பிடித்த வேலை – ஒரு பக்க கதை





கார் ரிப்பேராக இருப்பதால் டாக்சிக்கு போன் செய்துவிட்டு அப்பார்ட்மென்ட் வாசலில் காத்திருந்தேன்.
சே! இந்த நகர வாழ்க்கை வர வர எரிச்சலூட்டுகிறது.காலை எழுந்ததில் இருந்து ஒரே பரபரப்பு! மனைவி கவிதாவுக்கும் டென்சன். பாப்பாவை ஸ்கூலுக்குத் தயார் செய்ய வேண்டும்.
எனக்கு மதிய சாப்பாடு ,காலை டிபன் தயாரிக்க வேண்டும்.அரை மணி நேரத்தில் போக வேண்டிய ஆபிஸுக்கு இந்த டிராபிக்கால் ஒரு மணிநேரம் ஆகும்.அங்கே போனால் அந்த மேனேஜர் “உங்க கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்”என்று மேலும் டென்சனை ஏற்றி விடுவார்.
எம்.சி.ஏ முடித்து ஐ.டி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து எட்டு வருடமாகி விட்டது.அப்பா வேலையை விட்டுட்டு ஊருக்கு வரச் சொல்கிறார்.பதினைந்து ஏக்கர் நிலம் தென்னந்தோப்பு இருக்கிறது.அதைப் பார்த்தாலே போதும் என்கிறார்.எனக்கும் விவசாயம் பார்க்கத்தான் ஆசை.ஆனால் நம் ஊரில் இந்த ஊரில் உள்ளது போல் நல்ல ஸ்கூல் இருக்காது,இங்கே மாதிரி அங்கே ஷாப்பிங் பன்ன முடியாது, படித்தவர்கள் மத்தியில் இது போன்ற அபார்ட்மெண்ட் வாழ்க்கை அங்கே கிராமத்தில் கிடைக்காது.அது மட்டுமல்ல “என்னப்பா இந்தப் படிப்பு படிச்சுட்டு விவசாயம் பார்க்க வந்துட்ட” என்று உறவினர்கள் கிண்டல் செய்வார்களோ என்று தட்டிக் கழித்து வருகிறேன்.
டாக்சி வந்துவிட்டது.நான் அடிக்கடி அழைக்கும் டிரைவர் பாபுதான் வந்திருந்தார்.ஜாலியான நபர்.
எப்போதும் உற்சாகமாக இருப்பவர்.
“பாபு எப்படி இருக்கீங்க?”
“சார்! வணக்கம் சார்.அருமையா இருக்கேன் சார்.நீங்க எப்படி இருக்கீங்க?”
அதுதான் பாபு.இதே கேள்வியை வேறு யார்கிட்ட கேட்டாலும் என்ன சொல்வார்கள்? நல்லா இருக்கேன் சார்,ஏதோ இருக்கேன்.இப்படித் தானே சொல்வார்கள்.பாபுவின் உள்ளத்தில் இருந்து எப்படி வார்த்தை வருகிறது பாருங்கள்! “எப்படி பாபு எப்போதும் உற்சாகமாக இருக்கீங்க? எனக்கு எப்பவும் ஏதாவது டென்ஷனாய் இருக்கிறது பாபு”
பாபு சிரித்துக் கொண்டே”மனசுல எந்தக் கவலையும் வச்சுக்கிறதுல சார். அப்புறம்,தகுதிக்கு மீறி ஆசைப் படுகிறதில்லை.எனக்குப் பிடித்த வேலையைச் செய்கிறேன்.இளையராஜா பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.அடிக்கடி அதை போட்டு கேட்டுக் கொண்டிருப்பேன். அடுத்தவங்களோட என்னை கம்பேர் பண்ண மாட்டேன்.மொத்தத்தில் என் வாழ்க்கைக்கு நானே ராஜா! நானே மந்திரி! சார்.”
“மற்றவர்கள் சொல்றதை காதுல வாங்காம,உங்களுக்கு பிடிச்ச நல்ல விஷயத்தை சேய்தீங்கன்னா நீங்களும் ரொம்ப ஹேப்பியா இருப்பீங்க சார்.”
பாபு எனக்கு ஏதோ ஒன்றை உணர்த்தியது போல் இருந்தது.
விரைவிலேயே ஊருக்குச் சென்று விவசாயம் பார்க்க முடிவு எடுத்துவிட்டேன்.தேங்ஸ் பாபு.