பாம்பின் கோபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 4, 2025
பார்வையிட்டோர்: 209 
 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒதுக்குப்புறமான பாறை ஓரத்தில் பாம்பு படுத்துக் கொண்டு காற்றையும் வெயிலையும் குடித்துக் கொண் டிருந்தது. மிகவும் அழகான நல்ல பாம்பு. மின்னல் கோட்டினால் கோதுமையை வரைந்தது போல உடம் பெல்லாம் இருந்தது. செம்போத்தின் கொண்டையைப் போல் விரியவும் சுருங்கவும் சக்தி கொண்ட அமைப்பு ; விரிந்தால் படம், சுருங்கினால் தலை! படத்தில் கறுப்பு மாலையை வாட்டியது போன்ற நாமம். இவ்வளவு அழகு தனக்கு ஏன் அமைந்தது என்று பாம்புக்கே தெரியவில்லை. தலையிலே நாகரத்தினம் இருக்கிறது. அதைப் பாதுகாக்கும் அழகிய பெட்டிதான் தலை என்று அசரீரி சொன்னபொழுதும் அதற்கு நம்பிக்கை பிறக்க வில்லை 

கண்ணை மூடிய நிலையில் பாம்பு படுத்துக் கொண் டிருந்தால் கவலைகள் எழுந்தன. நாகரத்தினம் இருக் கட்டும், இல்லாமல் போகட்டும். சந்தேகமறத் தன் னிடம் வேறு ஒன்று இருப்பது அதற்கு எப்பொழுதும் தெரிந்துகொண்டே இருந்தது. பசி, பசி, தீராத பசி! சுளுவாக எங்கும் காற்றுக் கிடைக்கிறது, மலர் கிடைக் கிறது, இலை கிடைக்கிறது. ஆனால் இவைகளால் பசி ஆறுவதில்லை. மற்றப் பிராணிகளோ கதவைச் சாத் திக்கொண்டு ஒளிந்து கொள்வது போலக் கண்ணுக்கே அகப்படுவதில்லை. பசிப் பிணியும் வாழ்வும் ஒன்றாகவே இருந்தன. இரை தேட ஊரைச் சுற்றச் சென்றால் தடி கொண்டு அடிக்க வருகிறார்கள். தன் பசியோடு போனால்கூடப் பரவாயில்லை; குட்டிகளின் பசிக்கு வேறு வகைசொல்ல வேண்டி இருந்தது. எங்களைக் கேட்காமல் ஏன் உண்டாக்கினாய் என்று அவை சதா சீறிக்கொண் டிருந்தன. 

இப்படிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த பொழுதே யாரோ ஒரு வழிப்போக்கனின் நிழல் ஆடிற்று. விருட் டென்று கிளம்பி பாம்பு மறைவிடத்தை நோக்கி ஓடிற்று. சொந்த வீடா, வாசலா? ஒரு நிமிஷம் கவலையின்றித் தலை வைத்துப் படுக்க இடம் உண்டா? என்ன பிழைப்பு ! தவிப்புடன் இங்கும் அங்கும் ஓடிற்று. வருத் தம் அதையும் மீறிக் கோபமாக மாறும் சமயத்தில் நல்ல வேளையாக ஒரு பெரிய கறையான் புற்றுத் தென் பட்டது. 

புற்றுக்குள் பாம்பு நுழைந்தபொழுது யாரும் அதைத் தடுக்கவில்லை. யாராவது வழியில் இருந்தால் தானே ? பாம்பு தன் பாட்டில் சரசரவென்று இறங்கி ஒரு பெரிய மைய மண்டபத்தை அடைந்து, அப்பாடா என்று கவலை இல்லாமல் சுருட்டிப் படுத்துக் கொள்ள ஆரம்பித்தது, 

“யார் நீ?” என்று அழுத்தமான பெண் குரல் கேட்டது.  

நிமிர்ந்து பார்த்தபொழுது மண்டபத்தின் மத்தியில் கறையான் ராணி பஞ்சணைச் சிம்மாதனத்தில் ஒயிலாக வீற்றிருப்பது தெரிந்தது. ‘யார் நீ? கேள்விமுறை இல்லாமல் என் அரண்மனையில் எப்படி நுழைந்தாய்?” என்று ராணி மறுபடி அதட்டினாள். 

பாம்புக்குக் கோபம் வந்து விட்டது. 

‘திறந்த வெளியில் பாத்தியம் உண்டா என்ன? யார் வேண்டுமானாலும் நுழையக் கூடாதென்றால் இந் தப் புற்றுக்குத் தொண்ணூற்றெட்டு வாசல் வைப் பானேன்? வீட்டுடன் நீ பிறந்தாயா என்ன, அரண் மனை உன்னுடையது என்று சொல்ல? எல்லோருக்குந்தான் உரிமை உண்டு. கஷ்டப்படும் பொழுது உபயோகிக்க.” 

“இதை நான்தானே கட்டினேன்?” 

“நீ மாத்திரம் எப்படிக் கட்டினாய்? மெத்தையில் உட்கார்ந்தபடியே பொட்டை அதிகாரம் செய்தாய். வாயில்லாத அலிக் கறையான்கள் வீட்டைக் கட்டிவைத் தன. கட்டினவர்களையும் விட்டுவிட்டுத் திண்டில் கிடந்து புரளுகிறவள் எனக்குச் சொந்தம் என்று சட் டம் படிக்கிறாய்!” 

“ஏ பாம்பே, ராணியோடே தர்க்கம் பண்ணாதே. பிறகு எனக்குக் கெட்ட கோபம் வந்துவிடும்” என்று ராணி சீறினாள். 

சீறலுக்குப் பதில் சீறவேண்டும் என்று பாம்பு நினைத்தது. ஆனால் முடியவில்லை. மண்ணுக்கு அடி யில் வெப்பத்தால் நாக்கு வறண்டு விட்டது. ‘போய் விட்டு வந்து சொல்லுகிறேன்” என்று பாம்பு புற்றை விட்டு வெளியேறிற்று. 

வெளியே வந்த பிறகு பாம்பு அங்கும் இங்கும் பார்த்தது. ஈரத்தின் வாடையைக்கூட எங்கும் காண வில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் சோர்ந் திருக்கும் தருணம் ஒரு நத்தை மெதுவாக ஊர்ந்து போவதைக் கண்டது. ஆனால் நத்தை பாம்பைக் காண வில்லை. ஏனென்றால் அதற்குக் கண்கள் இல்லை. எதை யும் உணர்ந்துகொள்ளத்தான் முடியுமே அன்றிப் பார்க்க முடியாது. 

”நீ யார்? எங்கே போகிறாய் ?” என்று பாம்பு அதட்டிற்று. 

“நான் தான் நத்தை. எங்கேயோ போகிறேன்.”

“குறிப்பில்லாமலா போகிறாய் ?’ 

“போகிற பாதை தெரியும்: ஆனால் போகிற இடந்தான் தெரியாது.” 

“அழகாகப் பேசுகிறாயே! அது போகட்டும், முதுகில் என்ன மூட்டை ?” 

“அதுதான் என் வீடு, வாசல், சொத்து, சுதந்திரம் எல்லாம் ” 

“எனக்கு எங்கே வீடு, வாசல், சொத்து, சுதந்தரம் எல்லாம்?” 

“உனக்கு இல்லையா?” 

“இருந்தால் கஷ்டப்படுவேனா? பசிக்குமா? படுத்துக் கொள்ள இடம் இல்லாமல் பரிதவிப்பேனா? எல்லாருக்கும் பகையாகக் காட்சி அளிப்பேனா? தண்ணீர்த் தாகத்தால் தத்தளிப்பேனா ?… இதெல்லாம் உனக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது?” 

“என் தாயார் கொடுத்தது.”

“உன் தாயாருக்கு?” 

“அவள் தாயார் கொடுத்தது.” 

“அவளுக்கு அவள் தாயார் கொடுத்தது. இப்படியே நீளமாகக் கதை போகிறது-அப்படித்தானே?” 

“இருக்கலாம்.” 

“இருக்கலாம். இருக்காதா? தாகத்திற்குத் தண் ணீர் இல்லை. பசிக்கு உணவு இல்லை. சம்பாதிக்க வழியும் இல்லை. படுக்க நிழல் இல்லை. நீ மாத் திரம் சொத்துச் சுதந்தரத்தை வைத்துக் கொண்டு சுகமாக இருந்து கொண்டிருந்தால் பாக்கிப் பேர் சும்மா விட்டுவிடுவார்களா ? உன்னைப்பற்றி மாத் திரம் நினைத்துக் கொண்டால் போதுமா? உலகம் இருக்கிறது. நான் இருக்கிறேன். பசி, தாகம், கொடுமை எல்லாம் இருக்கின்றன.” 

“இருந்தால் என்ன செய்வாயாம்?” 

“என்ன செய்வேனென்று எனக்கே தெரியாது, பாரேன்” என்று பாம்பு சொல்லி முடிப்பதற்குள் நத்தை கூட்டுக்குள் ஒடுங்கிவிட்டது. 

பாம்புக்குச் சிரிப்பாக வந்தது. 

“நத்தை, நீ ஒரு முட்டாள் ! உள்ளே போய் ஒளிந்து கொண்டால் என்னால் ஒன்றும் செய்ய முடியாதென்று நினைக்கிறாயா ? புஸ் என்றால் உன் வீடும் கீடும் நீயும் இருக்கும் இடமும் தெரியாது. ஓடி ஒளிவதிலே பிர யோஜனம் இல்லை. உன்னைப்போல உலகம் ஒன்று இருக்கிறது. அது சரியாக இருந்தால் நீ பிழைக்கலாம் என்பதை மறக்கக் கூடாது. மரியாதையாய் வெளியே வா.”

பயந்துகொண்டே நத்தை வெளியே வந்தது. 

“எனக்கு ஒரு காரியம் செய்தால் உன்னைச் சும்மா விட்டுவிடுகிறேன்” என்றது பாம்பு. 

“முடிந்தால் செய்கிறேன்.” 

“எனக்குத் தாகமாக இருக்கிறது. போய்த் தண் ணீர் கொண்டுவா. இதே மாதிரி தாகத்துக்குத் தண் ணீர் கொண்டு வருவதுதான் உன் வேலை; தெரிந்ததா? அசதியாய் வரும்பொழுது கறையான் புற்றில் போய்ப் படுத்துக் கொள்ளுகிறேன். பசித்தால் காற்றைக் குடிக் கிறேன். பசி தீராவிட்டால் பட் என்று படத்தால் ஒரு போடு போட்டு விடுகிறேன். வேறு வழி ? போ, தண்ணீர் கொண்டுவா” என்றது பாம்பு. 

அது முதல் பாம்புக்கு நத்தை தண்ணீர் கொண்டு போகிறது. 

– பிச்சமூர்த்தியின் கதைகள்‌, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1960, ஸ்டார்‌ பிரசுரம்‌, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *