பழைய புத்தகம் பார்த்திபன்
(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வசந்தா நிலையத்தின் ஒரு பெரிய போர்ஷனில் தன்னந்தனியாக இருக்கும் கட்டுடல் இளைஞன் பார்த்திபன். ஆன வயதை யாரும் கண்டுபிடிக்க முடியாத தோற்றம் உடையவன் பார்த்திபன் என்பதால் நாமும் இளைஞன் என்றே சொல்வோம். பார்த்திபன், பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்றில் அக்கவுண்டன்ட் ஆக பணி புரிந்து வருகிறான். அவனுடைய படிப்பு என்ன என்பதெல்லாம் அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது. சிக்கலான வேலையையும் எளிதாக முடிக்கும் கெட்டிக்காரன் என்பதால் அவனுக்கு மேலே உள்ளவர்களின் மனங்களை அவன் வென்று விட்டான். அவனுடைய அம்மா சரஸ்வதி, கடற்கரை சாலையில் உள்ள பெரிய மாளிகையில் அவனுடைய அத்தை ஜானகி உடன் ஆதரவற்றோர் ஆசிரமத்தை நடத்தி வருகிறார். வேலைக்கு அங்கிருந்து வந்து செல்லும் அலைச்சலைத் தவிர்க்க அவன் தனது அலுவலகம் அருகே உள்ள வசந்தா நிலையத்தில் வசிக்கிறான்.
சரி, அவனுக்கு ஏன் பழைய புத்தகம் பார்த்திபன் என்று பெயர் வந்தது என்று கேட்கிறீர்களா? அவன் பழைய புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாங்கி சேகரிப்பான். படித்த புத்தகங்களை மீண்டும் பழைய புத்தக கடைக்குப் போட மாட்டான். வசந்தா நிலையத்தில் குடியிருப்போரின் சிறுவர் சிறுமியர், இவன் வீட்டில் இருக்கும் தருணங்களில் இவனுடைய சேகரிப்பில் உள்ள பல்வேறு சப்ஜெக்ட் புத்தகங்களைப் பார்த்து தேவையான பகுதிகளை மொபைலில் படம் எடுத்துக் கொள்வார்கள். டிவி பார்த்து பார்த்து அலுத்து விட்டது என்று நினைக்கும் சில இல்லத்தரசிகள், இவனுடைய சேகரிப்பில் உள்ள கிளாசிக் நாவல்கள், பழைய கட்டுரை புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். பழைய தீபாவளி மலர்களை வாங்கிச் செல்வார்கள். சிலர் வாசித்து விட்டு திருப்பிக் கொடுப்பார்கள். சிலர், திருப்பிக் கொடுக்க மாட்டார்கள். அவன் கேட்க மாட்டான். அவனுடைய நண்பர்கள், பலரும் இவனுடைய புத்தக ஆர்வத்தைக் கண்டு அவர்கள் வீட்டில் உள்ள புத்தகங்களை எடைக்கு எடை போட்டு காசு பார்க்க எண்ணாமல் இவன் வீடு தேடி வந்து கொடுப்பார்கள்.
அன்றொரு நாள். சனிக்கிழமை. அலுவலகத்தில் அன்று அரை நாள் பணி. மதிய உணவை வெளியே சாப்பிட்டு விட்டு தன்னுடைய கூட்டுக்கு வந்தான். சற்று நேரம் கட்டிலில் படுத்திருந்த அவன், புதிதாக வாங்கி இருந்த பழைய புத்தகம் ஒன்றில் மூழ்கினான்.
திறந்து இருந்த வாசற் கதவு அருகே யாரோ நிற்பது போல் தெரிந்தது.
புத்தகத்திலிருந்து விடுபட்டு பார்த்தான். அவனுடைய பள்ளித் தோழி ரஞ்சனியின் கணவர் ஒல்லியான உருவம் மழித்த முகம் கொண்ட, பார்மல் உடை அணிந்த ராஜீவ் நின்று கொண்டிருந்தார்.
“சாரி சார் வணக்கம் வாங்க குரல் கொடுத்து இருக்கலாமே….”
“நூல் பல கல் ன்னு ஒளவைப் பாட்டி வார்த்தையை நீங்க தான் கடைப்பிடிக்கறீங்க… கீழே வைக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமான புத்தகமா? இந்தாங்க ரஞ்சனி, இதை கொடுத்து விட்டு வர சொன்னா “ என்ற ராஜீவ், நீளமான, வண்ணமயமான புத்தகத்தை அளித்தார்.
அவர் மேலும் பேசினார்:
“இது எம். கே. குரூப் கம்பெனியோட எய்ட்டிஸ் காபி டேபிள் புக். அவளோட ப்ரெண்டு வீட்டில் டிஸ்போஸ் பண்ண வெச்சிருந்த புத்தகங்கள்லேந்து இதை கேட்டு வாங்கிட்டு வந்தாளாம். இதுல உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு “
“தாங்க்ஸ் சார். இந்த புக் ல எனக்கு என்ன சர்ப்ரைஸ்? உட்காருங்க “
“பரவாயில்லை நான் கிளம்பறேன். முதல் பக்கத்தில் இருக்கும் எம். கே. குரூப் சேர்மன் முத்துகிருஷ்ணன் படத்தை பாருங்க ஒங்கள மாதிரியே இருக்காரு…. சரி நான் வரேன் “
ராஜீவ் நகர்ந்தார். “சார்… உட்காருங்க டீ போட்டு தரேன்.“ என்றான் பார்த்திபன். “ரஞ்சனி நிறைய வேலை கொடுத்திருக்கா வரேன்…. “ ராஜீவ் விடை பெற்றுச் சென்றார்.
பார்த்திபன், வெய்யில் என்று பார்க்காமல் போர்ஷனைப் பூட்டிக் கொண்டு பைக்கில் ஏறி, அம்மாவின் வீட்டை நோக்கிச் சென்றான்.
கடற்கரை சாலையில் இருந்த ஜெகதீசன் ஆதரவற்றோர் விடுதி. உள்ளே நுழைந்த பார்த்திபன், வண்டியை நிறுத்தி விட்டு, எதிரில் வந்த ஊழியர்களின் வணக்கங்களை ஏற்றுக் கொண்டு தன்னுடைய அம்மாவின் அறையை நோக்கிச் சென்றான். அங்கே அவனுடைய அம்மா சரஸ்வதி, நாற்காலியில் அமர்ந்து பூனைக்குட்டிகளுக்கு காரா பூந்தியைப் போட்டுக் கொண்டிருந்தார். மகனைப் பார்த்தார்.
“வாப்பா… சனிக்கிழமை வெய்யில் தாழ சாயங்காலம் தானே வருவே.. இப்பவே வந்துட்டே….. பார் உன்னைப் பார்த்ததும் இதுங்க சாப்பிடாம ஓடுது “ பார்த்திபன் கட்டிலில் அமர்ந்தான். “என்னை சாப்பிட்டியான்னு கேட்காதே.. பூனைக்குட்டி சாப்பிடலைன்னு கவலை “
“என்னாச்சு அம்மா மேல கோபம்….”
பார்த்திபன், அந்தப் புத்தகத்தில் இருந்தவரைக் காண்பித்தான்.
“இவரு யாரு? என்னை மாதிரியே இருக்காரு….”
“சொல்லாம விட்டது தப்புதான். இவர் முத்துகிருஷ்ணன் ஓகோன்னு இருந்த தொழில் அதிபர் என்னோட அப்பா உனக்கு தாத்தா…”
“இவ்வளவு பெரிய மனுஷனோட பொண்ணா இருந்துகிட்டு என்னை வளர்க்க அவ்வளவு கஷ்டப்பட்டே…. பப்ளிக் டொனேஷன் வாங்கி ஆசிரமம் நடத்தறே….”
“அது பெரிய கதை. சுருக்கமா சொல்றேன். ஒங்க அப்பா ஜெகதீசனும் நானும் காலேஜ் படிக்கும் போது படிக்கும் வேலையை பார்க்காம காதலிச்சோம். ஒங்க அப்பாவுக்கு எங்க ஆபீஸில் வேலை கிடைச்சது. கொஞ்ச நாள்லயே ஒங்க தாத்தாவுக்கு நெருக்கமாயிட்டாரு. படத்துல ஹீரோ கூட இருக்கற ஜனகராஜ் மாதிரி சேர்மனுக்கு குளோஸ் ஆயிட்டாரு. சந்தர்ப்பம் பார்த்து எங்க காதலை பக்குவமாக சொல்லிக்கலாம்னு இருந்தோம். அதுக்குள்ள ஒங்க அப்பாவின் வளர்ச்சி பிடிக்காத புல்லுருவிகள், ஒங்க தாத்தா கிட்ட எங்க காதலைப் பத்தி போட்டு கொடுத்துட்டாங்க. கோபத்தின் உச்சிக்கு போனவரு அவரை வேலையை விட்டு தூக்கிட்டாரு. நாங்க ரெண்டு பேரும் நாங்களா கல்யாணம் பண்ணிக்கிட்டு போனப்ப அவர் எங்கள ஏத்துக்கல. என்னோட தாத்தா அப்போவோட அப்பாதான் எங்களுக்கு முறையா செய்ய வேண்டிய சீர்வரிசை எல்லாம் செஞ்சு எங்கள் ஏத்துகிட்டாரு. குடியிருக்க எங்கேயும் அலைய வேண்டாம் ன்னு அவரோட இந்த மாளிகைல இருக்க சொன்னாரு… பெருமழையால் நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தப்ப ஆஸ்பத்திரியில் சேர்க்க முடியல. இங்க தான் நீ பொறந்த என் பாட்டி தான் உன்னை வரவேற்றா…. திருமணம் ஆகாமல் இருந்த ஒங்க அத்தை ஜானகியும் எங்க கூட வந்து இருந்தா… இங்கிருந்து வேலைக்கு போய்க்கிட்டு இருந்த ஒங்க அப்பா, நீ எட்டாவது படிக்கும் போது ஏதோ மர்ம நோய் வந்து நம்மை விட்டு போய்ட்டாரு. அதுக்கு முன்னாடி எனக்கு அடைக்கலம் கொடுத்த தாத்தா பாட்டியும் போய்ட்டாங்க…. என்னோட தாத்தா ஒன்னோட கொள்ளுத் தாத்தா இந்த மாளிகைய என் பேருக்கு எழுதி வைச்சாரு… ஒங்க அத்தை அனாதை இல்லம் நடத்தலாம்னு சொன்னா… ரெண்டு பேரும் சேர்ந்து நடத்திகிட்டு இருக்கோம் அதெல்லாம் தான் ஒனக்கு தெரியுமே … “ அறைக்குள் வந்த அத்தை ஜானகி, பார்த்திபனின் முதுகில் தட்டி விட்டு அவன் அருகில் அமர்ந்தார்.
“ சரி… முத்துகிருஷ்ணன் தாத்தாவை இப்ப நான் போய் பார்த்து உறவை புதுப்பிச்சுக்கலாமா”?
“அதை சொல்லலையா? அவர் போய் பத்து வருசம் ஆவுது”
“மாமாக்கள் இருக்காங்களா?“
“எங்க அப்பாவுக்கு ரெண்டு பொண்ணுங்க…தான்.. நான் மூத்த பொண்ணு எனக்கு அப்புறம் பத்து வருசம் கழித்து பொறந்த என் தங்கை, உன் சித்தி விசாலாட்சி. நொடிச்சு போன எம். கே. குரூப் கம்பெனிய அவதான் இப்ப தூக்கி நிறுத்தி இருக்காளாம். அவளும் காதல் திருமணம் பண்ணிக்கிட்டாளாம்…. ஆனால் அவ என்னையும் உன்னையும் வந்து பார்க்கவில்லை இது வரைக்கும்.. “
” நல்ல பாசமுள்ள தங்கச்சி தான். “ என்ற பார்த்திபன் புத்தகத்தை மேசையின் மீது வைத்து விட்டு, மாளிகையின் தோட்டத்தில் உலாவ சென்றான்.
திங்கள்கிழமை மாலை. ரோஜா வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள பழைய புத்தகக் கடைக்கு வந்த பார்த்திபன், இறங்குவதற்கு எப்பொழுதும் படியில் செல்பவன் இப்பொழுது லிப்டில் ஏறினான். அங்கு அவன் கண்ட காட்சி. அச்சு அசலாக அவனுடைய தாயைப் போலவே உருவம் கொண்ட சேலை அணிந்த பெண்மணியை முகமூடி அணிந்த ஒரு வாட்ட சாட்டமான ஆள், தீர்த்துக் கட்ட பார்ப்பதைப் புரிந்து கொண்ட பார்த்திபன், அவனைத் தாக்கி அந்தப் பெண்மணியைக் காப்பாற்றினான். லிப்ட் தரை தளத்தில் நின்றது. முகமூடி ஆள் ஓடினான். பார்த்திபன், துரத்திச் சென்று அவனைப் பிடிக்க முயற்சி செய்தான். முகமூடியைக் கிழித்ததால் அவனுடைய முகம் பார்த்திபனுக்கு தெரிந்தது. ஆனால், பார்த்திபனின் கையில் அவன் சிக்கவில்லை.
வணிக வளாகத்தின் தரை தளத்தில் உள்ள ஒரு திண்ணையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் அருகில் வந்தான் பார்த்திபன். அவரிடம் தண்ணீர் புட்டியைக் கொடுத்தான். அவர் சன்னமான குரலில் தாங்க்ஸ் என்று கூறி வாங்கிக் கொண்டு தண்ணீரைப் பருகினார். அந்தப் பெண்மணியின் அருகில் கோட் சூட் அணிந்த பருமானான உருவம் கொண்ட இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்.
என்னப்பா பிசினஸ் மீட்டிங் முடிஞ்சு என் கூட லிப்ட் ல வராம எங்க போனீங்க பெண்மணி கேட்டார்.
“ ரெஸ்ட் ரூம் போனோம் மேம்… அதுக்குள்ள… மேம் இவர்தான் லிப்ட்ல ஒங்கள காப்பாத்தினாரு “
பெண்மணி பார்த்திபனை நன்றியுடன் பார்த்தாள். பார்த்திபன் பேசினான்
“நொடிச்சு போன தந்தையாரோட கம்பெனிய தூக்கி நிறுத்தினது பெரிசு இல்லை. உன்னை காப்பாத்திக்க நம்பிக்கையான ஆள கூட வெச்சுக்க மீட்டிங் ல கூட இருந்த இவங்க, உன்ன தனியாக லிப்ட் ல அனுப்பி வெச்சுட்டானுங்க. உன்னை தாக்க வந்தவனோட முகமூடியைக் கிழிச்சு பார்த்தேன். நீ காதலிச்சு கல்யாணம் முடிச்ச ஒன் புருஷன். உன் கதைய முடிச்சுட்டு கம்பெனிய கைப்பற்ற பார்க்கறான். உயிர் மேல ஆசை இருந்தா அவனை வீட்டில் சேர்க்காதே ஆபீஸ்லயும் சேர்க்காதே செக்யூரிட்டி கிட்ட சொல்லி வை உன் புருஷன எனக்கு எப்படி தெரியும் னு பார்க்கறியா அதான் இன்ஸ்டா வுல அவனோட இருக்கற படத்தை தானே வெச்சிருக்க நீ “
கோட் சூட் இளைஞர்களில் ஒருவன், பார்த்திபனின் சட்டையைப் பிடித்தான் “ யாருடா நீ? எங்க மேடத்தை காப்பாத்தின ஆள்ன்னு பார்த்தா எங்கள தப்பா பேசற மோகன் சார் பத்தி தப்பா பேசற மேடத்துகிட்ட மரியாதை இல்லாமல் ஒருமைல பேசற அவங்க யாருன்னு நெனச்ச? “ அவனை பார்த்திபன் தள்ளி விட்டான். உரக்கப் பேசினான்
“ டேய் உரிமை உறவு இரண்டும் இருக்கறதால ஒருமைல பேசறேன் டா. . ஒங்க கம்பெனி எம்டி விசாலாட்சி மேடம் என்னோட அம்மா சரஸ்வதி மேடத்தோட தங்கை எனக்கு சித்தி என் பேரு பார்த்திபன். ஒங்க கம்பெனி பவுண்டர் என்னோட தாத்தா போதுமா டீடெய்ல்
அந்த இளைஞன் விலகிச் சென்றான்.
உட்கார்ந்து இருந்த விசாலாட்சி எழுந்து நின்றார்.
பார்த்திபனை ஆரத் தழுவிக் கொள்ள முன் வந்தார்.
எங்க அக்கா சரஸ்வதி மகனா நீ? எனக்கும் தான் நீ பிள்ளை. இரத்த பாசம் தான் உன்னை அந்த நேரத்தில் என் கிட்ட வந்து சேர்த்து இருக்கு “
“அதெல்லாம் சரி ஒரே ஊரில் இருந்தும் நான் பொறந்த திலிருந்து நீ என்னை வந்து பார்க்கல. ஒங்க அக்காவையும் பார்க்க வரல. இப்ப என்ன? ஜாக்கிரதையா இருந்துக்க எப்பவும் வந்து காப்பாத்த நான் கிருஷ்ணர் இல்லை. வரேன் “ என்று விலகிச் சென்றான்.
விசாலாட்சி மகனே பார்த்தி ‘ என்று அழைத்தார் விசாலாட்சி. பார்த்திபன் திரும்பிப் பார்க்காமல் வணிக வளாகத்தின் வாசலை நோக்கி வேகமாக நடந்தான்.
குறிப்பு : இந்தப் புனைகதைகளில் விவரிக்கப்படும் சூழல், உலா வரும் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
– இவர்களைச் சந்தியுங்கள் (சிறுகதைகள்), எஸ்.மதுரகவி வெளியீடு, விழுப்புரம்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |