பிரதாப முதலியார் சரித்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2024
பார்வையிட்டோர்: 1,621 
 
 

(1879ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். அதுவரை செய்யுள் வடிவ புனைகதை இலக்கியங்களே இருந்துகொண்டிருந்த தமிழிற்கு உரைநடை வடிவிலான புனைகதை இலக்கிய வகை இந்நூல் வழியாக அறிமுகமானது. அவ்வகையில் இது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் முதலாவதாக இடம்பெற்ற நாவல்.

அதிகாரம் 41-43 | அதிகாரம் 44-46

44-ஆம் அதிகாரம்

ஆண்பால் பெண்பால் மயக்கம்

பெண்ணைப் பெண் விரும்பல் – இராஜாங்க பாரம்பரைப் பாத்தியம்

விக்கிரமபுரி குடியரசாவதற்கு முந்தி, அதை ஆண்டு வந்த அரசனுக்குப் புருஷப் பிரஜை யில்லை யென்பதை முன்னமே தெரிவித்திருக்கிறேன். அவருக்கு அதி ரூப சௌந்தரியமான ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தது. அந்தப் பெண் பெயர் ஆனந்த வல்லி அந்தக் குழந்தை அதிபால்லியமா யிருக்கும்போது, தாயும் தகப்பனும் இறந்து போய் விட்டதால், பாட்டியாருடைய கையிலே வளர்ந்தது. ஞானாம்பாளுக்குப் பட்டாபிஷேகமான பிறகு, அந்தக் குழந்தையைத் தன் குழந்தைபோற் பாவித்து, மிகுந்த அன்போடும் கரிசனத்தோடும் ஆதரித்து வந்தாள். தகுந்த உபாத்தியாயர்களைக் கொண்டு வித்தியாப்பியாசம் செய் வித்தது மன்றி, தன்னாற் கூடிய போதும், அந்தப் பெண்ணுக்குச் சன்மார்க்கங்களையும், இராஜ நீதிகளையும் ஞானாம்பாள் போதித்து வந்தாள். அந்தப் பெண்ணுக்குப் பக்குவ காலம் சமீபித்த உடனே, அவளுக்கும் எங்களுக்கும் முக தரிசன மில்லாமல், அந்தப்புர வாசமா யிருந்தாள். அவளுடைய அந்தஸ்துக் குரிய காரியங்களில் ஒரு குறைவு மில்லாமல், சகல மேம்பாடுகளும் உபசார மரியாதைகளும் நடந்து வந்தன.

ஞானாம்பாள், ஆண் வேஷம் பூண்டு கொண்டு அரசு செய்வது தனக்கு அரிகண்டமா யிருப்பதால், தான் பெண்பால் என்பதை ஜனங்களுக்குத் தெரிவிக்க வேண்டு! மென்று அனைக ஆவர்த்தி அபேஷித்தாள். நான் கூடா தென்று தடுத்த படியால், என் பிரியத்துக்காக அவள்; ஆண் வேஷத்துடன் அரசு செய்து வந்தாள். ஆனால்,. இராஜியபாரத்தைச் சேர்ந்த பல கவலைகளினாலும், தன் னுடைய உற்றார் பெற்றாரைப் பிரிந்திருக்கிற ஏக்கத் தினாலும், ஞானாம்பாள் சில நாளாய்ச் சந்தோஷமாயிராமல், தேகம் மெலிந்து போனாள். அவள் ஒரு நாள் என்னை நோக்கி, நெட்டுயிர்ப்புடன் சொல்லுகிறாள்:- “எப்படிப்பட்ட முமூட் சுக்களாயிருந்தாலும், பிரபஞ்ச மாயா விகாரத்தில் மதிமயங். காதிருப்பது அதி துர்லப மென்று பெரியோர்கள் சொல்லு கிறார்கள். நமக்குப் பிரபஞ்ச மாயை யுடனே கூட இராஜ யோகமும் வந்து விட்டதால், நாம் சித்தம் பேதித்து, நம்மு டைய உற்றார் பெற்றார்களை யெல்லாம் மறந்து விட்டோம். நாம் அவர்களை மறந்துவிட்டது போல, அவர்கள் நம்மை ஒரு நிமிஷ மாவது மறந்திருப்பார்களா? நாம் ஆதியூரை விட்டுத் தப்பிப் போன சமாசாரம் கேள்விப் பட்ட உடனே, அவர்கள் பிராணனையும் வைத்திருப்பார்களா? அவர்களை இன்னொரு தரம் காண்போமா? அவர்களுடைய அமிருத வாசகத்தைக் கேட்போமா? என்னுடைய அத்தையாரைப் போலப் புண்ணியவதிகளை நான் எந்த உலகத்திலே காணப் போகிறேன்?” என்று சொல்லி, முத்து மாலை போற் கண் ணீர் விட்டுத் தேம்பினாள். அதைக் கேட்ட வுடனே, எனக் கும் சகிக்கக் கூடாத சஞ்சலம் உண்டாகி, சிறிது நேரம் பொருமினேன். மறுபடியும்,ஞானாம்பாள் என்னைப் பார்த்து, “உங்களுடைய பிரியத்துக்காக, இது வரையும் அபாரமான இந்த இராஜாங்க பாரத்தைச் சுமந்தேன். இனிமேற் சுமக்க என்னால் முடியாது. இருக்கிற இடம் தெரியாமல், எவ்வ ளவோ அடக்க ஒடுக்கமா யிருக்க வேண்டிய ஸ்திரீ ஜாதியா கிய நான், புருஷ வேஷம் பூண்டு கொண்டு, எத்தனை நாளைக் கஷ்டப் படுவேன்? இனி என்னால் நிர்வகிக்கச் சாத்திய மில்லாத படியால், நீங்கள் என் தலை மேலே தூக்கி வைத்த பாரத்தை இறக்கி விடும்படி கிருபை செய்யப் பிரார்த்திக் கிறேன்” என்றாள். நான் அவளைப் பார்த்து, ”நான் செய்ய வேண்டிய காரியம் இன்ன தென்று சொன்னால் உடனே அந்தப் படி செய்கிறேன்’ என்றேன்.

ஞானாம்பாள் என்னைப் பார்த்து, “நம்முடைய ஊரில் நமக்கு என்ன பாக்கியம் குறைவா யிருக்கிறது? இந்த ஊர்க் குடிகளுடைய சௌக்கியத்துக்காக நாம் இந்த அரசாட்சியை ஏற்றுக் கொண்டதே யல்லாது, நமக்கு ஏதேனும் இலாபம் உண்டா? குடிகளுக்கு வேண்டிய சௌக்கியங்களையும், சட்ட திட்டங்களையும், நாம் ஏற்படுத்திவிட்ட படியால், இனிமேல் இந்த ஊரை ஆளுகிறவர்களுக்கு அதிகப் பிரயாசம் இராது. இந்த ஊரை முன்னே ஆண்ட இராஜாவின் புத்திரி யாகிய ஆநந்த வல்லி கூடிய வரையிற் கல்வி கற்று, குணசாலி யாகவும், பட்டத்துக்கு யோக்கியமாயும் இருப்பதால், அவ ளுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து, நாம் நம்முடைய ஊருக்குப் போவது நன்மையென்று நினைக்கிறேன்” என் றாள். நான் ஞானாம்பாளைப் பார்த்து, ‘உன்னுடைய இஷ் டப்படி நடக்க, என்னால் ஆடங்க மில்லை. ஆனால், ஜனங்கள் அந்த இராஜ புத்திரிக்கு மகுடம் சூட்டச் சம்மதிப்பார் ளோ,சம்மதியார்களோ தெரியவில்லை. அன்றியும், இந்த நாடு மலைகளாலும் சமுத்திரங்களாலும் சூழப்பட்டிருப்ப தால், நம்முடைய ஊருக்கு எந்த மார்க்கமாய்ப் போகிற தென்றும் தெரியவில்லை. அந்த விவரங்களெல்லாம் தெரிந்து கொண்டு, பிறகு அந்த இராஜ கன்னிகைக்கு மகுடாபிஷே கம் செய்விப்பதைப் பற்றி யோசிக்கலாம். அது வரையில் நம்முடைய எண்ணம் பிறர் அறியாதபடி இரகசியமாயிருக்க வேண்டும். இராயரும், அப்பாஜியும் அரசாண்ட காலத் தில், டில்லிப் பாச்சா ஒரே மாதிரியான மூன்று விக்கிரங் களை அனுப்பி, அவைகளின் தார தம்மியங்களைத் தெரிவிக் கும்படி, நிருபம் அனுப்பினான். மூன்றும் ஒரே தன்மையா யிருந்த படியால், அவைகளின் உயர்வு தாழ்வு தெரியாமல், எல்லாரும் மயங்கினார்கள். அப்பாஜி அந்த விக்கிரங்களின் காதுத் தொளை வழியாக ஈர்க்குகளை விட்டுப் பார்த்தான். ஒரு விக்கிரகத்தின் காதிலே விட்ட ஈர்க்கு, மற்றொரு காது வழியாகப் புறப்பட்டது. இன்னொரு விக்கிரகத்துக்கு, வாய் வழியாகப் புறப்பட்டது. மற்றொரு விக்கிரகத்தின் காது வழியாய் விட்ட ஈர்க்கு, வெளியே வராமல், உள்ளே தங்கி விட்டது. அந்த மூன்றாவது விக்கிரகம் போல, எவன் இரக சியங்களை வெளியே விடாமல், உள்ளே அடக்குகிறானோ அவன் உத்தம னென்றும், எவர்கள் காதினால் கேட்டதை வெளியே கொட்டி விடுகிறார்களோ, அவர்கள் மத்திமரும் அதமரு மென்றும், அப்பாஜி பொருள் விடுவித்தான். அப் படிப் போல், நாமும் இரகசியம் காப்பாற்ற வேண்டும்” என்றேன். நான் சொன்னது சரி யென்று ஞானாம்பாளும் அங்கீகரித்துக் கொண்டாள்.

அதற்குச் சில நாளைக்குப் பின்பு, ஒரு நாட் காலையில், மந்திரி பிரதானிகள் முதலிய பெரிய உத்தியோகஸ்தர்களும், பெரிய பிரபுக்களும், இன்னும் அநேக ஜனங்களும் அரண் மனையில் வந்து,இராஜ சேவைக்குக் காத்திருப்பதாகக் கேள் விப்பட்டு, நானும் ஞானாம்பாளும் எழுந்து போய், வந்தவர் களுக்குப் பேட்டிக் கொடுத்தோம். அவர்கள் பெருங் கூட்டமாய் வந்திருந்த படியால், நாங்கள் ஆச்சரியம் அடைந்து, “என்ன விசேஷம்?” என்று வினவினோம். வயோதிகர்க ளான சில பெரிய பிரபுக்கள் எழுந்து, ஞானாம்பாளைப் பார்த்து ”மண்டலேச்வரா! மகி பரிபாலா!! நாங்கள் ஒரு பெரிய காரியத்தை உத்தேசித்து வந்திருக்கிறோம். தாங் கள் ஒரு ஆக்ஷேபமும் சொல்லாமல், எங்களுடைய மனோ ரதத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றார்கள். ஞானாம் பாள் அவர்களை நோக்கி, “நீங்கள் உத்தேசித் திருக்கிற காரியம் யுக்தமாயும் – சாத்தியமாயு மிருக்கிற பக்ஷத்தில் அந்தப்படி செய்யத் தடையில்லை. ஆனால், காரியம் இன்ன தென்று தெரிந்து கொள்ளாமல், முந்தி வாக்குத் தத்தம் செய்வது சரி யல்லவே” என்றாள். அந்தப் பிரபுக்கள் ஞானாம்பாளைப் பார்த்து, “நீங்கள் கலி யாண மில்லாமல் பிரமசாரியா யிருப்பது, எங்களுக்குப் பெரிய மனோ வியாகுலமா யிருக்கிறது. தக்க பருவத்தில் கலியாணம் செய்யா திருப்பதால், உங்களுடைய தேசம் நாளுக்கு நாள் இளைத்துப் போகின்றது. நீங்கள் சுகமா யிருந்தால் தானே, எங்களுக்கும் சுகம் உண்டு. உங்களிடத் தில் நாங்கள் எத்தனையே உபகாரங்களைப் பெற்றுக் கொண் டோம். உங்களுக்கு நாங்கள் என்ன பிரதி உபகாரம் செய் யப் போகிறோம்? உங்களுடைய கலியாண மகோற்சவத் தைப் பார்க்க வேண்டு மென்று எங்கள் கண்கள் அபேக்ஷிக் கின்றன. எங்களுடைய முந்தின இராஜாவின் மகளுடைய அழகும், குணமும் உங்களுக்கு நன்றாய்த் தெரியும். அந்தப் பெண்ணி ணுடைய பாட்டியார் முதலான பந்துக்களுடைய கருத்தையும் அறிந்தோம். அவர்கள் எல்லாரும் அந்தப் பெண்ணை உங்களுக்குக் கன்னிகா தானம் செய்ய பூரண சம்மதமா யிருக்கிறார்கள். அந்தப் பெண்ணி னுடைய கருத். தும் தங்களையே நாடி யிருப்பதாகவும் தெரிந்துகொண் டோம். உங்களையும், அந்தப் பெண்ணையும், அதிருஷ்டம் வந்து மடியைப் பிடித்து இழுக்கும்போது நீங்கள் வேண்டாம் என்பீர்களா? அந்தக் கன்னிகா ரத்தினத்துக்குத் தக்க மாப்பிள்ளை நீங்களே! உங்களுக்குத் தக்க பெண் அந்தப் பெண்ணே யன்றி வேறில்லை” என்றார்கள். இதைக் கேட்டவுடனே, ஞானாம்பாள் திடுக்கிட்டுத் திகைத்து, ஒன்றும் பேசாமல், என் முகத்தைப் பார்த்தாள். அவள் பொய் பேசுகிற வளாயிருந்தால், சமயாநுகூலமாக எப்படி யாவது பொய் சொல்லித் தப்பித்துக் கொள்ளுவாள். பொய்யும் சொல்லக் கூடாமல்,மெய்யும் சொல்லக் கூடாமல் இருந்த படியால், அவள் இவ்வாறு மலைப்பதற்கு இடமாயிற்று. நான் அந்தப் பிரபுக்களைப் பார்த்து, “நீங்கள் சொல்லுவது பெரிய காரியமானதால், உடனே எப்படி மறுமொழி சொல்லக் கூடும்?” என்றேன். அவர்கள் என்னைப் பார்த்து. “உபராஜ பிரபுவே! இந்த விஷயத்தில் ஆலோசிக்க வேண்டிய சங்கதி என்ன இருக்கிறது? பெண்ணினுடைய குணத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறீர்களா? அல்லது குலத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறீர்களா? எல்லா விஷயமும் உங்களுக்குத் தெரிந்தது தானே. இன்றைக்கு மறுமொழி சொல்லக் கூடாவிட்டாலும், நாளைக்காவது, எங்களுடைய இஷ்டப் படி மறுமொழி சொல்ல வேண்டும். உபராஜாவாகிய நீங்கள், அந்த மகாராஜாவுக்குச் சொல்லி, அகத்தியம் எங்களுடைய இஷ்டப்படி நிறைவேற்ற வேண்டும். அந்த இராஜ கன்னிகையின் மனம் மகாராஜாவையே நாடியிருப் பதால், மகாராஜா அந்தப் பெண்ணை வேண்டா மென்றால், பெண் பாவம் அல்லவா? ஆகையால் நீங்களும் முயற்சி செய்து இந்தக் காரியத்தை நிறை வேற்றினால், உங்களுக்கும் வேறே பெண் தேடி, விவாகம் செய்விக்கிறோம். அநுகூல மான மறுமொழியைக் கேட்பதற்காக நாளைக்கு ஆவலுடனே வருவோம்” என்று சொல்லி விட்டு, எல்லாரும் போய் விட் டார்கள். அவர்கள் போன வகையைப் பார்த்தால், தங்களு டைய வார்த்தையை நாங்கள் அர்த்தாங்கீகாரம் பண்ணிக் கொண்ட தாக நினைத்துப் போனதாகத் தோன்றிற்று. எனக்கும் பெண்தேடி விவாகம் செய்வதாக அவர்கள் சொன்னவுடனே, துயர முகமாயிருந்த ஞானாம்பாளுக்குப் புன்னகை உண்டாகி, பிறகு அடக்கிக் கொண்டாள்.

அவர்கள் எல்லாரும் போன பிறகு, ஞானாம்பாள் என்னைப் பார்த்து, துக்க முகத்துடனே சொல்லுகிறாள்: “விளையாட்டுச் சண்டை வினைச்சண்டையானது போல, நான் ஆண் வேஷம் பூண்டு கொண்டு பேடிசம் பண்ணி னது, இவ்வளவு பிரமாதமாய் விளைந்திருக்கிறது. நான் ஆதியிலே உண்மையைச் சொல்லி யிருந்தால், இவ்வளவு விபரீதம் நேரிடுமா? என்னுடைய ஆண் வேஷத்தை நம்பி எத்தனை பேர்கள் மோசம் போகிறார்கள்! முக்கிய மாக, அந்த இராஜபுத்திரியி னுடைய நிலைமை மிகவும் பரிதாபத்துக் குரியதா யிருக்கிறது. அந்தப் பெண் என்னை விரும்புவ தாக அந்தப் பிரபுக்கள் சொன்னது வாஸ்தவமா யிருக்கிற பக்ஷத்தில், அவளை நான் கொள்ள மாட்டே னென்று நிராகரிப்ப தாக அவள் கேள்விப்படும் போது, அவளுக்கு எவ்வளவு துக்கத்துக்கு இடமாயிருக் கும்? தாய் தகப்பன் இல்லாத ஒரு அருமை யான பெண்ணை நாம் இவ்வகையாய்த் துன்பப் படுத்துவது தகுமா? அது பெண் துரோகம் அல்லவா? ஆகையால், காரியம் இன்னும் பிரமாதமாய் வளருகிறதற்கு முன், உண்மையைச் சொல்லி விடுவது உத்தம மாகக் காணப் படுகிறது. நாளைத் தினம் அவர்கள் வந்து கேட்கும் போது, நான் பெண் ணென்பதை அவர்களுக்குத் தெரி விக்க யோசித்திருக்கிறேன்” என்றாள். நான் அவளைப் பார்த்து, “நீ சொல்வதெல்லாம் வாஸ்தவந்தான். ஆனால், இப்போது உண்மையை வெளியிடுவது விவேக மாகத் தோற்ற வில்லை. ஜனங்கள் எல்லாரும் உன்னைப் புருஷ னென்றே நினைத்து, சகல உபசார மரியாதைகளும், வணக்கமும், செய்து வருகிறார்கள். நீ பெண்ணென்று திடீரென்று கேள்விப்பட்ட மாத்திரத்தில், அவர்க ளுடைய புத்தி எப்படி யிருக்குமோ தெரியாது. இந்தத் தேசத்தார் ஸ்திரீகளை நிகிருஷ்ட மாக எண்ணி, அவர்க ளைப் பட்டாபிஷேகத்துக்கு யோக்கியர்கள் அல்ல வென்று நினைக்கிறார்கள். அன்றியும், நாம் அங்கே உத்தியோகஸ் தர்களையும் படைகளையும் நீக்கி, அநேக ருடைய விரோதங்களைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆகை யால், இந்தச் சமயத்தில் உண்மையைச் சொல்வது சரியல்ல வென்று நினைக்கிறேன்” என்றேன். உடளே அவள், “நான் உண்மைக்காகத் தலை கொடுக்கச் சித்தமா யிருக்கிறேன். ஆனால், ஒரு காரியத்தைப் பற்றி மட்டும் யோசிக்கிறேன்” என்று சொல்லி, அந்தக் காரியம் இன்ன தென்று தெரிவிக்காமல் மௌனமா யிருந்தாள். அவள் குறித்துச் சொன்ன காரியம் இன்ன தென்று எனக்கு நன்றாக விளங்கிற்று. அவள் உண்மைக்காகத் தான் தலை கொடுக்கச் சித்தமா யிருந்தாலும், எனக்கு என்ன பொல் லாங்கு விளையுமோ வென்று மட்டும் ஆலோசிப்பதாகத் தெரிந்து கொண்டேன். ஞானாம்பாள் என்னிடத்தில் வைத் திருக்கிற அணை கடந்த அன்பி னிமித்தம், அவள் பல சங் கடங்களுக்கு உட்பட் டிருப்பதை நினைக்கும் போது, என் மனம் பதைத்து,உலை மெழுகு போல் உருகிற்று. யாதொரு அபாயமு மில்லாமல் அவளை இரக்ஷிக்க வேண்டு மென்று அடிக்கடி நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டேன்.

மறு நாட் காலையிலும், மந்திரி பிரதானி முதலிய சகல உத்தியோகஸ்தர்களும், ஊரிலுள்ள சகல பிரபுக்களும் அரண்மனையில் வந்து, கூட்டம் கூடினார்கள். அவர்கள் ஞானாம்பாளைக் கண்டவுடனே, “மகா ராஜாவே! நாங்கள் நினைத்தகாரியம் நிறைவேற வேண்டுமென்று, கோயிலுக்குக் கோயில் பிரார்த்தனை செய்து கொண் டிருக்கிறோம்.எங் களுடைய குல தெய்வம் இந்தக் காரியத்தை அகத்தியம் கூட்டி முடிக்கு மென்று நிச்சயமாய் நம்பியிருக்கிறோம். அதற்குத் திருஷ்டாந்த மாக, நாங்கள் வழியில் வரும்போது நல்ல நல்ல சகுனங்கள் கண்டோம். இந்தக் கலியாணம். முடிய வேண்டு மென்று விரும்பாதவர்கள் ஒருவரு மில்லை. அரைஞாண் கட்டின பிள்ளைகள் முதலாகச் சகலரும் ஆவ லாகக் காத்துக் கொண் டிருக்கிறார்கள். இத்தனை ஜனங்க ளுடைய எண்ணத்துக்கு விரோதம் செய்ய மாட்டீர் களென்று நம்புகிறோம்” என்றார்கள்.

ஞானாம்பாள் அவர்களை நோக்கி, “இத்தனை ஜனங் களுடைய அபேக்ஷைக்கு விரோதம் செய்வது எனக்கு மெய்யாகவே வருத்தமாயிருக்கிறது. ஆனால், என்னாலே கூடாத காரியத்துக்கு நான் என்ன செய்வேன்? அந்தப் பெண்ணை நான் கொள்வதற்கு ஒரு பெரிய பிரதிபந்த மிருக்கிறது. அது ஒருவராலும் நிவர்த்தி செய்யக் கூடா ததாயிருக்கிறது” என்றாள்.

ஜனங்கள், “அந்தப் பிரதிபந்தம் இன்ன தென்று தெரிவித்தால், எங்களுடைய பிராணனைக் கொடுத் தாயி னும், அல்லது எங்களுடைய ஆஸ்திகளை யெல்லாம் செல வழித் தாயினும், அந்தப் பிரதிபந்தத்தை நிவர்த்தி செய் கிறோம்” என்றார்கள்.

ஞானாம்பாள், “அந்தப் பிரதிபந்தத்தை நிவர்த்தி செய்ய ஒருவராலும் கூடாது. பெண்ணை ஆணாக்கவும் ஆணைப் பெண்ணாக்கவும் எப்படிக் கூடாதோ, அப்படியே இதுவும் கூடாத காரியந்தான். அன்றியும், நீங்கள் என்னைக் கலியாண மில்லாத பிரமசாரி யென்று நினைத்து, எனக்கு கல்யாணம் செய்விக்க முயலுகிறீர்கள். நான் பிரமசாரி யல்ல” என்றாள்.

ஜனங்கள், ‘உங்களுக்கு முன்னமே கலியாணம் நடந் திருந்தாலும் கூட, அந்த இராஜ கன்னிகையை உங்களுக் குத் துதிய விவாகம் செய்ய எல்லாரும் சம்மதிக்கிறார்கள். சகல சங்கதிகளையும் நாங்கள் முன்னமே கலந்து பேசிக் கொண்டுதான், உங்களிடத்துக்கு வந்தோம். ஒரு பெண்சாதியிருக்கும் போது, வேறு ஸ்திரீகளை விவாகம் செய்வது சாஸ்திரோக்தமே தவிர, அசாஸ்திரியம் அல்லவே என்றார்கள்.

ஞானாம்பாள், “உங்களுடைய அபிப்பிராயப் படி பல ஸ்திரீ விவாகம் சாஸ்திரோக்தமாயிருந்தாலும், கொள்ளு கிறவனுடைய சம்மதம் வேண்டாமா?” என்றாள்.

ஜனங்கள், “கொள்ளுகிறவனுடைய சம்மதத்தைக் கேளாமலே, இந்தத் தேசத்தில் கலியாணங்கள் நடப்பது வழக்கமாயிருக்கின்றது. நாங்கள் அப்படிச் செய்யத் துணியாமல், உங்களுடைய சம்மதத்தைக் கேட்கவே வந் திருக்கிறோம். இத்தனை ஜனங்களுடைய பிரார்த்தனையை நிராகரிப்பது நியாயமா? எங்களைப் பாரா விட்டாலும், தாய் தகப்பன் இல்லாத அந்தப் பெண் முகத்தையாவது பாருங்கள்! அந்தப் பெண் உங்களை வேண்டு மென்று விரும்பும் போது, நீங்கள் வேண்டா மென்று தள்ளி விடுவது பெண் துரோகம் அல்லவா?” என்றார்கள்.

ஞானாம்பாள், “அந்தப் பெண்ணுக்காக இவ்வளவு பரிந்து பேசுகிற நீங்கள், அந்தப் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய ஒரு முக்கிய மான நன்மையைச் செய்யாமலிருக் கிறீர்கள். அந்த நன்மையைச் செய்தால், இராஜராஜாக்க ளெல்லாரும் அந்தப் பெண்ணை விரும்புவார்களே!” என்றாள்.

ஜனங்கள், “அந்தப் பெண்ணுக்கு நாங்கள் என்ன நன்மை செய்யாமல் விட்டுவிட்டோம். அது இன்னதென்று உத்தரவானால், இந்த நிமிஷத்தில் செய்கிறோம். இது சத்தியம், சத்தியம்” என்றார்கள்.

ஞானாம்பாள், “அந்தக் கன்னிகையினுடைய தகப்ப னார் புருஷ சந்ததி யில்லாமல் இறந்து போன உடனே, பாரம்பரைப் பாத்தியக் கிரமப் படி அந்தப் பெண்ணுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டியது நியாயமா யிருக்க, நீங்கள் அந்தப் படி செய்யத் தப்பிப் போய் விட்டீர்கள்! ஒரு இராஜா இறந்த உடனே பாரம்பரைப் பாத்தியக் கிரமத்தை அநுசரிக்காமல், புது இராஜாவை நியமிக்கிறதா யிருந்தால், பெரிய கலகங்களுக்கு ஆஸ்பத மாகும். எப்படி யென்றால், பலவானா யிருக்கிற ஒவ் வொருவனும், தன்னை நியமிக்க வேண்டும், தன்னை நிய மிக்க வேண்டு மென்று, வல்லடி வழக்குச் செய்வான். ஒவ்வொருவனுடைய கட்சியிலும் பலபேர் சேர்ந்து, யுத்தம் தொடங்கி, ஒருவரையொருவர் மாய்த்துக் கொள்ளு வார்கள். நியாய பரிபாலனம் நடவாமல் நின்று போகுமானதால், ஊரிலே திருட்டுகளும், புரட்டுகளும், கொள்ளை களும், கொலைகளும் அதிகரிக்கும். இது தான் சமய மென்று அந்நிய தேசத்துச் சத்துருக்களும் பிரவேசித்து, சர்வ கொள்ளை யடிப்பார்கள்.ஒரு இராஜா இறந்த வுடனே, அவனுடைய சந்ததி ஆணா யிருந்தாலும், பெண்ணா யிருந்தாலும், அந்தச் சந்ததிக்கே பட்ட மாகிற பக்ஷத்தில், ஒரு கலகத்துக்கும் இடமில்லை. அது சர்வ ஜன சம்மதமாயிருக்கும். இராஜாவினுடைய புத்திரன், அல்லது புத்திரிகை விஷயத்தில், சகல ஜனங்களுக்கும் அதிக கௌரவமும், மதிப்பும், பயபக்தியும் உண்டாகும். இராஜா வுக்குச் சாவில்லை என்கிற நீதி வாக்கியப்படி, ஒரு அரசன் எந்த) நிமிஷத்தில் இறந்து போகிறானோ, அந்த நிமிஷத்தில் அவனுடைய வார்சுக்குத் தேசாதிபத்தியம் உண்டாகிறபடியால், நியாய பரிபாலனங்க ளெல்லாம் நில்லாமல், தொடர்ச்சியாய் நடந்துவரும். ஆண் சந்ததி யாவது, பெண் சந்ததியாவது, அல்லது வேறே உரிமைக் காரனாவது இல்லாமல், ஒரு அரசன் மாண்டு போகிற பக்ஷத்தில். புது அரசனை நியமிக்கலாமே யல்லாது. தகுந்த சுதந்தரவாளிகளிருக்கும் போது புது அரசனை நியமிப்பது அசங்கதம். சகல விஷயங்களும் மகா மந்திரா லோசனைச் சபையாருடைய அனுமதிப்படி நடக்கிறபடியால், இராஜாவின் வார்சுகள் திறமை யற்றவர்களா யிருந்தாலும் கூட, அவர்களை நியமிக்கத் தடையில்லை. இராஜாவி னுடைய வார்சுகளை நியமிப்பதினால் உண்டாகிற நன்மை யையும், அதனால் விளையத்தக்க தீங்கையும், சீர்தூக்கிப் பார்க்கு மிடத்தில், தீமையைப் பார்க்கிலும் நன்மைகள் அதிகமாயிருக்கிறபடியால், பாரம்பரைப் பாத்தியக் கிரமப் படி நியமிப்பதே உசிதமாயிருக்கிறது. அப்படியே, புது அரசனையாவது, அல்லது குடியரசையாவது, நியமிப் பதனால் உண்டாகிற சாதக பாதகங்களை யோசிக்கு மிடத்தில், சாதகத்தைப் பார்க்கிலும் பாதகம் பெரிதா யிருப்பதால், புது இராஜ நியமனத்தையும் குடியரசையும் நிஷேதிக்கவேண்டியது. எல்லாருடைய கடமையாகவும் இருக்கிறது. யானையினுடைய கையிலே பூமாலையைக் கொடுத்து, அது யார் கழுத்திலே போடுகிறதோ அவனை அரசனாக நியமிப்பது, இந்த ஊர் வழக்கமாயிருக்கிறது. மனுஷர்களுடைய யோக்கியதை யானைக்கு எப்படித் தெரியக்கூடும்? அது ஒரு மூடன் கழுத்திலே மாலையைப் போட்டாலும், அவனை அரசனாக ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே! அதைப் பார்க்கிலும், இறந்துபோன இராஜாவினுடைய பாத்தியஸ்தர்களையே நியமிப்பதுக சர்வ சிலாக்கியம் அல்லவா? உங்களுடைய அதிர்ஷ்ட வசத்தால், உங்களுடைய பழைய இராஜாவின் குமாரத்தி பட்டாபிஷேகத்துக்குச் சகல விதத்திலும் யோக்கியதை உள்ளவளாயிருக்கிறாள். அந்த பெண்ணுக்கு மகுடம் சூட்ட நீங்கள் ஒரு ஆக்ஷேபமும் சொல்ல மாட்டீர்களென்று நம்புகிறேன்” என்றாள்.

ஜனங்கள், “மகாராஜாவே! உங்களைப் போல் தர்ம இராஜாக்கள், இந்த பூமண்டலத்தில் இருப்பார்களா? தங்களுடைய பட்டத்தை வேறொருவருக்குக் கொடுக்க யாராவது சம்மதிப்பார்களா? தகப்பன்) ஜீவந்தனாயிருக்கும் போது, தன் பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் செய்யச் சம்மதிக்கிறதில்லை. இப்போது இராஜாக்கள் ஒரு சொற்ப தேசத்தைச் சம்பாதிப்பதற்காக, எத்தனை உயிர்களைக் கொன்று, எவ்வளவோ பாடுபடுகிறார்கள். புராணங்களிலே சொல்லப் பட்ட இராமன், தர்மன், அரிச் சந்திரன், நளன் முதலிய அரசர்கள் கூட, நிர்ப்பந்தத்தி னால் சில நாள் இராஜாங்கத்தை விட்டு நீங்கியிருந்தார்களே யல்லாது, மனப் பூர்வமாய் விட்டவர்கள் ஒருவருமில்லை. அந்த அரசர்கள் எல்லாரும் உங்களுக்குச் சமானமாவார் களா? இப்படிப் பட்ட தர்ம ராஜாவை நாங்கள் ஒரு காலத் திலும் விடுவோமா? எங்களுடைய அபீஷ்டப் படிக்கும், உங்களுடைய மனோபீஷ்டப் படிக்கும், அந்த இராஜ கன்னி கைக்கு மகுடமும் மாலையும் சூட்டி. நீங்கள் மூவரும் கூடி அரசுபுரிவதைக்காண விரும்புகிறோம்” என்று சொல்லி சர்வ ஜனங்களும் விடை பெற்றுக் கொண்டு போய் விட்டார்கள்.

45-ஆம் அதிகாரம்

இராஜாங்க பரித்தியாகம்-தாய் தந்தையரைச் சந்தித்தல்-ஆநந்த வல்லியின் மகுடாபிஷேகம்

ஜனங்கள் எல்லாரும் போன பின்பு, ஞானாம்பாள் என் னைப் பார்த்து, ”அத்தான், அந்த ஜனங்கள் சொல்வதைப் பார்த்தால் விபரீதமா யிருக்கிறது. அவர்கள் நம்முடைய இஷ்டப்படி அந்தப் பெண்ணுக்குப் பட்டாபிஷேகம் செய்யச் சம்மதித்தது சந்தோஷ மான காரியந்தான். ஆனால், அந்தப் பெண்ணுக்கு நான் மாலை சூட்டி, ரோம் பட்டணத்தை ஒரு காலத்திலே மூவேந்தர்கள் ஆண்டது போல, நீங்களும் நானும் அந்தப் பெண்ணும் ஆகிய மூவரும் கூடி, அரசாள வேண்டு மென்பது, ஜனங்களுடைய தாற்பரியம் போலக் காணப் படுகிறது. இந்தத் தர்ம சங்கடத்துக்கு என்ன செய்கிறது?” என்றாள். நான் ஞானாம்பாளைப் பார்த்து “நீ சம்மதித்துத் தானே அந்தப் பெண்ணுக்கு மாலை சூட்ட, வேண்டும். உன்னுடைய சம்மத மில்லாமல் யார் என்ன செய்யக் கூடும்? அந்தப் பெண்ணுக்குச் சீக்கிரத்தில் மகுடா பிஷேகம் செய்து விட்டு, நாம் ஒருவருக்கும் தெரியாமல் இந்த ஊரை விட்டுப் புறப்பட்டுக் கம்பி நீட்டி விட்டால், அப்பால் ஜனங்கள் என்ன செய்வார்கள்? ஆகையால், நீ ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம்” என்று அவளுக்குத் தேறு தல் சொன்னேன்.

அன்றையத் தினம் சாயரக்ஷை வீதிக்கு வீதி பேரிகை முழக்கமும், ஜனங்களுடைய சந்தோஷ ஆரவார மும்கேட்டு, ” அது என்ன சப்தம்?” என்று சாரணர்களை விசாரித் தோம். அவர்கள் எங்களைப் பார்த்து, “மகாராஜாவுக்கும், பழைய அரசருடைய புத்திரிகைக்கும், வருகிற சுக்கிரவாரம் காலையில்’ கலியாண முகூர்த்தமும், அன்றையத்தினம் சாயங்காலம் அந்த இராஜ புத்திரிகைக்குப் பட்டாபிஷேக மும், நடப்ப தாகவும், அதற்காக எல்லாரும் ஊரை அலங் கரிக்க வேண்டு மென்றும், முரசு முழக்குகிறார்கள். அதைக் கேட்டு, ஜனங்கள் எல்லாரும் ஆநந்த கோஷம் செய்கிறார்கள்” என்றார்கள். இதைக் கேட்ட வுடனே நாங்கள் பிர மித்து, சிறிது நேரம் சிலை போல அசையாமல் உட்கார்ந்தி ருந்தோம். அந்தச் சமயத்தில் மந்திரிகள் வந்து நுழைந் தார்கள். ஞானாம்பாள் அவர்களைப் பார்த்து, “முரசு அறை. யும் படி யார் உத்தரவு கொடுத்தார்கள்?” என்று வினாவி னாள். மந்திரிகள், “மகாராஜாவே! இன்று காலையில் நீங்கள் சொன்ன அபிப்பிராயத்துக்கு விரோதமாக ஒன்றும் நடக்க வில்லை. பட்டாபிக்ஷேகமும், கலியாணமும் ஒரே தினத்தில் நடக்க வேண்டு மென்பது எல்லாருடைய பிரார்த்தனையாக வும் இருக்கிறது. இந்த விஷயத்தில், எல்லாரும் ஒரே மன மாயும், ஒரே குமுக்காயும் இருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துக்கு விரோதம் செய்தால், பெரும் கலகத்துக்கு இடமாகு மென்று தோன்றுகிறது. மேலும், அந்த இராஜ. குமாரத்தி, தனக்குப் பட்டாபிஷேகம் செய்து விட்டு, நீங்கள் போய்விடுவீர்களென்று நினைத்து, தனக்குப் பட்டாபிஷேகமே வேண்டா மென்று அழுத்து நீங்கள் தன்னைக் கலியாணம் செய்து கொள்வீர்களென்று கேள்விப் பட்ட பிறகு தான், அது சந்தோஷமா யிருக்கிறது. உங்களுடைய முயற்சியினாலே தனக்குப் பட்டாபிஷேகம் ஆகிய தென்று தெரிந்து கொண்டு, முன்னையைப் பார்க்கி லும் நூறு பங்கு அதிகமாக உங்களிடத்திற் பக்ஷழம், பாச முமா யிருக்கிறது. ஆகையால், அந்தப் பெண்ணி னுடைய ஆசையைக் கெடுக்க வேண்டாம், மகாராஜாவே!” என்று சொல்லி, நாங்கள் மறுமொழி சொல்வதற்கு இட மில்லாமல், திடீரென்று சடுதியிற் போய் விட்டார்கள். இந்தக் சமாச்சாரங்களைக் கேட்ட பின்பு, முன்னே எனக் கிருந்த தைரியும் நீங்கி, என் பாடும் தடுமாற்றத்தில் வந்து விட்டது. ‘ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்” என்பது போல, நாங்கள் அந்த ஊரில் இருந்தால், ஞானாம்பாள் அந்தப் பொண்ணுக்கு அகத்தியம் தாலி கட்ட வேண்டிய தா யிருக்கிறது. மாட்டே னென்றால், ஊராருடைய பகையும் அந்தப் பெண் பழியும், சம்பாதித்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. எங்களுடைய ஊருக்குப் போகலா மென்றால், கடலும் மலைகளும் சூழ்ந்த விக்கிரமபுரியை விட்டு, இன்ன மார்க்கமாய்ப் போகிற தென்று தெரிய வில்லை. அரண்மனையில் எங்களைச் சூழ்ந்திருக்கிறவர்கள் எல்லாரும் மணமுரசு கேட்டுச் சந்தோஷிக்கிறவர்களா யிருந்தால், நானும் ஞானாம்பாளும் சகல சங்கதிகளையும் கலந்து, தாராளமாய்ப் பேசவும், சந்தர்ப்பம் இல்லாமற் போய் விட்டது.

ஒருவரையும் கூட அழைத்துக் கொண்டு போகாமல், நானும் ஞானாம்பாளும் விடிவதற்கு முன் எழுந்து, சில சம யங்களில் வெளியே உலாவப் போகிறது வழக்கமா யிருந் தது. நாங்கள் ஆதியில் விக்கிரமபுரிக்கு வந்த போது ஏறி வந்த மலையின் மேல் ஏறி உலாவுவதும், அந்த மலைமேல் இருக்கிற அரண்மனையில் இரண்டொரு நாள் வசிப்பதும் வழக்கமாயிருந்தது. அந்த வழக்கப்படி போகிறவர்கள் போல, நானும் ஞானாம்பாளும் ஒரு நாள் நடுச் சாமத்தில் எழுந்து, வேறொருவரையும் கூட அழைத்துக் கொண்டு போகாமல், நாங்கள் மட்டும் புறப்பட்டு போய், அந்த மலை மேல் ஏறினோம். ஏறின உடனே நான் ஞானாம்பாளைப் பார்த்து, “இனிமேல் இந்த ஊரில் இருப்பது சரியல்ல; ஆனால், நம்முடைய ஊருக்காவது, ஆதியூருக்காவது எந்த மார்க்கமாய்ப் போகிற தென்று தெரியவில்லை. நாம் முன்னே வந்த வழியாய்ப் போகலா மென்றால், துஷ்டமிருகங்கள் நிறைந்த காடுகளைத் தாண்டி எப்படிப் போகக் கூடும்?” என்றேன். ஞானாம்பாள் என்னைப் பார்த்து, “இந்த ஊரிலிருந்து பெண்ணும் பெண்ணுங் கலியாணம் செய்து கொள்வதைப் பார்க்கிலும், அந்த மிருகங்களுடன் வாசம் செய்வது நலமாகத் தோன்று கிறது” என்றாள். அவள் மறுபடியும் என்னைப் பார்த்து, “நாம் மூன்னே ஏறி வந்த மலையின் தென் புறத்து வழியாக இறங்கிப் பார்ப்போம். கடவுளுடைய கிருபையால், அந்தக் காடுகளைக் கடந்து போவதற்குத் துகுந்த மார்க்கம் கிடைத்தாலும் கிடைக்கும்” என்றாள்.

அந்தப் பிரகாரம் தென்புறத்தில் இறங்கி, அருணோதயத் துக்கு அடிவாரத்தில் வந்து சேர்ந்தோம். அடிவாரத்தில் முன்னே யிருந்த காடுகளெல்லாம் அழிக்கப்பட்டுப் போய், சஞ்சரிக்கும் படியாயிருந்தது. உடனே மனுஷர்கள் நாங்கள் ஸ்வாமிக்கு நன்றி யறிந்த ஸ்தோத்திரம் செய்து கொண்டு, தெற்கு வழியாகக் கடு நடையாக நடந்து போனோம். ஞானாம்பாள் ஆண்வேஷத்தை மாற்றிப் பெண் வடிவாகவே வந்தாள். ஒரு பெரிய இராஜாங்கத் தையும், திவ்விய சுந்தரமான ஒரு இராஜ புத்திரியையும் வேண்டாமென்று விட்டு விட்டு ஓடுகிறவர்கள், எங்களைத் தவிர வேறொருவரும் இருக்கமாட்டார்கள்.

பயம் பின்னேயிருந்து எங்களைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு போனதால், ஓடுகிற சிரமம் கூடத் தெரியாமல். காத வழி தூரம் ஓடினோம். பிறகு கொஞ்சத் தூரத்தில் ஒரு பெரிய கூடாரம் அடிக்கப்பட்டிருந்தது. “யாரோ வந்து கூடாரம் அடித்திருக்கிறார்கள்” என்று நாங்கள் பேசிக்கொண்டு, அந்தக் கூடாரத்துக்கு நேரே போய். உள்ளே நுழைந்தோம். தேவராஜ பிள்ளையும், களகசபை யும் உள்ளே யிருந்தவர்கள், எங்களைக் கண்டவுடனே, ஆவலுடன் ஓடி வந்து, தழுவிக்கொண்டு, சற்று நேரம் அங்கலாய்த்து, பிறகு களிகூர்ந்தார்கள். நான் தேவராஜ பிள்ளையைப் பார்த்து, “ஐயா! நாங்கள் பெரிய ஆபத்துக்குத் தப்பி ஓடி வந்திருக்கிறோம். சில விசை யாராவது எங்களைத் தொடர்ந்து வந்தாலும் வருவார்கள். ஆகையால், உடனே நாம் புறப்பட்டு ஆதியூருக்குப் போவது நன்மை. வழியிற் போகும்போது சகல சமாசாரங்களும் சொல்லுகிறேன்” என்றேன். உடனே இரண்டு பண்டிகளிற் குதிரைகள் பூட்டி, ஒரு பண்டியில் ஞானாம்பாளை ஏற்றுவித்துக் கொண்டு, மற்றொரு பண்டி யில் நானும், தேவராஜ பிள்ளையும், கனகசபையும் ஏறிக் கொண்டு புறம்பட்டோம். என்னையும், ஞானாம்பாளையும் பட்டத்து யானை தூக்கிக் கொண்டு போய் மலையில் விட்டதும், நாங்கள் விக்கிரமபுரிக்குப் போய் அரசாண்டதும் முதலிய சகல சங்கதிகளையும், நான் வழியிற் போகும் போதே, தேவராஜ பிள்ளைக்கும் கனகசபைக்கும் தெரிவித் தேன். ஞானாம்பாள் புருஷ வேஷம் பூண்டு கொண்டு அரசாண்ட வகையைக் கேள்விப்பட்டு, அவர்கள் மித மில்லாத ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தார்கள். ஞானாம்பாளைப் புருஷனென்று நினைத்து, அந்த இராஜ கன்னிகையாகிய ஆனந்த வல்லி இச்சைப் பட்டதும், அவர்கள் இருவருக்கும் விவாகம் செய்வதற்காக முகூர்த்த நான் குறிக்கப் பட்டதும், அதற்காகத் தப்பி நாங்கள் ஓடி வந்ததும் கேள்விப்பட்டு, தகப்பனும் பிள்ளையும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, விழுந்து விழுந்து பொழுது விடியவும் விடியாமலிருக்கவும், நான் பாடினதும் சிரித்தார்கள். அதை மெச்சிக் கொண்டு ஞானாம்பாள் என் பாடினதும் கேள்விப்பட்டவுடனே, அவர்கள் ஆடியாடிக் மேலே கொண்டு சிரித்த சிரிப்பினால், நாங்கள் ஏறியிருந்த பண்டி கலகலத்துப் போய்விட்டது.

அவர்களுடைய சிரிப்பு அடங்கின பிறகு, என்னுடைய தாய் தந்தையர், மாமனார், மாமியார் முதலியவர்களைப் பற்றி விசாரித்தேன். தேவராஜ பிள்ளை என்னைப் பார்த்துச் சொல்லுகிறார்:- “நீங்கள் இருவரும் காணாமற் போன சமாசாரத்தை உடனே அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் சகிக்கக் கூடாத துக்கம் உடையவர்களாய் ஆதியூருக்கு வந்தார்கள். இந்தக் காட்டு வழியாக, அந்த யானை உங்களிருவரையும் தனித்தனியே தூக்கிக் கொண்டு போனதைப் பார்த்தாகச் சிலர் சொன்னபடி யால், உங்களைத் தேடுவதற்காக இந்தக் காடுகளை எல்லாம் அழித்து, நிர்மூலம் செய்ததுமன்றி, கொன்று, நாசம் செய்து விட்டோம். இப்போது நாங்கள் மிருகங்களையும் மலைகளையும் அரணியங்களையும் அணு அணுவாய் ஆராய்ந்து பார்த்தோம். இன்னமும் உங்களைத் தேடிப் பார்ப்பதற் காகவே, நடுக் காட்டிலே கூடாரம் அடித்துக் கொண்டு, அவ்விடத்திலே வாசமா யிருந்தோம். உங்கள் தாய் தந்தையர், மாமனார், மாமியார் முதலானவர்களும் எங்களுடன் கூட வந்திருந்து, உங்களைத் தேடிப் பார்த் தும், நீங்கள் அகப்பட வில்லை. அவர்கள் உங்களைப் பிரிந்த ஏக்கத்தினால் சரியான ஊண் உறக்க மில்லாமல் துரும்பு போல் இளைத்துப் போயிருப்பதால், அவர்களை இந்தக் காட்டிலிருக்க வேண்டாமென்று நாங்கள் கட்டாயப் படுத்தி, ஆதியூருக்கு அனுப்பி விட்டோம். அவர்களை நீங்கள் பார்த்தால், அடையாளம் கண்டு பிடிக்க மாட்டீர் கள்! இன்னும் ஒரு மாசம் அவர்கள் உங்களைக் காணாம லிருப்பார்களானால், அவர்கள் ஜீவித்திருப்பது பிரயாசம். எங்கள் ஊரில் உங்களை நாங்கள் நிறுத்திக் கொண்ட நிமித்தம், இப்படிப் பட்ட வியாசங்கம் உங்களுக்கு நேரிட்ட படியால், நாங்கள் பட்ட சஞ்சலம் கொஞ்சம் அல்ல. கடவுள் எங்களுடைய பிரார்த்தனைக்கு இரங்கி, மறுபடியும் உங்களை க்ஷேமமாய்க் கொண்டு வந்து சேர்த்த தற்காக, அவருக்கு நாங்கள் அத்தியந்த கிருதக்ஞர்களா யிருக்கிறோம்” எனறார். என்னுடைய தந்தை தாய் முத லானவர்கள் ஆகியூரில் வந்திருப்ப தாகக் கேள்விப் பட்ட வுடனே, அவர்களைச் சீக்கிரத்திற் பார்க்க வேண்டு மென்கிற பெரிய அவாவுடன் சென்றேன்.

முன்னே எங்களை யானை தூக்கிக் கொண்டு போன வழி சுற்று வழியாகவும், இப்போது நாங்கள் போனது நேர் வழியாகவும் இருந்த படியால், நாங்கள் புறப்பட்ட நாலாம் நாள், சாயரக்ஷை, ஆதியூரை அடைந்தோம். என்னையும் ஞானாம்பாளையும் பார்த்த உடனே, எங்களுடைய தாய் தந்தைகள் ஓடி வந்து, எங்களை ஒருவர் மாற்றி ஒருவர் கட்டிக் கொண்டு, நெடு நேரம் பிரலா பித்து, பிறகு மனந் தேறினார்கள். அவர்களுடைய தேக மெலிவையும், இளைப்பையும், பார்த்த உடனே, எங்களுக்கு, ஆற்றாமையும் துக்கமும் உண்டாகி, இனிமேல் ஒரு காலத் திலும் அவர்களை விட்டுப் பிரிகிறதில்லை யென்று சங்கேதம் செய்து கொண்டோம். நாங்கள் ஊரை விட்டுப் போன பிறகு, விக்கிரமபுரியில் நிகழ்ந்த சகல வர்த்தமானங்களையும், என்னிடத்திற் கேள்விப் பட்ட பிரகாரம், தேவராஜ பிள்ளையும் கனக சபையும் வர்ணித்து வர்ணித்து, என் தாய் தந்தையர், மாமனார், மாமியார் முதலானவர்களுக்குத் தெரியப் படுத்தினார்கள். அதைக் கேட்ட வுடனே, எல்லாருக்கும் உண்டான ஆச்சரியமும், ஆனந்தமும் அபரி மிதமே. தேவராஜ பிள்ளையுங் கனகசபையுஞ் சொன்னது போதாதென்று, அந்த அதிசயங்களை யெல்லாம் என் வாயாலே ஒரு தரங் கேட்டார்கள். பிறகு, நான் சொன்னது போதாதென்று,ஞானாம்பாள் வாயாலே ஒரு தரங் கேட்டார்கள். இவ் வகை யாக, அந்த இரவு முழு வதும் தேவராஜ பிள்ளை வீடு சந்தோஷ அமர்க்களமாயிருந் ததே யன்றி, ஒருவராவது உறங்க வில்லை.

மறு நாட் காலையில், ஞானாம்பாள், என்னிடத்திலும் என் தாயாரிடத்திலும் ஆலோசனை செய்து கொண்டு, தான் பெண்ணென்பது முதலான விவரங்களைக் காட்டி, அடியிற் கண்டபடி, ஆனந்தவல்லிக்கு ஒரு நிருபம் எழுதியனுப்பினாள்:-

என் பிரியமான தங்கையே!

மகா ராஜாவாக விக்கிரமபுரியை அரசாண்ட நான், உன்னைப் போற் பெண்ணே தவிர, ஆண் அல்ல. உபராஜாவாயிருந்து, அந்த ஊரை ஆண்டவர் தான், என்னு டைய கணவர். நான் ஆண் வேஷம் பூண்டு கொண்டு, என்னை விட்டுப் பிரிந்து போன என் பிராண நாயகரைத் தேடிக்கொண்டு வந்த இடத்தில், எனக்கு இராஜ பட்டங் கிடைத்து, நான் அரசாண்ட விவரங்களெல்லாம் உனக்குத் தெரியுமே! என்னைப் புருஷனென்று நிளைத்து, என்னை நீ பாணிக்கிரகணஞ் செய்து கொள்ள விரும்பி யிருப்பதாக நான் கேள்விப்பட்டு, அளவற்ற வியாகுலம் அடைந்தேன். பல காரணங்களால், நான் பெண்ணென்கிற உண்மையை உனக்குத் தெரிவிக்கக் கூடாமற் போய் விட்டது. உனக்குப் பட்டாபிஷேகஞ் செய்து விட்டு, நான் வெளியிலே வந்துவிடலாமென்று !நினைத்து, ஜனங்களிடத்தில் உன்னுடைய பட்டாபிஷேகத்தைக் குறித்துப் பேசினேன். அவர்களும் என்னுடைய வார்த்தையை அங்கீகரித்துக் கொண்டார்கள். பிறகு,உனக்கும் எனக்கும் விவாகமும், பட்டாபிஷேகமும் ஒரே தினத்தில் நடப்ப தாக, என்னுடைய அநுமதி யில்லாமல், ஜனங்கள் பேரிகை முழங்கிப் பிரசித்தஞ் செய்தபடியால், இனிமேல் அவ்விடத்தில் இருப்பது சரியல்ல வென்று நினைத்து, நானும் என்னுடைய நாயகரும் வெளிப்பட்டு வந்து விட்டோம். உனக்கும் மற்றவர்களுக்கும் உண்மை தெரியா தான படியால், நானும் அவ்விடத்திலிருந்து உனக்கு மாலை சூட்ட நிராகரித்தால், உனக்குப் பெரிய மனஸ்தாப மும், அவமானமும் நேரிடு மென்பதை நினைத்தே, நான் சொல்லாமல் வந்துவிட்டேன். இனிமேல் நான் ஆணென் பதை நீ சுத்தமாய் மறந்து விட்டு, உன்னுடன் கூடப் பிறந்த சகோதரி போல என்னைப் பாவிக்க வேண்டும். நான் புருஷனென்று நினைத்து, என்னிடத்தில் நீ வைத்த நேசமானது, நான் பெண்ணென்று தெரிந்த பிறகும் மாறாமலிருக்குமென்று நம்புகிறேன். முந்தின இராஜாவின் புத்திரிகையான உனக்கு, பிரகிருத இராஜாத்தியாகிய நான், என்னுடைய இராஜியத்தை உதக தாரா பூர்வமாகத் தத்தஞ் செய்கிறபடியாலும், சகல ஜனங்களும் உன்னை இராஜாத்தியாக அங்கீகரித்துக் கொண்டு முரசு அறைவித் திருப்பதாலும், இனி நீயே அரசி யென்பதற்கு ஐயமில்லை. ஆகையால், உன்னுயிர் போல மன்னுயிரைத் தாங்கி, அரசாட்சி செய்யும்படி, ஸ்வாமி உனக்குப் போதுமான ஞானத்தையும், திறமையையும், அநுக்கிரகிக்கும்படி அவரைப் பிரார்த்திக்கிறேன்.

இங்ஙனம்
ஞானாம்பாள்

அந்த நிருபத்தோடு கூட, மந்திரி பிரதானிகள் முதலான உத்தியோகஸ்தர்கள் நடக்க வேண்டிய கிரமங் களைப் பற்றி, அவர்களுக்கும் நிருபங்கள் அனுப்பினோம்.

சில நாளாய் ஆதியூரில் நாங்கள் தங்கியிருந்து போக வேண்டுமென்று, தேவராஜ பிள்ளை கனகசபை முதலான வர்கள் வருந்திக் கேட்டுக்கொண்டபடியால், நாங்கள் அந்தப் பிரகாரஞ் சில நாள் தங்கியிருந்தோம். நாங்கள் விக்கிரமபுரிக்கு அனுப்பின நிருபங்கள் போய்ச் சேர்ந்த உடனே, ஆநந்தவல்லி, மந்திரி, பிரதானிகள் முதலிய அதிகாரிகளும், இன்னும் அநேக பிரபுக்களும், ஜனங்களும், எங்களைச் கண்டுகொள்வதற்காக ஆதியூருக்கு வந்தார்கள். ஆநந்தவல்லி முன்னே புருஷ வடிவமாகப் பார்த்த ஞானாம்பாளை இப்போது பெண் வடிவமாகக் கண்ட வுடனே பிரமித்து, மதி மயங்கி, முகம் மாறி, முத்து, முத்தாகக் கண்ணீர் வடித்தாள். அதைக் கண்ட வுடனே ஞானாம்பாளும் மனம் உருகி அழுதாள். என்னுடைய தாயார் அவர்கள் இருவரையும் பிரத்தியேகமாக அழைத்து வைத்துக் கொண்டு, ஆநந்தவல்லி மனந்தேறும்படியாக அநேக உறுதிகளைச் சொன்னார்கள். ஆநந்தவல்லி ஒரு வாறு மனந்தேறின பிறகு, அவள் ஞானாம்பாளைப் பார்த்து, “அக்காள்! எனக்குத் தாயும் தந்தையுமாயிருந்து சகல உபகாரங்களையுஞ் செய்து வந்த நீங்கள். இப்போது என்னை அந்தரத்தில் விட்டுவிட்டு வந்துவிடலாமா? தெரியாத சிறு பேதையாகிய நான் எப்படி இராஜாங்கத்தை ஒன்றுந் வகிப்பேன்? ஆகையால், நீங்களும் உங்கள் நாயகரும் வந்து, முன்போல் அரசு செய்ய வேண்டும்” என்று மிகவும் நைச்சியமாய்ப் பிரார்த்தித்துக் கொண்டாள். அப்படியே, மந்திரி பிரதானிகள் முதலிய மற்றவர்களும், வேண்டிக் கொண்டார்கள். ஞானாம்பாள் ஆநந்தவல்லியைப் பார்த்து “இராஜ புத்திரி யாகிய உனக்கே அந்த இராஜாங்கம் சொந்தம். அதிற் பிரவேசிக்க எங்களுக்குப் பாத்தியமும் இல்லை; இஷ்டமும் இல்லை. நான் குடித்தன முறையை அநுசரித்து, என்னுடைய நாயகர்,மாமனார், மாமியார் முதலானவர்களை உபசரிக்க வேண்டியவளே தவிர, நான் அரசு செய்வது தகுதி அல்ல” என்றாள். என்ன நியாயம் சொல்லியும், ஆநந்தவல்லி ஒப்புக்கொள்ளாமல், அசந் துஷ்டியாகவே யிருந்தான். பிறகு, நாங்களும் எங்கள் தாய் தந்தையர் முதலியவர்களும் விக்கிரமபுரிக்கு வந்து, எங்கள் கையாலே ஆனந்தவல்லிக்குப் பட்டாபிஷேக மாவது செய்து விட்டு வரவேண்டுமென்று, எல்லாரும் ஒரே வாக்காய்க் கேட்டுக்கொண்டார்கள். அந்தப்படி நாங்களும், எங்களுடைய தாய் தந்தை முதலானவர்களும், தேவராஜ பிள்ளையும், அவருடைய குடும்பத்தாரும், விக்கிரமபுரிக்குப் போய், ஆனந்த வல்லிக்கு மகுடா பிஷேகம் செய்வித்தோம். அந்த ஊரார் தங்களை ஆண்ட மகாராஜா பெண்ணென்று தெரிந்த உடனே, முன்னையைப் பார்க்கிலும் பதின் மடங்கு அதிக விசுவாசமும், பக்தியும், உள்ளவர்களாய், ஞானாம்பாளையும் என்னையும் மட்டு மித மில்லாமல் வாழ்த்தினார்கள். நாங்கள் அந்த வாழ்த்து களையே பரம பிரயோஜனமாக எண்ணி, மன மகிழ்ச்சி யுடன் ஆதியூருக்குத் திரும்பினோம்.

46-ஆம் அதிகாரம்

ஊருக்குத் திரும்புதல்-துக்கப்படுகிறவர்கள் முடிவில் சுகம் அடைவார்கள்

நாங்கள் ஆதியூருக்குப் போய், ஒரு நாள் தங்கி யிருந்து, மறு நாள் தேவராஜ பிள்ளை முதலானவர் களிடத்தில் அனுக்ஞை பெற்றுக் கொண்டு, சத்தியபுரிக்குப் பயணம் புறப்பட்டோம். நாங்கள் போகிற மார்க்கங்களில் உள்ள ஊர்களில், வைசூரி கண்டு, அநேக ஜனங்கள் மடிந்து போனார்கள். சில பிரேதங்கள் எடுத்து அடக்கஞ் செய்யப் பாத்தியஸ்தர்களில்லாமல் மார்க்கங்களில் நாறிக் கிடந்தன. அந்தப் பிரேதங்களுக்கு நாங்கள் செலவு கொடுத்துச் சேமிக்கும்படி செய்வித்தோம். ஆதியூருக்கும் சத்தியபுரிக்கும் நடு மத்தி யான சந்திரகிரி யென்னும்
ஊர் வழியாக நாங்கள் போகும் பொழுது, ஞானாம்பாளுக்கு அம்மைக் கொப்புளங்கள் உண்டாகி, எங்களுடைய; பயணத்தை நிறுத்தும்படியாகச் சம்பவித்தது. ஞானாம் பாளுக்கு அந்த பயங்கரமான வியாதி கண்ட உடனே, எங்களுக்கு உண்டான பயத்தையும். வியாகுலத்தையும் நான் எப்படி விவரிக்கப் போகிறேன். அந்த ஊரிலே. வசிக்கிறதற்குத் தகுந்த சத்திரமாவது, சாவடியாவது, இல்லாமலிருந்தபடியால், நாங்கள் கூடாரம் அடிக்க யத்தனமாயிருந்தோம். அப்போது, “அம்மை கண்டவர்களை யெல்லாம் அந்த ஊரிலுள்ள கவர்ன்மென்று வைத்திய சாலைக்குக் கொண்டு போய் வைத்தியம் பார்க்க வேண்டு மென்றும், அப்படிச் செய்யாமல், வீடுகளிலாவது, மார்க்கங் களிலாவது, அந்த வியாதியஸ்தர்களை யார் வைத்திருக் கிறார்களோ, அவர்கள் தண்டிக்கப் படுவார்கள்” என்றும், கவர்ன்மென்றால் தண்டோரா மூலமாக விளம்பரஞ் செய்தார்கள். ஞானாம்பாளை வைத்தியசாலைக்குக் கொண்டு போக மனமில்லாமல், நாங்கள் தத்தளித்துக் கொண் டிருக்கும்போது, அவள் வியாதியாயிருப்பது எப்படியோ சில இங்கிலீஷ் டாக்டர்களுக்குத் தெரிந்து, அவர்கள் எங்களிடத்தில் வந்து, அம்மை கண்ட ஸ்திரீகளுக்கு வைத்தியசாலையில் இங்கிலீஷ் துரைசானிகள் வைத்தியஞ் செய்வதால், ஒரு குறைவும் உண்டாகா தென்றும், ஞானாம்பாளை உடனே வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டு மென்றும், முஷ்கரஞ் செய்தார்கள். நாங்கள் அந்தப் பிரகாரம் ஞானாம்பாளை வைத்திய சாலையிற் கொண்டுபோய் விட்டோம். அந்த டாக்டர்கள் எங்களுடைய அந்தஸ்தைத் தெரிந்து கொண்டு, அதற்குத் தக்கபடி ஞானாம்பாளை ஒரு தனி அறையில் வைத்து, இங்லீஷ் துரைசானிகளைக் கொண்டு சகல களுஞ் செய்வித்தார்கள். அது தொத்து வியாதி யான பக்குவங் தால், நாங்கள் அடிக்கடி போய் ஞானாம்பாளைப் பார்க்கிற தற்கு, வைத்தியர்கள் இடங் கொடுக்க வில்லை. அதனால் எங்களுக்கு உண்டான சஞ்சலம் கொஞ்சம் அல்ல, எங்களுடைய பிராணன்களையும் ஆஸ்திகளையும் ஒன்றாகத் திரட்டி, அந்த வைத்திய சாலையில் வைத்திருந்தால் எப் படியோ, அப்படிப் போல, நாங்கள் ஒரு பக்கத்திலும் தரியாமல், இரவும் பகலும் அந்த வைத்திய சாலையைச் சுற்றிக் கொண்டே திரிந்தோம்.

ஞானாம்பாள் பதினைந்து நாள் வியாதியாயிருந்தாள். அந்தப் பதினைந்து நாளும் பதினைந்து யுகம் போல் இருந் தது. வைத்தியர்கள் எங்களைக் காணும், போதெல்லாம் ”சௌக்கியம் ஆகும். செளக்கியம் ஆகும்” என்று தாது புஷ்டியாகச் சொல்லிக் கொண்டு வந்தார்கள். பதினாறாம் நாள், வைத்தியர்கள் எங்களைக் கண்ட உடனே, அழுது கொண்டு, “காரியம் மிஞ்சிப் போய் விட்டது. வியசனப் பட வேண்டாம்” என்றார்கள். அந்த வார்த்தையைக் கேட்டவுடனே, ஆயிரம் இடி எங்கள் தலை மேலே விழுந் தது போல, அடித்து, மோதி, கீழே விழுந்து, புரண்டு, புரண்டு, பொருமினோம்; புலம்பினோம்; பதறினோம்; கதறினோம். இன்னும் பல பெயர்கள் இறந்து போய் விட்டதால், அந்த வைத்திய சாலையைச் சுற்றிலும் அழு கைக் குரலே யல்லாமல், வேறு குரல் இல்லை. இத்தனை பெயர்களைக் கொண்டு போன அந்த வியாதி,எங்களையும் வந்து கொண்டு போகாதா வென்று, எத்தனையோ தரம் பிரார்த்தித்தோம். அந்தத் துர் வியாதி எங்களை நாட வில்லை. ஞானாம்பாளுடைய உத்தரக் கிரியைகளைச் செய் யும்படி, பிரேதத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கும்படி கேட்டுக் கொண்டோம். அம்மையினால் இறந்து போகிற பிரேதங்களை வெளியே கொண்டு போகாமல், அந்தக் கொல்லையிலே அடக்கஞ் செய்யும்படி, மேலான அதிகாரி கள் உத்தரவு செய்திருப்பதாகவும், ஆகையால், பிரேதத் தைக் கொடுக்கமாட்டோ மென்றும் சொன்னார்கள். பிரே தத்தைக் கைப்பற்றுகிறதற்கு, நாங்கள் எவ்வளவோ பிர யாசைப் பட்டும், பயன் பட வில்லை. அம்மை மும்முரமா யிருக்கிற அந்த ஊரில் ஒருவரும் இருக்கக் கூடாதென்றும், உடனே அவரவர்களுடைய ஊர்களுக்குப் போய்விட வேண்டுமென்றும், அதிகாரிகள் ஒரு பக்கத்தில் நிர்ப்பந் தித்தார்கள். ஞானாம்பாள் வியாதியா யிருக்கும் போது, அவளுக்கு எங்கள் கையாலே பக்குவங்கள் செய் யக் கூடாமலும், அவள் இறந்த பிறகு, அவள் முகத்திலே கூட விழிக்கக் கூடாமலும், அவளுடைய பிரேதத்தை யாவது எங்கள் கையிலே எடுத்து அடக்கஞ் செய்வதற்குக் கூட இட மில்லாமலும் போய் விட்டதால், நாங்கள் பட்ட துயரம் இவ்வள வென்று விவரிக்க ஒருவராலும் கூடாது. நான் உடனே மெய் சோர்ந்து, மூர்ச்சித்து ஸ்மரணை தப்பிப் போய் விட்டேன். அப்பால் நடந்தது யாதொன்றும் எனக்குத் தெரியாது. சத்தியபுரிக்குப் போன பிறகு தான், எனக்கு மயக்கந் தெளிந்து, நல்ல நினைவு வந்தது. அப்போது,என் தாய் தந்தையர் முத லானவர்கள் எல்லாரும் என் படுக்கையைச் சுற்றி, அழுது கொண்டு நின்றார்கள். நான் கண்ணை வீழித்த உடனே, என் தாயாரைப் பார்த்து, “ஞானாம்பாள் எங்கே அம்மா?” என்றேன். அவர்களும் மற்றவர்களும் ஒன்றும் சொல்லா மல், தேம்பித் தேம்பி அழுதார்கள். நான் மறுபடியும் மெய் சோர்ந்து, மனங் கலங்கி, அறிவு தடுமாறித் துக்கித் தேன். எங்களுடைய வீட்டில் ஞானாம்பாள் இருந்த இடத்தையும், அவள் கட்டின வஸ்திரங்களையும், அவள் படித்த புஸ்தங்களையும், மற்றச் சாமான்களையும் பார்த்து, பார்த்து, கண்ணீர் விட்டுக் கரைந்தேன். சத்தியபுரியில் உள்ளவர்கள் எல்லாரும் நித்தியமும் வந்து, ஞானாம்பாள் இரகசியத்திலே செய்து வந்த தானங்களையும், தருமங்களை யும், நன்பைகளையும் சொல்லி, சொல்லி, எங்களுடைய துக்கங்களைப் புதுப்பித்தார்கள். ஞானாம்பாளை நினைத்து அழாதவர்கள் ஒருவரும் இல்லை. ஏழைகள் எல்லாரும், “எங்களுடைய இரக்ஷகி போய்விட்டாளே!” என்று ஏங்கினார்கள். செல்வர்கள் எல்லாரும், “எங்கள் சீமாட்டி போய்விட்டாளே!” என்று தேம்பினார்கள். மாதர்கள் எல்லாரும், “எங்கள் மனோன்மணி போய் விட்டாளே!” என்று மயங்கினார்கள். புருஷர்கள் எல்லாரும், “பூவையர்க் கரசி போய் விட்டாளே!’ என்று புலம்பினார்கள். பாவலர்கள் எல்லாரும், “எங்கள் பாக் கியம் போய்விட்டதே!” என்று பதறினார்கள். உதயாஸ் தமன் சமயங்களில் சூரியன் சிவந்த வர்ணமாயிருப்ப தைப் பார்த்தால், ஞானாம்பாளுக்காகச் சூரியன் அழுது, அழுது, கண்ணும் முகமும் சிவந்து போனதாகத் தோன்றிற்று. வானத்தில் நின்று விழுகிற பனி நீரினால், வானமும் அழுவதாகத் தோன்றிற்று. மலை யருவிகளைப் யார்க்கும் போது, மலையும் அழுவதாக விளங்கிற்று. சமுத் திரமும் அழுவது போல் ஈப்தித்துக் கொண்டிருந்தது. என்னுடைய துயர மிகுதியினால், சகல ஜீவ கோடிகளும், ஸ்தாவர ஜங்கமங்களும் அழுவதுபோலவே காணப்பட்டன.

என் தாயார் எனக்குப் பல சமயங்களில் ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்கள் வாயைத் திறக்கும் போதெல்லாம், அழுகையும் துக்கமும் அடைத்துக்கொண்டு, அவர்களைப் பேச ஒட்டாமல் செய்து விட்டது. கடைசியாக, அவர்கள் மனதைத் தேற்றிக் கொண்டு, சொல்லுகிறார்கள்: “மகனே கடந்து போன காரியத்தை நினைத்து, அநு தாபப் பட்டு, இலாபம் என்ன? நாம் எவ்வளவுதான் அழுதாலும், ஞானாம்பாள் வரப்போகிறாளா? உலகத்தில் பிறக்கிறதும் இறக்கிறதும் சகஜமே யல்லாமல், நூதன மான காரியம் என்ன இருக்கிறது? நம்முடைய முன்னோர் கள் எல்லாரும் இறந்து போனார்களே யன்றி, யாராவது தப்பியிருக்கிறார்களா? அப்படியே, நாமும் ஒரு நாள் இறந்து போக வேண்டியவர்கள் தானே! நம்மை வீடு போ, போ என்கிறது, காடு வா,வா என்கிறது.

காலம் ஓயாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. அது ஓடும் பொழுதே, நம்முடைய ஆயுசையும் வாரிக்கொண்டு போகிறது. நாள், வாரம், மாசம், ஆண்டு என்று, பல ரூபம் எடுத்துப் போவது, நம்முடைய ஆயுசே யன்றி, வேறென்ன? சிறியோர்களா யிருந்தாலும், பெரியோர்களா யிருந்தாலும், ஏழைகளாயிருந்தாலும், தனவான்களாயிருந்தாலும், ஒருவரையும் மரணம் விடுகிறதில்லை. செத்துப் போன பிணத்துக்காக இனிமேல் இறக்கப் போகிற பிணம் கத்துகிறதென்று பட்டினத்துப் பிள்ளை சொன்னது. உண்மை தானே! இதற்கு நூறு வருஷத்திற்கு முன் இருந்த ஜனங்களில் யாராவது ஒருவர் இப்போது இருக் கிறார்களா? அவர்கள் எல்லாரும் இறந்து போய், அவர் களுடைய சந்ததிகள் இப்போது உலகத்தில் வசிக்கிறார்கள். இன்னும் நூறு வருஷத்திற்குள், இப்போது இருக்கிற சகல ஜனங்களும் மடிந்து போய், அவர்களுடைய சந்ததிகள் வருவார்களென்பதற்குச் சந்தேகமா? மரங்களில் இலைகள் பழுத்து, உதிர்ந்து போய், புது இலைகள் உண்டாவது போல், உலகத்திலும் ஜனங்கள் புதிது புதிதாக மாறிக் கொண்டே யிருக்கிறார்கள். காணப்பட்ட பொருள்களெல் லாம் அழிந்து போவது நிச்சயமே. பூலோக வாழ்க்கைப் போல அநிச்சயமான காரியமும், மரணத்தைப் போல நிச்சயமான காரியமும், வேறொன்றும் இல்லை. நேற்று இருந்தவர்கள் இன்றைக்கு இல்லை. இன்றைக்கு இருக் கிறவர்கள் நாளைக்கு இரார்கள். நாம் அடுத்த நிமிஷத்தில் ஜீவித்திருப்போ மென்பது நிச்சயமில்லை.

ஞானாம்பாள் ஊரில் வந்தாவது இறந்து போகாமல், மார்க்கத்தில் இறந்து போனதற்காக, நாம் அதிக மாகத் துக்கிக்கிறோம். அவள் ஊரில் வந்து இறந்து போனால், நாம் துக்கிக்காமல் இருப்போமா? நாட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும், வீட்டில் இருந்தாலும், எங்கே இருந்தாலும் இறப்பது நிச்சயந்தானே! மரணத்தை யார் தடுக்கக் கூடும்?

தலை முறை தலை முறையாய்க் கப்பலில் ஜீவனம் செய் கிற ஒரு மாலுமியை அவனுடைய நேசன், ‘உன்னுடைய முற்பாட்டன் எங்கே இறந்து போனான்?” என்று கேட்டான். ‘கப்பலில் இறந்து போனான்’ என்று மாலுமி சொன்னான். ‘உன் பாட்டன் எங்கே இறந்து போனாள்?” என்று சிநேகிதன் கேட்க, ‘அவனும் சமுத்திரத்திலே இறந்து போனான்’ என்றான். பிறகு, ‘உன் தகப்பன் எங்கே இறந்தான்?’ என்று கேட்க, ‘தகப்பனும் கப்பலிலே மாண்டான்’ என்று மாலுமி சொன்னான். உடளே அந்தச் சிநேகிதன் மாலுமியைப் பார்த்து, ‘உன்னுடைய முன்னோர்கள் எல்லாரும் கப்பலிலே இறந்து போன தால், நீயும் கப்பலிலே ஜீவனம் செய்தால், கப்பலிலேயே இறந்து போவாய்? ஆகையால், இந்த ஜீவனத்தை விட்டு விடு என்றான். மாலுமி சற்று நேரம் மெளனமா யிருந்து, பிறகு நேசனைப் பார்த்து, ‘உன்னுடைய முற் பாட்டான் எங்கே இறந்தான்?’ என்றான். சிநேகிதன், ‘என்னுடைய முற்பாட்டன் சமுத்திரத்திலே இறக்க வில்லை. மற்றவர்களைப் போலப் பூமியிலே இறந்தான்” என்றான். ‘உன் பாட்டனும் தகப்பனும் எங்கே இறந் தார்கள்?’ என்று மாலுமி கேட்க, ‘அவர்களும் பூமியில் இறந்தார்கள்’ என்று சிநேகிதன் மறுமொழி சொன்னான் உடனே மாலுமி அவனைப் பார்த்து, ‘உன்னுடைய முற் பாட்டனும் பாட்டனும் தகப்பனும் பூமியிலே இறந்து போனதால், நீ பூமியில் இருப்பது சரி யல்ல’ என்றான். அந்த மாலுமி சொன்னது போல, பூமியில் எங்கே இருந்தாலும், சாவு நிச்சயம்தானே. ஒருவன் தன்னுடைய அன்பளைப் பார்த்து, ‘உலகத்தில் ஜீவித்திருப்பதும், இறந்து போவதும், இரண்டும் எனக்குச் சமானந்தான் என்றான். ‘அப்படியானால் இறந்து போ’ என்று சிநேகிதன் சொல்ல, ‘இரண்டும் சமானமானதால் ‘நான் ஜீவித்திருக்கிறேன்’ என்றான். அவன் சொன்னது போல’ நாம் சாவையும் வாழ்வையும் சமானமாக நினைக்கவேண்டும்.

பிள்ளைகளுக்குக் கசப்பான மருந்துகளைக் கொடுத்து. அடித்துத் திருத்தி வளர்க்கிற அன்புள்ள தாய் தந்தையர் போல, சடவுளும் நம்மைத் திருத்துவதற்காகவே, அநேக சமயங்களில் நமக்குத் துன்பங்களைக் கொடுக்கிறார்.நித்திய மான பரலோக பாக்கியம் பெரிதே யன்றி, நீர்க் குமிழி’ போல் நிலைமை யில்லாத இந்த உலகத்தில், நாம் அநுபவிக்கிற சுகமும் சுகமல்ல; துன்பமும் துன்பம் அல்லவே! கடவுளை நாம் காணாதபடி நம்முடைய தேக மாகிய திரை மறைத்துக் கொண்டிருப்பதால், அந்தத் திரை எப்போது நீங்குமோவென்று புண்ணியவான்க ளெல்லாரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஞானாம்பாளுக்குத் தேகமாகிய திரை நீங்கி விட்டதால், அவளுக்குக் கடவுளுடைய தரிசனமும், நித்திய பாக்கியமும், கிடைத்திருக்கு மென்பதற்குச் சந்தேகம் இல்லை. அவள் நித்தியானந்தத்திற் பிரவேசித்திருப்பது நமக்குச் சம்மத மில்லாதது போல, நாம் அவளுக்காக அழுது பிரலாபிப்பது எவ்வளவும் சரியல்ல. ஞானாம்பாள் போல நாமும் சன்மார்க்கத்தை அனுசரிப்போமானால், நாமும் மோ வீட்டிற் பிரவேசித்து, ஞானாம்பாளுடன் நித்திய காலமும் கூடி வாழலாமென்பது சத்தியமே” என்றார்கள்.

எனக்கு என் தாயார் சொன்ன புத்திக ளெல்லாம். தீர் மேல் எழுத்துப் போலவும், கல்லின் மேல் விதைத்த விதை போலவும், பயன்படாமற் போய்விட்டன. எனக்கு ஹிதம் சொன்ன என் தாயாரே ஆறுதல் இல்லாமல் ஓயாத மனமடி வுள்ளவர்களா யிருப்பார்க ளானால், என்னுடைய நிலைமையையும், மற்றவர்களுடைய நிலைமை யையும் நான் விவரிக்க வேண்டுமா? நாங்கள் கரை காணாத துக்கக் கடலில் அமிழ்ந்தி, கரை ஏறுவதற்கு வழி யில்லாமற் கலங்கிப் பரிதபித்துக் கொண்டிருக்கும்போது, ஒருநாள், தேவராஜ பிள்ளையும், கனகசபை முதலான வர்களும், எங்களுடைய வீட்டுக்குள்ளே வந்து நுழைந் தார்கள். ஞானாம்பாள் பிராண வியோகமானதைக் குறித்து, சந்திரகிரியில் இருந்து நாங்கள் அவர்களுக்குக் கடிதம் அனுப்பின படியால், அவர்கள் துக்கம் விசாரிக்க வந்திருப்பார்க ளென்று நினைத்து, தேவராஜ பிள்ளையை யும், கனகசபையையும், நான் தனித் தனியே கட்டிக் கொண்டு அழுதேன். அவர்கள் என்னோடுகூட அழவு மில்லை; முகத்திலே துக்கக் குறி விளங்கவு மில்லை. அவர்கள் இரக்கமில்லாத மனுஷர்களென்று நினைத்து. நான் முகத்தைச் சுளித்துக்கொண்டும், அப்பாற் போய் மெளனமா யிருந்தேன். உடனே, தேவராஜ பிள்ளை என்னைப் பார்த்து, “சந்தோஷச் செய்தி கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் அழவேண்டாம். உங்களுடைய துக்கத்தைக் கடவுள் சந்தோஷமாக மாற்றிவிட்டார். எப்படியென்றால், உங்களுடைய துக்கக்கடிதம் வந்தவுடனே, நாங்கள் அளவிறந்த துக்காக்கிராந்தர்களாய், உங்களை வந்து கண்டு கொள்வதற்காக, உடனே பயணம் புறப் பட்டோம். நாங்கள் சந்திரகிரியில் வந்து சேர்ந்த உடனே, ஞானாம்பாள் இறந்த வகையைக் குறித்து விசாரிப்பதற்காக வைத்தியசாலைக்குப் போனோம். அம்மை வியாதியின் கடுமையினால் ஞானாம்பாளுக்கு வெகு நேரம் மூச்சு அடங்கி யிருந்ததாகவும், அதைக் கொண்டு அவள் இறந்து போனதாக எண்ணி, அடக்கத்துக்கு யத்தனம் செய்த தாகவும், பிறகு ஸ்வாமி கிருபையினால், ஞானாம்பாளுக்குப் போன பிராணன் திரும்பி வந்து விட்டதாகவும், இன்னமும் அவள் வைத்தியசாலையிலே இருப்பதாகவும், இனிமேல் ஜீவ பயமில்லை யென்றும் கேள்விப்பட்டோம். உடனே வைத்திய சாலைக்குள்ளே போய், ஞானாம்பாளையும் பார்வை யிட்டுப் பரம சந்தோஷம் அடைந்தோம். ஞானாம்பாளுக்கு வைத்தியம் பார்த்த டாக்டர்களை எனக்குத் தெரியுமானதால், ஞானாம்பாளை ஊருக்கு. அழைத்துக்கொண்டு போவதற்காக என் வசத்தில் ஒப்பு விக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவர்கள்.. ”ஞானாம்பாள் மிகவும் துர்ப்பலமா யிருப்பதால், இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு அழைத்துக்கொண்டு போக வேண்டும்” என்றார்கள். நாங்கள், அந்தப் பிரகாரம், மூன்று நாள் வரைக்கும் காத்திருந்து, ஞானாம்பாளை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறோம். ஞானாம்பாளும், என்னுடைய மனைவியும், மருமகளும் ஒரு பண்டியில் இதோ வருகிறார்கள். நாங்கள் இந்தச் சந்தோஷ சமாசாரம். சொல்வதற்காக முந்தி வந்தோம்” என்றார். அவர் வார்த்தை முடிவதற்குமுன், ஞானாம்பாளும், மற்றவர்களும். வந்து, உள்ளே புகுந்தார்கள். நான் என் காதலியைக் கண்டேன். கவலை யெல்லாம் விண்டேன். உள்ளம் பூரித்தேன். உடலம் பாரித்தேன். பரமாற்புதமாக ஞானாம்பாளைப் பிழைப்பித்த ஜகதீசனுடைய பெருங் கருணையை நினைந்து, நினைந்து, ஆநந்தக் கண்ணீர் சொரிந்து, அடிக்கடி மானத பூஜை செய்தேன்.

நாங்கள் எல்லாரும் துக்கக் கடலினின்று கரை யேறி, ஆநந்த சமுத்திரத்தில் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது, ஆநந்தவல்லியும், அவளுடைய பரிவாரங் களும் வந்து சேர்ந்தார்கள். ஞானாம்பாள் இறந்த செய்தி கேட்டது முதல், ஆநந்தவல்லி அழுதழுது, முகம் வீங்கிப் போயும் தேகம் இளைத்துப் போயும் இருந்தாள். ஞானாம்பாள் உயிரோடிருப்பதைப் பார்த்த உடனே, ஆனந்தவல்லி என்கிற பெயர் அவளுக்கே தகும் என்று சொல்லும்படியாக, பிரமானந்தம் அடைந்து, தேக பரவசம் ஆனாள். பிறகு, ஆண்டிச்சி யம்மாளும், அவளுடைய புருஷன், பிள்ளை முதலானவர்களும் வந்து, எங்களுடைய சந்தோஷத்தைப் பாகித்துக் கொண்டார்கள். அவர்கள் எல்லாரையும் நாங்கள் ஒரு மாசம் வரைக்கும் நிறுத்தி வைத்துக் கொண்டு, ஞானாம்பாள் பிழைப்பதற்காகத் தினந்தோறும் தேவாராதனைகளும், ஏழைகளுக்குத் தான தர்மங்களும் செய்து வந்தோம்.

பல நாளாயின பின், ஞானாம்பாள் ஆண் வேஷம் பூண்டு அரசாண்ட பாவனையாக இப்போது காட்ட வேண்டுமென்று. ஞானாம்பாளை என் பாட்டியார் முதலான வர்கள் வேண்டினார்கள். ஞானாம்பாளுக்கு எவ்வளவும் இஷ்டமில்லாவிட்டாலும், பல பெயர்களுடைய நிர்பந்தத் தினால், ஒரு நாள் ஞானாம்பாள் அரசனைப் போல வேஷம் பூண்டு கொண்டாள். சாக்ஷாத் இராஜ வடிவாகவே தோன்றின ஞானாம்பாளைப் பார்த்து, எல்லாரும் அதிசயித்துக் கொண்டிருக்கும் போது, ஆநந்தவல்லி அகக் களிப்புடனே வந்து, ஞானாம்பாளைப் பார்த்து, “அக்காள்! என்னை வேண்டி நீங்கள் ஆணாகவே இருந்து விடுங்கள்.

இனிப் பெண் ரூபம் எடுக்க வேண்டாம்” என்று சொல்லி, இரு கைகளையும் கூப்பிக் கும்பிட்டாள். உடனே சம்பந்த முதலியார் வந்து, மகளைப் பார்த்து, “ஆம் அம்மா! ஆண் பிள்ளை இல்லையென்று உன் தாயாருக்கும் எனக்கும் உண்டாயிருக்கிற வருத்தம் தீரும் பொருட்டு, நீ ஆணாகவே இருந்துவிடு” என்றார். அப்போது, நான் ஞானாம்பாளை நோக்கி, “இவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு, என்னைத் தெருவில் விடாதே! ஞானாம்பாள்” என்றேன். இதைக் கேட்ட உடனே, அண்ட கடாகமும் வெடிக்கும்படியாக, எல்லாரும் துள்ளித் துள்ளி விழுந்து சிரித்தார்கள். நான் விக்கிரமபுரிக்குப் போன உடனே, அந்தத் துர் வழக்காளிகளிடத்திலும், காவற் சேவகர்களிடத்திலும் அகப்பட்டுக் கொண்டு, அவஸ்தைப் பட்ட பாவனையாக வேஷம் போட்டுக் காட்டும்படி, என் பாட்டியார் என்னை வேண்டிக்கொண்டார்கள். நான் என் பாட்டியாரைப் பார்த்து, “அந்தப் பாவிகளை மனசிலே நினைத்தாலும், எனக்குச் சிம்ம சொப்பனமாயிருக்கிறது. வேடிக்கைக்குக் கூட அந்த வேஷம் போட என் மனம் துணியவில்லை” என்று சொல்லி, நிராகரித்து விட்டேன். பிறகு, ஊரில் இருந்து வந்தவர்கள் எல்லாரும், தனித் தனியே எங்களிடத்தில் விடைபெற்றுக்கொண்டு, அவரவர் களுடைய ஊருக்குப் பிரயாணம் ஆனார்கள்.

ஆநந்த வல்லி அவளுக்குப் டந்துவான ஒரு இராஜ குமாரனைப் பாணிக்கிரகணம் செய்துகொண்டு, க்ஷேமமா யிருக்கிறாள். விக்கிரமபுரிக்கும் சத்தியபுரிக்கும் விவாகமானது போல் அந்த ஊர்கள் ஒன்றையொன்று எப்போதும் தழுவிக் கொண்டே யிருக்கின்றன. இந்த ஊரில் இருக்கிறவர்கள் அந்த ஊருக்கும், அந்த ஊரில் இருக்கிற வர்கள் இந்த ஊருக்கும், அடிக்கடி போக்குவரவா யிருக்கிறார்கள். அப்படியே, சத்தியபுரியும் ஆதியூரும் சவுக்கியமாகவே யிருக்கின்றன. என் தாயாருடைய கீர்த்திப் பிரதாபமும், ஞானாம்பாளுடைய கியாதியும், ஐரோப்பா வரைக்கும் எட்டி, சக்ரவர்த்தினி யவர்கள் கிருபை கூர்ந்து, அவர்கள் இருவருக்கும், “இராஜ ஸ்திரீகள்” என்கிற பட்டமும் கொடுத்து, அநேக ஜாகீர் களும் விட்டார்கள். தெய்வாநுக்கிரகத்தினாலும், உங் களுடைய ஆசீர்வாத மகிமையினாலும், நாங்கள் சகல சாம் பிராஜ்யங்களும் பெற்று, சந்தோஷமாக ஜீவிக்கிறோம். இந்தச் சரித்திரத்திலே பிரஸ்தாபிக்கப்பட்ட பலரும், இந்த நிமிஷம் வரையில், ஒரு குறைவும் இல்லாமல், சுக ஜீவிகளாயிருக்கிறார்கள். அப்படியே, இதை வாசிக்கிறவர் கள் எல்லாரும், வச்சிர சரீரிகளாய், நித்திய மங்களமாய் வாழ்ந்திருக்கக் கடவர்கள்.

(முற்றிற்று)

கடவுள் வாழ்த்து

அடர்ந்தமண லெனக்கணக்கி லண்டபகி ரண்டமெலாங்
கடந்து நின்ற பெரியானைக் கடுகினுழை சிறியானைத்
தொடர்ந்தவன்பர்க் குரியானைத் துகளுடையோர்க்
படர்த்தவருள் பிரியானைப்பழிச்சாயோ நாவே கரியானைப்
பரமசுகோ தயநிலையைப் பழிச்சாயோ நாவே.

– மாயூரம் மாஜி டிஸ்டிரிக்ட் முன்சீப் ச.வேதநாயகம் பிள்ளையவர்கள் (1826-1889) இயற்றியது, முதற் பதிப்பு: 1879.

– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் முதலாவதாக இடம்பெற்ற நாவல்.

– பிரதாப முதலியார் சரித்திரம், நூற்றாண்டு விழா புதிய பதிப்பு: அக்டோபர் 1979, வே.ஞா.ச.இருதயநாதன் (வேதநாயகம் பிள்ளை மகன் பேரர்), ஆவடி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *