பார்வதி





(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பருவக்காற்று வீசுகின்றது..
அடைமழை தொடங்கிவிட்டது. காலை… பகல்……. இரவு என்று ஓயாது கொட்டுகின்றது. நனைந்த இலை குழைகளின் மணம் ஈரமண்ணின் நெடி அவன் மூக்கைத் துளைத்தன. பருவ மழையின் ‘ஓ’ வென்ற இரைச்சல் அவனை உலுக்கிக் கொண்டிருக்கின்றது. யூனியன் அலுவலக வேலைகள் யாவும் சில நாட்களாய் அப்படி….. அப்படியே…. தேங்கிக் கிடக்கின்றன. ஒரே சோம்பல். எங்கும் சோகச் சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கும் அந்த ‘நசநசத்த ‘ மழை இன்னும் தொலைந்த பாடில்லை.
ராஜன் ஜன்னல் வெளியே எட்டிப் பார்க்கிறான். வானம் இன்னும் மப்பும் மந்தாரமுமாய் இருள் கவ்விக் கிடக்கிறது. இராட்சதச் சிலந்தி வலைகளைப் போல மேகக் கூட்டங்கள் மலையிடுக்குகளில் தேங்கிக் கிடக்கின்றன எல்லாமே ஒரு துயரம் தோய்ந்த காட்சி! வானத்தில் மீண்டும் ஒரு கீறல்! இன்னொரு தடவை மழை சீறிப் பெய்கிறது.
மாவட்டக் காரியாலயம்.. யூனியன் அலுவலகம். அந்த ஆபிஸ் கிளார்க் முன்னறையில் இருந்தபடி ராஜனை நோக்கிச் சத்தமிட்டுச் சொன்னான்.

‘ஒங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க…… சேர்!’ ராசாத் தோட்டம் நூவலையிலிருந்து வந்திருக்கேன் ஐயா’ ஒரு சாந்தமான பதில் கெஞ்சும் குரலில் தவழ்ந்து வந்தது. ஒரு பெண்…… அங்கு நின்றாள். அவளது அந்தக் குரல் அவளது வயதைக் கூறியது. சுமார் இருபது வயது இருக்குமென்று ராஜன் ஊகித்தான். அந்தக் குரலில் இனிமை இழையோடினாலும் அதில் வேதனை கலந்திருந்தது. தயங்கி நின்று கொண்டிருக்கும் அவனைப் பார்த்துக் கிளாக் உத்தியோகத் தோரணையில் கேள்வி கேட்டான்.
‘ஒங்க தோட்டக் கமிட்டி தலவருக்கிட்டேயிருந்து காயிதம் கொண்டு வந்தீங்களா….?
‘இது எனக்கு தெரியாதுங்கையா….. மாவட்ட ஆப்பீஸுக்குப் போயி ஐயாவ சந்திக்கச் சொன்னாங்க….. அது தான் வந்தேன்.’நீங்க ஒரு காயிதம் வாங்கிட்டு வந்திருக்கணுமில்லையா…..? கிளாக்கரின் குரலில் கொஞ்சம் கடுமை வெளிவந்தது.
‘எனக்கு அது தெரியாதுங்க!’அவள் குரல் நடுங்கியது.
‘கடவுளே!…. நான் எங்கப் போனாலும் துரதிஷ்டம் தொடர்ந்து கிட்டே வருதே…..!’ அவள் வாய்க்குள்ளே வார்த்தைகளை மென்றாள். அவளது முனகல் எங்கோ நடுநிசியில் யாரோ அபயக் குரல் எழுப்புவது போல் இருந்தது.
‘அந்த ஆள உள்ளுக்கு அனுப்பு!’ ராஜன் கிளாக்கரைப் பார்த்து உத்தரவிட்டான்.
ஒரு நடுத்தர உயரம். தலையிலிருந்து கால்வரை கம்பளி போட்டிருந்தாள். மெதுவாக அவள் ஆபீஸுக்குள் நுழைந்தாள். வார்த்தெடுத்த வடிவமாய்… உருவம்.. வெளிறிப் போன முகம். நேர்த்தியான மூக்கு…. கலங்கிய குளமாய்க் கருவிழிப் பார்வை…. அவளுக்குள்ளே குமையும் வேதனை வெளியே தெரிந்தது.
‘இப்படியொரு இளம்பெண்…. இந்த வயதில் இவளுக்கென்ன நடந்திருக்கும்….? சில வேளை புருஷனை இழந்திருப்பாளோ…..? ஏதாவது குடும்பத்தில் துயரமான சம்பவம் நடந்திருக்கலாமோ’ ராஜன் குழம்பிப் போனான்.
அவள் கொட்டும் மழையோடு வந்து நிற்கின்றாள். மழைநீர் கம்பளி வழியாக சொட்டுச் சொட்டென வடிகிறது. அவள் நனைந்த உடைகளோடு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
‘கம்பளி கழட்டிட்டு ஒக்காருங்க……!’ ராஜன் சொன்னான். அவள் முகத்தில் அதே சோகம்……. அவள் பேசினாள்.
‘சோத்துக் கையிலே ஒன்னுஞ் செய்ய முடியாதுங்க சேர்…. அது வெந்து போயிருக்கு…’ பென்டேஜ் கட்டிய வருத்ததை கையைக் கம்பளிக் கொங்காணிக்குள் மூடியிருந்தாள். மிகவும் சிரமப்பட்டுக் கம்பளியைக் கழற்றி பழைய வெள்ளைத் துணியினால் ஒழுங்கில்லாமல் சுற்றியிருந்தாள். தீப்புண். ரோசா நிறத்தில் சிவந்து போயிருந்தது.
‘அவள் விரல்களையெல்லாம் இழந்திருக்கலாம்’ ராஜன் அவளது பரிதாப நிலை கண்டு ஸ்தம்பித்து நின்றான். அவனது வலது கை ஒரு கணம் மரத்துப் போய் நின்றது. அவன் வாழ்நாளில் இப்படியொரு மனதை உருக்கிய சம்பவத்தைக் கண்டதில்லை. அவளது வெந்துபோன கையின் நரக வேதனையைப் போன்ற ஒரு காட்சியை அவன் இதுவரை பார்த்ததே கிடையாது!
மழை மீண்டும் கடுமையாகியது. பெருங்காற்று அவனது ஆபீஸுக்கு பின்னாலிருக்கும் மரங்களைப் பேயாட்டம் போடச் செய்தது. காற்றில் உதிரும் இலைகள் ஜன்னலுக்கூடாக அறைக்குள் விசிறிப் பாய்கின்றன. நனைந்த ஈரமண்ணின் நெடி….. சோகமே உருவான அவளது துயரக் கண்கள்…….. அவளை மேலும் அங்கே நிறுத்தி வைக்க ராஜன் விரும்பவில்லை. யூனியன் முறைப்பாட்டுப் புத்தகத்தைத் திறந்தான். அவளது முறைப்பாடுகளை எழுத ஆரம்பித்தான். அவள் சுருக்கமாகச் சொன்னாள்.
‘எம்பேரு பார்வதி. நூவல் தோட்டத்தில் அம்மாவோட இருக்கேன். அப்பா செத்துப் போயிட்டாரு. கம்மணாட்டி வாழ்க்கையில அம்மா கஷ்டப்பட்டாங்க. எனக்கு பக்கத்து தோட்டத்துல மாப்பிள பேசி கல்யாணம் முடிஞ்சி….. அவரு பேரு ராமன்…….. குடும்பத்துல ஆம்பளத் தொணை இல்லாதனால எங்க அம்மா அவர ‘வீட்டுக்கு மாப்பிள்ளையா’ கூட்டிக்கிட்டு வந்தாங்க…. நான் அவரு…, எங்கம்மா…. தங்கச்சி…..எல்லாரும் ஒரே வீட்டுலத்தான் குடியிருந்தோம்’.அவள் இப்படி சொல்லும் போது வார்த்தைகள் தடுமாறின. மென்று மென்று பேசினாள்!
‘எனக்கு கொழந்த கிடைச்சப் பொறகு…. நோயில விழுந்திட்டேன்……… அம்மா லயத்துல என்னைய தனியா வுட்டுட்டு வேலைக்குப் போயிட்டாங்க….. ரொம்ப கூதல் …. நான் அடுப்பங்கரையில் படுத்திருந்தேன்…. களைச்சி போயி அப்படியே தூங்கிட்டேன்.. பிளங்கட்டுல நெருப்பு புடிச்சி….. சோத்துக் கையி நல்லா வெந்துப் போயிருச்சி……. எந்த சாமிப் புண்ணியமோ…. அந்த நேரம் பார்த்து அம்மா வந்து உயிர காப்பாத்திருச்சி. ஒரு கையில வேலை செய்யமுடியாதுன்னு தோட்டத் தொரையும் வேல குடுக்க மறுத்துட்டாரு….. வயது போன காலத்துல எனக்கு சோறு போட அம்மாவுக்கு முடியாது….. அம்மாவுக்கு கஷ்டம் குடுக்க என்னாலேயும் முடியல…..’ அவளின் கதையை கவனமாக கேட்ட ராஜன் குறுக்கிட்டான்.
“ஒங்க வீட்டுக்காரரு இருக்கார் தானே?’ பார்வதி தலை குனிந்தாள். நனைந்த தரையில் கண்ணீர் கொட்டியது. அவள் விம்மினாள். சேலை முந்தானையால் மூக்கைத் துடைத்தாள். அவளது கணவன் இறந்திருப்பான், என்று ராஜன் எண்ணினான். ‘ஏதாவது அவருக்கு ஆபத்து?’ என்று பேச்சை இழுத்தான்.’
“அப்படி ஒன்னுமில்லீங்க சாமி..! அவரு எந் தங்கச்சிய கூட்டிக்கிட்டு ஓடிப் போயிட்டாரு…. நாங்க எல்லாரும் ஒரே காம்புராவிலே தான் சீவிக்கணும். ஒன்னாமண்ணா கிடக்கிறது தான் எங்க வாழ்க்க…. நெருப்பும் பஞ்சும் ஒன்னா இருக்க முடியுங்களா? எப்படியோ அவுங்க ரெண்டு பேரும் நல்லாயிருந்தாப் போதும். எனக்கு இப்ப எங்க அம்மாவ காப்பாத்த தோட்டத்துல வேலை வாங்கி குடுத்தாப் போதும் சாமி” என்றாள் பார்வதி.
“எப்படியாவது ஒங்களுக்கு உதவி செய்யப் பார்க்கிறேன்…. இப்ப நீங்க வீட்டுக்குப் போங்க. இருட்டுற நேரமாச்சு…” ராஜன் ஆறுதல் கூறினான். பார்வதி ஆபீஸை விட்டு அகன்றாள்.
பார்வதியின் குரலில் தொனித்த வேதனை அவளது துயரம் தோய்ந்த விழிகள்……. முறிந்து போன வாழ்க்கை….. இளமையை ஏந்திக் கொண்டு இரண்டாங்கெட்டான் நிலையில் இவளுமொரு கம்மணாட்டியாய் மாறிவிட்ட நிலை. இவையாவும் சேர்ந்து ராஜனின் மூளையைக் குடைந்தன.
அந்த இரவின் அடைமழை பிரளயம் எடுத்தது. எங்கும் வெள்ளப் பெருக்கு…..
ராஜன் திடீரெனப் போர்வையை உதறித் தள்ளி விட்டுப் படுக்கையில் எழும்பி உட்கார்ந்தான். அந்தக் கம்பளி கொங்காணிக்குள் இருக்கும் தீயில் எரிந்து போன பார்வதியின் ஊனமுற்ற கை முன்னே தெரிந்தது.
இரண்டு வருஷங்களுக்குப் பின்…
ஒரு தேர்தல் நாளில்……
நோர்வூட் ராசா தோட்டத்து வாக்களிப்பு நிலையம் களைகட்டி ஜொலித்தது. ராஜன் வாக்குச் சாவடிக்கு வந்திருந்தான். யூனியன் தலைவர்கள் தேர்தலில் குதிக்கின்றார்கள் என்றால்….. ஜில்லாப் பிரதிநிதிகள் சாக வேண்டியது தான்…அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டியது பிரதிநிதிமார்களின் தலையாய கடமையாகும்.
ஒரு பெரிய மக்கள் பட்டாளம் அந்த நீண்ட நெடுவீதியை நிறைத்து வைத்துக் கொண்டிருந்தது. அந்த தேர்தல் தினம் ஒரு திருவிழாவாக காட்சி கொடுத்தது.
அந்தப் பெருங்கூட்டத்துக்குள்ளே ராஜன் ஆச்சரியமாக யாரையோ நோக்கினான். அது பார்வதி! அவள் தோளிலே ஒரு குழந்தையை ஏந்திக் கொண்டிருந்தாள். குறுகுறுவென விழித்துக் கொண்டிருக்கும் ஓர் அழகிய குழந்தைக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. ராஜனை அடையாளம் கண்டு கொண்ட பார்வதி நமஸ்காரம் செய்வதற்கு கைகளைக் கூப்பினாள். அவள் முகம் மகிழ்ச்சியால் பூரித்திருந்தது.
துன்பமும் தொல்லையும் தூர விலகி விட்ட களிப்பால் அவள் மனம் மலர்ச்சியடைந்திருந்தது. அவள் வாழ்க்கை மீண்டும் மலர்வதற்கு அவளது துயரக் கண்கள் மீண்டும் பிரகாசிப்பதற்கு இரண்டு வருஷங்கள் முடிவடைந்திருக்கின்றன.
“இது ஒங்க கொழந்தையா பார்வதி?” அவளது புதிய நிலைமையை விளங்கிக் கொள்ளும் ஆர்வத்தில் வினவினான்.
“இது தங்கச்சி பெத்த புள்ளைங்க சேர்….!” அவள் பேச்சை உடனே திருத்திக் கொண்டாள். “இது எங்க குழந்தைங்க சேர் நானும் அவரும் இவ மேல உசுரையே வச்சிருக்கோம்!என்றாள்.
புயலுக்குப் பின் தென்றலாய் அவள் வாழ்க்கையில் புது வசந்தம் வீசுகிறது. ராஜன் மகிழ்ந்து போனான்.
“நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் பார்வதி! குடும்பத்துல எல்லாரும் ராசியா போயிட்டீங்க போல இருக்கு……! இப்ப நீங்க ஓட்டு போடவா வந்தீங்க?”
“ஆமாங்க சேர்! நம்ம சங்கத்துக்குத் தான் ஓட்டுப் போட்டேன். இதுக்காகத் தான் இவ்வளவு கஷ்டப்பட்டு ராசா தோட்டத்துக்கு வந்தேன்.” அவள் பூரித்துப் போனாள். சங்கத்துக்கு வாக்களித்ததில் அவளுக்கிருந்த சந்தோஷம் அளவற்றது! அவளது பெருமிதம் அவளது கண்களில் தோன்றிய பிரகாசம் சிறிது நேரம் அவளது ஊனக்கையையும் தோளில் கிடந்த குழந்தையையும் மறக்கச் செய்தது.
ஆடாது ஆசையாது நின்ற ராஜனின் உள்மனம் உரத்துப் பேசியது….. “பாமர இதயங்கள். அவர்களது உடல் உள்ளம், வாழ்க்கை எல்லாமே ஊனமாக இருந்தாலும் அந்த மக்களின் மனிதத்துவம்,அவர்களின் மனித வாஞ்சை, எவ்வளவு ஆழமாக வேரூன்றிப் போயிருக்கின்றது!”
அவளது தீப்பட்ட தழும்பு ஒரு சேதியை ராஜனுக்கு கூறியது. பார்வதி வாழ்க்கையில் வேதனை வருவதற்கும் ஒரு காலம் வந்தது. அது விலகுவதற்கும் ஒரு காலம் வந்தது.
மழை வந்து போய்விட்டது. அது போல ஒரு தேர்தலும் வந்து போய் விட்டது…!
அந்த ஒரு அந்தி நேரம். பார்வதி அடுப்பங்கரையில் அமர்ந்தபடி எரியும் ஜுவாலையை ஏக்கமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனம் பின்னோக்கிச் சென்றது.
“ஏன் இந்த தடவை யாரும் நம்ம சங்கத்துலேயிருந்து ஒட்டு கேக்க வரல?” உடல் பொருள், ஆவியாக அவள் சங்கத்தின் மேல் வைத்திருக்கும் ஆசையைப் போல அந்தச் சங்கத்திலே அவளுக்கு நிகராக உண்மை மனிதர்கள்…. அங்கே காணப்படவில்லை! அவள் முகத்தில் ஒளிபடரச் செய்யக் கூடிய ஒன்றுமே அங்கே கிடையாது.
அடை மழையில் ஊறிய மண்ணின் நெடி அவள் நாசியைத் துளைத்தது. அவளது லயத்துக்குப் பின்னால் இருந்த மரங்களின் ஊடாகக் காற்று புலம்பியது.
பார்வதி மௌனமாக அடுப்பங்கரையில் அமர்ந்திருந்தாள். வெளியே நிகழும் அதே மழை. அதே காற்று… அதே வாடை அவளைச் சோர்வடையச் செய்கிறது.
அது மொன்சூன் காலம்…. பருவ மழை பருவக் காற்று…
– ஆங்கில தொகுதி: Time for healing, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.
– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.