பாலுவும் மாலுவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 16, 2025
பார்வையிட்டோர்: 4,575 
 
 

வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள்.

பகுதி 1

பாலுவும் மாலினியும் கணவன் – மனைவி ஆவர். இவர்கள் என்னதான் பேசுகிறார்கள் என்று பார்ப்போமா ? தம்பதி தங்களுக்குள் பேசுவதைக் கேட்கலாமா என்ற உங்கள் மனக் குரல் எனக்குக் கேட்கிறது. கதை சொல்லிகளுக்கு அந்த எல்லைக் கோடுகள் இல்லை அல்லவா?

இதோ அவர்களின் உரையாடல்:

– நீ கோலார் தங்கவயல் என்றான்

தங்கம் வாங்குவதைத் தவிர்க்க சாக்கோ என்றாள்

– புதைபொருளாய்க் கிடைத்த எரிபொருள் போன்றவள் நீ என்றான்

மாற்று எரிபொருள் தேட மாட்டீர் என்பது என்ன நிச்சயம் என்றாள்

– விலையில்லா மென்பொருள் போன்றவள் நீ என்றான்

கேட்டதை வாங்கித் தர முடியாது என்பது இதன் பொருளா என்றாள்

– வேண்டியதைத் தரும் அமுதசுரபி நீ என்றான்

நீர் ஈட்டிய வருவாயில் எதுவும் எனக்கு வாங்க மாட்டேன் என்று
கூறுகிறீரா என்றாள்

– நீ தான் என் சொத்து என்றான்

சொந்தமாய் சொத்துபத்து சேர்க்க உத்தேசம் இல்லையோ என்றாள்

– இனி மௌனம் எனது மொழி என்றான்

இதுதான் வீட்டில் உமக்கு நல்லது என்றாள் .

பகுதி 2

மாலு கணவனிடம் கேட்டாள்

– என்ன அந்த தின்பண்டத்தின் உறையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர் ?

பாலு பதில் உரைத்தான்

– இந்த பூந்தியின் உறையில் ஸ்நாக்ஸ் என்ற ஆங்கில பதத்தின் கீழ் அழகு தமிழில் சிற்றிடை உணவு என்று அச்சிட்டுள்ளார்கள்

மாலு பேசினாள்

– சிற்றிடை என்றதும் உங்கள் உள்ளம் வேறு எதையோ நினைத்து இருக்குமே ..

– கணவன் முணுமுணுத்தான்

– உனக்குத் தான் சிற்றிடை இல்லையே

– என்ன?

– வாயைக் கட்ட நினைக்கிறேன் முடியவில்லை என் இல்லத்தரசியே ..

– நீர் வாயைக் கட்டி விடுவீரா ? ஆமாம் . ஞாயிற்றுக் கிழமை மாலைப் பொழுதில் நாளை பணிக்குச் செல்ல வேண்டுமே என்று முகம் சுணக்கமாக இருப்பீரே … உற்சாகம் முகத்தில் கொப்பளிக்கிறதே காரணம் என்னவோ ?

பாலு பதில் இறுத்தான்

– மாலைப் பொழுதில் அழகான உன் தோழிகளுடன் கூட்டம் என உன் தங்கையிடம் கைபேசியில் நீ கூறியதை நான் செவி மடுத்தேன். அவர்களுக்கு விருந்தோம்பல் செய்யும் பணியை , பானங்கள் , தின்பண்டங்கள் தரும் பணியை எனக்கு நீ தருவாய் என்பதால் மனதில் மகிழ்ச்சி ஊற்று

மனைவி மொழிந்தாள் –

– கூட்டம் என்பது இவ்விடத்தில் இல்லை . இணையவழி அளவளாவல் . இணைய வழி சந்திப்பு . நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கும் என்பார் என் பாட்டியார் . இன்று இரவு உணவு தயாரிப்பு உமது பொறுப்பு …

பாலு அங்கிருந்து நகர்ந்தான்

– எங்கே நழுவுகிறீர் ?

பாலு கூறினான் –

நீ இணையத்தின் வழி உன் தோழிகளுடன் உரையாடு .. நான் என் நண்பர்களுடன் நேரில் அளவளாவி விட்டு வருகிறேன் ..

நொடிப் பொழுதில் பாலு அங்கிருந்து மறைந்தான் .

பகுதி 3

பாலுவும் மாலுவும் உறவினர் ஒருவரின் புதல்வியின் திருமண
வரவேற்பைச் சிறப்பிக்க இளவேனில் திருமண மண்டபத்திற்கு வருகை தந்திருந்தனர். மெல்லிசைக்கான

பார்வையாளர்களிடையே அமர்ந்திருந்த தருணத்தில் மாலு மயங்கிச் சரிந்தாள் கணவன் மீது

அத்தான் மீது சாய இது ஒரு நடிப்பா என்று உடன் வந்த மாலுவின் தங்கை உமா உலுக்கிக் கேட்டாள் . அவள் நினைவு திரும்பாமல் இருக்க பாலுவும் உமாவும் அவளை மேலாளர் அறையில் உள்ள நீள் இருக்கையில் கிடத்தினர் . பாலு ஓடோடிச் சென்று நல்வாய்ப்பாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த மருத்துவர் கண்ணம்மாவை அழைத்து வந்தான். ‘அம்மா , மெல்லிசைக் குழுவினரில் ஒரு பாடகி இளைஞி மயங்குகிறாள் ஒரு மாது தன் மனத்திற்கும் செயலுக்கும் உறவு இல்லாது என்று பாடுகையில் இவள் மயங்கி விட்டாள்’

புன்னகை பூத்த கண்ணம்மா , நினைவு வந்து தண்ணீர் பருகிய மாலினியின் நாடியைப் பார்த்தார். மலர்ந்த முகத்துடன் மொழிந்தார் –

‘மாலினி – பாலு – உங்கள் நெடு நாள் ஆசை நிறைவேறுகிறது. நீ உன் உயிருக்குள் உயிர் வளர்க்கப் போகிறாய் மகளே ‘

கைகுலுக்கி அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவர் அம்மாவிடம் உமா கேட்டாள்

‘மேம்.. மன்னிக்க வேண்டுகிறேன் அத்தானும் அக்காவும் தொலைக்காட்சியில் வரும் டாம் அண்ட் ஜெர்ரி போல் இருந்தார்களே எப்படி இது சாத்தியம்?‘

கண்ணம்மா புன்னகை பூத்தார் –

‘நீ விரைவில் இல்லறம் என்னும் நல்லறத்தில் இணைந்து விட்டால் இந்த வினாவுக்கு உனக்கு விடை கிடைக்கும்.‘

– கூண்டை விட்டு வெளியே வந்த பறவை, வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள்.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *