அவனுக்கு நிலைத்து விட்டது. அவர்களில் சிலர் தினந்தோறும் பல் விளக்காமையினால், இவனும் பல் விளக்குகிற வழக்கத்தை விட்டு விட்டான. இவர்கள் ஸ்நானம் செய்யாமையினால், இவனும் ஸ்நா னத்தை விட்டுவிட்டான். அவர்கள் சுருட்டுக் குடிக்கிறது. வாயில் புகையிலை போட்டுக் கொள்ளுகிறது. கள்ளு சாராயம் அருந்துகிறது முதலான வழக்கங்களை அனுசரிப் பதால், இவனும் அந்தத் துர் வழக்கங்களை ஆசரிக்கத் தொடங்கினாள். அவர்க ளிடத்தில், துர்ப் பாஷைகளையும் கற்றுக் கொண்டான். அவர் களுடைய ஸ்திரீகள் அந்திய புருஷர்களிடத்தில் சங்கோசம் இல்லாமல் சம்பா ஷிப்பது சகஜ மான படியால், அந்த வழக்கத்தை இவ னுடைய பத்தினி முதலான ஸ்திரீகளுக்குத் தானே பிரயாசைப்பட்டுக் கற்பித்தான். தன்னுடைய இஷ்டர்கள் சந்திக்க வரும் போது, தன்னுடைய பத்தினியைக் கூட வைத்துக் கொண்டு பேட்டி கொடுப்பதும், தான் யாரை யாவது காணப் போகும் பொழுது, ஸ்திரீ சகிதமாய்ப் போய்க் காணுகிறதும், அவனுடைய வழக்கம். அந்த வழக்கத்தை நிறுத்த வேண்டு மென்று அவனுடைய பத்தினி முதலானவர்கள் பிரயாசைப் பட்டும், அவர் களுடைய ஜபம் நடக்க வில்லை.
இங்கிலீஷில் சன்மார்க்க மான புஸ்தகங்கள் எத்தனையோ இருந்தாலும், அவைகளை அனந்தையன் வாங்குகிறதும் இல்லை; படிக்கிறதும் இல்லை. லெக்கி, எல். (Lecky. L.), ஸ்டீபன் (Stephen), பெயின் (Bain), டார்வின் (Darwin), கம்டி, எஸ். (Comte, S.), மில் (Mill), ஹெர்பர்ட் (Herbert), ஸ்பென்ஸர் (Spencer), ஹக்ஸ்லி (Huzley), ஹ்யூம் (Hume), காலின்ஸ் (Collins), டின் டால் (Tyndall), வால்டேர் (Voltaire) முதலான வேத விரோதிகளுடைய கிரந்தங்களை அவன் படித்ததினால், தெய்வம் இல்லை, வேதம் இல்லை, பாப புண்ணியங்கள் இல்லை, நரகம் மோட்சம் இல்லை, உலக சுகமே சுகம் என் கிற சித்தாந்தம் உள்ளவ னானான். மேற் சொல்லிய சமய விரோதிகள், உலகத்துக்கு ஒரு சமயம் அவசியந்தா னென் றும், அப்படி யில்லாத வரையில் அக்கிரமம் நடக்கு மென் றும், ஒப்புக் கொண்டார்கள். அப்படியே வால்டேர் (Voltaire) ஒரு தேவாலயம் கட்டினான். ஹ்யூம் (Hume) சில சமயங்களில் கோவிலுக்குப் போனான். காலின்ஸ் (Collins) தன்னுடைய வேலைக்காரர்கள் தன்னைக் கொலை செய்யாமலும் திருடாமலும் இருக்க வேண்டியதற்காக, அவர்கள் கோயிலுக்குப் போகும்படி கட்டாயம் செய் தான். ஹக்ஸ்லி (Huxley) பைபிள் (Bible) என்னும் சுவி சேஷத்தைப் பள்ளிக் கூடத்தில் பிள்ளைகள் படிக்க வேண்டு மென்று முயற்சி செய்தான். டிண்டால் (Tynd- all) தன்னை யாராவது சமய விரோதி யென்று சொன் னால், சண்டைக்கு வருவான். இவ்வகையாக மேற்படி வித்வான்க ளுடைய நூல்கள் ஒரு வித மாகவும், நடை வேறு வித மாகவும் இருந்தன. ஆனால், அனந்தைய னுடைய வார்த்தையும் நடையும் ஒரே தன்மையா யிருந்தன. தெய்வம் இல்லை, பாப புண்ணியம் இல்லை, யென்கிற சித் தாந்தத்தைத் தனக் குள்ளே வைத்துக்கொள்ளாமல், தன் பெண்சாதி பிள்ளைகள் முதலானவர்களுக்கு உபதேசிக்க வும், தானே துன்மார்க்கங்கள் செய்து அவர்களுக்கு வழி காட்டவும், ஆரம்பித்தான். பணமே தெய்வ மென்றும், அதைச் சம்பாதிக்கிறதற்கு, இரகசியத்தில் எந்த அக்கிரமம் வேண்டு மானாலும் செய்யலா மென்றும், ஆனால் யோக்கியனைப் போல் வேஷம் போடுவது, உத்தியோ கத்தையும் பணத்தையும் சம்பாதிக்கிறதற்கு மார்க்கமா யிருப்பதால், அந்தப் படி செய்ய வேண்டியது அகத்திய மென்று நினைத்து, அவன் வெளி வேஷம் போட்டுக் கொண்டு வந்ததால், அவனுக்கு ஒரு தாலூகா முன் சீப் -உத்தியோகம் கிடைத்தது. அந்த உத்தியோகம் கிடைத்த உடனே, இந்திரப் பட்டம் கிடைத்தது போல். அவன் சுத்தமாய் தன்னை மறந்துவிட்டான். தன்னுடைய எளிய தகப்பனைத் தகப்ப னென்று சொல்லவே அவனுக்குச் சங்கோசம் வந்துவிட்டது. பெரிய பணக்காரர்களைப் பார்த் துப் பெருமூச்சு விட்டு, தான் அவர்களுக்குப் பிள்ளையா யிராமற் போனதற்காக ஓயாமல் மனஸ்தாபப் படுவான். யாராவது ஒரு திரவியந்தனைத் தனக்குப் பிதா வென்று சொல்லிக் கொள்ள அவனுக்குச் சம்மதத்தான். ஆனால் அந்த திரவியந்தர் கேள்விப்பட்டால், சண்டைக்கு வருவா ரென்று பயந்து சும்மா இருந்து விட்டான்.
அனந்தையன் தன் தகப்பனைத் தகப்ப னென்று சொல்வதற்குக் கூட வெட்கப்படுகிறா னென்று பல பெரிய மனுஷர்களுக்குத் தெரியும். அவர்களிற் சிலர் அனந்தை யனைக் கண்டு கொள்வதற் காக அவனுடைய வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வருகிற சமாசாரம் கேள்விப்பட்டு அனந்தையன் எதிர்கொண்டு போய், அவர்களுக்குக் கைலாகு கொடுத்து, அழைத்துக் கொண்டு வந்தான்.அப் போது தெருத் திண்ணையில், அவனுடைய தகப்பனார் சுப்பையர் உட்கார்ந் திருந்தார். அவருடைய முகச் சாய லும், அனந்தனுடைய சாயலும் ஒரே தன்மையா யிருந்தபடியால், அவர் ஆரென்று அந்தப் பெரிய மனுஷர்கள் அனந்தையளை இங்கிலீஷ் பாஷையில் கேட்க, அவன் தன்னுடைய வேலைக்கார னென்று அனந்தையன் இங்கிலீஷில் மறுமொழி சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே போய், அவர்களுக்குத் தக்க மரியாதை செய்து, சம்பாஷிக்கத் துவக்கினான். அவர்கள், இவன் தகப்பளையே வேலைக்கார னென்று சொல்லுகிற னென்று அநுமானித்துக் கொண்டு அவனை அவமானப் படுத்த வேண்டு மென்கிற எண்ணத்துடன், “உம்முடைய தாயையும் தந்தையையும், நாங்கள் யார்க்கக் கூடாதா? அவர்களை நாங்கள் பார்த்துச் தோஷிக்கும் பொருட்டு, அவர்களை அழைத்துக் கொண் வர வேண்டும்’ என்று பிடிவாதம் செய்தார்கள். அனந்தையன் திருடன் போலச் சற்று நேரம் பரக்கப் பரக்க விழித்த பிற்பாடு, “தகப்பனார் வியாதியா யிருக்கிறார்; தாயாரை மட்டும் அழைத்து வருகிறேன்” என்று சொன் னான். உடனே அவர்கள் எழுந்து “உம்முடைய தகப்ப னார் வியாதியா யிருந்தால், அவரை அகத்தியம் நாங்கள் பார்க்க வேண்டும்; அவர்கள் இருக்கிற இடத்தைக் காட் டும்’ என்று அனந்தையனுடைய கையைப் பிடித்து. இழுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அவன் கொலைக் களத்துக்குப் போகிறவன் போல் போகும் போது, அவ னுடைய தாயார் எதிரே வந்தாள். அவளைக் காண்பித்து விட்டால், பிறகு தன் தகப்பனைத் தேட மாட்டார்க ளென்று நினைத்து, இவள் தன் தாயென்று அனந்தை யன் காட்டினாள். உடனே, அவர்கள், “அம்மா, உங்களைப் பார்த்தோம். அக மகிழ்ந்தோம்; உங்கள் பர்த்தாவையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்; அவர் இருக்கிற இடத்தைக் காட்ட வேண்டும்” என்று சொல்ல, அந்த அம்மணி கபடம் இல்லாமல் அவர்களை அழைத்துக்கொண்டு போய், தெருத் திண்ணையி லிருந்த தன் பர்த்தாவைக் காட்டி விட்டாள். உடனே அவர்கள் அளந்தையன் முகத்தைப் பார்த்தார்கள். அனந்தையன் வெட்கத்தினால் பூமாதேவி முகத்தைப் பார்த்தான். அந்தக் கனவான்கள் அனந்தையனைப் பார்த்து,”உமது, தகப்பனாரை வேலைக்கரர னென்று சொன்னீரே! இது தர்மமா?” என்று கேட்டார் கள். இதைக் கேட்ட வுடனே சுப்பையருக்குத் தன் பிள்ளை மேலே பிரமாதமான கோப சன்னதம் உண்டாகி, அந்தக் கனவான்களை நோக்கி, “ஐயா! இந்தப் பயலுக்கு நான் வேலைக்காரன்தான். இவனுடைய தயார் வேலைக்கார னுடன் தேக சம்பந்தப்பட்டு, இவனைப் பெற்றாள். இது உண்மையா? பொய்யா வென்று அவனுடைய தாயா ரையே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று சர மாரியாகக் கடும் சொற்களைப் பிரயோகித்தார். உடனே அனந்தையன், அநந்த லோகத்துக்கே போய் விட்டாற் போல, எந்த மூலையிலோ ஓடி ஒளிந்துகொண்டான். அந்த கனவான்கள், “இந்தப் பிதுர் துரோகி வீட்டில் இருந்தாலும் பாவம்” என்று சொல்லிக்கொண்டு போய் விட்டார்கள். சுப்பையரும், அவருடைய பத்தினியும், இனிமேல் இந்தச் சண்டாளன் வீட்டில் இருப்பது மரி யாதை அல்ல வென்று நினைத்து, பிரத்தியேக மாக ஒரு சத்திரத்துக்குக் குடி போய் விட்டார்கள். அவர்கள் சில மத்தியஸ்தர்கள் மூலமாக, “நாங்கள் உன்னுடன் செர்ந் திருப்பது தான் உனக்கு அவமானமா யிருக்கிறதே! நாங் கள் சத்திரத்திலே குடியிருக்கிறோம்; எங்களுக்கு சாப் பாட்டிற்கு மார்க்கம் செய்ய வேண்டும்” என்று மகனுக் குச் சொல்லி அனுப்பினார்கள். அவன், “நான் ஒன்றும் கொடுக்க மாட்டேன்; ஊரில் பிக்ஷை யெடுத்துச் சாப் பிடுங்கள்” என்று கோபமாய் மறுமொழி சொல்லி அனுப்பினான்.அதைக் கேட்டவுடனே, சுப்பையரும் அவர் பாரியும் கந்தைத் துணிகளை உடுத்திக் கொண்டு, கையில் ஓடுகளை எடுத்துக் கொண்டு, “நாங்கள் இந்த ஊர் முன்- சீப்தாருடைய தாய் தந்தையர்கள்: எங்களை ஆதரிக்கா மல் பிக்ஷை எடுக்கும்படி விட்டு விட்டான்; எங்களுக்குப் பிக்ஷை யிடுங்கள்!” என்று வீடு வீடாகச் சொல்லி, அனந் தயனை இலச்சை கெடுக்க ஆரம்பித்தார்கள். அதை அவன் கேள்வி யுற்று, அவமானத்தை யடைந்து, “ஒரு சக்கிலியத் தொழி லாவது செய்து பிழைக்கக் கூடாதா? பிக்ஷை எடுக்க வெட்கமில்லையா?” என்று சொல்லி யனுப் பினான். உடனே சுப்பையர், “நான் முன்சீப்தா ருடைய தகப்பன்; நான் சக்கிலியத் தொழில் செய்கிற படியால், செருப்பு ஜோடு முதலியவைகள் வேண்டியவர்கள், என் னிடத்தில் வாங்கிக் கொள்ளலாம்” என்று ஒரு விளம்பரம் எழுதி, தான் குடியிருக்கிற சத்திரத்தின் வாசற் படியில் ஒட்டி வைத்தார். இந்த சமாச்சாரங்கள் ஊரெங்கும் பிரசித்த மாகி, அனந்தையனைக் காரித் துப்பாதவர்கள் ஒருவருமில்லை. அவன் நிரீச்சுரவாதி யென்றும், பாவ புண்ணியம் பாராத பரம னெனறும், பிதுர் துரோகி யென்றும் துரைமார்கள் கேள்விப்பட்டு, அந்தக் காரணத்துக் காகவே, அவனை உத்தியோகத்தினின்று நீக்கி விட்டார்கள். அவனுக்கு உத்தியோகம் போன பிற்பாடு அவனை மதிக்கிறவர்கள் ஒருவரு மில்லை. அவன் எல்லாருக் கும் தீங்கு செய்த படியால், உத்தியோகம் போன பிறகு, அவனுக்கு எல்லாரும் தீங்கு செய்யத் தொடுத்தார்கள். தெய்வம் இல்லை, பாப புண்ணியம் இல்லை யென்று, அவன் எப்பொழுதும் செய்து வந்த பிரசங்கத்தைக் கேட்டுக் கேட்டு, அவனுடைய பெண்சாதி பிள்ளைகள் துர் மார்க்கத்தில் பிரவேசித்து, அவனை அலட்சியம் செய்து வந்தார்கள்.
அவனுக்கு உத்தியோகம் போன விசனத்தினால் வியாதி நேரிட்டு, அவன் படுத்த படுக்கையில் இருக்கும் போது, அவனுடைய பெண்சாதி பிள்ளைகள் சற்றும் இரக்க மில்லாமல், அநேகம் பொருட்களை யெடுத்துக் கொண்டு, அவனை அந்தரத்தில் விட்டு விட்டு, ஓடிப் போனார்கள். அவனுடைய வேலைக்காரர்களும் அவர் களுடைய கையில் அகப்பட்டதைக் கிரகித்துக் கொண்டு சொல்லாமற் புறப்பட்டு நடந்து விட்டார்கள். அவன் இப்படிப் பட்ட நிராதரவான ஸ்திதியி லிருக்கும் போது, திருடர்கள் வந்து பிரவேசித்து, வியாதியா யிருந்தவளைத் தூணிலே சேர்த்துக் கட்டி, புதையலைக் காட்டும்படி கணக் கில்லாத அடிகள் அடித்தார்கள். அவன் கதறிக் கொண்டு, “இப்படி அக்கிரமம் செய்யலாமா?” வென்று, கேட்க, அவர்கள், “நீதான் தெய்வம் இல்லை, பாப புண்ணியம் இல்லை யென்று உபதேசிக்கிறாயே! அப்படி யிருக்க, அக்கிரமம் ஏது?” என்று மறுபடியும் அடித்தார் கள். அவன், ”இராஜ தண்டனை இல்லையா?” என, அவர் கள், “சாட்சி யில்லா விட்டால் இராஜ தண்டனை ஏது? உனக்கு சாட்சி சொல்ல யார் இருக்கிறார்கள்?” என்று மீளவும் அடித்தார்கள். அவள் அடி பொறுக்கமாட்டாமல் புதையலைக் காண்பித்தான். அவர்கள் உள்ள தெல்லாம் வாரிக்கொண்டு, வெளியே போகும்போது, அனந்தையன் அவர்களைப் பார்த்து, “இப்படி அநியாயம் செய்தீர்களே! உங்களுக்கு இராஜ தண்டனை யில்லா விட்டாலும், தெய்வ தண்டனை யில்லாமற் போகுமா?” என்றான். அவர்கள் உடனே கை கொட்டிச் சிரித்துக் கொண்டு, “எங்களால் நீ தெய்வத்தின் உண்மையை அறிந்தாய்; உனக்கு மதி வந்தது, எங்களுக்கு நிதி வந்தது: உனக்கு குணம் வந்தது, எங்களுக்குப் பணம் வந்தது” என்று மொழிந்து கொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.
அன்று முதல் அவன் தெய்வம் இல்லை யென்கிற வார்த் கதையை விட்டு விட்ட படியால், அவனுடைய தாய் தந்தை, ஆசாரியர்களைப் பார்க்கிலும், அந்தத் திருடர் களே, அவனுக்குப் போதக குரு வென்று சொல்லலாம். அவர்கள் குரு தட்சணையைப் போல அவனுடைய பொருளை யெல்லாம் கவர்ந்து கொண்ட படியால், ‘பழைய குருடி கதவைத் திற வடி’ என்பது போல, அவனுடைய பூர்வ தரித்திர தசையில் வந்து விட்டான். அவன் பொருளையும் இழந்து, பிணியினால் வருந்துவதை அவனுடைய தந்தை தாய் கேள்வி யுற்று, அவன் செய்த துரோகங்களையெல்லாம் மறந்துவிட்டு, அவன் வீட்டுக்குப் போய், வேண்டிய காரியங்களைச் செய்து, அவனைச் சௌக்கியப்படுத்தினார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் உதவி செய்யாவிட்டால், அவன் பிராண வியோகம் ஆயிருப்பா னென்பதில் சந்தேக மில்லை. அவன் ஒரு ஆண்டு முழுமையும் தீர்க்க ரோகமா யிருந்தமையால், அவனுடைய தாய் தந்தையர் யாசகம் செய்து, அவனைக் காப்பாற்றினார்கள். அவன் சௌக்கியம் அடைந்த பிறகு, யாசகத் தொழிலைத் தவிர, அவன் ஜீவிக்கிறதற்கு மார்க்க மில்லை. அவனுடைய தாய் தகப்பனுக்கு இரங்கி, யாசகம் கொடுக்கிறார்களே தவிர, அவனுக்கு இரங்குகிற வர்கள் ஒருவருமில்லை. நான் ஒரு நாள் அவனிடத்தில் தெய்வத்தைக் குறித்துப் பேசினேன். அவன் தனக்குத் துரோகம் செய்து ஓடிப் போன தன் பெண் சாதி பிள்ளை களும், வேலைக்காரர்களும், திருடர்களும் இந்த உலகத் தில் இராஜ நீதியைத் தப்பிக் கொண்டபடியால், அவர்களைத் தண்டிக்கிறதற்கு ஒரு தெய்வமும், அவர்களை உபா திப்பதற்கு நரகமும் அவசிய மென்றும், தான் செய்த துரோகங்களை க்ஷமித்து, தன்னைக் காப்பாற்றின தாய் தந்தைகளுக்குத் தகுந்த சம்மானம் இந்த உலகத்தில் இல்லாத படியால், அவர்களுக்காக ஒரு மோட்சமும் அகத்தியம் வேண்டியதென்றும், ஆகையால், தெய்வமும், நரகமும் மோட்சமும் உண்டென்பது சத்திய மென்றும் ஒப்புக் கொண்டாள்.
30-ஆம் அதிகாரம்
தேவராஜப் பிள்ளைக்குக் கனகசபை சொந்தப் புத்திரனா என்னும் விசாரணை-
சிரித்தவர் அழுவார்-அழுதவர் சிரிப்பார்
கவர்ன்மென்றாருக்கு தேவராஜப் பிள்ளை எழுதிய மனு வுக்கு எப்போது உத்தரவு வருமோ வென்று, நாங்கள் சதா எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் குதிரைத் தபால் வழியாகக் கவர்ன்மென்றா ருடைய உத்தரவு வந்து சேர்ந்தது. அதைத் தேவராஜப் பிள்ளை ஆவலாக வாங்கிப் பிரித்து வாசித்தார். அவருக்குக் கனகசபை சொந்தப் பிள்ளையா அல்லவா வென்று விசாரிக்கும்படி, மூன்று துரை மார்களை விசாரணைக் கர்த்தர்களாக நியமித்திருப்பதாக வும், அவர்கள் முன்பாகச் சாக்ஷி சாதகங்களுடன் போய்ச் சங்கதிகளைத் தெரிவித்துக் கொள்ளும்படியாகவும், அந்த விசாரனைக் கர்த்தர்களுடைய அபிப்பிராயப்படி தீர்மானம் செய்ய அவர்களுக்குப் பூரண அதிகாரம் கொடுத் திருப்ப தாகவும், கவர்மென்றா ருடைய உத்தரவினால் தெரிய வந்தது. அதைப் பார்த்த வுடனே, இனிமேல் எப்படியும் நியாயம் கிடைக்கு மென்று, நாங்கள் எல்லாரும் ஆனந்த பரிதர்கள் ஆனோம். பிற்பாடு, மேற்படி விசாரணைக் கர்த் தர்கள் இடத்திலிருந்து வந்த உத்தரவில், வேதபுரி என்னும் ஊரில் விசாரணை நடக்கு மென்றும், சகல சாக்ஷி சாதகங் களுடன் அவ்விடத்திற்கு வரும்படியாகவும், ஆக்ஞாபிக்கப் பட்டிருந்தது. அந்தப் பிரகாரம், ஆதியூரிலும் பக்க ஊர்க ளிலும் வசிக்காநின்ற தகுந்த கௌரவ முள்ள பெரிய பிர புக்களும்,நானும்,என் தகப்பனாரும், சம்பந்தி முதலியாரும், சாந்தலிங்கப் பிள்ளையும், சந்நியாசியாரும் உட்பட, நூறு சாக்ஷிகள் சகிதமாக, தேவராஜப் பிள்ளையும், கனகசபையும் பயண சந்நாகமாய்ப் புறப்பட்டு, வேதபுரிக்குப் போனோம். அந்த மூன்று விசாரணைக் கர்த்தர்களில் இருவர் கலெக்டர் வீட்டில் இறங்கியிருப்பதாகக் கேள்வியுற்று, நாங்கள் குறு விசாரம் அடைந்தோம். ஆயினும், மூன்று துரைமார்கள் கூடி, அநியாயம் செய்ய மாட்டார்களென்று, நாங்கள் எங்களைத் தைரியப் படுத்திக் கொண்டோம். விசாரணைக் கர்த்தர்கள் தேவராஜப் பிள்ளையை முந்தி விசாரித்தார்கள். அவர் கனகசபை பிறந்தது முதல் நடந்த ஒவ்வொரு சங்கதி யையும் விடாமல் பரிஷ்காரமாய் வாக்குமூலம் எழுதி வைத் தார். பிற்பாடு, சந்நியாசியாரையும், கனகசபையையும், அவனை வளர்த்த தகப்பனாரையும், என்னையும்,என் தகப்ப னாரையும், சம்பந்தி முதலியாரையும், தனித்தனியே விசாரித் தார்கள். நாங்கள் எங்களுக்குத் தெரிந்த ஒவ்வொரு விஷ யத்தையும் பூரணமாகத் தெரிவித்தோம். பிற்பாடு, நாங்கள் கொண்டு போன பெரிய மனுஷர்களையும், பின்னும் அந்த விசாரணைக் கர்த்தர்களுடைய இஷ்டப்படி வரவழைக்கப் பட்ட நூறு பிரபுக்களையும், பிரத்தியேகம் பிரத்தியேகமாய் விசாரித்தார்கள். அவர்கள் எல்லாரும், ஒரே வாக்காய், தேவராஜப் பிள்ளை பட்சத்தில் சாக்ஷி சொன்னார்கள். விசா ரணைக் கர்த்தர்கள், அவர்கள் கையிலிருந்த ஒரு கடிதத்தைத் தேவராஜப் பிள்ளைக்குக் காட்டி, அது முழுவதும் யார் கை யெழுத்து என்று கேட்டார்கள். அவர் மேல் விசால மட் டும் தம்முடைய கையெழுத் தென்றும், உள்ளே யிருக்கிற கடிதம் தமது கையெழுத்து அல்ல வென்றும், தம்முடைய லிகிதம் போல் யாரோ எழுதியிருப்பதாகவும் சொன்னார்,
மூன்று விசாரணைக் கர்த்தர்களும் ஒரு அறைக் குள்ளே போய் ஆலோசிக்கத் தொடங்கினார்கள். அவர் கள் ஒருவருக் கொருவர் நெடுநேரம் சம்வாதஞ் செய்து. கொண்டு, பிற்பாடு வெளியே வந்து, சிம்மாசனாரூடர் ஆனார்கள். அவர்களில் கலெக்ட்டர் வீட்டில் இறங்கி யிருந்த இரண்டு விசாரணைக் கர்த்தர்களும், அனேக சிப் பாய்கள் உருவின கத்திக ளுடனே எங்களைச் சுற்றிக் காவலா யிருக்கும் படி செய்வித்து, தீர்மானம் சொல்லத் தொடங்கினார்கள்:-“இந்த விஷயத்தில், தாங்கள் இருவ ரும் ஒரே அபிப்பிராயமாயிருக்கிறோம். ஒரு விசாரணைக் கர்த்தர் மட்டும், எங்கள் அபிப்பிராயத்துக்கு இசைய வில்லை. அப்படி யிருந்தாலும், அந்த ஒரு விசாரணைக் கர்த்த ருடைய அபிப்பிராயத்தைப் பார்க்கிலும், இருவ ருடைய அபிப்பிராயம் விசேஷ மானதால், எங்களுடைய அபிப்பிராயத்தைச் சொல்லுகிறோம். இந்த விஷயத்தில் சாக்ஷி சொன்ன ஒருவருடைய வார்த்தையை யாவது நாம் நம்ப வில்லை. எல்லாருமாய்க் கூடிப் பெரிய பொய்க் கோட்டை கட்டி யிருக்கிறார்கள் என்பது சத்தியமே. சந் ததி இல்லாமல் பாளையதார் இறந்து போனால், பாளையப் பட்டு கவர்ன்மென்றுக்குச் சித்தித்துப் போகு மென்று யோசித்து, கவர்ன்மென்றாரை மோசம் செய்வதற் காக. இப்படிப்பட்ட அபாண்டமான பொய்யை உண்டு பண்ணி யிருப்ப தாக, அபிப்பிராயப்படுகிறோம். ஏழைகளா யிருந்து பொய் சொன்னாலும் அதை க்ஷமிக்கலாம். பெரிய பிரபுக்க ளென்று பேர் வைத்துக் கொண்டு, பொய்ச் சத் தியம் செய்து, பொய்ச் சாட்சியம் சொல்லி யிருப்பது, பெரிய அக்கிரமமாகவும், பிரபல மான துன்மார்க்க மாக வும் இருக்கின்றது. இந்தியா தேச முழுதும் தெரியும்படிக்கு, பொய்ச் சத்தியம் செய்தவர்களுக்குத் தகுந்த சிட்சை செய்ய வேண்டியது முக்கியமா யிருக்கிறது. ஆகையால், பாளையதார் உள்படச் சகல சாக்ஷிகளையும், அவர்க ளுடைய ஆயுசு பரியந்தம் தீபாந்தரத்துக்கு அனுப்புகிற தென்றும், அவர்களுடைய சொத்துக்களை யெல்லாம் பறிமுதல் செய்து, கவர்ன்மென்றாரைச் சேரு கிற தென்றும், தீர்மானம் செய் திருக்கிறோம்” என்று சொல்லி, எங்களுக்குக் கை விலங்கு கால் விலங்கு மாட்டிக் காவலில் வைக்கும்படி உத்தரவு செய்தார்கள்.
இந்தத் தீர்மானத்தை கேட்ட வுடனே எங்க ளுடைய நிலைமை எப்படி இருந் திருக்கு மென்று நான் சொல்ல வும் வேண்டுமா? உடனே, “ஐயோ! தெய்வமே! என்ன செய்வோம்!” என்கிற கூக்குரலும், அழுகைக் குரலும், எங்கும் கிளம்பிற்று. பெண்சாதிகளை நினைத்து அழுகிற வர்களும், பிள்ளைகளை நினைத்து அழுகிறவர்களும், தாய் தந்தை சுற்றத்தாரை நினைத்து அழுகிறவர்களும், ஆஸ்தி களை நினைத்து அழுகிறவர்களும், இவ் வகையாக, எங்கும் அழுகைக் குரலே தவிர, வேறொரு சப்தமு மில்லை. தேவரா ஜப் பிள்ளை எழுந்து, மற்றவர்களை நோக்கி, “ஐயையோ! உங்கள் எல்லாருக்கும், நான் ஒருவன் கூற்றுவனா யிருந் தேனே! என்னாலே உங்கள் ஆஸ்திகளை இழந்தீர்களே! பெண்சாதி பிள்ளைகளை இழந்தீர்களே! ஆயுசு வரையில் தண்டனையும் அடைந்தீர்களே! நீங்கள் எனக்கு உபகாரம் செய்ய வந்து, பெரும் துன்பத்தை அடைந்தீர்களே! இந்தத் துக்கத்தை நான் எப்படிச் சகிப்பேன்?” என்று சொல்லிப் புலம்பினார். பிறகு அவர் என்னையும், என் தகப்பனாரையும், என் மாமனாரையும் நோக்கி,”இந்தத் துன்பத்தை அநுபவிக்கத்தானா நீங்கள் உங்கள் ஊரை விட்டு இவ்வளவு தூரம் வந்தீர்கள்? நீங்களும் உங்கள் உத்தம பத்தினிகளும் செய்த தர்மம் கூட உங்களைத் தலை காக்காமற் போய் விட்டதே! அந்த மகா உத்தமிகள் இந்தச் செய்தியைக் கேட்டுச் சகிப்பார்களா? பிராணனை வைத்திருப்பார்களா? நீங்க ளாவது தப்பி யிருந்தால், எங்களுக்காகச் சர்வ பிரயத்தனமும் செய்விர்களே? இப் போது அந்த நம்பிக்கையும் இல்லாமற் போய் விட்டதே! நான் என்ன செய்வேன்?” என்று சொல்லி, கீழே விழுந்து புரண்டு புரண்டு, அழுதார். அப்படியே ஒவ்வொருவரும் தங்களுடைய துயரத்தைச் சொல்லிப் பொருமினார்கள். அப்போது மண்ணும் விண்ணும் மரமும் மலையும் சகலமும் அழுவது போல் தோன்றின அந்த இரண்டு பாவிகளாகிய விசாரணைக் கர்த்தர்க ளுடைய மன மட்டும் இரங்க வில்லை.
புருஷர்க ளாகிய எங்க ளுடைய கதியே இப்படி யிருக்கும் போது, எங்க ளுடைய ஸ்திரீ ஜாதிகள் பட்ட துக்கங்களை நான் எப்படி விவரிக்கப் போகிறேன்? அப்போது நான் கூட இராவிட்டாலும், நான் கேள்விப் பட்டதை எழுதுகிறேன். இந்த சமாசாரம் அவர்களுக்குத் தெரிந்த உடனே, பட்டணம் அல்லோல கல்லோலமாய்ப் போய் விட்டது. எல்லா ஸ்திரீகளும், பாளையதார் அரண் மனையில் வந்து, கூட்டம் கூடி, தலை மயிர்களைப் பிச்சுக் கொண்டும், வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டும், முகத்தில் அறைந்து கொண்டும், வயிற்றில் அடித்துக் கொண்டும், கீழே விழுந்து, புரண்டு அழுதார்கள். அவர் களுடைய கூந்தல்கள் மேகங்கள் போலவும், அவர்களுடைய தேகங்கள் மின்னல் போலவும், அவர்க ளுடைய கூக்குரல் இடியோசை போலவும், அவர்களுடைய கண்ணீர் மழை பொழிவது போலவும் இருந்தன. “ஐயோ! எங்கள் நாயகர்களை இழந்து போனோமே! இனிமேல் அவர்களை ஒரு நாளும் பார்க்க மாட்டோமே! எங்களுடைய ஆஸ்திபாஸ்திகளையும் தோற்றோமே! நாங்களும் எங்கள் பிள்ளைகளும் என்ன செய்வோம்? எந்தத் தெருவிலே நிற்போம்?” என்று புலம்பினார்கள். அவர்க ளுடன் அழுது புலம்பிக் கொண் டிருந்த என் தாயார், திடீரென்று எழுந்து, மற்ற ஸ்திரீ ஜனங்களைப் பார்த்து, “தங்கை மாரே! தமக்கையாரே!! அழுது பிரயோசன மில்லை. வெள்ளம் தலைக்கு மேல் ஓடி விட்டது. இனிமேல் சாண் ஓடினால் என்ன? முழம் ஓடினால் என்ன? நம்முடைய புருஷர்கள் எல்லாரும் அகப்பட்டுக் கொண்டார்கள். அவர்களில் யாராவது ஒருவர் தப்பி யிருந்தால், மற்ற வர்களை இரக்ஷிக்கும் பொருட்டு, அவர்களால் கூடிய வரையில் முயற்சி செய்வார்கள். அவர்கள் எல்லாரும் அகப்பட்டுக்கொண் டிருப்பதால், இனிமேல், நம்மைத்தவிர, நம்முடைய புருஷர்களுக் காகப் பிரயாசைப்படத் தக்க வர்கள் யார்? இனிமேல் நாம் செய்யத் தக்கது ஒன்றும் செய்யாம இல்லையே யென்று நினைத்து, நாம் முயற்சி லிருக்கலாமா? கப்பல் உடைந்து கடலில் முழுகிறவர்களும், ஏதாவது ஒரு பலகையைப் பிடித்துக் கொண்டு, கரை ஏற முயலுகிறார்கள். விஷம் சாப்பிட்டவர்களுக்குக் கூடத் தகுந்த வைத்தியம் செய்து அவர்களைப் பிழைப்பிக்க வகை தேடுகிறார்கள். பிராணன் போன பிற்பாடு கூட, மூச்சு அடங்கி யிருக்கு மென்று நினைத்து, பிரேத வைத்தியம் செய்கிறார்கள். அப்படிப் போல், நாமும் பிரயத்தனம் செய்வது அத்தியாவசியமா யிருக்கின்றது. ஆனால், காரியம் மலையாய் வளர்ந்து போ யிருப்பதால், அதற்குத் தகுந்த முயற்சி செய்ய வேண்டுமே தவிர, அற்பப் பிரயத்தனத்தால் அநுகூலம் உண்டாகாது. வியாதி எவ்வளவு பெரிதோ அதற்குத் தகுந்த ஒளஷதங்களைப் பிர யோகிக்க வேண்டும். சென்னைப் பட்டணம் கவர்னர் அவர்கள், மகா நீதிமா னென்றும், தர்மிஷ்ட ரென்றும், கேள்விப்படுகிறேன். அவருக்கு நாம் மனு அனுப்பினால், கிரமப்படி உத்தரவாகக் கால தாமதம் ஆகும். உத்தரவு வருகிறதற்கு முன், நம்முடைய நாயகர்களைக் கப்பல் வழியாய்த் தீபாந்தரம் அனுப்பி விடுவார்கள். ஆகையால், இப்போதே நாம் எல்லாருமாய்க் கூடிச் சென்னைப்பட்டணம் போய், சுவர்னர் அவர்கள் பாதத்தில் விழுந்து, நம்முடைய நாயகர்களுக் காக மன்றாடுவோம். இத்தனை ஸ்திரீக ளுடையவும் பாலகர்க ளுடையவும் பிரார்த்தனை வியர்த்தம் ஆகா தென்று நினைக்கிறேன். அந்தப்புர ஸ்திரீகளாகிய நாம் எப்படி வெளியே புறப்பட்டு அதி காரிக விடம் போகிற தென்று யோசிப்பீர்கள். நமக்குத் தகப்பனுக்குச் சமான மான கவர்னர் அவர்களிடத்திற் சென்று. நம் முடைய குறையைச் சொல்லுவதினால், நமக்கு என்ன அவமானம்? நம்முடைய பிரயத்தனத் தால் நம்முடைய பர்த்தாக்கள் விடுதலை யானால் அதை விடப் பெரிய பாக்கியமும் கீர்த்தியும் வேறென்ன இருக்கி றது? ரோம் (Rome) பட்டணத்தைச் சத்துருக்கள் வளைத்துக் கொண்டபோது, அந்தப் பட்டணத்து ஸ்திரீக ளுடைய பிரயத்தனத்தால், அவர்க ளுடைய புருஷர்கள் பிழைத்தார்களே! அப்படிப் போல் நாமும் முயற்சி செய்வோம்; புறப்படுங்கள்! புறப்படுங்கள்!!” என்றார்கள். இதைக் கேட்ட வுடனே, எல்லாருக்கும் தைரியம் உண்டாகி, என் தாயாரைப் புகழ்ந்து கொண்டாடினார்கள்.
ஒரு ஸ்திரீ மட்டும் என் தாயா ருடைய அபிப்பிரா யத்தை அங்கீகரிக்காமல் குதர்க்கம் பேசினாள். அவள் சொன்னது என்ன வென்றால், “இந்தச் சீமாட்டி சொல்வது, எலிகள் கூடிப் பூனையைத் தப்புகிறதற்குச் செய்த உபாயம் போலிருக்கிறது.
ஒரு காலத்தில் எலிகளெல்லாம் சேர்ந்து ஆலோசனைச் சபை கூடி, பூனைக்குத் தப்புகிறதற்கு என்ன உபாயம் செய்யலா மென்று, ஆலோசிக்கத் தொடங்கின. பல எலிகள் பலப்பல அபிப்பிராயங்களை வெளியிட்டாலும், அந்த அபிப்பிராயங்கள் அயுக்த மென்று தள்ளப்பட்டன. ஒரு சுண்டெலி எழுந்து, வாசக தாட்டி யாகவும், அலங்கார நய மாகவும், தன்னுடைய அபிப்பிராயத்தை வெளியிட்டது. எப்படியெனில், “காலம் கண்ட பெரி யோர்களும் ஞாதாக்களும் நிறைந்த இந்தச் சபையில், சிற்றறிவை யுடைய சிறியேன் வாய் திறக்க அபாத்திரனா யிருந்தாலும், தாங்கள் கிருபை கூர்ந்து, என்னுடைய அபிப்பிராயத்தையும் சிரவணம் செய்யவேண்டும். பூனை நம்மை நெருங்கி வருகிற சமயம் தெரியாமையினால், நாம் அதன் வாய்க்கு இரை யாகிறோம். பூனையின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டி விட்டால், அது வருகிற ஓசை கேட்டு, உடனே நம்முடைய வளைகளில் நுழைந்து, தப்பிக் கொள்ளலாம்” என்றது. இதைக் கேட்ட வுடனே எலிக ளெல்லாம் சந்தோஷித்து, “அந்தச் சுண்டெலியைப் புகழ்ந்து கொண்டாடின. அப்போது, ஒரு மூலையில் மௌனமாய் உட்கார்ந் திருந்த நரை திரை யுள்ள ஒரு கிழ எலி எழுந்து, சொன்ன தாவது, “அந்தச் சுண்டெலி மகா சதுரனே! அது சொல்லுகிற உபாயமும்,நல்ல உபாயந்தான். ஆனால்,நமக்குள் யார் பூனையின் கழுத்தில் மணியைக் கட்டுகிற தென்று” அந்தச் சுண்டெலியைக் கேட்ட வுடனே, எலிக ளெல்லாம் நாணம் அடைந்து, ஓடிப் போய் விட்டன.
அந்தக் கிழ எலி கேட்டது போல, நானும் இந்த அம்மையை ஒரு கேள்வி கேட்கிறேன். “கவர்னர் நமக்குத் தரிசனம் கொடாத பட்சத்தில், நாம் என்ன செய்கிறது?” என்றாள்.உடனே என் தாயார், ‘ கவர்னர் பேட்டி நமக்குக் கிடைக்காத பட்சத்தில், நாம் ஒரு விண்ணப்பம் எழுதி, அவர் வெளியிலே வரும் போது, கொடுக்கலாம்” என்றார்கள். இதைக் கேட்ட வுடனே, எல்லாரும் சரி யென்று ஒப்புக் கொண்டு, பிரயாணம் ஆரம்பித்தார்கள். தூய்மை யான வஸ்திரங்களையும், முக்கிய மான சில ஆபரணங்களையும் தரித்துக் கொண்டு, அவர்க ளுடைய பிள்ளைக ளுடளே வாகனங்களில் ஏறிக் கொண்டு, பிரஸ் தானப் பட்டு, சென்னை நகரம் போய்ச் சேர்ந்தார்கள். அந்த நகரத்திலும் மார்க்கங்களிலும் உள்ள அநேக பிரபுக் களுடைய வீட்டு ஸ்திரீகள், இந்த அதிசயத்தைக் கேள்விப் பட்டு, அவர்களும் வாகனாரூடராய்ப் பின் தொடர்ந்தார்கள். எல்லாம் கூடி, ஐந்நூறு வாகனங்க ளுக்கு மேற்பட்டு, கவர்னர் அவர்க ளுடைய அரண்மனைத் தோட்டத்தின் வெளி வாசலுக்கு முன்னே வந்து, நிறைந்து நின்றன. அப்போது தோட்டத்தில் உலாவிக் கொண் டிருந்த கவர்னரவர்கள், வாகனங்களின் சப்தத்தைக் கேட்டு, அதிசயப்பட்டு, என்ன வென்று விசாரிக்க, எண்ணிக்கை யில்லாத ஸ்திரீகள் அழுத கண்ணும் சிந்திய முக்குமாய்த் தங்களுடைய குறையை விக்ஞாபனம் பண்ண வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, தம்முடைய சபா மண்டபத்துக்கு வரும்படி உத்தரவு கொடுத்தார். அந்தப் பிரகாரம், எல்லா ஸ்திரீகளும் வாகனத்தை விட்டு இறங்கி, சபா மண்டபத்திலே பிரவேசித்தார்கள். அவர்கள் எல்லாரும் பிரபுக்கள் விட்டு ஸ்திரீகள் என்று அவர்களுடைய முக விலாசத்தால் கவர்னர் அவர்கள் அறிந்து கொண்டு, உட்காரச் செய்து, பீடத்தில் அவர்களை எல்லாம் ஆசனத்தில் தாமும் தம்முடைய தேவியாரும் இருந்து கொண்டு, “நீங்கள் உங்களுடைய துன்பத்தைத் தெரிவிக்கலாம்” என்று இனிமை யாக மொழிந்தார். வேறொருவரும் பேசத் துணியாமையால், என் தாயார் எழுந்து நின்று கொண்டு, அடியிற் கண்ட படி விக்ஞாபனம் செய்தார்கள்:
‘இந்தத் தேசத்தை ஆளாநின்ற மகாப் பிரபுவே! சிஷ்ட பரிபாலனமும் துஷ்ட நிக்கிரகமும் உங்க ளுடைய கவலை யான தால், அந்த வேலையை உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். ஒரு துஷ்டன் ஒரு பெண்ணைக் கொள்ள அபேக்ஷித்து, அந்த ஆசை நிறைவேறாமையால், இருநூறு பெண்கள் தங்கள் நாயகர்களையும் ஆஸ்திகளையும் இழந்து போகும்படி செய்து விட்டான். தான் ஒரு ஸ்திரீக்குப் புருஷன் ஆகாத நிமித்தம், இருநூறு புருஷர்களுக்குத் தாரங்கள் இருந்தும், இல்லாதவர்க ளாகச் செய்து விட்டான்.
பாளையப்பட்டுச் சங்கதியை விசாரிக்கும் படி தங் களால் நியமிக்கப் பட்ட விசாரணைக் கர்த்தர்கள் முன்பாக, இருநூறு பெரிய பிரபுக்கள், அந்தப் பாளையதார் பக்ஷத்தில் சாட்சி சொல்லி யிருக்கிறார்கள். அவர் களுடைய சாக்ஷியத்தை நம்பாமல், அந்த விசாரணைக் கர்த்தர்களில் இருவர், அந்த இருநூறு பிரபுக்களையும் பாளையதாரையும் ஆயுசு முழுதும் தண்டித்து, அவர்களுடைய ஆஸ்திகளையும் பறிமுதல் செய்யும்படி தீர்மானித் திருக்கிறார்கள். அந்தச் சாட்சிகளில் நூறு சாட்சிகள் பாளையதார் கொண்டு போன காட்சிக ளாகவும், மற்ற வர்கள் விசாரணைக் கர்த்தர்களால் நேரே வரவழைத்து விசாரிக்கப் பட்ட சாட்சிக ளாகவும், இருக்கிறார்கள்; இத்தனை பிரபுக்கள் கூடி, தங்களுக்குச் சம்பந்த மில்லாத பாளையதார் விஷயத்தில், தப்புப் பிரமாணம் பண்ணிப் பொய் சொல்லத் துணிவார்களா? ஏக நம்பிக்கை யான சாட்சியினுடைய ருசு போதுமான தென்று சாட்சி சாஸ் திரத்தில் சொல்லப்பட்டி ருக்க, நம்பிக்கையும் கௌரமும் உள்ள இருநூறு சாட்சிக ளுடைய ருசுவை அவமதிப்பது, எவ்வளவு பெரிய அநியாயம்! கலெக்டர் கச்சேரிச் சிரஸ்தாரும், அவனுடைய துர்ப் போதனைகளுக்கு உட்பட் டிருக்கிற கலெக்ட்டருமே, பாளையதாருக்கு எதிரிகளா யிருக்க, அந்த கலெக்ட்டர் வீட்டில் இரண்டு விசாரணைக் கர்த்தர்கள் வாசம் செய்து கொண்டு விசாரித்தது தர்மமா? கலெட்டர் வீட்டில் தங்காமல் தனியே கூடாரம் அடித்துக் கொண்டிருந்த மற்றொரு விசாரணைக் கர்த்தர், பாளையதார் பக்ஷத்தில் அபிப்பிராயப் பட்டது அவருக்குப் பெரிய அனுகூலம் அல்லவா? அந்த இருநூறு சாட்சி களும் பொய் சொல்லி யிருந்தாலும் கூட, யாவத்தராலும் ஜீவ பரியந்தம், அவர்களைத் தேசாந்தரம் அனுப்பும் படி யான அவ்வளவு பெரிய குற்றமாகுமா? அவர்க ளுடைய ஆஸ்திகளையும் பறிமுதல் செய்வது, ஒரு குற்றத்துக்கு இரண்டு தண்டனை செய்ததற்குச் சமான மல்லவா? விசா ரணைக் கர்த்தர்கள் சொல்லுகிறபடி, எங்கள் புருஷர்கள் தான் குற்றம் செய்தார்கள்; நாங்களும், எங்கள் பிள்ளை களும், ஆஸ்திகளை இழப்பதற்கு, நாங்கள் என்ன குற்றம் செய்தோம்! இப்போது, நான் சொல்வதைக் கொண்டு, எங்கள் புருஷர்களைப் பார்க்கிலும் ஆஸ்திகளை விசேஷ. மாக எண்ணி யிருக்கிறோ மென்று தாங்கள் நினைக்காம லிருக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். நாங்கள் மங்கி லியப் பிக்ஷை கேட்க வந்திருக்கிறோமே அல்லாது, ஆஸ்திப் பிக்ஷை கேட்க வரவில்லை. எங்களுக்கு மங்கிலியப் பிக்ஷை கிடைக்காத பட்சத்தில், எங்களுக்கு ஆஸ்திகளும் வேண்டிய தில்லை. தங்கள் சமூகத்தில், எல்லா விஷயங்களை யும் நேரே விசாரித்து, எங்கள் பட்சத்தில் நியாய மிருந் தால் செய்யும்படி பிரார்த்திக்கிறோமே யல்லாது, எங்க ளுடைய அழுகைக்கும் பிரலாபத்துக்கும் இரங்கி, பட்ச பாதம் செய்யும்படி நாங்கள் கேட்க வில்லை. இங்கிலீஷ் கவர்ன்மென்று பூமண்டல முழுதும் எவ்வளவோ கெடி பெற்றதா யிருக்கின்றது. உங்கள் உத்தியோகஸ்தனும் எங்கள் தேசத்தானு மான ஒரு பரம துஷ்டன், உங்க ளுடைய கீர்த்தியையும், எங்களுடைய நன்மையையும் அழிக்க, கங்கணம் கட்டிக் கொண் டிருக்கிறான். அவ னைச் சிக்ஷித்து, எங்களை இரக்ஷிக்கும்படி பிரார்த்திக்கி றோம். சகலமும் தெரிந்த மகாப் பிரபு வாகிய உங்க ளுக்கு, புருஷர்களை இழந்த இந்தத் தேசத்து ஸ்திரீக ளுடைய நிர்ப்பாக்கியங்களை விவரிக்க வேண்டுவ தில்லை. ஆகையால், எங்களுக்கு நாயகர்களையும், எங்க ளுடைய பிள்ளைகளுக்குத் தந்தைமார்களையும் கொடுத்தருளுங்கள்! நாங்கள் சொல்வது பொய் யென்று தாங்கள் அபிப்பிராயப் படுகிற பக்ஷத்தில், அந்தக் குற்றத்துக் காக எங்களை யும் தண்டித்து, எங்கள் நாயகர்க ளுடனே எங்களையும் தீபாந்தரத்துக்கு அனுப்பி விடுங்கள்” என்று மிருதுவாகவும், நய மாகவும் வணக்க மாகவும், விக்ஞாபித்துக் கொண்டார்கள். இதைக் கேட்கும் போது, கவர்னர் அவர்களுக்கும், அவருடைய தேவியாருக்கும் கண்ணீர் பெருகி, அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்.
பிறகு, கவர்னர், என் தாயாரையும் மற்ற ஸ்திரீகளை யும் நோக்கி, “இது பெரிய விஷய மானதால், நாம் உங் கள் ஊருக்கே வந்து விசாரித்து, நியாயப் படி தீர்மானிக் கிறோம் அது வரையில் விசாரணைக் கர்த்தர்கள் செய்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் நிறுத்தி வைக்கும்படி, இப்பொழுதே உத்தரவு அனுப்புவோம். நீங்கள் ஊருக்குப் போகலாம்” என்று உத்தரவு கொடுத்தார். உடனே, என் தாயார் முதலிய ஸ்திரீகள் புறப்பட்டு, கவர்ன ரவர்க ளுடைய உத்தியானந் தாண்டி, வெளியே வந்தார்கள். அந்த உத்தியான வாசற் படிக்கு வெளியே, பட்டணத்து ஸ்திரீ பூமான்க ளெல்லாம் திரண்டு மொய்த்து, என் தாயா ரையும் ஞானாம்பாளையும் மற்ற ஸ்திரீகளையும் பார்த்துப் பரிதாபப் படுகிறவர்களும், என் தாயாரைப் புகழ்ந்து கொண்டாடுகிறவர்களும், அவர்களைத் தங்கள் வீட்டுக்கு வர வேண்டு மென்று பிரார்த்திக்கிறவர்களுமா யிருந்தார். கள். அவர்களில், எங்களுக்கும் பாளையதாருக்கும் பந் துக்களும் பரிசய மானவர்களும் அநேகர் இருந்த படி யால், அவர்கள் கிருகங்களுக்குப் போய், போஜனம் செய்த பிற்பாடு, எங்களுடைய ஸ்திரீகள் வாகனாரூட ராய்ப் புறப்பட்டுப் போய், தங்கள் ஊரை அடைந்தார்கள். மறு நாளே, கவர்னர் அவர்கள் அவருடைய பரிவா ரங்களுடன் வேதபுரி என்னும் ஊருக்கு வந்து, கூடாரங் களில் இருந்து கொண்டு, பரிசீலனை பண்ணத் தொடங்கி னார். பாளையதாரும் சாஷிகளும் எழுதி வைத்த வாக்கு மூலங்களையும், இரண்டு விசாரணைக் கர்த்தர்கள் செய்த தீர்மானத்தையும், அதற்கு விரோதமாய் மற்றொரு விசாரணைக் கர்த்தர் கொடுத்த அபிப்பிராயத்தையும், இன்னும் மற்ற இலிகிதங்களையும் வாசித்துப் பார்த்து, உண்மை யைத் தெரிந்துகொண்டார். பாளையதார் தனக்குப் பிள்ளை யில்லை யென்று சிரஸ்ததாருக்கு எழுதினதாகச் சொல்லப் பட்ட கடிதம் ஒன்றுதான், பாளையதார் கக்ஷிக்குக் கொஞ்சம் பாதகமா யிருந்தது. பாளையதார் சிரஸ்த தாருக்கு எழுதி யிருந்த ஒரு வாஸ்தவ மான கடிதத்தை கிழித்தெறிந்து விட்டு, அது வைத்திருந்த உறைக் குள்ளே, சிரஸ்ததார் ஒரு பொய்யான கடிதத்தை எழுதி வைத்துக் கொண்டு, மாறுபாடு செய்த தாக, அநேக சாக்ஷிகளாலும் அனுமானங்க ளானும் ஸ்தாபிக்கப் பட்ட படியால், கவர்னர் அவர்களுக்கு உண்டா யிருந்த அற்ப சந்தேகமும் நிவர்த்தியாய் விட்டது. உடனே, கவர்னர் அந்த இரண்டு விசாரணைக் கர்த்தர்க ளுடைய தீர்மானத்தை மாற்றி, பாளையதார் கக்ஷியை ஸ்தாபித்து, அவரும் நான் முதலான சாக்ஷிகளும் நிரபராதிக ளென்று சித் தாந்தம் செய்தார். அந்த இரண்டு விசாரணைக் கர்த்தர் களையும், கலெக்ட்டரையும், உத்தியோகத்தை விட்டு நீக்கி, அவர்கள் எங்களைத் தீபாந்தரம் அனுப்ப வைத்திருந்த கப்பலில், அவர்களை யேற்றி, சீமைக்கு அனுப்பி விட்டார். அந்த சிரஸ்ததார் பொய்க் கடிதததை உண்டு பண்ணி, பாளையதார் முதலானவர்களுக்குப் பல துன்பங்களைச் செய்த படியால், அவளை உத்தியோகத்தினிறு விலக்கி அவன் எங்களுக்கு நியமித்திருந்த தீபாந்தரத்துக்கு அவளையே அனுப்பி, அவனைத் தேசப் பிரஷ்டன் ஆக்கினார்.
– தொடரும்…
– மாயூரம் மாஜி டிஸ்டிரிக்ட் முன்சீப் ச.வேதநாயகம் பிள்ளையவர்கள் (1826-1889) இயற்றியது, முதற் பதிப்பு: 1879.
– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் முதலாவதாக இடம்பெற்ற நாவல்.
– பிரதாப முதலியார் சரித்திரம், நூற்றாண்டு விழா புதிய பதிப்பு: அக்டோபர் 1979, வே.ஞா.ச.இருதயநாதன் (வேதநாயகம் பிள்ளை மகன் பேரர்), ஆவடி, சென்னை.