பிரண்டைக்கொடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2024
பார்வையிட்டோர்: 1,069 
 
 

அந்த கிராமத்தில் எல்லோருக்குமே இரட்டைப் பெயர் என்று சொல்லக்கூடிய பட்டப் பெயர் உண்டு. பட்டப் பெயர் என்றால் எண் தமிழ்ப் பேரொளி, வாழும் தொல்காப்பியன், மணிமேகலைத்தாய் போன்ற இக்காலச் சிறப்பு பட்டங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்வது தடை செய்யப்படுகிறது. ஒரு ஊரில் ராமசாமி எந்ற பெயருடைய எட்டு பேர் இருந்தால் அடையாளம் பிரித்துச் சொல்ல என்ன செய்வார்கள்? நெட்டை ராமசாமி, கட்டை ராமசாமி, கறுத்த ராமசாமி, வெளுத்த ராமசாமி, மொட்டை ராமசாமி, பட்டாளத்து ராமசாமி, நொண்டி ராமசாமி, தாடி ராமசாமி எந்று சொல்வதில்லையா? அதுதான் பட்டப் பெயர். சிலர் அதனை வட்டப் பெயர் என்றும் வழங்குவார்கள். தற்கால தமிழ் இலக்கிய உலகில் நொண்டி ராமசாமி என்று எழுதக்கூடாது என்றும் மாற்றுத் திறனாளி ராமசாமி என்றே எழுதவேண்டும் என்றும் இந்த கதாசிரியனுக்குத் தெரியும். எனினும் அந்தச் சொல் கதை பயிலும் ஐம்பதாண்டுக்கு முந்திய காலகட்டத்தில் அறிமுகமாகவில்லை என்பதால் இயல்பு நவிற்சி எனும் இலக்கணத்துக்கு உட்பட்டு நொண்டி எனும் சொல்லே பரிமாறப்படுகிறது. பொறுத்தார் பூவுலகு ஆள்வார்…நாஞ்சில் நாடன்


பிரண்டைக் கொடி தேடி நடந்தான் போத்திலிங்கம். எனும் பெயர் போத்திலிங்கம் அவனுக்குப் பிடிக்கவேயில்லை. என்னதான் அம்மை ஆசையாக சுரேசு என்று கூப்பிட்டாலும், அக்கம் பக்கத்துச் சேக்காளிகள், சின்னம்மை, பெரியம்மை, அத்தை, அக்கா என்று செல்லமாக ‘சுரேசு, ஏ! சுரேசு’ என்றாலும், பள்ளியில் அவன் பெயர் கு.போத்திலிங்கம்தான், அதென்ன கு என்றால் தகப்பனார் பெயர் குற்றாலிங்கம், தமிழ் பின்னவீனத்துவ முற்போக்கு இலக்கியத் தளத்தில் சாதிப்பெயர் எழுதுவது தடைசெய்யப்பட்டிருப்பதாலும், இ.பி.கோ. சரத்து ஒன்றின்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதாலும், இந்தக் கதாசிரியன் ஏற்கனவே பலமுறை வசைக்கு ஆளாகி இருப்பதாலும், தற்சமயம் தடுக்கினுள் ஒளிந்து கொள்கிறான்.

போத்திலிங்கம் என்ற சுரேசு படித்த காலத்து கவனிக்க, காலத்து என்கிறபோது இங்கே அத்துச் சாரியை பயன்படுத்தப்பட்டுள்ளது அந்தக் கிராமத்தில் இரட்டைப் பெயர் எல்லோருக்குமே என்று சொல்லக்கூடிய பட்டப் பெயர் உண்டு. பட்டப் பெயர் என்றால் எண் தமிழ்ப் பேரொளி, வாழும் தொல்காப்பியன், மணிமேகலைத்தாய் போன்ற இக்காலச் சிறப்புப் பட்டங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்வது தடை செய்யப்படுகிறது. ஒரு ஊரில் ராமசாமி என்ற பெயருடைய எட்டுப் பேர் இருந்தால் அடையாளம் பிரித்துச் சொல்ல என்ன செய்வார்கள்? நெட்டை ராமசாமி. கட்டை ராமசாமி. கறுத்த ராமசாமி, வெளுத்த ராமசாமி, மொட்டை ராமசாமி, பட்டாளத்து ராமசாமி, தொண்டி ராமசாமி, தாடி ராமசாமி என்று சொல்வதில்லையா? அதுதான் பட்டப் பெயர். சிலர் அதனை வட்டப் பெயர் என்றும் வழங்குவார்கள். தற்காலத் தமிழ் இலக்கிய உலகில் நொண்டி ராமசாமி என்று எழுதக் கூடாது என்றும் மாற்றுத் திறனாளி ராமசாமி என்றே எழுதவேண்டும் என்றும் இந்தக் கதாசிரியனுக்குத் தெரியும். எனினும் அந்தச் சொல் கதை பயிலும் ஐம்பதாண்டுக்கு முந்திய’ காலகட்டத்தில் அறிமுகமாகவில்லை என்பதால் இயல்பு நவிற்சி எனும் இலக்கணத்துக்கு உட்பட்டு நொண்டி எனும் சொல்லே பரிமாறப்படுகிறது. பொறுத்தார் பூவுலகு ஆள்வார்.

பட்டப் பெயர் அல்லது இரட்டைப் பெயர் அல்லது வட்டப் பெயருக்கு மேலும் சில உதாரணங்கள் தரலாம். கள்ளுமண்டி, செத்தாடு தூக்கி, வெட்டுக் குத்தி, மயானக் கொள்ளை, மொந்தன் பழம், மாக்காளை, ஊட்டுப்புரை, களுதைக் கோலு, வெங்கலச் செம்பு என்மனார் புலவ.. யாவற்றுக்கும் தனித்தனியாகப் பொய்க்காரணம் எழுதப் புகுந்தால் அது தலபுராணமாகிவிடும். மேலும் கத்தை கத்தையாக ஊதியம் வாங்கும் நுண்மொழி மைய ஆய்வாளருக்குக் கைத்தடியாகச் செயல்பட நமக்கு உத்தேசம் இல்லை.

மேற்கண்ட தொல்குடி மரபுப்படி, போத்திலிங்கம், பள்ளிக்கூடத்தில் ‘போத்தி, போத்தி’ என்றே பட்டப் பெயரால் வழங்கப்பட்டான். ஒழுகினசேரி முக்கில் இருந்த ஐயர் காப்பிக்கடைக்காரரின் பட்டப் பெயரால் குண்டுப் போத்தி என்றழைக்கப்பட்டான். தழில் தாத்தா எனும் சொல்லுக்கு மறுசொல் அந்தப் பகுதியில் போத்தி. பிராம்மணக்கர்களின் ஒரு பிரிவான போற்றி என்பாரையும் போத்தி என்றழைப்பதுண்டு. ஊர்க்குடிமகனோ அந்த ஊரின் ஆறுவயதுச் சிறுவன் முதல் எண்பது வயதுக் கிழம் வரை ‘போத்தி’ என்றே அழைத்தார். நமது குபோத்திலிங்கம் சற்றுக் குள்ளமாக இருந்தபடியால் குள்ளப் போத்தி என்றும் வகுப்பில் அடிக்கடிக் குறுக்குக் கேள்விகள் கேட்டதால் வக்கீல் போத்தி என்றும் பலரையும் பரிகாசம் செய்வதால் குசும்புப் போத்தி என்றும் சிலசமயம் மொச்சைக் கொட்டை தீயல் வைத்துத் தின்றுவிட்டு வந்து சத்தமாய்க் குசு விடுவதால் குசுப் போத்தி என்று வகுப்புத் தோழர்களால் குமைக்கப்பட்டான். உண்மையான அவனது இனிஷியலையும் கேலிப் பொருளாக்கி, முன்சொன்ன காரணத்தால் கு.போத்தி என்றும் அழைக்கப்பட்டான்.

சங்கடத்தை அம்மையிடம்தானே சொல்ல முடியும்? பத்தாம் வகுப்பில் படித்தாலும், இப்போதுள்ள பள்ளிச் சிறார்போல செல்போனும், முகநூல் கணக்கும் வாகனாதிகளும் என அலைய முடியாதல்லவா? அம்மை அருமையாக, “போட்டு மக்கா… நாங்க எல்லாரும் சுரேசுண்ணுதான அருமையாக் கூப்பிடுகோம்… பள்ளிக்கொடத்திலே எவனும் என்னமும் சொல்லீட்டுப் போட்டும். எல்லாம் வாலுப் பயக்கோ.. நீ அவுனுக கூட சேராத என்னா? தாத்தா பேரு தான அது? தாத்தா அருமைப் பேரனுக்கு பேருக்கூலியாட்டு, வடக்குப் பத்திலே பூவத்தான்கோயிலு வயலு எழுதி வச்சிருக்கா.. யாரு என்ன சொன்னா என்ன மக்கா? நீ நல்ல படிச்சு சர்க்கார் சோலிக்குப் போகணும் என்னா?” என்று ஆற்றுவார் ஆற்றும் பசியாற்றுவாள். அன்றெல்லாம் சர்க்கார் சோலி என்றால் சம்பளம் மட்டும் தான். அதற்கே அவ்வளவு மவுசு!

நல்ல மாசி மாதத்து வெயில். வெயில் பாழாய்ப் போகக் கூடாது என கூழ் வத்தல், தேங்குழல் வத்தல், குறுணை வத்தல், சலங்கை வத்தல், வடகம் எல்லாம் போட்டு முடித்துப் பிரண்டை வத்தலுக்கு வந்து நின்றாள் அப்பனைப் பெற்ற ஆத்தாள்.

இரண்டு நாட்களாகப் புலம்பிக்கொண்டே இருந்தாள்.

“மக்கா, லே! சனி நாயிறு அவதி தானே! எனக்குக் கொஞ்சம் பெரண்டைப் பறிச்சுத் தருவியா? வத்தல் போடணும்!”

கொஞ்சம் என்றால் கை நிறைய என்று பொருளல்ல. கடவாப் பெட்டி என்று பொருள் பிஞ்சுப் பிரண்டையாகத் தளிர் இலைகளுடன் கை நிறையப் பறித்து வந்தால், வறுத்தரைத்துப் பத்தியத் துவையல் அரைக்கத்தான் காணும். பிரண்டை ஒரு மருந்துக் கொடி என்று அவனுக்குத் தெரியும். சமையலில் வேறு உபயோகம் இருப்பதாகத் தெரியவில்லை. சுன்று போட்ட பசுமாடு அல்லது எருமை கண்ணுக்குட்டி ஈணி, எலுங்கொடி விழாவிட்டால் தொங்கிக் கிடக்கும் எலுங்கொடியில் பாரமாகப் பிரண்டைக் கொடி சேர்த்து வைத்துக் கட்டுவார்கள். தெருச்சண்டையில், பேறு இல்லாத பெண்களைப் பார்த்து, வசவாக, “பிள்ளை இல்லேண்ணா பெரண்டைக் கொடியை அடி வயத்திலே கெட்டிக் கிட்டுப் படு.. ஏம் மாப்பிளை மேல ஏற வராதே!” என்று பேசக்கேட்டிருக்கிறான்.

கு.போத்திலிங்கத்துக்கு பிரண்டை பறிக்கும் நொறுநாட்டியம் பிடித்த வேலை சலிப்பாக இருந்தது. ஆனால், ஆத்தா மாய்ச்சல் இன்றி, முற்றல் பிரண்டைகளை ஒதுக்கி, பிஞ்சுப் பிரண்டைகளை நீக்கி, சுணுக்களை நறுக்கி எறிந்துவிட்டு கொவரப்போட்டு வைத்திருந்த புழுங்கலரிசியும் பிரண்டை, உப்புப் பரல், ஓமம், மிளகாய் வத்தல் விதைகள் எல்லாம் சேர்த்து ஆட்டுரயில் போட்டு ஆட்டி, அமர்ந்த தீயில் கூழாகக் காய்ச்சி, அடி பிடிக்காமல் கிண்டி இறக்கி, ஆறி இறுகிப் போகுமுன் பிரம்புப் பாயின் மீது விரித்த தாத்தாவின் பழைய வேட்டியில் கிள்ளிக் கிள்ளியோ, சுரண்டியால் கோரிக் கோரி வைத்தோ மூன்று நான்கு நாட்கள் காய வைத்து எடுப்பாள்.

பிரண்டை வத்தல் போட்டபின் அந்த வருடத்தின் வற்றல் போடும் வேலை முடியும். மோர் மிளகாய், சுண்டை வத்தல், பாகற்காய் வத்தல், கத்தரிக்காய் வத்தல், சீனி அவரைக்காய் வத்தல், மிதக்கவத்தல் எல்லாம் கொள்ளை மலிவாய்க் கிடைக்கும் பருவகாலங்களில் போட்டுக் கொள்வது. அப்போதுதான் ஆரல்வாய் மொழிக்காரி தலைச்சுமட்டில் விற்கத் தெருத் தெருவாய்க் கூவி நடப்பாள்.

வேலை செய்ய மடித்த போத்தி, “சும்ம கெடட் டீ கௌ….எனக்குப் பரிச்சைக்குப் படிக்காண்டாமா?” என்றாள்.

“தட்டம் நிறைய வறுத்து வச்சாத் திம்பியே, கொண்டா கொண்டாண்ணு.. குறுக்கு வளைய மாட்டங்கோ! பரிச்சைக்குப் படிக்கானாம் பரிச்சைக்கு! சத்தாங்கோயிலு அம்மன் கோயிலுண்ணு போயி அசத்துப் பயக்க கூட களுத மறிக்கதுக்கு…”

ஆத்தா சொல்வதில் பரிகாசம் ஒன்றும் இல்லை. சுடு கஞ்சி, உளுந்தங்கஞ்சி, உளுந்தங்கஞ்சிக்கு தேங்காய் எண்ணெயில் வத்தல் வறுத்து வைத்தால் போத்தியின் வயிற்றில் பேன் வைத்துச் ‘சொடக்’ என்ற குத்தலாம் போலப் பெருத்திருக்கும். மலையாளத்தில் வத்தலுக்குக் கொண்டாட்டம் என்பது மாற்றுப் பெயர்.

நூற்றெட்டுத் தடவை ஆத்தா சொல்லியாயிற்று.

“மக்கா, நல்ல வெளஞ்ச பெரண்டையாப் பறிக்கணும்… பெரண்டைக் கணுவு கிட்டக் கிட்டே இருக்கணும் கேட்டயா? ரொம்ப முத்தலும் ஆகாது… தொடிச்சுப் பாத்தா மாவாட்டு இருக்கணும்…”

“சரிட்டீ…” என்றான் போத்தி. தான் கூப்பிடுவதைப் போலப் பேரன் மனைவியை “ஏட்டீ” என்று கூப்பிட்டதில் கிழட்டுப் போத்திலிங்கத்துக்கு வாய் கொள்ளாச் சிரிப்பு.

“எங்கிட்டே அதட்டுவியே… இப்பம் பேரன்ட்டே காட்டேன் ஒனக்க அதியாரத்தை…” என்று சொல்லிச் சிரித்தார்.

பனையோலைக் கடவத்தை எடுத்து மடார் என்று முற்றத்தில் கவிழ்த்துப் போட்டு, தூசி தட்டி எடுத்துக் கொடுத்தாள்,

“எலே, கொடுக்கள்ளி மரத்தில படந்த பெரண்ட வேண்டாம் என்னா? மஞ்சணத்தி, நொச்சி, பூலாத்தி இப்பிடிப் படந்து கெடக்கும் பாரு, அதைப் பாத்துப் பறி என்னா? ஒரு வாடு பதவலாட்டுக் கெடந்தா உள்ள தொளஞ்சு போகாத. பூச்சிகட்ட கெடக்கும்..”

போத்திக்குத் தெரியும் பிரண்டைக் கொடி எங்கே கிடைக்கும் என்று. எட்டாங்கிளாஸ் முதற்கொண்டே அவன்தான் பறித்துக் கொடுக்கிறான். ஊரில் அவன் கூட்டாளிகளுடன் காடுமேடாய் அலைந்து கால்படாத இடம் இல்லை. கூட்டுக்கு சேக்காளிகள் யாரையாவது சேர்த்துக் கொள்ளலாம்.

அன்று ஒரு பயலையும் காணோம். அவயானுக்கு மண்ணு பறிக்கப்பட்ட வேலை, அவனவனுக்கு ஆயிரத்தெட்டு வேலை. ஆத்தா சொல்வது போல், ‘நாய்க்கு வேலையும் இல்லே, உக்காந்திருக்க நேரமும் இல்லை.’ வெயில் உறைக்க ஆரம்பித்து விட்டது. ஒரு கடவம் பறித்துக் கொண்டு போட்டால், ஆத்தாள் அதில் அரைக்கடவம் கழித்து விடுவாள்.

“கொஞ்சம் நாரு, முத்தலு, இளசு கெடந்தா என்னா மூதிக்கு? என்னா கஸ்டப்பட்டு மனுசன் பறிச்சுக் கிட்டு வாறான் முள்ளு குத்த, மொசலு கடிக்க_” என்று கார்வார் வைத்தான் போத்தி போனமுறை.

“ஒனக்கு அம்புடு மயிரும் தெரியுமாலே… போ பொத்திக்கிட்டு” என்றாள் கிழவி,

“ஏந்தா? பொத்திக்கிட்டுண்ணு சொல்லுகே? ஆனா போத்தீண்ணு கூப்பிட மாட்டங்கே?” என்று எசலினான். பெரிய போத்தி கள்ளமாய்ச் சிரித்தார்.

“லே. அவ போத்திக்கிட்டு படுண்ணு சொல்லமாட்டா. மூடிக்கிட்டுப் படும்பா. நம்ம முத்தாரம்மன் கோயிலு கெழபுறம் செவுருலே அரவணைப் போத்தி சாமி இருக்கில்லா…. அதைச் சொல்லச் சொல்லு.. அரவணைத் தாத்தா கோயிலும்பா.”

“இந்த மனுசனுக்கு இப்பம் என்னுண்ணு வருகு? காலம்பற தேங்காத் தோச ஒண்ணு கூடிப்போச்சோ? கெடந்து பொடங்கி அடிச்சுக்கிட்டு வாறாரு… போவும் நீரும் பொத்திக்கிட்டு” என்று செல்லம் கொஞ்சினாள்.

பிரண்டைக் கொடி சாதாரணமாகத் தட்டுப்படுகிற கொடிதான். மூணு இஞ்ச நீளம், ஒரு சுணு, அதில் இரு மருங்கும் இலைகள், இலைகள் புறப்படும் இடத்திலிருந்து கொடிவீசும் சல்லி வேர்கள், என நீண்டு நீண்டு நீண்டு போகும். சின்னப் பூவாய் வெள்ளையாய்ப் பூக்கும். சிறு கறிவேப்பிலைக் காய் தரத்தில் காய்த்துக் கறுப்பாகப் பழுக்கும். நாக்கு ஊருமோ எனும் சந்தேகம் இருந்ததால் பறித்துத் தின்றதில்லை. கொடியின் மூட்டில் கரும்பச்சை நிறமாகவும் தும்புப் பகுதியில் வெளிர் பச்சை நிறமாகவும் இருக்கும்.

சில நிறங்களைத் தோராயமாகவே எந்தக் கதாசிரியனாலும் பேசவியலும், பச்சை என்றால் சமுத்திரப் பச்சை, நாகப் பச்சை, கிளிப் பச்சை, மரசுதப் பச்சை, கோரைப் பச்சை, பாசிப் பச்சை, மாந்தளிப் பச்சை என்று சொல் வழங்கும் தேயத்தில் துல்லியம் என்பது எங்கனம் சாத்தியம்?

வெற்றுக் கடவத்தை இடுப்பில் வைக்கவும் தோதில்லை, தலையில் வைத்தாலும் காற்றுத் தள்ளியது. ‘சல்லியம் புடிச்ச வேலை’ என்று முனகி நடந்தான் போத்தி,

பிரண்டை பறிக்கணும் என்ற உடனேயே அவனுக்கு மனப் பாதைகள் கிளை பிரிந்தன. ஆத்தா அவ்வப்போது இப்படியே சில வேலைகள் சொல்வாள். ஆடாதோடா இலை, கெருடக் கொடி, கருநொச்சி, கிருஷ்ண துளசி, நாயுருவி, குறுந்தட்டி, வல்லாரை எனப் பறித்து வரச் சொல்வாள். முதல் முறை அவளே கை பற்றி நடந்து வந்து காண்பித்தும் தருவாள். நாட்டு வியாதிகளுக்கு அவளிடம் சில நாட்டு மருந்துகள் உண்டு. யாண்டு கற்றனள் என்று தெளிவில்லை.

தாழக்குடி போகும் பாதையில், நாச்சியார் புதுக்குளத்தின் மேலக்கரையில் கண்டமானம் பிரண்டைக் கொடிகள் உண்டு, ஒரு சக்கடா வண்டி நிறையப் பறிக்கலாம். எல்லாம் திருகுக்கள்ளி, கொடுக்கள்ளி, சப்பாத்திக்கள்ளி, சதுரக்கள்ளி வேலிமேல் படர்ந்து கிடப்பவை. பறிக்கக் கஷ்டம், ஆத்தாளின் ஆணையும் உண்டு.

தேரேகாலின் கீழக்கரை முழுக்க வயல் வரப்புத் திரடுகளும் முட்செடிப்புதர் வேலிகளும். அதன் மேல் படர்ந்த பிரண்டை மூடுகள் உண்டு. தாழம் புதர்களும் ஏராளம் போத்தி பாதுகாப்பான பழையாற்றின் கீழக்கரை அல்லது மேலக்கரை பற்றி யோசித்தான், நாலு மூடு கிட்டினால் போதும். கடவும் நிறைந்துவிடும். மேலக்கரையில் இறச்சகுளம் பிராமணக்குடிச் சுடுகாடும், வீரநாராயணமங்கலம் வெள்ளாங்குடிச் சுடுகாடும். யோகீசுவரர்களின் இடுகாடும். அதையொட்டி ஆற்றின் மணற்பாங்கான பிராமணத் திரடு. புன்னை மரங்கள்.

கால்புதைய மணலில் இறங்கி வேலியோரம் நடந்தால் வனம் போல் பிரண்டைக் கெடிகள். கடம்ப வனம், தாழைவனம், புன்னைவனம், சண்பக வனம், வேய்ங்காடு போலப் பிரண்டை வனம், மஞ்சணத்திப் புதர்கள், அழிசம் புதர்கள், பூலாத்திப் புதர்கள், கார முள் செடிகள் மீது படர்ந்த பிரண்டை. நின்று பறிக்கத் தோதான மணற் திட்டுகள். கடவத்தை வெட்ட வெளி மணலில் வைத்துவிட்டுப் பிரண்டை மூடுகள் அடர்ந்து கொடிவீசி வளர்ந்து கிடக்கும் ஆற்றங்கரைப் புதர் நோக்கி நடந்தான் போத்தி.

பின்னவீனத்துவப் பாணியில் சுதாசிரியன் இறந்து விடுகிறான், வாசகனே பிரதியை மறு ஆக்கம் செய்கிறான் என்பதால் கதையை இங்கேயே கோடு போட்டு, மிச்சத்தை வாசகனுக்கே விட்டுவிடலாம். அல்லது கதாசிரியன்
கொல்லப்பட்டு விட்டான் என்று கடந்தும் போய்விடலாம். இந்த இடத்தில் கதையை எவ்வாறு மேற்கொண்டு செலுத்துவது என்பதில் கதாசிரியனுக்கே சில தயக்கங்கள் உண்டு. எனவே அவன் மனதில் பட்ட ஆகச் சிறந்த நான்கு முடிவுகள் உங்கள் பரிசீலனைக்கு வைக்கப்படுகின்றன.

சில முடிவுகளும் முன் முடிவுகளும்:

முடிவு ஒன்று:

ஆற்றங்கரையின் அடர்புதரின் அடுப்பத்தில் போத்தி சென்று கொடிவீசி அடர்ந்து படர்ந்திருந்த பிரண்டை மூட்டினை நெருங்கி, பெருங்கொடியாக இருப்பதால் கொடிகளை ஒடித்து ஒடித்துப் போட்டுக் கடவம் நிறைப்பதைவிட, மூட்டோடு பிடுங்கி கடவத்தில் திணித்தால் வீட்டில் போய் ஆத்தா சீர்பார்த்துக் கொள்வாள் என்று கருதி பிடுங்க யத்தனித்தான்.

மருத்துக்காக, செடி பறிப்பதை விட்டுச் சுளுவாக மருத்துவாழ் மலை அனுமான் பிடுங்க உத்தேசித்த தாத்பரியம். மண்றபாங்கான நிலம், சமீபத்தில் வேட்டி நனையப் பெய்த மழையில் மண் கொவர்ந்தே இருந்தது. பிரண்டைக் கொடியின் மூட அணுகி, வாகாக இரு கைகளாலும் பற்றி, மூச்சுப் பிடித்து, ஒரே தம்மில் பிடுங்கிவிட வேண்டும் என்று, கால்களை அகற்றி நின்று குனித்து, பின் விசையால் பின்னால் சாய்ந்து விடாத எச்சரிக்கையுடன் பலம் பிரயோகித்து இழுத்தான். மண் பெயர்ந்து மூட்டோடு வேரும் வேரடி மண்ணுமாய் வந்தது. மண் பெயர்ந்து வந்த இடத்தில் குபுகுபுவெனப் பச்சை ரத்தம் கொப்பளித்து, காற்றில் குருதி வாடை பரவ, போத்தி மயக்கமுற்றுச் சாய்ந்தான்’

இந்த முடிவு, இந்துத்வா பௌராணிகக் கருத்தாடலை முன்னெடுப்பது என்றும் நிராகரிக்கப்படவேண்டியது என்றும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என்றும் இந்தக் கதாசிரியன் பிற்போக்கு அராஜகவாதி என்றும் நீங்கள் கருதினால், அடுத்த முடிவுக்குப் பெயரலாம்.

முடிவு இரண்டு:

பிரண்டைக் கொடியை நெருங்கும் போது ‘சீத்து பூத்து’ என்று கோபத்தில் சீறும் காளைக் கன்றின் மூச்சுப் போன்ற ஒலி வந்தது. அதற்குக் காரண காரியமான சூழல் இல்லை. காலியான மதுப்புட்டியில் தீக்குச்சி கொளுத்திப் போடும் ஒலிபோல் இருந்தது. போத்திக்கு ஒன்றும் மனசில் ஆகவில்லை. எதற்கும் நெருங்கிப் பார்க்கலாம் – ஒரு வேளை கீரிப் பிள்ளைகளோ, உடும்புகளோ, பெருக்கான்களோ சண்டை பிடித்து நிற்கலாம் – என்று கருதினான்.

மணற் பரப்பில் காலூன்றி நின்று, புதர் தாண்டிப் பொட்டலாய்க் கிடந்த வட்டப் பாறைமேல் இரு கருநாகங்கள் சுதியும் லயமுமாய்ப் பிணைந்து ஒன்றையொன்று பார்த்துச் சீறி நின்றன. மீண்டும் மீண்டும் ‘சீத்’ ஒலி, சண்டை போடுகின்றன போலும் என்றெண்ணினான். சிறு கல்லெடுத்து வீசலாம் என்றும் தோன்றிற்று. புணர்ச்சி விதிகள் ஏதும் இன்னுமவன் கற்றுத் தேறியிருக்கவில்லை. இளமஞ்சள் வெயில், அச்சம், பதைப்பு எல்லாமுமாய் வியர்த்து வழிந்தது. முற்றிலும் விரித்த படங்கள் மூச்சு வாங்க விரிந்து சுருங்கின. கண்கள், கனித்து தெறித்த உண்ணிப் பழங்கள் போல் மினுங்கின. அசையத் திராணியற்று அனங்காமல் நின்று கொண்டே இருந்தான் போத்தி

இதைச் சுற்றுச் சூழல் கதை முடிவென்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், முற்போக்கு எதார்த்தக் கதை முடிவு என்று சொல்லிவிட முடியாது என்று கருதுபவர், அடுத்துப் பயணிக்கலாம்.

முடிவு மூன்று:

மேற்கு முகமாகக் கிழக்குவெயில் விழுந்து கொண்டிருந்தது. வேலியை நோக்கி நடந்த போத்தியின் முதுகில் அறைந்தது. ‘தீங், கீங்’ என்ற இளம் குட்டி நாய்களின் சிணுங்கலும் முனகலும் காதில் விழுந்தது. புதருக்கு அப்புறம் இருந்து குரல் வந்ததாகத் தோன்றியது. சில குட்டிகளின் சேர்ந்திசைக் குரல். வேலியை நெருங்கி நின்று காலின் முன்படம் ஊன்றி, உப்புக்குத்தி உணர்த்தி எம்பிப் பார்த்தான். நான்கு குட்டிகள் வெள்ளை, செவலை, வெள்ளையும் செவலையும், வெள்ளையும் கறுப்புமாக. வெயிலில் காட்டாமணக்குச் செடி நிழலில் ஒதுங்கி, நான்கு கால்களையும் கிழக்கு நீட்டி, முலைக்காம்புகள் அனைத்தும் திறந்து காட்டிப் படுத்திருந்தது தாய்க் குக்கல். ஈன்ற அலுப்போ, பசிக் களைப்போ, சோம்பலோ..

குட்டிகள் இரண்டு நாட்கள் முன்புதான் கண்திறந்திருக்கும் போல. மடிந்த காதுகளும் முட்டி மோதிப் பால் குடிக்க முனைவதுமாக.. எத்தனை ஆண், எத்தனை பொட்டை என்ற கிட்டப்போய்ப் பார்த்தால் தெரியும்! வெள்ளை நிறக்குட்டியைத் தூக்கிப் போனால் என்ன என்று தோன்றியது போத்திக்கு. ஆனால், தாய்ப்பட்டி இருக்கும்போது நெருங்கவிடாது அரை மயக்கத்தில் கிடந்தது தன்ளை நாய். எப்படியும், சற்று நேரம் காத்து நின்றால் இரை தேடப் போகும். இரையெடுத்தால் தானே குட்டிகளுக்குப் பால் சுரக்கும்! அப்போது ஒரு குட்டியைக் கடவத்தினுள் பிரண்டைக் கொடிகளுக்கு நடுவே ஒளித்து, வெயில் படாமல் கொண்டுபோய் விடலாம் என்ற நினைத்தான்.

போனதும் கிழவி பெருங்குரல் எடுப்பாள்.

“எலே! காலறுவான்…. இன்னும் கண்ணு கூடத் தெறக்காத பாங்குட்டியை அநியாயத்துக்குத் தூக்கிட்டு வந்திருக்கியே! பாவம் லே…. அம்மைகிட்டே இருந்து, பெத்த பிள்ளையைப் பிரிக்கலாமா மக்கா. போ. போயி எடுத்த எடத்திலே விட்டுக்கிட்டு வந்திரு. சொன்னாக் கேளு மக்கா… நல்ல பிள்ளையில்லா. நீ வாறதுக்குள்ளே காணம் அவிச்சு வச்சிருக்கேன்” என்பாள்.

தள்ளையையும் பிள்ளைகளையும் பார்க்கப் போத்திக்கு இரக்கமாக இருந்தது. பெரிய பட்டிக்குத் தின்னத்தர, தன்னிடம் ஏதும் இல்லை என்றும் மறுகினாள். சற்றுத் தள்ளிப் போய், பிரண்டை பறிக்க ஆரம்பித்தாள்.

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்ற நீதி இருந்தாலும் கதையில் ஒரு உயிர்ப்பு இல்லை என்று நீங்கள் உணரக்கூடும். எனவே அடுத்த, இறுதி முடிவுக்கு நீங்கலாம். இதற்கு மேல் இந்தக் கதாசிரியனிடம் கைச்சரக்கு இல்லை.

முடிவு நான்கு:

பிரண்டைக் கொடிகள் கிளைத்துச் சடைத்துத் தழைத்துக் கிடந்தன. முற்றிய நார்ப்பட்ட கணுவினை விலக்கிப் பருவமான கணுவில் ஒடித்து, பிஞ்சுக் கணுக்களைக் கழித்துவிட்டு, கடவத்தை நிறைக்க ஆரம்பித்தான். வேலை துரிசமாக நடந்து கொண்டிருந்தது. அரைக்கடவம் தாண்டி முக்கால் கடவம் நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் பறித்தால் போதும். கிழவிக்கு வாயெல்லாம் புதிதாய்ப் பல் முளைக்கும்.

“என் சக்கரக் கட்டி எவ்வளவு காரியமா பருவமாட்டு பெரண்டைக் கொடி பறிச்சுக்கிட்டு வந்திருக்கு.!” என்று நாடியைத் தொட்டுத் தாங்குவாள்.

வெயில் உச்சிக்கு ஏறத் தொடங்கியிருந்தது. இன்னும் கொஞ்சம் பறித்தால் போதும். வேண்டுமானால் இன்னும் நாலு கடவம் பறிக்கலாம். சச்சதுரமான முற்றிய பிரண்டைக் கொடிகளை இழுத்துப் பறித்த கை சற்றுக் காந்துவது போலிருந்தது. இன்னும் நாலு கை பறித்து விடலாம் என்றெண்ணினான். புதரை அணுகிக் கை நீட்டிப் பிரண்டைக் கொடியைப் பற்றும் வேளையில் சற்றுக் கவனம் சிதைந்திருந்தது. புன்னை மரக்கிளையில் இருந்து மஞ்சணத்திக் கிளைக்கு இறங்கி, உண்ணிப் புதர்மீது சரசரவென ஊர்ந்து வந்தது கோதுமை நிறமுள்ள நாலடி நீள நாகம் ஒன்று. நாகம் பிரண்டைக் கொடி மீது ஊரும் வேளையில், அனிச்சையாகப் போத்தியின் வலக்கரம் பிரண்டைக் கொடியும் நாகப்பாம்பின் கழுத்துமாகச் சேர்த்துப பற்றியது.

போத்திக்கும் பாம்புக்கும் சம்பவம் மனசிலாகக் காணநேரம் ஆயிற்று, சரசரவெனப் போத்தியின் வலது முழங்கையில் பாம்பின் உடல் சுற்றிக் கொண்டது. போத்திக்கு கிலேசத்தில் உடல் வேர்த்துக் குளிர்ந்தது. கையை விடவும் தோன்றவில்லை. வாய் குழறி மொழிந்தது கிலியில். பிடி கழுத்தில் இருந்ததால் பாம்பால் வலம் திரும்பவோ, படமெடுக்கவோ இயலவில்லை. கழுத்தில் பிடித்தால் பாம்பால் கொத்த முடியாது என்று தமிழாசிரியர் சொன்னது நினைவுக்கு வந்தது. கையை நெகிழ்த்தினால், மத்தியானச் சாப்பாட்டுக்கு முன் தன் காரியம் ஆகிவிடும் என்று உறைத்தது போத்திக்கு. சாயங்காலம் நூறடி தூரத்தில் இருக்கும் சுடுகாட்டில் தன் சவம் எரியும் என்பதிலும் ஐயமில்லை. வேலியைவிட்டு, பிரண்டைக்கொடியையும் சேர்த்து இழுத்தவாறு சற்று தூரத்தில் வந்தான். கையை உதறினால் தூரப்போய் விழுமா என்று மனம் கேட்டது. தூரப் போகாவிட்டால், வலியிலும் கோபத்திலும் வெகுண்டிருக்கும் அரவம் ஒரே போடாகப் போடும் என்றும் வாயில் நுரை கக்கிச் செத்துக்கிடக்கும் தனதுடலைத் தேடிக் கண்டு பிடிக்கவே மாலை மயங்கிவிடும் என்றும் தோன்றியது. இன்னொருவர் உதவு இல்லாமல் தானே சமாளிப்பது அசாத்தியம். கையை இன்னும் இறுக்கினால் மூச்ச முட்டிப் பாம்பு செத்துப் போகாதா என்ற நினைப்பும் எழுந்தது.

நாகத்தின் பிழையன்று, நம் பிழையும் அன்று, பிரண்டைக் கொடியின் பிழையன்று, விதியின் பிழை, தான் செத்துப் போவதோ அல்லது நாகம் செத்துப் போவதோ! மனிதனுக்கு நடந்தால் அநியாயம் விலங்குக்கு நடந்தால் அதி நியாயமா!

கடவம் முக்கால் பாகம் பொலிந்து கிடந்தது. கடவத்தை விட்டுப் போகவும் மனதில்லை. ஆனால், ஒரு கையில் பிரண்டைக் கடவமும் ஒரு கையில் நெரித்துப் பிடித்த பாம்புமாக, சமநிலை தவறி, வலது கை நெகிழ்ந்தால்’ பிழைத்து நின்றால் கடவத்தை மறுபடியும் வந்து எடுத்துக் கொள்ளலாகாதா?

பிரண்டைக் கொடியும் பாம்புக் கழுத்துமாகத் தடம்பார்த்து நடத்து, ஆற்றங்கரை ஏறி, பாலம் தாண்டி நடக்க ஆரம்பித்தான் போற்றி.

மறு நாளில் இருந்து, போத்திக்கு ‘பாம்புப் பிடி’ போத்தி எனும் பட்டப் பெயர் தோன்றி, வளர்ந்து நிலைத்தது. மறு நாள் வகுப்பறையில், தமிழாசிரியரிடம், பாம்பின் வாழ்நாள் எத்தனை ஆகள் என ஐயம் கேட்டான் கு.போத்திலிங்கம். தனது மிச்சமிருக்கும் வாழ்நாளில் என்றேனும் அரவம் மீண்டும் போத்தியை எதிர்கொள்ளுமா? எதிர்கொண்டால் அது தன்னைப் பகையாகப் பார்க்குமா, நட்பாகப் பார்க்குமா என்ற ஐயம் அவனிடம் இருந்தது சிலகாலம்.

குறிப்பு:

  1. பிரண்டை – தாவரப் பெயர்
  2. சங்க இலக்கியங்களில் பிரண்டை எனும் சொல் ஆளப்படவில்லை.
  3. பிரண்டை, களிப் பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை என நான்கு இனங்களைப் ‘பதார்த்த குண சிந்தாமணி பேசுகிறது. 4. சாதாரணப் பிரண்டையை நெய்யில் வறுத்து உண்டால். மூலத் திளவு. மூல ரத்தம், மாந்தம், வயிற்று வலி. வாய்வு. அதிசாரம், முளை மூலம், கபம், இரத்தப் போக்கு. ஓய்ந்த நடை என்பன போகும். அதிகப் பசி உண்டாகும்.

களிப்பிரண்டையால் ஐயம், பித்தம், கரப்பான், சிலந்திக் கடியும் போகும்.

தீம்பிரண்டையால் செரியா மந்தம். சீதக் கட்டு, இரைப்பு, விக்கல், ஐயம் வாதமும் போகும்.

புளிப் பிரண்டையால், பாண்டு, மார்பு நோய், குன்மம், சுபமும் போகும். சூடு உண்டாகும்.

ஆதாரம்: பதார்த்த குண சிந்தாமணி.

– உயிர் எழுத்து செப்பம்பர் 2014.

நன்றி: https://nanjilnadan.com

நாஞ்சில்நாடன் நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *