பிந்துனுவேவ





(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தலாங்கு தக திகு தக ததிங் கிண தொம்
தாம் தஜ்ஜொம் தஜ்ஜொம் தகிட ஜொம்.
த தீ கிண தொம்
தத்தீங் கிண தொம்….
குமாரியுடன் சஞ்சார பாவத்தை தாள உடலால் ரமணி அசைத்துக் கொண்டிருந்தாள். அவளின் கம்பீரமான ‘ஆண்’ வேடமும் புருவங்கள் மேலெழுந்த துடிப்பான பார்வையோடு கலந்த பாவங்களும் சபையினரை பதுமைகள் ஆக்கி விட்டிருந்தன. சொற்களில் செதுக்கி உள்ளத்தை வருடும் பாடலை சரோ அக்கா ‘ஜதிகள், இராகங்களால்’ உயிர் ஊட்டிக் கொண்டிருந்தாள்.
பண்டாரவளையின் அந்த அழகிய மலைச் சூழலுக்குள், மரங்கள் அடர்ந்து சோலைகள் போன்று பூமரங்கள் பூத்துக்குலுங்கும். அந்த அழகிய சூழலுக்கு உகந்த முறையில் சிகரம் வைத்தாற்போல எழும்பி நிற்கும் அந்த அழகிய பெரிய மண்டபம்.
தமிழ், சிங்கள அதிகாரிகள், விரிவுரையாளர்களாலும், தமிழ் சிங்கள ஆசிரியர்களாலும் குழுமியிருந்தது அந்த மண்டபம். மண்டப மேடையில் அவர்களது அலங்கார நளினங்கள் மத்தாப்புச் சரங்களை பார்வையாளர்கள் மனதில் விசிறிக் கொண்டிருந்தன. கலாசாலையின் சிங்கள அதிபர் பெரேரா அவர்களின் அசைவிலும் அந்த உயிரான இசையின் உணர்விலும் தன்னையே மறந்து ரசித்துக்கொண்டிருந்தார். நடனமேதை சித்திரசேனவின் ஆழ்ந்த ரசிகர் அவர்.
அசைவுள்ள ஆடலுடனும், இசைவுள்ள பாடலுடனும் பிறந்தவன்தான் மனிதன். பாவம், ராகம், தாளம் இணைந்து அந்தச் சதங்கை ஒலியில் எழும்பும் ஓர் உயர்ந்த கலையின் பிரதிபலிப்பு எத்துணை அற்புதமானது!
வயது முதிர்ந்தவர்கள், திருமணம் செய்தவர்கள், முதிர் கன்னிகள், ஆண்கள் என்று பல தரப்பட்ட ஆசிரியர்கள் அங்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குமாரியும், ரமணியும் குழந்தைகள் போன்று கணிக்கப்படுபவர்கள்.
ஆசிரிய கலாசாலையின் சிங்கள, தமிழ் ஐக்கியத்தை வலியுறுத்தும் கலாசார விழா அழகாக முடிந்திருந்தது. பயிற்சிக்காக வந்திருக்கும் ஆசிரியர்கள் காலையிலும் மாலையிலும் அதிபர் காரியாலயத்தில் சென்று கையொப்பமிட்டுக் கொள்ள வேண்டும். வெள்ளைச் சாறிகள் உடுத்திக்கொண்டும், தலைகளை உயர்த்திய கொண்டைகளை போட்டுக்கொண்டும் காட்சி தரும் பயிற்சி பெறும் பெண் ஆசிரியர்கள் அழகிய தேவதைகள் போலத் தோற்றம் காட்டினார்கள்.
“உங்கள் ஆண் வேடம் மிகவும் எடுப்பாக இருந்தது. என்ன துடிப்பான பாவங்கள் உங்கள் ஆட்டத்தில். இன்னும் பல தடவைகள் நீங்கள் ஆடினாலும் பார்க்கவேணும் போலிருக்கிறது” என்று ரமணியின் ஆட்டத்தை பாராட்டினார் சிங்கள அதிபர் பெரேரா.
‘மனதில் முகிழ்க்கும் எல்லா உணர்வுகளுமே ஒரு பொறி போலத்தான்’ என எண்ணிக்கொண்ட ரமணி புன்னகைத்தவாறு திரும்பிக் கொண்டாள்.
அதிபர் பெரேரா மீண்டும் அழைத்துக்கொண்டார். அழகிய நடன மங்கையின் சிலை ஒன்றை ரமணிக்கு பரிசாக கொடுத்தார்.
எவ்வளவுதான் பாராட்டுக்கள், பரிசுகள், பெரிய புன்னகைகள் கலந்த மகிழ்ச்சி கிடைத்தாலும் ரமணியின் நெஞ்சின் ஆழத்தில் ஏதோ ஒரு வெறுமை தழுவி இருப்பது போலத் தெரிந்தது.
அந்த அலுவலகத்தின் ஜன்னலூடாக வெளியே பார்த்தாள்.
மரங்கள் அடர்ந்த மலைக்காடுகள். சல சலத்த நீர் வீழ்ச்சிகள். அங்கும் இங்குமாகக் ‘குடு குடு’த்து ஓடும் சிற்றாறுகள். தலையில் கூடைகளைச் சுமந்து கொண்டு கலகலத்துப் பேசிக்கொண்டு செல்லும் அந்தப் பெண்கள். ஆஹா என்ன அற்புதம்!
சுற்றிலும் மரகதப் பசுமை கொஞ்சும் அந்த இடத்தில் ஏதோ இனம் புரியாத அச்ச உணர்வும் இளையோடுவதை ரமணி அவ்வப்போது உணர்ந்ததுண்டு.
விடுதிகளில் தங்கியிருக்கும் ஆசிரியர்கள், தனியாகவோ இருவராகவோ வெளியில் செல்வதற்கு இங்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பெண் ஆசிரியர்கள் ஒரு போதும் தனியே வெளியே செல்ல அனுமதிக்கப் படமாட்டார்கள். கலாசாலைக்கு வரும் வழியில் பல விபரீதங்கள் நடந்துள்ளன என்று தமிழ் பகுதிக்குப் பொறுப்பான அதிபர் பாலசுப்பிரமணியம் கூறியது ஏனோ இப்போ நினைவுக்கு வந்தது.
அவளின் விடுதியில் சிங்கள ஆசிரிய மாணவிகள் ஒரு புறத்திலும் தமிழ் ஆசிரிய மாணவிகள் மறுபுறத்திலுமாகத்தான் இருந்து கொண்டிருக் கிறார்கள். ஆனால் எல்லோர்களினதும் மனதுகள் ஆத்மசுத்தியோடு இயங்குகின்றதா என்பது கேள்விக்குறிதான். ஏனென்று தெரியவில்லை. அடிமனதில் எதிரிகள் போன்ற ஒரு உணர்வோடுதான் பழகுகிறார்கள் போலத் தென்படுகிறது. ஆனால் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்கிறார்கள். கூடி இப்படி வாழும்போது பலரும் தமக்குள் புதைந்துகிடக்கும் இயல்பான சுபாவங்களைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
வாழ்க்கை போலியானது. முகமூடிகள் தான். வெறும் நடிப்புகள்தான். கலைஞர்கள் அற்புதமானவர்கள்.
தடித்த உடலமைப்பும் உயர்ந்த தோற்றமும் கொண்ட சுகுணா ஆளுமை மிகுந்தவள். பார்க்கும்போது ஒரு வித்தியாசமான தோற்றம் தென்பட்டாலும் அடிக்கடி புன்சிரிப்பை எல்லோரிடமும் வீசுவாள். சிங்கள ஆசிரிய மாணவிகளுக்கு அவள்தான் பொறுப்பானவள்.
சிங்கள, தமிழ் கலாச்சார விழாவின் ஆரவாரங்கள், பாராட்டுக்கள், குதூகலங்கள் அனைத்தும் ஓய்ந்து ஒருவாரம் ஆனபின் ஒரு இரவில் அந்த விடுதி அறை இருளில் தோய்ந்திருந்தது. நடுப்பாகத்தில் மட்டும் ஒரு மின்விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.
இரவு வேளை விடுதி அறையுள் மின்சார விளக்குகள் அணைக்கப்படுகின்றன.
”எல்லோரும் இப்படி வாருங்கள்? கெதியாக ” சிங்களத்தில் சுகுணா பெரிய சத்தத்தில் அழைக்கின்றாள்.
பகிடிவதை என்ற போர்வையில் பெரிய மண்டபத்தில் ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் வேதனைப் படுத்தினார்கள். பாவம் என் அம்மாவைப் போன்ற ஒரு ஆசிரியை மேசைக்கு மேல் தும்புத்தடியோடு நின்றுகொண்டு அழுத காட்சி நெஞ்சை வருத்துகிறது. இப்போ என்னத்துக்கு இவள் அழைக்கிறாள். ரமணி எண்ணிக்கொண்டாள்.
பெண்கள் விடுதி அமைந்திருந்த இடத்திற்குக் கீழே எழுந்த பெரும் கூச்சல் அந்த இரவில் துல்லியமாய்க் கேட்கிறது. ரமணி பயந்து போனாள்.
சுகுணாவின் முகத்தில் கலவரம் தெரிகிறது. ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்று ரமணிக்குத் தெரிகிறது. அவள் சொன்ன செய்தி ரமணியின் நெஞ்சை உறையவைத்தது.
பிந்துனுவெவ ஆசிரிய கலாசாலைக்கு வரும் வழியில் திறந்த மைதானத்துக்கு அருகே அமைந்திருந்த பிந்துனுவெவ புனர் வாழ்வு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்களை நூற்றுக்கணக்கான கிராம வாசிகள் சூழ்ந்து தாக்க முயற்சிப்பதாக சுகுணா கூறினாள். அந்த இருளில் கீழிருந்து எழும் சீழ்க்கை ஒலிகளும், கூச்சலும் அந்த மலைப் பிராந்தியத்தின் அமைதியை சிதறடிப்பது போலிருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன் பண்டாரவளைக்கு சென்றுவிட்டு அதிபர் பெரேராவின் வாகனத்தில் கலாசாலைக்கு திரும்பும் வழியில் சிங்களத்தில் வீதியில் ஒட்டப்பட்டிருந்த சுவர் ஒட்டிகளைப் பற்றி பெரேரா ரமணியிடம் கூறியிருந்தார். பண்டாரவளைப் பிரதேசத்தையும் புலிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதா என்ற தொனியில் எழுதப்பட்டிருந்த சுவரொட்டி வாசகங்களை பெரேரா ரமணிக்கு விளக்கியிருந்தார். முற்றிலும் சிங்களக் கிராமமான பிந்துனுவெவில் அமைந்திருந்த புனர்வாழ்வு முகாமைக் குறிவைத்தே அந்த சுவர் ஒட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன என்பதை உணர்ந்துகொள்ள ரமணிக்கு வெகு நேரம் பிடிக்கவில்ல. ஆனால் அந்த முகாமில் தங்கியிருந்த தமிழ் இளைஞர்களை கிராமவாசிகள் சூழ்ந்து தாக்க முற்படுவார்கள் என்று அவள் நினைக்கவில்லை.
விநாடிகள் கழியக் கழிய கூச்சல் ஆரோகணித்து அந்த மலைப் பிராந்தியத்தில் திகில் ஊட்டியது. ஆசிரியர்கள் விடுதிச் சமையல் அறையில் உதவியாளராக வேலை பார்க்கும் குணசிங்க கீழிருந்து மூச்சிறைக்க விடுதியை நோக்கி ஓடிவருவது இருண்ட நிழலாய்த் தெரிகிறது.
முகாமைச் சுற்றி இருநூறுக்கும் அதிகமான கிராம மக்கள் தடிகளோடும் கத்திகளோடும், உள்ளே நுழைந்து தமிழ் இளைஞர்களைத் தாக்க முயன்றதாகவும் பொலிசார் அவர்களைக் கட்டுப்படுத்த கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் குணசிங்க சுகுணாவிடம் கூறினார். இத்தகைய ஒரு அசம்பாவிதத்தை பொலிசார் தடுத்து விட்டது பற்றி ரமணி நிம்மதி யுற்றாள்.
அந்த முகாமில் நாற்பது இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்றும், சிலர் 11 வயதிற்கும், 13 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் குணசிங்க தெரிவித்தார்.
குணசிங்கவின் நெருங்கிய நண்பன் ஒருவன் இந்த புனர்வாழ்வு முகாமின் பாதுகாப்பு ஊழியராக பணி ஆற்றுவதால் குணசிங்கவிற்கு அந்த முகாம் பற்றிய விபரங்கள் எல்லாமே அத்துப்படி.
அந்த இளைஞர்கள் தங்களை அந்த முகாமில் இருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று வருஷக் கணக்கில் கேட்டு வந்திருக் கிறார்கள்.
பிந்துனுவெவ புனர் வாழ்வு முகாம் உண்மையில் ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை ஆகும். வீடுகளில் இருந்து பெற்றோர் அனுப்பும் கடிதங்கள் தங்களுக்கு தரப்படாமல் அவை முகாமின் குப்பைக் கூடைகளில் வீசப்பட்டிருப் பதாக அந்தத் தமிழ் இளைஞர்கள் பலமுறை முறைப்பாடு செய்திருக்கிறார்கள். தங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புக்களைக்கூட தங்களுக்குத் தருவதில்லை என்று அவர்கள் ஆத்திரம் கொண்டிருக்கிறார்கள்.
அன்று இரவு ஆத்திரம் கொண்ட இளைஞர்கள், முகாமின் பாதுகாப் புக்கு பொறுப்பாக இருந்த ‘லெவ்ரினன்’ அபேயரட்னவுடன் பெருமளவு வாக்கு வாதப்பட்டிருக்கிறார்கள். இதை அடுத்து மற்றுமொரு பாதுகாப்பு ஊழியர் துப்பாக்கியால் வேட்டுத் தீர்த்து தமிழ் இளைஞர்களை அச்சுறுத்தியபோது தமிழ் இளைஞர்கள் ஆத்திரம் கொண்டுள்ளார்கள். இதை அடுத்து ஏற்பட்ட அமளி துமளியில் கிராம வாசிகள் சேர்ந்துகொண்டார்கள். ஆனால் நிலைமை ஏதோ கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதென்று ரமணி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
அந்த இரவு அச்சுறுத்தும் கொடிய இரவாக நீண்டது.
அவள் எப்போது உறங்கிப்போனாள் என்று அவளுக்குத் தெரியாது. மறுநாள் காலை குணசிங்க படபடத்துக் கூறிய செய்திகள் அவளின் நெஞ்சைப் பிளந்தன. இந்த முகாமிலிருந்த 29 பேர் விடியற் பொழுதில் ஆயுதங்களாலும், துப்பாக்கிச் சூட்டினாலும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியை அவன் சுமந்து வந்திருந்தான்.
முகாம் இருந்த இடத்தில் தீ பற்றி எரிந்து புகை மண்டலம் கிளம்பு வதை விடுதியில் இருந்து பார்க்க முடிந்தது. நான்கு இளைஞர்கள் ஆயுதங் களால் தலையிலும், மார்பிலும் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் தமிழில் கதறியவாறு பொலிசாரைக் கும்பிட்டுக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டு கீழே விழுந்ததை தான் பார்த்ததாக குணசிங்க கூறினான்.
ரமணிக்கு தலை சுற்றுவது போலிருந்தது.
அமைதியும் அழகும் கொழித்த பிந்துனுவெவ கிராமத்தில் வழிந் தோடிய பச்சைத் தமிழ் அரும்புகளின் இரத்தம் தீராத குரூர கறையை அவலமாக அப்பியிருந்தது.
இரண்டு வாரங்களுக்குப் பின் கலாசாலையை விட்டு யாழ்ப்பாணத் திற்குப் புறப்பட்டபோது தனது நடனத்தைப் பாராட்டி அதிபர் பெரேரா வழங்கிய அழகிய நடன மங்கையின் சிலையை எடுத்துச் செல்ல அவளுக்கு மனம் வரவில்லை.
(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை)
– கலாபூஷணம் புலோலியூர் கே.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகள். தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன்.
– சிறைப்பட்டிருத்தல் (ஞானம் பரிசுச் சிறுகதைகள் 2006), முதற் பதிப்பு: டிசம்பர் 2006, ஞானம் பதிப்பகம், கொழும்பு.
நவஜோதி ஜோகரட்னம்
நவஜோதி ஜோகரட்னம் நீண்டகாலம் பிரான்சில் வாழ்ந்து தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார். ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’ என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு 2005இல் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது. 20க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். 2005ஆம் ஆண்டு ஞானம்’ சஞ்சிகை நடாத்திய கலாபூஷணம் புலோலியூர் சதாசிவம் ஞாபகார்த்தப் போட்டியிலும், 2006ம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையின் ஆதரவில் லண்டன் பூபாளராகங்கள் நடாத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியிலும் பரிசில்களைப் பெற்றவர். பல இலக்கியக் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். லண்டன் ‘சண் றைஸ்’ (சூரியோதயம்) வானொலியின் அறிவிப்பாளராக கடமை புரிகின்றார். லண்டன் தமிழ் வானொலியில் ‘மகரந்தச் சிதறல்’ என்ற மகுடத்தில் 50க்கும் மேற்பட்ட பல்துறைசார்ந்த கலைஞர்களுடனும், வல்லுனர்களுடனும் நடாத்திய நேர்முகங்கள் பரந்த வாசகர் வரவேற்பைப் பெற்றுள்ளன. இளவாலை கன்னியர் மடத்தின் பழைய மாணவியான நவஜோதி ஜோகரட்னம் பழைய மாணவர் சங்கத்திலும் செயற்பட்டு வருகின்றார்.