பாவலாக்கள்





(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த அறையில் நான்கு பக்கச் சுவர்களையும் மறைத்து, அவற்றில் ஆடை ஆபரணங்கள் போல் வழுவில்லா வழுவழுப்பாய் ஜொலித்த சன்மைக்கா கலந்த காகிதக் கலவை, பல்வேறு வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவிய ஒயிலுடன் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருந்தபோது –

ஜெனரல் மானேஜர் டி.கே. ராமன் இன்டர்காமில், ஏதோ ஒரு பெரிய போருக்கு, வியூகம் சொல்லிக் கொடுப்பதுபோல், கத்தோ கத்தென்று கத்திக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில், பூமியின் பாரத்தைத் தனியொருத்தியாய்த் தாங்குவதுபோல் புருவத்தைச் சுழித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் சுகந்தி. ஒப்பாரி வைப்பதுபோல் ஒலித்த டெலிபோனை எடுத்து ‘எஸ் பிளீஸ்’ என்று அவள் படு ஒப்பாரி போட்டபோது, ஜெ.எம். இன்டர்காமில் ‘ஒன் மினிட்’ என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து, ‘அந்த ஃபைலைக் கொடுக்கலியா? என்று கேட்டார்.
ரிசீவரில் காது வைத்த ககந்தி, “எஸ்…. சார்…” என்று சொல்லிக் கொண்டே, ‘எம்.டி. வீட்டிலிருந்து பேசுகிறார் ஸார் என்று சொல்லி டெலிபோனை நீட்டினாள். மேனேஜிங் டைரக்டரின் குரல் சலிப்போடும் வலிப்போடும் ஒலித்ததில் இருந்து அவர், தம் வீட்டில் இருந்துதான் பேசவேண்டும் என்று அவள் அனுமானித்து புன்னகைத்தபோது, ரீசிவரை வாங்கிய டி.கே. ராமன், அவளைப் பார்த்து, “அந்த பைலை என்ன பண்ணினே?” என்று சொல்லிக் கெண்டே “ஹலோ” என்றார்.
எதிர் முனையிலிருந்து “என்னய்யா இது…? நான் கேட்கவேண்டிய கேள்வியை நீங்க கேட்கறிங்க… அதுவும் மரியாதை இல்லாமல்…..” என்ற குரல் விழுந்து, சுகந்தி காதிலும் கம்பிக் குரலாகத் தாவியது. ஜெனரல் மானேஜர், “எஸ்… ஸார்… ஸாரி ஸார்… ஷூர் சார்… டெபனட்லி ஸார்.. ஓ.கே.ஸார்… உடனே ஸார்….” என்று அஷ்டோத்ர ஸார்களைப் போட்டு, உரையாடலை முடித்துவிட்டு, ரிசீவரை அதன் இருப்பிடத்தில் வைக்கக்கூட நினைவில்லாதபடி, அதை எடுத்துத் தம் முன் நெற்றியில் அடித்துக் கொண்டார். ” அந்தப் பைலை எம்.டி. கிட்டக் கொடுக்கலியா…? என்னம்மா நினைச்சுக்கிட்டீங்க. அக்கௌண்டண்டைப் பார்த்து சம்பளத்தை செட்டில் பண்ணுங்கோ ….” என்று மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டே போனார்.
சுகந்தியின் உடம்பை நாடி நரம்புகள் இழுத்துப் பிடித்து விறைக்க வைத்தன. வியர்வைச் சுரப்பிகள் வேகமாகச் செயல்பட்டன. நெற்றி மேளம் போல் விம்மியது. வாய், உதடுகளை முன் குவித்துக் கூம்பியது. எந்த பைல் ஸார்…? என்று கேட்கப் போனாள். பிறகு, ‘இதுகூடத் தெரியலியா…? என்று அந்த ‘பெல்லோ ‘ கத்துவானே என்று நினைத்தவள் போல, பேசாது, பெருவிரலால் பிளாஸ்டிக் தரையில் அரை வட்டம் போட்டாள். டி.கே. ராமன் என்ற ஜெனரல் ‘மானேஜர்கம் நெருப்புக்கோழி அவசரமாகச் சொன்னது.
“போன புதன்கிழமை, எம்.டி. கிட்ட பெர்சனலாய்க் கொடுக்கச் சொல்லிக்கொடுத்தேன் பாருங்கோ… ஒரு கான்பிடன்ஷியல்பைல்… படிக்காமலே கொடுக்கும்படிச் சொன்னேன் பாருங்கோ… அதுதான்… பில்டிங் டெண்டர் பைல்…. அதுதான், ஜே.கே. பிரதர்ஸுக்கு கான்ட்ராக்ட் கொடுக்கும்படி சிபாரிசு செய்த பைல்….. அதை நீ கொடுக்கவில்லையா? ஹைலி கான்பிடன்ஷியல் பைல்…. கொடுக்கலியா…? கொடுக்கலியா…..? கொடுக்கவே இல்லியா…?” என்று யா’வில் பல ஆ’க்களைப் போட்டார்.

சுகந்திக்கு, வேலை பார்க்கும்போது, ஏற்படுவது போன்ற ஆயாசம் ஏற்பட்டது. அந்த பைலை இந்த டி. கே. ராமன் கொடுக்கச் சொன்னது நிஜம்தான். அன்று, ‘வென்ஸ்டேய’ என்றதும் நிஜம்தான். படித்துப் பார்த்ததில் அது, எம்.டி. மட்டுமே படிக்க வேண்டிய கான்பிடன்ஷியல் பைல் என்பதும் நிஜம்தான். அன்று, பாய் பிரண்ட்ஸ்க ளில் ஒருவனான கோபால்தாஸ் வந்ததும் நிஜம்தான். இந்த பேமிலி லேடி , அவனுடன், அருகே இருந்த ஹோட்டலில் பேமிலி’ அறைக்குள் போனதும் நிஜம். ஆளுக்கொரு டீ சாப்பிட்டுவிட்டு, அரை மணிநேரம் கழித்து அல்லது களித்து, வெளியே வந்ததும் நிஜம். அந்த பைலைக் காதலானுபவ சுகபோதையில் எம்.டியிடம் கொடுக்க மறந்ததும் நிஜம். ஆனல், அது இப்போது எங்கே இருக்கிறது என்பதுதான் நிஜமாகவே தெரியவில்லை .
சுகந்தி, தனது டெரின் புடவை முந்தானையின் முனையைப் பிடித்து, மூளைக்குப் பதிலாக அதைத் திருகியபோது, ஜெனரல் மானேஜர்டி. கே. ராமன், அவளின் மௌன சம்மதத்தைத் கலைப்பது போலக் கத்தினார்.
“என்னம்மா நினைச்சுக்கிட்டீங்க…? இன்றைக்கு போர்ட் மீட்டிங் நடக்கப் போவுது… எம்.டி. , அந்த பைலைப் படித்தால் தான், போர்ட் அப்ரூவலுக்கு வாதிட முடியும்…. அவர்கிட்ட கொடுக்கச் சொல்லியும், கொடுக்காமல் இருந்தால் உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்….? அவரு என்னை சஸ்பெண்ட் பண்ணுவேன்னு சொல்லிட்டார். அதனால், நான், உங்களை டிஸ்மிஸ்பண்ணாமல், சஸ்பெண்ட் ஆகப் போவதில்லை. கோ அண்ட் மீட் தி அக்கௌன்டன்ட்… உங்களுக்கு சேரவேண்டிய கணக்கை இப்பவே செட்டில் பண்ணுங்க…. போகிற வழிக்கு அப்படியே ஸ்டெனோவையும் வரச் சொல்.”
சுகந்திக்கு, இயல்பான தற்காப்பு உணர்வு தலைக்கு வந்தது.
“ஐ ஆம் நாட் இரரஸ்பான்ஸுபிள் ஸார். நீங்க கொடுத்த பைலை நேரா எம்.டி. கிட்டக் கொடுத்துட்டு…. அப்புறமாத்தான் என் சீட்டுக்கே போனேன்.”
“அப்போ எம்.டி. கான்பரன்ஸ்ல இருந்தார். எப்படிக் கொடுக்க முடியும்?”
“தமிழில் ஆகுபெயர்னுகேள்விப்பட்டு இருக்கீங்களாஸார்…? அதுமாதிரி எம்.டியோட அறையில் வச்சுட்டுப் போனேன்.”
“நிஜமாவா?”
“நல்ல ஞாபகம் இருக்கு… என்னைப் போய்… என்னைப் போய்….”
சுகந்தி, கைக்குட்டையை எடுத்துக் கண்களை ஒற்றியபோது, டி.கே. ராமன், அவளைக் கனிவாகப் பார்த்தார்.
“நான் வச்சுட்டேன் ஸார்… சத்தியமா எம்.டி. ரூம்லே…”
“என்னம்மா நீங்க… சாம பேத் தானத்தோட பேசினால் நீங்க புரிஞ்சுக்க மாட்டிங்க போலிருக்கே… எம்டியிடம் நேரடியாய் லைபக் கொடுக்க வேண்டியது உங்க பொறுப்பு. நீங்க கொடுத்தீங்களா.. கொடுக்கலியா… என்பது முக்கியமல்ல. கொடுத்தீங்க என்கிறதைக் கொடுக்காமல் கூட நிரூபிக்கிறதுதான் முக்கியம். எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு மணி நேரத்துல கொடுத்த பைல் வரலைன்னா உங்களுக்கு டிஸ்மிஸ் நிச்சயம் கொடுத்திட்டிங்கன்னா, ஒரு பத்துநாள் சஸ்பென்டோட நிக்கும்…. ஏன்னா, இனிமேல் அந்த பைல் கிடைச்சாலும், எம்.டியால் படிக்கவும் முடியாது. எம்.டிக்காக அதை எந்த கோஷ்டும் படிக்கவும் முடியாது. போர்ட் மீட்டிங் அஜெண்டாவுல வைக்கவும் முடியாது. ஓ.கே… நீங்க இன்னும் ஒரு மணி நேரத்துல பைலோட வரப்போறீங்க… இல்னேன்னா டிஸ்மிஸ்ஸோடப் போகப் போறீங்க… ப்ளீஸ் கெட் அவுட். ஐ ஸே கெட் அவுட்”
சுகந்தி, தன்னுடல் இருப்பது தனக்கே தெரியாதவளாய், நடந்து இருக்கையில் வந்து அமர்ந்தாள். எதிர்வரிசையில் உள்ள பாதிக் கிழங்கள் பார்வை தாங்கமாட்டாது, தன் உடலே தனக்கு சுமையாக, நாற்காலியில் பொத்தென்று உட்கார்ந்தாள். தனக்கு தானே பேசிக் கொண்டாள்.
“பைல் கிடைச்சால் சஸ்பெண்டாம்; கிடைக்கவில்லை என்றால் டிஸ்மிஸ்ஸாம்… அவள் பொருமிக்கொண்டாள். இப்போது, நிஜமாகவே ஒரு சொட்டு – ஒரே சொட்டுக் கண்ணீர் வந்தது. வெறுமையுடன் அங்குமிங்குமாய்ப் பார்த்தாள். தனது கண்கள் கலங்குவது, எதிர் வரிசை இளசில்லாச் சிட்டுக் குருவிகளுக்குத் தெரியவேண்டாம் என்பதுபோல் கீழே குனிந்தபோது –
மேஜையின் கீழே மத்தியில் போடப்பட்ட கம்பியின் பாதி நீளத்தை அடைத்துக் கொண்டு ஒன்று கிடந்தது. விவசாய கூலிப் பெண்ணின் குழந்தை திண்ணையில் குப்புறக் கிடப்பதுபோல், கிடந்த அந்த ‘ஒன்றை ‘ எடுத்தாள். அடடே.. அடேயப்பா… ஹை… கான்பிடன்ஷியல் பைல் ! அதுவும் ஹைலி கான்பிடன்ஷியலான அதே அந்தப் பைல் தான். அதன் ‘ரேப்பரில்’ சுகந்தி தெரியாமல் மிதித்த செருப்புச் சுவடு அட்சர சுத்தமாகத் தெரிந்தது. இன்னொரு சுவடும் மங்கலாகத் தெரிந்தது. ஒருவேளை, பாய் பிரண்டு கோபால்தாஸின் பூட்ஸ் சுவடோ என்னவோ….?
அவள், அந்த பைலை விரித்துப் பார்த்தபோது, ஜெனரல் மானேஜர்டி. கே. ராமனே, அங்கு தலைவிரி கோலமாக ஓடிவந்தார்.
“பைல் கிடைச்சுதா….? நல்லாத் தேடுனீங்களா…? நானும் தேடுறேன்…”
டி.கே. ராமன் சொல்லிவிட்டு நிற்கவில்லை. அவள் மேஜை டிராயரை இழுத்தார். அங்கே இருந்த மேக்கப் சாமான்களை எடுத்து, கையில் தூக்கி கான்பிடன்ஷியல் பைலோ என்று பார்த்தார்.
சுகந்திக்கு, அவர் தன் காதல் கடிதங்களைப் பார்த்தது கூடப் பெரிதாகத் தெரியவில்லை. கையில் உள்ள பைலை மறைக்க வேண்டும். இல்லையானால், கொடுக்காமலாவைத்தாய் என்று கெடுத்துவிடுவார். ‘நீங்க கொடுத்தீங்களா என்பது முக்கியமல்ல….கொடுக்காமல் கூட கொடுத்ததாய் நிரூபிக்கிறதுதான் முக்கியம்’ என்று டி. கே. ராமன், பித்துக்குளி ராமனாய்ச் சொன்னது, அவள் சித்தத்தில் இருந்த பித்தத்தை நீக்கித் தெளிய வைத்தது. பைலைக் கொடுக்காமலே கொடுத்ததாய் நிரூபிக்கணும். அப்போதுதான் சஸ்பென்ட் வராது. அப்போது தான் டிஸ்மிஸ் வராது…’
டி.கே. ராமன், அய்யோ – நான் பிள்ளைக்குட்டிக்காரனாச்சே…’ என்று பச்சைக் குழந்தையைப் போல், புலம்பிக் கொண்டே திரும்பிப் போனார். சுகந்திக்கு லேசாகச் சிரிப்புக்கூட வந்தது. “இந்த மானேஜருக்கு நிர்வாகத் திறமை இல்லையே…? நானாக இருந்தால், ‘அந்த பைலை மறந்திட்டீங்க போலிருக்கு… பரவாயில்லை….. ஒண்ணும் குடி முழுகிடல.. அதுவும் நல்லதுக்குத்தான். ஒரு கரெக்ஷன் பண்ணனும் கொண்டு வாங்க’ என்ற பதமாகச் சொல்லி , கிளார்க் கொண்டு வந்ததும், குரல்வளையை ஒரே பிடியாய்ப் பிடித்திருப்பேன்.”
டி.கே. ராமன், தம் அறைக்குள் பைத்தியம் போல் சுற்றிக் கொண்டிருந்தபோது, சுகந்தி, நாற்காலியில் டங்கென்று உட்கார்ந்தாள். டி.கே. ராமனின் ‘கொடுப்பது முக்கியமல்ல… கொடுத்ததாய் நிரூபிப்பதுதான் முக்கியம்’ என்ற வார்த்தைகள் காதுகளில் வலம் வந்தன. அப்படி நிரூபித்தால்தான், தானும் தப்பமுடியும், அந்த அசடும் தப்பலாம்… அது தப்ப வேண்டும்… அப்போதுதான், பிரியாய் இருக்கலாம்.
ஒவ்வொரு ஊழியரும், தனக்கு மேலே இருப்பவர் அசடாக இருந்தால், அந்த ஆசாமியை நேசிப்பதுபோல், சுகந்தியும், இப்போது டி. கே. ராமனை நேசித்தாள்.
இந்த பைலை என்ன செய்யலாம்…?
சுகந்தி, எம்.டி. அறைக்கருகே போனாள். எம்.டியோ , டி.கே. ராமனை நோக்கிக் கையைக் காலை ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தார். ஸ்டேனோ பெண் ஒருத்தி, கருக்கெழுத்து குறிப்பேட்டுடன் குறிப்பறிய நின்றாள். கிவ் மீ ஒன் அவர்டயம் ஸார் என்று அழும் குரலோடு சொல்லிக் கொண்டேடிகே.ராமன் வெளியே வந்தபோது, சுகந்தி எதிரேயிருந்த டாய்லட் அறைக்குள் போய் ஒளிந்து கொண்டாள். அங்கேயே காத்திருந்தாள்.
கால்மணி நேரத்தில், எம்.டி. போய்விட்டார். அவரது பியூன், குறட்டை விட்டார். ஸ்டேனோ மங்கை எங்கேயோ போய்விட்டாள்.
சுகந்தி, அடி மேல் அடி வைத்து, அம்மி நகர்வதுபோல், கால்களை நகர்த்தி, எம்.டி. அறைக்குள் நகர்ந்தாள்.
அந்தக்குளுகுளுப்பு அறையில் இருந்த கிளுகிளுப்பான சோபா செட்டையும், கழல் நாற்காலியையும், பூதாகரமான மேஜையையும் உற்றுப் பார்த்துக் கொண்டே , முன்னேறினாள். எம்.டி.யின் இருக்கைக்கு அருகே வந்து, படபடப்புடன் நோட்டம் விட்டாள். நல்ல வேளையாக, மேஜை டிராயர் ஒன்று, ஒருசில உபயோகமில்லாத தட்டு முட்டுச் சாமான்களுடன் பாதியறை திறந்தவெளிக்கோலத்தில கிடந்தது. அதை இழுத்து முந்தானைக்குள் இருந்த பைலை எடுத்து திணித்து உள்ளே தள்ளிவிட்டு, ஒரே ஓட்டமாகத்திரும்பி ஓடியவள், தன் சொந்த இருக்கைக்கு வந்த பிறகே மூச்சுவிட்டாள்.
ஒரு மணி நேரம் ஓய்ந்தது.
எம்.டி.யிடமிருந்து மீசைக்கார பியூன் வந்து, அவளைப் பார்த்து, எம்.டி. அறைக்கு உடனடியாய் வரும்படி அலட்சியமாக சைகை மூலம் தெரிவித்து விட்டுப் போய்விட்டார். சுகந்தி, எம்.டி.யின் அறைக்குள் போனபோது, அவர், டி.கே. ராமனைத் தாளித்துக் கொண்டிருந்தார்.
மானேஜிங் டைரக்டர், தமது இளமைக் காலத்தை நினைவு படுத்துவதுபோல் கத்தினார்.
“அப்படின்னா …. அந்த பைலை நான் விழுங்கிட்டேனா…? பழைய பேப்பர்காரன்கிட்டே வித்துட்டனா…?”
இரண்டு சபார்டினேட்டுகளும் தலைகளைத் தாழ்த்தியபோது, எம்.டி. தம்மைப் பற்றித் தமக்குள்ளேயே எழும் சந்தேகங்களை, இப்போது கேள்விகளாகத் தொடுத்தார்.
“நான் என்ன… ஒன்றும் தெரியாத மக்கா..? அப்ஸர்வ் பண்ணத் தெரியாத அசடா…? மேஜையில் இருக்கிற பைலைக் கண்டு பிடிக்க முடியாத ஆபீஸரா…? வாட் ஈஸ் திஸ்… டோண்ட்டாக்.”
சபார்டினேட்டுகளின் தலைகள் இன்னும் நிமிராதபோது, எம்.டி., இப்போது பெருமிதமாகப் பேசினார்.
“ஒரு குண்டூசி இருந்தால் கூட கண்டுபிடிக்கிறடைப் நான்… ஒரு பேப்பர் வெயிட்டை அரை அங்குலம் நகர்த்தி வைத்தாலும், அறியக்கூடிய டைப் நான்… நீங்க கொடுத்ததாய்ச் சொன்ன பைல் இப்போ இங்கே இருந்தால், நான் இடியட்னு அர்த்தம்… திறமை இல்லாத நபர்னு மீனிங்… டோண்ட் டெல்மி காக் அண்ட் புல் ஸ்டோரி…”
டி.கே. ராமனின் தலை, முன்னிலும் அதிகமாகத் தாழ்ந்தபோது, சுகந்தி, தலையை நிமிர்த்தி, சுவரைப் பார்த்துக்கொண்டே பேசினாள்.
“நீங்க பிஸி ஆபீஸர்ஸார்…. உங்களுக்குப் பதிலாய், இந்த சீட்ல யார் இருந்தாலும் சமாளிக்க முடியாது. ஊழியர்கள் ஒவ்வொருவரும், எம்.டி. தங்களையே தனிப்பட்ட முறையில் ‘வாட்ச் பண்ணிட்டு இருக்கிறதாய், ஒரு பிரமையைக் கொடுக்கிற அளவுக்கு நிர்வாகம் செய்யறீங்க…. பட்… ஆனாலும், நான் வச்ச பைலை ஒங்க பியூனே…. தவறுதலாய் எங்காவது வச்சிருக்கலாம் இல்லியா…? ஜி.எம். ஸார்… வாங்க தேடிப் பார்க்கலாம்.”
புகழாரம் கழுத்தில் கருக்குப் பிடி போட, மானேஜிங் டைரக்டர் எதுவும் புரியாமல் விழித்தபோது, டி.கே. ராமனும் சுகந்தியும், எம்.டி.யின் அறையில், ஒவ்வொரு மூலையிலும் இருந்த பைல் கட்டுக்களைக் குடைந்தார்கள். பீரோக்களைத் திறந்தார்கள்.
ரேக்குகளை இழுத்தார்கள். அலமாரிகளைக் குடைந்தார்கள். மெத்தை விரிப்பைத் தூக்கிப் பிடித்து, உற்றுப் பார்த்தார்கள். சோபா செட்டுக்களுக்குக் கீழேயும் குனிந்தார்கள்.
மானேஜிங் டைரக்டரும், ஒரு அனிச்சைச் செயலாக, அங்குமிங்கும் சுற்றினார். பிறகு, தம் இருக்கையில் அமர்ந்து, டிராயரை இழுத்து, சிகரெட்டை எடுக்கப் போனார். தற்செயலாக உள்ளே ஒன்று தென்பட்டது. ‘என்னது…. அடேடே ஞாபக மறதியில் இங்கே வச்சுட்டேன் போலிருக்கு…. அட, கடவுளே…! அதே அந்தரங்க பைல்… அதே… அதே…’
அலமாரிகளைப் பிடித்து, பீரோக்களை இழுத்து, கடைசியில் எம்.டியின் மேஜையைக் குடைவதற்காக, டி.கே. ராமனும், சுகந்தியும் அவரருகே வந்தபோது, மானேஜிங் டைரக்டர், டக்கென்று பராயரை மூடினார். பைல் இங்கே இருந்தால், நான் இடியட்னு அர்த்தம்’ என்று சொல்லிவிட்டு, அப்புறம்…. கூடாது…. காட்டக்கூடாது… சொல்லக்கூடாது….
மானேஜிங் டைரக்டர், இருவரிடமும் ஆணையிடுவதுபோல் பேசினார்.
“நான் இங்கே நல்லாத்தேடிட்டேன். எதுவும் இல்லை. மிஸ்டர் டி.கே. ராமன்… ஒங்க ரூமுக்குப் போய்த் தேடலாம்… வாங்கோ!”
இப்போது, மானேஜிங் டைரக்டரின் மேலான தலைமையில், டி.கே. ராமன் அறையில் தூள் பறக்கிறது.
– கல்கி , 15-3-1981
– தராசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, கங்கை புத்தக நிலையம், சென்னை.