பாடக்கூடாது
“என்ன அக்கிரமமா இருக்கு, இரண்டாம் தாரம்னாலும் சரி மூன்றாம்தாரமா அந்தப்பொண்ணை யாருக்கோ தாரைவார்க்கப்போறாளாமே இந்த சுந்தரி? ஏழைக்குடும்பம்னாலும் ஒரு தன்மானம் வேண்டாமோ? , பாவம் அந்தப்பொண்ணும் அம்மா பேச்சைக்கேட்டு நடக்கறது என்கிறது இந்தகாலத்தில் ரொம்ப அதிசியம்!”

சுந்தரியின் காதுபடவே அந்தத்தெரு முழுக்க பேச ஆரம்பித்தது. சுந்தரி,கண்ணில் நீர் வழிய மகளைப்பார்த்தாள்
“இப்பகூட சொல்றேன் பாரதி, நீ வேண்டாம்னா இந்தக்கல்யாணத்தை நிறுத்திட்றேன்.. உங்கப்பா கோயில் அர்ச்சகராயிருந்து மாரடைப்பில் போனதுமுதல் குடும்பம் நடத்த வழி இல்லாம திண்டாட்றோம். இதுல உன் அக்கா பூமாக்கு பிறந்ததிலிருந்தே ‘தலசீமியா’ என்கிறநோய் வந்திருக்கு. கடுமையான ரத்தசோகை நோய். தொடர்ந்து ரத்தம் ஏத்தவேண்டி இருக்கு.. இதுல வலிப்பு, கோமா, இதயத்துல ஓட்டைன்னு சாவோட போராடிண்டு இருக்கா…அஞ்சாவதுக்குமேல அவளால படிக்கமுடியல. உயரமும் ஏறாம அப்படியே இருக்கா அவளுக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு நான் காணமுடியாது..ஏழைகளுக்கு வரக்கூடாத வியாதி வந்திருக்கு… கடன் வாங்கி வைத்திய செலவு பண்ணிண்டு இருக்கேன்….உன்னைப்பெண்பார்த்த அந்த பெங்களூர்க்காரா, பூமாவோட மருத்துவசெலவு , உன்னோட கல்யாண செலவுன்னு எல்லாத்தையும் ஏத்துக்கறதா சொல்லி இருக்கா… உன்னை மூணாந்தாராமா கட்டிக்கவேண்டிய காரணத்தையும் சொல்லிட்டா…பையன் தங்கமானவனா தெரியறான்.அவா போடற ஒரே கண்டிஷன் பொண்ணு பாட்டுபாடக்கூடாது என்கிறதுதான். ஔரங்கசீப் குடும்பமாயிருக்கணும். அதனால் என்ன, இது நமக்கு வசதியாப்போச்சு.. ஏன்னா உனக்கு பாட்டே வராது. பாட்டு
கத்துக்கொடுக்க எனக்கு வசதியும் இல்ல. தினசரி சாப்பாட்டுக்கே நான் நாலு ஆத்துலபோய் சமையல்பண்ணி பத்துப்பாத்திரம் தேச்சி உழைக்கவேண்டி இருக்கு..” என்று அழ ஆரம்பித்தாள்.
“அம்மா..அழாதேம்மா… நம்ம குடும்ப நிலைமை எனக்குப்புரியாமல் இல்லைம்மா.. எதிர்வீட்டு மாமா தான் நம் பேர்ல இரக்கப்பட்டு இண்டர்நெட்ல என் போட்டோ ஜாதகம் விவரமெல்லாம் போட்டு வரன் பார்க்க உதவினார். அதைப்பார்த்து நம் ஆத்துக்கு இவாளா தேடிண்டுவந்திருக்கா… நம்ம நிலைமை தெரிஞ்சுதான் ஒகே சொல்லி இருக்கா.பையனும் தனிப்பட்ட முறையில் என்கிட்ட ” பாட்டு சத்தமே என் வீட்டில்கூடாது அதுமட்டும்தான் கண்டிஷன்”னார் ..பாட்டு கேட்கவும்மாட்டேன் பாடவும்மாட்டேன்னு நிஜத்தை சொல்லிட்டேன்…கல்யாணம் ஆகி நான் அவரோட சந்தோஷமா இருப்பேன்மா ஊர் ஏதாவது சொல்லிண்டுபோகட்டும்,, அவா வாயை அடக்க முடியாது நாம் காதைமூடிப்போம் அது சுலபம்.”
பாரதியின் கல்யாணத்தில் கௌரிகல்யாண வைபோகமே கூட யாரும் பாடவில்லை.. நாதஸ்வரம் கிடையாது. வெறும் கெட்டிமேளம் மட்டுமே..
முதலிரவில் பாரதியின் கணவன் ரகுராமன் இன்னும் விவரம் சொன்னான்..”பாரதி… உண்மையைச்சொல்லட்டுமா? முதலிரண்டு கல்யாணமானதே தவிர முதல் இரவே அவர்களோடு நடக்கவில்லை… கல்யாணம் நடந்த மாலை என் முதல்மனைவியே ரிசப்ஷனில் பாட்டுக்கச்சேரிசெய்தாள். அதை நாந்தான் ஏற்பாடு செய்தேன் ஏனென்றால் எங்ககுடும்பமே சங்கீதப்பிரியர்கள். பாட்டுப் பாடறபெண்ணாய்த்தான் வேணூம்னு தேடித்தேடிஅவளைதேர்ந்தெடுத்தோம்.ரிசப்ஷன் ஆனதும் ரூமுக்குப்போனவள் அப்படியே ஒரு கடிதம் எழுதிவச்சிட்டு வயலின் வாசிச்சவனோடு-பலவருஷக்காதலாம்- ஓடிப்போய்விட்டாள்.… அடுத்து வந்தவள் தனக்கு சங்கீதம் பிடிக்காது பாடமாட்டேன்னு சொல்லிவிட்டு கல்யாணத்தில் தன் சிநேகிதிகள் மணப்பந்தலில்பாடும்போது. கூடவே அவளும் பாடினாள்… அம்மா தட்டிக்கேட்டபோது’ நான் தனியா தானே பாடக்கூடாது, கல்யாணத்துக்குவந்த என் தோழிகள்கூட
சேர்ந்து பாடினால் என்னதப்பு’ன்னு கேட்டு அங்கேயே கோபத்தோட தாலியைக்கழற்றிப் போட்டுப்போய்விட்டாள். ”
” நான் அந்த தப்பை செய்யவே மாட்டேன்”
ரகு பாரதியை மகிழ்ச்சியுடன் அணைத்துக்கொண்டான்.”உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பாரதி. “
“ஆனா உங்க படிப்பு பணம் பதவிக்கு நான் கொஞ்சமும் லாயக்கே இல்லைன்னு வேதனையா இருக்கு.. வெறும் அழகு ஒண்ணுதான் இருக்கு..”
“அழகோட உன் அடக்கமான குணமும் இருக்கு..இந்தகாலத்தில் இப்படி ஒரு பெண்ணைப்பாக்கறதே கஷ்டம்னு என் அம்மாகூட சொன்னா பாரதி”
:நிச்சயம் உங்க எல்லார்க்கும் பிடிச்சமாதிரி நடந்துப்பேன்..ஆனா எத்தனை பெரிய சங்கீதரசிகர்களாய் இருந்த உங்க குடும்பத்தின் ரசனை உணர்ச்சியை அந்த முதல் மனைவி நசுக்கிட்டாங்க…மகா துரோகம் அவங்க செய்தது.. “
“அதுதான் எங்க எல்லார்க்கும் என்னவோ ஒரு வெறுப்பு இசைமேலேயே..அது சினிமாப்பாட்டோ சாஸ்திரிய சங்கீதமோ ஹிந்துஸ்தானி ம்யுசிக்கோ எதுவுமே எங்க காதுகளுக்கு இப்போ நாராசமா இருக்கு பாரதி. அப்படி ஒரு நிலைக்குவந்துட்டோம்.. ”
“ சத்தியமா உங்க யாரையும் நான் மனசு வருத்தப்படறமாதிரி நடந்துக்கமாட்டேன்…ஏழைக்கு வாழ்வு கொடுத்த தெய்வம் நீங்க”
பாரதிகணவனின் மார்பில் சாய்ந்தாள்.
. அதுவரை குடிசை வீட்டில் இருந்த அவள் குடும்பத்தை தன் வீட்டருகிலேயே ஒரு பெரியவீடாய்ப்பார்த்து குடிவைத்தான்.பாரதியின் அக்கா பூமாவின் மருத்துவசெலவை முழுவதும் ஏற்றுக்கொண்டான். பாரதிக்கு ரகுவின் அபரிமிதமான அன்பு திக்குமுக்காட வைத்தது.
ஆயிற்று மூன்றுமாதங்கள்.அன்று ரகுவின் அலுவலகத்தின் ஆண்டுவிழா நிகழ்ச்சி.. எல்லோருமாக கிளம்பினர். பாரதி வெண்பட்டுப்புடவையில் தேவதையாய் தெரியவும் ரகு அவள்காதோரம்,”என் பாரதி எப்போதுமே அழகு இப்போ வயிற்றில் குழந்தையுடன் கொள்ளைஅழகு” என்றான்.
“பார்த்து ஜாக்கிரதையாய் அவளை உன் பக்கத்தில் உட்கார்த்தி வச்சிக்கோடா ரகு.. ஒருமணிநேரத்துக்கு மேல் அவள் ஒரே இடத்தில் உட்காரக்கூடாது உடம்பு அசந்துபோய்டும்.. சீக்கிரமா உன் ஆபீஸ்விழாவை முடிக்க சொல்லு… பாட்டு கச்சேரி கண்ட்றாவி ஒண்ணூம் இல்லைன்னு சொன்னதாலே நாங்களும் வரோமாக்கும் ”என்றாள் அவன் அம்மா காந்தா.
“அப்படி ஏதும் இருந்தா நானே கிளம்பமாட்டேனேம்மா..
என்றுபுறப்படும்போது ரகு சொன்னாலும் விதி அங்கு சிரித்துவிட்டது.
ஆபீஸின் புது மானேஜிங் டைரக்டரின் மனைவி டில்லியில் வளர்ந்தவளாம். நல்ல ஹிந்துஸ்தானிபாடகியாம் . அவள் இறைவணக்கம் பாடப்போவதாக திடீர் அறிவிப்புவந்ததும் ரகுவோடு அவன் பெற்றோர்களூம் இரு கைவிரல்களால் செவிகளைமூடிக்கொள்ள ஆயத்தமானார்கள்.
அந்தப்பெண்மணி மைக் அருகே வந்தாள்.நல்ல ஒரு கஜல் பாட ஆரம்பித்தாள்.
பாரதியும் தன் காதுகளைப்பொத்திக்கொள்வதா அல்லது எழுந்து வெளியேபோய்விடுவதா என யோசிக்கும்போதே சட்டென அந்தப்பாடல் ஆரம்பித்துவிட்ட்து. முதல் வரியைக்கேட்டதுமே அவள் உடம்பு சிலிர்த்து நிமிர்ந்தது, உருது அதிகம் கலந்த ஹிந்தி தெரியாத அவளுக்கு அந்தப்பாடல் பரிச்சயமானதுபோன்ற உணர்வு எழுந்து அதில் லயிக்கவைத்தது. கால்கள் தாளம்போட ஆரம்பித்தன, கைகள் மேலெழுந்தன. ‘வாரே வாஹ்’ என்று வாய் கூவியது,
அந்தப்பெண்மணி பாதிப்பாடலில் வார்த்தைகளை மறந்துவிட்ட தவிப்பில் தயங்கி நிறுத்தியபடி அடுத்தவரிகளுக்காக
நினைவுப்பேழையில் துழாவி அது கிடைக்காமல்,..அதேவரிகளையே திரும்பத்திரும்பப் பாடினாள்.
சட்டென பாரதி எழுந்தாள்..ரகுவும் காந்தாவும் எரிச்சலுடன் பார்க்கும்போதே மேடை ஏறினாள், மீதவரிகளை அக்ஷரம் பிசகாமல் உணர்ச்சி ததும்பபாடிமுடித்தாள்.அனைவரும் கைதட்டிப்பாராட்டினர்.
பாடிமுடித்து சில நிமிடங்களில் பாரதிக்கு உடலில் ஒரு சிலிர்ப்பு. தலை வலிப்பதுபோலிருந்தது.என்ன நடந்ததென தெரியாமல்விழித்தபடி தன் இருக்கையில் அமர்ந்தாள்.
“ரகுராமன்.! உங்க மனைவி அற்புதமாய் பாடினாங்க! நீங்க சொல்லவே இல்லையே அவங்க ஒரு கஜல்பாடகின்னு!
வாரே வாஹ்..என்ன குரல்! என்ன உச்சரிப்பு! ஆஹா! சங்கீதமழை இன்னிக்கு!” என்று எம் .டி. ரத்தன் சிங் புகழ்ந்தார்.
ஆளாளுக்குப் பிறகு கைகுலுக்கி ரகுவிடம் புகழவும், ரகுராமன் பார்வையால் பாரதியை சுட்டான்.
பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை.’ நான் பாடினேனா எப்படி..
ஆனால் பாடினேன் அந்தப்பாடலை எங்கோ கேட்ட நினைவு.. ஏன் மேடை ஏறி பாடிப்பரிசும் வாங்கிய ஞாபகமுமாய் வருகிறதே… எங்கே தெரியவில்லையே… ’
குழம்பினாள்.
வீடுவந்ததும் காந்தா,” டேய் ரகு,,,முதல்ல இவளை அவ வீட்ல கொண்டுவிட்டுவாடா… இவளூம் அந்த ரெண்டு பேர்மாதிரி நம்மை அவமானப்படுத்திட்டா நாம் வழக்கம்போல ஏமாந்துட்டோம்..” என்று கூச்சல்போட்டாள்.
ரகுவின் அப்பா” கெட் அவுட் ஐ சே..” என்றார் பாரதியைப்பார்த்து.
ரகுராமன் ”,கிளம்பு ” என்றுமட்டும் சொன்னான்.பாரதி கைகுவித்துக்கெஞ்சினாள். எல்லோர் காலிலும் விழுந்தாள்.யாரும் அவளை மன்னிக்கத்தயாராக இல்லை.
காரில் போகிறவழியில் பாரதி அழுதபடி ”தெரியலைங்க நான் எப்ப்டி பாடினேன்னு..ஆனா இ ந்தப்பாட்டை முன்னாடி பாடின நினைவு பரிசுகூடவாங்கி இருக்கேன்… ” என்றாள்.
“அப்படின்னா அதை மறைச்சி நீ என்னைக்கல்யாணம் பண்ணிக்கிட்டே இல்ல?” ரகு சீறினான்.
“சத்தியமா எனக்கு பாடத்தெரியாது ..”
“ நல்ல கஜல் பாட்டு பாடத்தெரியும் என்பதை மேடையில் பார்த்துட்டோம்..”
ரகு மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவளை அவள் வீட்டு வாசலில்காரை நிறுத்திவிட்டு,” இறங்கு ”என்றான்.
தயக்கமுடன் இறங்கியவளை ஏறெடுத்தும்பார்க்காமல் காரை திருப்பிக்கொண்டுபோய்விட்டான்.
சற்றுதொலைவுபோனதும் பாரதியின் கைப்பை காரில்கிடக்கவும் கொண்டுகொடுக்க வீட்டுவாசலுக்குப்போனவன் உள்ளே பாரதியின் பேச்சுக்குரல் கேட்கவும் தயங்கி நின்றான்.
பாரதி ஹிந்தியில் அவள் அம்மாவுடன் பேசவும், அவள் அம்மா,”என்ன இழவுடி திடீர்னு ஹிந்தில பேசறே ஒண்ணும்புரியல..என்னாச்சு நன்னாதானேஇருந்தே ..என்ன ஆச்சு உனக்கு ? காரில்வந்த மாப்பிள்ளை வாசலோடபோயிட்டா.ர் என்னவிஷயம் ?” என்றுகேட்க..பாரதியின் உடம்பு மறுபடி சிலிர்த்து அடங்கியது.
”அம்மா.. என்னம்மா ஆச்சு எனக்கு திடீர்னு நான் வடக்கே ஏதோ ஒரு ஊரில் இருக்கிற பிரமை .. ஏதேதோ ஞாபகம் வர்து.. பெரியபாடகியா இருக்கேன்ம்மா நான்..பெரிய சபைல
பாட்றேன்..பொறாமைபிடிச்ச யாரோ என்னை கத்தில குத்த..குத்த.. என்றபடி அப்படியே மயங்கிவிழுந்தாள்..
ரகு குழப்பமுடன் நேராய் தனது நெருங்கிய நண்பனும் மனநல மருத்துவருமான சங்கரை சந்திக்க வந்தான்..பாரதியைப் பற்றிய விவரம் சொன்னான்
சங்கர் எல்லாவற்றையும் பொறுமையாய் கேட்டுவிட்டு,” இது வித்தியாசமான கேஸ்! .சிலருக்கு திடீரெனபோன ஜன்மத்து நினைவுவந்தால் இப்படி ஆகும்…மீண்டும் சுயநிலைக்கு வந்துவிடுவார்கள்… ஆனால் மறுபடி மறுபடி போனஜென்மத்து நினைவு வந்துவிடும்,, அந்தப்பிறவியின் சக்தியும் கூடவே வரும். பாரதி போன ஜன்மத்தில் வடக்கில் ப்ரபல பாடகியாய் இருந்திருக்கணும்.யாரோ கத்தியால் குத்தவந்ததாய் சொல்லி இருப்பதிலிருந்தே இவள் போனஜன்மத்தில் யாராக இருந்தாளென கண்டுபிடித்துவிடலாம்..பிரபல பாடகியாய் இருந்திருக்கணும்…இது கோடியில் சிலருக்கு வரும்.. சில சினிமாக்களில் நீ பார்த்திருப்பாயே ரகு! இந்தமாதிரி நிலையில் இருப்பவர்கள் பொய் சொல்லமாட்டார்கள்.. அவர்களைப்பொறுமையாய் கையாளணும்… மருத்துவத்தில் குணப்படுத்த முடியும் அதற்குக் கொஞ்சநாள் ஆகும்” என்றார்.
ரகு, வீடுவந்து இதைச்சொன்னபோது காந்தா கத்தினாள்.
“எந்த ஜன்ம நினைவுவந்தாலும் இனிமே அவள் இங்கே வேண்டாம்டா.. அவள் எப்போ பாட ஆரம்பிப்பாளோ யார் கண்டா.. நமக்கு இன்னிக்குப்பாடினதே நம்பிக்கைத்ரோகம் செய்றதாதான் பட்டது. பாரதி நடிக்கிறாடா… நன்னா நடிக்கறா. நான் நம்பத் தயாரா இல்லை..அவளைஇனிமேலும் நம்குடும்பத்தில் சேர்க்கவேண்டாம் ”
ரகுராமனுக்கு இரவுமுழுவதும் தூக்கம் வரவில்லை… டாக்டர் சொன்னது சுழன்று கொண்டே இருந்தது.,பாரதியின் பரிதாபமுகம்
திரும்பத்திரும்ப எதிரேவந்து நின்றது. பாரதி பொய் சொல்வதாக நினைக்கமுடியவில்லை,
அறைஜன்னலைத் திறந்தபோது வாசலில் காம்பவுண்டை ஒட்டி இருந்த தென்னைமரத்தின்.பச்சைக்கிளைகள் காற்றுக்கு ஏற்றமாதிரி அசைந்து. ஆட்டமாய் ஆடின.
அதே கிளைகள் காய்ந்து.
ஓலைகளானதும் ஆடாது. அடங்கிபோய் ஒரு குடியிருப்பின் பாதுகாப்பிற்குக் கூரையாவதையும் நினைத்துப்பார்த்தான்.
பச்சைக்கிளையா பழுத்துக்காய்ந்த கூரையா! மனசு கேட்டுக்கொண்டே இருந்தது. ‘என் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள். அவளைக்காப்பது என்கடமை’ என்று கூரைக்கு ஆதரவாய் மனம் முடிவெடுத்தது.
“எங்கடா ராத்திரில கிளம்பறே விடியட்டுமே?” என்ற அம்மாவின் கூக்குரலை அலட்சியம் செய்தபடி ஒரு முடிவோடு அந்த நடு இரவில் ,ரகு தன் காரில் ஏறி உட்கார்ந்தான்.
அடுத்த சில நிமிஷங்களில் காரை பாரதியின் வீட்டு வாசலில் கொண்டுவந்து நிறுத்தினான்.