பிரச்னையின் நிறம்
கதையாசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 6, 2026
பார்வையிட்டோர்: 74
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரால்ப் எலிஸன் கைக் கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். ஐந்தாரை! அரை மணி நேரமாக அவன் காத்துக் கொண்டிருக் கிறான். ஒரு பஸ்கூட வரவில்லை.பஸ் நிலயத்தில் நல்ல கூட்டம். இத்தனை பேரும் பஸ்ஸில் ஏறிப் போயாக வேண்டும். இந்தியாவில் வேறெதுவும் பொங்கிவழியா விட்டாலும், மக்கள் கூட்டத்துக்குப் பஞ்சமே இல்லை. தனி மனிதனின் தனித்வம் கரைய வேண்டு மானால், தில்லியில் பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும். அமெரிக்காவில் தன்னைப் போன்ற நீக்ரோக்களுக்கு தனி முகம் கிடையாது; அவர்களை விரும்பினாலும், வெறுத்தாலும் இனமாகத்தான் குறிப்பிட்டுப் பேசுவார்கள். இந்தியாவில், இந்நாட்டுப் பிரஜைகளுக்கே தனி முகம் கிடையாது. பஸ்ஸிலும் சரி, ரயிலிலும் சரி, சர்க்கரைக்கும் அரிசிக்கும் ‘க்யூ’வில் நிற்கும் மனித வரிசைகளைப் பார்க்கும் போதும் சரி, அவனுக்கு இதே நினைவுதான் மேலிடுகின்றது. இங்கு வெள்ளை இனம் என்பது, தோலின் நிறத்தில் இல்லை; அதிகாரத்தைக் கைப்பற்றத் தெரிந்தவர்களே அதிர்ஷ்டக்காரர்கள். ஏழைக்கும், பணக்காரனுக்கும் இந்நாட்டில் தெரிகின்ற இடைவெளி உலகில் வேறு எந்த நாட்டிலாவது உண்டா?
ஒரு பஸ் வந்தது. ‘மினி’பஸ்.கூட்டம் முண்டியடித்துக் கொண்டு ஏறியது. ‘மினி’ பஸ்ஸைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு மால்தஸ் ஞாபகந்தான் வரும். இதுவா வருங்கால உலகம்? இருபது பேர் சவாரி செய்யவேண்டிய வண்டியில் இருநூறு பேர்..! ஆண் – பெண் என்ற பால் வேறுபாடு மறைந்த ஒரு நிலையில், உயிரினத்தின் தற்காப்புப் போராட்டம்! பஸ் கண்ணுக்குத் தெரியவில்லை; மனித இனம் வெறும் புள்ளிகளாய், விண்வெளியில் தெரியும் நட்சத்திரப் பூக்களாய் மாறி, ஊர்வது போலிருந்தது. அவனால் அந்த பஸ்ஸில் ஏற முடியாது. ஆறரை அடி உயரமும், அதற்கேற்ற ஆகிருதியும் உடைய அவனால், கூனிக்குறுகி தன்னை வெறும் சதைப் பிண்டமாய் ஆக்கிக் கொண்டு, அந்த பஸ்ஸில் பயணம் செய்வது என்பது இயலாத காரியம். இந்தியாவில் ‘மினி’ பஸ் பயணம், வாழ்க்கைப் பயணம் மாதிரி. இதில் ஏறி சவாரி செய்யத் தெரிந்தவர்கள், வாழ்க்கையிலும் வெற்றியடைக்கிறார்கள். ‘கூனிக் குறுகி சதைப் பிண்டமாய்…? ‘நானே பிரும்மம்’ என்ற தத்துவம் தோன்றிய நாட்டில், மனிதனின் தகுதி இந்த இழிநிலையை அடைந்திருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது….
அவனுக்கு சிகரெட் குடிக்க வேண்டும் போல் இருந்தது. பின்னால் திரும்பிப் பார்த்தான். தண்ணீர் விற்பவனருகில், மரத்தடியில் அந்தக் கிழவி உட்கார்ந்திருந்தாள். பெட்டிக் கடை, அந்தக் கிழவிக்கு எத்தனை வயதிருக்கும்? முகத்தின் தோல் அலை அலையாய்த் தொங்கியது. காதுவரை நீண்ட வாய். பல் இல்லை. பல் இல்லாத சிரிப்புக்கு ஒரு தனிக்கவர்ச்சி உண்டு… அதனால் தான் அந்தக் கிழவி அவனைப் புன்னகையுடன் வரவேற்கும் போதெல்லாம் அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். வழக்கமாக அவளிடந்தான் அவன் சிகரெட் வாங்குவான். ‘ஆ ஓ பேட்டா’ என்று சொல்லி கொண்டேஅவள், வெற்றிலைக் காவி ஏறிய தன் விரலினால் சிகரெட்டை எடுத்துத் தரும்போது, அவன் மனத்தில் ஓர் இனம் காணாத குதூகலம் ஏற்படும். ஆனால் இன்று அவனுக்கு ஏமாற்றம். அவள் ‘ஆ ஓ பேட்டா’ என்று சொல்லவில்லை; புன்னகை செய்யவில்லை. இயந்திர ரீதியாக அவனிடம் சிகரெட்டை நீட்டினாள். முகம் சோர்வடைந்திருந்தது.
“மாய்ஜீ, கியா ஓ கயா?” என்றான் எலிஸன். அவன் தில்லிப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பதவியேற்று ஐந்து வருஷங்களாகின்றன. இதற்குள் அவன் நன்றாக இந்தி பேசக்கற்றுக் கொண்டு விட்டான். ஆரம்பத்தில் அந்தக் கிழவி அவனை ‘சா(ஹ)ப்’ என்றுதான் அழைத்து வந்தாள். அவன் தான் அவளை தன்னை ‘பேட்டா’ என்று விளித்தால் போதும் என்று கேட்டுக் கொண்டான். அவளை பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு வாஷிங்கடனி லிருக்கும் அவனுடைய பாட்டி நினைவு வரும்.
கிழவி சிறிது நேரம் பேசாமலிருந்தாள். அவள் கண்களில் நீர் கசிவதைக் கண்டு எலிஸன் திடுக்கிட்டான்.
‘மாய்ஜி எதற்காக அழுகிறீர்கள்? என்ன நடந்துவிட்டது? அவளிடம் வழக்கமாக கடனுக்கு சிகரெட் வாங்கிக் கொண்டிருந்த ஒரு பையன் அவளை ஏமாற்றிவிட்டான். எண்பது ரூபாய்தானே?அழாதீர்கள், நான் தருகிறேன்” என்றான் எலிஸன்.
கீழே குனிந்து கொண்டிருந்த கிழவி அவனை ‘சடக்’கென்று திரும்பிப் பார்த்தாள்.
”பணத்துக்காவா நான் அழுகிறேன் என்று நினைத்தாய்?” அவள் குரலைச் சற்று உயர்த்தி இந்தக்கேள்வியைக் கேட்டபோது, அவன் சிறிது சங்கடத்துக்குள்ளானான். இந்தக் கிழவிக்கு ஏன் இவ்வளவு கோபம்?
“பணத்துக்காக இல்லை… இது நம்பிக்கைத் துரோகம். இதுவரை நான் யாருடைய இரக்கத்தையும் யாசித்ததில்லை. அப்படி யாசித்திருந்தேனானால், இந்தக் கிழ வயதில் மரத்தடியில் உட்கார வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டிருக்காது.
“மினி” பஸ்ஸில்தான் கூனிக்குறுக வேண்டுமென்பதில்லை; இதோ இந்தக் கிழவி முன்னால் கூனிக் குறுகியாய் விட்டது’ என்கிற உணர்வு எலிஸனுக்கு உண்டாயிற்று. இந்தியாவின் பழம்பெரும் பண்பாடு மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறது. ‘இரக்கத்தை யாசித்ததில்லை’ அமெரிக்க நீக்ரோவாக இருந்தும், தான் ஒரு வெள்ளையனைப்போல் பேசியது எவ்வளவு மடத்தனம்! ‘நீக்ரோ’ பிரச்னையை இரக்கத்துடன் அணுகும் வெள்ளை மேதாவிகளைக் கண்டால் தனக்கு எவ்வளவு எரிச்சல் ஏற்படுகிறது! ‘இரக்கம் காட்டி தங்களை உயர்த்தி’க் கொள்ள விரும்பும் ‘தார்மீக அரிப்பு’ உடையவர்களைப் பார்க்கும்போது தனக்கு உண்டாகும் கோபம், இந்தக் கிழவிக்கும் இருக்கக் கூடும் என்று எதிர் பார்க்காமலிருந்தது தன்னுடைய தவறுதான்!வெறும் பணம், நம்பிக்கைத் துரோகத் தினால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடு செய்ய முடியுமா?
எலிஸன் ஒன்றும் பேசாமல் சிகரெட்டை வாங்கிக் கொண்டு, மறுபடியும் பஸ் நிலையத்துக்கு வந்தான். கூட்டம் குறைந்ததாகத் தெரியவில்லை. சாதாரணமாக இந்நேரத்தில் மால் ரோடில் இத்தனை பேர் நின்று அவன் பார்த்ததில்லை. பல்கலைக்கழக வகுப்புகள் அநேகமாக நான்கு மணிக்குள் முடிவடைந்துவிடும். இன்று காம்பஸ் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் விசேஷ தினமோ என்னவோ!
அப்பொழுது அவனெதிரே ஒரு சிவப்பு நிற ‘ஹெரால்ட்’ வந்து நின்றது.
“குட் ஈவினிங் ஸார்.”
ராதிகா. டாக்டர் பட்டத்துக்காக அவனிடம் ஆராய்ச்சி செய்து, பட்டம் பெற்று, ஒரு கல்லூரியில் பேராசிரியையாக இருக்கிறாள். மிகவும் கெட்டிக்காரப்பெண். நல்ல அழகு. அவளுடைய தந்தை அரசாங்கத்தில் ஒரு பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார். தாய், ‘சமூக’ப் பெண்மணி. அவன் ராதிகாவின் வீட்டுக்குப் பல தடவை போயிருக்கிறான். இந்தியாவில் தென்னிந்தியக் குடும்பங்கள்தான் ‘மேற்கத்திய பண்பாட்டில் அப்படியே மூழ்கி விடவில்லை என்பது பரவலான நம்பிக்கை. ஆனால் ராதிகாவின் குடும்பம் இதற்கு விதிவிலக்கு. ராதிகாவுக்கு ஒரு தங்கை இருக்கிறாள். எம்.ஏ.படிக்கும் அவள், ஒரு விசித்திரமான பெண். குடும்பத்துடன் ஒட்டாத ஒரு தனிப் போக்கு. பார்க்கப் போனால் அவள் ராதிகாவைவிட இன்னும் அழகானவள். நல்ல பெயர்; ‘சரயூ’ இராமாயணத்தில் வருகின்ற ஒரு நதியின் பெயர்.
“நீங்கள் எங்கே போக வேண்டும்! ” என்று ராதிகா கேட்டுக் கொண்டிருந்தாள்.
எலிஸன் மணியைப் பார்த்தான். ஆறு. மைகாட்! ஒரு மணி நேரமாகவா இங்கு நான் காத்துக் கொண்டிருக்கிறேன்! ஸ்கூட்டரிலோ, டாக்ஸியிலோ அப்பொழுதே போயிருக்கலாம். ஆனால் கடந்த பத்து நாட்களாக அப்படித் தான் போய்க் கொண்டிருந்தான். பணத்தை விரயம் செய்யக்கூடாது என்ற வைராக்கியத்துடன் இன்று நின்று கொண்டிருந்ததன் விளைவு, நின்ற அளவிலேயே அவன் வயது ஒரு மணி கூடிவிட்டது!
“மாவ்லங்கர் ஹாலில் இன்று ஒரு கூட்டம் ஆறு மணிக்கு, போகலாமென்றிருந்தேன். மணி இப்பொழுதே ஆறு. வீட்டுக்குத் திரும்பிப் போகிறேன்.”
“என் வீட்டுக்கு வாங்களேன்” என்றாள் ராதிகா.
“என்ன விசேஷம்?”
”அப்பா ஜெர்மனியிலிருந்து நேற்றுதான் வந்திருக்கிறார். இன்று காலை உங்களைச் சந்தித்தபோது சொல்லலாமென்றிருந் தேன். மறந்துவிட்டேன்… அப்பா அருமையான ‘டேப்’புகள் கொண்டு வந்திருக்கிறார். ஃபைன் மியூஸிக், இட் ஈஸ் தி திங்.”
எலிஸனுக்கு இசை என்றால் உயிர்.
“லீட் மீ நாட்டு டெம்டெஷன்ஸ்” என்றான் எலிஸன் சிரித்துக்கொண்டே.
“உங்களுக்கு ஆங்கிலோ-சாக்ஸன் மனப்பான்மை கிடையாது என்று கூறிக் கொள்ளுகிறீர்கள். ஆனால் பேசுவதெல்லாம் கிறிஸ்துவ குற்ற மனப்பான்மையின் அடிப்படையில்தான்” என்றாள் ராதிகா.
எலிஸன் அவள் திறந்து விட்டிருந்த கார் கதவை, உட்கார்ந்த பிறகு ‘படீ ரென்று சாத்தினான்.
“ப்ளீஸ், மெதுவாக” என்றாள்.
“இதுதான் ஒரு நீக்ரோவின் ஆண்மை என்பது. படிப்பு எங்களைக் கெடுத்து விடவில்லை. ‘
ராதிகா காரை ‘ஸ்டார்ட்’ செய்தாள். “இதற்குப் பேர் ஆண்மையா அல்லது முரட்டுத்தனமா, புரியவில்லை” என்றாள்.
“வெள்ளை இனத்தின் நாகரிகம் மிக்க, நாசூக்கான, ஆனால் உள்ளார்ந்த வக்கிரப் பண்பாட்டைக் காட்டிலும், கறுப்பர்களின் நேர்மைமிக்க, வெளிப்படையான முரட்டுப் பண்பு தேவலை…”
‘வார்த்தைகளை விரயமாக்குகிறீர்கள்… நான் வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண் அல்ல” என்றாள் ராதிகா.
“இங்கு வெள்ளை இனம் என்பது தோலின் நிறத்தில் இல்லை என்று எனக்குத் தெரியும்!
“யு மீன்?”
”சமூக வாய்ப்புகளை நேர் வழியிலோ அல்லது தவறான வழியிலோ பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்கள் அதிர்ஷ்டக் காரர்கள். நேர்வழி என்று உபசாரத்துக்காகச் சொன்னேன். அன்று ராஜ்காட்டுக்கும் ஒரு குறுக்கு வழியாகத்தான் அழைத்துப் போனான் ‘டோங்கா’க் காரன். நியாயமாக உழைத்துச் சம்பாதிப்பது பைத்தியக்காரத்தனம் என்ற நிலை உருவாகிக் கொண்டு வருகிறது. உங்கள் நாட்டில் நீ வந்தபோது நான் சிகரெட் வாங்கிக் கொண்டிருந்தேனே, அந்தக் கிழவி..” என்று சொல்லிவிட்டு மேலே ஒன்றும் கூறாமல், தோள்களைக் குலுக்கிக் கொண்டான் எலிஸன். ‘ஹும் சொல்லுங்கள்”.
அவன், கிழவி ஏமாந்த கதையைச் சொன்னான்.
”பாவம்… எண்பது ரூபாயா? பெரிய ஏமாற்றந்தான்” என்றாள் ராதிகா.
“எதற்குச் சிரிக்கிறீர்கள்?”
எலிஸன் புன்னகை செய்தான்.
“அவளுடைய ஏமாற்றத்தைப் பணத்தில் கணக்கிட்டது என்னுடைய இயல்பான அமெரிக்கத்தனம் என்று நினைத்தேன். இது இருபதாம் நூற்றாண்டின் வாழ்க்கை மதிப்பு என்று இப்பொழுது புரிகிறது”.
“அப்படியென்றால் அவளுக்கு எதனால் ஏமாற்றம்? நீங்கள் சொல்வது புரியவில்லை.”
“புரியாது… நம்பிக்கைத் துரோகம் என்று கேள்விப்பட்டிருக் கிறாயா? அதனால்தான் அவளுக்கு ஏமாற்றம்… பணத்தைப்பற்றி அவள் அவ்வளவாகக் கவலைப்படவில்லை.”
“அதெப்படி முடியும்? மரத்தடியில் பெட்டிக்கடை வைத்திருப் பவளுக்கு பண நஷ்டத்தைப் பற்றிக் கவலையில்லை என்றா சொல்கிறீர்கள்?”
“நம்பிக்கை துரோகத்தைக் கண்டு கோபப்படுவதோ அல்லது ஏமாற்றமடைவதோ பணமுள்ளவர்களுக்கு மட்டுந்தான் இருக்க வேண்டிய ஆடம்பர உணர்ச்சியா? ஏழைகளுக்கு இருக்கக்கூடாதா?” என்றான் எலிஸன்.
‘அப்படியொன்றும் நான் சொல்லவில்லை. நீங்கள் சொல்லும் தகவல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, அவ்வளவுதான்.’
“அந்தக் கிழவியை பார்த்த பிறகுதான் இந்த நாட்டைப்பற்றிய நம்பிக்கை எனக்கு அடியோடு போய்விடவில்லை.”
“நீங்கள் எதனையும் இலட்சியப்படுத்திப் பார்க்க முயலுகிறீர்கள். பர்ஹாப்ஸ், நீக்ரோ ரொமான்டிஸம்’
“இது என் பார்வைக் கோளாறா? இதோ, இதே இடத்தில் தான் நாலு நாள் முன்பு நான் வரும்போது…” அவன் செங்கோட்டையை பார்த்துவிட்டுப் பேச்சை நிறுத்தினான்.
“சொல்லுங்கள்…”
“சரித்திரம் எவ்வளவு அற்புதமான விஷயம்!” என்றான் எலிஸன், செங்கோட்டையை பார்த்துக் கொண்டே. பச்சை விளக்குகாக ராதிகா காத்துக் கொண்டிருந்தாள்.
“சரித்திரம் ஒரு குப்பைத் தொட்டி, என்கிறார் உங்கள் ஹென்றிஃபோர்ட்.”
“சரித்திரமே இல்லாத நாட்டில் வேறு என்ன சொல்வார்கள்?” “ஒரு வேளை இதுதான் உங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்குக் காரணமோ என்னவோ?”
எலிஸன் சிறிது நேரம் பேசாமலிருந்தான். பிறகு தொண்டையை லேசாகக் கனைத்துக் கொண்டு சொன்னான்: “நீ சொல்வது சரிதான். சரித்திரத்தை மரபு என்று பார்க்கப் போனால், உன் நாட்டைப் பற்றி வருந்தாமலிருக்க முடியாது.’.
“மரபு என்று எதைச் சொல்லுகிறீர்கள்?”
“வெளியில் ஒரு வாழ்க்கை, வீட்டில் ஒரு வாழ்க்கை- இதில் தென்னிந்தியர்களை மிஞ்ச முடியாது.”
“நாங்கள் அப்படியில்லையே? என் வீட்டுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். அப்படியிருந்தும் நீங்கள் இப்படிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.”
“நான் தனிப்பட்டவர்களைப் பற்றிப் பேசவில்லை? பெரும்பான்மையோரை பற்றித்ததான் பேசுகிறேன்.”
“நீங்கள் அப்பொழுது ஏதோ சொல்ல வந்தீர்கள்… சரித்திர லயிப்பு, பேச்சின் திசையை மாற்றிவிட்டது”.. என்றாள் ராதிகா.
“எதைப்பற்றி?” என்று சிறிது நேரம் யோசித்தான் எலிஸன். “எஸ் நாலு நாள் முன்பு நான் சாந்தினி சௌக் வந்தபோது, பஸ்ஸை அங்கேயே பாலத்தருகே நிறுத்தி விட்டார்கள். இரண்டு பக்கத்திலும் போக்குவரத்திற்கு தடை, பிரதமர், செங்கோட்டை எதிரேயுள்ள அந்த மைதானத்தில் பேசப் போகிறார் என்பதனால் இந்த ஜபர்தஸ்து என்று அறிந்தேன். தெருவை ஒட்டி அமைந்துள்ள அந்த நீண்ட சுவர் முன்பிருக்கும் ‘ப்ளாட்ஃபாரத்தில் நிறைய பிச்சைக்காரர்கள் குடும்பத்தோடு இருந்தார்கள். போலீஸ்காரர்கள் அந்த இடத்திலிருந்து அவர்களை அடித்து விரட்டினார்கள். அப்பொழுது உங்கள் பிரதமர், வறுமையை நாட்டிலிருந்து விரட்டுவது எப்படி என்று பேசியதுதான் எனக்கு வேடிக்கையாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் பார்க்கும்போதுதான் சிகரெட் விற்கும் அந்தக் கிழவி விசுவரூபம் எடுத்து எனக்கு காட்சி அளிக்கிறாள். திஸ் ஈஸ் நாட் ஜஸ்ட் நீக்ரோ ரொமான்டிஸம், பட்தி ஹார்ட் ரியாலிட்டி ஆஃப் யுவர் கன்ட்ரி”
“அமெரிக்காவில் ஹார்லெம்மில் உள்ளவர்கள் பணக் காரர்களா?” என்று கேட்டாள் ராதிகா.
“அமெரிக்காவில் ஏற்றத்தாழ்வு இல்லை என்று நான் சொல்ல வில்லை. நீக்ரோக்களில் பெரும்பான்மையானவர் ஏழைகள்தான். ஆனால் நீக்ரோக்களும் வெள்ளையர்களும் ஒரே இனமல்ல. ஆப்பிரிக்காவிலிருந்து இன்னோர் இனத்தை அடிமைக்களாகக் கொண்டு வந்ததனால், வெவ்வேறு இனத்து முரண்பாட்டினால் உண்டான பாரம்பரிய ஏற்றத்தாழ்வு இது. ஒரே சமூகத்தில், ஒரே இனத்து மக்களுள் ஜாதிப் பிரிவினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுக்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இதனால்தான் நீங்கள் அமெரிக்காவின் நீக்ரோ பிரச்னையையும், இந்நாட்டின் ஹரிஜனப் பிரச்னையையும் ஒரே மாதிரியான பிரச்னைபோல் இணைத்துப் பேசுவது எனக்குப் புரியவில்லை. மரபு என்று நான் அப்பொழுது சொன்னது உனக்கு இப்பொழுது புரியலாமென்று நினைக்கிறேன்.”
“இந்தியாவில் ஹரிஜனப் பிரச்னை இப்பொழுது ஒரு பிரச்னை இல்லையே? தீண்டாமை, சட்டப்படி ஒரு குற்றம்…’ என்றாள் ராதிகா.
எலிஸன் பதில் சொல்லவில்லை. அவளைப் பார்த்து லேசாகப் புன்னகை செய்தான்.
‘பதில் சொல்ல முடியாவிட்டால் புன்னகை செய்வது தான் உங்கள் மரபோ? என்று கேட்டுக் கொண்டே வெல்லெஸ்லி ரோடு வந்ததும், காரை இடப்பக்கம் திருப்பினாள் ராதிகா.
”பதில் சொல்லி உன் மனசை சங்கடப் படுத்துவதைக் காட்டிலும், புன்னகை செய்வது நல்ல மரபுதான்.”
“என் மனசு எதற்காக சங்கடப்பட வேண்டும்? வி ஆர் எ லிபரேட்டட் ஃபாமிலி … எங்கள் குடும்பத்தில் யாருக்குமே பத்தாம் பசலிப் போக்கோ அல்லது குறுகிய மனப்பான்மையோ கிடையாது. எங்களுடன் பழகியும் நீங்கள் இப்படிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
அவள் வீட்டு வாசலில் காரை நிறுத்தினாள். ‘காம்பவுண்ட் கேட்’ சாத்தியிருந்தது. அவள் கீழே இறங்கிப்போய் கதவைத் திறந்தாள். அவள் கதவைத் திறக்க இறங்கிப் போன போது எலிஸன், ‘ட்ரைவர்’ ஸீட்டில் தள்ளி உட்கார்ந்து கொண்டு, அவள் கதவைத் திறந்ததும், காரை ‘ஸ்டார்ட்’ செய்தான்.
அவன் காரை உள்ளே செலுத்தியதும் அவள் ‘கேட்’ அருகே நின்று கொண்டு, புன்னகையுடன் அவனை பார்த்து ஒரு ராணுவ ‘சல்யூட்’ செய்தாள்.
அவன் காரை ஓட்டிக்கொண்டு போய் ‘போர்டிகோ’வில் நிறுத்தினான்.
ராதிகாவின் தாய் மிஸஸ் நாதன் வாசலில் நின்றுகொண் டிருந்தாள். இவளுக்கு என்ன வயதிருக்கும்! இவளுக்கு ராதிகா வயதில் ஒரு பெண் இருக்கிறாள் என்று நிச்சயமாக யாரும் சொல்லமாட்டார்கள். அவள் எலிஸனைப் பார்த்ததும் புன்னகை செய்தாள்.
“ஹல்லோ… ஹௌ ஆர் யு?” என்று அவனை கேட்டுக் கொண்டே அவள் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த ராதிகாவைப் பார்த்தாள்.
”ஃபைன், தாங்க் யு … ஐ ஆம் யுவர் நியூ ஷோஃபர்” என்றான் அவன். தான் வண்டி ஓட்டி வந்ததை வேடிக்கையாகக் குறிப்பிட்டு. “இவ்வளவு படித்த வண்டியோட்டி எங்களுக்குக் கிடைத்திருப்பது பற்றி எனக்குச் சந்தோஷந்தான்” என்றாள் மிஸஸ் நாதன்.
“அப்பா வாங்கிக் கொண்டு வந்த டேப்களை கேட்பதற்காக இவரை அழைத்து வந்தேன்” என்றாள் ராதிகா.
”அப்படியா! கேளுங்கள்… தேர் வெரிநைஸ்…” என்று அவனிடம் புன்னகையுடன் சொன்னவள், முகத்தை திடீரென்று கடுமையாக்கிக் கொண்டு ராதிகாவைக் கேட்டாள்; “சரயூ எங்கே, தெரியுமா உனக்கு?”
“காலேஜிலிருந்து வரவில்லையா?”
‘இல்லை… அவளைப்பற்றி நான் ஒன்று கேள்விப்பட்டேன்.. எக்ஸ்க்யூஸ் மி.டாக்டர் எலிஸன், ராதிகாவிடம் இரண்டு நிமிஷம் தனியாகப் பேச வேண்டும்…”
“ஓ எஸ் … பை ஆல் மீன்ஸ்.”
எலிஸன் சோபாவில் உட்கார்ந்து கொண்டான். எதிரே ‘டீபா’யில் இருந்த ஓர் ஆங்கிலப் பத்திரிகையை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான். அவன் மனம் பத்திரிகையில் ஈடுபடவில்லை. சரயுவைப் பற்றிப் பேசத்தான் ராதிகாவை உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறாள் அவள் அம்மா. அவளைப் பற்றி என்ன கேள்விப்பட்டிருப்பாள்!
“ஹல்லோ, டாக்டர் எலிஸன் …ஹௌ ஆர் யூ…?’”
எலிஸன் பத்திரிகையினின்றும் பார்வையை விலக்கிப் பார்த்தான். நாதன், அவன் அவருடன் கை குலுக்கினான். நாதன் அவனெதிரே சோபாவில் உட்கார்ந்தார்.
“ஜெர்மனிப் பயணம் சுகமாக இருந்ததா?” என்று கேட்டான் எலிஸன்.
“இட் வாஸ் ஃபைன் நிறைய டேப்கள் கொண்டு வந்திருக்கிறேன்.”
“இசையைக் கேட்கத்தான் நான் வந்திருக்கிறேன்”. ராதிகா சொன்னாள்.”
“ராதிகா எங்கே?”
”உள்ளே இருக்கிறாள்…”
நாதன் பையிலிருந்து ‘பைப்’பை எடுத்து அதில் புகையிலையை நிரப்பிக் கொண்டே அவனைக் கேட்டார்: ‘ஹாவ் ஸ்மோக்?… என்னிடம் சிகரெட் இல்லை, சுருட்டுதான் இருக்கிறது.’
“நோ… தாங்க் யு … என்ன ‘டேப்’ கொண்டு வந்திருக்கிறீர்கள்?”
“ஹெர்பர்ட் வான் கரஜன், யூகன் சோஷம், ருடால்ஃப் கெம்ப் கிறிஸ்டஃப் ஈஷன் பாஷ், ஹெர்மன் ஃப்ரே அன்ட் கார்ல் ஆர்ஃப்…”
“ரியலி?… எக்ஸைடிங் இனஃப் ”என்றான் எலிஸன்.
“எத்தனை தடவை கேட்டாலும் அலுக்கவில்லை. ஜெர்மனியை தொழில் துறையில் முன்னேற்றமடைந்த நாடு என்றளவில் தான் எல்லாரும் பார்க்கிறார்கள். அந் நாட்டின் கலை முன்னேற்றமும் ஒரு வியக்கத் தக்க விஷயந்தான். ம்யூனிஷ்ஷில் ‘நேஷனல் தியேட்டரில், கார்ல் ஆர்ஃபினுடைய ‘கார்மினா புரானா’ பார்த்தேன்… வாட் ஆன் எக்ஸ்பிரியன்ஸ்!”
“நீங்கள் ஜெர்மனிக்கு மட்டுந்தான் போனீர்களா? வேறு எங்காவது போனீர்களா?”
“வேறு எங்கும் போகவில்லை. ஆஃபீஸ் வேலை வேறு எங்கும் போகவிடவில்லை. மந்திரியும் கூட வந்திருந்த காரணத்தினால், அவருடனேயே திரும்பும்படியாக ஆகிவிட்டது.
“வுட் யூ லைக் டு ஹாவ் எட்ரிங்க்?” எலிஸன் தயங்கினான். ”ஆல்ரைட்…’ஸ்காட்ச்” பருகிக்கொண்டே இசையைக் கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.”
நாதன் எழுந்து சென்று ‘கப்-போர்டை’த் திறந்து கண்ணாடித் தம்ளர்களை எடுத்தார். அவர் நடப்பதிலிருந்து அவர், ஏற்கெனவே குடித்திருக்க வேண்டுமென்று எலிஸனுக்குத் தோன்றிற்று. தம்ளர்களில் ‘விஸ்கி’யை ஊற்றிக் கொண்டு ஃபிரிஜிடேரை நோக்கிச் சென்றார்.
“சோடாவா, தண்ணீரா?” என்று கேட்டார் நாதன் எலிஸனைப் பார்த்து.
“இரண்டும் வேண்டாம் …ஐஸ்… “
நாதன், ‘ட்ரே’யையும், ‘ஐஸ்’ ஜாடியையும் எடுத்துக் கொண்டு, ஃபிரிஜிடேரின் மீது வைத்திருந்த கண்ணாடித்தம்ளர்களை எடுத்து வர இன்னொரு கை இல்லையே என்பது போல் அவற்றைப் பார்த்தார்.
எலிஸன் எழுந்து சென்று அவரிடமிருந்து ட்ரேயையும் ஐஸ் ஜாடியையும் வாங்கிக் கொண்டான். நாதன் கண்ணாடித் தம்ளர்களை எடுத்துக் கொண்டார்.
அவர்கள் மறுபடியும் வந்து உட்கார்ந்தார்கள்.
நாதன் ஒரே மடக்கில் தன் தம்ளரை காலி செய்தார். எலிஸனுக்கு இது ஆச்சரியமாக இருந்தது.
“கொஞ்சம் கொஞ்சமாகப் பருகிக்கொண்டே இசை கேட்கலாமென்று சொல்லிவிட்டு ஒரே மடக்கில் குடித்து விட்டீர்களே?” என்று கேட்டான்.
”உங்களுக்குச் சொன்னேன்… எனக்குச் சொல்லவில்லை. என்னால் இசையை இப்படித்தான் அனுபவிக்க முடியும்.”
அவர், மறுபடியும் கப்-போர்டை நோக்கி நடந்தார். அவர் ஏதோ ‘டென்ஷ’னில் இருப்பதுபோல் அவனுக்குப் பட்டது. ‘லார்ஜ்’ என்று சொல்லுவதற்கும் இன்னும் அதிகமாக தம்ளரில் ஊற்றிக் கொண்டு தமது இருப்பிடத்திற்கு வந்தார். ஜாடியிலிருந்து நாலைந்து ஐஸ் கட்டிகளை எடுத்துத் தம்ளரில் போட்டுக் கொண்டார். மறுபடியும் வேகமாகக் குடிக்க ஆரம்பித்தபோது, எலிஸன் சொன்னான்: “கோ ஸ்லோ …ஏன் இவ்வளவு அவசரம்?”
நாதன் பதில் சொல்லவில்லை. தம்ளரை பாதி காலி செய்து விட்டு கீழே வைத்தார். அணைந்திருந்த பைப்பை மறுபடியும் பற்ற வைத்துக்கொண்டு, புகையை நெஞ்சுக்குள் இழுத்து வெளியே விட்டார்.
“நீங்கள் ஏதோ தவிப்புக்குள்ளாயிருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது’ என்றான் எலிஸன்.
“தவிப்புக்கா? வாட் டூ யு மீன்?”
“ஐ டோன்ட் நோ…” என்று சொல்லியவாறு தோள்களைக் குலுக்கிக் கொண்டான் எலிஸன்.
அவர் இன்னொரு மடக்கில் தம்ளரை காலி செய்தார்.
அப்பொழுது ராதிகாவும் மிஸஸ் நாதனும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். எலிஸனும் நாதனும் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் மிஸஸ் நாதன் ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்தினாள்.
“அந்த டேப்களைக் கொண்டு வா… இவருக்குக் கேட்க வேண்டுமாம்…” என்றார் நாதன். ராதிகாவைப் பார்த்து.
“இவரை நான்தான் அதற்காக அழைத்து வந்தேன்” என்றாள் ராதிகா.
“இவரை நீ கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாயா?” என்று கேட்டார் நாதன் நிதானமாக.
தம்ளரிலிருந்து சிறிது பருகிக் கொண்டிருந்த எலிஸன் திடுக்கிட்டு அவரைப் பார்த்தான்.
அவர் மூன்றாம் தடவையாக கப்-போர்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
எலிஸன், ராதிகாவை நோக்கினான்.
“ஆமாம்… கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன், அதில் என்ன தப்பு?” என்று கேட்டாள் ராதிகா.
நாதன் தம்ளரில் விஸ்கியை ஊற்றிக் கொண்டு வந்தார்: ”நான் தப்பு என்று சொல்லவில்லையே….கன்கிராட்ஸ், டாக்டர் எலிஸன்.”
அவர் இன்னும் சில ஐஸ் கட்டிகளைத் தம்ளரிலே போட்டுக் கொண்டார்.
“உன் தங்கை என்ன செய்யப் போகிறாள் தெரியுமா?” என்று கேட்டார் நாதன்.
“உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே அவரருகில் வந்தாள் மிஸஸ் நாதன்.
“தெரியுமாவது! அவள் மத்தியானம் ஆஃபீசுக்கு வந்தாள், ஒரு வெறுந்தடியனை அழைத்துக் கொண்டு. அவன் ஹரிஜன். அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாளாம்.”
“ஹரிஜன் என்பது வாஸ்தவந்தானா?” என்று கேட்டாள் மிஸஸ் நாதன்.
:”அவனைப் பார்த்தாலே தெரிகிறது, கன்னங் கரேலென்று அவன் முகமும்..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது ராதிகா இடைமறித்தாள்:
“டாடி, டோன்ட் பி ஸில்லி.”
எலிஸன் புன்னகை செய்தான்… “ப்ளீஸ்.. லெட் ஹிம் கோ ஆன்.”
‘கன்னங்கரேலென்று’ அவர் குறிப்பிடும்போது அது வெறுக்கத்தக்க வேண்டியதொன்று என்ற அர்த்தத்தில் சொல்ல வில்லை. ஹரிஜனங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. இது ஜாதி வெறி அல்ல; பண்பாட்டு இடைவெளி” என்றாள் மிஸஸ் நாதன்.
எலிஸன் ஒன்றும் பேசவில்லை. ராதிகாவைப் பார்த்து லேசாகக் குறுநகை செய்தான்.
“அம்மாவுடன் நான் இதைப்பற்றித்தான் பேசிக் கொண்டிருந் தேன். சரயூ அவனை விரும்பினால், நாம் அதற்குக் குறுக்கே நிற்கக்கூடாது என்பதுதான் என் வாதம்… ‘ஹரிஜன், அது இது’ என்று பேசுவதெல்லாம் தப்பு” என்றாள் ராதிகா.
”இவள் உங்களை விரும்புவதற்கும் சரயூ ஒரு ஹரிஜனை விரும்புவதற்கும் வித்தியாசம் இருக்கிறது” என்றாள் மிஸஸ் நாதன்.
”என்ன வித்தியாசம்?” என்றான் எலிஸன்.
“ஹரிஜனர்கள் கலாசார ரீதியாக எப்படி ஒரு பின்தங்கிய வகுப்பு என்ற பிரக்ஞை, நூற்றாண்டு நூற்றாண்டுகளாக எங்கள் இரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. அந்தப் பிரக்ஞையினின்றும் விடுபடுவது என்பது ஒரு சுலபமான காரியமல்ல…” என்றாள் மிஸஸ் நாதன்.
“நீங்கள் விடுபடவும் விரும்பவில்லை, அப்படித்தானே?”
“அப்படியில்லை… வந்து…” என்று இழுத்த மிஸஸ் நாதனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
“இப்பொழுதுதான் வரும்போது ராதிகா சொன்னாள், ‘இந்தியாவில் ஹரிஜனப் பிரச்னை தற்சமயம் ஒரு பெரிய பிரச்னை இல்லையே, தீண்டாமை சட்டப்படி ஒரு குற்றம்’ என்று. சட்டம் என்ன செய்ய முடியுமென்று அப்பொழுது யோசித்தேன் …சட்டம் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள. மனச்சாட்சி இருக்கின்றது என்று நமக்கு நாமே நிரூபித்துக் கொள்வதற்காக ஏற்படுத்திக் கொண்ட ஒரு மயக்கம் அவ்வளவுதான்…”
எலிஸன் எழுந்தான்.
“என் மகள் ஒரு கலாசார சூன்யத்தைக் கல்யாணம் செய்து கொள்வதை நான் விரும்புவேன் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்களா?” என்றார் நாதன் மிகவும் கோபமாக.
“கலாசார சூன்யமோ என்னவோ, அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நீங்கள் இந்தக் கல்யாணத்தை விரும்புவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்றான் எலிஸன்.
“சரயூ விரும்பும் அந்தப் பையன் அவளுடன் படிக்கிறவன் தானாம்… ஸ்காலர்ஷிப் ஹோல்டர்…அவன் அப்பா தமிழ் நாட்டில் பண்ணையில் வேலை செய்பவர்போலிருக்கிறது ” என்றாள் ராதிகா.
“என்அப்பா என்ன செய்கின்றார் தெரியுமா?” என்று கேட்டான் எலிஸன்.
“அதைப்பற்றி என்ன?” என்றாள் மிஸஸ் நாதன்.
“ஓட்டலில் பணியாளாக இருக்கிறார்.”
“அதற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது, டாக்டர் எலிஸன்” என்றாள் மிஸஸ் நாதன்.
“என்ன வித்தியாசம்? நான் ‘இம்போர்டட் ஹரிஜன்!’ அவ்வளவுதானே? “
‘இம்போர்ட்’ சாமான்களுக்கு இந்தியாவில் நல்ல மதிப்பு உண்டு என்பதும் எனக்குத் தெரியும்.
“அமெரிக்காவில் உங்களால் ஒரு வெள்ளைப் பெண்ணை ஒரு பிரச்னையை உருவாக்காமல் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா?” என்று கேட்டாள் ராதிகா.
“அது இப்பொழுது பிரச்னை அல்ல… நீதான் உன் குடும்பம் ‘லிபரேடட்’குடும்பம் என்று சற்றுமுன்னால் சொல்லிக் கொண்டாய். ஒரே பிரச்னையை அணுகும்போது, இரண்டு விதமான அளவு கோல்கள் கொண்டு அதைப் பார்ப்பதுதான் ‘லிபரேடட் ஸ்பிரிட்’ என்று எனக்குத் தெரியாது” என்றான் எலிஸன்.
“அமெரிக்காவின் நீக்ரோ பிரச்னையும் இந்தியாவின் ஹரிஜனப் பிரச்னையும் ஒரேவிதமான பிரச்னை அல்ல என்று நீங்களுந்தான் சற்று முன்பு சொன்னீர்கள்…” என்றாள் ராதிகா.
“நான் அதைச் சமூகக் கண்ணோட்டப் பார்வையில் சொன் னேன். வெள்ளை இனத்துக்குள்ளேயே ‘தீண்டப்படாதவர்கள்’ என்று ஒரு தனிப்பிரிவு கிடையாது. வெள்ளையருக்கும் நீக்ரோக்களுக்கும் இடையே ஏற்படும் சண்டைகள், ஆண்டை -அடிமை என்ற பாரம்பரிய நினைவின் காரணமாக ஏற்படும் வெவ்வேறு இனங்களின் முரண்பாட்டினால் விளையும் மோதல்கள். மறுபடியும் இதை வற்புறுத்திக் கூற விரும்புகிறேன். ஆனால் இது இப்பொழுது பிரச்னை அல்ல. ‘கன்னங்கரே’லென்று அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் நான், இந்தியாவில் ‘கன்னங்கரே’ லென்றிருக்கும் ஒருவனை விட எந்த விதத்தில் உயர்ந்தவன் என்று எனக்குப் புரியவில்லை.’”
“அவர் குடித்துவிட்டு ஏதோ உளறியதை நீங்கள் பெரிதாச எடுத்துக் கொள்ளக்கூடாது” என்றாள் மிஸஸ் நாதன்.
‘யார் குடித்துவிட்டு உளறுகிறார்கள்? அவள், அவனுடன் ஆஃபீசுக்கு வந்து ‘இவனைத்தான் மணக்கப் போகிறேன், ஆசீர்வாதம் செய்யுங்கள்’ என்கிறாள். எனக்கு எவ்வளவு அவமானமாக இருந்தது தெரியுமா? என்னுடைய ‘தவிப்பு’ இப்பொழுது புரிகிறதா, டாக்டர் எலிஸன்? வயலில் வேலை செய்யும் ஒரு பண்ணையாள்’ எனக்குச் சம்பந்தி. ஹஹ்…. ஹா ஹஹ்… ஹா…”
அவர் பெரிதாக சிரித்துக் கொண்டே ‘கப்-போர்டை நோக்கி நடந்தார்.
“டாடி… நோ..” என்று சொல்லிக் கொண்டே ராதிகா அவருடைய கையைப் பற்றி இழுத்தாள்.
அவர் திமிறினார்: “இது என் வீடு. யார் எனக்குத் தடை சொல்ல… ஸ்காட்ச் தீர்ந்தாலும் பரவாயில்லை…. சரயூவின் மாமனார் கள் தருவார்… குட் நேடிவ் ட்ரிங். சந்திரா குடித்திருக்கிறீர்களா, டாக்டர் எலிஸன்? டிலைட்ஃபுல் பாய்சன்!…”
எலிஸன் அவரையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றான். பிறகு மெதுவாகச் சொன்னான்: “நான் போய் வருகிறேன்.’
“வாட் அபௌட் டேப்ஸ்? இசை கேட்க வேண்டாமா? ராதிகா, ஏன் நிற்கிறாய்? கொண்டு வா, டேப் ரிகார்டரை” என்று விஸ்கியைதம்ளரில் ஊற்றிக் கொண்டே, தள்ளாடிய நிலையில் சொன்னார் நாதன்.
எலிஸன் மெளனமாக வாசலை நோக்கிச் சென்றான்.
“நீங்கள் விரும்பும் இசைதான் என்ன? பேசாமல் போகிறீர்களே, பித் ஓவன்?” என்று நாதன் கேட்பது அவன் காதுகளில் விழுந்தது.
– இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.
| இந்திரா பார்த்தசாரதி (பிறப்பு: சூலை 10, 1930) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள்,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அப்பாவுக்கு ஒரு கடிதம்
என்.ஸ்ரீதரன்
August 16, 2026
காலம் கடந்து விட்டது
இரா.துரைமாணிக்கம்
August 16, 2026
எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
ஆர்.மணிமாலா
August 16, 2026