பாதி, பாதி, பாதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 16, 2025
பார்வையிட்டோர்: 311 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இப்படி நகர்ந்து உட்கார்ந்துக்குங்க. முதல்லே கியர் நியூட்ரல்லே இருக்கான்னு பார்த்து விட்டுக் கீயை ஓப்பன் பண்ணுங்க. ஆக்ஸிலரேட்டர், பிரேக் ரெண்டையும் மெதுவா, ரொம்ப மெதுவா அழுத்திக்குங்க…”

டிரைவிங் ஸ்கூலிலிருந்து வந்திருந்த லேடி இன்ஸ்ட்ரக் ர் சொல்லிக் கொடுக்க, மனோகரி ஸ்டார்ட் செய்தாள். கார் நகரத் தொடங்கியது.

வாசலில் நின்றிருந்த ஸ்ரீநாத்துக்குக் கையை வீசி, “போ யிட்டு வரேன்” என்றாள் உற்சாகமாக.

“ஹும்! இந்த உற்சாகம் எத்தனை நாளைக்கு நிலைத்திருக்கப் போகிறதோ?” என்று தனக்குள் முணு முணுத்துக் கொண்டு வீட்டுக்குள் திரும்பினான் ஸ்ரீநாத்.

“நீங்களே எனக்குக் கார் டிரைவிங் கற்றுக் கொடுக்கக் கூடாதா?” என்று மனோகரி பல தடவை அவனிடம் கேட்டிருக்கிறாள். அவன் ஒப்புக் கொள்ளவில்லை. ‘அதெல்லாம் சரிப்படாது. நாலு நாள் என்னிடம் கற்றுக் கொள்வாய். நானும் என் வேலையெல்லாம் உனக்காக விட்டு விட்டுச் சொல்லிக் கொடுப்பேன். அஞ்சாம் நாள் ‘போதுங்க’ என்று பாதியில் விட்டுவிடுவாய். எனக்குக் கோபம் வரும். வீண் சண்டைதான் மிச்சம்” என்று ஸ்ரீநாத் சொல்லிவிட்டான். அவள் குணம் அவனுக்குத் தெரியும். இருந்தாலும், மனோ கரியின் முகத்தில் வருத்தம் தென்பட்டால் அவனுக்கு மனசு தாங்காது.திரும்பத் திரும்ப அவள் தன் ஆசையைத் தெரி வித்ததால், இறுதியில் டிரைவிங் ஸ்கூலில் சொல்லி, ஒரு பெண் வந்து கற்றுத் தரும்படி ஏற்பாடு பண்ணியிருந்தான். ஆனால் அவனுக்கு நம்பிக்கையில்லை.

‘இன்று மூன்றாவது நாள். இன்னும் ஒரு வாரம்தான் கற்றுக் கொள்வாள். பிறகு போதுங்க என்று சொல்லி, பாதியில் நிறுத்தி விடுவாள்!’ என்று எண்ணிக் கொண்டான் ஸ்ரீநாத்.

கல்யாணமான இந்த இரண்டு வருடத்தில், இதுபோல எரிச்சலூட்டும் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. ஆர்வத்துடன் ஆரம்பிப்பாள். முழுசாக முடிக்க மாட்டாள். பாதியில் ‘த்சு!’ என்று ஒரு சூள் கொட்டிவிட்டு, ‘போதுங்க’ என்று விட்டு விடுவாள். ஆர்வம் குறைந்து விடும்.

திருமண நாள் ரிசப்ஷனின் போதே இந்த உண்மை ஸ்ரீநாத்துக்குப் புரிந்தது.

அருமையான காஞ்சிபுரம் பட்டுப் புடவை கட்டிக் கொண்டு, அளவான அலங்காரத்திலேயே சௌந்தர்ய தேவதையாகக் காட்சியளித்தாள் மனோகரி. ஸ்ரீநாத் தன் சினேகிதர்களையும், உறவினர்களையும் அறிமுகம் செய்து வைத்த போதெல்லாம் கலகலவென்று பேசி, புன்னகையுடன் பரிசுகளையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டவாறு, மைத்துனர்களும் நாத்தனார்களும் செய்யும் கேலிகளுக்கு இன்முகமாய்ப் பதில் சொன்னபடி வெகு உற்சாகமாக இருந்தாள். ரிஸப்ஷன் தொடங்கி ஒரு மணி நேரம் ஆனதும் அவள் உற்சாகம் வடியத் தொடங்கியது. புதுக் கணவனிடம் மெதுவாக “சரியான எக்சர்ஸைஸ்! இன்னும் எத்தனை நேரம் நின்றிருக்கணுமோ தெரியலே” என்று கிசுகிசுத்தாள்.

“பொறுத்துக்க மனோ. வாழ்க்கையில் இந்த ஒரு நாள் தானே இப்படிப்பட்ட அனுபவம்!” என்று தலையைச் சாய்த்து அவள் காதருகே ரகசியமாய்ச் சொன்னான் ஸ்ரீநாத். ‘அடுத்தபடி இதுபோல நிற்கவேண்டியது நம் பிள்ளைக்கோ பெண்ணுக்கோ கல்யாணம் நடக்கிற போதுதான். ரிஸப்ஷனில் அவர்கள் பக்கத்தில் நிற்க வேண்டி இருக்கும். அதற்கு இன்னும் இருபது இருபத்தைந்து வருஷம் இருக்கு” என்று ஜோக் சொல்லி, கொஞ்சம் சிரிக்கும்படி செய்தான். ஆனால் வருவோரின் கூட்டம் மெலியத் தொடங்கியதும் அம்மாவிடமும் அப்பாவிடமும் சம்மதம் பெற்று மனோகரியை அழைத்துக் கொண்டு உள்ளே போய் மாலைகளைக் கழற்றிக் கொண்டபோது, “ரொம்ப உறுத்தலாயிருந்ததா? கழுத்தெல்லாம் சிவந்துட்டுதே, பாவம்” என்று பரிவோடு சொல்லித் தடவிக் கொடுத்து, அவள் முகத்தில் நாணத்தையும் சிரிப்பையும் வரவழைத்துச் சந்தோஷப்பட்டான்.

எல்லாக் கல்யாணப் பெண்களுக்கும் ஏற்படுகிற களைப்பும் சோர்வும்தான் அன்றைக்கு மனோகரிக்கும் ஏற்பட்டிருக்கும் என்று ஸ்ரீநாத் முதலில் நினைத்தான். ஆனால் போகப் போக அவள் சுபாவமே அப்படித்தான் என்று புரிய ஆரம்பித்தது.

ஹனிமூனுக்காக அவர்கள் பெங்களூர் சென்றபோது, வசதியான நல்லதொரு லாட்ஜில் ஒரு வாரம் தங்க ஏற்பாடு செய்திருந்தான் ஸ்ரீநாத். ஆனால் ஏர்போர்ட்டிலிருந்து போகும் வழியில் ஒரு நட்சத்திர ஓட்டலைப் பார்த்த மனோ, “இது மாதிரியான பெரிய ஓட்டலில் தங்கணும்னு எனக்கு ரொம்ப நாளாய் ஆசை,ஸ்ரீ” என்றாள்.

அவள் தன்னை ‘ஸ்ரீ’ என்று செல்லமாகக் கூப்பிட்டதிலேயே புளகாங்கிதம் அடைந்த ஸ்ரீநாத், புது மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டி அந்த ஆடம்பர ஓட்டலில் இடம் பிடித்தான்.

சரியாய் இரண்டரை நாள்தான்.

”ஐய! இதென்ன ஸ்ரீ, ஜனநடமாட்டமே இல்லாத பாலைவனம் மாதிரி! போதுங்க. யாரும் ஒரு வார்த்தை கூடப் பேசறதில்லை. மூஞ்சியைத் தூக்கிவிட்டு ஜம்பமா நடக்கிறாங்களே தவிர, துளியாவது கலகலப்பு இருக்கா?” என்றாள் மனோகரி.

“பெரும் பெரும் பணக்காரங்க தங்குகிற இடம் இது, மனோ. இங்கே இப்படித்தான் இருக்கும். சந்தைக் கடை மாதிரி சத்தம் போடுவது. அநாகரிகமில்லையா?” என்று ஸ்ரீநாத் சொல்லிப் பார்த்தான். ஆனால் மனோகரியின் முணு முணுப்பு அதிகரிக்கவே, ஆரம்பத்தில் ஏற்பாடு செய்திருந்த லாட்ஜுக்கே கிளம்பினான். (அங்கேயும் இரண்டு நாளைக்கு மேல் மனோகரிக்கு இருப்புக் கொள்ளவில்லை)

திருவான்மியூர் தாண்டி, வசதி நிறைந்த கடற்கரை ஏரி யாவில் ஸ்ரீநாத்தின் வீடு இருந்தது. நல்லவேளையாக, அதை மாற்ற வேண்டுமென்று மனோகரி சொல்லவில்லை. ஆனால், எந்தச் சினேகிதி வீட்டிலேயோ புது வகையான ‘கிச்சன் கேபினட்’ இருப்பதைப் பார்த்துவிட்டு வந்தவள் அது போல ஒன்று இருந்தால் நன்றாயிருக்கும் என்று ஆசைப்பட்டாள். அதைத் தயாரிக்கும் ஒரு கம்பெனி மூலம் சமையலறையைத் தலைகீழாக மாற்றி அமைத்தான் ஸ்ரீநாத்.

வந்தவர்கள் எல்லாரும் புகழோ புகழென்று புகழ்ந்தார் கள் அதைப் பார்த்து. மனோகரியும் சந்தோஷப்பட்டாள். ஆனால் இரண்டு மாத காலத்துக்குப் பிறகு, ‘இதை மெயின் டெய்ன் பண்றது மகா கஷ்டமாக இருக்கு, ஸ்ரீ. எல்லாம் ரொம்பவும் அல்ட்ரா மாடர்ன். நமக்குப் பழக்கமான பழைய மாடல் சமையலறைதான் தேவலை’ என்று சொல்லி விட்டாள்.

ஸ்ரீநாத்துக்குக் கோபமான கோபம். அடக்கிக் கொண்டு, “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்கிற பழமொழி உனக்காகவே ஏற்பட்டது!” என்றான்.

இதன் பிறகு அவளுடைய எந்த ஆசையானாலும் பத்துத் தடவை நச்சரித்தால் தான் நிறைவேற்றுவது என்று அவன் தீர்மானம் செய்து கொண்டான். எதுவானாலும் பாதியில் அவள் மனம் மாறிவிடக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்குத் தன் மனத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டான்.

டிசம்பர் சீசன் வந்தபோது, “கத்ரி கச்சேரியை நான் நேரில் கேட்டதேயில்லை ஸ்ரீ. எல்லாம் கேஸட்தான். இந்த தடவை என்னை அழைத்துப் போங்கள்” என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள். தினம் தினம் பேப்பரைப் பார்த்து இங்கே கத்ரி கச்சேரி இருக்கிறது. அங்கே நடக்கிறது என்று ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாள். ஸ்ரீநாத் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. சங்கீத சீசன் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட சமயம். “ப்ளீஸ் ஸ்ரீ, ப்ளீஸ்” என்று அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு அவள் கொஞ்ச, அந்த அழகிய கண்களின் மன்றாடலை மறுக்க முடியாதவனாக மியூசிக் அகாடமிக்கு அழைத்துப் போனான்.

அங்கேயும் கசப்பு அனுபவம்.

இடைவேளையில் எல்லாரும் கேன்ட்டீனுக்குப் போகவே, ஸ்ரீநாத்தும் அவளை அழைத்துக் கொண்டு போனான். காப்பி வாங்கி அவளுக்காக ஆற்றிக் கொண்டிருந்த சமயம், “போதுங்க” என்றாள் மனோகரி.

”இரு. ரொம்ப சூடாக இருக்கு. இன்னும் கொஞ்சம் ஆற்றுகிறேன்.'”

”நான். காப்பியைச் சொல்லவில்லை; கச்சேரியைச் சொல்கிறேன். போதுங்க.”

எரிந்து விழுகிற மாதிரி அவளைப் பார்த்தவன் ”இன்னும் ஒரு மணி நேரம் கச்சேரி நடக்கும். கத்ரி கத்ரி என்று கதறினதெல்லாம் இவ்வளவுதானா?” என்றான்.

“நேரில் கேட்கணும்னு ஆசைப்பட்டேன், கேட்டாச்சு. அரைமணி கேட்டால் என்ன, இரண்டு மணி கேட்டால் என்ன? ப்ளீஸ், போதுங்க, ஸ்ரீ” என்றாள் மனோகரி.

நான்கு நாட்கள் வரை அவளிடம் அவன் பேசவேயில்லை. எல்லாம் சமையல்கார அம்மாள் மூலமாகவே நடந்தது. இரவில் கூட வெகு நேரம் ஹாலில் உட்கார்ந்து ஏதாவது படித்துக் கொண்டு இருந்து விட்டு, அவள் நன்றாய்த் தூங்கிய பிறகுதான் பெட்ரூமுக்குப் போனான். அப்போதும் முதுகைத் திருப்பிக் கொண்டு ஒரு அடி தள்ளியே படுத்தான்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்ச் சமாதானமாயிற்று. இப்போது இந்தக் கார் சமாச்சாரம்.

ஒரு வாரம்தான் இந்த மோகம் இருக்கும் என்று ஸ்ரீநாத் நினைத்தான். ஆனால் அதற்கும் மேலும் நீடித்தது. காலை ஆறு மணிக்கெல்லாம் டிரைவிங் ஸ்கூல் பெண் வந்து ஹாரன் அடிப்பதென்ன, மனோகரி தயாராய் டிரெஸ் மாற்றிக் கொண்டு கிளம்புவதென்ன, திரும்பி வந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு ‘இன்றைக்கு எங்கெல்லாம் ஓட்டினேன், தெரியுமா’ என்று கதைகள் சொல்வதென்ன…

‘தேவலையே! இந்தத் தடவை முழுக் கிணறு தாண்டி விடுவாள் போலிருக்கிறதே?’ என்று ஸ்ரீநாத் சந்தோஷப்பட்ட தருணம் அவன் பயந்தது நடந்தது.

அன்று, வாசலில் ஹாரன் ஒலி கேட்டதே தவிர, மனோகரி புறப்படவில்லை. உள்ளே போய்ப் பார்த்தால் காலோடு தலை போர்த்திக் கொண்டு படுத்திருந்தாள். “என்ன மனோ?” என்றதற்கு “உடம்பு ஃபீவரிஷாக இருக்கிறது, ஸ்ரீ. இன்றைக்கு டிரைவிங் போகவில்லை” என்றாள்.

அதை ஸ்ரீநாத் நம்பத் தயாராயில்லை. நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். கதகதப்பாய் இருக்கிற மாதிரி தோன்றியது. டிரைவிங் வேண்டாமென்று சொல்லி அனுப்பி விட்டான்.

மறுநாள் ஒரு கறுப்புக் கண்ணாடியைத் தேடி எடுத்து மாட்டிக் கொண்டு, ‘கண்ணெல்லாம் ஒரு எரிச்சல்’ என்றாள். அன்றைக்கும் தொலையட்டும் என்று விட்டு விட்டான்.

அதற்கு அடுத்த தினம், ‘நிமிர்ந்து உட்கார்ந்து முதுகிலே வலிக்கிறது’ என்று அவள் சொன்னதும் அவனுக்குக் கோபம் வந்து விட்டது. வழக்கம் போல் பாதியிலே விடுவதற்கு இது ஒரு சாக்கு என்று புரிந்து கொண்டவன், “டிராமா போடாதே! இப்ப கிளம்பப் போகிறாயா இல்லையா?” என்று குரலை உயர்த்தினான்.

“ப்ளீஸ், ஸ்ரீ. கத்துக்கிட்டது போதுங்க” என்று மனோகரி கண்கலங்கினாள்.

“போதாது என்கிறேன் நான்!”

இப்படி அவன் அதட்டி மனோகரி பார்த்ததில்லை. முனகிக் கொண்டே டிரஸ் மாற்றிக் கொண்டு, இன்ஸ்ட்ரக்டரை அரைமணி காக்க வைத்த பிறகு, வேண்டா வெறுப்பாய்க் கிளம்பினாள்.

“சே! இவள் பிடிவாதத்துக்கு இனிமேல் இடமே கொடுக்கக் கூடாது! இப்படிச் சத்தம் போட்டால் தான் சரிப்பட்டு வருவாள்!” என்று வாய்விட்டுச் சொன்னபடி, அவளுடைய அறையில் போட்டது போட்டபடி இருந்ததை ஒழுங்குப்படுத்தினான்.

ஷெல்ப்பில் புத்தகங்கள் சரிந்து கிடந்தன. தமிழிலும் இங்கிலீஷிலுமாகக் கதைப் புத்தகங்கள் தான் பெரும்பாலும். ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்தவனுக்குக் கோபம் அதிகரித்தது.

ஒவ்வொரு புத்தகத்திலும் ஏதோ ஒரு பக்கத்தில் ஒரு காகிதத் துண்டு வைத்திருந்தாள் மனோகரி. அதுவரை படித்துவிட்டு நிறுத்தியிருக்கிறாள் என்று அர்த்தம்! சிலது ஐம்பது பக்கத்தில். சிலது நூறு பக்கத்தில். சில இருநூறு வரை. ஆனால் காகிதத் துண்டு இல்லாத புத்தகம் ஒன்று கூட இல்லை. அதாவது, அவள் முழுசாய்ப் படித்து முடித்த புத்தகம் என்பது ஒன்று கூட இல்லை! இதிலேயும் அவள் சுவாவப்படி பாதி, பாதி, பாதிதான்!

ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. எல்லாப் புத்தகங்களிலும் இருந்த அடையாளத் துண்டுகளை ஒவ்வொன்றாய் எடுத்து எடுத்துக் கசக்கி எறிந்தான். ஒழுங்காக அடுக்கி வைத்தான். கோபம் அடங்க வெகு நேரமாயிற்று.

காலிங் பெல்லை யாரோ அடித்தார்கள்.

“கம் இன்” என்றான்.

டிரைவிங் இன்ஸ்ட்ரக்டர் வந்தாள். “அம்மா காரிலே இருக்கிறாங்க. உங்களை கூப்பிடறாங்க” என்றாள்.

ஸ்ரீநாத் திடுக்கிட்டான். “ஏன், என்ன அவளுக்கு?”

“ஒண்ணுமில்லை பிடிச்சு அழைச்சிட்டு வரணும். கொஞ்சம் வாங்க” என்று அவள் சொன்னதும் பதறியடித்துக் கொண்டு வாசலுக்கு ஓடியவன், “என்ன மனோ? என்ன ஆச்சு?” என்றான். அவளை முழுசாகப் பார்ப்போமா மாட்டோமோ என்று கற்பனைகள் ஒரு நிமிடத்துக்குள் அவன் மனசில் முட்டிக் கொண்டு எழுந்து விட்டன.

‘ஒண்ணுமில்லை’ என்று வேதனையுடன் சொல்லிக் கொண்டு சிரமப்பட்டுக் காரிலிருந்து வெளிவந்து, ஒரு கையை அவன் தோளிலும் மறு கையை டிரைவிங் ஸ்கூல் பெண்ணின் தோளிலுமாக அணைத்துக் கொண்டு நொண்டி நொண்டி வீட்டுக்குள் வந்தாள். ரத்தக்காயம் எதுவும் இல்லை என்பதைக் கண்டு ஸ்ரீநாத்துக்குப் போன உயிர் திரும்பி வந்தது. ஆனால் அச்சம் நீங்கவில்லை. “என்ன ஆச்சு, மனோ! என்ன ஆச்சு?” என்று பதைத்தான்.

“ஒண்ணும் இல்லீங்க” என்று அந்த இன்ஸ்ட்ரக்டர் பதில் சொன்னாள். “பெஸன்ட் அவென்யூவில் ஓரமாய்க் காரை நிறுத்தச் சொன்னேன். எப்பவும் பின்னாடி பார்த்து விட்டு இறங்கணும்னு சொல்லியிருக்கேன். பார்க்காமல் இறங்கிட்டாங்க. ஒரு சைக்கிள்காரன் வேகமாய் வந்தவன், பின்னாலே இடிச்சு இவங்களைத் தள்ளிட்டான். காயம் இல்லைதான். ஆனால் வலது கால் முட்டியிலே வலிக்குதுங்கறாங்க, எதாச்சும் சுளுக்காயிருக்கும்.”

ஸ்ரீநாத்துக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. ‘எனக்கு ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை’ என்று மனோகரி திரும்பத் திரும்பச் சொல்லியும் கேட்காமல், தன் காரில் ஏற்றிக் கொண்டு டாக்டரிடம் அழைத்துப் போனான். உடனே எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள். “நல்ல காலம், ஃப்ராக்சர் எதுவும் இல்லை. எதற்கும் கட்டுப் போட்டு விடுகிறேன்” என்றார் டாக்டர்.

“தாங்க்ஸ், டாக்டர்” என்று நிம்மதிப் பெருமூச்சு விட் டான் ஸ்ரீநாத்.

மருந்து மாத்திரைகள் எழுதித் தந்து, “ஒரு வாரம் எழுந்து நடக்க வேண்டாம். படுத்துக் கொண்டு ரெஸ்ட் எடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார் டாக்டர்.

“ஏன் இப்படிப் பயப்படறீங்க ஸ்ரீ? அதான் டாக்டர் ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டாரில்லே?” என்று மனோகரி பலமுறை சொல்லியும் ஸ்ரீநாத் கேட்கவில்லை. கைத் தாங்கலாகப் படுக்கையில் சாய்த்து, தலையணைகளைச் சரி செய்து, தானே சூடாய்க் காப்பி போட்டு எடுத்து வந்து மாத்திரைகளைச் சாப்பிட வைத்தான்.

“டீவி போடட்டுமா, மனோ? பார்த்துக் கொண்டே படுத்திருக்கலாம். வலி தெரியாது.”

“வேண்டாம். ஏதாவது படிக்கிறேன்” என்றவள், “ஷெல்பில் அதோ அந்த மேல் தட்டில் டேனியல் ஸ்டீல் புத்தகம் இருக்கும், பாருங்க. ‘ரிங்’ என்று பெயர்” என்றாள். ஸ்ரீநாத் எடுத்து வந்து தந்துவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.

புத்தகத்தை மறுபடி மறுபடி புரட்டியவள், “கொஞ்சம் படிச்சிட்டு அடையாளமா ஒரு காகிதத் துண்டு வச்சிருந்தேனே?” என்றாள்.

”அதனாலென்ன? நிறுத்தின இடம் நினைவிருக்கும் இல்லையா? அதற்கு மேல் படியேன்.”

”ஊகும், நினைவில்லை. சரி, டிக்கென்ஸின் ‘டேல் ஆஃப் டூ சிடீஸ்’ இருக்கா, பாருங்க”

எடுத்து வந்து கொடுத்தான். அதையும் புரட்டிப் பார்த்து ஏமாற்றம் அடைந்தாள் மனோகரி. ”இதிலேயும் காகிதத் துண்டு காணோமே? பரவாயில்லை, ஸ்டீஃபன் கிங்கின் ‘ஃபயர் ஸ்டார்ட்டர்’ எடுங்க.”

அதிலும் அப்படியே.

ரூத் ரெண்டாலின் நாவல், ஃப்ரெட்ரிக் ஃபார்ஸைத்தின் நாவல், ஆர்.கே. நாராயனின் நாவல்.

”கல்கியோட ‘அலையோசை’யாவது தேவனோட ‘ராஜாத்தின் மனோரதமாவது இருக்கா, பாருங்க” என்றாள் மனோகரி.

அவைகளிலும் படித்ததற்கு அடையாளமாக எந்தத் துண்டுக் காகிதமும் காணப்படவில்லை. மனோகரி தலையை நிமிர்த்தி, அவன் முகத்தை ஒருகணம் உற்றுப் பார்த்தாள்: மனத்தில் ஏற்பட்ட சந்தேகம் அவள் கண்களில் பிரதிபலித்தது. “ஸ்ரீ, நீங்கதான் என்னவோ செஞ்சி இருக்கீங்க. உண்மையைச் சொல்லுங்க. என்ன செஞ்சீங்க?” என்று கேட்டே விட்டாள்.

ஸ்ரீநாத் தலையைக் குனிந்து கொண்டு, “புத்தகங் களைக் கூட இப்படிப் பாதியில் நிறுத்தியிருக்கியே என்று கோபம் வந்து துண்டுகளை எடுத்து எறிந்து விட்டேன், ஸாரி” என்று ஒப்புக் கொண்டான். அவள் பார்வையைச் சந்திக்கவே நெஞ்சு குறுகுறுத்தது. ”இரு. வேறே ஏதாவது இருக்கிறதா, பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு மறுபடி ஷெல்பைப் பார்த்தான்.

அப்பாடா! ஒரு புத்தகத்தின் நடுவே காகிதத் துண்டு தலையை நீட்டிக் கொண்டிருந்தது.

“இருக்கு மனோ, இருக்கு!” என்று பரபரப் புடன் சொன்னவாறு கட்டிலருகே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். புத்தகத்தை அப்போது தான் பார்த்தான்.

‘கம்பராமாயணம் · கிஷ்கிந்தா காண்டம் – மூலமும் உரையும்’ என்று போட்டிருந்தது.

“என்ன மனோ, இது? நீ வெறும் கதைப் புத்தகம், நாவல் இதெல்லாம் தான் வாசிப்பாய் என்று நினைத்து இருந்தேனே? கம்பராமாயணம் கூடப் படிப்பாயா, என்ன?” என்றான் வியப்புடன்

மனோகரி அமைதியாக, “அது என்னோட புத்தகமும் இல்லை, அந்த அடையாளத் துண்டுக் காகிதம் நான் வச்சதுமில்லை” என்றாள்.

“பின்னே?”

“அப்பா!”

”உன் அப்பாவா?”

“ஆமாம். இரண்டு மாசம் முன்னாலே அவர் இங்கே வந்திருந்தப்ப, இப்படித்தான் எதையோ நான் பாதியிலே நிறுத்திட்டேன்னு நீங்க கோபிச்சிங்க. அப்பாவுக்கு வருத்தமாப் போச்சு. ‘எடுத்த காரியத்தை முடிக்கிறதுக்கு மனசிலே உறுதி வேணும், அதுக்கு ஒருவழி இருக்கு’ என்று சொல்லி, இந்தக் கம்பராமாயணம் புத்தகத்தைக் கொண்டு வந்து தந்தார். கிஷ்கிந்தா காண்டத்தில், இலங்கைக்குப் போவதற்கு அனுமான்தான் தகுதியுள்ளவர்னு ஜாம்பவான் சொல்கிற கட் டம். அனுமாருடைய வீர தீர பராக்கிரமங்களை அவரிடமே எடுத்துச் சொல்லிப் புகழ்கிற பதினொரு செய்யுள்களைத் தினந்தோறும் படிச்சால் மனசுக்குக் தைரியமும் உறுதியும் வருமாம். அப்பாவுக்கு யாரோ ஒரு பெரியவர் சொன்னாராம். அதனால் இந்தப் புத்தகம் கொண்டு வந்து தந்து, தினம் அந்தப் பதினொரு செய்யுள்களைப் படிக்கணும் என்று அடையாளமும் வைத்து விட்டுப் போனார்.”

நீளமாய் மனோகரி சொல்லி முடித்ததும், ”சரி அப்பா சொல்படி படிக்க ஆரம்பிச்சியா?” என்று ஸ்ரீநாத் கேட்டான்.

“இல்லை ஸ்ரீ, மறந்தே போயிட்டேன். ஒரு நல்ல புத்திமதியை அலட்சியம் பண்ணினது எத்தனை தப்பு. இன்னியிலேருந்து ஆரம்பிச்சுடறேன்” என்று உற்சாகமாய்ச் சொல்லிப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டாள்.

“படி, நானும் கேட்கிறேன்” என்றான் ஸ்ரீநாத்.

‘ஆரியன் முன்னர்ப் போதுறவுற்றவதனானும், காரிய மெண்ணிச் சோர்வற முற்றும் கடனானும்…’ என்று தொடங்கும் முதல் செய்யுளைப் படித்தாள்.

“தட்டுத் தடுமாறாமல் பிரமாதமாய்ப் படிக்கிறியே! பலே, பலே!” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான் ஸ்ரீநாத். ”ஊம், மேலே படி.”

அடுத்த நான்கு செய்யுள் படித்துவிட்டு, ‘அறிந்து திறத் தாறெண்ணி அறத்தாறழியாமை…’ என்று ஆரம்பித்தவள் அத்துடன் நிறுத்திக்கொண்டு, “ஒரு துண்டுக் காகிதம் இருந்தால் எடுங்கள்” என்றாள் ஸ்ரீநாத்திடம்.

“எதற்கு?”

“போதுங்க” என்றாள் அவள்.

– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *